Advertisements
ஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 21

-மேகலா இராமமூர்த்தி

திருக்குறள், அறம் பொருள் இன்பம் எனும் முப்பொருளும் பேசுவதுபோலவே நாலடியும் இவை மூன்றையும் பேசுகின்றது. இங்கே காமம் என்பதே இன்பம் எனும் பெயரால் சுட்டப்படுவது என்பதறிக. வள்ளுவத்தில் காமம் 25 அதிகாரங்களில் விரிவாகப் பேசப்படுகின்றது. ஆனால் நாலடி பல்தரப்பட்ட காமஞ்சார் செய்திகளையும் ஒரே அதிகாரத்தில் சுருக்கமாய்ப் பேசிவிடுகின்றது.

அவற்றில் சில நம் கவனத்துக்கு…

முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம் – வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.
(நாலடி – 391)

தலைவியைத் தழுவாவிடின் அவளுடம்பில் பசலை நிறம் பரவும்; ஆனால் இடையிடையே அவள் ஊடல் கொள்ளாவிடில் காமச் சுவை குன்றும். ஆகலின், அலைகள் நில்லாது அலைத்துக்கொண்டிருக்கும் நீண்ட கழியினை உடைய குளிர்ந்த துறைவனே! ஊடுதலும் பின் கூடுதலுமே காமத்துக்கு இனிய நெறியாகும் என்று வாயில் நேர்ந்த தோழி, தலைமகளின் ஊடல் தவிர்த்துக் கூடிய தலைமகற்குக்  கூறியது இது எனும் குறிப்பு இப்பாடலில் காணப்படுகின்றது.

புலவி என்று சொல்லப்படும் ஊடல் காமத்துக்குச் சுவையூட்டும் உப்பாகும்; அதுவே அளவுகடந்து சென்றால் சுவைகெட்டுத் தப்பாகும். இதனையே வள்ளுவர்,

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
(1302) என்றுணர்த்தினார்.

அதுபோன்றே,

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். (1330) என்று காமம் துய்க்கும் கலையைக் கருத்தாய்ச் சொன்னவரும் அவரே.

மாலைக்காலம், தலைவனோடு கூடியிருக்கும் தலைவியர்க்கு இன்பத்தையும் அவனைப் பிரிந்திருக்கும் தலைவியர்க்கு அளவற்ற துன்பத்தையும் அளிக்கக்கூடியது.

தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியர்க்கு மாலைக்காலம் எத்தகு வருத்தத்தைத் தரும் என்பதைப் ‘பொழுதுகண்டு இரங்கல்’ எனுல் அதிகாரத்தில் வள்ளுவர் விளங்கவுரைப்பார். அதில், தலைவனை முதன்முறையாய்ப் பிரியும் தலைவி ஒருத்தி, தலைவனோடு தான் கூடியிருந்த காலத்தில் இம்மாலைக்காலம் இத்தகைய துன்பத்தைத் தரவல்லது என்று அறிந்திலேனே என்று வருந்துவதை, பெண்களின் உளவியலை நன்குணர்ந்தவராய், வள்ளுவர் வெளிப்படுத்தியிருக்கும் திறம் எண்ணி இன்புறத்தக்கது.

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்
. (1226)

தலைவன்  தன்னைப் பிரிந்து பொருள்தேட விழைகின்றான் என்பதை அறிந்தாள் ஒரு தலைவி. அதன்பின்னர் அவள் செயற்பாடுகளில் தெரிந்த மாற்றத்தைக் கவனித்த தோழி, ”கம்மத்தொழில் செய்கின்ற மக்கள் தம் தொழிலை நிறுத்திக் கருவிகளை ஏறக்கட்டிச் சென்ற  மயங்கஞ் செய்யும் இம் மாலைப்பொழுதில், மலர்களை ஆராய்ந்து மாலை தொடுத்துக்கொண்டிருந்த  தலைவி, நின் பிரிவு கேட்டுத் தனது கையிலிருந்த மாலையை நழுவவிட்டுத் தலைவராகிய துணையைப் பிரிந்த மகளிர்க்கு இந்த மலர்மாலை என்ன பயன் தரும்?” என்று சொல்லி வருந்தி அழுவாளாயினள்” என்று தலைவனிடம் தலைவியின் உளநிலையை உணர்த்துகின்றாள். ஈண்டு அவள் நோக்கம் தலைவன் தன் செலவினைத் தவிர்க்க வேண்டும் என்பதே.

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று. 
(நாலடி – 393) 

அகநூல்களில் தலைமகன் தலைவியின் நலம் பாராட்டும் பாடல்களில் புலவர்களின் கற்பனைத் திறன் கொடிகட்டிப் பறப்பதைக் காணலாம். அவ்வரிசையில் நாலடியின் ஆசிரியர்களும் எம் கற்பனைத் திறன் யார்க்கும் குறைந்ததன்று என்று பொற்போடு நிறுவியிருக்கும் பாடலை அடுத்துக் காண்போம்.

கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல் – பின்சென்றும்
ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
கோட்டிய வில்வாக் கறிந்து. 
(நாலடி – 395)
 

”கண்களைக் கயல்மீன் என்று கருதிய கருத்தினால் அதனைக் குத்தித் தின்னும் பொருட்டு, நம் காதலியின் பின்னே சென்றது சிச்சிலி என்னுஞ் சிறிய மீன்குத்திப் பறவை. ஆனால் அவ்வாறு பின்சென்றும் அவளின் ஒள்ளிய புருவத்தைக் கண்டு இது வில்லின் வளைவென்று எண்ணிக் குத்தாமல் விட்டுவிட்டது” என்று  தன் கற்பனையை வி(வ)ரிக்கின்றான் தலைவன்.

வள்ளுவத்திலும் தலைவன் தலைவியின் நலம் புனைந்துரைக்கும் பாடல்கள் நினைந்தின்புறத் தக்கவை.

குறட் காதலனின் கற்பனை இது!

வானத்தில் ஒளிவிடும் விண்மீன்கள் வெண்ணிலவைப் பார்த்தன; அப்படியே சற்றுக் குனிந்து புவியிலுள்ள பெண்ணிலவின் முகத்தையும் பார்த்தன.  அவ்வளவுதான்…உண்மையான மதி எது என்பதில் அவற்றிற்கே குழப்பம் வந்து மதிகலங்கிப் போயினவாம்!

மதியும் மடந்தை முகனும் அறியாப்
பதியிற் கலங்கிய மீன். (1116)

நலம் பாராட்டும் அன்பினால் காமம் மாட்சிமைப்படும் என்பது நம்மனோரின் எண்ணம்.

தலைவி ஒருத்தி தன் காதற் தலைவனோடு உடன்போக்கு மேற்கொண்டாள். அதனை அறிந்த செவிலித்தாய், தலைவியின் மென் தன்மையையும் அவள் கடந்துசென்ற பாதையின் வன்மையையும் நினைந்து கலங்கும் பாடலிது!

அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ – அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப்பின் வாங்கும் அடி.  (நாலடி – 396)

செந்நிறம் பொருந்திய ஆம்பல் மலரைப்போல நறுமணத்தோடு விளங்கும் வாயையும் அழகிய இடையையுமுடைய நம் புதல்விக்கு, அழகுக்காகச் செந்நிற மிக்க செம்பஞ்சிக் குழம்பைத் தடவினாலும் ‘மெதுவாக, மெதுவாக’ வென்று அஞ்சிக் கூறிப் பின் இழுத்துக்கொள்ளும் அத்துணை மெல்லிய பாதங்கள் தலைவனோடு உடன்போக்கிற் பிரிந்த இப்போது பரற்கற்களையுடைய கானத்திற் செல்லப் பொறுத்தனவோ? என்றெண்ணிக் கலங்குகின்றது அத் தாயுள்ளம்.

தலைவியுடைய திருவாயின் நறுமணத்துக்கு ஆம்பல் மலரின் மணத்தைப் புலவோர் பலரும் ஒத்த மனத்தினராய்ச் சான்று காட்டியுள்ளனர். அவற்றில் சில…

ஆம்ப னாறுந் தேம்பொதி துவர்வாய்  (குறுந்தொகை – 300)

ஆம்பனா றமுதச் செவ்வாய் (சீவக. 561)

ஆம்ப னாறுந் தேம்பொதி நறுவிரைத் தாமரைச் செவ்வாய் (சிலப். 4: 73-4)

தலைவனோடு உடன்போக்கு மேற்கொள்ளத் தலைப்பட்டாள் மற்றொரு தலைவி. அதனை அறிந்த அவள் தோழி, மெல்லியளான இவள் இந்தக் கடுமையான காட்டுவழியில் எவ்வாறு நடந்துசெல்வாள் என்று ஐயுற்றுத் தலைவியிடமே அதுபற்றி வினவ, அதற்குத் தலைவி தந்த மறுமொழியே இப்பாடல்!

கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி – சுடர்த்தொடீஇ!
பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு. (நாலடி – 398)

”வன்மையுடையதும் யாருங் கடந்து செல்லுதற்குக் கடுமையானதுமான காட்டுவழியில் காளையாகிய தலைவன் பின்னே நாளை நீ உடன்போக்கில் நடந்து போகவும் வல்லமையுடையையோ என்று கேட்கின்ற சுடர்த் தொடியே! பெருமையிற் சிறந்த குதிரையொன்றினைப் பெற்றவனொருவன் அப்பொழுதே அதில் ஏறி ஊர்ந்துசெல்லும் நெறியைக் கற்றவனாகின்றான்” என்றாள் தலைவி.

இங்கே அவள் உணர்த்துவது, உழுவலன்பினால் ஒன்றுபட்ட உள்ளம் அளப்பரும் ஆற்றலைப் பெறுகின்றது; அஃது எத்துணைக் கடுமையையும் தாங்கவல்லது என்பதே.

நம் அன்றாட வாழ்வில்கூட, வலிமை குறைந்த கோழியானது தன் குஞ்சுகளை வலிய பருந்து கவர்ந்துசெல்ல முனையும்போது அதனைப் பறந்து தாக்குவதைப் பார்க்கமுடியும். அவசியமும் தேவையுமே வலியற்ற மனிதர்களையும் மகத்தான ஆற்றலாளர்களாக மாற்றுகின்றது என்பது மறுக்கவியலா உண்மை.

[தொடரும்]

*****

துணைநூல்கள்:

1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்  பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

 

 

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here