நிர்மலா ராகவன்

 

இந்த ஆண்களை..!

`இந்தப் பெண்களை புரிந்துகொள்ளவே முடியாது!’ திருமணமான பல ஆண்களின் கூற்று இது.

இந்தக் குழப்பத்தைச் சமாளிக்க ஏதாவது முயற்சி எடுத்துவிட்ட பிறகு, `இது வேண்டாத வேலை!’ என்று வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவிடுவார்கள்.

ஆண்களோ, பெண்களோ, இப்போதெல்லாம் முப்பது வயதிலும் திருமணம் செய்துகொள்ளத் தயங்குகிறார்கள். சிறிதுகாலம் பழகியபின்னரும், `சரியான துணைதானா?’ என்ற குழப்பம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை. தமது சுதந்திரம் பறிபோய்விடும் என்ற அச்சமும், `புதிய குழப்பங்களுக்கு ஆளாக வேண்டுமா!’ என்ற தயக்கமும் ஒரு காரணம்.

திருமணம் ஆனபின்பு, ஆண்களில் சிலர் தம்மைப்போலவே குழம்பிப்போயிருக்கும் நண்பர்களை நாடுவார்கள். வேறு சிலர் விளையாட்டுகளில் ஈடுபட்டு, உடலுக்கு அளிக்கும் கடும்வேலையால் தம்மை மறக்க முயற்சி செய்வார்கள்.

இன்னும் சிலர், `நம் மனைவிதான் அப்படியோ?’ என்ற சந்தேகம் எழ, அதை நிவர்த்தி செய்துகொள்ளும் சாக்கில் பிற பெண்களுடன் உறவு பூண்டு, இறுதியில், `எல்லாப் பெண்களும் ஒரே லட்சணம்தான்!’ என்ற கசப்பான முடிவுக்கு வருகிறார்கள்.

கதை

`மனைவி என்றால், அவள் என் எண்ணங்களுக்கு ஒத்துப்போக வேண்டும். நான் சொல்கிறபடியெல்லாம் நடக்கவேண்டும்!’ என்ற சராசரி ஆணின் எதிர்பார்ப்புடன் விமலாவை மணந்தான் மனோகரன்.

அவளோ சுதந்திரமாக வளர்க்கப்பட்டிருந்தவள். முதலில் கணவன் சொற்படியெல்லாம் கேட்டவளுக்குச் சில மாதங்களிலேயே மனநிம்மதி பறிபோக, கணவனின் ஆதிக்கத்தை எதிர்ப்பதுதான் வழி என்று தோன்றிப்போயிற்று. அடிக்கடி சண்டை வந்தது.

இத்தனை நாட்களும் அடங்கி இருந்தவளுக்கு இப்போது என்ன வந்தது என்று குழம்பினான் மனோகரன்.

நாள் முழுவதும் அன்று காலையில் நடந்த சம்பவமே விமலாவின் மனதில் திரைப்படமாக ஓட, அவளுடைய ஆத்திரம் அதிகரித்துக்கொண்டே போய்விடும்.

வேலை முடிந்து மனோகரன் வீடு திரும்பும்போது முகத்தைத் திருப்பிக்கொண்டு அப்பால் போய்விடுவாள். அலுத்துக் களைத்து வீடு வரும் ஒருவனுக்கு இப்போது எப்படி இருக்கும்?

அவனும் எரிந்து விழுவான். அவளும் பதிலுக்குக் கத்துவாள்.

பெண்களும் கணினியும் ஒன்று!

கணினி எப்படி தன்னிடத்தில் உள்ள ஒரு செய்தியை மறவாது அப்படியே வைத்திருக்கிறதோ, அதேபோல்தான் பெண்களும். ஆனால் ஒரு வித்தியாசம். நல்லனவற்றை எளிதில் மறந்துவிடுவார்கள், அல்லது அலட்சியப்படுத்திவிடுவார்கள். எதிர்மறையான சம்பவங்கள், அவைகளுக்குக் காரணமாக இருந்த உணர்ச்சிகள் – மன இறுக்கம், வருத்தம், கோபம் போன்றவை — அவர்கள் மனதில் நிலைத்திருக்கும்.

ஆண்களோ, இதற்கு நேர் எதிர். நிம்மதியைக் குலைக்கும் நினைவுகளை உடனுக்குடன் மறந்துவிடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, காலையில் நடந்த வாக்குவாதம் அத்துடன் முடிந்துபோய்விட்டது.

இப்போது மனைவி முகத்தைத் திருப்பிக்கொண்டு போனது மனோகரனுக்கு எரிச்சலைத்தான் தராமல் என்ன செய்யும்?

“என்ன கோபம்?” புரியாமல் கேட்டான்.

“அப்படிச் சொன்னீர்களே..!” என்று விமலா விளக்கியபோது, “அதை இன்னுமா நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறாய்? அலுவலகத்தில் ஏதோ பிரச்னை,” என்றான், அலட்சியமாக.

தற்காலத்தில் வெளிவேலைகளில் பெண்களும் ஈடுபடுவதால், ஆண், பெண் இருவருக்குமே மன இறுக்கம் வர நிறைய காரணங்கள் இருக்கின்றன. இத்தருணங்களில் ஆண் விலகி இருக்கிறான். இதனால் அவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை என்று அர்த்தமாகாது. அவளைப்போல் அவனுக்குத் தன் உணர்ச்சிகள் புரிவதில்லை.

ஆண்களுக்குப் பெண்களின் உடல்மொழி, குரலின் தளர்ச்சி இதெல்லாம் புரிவதில்லை. பெண்களும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். பிரச்னை எழாமல் என்ன ஆகும்?

வெளிப்படையாகச் சொன்னால்தானே தெரியும்?

அவள் (மனக்குறையுடன்): கல்யாணமான புதிதில் நீங்கள் என் விரல்களையெல்லாம் காதலுடன் கடிப்பீர்கள். இப்போது உங்களுக்கு என்மேல் உள்ள ஆசை போய்விட்டது.

அவர்: அவ்வளவுதானே! செய்தால் போயிற்று. என் பல் செட்டை எடுத்துக்கொண்டு வா!!

`இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளவே முடியாது!’

பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் ஆண்களுடன் சேர்ந்து படித்த பெண்களால்கூட ஆண்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஒரு பெண் தன் தந்தைக்கு மிக நெருங்கியவளாக இருந்தால்தான் பிற ஆண்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பருவ வயதிலும் அவர்களுடைய உறவின் இறுக்கம் தளர்ந்துவிடாமல் இருக்கவேண்டும்.

இரு பாலருக்குமே ஏன் இவ்வளவு குழப்பம் என்றால், ஆண்களின் மனப்போக்கும், பெண்களுடையதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

கணவர் அனுதினமும் `ஐ லவ் யூ!’ சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனெனில், ஆண்கள் பெண்களைப்போல் அவ்வளவு எளிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார்கள். மாறாக, செயலில் காட்டுவர். வீட்டையோ, தோட்டத்தையோ சுத்தப்படுத்துவார்கள். சமையலறையில் உடைந்த சாமான்களை பழுதுபார்ப்பார்கள். இது புரிந்து, கணவனும் மனைவியும் ஒரே காரியத்தில் – அது விளையாட்டோ அல்லது உடலுறவோ –ஈடுபட்டால் உறவு பலப்படும்.

சொந்தக்கதை

முப்பது வருடங்களுக்குமுன், தெரியாத்தனமாக நான் நிறைய ஆர்கிட் செடிகள் வாங்கினேன். நோஜாச்செடி ஐந்து வெள்ளியென்றால், ஆர்கிட் செடியின் விலை அதைப்போன்று மூன்று மடங்கு. பூத்தால் வாரக்கணக்கில் அப்படியே இருக்குமே! ஆனால், அவைகளைப் பூக்கவைக்க பட்ட பாடு!

ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு பெரிய பேசினில் தண்ணீர் நிரப்பி, அதில் எருவைப்போட்டுக் கலக்கி, ஒவ்வொரு செடியாக பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும்.

என்னுடன் ஒத்துழைத்த கணவருக்கு உற்சாகமாக இருந்தது. Felt romantic. ஒரே வேலையில் இணைந்து செய்கிறோமே!

எனக்கோ செடிகளைப் பராமரிப்பதே தலையாய வேலையாகிப் போயிற்று. விடுமுறை நாளில் எங்கும் உல்லாசமாகச் செல்ல முடியவில்லை.

ஒரு வருடம் நன்றாகப் பூத்தபின், `இந்தக் கஷ்டத்திற்கு கணவருடன் சண்டை போடுவதே மேல்!’ என்று தோன்றிப்போக, செடிகளைப் பிறருக்குக் கொடுத்துவிட்டேன்.

பிரத்தியேகமான பொழுதுபோக்கு

ஒரே காரியத்தைச் செய்தாலும், நெடுநேரம் ஒன்றாக இணைந்திருந்தால் அலுப்புத் தட்டாதா! கணவன் மனைவி இருவருக்குமே தனித்தனி பொழுதுபோக்கும், தனியாகக் கழிக்க அவகாசமும் அவசியம். (தேனிலவு இதில் சேர்த்தியில்லை). வெவ்வேறு பொழுதுபோக்காக இருந்தாலும், அவைகளைப்பற்றி கலந்து உரையாடினாலே நண்பர்களைப்போல நெருக்கம் ஏற்படும்.

கவனக்குறைவல்ல

`என் கணவர் நான் பேசும்போது கவனிப்பதே கிடையாது. அவருக்கு என்னைவிட தினசரியைப் படிப்பதும், தொலைகாட்சியும்தான் முக்கியம்!’ என்று அலுத்துக்கொள்ளும் பெண்களுக்கு ஒன்று புரிவதில்லை. மனைவி பேசும்போது, `உம்,’ `சரி’ என்று முனகியபடி, வேறு எதிலோ கவனம் செலுத்துவதுபோல் காணப்பட்டாலும், அவர்களுக்குக் காது கேட்கும். கவனமும் உண்டு.

புகழுங்கள்

ஆண்கள் தம் மனைவியைப்பற்றிப் பிற ஆண்களிடம் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்.

`இதையெல்லாம் மனைவியின் எதிரே கூறினால், அவள் கை ஓங்கிவிடுமோ?’ என்ற பயம் எழ, அவளிடம் வீறாப்பு காட்டுவார்கள்.

இரு தரப்பினருக்கும் பாராட்டு வேண்டியிருக்கிறது. வெளியில் அலைந்துவிட்டு வரும் மனைவி, `நல்லவேளை, பாலைக் காய்ச்சி வைத்துவிட்டீர்கள்!’ என்று கணவனிடம் நன்றி தெரிவிக்கிறாள்.

பதிலுக்கு, `இன்று பயற்றங்காய் பொரியல் முறுமுறுவென்று, நன்றாக இருந்தது!’ என்று மனைவியைப் பாராட்டுகிறான்.

அவள் உற்சாகமாக, `எண்ணை அதிகமாகாது இருக்க, கடைசியில் ஓட்ஸைப்போட்டு, சற்று வதக்கினேன்,’ என்பாள். அடுத்தமுறை, இன்னும் கவனமாகச் சமைப்பாள்.

இப்படி ஒருவர் செய்யும் நற்காரியத்தை உடனுக்குடன் புகழலாமே! சண்டை போடுவதைவிட இம்முறை எளிதானது. நல்ல பலனையும் அளிக்கும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.