Category: Featured

Featured

  • மணிமொழிக் கொரு மடல்

    நடராஜன் கல்பட்டு 

    அன்பு மணி மொழி,

    நான் வாழ்க்கையின் சோகங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ளாது வேறு யாரிடம் பகிர்ந்து கொள்வேன்? அப்படி நான் உனக்கு எழுதும் மடலின் நோக்கம் என்ன? என்னுடன் படித்த மாணவி நீ. கூடப் படித்தவர்கள் அனைவருடனும், ஆண் பெண் என்று வித்தியாசம் பாராது அன்போடு பழகியவள் நீ. உன்னிடம் சக மாணவிகள் தங்கள் ரகசியத் தவிப்புகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நீயும் அவர்களுக்கு அந்த சங்கடங்களில் இருந்து வெளி வரும் வழியினை, உனக்கே உரித்தான பாணியில் கூறுவாய். அவர்கள் அதைக் கேட்டு பயன் அடைவார்கள்.

    எனக்குத் தெரியும் உனக்கு மிகவும் பிடித்தது கவிதைகள் என்று. அதனால் தான் நான் இப்போது சிக்கித் தவித்திடும் ஒரு சங்கடத்தினை கவிதை வடிவில் உனக்கு தெரிவிக்கிறேன். உன்னிடம் இருந்து பதிலாய் என் சிக்கலுக்கு தீர்வு ஒன்று எதிர்பார்க்கிறேன். அளித்திடுவாயா அன்பு மணிமொழி?
    வானொலிப் பெட்டி திறந்தேன்
    வந்தது பாடலொன்று
    கிழவி மேல் காதல் கொள்ளடா அவ்வைக்
    கிழவி மேல் காதல் கொள்ளடா வென்று

    கிழவி மேல் காதல் கொண்டால்
    உதவிடுமோ அவள் அனுபவம் வாழ்க்கைக் கென்று
    எழுதினேன் அரைப் பக்கக் கடிதமொன்று
    அடுத்த வீட்டு கிழவிக்கு

    ஒரு கையில் கடிதமும் மறு கையில்
    அப்பளக் குழவியுமாய்த் தோன்றிய
    அன்டை வீட்டுக் கிழவி கேட்டாள்
    திருட்டு நாயே காதல் தேவையா உனக் கென்று

    ஓடுகிறேன் ஓடுகிறேன்
    உயிர் பிழைக்க ஓடுகிறேன்
    கூறிடு நீ கிழவி கைக் குழவியிடம் இருந்து
    தப்பித்திட வழியொன்று

    உன் அறிவுரைகளை என்றும் ஏற்ற
    நண்பன் நடராஜன் கல்பட்டு

    Share
  • கண்போன போக்கிலே கால் போகலாமா?

    கவிஞர் காவிரி மைந்தன்

    ஐம்புலன்கள், ஆறாம் அறிவு என மனித ஜாதியை மகத்துவமாய் படைத்த இறைவன் ‘மனம்’ என்கிற ஒன்றையும் மறைமுகமாய் சேர்த்தனுப்பிவிட்டனன்றோ? பகுத்தறியும் குணும் மனிதனுக்கு இருந்தும் ‘ஆசை’ என்னும் வலைதனில் அகப்பட்டு அவன் படும் அவஸ்தைகள் பலவன்றோ?

    கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் நம்மில் வாழும் மனிதர்களைக் காணுகின்றோம். அனுபவ ரீதியாக ஒருவன் பட்டுத் தெரிந்து கொள்கிற பகிரங்க விஷயங்கள் பல உண்டு! அந்தப் பாடங்கள் அவன் மட்டுமே அறிந்தவையாகின்றன! ஆனால், திரைப்பாடல்களில் – கவிஞர்கள் தங்கள் சொல்லாற்றலால், இதுபோன்ற அனுபவ முத்திரைகளை, வாழ்க்கைப் பாடங்களை மெட்டுக்குள் கட்டிவைக்கத் தெரிந்த வித்தகர்களாக இருக்கிறார்கள். அதுவும் மக்களின் இதயங்களில் இமயமாய் வீற்றிருந்த எங்கள் எம்.ஜி.ஆருக்காக எழுதப்படுகின்ற போது இதுபோன்ற முத்தான வரிகள் வந்து கொத்துக் கொத்தாக விழுந்தனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது! தத்துவத்தின் தடாகமாய்..இப்பாடல் காட்சியளிக்கிறது! பணம் படைத்தவன் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தளித்த இசை தலைமை தாங்குகிறது. டி.எம்.செளந்திரராஜன் அவர்களின் குரலில் மக்கள் திலகம் நடித்த இந்தக் காட்சி – ஒரு நாகரீக விடுதியில் முற்றிலும் வித்தியாசமாக நடைபெறும் போது இப்படிக் காட்சியமைப்பு வெற்றி பெறுமா என்கிற வினாவிற்கு இப்பாடலில் உள்ள வரிகளின் வீரியம், வார்த்தைகள் தாங்கி வரும் அர்த்தங்கள், பின்னணி இசை என்கிற கூட்டணி மந்திரம் வெற்றியை விண்முட்டச் செய்திருக்கிறது. மகாத்மா காந்திஜி கையில் தடியடன் ஒற்றைப் பாதையில் நடந்துசெல்வதை நினைவூட்டிப் பாடல் தொடங்குகிறது!

    இந்தப் பாடலை பெரும்பாலோர் கவியரசு கண்ணதாசனின் பாடல் என்றே கருத.. அந்தக் கருத்தை ஆச்சி மனோரமா அவர்கள் கவிஞர் வாலி அவர்களை முன்னிறுத்திய மேடையிலேயே எடுத்தியம்ப.. பின்னர் நிறைவுரை ஆற்றிய கவிஞர் வாலி அவர்கள்.. கண்போன போக்கிலே கால் போகலாமா பாடல் நான் இயற்றியது.. ஆச்சி கூட.. இந்தப் பாடலை கண்ணதாசன் பாடல் என்றே கருதியிருக்கிறார்கள்.. அதிலே எனக்குள்ள சந்தோஷம் என்ன தெரியுமா.. என் பாடலைத் தங்கத்தட்டோடுதான் ஒப்பிட்டிருக்கிறார்களே தவிர, தகரத்தட்டோடு அல்ல என்று தனக்கே உரிய பாணியில் குறிப்பிட்டார்.

    கண்போன போக்கிலே கால போகலாமா..
    கால் போன போக்கிலே மனம் போகலாமா..
    மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
    மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..

    நான்கு வரிகளுக்குள் இங்கே சொல்லப்படாத இலக்கியம் என்ன என்றே அறைகூவலிடத் தோன்றுகிறது!

    நீ.. பார்த்த பார்வைகள் கனவோடு போகும்..
    நீ.. சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்..
    ஊர்பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்…
    உணராமல் போவோருக்கு உதவாமல் போகும்..

    வாழ்க்கையின் எதார்த்தங்களை இதைவிடவா எவரும் சொல்லிவிட முடியும்? எத்தனைக் காலங்கள் கடந்தாலும் இந்த வரிகளில் உள்ள பொருள் மாறிவிடக்கூடுமா?

    புரியாத சில பேருக்கு புது நாகரீகம்..
    புரியாத பல பேருக்கு இது நாகரீகம்..
    முறையாக வாழ்வோருக்கு எது நாகரீகம்..
    முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்..

    நாகரீகத்திற்கு அர்த்தம் தெரியாத மனிதர்களுக்கான சவுக்கடி இந்த வரிகள்! இன்னும் என்ன சொல்ல என்று நினைத்த கவிஞர் அடுத்தவரிகளில் மேலும் சொல்லாட்சி நடத்துகிறார்!

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..
    வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்..
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..
    இவர் போல யாரெண்டு ஊர் சொல்ல வேண்டும்..

    இதுபோல பாடல் புனைந்தோர்.. எல்லோருக்கும் பொருந்தும் இந்தவரிகள்.. கதையின் நாயகன்.. மக்கள் திலகத்தின் வரலாற்றில் பொன்னாய் மின்னுகிற வரிகளில் சேர்ந்து காட்சியளிக்கின்றன!

    3 Attachments

    kanpona pokkile.jpg

    kanpona.jpg

    MGR & Sowckar Janaki – Kanpona Pokkile – Panam Padaithavan

    Share
  • கடித இலக்கியப் பரிசுப் போட்டி!

    அன்பு நண்பர்களே,

    வணக்கம். இணையமும் செல்பேசிகளும் பரவலாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், கடிதம் எழுதும் வழக்கம் அருகி வருகிறது. குறுஞ்செய்திகளில் நம் எண்ணங்களைச் சுருக்கி இரண்டு வரிகளில் அளிக்க வேண்டிய நிலையில், நம் உள்ளக் கிடக்கைகளை விலாவாரியாக விவரிக்கும் கடித இலக்கியம் இன்று பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அரிதான கடித இலக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் நம் வல்லமையில் வருகிற மகளிர் தினத்தை முன்னிட்டு ‘அன்புள்ள மணிமொழிக்கு’ என்ற தலைப்பில் போட்டி அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

    themozhi1

    இப்போட்டியை நடத்துவதற்கான பரிந்துரையும், பரிசுத் தொகையும் வழங்க, தானே முன்வந்து அறிவித்திருக்கும் திருமதி தேமொழி அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுதல்களும், வாழ்த்துகளும்.

    6013173dc1e51011d1a99625f6b92946

    பதினாறாம் அகவையில் தம் இலக்கியப் பயணத்தை ஆரம்பித்து, இன்று இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனிப்பட்ட இடத்தையும் பிடித்து, தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சொற்பொழிவாற்றலும், இலக்கிய மன்றங்கள், கவியரங்கம், தொலைக்காட்சித் தொடர்கள் என அனைத்துத் தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திரு இசைக்கவி இரமணன் அவர்கள் இப்போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கச் சம்மதித்துள்ளார். அவருக்கும் நம் மனமார்ந்த நன்றி.

    போட்டிக்கான விதிமுறைகள்:

    ஒருவர் எத்தனை கடிதங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

    போட்டிக்கு அனுப்பும் கடிதங்கள், இதற்கு முன் அச்சிலோ, இணையத்திலோ வேறு எங்கும் வெளியாகாத ஆக்கமாக இருக்க வேண்டும்.

    மணிமொழியை சகோதரி, மகள், மருமகள், பேத்தி, தோழி, காதலி என எந்த ஒரு கற்பனைப் பாத்திரமாகவும் வரித்துக் கொண்டு தங்கள் ஆக்கங்களைப் படைக்கலாம். இலக்கியப் பாத்திரங்கள் முதல் இல்லாத கற்பனைப் பாத்திரங்கள் வரை மணிமொழியை விளித்து தனது எண்ணத்தில் தோன்றுவதை எந்தவொரு வரையறையும் இன்றி வேண்டுகோள், அறிவுரை, தனது அன்பை சொல்லுதல், நாட்டு நடப்பை அலசுதல் என எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி தமது கருத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.

    கடிதங்களுக்குப் பக்க எண்ணிக்கை இல்லை.

    போட்டிக்கான இறுதி நாளான மார்ச் 31ம் தேதி வரை வருகின்ற ஆக்கங்களிலிருந்து சிறந்த மூன்று ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.

    பரிசு பெறுவோர், அயல்நாட்டில் வசிப்பவர் எனில், தம் இந்திய முகவரியை அளிக்க வேண்டும்.

    படைப்புகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.

    படைப்புகள் தெளிவான நடையில், யுனிகோடில் இருப்பது அவசியம்.

    போட்டிக்கான இறுதி நாள் மார்ச் (2014) 31ம் நாள்.

    முதல் பரிசு ரூ. 1000
    இரண்டாம் பரிசு ரூ. 750
    மூன்றாம் பரிசு ரூ. 500

    பிப்ரவரி மாதம் 21ம் தேதியிலிருந்து வருகிற படைப்புகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுக்குரிய படைப்பின் விவரம் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.

    வல்லமை ஆசிரியர் குழுவினரும் ஆலோசகர்களும் கடிதம் எழுதலாம்;  அதை வல்லமையில் வெளியிடத் தடையில்லை. ஆனால் அதை போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. இதர போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாதிரி ஆக்கங்களாக அவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

    திரளாக வந்து போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள் நண்பர்களே!

    உங்கள் படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    Share
  • பூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்தது

     

    Ocean of Mars

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

     

    செவ்வாய்க் கோளில் பரந்த வடபுறத்துச் சமவெளிகளில் தென்படும் பெரும் பாறைகள் அவ்விடங்களில் தள்ளப்பட்டு இருப்பதற்குக் காரணம் பயங்கர நீரோட்டச் சரிவுகள் என்பது என் கருத்து.  அதாவது அவ்விடங்களில் பூர்வீகக் கடல் சூழ்ந்து இருந்ததற்கு அவை ஆதாரமாய் நிற்கின்றன என்று நான் கூறுகிறேன்..

    கடலடி நிலச்சரிவுகள் ஒரு வீட்டைப் போல் பேரளவுப் பெரும்பாறைகளைக் கூடப் பல நூறு கி.மீடர் தூரத்துக்கு, ஆழத்திலே கடத்தி நகர்த்தும் என்பது எங்களுக்குத் தெரியும்.

    விண்கற்கள் விழுந்து ஒருவேளை குழி பறித்திருந்தாலும், இத்தனை பரந்த அளவில் பல்லாயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பில் பெரும்பாறைகள் கிடப்பதற்குக் காரணம், கடல் வெள்ளச் சரிவைத் தவிர வேறென்ன  இருக்க முடியும்?  மேலும் பெரிதளவு குழிகளும் [Craters] பாறைகளின் அருகில் காணப் படவில்லை.

    லொரினா மஸ்கார்டெல்லி [பூதள நிபுணர், ஆஸ்டின், டெக்ஸஸ் பல்கலைக் கழகம்]

     

    Mars Ocean

    நாசாவின் செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வகத் தளவுளவி [Mars Science Laboratory Rover] குறிப்பணியாகச் செவ்வாய்த் தளத்தில் பூர்வீக நீரோட்டம் இருந்ததற்கு உறுதியாக உலர்ந்த சிற்றாற்றுக் கூழாங் கற்களைப் படமெடுத்துச் சான்றாகக் காட்டியுள்ளது.  அந்தப் பன்முகக் கலவைப் படிவுகள் [Sedimentary Conglomerates] பூமியில்  உள்ளது போல் மற்றோர் அண்டக்கோளில்  இருப்பதை முதன்முறையாக நாசாவின் தளவுளவி கண்டுபிடித்துள்ளது.

    டாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ் [அண்டக்கோள் விஞ்ஞான மூத்த விஞ்ஞானி]

    செவ்வாய்க் கோளில் உள்ள இவ்விதப் பாறைத் தோற்றங்கள், கடந்த காலத்தில் வெப்பச் சூழ்நிலை இருந்து, தளத்தின் ஈரடிப்புப் பகுதிகள் நெடுந்தூரம் ஓடும் நீரோட்டத் தகுதியை ஏற்படுத்தி யுள்ளன.   இவ்விதம் பூர்வீக ஆற்றுப் படிவுகளைக் கண்டு பிடித்தது, செவ்வாய்க் கோள் தளத்தில் நெடுந்தூரம் ஓடி நீடித்த நீரோட்டம் நிலவி, உயிரின விருத்திக்கு வசதி அளித்திருக்க முடியும் என்று நாம் கருத இடமளிக்கிறது.

    லிண்டா கா [Linda Kah, Associate Professor of Earth & Planetary Science, University of Tennessee, Knoxville]

    Clues for water in Mars

    1980 ஆண்டுகளில் வைக்கிங் விண்வெளிச் சுற்றி [NASA’ S Viking Orbiter] செவ்வாய்க் கோளை ஆய்வு செய்யத் துவங்கிக் கடந்த 20 ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் சூடான தர்க்கத்துக்குள் விவாதிக்கப் படுவது இந்தப் பாறைகள் கண்டுபிடிப்புதான் : அதாவது செவ்வாய்க் கோளின் துருவப் பகுதிகளில் பூர்வீகக் கடற்கரைகள் தென்பட்டன ! முதலில் சரியான விளக்கம் தரப்படா விடினும், தற்போது ஆங்கே பூர்வீகக் கடல் ஒன்று [பொரியாலிஸ் கடல் — Oceanus Borealis] இருந்திருக்க வேண்டும் என்று ஓர் புது விளக்கம் அளிக்கப் படுகிறது !

    தற்போதைய விண்ணுளவித் தகவல் படங்களில், வட பகுதிச் சமவெளித் தளங்களில் பெரும் பாறைகள் பல ஆயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பளவில் காணப் படுகின்றன. இவற்றைப் படமெடுத்து அனுப்பிய நாசாவின் விண்ணுளவி : செவ்வாய்க் கோள் விண்ணுளவுச் சுற்றி [Mars Reconnaissance Orbiter]. இது ஒன்றும் புதிய கண்டு பிடிப்பில்லை. பழைய கண்டு பிடிப்புக்கு அளிக்கப் படும் ஒரு புது விளக்கமே இந்த கடல் இருப்புக் கோட்பாடு.

    Water flow in Mars -1

    சிற்றாறு நீரோட்டத்தின் வேகம் சுமாராக மனித நடை அளவே என்பதுதான் எங்களுடைய ஊகிப்பு.   இவற்றை மீளியக்க முறையில் செய்து காட்ட முடியாது.   ஒரு கண்ணோட்ட ஒப்பளவில்தான் நாங்கள் குறைந்த அளவாகச் சொல்ல முடியும்.

    பேராசிரியர் சஞ்சீவ் குப்தா [லண்டன் இம்பீரியல் கல்லூரி, இங்கிலாந்து]

    நெடுந்தூர, நீண்டகால நீரோட்டத் தேய்வு இருந்தால்தான் அத்ததைய உருண்டைக் கூழாங்கற்கள்  உருவாக ஏதுவாகும்.  அதாவது ஏற்புடைய காலநிலைத் தகுதி முறைகளே திரவ நீரோட்டத்தைச் செவ்வாய்க் கோள் தளத்தில் நீடித்திருக்க முடியும்.  பன்முகக் கலவை நீரோட்டப் படிவு பூமியில் பொதுவாக இருப்பது.   இப்போது நாங்கள் அதைச் செவ்வாய்க் கோளிலும் காண்கிறோம்.  அவற்றின்   அறிகுறிகளை வைத்து, பூதளவியல் நிபுணர்கள் நீரோட்டத்தின் கொள்ளளவு, நீரின் ஆழம், ஓடும் வேகத் தையும் கணித்துக் கொள்கிறார்.   தற்போது உறுதிப் படுத்தப் பட்ட சிற்றாறின் நீரோட்ட வேகம் குறைந்த அளவு : [விநாடிக்கு ஒரு மீடர்] [விநாடிக்கு 3 அடி தூரம்], [நீரோட்டம் முழங்கால் ஆழம் அல்லது இடுப்பளவு உயரம்.]

    டாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ்.

    Pebbles in Mars

    நீரோட்டக் கூழாங்கற்கள் கண்டுபிடிப்பு  செவ்வாய்க் கோள் பூர்வீக காலத்தில் நீர்வளமாய் இருந்ததை நிரூபிக்கிறது

    ஜூன் மாதம் 4 ஆம் தேதி விஞ்ஞான அறிவிப்பில் நாசாவின் செவ்வாய்த் தளவுளவி [MSL Curiosity Rover] [MSL : Mars Science Laboratory]  150 கி.மீ. அகண்ட  (90 மைல்) கேல் பள்ளத்தாக்கில் [Gale Crater] ஓடி உலர்ந்த சிற்றாறும்,  அதனில் உருண்டையான கூழாங்கற்கள் பற்கலவைப் படிவுகளில் [Rounded Pebbles within Sedimentary Conglomerate] இருந்ததை முதன்முறை காட்டிச் செவ்வாய்க் கோள் தளம் பூர்வ காலத்தில் நீர் வளமாய் இருந்திருப்பதை நிரூபிக்கிறது.  கேல் பள்ளத் தாக்கு 2012 செப்டம்பரில் கண்டுபிடிக்கப் பட்டது. உலர்ந்த இந்தப் புழுதிப் படிவில் கிடக்கும் கற்களின் அளவு, வடிவு, படிமப் பதிவுகளைப் பார்த்தால் கால்ஃப் [Golf] பந்தளவில் சப்பையாக உருண்டு, திரண்டு நீரோட்டம் உருவாக்கியது போல் தெரிகின்றன.   கற்களின் நெளிவு, சுழிவுகள் நீரோட்டம் பன்முறை மோதிச் செதுக்கிய வடிவில் உருண்டது போல் காட்சி தருகின்றன.   அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானி ஐலீன் இங்ஸ்ட் [Aileen Yingst]  தற்போது கண்டுள்ள கூழாங்கற்கள் முன்பு கண்டவற்றை விட உருட்டி இருந்ததாக அறிவித்தார்.   இந்த வியப்பான விளைவுத் தகவல் தளவுளவி 275 மீடர் [900 அடி தூரம்] பயணம் செய்து, மூன்று படிமப் பாறைகளைச் சோதித்ததின் பலாபலனே.

    Martian water

    செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுகிறது.   தூசிப் புயலை மின்னியல் தாக்கும் போது வெளிவரும் மின்னிகள் [Dischargesச்] கரியமில வாயுவையும் [CO2] நீரையும் அயனிகளாக்கி அவற்றின் விளைவாக செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு உற்பத்தியாகிறது.

    ஆர்டுரோ ரொபிலிடோ மார்டின்ஸ் [Arturo Robledo-Martinez, Mexican Geo-physical Team]

    “செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.”

    டக்ளஸ் மெக்குயிஸ்டியான் (Douglas McCuistion, Director of Mars Exploration Program NASA Headquarters)

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் (German Astronomer Johannes Kepler) (1571-1630)

    Water flow in Mars -2

    தளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள்  (Sediment Rocks).   அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையாய் இருக்கும்.     எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.

    ஜாய் கிரிஸ்ப் (Mars Science Lab Dy Project Scientist NASA)

    (2012  ஆகஸ்டு முதல் வாரத்தில் )  செவ்வாய்த் தளவுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம்  (Mound at the center of Gale Crater) MFF  உருவாக்கக் காட்சியை   (Medusae Fossae Formation  Exposure) ஒத்தது.   (MFF on Mars is an intensely eroded deposit ..)  அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை.   முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும்.   இதுவரை எந்த விண்ணுளவியும்  MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை.  அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.

    ஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர்  National Air & Space Museum)

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BudlaGh1A0o  

    [Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation]

    “நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம்.  செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ஃபீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு. “ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது.  உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது.  ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”

    பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

    “ரோவர் ஊர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன!”

    ஸ்டாவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.

    “ஆர்க்டிக் கடலில் உள்ள ஸ்வால்பார்டு தீவில் [Svalbard Island] காணப்படும் நீலப் பனிக்கட்டியின் இயற்கைத் துளைகளில் ‘நுணுக்க உயிரியல் ஊறணி ‘ [Microbiological Oasis] ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அசாத்தியமான அந்த உச்சக் குளிர்ப் பகுதிகளில் அவ்வித உயிரியல் ஆதாரங்கள் கிடத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. 1996 ஆம் ஆண்டு அண்டார்க்டிக்கில் கண்டெடுத்த செவ்வாய்க் கோளின் விண்கல்லைப் [Meteorite] போன்று, அந்த ஒரே தீவின் எரிமலையில் தோண்டி எடுத்த காந்த உலோகப் பாறைப் பளிங்கு [Magnetite Crystals] மாதிரிகள் உள்ளன.”

    ஹான்ஸ் அமுட்ஸன், ஆய்வாள அதிபதி, ஆஸ்லோ பல்கலைக் கழகம்

    “பாறை அடுக்குகள் செவ்வாய்க் கோளின் வரலாற்றைக் கூறும் பட்டைக் குறிப்பதிப்புகள் [Barcodes]. புதிதாய்க் காணும் ஒவ்வோர் அடுக்கும் மற்றுமோர் புதிரை விடுவிக்கும் பிணைப்புத் துண்டாக உள்ளது.

    ‘ ஜான் கிராட்ஸிங்கர் [John Grotzinger, Science Team Member நாசா M.I.T.]

    செவ்வாய்க் கோளில் இம்மி உயிர்கள் வாழ மீதேன் வாயு இருக்கிறதா ? 

    கடந்த பத்தாண்டு செய்த செவ்வாய்க் கோள் தள ஆராய்ச்சிகள் மூலம் மிகச் சிறு கால வேளையில் மீதேன் முகில் கோடை காலத்தில் செவ்வாய்ச் சூழ்வெளியில் தோன்றுகிறது என்பது தெரிய வருகிறது.    விந்தையான இந்த மீதேன் நிகழ்ச்சி வானியல் விஞ்ஞானிகளை பெரு வியப்பில் ஆழ்த்தி உள்ளது.    இந்தப் புதிர் செவ்வாய்க் கோளின் எந்த வித சூழ்வெளி மாடலுக்கும் ஒத்து வரவில்லை.   முதலாண்டு நோக்கிச் செவ்வாய்க் கோள் சூழ்நிலை ஆய்வு செய்த விளைவுகளில் ஏற்பட்ட தர்க்க வினாக்களுக்கு நாசாவின் கியூரியாசிட்டி தளவுளவி பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.   உற்பத்தியாகும் மீதேன் வாயு சில நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்க வேண்டும்.   2010 டிசம்பர் வெளியீட்டில் நாசா அமெஸ் ஆய்வு மைய விஞ்ஞானி கெவின் ஸாநெல் [Kevin Zajnle] செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு இருப்பது பற்றி மிகவும் ஐயப்பாடு தெரிவித்தார். ஆனால் அதே சமயத்தில் எதிர்பாரத விதமாக மெக்ஸிகோ ஆய்வாளர்கள் வேறோர் நியதியுடன் செவ்வாய்க் கோளில் மீதேன் உற்பத்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    Methane Detection in Mars

    அதாவது செந்நிறக் கோளில் நிகழும் “தூசிப் புயல்களே ” [Dust Storms & Dust Devilsச்] மீதேன் உருவாகக் காரணமாகி வருபவை.   மெக்ஸிகோ ஆய்வுக் குழுவினர் மீதேன் உண்டாவதற்கு ஒரு புது முறையை வகுத்துக் காட்டினர்.   செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுவதாகக் கூறினர்.   ஆய்வுக் கூடத்தில் நிரூபித்துக் காட்ட பனிக்கட்டி மீது மின்னியல் தாக்கல் செய்து, போலி இயக்கத்தைப் [Laboratory Simulation] புரிந்த போது மீதேன் மூலக்கூறுகள் [1.41 x 1016 molecule of Methane per joule] தோன்றின.  40 ஆண்டுகளாக  செவ்வாய்க் கோளில் மீதேன் சிறிதளவு இருப்பது பற்றிப் பேசப் பட்ட வருகிறது.  மீதேன் இருப்பு உயிரின ஜீவிகள் வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும்.   நமது பூமியில் உள்ள உயிரின ஜீவிகளே பெரும்பான்மை மீதேன் வாயு உண்டாகக் காரணமாகின்றன. நாசாவின் செவ்வாய்த் தளவுளவி “கியூரியாசிட்டி” செவ்வாய்க் கோள் எப்படித் தன் வாயுச் சூழ்வெளி   இழந்தது என்பதை அறியத் திட்டமிடப் பட்டுள்ளது.   தற்போதைய செவ்வாய்க் கோள் சூழ்வெளி அழுத்தம் பூமியை விட [100 இல் 1 ஆக] நலிவாக உள்ளது.

    Kasei Valles Maps of Mars

    நாசாவின் செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி தேர்ந்தெடுப்பு

    2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் சூழ்வெளிக் காலநிலை வரலாற்றை விளக்கமாகப் பதிவு செய்ய இறக்கப் போகும் “மேவன்” காலநிலை அறிவிப்பு விண்ணுளவியை (Mars Climate Mission -2) ஏவுதற்கு அனுமதி கிடைத்து விட்டது என்று நாசா முதன்முறையாக அறிவித்தது !  அந்த செவ்வாய் விண்ணுளவி எட்டுக் கருவிகளை ஏற்றிக் கொண்டு தணிந்த உயரத்தில் (90 – 3870) மைல் நீள்வட்ட வீதியில் சுற்றி வந்து சூழ்வெளி வாயு மண்டலத்தை ஆராயும்.  மூன்று ஆண்டுகள் விண்ணுளவி புரியும் அந்தக் குறிப்பணித் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு 485 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.  நாசாவின் மிதச் செலவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது “மேவன்” (Maven – Mars Atmosphere & Volatile Environment Probe) விண்வெளி ஆய்வுத் திட்டம்.  1998 ஆம் ஆண்டில் 327 மில்லியன் டாலர் செலவில் முதன்முதல் காலநிலை உளவ ஏவப்பட்ட விண்ணுளவி -1 (Mars Climate Orbiter -1) செவ்வாய்க் கோளை நெருங்கினாலும், மனிதத் தவறால் (மெட்டிரிக் அளவியலைப் பயன்படுத்தாது பிரிட்டீஷ் அளவியலைப் புகுத்தியதால்) உந்துசக்தி மிகையாகிச் செவ்வாய்க் கோளில் முறிந்து விழுந்து விட்டது !

    fig-1b-maven-spacecraft-instruments

    செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளின் பதிவுகளை வெளிப்படுத்தும்,  இப்போது விஞ்ஞானிகள் காணும் செவ்வாய்க் கோள் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய செவ்வாய்க் கோளைப் போல் இருக்கவில்லை !  ஆரம்பத்தில் செவ்வாய்க் கோள் அடர்ந்த வாயுச் சூழ்வெளியைக் கொண்டிருந்த தென்றும், அந்த பாதுக்காப்புக் குடைத் தளத்திலே நீரைத் திரவமாக வைத்திருந்த தென்றும் ஊகிக்கப் படுகிறது.  திடீரென ஒரு திரிபு ஏற்பட்டுக் காலநிலை மாறுபட்டுப் பெரும்பான் மையான வாயு மண்டலம் மறைந்து போய் நீர் வளம் எல்லாம் பாலைவனம் போல் வெறுமையானது ! பல அண்டக் கோள் விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளின் பூர்வீக காந்தக் களம் மறைந்து போனது மிக முக்கிய மாறுதல் என்று நம்புகிறார்கள்.  மேவன் விண்ணுளவி பரிதி உமிழ்ந்திடும் மின்னேறிய துகள்களின் (Solar Charged Particles) பாதிப்புச் செவ்வாய்க் கோளின் தற்போதைய வாயு மண்டலக் கசிவுக்குக் காரணமாக இருக்குமா என்று ஆய்ந்து கண்டுபிடிக்கும்.  செவ்வாய்க் கோளின் சக்தி வாய்ந்த காந்தத் தள இழப்பால் பரிதியின் தீவிரப் புயல் (Solar Wind) வாயு மண்டலத்தைத் தாக்கி விடுவிப்பு செய்திருக்கலாம் என்று  ஊகிக்கிறார்கள் !

    fig-1c-climate-orbiter-equipment

    மேவன் விண்ணுளவியின் திட்டப்பணிகள் என்ன ?

    2013 ஆம் ஆண்டில் பயணம் செய்யப் போகும் மேவன் விண்ணுளவி மூன்றாண்டுகள் செவ்வாய்க் கோளைச் சுற்றி வரும்.  மேவன் விண்ணுளவி செவ்வாயின் வாயு மண்டலம், காலநிலை வரலாறு,  உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான அமைப்பு போன்ற விஞ்ஞான விளக்கங்களைத் தெளிவாகக் கண்டறியும்.  மேலும்

    1.  செவ்வாய்ச் சூழ்வெளியிலிருந்து விண்வெளிக்கு வெளியேறிய “ஆவிக் கிளம்பிகள்” (Volatiles) இழப்பால் நேர்ந்த கால நெடுப் பாதிப்புகள்.  அது செவ்வாயின் சூழ்வெளி வரலாற் றையும், காலநிலை, திரவ நீர், கோளின் குடிவசிப்புத் தன்மை (Planetary Habitability) ஆகியவற்றை விளக்கமாக அறிவது.

    2. செவ்வாய்க் கோளின் மேல் மண்டல வாயுச் சூழ்வெளியின் (Upper Atmosphere) தற்போதைய நிலமை, மின்னியல் கோளம் (Ionosphere), மற்றும் பரிதிப் புயலுடன் அவற்றின் இயக்கப்பாட்டு மோதல் விளைவு களை (Interactions with Solar Wind) உளவிக் காண்பது.

    3. விண்வெளிக்குக் கசியும் அயனிகள் (Ions) மற்றும் முடக்குகள் (Neutrals) ஆகியவை தப்பிச் செல்வதைக் கண்டறிவது. 4. கால நெடுவே இழப்பு வரலாற்றைச் சொல்லும் வாயுக்களின் நிலையான ஏகமூலங்களின் வீதத்தைக் (Ratio of Stable Isotopes) காண்பது.

    மேவன் விண்ணுளவியில் அமைப்பாகும் தொடர்புத் தகுதிகள்

    செவ்வாய்க் கோளை அண்டிய மேவன் விண்ணுளவி தனது உந்துக் கணைகளை (Thruster Boosters) இயக்கிச் செவ்வாயின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி முதலில் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கும்.  அவ்விதம் சுற்றும் போது நீள்வட்ட ஆரங்கள் 90 மைல் (குட்டை ஆரம்) 3870 மைல் (நெட்டை ஆரம்) அளவில் கட்டுபாடாகி ஆய்வுத் திட்டங் களை நிகழ்த்த ஆரம்பிக்கும். (வட்ட வீதியில் நெட்டை ஆரமும், குட்டை ஆரமும் சமமானவை).  அப்போது மேவன் விண்ணுளவி செவ்வாய்த் தளத்துக்கு 80 மைல் உயரத்தில் தணிந்து சுற்றி மேற்தள வாய் மாதிரிகளைச் சோதிக்கும்.  அத்துடன் செவ்வாய்த் தளத்தில் ஊர்ந்து செல்லும் தள வாகங்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதி செய்யப் படும். நாசா முன்னேவிய இரண்டு விண்ணுளவிகள் (Mars Reconnaissance Orbiter & Mars Odyssey Spacecraft) தொடர்ந்து சுற்றி வருகின்றன !  அவை இரண்டும் இன்னும் தொடர்ந்து பணி செய்து செந்நிறக் கோளின் “தளவியல் இரசாயனத்தை” (Geochemistry) ஆராய்ந்து கொண்டு வருகின்றன.  தளங்களில் ஊர்ந்து செல்லும் வயதான இரண்டு “தளவுளவிகள்” மற்றும் சமீபத்தில் இறங்கிய ·பீனிக்ஸ் தளவுளவி (Land Rovers : Spirit & Opportunity, Later Phoenix Lander) ஆக மூன்று தளச் சாதனங்கள் பணிபுரிந்து வருகின்றன.

    Flood waters on Mars -1

    புதியதாக “செவ்வாய் விஞ்ஞானத் தள ஆய்வி” (Mars Science Laboratory MSL) எனப்படும் அடுத்தொரு தளவுளவி இதுவரை இல்லாத பத்து மடங்கு நுட்பக் கருவிகளுடன் உலவிடப் போகிறது !  அவற்றில் செவ்வாய்க் கோளில் நுண்ணுயிர் ஜந்துகள் வாழத் தகுதியுள்ள  சூழ்வெளி நிலை இன்னும் இருக்கிறதா வென்று ஆழமாய் உளவும் கருவிகளும் அமைக்கப் படும்.  அத்துடன் மேவன் விண்ணுளவி அடுத்து ஈசா அனுப்பப் போகும் “எக்ஸோ-மார்ஸ் வாகனத்துடன்” (ExoMars Rover) தொடர்பு கொள்ளும் வசதியும் பெற்றிருக்கும்.

    மேவன் விண்ணுளவியில் உள்ள கருவிகள்

    மேவன் செவ்வாய்க் கோளின் மேற்தள வாயுச் சூழ்நிலை பற்றியும் பரிதிம் வீசும் புயல் அதனைத் தாக்கும் பாதிப்புகளையும் ஆராயும்.  அதன் கருவிகள் செவ்வாயின் வாயு மண்டலத்தின் வாயுக்கள், பரிதியின் புயல் வீச்சு, அயனிக் கோளம் (Ionosphere) ஆகியவற்றை அளந்தறிவிக்கும்.

    மேவன் விண்ணுளவியில் உள்ள முக்கிய கருவிகள் :

    1. (Particles & Field Package PAF) – துகள்கள், காந்தத் தளம் அளப்பது.

    2. (Solar Wind Electron Analyser SWEA) – பரிதியின் புயல் அயனிக் கோளம் எலெக்டிரான்களை அளப்பது.

    Kasei Valles of Mars

    3. (Solar Wind Ion Analyser SWIA) – பரிதியின் புயல், காந்தத் தளக் கவசம், அயான்களின் திரட்சி, வேகத்தை அளப்பது.

    4. (Suprathermal & Thermal Ion Composition STATIC) – தப்பிச் செல்லும் மித சக்தி வெப்ப சக்தி அயான்களை அளப்பது.

    5. (Solar Energetic Particle SEP) – பரிதியின் தீவிர சக்தித் துகள்கள் செவ்வாய்க் கோள் மேற்தள வாயு மண்டலத்தைத் தாக்கி விளையும் பாதிப்புக்களை அளப்பது.

    6. (Lagmuir Probe & Waves LPW) – அயனிக் கோளத்தின் பண்பாட்டைத் தீர்மானிக்கும்.  தப்பிச் செல்லும் அயனிகளின் அலைச் சூடாக்கம், வாயு மண்டலத்தில் பரிதியின் தீவிர புறவூதா திணிப்பு.  (Solar EUV Input to Atmosphere)

    7. (Magetometer MAG) – அகிலாண்டப் பரிதிப் புயல் & அயனிக் கோள காந்தத் தளத்தை அளப்பது.

    8. (Remote Sensing Package RS) – தொலை உணர்வுக் கருவித் தொகுப்பு.

    9. (Imaging Ultraviolet Spectrometer IUVS) – மேற்தள & அயனிக் கோள பொதுப் பண்பாடு அளப்பது.

    10. (Natural Gas & Ion Mass Spectrometer NGIMS) – அயனிகள், வெப்ப முடக்கிகள் ஆகியற்றின் ஏகமூங்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கத் தனிமங்களை அளப்பது. (Measures the Composition & Isotopes of Thermal Neutrals & Ions).

    fig-1g-climate-orbiter-details

    முதன்முதல் செவ்வாய்க் கோளின் காலநிலை அறிவிப்பு !

    ஃபீனிக்ஸ் தளவுளவியில் அமைக்கப்பட்டுள்ள கனடாவின் காலநிலை அறிவிக்கும் சாதனம் தனது முதல் அறிவிப்பை வெளியிட்டது.  தளவுளவி தடம்வைத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த உபகரணங்கள் இயங்க பூமியின் விண்கப்பல் ஆட்சி அரங்கி லிருந்து ஆணை அனுப்பப்பட்டது.  தற்போது தொடர்ந்து காலநிலை அறிவிப்புகள் பதிவாகி வருகின்றன.  முதல் 18 மணி நேரக் காலத்தின் அறிவிப்பில் :

    . . . வானம் வெறுமையாக இருந்தது.  அடுத்துக் காற்று நீர்மை (Humidity) சோதிக்கபடும்.

    . . . குறைந்த நிலை உஷ்ணம் : -80 டிகிரி செல்ஸியஸ் (-112 F)

    . . . பகல் தாண்டி உச்ச நிலை உஷ்ணம் : -30 டிகிரி செல்ஸியஸ் (-22 F)

    . . . சராசரி வாயு அழுத்தம் 8.55 மில்லிபார். (பூமியின் கடற்தள அழுத்தத்தில் 100 இல் 1 பாகம்)

    . . . காற்று வேகம் : 13 mph (20 km/h) வட மேற்குத் திசைநோக்கி.

    fig-2-mars-earth-atmospheres

    ஃபீனிக்ஸ் செவ்வாய்ப் பயணம் ஒரு மீள் எழுச்சித் திட்டம் !

    செவ்வாய்க் கோளில் விண்ணுளவிகளை நுணுக்கமாக இறக்குவது என்பது இமாலயச் சிரமங்கள் அளிப்பது !  இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின ! 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன.  துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன !  தற்போதைய வெற்றிகரமான ஃபீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளி லிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே !1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது ! அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது !  அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது !  இப்போது செவ்வாய்க் கோளில் தடம் வைத்துள்ள ·பீனிக்ஸ் தளவுளவி முன்பு இழந்து போன செவ்வாய்த் துருவ உளவியை ஒத்த இரட்டை விண்ணுளவியின் சாதனங் களையும், நிறுத்தப்பட்ட செவ்வாய் 2001 தளவுளவிச் சாதனங்களையும் பயன்படுத்தி இப்போது இயங்குகிறது.  அவ்விதம் முந்தி முடக்கிய சாதனங்களை மீண்டும் அமைத்து உண்டாக்கப் பட்டத்தால் “·பீனிக்ஸ்” (Phoenix) என்று இத்திட்டம் பெயரிடப்பட்டது !

    Mars Exploration

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: ESA, NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Mars Dry out ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace  By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002) 12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

    20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (Mars Probe Spacecrafts) 20 (A)http://www.thinnai.com/?module=displaystory&story_id=40803131&format=html (செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ?)

    21 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)

    22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)

    23 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html (செவ்வாய்த் துருவப் பனித் தொப்பிகள்)

    24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html (செவ்வாய்க் கோளுக்கு ஃபீனிக்ஸ் தளவுளவி)

    25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40903261&format=html (செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு, பெர்குலரேட் உப்பு கண்டுபிடிப்பு)

    26 NASA’s Reconnaissance Orbiter [May 15, 2008]

    27 BBC News : NASA Selects Mars Climate Mission -(2) (September 16, 2008)

    28 Mars Climate Orbiter -(1) Update By Wikipedia (March 22, 2009)

    29 Space Flight Now : Mars Story Spawns Kudos & Controversy By Craig Covault (Mar 24, 2009)

    30 BBC News : Q & A Liquid Water on Mars (Mar 22, 2009)

    31 BBC News : New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)

    32 BBC News : Briny Pools May Exist on Mars By Paul Rincon (March 24, 2009)

    33 The Mars Climate Orbiter Mission (Internet Sources)

    34 BBC News – NASA Selects Mars Climate Mission (Sep 16, 2008)

    35 BBC News New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)

    36 FoxNews.com Space Center – NASA Space Probe Projects Cost Overruns (Apr 10, 2009)

    37 The Future of Things – Maven New NASA (Climate) Mission to Mars By : Shalhevet Bar-Asher [Oct 13, 2008]

    38 Wikimedia Source – Maven Mars Program Overview (Jan 29, 2009)

    39. http://jayabarathan.wordpress.com/2012/08/10/curiosity-2/ NASA’s Land Probe -Curiosity [August 2012]

    40. Daily galaxy : Mar’s Methane Debate – A Sign of Life or a Mirage ? [September 11, 2012]

    41. Wired Science : Life on Mars ? Non-Detection of Methane Suggests No Modern-Day Microbes. [November 2, 2012]

    42. NASA Land Probe Curiosity Close to Solving Mystery of Mars’ Missing Atmosphere [November 2, 2012]

    43.  http://news.nationalgeographic.com/news/2012/09/120927-nasa-mars-science-laboratory-curiosity-rover-water-life-jpl/[September 27, 2012]

    44.  http://www.nasa.gov/mission_pages/msl/news/msl20120927.html   [September 27, 2012]

    45.   http://www.utk.edu/tntoday/2013/05/30/mars-curiosity-rover-strong-evidence-flowing-water/ [May 30, 2013]

    46.  http://www.thehindu.com/sci-tech/science/rounded-pebbles-on-mars-point-to-water-flow/article4769911.ece  [June 1, 2013]

    47.  http://www.naturalnews.com/040610_water_on_Mars_pebbles_space_exploration.html  [June 4, 2013]

    48.  http://www.esa.int/Our_Activities/Space_Science/Mars_Express/The_floodwaters_of_Mars [June 6, 2013]

    49.  http://en.wikipedia.org/wiki/Viking_program  [February 2, 2014]

    50. www.dailygalaxy.com/my_weblog/2014/02/image-of-the-day-clues-found-that-liquid-water-may-exist-on-mars-today-.html [February 12, 2014]

    51.  www.dailygalaxy.com/my_weblog/2014/02/a-vast-oceanus-borealis-may-have-once-covered-13-of-mars.html  [February 17, 2014]

    (தொடரும்)

    ++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  February 22, 2013

    http://jayabarathan.wordpress.com/  

     

    Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation

    Share
  • ஸலபஞ்சிகே என்ற மணிமொழி

    இன்னம்பூரான்

    sala
    அன்பே, ஆரமுதே, ஆயிரம் அடைமொழி மணிமொழியே, பிரியமானவளே, காதலியே, தலைவியே, செல்லமே, என் கண்ணின் கருமணியே, ஸலபஞ்சிகே! கழுதே !

    உன் கண்ணசைவில் மதி மயங்கி, கொலுசு ஒலியில் மனதை பறி கொடுத்து, கூந்தலழகில் லயித்துப்போய்,உன் ஒயில் நடையில் மயங்கிப்போய், நாடி வந்தேன் உன்னை. நீ ஓடிப்போனாய். அது வெறும் பாசாங்கு தான், நான் உன்னை துரத்தி வரவேண்டும், வந்துன் அடிப்பொடியாக நின் காலடியில் தவமிருக்கவேண்டும் என்ற ஆசையை நீ குறிப்பால் உணர்த்தினாய் என்று என் அக்காவும், உன் சிநேகிதியும் ஆன சுந்தரி அடித்துச் சொன்னதை, புரிந்துகொள்ளும் வயது அப்போது எனக்கில்லை. நான் துடித் துடித்துப்போனேன். மனம் நொந்தது. உடல் வெந்தது, அர்ஜுனனைப்போல (‘…என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது. … உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது. -அம்மா! தாயே! பரதேவதையே ! இது மகாகவி பாரதியாரின் மொழியாக்கமாக்கும். ஹுக்கும்!) அவனுக்கு ஒரு விதமான விரக தாபம். எனக்கு உன்னை விழையும் விரகதாபம்.

    உன்னை தேடி குழாயடிக்குப்போனேன். பொண்டுகள் கூடும் இடம் அது தானே. என் வயது அப்படி. அறியாப்பருவம். குழாயடிப்பெண்கள் எல்லாருமே என் கண்ணுக்கு அழகாக இருந்தார்கள். எல்லாரையும் வெறித்துப்பார்த்த சேக்காளி மனோஹரன் உன்னையும் விழுங்குவது போல் பார்த்தான். அது எனக்கு பிடிக்கவில்லை. ஒரு தட்டுத் தட்டினேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா? ‘உன் கண்ணுக்கு அவளழகு. என் கண்ணுக்கு இவள் அழகு’ என்றான். வனஜா தான் அவனுடைய ஆள். நான் வனஜாவை பாதாதி கேசம் அளவெடுத்தேன் என்று அவன் கோபப்பட்டான். நீயே சொல். எல்லாப்பெண்களும் அழகாக இருப்பதால் தானே, எங்கள் கண்கள் அலை பாய்ந்து, நொந்து போகின்றன. நான் இப்படி எழுதுவது உனக்குப்பிடிக்காது. இந்த பொம்பளை வர்க்கத்துக்கே பொஸெஷன் ஒரு கவசம், கேடயம், கத்தி, கபடா எல்லாம். பிடிச்சுப்போன ஆம்பிளையை கடிச்சக்கணும். கசக்கணும். அந்தடை, இந்தண்டை போக விடக்கூடாது. நமக்குள் அந்தரங்கமாக இருந்த போது, உன் பாதங்களை நீவி விட்டுக்கொண்டிருந்தேன். அப்போது, நீ முனகிக்கொண்டே சொன்னது என்ன தெரியுமா? : ‘ஆம்பளைக்கு பெண்குட்டி கால்கட்டு இல்லை; அவன் தான் இவளுடைய தொண்டரடிப்பொடி ஆழ்வார்!’.

    நான் ஒரு அசடு. எப்போதும் சங்ககாலக்காதலை நுகர்ந்து, நுகர்ந்து, மனஸா, வாசா, அனுபவித்தவன். உனக்கு சங்கத மொழியின் இங்கிதமான அங்கதம் தெரியும். ரகுவம்சத்தில் ஶ்ரீராமனும் சீதையும் ‘தாமங்கம் ஆரோப்ய…’ என்று காளிதாஸன் எழுதிய சிற்றின்ப இலக்கியத்தை நான் அனுபவித்து உரக்கப்படித்த போது என்னை கட்டித்தழுவி என்னனம்மோ செய்தாய். லாகிரி தலைக்கேறி விட்டது. அப்போது செல்லமாக நீ கேட்டாய், ‘இந்த ரஸாபாசம் காளிதாஸன் ஏன் ஸீதாதேவியின் தொடையை ‘ரம்போரு’ (வாழைத்தண்டு) என்று உருவகித்தான் என்று. வாழைத்தண்டு வளைந்து கொடுக்காதே, என்று சொல்லி ‘கல கலவென்று சலங்கொலி போல் சிரித்தாய். இத்தனைக்கும் ‘சுட்றது‘ என்று சொல்லி என் கைக்கு அழுத்தம் கொடுத்தாய். காளிதாஸன் சொன்னது குளிர்ச்சி என்றேன். என் வாயை பொத்தினாய், கைகளிரண்டும் சில்மிஷத்திலிருந்தாலும் ! இத்தனைக்கும் நாம் ஆம்படையான் -பொண்டாட்டி இல்லை என்பதை மறந்தே விட்டோம். அதுவல்லவோ காதல். அளவு கடந்த காதல். வரை மீறிய காதல். பகற்குறியல்லவா. ‘லவ் இன் த ஆஃப்டர்நூன்’ சினிமா பார்த்தோமே, அந்த ஞாபகம் வந்தது. என்னிடம் குறும்பு செய்த நீ, நான் சில்மிஷம் செய்வதாக சொல்லி மோஹன சிரிப்பு ஒன்று உதிர்த்தாய். என்னை கிள்ளி விட்டு, ‘சினிமா பார்க்க விளக்கை அணைக்கிறான் பாருடா. அதை மெச்சிக்கணும்.’ என்றாய். அந்த ‘டா’ மோஹத்திலிருந்து நான் இன்னும் விடுபடவில்லை ! அதை சொல்லத்தான் இந்த கடுதாசி.

    கடுதாசி எழுதினால், ‘நலம். நலம் அறிய அவா’ என்று சம்பிரதாயமாக, அப்பாவுக்கும், அம்மாவுக்கும் எழுதுவேனே தவிர, உனக்கு எழுதுவதில், பொற்றாமரை பீடத்திலிருக்கும் தமிழரசியின் தேமதுர சொற்களை உதிர்ப்பேன். கட்டிப்பிடிக்க அதுவே ஏது. கேளடி கண்மணி! தொல்காப்பியத்தில் காம சூத்ரம். “… ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப்
    பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர், தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்” . (தொல்.பொருள் அகத்திணையியல் முதல்நூற்பா உரை). அகத்தின் அழகு முகத்திலே என்பேன். முகத்தில் முதலிலே முத்தம், பின்னரே ஒலியும், உணவும் என்க. இது அனுபவத்தின் கூறு. உன் அனுபவத்தைச் சொல்கிறேன். மாட்டிக்கிணையா !

    கடுதாசி நீளும். காதல் கடுதாசி சுற்றி சுற்றி அலையும். இங்கும் அங்கும் போகும். தேர் நிலைக்கு வந்தாலும், மார் லப்டப் தான். அதனால் நான் என்ன எழுதினாலும் நீ படிக்கணும். பிறகு, இருவரும் சேர்ந்து படிப்போம். அதற்கு நீ காமத்துப்பால் பதில் எழுத வேணும். எப்படி என்றா கேட்கிறாய்?

    “வீழும் இருவருக்கு இனிதே வளிஇடை
    போழப் படாஅ முயக்கு”

    திருக்குறள் 88: காமத்துப்பால்

    திருவள்ளுவரின் வாக்கு: காத்துக்கூட புக இடமெல்லாமல் கட்டித்தழுவி சுகிர்ப்பது தான் இருவருக்கும் இன்பம். சரி தான். இலக்கணம் வகுத்தோனும், அறம் வகுத்தோனும் கலவியின்பம் எடுத்தோதினர். நம் காமமிகுந்த காதலுக்கு இதுவே வேதபாடம்.

    இளங்கோவடிகள் மாஜி ராஜகுமாரன். முற்றும் துறந்த சமண முனிவர். சிலப்பதிகாரத்தில் அவருடைய படைப்பாற்றிலில் முங்கி எழுந்து மங்கல வாழ்த்துக்கூறும் ‘…கோதையர் ஏந்துஇள முலையினர்…’ எல்லாரும் அழகு பிம்பங்களே. அதான் குழாயடியில் மருகினேன். மருகி ஜொள்ளு வழிந்தனன். ஆனாலும்,

    ‘… வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
    கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
    தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத்
    தீராக் காதலின் திருமுகம் நோக்கிக்
    கோவலன் கூறும்ஓர் குறியாக் கட்டுரையை..’

    கேட்டு மகிழ்ந்து அருகே வாடியம்மா, மணிமொழி. நாமும் தாரும் மாலையுமாக மயங்கிக் கையற்று…ம்ம்ம்ம்ம்ம்ம்…..

    கோவலன் காதல் மொழி தான் பேக் க்ரவுண்ட் ம்யூசிக்:

    ‘… மாசறு பொன்னே. வலம்புரி முத்தே.
    காசறு விரையே. கரும்பே. தேனே.
    அரும்பெறல் பாவாய். ஆர்உயிர் மருந்தே
    பெருங்குடி வாணிகன் பெருமட மகளே.
    மலையிடைப் பிறவா மணியே என்கோ?
    அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
    யாழிடைப் பிறவா இசையே என்கோ?
    தாழ்இருங் கூந்தல் தையால் நின்னைஎன்று
    உலவாக் கட்டுரை பலபா ராட்டித்
    தயங்குஇணர்க் கோதை தன்னொடு தருக்கி
    மயங்குஇணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்,
    வாரொலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி…’

    சமண முனிவரின் இந்த ‘யாழிடைப் பிறவா இசை’ கேட்டு நாமும் மோனத்தில் ஆழ்வோமாக.

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் மஹாகவி பாரதி உண்மையை பதமறிந்து, பதம் பிரித்துச் சொன்னான்.

    பெண்கள்
    திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
    வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும்-இந்த
    மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
    வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும்-துணி
    மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
    சொல்லித் தெரிவ திலலை,மன்மதக்கலை-முகச்
    சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ?

    புரிஞ்சதா ? பெண்ணே! மானே ! மரகதமே! மணிமொழியே !

    உன்னுடைய

    இன்னம்பூரான்

    22 02 2014

    அடடா! பெண்களை பார்க்கவும் லஜ்ஜைப்படும் நானா இந்த கடுதாசு எழுதினேன் ! ஊஹூம்! கனவில் எழுதின கடிதம். சொப்பனத்தில் கிடைத்த சோபானம்.
    மன்னித்து விடு, மணிமொழி. ஆமாம்! நீ அரு.ராமநாதன் எழுதியதை படித்திருக்கிறாயோ! அப்டின்னா, மன்னிக்க ஒன்றும் இல்லை.

    சித்திரத்துக்கு நன்றி: http://images.metmuseum.org/CRDImages/as/web-large/65_108.jpg

    Share
  • மணிமொழிக்கு ஒரு மடல்!

    தஞ்சை வெ.கோபாலன்

    என் அன்பிற்கினிய மணிமொழி,

    இங்கு நானும் குடும்பத்தில் ஏனையோரும் நலம்; அதுபோலவே அங்கு நீயும் மற்றவர்களும் நலமாக இருப்பிர்கள் என நம்புகிறேன். நீ உன் கடிதத்தில் உனது மனத்துயரங்களை முழுவதுமாய் வடித்து அனுப்பியிருக்கிறாய். உன் நிலைமை எனக்குப் புரிகிறது. இந்த நிலைமை உனக்கு மட்டுமல்ல, நடுத்தர குடும்பத்தில் திருமணமாகி புகுந்த வீடு செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் ஏற்படுகின்ற நிலைமைதான். புக்ககம் புகுந்த சில காலம் வரையில் இதுபோன்ற தனிமைச் சூழ்நிலையும், புதிய உறவுகளின் நடவடிக்கைகளும், பேச்சுக்களும், நீ இதுநாள் வரை இருந்த சூழ்நிலைகளிலிருந்தும், கேட்டுவந்த பேச்சுக்களிலிருந்தும் மாறுபட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு புதிய சூழ்நிலை மனதுக்கு மகிழ்ச்சியாகவும், பழகுவதற்கு இனிமையாகவும் இருக்கும்; ஆனால் பலருக்கு புகுந்த இடத்தின் மாறுபட்ட சூழ்நிலையை ஏற்றுக் கொள்ள முடியாத அல்லது சகித்துக் கொள்ள முடியாத நிலைமையும் ஏற்படலாம். துரதிர்ஷ்டவசமாக உனக்கு இரண்டாவதாக சொன்ன நிலை ஏற்பட்டிருப்பதை எண்ணி மனம் வருந்துகிறேன். என்ன செய்ய முடியும்? நமது சமூக சூழ்நிலை, காலம் காலமாக சிலர் நடந்து கொள்ளும் முறை இன்னமும் மாறவில்லை. பழைய கால பத்தாம் பசலித்தனத்தின் தொடர்ச்சியாக இருக்கத்தான் செய்கிறது. அது மாற வேண்டும்; மாறுவதற்கு அனைவருமே முயற்சி செய்ய வேண்டும்.

    இதுபோன்ற சூழ்நிலை படித்த முன்னேற்ற மடைந்த குடும்பங்களில் ஏற்படுவதில்லை. ஆனால் பழமையில் ஊறிய பிற்போக்கு எண்ணங்களைக் கொண்டிருக்கும் மனிதர்கள் இன்னமும் மாறாமல் இருப்பதற்கு அவரவர் வாழும் குடும்ப சூழ்நிலையே காரணங்களாக இருக்கிறது. பெரும்பாலும் இப்படி நடந்து கொள்பவர்கள் கல்வி அறிவு குறைந்தவர்களாகவும், பொறாமை எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மருமகள் எனும் சொல்லே ஒரு வீட்டிற்கு வேறொரு வீட்டிலிருந்து வந்த மற்றொரு மகள் என்பதுதான் பொருள் என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. இவளை நாட்டுப்பெண் என்பதற்கு ‘நாற்றுப்பெண்’ என்றும், நாற்றங்காலில் பயிரிட்டுப் பின்னர் அதை வயலில் நடுவது போல பிறப்பது ஓரிடம், அவளை வளர்ப்பது வேரிடம் என்பதால் இந்தப் பெயர் வந்தது.

    மருமகள் என்பவள் தங்களுக்கு எதிரி போன்றவள், தங்கள் உரிமைகளை, சலுகைகளை, இதுநாள் வரை இருந்த உறவுகளுக்கு இடையூறானவள் என்றும், தங்கள் மகனிடமிருந்து தங்களைப் பிரிப்பதற்காக வந்தவள் என இவர்கள் எண்ணுவதும் இதற்குக் காரணம். யாருடைய வினைப்பயனோ தெரியவில்லை உனக்கு அமைந்த இடத்தில் இருப்பவர்கள் உன்னை அன்னியமாக நினைத்துத் தேவையில்லாமல் கற்பனையான காரணங்களைக் கொண்டு உன்னை எதிரியாக நினைத்து உன் மனம் வருந்துபடி நடந்து கொள்கிறார்கள். இதற்கெல்லாம் நேரடியாக இவர்களிடம் விவாதிப்பதோ, எதிர்ப்பதோ அல்லது நடவடிக்கைகள் எடுப்பதோ சரியான வழிமுறையாக அமையாது. காலம் இவர்கள் மனதை மாற்ற வேண்டுமானால், நீ நடந்து கொள்ளும் முறையில்தான் இருக்கிறது.

    பிறந்த இடத்தில் நீ எங்கள் அன்பிற்குரிய ஒரே பெண் என்பதால் உன்னை சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தோம். உனக்குத் தேவையானவைகளைக் குறிப்பறிந்து நாங்கள் கொடுத்து வந்தோம். சொல்லப்போனால் இங்கு உன்னை ஒரு மகாராணி போலத்தான் வளர்த்து வந்தோம். அப்படிப்பட்ட உனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை எங்கள் இதயங்களில் இரத்தம் கசிவது போல உணர்கிறோம். இருந்தாலும் நிலைமை மாறும் என்று நாங்களும் சும்மா இருக்கமுடியாது. சொல்ல வேண்டிய முறையில் சொல்லி அவர்களுக்குப் புரிய வைக்க எங்களால் ஆன அனைத்தையும் நிச்சயம் செய்வோம். அப்படியும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லையானால் அப்போது என்ன செய்வது என்பதை ஆலோசிப்போம்.

    இத்தனை களேபரங்களுக்கும் இடையில் உனது கணவர் உனக்கு ஆறுதலாக இருக்கிறார் என்பது மனதுக்கு இதமளிக்கும் செய்தியாக இருக்கிறது. உங்கள் இருவருக்கிடையே எந்த கசப்பும் ஏற்படாத வரையில் மற்றவர்களின் போக்கை எதிர்கொள்வது என்பது சுலபமாக இருக்கும். எந்த நிலையிலும் நீ அவர்களிடம் நேரடியாக மோத வேண்டாம். உன் கணவரிடம் சொல்லி பக்குவமாக நிலைமையைச் சீர்திருந்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். இவற்றையெல்லாம் மீறி நிலைமை கடுமையாக மாறுமானால் அப்போது நாங்கள் நிச்சயம் தலையிடுவோம். நம்பிக்கையோடு இரு. வாழ்க்கையில் இதுபோன்ற மேடு பள்ளங்கள் ஏற்படலாம், அதுவே உனக்குச் சில பாடங்களைக் கற்பிக்கலாம், அந்த பாடங்களைக் கற்பதன் மூலம் எதிர்காலத்தில் நீ இவர்களைப் போல் உன் இளையோரிடம் நடந்து கொள்ளாமல் இருக்க முடியும் என்பதால் எல்லாம் நன்மைக்கே என்று இரு; இது தற்காலிகமானது என்பதை உணர்ந்து கொள்.

    நமது முன்னோர்கள் பல புராண இதிகாசங்களை நமக்குக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றிலெல்லாம் வரக்கூடிய கதா பாத்திரங்கள் பட்ட சிரமங்களையும், சந்தித்த இடையூறுகளையும் நாம் படிக்கிறோம். அவைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளத்தான் அப்படிப்பட்ட பாத்திரங்களைப் படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் என்ன செய்கிறோம், அவற்றைப் படித்துவிட்டு ‘சூ’ கொட்டி அனுதாபப் பட்டுவிடுவதோடு நம் பணி முடிந்துவிட்டதாகக் கருதுகிறோம். அதுபோன்ற சூழ்நிலைகள் நம்மால் உருவாகக் கூடாது என்று எண்ணுவதில்லை. நீயே பார்த்திருப்பாய், நம் ஊர் தொலைக்காட்சிகளில் பகல் நேரம் இரவு நேரம் என்று பாராமல் சில தொடர் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிக் கொண்டே யிருப்பார்கள். அவர்கள் நோக்கம் அந்தத் தொடரை பல ஆண்டுகள் நடத்த வேண்டும் என்பதுதான். அதன் மூலம் அதிகமான விளம்பர லாபம் பெறலாம் என்பதுதான். ஆனால் அவர்களுடைய லாப நோக்கத்துக்காக பெண் பாத்திரங்களைக் கொடுமையானவர்களாக, கொலைகூட செய்யத் துணிந்தவர்களாக, பிறரை கோபத்தால் கன்னத்தில் அறைபவர்களாகக் காட்டி வருகிறார்கள். இரண்டு பெண்கள் ஒற்றுமையாக இருக்க விட மாட்டேன் என்று விரதம் பூண்டவர்களாக இவர்கள் கற்பனையிலேயே பல கொடுமைகளை உருவாக்கி அவற்றைப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்படிச் செய்வது சமூக சேவையா, சமூகத் தீமையா என்று பெண்களே தீர்மானித்து அவற்றைப் பார்க்காமல் இருக்க வேண்டும்.

    இன்றைக்கு பல பணிகளில் பாதிக்கு மேல் பெண்கள்தான் இருக்கிறார்கள். நீ முதுகலை பட்டம் பெற்றிருப்பதோடு சில துறைகளில் சிறப்புப் பயிற்சியும் பெற்றிருப்பவள். நீ நினைத்தால் உன் கணவனுடைய சம்மதத்தோடு நல்லதொரு பணியைத் தேர்ந்தெடுத்து நீ வேலைக்குச் செல்லலாம். இப்போதெல்லாம் பெண்கள் பணியாற்றச் செல்வது குடும்பத்தின் செலவுகளை ஈடுகட்ட அதிகப்படியான வருமானம் எனும் நிலைமையைத் தாண்டி, பெண்களின் சமத்துவம், உரிமை, பொறுப்புணர்வு இவற்றை வளர்க்கக்கூடிய வாய்ப்பாகக்கூட அமைந்திருக்கிறது. ஒரு காலத்தில், அதாவது நான் பணிபுரிய ஒரு அலுவலகம் சென்றபோது ஆண்கள் மட்டுமே நிறைந்திருந்த இடங்கள் எல்லாம் இப்போது பெரும்பாலும் பெண்களே பணிபுரியும் இடங்களாக மாறியிருக்கின்றன. அன்று அலுவலகங்களில் அதிக நேரம் தேநீர் அருந்துமிடங்களிலும், செய்தித் தாள்களைப் படித்துவிட்டு அரசியலை அலசும் இடங்களாகவும் இருந்த நிலை இன்று மாறி பெண்களின் பணியால் சிறப்பாக வேலைகள் நடப்பதாகத் தெரிகிறது. இந்த நிலைதான் வளரவேண்டும், சமூகத்தில் சமத்துவமும் நிலைபெறும்.

    நீ கல்லூரியில் படித்த காலத்தில் பெண்ணுரிமை பேசும் சிலருடைய பேச்சுக்களைப் பெருமையாகப் பேசுவாயே. அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைத் தவிர வேறு எதையும் செய்ததாகத் தெரியவில்லை. ஒரு கட்டுப்பாட்டுக்குள் செயல்படுபவர்கள் அதை உடைப்பதற்கோ, மீறுவதற்கு எப்போது உரிமை கிடைக்கும் தெரியுமா? எந்த சூழ்நிலையிலும் சமூகம் வகுத்துத் தந்த நல்ல சூழ்நிலைகளிலிருந்து மீறமாட்டோம் எனும் மன உறுதி ஏற்படுமானால், தேவையற்ற, எல்லை மீறிய கட்டுப்பாடுகளை சட்ட திட்டங்களை உடைத்தெறியவும், மீறவும் உரிமையுள்ளவர்களாக இருப்பார்கள். சென்ற நூற்றாண்டின் முதற் பகுதியில் இந்த நாட்டில் நிலவி வந்த சூழல் இன்று தலைகீழாக மாறியிருப்பதைப் பார்த்தும் படித்தும் தெரிந்து கொண்டிருக்கிறோம் அல்லவா? அப்படியே இப்போதைய நிலைமைகளும் தலைகீழாக மாறவும், இன்னும் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும் கூடிய வாய்ப்பு நமக்கு நிச்சயம் ஏற்படும்.

    நம் தேசத்துப் பெண்மணிகள் என்றும் மற்றவர்களைக் காட்டிலும் ஆளுமை நிறைந்தவர்கள், பிறரை ஆட்டிப் படைப்பவர்கள் என்று நினைப்பதில்லை. மாறாகத் தாய்மை எனும் உணர்வால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்புள்ளம் கொண்டவர்களாக வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். வழி தவறிச் செல்பவர்களையும்கூட தங்கள் அன்பால், பணிவால் மனம் மாறச் செய்து விடுகிறார்கள். அதனால்தான் நம் தேசத்தில் பெண் தெய்வங்கள் அதிகமாக இருக்கின்றன. பொதுவாக பெண் தெய்வங்கள் அனுக்கிரகம் செய்பவர்களாக, தீமைகளை அழிப்பவர்களாக, குடும்பத்தின் ஆக்கத்துக்கு ஆதாரமாக இருப்பவர்களாகப் படைத்திருக்கிறார்கள். பெண்மையின் உயர்வை உலகத்துக்குத் தெரிவிக்கும் இடத்தில் நமது பாரத தேசம் இருக்கிறது என்பதற்குப் பல எடுத்துக் காட்டுகளைச் சொல்லலாம். இங்குதான் நதிகளுக்கெல்லாம் ஒரு சில தவிர மற்றவற்றுக்கு பெண்கள் பெயர்களைக் கொடுத்திருக்கிறார்கள். நதிகள்தான் பாய்ந்து வரும் நீரால் நாட்டை வளம்பெறச் செய்வது போல பெண்கள் இந்த நாட்டை வளம் பெறச் செய்பவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

    நமது புராண கதா பாத்திரங்களில் பெண்களுடைய மன உறுதி, எடுத்த காரியத்தை முடிக்கும் மனோ தைரியம், தீமை நேரும்போது அதனை அழித்துவிடத் துடிக்கும் தீரம், நடவடிக்கைகளில் நேர்மை இவற்றைக் காண முடிகிறது. பீஷ்மர் சிறையெடுத்துத் தன் தம்பி விசித்திரவீரியனுக்குத் திருமணம் செய்விக்க முயன்ற அம்பா, அம்பிகா, அம்பாலிகா இம்மூவரில் ஒருத்தி மட்டும் தான் வேறொருவனைக் காதலிப்பதாகச் சொல்லவும், அவனிடம் அவளை பீஷ்மர் அனுப்பிய போது அவன் நிராகரித்ததும், பின்னர் அவள் பீஷ்மரிடமும், தன் காதலனிடமும் பலமுறை சென்று மன்றாடியும் ஒன்றும் நடக்கவில்லை என்பதால் மன உறுதியோடு பீஷ்மரைக் கொல்ல சபதம் ஏற்று, தானே தன் உயிரை மாய்த்துக் கொண்டு சிகண்டியாகப் பிறந்து பீஷ்மரின் உயிரைப் பறிக்கக் காரணமாக அமைந்த வரலாற்றைப் படித்திருக்கிறோம் அல்லவா? ஒரு பெண் நினைத்தால் ஆண்களால் முடியாத காரியத்தையும் சாதிக்க முடியும் என்பதற்கு சிகண்டியின் வரலாறு நமக்குச் சொல்கிறது அல்லவா?

    அவ்வளவு ஏன் மணிமொழி? அடக்கம், பணிவு, ஆண்கள் முன்பு வந்து பேசத் தயங்கும் பண்பாடு இவைகள் குறுதியில் ஊறிய தமிழ் நாட்டுப் பெண்களுக்கு மத்தியில் எத்தனை யெத்தனை வீராங்கனைகள் தமிழ் நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். வேலு நாச்சியாரைத்தான் உனக்குத் தெரியுமே. அவர்களுடைய வீர வரலாற்றை நீ படிக்கும்போது தானே நானே தெரிந்து கொண்டேன். தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தியடிகளின் போராட்டத்தில் தன்னையே ஆஹூதியாக்கிக் கொண்ட தில்லையாடி வள்ளியம்மையின் வரலாற்றைக் கூட நீ சொல்லித்தானே நானே புரிந்து கொண்டேன். முதன் முதலாக தமிழத்தில் மருத்துவம் படித்து சமுதாய சீர்திருத்தத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட முத்துலட்சுமி ரெட்டியின் வரலாறு நாம் அறியாததா? இப்படிப்பட்டவர்கள் மத்தியில் தோன்றி இன்று கலை உலகிலும், இலக்கிய உலகிலும், ஆன்மீக உலகிலும் வழிகாட்டிகளாகத் திகழும் எண்ணற்ற பெண்மணிகள் இந்த நாட்டின் கண்மணிகளாகத் திகழவில்லையா? இவர்கள் வாழ்க்கையெல்லாம் உனக்கும் உன்போன்ற பிற பெண்களுக்கும் ஆதர்சமாக இருக்க வேண்டாமா? இருக்கும், அவர்களது வாழ்க்கை உன்னைப் போன்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டும் என்பது மட்டும் நிச்சயம்.

    உனக்காவது சமூகத்தில் ஒரு அந்தஸ்து இருக்கிறது. ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பண்புள்ள பெண் என்கிற முத்திரை பதிந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் ஏறக்குறைய அடிமைகளாக நடத்தப்பட்டிருக்கின்றனர். பெண்கல்வி அறவே மறுக்கப்பட்டிருக்கிறது. பால்மணம் மாறாத சிறுமிகளுக்குத் திருமணம் எனும் பந்தத்தை ஏற்படுத்தி அவர்களை வசக்கித் தொழுவில் கட்டும் நிலைமை இருந்திருக்கிறது. அப்போது பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைச் சற்று நினைத்துப் பார்த்தால் தெரியும் இன்று நம் பெண்கள் எத்தனை சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்று. காலம் மாற மாற நிலைமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன. மாற்றம் ஒன்றுதான் சமூகத்தில் மாறாததாக இருக்கிறது.

    உனக்குத் தெரிந்திருக்கலாம், நம் நாட்டில் இறைவனுக்கு ஆலயங்களில் பணியாற்றுவதற்கென்று ஒரு சமூகம் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்தது. அந்தப் புனிதப் பணி நாளடைவில் ஆண்களின் ஆற்றாத உடற்பசிக்கு பலியாகிக் கொண்டிருந்த நிலையில், சில சீர்திருத்த வாதிகள் அத்தகைய அமைப்புகளை உடைத்தெறிந்தனர். இசை, நடனம் போன்ற அரிய கலைகளை வளர்த்த அந்த வம்சத்தினர் இன்று நம் சமுதாயத்தில் கலைகளைக் காத்து மக்கள் கையில் கொடுத்து அரிய பணியைச் செய்திருக்கின்றனர். ஆக பெண்கள் தெய்வமாகக் கொண்டாடப்படும் புனிதமான நாட்டில் நாம் பிறந்தோம் என்ற கர்வம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும்.

    மகாகவி பாரதி கல்கத்தா சென்றிருந்த போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதா அம்மையாரைச் சென்று பார்த்தாராம். அப்போது பாரதியிடம் நிவேதிதா அம்மையார் உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா என்று வினவியபோது பாரதி சொன்னாரம், இதுபோன்ற அரசியல் கூட்டங்களுக்கு நாங்கள் எங்கள் வீட்டுப் பெண்களை அழைத்துச் செல்வதில்லை என்று. இதனால் கோபமடைந்த சகோதரி நிவேதிதா பாரதியாரிடம், இரு கண்களில் ஒன்றைக் குருடாக்கி உலகை பார்ப்பதுண்டோ? என்றாராம். நம் இரு கண்களுக்கு இணையானவை ஆண், பெண் என்போர் சமுதாய அமைப்பில். இதில் ஒரு கண்ணைக் குருடாக்கி மற்றொன்றால் உலகை முழுமையாகப் பார்க்க முடியுமா என்பது பாரதியாரின் கேள்வி. உண்மைதானே இவ்வுலகில் ஆண், பெண் பேதமின்றி இருவரும் சமமான நோக்கில் வாழ்வது அவசியம் அல்லவா? அந்த நிலை என்று தோன்றுகிறதோ அன்றே நாம் வாழும் சமுதாயம் நாகரிக சமுதாயம் என அழைக்கப்படும்.

    எனக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தபோது நீதான் என்னுடன் மருத்துவ மனையில் இருந்தாயே. அப்போது பார்த்திருப்பாய் அங்கிருந்த செவிலியர்கள் அங்கு சிகிச்சை பெற்ற அனைவரையும் தங்கள் தந்தையைப் போல, தாயைப் போல, உடன் பிறந்தாரைப் போல எத்தனை அன்பு பாராட்டி சேவை செய்தனர். அவர்கள் சேவையில் எங்காவது ஓரிடத்திலாவது, அவர்கள் வாங்கும் ஊதியத்துக்காக வேலை செய்பவர்கள் போல காண முடிந்ததா? முடியாது, காரணம் அவர்கள் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வழி வந்தவர்கள் உண்மையான சேவகிகள். அவர்கள் அப்போது காட்டிய மனிதாபிமானம், அன்பு இன்றும் என் நெஞ்சில் நீங்காமல் நிறைந்திருக்கிறது. அவர்களுக்கு இருந்த பொறுமை, சகிப்புத் தன்மை, பிறர்க்கு உதவும் குணம் இவற்றை நீயும் அவர்களைப் போல அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் பணியாற்றும் பெண்களும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பது என் அவா. குறிப்பாக அந்த மருத்துவமனை செவிலியர்களைப் பற்றிச் சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. நேற்று ஒரு மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன். அங்கு பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் வேலை பளுவினாலோ, அல்லது அக்கறையின்மையினாலோ நோயாளியாக வந்தவரிடம் தேவையில்லாமல் சிடுசிடுத்தது எனக்கு மன வருத்தத்தைக் கொடுத்தது. அதனால் அன்பின் வழி நின்ற செவிலியர்களை உனக்கு நினைவுகூர்ந்தேன்.

    என் அன்பு மணிமொழி, உன் தாயைப் பற்றி உனக்கு ஒரு சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். அவள் என் வாழ்க்கைத் துணைவியாகி நம் வீட்டுக்கு வந்த நாள் முதல் சுயநலமில்லாமல் ஒரு சிறு முணுமுணுப்பு கூட இல்லாமல் என்னுடைய, உன்னுடைய நலன் ஒன்றை மட்டுமே மனத்தில் கொண்டு பாடுபட்டு வந்திருக்கிறாள். தொடக்க காலத்தில் எனக்கு அவ்வளவு அதிகமாக ஊதியம் இல்லாத காலத்தில் உள்ளதைக் கொண்டு உயர்வாக வாழ கற்றுக் கொடுத்தவளே அவள்தான். தன்னுடைய நலன் என்று தனியாக எதையுமே வைத்துக் கொள்ளாமல் நமக்காக என்று வாழ்ந்த அந்த அன்பு உள்ளம் உன் புகுந்த வீட்டு நிலைமை தெரிய வந்தால் மிகுந்த மனவருத்தத்துக்கு உள்ளாகும். அதனால் உன்னைப் பற்றிய வேண்டாத விவரங்களை நான் அவளிடம் சொல்லவில்லை. காரணம் அவள் உள்ளம் மிக மிருதுவானது, தன் அன்பு மகள் போன இடப்0த்தில் சங்கடங்களுக்கு ஆளாகிறாள் என்பது தெரிந்தால் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. உனக்காக இல்லாவிட்டாலும், அந்த அன்பு தாய் உள்ளத்துக்காகவாவது நீ சிறிது பொறுமையாக இரு. காலம் மாறும். அப்போது நாம் அனைவருமே மகிழ்ச்சியடையும் நாள் வரும். உன் மூலம் தனக்கு ஒரு அன்புருவான பேரக் குழந்தை வரப்போகிறது என்று ஆவலோடு காத்திருக்கிறாள். அந்த ஆவலைப் பூர்த்தி செய்.

    உன் கணவருக்கும் என் அன்புகளைத் தெரிவி. வீட்டில் அனைவருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துக்களைச் சொல். நல்லதே நடக்கும். நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள், எதிர்காலம் உன் கையில். வாழ்த்துக்களுடன்.

    உன் அன்பு அப்பா,

    Share
  • மணிமொழிக்கு ஓர் கடிதம்

    தமிழ்த்தேனீ

                                        உ

                                 கடவுள் துணை

    அன்புள்ள மணிமொழிக்கு அன்புடன் தமிழ்நேசன் எழுதிக் கொள்வது

    உங்கள் அனைவருக்கும்  எங்களது ஆசிகள்

    அவ்விடத்தில்  உன்னுடைய கணவரும் எங்களது  மகனும் ஆன   திரு சித்திரைச்செல்வன் மற்றும்  எங்களது  பேரனும் , பேத்தியும்  உங்களின்  குழந்தைகளுமான  தயாநிதியும்    இளநகையும்  அனைவரும் நலம்தானே, மருமகளே நீயும்  நல்ல பெண்தான்  என்பதை நிரூபித்துவிட்டாய் . உனக்கும் எங்களது ஆசிகள் .

    இவ்விடம் நானும்  லலிதாவும் நலம் உடலளவில் நலமாக இருக்கிறோம்,

    என்னடா இப்படி உடலளவில் நலமாக இருக்கிறோம்  என்று எழுதியிருக்கிறேனே  என்பதைக் கூர்ந்து   கவனித்துப் புரிந்துகொண்டால்  எங்கள் இருவருக்கும்  உள்ளத்தளவிலும் நலம் கூடும்.

    நிற்க  எப்போதோ நாங்கள் இருவரும்  உங்கள் காதலை ஏற்கவில்லை என்பதை இன்னமும் மனதில் வைத்துக் கொண்டு  அதன் பிறகு  நாங்கள் எத்தனையோ முறை உங்களை அன்பாலும் ,பாசத்தாலும்  நெருங்க முயன்றும், எங்களால் நெருங்க முடியவில்லை, நீங்கள் இருவருமே எங்களை நெருங்க விடவில்லை.

    நாங்களும் மனிதர்களே  எங்களுக்கும் அன்பு பாசம் பந்தம் எல்லாமே உண்டு என்பதை நீங்கள் இருவருமே மறந்துவிட்டீர்கள். பரவாயில்லை காலம்  ஒருநாள் உங்களுக்கு எங்களின் உண்மையான பாசத்தையும் அன்பையும் உணர்த்தும், ஆனால் அப்போது நாங்கள் இந்த உலகத்தில் இருப்போமா  இல்லையா என்பது இறைவனே அறிவான்.

    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நாங்கள் உங்கள் பேரில்  சரி சரி  எங்கள்  மகன் பேரில் வைத்திருந்த அன்பு மிகுதியின் காரணமாக அப்போதிருந்த மனநிலையில் உங்கள் காதலை  மறுத்திருக்கலாம்,

    உங்கள் இருவருக்குமே தெரியும்  ஆஸ்தி , அந்தஸ்து , போன்றவைகளை எண்ணி நாங்கள் உங்கள் காதலை மறுக்கவில்லை. எங்கள் மகன் எங்களுடனே  கடைசீ வரை அன்புடனும் ,பாசத்துடனும்  இருக்கவேண்டும் என்று எண்ணியே காதல் எல்லாம் வேண்டாமே நல்ல பெண்ணாகப் பார்த்து நாங்களே மணமுடித்து வைக்கலாமே என்று எண்ணியே உங்கள் காதலை மறுத்தோம்.

    அப்படியும் நீங்கள் இருவருமே உங்கள் காதலில் உறுதியாக இருப்பதைப் பார்த்து நாங்களாகவே முன்வந்து உங்கள் திருமணத்தை நடத்தி வைத்திருக்கலாம் நாங்கள் மறுக்கவில்லை,

    நீங்களாகவே திருமணத்தை நடத்தியபோது  உன் பெற்றோரும்  நாங்களும்  மனம்விட்டுப் பேசி  உங்கள் திருமணத்தை நிறைவாக நடத்தியிருக்கலாம்.  உங்கள் பெற்றோரும் சம்மதிக்கவில்லை, எது எப்படி இருந்தாலும் என் மகனின்  மகிழ்ச்சியே  எங்கள் மகிழ்ச்சி  என்றுணர்ந்து   எங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு  நாங்கள் பலமுறை  உன் பெற்றோரிடம் பேச முயலும்போதெல்லாம் எந்தவிதப் பிடிமானமும் கொடுக்காமல் எங்கள் இருவரையும்  பலவிதமான  சொற்களால்  வருந்தச் செய்தார்கள்  உன் பெற்றோர்கள்.

    இதுவரை இந்த செய்தியை உங்கள் மனம் புண்படுமே என்று எண்ணி. உங்கள் இருவரிடமும் கூறாமல் வைத்திருந்தோம். உங்களுக்கு திருமணமாகி  20 ஆண்டுகள் ஆயிற்று நீங்களும்  பெரியவர்களாகி பலவிதமான  அனுபவங்களைப் பெற்றுவிட்டீர்கள் என்றாலும்   எங்களுக்கு குழந்தைகள்  தானே  .

    இங்கே ஒரு முக்கியமான செய்தியைக் கூறவேண்டும்  உங்கள் பெற்றோரும் இதையெல்லாம்  உணர்ந்திருக்கிறார்கள், சமீபத்தில் ஒரு திருமணவிழாவில் அவர்களை எதிர்கொள்ள நேரிட்டது.

    அவர்களுக்கு தயக்கம் நாங்கள் மதித்துப் பேசுவோமா  என்று எங்களுக்குத் தயக்கம்  எல்லோர் முன்னிலையிலும்  மீண்டும் கடுஞ்சொற்களால் அவர்கள் எங்களை அவமானப் படுத்திவிடுவார்களோ  என்று.

    ஆயினும் திடீரென்று உன்  அப்பா மயங்கிக் கீழே விழுந்ததும் நாங்கள் இருவரும் பதறிப் போய் உன் அப்பாவைக் கைத்தாங்கலாய் பிடித்து அவசர கால உதவியாக மருத்துவ மனைக்கு  அழைத்துப் போய் உடனடி வைத்தியம் செய்து  இறைவன் அருளால் உன் அப்பாவும்  ஆபத்திலிருந்து மீண்டார். மருத்துவர் சொன்னார் மிகச் சரியான நேரத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துப் போனோம் அதனால்தான் காப்பாற்ற முடிந்தது என்று , மிகச் சரியான நேரத்தில் எங்களை அங்கே அனுப்பி உன் அப்பாவுக்கு உதவச் செய்த  இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்.

    ஒரு முக்கியமான செய்தி  உன் பெற்றோரும் நாங்கள் இருவரும் இப்போது ராசியாகி மிக நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு  ஒருவருக் கொருவர்  அனுசரணையாக பழகி வருகிறோம் . இப்போதுதான் தெரிகிறது  அவர்கள் இருவரும் சற்றேறக் குறைய எங்கள் நிலையிலேதான் இருக்கிறார்கள் என்பது.

    ஆமாம் அவர்களும் உங்கள் இருவரின் பிரிவாலே வாடிக்கொண்டிருக்கிறார்கள், நாங்களும்  வாடிக்கொண்டிருக்கிறோம்.

    எங்களின் வாட்டத்தைப் போக்கவாவது  பழயனவற்றை மறந்து எங்களோடு இணைந்து  மீண்டும்  மகிழ்ச்சியாக வாழ நீங்கள் இருவரும் மனது வைப்பீர்கள்  என்னும்  அல்ப ஆசையோடு  இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

    உண்மையைச் சொன்னால்  கிட்டத்தட்ட  பத்து ஆண்டுகளாக  கணிணியில் எழுதியே பழக்கமாகி விட்டபடியால்  கடிதமெழுத ஆரம்பித்து  சரியாக எழுத முடியாமல் கை நடுக்கத்தாலும்  உங்களைப் பிரிந்த மனம் ஏக்கத்தால்   வந்த நடுக்கத்தாலும்  சுய இரக்கத்தாலும்  பலமுறை  எழுதி எழுதி மனம் திருப்தி கொள்ளாததால்  பல காகிதங்களைக் கிழித்துப் போட்டு  கடைசியில் இந்தக் கடிதத்தை ஒருவழியாக எழுதி முடித்துவிட்டேன்.

    சமீபத்தில் என் நண்பர் வாயிலாக ஒரு செய்தி கேள்விப்பட்டேன் ,அதை உங்களிடம் சொல்ல என் வயதும்  அறிவும் தடுக்கிறது ஆனாலும்  நாங்கள் பெற்ற அனுபவம்  சொல்லத் தூண்டுகிறது

    என்னுடைய பேரன்  தயாநிதியும்  ஒரு பெண்ணுடன்  நட்பு கொண்டிருப்பதாகவும்  காதல் வயப்பட்டிருப்பதாகவும்  ஒரு நண்பர் ஆதாரபூர்வத்துடன்  சொன்னார். அதைக் கேட்டபிறகு  உங்கள் இருவரையும் எச்சரிக்கை செய்யாமல் விட்டுவிட்டால் எங்கள் மனசாட்சி எங்களை உறுத்தும் .ஆகவேதான் இந்தச் செய்தியை உங்களுக்கு நேரில் சொல்ல தயக்கமாய் உள்ளதால்  கடிதம் மூலம் எழுதுகிறேன்.

    இந்தக் காலத்து இளைஞர்கள் நட்பு எது காதல் எது என்று  தெளிவாக இருக்கிறார்கள்  என்றாலும்   நீங்களும்  தயாநிதியை அன்போடு அழைத்து  மனம்விட்டுப் பேசி  அந்தப் பெண்ணுடன் இருப்பது நட்புதானா  அல்லது காதலா  என்பதை அவனையும் உணரச்செய்து  நீங்களும் உணர்ந்து  அதற்குத் தகுந்தவாறு  நட்பானாலும்  காதலானாலும்  வளரவிடுதலோ அல்லது தடை செய்தலோ  எது நல்லது என்று உங்கள் மனதுக்கு  தெரிகிறதோ  அதைத் தெளிவாக குழந்தைகள் மனம் புண்படாதவாறு  செய்யுங்கள்.  எங்களது பேத்தி  இளநகையையும்  கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள்.

    நாங்கள் பட்ட  கொடுமையான  அனுபவங்கள் உங்களையும் பாதிக்கக் கூடாது  என்னும் நல்ல எண்ணத்தில் எழுதப்பட்ட  இக்கடிதத்தை மதிப்பதோ அல்லது  நிராகரிப்பதோ எல்லாமே  உங்கள்  உரிமை.

    எங்களது பேரனும்  பேத்தியும்   எங்கள்  குழந்தைகளாகிய   நீங்கள் இருவரும் எந்தவித மனக்கிலேசமும் இல்லாமல்  இனிதே வாழ எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்திக்கிறோம்

                                                              இப்படிக்கு

                                                           தாத்தா  +  பாட்டி

    Share
  • மணி மொழிக்கொரு மடல்

    நடராஜன் கல்பட்டு

    அன்பு மணிமொழி,

    உன் கடிதம் கிடைத்தது. “இத்தனை நாட்களாய் ஏன் மவுனம்?” என்று கேட்கிறாய். காரணம் இன்றி எதுவும் நிகழாது இவ்வுலகில்.

    உனது கடிதம் இவ்வளவு நாளாய் என் மனதுள் அடக்கி வைத்திருந்த ஒன்றினை மடை திறந்த வெள்ளமாய்ப் பெருகிடச் செய்து விட்டது. உன்னிடம் பகிர்ந்து கொள்ளாது யாரிடம் சொல்வேன் இத்தனை நாட்களாய் என் மனதுள் அடக்கி வைத்திருந்தவற்றை?

    மறந்திடவில்லை நான் உன்னோடு பழகிய நாட்களை. ஒரு நாளா இரண்டு நாளா? பதினோறு ஆண்டுகள் ஒரே பள்ளியில் படித்தோமே நாம்.. ஒன்றாய்ச் செல்வோம் பள்ளிக்கு. நன்றாய்ப் படித்தோம். உன் வீட்டிலே உனக்கு நாட்டியம் கற்றுத் தந்தார்கள். எதைச் சொல்ல வந்தாலும் நீ அபிநயத்துடந்தான் பேசுவாய் என்று கிண்டலடிப்பேன் நான். என் வீட்டில் எனக்கு பாட்டு சொல்லிக் கொடுத்து வந்தார்கள் என்பதால் நான் எதையும் இசை வடிவில் சொல்வேன் என்பாய் நீ பதிலுக்கு.

    நினைவிருக்கிறதா உனக்கு? எனக்கு பாட்டு சொல்லித் தர வந்தவர் ஒரு முறை எத்தனை திருத்தினாலும் ஒரு சங்கதியைத் தப்பாய் நான் பாடிய போது கோபம் அடைந்து என்னை அடிக்கத் தன் குடையை உயர்த்த, அருகில் இருந்த என் பெரிய அண்ணன் பாய்ந்து வந்து அவர் கைக் குடையைப் பிடுங்கி வாசலில் தூக்கி எறிய அவர் அன்றோடு நின்றது? அன்று நீயும் இருந்தாய் எங்கள் வீட்டில்.

    அதன் பின்னர் உங்கள் அப்பாவிற்கு பங்களூருக்கு மாற்றலாகிட நாம் இருவரும் கண்ணீர் சிந்திப் பிரிந்தோம். ஆனாலும் நீ விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும்போதெல்லாம் நாம் சந்திப்போம். மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்போம் விஷயம் இருக்கிறதோ இல்லையோ. அம்மா கையில் டிபன் தட்டோடு வந்து ஒரு அதட்டல் போடும் போது தான் நாம் இந்த உலகத்துக்கு வருவோம்.

    நீ பங்களூரு சென்ற பின் நான் வேறு இருவரிடம் பாட்டு கற்றுக் கொண்டேன். அதில் ஒருவர் அண்ணாமலை சர்வ கலா சாலையில் படித்த சங்கீத பூஷணம். உனக்குதான் தெரியுமே சங்கீதம் என்றால் எனக்கு உயிர் என்று.

    நான் ப்ளஸ் ஒன் முடித்த போதே என் அப்பா என்னை “ஒன் ப்ளஸ் ஒன்” ஆக்கிடும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தார், அதான் என் கல்யாணத்திற்காக மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார். எனக்கு அந்த சின்ன வயதிலேயே கல்யாணம் செய்து கொள்வதில் சிறிதும் இஷ்டம் இல்லை. நாம் சொல்வதை வீட்டில் யார் கேட்பார்கள்?

    “காலா காலத்தில் கல்யாணம் பண்ணி விட வேண்டும்” என்பது அம்மாவின் ராம ஜபம். அப்பாவோ வசதியான பையனைப் பிடிக்க வேண்டும் என்பதிலே குறி. என் விருப்பம் என்ன என்பதைப் பற்றி இருவருக்கும் சிறிதும் அக்கறை இல்லை.

    உனக்கும் தெரியும் என் படிப்பு பாதியில் நின்றதும், என் கல்யாணம் நடந்ததும். நீயும் வந்திருந்தாய் என் கல்யாணத்திற்கு.

    மாப்பிள்ளையைப் பார்த்த போது நீ என்ன சொன்னெ? “நீ குடுத்து வெச்சவடீ. பேருக்கேத்தாப்புளெ ராஜாவாட்டம் தாண்டீ இருக்கார் அவர்” அப்பிடீன்னு சொன்னெ.

    “ஒனக்கென்னடீ. புருஷனுக்கு மெட்ராஸுலெ வேலெ. பழசெல்லாம் மறந்தூடுவையா? எங்களெல்லாம் நீ நெனெப்புலெ வெச்சுப்பையா இல்லியா?” இந்தக் கேள்விகள் நீயும் மத்த ஃப்ரெண்டுசுமாக் கேட்ட கேள்விகள்.

    “எப்டிடீ மறப்பேன் ஒங்களெ எல்லாம்?” திருப்பிக் கேட்டேன் நான்.

    “ஒன் சங்கீதம் என்னடீ ஆகும்? அவருக்கும் புடிக்குமா கர்னாடக சங்கீதம்?” அப்பிடீன்னு நீ கேட்டே.

    “சங்கீதம் ஒண்ணும் ஆகாது. அதுலெ எனக்கிருக்கற ஆர்வம் ஒரு நாளும் கொறையாது. அவருக்கு கர்னாடக சங்கீதம் புடிக்குமா புடிக்காதான்னு அங்கே போனப்புறந்தான் தெரியும்” என்றேன் உன் கேள்விக்கு பதிலாய்.

    என் மெட்ராஸ் வாசம் ஆரம்பித்தது. வீட்டில் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் என் மனதுக்குள் ஏதாவது பாடிக் கொண்டே இருப்பேன்.

    ஒரு நாள் ராத்திரி ஏழரை மணிக்கு எம். எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாவோட கச்சேரி. அவர் இசைக்கு இந்த ஒலகத்துலெ ஏது ஈடு? ஆனந்தமாய் ஆரம்பிச்சாரு, “வாதாபி கணபதிம் பஜே” ன்னு ஹம்ஸத்வனி ராகத்துலெ. என்னை அப்படியே ஏதோ ஒரு வேறெ ஒலகத்துக்கு இழுத்துண்டு போச்சு அந்த இசை.

    வாசல் கதவு தட்டுற சத்தம் கேட்க போய்க் கதவைத் திறந்தேன். “எத்தெனெ வாட்டி தட்றது? என்ன பண்ணிண்டு இருக்கே?” என்றார் என் வீட்டுக்காரர்.

    “ரேடியோலெ பாட்டு”. சொல்ல வந்ததெ சொல்லி முடிக்கலே நான். நேரா ரேடியோ கிட்டே போன அவர் அதோட சுவிச்செ அணைச்சார். அந்த ரேடியோவெத் தூக்கி வாசல்லெ போட்டார். பின் தன்னோட ஆபீஸ் பேகிலேந்து ஏதோ ஒண்ணெ எடுத்து தன் காதிலெ மாட்டிண்டு, கட்டை விரல்களை கூரையைப் பாத்தாப்புளெ வெச்சிண்டு, மத்த விரலுங்களெ மடக்கிப் பிடிச்சிண்டு ஜிங்கு ஜிங்குனு குதிக்க ஆரம்பிச்சார்.

    “ரேடியோலெ எம்.எஸ். கச்சேரி கேட்டுண்டு இருந்தேன். அதெப் போயி அணெச்சிட்டீங்களே?” ன்னேன்.

    “ஒனக்கு சரிகமபதநிஸ தான் புடிக்கும்னா ஒனக்கும் வாங்கித் தறேன் இது போல ஒண்ணு. நீயும் காதுலெ மாட்டிண்டு கேளு” ன்னார் அவர்.

    ஒரு நாள் சாயந்திரம் தியாகராஜரின் மோஹன ராக கீர்த்தைனையான “நன்னு பாலிம்ப நடச்சி வச்சீரீ ஓ” ங்கெற பாட்டெ பாடிண்டு இருந்தேன். சாயங்கால நெரமாச்சேன்னு வாசக் கதவெ மூடாமெ வெச்சிருந்தேன். எங்கம்மா சொல்லுவா, “மாலெ வேளெலெ வாசக் கதவெ மூடி வெச்சா வீட்டுக்கு வர லெக்ஷ்மி அப்பிடியே வீட்டுள்ளெ வராமெத் திரும்பப் போயிடுவா” ன்னு.

    ஆபீசிலேந்து அன்னிக்கி சீக்கிரம் வந்த அவர் உள்ளெ வந்ததும் கத்தினார், “என்ன பாட்டு இது அர்த்தம் புரியாமெ? நிறுத்தறயா அதெ?” ன்னார்.

    “தியாகராஜரெப் பாக்க ராமர் அவர் வீட்டுக்கே வராறாம். ‘என்னெக் காப்பாத்தறதுக்காக நடந்தே வந்தியா ராமா?’ ன்னு கேட்டு பாடறார் அவர்னு சொன்னேன்.

    “நீ இப்பிடி வாசக் கதெவெத் திறந்து வெச்சிண்டு பாடினையானா ராமர் மட்டும் இல்லெ. ராவணனும் வருவான். நிறுத்துடீ ஒன் பாட்டெ” ன்னு எரிஞ்சு உழுந்தார்.

    உனக்கும் தெரியும் “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” ன்னு கவிஞர் கண்ணதாசன் பாடினார்னு.

    கணவன் அமைவதெல்லாம் யாரு கொடுக்கற வரமாண்டீ?

    இப்பொ புரியறதாடீ நான் ஏன் இத்தென நாளா ஒனக்கு கடுதாசு எதுவும் போடலேன்னு?

    கண்ணீருடன்,
    கமலா

    21-02-2013
    சென்னை – 64.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…97

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள். கடந்தவாரம் இங்கிலாந்திலிருந்து எனது மனவோட்டங்களை உங்களுடன் கடித மூலம் பகிர்ந்து கொண்டேன். சில சமயங்களில் எமக்கு உள்ளச் சலவை செய்ய வேண்டிய தேவையேற்படுகிறது.

    அச்சலவையின் பின்னால் மீண்டும் புது உற்சாகத்துடன் உங்கள் முன்னே அடுத மடல் வரைகிறேன்.

    இந்த வருட ஆரம்பமே இங்கிலாந்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. பொருளாதார பின் தங்கிய நிலையிலிருந்து ஓரளவு மீட்சி பெற்று முன்னோக்கி நடைபோடுகிறோம் எனும் எண்ணம் ஏற்படும் போது முடியவில்லை உங்கள் அனர்த்தம் இதோ உங்களுக்கு மீண்டும் பாடம் கற்பிக்கிறேன் என்று இயற்கையன்னை வரிந்து கட்டிக் கொண்டு தொடுத்து விட்டாள் போர் எம்மீது.

    ஓ ! நாம் தான் இயற்கையைச் சீரழித்தோம் எனும் ஆவேசம் பொங்கியதோ ? எமது இயற்கையன்னைக்கு !

    ஆங்கிலத்தில் ” Polar Vortex “ என்றழைக்கப்படும் ஒரு விதமான இயற்கை மாற்றத்தின் போகோளத்தின் வடமுனையின் குளிர் வட அமெரிக்காவை அழுத்தி அவர்களைச் சமீப காலத்தில் கண்டிராத அளவு பனிமழையினுள் ஆழ்த்தி ஒரு சதிராட்டத்தையே நடத்தியிருந்தது.

    இந்தக் காலமாற்றத்தின் எச்சங்கள் அத்திலாந்து சமுத்திரத்தைக் கடந்து நாம் வாழும் இங்கிலாந்து தேசத்தைப் பனிமழையல்லாமல் சூறாவள், அடைமழை எனும் வடிவெடுத்து சிக்கலுக்குள் உள்ளாக்கி வருகின்றது.

    இதுவே கலநில அவதானிகள், விஞ்ஞானிகள் என்பவர்களினால் எமது இந்த விடாப்பிடியான ஈரப்பதனிலைக்கு விளக்கமாக அளித்துள்லார்கள்.

    எது எப்படி இருப்பினும். இத்தகைதோர் வெள்ளத்துடன் கூடிய ஆண்டின் ஆரம்பத்தை இங்கிலாந்து கண்டிருப்பது ஏறத்தழ 250 வருடங்களின் பின்னால் என்னும் செய்தி எம்மையெல்லாம் வியப்பிலாழ்த்துகிறது.

    நான் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து ஏறத்தாழ நாற்பது வருடங்களாகிறது. இந்த 40 வருட காலத்தில் இதுவே முதற்தடவையாக இத்தகையதோர் நீண்ட சூறாவளியுடன் கூடிய தொடர் மழையையும் அதனால் நிரம்பி வழியும் தேம்ஸ் நதியையும் அந்நதியையும் ,அ அதைப் போன்ற மற்றும் சிறிய நதிகளையும் அண்டிய பகுதிகளில் பாய்ந்தோடும் வெள்ளத்தையும் நான் பார்ப்பது இதுவே முதற் தடவையாகிறது.

    காலமார்றம், காலநிலைச் சீர்கேடு இவையெல்லாம் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கைமுறையைச் சீர்குலைக்கிறது.
    இத்தகைய சீர்கேட்டை எதிர்நோக்கும் மக்களோ தம்மை வழிநடத்தும் அரசாங்கமும், அரசியல்வாதிகளும் தம்மிடம் வருடந்தோறும் வாக்குக் கேட்டு வரும் தமது நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் அரசியல்வாதிகளையும் திகைப்புடன் நோக்குகிறார்கள்.

    இங்கிலாந்து அரசாங்கமும் பிரதமரும் அல்லல்படும் ஓர் சூழல் . ஏனென்று கேட்கிறீர்களா ?

    நாட்டின் பொருளாதரத்தைச் சீராக்கும் நடவடிக்கைகளில் முக்கியமான செலவினக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாக காலநிலைச் சீர்கேட்டினால் ஏற்படும் அனர்த்தங்களைச் சந்திக்கும் பிரிவான சுற்றுப்புறச் சூழல் திணைகளத்திற்கான நிதியினைக் குறைத்திருந்தார் நிதியமைச்சர்.

    அவருக்குத் தெரியுமா இயற்கையன்னையின் சீற்றத்திற்கு இங்கிலாந்து உள்ளாகப் போகிறது என்று ?

    வந்ததே வினை ! இத்திணைக்களத்தின் நிதிப்பற்றாக்குறையினால் அவர்கள் தமது பணியாளர்களைக் குறத்தது மட்டுமில்லாமல் செய்யவேண்டிய வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளையும் முடக்கி விட்டார்கள்.

    எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு வெறும் வாயில் அல்வா வைத்தது போல ஒரு ஆனந்தம். விடுவர்களா சும்மா?

    ஆளும் கட்ச்சியையும் அதனுடைய கூட்டரசாங்கத் தோழமைக் கட்சியையும் உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள் பாவம் !

    இச்சுற்றுப்புறச் சூழல் திணைக்கள அதிகாரிகள் வேறு அரசாங்கம் தமது நிதியினைக் குறைத்ததுவே தாம் தமது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையைத் தோற்றுவித்தது என்று சொல்லி விட்டார்களா ?

    கேட்க வேண்டுமா பாரளுமன்றமே ஒரு அரசியல் உதபந்தாட்ட மைதானமாகி விட்டது பாவம் வெள்ளத்துள் தவிக்கும் மக்கள் தான் அவர்களின் உதைபந்து.

    பிரதமர் என்ன லேசுப்பட்டவரா ? டேவிட் கமரானா? கொக்கா ? என்று வெகு விரைவாக அடுத்த வாரம் தான் பங்கு பற்றவிருந்த மத்தியகிழக்குகளுக்கான விஜயத்தை ரத்துச் செய்துவிட்டார்.

    அது மட்டுமல்ல இவ்வெள்ளத்தினால் பாதிக்க[[அட்ட மக்களுக்கான நிவாரணவேலைகளைத் தானே ந்ர்ர்ரடியாகச் செயல்படுத்துவதாகக் கூறி இதற்கான பட்ஜெட் எவ்வளவு ஆனாலும் அதற்கு வரைமுறை கிடையாது என்று அறிவித்து விட்டார் போங்கள் . . . . .

    சும்மா இருந்த அரசியல்வாதிகளும் விழித்துக் கொண்டார்கள் எமது மக்களே வாழ்வாதரத்திர்கு அவதியுறும் நிலையிலே வெளிநாடுகளுக்கு உதவுவதற்காக ஏன் 11 மில்லியன் பவுண்ட்ஸ் செலவு செய்ய வேண்டும்? அந்தப் பணத்தையும் எமது காலநிலச் சீரழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்திற்காகப் பயன்படுத்துங்கள் எனும் கூக்குரல் மற்றொரு பக்கத்தில் .. . . . . .

    சரி இவைகளுக்கு மத்தியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களின் சேதி என்ன ?

    ஓ ! அவர்கள் தமது காற்சட்டைகளை உயர்த்திக்கொண்டு இன்னும் வெள்ளத்தின் நடுவே . . . . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே….

     
    கவிஞர் காவிரி மைந்தன்

     

    எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்! காதல் மன்னன் ஜெமினி கணேசன் திரையில் தோன்றி நடித்த பாட்டு! கற்பனைச் சிறகை விரித்து காதலின் சாம்ராஜ்ஜியத்தைத் தன்னாலும் கட்டியாள முடியும் என்று பட்டுக்கோட்டையார் எழுதி வைத்த பாட்டு! சமுதாய புரட்சிகர கம்யூனிஸ சித்தாத்தங்களை உள்ளடக்கிய பாடல்களின் ஊற்றுக்கண்ணாய்த் திகழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் உள்ளக்கண் திறந்த பாடலிது என்று கூட சொல்லத்தோன்றுகிறது!

    பெண்ணை உவமையிட்டு போற்றி மகிழும் தமிழ் உலகம்! இம்மண்ணில் சொல்லப்பட்ட உவமைகளுக்கு நிகராக வேறெந்த மொழியிலும் பெண் பாராட்டப்படவில்லை. எங்கோ இருந்தாலும் எம் கண்ணில் நிறைவதால், குளிர்ச்சி தருவதால், இரவில் வருவதால், உறவுகளுக்கு உடனிருப்பதால், உனைத் தூதுவிடவும் வைத்தனரே நிலாவே! எழுத்தாணி கொண்டு உனைப் பற்றி எழுத ஆரம்பித்தால் கற்பனை புலவர்களுக்கு முற்றிலுமாய் கை கொடுக்கிறதே! காலகாலமாகத் தேய்ந்து மறைந்து மீண்டும் வளர்ந்து வானில் வலம் வரும் முழுமதியே.. எங்கள் மக்கள் கவிஞன் மனதில் பொழிந்த மகரந்தப் பாடல் வரிகளிதோ..
    சந்தனத் தமிழெடுத்து சந்தங்கள் சேர்த்து சதிராட வைத்தபோது சுந்தரமாய் பாடலொன்று பிறந்திடுமே! அதிலும் நிலவைத் துணைக்கழைத்து அருமைக் காதலிக்கு உவமை சொல்லி வரைந்த பாடலிதை இனிமை என்பதன்றி வேறென்ன சொல்ல முடியும்? டி.எம்.செளந்திரராஜன் குரலில் டி.ஜி. லிங்கப்பா இசையில் பட்டுக்கோட்டையார் வடித்துவைத்தப் பட்டுக்கம்பளம்!!

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ

    இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ
    இளையவளா மூத்தவளா
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
    கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே – உன்னைக்
    காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
    கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே – உன்னைக்
    காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
    கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே – உன்
    காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே – ஒரு
    கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே – அந்த
    வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே – அதை
    வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
    கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே – நீ
    கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
    அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே – இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே – இது
    அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே

    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
    இளையவளா மூத்தவளா
    இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
    என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

    பாடல்: என்னருமைக் காதலிக்கு
    திரைப்படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
    இசை: டி.ஜி. லிங்கப்பா
    ஆண்டு: 1960

     

    http://www.youtube.com/watch?v=KUsATMgd_tw
    http://www.youtube.com/watch?v=KUsATMgd_tw

     

    Share
  • சிறுமியின் தற்கொலைக்குக் காரணமான அதிபர் கைது

     எம். ரிஷான் ஷெரீப்

     

                ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தனக்கு டேக் செய்யப்பட்ட புகைப்படமொன்றைப் பார்த்து, அதிபர் ‘வேசி’ எனத் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதையையும், அவளது கடிதத்தின் தமிழ்மொழிபெயர்ப்பையும் ஏற்கெனவே உங்களுக்குத் தந்திருந்தேன். சிறுமி வெனுஷா தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிடுவதற்கு முன்பே, அந்த அதிபரான W.M சமன் இந்திரரத்னவின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடுகள் பல கொடுக்கப்பட்டிருந்த போதும், அவருக்கிருந்த அதிகாரத்தின் காரணத்தாலும், அரசியல் பலத்தாலும் அந்த முறைப்பாடுகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

                கடந்த வருடம் மே மாதத்துக்கு முன்பிருந்தே இந்த அதிபருக்கெதிராகவும், அப் பாடசாலையில் இடம்பெறும் சில மோசமான நடவடிக்கைகள் குறித்தும் பல முறைப்பாடுகள் உயர் கல்வித் திணைக்களங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கப் பெற்றபோதிலும் கூட, எந்த விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதிபர், மாணவர்களை உடல் மற்றும் மன ரீதியான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துகிறார் எனும் மனுவை பெற்றோர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த நிலையில், இயலாத பட்சத்தில் கடந்த 2013 மே மாதம் 17ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சம்பந்தப்பட்ட பாடசாலை அமைந்திருக்கும் வலயத்தின் கல்வித் திணைக்கள உயரதிகாரிக்கு  இது குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். உத்தரவிட்டு இரு மாதங்கள் கடந்த பின்னர் 2013 ஜூலை மாதம் 23 ஆம் திகதி, அதிபருக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார் அந்த உயரதிகாரி. அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

                ஆனால், சிறுமி வெனுஷாவின் மரணத்தின் பின்னர், அவளது தற்கொலைக் கடிதம் கிளப்பிய அலை, பூதாகரமாக எழுந்தது. தான் ஒரு தீக்குச்சியாகி ஏனைய மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்ற வேண்டுமென்பதுதான் அவளது எதிர்பார்ப்பாக இருந்தது. அக் கடிதமும், அதன் மொழிபெயர்ப்பும் இணைய ஊடகங்களின் மூலமாக உலகம் முழுவதும் தெரியப்படுத்தப்பட்ட பின்னர் சமூக வலைத்தளங்களில் ஒன்றுசேர்ந்த நல்ல மனங்களின் காரணமாக அதிபருக்கிருந்த அரசியல்பலத்தினால் மறைக்கப்படவிருந்த உண்மைக்கும், மூடி மறைக்க முயற்சி செய்யப்பட்ட அநீதிக்கும் ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

                மேலதிக விசாரணைகளுக்காக நேற்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பிரிவு விஷேட காவல்துறையினரால் அதிபர் சமன் இந்திரரத்ன, கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது, சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டு பதிவாகியிருக்கிறது. 1995 இல 22 குற்றத் தண்டனைச் சட்டத்தின் 308 ஆவது பிரிவின் கீழ், சிறுவர் துஷ்பிரயோகம் எனப்படுவது மனரீதியாகத் துன்புறுத்தலும் சேர்ந்ததுதான் என்பதாலும், 2006 இல 16 குற்றத் தண்டனைச் சட்டத்தின் கீழ் மன ரீதியாகத் துன்புறுத்துவது என்பதுவும் குற்றமாகக் கருதப்படுவதாலும் அப் பிரிவுகளின் கீழ் அதிபருக்கு தண்டனை வழங்கப்படச் சாத்தியமிருக்கிறது. அவர் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பத்து வருடத்துக்குக் குறையாத சிறைத்தண்டனையை அவர் அனுபவிக்க நேர்வார்.

                அதிபர் சிறுமியின் நடத்தை குறித்து தவறாகக் கூறியதால் மன உளைச்சலுக்குள்ளான சிறுமியின் தந்தை, மரண விசாரணைக்கான உடல் பரிசோதனையின் போது, சிறுமியின் கன்னித்தன்மை சான்றிதழையும் வைத்தியர் குழுவிடம் கோரியிருந்தார். எந்தப் பெற்றோருக்கும் நேரக் கூடாத விடயம் இது. எனினும், சிறுமி கன்னித்தன்மையுடனே மரணித்திருக்கிறாள் எனச் சான்றிதழ் கிடைக்கப் பெற்றதையடுத்து அதிபர் சிறுமி மீது குறிப்பிட்ட ‘வேசி – விபச்சாரி’ எனும் கூற்று பொய்யாகியிருக்கிறது. அத்தோடு சிறுமியின் தற்கொலைக்கு அவளது பெற்றோரே காரணமென பகிரங்கமாக அரசியல் மேடைகளில் உரைத்து, அதிபரைக் காப்பாற்ற முனைந்த  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரது கருத்துக்கள், அநீதியை எதிர்த்து எழுந்த மக்களது ஆர்ப்பாட்டங்களின் முன்னிலையில் அடிபட்டுப் போயிருக்கிறது.

                எதற்கும் தற்கொலை தீர்வல்ல. ஏனைய மாணவர்களின் நல்வாழ்வுக்காக தற்கொலை செய்துகொண்ட சிறுமி வெனுஷாவின் நடவடிக்கையை யாரும் இங்கு முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது. எனினும், மக்கள் ஒன்றிணைந்தால், அநீதிகளுக்கெதிராக எதையும் சாதிக்கலாம் என்பதையே இது நிரூபித்திருக்கிறது.

                இங்கு செய்தியாகப் பதிவிட்டும், எனது வலைத்தளம் மற்றும் ஃபேஸ்புக் முகப்பிலிருந்து பகிர்ந்தும் இந்த அநீதிக்கெதிராக ஒன்றிணைந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    – எம்.ரிஷான் ஷெரீப்,

    இலங்கை

    19.02.2014

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே ! : 21

    இன்னம்பூரான்
    18 02 2014

    unnamed

    தருமமிகு சென்னைக்கு அருகே உள்ள வைணவ தலமாகிய ஶ்ரீபெரும்புதூர் என்ற ஊருக்கு அருகில் மாஜி இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சுட்டுக் கொலையுண்டார். அந்தக் கொலையை யாரும் நியாயப்படுத்தாவிடினும், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தண்டனை ஆயுள் தண்டனையாக, இன்று [18 02 2014] உச்சநீதி மன்றத்தால், Transferred Cases (Criminal) no.2 & 3 0f 2012 என்ற தீர்ப்பில் குறைக்கப்பட்டது. இது நான் எதிர்பார்த்தது தான். சொல்லப்போனால், சில நாட்களுக்கு முன் அளிக்கப்பட்ட ‘சத்ருக்ன செளஹான்‘ என்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, இதற்கு பச்சைக் கொடி காட்டியது. ‘அறம் வென்றது’ ,‘நீதி கெலித்தது’, ‘தமிழகம் போற்றும் தீர்வு’ என்றெல்லாம், இதற்கு அரசியல் அரிதாரம் பூசாமல், சட்ட நுட்பங்கள், இந்திய அரசியல் சாஸனத்தின் தீர்க்கதரிசனம் ஆகிய நோக்கில், சற்று முன் பிரசுரமான அந்த தீர்ப்பு [இங்கே] அலசப்படுகிறது.

    முதற்கண்ணாக கொலையுண்டது யார் என்பது ஒரு பொருட்டு அல்ல, தண்டனை அளிக்க. பிச்சைக்காரனுக்கும் பிரதமருக்கும் ஒரே நீதி தான். அடுத்தபடியாக, இந்தியாவில் தூக்குத்தண்டனை சட்டப்படி செல்லும். ஆகவே ஒரு கொலையாளிக்கு அதை அளித்து விட்டு, மற்றவருக்கு அதில் இருந்து விடுதலை அளிப்பது நியாயம் இல்லை. எனினும், மிகவும் அரிதாகவே, பல பின்னணிகளை மனதில் கொண்டு தான் அந்த மீளமுடியாத தண்டனை அளிக்கவேண்டும் என்ற சட்ட மரபு நடைமுறையில் உள்ளது. இந்த பின்னணியில் நோக்கினால், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உயிர் தப்பியதற்கு காரணம் குற்றத்தின் தீவிரத்தைக் குறைத்து நீதி வழங்கப்பட்டது இல்லை. சட்டமும், நீதி மன்றமும் அவர்களுக்கு மரண தண்டனை தான் விதித்தது. சட்டரீதியான விண்ணப்பங்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின் அவர்களுக்கு ஜனாதிபதியிடம் கருணை மனு செய்ய வழி ஒன்று இருக்கிறது. அப்படி செய்யப்பட்ட மனுக்கள் 11 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தன. Justice Delayed is Justice Denied. மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பது வரையப்பட்ட சட்டத்தில் இடம் பெறவில்லை. ஆனால், சட்டப் புத்தகம் என்பது வரையப்பட்ட சட்டம் + அதற்குட்பட்ட ஆணைகள் + நீதி மன்ற தீர்ப்புகளின் அறிவுரைகள். அந்த வகையில் போனால், இந்த முடிவு என்றோ எடுக்கப்பட்டது எனலாம்.

    திரு.ராம்.ஜேத்மலானி என்ற பிரபல வக்கீல் மனுதாரர்களுக்காக தாக்கல் செய்த ஆவணங்களும், வாதமும் இனி நம் சட்ட வரலாற்றில் இடம் பிடிக்கும் என்பதில் ஐயம் இல்லை. மரணதண்டனை விதித்து விட்டு, வருடக்கணக்காக அந்தக் கைதிகளை இற்செறிப்பது வன்முறை, டார்ச்சர் என்பதை குழந்தை கூட புரிந்து கொள்ளும். ஆனால் 11 வருடங்கள் அவற்றை கிடப்பில் போட்டிருந்த ஜனாதிபதிகள் குழந்தைகள் இல்லையே !

    இப்படி அவர்களை தவிக்க விட்ட நிர்வாகத்தின் போக்கு இந்திய அரசியல் சாஸனத்தின் 21வது ஷரத்தை மீறுகின்றது, இந்தியா கையொப்பமிட்ட சர்வதேச நியதிகளை மீறுகின்றது என்ற வாதம், அவருடையது. அந்த வாதம் கெலித்தது.

    எதிர்வாதம் புரிந்த (புரியாமல் புரிந்த !) அரசு வக்கீலின் வாதம் விந்தையானது. கேலிக்குரியது. அது:
    அரசு தரப்பில் (ஜனாதிபதி உள்பட) தாமதம் அதிகம் இல்லை ! அப்படியே வைத்துக்கொண்டாலும் மனுதாரர்கள், ‘சத்ருக்ன செளஹான்‘ என்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு. இங்கு செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. 11 வருடங்கள் தாமதத்தில், கரீக்டாக முன்பாதி உள்நாட்டு அமைச்சரகத்தில். ஒரு அதிகாரியின் கோப்புப் பையில் இந்த கருணைமனு கும்பகர்ண உறக்கத்தில் கிடந்தது !

    அடுத்த 5 1/2 வருட தாமதத்தை நியாயபடுத்த வழி ஒன்றுமில்லை !

    1974ல் எடிகா அன்னம்மா என்ற வழக்கில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் ‘ மரண தண்டனை கைதிகள் காத்திருக்கும் வேளையில் நடைபிணம் போல’ என்ற எச்சரிக்கை மேற்படி அதிகாரிகளுக்கும், அரசு தலைமைக்கும், மாஜி ஜனாதிபதிகளுக்கும் தெரியவில்லை போலும் !

    ஈற்றடி 1: இந்த தீர்ப்பு வரவேற்கப்படவேண்டிய மைல்கல் தீர்ப்பு.

    ஈற்றடி 2: உண்மையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உயிர்களைக் காப்பாற்றியது
    மேற்படி அதிகாரிகளும், அரசு தலைமையும், மாஜி ஜனாதிபதிகளும்.

    ஈற்றடி 3: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்கள் கருணை மனுக்களில் திரும்பத், திரும்ப, அவரவர்கள் நடை பிணமாக வாழ்வதை பரிதாபமாகக் குறிப்பிட்டு உள்ளார்கள். அந்த நிலையிலிருந்து அவர்களை, மனுவை நிராகரித்து, அதன் அடுத்தக் கட்டத்தில், அவர்களை உய்வித்த தற்கால ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி அவர்களை பாராட்டத்தான் வேண்டும்.

    ஈற்றடி 4: இனி செக்ஷ்ஷன் 432 & 433A : Criminal Procedure 1973 க்கு உட்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கலாம்.

    சித்திரத்துக்கு நன்றி: http://photos1.blogger.com/blogger/3211/208/1600/john_abraham_bird_free.jpg

    Share
  • காவேரி கல்யாணம் – நாடகம்

    தஞ்​சை ​​வெ. ​கோபாலன்

    காவேரி கல்யாணம்

    (தஞ்சையை ஆண்ட ஷாஜி மகாராஜா (1684 – 1712) காலத்தில் உருவான இசை நாட்டிய நாடகம்

    (பாகவத மேளா மரபு)

    ஆசிரியர்: ஷாஜி மன்னர்

    ஷாஜி மன்னனை அந்தக் காலத்தில் ‘சகசி மன்னர்’ என்றழைத்தனர். இதில் வரும் கதா பாத்திரங்கள்:

    1. சூத்திரதாரன்: நாடகத்தை அறிமுகம் செய்து விளக்கம் கொடுப்பவன்.
    2. கட்டியக்காரன்: நாடகம் தொடங்கி வைப்பவன்
    3. கவேரராஜன்: கவேர கன்னியின் தந்தை
    4. கவேரராஜ ஸ்திரீ: கவேரராஜனின் மனைவி
    5. கவேர கன்னி: கவேரராஜனின் மகள்
    6. கவேர ராஜன் மந்திரி: அமைச்சர்
    7. சமுத்திரராஜன்: கடல் அரசன், கவேர கன்னியின் மணவாளன்
    8. அகஸ்தியர்: பொதிகை மலை வாழ் தமிழ் முனிவர்
    9. சகி: கன்னியின் தோழி’
    10. பஞ்சநதீசர்: திருவையாற்று ஈசன்

    கதைக் களம்: திருவையாறு பஞ்சநதீசர் ஆலயம் (காவிரிக் கரை)
    காலம்: ஷாஜி மன்னரின் காலம்.

    காவேரி கல்யாணம்
    (யக்ஷ கானம்)
    ராகம்: நாட்டை தாளம்: ஜம்பை
    தோடய மங்களம்
    ஜய பார்வதீ ரமண ஜய ஜானகீ ரமண
    ஜய அந்தக தமன ஜய மஹு சூதனா

    ஜய திரிபுர ஹரண ஜய வேதோத் தரண
    ஜய அகிலநுத சரண ஜய ஜனா பரண

    ஜய ரவிசகி நேத்ர ஜய அகிலநுத பாதர
    ஜய பாஅன சரித்ர ஜய ஜகன் மித்ர

    ஜய நந்தி வரவாஹ ஜய அண்டஜ வாஹ
    ஜய நித்யோத் ஸாக ஜய சமித தாஹ

    மங்கள தரு

    மஹநீய தியாகேசுனிகி மங்களம்
    மாபாலி தேவுனிகி மங்களம்
    கனக வஸந்துனிகி மங்களம்
    கமனீய சரித்ருனிகி மங்களம்
    மனஸிஜ ஹருனிகி மங்களம்
    சோமாஸ கந்த மூர்த்திகி மங்களம்
    சோபன பிருதுனிகி மங்களம்
    மாமீத தயஸேயு ஸ்வாமிகி மங்களம்
    போஸகுல சாஹேந்திர பாஸுரகுல தேவுனிகி மங்களம்
    மாசிவ தியாகேசுனிகி மங்களம்.

    சூத்திரதாரன் வசனம்: இந்தப்படிக்குச் சகல தேவதா பிரார்த்தனை பண்ணின ததனந்திரத்திலே காப்பு கேட்பிக்கின்ற மார்க்கம்.

    நீரியல் பொருமை யாற்றில் நிமலனை வணங்கு மெங் – கா
    வேரிசா கரகல் யாணம் விளங்கிய தமிழால் பாட
    பாரினில் கமலை மாதின் பாலனாம் விட்ட வாசல்
    காரியல் வண்ண மான கரிமுகன் காப்பு தானே.

    வசனம்: இந்தப்படிக்குச் சகசிராசப் பிரணிதமான காவேரி கல்யாணம் என்கிற நாடகத்திலே சகல விக்கினங்களும் நிவாரணம் பண்ண, விக்னேசுவரனைத் தோத்திரம் பண்ண விக்னேசுவரன் வருகிற மார்க்கம்.

    ஸ்ரீ விநாயகர் தருவு

    வந்தே சிவஸுதம் வரத மமரநுதம்
    ஸுந்தர குணயுதம் ஸுப்ரஸன்ன வதனம்
    பாசாங்குச தரம் பணிவர கேயூரம்
    மூஷிக வாகனம் மோதக கரம்
    பாலேந்து சேகரம் பால சிந்தூரதரம்
    லாலித பக்தவரம் லீலாய விக்னஹரம்.

    வசனம்: இந்தப்படிக்கு விக்னேசுவரன் வந்து சகல விக்கினங்களும் நிவாரணம் பண்ணின, ததனந்தரத்திலே கதாசம்விதானம் எப்படியென்றால் கவேர இராசன் ஸ்திரீ சமேதனாக நித்தியக் கொலுவுக்கு வருகிறார் என்று சகல சனங்களுக்கும் எச்சரிக்க, கட்டியக்காரன் வருகிற மார்க்கம்.

    தருவு

    தவள நாமம் சார்த்திச் சரிகை துப்பட்டிக் கட்டி
    கவேர ராஜேந்திரன் வாசல் கட்டியக்காரன் வந்தானே.

    வசனம்: இந்தப்படிக்குக் கட்டியக்காரன் வந்து எச்சரித்த ததனந்தரத்திலே கவேர இராசன் ஸ்திரீ சமேதனாகத் தன் சபைக்கு வருகிற மார்க்கம்.

    தருவு

    வஞ்சியர்கள் புடை சூழவே – இரு புறமும்
    மருவுங் கவரிகள் வீசவே
    கஞ்சமணி மார்பிலங்கவே – மனைவியுடன்
    கவேர ராசனும் வந்தானே.
    வட்ட மதிக்குடை பிடிக்கவே – புலவோர்கள்
    வந்து க்வைதைகள் படிக்கவே
    கட்டியங்கள் சில கூறவே – மனைவியுடன்
    கவேர ராசனும் வந்தானே.

    வசனம்: இந்தப்படிக்குக் கவேர இராசன் ஸ்திரீ சமேதனாகத் தன் சபைக்கு வந்து சிம்மாசனத்தில் இருந்து தன்னுடைய கன்னிகையான காவேரியம்மனுக்கு, யெளவன பிராதுர்பாவம் ஆயிற்று என்றும் நல்ல புருஷனாகப் பார்த்து, கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்றும் நினைத்து, தன்னுடைய ஸ்திரீயுடன் ஆலோசனை பண்ணுகிற மார்க்கம்.

    தருவு

    ஆசையா யெப்படி யோசனை நீ செப்படி

    எப்படியடி நாமும் இப்போ திந்தக் காவேரிக்கினி
    மெப்புடன் கல்யாணம் செய்ய வேணுமே மனைவியே சொல்.

    வனிதை திரண்டு நல்ல வடிவானாள் குறை சொல்ல
    இனி சும்மாயிருப்பதல்ல எவருக்குக் கொடுப்போம் புல்ல

    நல்ல பிள்ளையாய்ப் பார்த்து நம் பெண்ணைத் தாரை வார்த்து
    வல்ல மனையில் சேர்த்து வைக்க வேண்டும் தேர்ந்து

    குலவியற்கை நம் மாது கூடா மன்னர்க்குத் தூது
    வலியச் சொல்லப் போகாது வருவோரு மில்லையிப் போது.

    வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கவேர இராசனைப் பார்த்து, கவேர ஸ்திரீ சொல்கிற மார்க்கம்.

    தருவு

    என்னதான் உமக்கே நிப்போதிந்த யோசனை
    தன்னை யறிந்த பெண்ணிருந்தால் தானே மன்னர் வருவார்.

    மெல்லியற் கிதுவல்லாமல் மிருக சீரிட நட்சத்திரம்
    நல்ல யோகம் சாதகமும் நாம் வினவ வேணுமோ.

    நித்தியமும் சிவ பூசை நியமமாகச் செய்து வருகிறாள்
    சத்தியமா யந்தப் பலனே சந்தோஷங்கள் கொடுக்கும்.

    வாலையொரு குறத்தி நேற்று வந்து காவேரியைப் பார்த்து
    நாலு நாளில் இவளுக்கு நல்ல நாதன் வருவானென்றாள்.

    அப்படி உண்டா இவள் பேச்சுக் காலோசனை நாம் நினைக்க
    எட்டு நாளாய்க் காவேரியும் இடக்கண் துடிக்கு தென்கிறாள்.

    அப்படித் தீவிரமானால் ஐயா இந்த மந்திரியை
    மெப்புள்ள மன்னராய்ப் பார்த்து வினவி வரச் சொல்லும்.

    வசனம்: இந்தப்படிக்குக் கவேர ஸ்திரீ வசனம் கேட்டுக் கவேர இராசன் மந்திரையைப் பார்த்து சொல்லுகிற மார்க்கம்.

    தருவு

    மந்திரி காவேரிக் கேற்ற மணவாளனைப் பாராய்
    மன்னரில் சிலாக்கியமுள்ள பேராய் தந்திரி நியாயமே மெத்த
    தானோரூராய்ச் சீக்கிரமாய்த் தான் சென்று வாராய்
    வெளுக்கும் சுந்தரமான மெய்யிருக்க வேணும்
    வித்தையெல்லாம் தானே மிக வந்திருக்க வேணும்
    வாளுக்கும் பின் வாங்கா மனது இருக்க வேணும்
    வணக்கமும் மெத்தவேதான் வந்திருக்க வேணும்
    குளிர்ந்த வார்த்தை சொல்லக் குணம் இருக்கவேணும்
    கொடுக்கும் விதரணமான கொடை இருக்கவேணும்
    தளர்ந்திடாத செல்வத்துடன் தானிருக்க வேணும்
    சகல சன மித்திரனாகத் தானிருக்க வேணும்
    அரியராதியரைப் போற்றும் அன்பு இருக்க வேணும்
    ஆதிக்கம் பலமாகவே தானிருக்க வேணும்
    சரச லீலை செய்யவும் சமர்த்து இருக்க வேணும்
    சரிசமானமாகத் தான் இருக்க வேண்டும்.

    வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன இராச வசனம் கேட்டு மந்திரி, அப்படித்தானே நல்லபுருஷனைப் பார்த்து அழைத்துக் கொண்டு வருகிறோம் என்று தேச தேசங்களும் தேடப்புறப்படுகின்ற மார்க்கம்.

    தருவு

    கவேர ராசன் சொற்படிக்குக் காவேரிக்கு நாதன் பார்க்க
    நவமத ரூப மந்திரி நாடு நடந்தனனே.

    வசனம்: இந்தப்படிக்கு மந்திரி தேச தேசங்களும் தேடிக்கொண்டு வருகிற சமயத்தில், அப்புறம் கதாசம்விதானம் எப்படியென்றால் சமுத்திர இராசன், தனக்கு ஆன கன்னிகையைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டும் என்று அகத்திய மகாமுனியைப் பிரார்த்திக்க அந்த வார்த்தையைக் கேட்டு, அப்படித்தானே நல்ல கன்னிகையைப் பார்த்து உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறோம் என்று சமுத்திர இராசனுடன் சொல்லிக்கவேர இராசனுடைய கன்னிகை, காவேரிப் பெண் இருக்கிறாள் என்று கேட்டு, அந்தக் கன்னிகையைச் சமுத்திர இராசனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று கவேர இராசனைக் கேட்பதற்காக அகத்தியர் வருகிற மார்க்கம்.

    தருவு

    அகத்திய மாமுனி வந்தனரே

    சடையும் விரித்து வரிப் புலித் தோலும் உடுத்து
    தவள நீறும் பூசிக்கொண்டு அடிமேல் அடி நடந்து கொண்டு.

    மிரட்டிக் கண்ணை விழித்துக் கொண்டு
    விளங்கு ருத்திராக்க மாலை அணிந்து
    அர அர அர சிவனே என்று அகத்திய மாமுனி வந்தாரே.

    வசனம்: இந்தப்படிக்கு வந்த அகத்திய மகா முனியைக் கண்டு நமஸ்காரம் பண்ணி பக்தி யுடனே சமீபத்தில் நின்ற மந்திரியைப் பார்த்து, “வாரும் பிள்ளாய் நீ யார்?” இங்கு ஏன் வந்தாய்? ‘சொல்’ என்று கேட்கிற அகத்தியரிடம் மந்திரி சொல்கிற மார்க்கம்.

    தருவு

    வந்த காரியம் இதுதான் மகிழ்ந்து கேளும் ஐயா
    மந்தார புயன் கவேரன் மந்திரி நானய்யா!

    எங்கள் துரைக்குக் காவேரி என்றொரு பெண்டு
    இருக்கிறாள் அவள் திரண்டு இரண்டு மாதமுண்டு

    மங்களம் செய்ய அவட்கு மன்னரே நேற்று வந்து
    மாப்பிள்ளை விசாரி என்றார் வந்தேன் அதுகொண்டு

    நானா தேசங்களுக்குஞ் சுவாமி நடந்து நான் விளையாடி
    நாளு மன்னவர் குணமும் நன்றாய் அறிந்தோடி

    தானே இங்கு வந்தீரெங்கள் தையலுற வாடித்
    தழுவ இவரியற்கை சொல்லும் தரணியில் நான் தேடி

    கோதை குணமும் அமிருத குணம் வடிவில் மாது
    கொஞ்சு கிளி சங்கீதத்தில் குயில் எதிர் நில்லாது

    காதல் மிஞ்சு முன்னே அந்தக் கன்னி முலை மீது
    களபம் அணிந்து மருவக் கணவன் வேணும் இப்போது.

    வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன மந்திரியைப் பார்த்து அகத்தியர் சொல்லுகின்ற மார்க்கம்.

    தருவு

    நாமிது நிமித்த மாகவே தான் நாடி வந்தோமடா – நாளும்
    தான மிகுந்திடு சுந்தர காவேரி தன்னை அறிவோமடா.

    சமுத்திர ராசன் நம்மை நோக்கித் தவசு புரிந்தானடா – அதை
    அமர்த்த வந்த நாம் என்ன வேண்டுமென்றோம் அப்போது சொன்னது கேளடா – வெகு

    சமர்த்தாக எனக்கேற்ற பாரியை தயை செய்யும் என்றாளடா
    உமக்குக் கல்யாணம் செய்விக் கிறோமென்று ஒருவழி செய்தோமடா.

    தண்ணிக்குப் பள்ளமே வாய்த்தது போலிந்த சம்பந்தம் வாய்த்ததடா – உங்கள்
    பெண்ணுக்கும் பிள்ளைக்கும் ஏற்றதே அல்லாமல் பேதகம் இல்லையடா – அவனைக்

    கண்ணுக்கு எதிராகக் காவேரி கண்டாலும் கன மையலாவாளடா – அந்த
    வண்ண முலையாள் தந்தை தாயரிடத்துக்கு வருகிறோம் நீயும் வாடா.

    வசனம்: அகத்தியரும் மந்திரியும் அன்யோன்யமாய் வார்த்தை சொல்லி இருவரும் கவேர இராசனுக்கு அருகில் வருகிற மார்க்கம்.

    தருவு

    விரிசடை அகத்தியரும் வினவப் போன மந்திரியும்
    வரு கவேர விராசனிடம் வகையாக வந்தனரே.

    வசனம்: இந்தப்படிக்கு வந்த அகத்தியருக்குக் கவேர இராசன் நமஸ்காரம் பண்ணி மந்திரியைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

    தருவு

    என்ன சேதி சொல்லு – நீ போனது என்ன சேதி சொல்லு
    மன்ன ரியற்கை யெல்லாம் சிந்தை கொண்டு வகையாய்ப் பேசிக் கொண்டு

    வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கவேர இராசனைப் பார்த்து மந்திரி சொல்கிற மார்க்கம்.

    தருவு

    சேதியெல்லாம் இந்த முனிதானே – உமக்குத் தெரிய சொல்லுவார் கேளும்
    பாதி வழியில் கண்டேனப்பால் போகாமலே மறித்தார்
    மாது நம் காவேரிக்கொரு மன்னனையுங் குறித்தார்
    எங்கே விசாரித்தாலும் உண்மை இவர் சொல்லுக்குச் சமானமில்லை.
    அங்கும் நாம் கண்ணாரக் கண்டு அறிந்து வந்த தல்லவே
    பொங்கமாய்த் தேவரீர் உள்ளம் பூரித்திடச் சொல்லவே.

    வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன மந்திரி வார்த்தைகளைக் கேட்டுக் கவேர இராசன் அகத்தியரைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

    தருவு

    ஆரையா சொல்லும் என் அரிவை காவேரிக்கு
    சேரு மணவாளனை சிந்தித் துரை செய்தீராம்

    கருப்போ சிகப்போ பிள்ளை கண்ணாரக் கண்டீரோ
    உருட்டி விழியாதீர் உள்ளதையே சொல்லும்

    சேர்க்கும் மன்னவன் வந்தால் சேருவேன் என்று நான்
    பெற வந்த கன்னியும் பேசியிருக்கிறாள் காண்

    சரி சமான மில்லாத சம்பந்தம் நான் செய்தால்
    பரியாசம் செய்வார்கள் பார்த்த பேரெல்லாம்

    மரியாதை யுண்டான மன்னனானால் சொல்லும்
    பெரியாரென்று சும்மா பேச வேண்டாம் சுவாமி.

    யாரென்ன குலமவன் அல்லாமல் அவனுரைக்கும்
    பேரென்ன ஊரென்ன பெருமை உள்ளவனோ

    நீரென்ன சொன்னாலும் நிசமாயிருக்கு மவன்
    பேரென்ன சொல்லுமென் பூவைக்கு மணம் செய்வோம்.

    வேறு தருவு

    ஆனால் சொல்கிறோம் கேளாய் அணிமாலை புனை தோளாய்
    மானாமுன் காவேரிக்கு மணவாளனா மந்தச் சேதி

    விட்டுணு மேனியும் போலவே மேனியும் உள்ளவன்
    மெத்த விதரணிகன் அல்லால் சட்டமா எந்த நேரமும்

    சங்கீதம் ஓயாமல்தான் தானே பாடவல்லான் – ஆளும்
    மட்டமே யல்லாமல் நெட்டையுமல்ல

    வடிவில் மதராசன் – வெகு அஷ்டைசுவரிய
    சம்பன்னன் – புவிமீதில் அனைவருக்கும் உபகாரன்

    பூமியைச் சுற்றியவனாக நின்று புரக்கும் துரந்தரிகன் – பெரும்
    சாமி என்றனை வணங்கி வரம்பெற்ற சமுத்திர இராசன் – வெகு

    காம விகாரமாயிருக்கிறான் உன்னுடைய கன்னிகைக் கேற்ற புருடன்
    ஆமென்றால் இப்போதே என்னுடன் சொல்லு அவ்விடத்தில் சேதியெல்லாம்.

    வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன அகத்திய மகாமுனி வசனம் கேட்டுக் கவேர இராசன் சொல்லுகின்ற மார்க்கம்.

    கவேரி இராசன் வசனம்: கேளும் சுவாமி அகத்திய மகா முனீசுவரரே, சமுத்திர இராசனுக்கு என்னுடைய கன்னிகையைக் கொடுக்கலாம் என்று சொன்னீரே. அந்த வசனம் கேட்டு மெத்த சந்தோஷமாயிற்று, சகல குணங்கலிலும் சமுத்திர இராசனுக்குச் சமானமான பேர் இல்லை. ஆகையினாலே நமக்குச் சந்தோஷம் ஆயிற்று. என்னுடைய கன்னிகை விவரம் அறிந்தவள் அல்லள். அவளிடம் இந்த விருத்தாந்தம் சொல்லித் சம்மதி பண்ண வேண்டும். அவளிடம் இப்போது சொல்வோம் என்றால் அந்தக் கன்னிகை இங்கே இல்லை. பஞ்சநதித் தலத்திலே தனக்கேற்ற புருடன் வேண்டுமென்று பஞ்சநதீசுவரரைப் பூசை செய்யப் போயிருக் கிறாள். நாம் அழைத்தால் வரமாட்டாள், ஆகையால் தேவரீர் தயை செய்து அங்கே வந்தால் நாங்களும் கூட வருகிறோம். கன்னியிடம் இந்தச் செய்தி சொல்கிறோம். அவள் சம்மதித்தால் அந்தப்படியே கல்யாணம் ஆகட்டும்.

    சூ.வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன, கவேர இராசனைப் பார்த்து அகத்தியர் சொல்லுகின்ற மார்க்கம்.

    அகத்தியர்: நல்லது, அப்படித்தானே வந்து கன்னியைக் கேட்போம்.

    சூ.வசனம்: இந்தப்படிக்கு அகத்தியரும் சுவேர இராசனும் பஞ்சநதத்துக்குப் போவோம் என்று இருக்கிற சமயத்தில், அப்புறம் கதாம்சம் விதானம் எப்படியென்றால் திருவையாற்றில் காவேரி அம்மன் சகியோடு, பஞ்சநதீசுவரரைப் பூசை பண்ண வருகிற மார்க்கம்.

    திரை தருவு

    காவேரி வந்தாள் சகியுடனே

    காவேரி வந்தாள் நல்ல களப மெய்யி லணிந்து
    பூவார் குழலிலங்க பூர்ண சந்திரோ தயம்போல

    கரிய விழி புரள கனக பணி திரள
    வரிசையா யணி திரள மாலை முலைமேல் துவள

    வேறு தருவு

    காவேரி யம்மன் வந்தாள் கனக வடிவுடனே
    ஆவலாய்ப் பஞ்ச நதி அரனுக் கருச்சனை செய்ய

    சந்திர காவிச் சேலைகட்டி சரிகை ரவிக்கை அணிந்து
    அந்தை காலில் அணிந்து அன்னம் போல நடந்து

    கொவ்வை யிதழ் துலங்கக் கொடிபோலிடை துவளச்
    செவ்விள நீரைப் போலத் திரண்ட முலை குலுங்க

    திலகம் நுதலி லிட்டுச் சேல்விழிக் கஞ்சனம் தீட்டி
    நிலவுப் பூப் போல் க்றுநகை நின்று நின்று நகைத்து

    சூ.வசனம்: இந்தப்படிக்குக் காவேரியம்மன் வந்து பஞ்சநதீசுவரரி நமஸ்காரம் பண்ணி, பக்தியுடனே தோத்திரம் பண்ணுகிற மார்க்கம்.

    தருவு

    கங்கை வேணிய கங்காளா – பஞ்ச நதீசுவரா
    கால காலா நீலகண்டா – ப
    துங்க வரவ பூஷணா – ப கையில்
    சூல கபால மேந்திய – ப
    அம்புலி தன்னைத் தரித்த – ப
    புலித்தோலை யாடையாக வுடுத்த – ப
    சம்பரா ரியைப் பார்த்த கண்ணால் – ப நல்ல
    தலைமாலை யணிந்த புய – ப
    நேமி நாதன் நான்முகன் – ப தேட
    நீள்முடி பாதம் காணாத – ப
    சாமவேத கானப் பிரிய – ப எங்கள்
    சகதிராசன் குல தெய்வமே – ப
    தேனுடன் பாலுங் கலந்த – ப உன்றன்
    சிரசில் அபிஷேகம் செய்தேன் – ப
    நானருச் சனை செய்கிறேன் – ப எனக்கு
    நல்ல புருடனாகத் தாரும் – ப

    சூ. வசனம்: இந்தப்படிக்குக் காவேரியம்மன், பஞ்சநதீசுவரரைத் தோத்திரம் பண்ணிப் பூசை பண்ணுகிற மார்க்கம்.

    தருவு

    மவுனமாய் நின்றபி ஷேகம் வகையாகச் செய்கிறேன்
    புவிராசர் பணிராசனை யெனக்குப் புருடனாகப் பண்ணும்

    அம்புயக் கையால் சுகந்தம் அருச்சனை செய்கிறேன்
    கம்பீர புருடன் என்னைக் கிட்டவரப் பண்ணும்

    சந்தனம் கற்பூரத்துடன் சாத்துகிறேன் சுவாமி
    சந்தோடமாக யிருக்கும் தலைவன் வரப்பண்ணும்

    நல்லதொரு கனிகள் எல்லாம் நைவேதனம் செய்கிறேன்
    எல்லா மீதலுள்ள புருஷன் மேவவரப் பண்ணும்.

    தீபமெல்லாம் வகை வகையாய்ச் சிறக்கப் பணி மாறுகிறேன்
    கோபமில்லாப் புருடன் என்னைக் கூட வரப் பண்ணும்

    மறவாமல் பஞ்சாட்சரத்தை மகிழ்ந்து சபிக்கின்றேன்
    பிரியாமல் நித்த முத்தாடும் பிரியனை வரப் பண்ணும்

    சூ.வசனம்: இந்தப்படிக்குக் காவேரியம்மன் பஞ்சநதீசுவரரைப் பூசை பண்ணிக் கொண்டிருக்கிற சமயத்திலே கவேர இராசனும் அகத்திய மகாமுனீசுவரரும் கவேர இராசனுடைய மனைவியும் மந்திரியும் மற்றுமுள்ள பந்து சனங்களோடு கூட, பஞ்சநதீசுவரருடைய தலத்துக்கு வருகிற மார்க்கம்.

    தருவு

    பஞ்சநதீசுவரரை நித்தம் பணிந்து புருடன் கேட்கும்
    வஞ்சியிடம் அவர்கள் எல்லாரும் வந்தனரே.

    சூ.வசனம்: இந்தப்படிக்குக் கவேர இராசன் வந்து பஞ்சநதீசுவரரைப் பனிந்து காவேரியம்மனைப் பார்த்துச் சொல்லுகின்ற மார்க்கம்.

    தருவு

    ஆசை கொண்டாலும் சம்மதியோ காவேரி சம்மதியோ
    அம்மா சமுத்திர ராசன் அதிரூப வானாம்.

    இந்த அகத்திய முனி இது நிமித்த மட்டும்
    வந்தவன் சரித்திர வகை வகையாய்ச் சொல்லுகிறார்

    கண்ணுக் கிதமாகிய கணவனைச் சேர்வேனென்று
    பெண்ணே நீ முன் சொன்ன பேச்சுப்படிப் பேசுகிறார்

    எங்களுக்கிது தானே இயற்கையாய்க் காணுது
    மங்கையே உன்றனுடைய மனதில் வாஞ்சை எப்படி?

    வாச மாமலரெடுத்து மானே இந்த ஹரனை
    பூசை செய்வது நல்ல புருடனை வேண்டியன்றோ?

    சூ.வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கவேர இராசனைப் பார்த்து “நல்ல புருடன் வேணுமென்று இந்தப் பரமேசுவரனைப் பூசை பண்ணின விதமெல்லாம் சொல்லுகிறேன், கேளும் ஐயா! என்று காவேரியம்மன் சொல்லுகின்ற மார்க்கம்.

    தருவு

    இப்படி நான் சிவ பூசை செய்தேன் – மெத்த
    மெப்புள்ள புருடனை நான் மேவ வேணுமென்று

    நந்தவனத்தினில் நானே அடுத்தேன் – அடுத்து
    நறுமலர் அங்கிருந்ததிலே நல்லதெல்லாம் எடுத்தேன்

    பந்து போல் சுருட்டும்படி தொடுத்தேன் – தொடுத்துப்
    பங்கயக் கையாலே சாத்திப் பார்த்தேன் உள்ளம் களித்தேன்

    முன்னே நெய்யினால் விளக்கு வைத்தேன் – வைத்து
    முத்து ரத்னாதிகளிலே முகமங்கி அமைத்தேன்

    அன்னவகை யுள்ள தெல்லாம் படைத்தேன் – படைத்து
    அஞ்சடுக்குத் தீப முதல் ஆலத்தியும் எடுத்தேன்

    சிறப்பாகப் பிரதட்டிணம் புரிந்தேன் – புரிந்து
    திருச்சிற்றம்பலமோடு தேவாரம் சொரிந்தேன்

    மறவாமல் நந்தி அருகிருந்தேன் – இருந்து
    மனத்தினில் பஞ்சாட்சரத்தை வகையாக நினைந்தேன்

    சூ.வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன காவேரி அம்மனைப் பார்த்து கவேர இராசன் சொல்கிற மார்க்கம்.

    வசனம்: வருவாய், மா காவேரியே! நீ பஞ்சநதீசுவரனை எத்தனைப் பிரயாசமாய்ப் பூசை செய்தாயோ அத்தனைச் சந்தோஷம் வந்து லபித்தது. இந்த அகத்திய மகாமுனீசுவரர் சகல குணங்களிலேயும் ஈடு எடுப்பில்லாமல் இருக்கிற சமுத்திர இராசனுக்கு உன்னைக் கேட்க வந்திருக்கிறார். எங்களுக்கு மிகவும் சந்தோஷமா யிருக்கிறது. உன்னுடைய அபிப்பிராயம் சொல்லு பெண்ணே.

    கன்னி வசனம்: ஆனால் நான் சொல்கிறேன், கேளும் ஐயா.

    தருவு

    பஞ்ச நதீசருடன் நெஞ்சம் சம்மதியாமல் என்
    சம்மதி எதுக்காகும் ஐய என் சுவாமி

    தஞ்சம் என்று அவர் இரு கஞ்ச மலர்ப் பாதத்தைக்
    கொஞ்சி யேத்தும் நான் அல்லவோ அனுதினமும்

    ஈசன் சம்மதியாமல் பேசேன் உங்களுக்கென்
    விசுவாசம் இன்னும் தெரியாது மனதில்

    ஆசை யுடனவரைப் பூசை செயும் எனக்கு
    நேசன் வலிய வாரானோ மருவ நல்ல

    என்னாணை இவர் வந்து சொன்னால் அல்லாமல் எங்கள்
    மன்னா நான் சம்மதிப்பேனோ இது காரியம்

    உன்னாலே தான் நமது மின்னா ளென்றோ வெண்ணிக்
    கன்னி தானம் செயப் போமோ தேவரீராலே

    சூ.வசனம்: இந்தப்படிக்குக் கன்னிகை சொன்ன வார்த்தை கேட்டுக் கவேர இராசன் அகத்தியரைப் பார்த்துச் சொல்லுகின்ற மார்க்கம்.

    சு.இராச வசனம்: வருக அகத்திய மகா முனீசுவரரே நமக்குச் சம்மதம். கன்னிகையைக் கேட்டால் பரமேசுவரன் வந்து சொன்னால் அல்லாமல் தனக்குச் சம்மதியில்லை என்று சொல்கிறாளே. பரமேசுவரனைப் பிரத்தியட்சம் பண்ணிக் கொண்டு, அவராலே இந்தக் கன்னிகைக்குச் சொல்லி வைக்க என்னால் ஆகாதே, நீர் தபோதனர் அன்றோ? உம்மாலேயே இது ஆகும். இனிமேல் இந்தக் கன்னிகை சொன்ன வார்த்தைக்கும் உத்தரவு சொல்லிப் பஞ்சநதீசுவரரையும் பிரத்தியட்சம் பண்ணிக் கொண்டு அவராலே இந்தக் கன்னிகைக்கும் சம்மதி பண்ணி வைத்து முஹூர்த்தம் நிர்ணயம் பண்ணிக் கன்னிகையைத் தானம் பண்ணுகிறேன். இப்போது நான் சொன்ன காரியங்களுக்குக்கெல்லாம் யத்னம் பண்ணுமையா சுவாமி.

    சூ. வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கவேர இராசனைப் பார்த்து “வாரும், கவேர ராசாவே, நம்முடைய தபோ பலத்தினாலே நீ சொன்ன காரியங்களெல்லாம் நிர்வாகம் பண்ணி இந்தக் கன்னிகைக்கு விவாகம் பண்ணுகிறோம்” என்று இராசனிடம் சொல்லி கவேரகன்னிகையைப் பார்த்து அகத்தியர் சொல்லுகின்ற மார்க்கம்.

    தருவு

    பஞ்சநதீசரைக் கெஞ்சி நாம் சம்மதி
    பண்ணிக் கொள்கிறோம் பெண்ணே உன்

    நெஞ்சில் ஒருமையாய் வஞ்சனை பண்ணாமல்
    நீயுங்கூட நினை பெண்ணே

    உத்தரம் சொல்லாதே முத்து முத்தாட
    உனக்கேற்ற நாயகன் பெண்ணே அல்லால்

    சத்திய வாசகன் உத்தமன் பேரும்
    சமுத்திர ராசன் காண் பெண்ணே

    நித்தம் சிவ பூசை பண்ணாமல் ஆகாரம்
    நித்திரை பண்ணான் காண் பெண்ணே உன்றன்

    அத்திர விழிக்கவன் ரூபத்தைக் கண்டால்
    அப்போது தெரிய வரும் பெண்ணே

    வந்து வெகுநேரமாச்சுது பேச்சில்
    வழிவிடாதே சொல்லு பெண்ணே மனம்

    சந்தோஷ மாகவே சமுத்திர ராசனைத்
    தான் அழைத்து வருவோம் பெண்ணே!

    சூ.வசனம்: இந்தப் படிக்குச் சொன்ன அகத்தியரைப் பார்த்துக் காவேரியம்மன் சொல்லுகிற மார்க்கம்.

    கன்னி: வரவேண்டும் அகத்திய மாக முனீசுவரரே, பஞ்சநதீசுவர சுவாமி சொன்னால் அல்லாமல் நான் சுயமாகக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறதில்லை சுவாமி.

    அகத்: கேள் பெண்ணே காவேரி! பஞ்சநதீசுவரரைப் பிரத்தியட்சம் பண்ணிக் கொண்டு அவராலே உனக்குச் சம்மதியாகச் சொல்லி வைக்கிறேன். என் திறமையைப் பார் பெண்ணே!

    சூ.வசனம்: இந்தப்படிக்கு அகத்தியர் கன்னிகையைப் பார்த்துச் சொல்கின்ற மார்க்கம்.

    தருவு

    மெத்த வொருமையாக விஷ்ணு வொரு பூநிமித்தம்
    விழியிடந்து சாத்தும் வேளையில் பக்திக் கிரங்கி வந்த நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    பிச்சிப் பூவாலருச்சனை செய்த மார்க்கண்டேயனைப் பிடிக்க
    வந்த நமனை உதைக்கவே பக்ஷமாக வந்த நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    கோட்டு முலைச்சி பரவை நாச்சியார் தனைக் கூடிக்
    கும்பிட்டுப் போற்றும் சுந்தரன் பாட்டுக் கிரங்கி வந்த
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    வாக்கிசந்த கொங்கை உமையாள் தனைப் புணர்ந்த
    மணவாளக் கோலத்துடனே ஏழை நான் பார்க்க வந்த நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    வேதம் படிக்கும் அம்பலந்தணன் யக்ஞத்தில் வரவேணுமென்று
    வருந்தும் வேளையில் பாதம் காட்ட வந்த நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    சீல முனிவர் வேஷமாகவே வந்து செங்காட்டில் சிறுத்தொண்டன்
    கறியும் உண்டபின் பாலனுடனே நின்ற நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    திசைபெறு சோழன் மனசைச் சோதிக்க நமனெனும் கன்றைத்
    தேரிலுற வைத்தபின்னும் பசுரூபங் கொண்டு வந்த நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    ஆரடி யடிதேவி உன்பிள்ளை புவியின் மீதியில் அவதரித்ததோ
    வழுகிறான் பாரம் என்று சொன்ன நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    முதலை உண்ட பிள்ளைதனை அழைத்துக் கல்யாணம் முடித்து
    அவனுடைய காணியாகிய பதியில் வைத்த நீரன்றோ!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    சித்தம் மகிழ்ந்து சமுத்திர ராசனை இந்தக் காவேரி சேரக்
    கல்யாணம் செய்யத் தேவரீர் பிரத்தியட்சமாக வேணுங்காண்!
    – ஹர பரமசிவ பஞ்சநதீசா!

    சூ.வசனம்: இந்தப்படிக்குப் பிரத்தியக்ஷமான பரமேசுவரர் அகத்தியரைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

    ஈசன்: வருக! அகத்திய மாமுனியே! நீ பண்ணின தோத்திரத்திற்கு மிகவும் சந்தோஷம்.
    அப்படியே காவேரிக் கன்னிகையை சமுத்திர ராசனுக்குக் கல்யாணம் பண்ணி
    வைக்கிறோம். நீ சீக்கிரம் போய், சமுத்திரனை அழைத்துக் கொண்டு வருக!

    அகத்: மகா பாக்கியமாயிற்று சுவாமி!

    சூ.வசனம்: இந்தப்படிக்குப் பரமேசுவர வசனம் கேட்டு அகத்தியர் சமுத்திர ராசனை அழைக்கப் போகிற மார்க்கம்.

    தருவு

    அமைக்க வந்த கன்னி அமைந்ததென்று
    அகத்தியமுனி சமுத்திர ராசனை அழைக்கத்தான் நடந்தாரே!

    சூ.வசனம்: இந்தப்படி அகத்திய மகாமுனி சமுத்திர ராசனுடன் இந்த விருத்தாந்த மெல்லாம் சொல்லிச் சமுத்திரனை உடன் கூட்டிக் கொண்டு, பஞ்சநதீசுவர தலத்துக்கு கல்யாணத்துக்கு வருகிற மார்க்கம்.

    தருவு

    சமுத்திர ராசன் வந்தான் – சுந்தரமான சமுத்திர ராசன் வந்தான்
    சமுத்திர ராசேந்திரன் தனக்கே காவிரியை

    அமர்த்தும் அகத்தியர் போல் அழைத்தபடியே கூட மனத்தில் மகிழ்ச்சியும்
    கொண்டு – சிவனைக்காண வலம்புரிச் சங்கும் கொண்டு

    கனக பணியுங் கொண்டு கஞ்ச மலருங் கொண்டு
    தினக ரோதயம் போலே திருவையாறதனிலே

    சூ.வசனம்: இந்தப் படிக்குச் சமுத்திரராசன் பஞ்ச நதீசுவரரைத் தோத்திரம் பண்ணுகின்ற மார்க்கம்.

    தருவு

    சரணம் சுவாமி சரணம் செளந்தரேச சரணம்
    அரவு கங்கை திங்கள் சடையில் அணிந்த பஞ்சை நதியீசா!

    விடையேறி வரு துங்க விபூதி தவழங்கதுடி மானும் மழுவும்
    சிரசும் சூலமும் ஏந்து கையர்

    மறையோனும் மானும் காணா மகாதேவர் மலர்ப்பாதா
    அறமளித்த நாயகி பங்கினில் அமர்ந்த பஞ்சநதியீசா!

    புகழ் பஞ்ச நதிவாசா போசல குல யீசா
    சகசி ராசனிரவும் பகலும் தான் பணியும் சர்வேசா!

    சூ.வசனம்: இந்தப்படிக்குத் தோத்திரம் பண்ணின சமுத்திர ராசனைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

    தருவு

    உனக்கேற்ற புருடனிவன் உகந்து பார் காவேரி
    எனக்கேற்ற புருடனருள் என்று சொன்னபடி

    விதவிதமாய் மலரெடுத்து விடிஉமுன்னே நமையடுத்து
    இது நிமித்தம் வெகு பூசை இச்சையுடன் செய்து

    தந்தை தாய் இருக்கிற பேர்தானே வேண்டியது செய்வார்
    சிந்தனை யென்னென்றிராமல் தினம் வந்தெனைப் பணிந்த

    அவன் மெய்யும் சலரூபம் உன் மெய்யும் சலரூபம்
    கவலையில்லை இருவருக்கும் கலவி செய்து கூட.

    சூ.வசனம்: இப்படிச் சொன்ன பஞ்சநதியீசனைப் பார்த்துக் காவேரியம்மன் சொல்கிற மார்க்கம்.

    தருவு

    சந்தோஷமாச்சு சுவாமி என்றன் மனது
    சந்திரசேகரா இந்தச் சமுத்திர ராசனைக் கண்டு

    இஷ்டமாகு முன்னே பேச்சுப் பேசி முத்தாட எண்ணுவதென் மையல் நீச்சு
    திருஷ்டிப் பிரியமா வாய்த்து சிந்தைத் துயரம் போச்சு.

    கவுடாய்ப் பார்த்தானொரு பார்வை அவன் முகம் கனம் கொண்டு
    உருகுது வேர்வை
    இவனும் எனக்குக் கோர்வை என் முலை இவனுக் கேர்வை

    தரு கமலை மாதருளாலே புவியை ஆளும் சகசி இராச தேவேந்திரன்
    மேலே கருணை செய்வது போலே கல்யாணம் செய்யுமினி மேலே.

    சூ.வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கன்னிகை வசனம் கேட்டுப் பஞ்சநதியீசுவர சுவாமி சொல்கிற மார்க்கம்.

    ஈசன்: வருக சமுத்திர ராசாவே! நீ நினைத்தாற் போல இந்தக் கன்னிகை உன்னைக்
    கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சம்மதி பண்ணினோம். நம் முன்னிலையில் தானே
    சீக்கிரமாய்க் கல்யாணம் பண்ணிக் கொள்வாயாக.

    சூ.வசனம்: இந்தப்படிக்குச் சமுத்திர இராசனைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

    ஈசன்: வருக கவேர இராசனே, உனக்கு நல்ல மாப்பிள்ளையாக வந்தான். இந்தக்
    கன்னிகையைச் சீக்கிரம் கல்யாணம் பண்ணும்.

    சூ.வசனம்: இந்தப் படிக்குச் சொன்ன பரமேசுவர வசனம் கேட்டு கவேர இராசன் சமுத்திர இராசனைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

    தருவு

    மலைக்கு மலையண்டை கொடுத்தாற்போல் நீ வந்து
    வாய்த்ததே நேர்த்தியையா சொல்லும்

    கலைக்கொரு வாணியைப் போல் வந்த வென்னுடைய
    கன்னி காவேரி யம்மனுக்கு

    செப்பு முலையுள்ள யெந்தேவி யென்னுடன் சிங்காரமாகக் கொண்டு
    சப்பிர மஞ்சத்திலே இருந்து விளையாடும் வேளையிலே – தங்கக்

    குப்பா சத்திலடங்காது நம் கன்னிக்குக் கொங்கையென்று சொன்னபின்
    இனி எப்படிக் கொத்த புருடன் வாரானோவென்று எண்ணி யெண்ணி யிருந்தேன்.

    அஞ்சு வயது முதற்கொண்டு நித்தம் அலர்ந்த மலரெடுத்து
    பஞ்சநதீசருக்கு அருச்சனை செய்திரு பாதம் தனைப் பணிந்து

    கெஞ்சிக் கெஞ்சி நல்ல புருடன் தாருமென்று
    கேட்டீரிந் நாளிவட்கு எங்கே
    கொஞ்சத் தனமுள்ள புருஷனாகவே கொடுக்கிறாரோ வென்றிருந்தேன்.

    அகத்திலிருந்து மந்திரி உடனிது ஆலோசனை புரிந்து
    சகத்தில் நமக்குச் சரிமன்னர் ஆரினி தேடி வா போவென்றேன்

    அகத்தியர் வந்து சமுத்திர ராசனென் றாரப்போதொரு மட்டும் உன்றன்
    முகத்தைக் கண்டதும் சந்தோஷம் மட்டல்ல முகவிச்ச வார்த்தையன்றோ

    அகத்திய மாமுனியே தேவரீருக்கனந்தம் சரணம் ஐய
    சகத்திலே நாங்கள் சுகத்தையே மென்மேல் சேர்த்திருக்கவே செய்து மகிழும்

    மதியணிந்திடு வேணியர் தேவிக்கு மாலையிடுமப்போ தந்த
    பொதியமா மலை தன்னிலிருந்து பாதி பூமியைச் சரிசெய்தீரே

    இனிய யக்ஜங்கள் செய்யும் பெரியோர்க்கு இப்புவி மீதிலுள்ள நல்ல
    முனிவர்க்கு மாதி சைவர்க்கும் கொழுந்தான மூர்த்தியாக வந்தீர்.

    சூ.வசனம்: இந்தப்படிக்குச் சொன்ன கவேர இராசனின் வசனம் கேட்டு சமுத்திர இராசன் சொல்கிற மார்க்கம்.

    சமுத்: வருக கவேர இராசாவே! உமக்கும் நமக்கும் சம்பந்தம் பண்ணுவித்தது இந்த
    அகத்திய மகாமுனீசுவரர். இவரே இந்தக் கல்யாணத்துக்குக் காரணம் சுவாமி.

    சூ.வசனம்: இப்படிச் சமுத்திர இராசனும் கவேர இராசனும் அன்யோன்யமாய் வார்த்தை சொல்லி அகத்திய மகாமுனியைத் தோத்திரம் பண்ணுகின்ற மார்க்கம்.

    சூ.வசனம்: இந்தப்படிக்குக் கவேர இராசன் சமுத்திர இராசன், கவேர கன்னிகை, மந்திரி, கவேர இராசன் மனைவி மற்றுமுள்ள பேரும் அகத்தியரைத் தோத்திரம் பண்ண, இந்தச் சமயத்திலே பஞ்சநதீசுவரர் அகத்தியரைப் பார்த்துச் சொல்கிற மார்க்கம்.

    ஈசன்: வருக! அகத்திய மகாமுனியே, சமுத்திர இராசனுக்குக் கர்த்தா நீர்தானே.
    சீக்கிரமாகக் கல்யாணம் பண்ணி வையும்.

    அகத்தி: மகா பாக்கியமாயிற்று, சுவாமி!

    சூ.வசனம்: சொன்ன பரமேசுவர வசனம் கேட்டபடி அகத்தியர் சமுத்திர இராசனுக்கும்
    காவேரிக்கும் கல்யாணம் பண்ணுகிற மார்க்கம்.

    இந்தப்படிக்கு முஹூர்த்த சமயத்திலே கவேர கன்னிகையைப் பார்த்துச் சொல்கிற
    மார்க்கம்.

    தருவு

    மாலையிடடி பெண்ணே மாலையிடடி வால மன்மதன்
    போலவே வரும் – சமுத்திர ராசனுக்கு (மாலை)

    மெத்த நல்ல நாதனாக வேணுமென்று இவரிடத்தில்
    பக்தி செய்தாயே நீ இந்தப் பஞ்சநதியீசர் பார்க்க

    பக்ஷமாய்த் தினமும் இந்தப் பஞ்சநதி ஈசருக்கு
    அருச்சனை செய்த கையால் அலர்ந்த செந்தாமரைப்பூ

    தானு முன்னே உன்னை இந்த சமுத்திர ராசனுக்குப்
    பாணிக் கிரகணம் பண்ணப் பணம் பாக்கு வெற்றிலை எடுத்தேன்.

    சூ.வசனம்: இந்தப் படிக்குக் காவேரியம்மனுக்கும் சமுத்திர இராசனுக்கும் கல்யாணம் பண்ணுவித்து கவேர இராசன் சமுத்திர இராசன் முதலானவர்கள் பரமேசுவரனுக்கு நமஸ்காரம் பண்ணித் தோத்திரம் பண்ணுகிற மார்க்கம்.

    தருவு

    ஏழை பங்காள கங்காள – நம் பஞ்சநதீசுவரா
    விடையேறும் பரமசிவ – பஞ்சநதீசுவரா
    வேழ முகத்தானைப் பெற்றிடும் – பஞ்சநதீசுவரா
    வேதாந்த வேத்ய ஜகன்மய – பஞ்சநதீசுவரா
    பன்னக பூஷண பரமேச – பஞ்சநதீசுவரா
    பாவஜ கர்வ தமனாதீசுவரா – பஞ்சநதீசுவரா
    புன்னாக வர சர்ம பூஷித – பஞ்சநதீசுவரா தினம்
    போசல குல கசேந்திரன் பணி – பஞ்சநதீசுவரா

    சூ.வசனம்: இந்தப்படிக்குத் தோத்திரம் பண்ணி, சமுத்திர இராசன் முதலானவரை யெல்லாம் பார்த்துப் பரமேசுவரன் வாழ்த்துகிற மார்க்கம்.

    தருவு
    ராகம்: மத்தியமாவதி

    ஆல்போலவே தழைத்து நல்ல அருகு போலவே வேரோடி
    மால் போலவும் லக்ஷ்மி போலவும் வையகந் தனில் வாழ்ந்திருப்பீர்! – இருவரும்
    இருக்குவேள் போலவே வாழ்ந்திருப்பீர்
    சந்திரன் போலவே வாழ்ந்திருப்பீர் – எழு

    தாரகை போலவே வாழ்ந்திருப்பீர் வனிதையே எங்கள் காவிரியே
    சகசி மகாராசனால் சோழ மண்டலத்தில் தினமும் இந்தப் புவி
    விளையச் செய்து ஸ்திரமாக எப்போதும் வாழ்ந்திரு நீ!

    சூ.வசனம்: இந்தப்படிக்குப் பரமேசுவரன் ஆசீர்வாதம் பண்ண, சகலமான பேரும் விளங்கி சந்தோஷாதி சயத்தினால் மங்களம் பாடுகிற மார்க்கம்.

    மங்கள தருவு

    வரு சமுத்திர ராசனுக்கு மங்களம் – எங்கள்
    வனிதை காவேரிக்கு மங்களம்
    தானவர் வீரனுக்கு மங்களம்
    சகல லோக பாவனிக்கு, பவானிக்கு மங்களம்.

    மானோர்கள் மித்திரனுக்கு மங்களம்
    தண்டமிழார் சகசேந்திரன்
    தானாக வளரும் சோழ மண்டலத்தை
    வளர்க்கும் தேவிக்கு மங்களம்.

    சுபம்

    தஞ்சை மராத்தியர் கால நாட்டிய நாடகங்களின் தொடக்கக் காட்சி.

    அந்தக் கால நாட்டிய நாடக மரபின்படி கட்டியக்காரன் மேடையில் தோன்றி பேசும் பாங்கினை விளக்கும் விதமாக ‘மாதிரி உரையாடல்’ இங்கே காணலாம். கீழ்கண்ட தொடக்கக் காட்சி உரையாடல் “விஷ்ணு சாஹராஜ கல்யாணம்” எனும் நாடகத்தில் வருவது. ஷாஜி மன்னரின் அவைக்களப் புலவர்கள் இயற்றியதாக இருக்கலாம். இதில் ஷாஜி மன்னன் பாட்டுடைத் தலைவனாகவைத்து இயற்றப்பட்டிருக்கிறது. புராண பின்னணியோடு அமைந்த இந்த நாடகம் ஷாஜி வழிபடும் திருவீழிமிழலைத் தலத்துக்கு வந்து ஈசரை மகாவிஷ்ணு வழிபட்ட வரலாறு சொல்லப்படுகிறது. ஆயிரம் செந்தாமரை மலர்களைக் கொண்டு விஷ்ணு அர்ச்சிப்பதாகக் கதையில் கூறப்படுகிறது. அப்போது சிவபெருமான் காட்சி தருவதாக அமைந்தது இந்த கதை. இனி….

    நாடகம் துவக்கப்படுவதற்கு முன் அரங்கில் கட்டியக்காரனைச் சூத்திரதாரன் அறிமுகம் செய்து வைக்கிறான். கட்டியக்காரனுக்கும் சூத்திரதாரனுக்கும் நிகழும் உரையாடல் பின்வருமாறு அமைந்திருக்கும். 17ஆம் நூற்றாண்டில் பேச்சு வழக்கு எப்படி இருந்தது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. 3ஆம் ஷாஜி ராஜா தஞ்சையை ஆண்ட காலத்தில் எல்லா நாடகங்களிலும் இதுபோன்ற உரையாடல்களைக் கேட்கலாம். இந்த உரையாடல் நடக்கும் சமயம் மேடையில் சூத்திரதாரனும் கட்டியக்காரனும் இருப்பர்; இசைக் குழுவினர், தலைமை நட்டுவன், தாளக்காரன் ஆகியோரும் இருப்பர்.

    இந்த உரையாடல்கள் இசை நாட்டிய நாடகங்களுக்குப் பொதுவானவை எனினும், இங்கு தரப்படும் உரையாடல்கள் “விஷ்ணுசாகராஜ விலாசம்” எனும் நாடகத்தில் வருபவை, இது அந்த நாடகச் சுவடிகளில் காணப்படுபவை. அப்போது தமிழ் நாட்டில் நாட்டிய ஆசிரியர்கள் நாடகத்தை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு இந்த சுவடியே ஆதாரம். மக்கள் கேட்டு மகிழும் பாங்கில் அன்றைய பேச்சு நடைமுறையில் இவை அமைந்திருக்கும். 17ஆம் நூற்றாண்டில் தஞ்சை நகரில் நடைபெற்ற நாடக முறை பாங்கு இது.

    அன்றைய தஞ்சையை ஆண்டவர்கள் தமிழ், தெலுங்கு, மராத்தி மொழியாளர்கள். முதலில் சூத்திரதாரன் மேடையில் தோன்றுவான். அரங்கில் மக்கள் ஆர்வத்தோடு கூடியிருந்து நாடகத்தைக் காணக் காத்திருக்கின்றனர். அப்போது கட்டியக்காரன் அங்கினுள் நுழைகிறான், இருவரும் உரையாடுகிறார்கள்.

    சூத்திரதாரன்: (கட்டியக்காரனை நோக்கி) அடேய், நீ எங்கேயிருந்து வாராய் சொல்லடா?

    கட்டியக்காரன்: மகாவிஷ்ணு சாமியண்டையிருந்து வந்தேனையா.

    சூ: நீ வந்த காரியமென்ன தெரியச் சொல்லடா?

    க: நம்முடைய மகாவிஷ்ணு வீழிநாத மகாலிங்க ஸ்வாமியைச் சேவிக்க வருகிறார் என்று சகல ஜனங்களுக்கும் எச்சரிக்க வந்தோமையா.

    (சூத்திரதாரனும் கட்டியக்காரனும் பேசிக்கொண்டிருக்கும்போது
    நட்டுவனார் அரங்குக்கு வருகிறார்.)

    சூ: நட்டுவனாரே, நாம் ஆடற பாடற சபையிலே இவன் ஆரோ தெரியாது, வந்திருக்கிறானே! இவனுடைய பட்டை நாமம் என்ன, பட்டு துப்பட்டி என்ன, தாடி என்ன, கட்டியக்கோல் என்ன, இவனுடைய பூர்வோத்தரம் கேட்க வேணுமே!

    சூ: சரி. அரே பாய்! தும் கோன்றே (ஹிந்துஸ்தானியில் நீ யாருடா?)

    க: (காதில் வாங்கிக் கொள்ளாமல்) அம்மம்மா! இந்தப் பந்தல் பார்க்க மெத்த நன்னாயிருக்கே!

    சூ: ஓய் நட்டுவனாரே! இவனுக்கு உத்தராதி பாஷை தெரியாது. மராட்டி பாழையாலே கூப்பிடவேணும்! அஹாதூ கோடூன்? (எங்கேயிருந்து வருகிறாய்) ஆலாஸ கா! (கட்டியக்காரன் கவனிக்காமல்)

    நட்: ஐயா! அப்படிக் கூப்பிட்டாலும் பேசவில்லையே. இனிமேல் கன்னட பாஷையில் கூப்பிடவேணும் போலயிருக்கே!

    சூ: எலே தம்பி! (கன்னடத்தில்) எல்லித்து பந்தயோ? (இப்போதும் கவனிக்கவில்லை)

    நட்: ஐயா, அப்படியும் பேசவில்லையே. வடுக பாஷையினாலே கூப்பிடுவோமே!

    சூ: (வடுகில் என்று குறிப்பிடப்படுவது தெலுங்கு) ஓயி நாயடா? ஏடனுண்டி வொஸ்தி வோயி?

    நட்: ஐயா, அப்படியும் பேசவில்லை. சோழ மண்டலம் தமிழிலே கூப்பிடவேணும் அப்போ பேசுவான்.

    சூ: (தமிழில்) ஓநோய் நாயக்கரே, எங்கேயிருந்து வந்தீர் காண்? (நெற்றியில் பட்டை நாமம் போட்டிருந்ததால் நாயக்கரே என்றழைக்கிறான்)

    கட்டியக்காரன் பேசவில்லை. ஒருகால் இவனுக்குக் காது கேட்கவில்லையோ என்று சூத்திரதாரன், ஒரு காதுப் பக்கம் போய் கூப்பிடுகிறான். பதில் இல்லை. மற்றொரு காதுப் பக்கம் போய்க் கூப்பிடுகிறான், அதற்கும் பதில் இல்லை. சூத்திரதாரன் கட்டியக்காரனைச் சுற்றி வருகிறான். அப்போது தன்னை அவன் அடிக்க வருகிறானோ என்று கட்டியக்காரன் கையில் கம்புடன் சூத்திரதாரனை அடிக்க ஓங்கி மிரட்டுகிறான்.

    சூ: அடே பைத்தியக்காரா! உன்னோடு சண்டையில்லை. உன்னை இனிக் கூப்பிட மாட்டேன். நாங்கள் எல்லோரும் இங்கே கூடிக்கொண்டு வீழிநாத ஸ்வாமி ஸந்நிதியிலே நாட்டிய நாடகம் ஆடுகிறோம். நீ யார் என்று கேட்டோம்.

    க: ஓஹோ! நீ யாரடா?

    சூ: நான் வித்வானடா.

    க: என்ன வித்வாங்கனை? நம்மிடம் சொல்லுடா?

    சூ. நான் சொல்றதிருக்கட்டும் நீ எங்கேயிருந்து வந்தாய் முதலில் சொல்லடா?

    க: வடக்கே போ (கையை வடபுறம் காட்டி)

    சூ: பீஜாபுரத்திலேயிருந்து வந்தாயோ?

    க: சே! அங்கே யார் மகனாகப் போனாய்? இங்கே திரும்படா (மேற்கே கை காட்டி)

    சூ: ஆனை, மலையாளமா?

    க: இப்படித் திரும்பு (கிழைக்கை நோக்கி)

    சூ: ராமேஸ்வரத்திலேர்ந்து வந்தாயா?

    க: இப்படித் திரும்பு (வேறு பக்கம் காட்டி)

    சூ: வேதாரண்யமா?

    க: சற்றே இந்தப் புறம் போ.

    சூ: திருவாரூரா?

    க: ரெண்டு முழம் இப்படித் திரும்பு.

    சூ: கும்பகோணமா? கெளரி மாயூரமா? திருவிடைமருதூரா? சீர்காழியா? வைத்தியநாதன் கோயிலா?

    க: அடடே நில்லு. அத்தனை தூரம் யார் மகனாய்ப் போகிறாயடா? சற்றே இப்புறம் (கோலால் தரையில்
    (கோடு போட்டுக் காட்டுகிறான்)

    சூ: சாலியமங்கலமா? மாரியம்மன் கோயிலா? தஞ்சாவூரா?

    க: சபாஷ்டா! நம்ம பின்னே வா (ஒரு பக்கமாக அழைத்துப் போகிறான் அங்கு ஒரு கம்பத்தைக் காட்டுகிறான்) ஒசக்க ஏறு! கெட்டியாய்ப் பிடிச்சுக்கோடா (சுத்திரதாரன் ஏறுகிறான்)

    க: ஒரு காலை விடு, இந்தக் காலையும் விடு. அந்தக் கையை விடு. இந்தக் கையையும் விடு. கீழே விழு.

    சூ: ஓய் பலே. நன்னாச்சு. காலொடிஞ்சால் எப்படி?

    க: ஒரு பந்தக்கால் கொடுக்கிறோம். (இருவரும் முன்னால் வருகின்றனர்)

    சூ: இதெல்லாம் இருக்கட்டும்! நீ எங்கேயிருந்து வந்தாய்? நிலவரமாய்த் தெரியச் சொல்லுடா?

    க: அந்த வீட்டிலேயிருந்து இங்கே வந்தேன்.

    சூ: உன்னோட வாசம் எங்கே?

    க: வாசுதேவனிடத்தில்.

    சூ: வாசுதேவனென்றால் எனக்குத் தெரியாது.

    க: சின்னப்போ மண்டி போட்டுக்கொண்டு அரி நரி என்று படிக்கவில்லையா? அதாவது மகாவிஷ்ணு வாசலிலே இருக்கிற கட்டியக்காரன் நானடா!

    சூ: அட பைத்தியக்காரா! ஏண்டா இப்படி நாலு மூலையிலும் சுத்துகிறாய் நம்மை.

    க: பைத்தியக்காரன் நானோ, நீயோ. நம்ம மகாவிஷ்ணு எங்கே பார்த்தாலும் அங்கெல்லாம் இருப்பாரடா.

    சூ: அது சரி, நீ வந்த காரியம் என்ன சொல்லுடா.

    க: நம்முடைய மகாவிஷ்ணு வீழிநாத மகாலிங்கத்தைச் சேவிக்க வரார் என்று சகல ஜனங்களுக்கும் எச்சரிக்க வந்தேனடா.

    சூ: அதற்கு என்னென்ன செய்ய வேணும்டா.

    க: ஸதிரு, கிதிரு, மெத்தே, கித்தே, தலகணி, பூ, சந்தனம், கிந்தனம், தூபம், தளிகை, நட்டு முட்டு, தீவட்டி

    சூ: அடே சகலமும் இங்கே இருக்கிறது. நீ போய் மகாவிஷ்ணுவைக் கூட்டிக் கொண்டு வா போ.

    க: பாக்கி எல்லோரையும் நீ இழுத்துக் கொண்டு வா.

    சூ: இதோ வந்துவிட்டார்கள் (மகாவிஷ்ணுவைத் தவிர யாவரும் வருகிறார்கல் அரங்குக்கு)

    க: நீ யாரடா? மெட்டுக்காரனா? முட்டிகோ! ஐயா மத்தளக்காரா, இந்தப்பக்கம் தட்டு. அந்தப்பக்கம் தட்டு, நடுவே தட்டு (மத்தளக்காரன் ஓசை எழுப்புகிறான்)

    க: பூனைக்காரப் பொட்டி மவனே. இந்தப் பக்கம் டும்! அந்தப் பக்கம் டும்! நடுவிலே ஒண்ணுமில்லைடா.

    க: (ஒருவனைப் பார்த்து) நீ யாரடா?

    நட்டு: நாந்தான் நட்டுவம்.

    க: கையிலே என்னடா?

    நட்டு: தாளம் ஐயா.

    க: அடி!

    நட்டு: தித்தித்தே (தாளத்தில்)

    க: இது எந்தத் தாளம்?

    நட்டு: இது திருபுடை.

    க: எங்கே திருடிக் கொண்டு வந்தாய்? இந்தத் தாளம் பேரு சொன்னால் உச்சிதம் (உயர்வு) என்ன?

    நட்டு: உன் மேலே பாட்டுப் பாடறோம்.

    க: இந்தத் தாளம் பேரு?

    நட்டு: ஒன்று இரும்பு ஒன்று வெண்கலம்.

    க: (மற்றொருவனிடம்) நீ யாரடா?

    பாடகன்: நாந்தான் பாடகன்.

    க: ஆ! பாடு.

    பாடகன்: ஆ………………..

    க: நிறுத்தடா ஆங்காதே. வாய்மூடி கண் மூடிக் கொண்டு ஆகாசம் பார்த்துக் கொண்டு பாடு.

    சூ: சரி சரி. நீ வந்து அனேக நேரமாச்சு. மகா விஷ்ணுவைக் கூட்டிக் கொண்டு வாடா போடா.

    க: அந்தத் தாளம் பேரு சொன்னால் நம்ம மேலே பதம் பாடறோம் என்றாயே. இப்போ பாடு. நம்முடைய பட்ட நாமம், பட்டுத் துப்பட்டி, கட்டியக் கோல், இதெல்லாம் வச்சு ஒரு மேளம் நீளமாக ஏலபதம் திரி.

    சூ: நல்ல காரியம்.

    க: “பட்ட நாமம் இட்டுக் கொண்டு” (பாடுகிறான்)

    சூ: வாடா கட்டியக்காரா! உன் மேலே பாடினோம். சீக்கிரமாகப் போய் மகாவிஷ்ணுவைக் கூட்டிக் கொண்டு வா. (கட்டியக்காரன் உள்ளே போகிறான். பின்னர் நாடகம் துவங்குகிறது.)

    (இந்த உரையாடல் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகச் சுவடி எண் 639இல் உள்ளபடி தரப்படுகிறது)

    (நிறைவடைந்தது)

    Share
  • கண்ணே கலைமானே..

    கவிஞர் காவிரி மைந்தன்
    ‘க’ என்கிற எழுத்திற்கும் கண்ணதாசனுக்கும்தான் எத்தனை எத்தனை நெருக்கம்!
    கண்ணதாசன் என்கிற புனைப்பெயரைத்தவிர.. காரைமுத்துப்புலவர்..
    கண்ணதாசனை சுவீகாரம் எடுத்த ஊர் காரைக்குடி..
    கண்ணதாசன் முதலில் பாடல் எழுதிய திரைப்படம் கன்னியின் காதலி!
    கண்ணதாசன் முதலில் எழுதிய பாடல்.. கலங்காதிரு மனமே!
    கண்ணதாசன் மிகவும் விரும்பிய கடவுள் ‘கண்ணன்’
    கண்ணதாசன் மிக நெருங்கிப்பழகிய அரசியல்வாதி, இலக்கியவாதி.. கலைஞர் கருணாநிதி!
    கண்ணதாசன் அவர்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர் கர்மவீரர் காமராஜர்!
    கண்ணதாசன் அவர்கள் எழுதிய கடைசிப் பாடல்.. கண்ணே கலைமானே!!

    ஒரு சகாப்தம் நிறைவு பெறுகிற நிலையில் ..
    மூன்றாம் பிறையில் விளைந்த முத்தான பாட்டல்லவா?
    இது தாலாட்டா?
    கனிவான காதலா?
    பேதமையின் தவிப்பா,
    மென்மையின் மேலாண்மையா?
    அன்பின் ஆர்ப்பரிப்பா?
    அரவணைப்பின் பரிணாமமா?
    கண்ணிலிருந்து விழும் நீர்த்துளியின் காதலின் அடர்த்தியா?
    இல்லை.. இல்லை…கவியரசர் தனது கோடிக்கணக்கான
    ரசிகர்களுக்கு எழுதி வைத்துச்சென்ற ரகசியக் குறிப்பா?
    சொல்லாமல் சொல்லிச் சென்ற குறிப்பேடா?
    காலதேவனின் அழைப்பிற்கு கவிஞர் எழுதிய மடலா?
    கண்ணதாசன் – இளையராஜா – பாலுமகேந்திரா – யேசுதாஸ்
    கூடி எழுதிய தேவ கானமா?
    கமலஹாசன் – ஸ்ரீதேவி – நடித்துத் தந்த காவியமா?

    பொதுவாக மூன்றாம் பிறைக்குப் பின்னர் முழுநிலா தோன்றும் என்பார்கள்.. எங்கள் கண்ணதாசனே! மூன்றாம் பிறையோடு முடிவுரை எழுதிவிட்டாயே!!

    ஆண் : கண்ணே கலைமானே
    கன்னி மயிலென
    கண்டேன் உனை நானே
    கண்ணே கலைமானே
    கன்னி மயிலென
    கண்டேன் உனை நானே
    அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
    ராரிராரஓ..ராரிரோ..
    ராரிராரோ..ஓ..ராரிரோ..

    கண்ணே கலைமானே
    கன்னி மயிலென
    கண்டேன் உனை நானே

    ஆண் : ஊமை என்றால் ஒரு வகை அமைதி
    ஏழை என்றால் அதிலொரு அமைதி
    நீயோ கிளி பேடு பண் பாடும் ஆனந்த குயில் பேடு
    ஏனோ தெய்வம் சதி செய்தது
    பேதை போல விதி செய்தது

    கண்ணே கலைமானே
    கன்னி மயிலென
    கண்டேன் உனை நானே
    அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
    ராரிராரோ..ஓ..ராரிரோ..
    ராரிராரோ..ஓ..ராரிரோ..
    ஆண் : காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
    கண்மணி உனை நான் கருத்தினில் நிறைப்பேன்
    உனக்கே உயிரானேன் என்னாலும் எனை நீ மறவாதே
    நீ இல்லாமல் எது நிம்மதி
    நீதான் என்றும் என் சன்னிதி

    கண்ணே கலைமானே
    கன்னி மயிலென
    கண்டேன் உனை நானே
    அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
    ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
    ராரிராரோ..ஓ..ராரிரோ..
    ராரிராரோ..ஓ..ராரிரோ..
    http://www.youtube.com/watch?v=Qc-aK3BXMHM
    http://www.youtube.com/watch?v=Qc-aK3BXMHM

    Share
  • எங்கள் இனிய பொன் நிலாவே ….பிரியாவிடை உங்களுக்கு !

    எஸ் வி வேணுகோபாலன் 

    அஞ்சலி: பாலு மகேந்திரா

    எங்கள் இனிய பொன் நிலாவே ….பிரியாவிடை உங்களுக்கு !

    baluதேர்ந்த கதை சொல்லிகளை உலகம் கண்டிருக்கிறது. காட்சிப் படுத்துவதில் அசாத்திய நேர்த்தி கொண்டிருப்பவர்களையும் திரையுலகம் வழங்கி இருக்கிறது. மவுன மொழியின் தொடர் கிளர்ச்சி அனுப்வங்களை ஏற்படுத்திச் சென்றவர்களும் இருந்தார்கள். கட்டணம் கொடுத்து சீட்டு வாங்கி திரையரங்கின் இருக்கையில் அமர்ந்து பிறகு அங்கிருந்தே வெளியேறிக் கொண்டிருந்த ரசிகர்களை ஃபிரேமுக்குள் இழத்து அந்த நிகழ்வுகளோடே வாழ்ந்துவிட்டுப் போக வைக்கும் ஆற்றல் படைத்திருப்போரது அரிய வரிசையில் இருந்தவர் பாலு மகேந்திரா.

    மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும் என்றார் மகாகவி. தனது காமிரா மொழியில் அந்த மந்திரச் சொற்களை தேவைக்கேற்ப பதிப்பிக்கும் திறமையைக் கொண்டிருந்த பாலுவின் மரணம் இன்றைய தலைமுறை திரையுலக படைப்பாளிகளையும், பழைய தலைமுறை ரசிகர்களையும் ஒன்று போலவே பாதித்திருப்பதை அவரது இறுதி ஊர்வலத்தில் பார்க்க முடிந்தது. சிந்தனையில் தேக்கமின்றி இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கே இது சாத்தியம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

    மூடுபனி திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே ஏற்பட்ட அலைவுறுதல், வேறு படங்கள் மாதிரி அல்ல இது என்பதை அப்போதும், வேறு இயக்குனர்கள் மாதிரி அல்ல இவர் என்பதைப் பிறகும் எனக்கு கற்பித்தது. இயல்பியல் கோட்பாட்டில் சொல்லப்படுவது போல், அலை நீளங்கள் சமமாக உள்ள இரண்டு வெவ்வேறு பொருள்களின் அதிர்வுகள் சந்திக்கும் புள்ளியில் நிகழும் ஒத்திசைவு (RESONANCE) அனுபவத்தை ரசிகர்கள் உள்ளத்தில் நிகழ்த்தும் கலைஞர்கள் கற்பனையில் விரியும் காட்சிக்குள் சென்றுகூட சரி செய்து திரும்பும் திறனைப் பெற்றிருப்பார்கள். திரைப்படம் என்பதைத் திரை மொழி என்று நமக்குப் புரிய வைத்த சில ஆளுமைகளில் முக்கியமானவர் பாலு மகேந்திரா.

    ஒரு காலத்தில் “பேசும் படம் ” திரை இதழின் கடைசி பத்து, பதினைந்து பக்கங்களில் வெளியாகியிருக்குbalu1ம் வசனங்களிலிருந்தும், வானொலியில் மாதம் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளின் (பிற்பகல் 3 மணி என்று நினைவு) ஒரு மணி நேர ஒலிச்சித்திரத்திலும் ஒரு முழு படத்தை அப்படியே உள்வாங்கி அதைப் பார்த்து முடிந்த நிறைவு அடைந்து கொண்டிருந்த இள வயது குதூகலத்தைக் கலைத்துப் போடத் தொடங்கிய படங்கள்,வெறும் கேளிக்கைக்கு அப்பால் ஒரு தேடலை தமிழ் ரசிகர்களுக்கு ஊட்டத் தொடங்கின. முப்பரிமாண உணர்வோடு, பின்புலத்தில் விரியும் காட்சிகளில் கசியும் ஒளி, ததும்பும் இசை, பாத்திரங்கள் மட்டுமின்றி அசையாத பொருள்களும் வெளிப்படுத்தும் உடல் மொழி என ஒரு திரைப்படத்தின் கூறுகள் பலவற்றை சாதாரண ரசிகர்களும் தமது கையள்ளிப் பருக முடியும், கோப்பையில் ஏந்தி ஒயிலாக அருந்த முடியும் என்பதை பாலு மகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’ உணர்த்தியது.

    புது மனை புகு விழா அழைப்பிதழில் வீட்டை அச்சில் பதிந்திருப்பது போல அத்தனை இலகுவானதில்லை ஒரு வீடு கட்டுவது என்பதை, பாலு மகேந்திரா திரையில் எழுதிக் காட்டினார். ஒவ்வொரு காசையும் எண்ணி எண்ணி அவள் (அர்ச்சனா எத்தனை அற்புதமாக அதைச் செய்திருப்பார்!) செலவு செய்து அந்த வீட்டை எழுப்பிக் கொண்டிருக்கையில், காதலன் ஆசையாக வாங்கிவந்து கொடுக்கும் சேலை அவளுக்கு அவன் மீதான அன்பைத் ததும்ப வைப்பதற்குப் பதிலாக, இப்ப இந்தப் புடவைக்கு என்ன தேவை என்று அவளது ஆற்றாமையாக வெடிக்கும் காட்சி பார்வையாளருக்கு எத்தனையோ உணர்த்தி விடுகிறது. சொக்கலிங்க பாகவதர் அந்த வேகாத வெயிலில் முடிவற்ற நடையை நடந்து கொண்டிருப்பது பல நூறு மனிதர்களுக்கும் சேர்த்து நடந்த நடை.

    மூன்றாம் பிறை திரைப்படத்தில் வயதான மனிதருக்கு வாழ்க்கைப் பட்டிருக்கும் இளம் மனைவி பாத்திரம். பூர்ணம் விஸ்வநாதனும், சில்க் ஸ்மிதாவும் வெளிப்படுத்தும் எதிரெதிர் உளவியல் நிலைகளை – பாலியல் உணர்வுகளின் வடிகாலையும், ஏமாற்றத் ததும்பலையும் பாலுவின் திரை மொழி எழுதியது. அந்தப் படத்தில் ஸ்ரீதேவி, கமல் ஹாசன் இருவருக்கு மேலாக சுப்பிரமணி என்ற நாய்க்குட்டியின் பாத்திரத்தை அவர் உலவ விட்டது, அந்தப் பெண்ணின் மன நிலையை வாசிக்கக் கொடுத்திருக்கும் புத்தகம் போல இருக்கும். அவரது படங்களில் பாடல்களும், பாடல் காட்சிகளும் தனி ரசனையோடு இணைக்கப்பட்டிருக்கும்.

    balu2“மறுபடியும்” திரைப்படம், அலை பாயும் உள்ளத்தைக் கண்களில் வாசித்தறிய வைக்கும். இளையராஜாவின் ‘ஆசை அதிகம் வச்சு’ (எஸ். ஜானகி) பாடலின் இசை புறப்படும் வேகத்திலேயே, தாளம் தப்பாத ரோகிணியின் நடனத்தின் பாதையில் தன்னைத் தொலைக்கும் நிழல்கள் ரவி பாத்திரம் ஒரு குறியீட்டுக் காட்சி. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாருமில்லை என்பது, அவரது ‘ரெட்டை வால் குருவி’ சந்தித்த எதிர்வினைகளில் தெரியும். அவர் பாடு எடுத்து வழங்கிய பிற்காலத் திரைப்படங்கள் பெரிய வரவேற்பு பெறாதது அவரை பாதிக்கவே செய்தாலும், தம்மைச் சுற்றி நிறையும் அடுத்தடுத்த இளம் படைப்பாளிகளுக்காகத் தம்மைத் தகவமைத்துக் கொண்டு கற்பித்தலின் இன்பத்தில் அவர் இறங்கியது தமிழ்த் திரை உலகில் ஒரு புதிய அனுபவம். அது தான் அவர் நிர்மாணித்த சினிமா பட்டறை.

    சின்னத் திரை என்று அழைக்கப்படும் தொலைகாட்சியில் வாரா வாரம் ஒளிபரப்பான கதை நேரம் தொடரில் சிறுகதைகள் பலவற்றை அற்புதமான குறும்படங்களாக வடித்து வழங்கிக் கொண்டிருந்தார் பாலு மகேந்திரா. மாலன் அவர்களின் தப்புக் கணக்கு ஓர் அருமையான வடிவில் வழங்கப்பட்டிருந்தது. சுஜாதாவின் கதை ஒன்று உருக்கமாக வார்க்கப் பட்டிருந்தது. மௌனிகா என்ற திறமையான நடிகை எத்தனை எத்தனை பாத்திரங்களில் வந்து போனார் அந்தத் தொடரில்!

    தாமே அவரது வலைத்தள எழுத்துக்களில் பதிவு செய்திருப்பது போல 5 ஆண்டுகளில் 21 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிவிட்டு இயக்குனராக அவர் முயற்சிகளைத் தொடங்கிய பிறகும் மகேந்திரன் கேட்டுக் கொண்டதற்காக முள்ளும் மலரும் படத்தில் ஒளிப்பதிவாளராக இயங்க ஒப்புக் கொண்டார். உமா சந்திரன் அவர்களது அற்புதமான குறுநாவலின் அசாத்திய திரை வடிவம் வெற்றி பெற்றதில் பாலுவின் பங்களிப்பு முக்கியமானது.அரிதாக் வாய்க்கும் திரை நட்சத்திரங்களில் ஒன்றான ஷோபாவின் வருகையும், மின்னல் வேக மறைவும் திரை ரசிகர்கள் மறக்க முடியாதது. பாலு பேசப்படும் போதெல்லாம் அழியாத கோலமாக ஷோபா நினைவு வந்து போவது தவிர்க்க முடியாதது.

    குழந்தைகளை அவர் எத்தனை நேசித்தார் என்பதை, நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சைதன்யா என்ற குழந்தை எஸ் ராமகிருஷ்ணன் அவர்களது கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வம்சி வெளியீடாகக் கொண்டு வந்த நேரத்தில், அவளிடம் ஆட்டோகிராஃப் பெற்றதில் விளங்கிக் கொள்ள முடியும்.

    சர்வதேச நிகழ்வு ஒன்றிற்காக பிரதி எடுக்க தனது வீடு படத்தின் நெகடிவ்களை எடுத்துப் பார்த்தபோது ஒரு பிரதி கூட எடுக்க முடியாதபடி அவை சிதைந்து போயிருந்தது கண்டு அவர் மனம் அரற்றியது. ஒரு திரைப்பட காப்பகம் அமைக்க வேண்டும், படங்கள் கால காலத்திற்கும் பாதுகாக்கப் படவேண்டும் என்ற குரலை அதன்பின் ஓயாது அவர் எழுப்பிக் கொண்டிருந்தார். சக படைப்பாளிகளை, சக மனிதர்களை உளமார பாராட்டும் உள்ளம் வாய்த்திருந்த அவரது, ஜனநாயக உணர்வும் சமூக பிரக்ஞையும் பெருமிதம் கொள்ளத் தக்கது.

    தமிழக அரசின் சிறப்புத் தணிக்கை சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய திரைப்பட பாதுகாப்பு சிறப்பு மாநாட்டு மேடையில், மிக எளிமையாக ஓட்டப் பட்டிருந்த ஒரு சுவரொட்டி அவரை அதிர வைத்தது. ஒளிப்படக் கருவியை ஆக்டோபஸ் ஒன்று ஆக்கிரமிப்பது போன்ற அந்த உருவகத்தின் தீப்பொறியில் தொடங்கியது அவரது உரை. எனது ஆயுதத்தை எந்த ஆகடோபசும் கைப்பற்றுவதை நான் அனுமதிக்க முடியாது என்பது அனைவரது கூட்டு பிரகடனமாக அன்று உருவெடுத்தது.

    படம் எடுக்க பிரும்மாண்ட சாதனங்கள் தேவை இல்லை, யாரும் இந்தத் துறைக்குள் வரலாம் என்ற அழைப்பை அவர் இறுதி மூச்சு வரை விடுத்துக் கொண்டே இருந்தார். புதிய படைப்பாளிகளை மனதார ஆசீர்வதித்தார். மாற்று திரைப்படத்திற்கான இடது சாரி முற்போக்கு இயக்கத்தின் குரலுக்கு அவரது ஆதரவு மகத்தானது. தலைமுறைகளைக் கடந்து பேசப்படும் கலைஞரான அவரது கடைசி படம் சம காலத்தின் பிரதிபலிப்பையும், சமூக மாற்று சிந்தனைக்கான ஆர்வத்தையும் கலந்து கொடுத்த பரிசோதனை முயற்சி என்று பேசப் படுகிறது. எல்லாப் பண்டங்களையும் தமதாக்கிக் கொள்ளும் சந்தைப் பொருளாதார மூலதனத்தின் கைகளில் திரைப்படங்களும் சிக்கி மூச்சுத் திணறும் சம காலத்தில் இப்படியான ஒரு முயற்சியை அவர் மேற்கொண்டது கூட ஒரு கலகக் குரல் என்றே தோன்றுகிறது.

    சென்னை சாலி கிராமத் தெருக்கள் கொள்ளாது திணறிய கூட்டத்தின் நடுவே புறப்பட்ட அவரது இறுதிப் பயணம், வேதனையான அந்தக் கணத்திலும், அவரது கனவுகள் வேறு கண்கள்வழி தொடர்ந்து எடுத்துச் செல்லப்படும் என்ற நம்பிக்கையை வழங்கவும் செய்தது.

    மூன்றாம் பிறை திரைப்படத்தை ‘சத்மா’ என்ற பெயரில் இந்தியில் அவர் எடுத்தபோது, க்ளைமாக்ஸ் காட்சியை இயல்பாக எடுக்கக் காத்திருக்கையில் மழை பொழியத் தொடங்கியதாம். இது ஒரு மந்திரத் தருணம் என்று அவர் வியப்போடு சொன்னதாக கமல் ஹாசன் (பிசினஸ் லைன்) தமது அஞ்சலிக் குறிப்புகளில் எழுதியிருக்கிறார். மந்திரம் போல் காட்சி மொழி இன்பம்தான் அவரது உள்ளத் தேடல் கடைசி வரையிலும்!

    பிரியாவிடை அளிக்கிறது ரசிக உலகம், எங்கள் இனிய பொன் நிலாவே உங்களுக்கு!

    நன்றி: தீக்கதிர்

    ********

    மரணிக்கப் போவது எங்கள் உடல்கள், நாங்கள் அல்ல !

    “………எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும், இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும், எஙகள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எஙகள் உடல்கள். நாங்களல்ல! “
    – பாலு மகேந்திரா (வலைத் தளத்திலிருந்து)

    Share