கண்போன போக்கிலே கால் போகலாமா?
கவிஞர் காவிரி மைந்தன்
ஐம்புலன்கள், ஆறாம் அறிவு என மனித ஜாதியை மகத்துவமாய் படைத்த இறைவன் ‘மனம்’ என்கிற ஒன்றையும் மறைமுகமாய் சேர்த்தனுப்பிவிட்டனன்றோ? பகுத்தறியும் குணும் மனிதனுக்கு இருந்தும் ‘ஆசை’ என்னும் வலைதனில் அகப்பட்டு அவன் படும் அவஸ்தைகள் பலவன்றோ?
கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய் நம்மில் வாழும் மனிதர்களைக் காணுகின்றோம். அனுபவ ரீதியாக ஒருவன் பட்டுத் தெரிந்து கொள்கிற பகிரங்க விஷயங்கள் பல உண்டு! அந்தப் பாடங்கள் அவன் மட்டுமே அறிந்தவையாகின்றன! ஆனால், திரைப்பாடல்களில் – கவிஞர்கள் தங்கள் சொல்லாற்றலால், இதுபோன்ற அனுபவ முத்திரைகளை, வாழ்க்கைப் பாடங்களை மெட்டுக்குள் கட்டிவைக்கத் தெரிந்த வித்தகர்களாக இருக்கிறார்கள். அதுவும் மக்களின் இதயங்களில் இமயமாய் வீற்றிருந்த எங்கள் எம்.ஜி.ஆருக்காக எழுதப்படுகின்ற போது இதுபோன்ற முத்தான வரிகள் வந்து கொத்துக் கொத்தாக விழுந்தனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது! தத்துவத்தின் தடாகமாய்..இப்பாடல் காட்சியளிக்கிறது! பணம் படைத்தவன் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தளித்த இசை தலைமை தாங்குகிறது. டி.எம்.செளந்திரராஜன் அவர்களின் குரலில் மக்கள் திலகம் நடித்த இந்தக் காட்சி – ஒரு நாகரீக விடுதியில் முற்றிலும் வித்தியாசமாக நடைபெறும் போது இப்படிக் காட்சியமைப்பு வெற்றி பெறுமா என்கிற வினாவிற்கு இப்பாடலில் உள்ள வரிகளின் வீரியம், வார்த்தைகள் தாங்கி வரும் அர்த்தங்கள், பின்னணி இசை என்கிற கூட்டணி மந்திரம் வெற்றியை விண்முட்டச் செய்திருக்கிறது. மகாத்மா காந்திஜி கையில் தடியடன் ஒற்றைப் பாதையில் நடந்துசெல்வதை நினைவூட்டிப் பாடல் தொடங்குகிறது!
இந்தப் பாடலை பெரும்பாலோர் கவியரசு கண்ணதாசனின் பாடல் என்றே கருத.. அந்தக் கருத்தை ஆச்சி மனோரமா அவர்கள் கவிஞர் வாலி அவர்களை முன்னிறுத்திய மேடையிலேயே எடுத்தியம்ப.. பின்னர் நிறைவுரை ஆற்றிய கவிஞர் வாலி அவர்கள்.. கண்போன போக்கிலே கால் போகலாமா பாடல் நான் இயற்றியது.. ஆச்சி கூட.. இந்தப் பாடலை கண்ணதாசன் பாடல் என்றே கருதியிருக்கிறார்கள்.. அதிலே எனக்குள்ள சந்தோஷம் என்ன தெரியுமா.. என் பாடலைத் தங்கத்தட்டோடுதான் ஒப்பிட்டிருக்கிறார்களே தவிர, தகரத்தட்டோடு அல்ல என்று தனக்கே உரிய பாணியில் குறிப்பிட்டார்.
கண்போன போக்கிலே கால போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா..
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..
நான்கு வரிகளுக்குள் இங்கே சொல்லப்படாத இலக்கியம் என்ன என்றே அறைகூவலிடத் தோன்றுகிறது!
நீ.. பார்த்த பார்வைகள் கனவோடு போகும்..
நீ.. சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்..
ஊர்பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்…
உணராமல் போவோருக்கு உதவாமல் போகும்..
வாழ்க்கையின் எதார்த்தங்களை இதைவிடவா எவரும் சொல்லிவிட முடியும்? எத்தனைக் காலங்கள் கடந்தாலும் இந்த வரிகளில் உள்ள பொருள் மாறிவிடக்கூடுமா?
புரியாத சில பேருக்கு புது நாகரீகம்..
புரியாத பல பேருக்கு இது நாகரீகம்..
முறையாக வாழ்வோருக்கு எது நாகரீகம்..
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்..
நாகரீகத்திற்கு அர்த்தம் தெரியாத மனிதர்களுக்கான சவுக்கடி இந்த வரிகள்! இன்னும் என்ன சொல்ல என்று நினைத்த கவிஞர் அடுத்தவரிகளில் மேலும் சொல்லாட்சி நடத்துகிறார்!
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்..
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..
இவர் போல யாரெண்டு ஊர் சொல்ல வேண்டும்..
இதுபோல பாடல் புனைந்தோர்.. எல்லோருக்கும் பொருந்தும் இந்தவரிகள்.. கதையின் நாயகன்.. மக்கள் திலகத்தின் வரலாற்றில் பொன்னாய் மின்னுகிற வரிகளில் சேர்ந்து காட்சியளிக்கின்றன!