பரம்பொருள் பாமாலை-2
நுதற்கண் கொண்டவனே, நூதன மானவனே,
புறக்கண் காட்சிகளில், பூரணமாய் நிறைந்தவனே,
அகக்கண் கொண்டெந்தன் ஐம்புலனை அடக்கி,
முதற்கண் அடிபணிந்து வணங்குகிறோம் உன்னை! 1
வட்டூர் வைரவனை வணங்கிப் பணிந்து,
மொட்டாய் இருக்கும் மனமடலை விரித்து,
கொட்டும் கருணை மழையில் நனைந்து,
கட்டுண் டவனது அன்பில் கரைவோம்! 2
ஆற்றில் தவழ்ந்த ஆதவப் பிள்ளையாய்,
ஆற்றல் நிறைந்த நாதனும் தவழ்ந்து,
போற்றும் புகழ்மோர்ப் பாளையம் வந்து,
சீற்றம் தணிந்து சீருடன் அமர்ந்தான்! 3
மாசிச் சிவன் இராத்திரி தோறும்,
பூசித் தவன் காலடி பணிந்தால்,
காசிக் கரை கங்கை சென்று,
பூசித் திடும் பலனைப் பெறலாம்! 4
ஆதிநாத ரந்தமற்ற சோதி தன்னை,
ஓதிமாத மாசிதன்னில் நோன்பி ருந்து,
சாதிபேத மேதுமற் றமுத ளித்து,
நீதிகீத மோதிவாழு முயர் குலத்தர்! 5
அட்ட மித்தி னங்கள் தோறும்,
வட்ட மிட்டுன் னடிப ணிவோம்!
நட்ட மிட் டருள் புரிந்து,
சுட்ட நீறுபூசி யாடும் நாதனே! 6
இடுகா டொடுவாழ்ந் திடுநா யகனே,
நெடுநா ளடியா ரொடுவாழ் பவனே,
தொடுவா னடியோ டுறுசெவ் வழகில்,
நடுநா யாகமாய் நடமா டிடடா! 7
முற்றும் துறந்த மூல நாதனை,
குற்றம் தடுக்கும் ஆல காலனை,
வற்றா கங்கை சூடு மாடனை,
நற்றா மரைபோல் மலர்ந்து வணங்குவோம்! 8