மணிமொழிக் கொரு மடல்
நடராஜன் கல்பட்டு
அன்பு மணி மொழி,
நான் வாழ்க்கையின் சோகங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ளாது வேறு யாரிடம் பகிர்ந்து கொள்வேன்? அப்படி நான் உனக்கு எழுதும் மடலின் நோக்கம் என்ன? என்னுடன் படித்த மாணவி நீ. கூடப் படித்தவர்கள் அனைவருடனும், ஆண் பெண் என்று வித்தியாசம் பாராது அன்போடு பழகியவள் நீ. உன்னிடம் சக மாணவிகள் தங்கள் ரகசியத் தவிப்புகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நீயும் அவர்களுக்கு அந்த சங்கடங்களில் இருந்து வெளி வரும் வழியினை, உனக்கே உரித்தான பாணியில் கூறுவாய். அவர்கள் அதைக் கேட்டு பயன் அடைவார்கள்.
எனக்குத் தெரியும் உனக்கு மிகவும் பிடித்தது கவிதைகள் என்று. அதனால் தான் நான் இப்போது சிக்கித் தவித்திடும் ஒரு சங்கடத்தினை கவிதை வடிவில் உனக்கு தெரிவிக்கிறேன். உன்னிடம் இருந்து பதிலாய் என் சிக்கலுக்கு தீர்வு ஒன்று எதிர்பார்க்கிறேன். அளித்திடுவாயா அன்பு மணிமொழி?
வானொலிப் பெட்டி திறந்தேன்
வந்தது பாடலொன்று
கிழவி மேல் காதல் கொள்ளடா அவ்வைக்
கிழவி மேல் காதல் கொள்ளடா வென்று
கிழவி மேல் காதல் கொண்டால்
உதவிடுமோ அவள் அனுபவம் வாழ்க்கைக் கென்று
எழுதினேன் அரைப் பக்கக் கடிதமொன்று
அடுத்த வீட்டு கிழவிக்கு
ஒரு கையில் கடிதமும் மறு கையில்
அப்பளக் குழவியுமாய்த் தோன்றிய
அன்டை வீட்டுக் கிழவி கேட்டாள்
திருட்டு நாயே காதல் தேவையா உனக் கென்று
ஓடுகிறேன் ஓடுகிறேன்
உயிர் பிழைக்க ஓடுகிறேன்
கூறிடு நீ கிழவி கைக் குழவியிடம் இருந்து
தப்பித்திட வழியொன்று
உன் அறிவுரைகளை என்றும் ஏற்ற
நண்பன் நடராஜன் கல்பட்டு