Featuredஇலக்கியம்கட்டுரைகள்

எங்கள் இனிய பொன் நிலாவே ….பிரியாவிடை உங்களுக்கு !

எஸ் வி வேணுகோபாலன் 

அஞ்சலி: பாலு மகேந்திரா

எங்கள் இனிய பொன் நிலாவே ….பிரியாவிடை உங்களுக்கு !

baluதேர்ந்த கதை சொல்லிகளை உலகம் கண்டிருக்கிறது. காட்சிப் படுத்துவதில் அசாத்திய நேர்த்தி கொண்டிருப்பவர்களையும் திரையுலகம் வழங்கி இருக்கிறது. மவுன மொழியின் தொடர் கிளர்ச்சி அனுப்வங்களை ஏற்படுத்திச் சென்றவர்களும் இருந்தார்கள். கட்டணம் கொடுத்து சீட்டு வாங்கி திரையரங்கின் இருக்கையில் அமர்ந்து பிறகு அங்கிருந்தே வெளியேறிக் கொண்டிருந்த ரசிகர்களை ஃபிரேமுக்குள் இழத்து அந்த நிகழ்வுகளோடே வாழ்ந்துவிட்டுப் போக வைக்கும் ஆற்றல் படைத்திருப்போரது அரிய வரிசையில் இருந்தவர் பாலு மகேந்திரா.

மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டும் என்றார் மகாகவி. தனது காமிரா மொழியில் அந்த மந்திரச் சொற்களை தேவைக்கேற்ப பதிப்பிக்கும் திறமையைக் கொண்டிருந்த பாலுவின் மரணம் இன்றைய தலைமுறை திரையுலக படைப்பாளிகளையும், பழைய தலைமுறை ரசிகர்களையும் ஒன்று போலவே பாதித்திருப்பதை அவரது இறுதி ஊர்வலத்தில் பார்க்க முடிந்தது. சிந்தனையில் தேக்கமின்றி இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கே இது சாத்தியம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

மூடுபனி திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே ஏற்பட்ட அலைவுறுதல், வேறு படங்கள் மாதிரி அல்ல இது என்பதை அப்போதும், வேறு இயக்குனர்கள் மாதிரி அல்ல இவர் என்பதைப் பிறகும் எனக்கு கற்பித்தது. இயல்பியல் கோட்பாட்டில் சொல்லப்படுவது போல், அலை நீளங்கள் சமமாக உள்ள இரண்டு வெவ்வேறு பொருள்களின் அதிர்வுகள் சந்திக்கும் புள்ளியில் நிகழும் ஒத்திசைவு (RESONANCE) அனுபவத்தை ரசிகர்கள் உள்ளத்தில் நிகழ்த்தும் கலைஞர்கள் கற்பனையில் விரியும் காட்சிக்குள் சென்றுகூட சரி செய்து திரும்பும் திறனைப் பெற்றிருப்பார்கள். திரைப்படம் என்பதைத் திரை மொழி என்று நமக்குப் புரிய வைத்த சில ஆளுமைகளில் முக்கியமானவர் பாலு மகேந்திரா.

ஒரு காலத்தில் “பேசும் படம் ” திரை இதழின் கடைசி பத்து, பதினைந்து பக்கங்களில் வெளியாகியிருக்குbalu1ம் வசனங்களிலிருந்தும், வானொலியில் மாதம் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளின் (பிற்பகல் 3 மணி என்று நினைவு) ஒரு மணி நேர ஒலிச்சித்திரத்திலும் ஒரு முழு படத்தை அப்படியே உள்வாங்கி அதைப் பார்த்து முடிந்த நிறைவு அடைந்து கொண்டிருந்த இள வயது குதூகலத்தைக் கலைத்துப் போடத் தொடங்கிய படங்கள்,வெறும் கேளிக்கைக்கு அப்பால் ஒரு தேடலை தமிழ் ரசிகர்களுக்கு ஊட்டத் தொடங்கின. முப்பரிமாண உணர்வோடு, பின்புலத்தில் விரியும் காட்சிகளில் கசியும் ஒளி, ததும்பும் இசை, பாத்திரங்கள் மட்டுமின்றி அசையாத பொருள்களும் வெளிப்படுத்தும் உடல் மொழி என ஒரு திரைப்படத்தின் கூறுகள் பலவற்றை சாதாரண ரசிகர்களும் தமது கையள்ளிப் பருக முடியும், கோப்பையில் ஏந்தி ஒயிலாக அருந்த முடியும் என்பதை பாலு மகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’ உணர்த்தியது.

புது மனை புகு விழா அழைப்பிதழில் வீட்டை அச்சில் பதிந்திருப்பது போல அத்தனை இலகுவானதில்லை ஒரு வீடு கட்டுவது என்பதை, பாலு மகேந்திரா திரையில் எழுதிக் காட்டினார். ஒவ்வொரு காசையும் எண்ணி எண்ணி அவள் (அர்ச்சனா எத்தனை அற்புதமாக அதைச் செய்திருப்பார்!) செலவு செய்து அந்த வீட்டை எழுப்பிக் கொண்டிருக்கையில், காதலன் ஆசையாக வாங்கிவந்து கொடுக்கும் சேலை அவளுக்கு அவன் மீதான அன்பைத் ததும்ப வைப்பதற்குப் பதிலாக, இப்ப இந்தப் புடவைக்கு என்ன தேவை என்று அவளது ஆற்றாமையாக வெடிக்கும் காட்சி பார்வையாளருக்கு எத்தனையோ உணர்த்தி விடுகிறது. சொக்கலிங்க பாகவதர் அந்த வேகாத வெயிலில் முடிவற்ற நடையை நடந்து கொண்டிருப்பது பல நூறு மனிதர்களுக்கும் சேர்த்து நடந்த நடை.

மூன்றாம் பிறை திரைப்படத்தில் வயதான மனிதருக்கு வாழ்க்கைப் பட்டிருக்கும் இளம் மனைவி பாத்திரம். பூர்ணம் விஸ்வநாதனும், சில்க் ஸ்மிதாவும் வெளிப்படுத்தும் எதிரெதிர் உளவியல் நிலைகளை – பாலியல் உணர்வுகளின் வடிகாலையும், ஏமாற்றத் ததும்பலையும் பாலுவின் திரை மொழி எழுதியது. அந்தப் படத்தில் ஸ்ரீதேவி, கமல் ஹாசன் இருவருக்கு மேலாக சுப்பிரமணி என்ற நாய்க்குட்டியின் பாத்திரத்தை அவர் உலவ விட்டது, அந்தப் பெண்ணின் மன நிலையை வாசிக்கக் கொடுத்திருக்கும் புத்தகம் போல இருக்கும். அவரது படங்களில் பாடல்களும், பாடல் காட்சிகளும் தனி ரசனையோடு இணைக்கப்பட்டிருக்கும்.

balu2“மறுபடியும்” திரைப்படம், அலை பாயும் உள்ளத்தைக் கண்களில் வாசித்தறிய வைக்கும். இளையராஜாவின் ‘ஆசை அதிகம் வச்சு’ (எஸ். ஜானகி) பாடலின் இசை புறப்படும் வேகத்திலேயே, தாளம் தப்பாத ரோகிணியின் நடனத்தின் பாதையில் தன்னைத் தொலைக்கும் நிழல்கள் ரவி பாத்திரம் ஒரு குறியீட்டுக் காட்சி. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாருமில்லை என்பது, அவரது ‘ரெட்டை வால் குருவி’ சந்தித்த எதிர்வினைகளில் தெரியும். அவர் பாடு எடுத்து வழங்கிய பிற்காலத் திரைப்படங்கள் பெரிய வரவேற்பு பெறாதது அவரை பாதிக்கவே செய்தாலும், தம்மைச் சுற்றி நிறையும் அடுத்தடுத்த இளம் படைப்பாளிகளுக்காகத் தம்மைத் தகவமைத்துக் கொண்டு கற்பித்தலின் இன்பத்தில் அவர் இறங்கியது தமிழ்த் திரை உலகில் ஒரு புதிய அனுபவம். அது தான் அவர் நிர்மாணித்த சினிமா பட்டறை.

சின்னத் திரை என்று அழைக்கப்படும் தொலைகாட்சியில் வாரா வாரம் ஒளிபரப்பான கதை நேரம் தொடரில் சிறுகதைகள் பலவற்றை அற்புதமான குறும்படங்களாக வடித்து வழங்கிக் கொண்டிருந்தார் பாலு மகேந்திரா. மாலன் அவர்களின் தப்புக் கணக்கு ஓர் அருமையான வடிவில் வழங்கப்பட்டிருந்தது. சுஜாதாவின் கதை ஒன்று உருக்கமாக வார்க்கப் பட்டிருந்தது. மௌனிகா என்ற திறமையான நடிகை எத்தனை எத்தனை பாத்திரங்களில் வந்து போனார் அந்தத் தொடரில்!

தாமே அவரது வலைத்தள எழுத்துக்களில் பதிவு செய்திருப்பது போல 5 ஆண்டுகளில் 21 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிவிட்டு இயக்குனராக அவர் முயற்சிகளைத் தொடங்கிய பிறகும் மகேந்திரன் கேட்டுக் கொண்டதற்காக முள்ளும் மலரும் படத்தில் ஒளிப்பதிவாளராக இயங்க ஒப்புக் கொண்டார். உமா சந்திரன் அவர்களது அற்புதமான குறுநாவலின் அசாத்திய திரை வடிவம் வெற்றி பெற்றதில் பாலுவின் பங்களிப்பு முக்கியமானது.அரிதாக் வாய்க்கும் திரை நட்சத்திரங்களில் ஒன்றான ஷோபாவின் வருகையும், மின்னல் வேக மறைவும் திரை ரசிகர்கள் மறக்க முடியாதது. பாலு பேசப்படும் போதெல்லாம் அழியாத கோலமாக ஷோபா நினைவு வந்து போவது தவிர்க்க முடியாதது.

குழந்தைகளை அவர் எத்தனை நேசித்தார் என்பதை, நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சைதன்யா என்ற குழந்தை எஸ் ராமகிருஷ்ணன் அவர்களது கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வம்சி வெளியீடாகக் கொண்டு வந்த நேரத்தில், அவளிடம் ஆட்டோகிராஃப் பெற்றதில் விளங்கிக் கொள்ள முடியும்.

சர்வதேச நிகழ்வு ஒன்றிற்காக பிரதி எடுக்க தனது வீடு படத்தின் நெகடிவ்களை எடுத்துப் பார்த்தபோது ஒரு பிரதி கூட எடுக்க முடியாதபடி அவை சிதைந்து போயிருந்தது கண்டு அவர் மனம் அரற்றியது. ஒரு திரைப்பட காப்பகம் அமைக்க வேண்டும், படங்கள் கால காலத்திற்கும் பாதுகாக்கப் படவேண்டும் என்ற குரலை அதன்பின் ஓயாது அவர் எழுப்பிக் கொண்டிருந்தார். சக படைப்பாளிகளை, சக மனிதர்களை உளமார பாராட்டும் உள்ளம் வாய்த்திருந்த அவரது, ஜனநாயக உணர்வும் சமூக பிரக்ஞையும் பெருமிதம் கொள்ளத் தக்கது.

தமிழக அரசின் சிறப்புத் தணிக்கை சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய திரைப்பட பாதுகாப்பு சிறப்பு மாநாட்டு மேடையில், மிக எளிமையாக ஓட்டப் பட்டிருந்த ஒரு சுவரொட்டி அவரை அதிர வைத்தது. ஒளிப்படக் கருவியை ஆக்டோபஸ் ஒன்று ஆக்கிரமிப்பது போன்ற அந்த உருவகத்தின் தீப்பொறியில் தொடங்கியது அவரது உரை. எனது ஆயுதத்தை எந்த ஆகடோபசும் கைப்பற்றுவதை நான் அனுமதிக்க முடியாது என்பது அனைவரது கூட்டு பிரகடனமாக அன்று உருவெடுத்தது.

படம் எடுக்க பிரும்மாண்ட சாதனங்கள் தேவை இல்லை, யாரும் இந்தத் துறைக்குள் வரலாம் என்ற அழைப்பை அவர் இறுதி மூச்சு வரை விடுத்துக் கொண்டே இருந்தார். புதிய படைப்பாளிகளை மனதார ஆசீர்வதித்தார். மாற்று திரைப்படத்திற்கான இடது சாரி முற்போக்கு இயக்கத்தின் குரலுக்கு அவரது ஆதரவு மகத்தானது. தலைமுறைகளைக் கடந்து பேசப்படும் கலைஞரான அவரது கடைசி படம் சம காலத்தின் பிரதிபலிப்பையும், சமூக மாற்று சிந்தனைக்கான ஆர்வத்தையும் கலந்து கொடுத்த பரிசோதனை முயற்சி என்று பேசப் படுகிறது. எல்லாப் பண்டங்களையும் தமதாக்கிக் கொள்ளும் சந்தைப் பொருளாதார மூலதனத்தின் கைகளில் திரைப்படங்களும் சிக்கி மூச்சுத் திணறும் சம காலத்தில் இப்படியான ஒரு முயற்சியை அவர் மேற்கொண்டது கூட ஒரு கலகக் குரல் என்றே தோன்றுகிறது.

சென்னை சாலி கிராமத் தெருக்கள் கொள்ளாது திணறிய கூட்டத்தின் நடுவே புறப்பட்ட அவரது இறுதிப் பயணம், வேதனையான அந்தக் கணத்திலும், அவரது கனவுகள் வேறு கண்கள்வழி தொடர்ந்து எடுத்துச் செல்லப்படும் என்ற நம்பிக்கையை வழங்கவும் செய்தது.

மூன்றாம் பிறை திரைப்படத்தை ‘சத்மா’ என்ற பெயரில் இந்தியில் அவர் எடுத்தபோது, க்ளைமாக்ஸ் காட்சியை இயல்பாக எடுக்கக் காத்திருக்கையில் மழை பொழியத் தொடங்கியதாம். இது ஒரு மந்திரத் தருணம் என்று அவர் வியப்போடு சொன்னதாக கமல் ஹாசன் (பிசினஸ் லைன்) தமது அஞ்சலிக் குறிப்புகளில் எழுதியிருக்கிறார். மந்திரம் போல் காட்சி மொழி இன்பம்தான் அவரது உள்ளத் தேடல் கடைசி வரையிலும்!

பிரியாவிடை அளிக்கிறது ரசிக உலகம், எங்கள் இனிய பொன் நிலாவே உங்களுக்கு!

நன்றி: தீக்கதிர்

********

மரணிக்கப் போவது எங்கள் உடல்கள், நாங்கள் அல்ல !

“………எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும், இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும், எஙகள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எஙகள் உடல்கள். நாங்களல்ல! “
– பாலு மகேந்திரா (வலைத் தளத்திலிருந்து)

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

  1. Avatar

     Thank you uncle for putting my photo in the news paper!!

  2. Avatar

    சைதன்யாவின் படைப்புகளையும் வல்லமை இதழில் நான் காண விரும்புகிறேன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க