தஞ்சை வெ.கோபாலன்

என் அன்பிற்கினிய மணிமொழி,

இங்கு நானும் குடும்பத்தில் ஏனையோரும் நலம்; அதுபோலவே அங்கு நீயும் மற்றவர்களும் நலமாக இருப்பிர்கள் என நம்புகிறேன். நீ உன் கடிதத்தில் உனது மனத்துயரங்களை முழுவதுமாய் வடித்து அனுப்பியிருக்கிறாய். உன் நிலைமை எனக்குப் புரிகிறது. இந்த நிலைமை உனக்கு மட்டுமல்ல, நடுத்தர குடும்பத்தில் திருமணமாகி புகுந்த வீடு செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் ஏற்படுகின்ற நிலைமைதான். புக்ககம் புகுந்த சில காலம் வரையில் இதுபோன்ற தனிமைச் சூழ்நிலையும், புதிய உறவுகளின் நடவடிக்கைகளும், பேச்சுக்களும், நீ இதுநாள் வரை இருந்த சூழ்நிலைகளிலிருந்தும், கேட்டுவந்த பேச்சுக்களிலிருந்தும் மாறுபட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு புதிய சூழ்நிலை மனதுக்கு மகிழ்ச்சியாகவும், பழகுவதற்கு இனிமையாகவும் இருக்கும்; ஆனால் பலருக்கு புகுந்த இடத்தின் மாறுபட்ட சூழ்நிலையை ஏற்றுக் கொள்ள முடியாத அல்லது சகித்துக் கொள்ள முடியாத நிலைமையும் ஏற்படலாம். துரதிர்ஷ்டவசமாக உனக்கு இரண்டாவதாக சொன்ன நிலை ஏற்பட்டிருப்பதை எண்ணி மனம் வருந்துகிறேன். என்ன செய்ய முடியும்? நமது சமூக சூழ்நிலை, காலம் காலமாக சிலர் நடந்து கொள்ளும் முறை இன்னமும் மாறவில்லை. பழைய கால பத்தாம் பசலித்தனத்தின் தொடர்ச்சியாக இருக்கத்தான் செய்கிறது. அது மாற வேண்டும்; மாறுவதற்கு அனைவருமே முயற்சி செய்ய வேண்டும்.

இதுபோன்ற சூழ்நிலை படித்த முன்னேற்ற மடைந்த குடும்பங்களில் ஏற்படுவதில்லை. ஆனால் பழமையில் ஊறிய பிற்போக்கு எண்ணங்களைக் கொண்டிருக்கும் மனிதர்கள் இன்னமும் மாறாமல் இருப்பதற்கு அவரவர் வாழும் குடும்ப சூழ்நிலையே காரணங்களாக இருக்கிறது. பெரும்பாலும் இப்படி நடந்து கொள்பவர்கள் கல்வி அறிவு குறைந்தவர்களாகவும், பொறாமை எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மருமகள் எனும் சொல்லே ஒரு வீட்டிற்கு வேறொரு வீட்டிலிருந்து வந்த மற்றொரு மகள் என்பதுதான் பொருள் என்பதை இவர்கள் புரிந்து கொள்வதில்லை. இவளை நாட்டுப்பெண் என்பதற்கு ‘நாற்றுப்பெண்’ என்றும், நாற்றங்காலில் பயிரிட்டுப் பின்னர் அதை வயலில் நடுவது போல பிறப்பது ஓரிடம், அவளை வளர்ப்பது வேரிடம் என்பதால் இந்தப் பெயர் வந்தது.

மருமகள் என்பவள் தங்களுக்கு எதிரி போன்றவள், தங்கள் உரிமைகளை, சலுகைகளை, இதுநாள் வரை இருந்த உறவுகளுக்கு இடையூறானவள் என்றும், தங்கள் மகனிடமிருந்து தங்களைப் பிரிப்பதற்காக வந்தவள் என இவர்கள் எண்ணுவதும் இதற்குக் காரணம். யாருடைய வினைப்பயனோ தெரியவில்லை உனக்கு அமைந்த இடத்தில் இருப்பவர்கள் உன்னை அன்னியமாக நினைத்துத் தேவையில்லாமல் கற்பனையான காரணங்களைக் கொண்டு உன்னை எதிரியாக நினைத்து உன் மனம் வருந்துபடி நடந்து கொள்கிறார்கள். இதற்கெல்லாம் நேரடியாக இவர்களிடம் விவாதிப்பதோ, எதிர்ப்பதோ அல்லது நடவடிக்கைகள் எடுப்பதோ சரியான வழிமுறையாக அமையாது. காலம் இவர்கள் மனதை மாற்ற வேண்டுமானால், நீ நடந்து கொள்ளும் முறையில்தான் இருக்கிறது.

பிறந்த இடத்தில் நீ எங்கள் அன்பிற்குரிய ஒரே பெண் என்பதால் உன்னை சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தோம். உனக்குத் தேவையானவைகளைக் குறிப்பறிந்து நாங்கள் கொடுத்து வந்தோம். சொல்லப்போனால் இங்கு உன்னை ஒரு மகாராணி போலத்தான் வளர்த்து வந்தோம். அப்படிப்பட்ட உனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை எங்கள் இதயங்களில் இரத்தம் கசிவது போல உணர்கிறோம். இருந்தாலும் நிலைமை மாறும் என்று நாங்களும் சும்மா இருக்கமுடியாது. சொல்ல வேண்டிய முறையில் சொல்லி அவர்களுக்குப் புரிய வைக்க எங்களால் ஆன அனைத்தையும் நிச்சயம் செய்வோம். அப்படியும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லையானால் அப்போது என்ன செய்வது என்பதை ஆலோசிப்போம்.

இத்தனை களேபரங்களுக்கும் இடையில் உனது கணவர் உனக்கு ஆறுதலாக இருக்கிறார் என்பது மனதுக்கு இதமளிக்கும் செய்தியாக இருக்கிறது. உங்கள் இருவருக்கிடையே எந்த கசப்பும் ஏற்படாத வரையில் மற்றவர்களின் போக்கை எதிர்கொள்வது என்பது சுலபமாக இருக்கும். எந்த நிலையிலும் நீ அவர்களிடம் நேரடியாக மோத வேண்டாம். உன் கணவரிடம் சொல்லி பக்குவமாக நிலைமையைச் சீர்திருந்த முயற்சிகளை மேற்கொள்ளலாம். இவற்றையெல்லாம் மீறி நிலைமை கடுமையாக மாறுமானால் அப்போது நாங்கள் நிச்சயம் தலையிடுவோம். நம்பிக்கையோடு இரு. வாழ்க்கையில் இதுபோன்ற மேடு பள்ளங்கள் ஏற்படலாம், அதுவே உனக்குச் சில பாடங்களைக் கற்பிக்கலாம், அந்த பாடங்களைக் கற்பதன் மூலம் எதிர்காலத்தில் நீ இவர்களைப் போல் உன் இளையோரிடம் நடந்து கொள்ளாமல் இருக்க முடியும் என்பதால் எல்லாம் நன்மைக்கே என்று இரு; இது தற்காலிகமானது என்பதை உணர்ந்து கொள்.

நமது முன்னோர்கள் பல புராண இதிகாசங்களை நமக்குக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றிலெல்லாம் வரக்கூடிய கதா பாத்திரங்கள் பட்ட சிரமங்களையும், சந்தித்த இடையூறுகளையும் நாம் படிக்கிறோம். அவைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளத்தான் அப்படிப்பட்ட பாத்திரங்களைப் படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் என்ன செய்கிறோம், அவற்றைப் படித்துவிட்டு ‘சூ’ கொட்டி அனுதாபப் பட்டுவிடுவதோடு நம் பணி முடிந்துவிட்டதாகக் கருதுகிறோம். அதுபோன்ற சூழ்நிலைகள் நம்மால் உருவாகக் கூடாது என்று எண்ணுவதில்லை. நீயே பார்த்திருப்பாய், நம் ஊர் தொலைக்காட்சிகளில் பகல் நேரம் இரவு நேரம் என்று பாராமல் சில தொடர் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பிக் கொண்டே யிருப்பார்கள். அவர்கள் நோக்கம் அந்தத் தொடரை பல ஆண்டுகள் நடத்த வேண்டும் என்பதுதான். அதன் மூலம் அதிகமான விளம்பர லாபம் பெறலாம் என்பதுதான். ஆனால் அவர்களுடைய லாப நோக்கத்துக்காக பெண் பாத்திரங்களைக் கொடுமையானவர்களாக, கொலைகூட செய்யத் துணிந்தவர்களாக, பிறரை கோபத்தால் கன்னத்தில் அறைபவர்களாகக் காட்டி வருகிறார்கள். இரண்டு பெண்கள் ஒற்றுமையாக இருக்க விட மாட்டேன் என்று விரதம் பூண்டவர்களாக இவர்கள் கற்பனையிலேயே பல கொடுமைகளை உருவாக்கி அவற்றைப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்படிச் செய்வது சமூக சேவையா, சமூகத் தீமையா என்று பெண்களே தீர்மானித்து அவற்றைப் பார்க்காமல் இருக்க வேண்டும்.

இன்றைக்கு பல பணிகளில் பாதிக்கு மேல் பெண்கள்தான் இருக்கிறார்கள். நீ முதுகலை பட்டம் பெற்றிருப்பதோடு சில துறைகளில் சிறப்புப் பயிற்சியும் பெற்றிருப்பவள். நீ நினைத்தால் உன் கணவனுடைய சம்மதத்தோடு நல்லதொரு பணியைத் தேர்ந்தெடுத்து நீ வேலைக்குச் செல்லலாம். இப்போதெல்லாம் பெண்கள் பணியாற்றச் செல்வது குடும்பத்தின் செலவுகளை ஈடுகட்ட அதிகப்படியான வருமானம் எனும் நிலைமையைத் தாண்டி, பெண்களின் சமத்துவம், உரிமை, பொறுப்புணர்வு இவற்றை வளர்க்கக்கூடிய வாய்ப்பாகக்கூட அமைந்திருக்கிறது. ஒரு காலத்தில், அதாவது நான் பணிபுரிய ஒரு அலுவலகம் சென்றபோது ஆண்கள் மட்டுமே நிறைந்திருந்த இடங்கள் எல்லாம் இப்போது பெரும்பாலும் பெண்களே பணிபுரியும் இடங்களாக மாறியிருக்கின்றன. அன்று அலுவலகங்களில் அதிக நேரம் தேநீர் அருந்துமிடங்களிலும், செய்தித் தாள்களைப் படித்துவிட்டு அரசியலை அலசும் இடங்களாகவும் இருந்த நிலை இன்று மாறி பெண்களின் பணியால் சிறப்பாக வேலைகள் நடப்பதாகத் தெரிகிறது. இந்த நிலைதான் வளரவேண்டும், சமூகத்தில் சமத்துவமும் நிலைபெறும்.

நீ கல்லூரியில் படித்த காலத்தில் பெண்ணுரிமை பேசும் சிலருடைய பேச்சுக்களைப் பெருமையாகப் பேசுவாயே. அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைத் தவிர வேறு எதையும் செய்ததாகத் தெரியவில்லை. ஒரு கட்டுப்பாட்டுக்குள் செயல்படுபவர்கள் அதை உடைப்பதற்கோ, மீறுவதற்கு எப்போது உரிமை கிடைக்கும் தெரியுமா? எந்த சூழ்நிலையிலும் சமூகம் வகுத்துத் தந்த நல்ல சூழ்நிலைகளிலிருந்து மீறமாட்டோம் எனும் மன உறுதி ஏற்படுமானால், தேவையற்ற, எல்லை மீறிய கட்டுப்பாடுகளை சட்ட திட்டங்களை உடைத்தெறியவும், மீறவும் உரிமையுள்ளவர்களாக இருப்பார்கள். சென்ற நூற்றாண்டின் முதற் பகுதியில் இந்த நாட்டில் நிலவி வந்த சூழல் இன்று தலைகீழாக மாறியிருப்பதைப் பார்த்தும் படித்தும் தெரிந்து கொண்டிருக்கிறோம் அல்லவா? அப்படியே இப்போதைய நிலைமைகளும் தலைகீழாக மாறவும், இன்னும் முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும் கூடிய வாய்ப்பு நமக்கு நிச்சயம் ஏற்படும்.

நம் தேசத்துப் பெண்மணிகள் என்றும் மற்றவர்களைக் காட்டிலும் ஆளுமை நிறைந்தவர்கள், பிறரை ஆட்டிப் படைப்பவர்கள் என்று நினைப்பதில்லை. மாறாகத் தாய்மை எனும் உணர்வால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்புள்ளம் கொண்டவர்களாக வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். வழி தவறிச் செல்பவர்களையும்கூட தங்கள் அன்பால், பணிவால் மனம் மாறச் செய்து விடுகிறார்கள். அதனால்தான் நம் தேசத்தில் பெண் தெய்வங்கள் அதிகமாக இருக்கின்றன. பொதுவாக பெண் தெய்வங்கள் அனுக்கிரகம் செய்பவர்களாக, தீமைகளை அழிப்பவர்களாக, குடும்பத்தின் ஆக்கத்துக்கு ஆதாரமாக இருப்பவர்களாகப் படைத்திருக்கிறார்கள். பெண்மையின் உயர்வை உலகத்துக்குத் தெரிவிக்கும் இடத்தில் நமது பாரத தேசம் இருக்கிறது என்பதற்குப் பல எடுத்துக் காட்டுகளைச் சொல்லலாம். இங்குதான் நதிகளுக்கெல்லாம் ஒரு சில தவிர மற்றவற்றுக்கு பெண்கள் பெயர்களைக் கொடுத்திருக்கிறார்கள். நதிகள்தான் பாய்ந்து வரும் நீரால் நாட்டை வளம்பெறச் செய்வது போல பெண்கள் இந்த நாட்டை வளம் பெறச் செய்பவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

நமது புராண கதா பாத்திரங்களில் பெண்களுடைய மன உறுதி, எடுத்த காரியத்தை முடிக்கும் மனோ தைரியம், தீமை நேரும்போது அதனை அழித்துவிடத் துடிக்கும் தீரம், நடவடிக்கைகளில் நேர்மை இவற்றைக் காண முடிகிறது. பீஷ்மர் சிறையெடுத்துத் தன் தம்பி விசித்திரவீரியனுக்குத் திருமணம் செய்விக்க முயன்ற அம்பா, அம்பிகா, அம்பாலிகா இம்மூவரில் ஒருத்தி மட்டும் தான் வேறொருவனைக் காதலிப்பதாகச் சொல்லவும், அவனிடம் அவளை பீஷ்மர் அனுப்பிய போது அவன் நிராகரித்ததும், பின்னர் அவள் பீஷ்மரிடமும், தன் காதலனிடமும் பலமுறை சென்று மன்றாடியும் ஒன்றும் நடக்கவில்லை என்பதால் மன உறுதியோடு பீஷ்மரைக் கொல்ல சபதம் ஏற்று, தானே தன் உயிரை மாய்த்துக் கொண்டு சிகண்டியாகப் பிறந்து பீஷ்மரின் உயிரைப் பறிக்கக் காரணமாக அமைந்த வரலாற்றைப் படித்திருக்கிறோம் அல்லவா? ஒரு பெண் நினைத்தால் ஆண்களால் முடியாத காரியத்தையும் சாதிக்க முடியும் என்பதற்கு சிகண்டியின் வரலாறு நமக்குச் சொல்கிறது அல்லவா?

அவ்வளவு ஏன் மணிமொழி? அடக்கம், பணிவு, ஆண்கள் முன்பு வந்து பேசத் தயங்கும் பண்பாடு இவைகள் குறுதியில் ஊறிய தமிழ் நாட்டுப் பெண்களுக்கு மத்தியில் எத்தனை யெத்தனை வீராங்கனைகள் தமிழ் நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். வேலு நாச்சியாரைத்தான் உனக்குத் தெரியுமே. அவர்களுடைய வீர வரலாற்றை நீ படிக்கும்போது தானே நானே தெரிந்து கொண்டேன். தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தியடிகளின் போராட்டத்தில் தன்னையே ஆஹூதியாக்கிக் கொண்ட தில்லையாடி வள்ளியம்மையின் வரலாற்றைக் கூட நீ சொல்லித்தானே நானே புரிந்து கொண்டேன். முதன் முதலாக தமிழத்தில் மருத்துவம் படித்து சமுதாய சீர்திருத்தத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட முத்துலட்சுமி ரெட்டியின் வரலாறு நாம் அறியாததா? இப்படிப்பட்டவர்கள் மத்தியில் தோன்றி இன்று கலை உலகிலும், இலக்கிய உலகிலும், ஆன்மீக உலகிலும் வழிகாட்டிகளாகத் திகழும் எண்ணற்ற பெண்மணிகள் இந்த நாட்டின் கண்மணிகளாகத் திகழவில்லையா? இவர்கள் வாழ்க்கையெல்லாம் உனக்கும் உன்போன்ற பிற பெண்களுக்கும் ஆதர்சமாக இருக்க வேண்டாமா? இருக்கும், அவர்களது வாழ்க்கை உன்னைப் போன்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டும் என்பது மட்டும் நிச்சயம்.

உனக்காவது சமூகத்தில் ஒரு அந்தஸ்து இருக்கிறது. ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பண்புள்ள பெண் என்கிற முத்திரை பதிந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் ஏறக்குறைய அடிமைகளாக நடத்தப்பட்டிருக்கின்றனர். பெண்கல்வி அறவே மறுக்கப்பட்டிருக்கிறது. பால்மணம் மாறாத சிறுமிகளுக்குத் திருமணம் எனும் பந்தத்தை ஏற்படுத்தி அவர்களை வசக்கித் தொழுவில் கட்டும் நிலைமை இருந்திருக்கிறது. அப்போது பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைச் சற்று நினைத்துப் பார்த்தால் தெரியும் இன்று நம் பெண்கள் எத்தனை சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்று. காலம் மாற மாற நிலைமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன. மாற்றம் ஒன்றுதான் சமூகத்தில் மாறாததாக இருக்கிறது.

உனக்குத் தெரிந்திருக்கலாம், நம் நாட்டில் இறைவனுக்கு ஆலயங்களில் பணியாற்றுவதற்கென்று ஒரு சமூகம் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்தது. அந்தப் புனிதப் பணி நாளடைவில் ஆண்களின் ஆற்றாத உடற்பசிக்கு பலியாகிக் கொண்டிருந்த நிலையில், சில சீர்திருத்த வாதிகள் அத்தகைய அமைப்புகளை உடைத்தெறிந்தனர். இசை, நடனம் போன்ற அரிய கலைகளை வளர்த்த அந்த வம்சத்தினர் இன்று நம் சமுதாயத்தில் கலைகளைக் காத்து மக்கள் கையில் கொடுத்து அரிய பணியைச் செய்திருக்கின்றனர். ஆக பெண்கள் தெய்வமாகக் கொண்டாடப்படும் புனிதமான நாட்டில் நாம் பிறந்தோம் என்ற கர்வம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும்.

மகாகவி பாரதி கல்கத்தா சென்றிருந்த போது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதா அம்மையாரைச் சென்று பார்த்தாராம். அப்போது பாரதியிடம் நிவேதிதா அம்மையார் உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா என்று வினவியபோது பாரதி சொன்னாரம், இதுபோன்ற அரசியல் கூட்டங்களுக்கு நாங்கள் எங்கள் வீட்டுப் பெண்களை அழைத்துச் செல்வதில்லை என்று. இதனால் கோபமடைந்த சகோதரி நிவேதிதா பாரதியாரிடம், இரு கண்களில் ஒன்றைக் குருடாக்கி உலகை பார்ப்பதுண்டோ? என்றாராம். நம் இரு கண்களுக்கு இணையானவை ஆண், பெண் என்போர் சமுதாய அமைப்பில். இதில் ஒரு கண்ணைக் குருடாக்கி மற்றொன்றால் உலகை முழுமையாகப் பார்க்க முடியுமா என்பது பாரதியாரின் கேள்வி. உண்மைதானே இவ்வுலகில் ஆண், பெண் பேதமின்றி இருவரும் சமமான நோக்கில் வாழ்வது அவசியம் அல்லவா? அந்த நிலை என்று தோன்றுகிறதோ அன்றே நாம் வாழும் சமுதாயம் நாகரிக சமுதாயம் என அழைக்கப்படும்.

எனக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தபோது நீதான் என்னுடன் மருத்துவ மனையில் இருந்தாயே. அப்போது பார்த்திருப்பாய் அங்கிருந்த செவிலியர்கள் அங்கு சிகிச்சை பெற்ற அனைவரையும் தங்கள் தந்தையைப் போல, தாயைப் போல, உடன் பிறந்தாரைப் போல எத்தனை அன்பு பாராட்டி சேவை செய்தனர். அவர்கள் சேவையில் எங்காவது ஓரிடத்திலாவது, அவர்கள் வாங்கும் ஊதியத்துக்காக வேலை செய்பவர்கள் போல காண முடிந்ததா? முடியாது, காரணம் அவர்கள் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வழி வந்தவர்கள் உண்மையான சேவகிகள். அவர்கள் அப்போது காட்டிய மனிதாபிமானம், அன்பு இன்றும் என் நெஞ்சில் நீங்காமல் நிறைந்திருக்கிறது. அவர்களுக்கு இருந்த பொறுமை, சகிப்புத் தன்மை, பிறர்க்கு உதவும் குணம் இவற்றை நீயும் அவர்களைப் போல அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் பணியாற்றும் பெண்களும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பது என் அவா. குறிப்பாக அந்த மருத்துவமனை செவிலியர்களைப் பற்றிச் சொல்ல ஒரு காரணம் இருக்கிறது. நேற்று ஒரு மருத்துவ மனைக்குச் சென்றிருந்தேன். அங்கு பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் வேலை பளுவினாலோ, அல்லது அக்கறையின்மையினாலோ நோயாளியாக வந்தவரிடம் தேவையில்லாமல் சிடுசிடுத்தது எனக்கு மன வருத்தத்தைக் கொடுத்தது. அதனால் அன்பின் வழி நின்ற செவிலியர்களை உனக்கு நினைவுகூர்ந்தேன்.

என் அன்பு மணிமொழி, உன் தாயைப் பற்றி உனக்கு ஒரு சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். அவள் என் வாழ்க்கைத் துணைவியாகி நம் வீட்டுக்கு வந்த நாள் முதல் சுயநலமில்லாமல் ஒரு சிறு முணுமுணுப்பு கூட இல்லாமல் என்னுடைய, உன்னுடைய நலன் ஒன்றை மட்டுமே மனத்தில் கொண்டு பாடுபட்டு வந்திருக்கிறாள். தொடக்க காலத்தில் எனக்கு அவ்வளவு அதிகமாக ஊதியம் இல்லாத காலத்தில் உள்ளதைக் கொண்டு உயர்வாக வாழ கற்றுக் கொடுத்தவளே அவள்தான். தன்னுடைய நலன் என்று தனியாக எதையுமே வைத்துக் கொள்ளாமல் நமக்காக என்று வாழ்ந்த அந்த அன்பு உள்ளம் உன் புகுந்த வீட்டு நிலைமை தெரிய வந்தால் மிகுந்த மனவருத்தத்துக்கு உள்ளாகும். அதனால் உன்னைப் பற்றிய வேண்டாத விவரங்களை நான் அவளிடம் சொல்லவில்லை. காரணம் அவள் உள்ளம் மிக மிருதுவானது, தன் அன்பு மகள் போன இடப்0த்தில் சங்கடங்களுக்கு ஆளாகிறாள் என்பது தெரிந்தால் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. உனக்காக இல்லாவிட்டாலும், அந்த அன்பு தாய் உள்ளத்துக்காகவாவது நீ சிறிது பொறுமையாக இரு. காலம் மாறும். அப்போது நாம் அனைவருமே மகிழ்ச்சியடையும் நாள் வரும். உன் மூலம் தனக்கு ஒரு அன்புருவான பேரக் குழந்தை வரப்போகிறது என்று ஆவலோடு காத்திருக்கிறாள். அந்த ஆவலைப் பூர்த்தி செய்.

உன் கணவருக்கும் என் அன்புகளைத் தெரிவி. வீட்டில் அனைவருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துக்களைச் சொல். நல்லதே நடக்கும். நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள், எதிர்காலம் உன் கையில். வாழ்த்துக்களுடன்.

உன் அன்பு அப்பா,

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மணிமொழிக்கு ஒரு மடல்!

  1. ஒரு நல்ல தந்தையின் கடிதம்.  மிகவும் அருமை.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *