என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே….
கவிஞர் காவிரி மைந்தன்
எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்! காதல் மன்னன் ஜெமினி கணேசன் திரையில் தோன்றி நடித்த பாட்டு! கற்பனைச் சிறகை விரித்து காதலின் சாம்ராஜ்ஜியத்தைத் தன்னாலும் கட்டியாள முடியும் என்று பட்டுக்கோட்டையார் எழுதி வைத்த பாட்டு! சமுதாய புரட்சிகர கம்யூனிஸ சித்தாத்தங்களை உள்ளடக்கிய பாடல்களின் ஊற்றுக்கண்ணாய்த் திகழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் உள்ளக்கண் திறந்த பாடலிது என்று கூட சொல்லத்தோன்றுகிறது!
பெண்ணை உவமையிட்டு போற்றி மகிழும் தமிழ் உலகம்! இம்மண்ணில் சொல்லப்பட்ட உவமைகளுக்கு நிகராக வேறெந்த மொழியிலும் பெண் பாராட்டப்படவில்லை. எங்கோ இருந்தாலும் எம் கண்ணில் நிறைவதால், குளிர்ச்சி தருவதால், இரவில் வருவதால், உறவுகளுக்கு உடனிருப்பதால், உனைத் தூதுவிடவும் வைத்தனரே நிலாவே! எழுத்தாணி கொண்டு உனைப் பற்றி எழுத ஆரம்பித்தால் கற்பனை புலவர்களுக்கு முற்றிலுமாய் கை கொடுக்கிறதே! காலகாலமாகத் தேய்ந்து மறைந்து மீண்டும் வளர்ந்து வானில் வலம் வரும் முழுமதியே.. எங்கள் மக்கள் கவிஞன் மனதில் பொழிந்த மகரந்தப் பாடல் வரிகளிதோ..
சந்தனத் தமிழெடுத்து சந்தங்கள் சேர்த்து சதிராட வைத்தபோது சுந்தரமாய் பாடலொன்று பிறந்திடுமே! அதிலும் நிலவைத் துணைக்கழைத்து அருமைக் காதலிக்கு உவமை சொல்லி வரைந்த பாடலிதை இனிமை என்பதன்றி வேறென்ன சொல்ல முடியும்? டி.எம்.செளந்திரராஜன் குரலில் டி.ஜி. லிங்கப்பா இசையில் பட்டுக்கோட்டையார் வடித்துவைத்தப் பட்டுக்கம்பளம்!!
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ
இளையவளா முத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ
இளையவளா மூத்தவளா
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே – உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே – உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே – உன்
காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே – ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே – அந்த
வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே – அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே – நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே – இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
இளையவளா மூத்தவளா
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
பாடல்: என்னருமைக் காதலிக்கு
திரைப்படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
ஆண்டு: 1960
http://www.youtube.com/watch?v=KUsATMgd_tw
http://www.youtube.com/watch?v=KUsATMgd_tw