Category: Featured

Featured

  • சிரித்தாலும் கண்ணீர் வரும்.. அழுதாலும் கண்ணீர் வரும்..- கவியரசு கண்ணதாசன்

    கவிஞர் காவிரி மைந்தன்

    சிரித்தாலும் கண்ணீர் வரும்..

    அழுதாலும் கண்ணீர் வரும்..

     

    மனித ஜாதியின் மகத்துவம் சிரிப்பினிலும் அழுகையிலும்தான் கலந்திருக்கிறது. எந்த நிலையிலும் இந்த இருகூறுகள் மட்டுமே இவ்வுலகை இயக்கி வருகின்றன என்றுகூட கூறலாம். மனித மனதை ஆள்கின்ற இரண்டு உணர்வுகள் அல்லவா இவை? இவைகளைக் கடந்த மனிதன் இன்னும் பிறக்கவில்லையே! இன்ப துன்பங்களின் கலவையில் மனித வாழ்க்கை நெய்யப்பட்டிருக்கிறதோ? இரண்டிற்கும் அடிப்படைக் காரணம் மனமே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது! கண்கள் பார்வையைத் தருகின்றன! பாதையையும் காட்டுகின்றன! பெண்கள் இன்பத்திற்கும் காரணமாகின்றனர்! துன்பத்திற்கும் அவள்தானே மூலமாகிறாள் .. இந்தக் குற்றச்சாட்டு ஆண் வர்க்கத்தின் அப்பட்டமான குற்றச்சாட்டு!! பேதமை, மடமை என்கிற சமுதாயப் பூச்சுகளிடப்பட்ட வரலாற்றில்.. பெண் என் செய்வாள்?

    பெண் என்றால் பெண் என்கிற திரைப்படத்தில் .. கவிஞரின் எண்ணரதம் வருகிறது பாருங்கள்! கதையின் போக்கில் கதாநாயகன் சிரிப்பை ஏற்கிறான். பாடல் வரிகளில்அதன் பரிணமிப்பு இடம்பெறுகிறது. கதையின் நாயகி.. கண்ணீரைச் சுமக்கிறாள்.. கருத்திலும் அதை நிறைக்கிறாள்.. ஏதோ பாடலலல்ல! இதயம் தொடும் பாடல்!

    ஒவ்வொரு வரியிலும் உண்மை பட்டவர்த்தனமாய் உலா வருகிறது! அது என்ன கண்ணதாசன் என்ன எழுதினாலும் இப்படி நியதிகள் பதிவாகிவிடுகின்றன என்று கூட நான் எண்ணியதுண்டு! இந்தப் பாடல் அதற்கான அத்தாட்சி!

    குழந்தை உள்ளம்..
    கனிந்த எண்ணம்
    கொண்டு பார்த்தால் புன்னகை
    காதல் பாதி
    கவலை பாதி
    கலந்து பார்த்தால் சஞ்சலம்
    காதல் மன்னன் ஜெமினி கணேசனும் நடிகை.. விஜயகுமாரியும் கலந்து தந்திருக்கிறார்கள்..

    இன்பம் என்ன துன்பம் என்ன
    மனதுதானே காரணம்..
    மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
    கண்கள்தானே காரணம்..

    கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
    பெண்கள்தானே காரணம்..
    பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
    (ஆண்கள் தானே காரணம் என்றல்லவா வர வேண்டும்) …

    தெய்வம்தானே காரணம்.. என்றே முடிக்கிறார்!

    திரைப்படம் – பெண் என்றால் பெண்
    பாடல் – கவிஞர் கண்ணதாசன்
    இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    குரல்கள் – டி.எம்.செளந்திரராஜன் பி.சுசீலா

    சிரித்தாலும் கண்ணீர் வரும்..
    அழுதாலும் கண்ணீர் வரும்
    உறவினிலே சிரிப்பு வரும்
    பிரிவினிலே அழுகை வரும்
    அழுதாலும் சிரித்தாலும்
    சுகமாக அமைதி வரும்.. (சிரித்தாலும்)
    குழந்தை உள்ளம்.. கனிந்த எண்ணம்
    கொண்டு பார்த்தால் புன்னகை
    காதல் பாதி கவலை பாதி
    கலந்து பார்த்தால் சஞ்சலம் (சிரித்தாலும்)
    இன்பம் என்ன துன்பம் என்ன
    மனதுதானே காரணம்..
    மனது பாடும் பாட்டுக்கெல்லாம்
    கண்கள்தானே காரணம்..
    கண்கள் பார்க்கும் பார்வைக்கெல்லாம்
    பெண்கள்தானே காரணம்..
    பெண்கள் வாழும் வாழ்வுக்கெல்லாம்..
    தெய்வம்தானே காரணம்.. (சிரித்தாலும்)

    கால வெள்ளங்களைத் தாண்டி இதோ மானுட இனத்திற்காக கண்ணதாசன் வரைந்திருக்கும் மற்றுமொரு சாசனம் பாடலாக!!

    Share
  • எது வெற்றி?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கடந்த ஒரு மாதமாக நியுயார்க்கில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராக பணிபுரிந்த தேவயானி கோர்பகாடே சம்பந்தப்பட்ட விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.  இதில் யாருக்கு வெற்றி?  அமெரிக்கா தனக்கு வெற்றி கிடைத்திருப்பதாக மார்தட்டிக்கொள்ளவில்லை.  ஆனால் இந்தியாவில்தான் பல தரப்பு அரசியல்வாதிகளும் ஏதோ இந்தியா கொடுமைக்கார அமெரிக்காவை வென்றுவிட்டதாகப் பீற்றிக்கொள்ளுகிறார்கள்.

    அமெரிக்க நாட்டுச் சட்டப்படி அமெரிக்கா நடந்துகொண்டிருக்கிறது.  கோர்பகாடே தன்னுடைய குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கும் வீட்டு வேலைகள் செய்வதற்கும் தேர்ந்தெடுத்த பெண்ணுக்கு அமெரிக்காவிற்கு வருவதற்கு விசா வாங்கும் வகையில் பல பொய்கள் சொல்லியிருக்கிறார்.  விசா விண்ணப்பத்தில் வாரம் ஒரு முறை விடுமுறை கொடுப்பதாகவும் உடல்நலமில்லாமல் இருக்கும்போதும் விடுமுறையில் பிரயாணம் செய்யும்போதும் எல்லோருக்கும் பொதுவான விடுமுறை நாட்களிலும் சம்பளம் கொடுப்பதாகவும் அதுவும் மணிக்கு 9.5 டாலர் கொடுப்பதாகவும் வாரத்திற்கு நாற்பது மணி நேரமே வேலை வாங்குவதாகவும் அதற்கு மேல் அந்தப் பெண் வேலைசெய்ய நேரிட்டால் ஓவர்டைம் சம்பளம் கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்.  இந்த விதிகள் எல்லாம் அமெரிக்கச் சட்டப்படி வீட்டில் வேலைசெய்பவர்களுக்கு அவர்களை வேலைக்கு வைத்திருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை.  இப்படி ஒப்பந்தம் போட்டால்தான் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து தன்னுடன் வீட்டுவேலைக்குக் கூட்டிப் போகும் பெண்ணுக்கு விசா வாங்கலாம் என்பதால், முதல் ஒப்பந்தத்தில் தானும் கையெழுத்திட்டு அந்தப் பெண்ணையும் அவருடைய கணவரையும் கையெழுத்திட வைத்திருக்கிறார்.

    விசா வாங்கி முடித்த பிறகு அந்தப் பெண்ணோடு இன்னொரு ஒப்பந்தம் தயார்செய்திருக்கிறார்.  அதில் மேலே குறிப்பிட்டுள்ள விதிகளை எல்லாம் மீறி செயல்பட்டிருக்கிறார்.  இரண்டாவது ஒப்பந்தத்தின்படி மணிக்கு 3.3 டாலர் கொடுப்பதாகக் கூறியிருக்கிறார்.  ஆனால் எத்தனை மணி நேரம் வேலைசெய்ய வேண்டும், ஓவர்டைம் சம்பளம் எவ்வளவு என்பது பற்றி எல்லாம் ஒன்றும் இல்லை.  ஒரு வேளை வேலைக்குக் கூட்டிவந்த பெண் பின்னால் தன் மேல் வழக்குப் போட்டால் இருக்கட்டும் என்று இரண்டாவது ஒப்பந்தத்தைத் தயாரித்திருக்கிறார்.  அதிலும் அந்தப் பெண்ணின் கையெழுத்தையும் அவர் கணவரின் கையெழுத்தையும் பெற்றிருக்கிறார்.  அமெரிக்காவைப் பொறுத்தவரை இரண்டாவது ஒப்பந்தத்தில் கூறியவை சட்டப்படி தவறானவை.  அதனால் அது மிகப் பெரிய குற்றம்.   அமெரிக்காவில் சட்டம் எல்லோருக்கும் பொது.  அரசியல்வாதிகள், பணம் படைத்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் என்று சட்டத்தை வேண்டும்போல் வளைக்க முடியாது.

    இந்தியாவில் சட்டம் செயல்படும் முறை இதற்கு மாறானது.  பணம் படைத்தவர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் அரசியல்வாதிகளும் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம்.  அதற்கு மேல் இருக்கவே இருக்கிறது லஞ்சம்.  யாரையும் லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம்.  இது இந்தியாவின் தலைவிதி.  அதுவும் ஏழைகளை எப்படியும் நடத்தலாம் என்ற எழுதப்படாத சட்டம் இருக்கிறது.  மணிக்கணக்கில் சம்பளமா? வாரத்திற்கு ஒரு முறை விடுமுறையா?  உடல்நலக்குறைவு என்றால் அதற்கும் வேலைக்காரர்களுக்குச் செலவழிக்கவேண்டுமா?  இதெல்லாம் இந்தியாவில் கேள்விப்படாத விஷயங்கள்.  அதனால்தான் வேலைசெய்ய அழைத்துச்சென்ற பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி ஒன்றும் பேசாமல், இந்திய தூதரகத்தில் வேலைபார்த்த ஒரு பெண் தன் சொந்த விஷயத்தில் செய்த சட்ட மீறலைக் கண்டிக்கத் துணிந்த அமெரிக்க அரசின் சட்டத்துறையின் செயலை ‘அமெரிக்கா இந்தியாவை அவமானப்படுத்திவிட்டது’ என்று எல்லாக் கட்சி அரசியல்வாதிகளும் குறை கூறுகிறார்கள்.  பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவழியினர் ஒருவர் கோப்ரகடேவை அமெரிக்கா நடத்தியது சரியில்லை என்று கூறியிருக்கிறார்.  எத்தனை ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இந்திய மனப்பாங்கு அவரிடம் இன்னும் இருப்பது வேதனை தருகிறது.

    இந்தியாவுடனான தன் உறவு இன்னும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் இதை இப்படியே இழுத்துக்கொண்டு போக வேண்டாம் என்பதற்காகவும் அமெரிக்கா ஒரு முடிவுக்கு வந்தது.  தங்கள் சட்டப்படி குற்றம் செய்த கோப்ரகடேயை குற்றம் புரியவில்லை என்று சொல்லவும் விரும்பவில்லை; அதே நேரத்தில் கோப்ரகடேயின் மீது வழக்கைத் தொடர்ந்து இந்திய அரசுக்கு மேலும் வெறுப்பேற்றவும் விரும்பவில்லை.  இதனால்தான் கோப்ரகடேயை நாட்டை விட்டே வெளியேற்றுவது என்று முடிவுசெய்தது.  கோப்ரகடேயை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற ஒரு அதிகாரி, ‘இப்படி நடந்ததற்கு வருந்துகிறோம்’ என்று சொன்னதற்கு கோப்ரகடே, ‘நீங்கள் ஒரு நண்பரை இழந்துவிட்டீர்கள்.  பதிலாக ஒரு வேலைக்காரப் பெண்ணையும் அவளுடைய கணவனான ஒரு குடிகார டிரைவரையும் பெற்றிருக்கிறீர்கள்’ என்றாராம்.  குற்றம் புரிந்த கோப்ரகடேக்கு, தன்னுடைய குற்றத்தை வெளிக்குக் கொண்டுவந்த பெண்ணை விட தான் அந்தஸ்தில் மேலானவள் என்ற அகங்காரம் இருக்கிறது.  அதனால்தான் அப்படிப் பேசியிருக்கிறார்.  கோப்ரகடே வீட்டில் வேலைசெய்ய வந்த பெண் தலைமறைவாகி இவர் மேல் புகார்கொடுத்ததும் இந்தியாவில் இருந்த அந்தப் பெண்ணின் கணவரை மனைவியின் இருப்பிடம் கேட்டுத் தொந்தரவு செய்திருக்கிறார்கள் கோப்ரகடேயின் உறவினர்கள்.  இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

    கோப்ரகடே தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.  அப்படித் தவறே செய்யவில்லையென்றால் நீதிமன்றத்தில் ஆஜராகி அதை நிரூபித்திருக்கலாமே.  ஏன் இந்தியாவுக்குத் தப்பி வந்திருக்க வேண்டும்?

    இப்படி வந்தவருக்கு விமானநிலையத்தில் அப்படி ஒரு வரவேற்பாம்.  அவரை வரவேற்க வந்த அவர் தந்தை பத்திரிக்கையாளர்களை நோக்கி ‘எங்கள் குடும்பம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது நீங்கள் எனக்கு ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள்.  120 கோடி மக்கள் ஒன்று சேர்ந்தால் நியாயம் கிடைத்தே தீரும்’ என்று பேசியிருக்கிறார்.  கோப்ரகடே அமெரிக்கச் சட்டத்திற்குப் பயந்து இந்தியாவுக்கு ஓடி வந்ததா இந்தியாவின் வெற்றி?  மேலும் தன்னையும் தன்னுடைய மகளையும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும்படி அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டனவாம்.  அவர் தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் இருக்கிறதாம்.  குற்றம் புரிந்துவிட்டு அமெரிக்காவிலிருந்து தப்பி ஓடி வந்துவிட்ட ஒருவரையும் அவரது தந்தையையும் ஆளும் வர்க்கத்தில் சேர்க்க இந்திய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன.  என்னே இந்தியப் பண்பாடு?

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (7)

    ராமஸ்வாமி ஸம்பத்

    ரிச்யமுக மலையில் அச்சத்தோடு காத்திருந்த சுக்ரீவனுக்கு அனுமன் ராம லக்ஷ்மணர்களை அறிமுகம் செய்வித்து ”இவர்கள் ஸீதாதேவியை அரக்கன் ராவணனிடமிருந்து மீட்க தங்கள் உதவியை நாடி வந்திருக்கிறார்கள்” என்று பகர்ந்தான். அச்சம் நீங்கிய சுக்ரீவனும் தான் வாலியிடம் பட்டபாடு அனைத்தையும் விவரித்தான்..

    …..நானும் அண்ணன் வாலியும் ரத்தபாசத்தோடு கிஷ்கிந்தையில் வாழ்ந்த நாட்களில் பலசாலியான மாயாவி என்னும் அரக்கன் வாலியை மல்யுத்தத்திற்கு அழைத்தான். இருவருக்குமிடையே நடந்த உக்கிரமான போரில் இருவரும் ஒரு குஹைக்குள் நுழைந்தனர். அண்ணன் என்னை வெளியே காத்திருக்கச் சொன்னான். நாட்கள் உருண்டோடின. ஒருநாள் குஹையிலிருந்து பெருகிவந்த குருதியைப் பார்த்து வாலியை மாயாவி கொன்றுவிட்டான் எனக்கருதி அவ்வரக்கன் வெளியே வராதபடி அக்குஹையை ஒரு பெரிய பாறையால் மூடிவிட்டு நகர் திரும்பினேன். வானர மூத்தோர் கேட்டுக்கொண்டபடி கிஷ்கிந்தை அரியணை ஏறினேன். திடீரென ஒரு நாள் வாலி நாடுதிரும்பி என்மீது சினம் கொண்டு, ‘மோசக்காரா, என்னைக் குஹையில் அடைத்துவிட்டு என்னரசை கைப்பற்றிவிட்டாயா’ என்று கூறி என்னை நையப்புடைத்து, ‘இனி உன் உறவு எனக்கு வேண்டாம்’ என்று சொல்லி என் மனைவி ருமையையும் பறித்துக்கொண்டு நாட்டைவிட்டே துரத்திவிட்டான். நானும் ஏனைய அமைச்சர்களும் எவ்வளவு விளக்கியும் வாலியின் கோபம் அடங்கவில்லை. மேலும் நான் எங்கு சென்றாலும் அங்கு வந்து என்னைத் துன்புறுத்த ஆரம்பித்தான். முன்பு துந்துபி எனும் அரக்கனைக் கொன்றபின் வாலி தன் காலால் அந்த சவத்தை உதைத்தபின் அது அருகாமையில் உள்ள மதங்கரின்  ஆசிரமத்தில் வந்து வீழ்ந்த்து. அதனால் சினம்கொண்ட அம்முனிவர், ‘எவனால் இப்புனித ஆசிரமம் கறையடைந்ததோ அவன் இம்மலையில் அடியெடுத்து வைத்தால் அவன் தலை சுக்குநூறாக உடையக்கடவது’ என சாபமிட்டார். அதனால் இங்கு வாலி வரமுடியாது. ஆகவே நான் இங்கு ஒளிந்து வாழ்கிறேன்…

    “ராமா! நம்மிருவர் சோகமும் சமமாக இருப்பதால் நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம். முதலில் நீங்கள் வாலியைக் கொன்று என் ருமையை மீட்டுக் கொடுத்தபின், நான் உங்களுக்கு ஸீதாதேவியை மீட்க உதவுகிறேன்” என்றான் சுக்ரீவன்.

    “அப்படியே” என்றான் ராமன். பின்னர் அவர்கள் இருவரும் அக்கினி சாட்சியாக நட்பு செய்துகொண்டனர். அதேநேரத்தில் இலங்கைச் சிறையில் உள்ள ஸீதை, வாலி மற்றும் அரக்கர்கோன் ராவணன் இம்மூவரின் இடது கண்களும் துடித்தன.

    இருந்தாலும் சுக்ரீவனுக்கு ’ராமனால் மகாபலம் பொருந்திய வாலியை வதம் செய்யமுடியுமா?’ எனும் ஓர் ஐயம் ஏற்பட்டது. மலைப்பகுதியில் கிடந்த துந்துபியின் எலும்புக்கூட்டினைக் காட்டி, ”தொலை தூரத்தில் உள்ள கிஷ்கிந்தையிலிருந்து வாலி தன் காலால் அவ்வரக்கனின் சடலத்தை இங்கு விழச்செய்தான். அத்தகைய பலசாலி என் அண்ணன்” என்றான். அவன் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ராமன் தன் வலது கால் கட்டைவிரலால் அந்த எலும்புக்கூட்டினை பல யோசனை துரத்திற்கப்பால் விழச்செய்தான். “இது இப்போது காய்ந்துபோன எலும்புக்கூடல்லவா?” என்று கூறிய சுக்ரீவன்மீது சினம் கொள்ளாமல், “நண்பா, உன் ஐயப்பாடு எனக்கு புரிகிறது. நான் என்ன செய்தால் உனக்கு என் பராக்கிரமத்தின்மீது நம்பிக்கை உண்டாகும்?” என்றான் ராமன்.

    சுக்ரீவன் அம்மலையில் வளர்ந்திருக்கும் ஏழு மரா மரங்களைச் சுட்டிக்காட்டி, “சிறுவயதில் நானும் அண்ணனும் இங்கு விளையாட வருவோம். அப்போதெல்லாம் வாலி ஒரு மரத்தைப் பற்றி  வேகமாக ஆட்டுவான். உடனே ஏனைய மரங்களும் புயலில் சிக்கியதுபோல் ஆடும். அப்படிப்பட்ட வல்லவன் வாலி” என்றான்.

    முகத்தில் இளநகையோட ராமன் தன் வில்லிலிருந்து ஒரு அம்பை எய்ய, ஒரே சீராக இல்லாமல் அங்கும் இங்குமாக இருந்த அவ்வேழு மரங்களும் சடசடவென சாய்ந்தன. மகிழ்ச்சியில் திளைத்த சுக்ரீவன், “ராமா என்னை மன்னியுங்கள். வாலியின் வலிமையை  நன்கறிந்த நான் அதனை உங்களுக்குச் சொல்ல முற்பட்டேன்” என்று கூறி அவன் அடிபணிந்தான்.

    அவ்வளவில் அம்மரங்களின் வேரடியில் உறங்கிக் கொண்டிருந்த வாசுகி என்னும் அரவரசன் எழுந்து ராமன் கண்களுக்கு மட்டும் தெரிந்தவாறு, “அண்ணலே, கிருத யுகத்தில் அமிர்தத்திற்காக பாற்கடலில் வடவரையை மத்தாக்கி என்னை நாணாக்கிக் கடைந்தபோது, என் உடலில் ஏற்பட்ட காயங்களைத் தங்கள் திருக்கரத்தின் ஸ்பர்சத்தினால் ஆறவைத்தீர்கள். அப்போது நான் என் களைப்பு நீங்க உறங்க ஒரு இடம் தேவை என்றேன். ‘யாரும் சுலபமாக நெருங்க முடியாத ரிச்யமுகத்தில் உறக்கம்கொள். அடுத்த திரேதா யுகத்தில் நான் மானிடனாக ராமன் எனும் பெயரோடு அவதரித்து அங்கு வருவேன். அந்த ராமன் வரும் வரை காத்திரு. நெளிந்திருக்கும் உன் உடல்மீது ஏழு மரா மரங்கள் வளர்ந்து எனக்கு அடையாளம் காட்டியவாறு நிற்கும்  (அதனால்தான் வாலி ஒரு மரத்தை ஆட்டும்போது வாசுகியின் நெளிவால் இதர மரங்களும் ஆடின). உன்மீது வளர்ந்த அம்மரங்களை நான் வீழ்த்தியதும் நீ களைப்பு நீங்கி உன் இடத்திற்குச் செல்லலாம்’ என்றீர்கள். உங்கள் கருணைக்கு நன்றி. இப்போது எனக்கு விடை கொடுங்கள்” என்று கூறி வணங்கி தன்னிடம் சேர்ந்தான்.

    வாசுகி அகன்றதும், ராமன், “சுக்ரீவா, இனி தாமதிக்க வேண்டாம். நாளை காலை நீ வாலியை வலுச்சண்டைக்கு இழு. நீங்கள் இருவரும் மல்யுத்தம் செய்யும்போது நான் வாலியைக் கொல்கிறேன்” என்றான்.

    அப்படியே சுக்ரீவன் செய்ய, ராமன் சற்று ஆலோசனையில் விழுந்த அளவில் வாலி சுக்ரீவனை பலவாறு தாக்கி மண்ணில் புரட்டி எடுத்தான். அடிபட்ட இளவானரன் அலறியடித்துக் கொண்டு ராமனிடம் ஓடி வந்து, “உன்னால் வாலியைக் கொல்ல முடியாதென்றால் எதற்கு என்னை ஏவிவிட்டாய்? நான் பேசாமல் இங்கேயே இருந்திருப்பேன் அல்லவா?” என்று குரோதம் பொங்கக் கதறினான்.

    ராமன் அவனை பரிவோடு தடவிக்கொடுத்து, “நண்பா, என்னை மன்னிக்கவேண்டும். இதற்கு முன் நான் வாலியைப் பார்த்ததில்லை. இரட்டையாரான நீங்கள் ஒரே உரு கொண்டிருப்பதால் என்னால் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இப்போது லக்ஷ்மணன் உனக்கு ஒரு மலர்க்கொடியை மாலையாக அணிவிப்பான். இந்த வித்யாசத்தால் நான் வாலியை இலகுவாக அடையாளம் கண்டு கொண்டு அவனை வீழ்த்துகிறேன் பார்” என்றான்.

    சுக்ரீவன் வாலியை மீண்டும் யுத்தம்புரிய விளித்தான். மனைவி தாரை தடுத்தும் கேளாமல் வாலி வெளிவந்து சுக்ரீவனோடு மல்யுத்தம் செய்தபோது ராமனின் அம்பு கிஷ்கிந்தை மன்னனைத் தாக்கி வீழ்த்தியது. தன்னைக் கொல்ல வல்லவன் யார் என்று நினைத்து அந்த அம்பினை வாலி நோக்கியபோது, கம்ப நாட்டாழ்வார் வர்ணிப்பது போல்,

    மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை முற்றும்

    தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே

    இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்

    செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக்கண்டான்.

    [மூன்று உலகங்களுக்கும் முக்கிய மந்திரமாக உள்ளதும், தன்னை வணங்கும் அடியார்களுக்குத் தம்மையே முழுவதும் கொடுக்கும் ஒப்பில்லாத சொல்லாக விளங்குவதும், இப்பிறவியிலேயே இனிவரும் ஏழு பிறவி என்னும் நோய் வராது, தான் தனியே தடுக்கவல்ல உயர்ந்த மருந்து போன்றதுமான ‘இராம’ என்ற சிறப்பு பொருந்திய பெயரைத் தன் கண்களால் அந்த அம்பிலே வாலி கண்டான்]

    உடனே சினம் மேலோங்க, “மறைவிலிருந்து கொல்வதுதான் சத்யபராக்கிரமனான உன் தர்மமோ?” என்று வாலி பரிகசித்து ராமன்மீது வசைமாரி பொழிந்தான். பின்னர் இருவருக்கும் நடந்த வாக்குவாத முடிவில் வாலி தன் பிறன் மனைவியைக் கவர்ந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, “ராமா, நாங்கள் வானரர்கள். தவறு செய்வது எங்கள் இயல்பு. வருங்காலத்தில் என் தம்பி தவறேதேனும் செய்தால் அவன்மீது இதே அம்பை எய்துவிடாதே. அவனுக்கும் என் மகன் அங்கதனுக்கும் இனி நீதான் காப்பு” என்று சொல்லி உயிர் நீத்தான்.

    (​தொடரும்)

    Share
  • நியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி

     

    [Giovanni Cassini]

    (1625-1712)

    சி. ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா

    “காஸ்ஸினி அறிவுத் தேடல் பயிற்சியில் வேட்கை மிக்கவர்.  குறிப்பாகக் கவிதை, கணிதம், வானியலில் ஈடுபாடு மிக்கவர்.  அவர் வெறும் விஞ்ஞானக் கோட்பாட்டில் மட்டும் விரும்பம் உள்ளவர் அல்லர்.  தொலைநோக்கிகள் மூலம் உளவும் கூர்மை யான விண்ணோக்காளர். மறுக்க முடியாத அவரது கண்டு பிடிப்புகள் மட்டுமே நியூட்டனுக்கு முன் தோன்றிய வானியல் விஞ்ஞானிகள் வரிசையில் அவருக்கு ஓர் உன்னத இடத்தை அளிக்கப் போதுமானவை.”

    டேடன் (Taton)

    “உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது ! கடல் கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது! ஆனால் கண்டுபிடிக்க முடியாதபடி மாபெரும் மெய்ப்பாட்டுக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது !”

    ஐஸக் நியூட்டன்

    “கடந்த நூற்றாண்டுகளில் மறைந்திருந்த மகத்தான சில வானியல் காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு எனது அளவு கடந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்”.

    காலிலியோ (1564-1642)

    முன்னுரை:    உலகின் முதல் பெளதிக விஞ்ஞானி என்று அழைக்கப் படும் இத்தாலியில் தோன்றிய காலிலியோ, அடுத்து பிரிட்டிஷ் கணித விஞ்ஞானி ஐஸக் நியூட்டன், டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ், இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி ஆகிய நால்வரும் ஐரோப்பாவில் வானியலைக் கணித வடிவில் விஞ்ஞானம் ஆக்கிய முக்கிய மேதைகள் ஆவார். அவர்கள் யாவரும் காபர்னிக்கஸ் கூறிய பரிதி மைய நியதியை [Sun-centered System] மெய்யாகக் கருதிப், பண்டைக் காலப் புவி மையக் கோட்பாடைப் [Earth-centered System] புறக்கணித்தவர் !

    காலிலியோ முதன் முதலில் வெள்ளியின் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சியைத் தனது தொலை நோக்கியில் கண்டு பரிதி மைய நியதியை நிரூபித்துக் காட்டினார். பிற்போக்கான தொலை நோக்கியில் காலிலியோ முதலில் தவறாகப் புரிந்து கொண்டு கூறிய ‘நீள்கோளச் சனியைத்’ [Ellipsoidal Saturn], திருத்தி ஹியூஜென்ஸ் செம்மையான தனது தொலைநோக்கியில் சனிக் கோளைக் கண்டு, அதைச் சுற்றித் திடமான வளையங்கள் இருப்பதை முதலில் உலகுக்கு அறிவித்தார்!  அவருக்குப் பிறகு, காஸ்ஸினி அந்தக் கருத்தை மீண்டும் விருத்தி செய்து, சனியின் வளையங்கள் திடமானவை [Solid Rings] அல்ல வென்றும், அவற்றிடையே எண்ணற்ற இடை வெளிகள் உள்ளன வென்றும் எடுத்துக் கூறினார்.

    சூரிய மண்டலக் கோள்களில் நீர்வளம், நிலவளம், உள்நெருப்பு, காற்றுச் சூழ்வெளி யாவும் படைக்கப்பட்டு, அவற்றில் புல்லினம், உயிரினம், மானிடம் ஆகிய அனைத்தும் வளர்ச்சி பெறத் தகுதியுள்ள அண்டம் பூமி ஒன்றுதான்! ஆனால் எல்லாக் கோள்களிலும் எழில் மிகுந்த விந்தையாக, ஒளிமயமாக அநேக வளையல்கள் அணிந்தது சனிக்கோள் ஒன்று மட்டுமே!  பூமியின் விஞ்ஞான மேதைகள் அவ்வரிய சனிக்கோளை 400 ஆண்டு களுக்கும் மேலாக தொலை நோக்கி மூலமாகவும், விண்கப்பலை அண்ட வெளியில் ஏவியும் ஆராய்ந்து வருகிறார்கள்!  காஸ்ஸினியின் பெயரால் 1997 இல் ஏவப்பட்டுப் பயணம் செய்யும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் ஆகஸ்டு 2004 முதல் சனிக் கோளை அடைந்து அரிய தகவல் சேமித்து வருவதுடன் திட்ட மிட்ட ஆறு ஆண்டுகளைக் கடந்து  பத்தாண்டுகளுக்கு மேலாக உளவித் தகவல் அனுப்பிக் கொண்டு வருகிறது !

     

     

    காலிலியோ விண்வெளியில் கண்டுபிடித்தவை

    கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ! முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ! பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி’ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ! பூமியைச் சுற்றி வரும் நிலவுக்குப் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சி உண்டாகி முழுநிலவு, கருநிலவு தோன்றுவதுபோல், பரிதியைச் சுற்றி வருவதால்தான் வெள்ளிக் கோளுக்கும் பிறைத்தோற்றம் [Phase] ஏற்படுகிறது என்று எடுத்துக் காட்டியவர், காலிலியோ.

    அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் வரைந்து காட்டினார்! பரிதியின் சிவப்புத் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே! பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை’ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ! பிறகு 230 ஆண்டுகள் கடந்து நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது!

     

     

    சனிக்கோளை முதலில் தொலைநோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹியூஜன்ஸ் [Christiaan Huygens], தானமைத்த முற்போக்கு தொலைநோக்கியில் உற்று நோக்கி, அக்கருத்தைத் திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார்! காலிலியோவின் கண்களுக்கு வளையங்கள்தான் சனியை முட்டை வடிவத்தில் காட்டி யிருக்க வேண்டும்!

    காலிலியோதான் தனது தொலைநோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை’ [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர்! அவர் எழுதிய ‘விண்மீனின் தூதர்’ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது! பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார்! உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா’ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்!

     

    கிரிஸ்டியான்†ஹியூஜென்ஸ் வானியல் கண்டுபிடிப்புகள்

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் (1629-1695) காலிலியோ, நியூட்டன் காலத்தில் வாழ்ந்த ஒரு டச் விஞ்ஞானி. இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ (1564-1642) இறந்த ஆண்டும், பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஐஸக் நியூட்டன் (1642-1727) பிறந்த ஆண்டும் ஒன்றுதான்! அப்போது வாழ்ந்து வந்த கிரிஸ்டியான் ஹியூஜென்ஸின் வயது பதிமூன்று! ஐரோப்பாவின் இரு பெரும் முன்னோடி விஞ்ஞானிகள் [காலிலியோ, நியூட்டன்] படைத்த பல பெளதிகக் [Physics] கோட்பாடுகளைச் செம்மைப் படுத்தியும், மேன்மைப் படுத்தியும் பெரும் புகழ் பெற்றவர், ஹியூஜென்ஸ்! காலிலியோ ஆக்கிய தொலை நோக்கியை விருத்தி செய்தவரும், முற்போக்கான தொலை நோக்கியின் மூலம் முதலில், சனியின் வளையத்தை முதலில் கண்டுபிடித்தவரும் ஹியூஜென்ஸ் ஒருவரே!  ஆனால் அவரும் சனிக்கோளின் வளையங்கள் திடப் பிண்டத்தால் (Solid Rings) ஆனவை என்று தவறாகக் கூறினார்.

    1656 இல் அவர் தயாரித்த முற்போக்கான தொலைநோக்கியில் முதலாக ஓரியன் நிபுளாவைக் [Orion Nebula] கண்டு பிடித்தார்! அடுத்து 50 மடங்கு பெருக்கம் தரும் மாபெரும் தொலை நோக்கியைத் தயாரித்துச் சனிக்கோளைச் சுற்றி வரும் ஒரு பெரிய துணைக் கோளைக் [Satellite] கண்டு பிடித்தார்! அது சனியைச் சுற்றி வரும் காலம் 16 நாட்கள் என்றும் கணக்கிட்டார்! அது டிடான் [Titan] என்னும் கிரேக்க இதிகாசப் பூதத்தின் குடும்பப் [Family of Giants] பெயரைப் பெற்றது! தொலைநோக்கி மூலம் செவ்வாய்க் கோளின் [Mars] தளத்தில் முதல் முதலாக மேடு பள்ளங்கள் இருக்கக் கண்டார்!

    சனிக்கோளின் அற்புத வளையங்கள் கண்டுபிடிப்பு

    காலிலியோவின் தொலைநோக்கி காட்டாத சனியின் வளையத்தை, 50 மடங்கு பெரிது படுத்தும் முற்போக்கான தொலைநோக்கியைத் தயாரித்து 45 ஆண்டுகள் கழித்து 1655 இல், கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் முதலில் கண்டு பிடித்தார்! வளையம் மெலிந்தது என்றும், சனி சுற்றிவரும் தளத்துக்கு 20 டிகிரி சாய்ந்த ‘திடவத் தட்டு ‘ [Solid Plate] என்றும், சனிக்கோளைத் தொடாமல் சுற்றி யிருக்கும், ‘துளைத் தட்டு’ [Donut Shape] என்றும் கூறினார்!  பின்னால் 1669 ஆம் ஆண்டில் சனியின் உட்புற, வெளிப்புற வளையங்கள் [Inner & Outer Rings], வளைங்களின் இடைவெளிகள், சனியின் நான்கு துணைக் கோள்கள் ஆகிய வற்றை இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] கண்டு பிடித்தார். அதன் பின் சனியின் வளையம் ‘திடவத் தட்டு’ என்னும் கருத்து மாறி, இடை வெளிகள் கொண்ட வளையங்களாக எடுத்துக் கொள்ளப் பட்டன!

    வானியல் விஞ்ஞானி காஸ்ஸினி கண்டுபிடித்தவை

    காஸ்ஸினி ஒரு கணித ஞானி. மேலும் அண்டக் கோள்களைக் கூர்ந்து உளவு செய்யும் வானோக்காளர் [Planet Observer]. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைத் துல்லியமாகக் கணிக்க, காஸ்ஸினி 1672 இல் சேகரித்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.  அண்டக் கோள்களான வியாழன், வெள்ளி, செவ்வாய் ஆகியவைத் தன்னைத் தானே சுற்றிவரும் காலத்தைக் கோள்களில் உள்ள நிரந்தரப் புள்ளிகளைத் தொடர்ந்து பல்லாண்டுகள் தொலைநோக்கி மூலம் பார்த்துப் பதிவு செய்தவர். அவர் கணித்த அண்டங்களின் சுற்றுக் காலங்கள், அவரது வாழ்நாளில் முரண்பாடுடைய புவிமைய நகர்ச்சிக்கு எதிராக எண்ணிக்கை நாட்களை அளித்தன.

     

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் தனது தொலைநோக்கியில் சனியின் மிகப் பெரும் சந்திரன், டிடானை [Titan] முதலில் கண்டுபிடித்த பின், காஸ்ஸினி மற்றும் நான்கு சந்திரன்கள் சனியைச் சுற்றி வருவதை எடுத்துக் காட்டினார்.  1652-1653 இல் காஸ்ஸினி முதன்முதல் ஒரு வால்மீனைக் கண்டு ஆராய்ந்தார். பூமியின் நிலவு பொழியும் வெளிச்சம், பரிதி மறைந்துள்ள சமயம் காலைக் கீழ்வானில், மாலை மேல் வானில் தெரியும் வெளிச்சம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அவற்றைப் பயன்படுத்தி வால்மீனின் [Comets] நகர்ச்சிக் கோட்பாடுகளை அறிவித்தார்!

    பொலோனா செயின்ட் பெட்ரோனியஸ் கோயிலில் [St. Petronius Church, Pologna] இஞ்னேஸியோ தாந்தே [Ignazio Dante] 1576 இல் பயன்படுத்திய ‘பரிதிக் கடிகாரத்தைச்’ [Gnomon or Sun Dial] 1653 இல் செப்பணிட்டுப் பெரிது படுத்தி, ஆண்டுக் காலண்டரைத் [Yearly Calendar] திருத்தம் செய்தார். பரிதியைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ச்சிகள் செய்து, சில அட்டவணைகளை 1662 இல் வெளியிட்டார். 1664 இல் வால்மீன் ஒன்றைக் கண்டு அதன் நகர்ச்சிப் பின்பற்றி, அது பரிதியைச் சுற்றி வட்ட வீதியில் வருகிறது என்று அறிவித்தார். அதே ஆண்டு மிக நுணுக்கமான சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம், வியாழன் தன்னச்சில் சுற்றும் நாட்களைக் கணித்தார். அத்துடன் வியாழன் துருவப் பகுதிகளில் தட்டையாக இருப்பதாகவும் கூறினார்.  பூதக்கோள் வியாழனுடைய பட்டைகளையும், புள்ளி களையும் கண்டறிந்து பதிவு செய்தார். செவ்வாய்க் கோளின் சுய சுற்றைக் கணக்கிட்டு மூன்று நிமிடத் துல்லிமையில் பதிந்தார். 1668 இல் வியாழக் கோளின் சந்திரன்களைக் கண்டு பல விபரங்களைப் பதிவு செய்தார்.

    ஒளியின் வேகத்தை அறிய விபரங்கள் சேகரித்தார். ஏழு ஆண்டுகள் கழித்து ரோமர் [Romer] அவரது தகவல்களைப் பயன்படுத்தி ஒளிவேகத்தைக் கணித்தார். சனியின் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்தபின், 1975 இல் வளையங்களை தொலை நோக்கியில் ஆராய்ந்தார். சனியின் வளையங்கள் தனித்தனியானவை என்றும், தொடர்ந்த வட்டமல்ல என்றும், இடைவெளி உள்ளவை என்றும், அவை கோடான கோடி சிறு, சிறு துணைக் கோள்கள் போல் சுற்றி வருகின்றன வென்றும் அறிவித்தார். 1679 இல் பூமியின் நிலவை நோக்கிப் பெரிய வரைப்படமாய் வரைந்து ‘விஞ்ஞானப் பேரவைக்குச் ‘ [Academy of Sciences] சமர்ப்பித்தார். காமிரா நிழற் படங்கள் [Photography] தோன்றிய காலம்வரை, காஸ்ஸினியின் படமே ஓர் உதவும் நிலவுப் படமாக இருந்து வந்தது. 1680 இல் பூமிக்கும், பரிதிக்கும் உள்ள ஒப்புமை நகர்ச்சி வேகங்களை ஆராய்ந்து, அண்டக் கோள்களின் சுற்றுவீதிகளைக் கணித்தார். அவை ‘காஸ்ஸினி யின் வளைகோடுகள்’ [Cassini Curves] என்று அழைக்கப் பட்டன. ஆனால் அக்கோடுகள் கெப்ளர் [Kepler] அனுமானித்த நீள்வட்ட வீதிகளை [Elliptical Orbits] ஒத்திருக்க வில்லை!

    வானியலில் தேர்ச்சி பெற்ற காஸ்ஸினி அத்துடன் ‘நோக்கியல் விஞ்ஞானம்’ [Optics], ‘திரவழுத்தவியல்’ [Hydraulics], ‘வரைப்படவியல்’ [Cartography], சிவில், ராணுவ எஞ்சினியரிங் [Civil Engineering & Military Engineering] ஆகிய துறைகளிலும் நுணுக்க அறிவு உள்ளவராய் இருந்தார். அவரது திரவழுத்தவியல், பொறியியல் [Hydraulics, Engineering] திறமையைப் பாராட்டிப், போப்பாண்டவர் 1665 இல் ரோமானியக் கோயில்களின் மாநில நீர்நிலை வாரியங்களின் மேற்பார்வை அதிபராக நியமித்தார்.  ரோமாபுரியில் இருந்த போது, காஸ்ஸினி டைபர் நதியின் பாலத்தை உறுதிப் படுத்தியதாகத் தெரிகிறது.

    கியோவன்னி காஸ்ஸினியின் வாழ்க்கை வரலாறு.

    1625 ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த ஜெனோவா [Genoa, Italy] என்னும் நகரில் ஜேகப் காஸ்ஸினி, ஜூலியா குரோவேஸி [Jacopo Cassini, Julia Crovesi] ஆகிய இருவருக்கும் பிறந்தார். பள்ளிப் படிப்பை அவர் வல்லெபோன் என்னும் ஊரில் முடித்த பின், கல்லூரிப் படிப்புக்கு ஜெனோவா நகருக்குச் சென்றார். கல்லூரியில் கவிதை, கணிதம், வானியல் துறைகளில் மிக்க ஆர்வம் காட்டித் தனது மேதமையை வெளிப்படுத்தினார், காஸ்ஸினி.


    முதலில் காஸ்ஸினி வானியலில் [Astronomy] மனது ஊன்றாமல் ஜோதிடத்தில் [Astrology] ஈடுபாடு மிகுந்து தேர்ச்சி பெற்றார்! ஆனால் ஜோதிட முன்னறிவிப்பில் [Predictions] அவருக்கு நம்பிக்கை யில்லை! அவரது ஜோதிட வல்லமையை மெச்சி, 1644 இல் பொலோனா நகரின் மேலவை உறுப்பாளி [Senator] மார்க்குவிஸ் மல்வாஸியா காஸ்ஸினியை அழைத்து, பொலோனாவில் கட்டப்படும் பன்ஸானோ வானோக்க கத்தில் [Panzano Observatory] பணி செய்யும்படி வேண்டினார். அப்போது காஸ்ஸினிக்கு வயது பத்தொன்பது! ஆனால் கல்லூரியில் அடுத்து நான்கு ஆண்டுகள் படித்து, ஒருவிதப் பட்டமும் பெறாமல் 1948 முதல் பன்ஸானோ நோக்ககத்தில் சேர்ந்து பணியாற்றினார்! காஸ்ஸினி நோக்ககத்திற்கு வேண்டிய ஆய்வுச் சாதனங்கள், கருவிகள் ஆகியவற்றை வாங்கி அதை இயக்கத் துவங்கினார். இரண்டாண்டில் நோக்ககத்தை விருத்தி செய்து, செனட்டரின் பெரும் பாராட்டையும் மதிப்பையும் பெற்றார்.

    அப்போது புகழ் பெற்ற விஞ்ஞானிகளான பட்டிஸ்டா ரிக்கியோலி [Battista Riccioli], பிரான்ஸெஸ்கோ கிரிமால்டி [Francesco Grimaldi] போன்றோரிடம் தனிப்பட்ட முறையில், காஸ்ஸினி நிறையக் கற்றுக் கொண்டார். அவர்கள் இருவரும்தான் பின்னால் ‘ஒளித்திரிபைக்’ [Diffraction] கண்டு பிடித்தார்கள். செனட்டர் மல்வாஸியாவின் ஆதரவில் 1650 இல் பொலோனா பல்கலைக் கழகத்தில் வானியல், கணிதத் துறைகளின் பேராசிரியராகப் பதவி பெற்று, காஸ்ஸினி ஆசிரியராகவும் பணி செய்தார்.

    பிரென்ச் நாட்டுக் குடிநபரான விஞ்ஞானி காஸ்ஸினி

    பொலோனா நோக்ககத்தில் காஸ்ஸினி 1652 ஆண்டில் ஒரு வால்மீனைக் கண்டு அதன் நகர்ச்சியை ஓராண்டு காலம் பதிவு செய்து வெளியிட்டார். அக்காலங்களில் அவர் டைகோ பிராஹோ [Tycho Brahe] 1659 இல் பிறப்பித்த புவி மைய ஏற்பாடை [Earth-centered System] நம்பினார்! அதாவது நிலாவும், பரிதியும் பூமியைச் சுற்றிவர, மற்ற கோள்கள் [செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி] சூரியனைச் சுற்றுவதாகக் கூறிய டைகோ பிராஹோவின் கருத்தை ஏற்றுக் கொண்டார்! பிறகு அக்கருத்து பிழையான தென்று உணர்ந்து, காஸ்ஸினி காபர்னிகஸ்ஸின் [Copernicus] பரிதி மையக் கோட்பாடை ஒப்புக் கொள்ளும்படி நேரிட்டது!

    காஸ்ஸினியின் அண்டக்கோள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் பாராட்டப் பட்டன. 1668 இல் பிரான்ஸின் அரசர் பதினான்காம் லூயி [Louis XIV] அவர்களிடமிருந்து அரண்மனை விருந்தில் கலந்து கொள்ள, காஸ்ஸினிக்கு அழைப்பிதழ் வந்தது. பாரிஸில் வானோக்ககம் ஒன்று கட்டப்பட்டு அதன் தலைமைப் பதவி பெரும் வருவாயுடன் அவருக்காகக் காத்திருந்தது! பதினான்காம் லூயி 1671 இல் அளித்த பாரிஸ் வானோக்ககத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டு, காஸ்ஸினி பிரென்ச் நாட்டின் குடிமகனாய் ஆனார். 1974 இல் ஜெனிவி டி லைஸ்டர் [Genevieve de Laistre] என்னும் ஓர் எழில்மாதை மணந்து பாரிஸில் நிரந்தரமாகக் குடியேறினார். 1677 இல் ஜேக்ஸ் காஸ்ஸினி [Jacques Cassini] என்னும் புதல்வன் அவருக்குப் பிறந்தான். தந்தையின் தடத்தில் நடந்து வானியல் விஞ்ஞானியாய்த் தேர்ச்சி பெற்றுத் தந்தை முதுமை அடைந்ததும், ஜேக்ஸ் காஸ்ஸினியே, பின்னால் பாரிஸ் வானோக்ககத்தின் தலைவர் பதவியைப் பெற்றார்!

    1789 இல் பிரென்ச் விஞ்ஞானி பியர் ஸைமன் லாப்பிளாஸ் [Pierre Simon Laplace (1749-1827)] சனிக்கோளின் வளையங்கள் மிகச் சிறிய துணுக்குகள் கொண்டவை என்றும், அவையே சூரிய ஒளியைப் பிரதிபலித்துச் சுடரொளி வீசுகின்றன என்று விளக்கினார்! பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் மாக்ஸ்வெல் [James Maxwell (1831-1879)] கோடான கோடித் துணுக்குகள் தூரத்துக்கு ஏற்ப வெவ்வேறு வேகங்களில் சுற்றிக் கொண்டிருப்பதால்தான் வளையங்கள் நீடித்துச் சனிக்கோளைச் சுற்றி நிலை பெற முடிகிறது என்று கணித மூலம் 1857 ஆம் ஆண்டில், நிரூபித்துக் காட்டினார்! சனியைச் சுற்றித் திடவ வடிவு வளையமோ [Solid Ring], திரவ வாயு வளையமோ [Fluid Ring] இருந்தால் அவை சனியின் கவர்ச்சி விசையால் இழுக்கப் பட்டுத் தளத்தில் மோதி நொறுங்கி விடலாம் என்றும் ஜேம்ஸ் மாக்ஸ்வெல் கூறினார்!


    காஸ்ஸினியின் இறுதிக்கால வாழ்க்கை

    1695 இல் பதினெட்டு வயது மகன் ஜேக்ஸ¤டன் காஸ்ஸினி இத்தாலிக்குச் சென்றார். அங்கே உள்ள பல புவித்தள ஆய்வு நோக்குகளை [Geodesic Observations] இருவரும் பார்வை யிட்டனர். பொலோனாவுக்குச் சென்று தான் முப்பது ஆண்டு களுக்கு முன்பு ஆக்கிய சூரியக் கடிகாரத்தைக் காஸ்ஸினி செப்பணிட்டார். 1709 இல் மகன் ஜேக்ஸ் காஸ்ஸினி பாரிஸ் நோக்ககத்தில் சிறுகச் சிறுகத் தந்தையின் பணிகளை மேற்கொண்டார். தந்தையின் உடல்நிலை குன்ற ஆரம்பித்தது. குறிப்பாக கியோவன்னி காஸ்ஸினியின் கண்ணொளி மங்கிப் போய்க் கொண்டிருந்தது! இல்லச் சிறையில் [House Arrest] தள்ளப்பட்ட முதிய காலிலியோ பல்லாண்டுகள் விண்வெளி அண்டங்களையே பார்த்துப் பார்த்து ஒளியிழந்தது போல், காஸ்ஸினியின் கண்களும் அண்டக் கோள்களைக் கூர்ந்து பார்த்து ஒளி மங்கி 1711 இல் குருடாகிப் போயின! 1712 ஆம் ஆண்டு பாரிஸில் கியோவன்னி காஸ்ஸினி தனது 87 ஆம் வயதில் காலமானார்.

    கியோவன்னி காஸ்ஸினி பல்கலைக் கழகத்தில் எந்தப் பட்டமும் பெறாத வானியல் விஞ்ஞானி! அவர் ஒரு நியதிவாதி [Theoretician] அல்லர்! மேதமை மிக்க கூரிய வானோக்காளர் [Gifted Astronomical Observer]! காஸ்ஸினி 1667 இல் பிரான்ஸின் விஞ்ஞானப் பேரவை உறுப்பினர் [Member, Academie Royale des Sciences] ஆனார். 1672 ஆம் ஆண்டு பிரிட்டன் கியோவன்னி காஸ்ஸினியின் கணித விஞ்ஞானச் சாதனைகளைப் பாராட்டி, அவரை ராஜீயக் குழுவின் மதிப்பாளியாகக் [Fellow of Royal Society] கெளரவித்தது. முரண்பாடில்லாத அவரது உறுதியான, மெய்யான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், நியூட்டனுக்கு முந்தி வாழ்ந்த வானியல் விஞ்ஞான மேதைகளுக்குள் உச்ச இடத்தை அவருக்கு நிச்சயம் அளிக்கின்றன!

    படங்கள் : நாசா

    தகவல்:

    1. Giovanni Domenico Cassini, Catholic Encyclopedia

    2. Giovanni Casinni, U.K. History of Mathematicians By: E.F. Robertson, J.J. O ‘Connor.

    3. Cassini, Giovanni Domenico, Astronomical Institutions

    4. Cassini I Gian Domenicao, Catalog of the Scientific Community

    5 Giovanni Cassini By : J. J. O’Connor & E. F. Robertson

    6. http://www-groups.dcs.st-and.ac.uk/~history/Biographies/Cassini.html (Cassini Biography

    7. http://en.wikipedia.org/wiki/Giovanni_Domenico_Cassini (Wikipedia On Cassini) (Nov 21, 2010)

    **************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) January 11, 2014

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • நான் கடவுளைக் கண்டேன்..

    கல்லும் கனியாகும் என்கிற திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலைக் கேட்டுப் பாருங்கள்! உணர்ச்சியில் உள்ளம் உணர்த்திடும் வார்த்தைகள் வரிகளாய் வந்துவிழ.. கவிஞர் வாலியின் எண்ணச் சிறகுகள் கதையின் களத்தில் விரிகின்றன. சொற்கள் கூட சுகம்தரும் என்னும் சூத்திரம் அறிந்தவர் கவிஞர் என்பதால் வேதனையைக்கூட தன் கற்பனையால் திறம்பட தருகின்ற அழகினைப் பாருங்கள்!

    உனக்கொரு தாய்போல்

    தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ

    எனக்கென உன்னைக் கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ?

    பொருத்தமான இசையால் இந்தப் பொன்னான வரிகளை நம் உள்ளத்தில் ஆழமாய் பதிக்கின்றார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்! பாசத்தில் விளையும் உறவுகள் தாய் தந்தை மகன்.. இவற்றுள் ஒன்றை இழந்து தவிக்கும் இன்னொரு உறவு.. என்பதன் கொடுமை .. இருக்கின்ற உறவை பாராட்டி..சீராட்டி.. தாலாட்டும் தந்தை.. தன் மகன் நாளை வளரும் நாளை நோக்கி காத்திருக்கும் காட்சி..

    தன் வெண்கலக்குரலால் ஜீவனைத்தருகின்ற டி.எம்.செளந்திரராஜன் இப்பாடலை பாடியிருக்கிறார் என்பது தகவல்! கூடுதல் தகவல் என்ன தெரியுமா.. இந்தப்படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதே! வித்தியாசமான தோற்றத்தோடு ஏழிசை வேந்தர் திரையில் தோன்றி பாடியிருக்கும் தாலாட்டுப் பாடல் இது எனலாமா? வரிகளில் எல்லாம் ஸ்வரங்களை நிரப்பி நம் உள்ளம் தொடும் பாடல் தந்த மெல்லிசை மன்னரைப் பாராட்டலாமா? இந்தக் கருத்தை எழுத்தில் கொடுக்க.. இதுதான் உகந்ததென்று சொற்களை எல்லாம் பூக்களாக்கித் தந்தவரைப் புகழலாமா?

    நல்லதோர் பாடல் இது என்பதில் இருவேறு கருத்தில்லை! நாளும் தனது குரலால் நம் வாழ்வில் இணைந்த டி.எம்.எஸ். திரையில் தோன்றிப் பாடிய பாடல் என்கிற பெருமையால் இந்தப் பாடலும் நினைவில் நிழலாடுகிறதே!!

    நான் கடவுளைக் கண்டேன் என்
    குழந்தை வடிவிலே..
    அவன் கருணையைக் கண்டேன்
    கொஞ்சும் மழலை மொழியிலே..
    பால்வடியும் உன் முகத்தில்
    ஆயிரம் கனவு கண்டேன்
    நாளைவரும் நல்ல வாழ்வு எனும்
    அந்த நினைவில் வாழ்கின்றேன்
    உனக்கொரு தாய்போல்
    தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ
    எனக்கென உன்னைக் கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ?
    ஆலமரம் என நீ வளரும் நாள்தான் வரவேண்டும்
    கலைமகள் அருளும் அலைமகள் பொருளும்
    நிறைந்தேபெறவேண்டும்.. அறிவுடன் திகழும் திருமகன் புகழும்
    கடல்போல் பெருகாதோ
    பார்த்ததும் கேட்டதும் ஈன்றவர் நெஞ்சம் பனிபோல் உருகாதோ..

    மற்றுமொரு தகவல் இத் திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுடன்
    ஏ எல். ராகவன் அவர்களும் நடித்திருப்பதோடு இருவரின் கூட்டுத் தயாரிப்பில் உருவான படம் என்பது நண்பர் ராகப்ரவாகம் சுந்தர் தரும் செய்தியாகும்.

    http://www.youtube.com/watch?v=pbqQHFzDUOE

    கவிஞர் வாலி……..!

    கவிஞர் வாலி அவர்கள் கிருஷ்ண விஜயம் எழுதத் தொடங்கியபோது -கவியரசு கண்ணதாசன் பற்றி நன்றியுடன் தனது முன்னுரையில் குறிப்பிட்ட வரிகள் கண்டு மெய்சிலிர்த்து – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சார்பில் வரைந்த நன்றிமடல்!

    பெறுகை
    காவியக் கவிஞர் வாலி
    சென்னை

    கட்டி வெல்லப் பாடல்களை மெட்டுக்குள் கட்டிவைக்கும்
    வித்தகம் தெரிந்த கவிஞர் வாலி – நீவிர்
    கண்ணதாசன் தமிழ் போல் வாழி!

    கவியரங்கமானாலும் கலையரங்கமானாலும்
    நின் தமிழ் நாட்டியத்தில் நித்தில சுகமுண்டு!
    தொட்டால் பூ மலரும் என்கிற பல்லவியின் சுகம்
    தொடாதார் யாரிங்கே? உணராதார் எவரிங்கே?

    காதலின் லயஸ்வரத்தில் நுனிவிரல் படுகின்றபோது
    முதன் முதலில் உடலுக்குள் பாய்கிறதே மின்சாரம்!
    காவியமாய் திரைப்பாடலைச் செதுக்கி வைத்தவனே..
    நெஞ்சில் ஓவியமாய் நின் கை வண்ணங்கள் ஆயிரமே!

    ஆன்மீக நெறியில் வந்த அத்தனைக் குணங்களையும்
    அடம் பிடிப்பதுபோல் நீ பிடித்த காரணத்தால்
    ஆசிர்வாதங்கள் அனுகூலங்கள் அத்தனையும்
    ஆண்டவன் சந்நிதானத்தில் உனக்கும் நித்தமும் படி..

    எனவேதான் .. அவதாரபுருஷன் முதல் பாண்டவர் பூமியென்றும்
    ராமானுஜர் காவியமும் .. உன் பேனா முனையில்
    பூக்களைப்போல் பாகல் விரித்து பவனி வந்தன!

    ஆனந்த ஸ்வரங்களென அவதரித்த கவிநடையில்
    ஆனந்த விகடன் வாரஇதழ் வாய் மலர்ந்தது!
    அடுத்து ஒரு அறிவிப்பு.. கிருஷ்ண விஜயம்
    அடடா .. முதல் இதழ் நுகர்ந்தோம்!

    தேனெனத் தித்திக்கும் செந்தமிழ் மா புலவா – நீ

    யாரெனக் கூறியிருக்கும் நற்றமிழ் மரபு கண்டோம் !

    கண்ணனின் அவதாரம் பற்றிய – நின்

    கருத்துக் குவிப்பில் மின்னிடும் புண்ணியன் தோற்றம் !

    எடுத்து கொடுப்பவன் அவன்! எழுத வைப்பவன் அவன்
    என்னுள் இருப்பவன் அவன் ! இயங்க வைப்பவன் அவன்!
    என்று கண்ணனைச் சரணடைந்தே – நற்
    காவியம் துவங்கியுள்ளாய்! நன்று! நன்று!!

    தன்னிலே கண்ணன் வைத்து தன்னையே தாசெனன்று – இம்
    மண்ணிலே வாழ்ந்து மறைந்த மானுடக் கவிஞர்தம்மை
    எண்ணியே வரிகள் பலவும் வரைந்திட்ட வாலியே!
    இன்னமும் இம்மண்ணிலே ஈரம் இருப்பதற்கு சாட்சியென்போம்!

    மாமுனியின் தோற்ற்றம் உன்னில் வந்தமைக்கு காரணங்கள்
    பாபுனையும் ஆற்றல் உன்னில் சரணடையும் ரகசியங்கள்..
    தேன்மதுரக் கவிநயங்கள் நின் தெள்ளுத் தமிழின் துள்ளல்கள்
    பருகி மகிழக் காத்திருக்கும் பலகோடி நெஞ்சங்களுள்..
    நேரிலே உம்மோடு உரையாடி உறவாடும்
    உரிமை பெற்ற உள்ளங்கள் ..
    யாரென இன்னுமா தெரியவில்லை?
    கண்ணதாசன் தமிழ்ச் சங்க நண்பர்கள் (பம்மல்) நின்
    கைவிரல்களில் கண்கள் பதித்து முத்தமிட்டு நன்றி பகர்கிறோம்!

    அன்புடன்..
    காவிரிமைந்தன்

    Share
  • சிதையா நெஞ்சு கொள்!

    பவள சங்கரி

    சென்ற புதன் கிழமை 08.01.2014 அன்று மாலை ஈரோடு சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28 ஆம் ஆண்டு விழாவும், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கென மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சித்தார்த்தா பள்ளி தன் 28 ஆண்டு கால கல்வி அனுபவத்தை இப்பள்ளியின் தாளாளர் திருமதி ஜெ.ஜெயபாரதி அவர்கள் மூலமாக மிக அழகாகத் தொகுத்து மூன்று நூல்களாக வழங்கியுள்ளது.

    bharathy 1

    பெற்றோர்களின் தூரக் கனவை நனவாக்க உதவும் நூல் – பாதை
    மாணாக்கர்களின் தடைகளைத் தாண்டி வர வழிகாட்டும் நூல் – பயணம்
    ஆசிரியர்கள் வெற்றியில் தேங்கிவிடாமல் செயலாற்ற ஊக்குவிக்கும் நூல் – சுவடு

    பள்ளியின் தாளாளர் திருமதி ஜெ. ஜெயபாரதி விழாவிற்கு தலைமையேற்க, பள்ளி முதல்வர் திருமதி ஞானம் ஆண்டறிக்கை சமர்பிக்க, துணை முதல்வர் கண்ணகி வரவேற்புரை ஆற்றினார்.

    bharathy3

    சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர், கவிஞர் அ. வெண்ணிலா அவர்களும், தனி மனித மேம்பாட்டு பயிற்சியாளர் திரு. கிருஷ்ண. வரதராஜன் அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நாட்டு நலப் பணித் திட்டங்களுக்குப் பெருமளவில் ஈடுபாடு காட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் இப்பள்ளியின் தனிப்பட்ட சிறப்பம்சமாக, சிறப்புக் குழந்தைகள் என்று சொல்லப்படும் மனவளர்ச்சிக் குறைபாடு, கற்றல் குறைபாடு, கவனம் சிதறல், நினைவாற்றல் குறைபாடு, ஹைபர் ஆக்டிவ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் சிலரை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பயிலும் வகையில், அவர்களுக்குத் தனிப்பட்ட கவனம் செலுத்துவதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக பயிற்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது. நல்ல நிலையில் இருக்கும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கும் இக்குழந்தைகளின் முன்னேற்றம் குறிப்பிடும்படி இருப்பது சிந்திக்க வைக்கக் கூடியதாக இருந்தது. மற்ற பள்ளிகளும் இது போன்ற பரிட்சார்த்த முறையை தொடர்வதால் கேள்விக்குறியாக இருக்கும் இப்படிப்பட்ட குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு ஏற்படுத்துவதாக அமையலாம்.

    bharathy4

    குழந்தைகள் தங்களுடைய அருமையான நிகழ்ச்சிகள் மூலம் அழகாக அலங்கரித்த மேடையில் தாம் அதிகம் பேசி அவர்களின் மகிழ்ச்சியான நேரத்தைக் களவாட விரும்பவில்லை என்று கவிஞர் வெண்ணிலா ஆரம்பித்தாலும், மிக எளிதாக குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரையும் தம் கட்டுக்குள் வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும்! தாம் குழந்தைகளின் நிகழ்ச்சிகளைக் கண்டு, குறிப்பாக சிறப்புக் குழந்தைகளின் நிகழ்ச்சி மூலம் உள்ளம் நெக்குருகி நிற்பதாக உணர்வு பொங்கக் கூறினார். அதற்காகப் பயிற்சியளித்த ஆசிரியை மற்றும் தாளாளர் ஜெயபாரதி அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். பாரம்பரியம் மாறா நடவடிக்கைகளை விடாமல் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தையும் சவாலாக ஏற்றுச் சாதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திச் சிறப்புரையாற்றினார்.

    ”பெற்றோர்களே உங்கள் கனவை குழந்தைகளின் மீது திணிக்காதீர்கள். அவன் டாகடர் ஆவதும், என்ஜீனீயர் ஆவதும் அவன் கைகளில் விட்டுவிடுங்கள். குழந்தைகளை நம் எதிர்பார்ப்புகள் அனைத்திற்கும் கட்டுப்பட்டவர்கள் என்று எண்ணும் வழக்கத்தை மாற்றுங்கள். அவர்கள் விருப்பத்தை அறிந்து அதற்கேற்றார் போல அவர்கள் வாழ வழிகாட்டுங்கள்” என்று பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    பெண் குழந்தைகளை தவறான எண்ணத்தில் தொடும் ஆசிரியர்கள் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் அது குறித்த பாடங்களை சேர்க்க வேண்டியதன் அவசியம் பற்றிய ஆக்கப்பூர்வமான தன்னுடைய எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    ”குழந்தைகளே ஆம், இல்லை, வேண்டும், வேண்டாம் என்பதை தெளிவாகச் சொல்லிப் பழகுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கையின் வெற்றி. யாருக்காகவும் உங்களுடைய இலக்கில் சமரசம் செய்துகொள்ள வேண்டியதில்லை. பாதையில் தெளிவு இருந்தால் பயணத்தில் குழப்பம் இல்லாமல் முன்னேறலாம்” என்ற பொருள்படும்படியாக மிக உற்சாகமாக உரையாடினார்.

    bharathy 2

    “ஒரு மணி நேரத்தில் உங்கள் வாழ்வில் நிகழப்போகிறது மேஜிக்” என்று ‘மாயப் புத்தகம்’
    ஒன்றை அனு ராஜன் என்பவருடன் இணைந்து எழுதி சிறுவர் உலகை உற்சாகமூட்டிக் கொண்டிருக்கும் , தனி மனித மேம்பாட்டு பயிற்சியாளருமான திரு. கிருஷ்ண வரதராஜன் அவர்கள் மிகச் சுவையாக, குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையும், கல்வியில் ஆர்வமும் ஏற்படும் வகையில் மிகச் சிறப்பாகவும் சொற்பொழிவாற்றினார்.

    ’மாயப் புத்தகத்தில்’ , ’இரண்டு ஓநாய்கள்’ என்ற குட்டிக் கதை.

    ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்

    “ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு ஓநாய்கள் இருக்கின்றன. ஒரு ஓநாய், அன்பு, நம்பிக்கை, உற்சாகம் போன்ற நல்ல குணங்களை கொண்டிருக்கிறது. மற்றொன்று கோபம், அவநம்பிக்கை, வெறுப்பு போன்ற தீய குணங்களைக் கொண்டிருக்கிறது.

    மனிதனுக்குள் உள்ள இந்த இரண்டு ஓநாய்களும் எப்பொழுதும் சண்டையிட்டபடியே இருக்கின்றன” என்றவர் மாணவர்கள் ஆர்வமாகக் கவனிப்பதைப் பார்த்துவிட்டு, “உங்களுக்குள்ளும் இந்த இரண்டு ஓநாய்களும் இருக்கின்றன?” என்றார்.

    சட்டென்று ஒரு மாணவன் கேட்டான், “சார் இரண்டில் எந்த ஓநாய் ஜெயிக்கும்?”

    ஆசிரியர் புன்னகையுடன் சொன்னார், “எந்த ஓநாய்க்கு அதிகம் உணவு கொடுக்கிறாயோ அந்த ஓநாய்தான் ஜெயிக்கும்”

    pavala 2

    இராமருக்கு பாலம் கட்ட உதவிய சிறு அணில் போன்று, நூல்களின் உருவாக்கத்தின் என்னுடைய  உதவிக்காக எனக்கும் பரிசு கொடுத்து கௌரவித்த சித்தார்த்தா பள்ளி தாளாளர் ஜெ.ஜெயபாரதி அவர்களுக்கு நன்றி. இந்த மூன்று நூல்களும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறந்த முறையில் பலனளிக்க வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    bharat

    bharath 12

    Share
  • மார்கழிப் பூவும் வைகுந்த வாசற்படியும்

    தமிழ்த்தேனீ

    மாதங்களில்  சிறந்தது  மார்கழி படிகளில் சிறந்தது  வைகுண்ட வாசற்படி

    “படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனோ”  என்று பாடிய

    குலசேகர ஆழ்வார்  இவரது பெருமை பேசும்போதெல்லாம்

    ‘குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே, நமஹம் சிரஸா நமாமி ராஜானம் குலசேகரம்’’ என்ற வடமொழி ஸ்லோகம் வர்ணிக்கிறது.

    ஆண்டாளை அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்த பெரியாழ்வாரைப் போல, குலசேகராழ்வாரும் தன் பெண்ணை கொடுத்து, அரங்கனுக்கே மாமனார் ஆனார்! ‘‘ஸ்வசுரம் அமரவர்த்யம் ரங்கராதஸ்ய ஸாட்சார்’’ என்று பெரியாழ்வாரை சொல்வார்கள். அதாவது, ‘‘தேவர்களால் வணங்கப் பெற்ற, சாட்சாத் அரங்கனுடைய மாமனாரான பெரியாழ்வாரை வணங்குகிறேன்’’

    அரங்கனையே நாடவேண்டும் என்று கூறும்படியாக ‘இருளிரிய’ என்கிற 10 பாட்டுக்களால் வழங்கினார். எம்பெருமானை கண்ணனாக அனுபவித்து ‘படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே’ என்று அருளிச் செய்ததன் மூலம் 5 ம் லட்சணத்தை வெளியிட்டார்.

     மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் கண்ணன் அருளியிருக்கிறார். மார்கழி மாதம் சனிக்கிழமை பிறக்கிறது.  தட்சிணாயனத்தின் கடைசி மாதமாக விளங்கும் மார்கழி மாதத்தின் பெருமைகளையும் வைகுண்ட ஏகாதசியின் பெருமைகளையும் தெரிந்து கொள்வோம்.

    சூரியனுடைய சுற்று வட்டப் பாதையை  இரண்டு விதமாக பிரித்திருக்கிறார்கள்,  ஒன்று ஆடி மாதம் முதற்கொண்டு    ஆவணி ,புரட்டாசி  ,ஐப்பசி, கார்த்திகை  மார்கழி  மாதங்கள் சூரியனுடைய  சுற்று  தெற்கு  திசையாக  கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி  சஞ்சரிக்கும் காலம்  ,இதை தக்ஷிணாயணம்  என்று கூறுவர்.

    அதேபோல் தைமாதம் முதல் ,  மாசி, பங்குனி,சித்திரை, வைகாசி, ஆனிவரை  சூரியனின் சுற்று  வடக்கு திசையாக  கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சஞ்ஜரிக்கும்  காலம்

    ைபமுற்ற் ,உத்திராயணம் என்று சொல்வர்.   இப்படிப் பார்க்கும் போது ஆடி , புரட்டாசி ஆவணி ,  ஐப்பசியின் ,கார்த்திகை,  மார்கழி

     மார்கழி மாதம் 1ம் தேதி முதல்  10ம் தேதி வரை  பகல் பத்து , 11ம் தேதி முதல் 20 ம் தேதி வரை ராப்பத்து சுக்லபக்‌ஷ ஏகாதசியான 11ம் தேதி மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று போற்றுவர். இந்நாளில் வைணவத் திருத்தலங்களில் பரமபதவாசல்  (சொர்க்க வாசல்) திறப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். பெருமாள், பரமபத வாசல் சந்நதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார். பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராபத்து உற்சவமாக வெகு சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நதி திறப்பு விழா நடைபெறும்.

    இந்த வைகுண்ட வாசல்  வழியாக பரமபத பெருமான் காட்சி கொடுப்பதும்  அப்போது  அவனை சேவித்து அந்த வைகுண்ட வாசற்படி வழியாக நாமும் வந்தால் பரம்பதமான ,வைகுண்டத்தை சொர்கத்தை நாமும் அடைவோம்.

     வைகுண்டத்தின் துவாரபாலகர்களாகிய  ஜெய விஜய  என்னும் இருவரும் வைகுந்த வாசலை  மூடினர். இதனைக் கண்ட பெருமாள் காவலர்களிடம் ‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு கலியுகத்தில் கலையுகத்திலே பாவங்கள் பெருகும் யாருமே வைகுந்த வாசலை அடையப் போவதில்லை ஆகவே மூடினோம் என்று பதிலுரைத்தார்கள்.

    ஶ்ரீமன் நாராயணன்  அப்படி இல்லை கலியுகத்திலே பாவங்கள் பெருகினாலும்  பக்தியும் ஆத்திகமும் புண்ணியங்களும்  பெருகும் அதனால் திறந்து வையுங்கள் வைகுண்ட வாயிலை என்று .இப்படி ஶ்ரீமன் நாராயணன்  அருளிய தினம் , மார்கழி மாத  சுக்லபட்ச ஏகாதசி  என்பது புராண வரலாறு ,ஆகவே  வைணவ ஏகாதசி அன்று சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைப்பிடித்து பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இடம் உண்டு .

     அப்படி இருந்த நிலையில் கலியுகத்திலே முதன் முதலாக வைகுந்தம் ஏகியவர் நம்மாழ்வார்.   நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது. இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது.  என்னைத் தொடர்ந்து  தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைத்து பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்’ என்று வேண்டவே, பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில்  சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.

    திருமங்கை ஆழ்வாரின் திருப்பணியிலே மனம் மகிழ்ந்த அரங்கன்  அவர்முன்  தோன்றி  என்ன வரம் வேண்டும் என்று கேட்கவே  திருமங்கை ஆழ்வார்  நம்மாழ்வார் பரமபதம் அடைந்த  நாளான  மார்கழி வளர்பிறை ஏகாதசியை பெருநாளாகக் கொண்டாடவேண்டும் என்று வேண்டிக் கொண்டாராம் .நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்காக திருவிழா  நடைபெற  அருள வேண்டும்  என்று வேண்டிக் கொண்டாராம்  அதை ரங்கநாதர் அருளினார். அதன்படித்தான்  ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.

    பூலோக வைகுந்தம் என்னும் பேறு பெற்ற ஶ்ரீரங்கத்தில் இந்த வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக நடைபெறும்,அது போல திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமானின் கோயிலிலும் இன்னும் பல வைணவத் திவ்ய தேசங்களிலும் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக்க் கொண்டாடப் படுகிறது

    வைணவக் கோயில்களில் பரமபதவாசல் என்று ஒரு சந்நதி இருக்கும். இந்த வாசல், வடக்கு நோக்கி இருப்பதைக் காணலாம்.  இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி  அன்று மட்டும் இந்தக் கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஸ்ரீரங்கத்துக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

    புதுக்கோட்டையிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் இருக்கும் திருமயம் திருத்தலத்தில் ஏகாதசி திதியையொட்டி வரும் பரணி நட்சத்திரத்தன்றுதான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. புகழ் பெற்ற திருமலை திருப்பதியில் சொர்க்க வாசல் சந்நதி என்று தனியே கிடையாது. அதற்கு பதில் வைகுண்ட ஏகாதசி திதியை முன்னிட்டு ‘முக்கோடி பிரதட்சண வாசல்’ திறப்பு விழா நடைபெறும். திருமலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கடவனைத்  தரிசித்த பின்னர் வெளியில் வந்தால் காணப்படும் பிராகாரத்தை விமான பிரதட்சண பிராகாரம்’ என்பார்கள்.

    இந்த பிராகாரத்துக்கும் வேங்கடவன் அருள்புரியும் மூலஸ்தானத்துக்கும் நடுவில் ஒரு பிராகாரம் உள்ளது. இது திருமலையில் மட்டுமே உள்ள அபூர்வமான பிராகாரம். இப்பிராகாரத்தை  வலம் வந்தால் மகா புண்ணியம் கிட்டும். வேங்கடவனைத் தரிசித்து, வாயிலைக் கடந்ததும் இருப்பது ஸ்நபன மண்டபம். இதையடுத்து ராமர் மேடை உள்ளது. இதற்கு இடப்பக்கம்  ஆரம்பித்து, மூலவரான வேங்கடாசலபதியை வலம் வந்து உண்டியல் இருக்கும் இடத்தை அடைகிறோம். இப்பகுதி, ‘முக்கோடி பிரதட்சண  பிராகாரம்’ ஆகும்.

    இந்தப் பிராகாரம் வருடத்தில் மூன்று நாட்கள் அதாவது, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளான தசமித் திருநாள் முதல் துவாதசித் திருநாள்வரை திறந்திருக்கும். திருமலையில் முக்கோடி பிரதட்சணம், சொர்க்க வாசலுக்குச் சமமாகக் கருதப்படுகிறது. கேரளாவில் வைகுண்ட ஏகாதசியை ‘விருச்சிக ஏகாதசி’ என்று போற்றுவர். குருவாயூர் கோயிலில் இந்த விழாவை பதினெட்டு நாட்கள்  கொண்டாடுவர். இதையொட்டி தீபஸ்தம்பங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டு, சொர்க்க லோகம்போல் கோயில் காட்சி தரும். மேலும் ஏகாதசியன்று அதிகாலை 3-30 மணி முதல் மறுநாள் துவாதசி வரை கோயில் திறந்தே இருக்கும்.

    விருச்சிக ஏகாதசியையொட்டி,  அதிகாலையில் குருவாயூரப்பனை தரிசிப்பது சொர்க்கவாசல் வைபவத்துக்குச் சமமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி அன்று விடியற்காலையில் 4-15 மணிக்கு சொர்க்க வாசல் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், சில கோயில்களில் சொர்க்க வாசல் கிடையாது; ஆனால், வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறும். கும்பகோணம் சார்ங்கபாணி திருக்கோயில், திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீ காட்ச பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கிடையாது. அங்கு தட்சிணாயனம், உத்தராயணம் என்று இரண்டு வாசல்கள் உள்ளன.

    ஒன்று ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும்; மற்றொன்று தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். எனவே, இங்கு சொர்க்க வாசல் நிகழ்ச்சி கிடையாது. ஆதிசேஷன் அவதாரமாகக் கருதப்படும் ராமானுஜர் அவதரித்ததால், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில், நித்ய சொர்க்க வாசல் திருத்தலமாகக் கருதப்படுகிறது. அதனால் இங்கும் சொர்க்கவாசல் நிகழ்ச்சி இல்லை. இங்கு வைகுண்ட ஏகாதசி அன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருள் வார்கள்.

    அவ்வேளையில் சொர்க்க வாசல் திறப்பதுபோல் இங்குள்ள மணிக்கதவை (சந்நதிக் கதவை) திறப்பர். கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப் பட்டணம் ரங்கநாதர் கோயிலில் தைப் பொங்கல் அன்று தான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. சாஸ்திர சம்பிரதாயப்படி வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் கடைப்பிடித்து பெருமாளைத் தரிசித்தால் வைகுண்டத்தில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப் பொருத்தமான மாதம் என்பது இந்த மாதத்தின் சிறப்பாகும். மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக மார்கழி அமைகிறது. உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது.

    பிரம்ம முகூர்த்தம்  அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்ற காலமும் இதுவே. இந்த நேரத்தில் ஓசோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும்; புத்துணர்ச்சி தரும். உள்ளத்துக்கு இதம் தரும்; புதுக் கிளர்ச்சி தரும். மார்கழி விடியற்காலையில், ஓசோன் வாயு நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது. இதன் காரணமாகவே பண்டைய தமிழர்கள் மார்கழி விடியற் காலையில் நோன்பிருந்து இறைவனை வணங்கினர்.

    சரணாகதி தத்துவம் :-

    மார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.

    மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி – “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது இதன் பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள்.

    மருத்துவ நூல்களில் மார்கழியைப் பீடை மாதம் என்று குறிப்பிடுகின்றன.மார்கழியின் பனிக்குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே, இது பீடை மாதமாகலாம். பீடு-பெருமை. பன்னிரு மாதங்களில் மிக்க பெருமையை உடையது பீடை மாதம் என்று மற்றொரு பொருளும் கூறலாம். பல காரணங்களால் மார்கழி பெருமையுடைய மாதம்.

    மார்கழிப் பாடல்கள் :-

    திருப்பாவை ஆண்டாள் இயற்றியது வைணவத் தொடர்புடையது. திருவெம்பாவை மாணிக்கவாசகர் இயற்றியது; சைவத் தொடர்புடையது. இந்த  இரண்டும் பாவை நோன்பு அல்லது மார்கழி நோன்பினைப் பாடுகின்றன.

    மார்கழியில், திருப்பாவை, திருவெம்பாவை, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளி எழுச்சி, மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சி ஆகிய நான்கு நூற்பாடல்களை வீடுகளிலும், கோயில்களிலும் பாராயணம் செய்கின்றனர். மார்கழியில், சிறப்பாக பாராயணம் செய்ய வேண்டும் என்ற பெருமை இந்த நான்கு நூல்களுக்கே உண்டு.இவை தவிர வைணவக் கோயில்கள் சிலவற்றில் மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர்.

    நல்ல வாழ்க்கைத்துணை :-

    மார்கழி நோன்பு முழுக்க முழுக்க கன்னிப்பெண்களுக்கே உரியது. விடியலுக்கு முன் எழுந்து ஆற்றில் நீராடி நல்ல கணவன் கிடைக்க பாவை நோன்பு நோற்கின்றனர். பாவையை, வைணவக் கன்னியர்கள் கவுரி தேவியாகவும், சைவக் கன்னியர்கள் பார்வதி தேவியாகவும் போற்றி வழிபடுகின்றனர். பாவைப் பாடல்களைப் பாடி வணங்குகின்றனர்.

    வாசல் நிறையும் கோலங்கள்.  மார்கழி மாதம் வந்து விட்டாலே இளம் பெண்கள் வாசலை அடைத்து தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரித்து கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர். விளக்கேற்றுகின்றனர்.

    பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன. மார்கழி மாதத்தில் எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம் இவை அனைத்தும் இந்த மாதத்தின் சிறப்புகளாகும்.

    திருவாடிப் பூரத்தில் உதித்து மார்கழியில்  திருப்பாவை பாடிய எங்கள் ஆழ்வார் ஆண்டாளைப்பற்றி நினைக்காமல் இருக்க முடியுமா இந்த  மார்கழி மாதத்தில் . அதுவும் வைகுந்த ஏகாதசித் திருநாளில் .

    நல்ல வாக்கைத் துணை அரங்கனே என்றுணர்ந்து   அரங்க தோளில் சார்த்தும்போது அரங்கனுக்கு  எந்த உறுத்தலும் இருக்கக் கூடாதே என்று கவலைப்பட்டு ஒரு முறை தான் அந்த மாலையை அணிந்து தோஷமில்லாமல் இருக்கிறது என்று உணர்ந்து  அதன் பின்னே  அரங்கனுக்கு  மாலை சாற்றிய ஆண்டாள் போற்றிய மாதமல்லாவா மார்கழி மாதம்.

    ஆகவே இந்த மார்கழி மாதம் வைகுந்த ஏகாதசித் திருநாளில் விடியற்காலையில் எழுந்து குளித்து  திருக்கோயிலை  அடைந்து பரமபத வாசல் வழியே  நமக்கு அருளும் அவனைச் சேவித்து  பரமன் துதி பாடி  நாமும் அந்த வைகுந்தம் அடையும் நற்பேற்றைப் பெறலாமே.

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..கவிஞர் மருதகாசி

    கவிஞர் மருதகாசி

     

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..

    நினைத்ததை முடிப்பவன் என்கிற திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து சேர்ந்த நாயகனாய் ஒரு தோற்றம்! கொள்ளையடிப்பதில் தேர்ந்தவனாய் மறு தோற்றம்! காட்சியமைப்பில் இரு கதா பாத்திரங்களும் நம் கண் முன்னே தோன்ற – மாறுவேடங்களில் காவலர்கள் கூடுகின்ற சபையில்.. கதையின் நாயகன் தான் பாடும் பாடலாக இடம் பெறும் பாடல்!

    கவிஞர் மருதகாசியின் கைவண்ணத்தில் – உதித்த எண்ணங்களிவை! சொல்ல வேண்டிய கருத்தை நச்சென்று பல்லவியிலே சொல்வதென்பது அத்தனை எளிதன்று! தொட்டுக்காட்ட வேண்டிய பாத்திரப் படைப்புகளையும் பாடலில் பளிச்சென்று இடம்பெறச் செய்வது மக்கள் திலகத்திற்காகவே வரையப்பட்ட திரைப்பாடலிது!
    சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தோலுரித்து – வேடதாரிகளை இனம்கண்டு சரியான சாட்டையடி கொடுக்கும் சத்திய வரிகள்!

    எத்தனைக் காலமானாலும் இவ்வுலகில் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருப்பர் என்பது உண்மையென்றால் – காலங்களைக் கடந்து அவர்களின் நிறம் காட்டும் இப்பாடலும் சென்றே தீரும் என்பதும் உண்மை!

    ஒவ்வொரு திரைப்பாடல் வரியிலும்கூட புரட்சித்தலைவர் கவனம் செலுத்திடுவார் என்பதற்கு இந்தப்பாடல் இன்னொரு சாட்சியாகும்!

    பாடல் ஒலிப்பதிவு முடிந்தபின்பு தனது இராமாபுரம் தோட்டத்திற்கு அனுப்பப்படுவதும் அன்றிரவே தனிமையில் கேட்பதும் எம்.ஜி.ஆரின் வாடிக்கை! அப்படி இப்பாடல் எம்.ஜி.ஆரிடம் அனுப்பப்படுகிறது!

    பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு
    கண்மூடிப் போகிறவர் போகட்டுமே!

    என்கிற வரியில் உள்ள கண்மூடிப் போகிறவர் என்னும் வார்த்தைகளை நீக்கிவிட்டு தன்வழியே போகிறவர் போகட்டுமே என்று மாற்றச் சொன்னார் என்றால் கவிஞர்தம் சொற்களில் அறச்சொற்கள் வந்துவிடக்கூடாது என்பதில்கூட எம்.ஜி.ஆர் எத்தனை கவனம் கொண்டிருந்தார் என்பது புலனாகிறது!

    திரைப்படம் – நினைத்ததை முடிப்பவன்
    பாடியவர் – டி.எம்.செளந்திரராஜன்
    இசையமைப்பு – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடலாசிரியர் – மருதகாசி

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
    உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
    உண்மையில்லாதது.. உண்மையில்லாதது
    அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது..
    காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்
    கண்முன்னே தோன்றுவது சாத்தியமே
    காத்திருந்து கள்வருக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
    கண்ணுக்கு தோணாத சத்தியமே (…)
    போடும் பொய்த்திரையைக் கிழித்துவிடும் காலம்
    புரியும் அப்போது மெய்யான கோலம்..

    ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
    உருத்திராட்சப் பூனைகளாய் வாழுறீங்க
    சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
    ஏமாற்றிக் கொண்டாட்டம் போடுறீங்க..
    பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை
    உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை..
    பொன் பொருளைக் கண்டவுடன் வந்தவழி
    மறந்துவிட்டு கண்மூடிப் போகிறவர் போகட்டுமே..
    என்மனதை நான் அறிவேன்..என் உறவை நான் மறவேன்
    எதுவானபோதிலும் ஆகட்டுமே.. நன்றி மறவாத நல்ல மனம் போதும்.. என்றம் அதுவே என் மூலதனமாகும்

    http://www.youtube.com/watch?v=Y4uvAc9QKnE

     

    NEENAITHATHAI MUDIPAVAN****KANNAI NAMBATHE UNNAI**** M.G.R. & MANJULA

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (6)

    ராமஸ்வாமி ஸம்பத்

    சபரி கூறியதுபோல் ரிச்யமுகத்தில் நல்மனம் படைத்த வானர வீரன் அனுமன் ராமன் வருகைக்காகக் காத்திருந்தான். அனுமன் வாயு புத்திரன். பதினொரு ருத்திரர்களில் ஒருவன். ராமாவதாரம் எடுக்கும் முன் திருமால் எல்லா தேவர்களையும் தன் காரியத்திற்கு உதவும் பொருட்டு பூமியில் பிறக்குமாறு பணித்தார். இதைக்கேட்ட பரமேஸ்வரன் வைகுண்டத்திற்கு ஏகி நாரணனிடம் “நானும் உங்களுக்கு உதவ விரும்புகிறேன் பரமாத்மா” என்றார். பரமபதநாதன் மலர்ந்த முகத்தோடு, “பரம்பொருளே! உங்கள் ஆசி ஒன்றே போதும்” என்றார்.

    “இல்லை இல்லை. நான் கட்டாயம் உங்களுக்கு உதவுவதற்கு பதினோராவது ருத்திரனாக அவதரிக்கப் போகிறேன்” என்று கூறி விடை பெற்றுக்கொண்டார். அப்பரமனே அனுமனாக. வானர குலத்தைச் சேர்ந்த அஞ்சனாதேவிக்கு வாயு புத்திரனாக உதித்தார். பிறந்தவுடனே சூரியனை ஒரு பழமாகக் கருதி அதனை விழுங்கும் பொருட்டு அனுமன் வான்நோக்கித் தாவினான். சூரியனுக்கு ஆபத்தென இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அனுமனைத் தாக்கினான். நிலைகுலைந்து கீழே வீழ்ந்த அனுமனைக்கண்டு வாயு சினம் மேலோங்க மூவுலகிலும் காற்று இல்லாமல் செய்தான். இதனால் ஏற்பட்ட சீரழிவை நீக்க, பிரமன் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் வாயுவை நாடினர். “என் மகனுக்கு உங்கள் சக்தியை அளித்தால்தான் என் கோபம் தணியும்” என்று வாயுதேவன் கூற அனைவரும் அவ்வாறே செய்ய அனுமன் மிக்க பலசாலியும் அறிவாளியுமானான். அவனுக்கு சூரியன்  ஆசானாகி வேதநெறிகளையும், ஏனைய சாஸ்திரங்களையும், நவவியாகரணங்களையும் கற்பித்தான். குருதக்ஷிணை அளிக்க முற்பட்ட அனுமனை நோக்கி, “நீ என் மகன் கிஷ்கிந்தை இளவரசன் சுக்ரீவனுக்கு அமைச்சனாகி சேவை புரி.  பின்னர் ஸ்ரீமந்நாராயணனின் அவதாரமான ராமன் வரும் வரை காத்திருந்து அவருக்கு துணையாகப் பணியாற்று” என்று ஆதவன் ஆணையிட்டான். அப்போதிலிருந்து ராமன் வருகையை எதிர்நோக்கியவாறே சுக்ரீவனின் அந்தரங்க அமைச்சனாகக் திகழ்ந்தான் அனுமன்.

    ரிச்யமுகத்தின் எல்லையை நெருங்கிய ராம லக்ஷ்மணர்களை  வானர இளவரசன் சுக்ரீவன் சாரணர்கள் மூலம் அறிந்து, ‘அவர்கள் வாலியின் கையாட்களாக இருப்பார்களோ’ என பயந்து அனுமனை அழைத்து, ”யாரோ வில்லேந்திய இருவர் நமது மலை நோக்கி வருகிறார்களாம். அவர்களைப் பற்றிய தகவல் எனக்கு வேண்டும். ஒருவேளை அவர்கள் வாலியின் ஆட்களாக இருந்தால் அவர்களை இங்கு வராமல் தடுக்க வேண்டும்” என்று ஆணையிட்டான்.

    சுக்ரீவனை வணங்கி அனுமன் ஒரு அந்தணவேடம் பூண்டு ராம லக்ஷ்மணர் அருகே சென்றான். அவர்களது ஆக்ருதி அவனை வெகுவாகக் கவர்ந்தது. ‘இவர்களைப் பார்த்தால் வாலியின் ஆட்களாகத் தென்படவில்லை. இவர்கள் யாராக இருக்கும்?’ என சிந்தித்தவாறு,  அவர்களை நோக்கித் தன் இனிய குரலில் “கவ்வை இன்றாக நுங்கள் வரவு!” என்று முகமன் கூறி, மேலும் பேசலுற்றான்: ”வில்லேந்திய நீங்கள் ஒரு அரசகுலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அதே சமயத்தில் உங்கள் சடைமுடிகளைப் பார்த்தால் துறவிகளோ என்றும் தோன்றுகிறது. ஒருவேளை நீங்கள் ராஜரிஷிகளா … இல்லை தேவரிஷிகளா…? உங்கள் கனிவான பார்வையும் பொலிவு பொங்கும் முகங்களும் என்னைக் கிறங்க வைக்கின்றன. என்னைப் போலவே இந்த மலையில் உலாவும் விலங்குகளும் பறவைகளும் உங்களை வரவேற்பது போல ஆர்ப்பரிக்கின்றன. இப்பர்வதப் பொழில்களும் திடீரெனப் பூத்துக் குலுங்குகின்றன. அதே நேரத்தில், அவ்வப்போது துயர் இழையோடும் உங்கள் வதனங்கள் என் மனத்தைக் கலக்குகின்றன. நீங்கள் யார்? இக்குறிஞ்சிப் பகுதியில் எதற்காக அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள்?

    “மகாபலம் பொருந்திய கிஷ்கிந்தை வானர அரசன் வாலி தன் இளவலான சுக்ரிவனைத் தவறாகப் புரிந்துகொண்டு நாடு கடத்தியதோடல்லாமல் அவன் மனைவி ருமையையும் தன்வயமாக்கிக் கொண்டுவிட்டான். அச்சம் கொண்டு சுக்ரீவன் இங்கு தஞ்சம் புகுந்துள்ளான். ஏனெனில் மதங்க முனிவரின் சாபத்தால் வாலி இப்பகுதிக்கு வரமுடியாது; வந்தால் உயிர் இழப்பான். நான் வாயு பகவானின் புத்திரன். என் பெயர் அனுமன். சுக்ரீவனின் அமைச்சன். நீங்கள் யாரென்று இப்போது தெரிந்துகொள்ளலாமா?.”

    இவ்வாறு தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு அனுமன் தன் உரையை முடித்தான்.

    உள்ளத்தை அள்ளும் இவ்வினிய சொற்களைக் கேட்ட ராமன் தன் இளவலிடம் “தம்பி, நாம் யார் உதவியைக் கேட்க விழைகிறோமோ, இறை அருளால் அவன் அமைச்சனே நம் முன் வந்திருக்கிறான். இப்படிப்பட்ட அமைச்சனைப் பெறுவதற்கு சுக்ரீவன் பெருந்தவம் செய்திருக்க வேண்டும். இவன் சாதாரணமானவன் அல்லன். ரிக், யஜுர், ஸாம வேதங்களையும் மற்றும் பிற சாஸ்திரங்களையும் கசடறக் கற்றவனாகத் திகழும் இந்த சொல்லின் செல்வன் ஒரு நவவியாகரண பண்டிதனாகவும் இருக்கவேண்டும். ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக வார்த்தைகளை அளந்து நம் நிலையை இவனுக்கு உணர்த்தி நாம் சுக்ரீவனின் நட்பை நாடி வந்திருக்கிறோம் என்று சொல்” என்றான்.

    லக்ஷ்மணனும் தாங்கள் அயோத்தியை விட்டு நீங்கியது, நீண்ட வனவாசத்தில் ஸீதையைப் பறிகொடுத்தது, கபந்தன் மற்றும் சபரியின் அறிவுரைப்படி சுக்ரீவன் நட்பைக்கோரி வந்திருப்பது பற்றி விவரித்து, “இதோ இவர் தான் ராஜ்ய பட்டத்தைத் துறந்த ராமன். நான் அவர் தம்பி லக்ஷ்மணன்” என்று கூறினான்.

    ’ராமன்’ என்ற சொல்லை கேட்ட அனுமன் புளகாங்கிதம் அடைந்து, ‘தான் யாருக்காகக் இத்தனைக் காலம் காத்திருந்தோமோ அந்த தெய்வம் எதிர்பட்டுவிட்டது’ என மகிழ்ந்து, தன் அந்தண உருவை நீத்து சுயரூபத்தை அடைந்தான்.

    பின்னர் ராமன் அடிபணிந்து, “ஐயன்மீர், இம்முட்புதர் அடர்ந்த மலையில் தாங்கள் பயணிப்பது கடினம். ஆகவே, நீவிர் என் புஜங்களில் அமருங்கள். நான் உங்களை எம்மன்னன் சுக்ரீவனிடம் அழைத்து செல்கிறேன்” என்றான் அனுமன்.

    (​தொடரும்)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…91

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்

    அடுத்தொரு வாரம், அடுத்தொரு மடல். ஒரு புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாக புரட்டுவதை விட விரைவாக வாரங்கள் புரட்டப் படுகின்றனவோ எனும் வகையில் காலதேவன் தனது சக்கரங்களை விரைவாக உருட்டிக் கொண்டிருக்கிறான்.

    எந்த ஒரு வீடோ? அன்றி எந்த ஒரு நாடோ? என்றுமே பொருளார ரீதியாகவோ அன்றி வசதிகளின் தரத்திலே உயர்ந்து கொண்டே செல்வது என்பது நடைமுறையில் நடக்காத ஒன்று.

    அப்படி எதிர்பார்ப்பதுவும் யதார்த்தமாகாது.

    அதே சமயம் முன்னேற்றத்தை எதிர்பார்த்து அதற்காக உழைப்பதன் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பான அன்றாட நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    எதிர்பார்ப்புகள் இல்லாவிட்டால் உத்வேகம் இருக்காது. முன்னேற்றத்திற்கான புதுவகையான கண்டு பிடிப்புகளுக்கான உந்துதல் இருக்காது.

    ஒரு நாட்டின் துருத வளர்ச்சிக்கும், இயற்கையான இயங்குதலுக்கும் அடிமட்டத் தொழிலாளியும் அவசியம் அதே போல அதியுயர் செல்வந்தனும் தேவை.

    என்ன எத்திசையை நோக்கிச் செல்கிறது இம்மடல் எனும் எண்ணம் எழுவது இயற்கை.

    ஓரிரு தினங்களுக்கு முன்னால் இங்கிலாந்துப் பிரதமர் திரு டேவிட் கமரன் அவர்கள் ஒரு தொலைக்காட்ச்சியில் பங்கு பற்றி தனட்ய்ஹு கருத்துக்கள் சிலவற்றை முன்வைத்தார்.

    அவற்றைச் செவிமடுத்துக் கொண்டிருக்கையில் அரசியல்வாதிகளிஅப் பற்றி எனது சிந்தனை படர ஆரம்பித்தது.

    அரசியல் எனும் அந்தக் குட்டைக்குள் குதிப்பவர்கள் அதைத் தமது தொழிலாகச் செய்கிறார்களா? இல்லை மக்களுக்கான சேவையாகச் செய்கிறார்களா? எனும் கேள்வி ஆழமாக என்னுள்ளத்தை ஊடுருவியது.

    மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் ஆனால் அம்மக்கள் சேவைக்கும் ஊதியம் கொடுத்தும் நிலைதானெர் உலகெங்கும் நடைமுறையில் இருக்கிறது.

    அது ஒரு தொழில் எனும் ரீதியில் பார்த்தால் கூட ஒரு மனிதனை அரசியலை நோக்கித் தள்ளிச் செல்வது என்ன ?

    மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் தூய்மையான எண்ணமா? அன்றி அப்பதவியால் அவர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்களா ?

    மிகவும் சிக்கலான கேள்வி ? இல்லையா !

    மகாத்மா காந்தி எனும் அந்த மாமனிதர் ஈடுப்பட்ட ரசியல் நிலைக்கும், இன்றைய அரசியல்வாதிகள் ஈடுபடும் அரசியல் நிலைக்கும் பலவிதமான வேறுபாடுகள் உண்டு.

    தனது நாடு தன் மக்களாளாலேயே ஆளப்பட வேண்டும் எனும் நியாமான உரிமைக்குரலை முன்னெடுத்து காந்தி தனது அர்சியலை நடத்தினார் அது முற்றுமுழுதாக அமக்கள் சேவையையே மனதில் கொண்ட நிலைப்பாடகா இருந்தது.

    ஆனால் இன்ரைய நிலையிஅல் மக்கள் தம்மைத் தாமே அளும் நிலையில் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசியலில் ஈடிபடும் அரசியல்வாதிகளின் மனதில் மக்கள் சேவை எத்தகிய இடைத்தை வகிக்கிறது என்பது கேள்விக்குறியே.

    எமது பின்புல நாடுகளை விட்டு நாம் வாழும் புலம்பெயர் நாடுகளின் அரசியலைக் கண்ணோட்டம் விடும் போது அங்குகூட சந்தேகமே வலுப்பெறுகிறது.

    சில வருடங்களுக்கு முன்பாக இங்கிலாந்து அரசியல்வாதிகள் மத்தியில் அடித்த சூறாவளியைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

    பாரளுமன்ற உறுப்பினராக அவர்களுக்கு கிடைக்கும் ஊதியத்திற்கு மேலாக அவர்களுக்கு அளிக்கப்படும் செலவீனச் சலூகைகளை பலர் தவராகப் பயன்படுத்து நியாயமற்ற வகையில் பணத்தைப் பெற்றிருப்பது தெரிய வந்ததும் அதைத் தொடர்ந்து இங்கிலாந்து மக்கள் மனதில் அரசியல்வாதிகளின் மீதிருந்த மதிப்பு கரைந்து போனதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்..

    சரி இவற்றிற்கும் பிரித்தானியப் பிரதமரின் தொலைக்காட்சிக் கருத்தாடலுக்கும் என்ன தொடர்பு? இதோ வருகிறேன். . . .

    இங்கிலாந்தி ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க வேண்டுமா? வேண்டாமா? எனும் சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது,

    சமீபத்திய கருத்துக் கணிப்பின் படி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பவர்களது விகிதம் கூடிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.

    இங்கேதான் பிரித்தானியப் பிரதமரின் பிரகடனம் மக்கள் நலனைச் சார்ந்ததா? இல்லை இன்னும் 15 மாதங்களில் வரவிருக்கும் பொதுத்தேர்தலில் தமது கட்ச்சி அரசைமைத்துக் கொள்வதற்குச் சாதகமாக இருக்கும் ஒரு பிரகடனமா ? எனும் சந்தேகம் உள்ளத்தை உலுப்புகிறது.

    சரி ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் முக்கிய கடமை தனது பதவியை அர்ர்ர்ரசில் தக்க வைத்துக் கொள்வதே இதிலென்ன இடக்கு எனும் எண்ணம் சிலரின் மனதிலே எழலாம்.

    ஆனால் இங்கிலாந்துப் பிரதமர் தனது கட்சி 2015 இல் பதவிக்கு வந்தால் தான் பிரதமராக வந்தால் ஒருவருக்கு ஒரு வாக்கு எனும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டுமா என்பதற்காக நடத்துவேன் என்று உறுதியளித்துள்ளார்,

    ஜரோப்பிய ஒன்றியத்தினுள் அங்கம் வகிப்பதை பல முன்னனி தனியார் நிறுவனங்கள் வலியுறுத்தி வரும் வேளையில் இத்தகையதோர் அறிவித்தல் எந்த நோக்கத்தை முன்வைத்து செய்யப்பட்டிருக்கிறது ?

    மக்கள் சேவையா ?  மகேசன் சேவையா?  காலம் தான் விடையளிக்கும்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • கோயில்கள்!…

    விசாலம்

    இந்தியா  முழுவதும்  நூற்றுக்கணக்கான கோயில்கள் பல வருடங்கள் முன்பாகவே கட்டப்பட்டு மிகவும்  புகழ் பெற்ற கோயில்களாக இன்றும்  திகழுகின்றன. ஒவ்வொரு கோயிலிலும் மிகநுட்பமான கலை வேலைப்பாடுகள் சிறந்திருக்க, கோயிலுள்ளே நுழைந்தாலே ஆன்மீகச்சூழ்நிலையுடன் நற்றலைகள் உருவாவது நமக்குத் தெரிய  வருகிறது. சில கோயில்களில் அந்தக்கோயிலைப்பற்றி கல்வெட்டுகள் காணப்படுவதால் அந்தக்கோயிலைப்பற்றிய  பல விவரங்கள் தெரியவருகின்றன.

    கும்பகோணம் ராமஸ்வாமி கோயில்,  அழகர் கோயில்  இவைகளில் நான் நாயக்கர் காலத்து  சிற்பங்களைக் கண்டிருக்கிறேன்.

    குகைகளைக்குடைந்து  உள்ளே கருங்கல் பாறையில்  சித்திரங்களை வடித்தவர்கள் பல்லவர்கள் .   மஹாபலிபுரம் , சித்தண்ண வாசல், நாமக்கல்  ,திருப்பரங்குன்றம்  போன்ற இடங்களில் இதைப்போல் காணலாம்

    பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத், பசுபதிநாத் போன்ற கோயில்களின் அமைப்பு கிட்டத்தட்ட  கேரள கோயில்களின் அமைப்பை ஒத்து இருக்கிறது .

    கர்நாடகத்தில்  ஹம்பி என்ற இடத்திற்குப்போனால் மிகச்சிறிய சிற்பங்களைக்காணலாம். வடநாட்டில்  புஷ்கர்,  ஓம்காரேஷ்வர் மந்திர்  கர்நாடகக்கோயிலை ஒத்து  இருக்கின்றன. கர்நாடகச்சிற்பிகள் அங்குப்போய்  இந்தக்கோயில்களை அமைக்கும் வாய்ப்பு பெற்றிருக்க  வேண்டும் .

    கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டில்  டங்கணாசர்யன் என்ற சில்பி  ஆதிகேசவப்பெருமாள் கோயிலைக்கட்டினார் . பேளூர் என்ற இடத்தில் இந்தகோயில் இருக்கிறது .இதன் நுண்ணிய சிற்பங்களின் அழகை வர்ணிக்க முடியாது ,

    போஜ வம்சத்து மன்னர்கள்,   ஹோஸலே மன்னர்கள் என்றும்  அழைக்கப்பட்டு வந்தார்கள் இவர்கள் கர்நாடகத்தை ஆண்டுவந்தார்கள் மைசூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தார்கள்  ஆதிகேசபப்பெருமாள் கோயிலைக்கட்டியவர்,  இந்த ஆட்சியில் இருந்த சிற்பிதான்

    சென்னையில்  திருவல்லிக்கேணி ஶ்ரீபார்த்தசாரதி கோயிலைக்கட்டியவர் திரு தொண்டைமான் என்ற  மன்னன் திருவரங்கம் பெரிய கோயில் முதலில்  அகளங்க சோழனாலும்   பின்  ராஜமஹேந்த்ரசோழனாலும்  பின்  திருமங்கை மன்னனாலும் திருப்பணிகள்  செய்யப்பட்டு கோபுரம் மிக உயர்ந்து யாவரையும்  ஈர்த்தன .

     சுசீந்தரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ,திருப்புல்லாணி போன்ற  கோயில்கள்  நமக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்துகின்றன.   பாண்டிய மன்னர்கள் இவைகளைச் சிறந்த கலை நுணுக்கத்துடன்  கட்டியிருப்பது நமக்கு  மிகப்பெருமையளிக்கிறது.

    வடநாட்டில் மதுரா மிகச் சிறந்த புண்ணியஸ்தலமாகி கூட்டம் எப்போதும் அலை மோதுகிறது . ஶ்ரீவல்லபாசார்யா சம்பிரதாயத்து வைஷ்ணவர்கள் கட்டிய துவாரகாநாத் மந்திர் மிகவும்  பழமை வாய்ந்தது

    பல தடவைகள் முஸ்லீம்களால்   தகர்க்கப்பட்ட கோயில் சோம்நாத்மந்திர் ,ஔரங்கசீப்பினால் உடைக்கப்பட்ட  கண்ணன் பிறந்த ஊரிலிலுள்ள  ஆதிகேசவ மந்திர்  போன்றவைகள் அழிய இருந்தன. அந்த இடத்தில்  மசூதியும் கட்டப்பட்டது .

    ஆனாலும் பின்னால் பிர்லா என்ற செல்வந்தர் உதவியினாலும்  மதன் மோஹன் மாலவியாவின்  பிரேரணையினாலும்   அழகான கிருஷ்ணன் கோயிலை நாம் இன்று காணமுடிகிறது .

    ராஜஸ்தானில்  பிரதாப்சிம்ஹ ராணா கட்டிய  சாரதா தேவி மந்திர் பர்சானா என்ற இடத்தில்  மிகவும்  பெயர் பெற்றது

    வடநாட்டில் பல கோயில்கள் மஹாபாரதத்தைச்  சேர்ந்ததாகவும்  சில  ராமாயணத்தைச்சேர்ந்ததாகவும்   இருக்கின்றன. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வோரு பெருமைப்பெற்று விளங்குகிறது இதையெல்லாம் பார்த்தால் நாம்   இந்தப்பாரதத்தில்  ஜன்மம் எடுக்க  எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும் இல்லையா?

    Share
  • பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –

    பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் – பீ. சுசீலா – பி.பி.ஸ்ரீனிவாஸ் – கே.வி. மஹாதேவன்

    பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன்

    வீர அபிமன்யூ திரைப்பாடல். திரையிசைத் திலகத்தின் தேனான இசை.. கண்ணதாசன் தேன் என்கிற வார்த்தையைத் தேன் சொட்டச் சொட்ட வடித்தெழுதிய பாட்டு! விட்டில் பூச்சிகள் விளக்கின் வெளிச்சத்தில் மயங்கி விழுவதைப் போல நமைச் சுண்டியிழுக்கும் பாட்டு! தமிழில் மட்டும்தான் இப்படி வார்த்தைகளில் விளையாட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் பாட்டு! அதுசரி.. இதையெல்லாம் ரசிக்க நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? களம் என்ன களம்.. காதல் களம்.. காட்சி என்ன காட்சி.. கணவன்.. மனைவி.. இன்னும் என்ன.. கவிஞர் கேட்க.. மற்றுமொரு ரகசியமும் பாடலில் இடம் பெற வேண்டும் என்கிறார் இயக்குனர். அதனை கவிஞரின் காதில் கூறினார். வார்த்தைகளில் சிந்திய தேன் அத்தனையும் எழில்சிந்த, அழகிய பொருள் சிந்த, பாடலை நாம் பல முறை கேட்டிருக்கிறோம். ரசித்திருக்கிறோம்..

    காதல் பாடலிது.. கதாநாயகன் அபிமன்யூ.. தன் மனைவியோடு கழிக்கும் கடைசி இரவு! பாடல் பிறக்கிறது! இயக்குனர் ரகசியமாய் கேட்டது என்ன தெரியுமா? அபிமன்யூ அடுத்த நாள் களத்தில் மரணத்தைத் தழுவுகிறான். அவன் வகுத்த வியூகத்தில் வெளிவர மறந்துவிடுவதால் களத்தில் மாண்டு போகிறான். அவன் கதை முடியப்போகிறது என்பதையும் சூசகமாய் சொல்லிவிட வேண்டும் பாடலில் என்பதை கண்ணதாசன் உள்வாங்கி.. கவிதையில் சரியான விதம் சற்றும் சந்தேகத்திற்கிடமின்றி இறக்குமதி செய்துள்ளார்..

    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
    அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
    பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

    கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
    ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
    கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
    ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
    துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
    துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
    அணைத்தேன் அழகினை ரசித்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

    மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
    வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
    மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
    வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
    எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
    எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்
    இல்லாதபடி கதை முடித்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

    நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
    உலகத்தை நான் இன்று மறந்தேன்
    உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
    உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்

    பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    உனைத் தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

    இப்போது கவனியுங்கள்.. இனித்தேன் இல்லாதபடி கதை முடித்தேன்.. என்கிற சிலேடையை லாவகமாக கையாண்டு கதையையும் சொல்லிவிட்டார்.. கவிதையையும் இனிதே முடித்திருக்கிறார் என்பது புதிய செய்திதானே!

    திரைப் படம்: வீர அபிமன்யு
    பாடியவர்கள்: பீ. சுசீலா – பி.பி.ஸ்ரீனிவாஸ்
    இசை: கே.வி. மஹாதேவன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    ஆண்டு: 1965

    http://www.youtube.com/watch?v=qtnPiMd6-7Q

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 104

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    மறையோர் இருக்கையும் உழவர் இருக்கையும் ஆகிய
    ஊர்கள் இடையிட்ட நாட்டின் வழியாகச் செல்லுதல்

     

    புலிச்சின்னம் பொருந்திய கொடியை
    உயர்த்தித் தாங்கிய தேரையுடைய
    வலிமைவாய்ந்த சோழமன்னனின் வெற்றிக்காகவும்,
    மழை பொழியும் சூழலை உருவாக்குவதற்காகவும்
    தேவர்களுக்கு உணவு சமைக்கும் மடைப்பள்ளியில்
    வேதியர்கள் தீ வளர்த்தனர்.

     

    அந்த வேள்வித்தீயில் எழுந்த நறும்புகை
    வானுயர்ந்த மாடமாளிகையைச் சூழ்ந்து நிற்க
    அவை மேகங்கள் சூழப்பட்ட மலையைப் போல்
    மிகச் சிறப்பாய்க் காட்சியளித்தன.

     

    இத்தகைய மங்கலச்சிறப்பு பொருந்திய
    மறையோர் வாழும் இல்லங்கள் பல நிறைந்த நல்ல ஊர்.

    இரந்து கேட்பவர்களின் சுற்றத்தையும்
    புரந்து காக்கும் அரசரின் வெற்றியையும்
    தம் உழவுத்தொழில் மூலம்
    காத்து நிற்பவர்கள்
    பரந்த நீருடைய காவிரிப்பெண்ணின்
    புதல்வர்களான உழவர்கள்.

     

    அவர்கள் வாழும் பழஞ்சிறப்பு வாய்ந்த ஊர்களில்
    கரும்பாலைகளில் கரும்புச்சாறு காய்ச்சும்போது
    எழுகின்ற புகையானது
    தூற்றப்படாத நெற்குவியல்களைச் சூழ்ந்து நிற்கும்.

    அந்தத் தோற்றம்
    மேகம் சூழ்ந்த மலைபோலக் காட்சியளிக்கும்.

     

    அதுபோன்ற உழவர்கள் பலரும்
    வாழ்கின்ற இடங்கள் நிறைந்த பல ஊர்கள்;

     

    இதுபோன்ற ஊர்கள் இடையில் கொண்ட
    நாடுகளை எல்லாம் கண்டு,
    ஒரு நாளில் ஒரு காத தூரத்துக்கு மேல்
    நடக்க முடியாதவர்களாய்,
    ஆங்காங்கே இடையிடையே தங்கி
    நாட்கள் பலவாய் நடந்துதான் சென்றனர்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  142 – 155

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – (21)

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – (21) பர்மா-சியாம் மரணப்பாதை அருங்காட்சியகம், தாய்லாந்து

    சுபாஷிணி ட்ரெம்மல்

    இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய விளைவுகள் இன்றளவும் மறையவில்லை.  ஊடகங்கள் வழியாக அவ்வப்போது போர் சம்பந்தப்பட்ட ஏதாகினும் தகவல்கள் அவ்வப்போது நமக்கு கிடைத்துக் கொண்டு தானிருக்கின்றன. இந்த இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் ஏற்படுத்திய அழிவுகள் பற்றி நினைத்துப் பார்த்தால் இன்றும் நம் மனம் அதிர்ச்சிக்குள்ளாவதைத் தவிர்க்க இயலாது.  ஜப்பானியப் படைகள் கைப்பற்றிய பகுதிகளில் அவர்கள் அங்கு வாழ்ந்த மக்களையும், எதிரிப்படைகளிலிருந்து பிடித்து வந்த போர் கைதிகளையும் இப்படையினர் நடத்திய விதமானது  போர் குற்றவியல் வரலாற்றிலேயே மிகக் கொடூரமானவை என்பதில் மறுப்பில்லை.

    எனது அன்மைய தாய்லாந்து பயணத்தில் நான் ஒரு சில அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு பெற்றேன். அதில் என்னை திடுக்கிட வைத்த தகவல்களை வழங்கிய ஒரு அருங்காட்சியகம் என்றால் அது பர்மா ரயில்வே அல்லது சியாம்-பர்மா ரயில்வே அல்லது பர்மா-சியாம் மரணப் பாதை (Death Railway) என அழைக்கப்படும் ரயில் பாதை வரலாற்றை விளக்கும் ஜீத் போர் அருங்காட்சியகம் (JEATH War Museum) தான்.  இந்த அருங்காட்சியகம் 1977ம் ஆண்டு தாய்லாந்தின் மேற்குப் பகுதி மாநிலமான காஞ்சனாபுரி நகரில் வாட் சாய்சும்போல் புத்த விகாரைக்கு அருகே அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டது.

    அருங்காட்சியகத்தின் முன்பகுதியில் பரந்த புல்வெளியில் போர்கைதிகளாக இருந்து இந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் மாண்டு போன மனிதர்களுக்கான மயானமும் நினைவு மண்டபமும் அமைந்திருக்கின்றன. அருங்காட்சியகமோ அதன் எதிர் புறமாக அமைந்துள்ளது.  அருங்காட்சியகத்தின் உள்ளே புகைப்படங்களோ வீடியோ பதிவுகளோ செய்ய அனுமதி இல்லை.  நுழைவாயிலில் கட்டணத்தைக் கட்டி உள்ளே செல்லும் முன் அமைந்துள்ள விற்பனைப் பொருட்கள் கடையில் இந்த அருங்காட்சியகம் பற்றியும் மேலும் க்வாய் பாலம், ரயில் பாதை தொடர்பான நூற்களையும் பெற்றுக் கொள்ளலாம்.  இந்த நூல்கள் தாய் மொழி தவிர்த்து ஆங்கிலம், ஜெர்மன், ப்ரென்ச், ஜப்பானிய மொழிகளில் கிடைக்கின்றன.

    இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் இந்த அருங்காட்சியகம். கீழ்த்தளத்தில் உள்ளே நுழையும் போதே ஜப்பானியப் படைகள் சியாம் நாட்டில் (தாய்லாந்து)  அரசருடன் உடன்படிக்கை செய்து கொண்டு,  இந்த பர்மா-சியாம் ரயில் பாதையை அமைத்த விவரங்களை வரிசைக் கிரமமாக வழங்கியிருக்கின்றனர். விளக்கங்களுக்கு விரிவான  புரிதலைக் கொடுக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளின் வழியாக சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொரு விளக்கக் குறிப்புகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன.  இவை விளக்கங்கள் தரும் தகவல்களுக்கு வலு சேர்ப்பனவாக அமைந்திருக்கின்றன என்றே கூறுவேன்.

    இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்துவிட்ட காலம் அது.  ஜப்பானிலிருந்து சிங்கப்பூர் வந்து பின்னர் சிங்கப்பூரிலிருந்து தங்கள் படைகளையும் பொருட்களையும் பர்மா தலைநகர் ரங்கூனுக்கு கொண்டு செல்வது ஜப்பானியப் படைகளுக்குச் சாதாரண காரியமாக அமையவில்லை.  ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்த பர்மாவை ஜப்பானியப் படைகள் 1942ல் கைப்பற்றின. படிப்படியாக முழுமையாக பர்மாவை ஆக்கிரமித்து இந்தியா செல்லவும் இப்படைகள் திட்டமிட்டன. ஆங்கிலேய-டச்சு படைகள், இந்த ஜப்பானியப் படைகள் மலாக்கா நீரிணை வழியாகக் கடல் பயணம் மேற்கொண்டு பர்மா செல்வதை மிகத் தீவிரமாக தடுத்து வந்தன.  இதற்காக ஆங்கிலேய-டச்சு படைகள் நீர்மூழ்கிக் கப்பலை இப்பகுதியில் இயக்கியும் வான்படைகளைக் கொண்டும், ஜப்பானியப் படைகள் இவ்வழியாக முன்னேறுவதைத் தடுத்துக் கொண்டு தீவிரமாகக் கண்காணித்து வந்தன. இந்தத் தடைகளைக் கடந்து பர்மா செல்ல மாற்று வழி ஒன்று ஜப்பானியப் படைகளுக்கு மிக அவசியமாகப் பட்டது.  சியாமிலிருந்து ரங்கூனுக்குச் செல்ல அப்போது ஒரே ஒரு சாலை மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. அது ராஹேங் (Raheng) நகரிலிருந்து கவ்காரேய்க் வழியாகச் சென்று மாவ்ல்மெய்ன்(Maulmein)  சென்றடையும் வழி.   இரண்டாம் உலகப் போருக்கு முன்னரே ஒரு சாலைப் பாதையை சியாமின் பாங்காக் நகரிலிருந்து மாவ்ல்மெய்ன் வரை அமைக்க சியாமும் பர்மாவும் திட்டமிட்டன. ஆனால் அது செயல்முறைப் படுத்தப்படவில்லை.  ஆக, இருந்த ஒரே சாலைப் பாதை ராஹேங்கிலிருந்து செல்லும் பாதைதான்.  அதுவும் தரமான ஒரு பாதையாக அமைந்திருக்கவில்லை.

    இந்தச் சூழலில் கட்டாயமாக ஒரு மாற்று வழி பர்மாவிற்குச் செல்ல தேவைப்பட ஜப்பானியப் படைகளின் தளபதிகள் திடமிடுதலில் ஈடுபட்டனர்.  ஜப்பானியப் படைகள் ரயில் பாதை அமைக்க திட்டமிடுவதற்கு முன்னரே பர்மாவில் ஆட்சி செலுத்தி வந்த ஆங்கிலேய அரசு இப்பகுதில்  சியாமிலிருந்து ரங்கூனை இணைக்கும் ஒரு ரயில் பாதையை உருவாக்கும் திட்டத்தை வைத்திருந்தனர். முழு திட்டமும் உருவாகியது. ஆனால் அது திட்டத்துடனேயே நின்று விட்டது. இதற்குக் காரணமாக அமைந்தவை இரண்டு விஷயங்கள். முதலாவதாக, காஞ்சனாபுரியிலிருந்து ரங்கூன் செல்லும் பாதை என்பது அடர்ந்த காடுகள் அமைந்த நீண்ட மலைப்பகுதி. இதில் ரயில் பாதை தண்டவாளம், பாலம் என அமைப்பது என்பது சாத்தியமான ஒரு காரியம் அல்ல.  இரண்டாவது காரணம் இதற்குத் தேவைப்படும் வேலையாட்களைத் தேடுவது. ரயில் பாதை அமைப்பது, அதிலும் அடர்ந்த காட்டுப்பகுதியில் என்பது எளிமையான ஒன்றல்ல என்பதால் இப்பணிக்கு முன்வர பணியாளர்கள் தயங்கினர். அதோடு எத்தனை பேரை வைத்து இதனை சாதிப்பது? இவர்களுக்கான கூலியை எப்படி சமாளிப்பது என்பன இந்தத் திட்டம் திட்டமாக மட்டுமே இருந்து முடிந்ததற்கானக் காரணங்களாகிப் போகின.

    ஆனால் ஜப்பானியப் படைகளோ இந்த காரணங்களைத் தடைகளாக எண்ணவில்லை.  இங்கிலாந்தில் ரயில் பாதை அமைக்கும் என்ஜீனியர் துறையில் கல்வி கற்ற ஜப்பானியர்களைப் பணித்திட்டத்தில் இணைத்துக் கொண்டு முழு தீவிரத்துடன் ஒரு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் ஜப்பானியப் படைகள் இயங்கின. திட்டம் உறுதியாகி முடிவாக,  1942ம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானியப் படைத் தலைமையகம் தம் படைகளுக்கு பான் போங் (Ban Pong ) நகரிலிருந்து பர்மாவின் எல்லையில் உள்ள மூன்று பகோடாக்களைக் கடந்து தான்புஸாயாட் (Thanbyuzayat)  செல்லும் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை அறிவித்து உடன் துவங்க கட்டளையிட்டது. இப்பணிக்கு வேலைக்கு பணியாட்கள் என்பதோடு ஜப்பானியப் படைகளால் கைது செய்யப்பட்ட போர் கைதிகளைக் கொண்டு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

     unnamed

    சியாமையும் பர்மாவையும் இணைக்கும் ரயில் பாதை

    இந்த ரயில்பாதை அமைப்புப் பணியில் போர் கைதிகள் மட்டுமன்றி மலாயாவிலிருந்து 180,000 கூலிகளும் அழைத்து வரப்பட்டனர் என்று குறிப்புக்கள் காட்டுகின்றன. அப்படி மலாயாவிலிருந்து வந்தவர்களில் அதிகமானோர் தமிழர்களும், சீனர்களும் ஆவர்.  இவர்களுடன் மலாய்காரர்கள், இந்தோனிசியர்களும் அடக்கம்.  ஆங்கிலேய, ஆஸ்திரேலிய, டச்சு, அமெரிக்க  போர்க்கைதிகள் 60,000 பேரும் இவர்களுடன் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். (குறிப்பு: ஆஸ்திரேய அரசாங்கக் குறிப்புக்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் காணப்படுகின்றது. அக்குறிப்புக்களின் படி 250,000 ஆசிய தொழிலாளர்களும் 61,000 போர் கைதிகளும் இப்பணியில் ஈடுபட்டனர் என உள்ளது)

     dr3

     இங்கிலாந்து, ஆஸ்திரேலிய போர் கைதிகள் – உடல் இளைத்து மிகப் பரிதாபமான

    நிலையிலும் பணி செய்யும் நிலைக்கு உட்படுத்தப்பட்டனர்

    இவர்களில் 90,000 கூலிகளும் 12,399 போர் கைதிகளும் இந்த ரயில்பாதைக் கட்டுமானப் பணியின் போது சரியான சுகாதாரம் இல்லாமை, போதிய உணவு இல்லாமை, அதிகப்படியான உடல் உழைப்பு, ஜப்பானியப் படைகளின் கடுமையானத் தண்டனைகள், திடீரென்று பரவிய மலேரியா நோய் போன்ற காரணங்களால் இறந்தனர்.

     dr4

    மலாயாவிலிருந்து வந்த கூலிகள்

    அந்த நினைவுகளை அருங்காட்சியகம் வழங்கும் குறிப்புகளின் வழி வாசிக்கும் போதே நம் மனம் அச்சத்தில் உறைந்து போகின்றது. நினைத்தாலே உடலை நடுங்க வைக்கும் பயங்கரமான ஒரு கால கட்டம் அது. அக்காலச் சூழலை மேலும் விவரிக்கிறேன்.. அடுத்த கட்டுரையில்.

    தொடரும்..!

    குறிப்பு: படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (5)

    ராமஸ்வாமி ஸம்பத்  

    ’ஸீதையை எப்படியாவது ராமனிடம் இருந்து பிரிக்க வேண்டும். பிரியமான அழகு மனைவியை இழந்துவிட்டால் ராமன் அந்த பிரிவாற்றாமை தாங்காமல் உயிரையே விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்படிச் செய்தால் ஸீதையையும் அடையலாம். அரக்கர் குலத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பை பழியும் வாங்கலாம்’ என நினைந்து ராவணன் தன் மாமனான மாரிசன் தவம் புரியும் ஆசிரமத்தை அடைந்தான்.

    “மாமனே, யாரோ அயோத்தி இளவரசன் ராமனாம், மனவி தம்பியோடு நாடு கடத்தப்பட்டு தண்டகாரண்யத்தில் ஒரு போலித்துறவிபோல் வாழ்கிறானாம். அவன் என் தங்கை சூர்ப்பணகையை அவமதித்து, அதற்கு பழிவாங்கப் புறப்பட்ட என் தம்பிகளான கரன் தூஷணன் திரிசிரஸ் மூவரையும் அவர்கள் படைகளையும் நாசம் செய்து விட்டான். இதற்கெல்லாம் நான் அவனுக்குப் பாடம் புகட்டவேண்டும். அதற்காக முதலில் அவன் மனைவி ஸீதையை அபஹரிக்கப் போகிறேன். அதற்கு உன் உதவி தேவை” என்று மாரீசனிடம் ராவணன் கூறினான்.

    “மருகா, நெருப்போடு விளையாடாதே. ராமன் தர்மத்தின் மறு உரு மட்டுமல்ல. அவன் உண்மையிலேயே பராக்கிரமம் பொருந்தியவன். உன் விரோதி எவனோ உன்னுடைய நம் அரக்கர் குலத்துடைய நாசத்தை நாடி இப்படிப்பட்ட யோசனையை உனக்கு கொடுத்திருக்கிறான். ராமன் பாலகனாக இருந்தபோதே அவன் வில் வலிமையை நான் அனுபவித்துத் தப்பிப் பிழைத்து வாழ்கிறேன். இந்த தற்கொலை முயற்சியைக் கைவிடு” என்றான் மாரீசன்.

    ”மாமனே, உன் அறிவுரையை நாடி நான் இங்கு வரவில்லை. நான் சொன்னபடி செய்யாவிட்டால் இப்போதே உன்னை கொன்றுவிடுவேன்.”

    ”வேண்டாம் அப்படிச் செய்யாதே. உன் கையில் சாவதைவிட ஒரு யோக்கியமான விரோதி கையில் மாள்வதே மேல். சொல். நான் என்ன செய்யவேண்டும்?”

    “அப்படி வா வழிக்கு. நீ ஒரு பொன்மயமான மான் வடிவம் எடுத்துக்கொண்டு பஞ்சவடியில் ராமனின் ஆசிரமத்துக்கு அருகில் திரிய வேண்டும். பொன்மானைப் பார்த்த வைதேகி ராமனிடம் உன்னைப் பிடித்துத் தருமாறு கேட்பாள். ராமன் உடனே உன்னைப் பிடிக்க முயல்வான், துரத்துவான். நீ அவன் கையில் பிடிபடா வண்ணம் எட்ட எட்ட ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். வெகு தொலை தூரம் சென்றதும் அவன் உன்னைப் பிடித்து விட்டாலோ அல்லது உன்மீது அம்பை எய்து விட்டாலோ நீ ‘ஸீதா அபயம், லக்ஷ்மணா அபயம்’ என்று பயங்கரக் கூச்சலிடவேண்டும். மிகுதியை நான் பார்த்துக் கொள்கிறேன்.”

    ’ராவணனுக்குக் காலன் பாசத்தில் சிக்கவேண்டிய் வேளை நெருங்கிவிட்டது’ என நினைந்து மாரீசன் அவ்வாறே நடக்க ஆயத்தமானான்.

    இலங்கை மன்னனின் திட்டப்படியே பொன்மான் வேட்டை துவங்கியது. அண்ணனைத் தடுக்க முயன்ற லக்ஷ்மணனை ராமன் சமாதானம் செய்தான். “லக்ஷ்மணா, என் மனத்திற்கினியவள் இது வரை என்முன் எந்தவிதமான கோரிக்கையும் வைத்ததில்லை. அவள் விருப்பத்தை நான் பூர்த்தி செய்ய வேண்டாமா? அது என் கடமையல்லவா? ஆகவே, நீ ஸீதையைவிட்டு அகலாதே, நான் இந்த பொன்மானைப் பிடித்து வரும் வரையில்” என்று ராமன் கூறி மானைத் துரத்தத் தொடங்கினான். திடீரென்று ‘ஸீதா அபயம், லக்ஷ்மணா அபயம்’  எனும் பெரும் கதறலைக் கேட்ட ஸீதை, “லக்ஷ்மணா, உன் தமையனாருக்கு ஏதோ ஆபத்து போலிருக்கிறது. உடனே அவர் உதவிக்குச் செல்” எனப் பதறினாள்.

    “அன்னையே, இது அரக்கர்களின் மாயம் போல் தெரிகிறது. பதற்றம் வேண்டாம். அண்ணனுக்கு எத்தகைய கேடும் விளையாது. தவிர, அண்ணன் என்னை தங்களைவிட்டு அகலக்கூடாது என ஆணையிட்டிருக்கிறார் ” என்றான் லக்ஷ்மணன்.

    ராமனுக்கு ஆபத்து என்ற சிந்தனையால் அவள் லக்ஷ்மணன் கூற்றினைத் தவறாக புரிந்துகொண்டு தகாத சொற்களால் அவனைச் சாடி, “நீ இப்போது இங்கிருந்து அண்ணனைத்தேடி போகாவிட்டால் நான் உயிர்த்தியாகம் செய்வேன்” என்று அழுது ஆகாத்தியம் செய்தாள்.

    செவியில் நாராசம்போல் வீழ்ந்த அவள் சொற்களால் லக்ஷ்மணன். “என் அன்னைபோன்ற அண்ணியே, என்னைத் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள். இப்போதே அண்ணனைத் தேடி ஓடுகிறேன். தயவு செய்து தாங்கள் மட்டும் இக்குடிலை விட்டு வெளிவரவேண்டாம்” என்று கண்ணீர்மல்க அங்கிருந்து அகன்றான்.

    இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராவணன் ஒரு துறவி வேடம் தரித்து, பிச்சை வாங்குபவன்போல் நடித்து குடிலைவிட்டு வெளியே வராத ஸீதையை அக்குடிலோடு பெயர்த்துக் கடத்தி இலங்கை நோக்கிப் தன் புஷ்பக விமானத்தில் பறக்கலுற்றான்.

    “யாரடா என் மகளை கடத்துவது?” என்ற குரலைக் கேட்ட அரக்கர் மன்னன் திரும்பிப்பார்க்க ஜடாயு தன்னை நோக்கி சினத்தோடு வருவதைக் கண்டான்.

    ‘இது என்ன விபரீதம்? ராம லக்ஷ்மணர்கள் வருவதற்குள் ஸீதையைக் கடத்திச் செல்லலாம் என்றால் இப்பருந்து இடையூறாக இருக்கிறதே’ என நினைந்து, விமானத்தைக் கீழே இறக்கி, அந்த நல்ல உள்ளம்கொண்ட  பட்சியைக் கொல்ல முயன்றான். ஆனால் பலம் பொருந்திய ஜடாயு அவனைப் பலவாறு தன் கூர்மைமிக்க அலகினால் தாக்கி அந்த ’ஓராதன் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்’ உருட்டித் தள்ளினான். இனியும் தாமதித்தால் ராமன் வந்துவிடுவான் என்று பயந்து, ராவணன் தனக்கு சங்கர பகவான் வரமாகக் கொடுத்த வலிமைமிக்க வாளினால் ஜடாயுவின் இறகுகளை வெட்டி வீழ்த்தினான்.

    “ஹா! ராமா..!” என்று கதறியபடி ஜடாயு கீழே விழ்ந்தான். உடனே ராவணன், தந்தைபோன்ற ஜடாயுவை அணைத்தபடி இருந்த ஸீதையை தர தர வென்று அவள் கூந்தலைப் பற்றி இழுத்துக்கொண்டு விமானம் ஏறி இலங்கை நோக்கிப் பறந்தான்.

    குற்றுயிரும் கொலை உயிருமாக இருந்த ஜடாயு, “ராமா சீக்கிரம் இங்கு வந்து சேர். உனக்கு ஸீதாபஹரணத்தைப் பற்றிய தகவலை அளிக்கவேண்டும். ஐயோ! என் பிராணன் போய்விடப் போகிறதே…” என்று கதறியவாறு கிடந்தான். “என் ஆருயிரே! அவசரப்பட்டு என் உடலைவிட்டு நீங்கி விடாதே. தயவு செய்து சற்று நேரம் ராமன் வரும் வரை காத்திரு…” என்று கதறியவாறு கிடந்தான்.

    மாயமானால் மோசம் செய்யப்பட்ட ராமன் லக்ஷ்மணனின் வருகை கண்டு, “தம்பி, ஏன் ஸீதையைத் தனியே விட்டுவிட்டு வந்தாய்?” என்று கேட்க இளவல் தான்பட்ட துயரத்தை விவரித்தான். இருவரும் பயந்தபடியே குடிலும் காணவில்லை. ஸீதையையும் காணவில்லை.

    வருத்தம் மேலோங்க இருவரும் அவளைத் தேடியவாறு ஜடாயுவின் அருகில் வந்து சேர்ந்தனர். “ராமா வந்து விட்டாயா? உனக்காகவே உயிரைக் கையில் பிடித்தபடி உள்ளேன். நீங்கள் ஏன் ஜானகியைத் தனியேவிட்டுச் சென்றீர்கள்? அரக்கனான இலங்கை மன்னன் அவளைக் குடிலோடு பெயர்த்துக் கொண்டு தென் திசையாகப் பறந்து சென்றுவிட்டான். என்னால் முயன்றவரை அதனைத் தடுக்க விரும்பினேன். ஆனால் ராவணன் தன் வாளால் என் இறகுகளை வெட்டி வீழ்த்திவிட்டான். இனி நீங்கள் அந்த ’பொல்லா அரக்கனைக் கிள்ளி களைந்து’, உங்கள் குலவிளக்கினை மீட்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்” என்று சொல்லி ஜடாயு உயிர் நீத்தான்.

    ஸீதையைப் பறிகொடுத்ததோடு தந்தைபோன்ற ஜடாயுவையும் இழந்த ராமன், அப்பருந்திற்கு அந்திம சம்ஸ்காரம் செய்தான். தசரதனுக்குக் கிடைக்காத பேறு ஜடாயுவிற்குக் கிடைத்தது.

    மைதிலியின் கடத்தலைப் பற்றிய தகவல் கிடைத்த ராம லக்ஷ்மணர்கள் கோதாவரி நதியின் பாதையில் தென் திசையாக அவளைத்தேடி அலைந்தனர். வழியில் திடீரென்று கண்ணில்படாத ஒரு அரக்கனின் நீண்ட கைகளில் சிக்கித் தவித்தனர். ஒருவாறு சுதாரித்துக் கொண்டு இருவரும் அக்கரங்களை வெட்டி வீழ்த்தினர்.

    “ஐயோ, வலி தாங்கவில்லையே” என்று கதறும் அரக்கனை நோக்கினர். அவன் தலை, கால்கள் இல்லாமல் வயிற்றில் ஒற்றைக் கண்ணோடு கோரமாகக் காணப்பட்டான். எவ்வளவு முயற்சி செய்தாலும் அவனைக் கொல்ல முடியவில்லை.

    இறுதியில் அவ்வரக்கன் அழுதபடி, ”வீரர்களே, நீங்கள் யார்?” என்று வினவினான்.

    ”என் பெயர் ராமன். இவன் என் தம்பி லக்ஷ்மணன்” என்று கூறிய ராமனை, அவ்வரக்கன், “என்னை மன்னித்து விடுங்கள். கைகள் வெட்டப்பட்ட நிலையில் என்னால் உங்களுக்கு வந்தனம் கூட செய்ய முடியவில்லை. உண்மையில் நான் உங்களை எதிர்பார்த்தபடிதான் உள்ளேன்” என்று சொல்லி தன் விருத்தாந்தைக் கூற ஆரம்பித்தான்….

    …”நான் பலம் பொருந்திய ஒரு கந்தர்வன். என் பெயர் கபந்தன். பிரமனை வேண்டி வெகுநீண்ட ஆயுளைப் பெற்றவன். இதனால் கர்வம் தலைக்கேறி எல்லோரையும் ஹிம்சித்து வந்தேன். ஒரு சமயம் இந்திரனைக் கண்டு அவனுடன் போரிடவும் முயன்றேன். அவன் தன் வஜ்ராயுதத்தினால் என்னைக் கொல்லமுடியாமல் என் தலையையும் கால்களையும் வயிற்றுக்குள் போகுமாறு செய்தான். இந்திரனிடம் மன்னிப்புக் கோரி, ’நான் இனி எவ்வாறு உணவு உண்ணமுடியும்?’ என்று கேட்டேன். என்மீது இரக்கம்கொண்டு வானரசன் இந்த நீண்ட கரங்களையும் வயிற்றில் ஒரு கண்ணையும் கொடுத்து ’இவை மூலம் உன் இரையைப் பிடித்து ஜீவித்திரு’ என்றான். எனக்கு விமோசனம் எப்போது என்று கேட்டதும் ’கவலை வேண்டாம். அயோத்தி இளவரசர்களான ராம லக்ஷ்மணர்கள் ஓருநாள் இப்பக்கம் வந்து உன்னை விடுவிப்பார்கள். ஆகவே ராமன் வரும் வரை காத்திரு’ என்று ஆறுதல் சொல்லி அகன்றான்”…

    ராமன், ”கபந்தரே, இப்போது நாங்கள் என்ன செய்யவேண்டும் உங்களை இந்த பயங்கர நிலையிலிருந்து விடுவிக்க?” என்றான்.

    “ராமா, என் இந்த சரீரத்தை மண்ணில் புதைத்து விடு. அது போதும்.”

    இருவரும் அவ்வாறே செய்ய, அம்மண்ணிலிருந்து ஒரு அழகான கந்தர்வன் எழுந்தான். “மிக்க நன்றி ராமா. உனக்கு ஒரு உதவி செய்ய விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்” என்றான்.

    “ஐயா, என் மனைவி ஸீதையை ராவணன் எனும் அரக்கன் கடத்திச் சென்றுவிட்டான். அவளை மீட்க உங்களால் ஏதேனும் உதவி செய்ய முடியுமா?”

    “கவலையை விடு ராமா. உன்னைப் போலவே மனைவி ருமையை இழந்து வாடும் கிஷ்கிந்தையைச் சேர்ந்த வானர வீரன் சுக்ரீவனுடம் நட்பு செய்துகொள். அவன் தற்சமயம் தன் அண்ணன் வாலிக்குப் பயந்து ரிச்யமுக பர்வதத்தில் ஒளிந்து வாழ்கிறான். ரிச்யமுக மலை கோதாவரிக்கு தென் மேற்குப் திசையில் உள்ளது. மனைவியை மீட்பதில் சுக்ரீவனுக்கு நீ உதவினால் அவன்மூலம் நீயும் ஸீதையைத் திரும்பப் பெறலாம்” என்று கூறி கபந்தன் அகன்றான்.

    அங்கிருந்து ராமனும் லக்ஷ்மணனும் கோதாவரியின் கரைதாண்டி கிஷ்கிந்தை நோக்கி நடந்து மதங்க முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். அவரைப் பற்றி விசாரித்தபோது  அம்முனிவர் மோட்சம் எய்திவிட்டார் என்றும் அவர்தம் குடிலில் சபரி எனும்பெயர் கொண்ட ஒரு வேட்டுவ குலத்தைச் சேர்ந்த மூதாட்டி இருப்பதாகவும் தெரிந்த்து. “அக்கிழவி பைத்தியம் பிடித்தவள்போல் ’ராமன் இன்னும் வரவில்லையே’ என்று வருடக்கணக்கில் புலம்பிக் கொண்டிருக்கிறாள்” என்று ஒரு வழிப்போக்கன் அவர்களிடம் தெரிவித்தான்.

    ஆச்சரியம் அடைந்த ராமன் ”முன்பின் தெரியாத என்னைப் பார்க்க ஆசைப்படும் அந்த மூதாட்டியை அவசியம் நாம் சந்திக்கவேண்டும் லக்‌ஷ்மணா” என்று சொல்லி அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

    ஆசிரமத்தில் சபரி தியான நிலையில் இருந்தாள். அவள் மோனம் நீங்கும் வரை ராமன் காத்திருந்தான். கண் விழித்த சபரி இருவரையும் வியப்போடு நோக்கினாள். “நீங்கள் யார்?” என்று கேட்டதும் இருவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.

    “ராமா, வந்து விட்டாயா? உன் தரிசனத்திற்காகவே எவ்வளவு காலம் தவமிருந்திருப்பேன்”  என்று சபரி சொல்லி அவர்களை உபசரித்தாள். சபரி அளித்த எளிமையான இலந்தை போன்ற பழங்களை ராமன் விரும்பி உண்டான்.

    “அன்னையே, முன்பின் தெரியாத என்னைக் காண தாங்கள் ஏன் விரும்ப வேண்டும்?”

    ”ராமா, இந்த ஆசிரமத்தில் வெகுகாலம் மதங்க முனிவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அவருக்கு வேண்டிய மலர்கள், காய்கறிகள், பழங்கள், ஹோமத்திற்குத் தேவையான சமித்துகள் இவற்றையெல்லாம் தினம் கொண்டு வந்து கொடுப்பதோடு இந்த குடிலையும் துப்புரவாக வைக்கும் சேவையையும் செய்து வந்தேன். எழுதப்படிக்கத் தெரியாத, ஆன்மீக அறிவு அறவே அற்ற எனக்கு அம்மஹான் தீட்சை கொடுத்து என்னை ஓர் உயர்நிலைக்குக் கொண்டுவந்தார். ஓரு நாள் அவர், ‘சபரி, நான் இறைவனடி சேரும் காலம் வந்துவிட்ட்து. இனி நீயே இந்த ஆசிரமத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்றார். ’எனக்கும் இறைவனடி சேரும் பாக்கியத்தை அளிக்க்க் கூடாதா?’ என்று கேட்ட என்னை நோக்கி, ‘சபரி, கட்டாயம் உனக்கு அந்தப் பேறு கிடைக்கும். அதற்கு உனக்கு ராம தரிசனம் அவசியம். ஆகவே ராமன் வரும் வரை காத்திரு” என்று சொல்லி தன் யோக வலிமையினால் மோட்சமடைந்தார். அன்றிலிருந்து நான் உன் வருகைக்காகக் காத்திருக்கிறேன். இம்மலைவாழ் மக்கள் என்னை பரிகசித்தனர். அவர்களை லட்சியம் செய்யாமல், ஆசான் ஆணைப்படி உன் வருகையை ஆண்டாண்டுகளாக எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்,  ராமா” என்றாள் சபரி.

    ராமன் தனது சமீபகால நிகழ்வுகளை விவரித்து கபந்தன் கூறியபடி சுக்ரீவனைத் தேடுவதாக சொன்னான். சபரி பரிவுடன் ராமனைத் தடவி ஆசியளித்தாள். “சுக்ரீவனுக்கு உன் நட்பு கிடைப்பது அவன் செய்த பூஜாபலனே. அவன் உதவியால் உன் மனைவியை நீ திரும்ப பெறுவது உறுதி.  ஆனால் அவன் தற்சமயம் வசிக்கும் ரிச்யமுக பர்வதத்தை அடைவது மிக கடினமான செயல். அடர்ந்த முட்புதர்கள் அம்மலைக்கு ஒரு அரணாக திகழ்கின்றன.  கவலை வேண்டாம். உனக்கு உதவி செய்ய ஒரு நல்மனம் படைத்தவன் அங்கு காத்திருக்கிறான்.  ராமா, உனக்காகக் காத்திருந்தேன். அரிய பெரும்பேறைப் பெற்றேன். இனி உன் அனுமதியுடன் நான் என் ஆசானின் திருவடியை அடைய விரும்புகிறேன்.” என்று சொல்லி சபரி தன் யோக வலிமையினால் அக்கினியை உருவாக்கி அதில் கலந்து மோட்சம் அடைந்தாள்.

    இதன்பின் ராமனும் லக்ஷ்மணனும் பம்பையாற்றின் வழியாக ரிச்யமுக மலை நோக்கி நடந்தனர். வழியில் கண்பட்ட சிலரை வழிகாட்ட வேண்டினர். ஆனால் அவர்கள் அங்கு செல்வது  ஒரு அபாயகரமான முயற்சி என்று சொல்லித் தப்பித்துக் கொண்டனர். ஸீதையின் பிரிவுத் துயரத்தாலும் நெடுவழி நடந்த களைப்பினாலும் ராமனின் கால்கள் தள்ளாடின.

    பம்பை நதியின் இருகரைகளிலும் ராமன் கண்ட இயற்கை காட்சிகள், ஸீதை அருகில் இல்லாததால், அவன் துயரை மேலும் மிகைப்படுத்தின. கம்பர் ராமனின் சோகத்தை இவ்வாறு வர்ணிக்கிறார்.

    பஞ்சு பூத்த விரல் பதுமம் பவளம் பூத்த அடியாளென்

    நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள் நிறம் பூத்த

    மஞ்சு பூத்த மழையனைய குழலாள் கண்போல் மணிக்குவளாய்

    நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ

    [செம்ப்ஞ்சு குழம்பு ஊட்டம் பெற்ற விரல்களால் தாமரை மலரில் பவழம் பொருந்தினது போன்ற பாதங்களை உடையவளும், என் மனமான தாமரை மலரில் வாழ்பவளும், கரிய மேகத்தைப் போன்ற மலர்கள் அணிந்த கூந்தலை உடையவளுமாகிய ஸீதையின் கண்களைப் போன்றிருக்கும் கருங்குவளை மலரே! நஞ்சு படர்ந்த்துபோல நகைத்து (மலர்ந்து) என்னை வருத்துவாயோ?]

    பொங்கிவரும் தன் கண்ணீரை மறைத்துக்கொண்டு, லக்ஷ்மணன் பலவகையாக அண்ணனை உற்சாகப் படுத்தியவாறு உடன் நடந்தான்.

    (​தொடரும்)

    Share