கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..கவிஞர் மருதகாசி
கவிஞர் மருதகாசி
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..
நினைத்ததை முடிப்பவன் என்கிற திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து சேர்ந்த நாயகனாய் ஒரு தோற்றம்! கொள்ளையடிப்பதில் தேர்ந்தவனாய் மறு தோற்றம்! காட்சியமைப்பில் இரு கதா பாத்திரங்களும் நம் கண் முன்னே தோன்ற – மாறுவேடங்களில் காவலர்கள் கூடுகின்ற சபையில்.. கதையின் நாயகன் தான் பாடும் பாடலாக இடம் பெறும் பாடல்!
கவிஞர் மருதகாசியின் கைவண்ணத்தில் – உதித்த எண்ணங்களிவை! சொல்ல வேண்டிய கருத்தை நச்சென்று பல்லவியிலே சொல்வதென்பது அத்தனை எளிதன்று! தொட்டுக்காட்ட வேண்டிய பாத்திரப் படைப்புகளையும் பாடலில் பளிச்சென்று இடம்பெறச் செய்வது மக்கள் திலகத்திற்காகவே வரையப்பட்ட திரைப்பாடலிது!
சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தோலுரித்து – வேடதாரிகளை இனம்கண்டு சரியான சாட்டையடி கொடுக்கும் சத்திய வரிகள்!
எத்தனைக் காலமானாலும் இவ்வுலகில் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருப்பர் என்பது உண்மையென்றால் – காலங்களைக் கடந்து அவர்களின் நிறம் காட்டும் இப்பாடலும் சென்றே தீரும் என்பதும் உண்மை!
ஒவ்வொரு திரைப்பாடல் வரியிலும்கூட புரட்சித்தலைவர் கவனம் செலுத்திடுவார் என்பதற்கு இந்தப்பாடல் இன்னொரு சாட்சியாகும்!
பாடல் ஒலிப்பதிவு முடிந்தபின்பு தனது இராமாபுரம் தோட்டத்திற்கு அனுப்பப்படுவதும் அன்றிரவே தனிமையில் கேட்பதும் எம்.ஜி.ஆரின் வாடிக்கை! அப்படி இப்பாடல் எம்.ஜி.ஆரிடம் அனுப்பப்படுகிறது!
பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு
கண்மூடிப் போகிறவர் போகட்டுமே!
என்கிற வரியில் உள்ள கண்மூடிப் போகிறவர் என்னும் வார்த்தைகளை நீக்கிவிட்டு தன்வழியே போகிறவர் போகட்டுமே என்று மாற்றச் சொன்னார் என்றால் கவிஞர்தம் சொற்களில் அறச்சொற்கள் வந்துவிடக்கூடாது என்பதில்கூட எம்.ஜி.ஆர் எத்தனை கவனம் கொண்டிருந்தார் என்பது புலனாகிறது!
திரைப்படம் – நினைத்ததை முடிப்பவன்
பாடியவர் – டி.எம்.செளந்திரராஜன்
இசையமைப்பு – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர் – மருதகாசி
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மையில்லாதது.. உண்மையில்லாதது
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது..
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில்
கண்முன்னே தோன்றுவது சாத்தியமே
காத்திருந்து கள்வருக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே (…)
போடும் பொய்த்திரையைக் கிழித்துவிடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்..
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
உருத்திராட்சப் பூனைகளாய் வாழுறீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாற்றிக் கொண்டாட்டம் போடுறீங்க..
பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை
உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை..
பொன் பொருளைக் கண்டவுடன் வந்தவழி
மறந்துவிட்டு கண்மூடிப் போகிறவர் போகட்டுமே..
என்மனதை நான் அறிவேன்..என் உறவை நான் மறவேன்
எதுவானபோதிலும் ஆகட்டுமே.. நன்றி மறவாத நல்ல மனம் போதும்.. என்றம் அதுவே என் மூலதனமாகும்
http://www.youtube.com/watch?v=Y4uvAc9QKnE
NEENAITHATHAI MUDIPAVAN****KANNAI NAMBATHE UNNAI**** M.G.R. & MANJULA