பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –

பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் – பீ. சுசீலா – பி.பி.ஸ்ரீனிவாஸ் – கே.வி. மஹாதேவன்

பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன்

வீர அபிமன்யூ திரைப்பாடல். திரையிசைத் திலகத்தின் தேனான இசை.. கண்ணதாசன் தேன் என்கிற வார்த்தையைத் தேன் சொட்டச் சொட்ட வடித்தெழுதிய பாட்டு! விட்டில் பூச்சிகள் விளக்கின் வெளிச்சத்தில் மயங்கி விழுவதைப் போல நமைச் சுண்டியிழுக்கும் பாட்டு! தமிழில் மட்டும்தான் இப்படி வார்த்தைகளில் விளையாட முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் பாட்டு! அதுசரி.. இதையெல்லாம் ரசிக்க நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? களம் என்ன களம்.. காதல் களம்.. காட்சி என்ன காட்சி.. கணவன்.. மனைவி.. இன்னும் என்ன.. கவிஞர் கேட்க.. மற்றுமொரு ரகசியமும் பாடலில் இடம் பெற வேண்டும் என்கிறார் இயக்குனர். அதனை கவிஞரின் காதில் கூறினார். வார்த்தைகளில் சிந்திய தேன் அத்தனையும் எழில்சிந்த, அழகிய பொருள் சிந்த, பாடலை நாம் பல முறை கேட்டிருக்கிறோம். ரசித்திருக்கிறோம்..

காதல் பாடலிது.. கதாநாயகன் அபிமன்யூ.. தன் மனைவியோடு கழிக்கும் கடைசி இரவு! பாடல் பிறக்கிறது! இயக்குனர் ரகசியமாய் கேட்டது என்ன தெரியுமா? அபிமன்யூ அடுத்த நாள் களத்தில் மரணத்தைத் தழுவுகிறான். அவன் வகுத்த வியூகத்தில் வெளிவர மறந்துவிடுவதால் களத்தில் மாண்டு போகிறான். அவன் கதை முடியப்போகிறது என்பதையும் சூசகமாய் சொல்லிவிட வேண்டும் பாடலில் என்பதை கண்ணதாசன் உள்வாங்கி.. கவிதையில் சரியான விதம் சற்றும் சந்தேகத்திற்கிடமின்றி இறக்குமதி செய்துள்ளார்..

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்

மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

இப்போது கவனியுங்கள்.. இனித்தேன் இல்லாதபடி கதை முடித்தேன்.. என்கிற சிலேடையை லாவகமாக கையாண்டு கதையையும் சொல்லிவிட்டார்.. கவிதையையும் இனிதே முடித்திருக்கிறார் என்பது புதிய செய்திதானே!

திரைப் படம்: வீர அபிமன்யு
பாடியவர்கள்: பீ. சுசீலா – பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை: கே.வி. மஹாதேவன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
ஆண்டு: 1965

http://www.youtube.com/watch?v=qtnPiMd6-7Q

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பார்த்தேன் சிரித்தேன்.. பக்கத்தில் அழைத்தேன் – கவியரசு கண்ணதாசன் –

  1. பார்த்தேன் சிரித்தேன் என்ற பாடல் தேனையும் காதலையும் உவமையாகக் கொண்டது

Leave a Reply

Your email address will not be published.