ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) – பகுதி 1

2

unnamed (1)

ஆப்ரஹாம் லிங்கன்

(வரலாற்றுத் தொடர் நாடகம்)

ஆங்கில மூலம்: ஜான் டிரின்க்வாட்டர் (1882) தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

(1809-1865)

“பிறருக்கு விடுதலை அளிக்க மறுப்பவர் எவரும் தமது விடுதலை அனுபவிக்கத் தகுதியற்றவர்” “கடவுள் நன்னெறிப் பக்கத்தில்தான் எப்போதும் இருப்பார் என்பதை நான் அறிந்தவன். எனது தேசமும் நானும் கடவுள் பக்கம் தான் சார்ந்திருக்க வேண்டும் என்பது என் தொடர்ந்த மனப் போராட்டமும் பிரார்த்தனையும் ஆகும்.” “நான் அடிமையாக வாழ விரும்பாதவன். அதைப்போல் அடிமைகளுக்கு அதிகாரியாக இருக்கவும் நான் விரும்பாதவன்.” “எல்லா மனிதரும் சுதந்திரமாகவும், சமமாகவும் படைக்கப் பட்டவர் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லாத காலம் வரும்வரை, விடுதலை ஒளிவிளக்கு உங்கள் இதயத்தில் எரியட்டும் !” “நேர்மையான வினைகளைத் தவறான வழியில் செய்யக் கூடாது ! அமெரிக்க ஐக்கிய இணைப்புப் போராட்டத்தில், அப்படிச் செய்வதும் தவறான வினைபோல் குற்றமானது !” ஆப்ரஹாம் லிங்கன்

unnamed (1)

முன்னுரை: ஆப்ரஹாம் லிங்கன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமாகக் கல்வி கற்று, வழக்கறிஞராகப் பட்டம் பெற்று மாநில, மத்திய சட்ட சபையில் உறுப்பினராகி இறுதியில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப் பட்டவர். அவரே அமெரிக்காவின் உன்னத ஜனாதிபதியாக வரலாற்று அறிஞர் பலரால் கருதப்படுபவர். அவரது காலத்தில் அமெரிக்காவின் தென்புறத்து மாநிலங்களில் செல்வந்தர் நில புலங்களில் அடிமைகளாய்ப் பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் (நீக்ரோ) நசுக்கப்பட்டுச் சமத்துவ நிலை அடையாது இன்னலுற்று வந்தார். அவரது அடிமை வாழ்வை ஒழித்திடக் கொதித்தெழுந்த அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப் போரில் இறங்கி (American Civil War) சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டிய தாயிற்று. வடபுறத்து மாநிலங்களும் தென்புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் இருபுறத்திலும் அநேகர் காயமுற்றுச் செத்து மடிந்தாலும், முடிவில் ஆப்ரஹாம் லிங்கனின் வடபுறத்து மாந்தரே வெற்றி பெற்றனர். பிரிந்து போன வடக்குத் தெற்கு மாநிலங்களை மீண்டும் ஒன்று சேர்த்து அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றிய பெருமை ஆப்ரஹாம் லிங்கனுக்கே சார்ந்தது. அத்துடன் அடிமை வாழ்வொழித்த அத்தகைய மகத்தான போராட்டத்தில் வெற்றி பெற்ற ஐந்து நாட்களில் வாஷிங்டன் தியேட்டரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது தென்மாநிலத்தைச் சேர்ந்த ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் இரண்டாம் முறை ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் சுடப்பட்டு அமரரானார்.

unnamed (3)

ஆப்ரஹாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார். அவரது தாயார் நான்சி ஹாங்க்ஸ், லிங்கன் ஒன்பது வயதாகும் போது காலமாகி விட்டார். தச்சு மரவேலை செய்த தந்தையார் தாமஸ் லிங்கன் இரண்டாம் தாரமாக மணந்த மாற்றாந் தாய் லிங்கனைப் பரிவோடும் கனிவோடும் வளர்த்தார். தனது 23 ஆவது வயதில் முதன்முதல் ஆப்ரஹாம் லிங்கன் “பிளாக் காக் போரில்” (Black Hawk War) கலந்து காப்டனாகப் பணியாற்றியது அவருக்குப் புதியதோர் பாதையைக் காட்டியது. 1834 இல் ஆப்ரஹாம் லிங்கன் இல்லினாய்ஸ் மாநில மக்கள் மன்றத்தில் கீழ் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் அரசாங்கப் பணியில் வேலை செய்தார். லிங்கன் தனது 33 ஆவது வயதில் (1842) மேரி டாட் (Mary Todd) என்னும் மாதை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. 1847 -1849 ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தவணைப் பணிபுரிந்தார். 1860 இல் ரிப்பபிலிகன் நியமிப்பாளியாகி ஜனாதிபதித் தேர்வில் வெற்றி பெற்று 1861 மார்ச்சில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். லிங்கன் பதவி ஏற்புக்குச் சில மாதங்கள் முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து (Union) தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் ஏழு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றன ! அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி முதல் தேதி ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கக் கூட்டு மாநிலங்களில் (Confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென்பகுதி மாநிலங்களுக்கும், வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது !

unnamed (4)

அடிமைகள் ஒழிப்புப் பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆப்ரஹாம் லிங்கனின் பெரும் பிரச்சனையாகி, நீண்ட போராட்டமாகி விட்டது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.” 1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டுப் போரில் மகத்தான் வெற்றி பெற்று தென்பகுதி மாநிலங்களின் போர்த் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடப்பகுதி இராணுவத் தளபதி கிரான்ட் (General Grant) முன்பு சரணடைந்த ஐந்தாம் நாள், ஆப்ரஹாம் லிங்கனை வாஷிங்டன் நாடகத் தியேட்டரில் ஜான் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) சுட்டுக் கொன்றான். பிரிந்து போன வடதென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன ! தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது ! ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியைக் கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதை ஆப்ரஹாம் லிங்கன் அப்போது உயிரோடில்லை !

unnamed (5)

*************************

unnamed (6)

ஆப்ரஹாம் லிங்கன்

(வரலாற்றுத் தொடர் நாடகம்)

காட்சி -1

நடிகர்கள் :

ஆப்ரஹாம் லிங்கன் (Abraham Lincoln) (வயது 51)

மேரி டாட் லிங்கன் (Mary Todd Lincoln)

ஸாமுவேல் ஸ்டோன் (Samuel Stone) (50) விவசாயி

டிமதி  கஃப்னி (Timothy Cuffney) (60) ஸ்டோர் கிளார்க்

வேலைக்காரி சூஸன் (Susan)

இடம் :

ஆப்ரஹாம் லிங்கன் மாளிகை ஸ்பிரிங்ஃபீல்டு, இல்லினாய்ஸ். மாளிகையின் முன்புற விருந்தினர் வரவேற்பறை.

காலம் :

1860 இன் ஆரம்ப ஆண்டுகள். மார்ச் மாத இள வசந்த காலம். இருட்டும் மாலை நேரம்.

நாடக நபர்கள் : (இதுவரை நடந்தது)

விவசாயி, ஸாமுவேல் ஸ்டோன் & ஸ்டோர் கிளார்க் டிமதி க·ப்னி. வரவேற்பறை கணப்பு அடுப்பின் (Fire Place) முன்பு விருந்தினர் இருவரும் எதிர் எதிரே நாற்காலியில் அமர்ந்து சுருட்டுகளைப் புகைத்துக் கொண்டிருக்கிறார். லிங்கனின் மனைவி மேரி வந்து இருவரையும் வரவேற்றுப் பேசுகிறார். சிறிது நேரம் கழித்து ஆப்ரஹாம் லிங்கன் முன்னறைக்கு வந்து அவர் இருவரையும் வரவேற்று உரையாடுகிறார். அவர்கள் இருவரும் போன பிறகு வணிகர் : வில்லியம் டக்கர் (William Tucker), வழக்கறிஞர் : ஹென்றி ஹிண்டு (Henry Hind), பாதிரியார் : எலையாஸ் பிரைஸ் (Elias Price), தினச்செய்தி ஆசிரியர் : ஜேம்ஸ் மாகின்டாஷ் (James Macintosh) நுழைகிறார்கள். அப்போது தூதுவர் தலைவர் வில்லியம் டக்கர் ஆப்ரஹாம் லிங்கனை வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரிப்பபிளிகன் தேர்வாளராய் நிற்பதற்குச் சம்மதம் கேட்கிறார்.

***************

ஸாமுவேல் ஸ்டோன்: இன்று லிங்கனைப் பார்த்து விட வேண்டும். ஆப்ரஹாம் என்பது நல்ல பெயர்தான். மனிதர் ஆறடி உயரத்துக்கும் மேலாக இருப்பார் ! சிறு தாடி வைத்திருப்பார். முகத்தைப் பார்த்தால் சோக முகமாய்த் தெரியும் ! மனிதர் மனதில் ஏதோ வாட்டி வதைத்துக் கொண்டு வருகிறது. என்ன வென்று தெரியவில்லை ! மனிதர் தானாகப் படித்து மேலாக வந்தவர் ! பேச ஆரம்பித்தால் சொற்கள் அம்புகளாய்ப் பாய்கின்றன. மனிதர் மிக்க நேர்மையானவர். எனக்கு நாற்பது வருடமாக அவரது குடும்பத்தாரைத் தெரியும். ஆனாலும் லிங்கன் மனதில் உறுத்துவதை அறிந்து கொள்வது கடினம்.

மிஸ்டர் கஃப்னி: (சுருட்டை ஊதிக் கொண்டு) அப்படியா ? நானும் தங்கியிருந்து லிங்கனைப் பார்த்த பிறகுதான் போவேன். (சுருட்டுப் புகை அறை முழுவதும் பரவுகிறது)

ஸாமுவேல் ஸ்டோன்: (சுருட்டுச் சாம்பலைத் தட்டில் தட்டிக் கொண்டு) மனிதர் எப்போதுமே மெலிந்து காணப்படுகிறார். அவரது உடம்பில் ஏதோ ஒன்று அவரையே தின்கிறது !

(இறுமிக் கொண்டே வேலைக்கரி சூஸன் வருகிறாள். ஜன்னல் திரைகளை மூடுகிறாள். மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கிறாள்)

சூஸன்: (இருவரியும் உற்று நோக்கி) மிஸிஸ் லிங்கன் இப்போதுதான் வந்தார். நேராக இங்கு வரப் போவதாக என்னைச் சொல்லச் சொன்னார்.

மிஸ்டர் கஃப்னி: அப்படியா நன்றி.

ஸாமுவேல் ஸ்டோன்: மிஸ்டர் லிங்கன் இன்னும் வரவில்லை அல்லவா ?

சூஸன்: அவரும் வரும் நேரம்தான் ! சீக்கிரம் இன்று வந்து விடுவார் !

ஸாமுவேல் ஸ்டோன்: எப்படி இருக்கும் சூஸன், உங்கள் எஜமானர் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் ?

சூஸன்: (புன்முறுவல் பூத்து) அவருக்கு நிச்சயம் கிடைக்கும் ! அவரும் அதற்கு உழைத்திருக்கிறார் !

மிஸ்டர் கஃப்னி: நீங்கள் எல்லாம் ஸ்பிரிங்·பீல்டை விட்டு வாஷிங்டனுக்குப் போக வேண்டும்.

சூஸன்: எங்களுக்குச் சிரமமில்லை ! அங்கே போக நாங்கள் தயார்.

மிஸ்டர் கஃப்னி: முதலில் நல்ல செய்தி வரட்டும். ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதி என்று கேட்கும் போது செவியில் தேனாய் இனிக்கிறது !

சூஸன்: இதோ பாருங்கள் ! மிஸிஸ் லிங்கனுக்கு சுருட்டுப் புகை ஆகாது ! வரவேற்பறையில் யாரும் புகைப்பது எஜமானி அம்மாவுக்குப் பிடிக்காது. தயவு செய்து சட்டெனச் சுருட்டை அணைத்துத் தட்டில் போடுவீரா ?

ஸாமுவேல் ஸ்டோன்: (அவசரமாகப் புகைப்பதை நிறுத்தி சுருட்டை அணைத்து) மன்னிக்க வேண்டும். எங்களுக்குத் தெரியாது.

(இருவரும் சுருட்டை அணைத்துத் தட்டில் இடுகிறார்)

மிஸ்டர் கஃப்னி: இன்றைய செய்தி நடுக்கம் உண்டாக்கிறது மிஸ்டர் ஸ்டோன்.

ஸாமுவேல் ஸ்டோன்: (வருத்தமுடன்) ஆமாம் ஜான் பிரௌன் (John Brown 1859) தூக்கில் தொங்கினார். பாவம் ! அவரது மனைவியும் பிள்ளைகளும் கதறிக் கதறி அழுகிறார் !

மிஸ்டர் கஃப்னி: ஜான் பிரௌன் தூக்கில் தொங்க என்ன குற்றம் செய்தார் ?

ஸாமுவேல் ஸ்டோன்: அடிமைகளை விடுதலை செய்யப் போனார் ! போன வருடம் ஹார்பர்ஸ் ·பெர்ரி, வெர்ஜினியாவில் அமெரிக்க ஆயுதக் கிடங்கைக் (American Arsenal Capture Attempt at Harper’s Ferry, Virginia in 1859) கைப்பற்ற ஜான் பிரௌன் முயலும் போதுதான் கைது செய்யப் பட்டார். அதற்குத் தண்டனை தூக்குமரம் !

மிஸ்டர் கஃப்னி: அது சம்பந்தமாக ஜான் பிரௌனைப் பற்றி லிங்கன் என்ன நினைக்கிறார் என்பது தெரியவில்லை ! எளியவரை வாழ்நாள் முழுதும் காலைக் கட்டி வாயைக் கட்டிச் செல்வந்தர் அடிமைகளாக வைத்திருப்பது ஏனென்று எனக்குப் புரியவில்லை ! அந்தக் கொடுமையை ஒழிக்க வயதான ஜனாதிபதியை எதிர்த்து வாள் உயர்த்த ஆப்ரஹாம் லிங்கன் முன்வரவில்லை ! ஆனால் நெறி கெட்ட கொள்கை அதுவென்று வெறுக்கிறார் ! அது போதுமா ? பொறுமையற்ற வெறியர்கள் அடிமை ஒழிப்புக்கு ஒன்றும் செய்ய முடியாமல் தூக்கில் தொங்கவிடப் படுகிறார் !

ஸாமுவேல் ஸ்டோன்: லிங்கன் பாதை வேறு ! நிரந்தர விடுதலை அமெரிக்கக் கறுப்பருக்கு ! வன்முறைப் பாதை அல்ல ! அரசியல் சட்ட ரீதியாக அடிமைப் பிரச்சனைக்கு முடிவு காண விரும்புகிறார். அரசியல் சட்டம்தான் நேர்மையானத் தலைமைச் சாசனமாய் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். குறுகிய காலத்துத் தீர்வாக இல்லாமல் நீண்ட கால நெறியாக நிலைக்க வேண்டும் என்று நினைக்கிறார் ! அவர் வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்குச் சென்றால் அந்தக் கோட்பாட்டைச் சட்டமாக்க ஆணித்திரமாக நிமிர்ந்து நிற்பார் ! அடிமை வாழ்வு ஒழிப்பைக் கொண்டுவரத் தன்னுயிரையும் இழக்க அஞ்ச மாட்டார் ! தனது கோட்பாட்டைச் சட்டமாக்க அனைத்து மாநிலங்களையும் கூட்டி அவர் மனம் மாற்றுவார். சட்டப்படி போவாரே தவிர சண்டையிட்டுச் சாதிக்க மாட்டார் ! அதனால்தான் சிறைப் பட்ட ஜான் பிரௌனைப் பற்றிச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ லிங்கன் பேசவில்லை ! பத்து இருபது கறுப்பருக்கு விடுதலை கிடைப்பது போதாது ! அமெரிக்காவில் அனைத்துக் கறுப்பரையும் விடுவிப்பது எப்படி என்று லிங்கன் யோசித்து வருகிறார்.

மிஸ்டர் கஃப்னி: தூக்கு மரத்தில் தொங்கினாரே ஜான் பிரௌன் அவர் மிக்க தைரியசாலி. ஆயிரக் கணக்கான அடிமைகளை விடுவிக்க அவரும் அவருடன் சேர்ந்து அஞ்சாமல் போராடிய கறுப்பர்களும் மெச்சத் தகுந்தவர். வரலாறு மறக்காமல் போகும் தீரர்கள் !

ஸாமுவேல் ஸ்டோன்: உண்மைதான் ! அவரைச் சிறைப்படுத்தித் தூக்கு மரத்துக்கு ஏற்றிய போது அவர் முழக்கிய வாசகத்தை மறக்க முடியாது ! ஜான் பிரௌன் உரக்கக் கூறினாராம் : “நீங்கள் கடவுளுக்கும், மனித இனத்துக்கும் இழைக்கும் மாபெரும் கொடுமை இது ! இங்கே என்னுயிர் போகப் போகிறது ! இப்போது என்னைக் குழியில் புதைக்கப் போகிறீர் ! நான் இனிமேல் செத்துப் போனவனே ! ஆனால் இந்த அடிமைத்தனப் பிரச்சனை இன்னும் தீரவில்லை ! கறுப்பர்கள் ஒருநாள் விடுதலைச் சூரியனைக் காணத்தான் போகிறார் ! அந்தச் சூரிய உதயத்தைத் தடுக்க முடியாது ! அத்தமிக்கும் அடிமை இருள் மாறி புத்தொளி எழுவதைக் காண்பீர்.” அவரைத் தூக்கிலிட்ட போது நான் அந்தக் கோரக் காட்சியைக் கண்டேன் ! கண்ணீரில் மூழ்கி இரவு பூராவும் தூக்கமின்றிப் புரண்டேன் ! ஜெனரல் “கல் மதில்” ஜாக்ஸன்தான் (Confederate General “Stonewall” Jackson) கட்டளை இட்டவன் ! முகத்தைத் திருப்பிக் கொண்டான் ! ஜான் முழக்கத்துக்குப் பதில் உரைத்தான் ஜாக்ஸன் : “மனித இனத் துரோகிகள் இத்தோடு மாய்ந்து போட்டும்.” அடிமைகளை இழக்க விரும்பாத செல்வந்தர்தான் அந்த வார்த்தைகளை நம்பினார்.

மிஸ்டர் கஃப்னி: அப்பாவி மனிதரை அப்படித் தூக்கிலிட்டது அநியாயம் ! செத்த பின் அவர் நினைவில் ஒரு பாட்டு எழுதினார்கள் :

புதைப்புக் குழிக்குள்ளே சிதைந்து தேயுது ஜான் பிரௌன் மேனி ! ஆயினும் அணிவகுத் தேறுது அவருடை ஆத்மா !

(மெதுவாக இருவரும் சேர்ந்து பாடுகிறார்)

முதியவர் ஜான் பிரௌன் புதை குழி மீது சொர்க்கபுரித் தாரகைகள் சுடருடன் நோக்கின கனிவோடு !

(சில விநாடிகளில் மிஸிஸ் லிங்கன் புன்னகையுடன் வருகிறார். இரு ஆடவரும் எழுந்து நிற்கிறார். மிஸிஸ் லிங்கன் இருவரையும் கைகுலுக்கி வரவேற்கிறார்.

unnamed (7)

மேரி லிங்கன்: குட் ஈவினிங் மிஸ்டர் ஸ்டோன் ! மிஸ்டர். காஃப்னி !

ஸ்டோன் & கா·ப்னி: (இருவரும் ஒன்றாக) குட் ஈவினிங் மேடம் ! அரசாங்கக் குழுவினர் எப்போது வருகிறார்கள் ?

மேரி லிங்கன்: உட்காருங்கள் ! இருவரும் நலமா ? வெகு நேரம் காத்திருக்கிறீரா ? ஏழு மணிக்கு வருகிறார்கள் ! (மூக்கில் விரலை வைத்து) ஆப்ரஹாம் புகைப்பதில்லையே ? அறை பூராவும் சுருட்டுப் புகை குமட்டுகிறதே !

ஸாமுவேல் ஸ்டோன்: மன்னிக்க வேண்டும் ! தெரியாமல் நாங்கள் புரிந்த தவறு. மாளிகை ஜன்னலைத் திறக்கிறேன். (எழுந்து செல்கிறார்)

மேரி லிங்கன்: வேண்டாம். நாங்கள் யாரும் முன்னறையில் புகைப்பதில்லை. பிறர் விடும் புகையை ஏற்றுக் கொள்வதுமில்லை. உடலுக்குள் போவது போக ஜன்னல் திரையிலும் ஆடையிலும் புகை மணம் ஒட்டிக் கொள்கிறது !

ஸாமுவேல் ஸ்டோன்: (மறுபடியும் அமர்ந்து) உண்மை மேடம் ! புகைப் பழக்கத்தை நாங்கள் நிறுத்துவது நல்லது ! ஆனால் முடியவில்லை ! காரணம் அது எங்கள் உதிரத்தோடு ஒட்டி விட்டது !

மிஸ்டர் கஃப்னி: அழைப்பை ஆப்ரஹாம் ஏற்றுக் கொண்டு விட்டாரா ?

மேரி லிங்கன்: ஆம், அழைப்புக்கு உடன்பட்டு விட்டார்.

மிஸ்டர் கஃப்னி: மேடம் ! அது உங்களுடைய முடிவாகதான் இருந்திருக்கும். ஆப்ரஹாமுக்கு நீங்கள்தான் முதன் மந்திரி !

மேரி லிங்கன்: (புன்முறுவல் பூத்து) சரியாகச் சொன்னீர் ! மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கு ! என் அனுதின வேலை அது ! எப்போதும் நான் அப்படித்தான் ! ஆப்ரஹாமுக்கு நான் ஓர் எஞ்சின் ! அவர் எங்கே போக வேண்டும், எப்போது போக வேண்டும், எங்கே போகக் கூடாது என்பது என் வேலை. எல்லாம் எனக்குக் கண்ணாடி போல் தெரிகிறது ! உன்னத மனிதர் ஒவ்வொருவருக்கும் பின்னால் இருக்கிறாள் ஒரு மாது என்று என் பெயர் வரலாற்றில் பொறிக்கப் பட வேண்டும் ! உயர்ந்த மானிடர் ஒருவருடன் வாழ்ந்தேன் என்று வரலாறு என்னைப் போற்ற வேண்டும் ! அவர் எத்தகைய உன்னத மனிதர் என்று எனக்குத்தான் மற்றவரை விட நன்றாகத் தெரியும் ! இப்படிச் சொல்லும் போது எனக்குப் புல்லரிப்பு உண்டாகுது ! மாதரில் சாதாரண மாது நான் ! எனக்கு ஊசி நாக்கு ! என் போக்கு ஆப்ரஹாம் நோக்குடன் செல்லாது ! சரித்திரம் அப்படித்தான் என்னைப் பார்த்துச் சிரிக்க வேண்டும். பலதடவை நான் நினைத்ததே கண்முன் நேர்ந்துள்ளது ! அவரைக் கண்காணிப்பது என் வேலை ! என் கடமை ! அவர் உன்னதம் அடைய உதவி செய்வது என் பணி ! அவரால் இந்த அமெரிக்கா பயனடையப் போகிறது ! என்னைப் போல் பல மாதர் இருக்கிறார் ! ஆனாலும் நான்தான் அதிர்ஷ்டசாலி ! இல்லினாய்ஸைத் தாண்டி என் பணி நீண்டு செல்கிறது ! அதைக் கடந்து வெகு தூரம் எவரும் பாராத பீடத்துக்குப் போகிறது ! நாங்கள் ஏழையராய் இருந்த போது அவரது வாழ்க்கையை இலகுவாக்கியவள் நான் ! அரசாங்க நண்பர்கள் ஆப்ரஹாமை ஆரகன் மாநிலத்தின் கவர்னராய் (Governor of Oregon State) ஆக்குவதாகக் கூறினார் ! அவரும் ஒப்புக் கொண்டு அதை ஏற்றிருப்பார் ! அதனால் ஒரு பலாபலனும் இல்லாமல் போயிருக்கும் ! அதைத் தடுத்து நிறுத்தினேன் நான் ! இப்போது அமெரிக்க ஜனாதிபதிக்குப் போட்டியிடு என்று ஆப்ரஹாமை வற்புறுத்துகிறார் ! நிற்கும்படி நானும் அனுமதித்து விட்டேன் !

unnamed (8)

ஸாமுவேல் ஸ்டோன்: மேடம் ! நீங்கள் நினைப்பது நடக்காமல் போகுமா ?

டிமதி கஃப்னி: (மேரியைப் பார்த்து) ஆமாம் மிஸிஸ் லிங்கன். அமெரிக்க ஜனாதிபதி அமரும் பீடம் மிகப் பெரியது ! அந்த இடத்தில் அமர்வதற்கு ஓர் உன்னதத் தகுதியும் பண்பாடும் ஒருவருக்கு அவசியம். ஆப்ரஹாம் லிங்கன் ரிப்பபிளிகன் கட்சித் தேர்வாளராய்க் குறிப்பிட மாநிலச் செயலாளர் வில்லியம் சீவெர்டு (William Seward, Secretary of State) என்ன சொல்கிறார் ?

மேரி லிங்கன்: சீவேர்டு பேராசைக்காரர் ! ஆப்ரஹாம் தேர்ந்தெடுப்பை அவர் எதிர்பார்க்கிறார். சீவேர்டை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று ஆப்ரஹாம் நன்கு அறிந்தவர்.

ஸாமுவேல் ஸ்டோன்: டெமொகிராட்டுகள் இடையே பிளவை ஏற்படுத்தினால் ரிப்பபிளிகன் தேர்வாளர் வெற்றி பெறுவார் அல்லவா ?

மேரி லிங்கன்: ஆப்ரஹாமும் அப்படித்தான் சொல்கிறார் !

டிமதி கஃப்னி: ஆப்ரஹாம் அமெரிக்கா ஜனாதிபதியாக வராலம் ! அவருக்கு எல்லாத் தகுதி முத்திரைகளும் உள்ளன. ஆனால் மனிதர் இன்னும் கசங்கிய தொப்பியை அணிந்து அரசாங்க சட்ட சபையில் உளாவி வருகிறாரே ! உங்கள் கண்களுக்கு எப்படித் தப்பாது போனது தொப்பி ?

மேரி லிங்கன்: மனிதருக்கு எப்போதும் ஒரே சிந்தனை : அடிமை ஒழிப்பு ! கசங்கிய கோட்டு, மடிப்புக் கலைந்த பான்ட்டு, மிதிபட்ட தொப்பி – இவை எல்லாம் ஆப்ரஹாமின் நினைவுச் சின்னங்கள் ! புதுத் தொப்பி வாங்க வேண்டும் என்று எத்தனை தடவைச் சொல்லி இருக்கிறேன் ? வாங்குகிறேன் என்று சொல்கிறார். ஆனால் வாங்கத்தான் நேரமில்லை என்று வருந்துகிறார் ! வேலைகள் அதிகம்.

டிமதி கஃப்னி: என் கடையில் புதுத் தொப்பிகள் ஏராளமாய் வந்துள்ளன ! அவை நியூயார்க்கிலிருந்து வந்தவை. ஆப்ரஹாமுக்கு புதிய தொப்பி ஒன்றை நான் கொண்டு வரலாமா ? ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டாரே !

மேரி லிங்கன்: கொடுத்தால் வாங்கிக் கொள்வார். ஆனல் அவரது கை பழைய தொப்பியைத்தான் எடுத்து அணிந்து கொள்ளும் ! பழகிப் போன வேலையைக் கைகள் புரிகின்றன.

ஸாமுவேல் ஸ்டோன்: அமெரிக்காவுக்கு முதற் பிரச்சனை அடிமைத்தனம் ! அதனால் விலகிப் போகப் பயமுறுத்துகின்றன தெற்கு மாநிலங்கள் ! இரண்டும் பெரிய பிரச்சனைகள் ! அவற்றைத் தீர்ப்பது எப்படியெனத் தெரியவில்லை ! ஆப்ரஹாம்தான் அவற்றுக்கு ஒரு முடிவு காண வேண்டும் ! தூக்கில் தொங்கிய ஜான் பிரௌனும் அடிமைப் பிரச்சனை இன்னும் தீரவில்லை என்றுதான் சொல்லிச் செத்தார் !

(அப்போது ஆப்ரஹாம் லிங்கன் முன்னறைக்கு வருகிறார். நெற்றியை மறைக்காத கசங்கிய தொப்பியும் ஒரு சாதாரணப் பச்சைக் கோட்டும் அணிந்திருக்கிறார். 50 வயதிருக்கும். கோட்டுப் பைகளில் கத்தை கத்தையாக தகவல் தாள்கள். லிங்கன் மனைவியை முத்தமிட்டு நண்பர்கள் கைகளைக் குலுக்குகிறார்.)

ஆப்ரஹாம் லிங்கன்: குட் ஈவினிங் சாமுவேல், டிமதி. இருவரும் நலமா ? (தொப்பியை எடுத்து மேஜை மீது வைக்கிறார்)

ஸ்டோன் & கஃப்னி: (இருவரும்) குட் ஈவினிங் ஆப்ரஹாம். நலமாக இருக்கிறோம்.

ஆப்ரஹாம் லிங்கன்: (கோட்டுப் பைகளிலிருந்து கட்டான தகவல் காகிதங்களை மேஜை மீது அடுக்கி வைக்கிறார்) . . . . நான் வரும்போது ஜான் பிரௌன் பெயர் கேட்டதே !

ஸாமுவேல் ஸ்டோன்: தூக்கிலிடப்பட்ட ஜான் பிரௌனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம் ! அடிமைகளுக்கு இன்னும் விடிவு காலம் வரவில்லை என்ற அலறிய அவரது இறுதி மொழிகளை நினைவுக்கு வருகின்றன !

ஆப்ரஹாம் லிங்கன்: (நாற்காலியில் அமர்ந்து கொண்டு) நேரிய வினைகளைத் தவறான வழியில் யாரும் செய்யக் கூடாது ! அமெரிக்க ஐக்கிய இணைப்பில், அப்படிச் செய்வது தவறான வினை போல் சீர்கேடானது ! அடிமைகளை விடுவிக்க ஆயுதங்களைத் திருடுவது பெருங்குற்றம் ! அரசாங்க கிட்டங்கிப் பூட்டை ஜான் உடைத்தது தவறான வழி ! ஆனால் கிடைத்த தண்டனை மிகவும் கொடியது ! சிறையில் போட்டிருக்க வேண்டும் ! தூக்கிலிட்டது நியாமில்லை !

ஸாமுவேல் ஸ்டோன்: ஜான் பிரௌனோடு சில கறுப்பரும் தூக்கில் தொங்கினர் !

டிமதி கஃப்னி: இன்று உங்கள் சொற்பொழிவு தினம். உங்கள் பக்கம் நின்று ஆதரவாய் உங்களை ஊக்கவே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். இன்று மாலையில் உங்கள் சொற்பொழிவு அற்புதமாய் இருக்கும் என்று கேட்க வந்திருக்கிறோம் !

சாமுவேல் ஸ்டோன்: நினைக்கும் போதே எனக்கு நடுக்கம் உண்டாகுகிறது ! ஆப்ரஹாம் ! எனது நண்பர் ஒருவர் ஓர் உன்னத பீடத்தில் பட்டம் சூடப் போகிறார் ! அவரால் ஆயிரக் கணக்கான மாந்தர் நற்கதி அடையப் போகிறார் ! என் உள்ளம் குளிருது !

ஆப்ரஹாம் லிங்கன்: ஸாமுவேல் ! அப்படிச் சிந்திக்கும் போது அந்த மனிதருக்கு ஒரு பணிவு உள்ளம் பூத்து மலர்கிறது ! மன உறுதி இருக்கும் எந்த மானிடனும் அத்தகைய வாய்ப்பை இழக்க மாட்டான் ! அமெரிக்க மக்களின் ஜனாதிபதி என்று உயர்வதும், பிரியும் அவரது இதயத்தை எல்லாம் ஒன்றாக இணைப்பதும் வாழ்வின் மகத்தான பணியாக நான் கருதுகிறேன் ! அந்தக் குறிநோக்க முயற்சியில் நான் வெற்றி பெற வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன் ! அதற்காக ஏற்படும் கசப்பான தர்க்கங்கள், வசை மொழிகள், கைச் சண்டைகளை நான் மனிதரிடம் முற்றிலும் வெறுக்கிறேன் ! மெய்யாகச் சண்டை முடிவில் வருவது ஒன்றுமில்லை ! . . . நான் போக வேண்டும். கடமைகள் அநேகம் உள்ளன ! நன்றி ஸாமுவேல் ! நன்றி டிமதி ! (மேரி லிங்களைப் பார்த்து) அவர்கள் போகும் முன்பு ஒயின் மதுபானம் மறக்காமல் கொடு !

(ஆப்ரஹாம் எழுந்து செல்கிறார். ஸ்டோன், கஃப்னி இருவரும் எழுந்து நிற்கிறார்.)

டிமதி க·ப்னி: எங்கள் வாழ்த்துக்கள் ஆப்ரஹாம் ! உங்கள் குறிக்கோள் வெற்றி பெறும். கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பார். ஸாமுவேல் ! நானுனக்கு அமெரிக்காவையும், அதை ஆட்சி செய்ய ஆப்ரஹாம் லிங்கனையும் சமர்ப்பணம் செய்கிறேன். (சிரிக்கிறார்)

ஸாமுவேல் ஸ்டோன்: (சிரித்துக் கொண்டு) நான் பெற்றுக் கொள்கிறேன். தேசத்துக்கு நல்ல காலம் வருகுது ! தெற்கு மாநிலங்களின் கறுப்பு அடிமைகளுக்கு விடுதலை கிடைக்கப் போகுது ! அந்தப் பணியை முடிக்க ஆப்ரஹாம் லிங்கனைக் கடவுள் அல்லவா அனுப்பி இருக்கிறார். கடவுளுக்கு நாம் நன்றி சொல்வோம்.

மேரி லிங்கன்: (மகிழ்ச்சியுடன்) அடிமைகளை விடுவிப்பது அத்தனைச் சுலபமில்லை ! லிங்கன் இராப் பகலாய்ச் சிந்தனையில் மூழ்கிக் கிடக்கிறார். சரியாக உண்பதில்லை ! இரவில் உறக்க மில்லை ! இடையிடையே எழுந்து சிந்தனையுடன் நடமாடுகிறார் ! இப்போது தேர்தல் போர் வரப் போகிறது. அதில் வெற்றி பெற வேண்டும் லிங்கன் முதலில்.

[வேலைக்காரி சூஸன் இருவருக்கும் கண்ணாடிக் கிண்ணத்தில் மதுபானம் தருகிறாள். இருவரும் நன்றி சொல்லி மதுபானத்தை அருந்துகிறார்.)

மிஸ்டர் க·ப்னி & மிஸ்டர் ஸ்டோன்: (இருவரும் ஒன்றாக) நாங்கள் போய் வருகிறோம். குட் நைட் மிஸிஸ் லிங்கன்.

மேரி லிங்கன்: போய் வாருங்கள். குட் நைட் மிஸ்டர் ஸ்டோன், மிஸ்டர் க·ப்னி.

(மிஸ்டர் க·ப்னி மிஸ்டர் ஸ்டோன் இருவரும் வெளியே போகிறார்கள்)

மேரி லிங்கன்: (உள் அறையில் நாற்காலியில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் ஆப்ரஹாமைப் பார்த்து) ஆப்ரஹாம் ! மணி ஏழாகப் போகிறது ! அரசாங்க அதிகாரிகள் வரும் நேரம். அவர்களை இந்த அறையில் வைத்துப் பேசுங்கள். வரவேற்பு அறையில் சுருட்டு நாற்றம் இன்னும் போக வில்லை !

ஆப்ரஹாம் லிங்கன்: அதுதான் உனக்குச் சரியாகத் தோன்றுகிறதா ? அப்படியே செய்கிறேன் !

மேரி லிங்கன்: ஆமாம். அவரிடம் என்ன சொல்லப் போகிறீர் ? எப்படி நீங்கள் இந்தப் பிரச்சனைக்கு முடிவு காணப் போகிறீர் ?

ஆப்ரஹாம் லிங்கன்: மேரி ! என் கருத்தைக் கேள் ! இந்த தேசத்தில் அடிமைகள் என்று ஓரினத்தைச் சில மாநிலத்தார் வைத்துக் கொண்டு சிறையில் வைத்திருப்பது நியாயமற்ற ஈனச் செயல் ! அதற்கோர் முடிவை நான் காண வேண்டும். அடிமைகள் எனப்படுவோருக்கு விடுதலை கொடுத்து உரிமைகள் அளிக்க வேண்டும். அதற்குச் சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகள், எல்லைகள், வரம்புகள், தண்டனைகள் யாவும் அமைக்க வேண்டும். தெற்கு மாநிலங்கள் நிச்சயம் அதற்கு ஒப்புதல் அளிக்கா ! அவை யாவும் ஒன்று சேர்ந்து யூனியனை எதிர்க்கும் ! ஐக்கியக் கூட்டிலிருந்து அவை பிரிந்து போகக் துணிந்து நிற்கும் ! அதை நான் அனுமதிக்க முடியாது ! ஐக்கியம் அறுந்தால் அமெரிக்க முறிந்து போய்விடும் ! உடைந்து போனவற்றை இணைக்கப் குருதி வெள்ளம் கொட்ட வேண்டிய திருக்கும் ! அந்தப் போராட்டத்தில் என்னுயிருக்கும் ஆபத்து எழலாம் !

unnamed (9)

மேரி லிங்கள்: (கண்களில் நீர் துளிக்க) அப்படிச் சொல்லாதீர்கள் ! என்னிதயம் வெடித்து விடும் ஆப்ரஹாம் ! போரின்றி அடிமைத்தனம் ஒழிய ஒருவழி உள்ளதா வென்று பாருங்கள் ! இந்த அடிமை விடுதலைப் போரை நடத்த உங்களைத் தவிர இங்கு யாருமில்லை ! ஆனால் உங்கள் உயிருக்குப் பாதகம் விளையும் என்றால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது ! உங்கள் உயிர்தான் எனக்கு முக்கியம் !

ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் அந்தப் போராட்டத்தை நடத்த வேறு யாருமில்லை ! எனக்குத் தெரியும் அது ! என்னுயிருக்கு ஒன்றும் நேராது மேரி ! அதற்கு நீ அஞ்ச வேண்டாம். நான் அஞ்சவில்லை ! என் பணி முடியாமல் என்னுயிர் போகாது !

மேரி லிங்கன்: அப்படியானால் முன்னடி வைப்பீர் ! அந்தப் போராட்டத்தில் நீங்கள் வெல்ல வேண்டும் ! அமெரிக்க வரலாற்றில் உங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டும் ! புறப்படுங்கள் ஆப்ரஹாம் !

ஆப்ரஹாம் லிங்கன்: அதற்கு நீ முதுகு எலும்பாய் நின்று எனக்குத் துணைபுரி ! உன் உத்தரவுக்கு என் பணிவு ! போகிறேன் மேரி !

மேரி லிங்கன்: அதற்கு முன் முதலில் இந்த கசங்கிய தொப்பியை மாற்றுங்கள் ! எனக்கு அவமானமாக இருக்கிறது. நான் எத்தனை தரம் சொல்லியிருக்கிறேன் ! நீங்கள் சரி சரியென்று சொல்லிக் கொண்டு அதே அழுக்குத் தொப்பியுடன் சட்ட மன்றத்துக்குப் போகிறீர் ! மாற்றாமல் அதையே அணிந்து கொண்டு மீண்டும் வீட்டுக்குள் வருகிறீர் ! அமெரிக்க ஜனாதிபதியாக வரப் போகிறீர் ! உங்களுக்கே மூளையில் உதிக்க வேண்டாமா ?

ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் மேரி ! எனக்கு ஞாபக மறதி ! மாற்றத்தான் நினைக்கிறேன் ! பிறகு நான் அதை மறந்துதான் போகிறேன் !

மேரி லிங்கன்: நாளைக்கு நானும் உங்களுடன் வருகிறேன் ! தொப்பியை வாங்கி உங்கள் தலையில் வைத்த பிறகுதான் வீட்டுக்குத் திரும்புவேன்.

ஆப்ரஹாம் லிங்கன்: (முறுவலுடன்) அது நல்லது ! நீயே வந்து தொப்பியை வாங்கி என் தலையில் வைத்திடு ! அதுதான் சரி !

(அப்போது வேலைக்காரி சூஸன் வந்து அரசாங்க அதிகாரிகள் வாசலில் நிற்பதை ஆப்ரஹாம் லிங்கனுக்கு அறிவிக்கிறாள்)

சூஸன்: அதிகாரிகள் வாசலில் காத்திருக்கிறார்.

மேரி லிங்கன்: நான் வந்து அவர் எல்லோரையும் வரவேற்கிறேன். சூஸன் ! நீ சிற்றுண்டி தயார் செய் எல்லோருக்கும் !

(மேரி லிங்கன் வாசலுக்குப் போகிறாள். ஆப்ரஹாம் சுவரில் தொங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் படத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். மேரி அதிகாரிகளை உள்ளே அழைந்து வருகிறாள். அப்போது வணிகர் : வில்லியம் டக்கர் (William Tucker), வழக்கறிஞர் : ஹென்றி ஹிண்டு (Henry Hind), பாதிரியார் : எலையாஸ் பிரைஸ் (Elias Price), தினச்செய்தி ஆசிரியர் : ஜேம்ஸ் மாகின்டாஷ் (James Macintosh) நுழைகிறார்கள்.

வில்லியம் டக்கர்: (ஆப்ரஹாம் லிங்கனைப் பார்த்து) என் பெயர் வில்லியம் டக்கர். இவர் ஹென்றி ஹிண்டு, உங்களைப் போல் ஒரு வழக்கறிஞர். இவர் பென்சில்வேனியா பாதிரியார் எலையாஸ் பிரைஸ், பத்திரிகை ஆசிரியர் ஜேம்ஸ் மாகின்டாஷ் இவர்.

(ஆப்ரஹாம் லிங்கன் கைகுலுக்கி அனைவரையும் வரவேற்று அமரச் சொல்கிறார். மேஜையைச் சுற்றி எல்லோரும் நாற்காலியில் அமர்கிறார்.)

வில்லியம் டக்கர்: நான்தான் இந்தத் தூதுக் குழுவினர் தலைவன். நாங்கள் சிகாகோ ரிப்பபிளிகன் தேர்தல் அரங்கிலிருந்து (Republican Convention) வந்திருக்கிறோம். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் ரிப்பபிளிகன் கட்சிப் பிரமுகராய் நிற்க ஒப்புக்கொள்வீரா என்று கேட்க வந்திருக்கிறோம். நீங்கள் அதற்கு எல்லாத் தகுதிகளும் பெற்றவர் என்பது எமது அபிப்பிராயம். உங்கள் உடன்பாட்டை நாங்கள் இன்றே அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

(வந்த விருந்தினர் நால்வரும் மிக்க ஆர்வமாக ஆப்ரஹாம் லிங்கனை நோக்குகிறார்)

எலையாஸ் பிரைஸ்: தேர்தல் பேரவை உங்களைத்தான் குறிப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளது மிஸ்டர் லிங்கன் ! டெமொகிராடிக் கட்சி உறுப்பினர்கள் பிளந்துபோய் உள்ளதால், இம்முறை ரிப்பபிளிகன் தேர்வாளி வெற்றி பெறுவது நிச்சயம். அதுவும் நீங்கள் நிற்பதானால் பெருமித வெற்றி கிடைக்கும் என்று ரிப்பபிளிகன் கட்சி உறுதியாக நினைக்கிறது. டெமொகிராடிக் தேர்வாளி ஒருவர் நியமிக்கப் படுவது கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

ஆப்ரஹாம் லிங்கன்: அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு எனக்குத் தகுதி இல்லாமல் இருப்பது பற்றி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா ?

ஹென்றி ஹிண்டு: அவற்றை எல்லாம் கட்சி உறுப்பினர் சுதந்திரமாகப் பேசி முடிவில் அந்தப் பதவிக்கு நீங்கள்தான் தகுதியானவர் என்று முடிவு செய்திருக்கிறார் மிஸ்டர் லிங்கன் !

ஆப்ரஹாம் லிங்கன்: எனக்குக் குறைபாடுகள் உள்ளன. நளினமாகப் பேசத் தெரியாதவன் நான் ! பாசாங்கு செய்யாமல், பணிவாகப் பேசாமல் நேரே பிரச்சனைக்குப் போவது என் தனி முறை. பலரை அதனால் நான் பகையாளி ஆக்கியிருக்கிறேன். வாஷிங்டன் இதை யெல்லாம் மறப்பதில்லை.

வில்லியம் டக்கர்: மிஸ்டர் லிங்கன் ! இவை யாவும் அற்பத் தவறுகள் ! உங்களுக்குள்ள தகுதியும், உன்னத குறிக்கோளும் இங்கு வேறு யாருக்கும் இல்லை. ரிப்பபிளிகன் கட்சியிலும் இல்லை. டெமொகிரடிக் கட்சியிலும் இல்லை ! உங்கள் முழு வெற்றிக்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்கிறோம். அதில் சிறிதளவு ஐயப்பாடும் வேண்டாம் மிஸ்டர் லிங்கன் !

ஆப்ரஹாம் லிங்கன்: ரிப்பபிளிகன் கட்சியில் போட்டியிடும் ஸீவேர்டு (William Seward : Secretary of State) ஹ¥க் (Hook) இருவரும் என்னை விட மேலான அனுபவம் பெற்றவர். அவருடன் போட்டி போட எனக்கு அருகதை இல்லை ! அவரில் ஒருவர்தான் வெற்றி பெறுவார்.

ஜேம்ஸ் மெகின்டாஷ்: ஸீவேர்டுக்கு அனுபவம் இருக்கலாம். ஹ¥க் உங்களை விட அனுபவசாலியாக இருக்கலாம். ஆனால் ஸீடேர்டு உங்களைப் போல் எதையும் அழுத்தமாகப் பேச முடியாது. அவருக்குச் கட்சி உறுப்பினர் ஆதரவில்லை !

ஆப்ரஹாம் லிங்கன்: வைராக்கியமாக இருந்தாலும் நானொரு மிதவாதியே ! தெற்கு மாநிலங்கள் அடிமை வைப்புச் சட்டத்தை நீடிக்க வற்புறுத்தினால், அதனால் அமெரிக்க தேசத்தைத் துண்டிக்க அவை உரிமை கொண்டாடினால் அதைக் கையாண்டு தீர்மானிப்பது எனது முடிவு ! அதை அறிவீர் நீவீர் அனைவரும். அப்படி நேர்ந்தால் வரப் போவது எதிர்ப்பு ! பெரும் எதிர்ப்பு ! அதாவது குருதி கரை புரண்டோடும் உள்நாட்டுப் போர் ! வடக்குக்கும் தெற்குக்கும் போர் ! அதாவது அமெரிக்கருக்கும் அமெரிக்கருக்கும் போர் ! ரிப்பபிளிக்கன் ஜனாதிபதியாக வரும் ஒருவர் கையாள வேண்டி வரும் ஒரு முரண்பாட்டு யுத்தம் ! அதற்கெல்லாம் ரிப்பபிளிகன் கட்சி உறுப்பினர் தயாரா ?

எலையாஸ் பிரைஸ்: மிஸ்டர் லிங்கன் ! அவையெல்லாம் உங்கள் பொறுப்பு ! ரிப்பபிளிகன் உறுப்பினர் உங்களுக்கு ஆதரவு அளிப்பார். உங்களின் நேர்மை நெறியை நாங்கள் அறிவோம்.

ஆப்ரஹாம் லிங்கன்: ஸீவேர்டும், ஹ¥க்கும் எனக்குக் கீழ் வேலை செய்ய விரும்ப மாட்டார். எனக்கு இணையாகவும் அவர் நடத்தப்பட மாட்டார் !

வில்லியம் டக்கர்: அவரெல்லாம் உங்கள் ஆணைக்கு எதிர்மொழி கூற மாட்டார். அனுபவம் குறைவாக இருந்தாலும் நீங்கள் ஜனாதிபதியான பிறகு உங்கள் ஆணைக்குக் கட்டுப்படுவார் இருவரும். கவலைப்பட வேண்டாம் மிஸ்டர் லிங்கன் !

ஆப்ரஹாம் லிங்கன்: ஜேம்ஸ் ! உங்கள் ரிப்பபிளிகன் தினசரி அச்சகம் என்னை ஆதரிக்குமா ? என் கொள்கையை வழிமொழியுமா ?

ஜேம்ஸ் மெகின்டாஷ்: உங்களை ஆதரித்து நான் தலையங்கம் எழுதி இருக்கிறேனே ! …. இதோ பாருங்கள் (தினசரி இதழைக் காட்டுகிறார்.)

ஆப்ரஹாம் லிங்கன்: என்னைப் பாராட்டி நீங்கள் தேர்ந்தெடுத்தால் தென்னவர் உங்களை எள்ளி நகையாடுவார் !

ஹென்றி ஹிண்டு: அவர்கள் எள்ளி நகையாடினால் அதற்கு நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

ஆப்ரஹாம் லிங்கன்: யார் என்னைக் கேலி செய்தாலும் நான் தாங்கிக் கொள்ள முடியும் ! அதற்குக் கடவுள் எனக்களித்த பயிற்சி இருக்கிறது ! ஆனால் இந்த அடிமைத்தன வாழ்வு இருக்கிறதே அது கொடிய சிறை ! ஆயுள் தணடனை அது ! ஆறாத மனக்காயம் அது ! கசப்பான உயிர் வாழ்க்கை அது ! ஆழமாய்ப் புரையோடிய அதிகாரப் பிணி அது ! அதை நான் அறிவேன் ! இந்தப் போராட்டத்தில் எனக்குள்ளது ஒரே சிந்தனைதான் ! அதில் எந்த மாறாட்டமும் இல்லை எனக்கு ! என் தீர்மானத்தை யார் எதிர்ப்பினும் நான் துறக்க மாட்டேன் ! எவர் எதிர்ப்பினும் நில்லேன் ! அஞ்சேன் ! அடிமைத்தன ஒழிப்பு சட்ட ரீதியாக வருவதற்கு நான் என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கத் துணிவேன் !

++++++++++++++++

(பத்து மாதங்களுக்குப் பிறகு)

காட்சி -2 பாகம் -1

unnamed (10)

பங்கெடுப்போர் :

ஆப்ரஹாம் லிங்கன் – பதவி ஏற்ற அமெரிக்க ஜனாதிபதி

வில்லியம் ஸீவேர்டு : அமெரிக்கப் பொதுச் செயலாளர் (William Seward, Secretary of State)

ஜான்ஸன் வொயிட் : தென்பகுதிக் கூட்டு மாநிலப் பிரதிநிதி (Johnson White, Commissioner of Confederate States)

காலெப் ஜென்னிங்ஸ் : தென்பகுதிக் கூட்டு மாநிலப் பிரதிநிதி (Caleb Jennings, Commissioner of Confederate States)

மற்றும் ரிப்பபிளிக்கன் கட்சி அரசியல்வாதிகள்.

இடம் : வாஷிங்டன் D.C. இல் வில்லியம் ஸீவேர்டின் அறை

(இதுவரை நடந்தது)

ரிப்பபிளிகன் குழுத் தலைவர் வில்லியம் டக்கர் ஆப்ரஹாம் லிங்கனை வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரிப்பபிளிகன் தேர்வாளராய் நிற்பதற்குச் சம்மதம் கேட்க ஆப்ரஹாம் லிங்கள் ஒப்புக் கொள்கிறார். லிங்கன் முதன்முறை அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு பதவி ஏற்கிறார்.

இப்போதைய காட்சி: லிங்கனின் ரிப்பபிளிக்கன் கட்சி அரசாங்கப் பொதுச் செயலாளர் (Secratary of State) வில்லியம் ஸீவேர்டு தன் அறையில் அமெரிக்கத் தென்பகுதிக் கூட்டு மாநிலங்களின் கமிஷனர் (Commissioners of Southern Confederate States) ஜான்ஸன் வொயிட், காலெப் ஜென்னிங்ஸ் ஆகியோருடன் அமர்ந்து பேசிக்கொண்டிடுருக்கிறார்.

ஜான்ஸன் வொயிட்: மிஸ்டர் ஸீவேர்டு ! தெற்கு மாநிலங்களில் உலவி வரும் வதந்தி இது ! வாஷிங்டனில் நீங்கள் ஒருவர்தான் தெளிந்த சிந்தனையுடன் இந்தப் பிரச்சனையின் முழு வடிவத்தைக் காண்பவர் என்று. இப்படிச் சொல்லும் போது நமது ஜனாதிபதியை (ஆப்ரஹாம் லிங்கனை) நான் குறைத்துப் பேச வில்லை.

unnamed (11)

வில்லியம் ஸீவேர்டு: உங்கள் நோக்கம் எனக்குப் புரிகிறது மிஸ்டர் வொயிட் ! அமெரிக்க யூனியன் முறிக்க முடியாத யூனியன் இல்லை ! நமக்குப் பெரும் போராட்டம் வந்திருக்கிறது ! மெய்யான போராட்டம் அது ! நமது ஐக்கியத்துக்கு வந்து விட்டது கத்தி ! பிளவு ! பாதிப்பு ! தென் மாநிலங்களில் முதன்முதல் தென் கரோலினா யூனியனிலிருந்து பிரிந்தது ! பிறகு அதைப் பின்பற்றி மிஸ்ஸிஸிப்பி பிரிந்தது, அப்புறம் பிளாரிடா, அலபாமா, ஜியார்ஜியா, லூயிஸியானா, முடிவில் டெக்ஸஸ் ஆக மொத்தம் ஏழு மாநிலங்கள் யூனியனிலிருந்து பிரிந்து போவதாய் அறிவித்து விட்டன ! என்ன கொடுமை முடிவு இது ? ஜனாதிபதி எதிர்பார்த்த பிளவு நடந்து விட்டது. உறுதியாக நான் சொல்கிறேன் : நானும் என்னைச் சார்ந்தோரும் ஜனாதிபதிக்கு முற்றிலும் ஒத்துழைப்போம். அது போல் அறிவித்து நாட்டைப் துண்டாக்குவது நியாய மற்றது ! அமெரிக்க ஐக்கியம் சின்னா பின்னமாய்ப் போவதைக் காட்டுகிறது !

காலெப் ஜென்னிங்ஸ்: மிஸ்டர் ஸீவேர்டு ! எல்லாம் நமது சமரச இணக்கத்தில் உள்ளது ! ஒரு பிரச்சனையைப் பற்றி இருதரப்பார் தர்க்கமிடும் போது இருபுறமும் விட்டுக் கொடுத்து உடன்பாடு உண்டாக்க வேண்டும். கோட்டைக் காவற்படையைத் தடுத்து ஸம்டெர் அரணிலிருந்து (Garrison at Fort Sumter) பின்னடி வைக்கச் சொல்வீரா ? ஜெனரல் பியூரிகார்டு (General Beauregard) மேற்கொண்டு தொடராமல் தாக்குதலை நிறுத்தும்படி ஆணை இடுவீரா ? அப்போதுதான் தென் கரோலினாவின் அதிகாரம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கே அமைதி உண்டாகும். பிரிந்து செல்ல முனையும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாதிரியாய் அது முன்வழி நடத்தும்.

ஸீவேர்டு: எவரும் ஏற்றுக் கொள்ளும் முன்மொழியாகத் தெரிகிறது எனக்கு.

வொயிட்: அப்படிச் செய்தால் உள்நாட்டுப் போரைத் தவிர்த்த உத்தமராய் உம்மை மாநிலங்கள் அனைத்தும் போற்றிடும் மிஸ்டர் ஸீவேர்டு !

ஸீவேர்டு: ஸம்டர் அரணைப் பிடித்து வைத்துக் கொள்வது ஜனாதிபதி தன் பதவி ஏற்புப் பேருரையில் எடுத்துக் கூறிய தீர்மானம் ! அதிலிருந்து அவர் பின்வாங்க மாட்டார். எடுத்த தீர்மானத்தில் எப்போதும் ஜானாதிபதி அழுத்தமாக கால் ஊன்றி நிற்பார்.

வொயிட்: மிஸ்டர் லிங்கனை மிக்கப் பிடிவாதக்காரர் என்று சொல்வோர் இருக்கிறார். அவரிடம் சாமர்த்தியமாகப் பேசினால் அவர் முடிவை மாற்றிவிடலாம். வரப் போகும் உள்நாட்டுப் போரைத் தவிர்க்கலாம். ஆயிரக் கணக்கான உயிர்கள் மடியப் போவதை நிறுத்தலாம். நான் சாதாரணமான நபராய்ப் பேசுகிறேன். மிஸ்டர் லிங்கன் நல்ல பண்பாடுகள் கொண்ட ஓர் உன்னத மனிதர். நான் இருமுறை அவரிடம் உரையாடிய போது பிரமிப்பு அடையாமல் இருக்க முடிய வில்லை. உண்மை இல்லையா மிஸ்டர் ஜென்னிங்ஸ் ?

unnamed (12)

ஜென்னிங்ஸ்: உண்மை ! உண்மை ! நீவீர் சொல்வது முற்றிலும் உண்மை !

வொயிட்: ஆனால் உங்களைப் போல் மிஸ்டர் லிங்கன் அரசியல் அனுபவம் அடையாதவர் என்பது என் கருத்து. அவருக்குத் தெரிய வேண்டாமா சில விஷயங்களில் சில சிறப்பாளருடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று ? எல்லாம் சுய முடிவாக எடுக்கிறார் ! அதில் வரும் இன்னல்களை அவர் எடைபோட்டுப் பார்ப்பதில்லை ! பிறர் சொற்படிக் கேட்பதும் இல்லை.

ஸீவேர்டு: (கோபமாக) நாமெல்லாம் கவனமாகப் பேச வேண்டும். நம்மைச் சுற்றியிருக்கும் சுவர்களுக்கும் காதுகள் உள்ளன ! கண்களும் உள்ளன ! ஆவேசத்தில் பேசக் கூடாது.

ஜென்னிங்ஸ்: அப்படிச் சொல்வது நியாயமா ? சந்தேகமின்றி தன் முதற்பதவி ஆசனத்தில் அமரும் மிஸ்டர் லிங்கன் அல்லவா மிக்க உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறார் ?

ஸீவேர்டு: நீங்கள் சொல்வது உங்களுக்கு நியாயமாகத் தோன்றலாம். என் முடிவு வேறு ! சந்தேகமின்றி என் முழு ஆதரவு ஜனாதிபதி மிஸ்டர் லிங்கன் ஒருவருக்கே இருக்கும் !

வொயிட்: ஓ அப்படியா ? உம்மை விட அனுபவம் குறைந்த மிஸ்டர் லிங்கன் மீது உமக்கு இத்தனை மதிப்பா ? மனிதப் பற்றா ? வியப்பாக இருக்கிறதே !

ஸீவேர்டு: எல்லாமே ஜனாதிபதியின் மனதில் நிறம்மாறிப் போய்விட்டது அடிமைத்தனப் பிரச்சனையிலே ! அடிமைத்தன ஒழிப்பைச் சட்ட ரீதியாகக் கொண்டு வருவதற்கே மிஸ்டர் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதி பதவியை ஏற்றிருக்கிறார் என்று நீங்கள் முதலில் தெரிந்து கொள்வீர் !

காட்சி -2 பாகம் -2

ஸீவேர்டு: ஜனாதிபதியின் மனதில் நிறம் மாறிப் போய் விட்டது அடிமைத்தனப் பிரச்சனையிலே ! அடிமைத்தன ஒழிப்பைச் சட்ட ரீதியாகக் கொண்டு வருவதற்கே மிஸ்டர் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதி பதவியை ஏற்றிருக்கிறார் என்று நீங்கள் முதலில் நீவீர் தெரிந்து கொள்ள வேண்டும் !

ஜென்னிங்ஸ்: மிஸ்டர் லிங்கன் மனதில் இருக்கும் தவறான கருத்தை மாற்ற முயலுவீரா ?. அடிமைத்தனம் ஒன்றும் கொடிய தில்லை. சம்டர் கோட்டை முற்றுகையை விட்டுவிடும்படி அவரை இணங்க வைப்பீரா ? அவரிடம் அழுத்தமாய் முறையிடுவீரா ? அதற்குப் பிறகு நாமெல்லாம் வட்ட மேஜை உரையாடலில் தீர்மானம் செய்யலாம். அடிமைத்தனத்தை நீக்கிவிடத் தென் மாநிலங்களிலும் பெருத்த ஆதரவு இருக்கிறது. வரப் போகும் உள்நாட்டுப் போரால் சில மாநிலங்களில் வணிகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அடிமைத்தன ஒழிப்பு பெரிதா அல்லது இந்த நிதி இழப்புகள் பெரிதா வென்று ஒப்பிட்டுப் பாருங்கள்.

வொயிட்: எங்களால் நம்ப முடியவில்லை, தெற்கு மாநிலங்கள் சேர்ந்து கொண்டு பிரிந்து போகத் தயாராய் உள்ளன என்று பயமுறுத்துவது. அவ்விதம் செய்து காட்ட அவருக்கு உள்ள உரிமையைக் காட்டுகிறாரே தவிர வேறு ஒன்றுமில்லை. சம்டர் கோட்டையை விட்டு நீங்கினாலே பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். அமெரிக்க யூனியனுக்குச் சாதகமான ஓர் ஏற்பாட்டை அமைக்க இயலும். கோட்டையை அடைத்துக் கொண்டதால் எந்த நல் விளைவும் நேரப் போவதில்லை. யூனியன் மீது தென்னவருக்கு வெறுப்பைத்தான் உண்டாக்கும்.

ஸீவேர்டு: உமக்கு அந்த விளைவு தெரிகிறது. நீவீர் எடுத்துச் சொல்லலாம். அதிகார பூர்வமாக நான் எதுவும் அதைப் பற்றிப் பேச முடியாது மிஸ்டர் வொயிட் !

ஜென்னிங்ஸ்: மிஸ்டர் ஸீவேர்டு ! இவை எல்லாம் எங்கள் சிறு ஆலோசனைகளே.

ஸீவேர்ட்டு: என்னுடைய அனுதாபம் உங்களுக்கு உண்டு ! அது இல்லையென்று நான் சொல்ல வில்லை.

வொயிட்: நன்றி மிஸ்டர் ஸீவேர்டு ! எங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வோர் ஆட்சியில் இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். மகிழ்ச்சி அடைகிறோம்.

ஜென்னிங்ஸ்: அந்த உயர்ந்த மனப்பாங்குக்கு வெகுமதி கிடைக்கும் மிஸ்டர் ஸீவேர்டு !

ஸீவேர்டு: (சற்று மெதுவாக) கவனம் வைப்பீரா ? இங்கே நமக்குள் உரையாடியது வெளியே யாருக்கும் தெரியக் கூடாது. இரகசியமாக இருக்க வேண்டும். செய்தித் தாள்களில் வெளியாகி விடக் கூடாது. புரிகிறதா நான் சொல்வது ?

வொயிட்: நன்றாகப் புரிகிறது மிஸ்டர் ஸீவேர்டு ! எங்களை நம்பலாம். இந்த இரகசியம் எங்கும் செல்லாது. செய்தித் தாளுக்குப் போகாது ! நாங்கள் உறுதி அளிக்கிறோம்.

ஸீவேர்டு: (எழுந்து கொண்டே) அப்படியானல் சரி போய் வாருங்கள், வணக்கம்.

வொயிட், ஜென்னிங்: (எழுந்து கொண்டு) உங்களுடன் அந்தரங்கமாய்ப் பேசியதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. போய் வருகிறோம். வணக்கம் மிஸ்டர் ஸீவேர்டு !

(அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கிறது.)

ஸீவேர்டு: ஆம், உள்ளே வரலாம்.

(ஸீவேர்டின் ஓர் அலுவல் பணியாள் நுழைகிறார்)

பணியாள்: மிஸ்டர் ஸீவேர்டு ! நமது ஜனாதிபதி மாடிப் படிகளில் ஏறி வருகிறார்.

ஸீவேர்டு: நன்றி. (பணியாள் திரும்பிக் கீழே போகிறார்) இது மகா இக்கட்டான தருணம் ! ஒன்றும் சொல்லாதீர். தயவு செய்து உடனே போய் விடுங்கள்.

(லிங்கன் மெதுவாக உள்ளே நுழைகிறார். ஜென்னிங்ஸ், வொயிட் வெளியே நழுவிச் செல்லக் கடக்கும் போது லிங்கன் அவரைத் தடுத்து நிறுத்துகிறார்)

ஜனாதிபதி லிங்கன்: குட் மார்னிங் மிஸ்டர் ஸீவேர்டு ! குட் மார்னிங் ஜென்டில்மென் !

ஸீவேர்டு: போய் வாருங்கள் மிஸ்டர் ஜென்னிங்ஸ் ! மிஸ்டர் வொயிட் ! (இருவரும் வெளியே போகிறார்)

லிங்கன்: பத்து நிமிடம் தங்குவீரா ! உங்கள் பிரச்சனைகளை நானும் தெரிந்து கொள்ளலாமா ?

ஜென்னிங்ஸ்: (திரும்பிப் பார்த்து) எல்லாவற்றையும் நாங்கள் சொல்லி விட்டோம் மிஸ்டர் ஸீவேர்டு அவர்களிடம் ! அவரே சொல்வார். நாங்கள் போகிறோம். மன்னிக்க வேண்டும் மிஸ்டர் பிரசிடெண்ட் !

லிங்கன்: தெற்கிலிருந்து வருவோரின் கருத்துக்களை நான் நேராக அறிய விரும்புகிறேன். பத்து நிமிடங்கள் தங்குவீரா ?

ஜென்னிங்ஸ்: (தயக்கமுடன் விழித்து) அப்படியே செய்கிறோம் மிஸ்டர் பிரசிடெண்ட் !

லிங்கன்: நன்றி. மிஸ்டர் ஸீவேர்டு இந்த நண்பர்களை எனக்கு அறிமுகப்படுத்துவீரா ? எதிர்பாராத விதமாக எனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் இது. நேருக்கு நேராக தென் மாநிலத்து நண்பருடன் உரையாடுவது எனக்குப் பிடிக்கும்.

ஸீவேர்டு: இவர் ஜான்ஸன் வொயிட், இவர் காலெப் ஜென்னிங்ஸ் மிஸ்டர் பிரசிடெண்ட் ! இருவரும் கன்•பெடரேட் கவுன்சிலர்கள் ! . . . நான் வெளியே போகிறேன், நீங்கள் தனியே பேசுங்கள்.

லிங்கன்: இல்லை மிஸ்டர் ஸீவேர்டு ! நீங்கள் என்னோடிருந்து பேச்சில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு எனக்குத் தேவைப்படும். . . . . எல்லாரும் உட்காருங்கள் ! (எல்லாரும் மேஜையைச் சுற்றி அமர்கிறார்) என்ன செய்தியைச் சொல்ல வாஷிங்டனுக்கு

நீங்கள் வந்தீர்கள் ?

வொயிட்: ஒன்றுமில்லை ! உங்களிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை !

லிங்கன்: அப்படியா ? மிஸ்டர் ஸீவேர்டிடம் நீங்கள் என்ன சொல்ல வந்தீர் ? அதை நான் அறிந்து கொள்ளலாமா ?

ஜென்னிங்ஸ்: எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை மிஸ்டர் பிரசிடெண்ட் ?

ஸீவேர்டு: நமது முடிவில் தீவிரமில்லாத அமைதியான தீர்வு எதுவும் இருக்கிறதா என்று அறிய வந்துள்ளார் இந்த இரண்டு கவுன்சிலரும் !

லிங்கன்: அவசியம் நானிதைக் கேட்க வேண்டும் மிஸ்டர் ஸீவேர்டு ! தீவிரமில்லாத அமைதியான தீர்வு என்பது என்ன ? விளக்குவீரா மிஸ்டர் ஜென்னிங்ஸ் ?

ஜென்னிஸ்: (பயந்து கொண்டு, தடுமாறியபடி) அது சொல்ல இயலாத விஷயம் மிஸ்டர் பிரெசிடெண்ட் ! எப்படி உங்களிடம் சொல்வது என்று தயங்குகிறேன். நாங்கள் மிஸ்டர் ஸீவேர்டுடன் உரையாடியது சாதாரணமான பேச்சுதான்.

காட்சி -2 பாகம் -3

லிங்கன்: சாதாரணமான பேச்சென்றால் என்னிடம் சொல்லத் தயங்க வேண்டுமா ? நீங்கள் வெகுதூரம் கடந்து வாஷிங்டனில் மிஸ்டர் ஸீவேர்டைக் காண வந்த காரணம் சாதாரணம் என்று நான் கருதவில்லை ! என்ன காரணம் என்று எனக்குச் சொல்லுங்கள் !

வொயிட்: நாங்கள் சொல்ல வந்ததைப் பிரசிடெண்ட் அவர்களிடம் கூறலாமா மிஸ்டர் ஸீவேர்டு ?

லிங்கன்: (இடைமறித்து) நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். எனக்குப் புரியாவிட்டால் மிஸ்டர் ஸீவேர்டு ஐயமின்றி ஒளியூட்டுவார்.

ஜென்னிங்ஸ்: இந்த ஆரம்ப காலத்தில் உங்களுக்கு நாங்கள் தொந்தரவு தர விரும்ப வில்லை மிஸ்டர் பிரசிடெண்ட் !

லிங்கன்: ஆரம்ப காலமா ? எதற்கு ஆரம்ப காலம் ?

ஜென்னிங்ஸ்: நான் சொல்ல வருவது . . . . . !

ஸீவேர்டு: இந்தக் கோமகனார் இருவரும் போரில்லாமல் அமைதிக்கு வழியிருக்குமா வென்று காண வந்துள்ளார். நல்லதோர் சமாதான ஏற்பாடுக்கு ஆலோசனை அளிக்க வந்துள்ளார்.

லிங்கன்: யாருக்கு ஆலோசனை அளிக்க வந்திருக்கிறார் ?

ஸீவேர்டு: அரசாங்கத்துக்கு . . ! ஆம் அமெரிக்க அரசாங்கத்திற்குத்தான் . . !

லிங்கன்: அரசாங்க அதிபதி இங்கேதான் நின்று கொண்டிருக்கிறார் ! சொல்லுங்கள் கோமான்களே ! என்ன ஆலோசனை அது ? என் செவிகள் இரண்டும் திறந்துள்ளன !

ஜென்னிங்ஸ்: சம்டர் கோட்டை முற்றுகை பற்றித்தான் எங்கள் ஆலோசனை மிஸ்டர் பிரசிடெண்ட் ! கோட்டை முற்றுகையை நிறுத்திப் படைகள் திருப்பி அழைக்கப் பட்டால், அது உங்களின் பலவீனமாய் கருதப்படாது ! அது இயற்கையான உரிமையாக ஒரு தாராள விட்டுக் கொடுப்பாக எண்ணப்படும். தென்னகத்து மாநிலங்கள் துண்டித்து பிரிந்து போவதை மனப் பூர்வமாய் விரும்பவில்லை என்று நாங்கள் நம்புகிறோம் ! தமது வினைகளைத் தாமே நிறைவேற்றத் தமக்குரிமை உண்டு என்பதைக் காட்ட விரும்புகிறது தென்னகம்.

லிங்கன்: அமெரிக்க தேசத்தின் அடிமைத்தன ஒழிப்பு அங்கீகாரத்தை மிதிக்க விழைகிறது தென்னகம். அதைத் தென்னகம் தடுப்பது தகாத செய்கை.

வொயிட்: அதுவல்ல பிரச்சனை மிஸ்டர் பிரசிடெண்ட் ! தென்னக மாநிலங்களில் எங்கும்அடிமைத்தனத்தை எதிர்க்கும் சட்டம் எதுவும் இல்லை !

லிங்கன்: சட்டங்கள் பெரும்பாலோர் ஏகோபித்த கருத்திலிருந்து ஆக்கப்படும் மிஸ்டர் வொயிட். தென்னக மாநிலங்களுக்கு அது நன்றாகத் தெரியும்.

ஜென்னிங்ஸ்: மிஸ்டர் பிரசிடெண்ட் ! பணிவாக நான் சொல்கிறேன் ! உங்களுக்கு அது புரியவில்லை !

லிங்கன்: அப்படியா ? நீங்கள் கூறியது மிஸ்டர் ஸீவேர்டுக்குப் புரிந்ததா ?

வொயிட்: நாங்கள் அப்படித்தான் நம்புகிறோம்.

லிங்கன்: நீங்கள் நினைப்பது தவறு ! அவருக்கும் புரிந்திருக்க முடியாது ! காரணம் நீங்கள்அவருக்குப் புரியும்படி சொன்னதாகத் தெரியவில்லை. உங்கள் மீது நான் பழிபோட வில்லை. நீங்கள் மக்களின் நலம்நாடி மேலானதைச் செய்வதாக நினைக்கிறீர். நேர்மையான போராட்டத்தை நீங்கள் எடுத்துக் கொண்டுள்ளதாக நினைக்கிறீர். ஆனால் உங்கள் பிரச்சனையை நான் விளக்கிச் சொல்கிறேன் ! உள்ளதை உள்ளபடி உங்கள் முன் உரித்து வைக்கிறேன். இந்த நாட்டில் பெரும்பான்மையோர் அடிமைத்தன ஒழிப்பை விரும்புகிறார். பலருக்கு விருப்பமில்லை. எவருக்கு உரிமை உண்டு அல்லது எவருக்கு இல்லை என்று இப்போது நான் எதுவும் சொல்ல வில்லை. விரும்பினாலும், விரும்பா விட்டாலும் அது வரப் போகுது என்று ஒவ்வொருவரும் அறிவார். தென்னகம் ஏன் பிரிவினையை வேண்டுகிறது ? காரணம் : அடிமைத்தன ஒழிப்பு சட்டமாக வந்து விடலாம் என்ற பயம். அதை விரும்பவில்லை தென்னகம். அதைத் தவிர்க்க விழைகிறது தென்னகம் ! அடிமைகளை வைத்துக் கொள்ளும் உரிமையை நீடிக்க விரும்புகிறது தென்னகம் ! அடிமைகளை இந்நாட்டில் வைத்திருப்பதற்கு நாம் எல்லோருமே குற்றவாளிகள்தான். ஆனால் வடபகுதியில் நாமெல்லாம் நமது பழைய வழிமுறைகளை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். நீங்கள் அப்படி இல்லை ! நாட்டை இரண்டாய்ப் பிரிவு செய்து உங்கள் சட்டத்தை உருவாக்க விரும்புகிறீர் ! நீங்கள் எதிர்க்கத் தயாராக இல்லை ! எதிர்த்துப் போராட நீவீர் விழைய வில்லை. முதல் கலவரத்தைக் கடந்து செல்லக் கருதுகிறீர். பிரிந்து போவதாய்ப் பயமுறுத்தி அடிமை வணிகத்தைத் தொடர முனைகிறீர். அதுதான் உங்கள் உண்மைத் திட்டம். அவ்விதம் நீங்கள் மிஸ்டர் ஸீவேர்டுடன் உரையாட வில்லை ! தென்னகக் கோமான்களே ! இதை ஒரு மூலையில் மறைத்து மூடி வைக்க முடியாது. அடிமைப் பிரச்சனைக்கு ஓர் முடிவான முடிவு காண வேண்டும். சில நாட்களுக்கு முன்பு நான் இப்படிக் கூறினேன் : எங்களால் முடிந்தவரை சம்டர் கோட்டை முற்றுகை தொடரும் ! அதன் விளைவு என்ன வென்று எனக்கு நன்றாகத் தெரியும் ! அதை நிறுத்தச் சொல்லி என்னை ஏன் வற்புறுத்துகிறீர் ? அமெரிக்காவைத் துண்டாக்குவது உமது உரிமை என்று சொல்வது பிரிவினைக்கு அடிபோடுவது அல்லவா ? அந்த உரிமையை ஏன் வலியுறுத்துகிறீர் ? காரணம் நாங்கள் அடிமைத்தனக் கொடுமையை நீடிக்க விடப் போவதில்லை ! ஒருநாள் நாங்கள் அதை முற்றிலும் ஒழித்து விடுவோம் ! அந்த அச்சம் உமக்கு உள்ளதல்லவா ? நீவீர் அதை இப்போது மறுக்க முடியாது

ஜென்னிங்ஸ்: மிஸ்டர் லிங்கன் ! நீங்கள் விரும்பிய அளவு வேட்கையில் அடிமைத்தன விடுதலையை எப்படியாவது எங்கள் மீது திணிக்க முற்படுகிறீர். ஆனால் நாங்கள் அடிமைத்தன நீடிப்பை அழுத்தமாய்ப் பிடித்துக் கொள்ள முனைவோம் என்று கவனத்தில் வைப்பீர் !

லிங்கன்: இதற்கு மேலாக நான் எடுத்துச் செல்ல இயலாது மிஸ்டர் ஜென்னிங்ஸ் ! அந்தத் தீர்மானமே அமெரிக்க யூனியன் நியதி ! பொதுமக்களின் நேரிய உரிமையை நிலைநாட்டும் ஐக்கிய உடன்பாடு ! அதுதான் அமெரிக்காவின் அடித்தளக் கட்டுமானம் ! அதைத்தான் ஒவ்வொரு நேர்மையான அமெரிக்கனும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

காட்சி -2 பாகம் -4

லிங்கன்: இதற்கு மேலாக நான் எடுத்துச் செல்ல இயலாது மிஸ்டர் ஜென்னிங்ஸ் ! அந்தத் தீர்மானமே அமெரிக்க யூனியன் நியதி ! பொதுமக்களின் நேரிய உரிமையை நிலைநாட்டும் ஐக்கிய உடன்பாடு ! அதுதான் அமெரிக்காவின் அடித்தளக் கட்டுமானம் ! அதைத்தான் ஒவ்வொரு நேர்மையான அமெரிக்கனும் பாதுகாக்க முன்வர வேண்டும். இந்தப் பிரச்சனையைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வீர். போர் ஒன்று வருமானால் அது அடிமைத்தனத்தை முன்னிட்டு இருக்காது ! தென்னகத்துக்கு அமெரிக்க ஐக்கியத்தின் மீது தேசப்பற்று இருக்குமானால் அடிமைத்தன ஒழிப்புச் சட்டத்தைத் தவிர்க்க அரசியல் முறையில் தர்க்கமிட்டு முடிவு காணலாம். அவ்விதமின்றி நாட்டைத் துண்டாக்கும் உரிமையைத் தென்னகம் மேற்கொண்டால் போரைத் தவிர வேறு வழியில்லை. நாட்டுப் பிரிவினையைத் தடுத்து நாமதைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு மாநிலமும் ஐக்கியத்தை ஒப்புக்கொண்டு நமது பிதாக்கள் உறுதி கூறியதை நிலைநாட்டவும், அமெரிக்க யூனியன் நிச்சயம் போரைத் துவக்கும். நாங்கள் நாட்டைப் பிரிக்க விட மாட்டோம். நீங்களும் நாட்டைத் துண்டாக்கக் கூடாது. உள்நாட்டுப் போரைத் தவிர்ப்பதோ அல்லது துவக்குவதோ அது உங்கள் கைகளில்தான் உள்ளது, என் கைகளில் அல்ல ! போருக்கு நீங்கள்தான் முதல் காரணக் கர்த்தாக்கள் ! நீங்கள்தான் முதல் ஆக்கிரமிப்பாளர் ! நாம் இருவரும் பகைவர் அல்லர். நாம் நண்பர்களே ! நாம் பகைவராய் மாறக் கூடாது ! உணர்ச்சி வசப்பட்டு மனமுறிவு ஏற்பட்டாலும் நமக்குள் இருக்கும் பந்த பாசம் முறியக் கூடாது ! அதுதான் எங்கள் பதில் ! போய்ச் சொல்வீர் தென்னக மாந்தரிடம் ! சொல்வீரா ?

வொயிட்: உங்கள் முடிவு உறுதியாகி விட்டதா ?

லிங்கன்: நான் சொன்னதைத் தென்னவரிடம் தயவு செய்து கூறுங்கள் !

ஜென்னிங்ஸ்: உங்கள் விருப்பப்படி நடக்கும் மிஸ்டர் பிரசிடெண்ட் !

லிங்கன்: ஜெனரல் பியர்கார்டு திரும்பிட ஆணையிடும்படி வேண்டுங்கள் ! இப்போதே இங்கிருந்து தந்தி கொடுப்பீர் ! செய்வீரா உடனே !

வொயிட்: அப்படி நீங்கள் விரும்பினால் தந்தி அடிப்போம் இப்போதே !

லிங்கன்: மிஸ்டர் ஸீவேர்டு ! இவருக்கு உதவி செய்ய ஓர் ஆ·பீஸ் பணியாளரை ஏற்பாடு செய்வீரா ? நமக்குப் பதில் தெரிய வேண்டும் உடனே !

(ஸீவேர்டு மணி அடிக்கப் பணியாள் ஒருவன் வருகிறான்.)

ஸீவேர்டு: இவருக்குத் தனியாக தந்தி அடிக்க ஏற்பாடு செய் ! அவரே எழுதி அனுப்ப தனிப்பட்ட தபால் கம்பியை அமைத்துக் கொடு.

(பணியாள் ஒப்புக் கொண்டு செல்கிறான். ஜென்னிங்ஸ், வொயிட் இருவரும் பணியாளரைப் பின் தொடர்ந்து போகிறார்கள். சிறிது நாழிகை லிங்கனும், ஸீவேர்டும் பேசாமல் சிந்தனையில் இருக்கிறார்கள். லிங்கன் இங்குமங்கும் சிந்தனையுடன் அறைக்குள் நடக்கிறார்.)

லிங்கன்: (சினத்துடன்) ஸீவேர்டு ! இது சரியாகத் தெரியவில்லை ! நான் ஆணையிட்டபடி அவர்கள் செய்வாரா ?

ஸீவேர்டு: எனக்கு அப்படித் தெரியவில்லை ! நீங்கள் சந்தேகப் படுகிறீர்களா ?

லிங்கன்: அவர் இருவரையும் நான் புரிந்து கொண்டேன். உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் நேராகச் செல்கிறேன். எல்லோரைக் காட்டிலும் அறிவுடன் செய்த கடவுள் எப்படித் திறமையுடன், வாஷிங்டன் மீது சுமத்தப்பட்ட மாபெரும் குறிப்பணியைச் சாதிக்க என்னை இந்த அமெரிக்காவுக்குத் தளபதியாகக் கொண்டு வந்திருக்கிறார் என்று யாராலும் சொல்ல இயலாது ! எனது அரசவைக் குழுவை (Cabinet) நியமிக்கும் போது, முதன்முதல் உங்களைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன். அதற்கு நான் வருத்தப்பட வில்லை ! நான் வருத்தப்படவும் கூடாது. ஆனால் ஒன்றை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மனித நம்பிக்கைதான் மனித நம்பிக்கையை சம்பாதிக்கும். ஏன் சொல்லுங்கள் ? தென்னகத்திலிருந்து வந்த அந்த இருவரும் ஏன் என்னிடம் உரையாட வராமல் உங்களைத் தேடி வந்தார் ?

ஸீவேர்டு: (தயக்கமுடன்) என் மூலமாகப் பிரச்சனைக்குத் தீர்வு உங்களுக்கு எட்டினால் அவர்கள் நோராக உங்களிடம் சொல்வதை விட வலுவாகச் சொல்லப்படும் என்று அவர்கள் எண்ணி இருக்கலாம் !

லிங்கன்: (சற்று கோபத்துடன்) எந்தப் பிரச்சனைத் தீர்வு பற்றி என்னிடம் சொன்னால் ?

ஸீவேர்டு: சம்படர் கோட்டை முற்றுகை நியாயம் (Discretion) பற்றித்தான் . . . !

லிங்கன்: முற்றுகை பற்றி மாறான நியாயம் எனக்கில்லை என்று உமக்குத் தெரியாதா ?

ஸீவேர்டு: மிஸ்டர் பிரசிடெண்ட் ! உள்நாட்டுப் போர் மனித உயிர்களைப் பலி கொடுப்பப் போகிறது இரண்டு பக்கத்திலும் ! போர் என்றாலே பெரும் பயத்தை உண்டாக்குது !

லிங்கன்: ஆம் நிச்சயம் உண்டாக்கும் ! போர் கொடிது என்று எனக்குத் தெரியாதா ? உம்மை நான் இப்போது புரிந்து கொண்டேன் மிஸ்டர் ஸீவேர்டு ! உமது மனமும் தென்னக மாந்தருக்கு இரக்கம் காட்டுகிறது ! போரைத் தவிர்க்க முடியாது ! எனக்குத் தெரியும் ! உமக்கும் தெரியும் அது ! சொல்லுங்கள் எப்போது நாம் போரைத் தவிர்க்க முடியும் ? போருக்கு அடிப்படையான மூல காரணத்தை நீக்க முடிந்தால் ! நீவீர் எந்தப் பக்கத்தில் இருக்கிறீர் என்று எனக்குத் தெரியவில்லை ! வரப் போகும் உள்நாட்டுப் போரில் தெற்கில் ஒரு காலும், வடக்கில் ஒரு காலும் ஊன்றிக் கொள்ளப் போகிறீரா சொல்லுங்கள் ?

காட்சி -2 பாகம் -5

லிங்கன்: ஆம் நிச்சயம் உண்டாக்கும் ! போர் கொடிது என்று எனக்குத் தெரியாதா ? உம்மை நான் இப்போது புரிந்து கொண்டேன் மிஸ்டர் ஸீவேர்டு ! உமது மனமும் தென்னக மாந்தருக்கு பரிவைக் காட்டுகிறது ! போரைத் தவிர்க்க முடியாது ! எனக்குத் தெரியும் ! உமக்கும் தெரியும் ! சொல்லுங்கள் எப்போது நாம் போரைத் தவிர்க்க முடியும் ? போருக்கு அடிப்படையான மூல காரணத்தை நீக்க முடிந்தால் ! நீவீர் எந்தப் பக்கத்தில் இருக்கிறீர் என்று எனக்குத் தெரியவில்லை ! வரப் போகும் உள்நாட்டுப் போரில் தெற்கில் ஒரு காலும், வடக்கில் ஒரு காலும் ஊன்றிக் கொள்ளப் போகிறீரா சொல்லுங்கள் ? நம் படையினர் சம்டர் கோட்டை முற்றுகையை விட்டுவிட்டு விலகுவது அடிமைப் பிரச்சனையை நீக்காது என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா ? இந்த தேசத்தின் ஒருபாதி அமெரிக்க யூனியனை ஒப்புக் கொள்ள மறுக்கும் உரிமையைக் கையாளும் போது, நமக்கிடையே இருக்கும் ஒவ்வோர் உண்மைப் பாதுகாப்பாளர் உள்ளத்திலும் போருக்குக் காரணம் அதுதான் என்பது தெரியும். சம்டர் கோட்டை முற்றுகையை விட்டுவிட்டு நாம் பின்வாங்கினால் மூல காரணத்தை ஒழிக்க நாமெதுவும் செய்யவில்லை என்பது தெளிவாகிறது. நாட்டைத் துண்டாக்குவது நம்பிக்கைத் துரோகம் என்று நாம் அவருக்கு அழுத்தமாகச் சொல்லித்தான் அதன் காரணத்தை ஒழிக்க முடியும்..

ஸீவேர்டு: தேச மக்களுக்கு இப்படி அழுத்தமாக அறிவிப்பதில் ஒரு பயமுறுத்தல் இருக்கிறதல்லவா ?

லிங்கன்: என்ன பயமுறுத்தலா ? சிறிது நேரத்துக்கு முன்பு என்னிடம் நீவீர் நியாயம் எது என்று கேட்டது நினைவிருக்கிறதா ? நியாயம் தவறிப் பயமுறுத்தலில் நாம் இறங்கி விட்டோம் என்று நீவீர் நினைப்பதற்குக் காரணம் என்ன ?

ஸீவேர்டு: (தணிவாக) நான் சொல்ல வருவது என்ன வென்றால் நமது அரசியல் தீர்மானக் கொள்கையை நாம் விளக்கமாக மக்களுக்கு அறிவிக்க வில்லை என்பதுதான் !

லிங்கன்: (ஆச்சரியமடைந்து) என்ன ? நான் செய்த தீர்மானங்களுக்கு எல்லாம் நீவீர் உடன்பாடு தெரிவிக்க வில்லையா ? உம்மையே நீவீர் ஏமாற்றிக் கொள்ள வேண்டாம் ! நியாயமாய் நடப்பீர் என்று ஒருபுறம் சொல்கிறீர் ! பிறகு பயமுறுத்தல் வேண்டாம் என்று மறுபுறம் என்னைத் தாக்குகிறீர் ! தென்னக மாந்தருக்கு நல்ல அறிவு இருக்குமானால், அவரது ஜெனரல் பியூர்கார்டை பின்வாங்கச் சொல்வார் ! அப்போது நமக்கோர் நன்னம்பிக்கை உண்டாகும் ! அதனால் நான் எதுவும் கூறி அவரது கோபத்தைக் கிளராமல் இப்போது மனதில் தீர்மானமாய் இருக்கிறேன். அது உமக்கு பயமுறுத் தலாகத் தெரிகிறதா ? இப்போது அவரது முடிவு தெளிவாகத் தெரிகிறது எனக்கு ! காலையில் நான் பேசியதை நீங்களும் கேட்டீர் ! இந்த அரசாங்கத்துக்கு மிகுந்த அனுபவத்தை நீவீர் கொண்டு வந்திருக்கிறீர் ! மிகுந்த உற்சாகத்தை உண்டாக்கி இருக்கிறீர் ! உயர்ந்த ஆளுமைத் திறனை நிலைநாட்டி இருக்கிறீர் ! இந்த தேசத்தைப் பேரளவில் நேசிக்கிறீர் ! ஆனால் ஆழ்ந்து தீர்மானம் செய்யும் நான் அங்குமிங்கும் ஊசல் ஆடுகிறேன் என்றோ, பயமுறுத்துகிறேன் என்றோ நினைக்காதீர் !

ஸீவேர்டு: (மெதுவாக) நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. நான் ஆழ்ந்து சிந்திக்கவில்லை அதைப் பற்றி.

லிங்கன்: (ஓர் அறிக்கைத் தாளைப் பையிலிருந்து எடுத்து) ஈதோ நீங்கள் இன்று எனக்கு அனுப்பிய தாள். அதில் என்ன உள்ளது ? படிக்கிறேன் கேட்பீர் ! “ஜனாதிபதியின் சிந்தனைக்குச் சில கருத்துக்கள் :– பிரிட்டீஷ் சாம்ராஜியம், ரஷ்யா, மெக்ஸிகோ சம்பந்தமான தேசக் கொள்கைகள் பற்றி. ஒன்று பிரசிடென்ட் இவற்றைக் கையாள வேண்டும். அல்லது அவரது அரசாங்கப் பொறுப்பாளர் ஒருவர் வசம் ஒப்படைக்க வேண்டும். அது என் பிரதேசக் கட்டுப்பாட்டில் இல்லை. அதிலிருந்து விலகிக் கொள்ளவும் நான் விரும்பவில்லை ! அதைப் பொறுப்பாக ஏற்றுக் கொள்ளவும் வேண்டி வரவில்லை !”

(சிறிது நேரம் அங்கே மௌனம் நிலவுகிறது. லிங்கனும், ஸீவேர்டும் ஒருவரை ஒருவர் கூர்ந்து நோக்குகிறார். அறிக்கைத் தாளை லிங்கன் ஸீவேர்டிடம் தருகிறார். அதைக் கையில் வாங்கி சிறிது விநாடிகள் கழித்து, ஸீவேர்டு கிழித்துக் குப்பைத் தொட்டியில் போடுகிறார்.)

ஸீவேர்டு: மன்னிக்க வேண்டும் என்னை மிஸ்டர் பிரசிடென்ட் !

லிங்கன்: உமது மனோபாவத்தை மதிக்கிறேன் மிஸ்டர் ஸீவேர்டு (லிங்கன் ஸீவேர்டு கையைக் குலுக்குகிறார்.)

[அப்போது கதவைத் தட்டிச் செயலாளர் ஜான் ஹே (John Hay) அவசரமாக உள்ளே நுழைகிறார்.]

ஜான் ஹே: மேஜர் ஆண்டர்ஸன் அனுப்பிய தூதுவர் ஒருவர் வந்து காத்திருக்கிறார். அவர் நேராக சம்டர் கோட்டையிலிருந்து வருகிறார்.

லிங்கன்: அவரை என் தனி அறைக்கு அழைத்து வா ! இல்லை நேராக இங்கே அழைத்து வா !

(ஜான் ஹே போகிறார்)

ஸீவேர்டு: என்ன அவசரத் தகவலாக இருக்கும் ?

லிங்கன்: ஏதோ ஒரு வேண்டாத சம்பவம் நேர்ந்திருக்கிறது ! (லிங்கன் மணி அடிக்கிறார். உடனே ஒரு பணியாள் வருகிறான்.) யாராவது அரசாங்கக் குழுவினர் அரசவையில் இருக்கிறாரா பார் ?

பணியாள்: மிஸ்டர் பிரசிடென்ட் ! மிஸ்டர் சேஸ் (Mr. Chase), மிஸ்டர் பிளேர் (Mr. Blair) அங்கே இருக்கிறார்.

லிங்கன்: அவரிடம் போ ! என்னுடன் சில மணிநேரம் கலந்து ஆலோசிக்க இங்கு வருவாரா என்று கேள் ! விரும்பினால் இருவரையும் இங்கு அழைத்து வா உடனே !

பணியாள்: அப்படியே செய்கிறேன், மிஸ்டர் பிரசிடென்ட் ! (பணியாள் போகிறான்.)

லிங்கன்: நாம் இன்றே முடிவு செய்தாக வேண்டும் ஸீவேர்டு ! ஆம் இப்போதே தீர்மானிக்க வேண்டும். சம்டர் கோட்டை முற்றுகையில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது !

[ஜான் ஹே முன்னே வர, அவருக்குப் பின்னால் வேர்வையுடன் புழுதியும் தூசியும் படிந்த ஒரு படைவீரன் வருகிறான். கையைத் தூக்கி ஜனாதிபதிக்கு வந்தனம் செய்கிறான். ஜான் ஹே வெளியே போகிறார்.)

லிங்கன்: மேஜர் ஆண்டர்ஸன் அனுப்பிய தூதுவனா நீ ? எங்கே அதற்கு உன் அடையாளத்தைக் காட்டு !

படைவீரன்: (பையிலிருந்து ஓர் அறிக்கையை எடுத்து லிங்கனிடம் தருகிறான்.) ஈதோ உங்களுக்குக் கடிதம், மிஸ்டர் பிரசிடென்ட் ! மேஜர் ஆண்டஸன் உங்களிடம் நேரடியாகத் தர எனக்கு உத்தரவு இட்டிருக்கிறார்.

(லிங்கன் அவசரக் கடிதத்தை படித்துச் சிந்திக்கிறார்)

காட்சி -2 பாகம் -6

லிங்கன்: மேஜர் ஆண்டர்ஸன் அனுப்பிய தூதுவனா நீ ? எங்கே அதற்கு உன் அடையாளத்தைக் காட்டு !

படைத் தூதன்: (பையிலிருந்து ஓர் அறிக்கையை எடுத்து லிங்கனிடம் தருகிறான்.) ஈதோ உங்களுக்குக் கடிதம், மிஸ்டர் பிரசிடென்ட் ! மேஜர் ஆண்டர்ஸன் உங்களிடம் நேரடியாகத் தர எனக்கு உத்தரவு இட்டிருக்கிறார்.

லிங்கன்: (லிங்கன் அவசரக் கடிதத்தை படித்துச் சிந்திக்கிறார்) வாயால் சொல் முதலில் ! என்ன அவசரச் செய்தி இது ?

படைத் தூதன்: மிஸ்டர் பிரசிடென்ட் ! மேஜர் ஆண்டர்ஸன் தன் கடமையைச் செய்கிறார் ! சம்டர் கோட்டை முற்றுகை இன்னும் மூன்று நாட்களுக்கு மேல் நீடிக்காது ! உணவுப் பண்டங்கள் இல்லை ! உதவிப் படை மேற்கொண்டு தேவை !

லிங்கன்: (மணியை அடிக்க மூன்றாவது பணியாள் வருகிறான்) மிஸ்டர் வொயிட், மிஸ்டர் ஜென்னிங்ஸ் இருவருக்கும் ஏதாவது பதில் வந்திருக்கிறதா என்று உடனே கேட்டு வா ! அடுத்து மிஸ்டர் ஹேயை இங்கே வரச் சொல் !

(மிஸ்டர் ஹே உள்ளே வருகிறார்)

லிங்கன்: மிஸ்டர் ஹே ! ஜெனரல் ஸ்காட் எங்கிருக்கிறார் என்று தெரிந்து இந்தக் கடிதத்தை அவரிடம் கொடுப்பீரா ? காத்திருந்து அவரது பதிலையும் வாங்கிக் கொண்டு வருவீரா ?

மிடே ஹே: அப்படியே செய்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் ! (ஹே போகிறார்)

லிங்கன்: (படைத் தூதனிடம் கவனமாக) கோட்டையில் நிலைமை படுமோசமாக உள்ளதா ?

படைத் தூதன்: ஆமாம் மிஸ்டர் பிரிசிடெண்ட் ! மூன்று நாட்கள்தான் உணவுப் பண்டங்கள் நீடிக்கும் என்று மேஜர் கவலைப்படுகிறார் ! எங்கள் யூகம் ஒரு நாளுக்குக் கூட வராது என்பதே !

லிங்கன்: என்ன ? ஒரு நாளைக்குக் கூட உணவு தேறாதா ? இதை எனக்கு முன்பே மேஜர் ஏன் தெரிவிக்க வில்லை ? நிலைமை மிக மிக மோசமாகிப் போய் விட்டதே ! பட்டினி கிடக்கும் படைவீரர் எப்படி முற்றுகையைத் தொடர முடியும் ?

(கதவு தட்டும் அரவம் கேட்கிறது.)

ஸீவேர்டு: யாரது ? உள்ளே வரலாம்.

(ஹாக்கின்ஸ் வருகிறார்)

ஹாக்கின்ஸ்: மிஸ்டர் வொயிட் அவருக்குத் தகவல் தந்தி மூலம் வந்திருக்கிறது.

லிங்கன்: செய்தி எடுத்துக் கொண்டு உடனே இங்கு வரச் சொல் வொயிட்டை !

(ஆமோதித்துக் கொண்டு ஹாக்கின்ஸ் போகிறார்)

லிங்கன்: மூன்று நாட்களுக்குத்தான் உணவுப் பண்டங்கள் நீடிக்குமா ? ஏன் இதை மேஜர் முன்பே தெரிவிக்க வில்லை ? பகைவர் துப்பாக்கியால் மாளாது பட்டினியால் சாவதா படைகள் ? படை வீரர் போதாவென்று எப்போது எச்சரிக்கை விடுவது ? முன் யோசனை இல்லாத தளபதி ! . . . அது சரி. ஏதோ தகவல் வந்துள்ளதாமே ! மிஸ்டர் வொயிட் என்ன குண்டைப் போடப் போகிறாரோ ?

ஸீவேர்டு: (சற்று அழுத்தமாக) மிஸ்டர் பிரசிடெண்ட் ! இது நமக்கொரு எச்சரிக்கை ! இப்போது நாம் முற்றுகையை நிறுத்திப் பின்வாங்குவதுதான் நல்லது ! இராணுவத் தந்திரம் அதுதான். உணவுப் பண்டங்கள் இல்லை ! படைகளை வலுப்படுத்த மேற்கொண்டு படை

வீரர் கைவசம் இல்லை. நமது யூனியன் படைகள் தோற்று அவமானம் அடைய வேண்டுமா ? நல்ல தருணம் இது ! வீணாகப் படை வீரர் மடிவதைத் தவிர்க்கலாம். முறையாகப் படை திரட்டிப் போரிடலாம் ! திட்ட மில்லாமல் முன்னடி வைத்து விட்டோம் !

லிங்கன்: நானதை ஒப்புக்கொள்ள மாட்டேன் மிஸ்டர் ஸீவேர்டு ! திட்டமிடாமல் நான் எதையும் துவங்க மாட்டேன் ! ஆழம் தெரியாமல் காலை வைக்க மாட்டேன் ! அச்சம் அடைந்தவன் செய்யும் துச்சமான வேலை பின்வாங்குவது ! வலுவில்லாத கோழை புரியும் இலகுவான செயல் அது ! முதுகெலும்பு முறிந்து போனவன் செய்வது அது ! தற்போது பின்வாங்குவது என் திட்டம் இல்லை ! உமது ஆலோசனைக்கு நன்றி !

(அப்போது வொயிட், ஜென்னிங்ஸ் இருவரும் உள்ளே நுழைகிறார்.)

லிங்கன்: என்ன தகவல் வந்திருக்கிறது ?

வொயிட்: மன்னிக்க வேண்டும் மிஸ்டர் பிரசிடெண்ட் ! தென்னகம் பிடிவாதமாக உள்ளது. அவர்கள் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை !

லிங்கன்: (சற்று சினத்துடன்) நான் எடுத்துச் சொன்ன விபரங்களை எல்லாம் கூறினீரா ?

ஜென்னிங்ஸ்: ஆமாம் மிஸ்டர் பிரசிடெண்ட் ! அவரது தீர்மானத்தில் எந்த மாறுதலும் இல்லை !

லிங்கன்: (அழுத்தமாக) நிலைமை படு மோசமாகப் போய் விட்டது. பயங்கரக் கட்டத்துக்கு வந்து விட்டது ! நன்றி ! போய் வாருங்கள் !

(வொயிட், ஜென்னிங்ஸ் அறையை விட்டு வெளியேறுகிறார்.)

லிங்கன்: கடவுளே ! மன உறுதி வேண்டும் நமக்கு ! மிஸ்டர் ஸீவேர்டு ! நம்பிக்கை வேண்டும் நமக்கு ! நமது உடும்புப் பிடியைத் தளர்த்தக் கூடாது ! (மணியை அடிக்கிறார்)

(பணியாள் ஒருவர் வருகிறார்)

லிங்கன்: என் தகவலை அறிவித்தாயா ?

பணியாள்: ஆமாம் மிஸ்டர் பிரசிடெண்ட் ! மிஸ்டர் சேஸ், மிஸ்டர் பிளேர் இங்கு வந்திருக்கிறார்.

லிங்கன்: அவர் இருவரையும் உள்ளே அழைத்து வா உடனே ! (பணியாள் போகிறான்) (சிறிது கணம் தாண்டி) ஷேக்ஸ்பியர் நாடகம் வாசிப்பதுண்டா மிஸ்டர் ஸீவேர்டு ? “மனிதர் தம் பிரச்சனைகளில் அலைகள் எப்போதும் எழுகின்றன !”

ஸீவேர்டு: ஷேக்ஸ்பியரா ? இல்லை நான் படித்ததில்லை !

[அப்போது நிதிப் பொறுப்புச் செயலாளர் ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon) அஞ்சல்துறை அதிபர் மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair) இருவரும் நுழைகிறார். அடுத்து அரசாங்கக் குழுவினர் (Cabinet Members : Simon Cameron, Caleb Smith, Burnet Hook & Gideon Welles) நால்வர் வருகிறார். யாவரும் வந்தனம் தெரிவித்து மேஜையைச் சுற்றி அமர்கிறார்)

லிங்கன்: அரசாங்க உறுப்பினர்களே ! திடீரென்று எழுந்திருக்கிறது ஓர் அரசியல் நெருக்கடி ! நிலமையைச் சொல்லப் போகிறேன் ! கூர்ந்து கேளுங்கள் ! உங்கள் கருத்தைக் கூறுங்கள் ! இதுவரை எதிர்ப்படாத ஒரு கொந்தளிப்பு இக்கட்டில் அமெரிக்கா சிக்கிக் கொள்ளப் போகிறது ! சுருக்கமாகச் சொல்கிறேன். மேஜர் ஆண்டர்ஸன் அனுப்பிய அவசரத் தகவல் இது : சம்டர் கோட்டை முற்றுகையை மூன்று நாட்கள்தான் தொடர முடியும், உடனே உணவும் மிகையான படையினரும் நாம் அனுப்பாவிடில் !

சிமான் காம்ரான்: (வியப்புடன்) அதிர்ச்சி தரும் செய்தி ! எத்தனை பேர் தேவைப்படுகிறார் ?

லிங்கன்: இன்னும் சில நிமிடங்களில் நான் அதைக் கூற முடியும். ஜெனரல் ஸ்காட் மூலம் வரப் போகுது தகவல்.

கிடியான் வெல்லெஸ்: ஒருவேளை அந்த எண்ணிக்கை நம்மிடம் இல்லாவிட்டால் . . . !

லிங்கன்: எனினும் உணவுப் பண்டங்களை நாம் அனுப்ப வேண்டும் முதலில். தேவையை நம்மால் தீர்க்க முடியா விட்டாலும், முடிந்த அளவு நாம் அனுப்ப வேண்டும். உயிர் கொடுக்கும் நமது படைகளுக்கு உணவும் உதவியும் உடனே அனுப்ப வேண்டும் ! அது நமது கடமை !

காட்சி -2 பாகம் -7

unnamed (13)

பர்னெட் ஹூக்: இப்போது நாம் பின்வாங்கினால் தென்னவருக்கு அனுகூலமாய்ப் போய்விடாதா ? தென்னவர் ஆதிக்கம் ஓங்கி விடாதா ? அழுத்தமான பிடியை நாம் தளர்த்தி விட்டால் அவருக்குச் சாதகமாகப் பொதுமக்கள் மனம் மாறிவிடாதா ?

லிங்கன்: என் உள்ளம் தெளிவாக உள்ளது. நமது படை அழுத்தத்தைத் தளர்த்தவே கூடாது. சம்டர் கோட்டை முற்றுகையை நிறுத்திப் பின்வாங்கினால் தேசப் பிளவுக்குத் தென்னக மாநிலங்கள் பாதை வகுக்கும். அடிமைத்தனக் கொடுமை பரம்பரையாய்த் தொடரும். இன்றைக்கு இதை நீக்காவிட்டால் இன்னொரு வாய்ப்பு நமக்குக் கிடைக்காது.

பிளேர்: பிரசிடெண்டு கூறுவதுதான் முறை. நானதை வரவேற்கிறேன்.

பர்னெட் ஹ¥க்: (தயக்கமுடன்) நானதை வரவேற்க வில்லை. போரைத் தவிர்க்க முற்றுகையை விட்டு விலகுவது தோல்வியாகாது. நமக்குச் சிந்தைனை செய்யக் காலம் கிடைக்கிறது. நாம் பின்வாங்க வேண்டும். உயிர்ச் சேதம், பொருட் சேதம் இருபுறமும் தவிர்க்கப்படும்.

லிங்கன்: உங்களுக்குத் தெரிய வில்லையா ? நாம் இப்போது பின்வாங்கினால் போர் தாமதப் படும். ஆனால் போர் தவிர்க்கப்படாது. போர் வராமல் போகாது. ஒன்று இப்போது முன்னிற்கும் போர் அல்லது நம்மேல் பின்னால் புகுத்தப்படும் போர் ! தீயில் காய்ந்து இரும்பு செந்நிறத்தில் மென்மையாக உள்ள போது அதை நினைத்தபடி அடித்து நெளிப்பது எளிது ! இந்த நேரத்தைத் தவற விட்டால் இரும்பு மறுபடியும் இறுகிப் போய் உறுதியாகி விடும் ! போரை நாம் தவிர்க்க முடியாது ! நமது பிரச்சனை இப்போது : தற்போது போரா ? அல்லது தள்ளி வைக்கும் போரா ?

காலெப் ஸ்மித்: நாம் உறுதியாக எதிர்த்து நின்றால் போரைத் தவிர்க்க முடியாதல்லவா ?

லிங்கன்: அதைத்தான் நானும் வலியுறுத்துவேன் ! அப்போது நம் காரணத்துக்கு வலு மிகுதியாகும் ! நம் கொள்கைக்குப் பெரு மதிப்பு கிடைக்கிறது ! தளர விட்டால் நமது கொள்கையும் தண்ணீராய்ப் போகும் ! மிஸ்டர் சேஸ் ! உங்கள் கருத்தென்ன ?

ஸால்மன் சேஸ்: மிகவும் சிக்கலான பிரச்சனைதான் ! ஆனால் என் கருத்து இப்போது பின்வாங்காமல் நீங்கள் சொல்வதுபோல் போரைத் தொடர்வது !

லிங்கன்: மிஸ்டர் ஸீவேர்டு ! உங்கள் கருத்தென்ன ?

ஸீவேர்டு: உங்கள் கருத்தை மதிக்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட். ஆனால் அதில் உடன்பாடில்லை எனக்கு !

லிங்கன்: (மிக்க வியப்புடன்) என்ன ? என் கொள்கையில் உமக்கு உடன்பாடில்லையா ? இரட்டைக் குதிரைகள் இழுக்கும் வாகனம் எப்படி நேராகப் போகும், ஒரு குதிரை வலப்புறமும் அடுத்த குதிரை இடப்புறமும் திரும்பினால் ?

(அப்போது கதவு தட்டும் அரவம் கேட்கிறது)

லிங்கன்: உள்ளே வரலாம்.

(ஹே வருகிறார். லிங்கன் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போகிறார்)

லிங்கன்: (கடிதத்தைப் படித்து) மேலும் இருபதினாயிரம் படையினர் தேவை என்று கூறுகிறார் நமது ஜெனரல் ஸ்காட்.

ஸீவேர்டு: (உடனே) நம்மிடம் இருபதினாயிரம் படையினர் இல்லை மிஸ்டர் பிரசிடெண்ட் !

லிங்கன்: படையினரைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளிக்கப் பல மாதங்கள் ஆகலாம் ! ஆயினும் கோட்டை முற்றுகையை நீடிப்போம். முதலில் உணவுப் பண்டங்களை நாம் அனுப்புவோம். உங்கள் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது, இவற்றை எல்லாம் எடைபோட்டுப் பார்க்க ! போரைத் தளர்த்துவது போரை ஒருபோதும் நிறுத்தாது ! கோட்டை முற்றுகை தொடர வேண்டும் நம்மிடம் உள்ள படைகளைக் கொண்டு ! எந்த விதத்திலும் முயன்று படைகளை நாம் வலுப்படுத்த வேண்டும் ! மன உறுதி தளரக் கூடாது ! தேச ஐக்கியத்தை எப்படியாவது நாம் காக்க வேண்டும் ! போரை நினைத்தாலே என் நெஞ்செல்லாம் நடுங்குகிறது ! ஆனால் நமது காரணம் உன்னத மானது ! புனித மானது ! எதிர்காலச் சந்திகளுக்குத் தேவையானது ! நாம் ஆத்திரத்தால் எதையும் ஆக்கிரமிக்கப் போகவில்லை ! தேசப் பிளவைத் தடுக்கப் போரிடுகிறோம். நாம்தான் ஆக்கிரமப் பட்டிருக்கிறோம். நமது பரிவான அறிவுறுத்தல் யாவும் தோற்றுவிட்டன ! எதிர்த்துப் போரைத் தொடர்வதே நமது பிரதான கடமை ! அரசவை உறுப்பினரே ! உமது ஒத்துழைப்பில்தான் நமக்கு வெற்றி கிடைக்கும் ! (சிறிது தாமதித்து) கோட்டைப் படைக்கு உணவுப் பண்டங்கள் அனுப்புவதை ஆதரிப்போர் யார்யார் ?

(லிங்கன், சேஸ், பிளேர் மூவர் கரத்தை உயர்த்துகிறார்)

லிங்கன்: முற்றுகையை நிறுத்திப் பின்வாங்குவதை ஆதரிப்போர் யார்யார் ?

(ஸீவேர்டு, காமரான், ஸ்மித், ஹூக் நால்வர் கரத்தைத் தூக்குகிறார்)

லிங்கன்: உங்களில் பெரும்பான்மையோர் முடிவைக் கண்டு நான் வருத்தம் அடைகிறேன். உங்களிடமிருந்து அந்தப் பொறுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன். உங்கள் வாக்குகளை மீறிச் செல்கிறேன். எனது “மீறல் தடுப்பைப்” (Veto Power) பயன்படுத்துகிறேன். நான் அமெரிக்கக் காங்கிரஸ் மற்றும் பொதுநபர் திருப்திக்குக் கடமைப் பட்டவன். (தயக்கமுடன் ஆனால் கடுமையாக) யாராவது என் முடிவான தீர்மானத்தை வரவேற்கா விட்டால் பதவியை விட்டு விலகிக் கொள்ளலாம் இப்போது ! யார் பதவியை விடுவதற்கு முன்வருகிறார் ?

(மௌனம் நிலவுகிறது. எல்லோரும் பிரமிப்பில் அசையாமல் நிற்கிறார்)

லிங்கன்: நன்றி உங்கள் வரவேற்புக்கு கோமான்களே ! நீங்கள் போகலாம். கலப்புரையாடல் முடிந்தது.

(எல்லாரும் போகிறார்கள். ஸீவேர்டு மட்டும் போகாமல் நிற்கிறார்)

லிங்கன்: (சினத்துடன்) தவறு, தவறு ஸீவேர்டு ! தவறு. உமது மாறான கருத்து தவறானது.

ஸீவேர்டு: உங்களை நம்புகிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் ! உங்கள் தீர்மானத்தை மதிக்கிறேன் ! அதோடு சரி ! ஆனால் நான் உணர்வதைச் சொல்ல வேண்டும். என் நெஞ்சம் உரைப்பதைச் சொல்லத்தான் நினைக்கிறேன்.

லிங்கன்: மிக்க நன்றி ! பார்க்கலாம். வந்த தூதரிடம் நான் தனியாகப் பேச வேண்டும்.

(ஸீவேர்டு வெளியேறுகிறார். நிலையாய் நிற்கும் லிங்கன் அமெரிக்கப் படத்தைப் பார்க்கிறார். பிறகு கதவைத் திறந்து தூதரை அழைக்கிறார்.)

லிங்கன்: உள்ளே வா ! கதவை மூடு. உடனே மேஜர் ஆண்டர்ஸனிடம் தகவல் தரப் போக வேண்டும் நீ !

தூதுவன்: அப்படியே செய்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் !

லிங்கன்: ஆண்டர்ஸனிடம் சொல் ! மேற்கொண்டு வலுப்படுத்த உடனே படைகள் அனுப்ப எம்மால் இப்போது முடியாது. எங்களிடம் இல்லை என்று சொல் !

தூதுவன்: சொல்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் !

லிங்கன்: மேலும் சொல் ! தேவைப் பொருட்களின் முதல் வாகனப் பயணம் வாஷிங்டனிலிருந்து அனுப்ப ஏற்பாடு செய்வேன் இன்று மாலையே !

தூதுவன்: அப்படியே சொல்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் !

லிங்கன்: சரி போய்வா ! (தூதன் வெளியேறுகிறான்) (லிங்கன் மணி அடிக்கிறார். பணியாள் வருகிறான்.) மிஸ்டர் ஹேயை வரச் சொல். (பணியாள் ஆமோதித்துப் போகிறான்.)

(மிஸ்டர் ஹே வருகிறார்)

லிங்கன்: ஜெனரல் ஸ்காட்டை உடனே அழைத்து வா ! நான் அவருடன் பேச வேண்டும்.

மஸ்டர் ஹே: செய்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் (ஹே போகிறார்)

காட்சி -3 பாகம் -1

unnamed (14)

பங்கெடுப்போர் :

ஆப்ரஹாம் லிங்கன், மேடம் லிங்கன், பணிப்பெண் சூஸன், மற்றும் இரண்டு விருந்தினர்.

இடம் : வாஷிங்டன் D.C. ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் ஒரு வரவேற்பு அறை.

(இதுவரை நடந்தது)

ரிப்பபிளிகன் குழுத் தலைவர் வில்லியம் டக்கர் ஆப்ரஹாம் லிங்கனை வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரிப்பபிளிகன் தேர்வாளராய் நிற்பதற்குச் சம்மதம் கேட்க ஆப்ரஹாம் லிங்கன் ஒப்புக் கொள்கிறார். லிங்கன் தேர்தலில் நின்று முதன்முறையாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்கிறார்.

இப்போதைய காட்சி:

லிங்கனின் ரிப்பபிளிக்கன் கட்சி அரசாங்கப் பொதுச் செயலாளர் (Secratary of State) வில்லியம் ஸீவேர்டு தன் அறையில் அமெரிக்கத் தென்பகுதிக் கூட்டு மாநிலங்களின் கமிஷனர் (Commissioners of Southern Confederate States) ஜான்ஸன் வொயிட், காலெப் ஜென்னிங்ஸ் ஆகியோருடன் அமர்ந்து அடிமைத்தன ஓழிப்பைப் பற்றியும் வரப் போகும் உள்நாட்டுப் போரைப் பற்றியும் பேசிக் கொண்டிடுருக்கிறார். திடீரென்று லிங்கன் ஸீவேர்டு அறைக்குள் நுழைகிறார். தென்னகத்தின் பிடிவாதத்தை வெளியிடும் வொயிட், ஜென்னிங்ஸ் உரையாடல்கள் லிங்கனுக்கு வெறுப்பூட்டுகின்றன. வரப் போகும் உள்நாட்டுப் போரைப் பற்றி இருவருக்குள்ளும் தர்க்கம் நடக்கிறது. அப்போது சம்டர் கோட்டை முற்றுகை செய்யும் மேஜர் ஆண்டர்ஸன் அனுப்பிய படைத் தூதுவன் அதிர்ச்சித் தகவலைக் கொண்டு வருகிறான். பிறகு நிதிப் பொறுப்புச் செயலாளர் ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase) அஞ்சல் துறை அதிபர் மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair) இருவரும் நுழைகிறார். மற்றும் அரசாங்க உறுப்பினர் சிமான் காமரான் (Simon Cameron), காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹ¥க் (Burnet Hook) ஆகியோர் வருகிறார்கள். அவரோடு கலந்து போர் சம்மந்தமாக உரையாடி சம்டர் கோட்டை முற்றுகையைத் தொடர்வது என்று முடிவு செய்கிறார் லிங்கன். உள்நாட்டுப் போர் துவங்கி மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது.

(இரண்டு ஆண்டுகள் கடந்து)

வெள்ளை மாளிகை விருந்தினர் வரவேற்பு அறையில் ஆப்ரஹாம் லிங்கன் சில விருந்தினருடன் போரைப் பற்றி ஆவேசமாய் உரையாடுகிறார். விருந்தினர் போன பிறகு வயதான ஒர் நீக்ரோ உள்ளே வருகிறார்.

unnamed (15)

(இரண்டு ஆண்டுகள் கடந்து)

மேடம் லிங்கன்: சூஸன் ! பலருக்கு அழைப்பு அனுப்பி யிருக்கிறேன். வருபவர் யாராயினும் உள்ளே அழைத்து வா ! பிரசிடெண்ட் தேனீர் விருந்தில் கலந்து கொள்வாரா என்று கேள் !

சூஸன்: மிஸ்டர் லிங்கன் இங்கு வருவதாக இப்போதுதான் தகவல் அனுப்பி இருக்கிறார்.

மேடம் லிங்கன்: நல்லது தேனீர் விருந்துக்கு அவரே இங்கு வருகிறார்.

(சூஸன் போகிறாள்)

மேடம் லிங்கன்: சூஸன் ! இங்கே வா ! உன்னிடம் இதைச் சொல்ல வேண்டும்.

சூஸன்: (திரும்பிப் பார்த்து) இதோ வருகிறேன்.

மேடம் லிங்கன்: இன்னும் நீ “மிஸ்டர் லிங்கன்” என்றே சொல்லி வருகிறாய். உன் பழைய புத்தி போக வில்லையே ! “மிஸ்டர் பிரசிடெண்ட்” என்று நீ சொல்ல வேண்டும் தெரியுதா ?

சூஸன்: அப்படியே சொல்கிறேன் மேடம். பதினைந்து வருடமாக மிஸ்டர் லிங்கன் என்றே அழைத்த பழக்கத்தை மாற்ற முடிய வில்லை மேடம் !

மேடம் லிங்கன்: மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாரும் மிஸ்டர் பிரசிடெண்ட் என்றுதான் அவரை அழைக்கிறார். நீயும் அதை வழக்கத்துக்குக் கொண்டு வா.

சூஸன்: இல்லை மேடம் ! பலர் அவரைக் கடைவீதிகளில் “பிதா ஆப்ரஹாம்” என்று விளிக்கிறார். அவரை விரும்பும் பலர் அதை விட இன்னும் கனிவுடன் அழைக்கிறார். இன்று கடை உரிமையாளர் மிஸ்டர் கோல்டுபென்னி என்னைப் பார்த்துக் கேட்டார், ” சூஸன் ! எப்படி வயது முதிர்ந்த ஆபி (Abe) நலமா ?

மேடம் லிங்கன்: அதை யெல்லாம் நீ ஆதரிக்கக் கூடாது ! மிஸ்டர் பிரசிடெண்ட் என்றுதான் சொல்ல வேண்டும்.

சூஸன்: சரி மேடம். நான் இதற்கு முன் எப்போதும் அவரை மிஸ்டர் லிங்கன் என்றுதான் அழைப்பேன்.

மேடம்: இல்லை சூஸன் ! அப்படித்தான் அழைக்கக் கூடாது என்றுனக்கு அறிவுரை கொடுத்தேன். அதற்குள் மறந்து விட்டாயே ! மிஸ்டர் பிரசிடெண்ட் என்றுதான் இனி நீ சொல்ல வேண்டும்.

சூஸன்: இந்த மண்டைக்குள் அது ஏறாது மேடம் ! அந்த வழக்கத்தைக் கற்றுக் கொள்ள முடியவில்லை மேடம் ! தவறிப் போய் எப்படியாவது வாயில் வந்து விடுகிறது.

unnamed (16)

மேடம் லிங்கன்: தனியாக இருக்கும் போது அதைச் சொல்லிச் சொல்லிப் பழகு, அடிக்கடி பயிற்சி செய் !

சூஸன்: அப்படியே பயிற்சி செய்கிறேன் மேடம்.

மேடம் லிங்கன்: சரி வருபவர் யாராயினும் உள்ளே அழைத்து வா !

சூஸன்: முன்னறையில் ஒரு மேடம் காத்திருக்கிறார்.

மேடம் லிங்கன்: அதை அல்லவா முதலில் எனக்குச் சொல்ல வேண்டும். சரி அவரை உள்ளே அழைத்து வா.

(சூஸன் வெளியே சென்று மிஸிஸ் கோலியாத் பிளோவை அழைத்து வருகிறாள்.)

கோலியாத் பிளோ (Goliath Blow) வணக்கம் மிஸிஸ் லிங்கன். பிரசிடெண்ட் எப்படி இருக்கிறார் போர் மும்முரத்தில் ?

மேடம் லிங்கன்: வந்தனம் மிஸிஸ் பிளோ, அமருங்கள். பிரசிடெண்ட் மிகவும் களைப்போடு இருக்கிறார். இரவில் தூக்கம் இல்லை ! சரியாக உண்பதில்லை ! சதா போரைப் பற்றித்தான் நினைவு ! தினமும் நமது மக்கள் இருபுறமும் சாவதை அவரால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை ! மன வேதனையில் வாடி எலும்புக் கூடாய் போய்விட்டார்.

மிஸிஸ் பிளோ: இந்தப் போர் பயங்கரமானது ! இன்னும் எத்தனை பேர் பலியாகப் போகிறாரோ ? ஆனாலும் பிரசிடெண்ட் போரிடுவதில் மட்டும் களைப்படைய வில்லை !

மேடம் லிங்கன்: வெற்றியோடு போர் முடியாதா என்றுதான் கவலை அவருக்கு ! ஆனால் போரை நடுவழியில் எப்படி நிறுத்துவது ? யூனியனில் பலர் அடிமை விடுதலைக்காக உயிரைப் பலிகொடுத்தது வீணாகப் போகாதா ?

மிஸிஸ் பிளோ: மிஸிஸ் லிங்கன் ! அவர் வேதனைப்பட விடக் கூடாது நீங்கள். தென்னக அரக்கரை (Monsters) மிதித்துக் காலால் நசுக்க வேண்டும் !

மேடம் லிங்கன்: கவலைப் பட வேண்டாம் ! பிரசிடெண்டுக்கு மன ஊக்கம் மிகுதி !

மிஸிஸ் பிளோ: நான் நேற்று என் கணவரிடம் சொன்னேன். இந்த தென்னவர் கதறிக் கதற நோக அடித்து நொருக்க வேண்டும் என்று ! வடக்கு சரியான பாடம் தென்னவருக்குக் கற்பிக்க வேண்டும் !

unnamed (17)

(சூஸன் வருகிறாள்)

சூஸன்: மேடம் ! மிஸிஸ் ஆர்தலி (Mrs. Otherly) வந்திருக்கிறார்.

மேடம் லிங்கன்: உள்ளே அழைத்துவா !

மிஸிஸ் பிளோ: யார் மிஸிஸ் ஆதர்லியா ? அந்த பயங்கர மாதா ? போரை நிறுத்த வேண்டும் என்று ஊரில் முரசடிப்பவள் ஆயிற்றே !

(மிஸிஸ் ஆதர்லியை அழைத்து வருகிறாள் சூஸன்)

மேடம் லிங்கன்: வந்தனம் மிஸிஸ் ஆதர்லி ! உட்காருங்கள். மிஸிஸ் பிளோவைத் தெரியுமல்லவா உங்களுக்கு ?

மிஸிஸ் ஆதர்லி: ஆமாம் தெரியும் ! வந்தனம் இருவருக்கும். (அமர்கிறாள்)

மிஸிஸ் பிளோ: மிஸிஸ் லிங்கன் ! இன்னும் மூன்று வருடத்துக்குப் போர் நீடிக்கும் என்று என் கணவர் சொல்கிறார் !

மிஸிஸ் ஆதர்லி: மூன்று வருடமா ? அப்படியானால் அது பயங்கர யுத்தமாச்சே !

மிஸிஸ் பிளோ: நாமெல்லாம் நமது தேவைகளைத் தியாகம் செய்ய வேண்டும், இப்போது !

மிஸிஸ் ஆதர்லி: மாந்தரெல்லாம் உயிரைத் தியாகம் செய்கிறாரே அதற்கு மேல் எதைத் தியாகம் செய்ய வேண்டும் ?

மிஸிஸ் பிளோ: என் இரத்தம் கொதிக்கிறது உயிரிழப்போரை நினைத்தால் !

unnamed

மிஸிஸ் ஆதர்லி: மரண மடைந்தவரில் பலரை நான் அறிவேன் ! அவரெல்லாம் கருணை மிக்கவர் ! நல்லவர் ! உயிரைக் கொடுத்தோர் கவலை ஒரு வகையில் தீர்ந்தது ! கணவனைப் பலிகொடுத்தோர் இழப்புதான் இப்போது தீராதது பெரிது ! மகனைப் பலி கொடுத்தோர் இழப்போ தாங்க முடியாதது ! மகனையும், பதியையும் பறி கொடுத்த மாதரின் இரட்டை இழப்புக்கு ஈடு இணை கிடையாது !

மிஸிஸ் பிளோ: நமக்குள்ளே சிலர் தேசத் துரோகிகளாக உளவி வருகிறார். நாடு பிளவு படக் கூடாதென்று நாம் போரிட்டு நமது மக்களைப் பலி கொடுக்கிறோம். நாடு துண்டாக வேண்டும் என்று தென்னவர் நம்மைத் தீவிரமாக எதிர்த்து அவரது மக்களைப் பலி கொடுத்து வருகிறார். யார் பக்கம் நியாயம் உள்ளது ? ஐயமின்றி நம் பக்கம்தான் என்பது என் கருத்து. . . . சரி இன்று நாங்கள் வந்ததே முதலில் நமது பிரசிடெண்டைக் கண்டு பேசத்தான் ! இப்போது இங்கு வருகிறாரா ?

மேடம் லிங்கன்: ஆமாம் சில நிமிடங்களில் பிரசிடெண்ட் வந்து விடுவார். சற்று பொறுப்பீரா ?

மிஸிஸ் பிளோ: போரால் இழப்பு : உயிர்கள் மட்டுமல்ல ! பொருள்களின் விலைகள் ஏறிக் கொண்டே போகின்றன. நானும் என் கணவரும் செலவுகளை எல்லாம் குறைத்து விட்டோம். உணவு, உடை, பொழுது போக்கு எல்லாவற்றையும் சுருக்கிக் கொண்டோம்.

(அப்போது ஆப்ரஹாம் லிங்கன் வருகிறார். மாதர் இருவரும் எழுந்து நின்று ஆப்ரஹாமின் கையைக் குலுக்கி வந்தனம் தெரிவிக்கிறார்)

ஆப்ரஹாம் லிங்கன்: வந்தனம் இருவருக்கும். (எல்லாரும் உட்காருகிறார். சூஸன் அனைவருக்கும் சிற்றுண்டி தேனீர் வழங்குகிறாள்)

மிஸிஸ் பிளோ: அதிர்ச்சிச் செய்தி ஏதேனும் உண்டா மிஸ்டர் பிரசிடெண்ட் ?

ஆப்ரஹாம் லிங்கன்: மேடம் ! ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போது என் காதில் விழும் முதல் அறிவிப்பு : நூறு, இருநூறு அல்லது ஆயிர எண்ணிக்கையில் என் தேச மாந்தர் கொல்லப்படுவது எல்லாம் என் நெஞ்சைத் தாக்கும் அதிர்ச்சிச் செய்திதான் !

மிஸிஸ் பிளோ: அது உண்மைதான். அது சரி ! நல்ல செய்தி ஏதாயினும் உள்ளதா ?

ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் ! வெற்றிச் செய்தி இது ! தென்னவர் இறப்பு : 2700 பேர் ! நம்மவர் இழப்பு : 800 பேர் !

மிஸிஸ் பிளோ: மகிழத் தக்க செய்திதான் !

ஆப்ரஹாம் லிங்கன்: அப்படியா ? நமது பக்க மரணம் : 800 அல்ல ! 3500 பேர்கள் !

மிஸிஸ் பிளோ: அப்படிச் சொல்லாதீர்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் ! கொல்லப்பட்டவர் மெய்யாக 800 பேர்தானே ? சொல்லுங்கள் எத்தனை என்று !

ஆப்ரஹாம் லிங்கன்: மேடம் ! உங்கள் இதயத்தை விட உலகம் பெரியது !

மிஸிஸ் பிளோ: (முறுவலுடன்) மிஸிஸ் லிங்கன் ! பிரசிடெண்ட் நம்முடன் நகைப்பாகப் பேசுகிறார் !

(சூஸன் வந்து இரண்டாவது தடவை அனைவருக்கும் கிண்ணத்தில் தேனீர் ஊற்றுகிறாள்)

மிஸிஸ் ஆதர்லி: மிஸ்டர் பிரசிடெண்ட் ! உங்க தேசப் பொறுப்பு எல்லோரை விட அதிகமானது ! உங்கள் வேலை மிகக் கடுமையானது ! உங்களை நான் குறைகூற முடியாது ! நானொரு கேள்வி கேட்கலாமா ?

ஆப்ரஹாம் லிங்கன்: (கூர்ந்து கவனிப்புடன்) கேளுங்கள் மேடம் !

மிஸிஸ் ஆதர்லி: வேதனைப் படும் இந்த தேசத்தின் நலத்தைக் கருதி நானிதைக் கேட்கிறேன் ! இந்தக் கொடூர உள்நாட்டுப் போரை உங்களால் நிறுத்த முடியாதா ?

ஆப்ரஹாம் லிங்கன்: அந்தக் கேள்வி இந்த மண்டையில் ஒருபோதும் எழுந்ததில்லை மேடம் !

(மிஸிஸ் லிங்கன் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறார்.)

unnamed (19)

காட்சி -3 பாகம் -2

ஆப்ரஹாம் லிங்கன்: உங்கள் கேள்வி கருத்துள்ள கேள்வி ! கனிவுள்ள கேள்வி மேடம் ! என் போக்கு எப்போதும் திரும்பிப் பாராத நேர்போக்கு மேடம் ! போருக்குக் காரணமான மூலப் பிரச்சனையை நிறுத்த முடியாமல் போனது மேடம் ! அதற்கு வருந்துகிறேன் மேடம் ! தேச முழுமையைக் காப்பாற்ற வேண்டும் நான் ! எத்தனை உயிர்கள் பலியாகி, எத்தனை ஆண்டுகள் போரிட்டு இந்த தேசம் உருவாகி வந்திருக்கிறது ? இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தப் போர் ஒரு மணிநேரக் கசப்புக் கதையாக ஆகிவிடும் ! மற்ற மனிதரைப் போல் நானும் அதே அளவு துயரில் வேதனைப்படுகிறேன் மேடம் ! இப்போது அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த இந்தப் போரின் மூலக் காரணம் நேர்மையானது. அந்தக் காரணம் அன்றும் நியாயமானது ! இன்றும் நியாயமானது ! என்றும் நியாயமானது ! அதிலிருந்து மாறுதல் இல்லை எனக்கு !

மிஸிஸ் ஆதர்லி: மிஸ்டர் பிரசிடெண்ட் ! உங்கள் பண்பு நேர்மையானது ! பெருந்தன்மையுள்ளது ! ஆனால் போர் கொடிது ! போர் புரிவது எக்காரணம் கொண்டிருந்தாலும் தவறானது ! மனிதரால் தவிர்க்கப்பட வேண்டியது ! மாந்தரால் தடுக்கப்பட வேண்டியது !

மிஸிஸ் பிளோ: இந்த மாதிரி எதிர்மறைப் பேச்சுக்கள் பிரசிடெண்ட் மனதை மிகவும் பலவீனப் படுத்தும். மன உறுதியைத் தளர்த்தும்.

ஆப்ரஹாம் லிங்கன்: அதுபோல் நீங்கள் மனம் தளர வேண்டாம் மிஸிஸ் பிளோ ! போர் என்பது தவறு, தவிர்க்கப்பட வேண்டியது என்பது என்னுடைய கொள்கைதான் ! மனிதப் பேராசை, மனிதப் பொறாமை, மனிதர் மூடத்தனம், பெரு வலிமை ஆகியவைதான் போரை ஆரம்பிக்கும். மேடம் ! மனிதர் குறைபாடு உடையவர் ! மனிதப் போக்கு நேர்மையை வெறுப்பது ! நியாயத்தை மறுப்பது ! மனிதர் பலவீனமானவர் ! பொறாமை யுடையவர் ! பேராசை கொண்டவர் ! தமது மேலான பலத்தை நிலைநாட்டுபவர் ! உலகம் வளைந்தது ! நம்மால் நிமிர்த்த முடியாது ! எளியவர், வலுவானர் இருப்பதால் போர் மூள்கிறது. வலு மிகுந்தவர் இருக்கும் வரை எளியவர் மீது அவர் தாக்குவதைத் தவிர்க்க முடியாது. வலுவானவர் ஆக்கிரமிப்பு இருந்தே தீரும். நம்மில் நல்லவர் சிலர் ! தீயவர் பலர் ! தீயவர் ஆக்கிரமிப்பைத் தடுக்க நல்லவர் வல்லவராக வேண்டும் ! அவ்விதம் நல்லவர் தீயவரைத் தடுக்காவிட்டால் தீயவர் தீப்போல் பரவிடுவார். அத்தகைய போராட்டம் புரிவதில் ஏதும் தவறில்லை ! ஆக்கிரமிப்பாளர் நடத்தும் போரை நாம் வேடிக்கை பார்க்க முடியாது ! போருக்கு முடிவு கட்ட அதில் புகுந்து கொண்டு போரிட வேண்டும் ! சமரசம் நிலவ வேண்டு மானால் போரிடத்தான் வேண்டும் ! முடிவில் போரினி நேரக் கூடாது என்று பிரார்த்திக்கலாம். பூரண மனிதர் வாழாத நாட்டிலே போரின்றி வாழ முடியாது ! எனக்கு நேர்மையாகத் தெரிந்த ஒரு மனித நியாயத்துக்கு நான் போரிட வேண்டியதாயிற்று ! நான் துவக்கிய உள்நாட்டுப் போர் சரியா தவறா என்று வரலாறுதான் சொல்லும் !

unnamed (20)

மிஸிஸ் பிளோ: உங்கள் நியாயத்துக்கு நான் உடன்பாடு தெரிவிக்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் ! தென்னகக் காட்டுமிராண்டிகளை அடித்து ஒடுக்க வேண்டும் ! அவரைக் கொன்று அழிக்காமல் ஓர் பாடம் கற்பிக்க வேண்டும். அப்படித்தான் என் கணவரும் சொல்கிறார்.

ஆப்ரஹாம் லிங்கன்: உன் கணவர் வயதானவராக இருக்க வேண்டும்.

மிஸிஸ் பிளோ: அப்படி ஒன்றும் வயதானவர் இல்லை மிஸ்டர் பிரசிடெண்ட் ! கணவருக்கு 38 வயதுதான் !

ஆப்ரஹாம் லிங்கன்: அப்படியா அவருக்கு என் அரசவை ஆலோசனைக் குழுவில் வேலை தரலாம் !

மிஸிஸ் பிளோ: அவருக்கு வேலைப் பளு அதிகம் ! நன்றி மிஸ்டர் பிரசிடெண்ட் ! அரசாங்க ஒப்பந்த வேலைகள் செய்கிறார். பணம் சம்பாதிப்பது அவர் முதல் கடமை ! பணத்தைச் சேமிப்பது இரண்டாவது கடமை ! ஆனாலும் போரை நிறுத்தப் போவதில்லை என்று நீங்கள் பேசுவது அவருக்குப் பிடிக்கும். போரால் அவருக்கு வருமானம் அதிகம் ! அவரிடம் உங்கள் உரையாடலைச் சொல்வேன். நாமெல்லாம் போரை எதிர்த்துப் புகாரிடலாம். போரால் ஆதாயமும் உள்ளது. அதே சமயத்தில் தியாயகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.

ஆப்ரஹாம் லிங்கன்: மிஸிஸ் பிளோ ! நீங்கள் சொல்லும் ஆதாயத்துக்கு நான் போரைத் துவக்க வில்லை ! என் காரணம் நேர்மையானது ! நியாயமானது !

மிஸிஸ் ஆதர்லி: நன்றி மிஸ்டர் பிரசிடெண்ட் ! நீங்கள் சொல்லியவற்றை நான் சிந்தித்துப் பார்க்கிறேன். போர் தவறானது என்று எப்போதும் நம்புகிறவள் நான் ! என் மகனைப் போருக்குப் போகக் கூடாது என்று சொல்லி வருகிறேன் ! ஏனெனில் இந்தப் போரை நடத்துவதில் எனக்கு நல்லெண்ணம் இல்லை ! ஆனால் என் மகன் கேட்பதில்லை ! போவதற்குத் தயாராகிறான் ! போருக்குப் போகப் போகிறான் என் மகன் ! தாய் மனம் துடிக்கிறது ! (மிஸிஸ் ஆதர்லி கண்களில் கண்ணீர் பொங்குகிறது) அவனுக்கு என் அறிவுரை புரிய வில்லை ! உங்களைப் போல்தான் அவனும் உரையாடுகிறான் ! அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்று அழுத்தமாக இருக்கிறான் ! என்ன செய்வது நான் ? எப்படி நிறுத்துவது அவனை ? நீங்கள் போரை நிறுத்தினால் ஒழிய நான் என் மகனை நிறுத்த முடியாது மிஸ்டர் பிரசிடெண்ட் ! அவன் போருக்குப் போகவில்லை ! சாவதற்குப் போகிறான் !

ஆப்ரஹாம் லிங்கன்: உன் மகனைப் பாராட்டுகிறேன் மிஸிஸ் ஆதர்லி ! போரைத் துவக்கிய எனக்கு உன் மகனைப் போன்றோர் உதவி செய்வது வலுவைக் கொடுக்கிறது ! ஆனால் உன்னைப் போன்ற தாய்மார்கள் இருப்பதால்தான் உன் மகனைப் போன்ற புதல்வர் பிறக்கிறார். அதனால் உனக்கு எனது பாராட்டுகள் அதிகம் மிஸிஸ் ஆதர்லி !

மிஸிஸ் ஆதர்லி: மிக்க நன்றி மிஸ்டர் பிரசிடெண்ட் ! நான் போய் வருகிறேன் ! உங்களுக்கு எதிராகப் பேசியதற்கு எனக்கு வருத்தமில்லை ! என் மனக் கருத்தைச் சொன்னேன் ! மன்னிக்க வேண்டும் மிஸ்டர் பிரசிடெண்ட் ! போய் வருகிறேன் !

ஆப்ரஹாம் லிங்கன்: கவலைப்பட வேண்டாம் மிஸிஸ் ஆதர்லி ! போய் வாருங்கள் ! வெளிப்படையாக நீங்கள் மனந்திறந்து பேசியது மகிழ்ச்சி அளிக்குது எனக்கு !

(மிஸிஸ் ஆதர்லி போகிறாள்.)

காட்சி -3 பாகம் -3

unnamed (21)

ஆப்ரஹாம் லிங்கன்: நாமெல்லாம் பலவீன மனிதர் மிஸிஸ் பிளோ ! என் மீது மாதராகிய நீங்கள் ஓரளவு பரிவு காட்டினால் போதும்.

மிஸிஸ் பிளோ: பரிதாபப் படுகிறேன் நான் மிஸிஸ் ஆதர்லிக்கு ! மகன் போருக்கு போவதைத் தாயால் நிறுத்த முடிய வில்லை ! அதனால் உள்நாட்டுப் போரைப் பிரசிடெண்ட் நிறுத்த வேண்டும் என்று கண்ணீர் சிந்திவிட்டுப் போகிறாள் ! போரை நிறுத்தினால் தேசம் பிளவுபட்டுப் போகும் என்று கவலை யில்லை அந்த மாதுக்கு ! நீங்கள் நிமிர்ந்து நின்று ஒரே சிந்தனையில் போரை நடத்துவதற்கு மெச்சுகிறேன் உங்களை மிஸ்டர் பிரசிடெண்ட் ! உள்நாட்டுப் போர்தரும் தொல்லைகளை விட உங்களுக்குக் குடிமக்கள் தரும் எதிர்ப்புக் கலவரங்கள் பயங்கரமானவை. என் கணவர் சொல்கிறார்: தென்னாட்டாருக்குப் பின்னால் எந்தக் கருணையும் காட்டக் கூடாதென்று ! தென்னவர் மடியட்டும் ! அழியட்டும் ! போருக்குப் பின் அவரோடு நான் எந்தப் பேச்சும் உறவும் வைத்துக் கொள்ள மாட்டேன் !

ஆப்ரஹாம் லிங்கன்: அப்படிப் பேசாதீர் மேடம் ! தென்னவர் சண்டை யிட்டாலும் நம்மவர்தான் ! எனக்குத் தென்னவர் மீது வெறுப்புக் கிடையாது ! போர் முடிந்த பிறகு தென்னவர் வடவர் என்னும் பிரிவினை நம்மை விட்டு மறைய வேண்டும். அனைவரும் அமெரிக்கராய் மீண்டும் நடத்தப்படுவார் ! இரு குடிமக்களும் என்னிரு கண்கள் ஆவார் மிஸிஸ் பிளோ !

மிஸிஸ் பிளோ: ஆனாலும் ஒரு கண் மறு கண்ணைக் குத்தலாமா ? அவரைப் பழி வாங்க வேண்டும் ! என் கணவர் காத்திருப்பார் ! நான் போய் வருகிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் !

(மிஸிஸ் பிளோ கை குலுக்க கரத்தை நீட்டுகிறார். ஆனால் லிங்கன் கை நீட்டவில்லை )

unnamed (22)

ஆப்ரஹாம் லிங்கன்: (வருத்தமுடன்) போவதற்கு முன் என் அறிவுரையைக் கேளுங்கள் மிஸிஸ் பிளோ ! (வெளியே போகும் மிஸிஸ் பிளோ திரும்பிப் பார்த்து நிற்கிறாள்) பரிவுள்ள அந்த மாது மிஸிஸ் ஆதர்லி தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசினாள். அவள் கருத்துக்கு நான் உடன்படா விட்டாலும், நான் அதை மதிக்கிறேன். அவள் கூறியது தவறுதான். ஆனால் அது பெருந்தன்மையான பண்பு. அதே சமயம் உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் ! உங்களைப் போன்ற நபரால் நான் அவமானப் படுகிறேன். நீங்கள் யாரும் எந்தத் தியாகமும் செய்ய வில்லை. மற்றவர் தென்னவரைத் தாக்கி வெற்றி பெறும் போது, உங்களைப் போன்றோர் அவரை வீழ்த்தி அழிக்க முற்படுகிறீர் ! நானிந்தப் போரை ஏற்றுக் கொண்டது, வெந்த இதயதோடுதான் ! தினமும் நொந்து நொந்து நொறுங்குகிறது என் நெஞ்சம் ! நானிந்தப் போரை ஏற்றுக் கொண்டது மனித நேயத்தை முன்னிட்டுத்தான் ! மனித நேர்மைக்கு வழி வகுக்கத்தான் ! மனித நீதிக்கு தலை வணங்கித்தான் ! வையக நன்னெறிக்குத்தான் ! மானிட அன்பு மயத்தின் மீது நம்பிக்கை வைத்துத்தான் ! ஆனால் நீவீர் என்முன் வந்து தென்னவரைப் பழிவாங்கச் சொல்கிறீர் ! பகைக்கச் சொல்கிறீர் ! வெறுக்கச் சொல்கிறீர் ! ஒழிக்கச் சொல்கிறீர் ! இந்தக் கனிவான தென்னவரைப் பற்றித் தவறான முறையில் கருதி அவமதிக்கிறீர் ! உம்மைப் போன்றவர்தான் உண்மையாக நான் கடைப்பிடிக்கும் நல்ல காரணத்தை அவமதிக்கிறீர் ! நமது மேலான காரணத்தைக் கீழான நிலைக்கு இழுத்து விடுகிறீர் ! போய் வாருங்கள் மிஸிஸ் பிளோ !

unnamed (23)

(மிஸிஸ் பிளோ சட்டென வெளியே போகிறார்)

ஆப்ரஹாம் லிங்கன்: (மணி அடிக்கிறார். பணிப்பெண் சூஸன் வருகிறாள்) சூஸன் ! மிஸிஸ் பிளோ இனி ஒருமுறை வந்தால் உள்ளே அனுமதிக்காதே ! வெளி அறையிலே உட்கார வை.

சூஸன்: அப்படியே செய்கிறேன் ஐயா. வேறு எதுவும் செய்ய வேண்டுமா ஐயா ?

(மிஸிஸ் லிங்கன் வந்து கொண்டே சூஸனை முறைத்துப் பார்க்கிறாள்)

சூஸன்: வேறு ஏதாகிலும் வேண்டுமா மிஸ்டர் பிரசிடெண்ட் ?

ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் ! மிஸ்டர் வில்லியம் கர்டிஸ் வாசலில் வந்தால் உள்ளே அழைத்து வா. நான் போய் என் கோட்டை மாற்றிக் கொண்டு வருகிறேன்.

சூஸன்: அப்படி செய்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட்.

(சூஸன் மேஜையில் இருக்கும் தேனீர் கிண்ணங்களைத் தட்டில் எடுத்து வைக்கிறாள். அவள் கதவோரம் போகும் போது எதிரே தலைமுடி நரைத்த ஒரு வயதான நீக்ரோ நிற்பதைக் கண்டு தடுமாறுகிறாள்)

நீக்ரோ: (மிக மெதுவாக அமைதியாக) உள்ளே நான் வருவது அனுமதிக்கப்படுமா ?

சூஸன்: (சற்று வெறுப்புடன்) நீ யாரென முதலில் சொல் ! வாசலில் நான் வந்து அழைப்பதற்குள் இத்தனை அவசரமா ? யார் நீ ?

unnamed (24)

Fig. 7

Civil Torture during the Civil War

நீக்ரோ: என் பேர் கர்டிஸ் ! வில்லியம் கர்டிஸ் ! மிஸ்டர் லிங்கன் வரச் சொன்னார் ! வந்தேன் ! வாசலில் யாருமில்லை ! உள்ளே நுழைந்தேன் மிஸ்டர் லிங்கனைப் பார்க்க ! மிஸ்டர் லிங்கன் இங்கேதானே இருக்கார் ? இல்லை யென்றால் போய் விடுகிறேன் !

சூஸன்: (சமாளித்துக் கொண்டு) ஓ ! நீ தான் வில்லியம் கர்டிஸா ? உள்ளே வரலாம். மிஸ்டர் லிங்கன் வந்து விடுவார். உட்கார் இங்கே வரும்வரை !

நீக்ரோ: மிஸ்டர் லிங்கன் இங்குதான் வசிக்கிறாரா ? நீ அவருடைய வேலைக்காரியா ? மிஸ்டர் லிங்கனுக்கு வேலை செய்யக் கொடுத்து வைத்த சின்னப் பொண்ணு !

சூஸன்: ஆமாம் நான் மிஸ்டர் லிங்கனுக்கு வேலை செய்யும் பணிப்பெண்தான் !

நீக்ரோ: அடிமையாகத் தென்னகத்தில் வேலை செய்வது கொடுமை ! படு கொடுமை !

சூஸன்: இதோ பார் வில்லியம் ! என்னை அடிமைகளுக்குச் சமமாக எடை போட வேண்டாம் !

unnamed (25)

கர்டிஸ்: நீ என்னைப் போல் அடிமை இல்லையா ? வேலைக்காரி நீ ! ஆனால் விடுதலைப் பெண்ணு ! ஏழை வேலைக்காரி ! ஆனா விடுதலை உண்டு !

சூஸன்: இதோ பாரு ! எனக்குப் பரிதாபப் படாதே உன்னைப் போன்ற அடிமையாய் நினைத்து !

கர்டிஸ்: உனக்குப் பரிதாபப் படலே சின்னப் பொண்ணே ! நீ சாமர்த்தியக்காரி !

சூஸன்: அப்படி இல்லாவிட்டால் நான் வெள்ளை மாளிகையில் கால் வைக்க முடியுமா ?

கர்டிஸ்: எல்லாரும் உன்னைப் போல் விடுதலையோடு வேலை செய்ய முடியாது ! அதனாலேதான் நீ சாமர்த்தியக்காரி என்னு சொன்னேன்.

சூஸன்: நான் அடிமைப் பெண்ணு விடுதலைப் பெண்ணு என்றெல்லாம் சிந்திப்பது இல்லை !

கர்டிஸ்: நான் அடிமை வேலையைப் பத்திதான் எப்போதும் வேதனைப் படுவேன்.

சூஸன்: இப்போ நீ அடிமையாக வாழ வில்லை அல்லவா ?

கர்டிஸ்: ஆமாம். ஆனால் ஒரு காலத்தில் அடிமையா பிறந்தேன். அடிமையா வளர்ந்தேன். சிறுவனாக இருந்த போது சவுக்கடிகள் பல வாங்கி யிருக்கேன். (சட்டையை எடுத்துத் தடத்தைக் காட்டுகிறான்) தப்பி ஓடியதுக்கு என் தகப்பன் தூக்கிலே தொங்கினார் ! தாய் இன்னும் அலபாமாவில் அடிமை வேலைக்காரியா இருக்கிறாள். நான் தப்பி ஓடி வந்திட்டேன் ! என்னை எங்க எஜமான் ஆள் வைத்து தேடிக் கொண்டிருப்பதாகத் தெரியுது ! தலை மறைவா திரியுறேன் !

சூஸன்: கேட்கவே பொறுக்கவில்லை எனக்கு ! பாவம் நீ உன் தகப்பன் தாய் ! இதோ மிஸ்டர் லிங்கன் வருகிறார். நீ அஞ்ச வேண்டியதில்லை ! அடிமைக் கெல்லாம் விடுதலை கிடைக்கப் போகுது !

(அப்போது ஆப்ரஹாம் லிங்கன் வருகிறார். வில்லியம் கர்டிஸ் எழுந்து தலை குனிந்து மரியாதை செய்கிறார். சூஸன் வேகமாகப் போகிறாள்.)

காட்சி 3 பாகம் -4

ஆப்ரஹாம் லிங்கன்: (புன்முறுவலுடன் கை நீட்டி வந்து கொண்டே) வாருங்கள் மிஸ்டர் கர்டிஸ். உங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சி ஊட்டுகிறது.

(கர்டிஸ் எழுந்து சிரித்துக் கொண்டு லிங்கன் கையைக் குலுக்குகிறார். கையை வாயில் முத்தமிடுகிறார்.)

ஆப்ரஹாம் லிங்கன்: (உட்கார்ந்து கொண்டே) உட்காருங்கள்.

(கர்டிஸ் நாற்காலியில் அமரத் தயங்கிறார்)

நீக்ரோ: என்னைக் கண்டு பேச அழைத்த உங்கள் கருணைக்கு வந்தனம் செய்கிறேன். உங்கள் முன்பு கூச்சம் எனக்கு ! நின்று கொண்டே பேசுகிறேன் ! அதுதான் என் பழக்கம் மிஸ்டர் லிங்கன். வெள்ளை எஜமானர் முன் நின்று கொண்டு நான் பேசித்தான் பழக்கம்.

ஆப்ரஹாம் லிங்கன்: முதலில் அமருங்கள் ! நீங்கள் வர மறுப்பீரோ என்று பயந்தேன் !

(கர்டிஸ் தடுமாறிக் கொண்டு அமர்கிறார். பிறகு எழுகிறார்.)

நீக்ரோ: (சிரிப்புடன்) என்னை அழைத்ததில் மகிழ்ச்சி ! இங்கு நான் வந்ததில் மகிழ்ச்சி ! என்னோடு மிஸ்டர் லிங்கன் பேசுவதில் பெரு மகிழ்ச்சி !

ஆப்ரஹாம் லிங்கன்: உட்காருங்கள் ! நாற்காலி அருகில் நிற்க வேண்டாம் !

நீக்ரோ: கறுப்பருக்குப் பக்கத்தில் கறுப்பர் ! வெள்ளையருக்குப் பக்கத்தில் வெள்ளையர் ! அதுதான் விதி ! மேலும் சரியாக நான் உட்கார முடியாது மிஸ்டர் லிங்கன் !

ஆப்ரஹாம் லிங்கன்: முட்டாள்தனம் ! இரண்டு முதியவர் நாம் ! சமமாக உட்காரலாம் ! எனக்கு வயது 54 ! ஏன் சரியாக உட்கார முடியாது ?

நீக்ரோ: (தயங்கிக் கொண்டே) என் வயது 72 மிஸ்டர் லிங்கன் ! என் தொடையில் காயம் உள்ளது !

unnamed (26)

ஆப்ரஹாம் லிங்கன்: (வருத்தமுடன்) அப்படியா ? என்ன காயம் அது ?

நீக்ரோ: (தடுமாறிக் கொண்டு) சவுக்கடிக் காயம் ! என் மாஸ்டர் கொடுத்தது !

ஆப்ரஹாம் லிங்கன்: (கவலையுடன்) எங்கே நான் பார்க்கலாமா ?

நீக்ரோ: எப்படி உங்களுக்குக் காட்டுவது ? எனக்கேப் பார்க்கச் சகிக்க வில்லை மிஸ்டர் லிங்கன் !

ஆப்ரஹாம் லிங்கன்: ஆனால் நான் பார்த்தாக வேண்டும் மிஸ்டர் கர்டிஸ் !

(மெதுவாக எழுந்து பாண்ட்டைக் கீழே தாழ்த்தி தொடையைக் காட்டுகிறார் கர்டிஸ். சிவப்பாகக் கரிந்த போனக் காயத் தடங்களை லிங்கன் பார்த்து மனம் வெதும்புகிறார். மறைமுகமாக ஒளிந்து கொண்டு பணிப்பெண் சூஸன் பார்த்துக் கண்ணீர் விடுகிறாள்.)

ஆப்ரஹாம் லிங்கன்: (கவலையுடன்) காயம் இன்னும் ஆறாமல் உள்ளதே ! எப்போது வாங்கிய சவுக்கடி இது ? எதற்காக வாங்கிய சவுக்கடி இது ?

நீக்ரோ: அஞ்சு அல்லது ஆறு மாசத்துக்கு முன்பு வாங்கிய சவுக்கடி ! ராத்திரி வெகு நேரம் வேலை செய்து காலையிலே தூங்கிப் போனேன் ஒருநாள் ! தாமதமா விழிச்சேன் ! விழுந்தது அடி சவுக்கடி !

ஆப்ரஹாம் லிங்கன்: கொடுமை ! கொடுமை ! அடிமையாய் வாழ்வது கொடிது ! இதற்கு முடிவு காலம் வரப் போகுது மிஸ்டர் கர்டிஸ் ! இரவும் பகலும் இதுதான் என் கனவு !

நீக்ரோ: நான் தப்பி ஓடிவந்தவன் மிஸ்டர் லிங்கன் ! தப்பி ஓடிய என் தகப்பனைப் பிடித்துத் தூக்கிலே போட்டாங்க ! என் தாய் இன்னும் தென்னக நரகத்தில்தான் கிடக்கிறாள் ! அவளுக்கு 90 வயது ஆகுது ! நீங்கதான் காப்பாத்தணும் என் தாயை ! நான் மீண்டும் அந்த நரகத்துக்குப் போய் தாயைக் காப்பாத்த முடியாது ! என்னையும் என் எஜமான் தேடிக் கொண்டிருக்கிறார் !

ஆப்ரஹாம் லிங்கன்: அந்த நரகத்துக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது மிஸ்டர் கர்டிஸ் ! ஆயிரக் கணக்கான உயிர்களைப் பலிகொடுக்கிறோம் அதற்காக ! அதற்குக் கடவுள் ஆதரவு அளிக்க வேண்டு எனக்கு ! கடவுள் உதவியின்றி நான் வெற்றி பெற முடியாது !

unnamed (27)

நீக்ரோ: கடவுள் உங்களைப் படைத்ததே அடிமைத்தனத்தை ஒழிக்கத்தானே ! உங்கள் பிறவிப் பயனை கறுப்பராகிய நாங்கள் அனுபவிப்போம் ! எங்களை விடுவிக்கப் போரில் உங்கள் மனிதர் மடிகிறார் ! தென்னக நரகத்தை விட்டு நாங்கள் வெளியே வந்து என்ன செய்யப் போகிறோம் ? எப்படி வாழப் போகிறோம் ? எங்க இனத்துக்கு அறிவில்லை ! படிப்பில்லை ! பணமில்லை ! தனியே வாழக் குடிசை இல்லை ! எப்படி வாழ்வோம் இனிமேல் ? அடிமையாய் உள்ள போது குடியிருக்க ஒரு குடிசையாவது இருந்தது ! உண்ண உணவாவது கிடைத்தது ! அங்கே அடிமையாய் வேலை செய்து பிழைத்தோம் ! இனி எங்கே வேலை செய்வோம் ? என்ன வேலை செய்வோம் ? தென்னகத்திலே நாங்கள் எப்படி வெள்ளையர் வீட்டருகே வாழ முடியும் ? அடிமையாய்ப் பிறந்தேன் ! அடிமையாய் வளர்ந்தேன் ! இனி விடுதலை மனிதனாய் எப்படி வாழ்வேன் ?

(லிங்கன் காகிதத்தில் கர்டிஸ் சொல்லச் சொல்ல அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்கிறார்)

ஆப்ரஹாம் லிங்கன்: என்னை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் இந்தப் பிரச்சனைகளைக் கூறியதற்கு மிக்க நன்றி மிஸ்டர் கர்டிஸ் ! போருக்குப் பின் நேரும் கறுப்பரின் சிக்கல்களை நீக்க நான் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் ! கறுப்பருக்கு விடுதலை மட்டும் கொடுப்பது போதாது ! ஆயிரக் கணக்கில் விடுபடும் கறுப்பருக்கு நில புலன்கள், தேவை ! குடிசைகள் தேவை ! வேலைகள் தேவை ! வேலைகள் உண்டாக்கும் தொழிற் சாலைகள்  தேவை ! வேலைக்கு வைத்துக் கொள்ளும் கோமான்கள் தேவை ! படிப்பு வசதிகள் தேவை ! அரசாங்கப் பண உதவிகள் தேவை ! விடுதலை பெற்ற பிறகுதான் கறுப்பரின் பிரச்சனைகளே ஆரம்பமாகும் போல் தெரிகிறது !

நீக்ரோ: சரியாகச் சொன்னீர் மிஸ்டர் லிங்கன் ! விடுதலை பெற்ற பிறகுதான் எங்கள் பிரச்சனைகளே தலைதூக்கப் போகின்றன ! இத்துடன் ஒரு புகாரை நான் கூறலாமா ?

ஆப்ரஹாம் லிங்கன்: சொல்லுங்கள் மிஸ்டர் கர்டிஸ்.

நீக்ரோ: தென்னகப் படையினர் கறுப்பர்களைப் பிடித்துச் சிறையில் போடுகிறார் ! எந்தக் கறுப்பரை ? உங்கள் இராணுவ உடை அணிந்த வடக்குக் கறுப்பரை ! சிறையிட்டு உணவு நீர் கொடுக்காது சித்திரவதை செய்கிறார் ! பட்டினியில் பிழைத்தோரைச் சுட்டுத் தள்ளுகிறார் ! அல்லது தூக்கில் இடுகிறார் !

ஆப்ரஹாம் லிங்கன்: (மனக் கவலையோடு) எனக்குத் தெரியும் இது !

நீக்ரோ: வடக்கோ, தெற்கோ சாவது கறுப்பர்தான் ! கறுப்பர் கோரக் கொலைகளை நிறுத்துவது எப்படி மிஸ்டர் லிங்கன் ?

ஆப்ரஹாம் லிங்கன்: நாங்கள் கண்டனக் கடிதம் அனுப்பி இருக்கிறோம் !

நீக்ரோ: அது போதாது மிஸ்டர் லிங்கன் !

ஆப்ரஹாம் லிங்கன்: என்ன செய்ய முடியும் இதைத் தவிர மிஸ்டர் கர்டிஸ் ? வடக்கருக்கும் தென்னவருக்கும் நடந்து கொண்டுள்ளது போர் ! ஓர் உள்நாட்டுக் கலகப் போர் ! அநீதியை எதிர்க்கும் போரில் நீதியை நுழைக்க முடியாது ! மனிதரிடையே சிலர் மிருகங்களாய் மாறி யிருக்கிறார் ! மனித வேட்டையாடும் விலங்குகளை எப்படி ஒழிப்பது ?

நீக்ரோ: நான் சொல்ல வருவது பதிலுக்குப் பதில் பலிவாங்குவது ! கண்ணுக்குப் பதில் கண்ணைக் குத்துவது ! பல்லுக்குப் பல்லைப் பிடுங்குவது !

ஆப்ரஹாம் லிங்கன்: இல்லை இல்லை இல்லை மிஸ்டர் கர்டிஸ் ! அது தவறு ! சற்று சிந்தித்துப் பாருங்கள் ! நீங்கள் சொல்வதின் அர்த்தம் என்ன கூறுங்கள் ?

நீக்ரோ: என் கண்ணுக்குக் கொலை செய்யப்படும் கறுப்பர்தான் தெரிகிறது !

ஆப்ரஹாம் லிங்கன்: கொலைகாரைப் போல் என்னையும் கொல்லச் சொல்கிறீரா ? ஆயிரம் கறுப்பரைத் தென்னகர் கொன்றால், பதிலுக்கு நானும் ஆயிரம் வெள்ளைக்காரைக் கொல்ல வேண்டுமா ? என்ன நீதி நெறி இது ?

நீக்ரோ: தண்டனை கொடுங்கள் ! ஆனால் கொல்ல வேண்டாம் !

ஆப்ரஹாம் லிங்கன்: எப்படித் தண்டனை கொடுப்பது ? போர் நடக்கும் போது போர்க் குற்றவாளைகளை எப்படிப் பிடிப்பது ? எப்படித் தண்டிப்பது ? கொலைக்குப் பதில் கொலை என்பது என் கொள்கை ஆகாது ! நாம் செய்யும் போரில் ஒரு போர் நியதி உள்ளது. ஆயுதம் இல்லாதவரைக் கொல்வது கொலை ! அது முற்றிலும் தவறானது ! நமது கறுப்பர் படை தேசப்பற்று உடையது ! போரில் யாராயினும் ஆயுதம் இல்லாதவர், காயம் அடைந்தவர் காப்பாற்றப் பட வேண்டும் ! கொல்லப்படக் கூடாது ! நான் சொல்வது புரிகிறதா ?

நீக்ரோ: (மனம் தெளிந்து) புரிகிறது மிஸ்டர் லிங்கன் ! நான் சொன்னது தவறுதான் ! என் மனதில் பட்டதைக் கூறினேன் ! தெற்கே உள்ள வெள்ளைக்காரர் அடிமைக் கறுப்பரைக் கொல்வது போதா தென்று வடக்கில் உள்ள கறுப்பரையும் அவர்கள் கொல்ல வேண்டுமா ? அநியாயம் ! எங்க இனத்தைச் சேர்ந்த கறுப்பருக்குத்தான் கண்ணீர் வடிக்கிறேன் !

[அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. சூஸன் வந்து ஓர் அரசாங்க அதிகாரி வந்திருப்பதாகச் சொல்கிறாள்.]

ஆப்ரஹாம் லிங்கன்: அவரை உள்ளே வரச் சொல் (சூஸன் போகிறாள்) சரி மிஸ்டர் கர்டிஸ் ! ஓர் இராணுவ அதிகாரி என்னை காண வருகிறார் ! போய் வாருங்கள் ! பல கருத்துக்களை உங்களிடமிருந்து இன்று நேரடியாக அறிந்து கொண்டேன், மிக்க நன்றி.

(லிங்கன் கைகுலுக்க கரத்தை நீட்டுகிறார். கர்டிஸ் கரத்தை முத்தமிடுகிறார்)

நீக்ரோ: மிஸ்டர் லிங்கன் ! மறக்க முடியாத சந்திப்பு இது ! மோஸஸ் போல எங்களை விடுவிக்க வந்த தேவதூதர் நீங்கள் மிஸ்டர் லிங்கன் !

(கர்டிஸ் போகிறார்)

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) – பகுதி 1

  1. அருமையான தமிழாக்கம் ஐயா! எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அன்றைய அமெரிக்க அரசியல் பற்றிய பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்.

    //பத்து இருபது கறுப்பருக்கு விடுதலை கிடைப்பது போதாது ! அமெரிக்காவில் அனைத்துக் கறுப்பரையும் விடுவிப்பது எப்படி என்று லிங்கன் யோசித்து வருகிறார்.//

    அருமை! அருமை! அமெரிக்காவின் அண்ணல் அம்பேத்கர் என்று ஆப்ரஹாம் லிங்கன் அவர்களைக் குறிப்பிடுவது மிகையாகாது!

    மீண்டும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *