மார்கழிப் பூவும் வைகுந்த வாசற்படியும்

2

தமிழ்த்தேனீ

மாதங்களில்  சிறந்தது  மார்கழி படிகளில் சிறந்தது  வைகுண்ட வாசற்படி

“படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனோ”  என்று பாடிய

குலசேகர ஆழ்வார்  இவரது பெருமை பேசும்போதெல்லாம்

‘குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே, நமஹம் சிரஸா நமாமி ராஜானம் குலசேகரம்’’ என்ற வடமொழி ஸ்லோகம் வர்ணிக்கிறது.

ஆண்டாளை அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்த பெரியாழ்வாரைப் போல, குலசேகராழ்வாரும் தன் பெண்ணை கொடுத்து, அரங்கனுக்கே மாமனார் ஆனார்! ‘‘ஸ்வசுரம் அமரவர்த்யம் ரங்கராதஸ்ய ஸாட்சார்’’ என்று பெரியாழ்வாரை சொல்வார்கள். அதாவது, ‘‘தேவர்களால் வணங்கப் பெற்ற, சாட்சாத் அரங்கனுடைய மாமனாரான பெரியாழ்வாரை வணங்குகிறேன்’’

அரங்கனையே நாடவேண்டும் என்று கூறும்படியாக ‘இருளிரிய’ என்கிற 10 பாட்டுக்களால் வழங்கினார். எம்பெருமானை கண்ணனாக அனுபவித்து ‘படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே’ என்று அருளிச் செய்ததன் மூலம் 5 ம் லட்சணத்தை வெளியிட்டார்.

 மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் கண்ணன் அருளியிருக்கிறார். மார்கழி மாதம் சனிக்கிழமை பிறக்கிறது.  தட்சிணாயனத்தின் கடைசி மாதமாக விளங்கும் மார்கழி மாதத்தின் பெருமைகளையும் வைகுண்ட ஏகாதசியின் பெருமைகளையும் தெரிந்து கொள்வோம்.

சூரியனுடைய சுற்று வட்டப் பாதையை  இரண்டு விதமாக பிரித்திருக்கிறார்கள்,  ஒன்று ஆடி மாதம் முதற்கொண்டு    ஆவணி ,புரட்டாசி  ,ஐப்பசி, கார்த்திகை  மார்கழி  மாதங்கள் சூரியனுடைய  சுற்று  தெற்கு  திசையாக  கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி  சஞ்சரிக்கும் காலம்  ,இதை தக்ஷிணாயணம்  என்று கூறுவர்.

அதேபோல் தைமாதம் முதல் ,  மாசி, பங்குனி,சித்திரை, வைகாசி, ஆனிவரை  சூரியனின் சுற்று  வடக்கு திசையாக  கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சஞ்ஜரிக்கும்  காலம்

ைபமுற்ற் ,உத்திராயணம் என்று சொல்வர்.   இப்படிப் பார்க்கும் போது ஆடி , புரட்டாசி ஆவணி ,  ஐப்பசியின் ,கார்த்திகை,  மார்கழி

 மார்கழி மாதம் 1ம் தேதி முதல்  10ம் தேதி வரை  பகல் பத்து , 11ம் தேதி முதல் 20 ம் தேதி வரை ராப்பத்து சுக்லபக்‌ஷ ஏகாதசியான 11ம் தேதி மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்று போற்றுவர். இந்நாளில் வைணவத் திருத்தலங்களில் பரமபதவாசல்  (சொர்க்க வாசல்) திறப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். பெருமாள், பரமபத வாசல் சந்நதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார். பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, இராபத்து உற்சவமாக வெகு சிறப்பாக நடைபெறும். இராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சந்நதி திறப்பு விழா நடைபெறும்.

இந்த வைகுண்ட வாசல்  வழியாக பரமபத பெருமான் காட்சி கொடுப்பதும்  அப்போது  அவனை சேவித்து அந்த வைகுண்ட வாசற்படி வழியாக நாமும் வந்தால் பரம்பதமான ,வைகுண்டத்தை சொர்கத்தை நாமும் அடைவோம்.

 வைகுண்டத்தின் துவாரபாலகர்களாகிய  ஜெய விஜய  என்னும் இருவரும் வைகுந்த வாசலை  மூடினர். இதனைக் கண்ட பெருமாள் காவலர்களிடம் ‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு கலியுகத்தில் கலையுகத்திலே பாவங்கள் பெருகும் யாருமே வைகுந்த வாசலை அடையப் போவதில்லை ஆகவே மூடினோம் என்று பதிலுரைத்தார்கள்.

ஶ்ரீமன் நாராயணன்  அப்படி இல்லை கலியுகத்திலே பாவங்கள் பெருகினாலும்  பக்தியும் ஆத்திகமும் புண்ணியங்களும்  பெருகும் அதனால் திறந்து வையுங்கள் வைகுண்ட வாயிலை என்று .இப்படி ஶ்ரீமன் நாராயணன்  அருளிய தினம் , மார்கழி மாத  சுக்லபட்ச ஏகாதசி  என்பது புராண வரலாறு ,ஆகவே  வைணவ ஏகாதசி அன்று சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைப்பிடித்து பெருமானை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இடம் உண்டு .

 அப்படி இருந்த நிலையில் கலியுகத்திலே முதன் முதலாக வைகுந்தம் ஏகியவர் நம்மாழ்வார்.   நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று, அது திறக்கப்பட்டது. இதனை அறிந்த நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது.  என்னைத் தொடர்ந்து  தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைத்து பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்’ என்று வேண்டவே, பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில்  சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.

திருமங்கை ஆழ்வாரின் திருப்பணியிலே மனம் மகிழ்ந்த அரங்கன்  அவர்முன்  தோன்றி  என்ன வரம் வேண்டும் என்று கேட்கவே  திருமங்கை ஆழ்வார்  நம்மாழ்வார் பரமபதம் அடைந்த  நாளான  மார்கழி வளர்பிறை ஏகாதசியை பெருநாளாகக் கொண்டாடவேண்டும் என்று வேண்டிக் கொண்டாராம் .நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்காக திருவிழா  நடைபெற  அருள வேண்டும்  என்று வேண்டிக் கொண்டாராம்  அதை ரங்கநாதர் அருளினார். அதன்படித்தான்  ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது.

பூலோக வைகுந்தம் என்னும் பேறு பெற்ற ஶ்ரீரங்கத்தில் இந்த வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக நடைபெறும்,அது போல திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமானின் கோயிலிலும் இன்னும் பல வைணவத் திவ்ய தேசங்களிலும் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக்க் கொண்டாடப் படுகிறது

வைணவக் கோயில்களில் பரமபதவாசல் என்று ஒரு சந்நதி இருக்கும். இந்த வாசல், வடக்கு நோக்கி இருப்பதைக் காணலாம்.  இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி  அன்று மட்டும் இந்தக் கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஸ்ரீரங்கத்துக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

புதுக்கோட்டையிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் இருக்கும் திருமயம் திருத்தலத்தில் ஏகாதசி திதியையொட்டி வரும் பரணி நட்சத்திரத்தன்றுதான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. புகழ் பெற்ற திருமலை திருப்பதியில் சொர்க்க வாசல் சந்நதி என்று தனியே கிடையாது. அதற்கு பதில் வைகுண்ட ஏகாதசி திதியை முன்னிட்டு ‘முக்கோடி பிரதட்சண வாசல்’ திறப்பு விழா நடைபெறும். திருமலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கடவனைத்  தரிசித்த பின்னர் வெளியில் வந்தால் காணப்படும் பிராகாரத்தை விமான பிரதட்சண பிராகாரம்’ என்பார்கள்.

இந்த பிராகாரத்துக்கும் வேங்கடவன் அருள்புரியும் மூலஸ்தானத்துக்கும் நடுவில் ஒரு பிராகாரம் உள்ளது. இது திருமலையில் மட்டுமே உள்ள அபூர்வமான பிராகாரம். இப்பிராகாரத்தை  வலம் வந்தால் மகா புண்ணியம் கிட்டும். வேங்கடவனைத் தரிசித்து, வாயிலைக் கடந்ததும் இருப்பது ஸ்நபன மண்டபம். இதையடுத்து ராமர் மேடை உள்ளது. இதற்கு இடப்பக்கம்  ஆரம்பித்து, மூலவரான வேங்கடாசலபதியை வலம் வந்து உண்டியல் இருக்கும் இடத்தை அடைகிறோம். இப்பகுதி, ‘முக்கோடி பிரதட்சண  பிராகாரம்’ ஆகும்.

இந்தப் பிராகாரம் வருடத்தில் மூன்று நாட்கள் அதாவது, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளான தசமித் திருநாள் முதல் துவாதசித் திருநாள்வரை திறந்திருக்கும். திருமலையில் முக்கோடி பிரதட்சணம், சொர்க்க வாசலுக்குச் சமமாகக் கருதப்படுகிறது. கேரளாவில் வைகுண்ட ஏகாதசியை ‘விருச்சிக ஏகாதசி’ என்று போற்றுவர். குருவாயூர் கோயிலில் இந்த விழாவை பதினெட்டு நாட்கள்  கொண்டாடுவர். இதையொட்டி தீபஸ்தம்பங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டு, சொர்க்க லோகம்போல் கோயில் காட்சி தரும். மேலும் ஏகாதசியன்று அதிகாலை 3-30 மணி முதல் மறுநாள் துவாதசி வரை கோயில் திறந்தே இருக்கும்.

விருச்சிக ஏகாதசியையொட்டி,  அதிகாலையில் குருவாயூரப்பனை தரிசிப்பது சொர்க்கவாசல் வைபவத்துக்குச் சமமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி அன்று விடியற்காலையில் 4-15 மணிக்கு சொர்க்க வாசல் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், சில கோயில்களில் சொர்க்க வாசல் கிடையாது; ஆனால், வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறும். கும்பகோணம் சார்ங்கபாணி திருக்கோயில், திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீ காட்ச பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கிடையாது. அங்கு தட்சிணாயனம், உத்தராயணம் என்று இரண்டு வாசல்கள் உள்ளன.

ஒன்று ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும்; மற்றொன்று தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். எனவே, இங்கு சொர்க்க வாசல் நிகழ்ச்சி கிடையாது. ஆதிசேஷன் அவதாரமாகக் கருதப்படும் ராமானுஜர் அவதரித்ததால், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில், நித்ய சொர்க்க வாசல் திருத்தலமாகக் கருதப்படுகிறது. அதனால் இங்கும் சொர்க்கவாசல் நிகழ்ச்சி இல்லை. இங்கு வைகுண்ட ஏகாதசி அன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருள் வார்கள்.

அவ்வேளையில் சொர்க்க வாசல் திறப்பதுபோல் இங்குள்ள மணிக்கதவை (சந்நதிக் கதவை) திறப்பர். கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப் பட்டணம் ரங்கநாதர் கோயிலில் தைப் பொங்கல் அன்று தான் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. சாஸ்திர சம்பிரதாயப்படி வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் கடைப்பிடித்து பெருமாளைத் தரிசித்தால் வைகுண்டத்தில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப் பொருத்தமான மாதம் என்பது இந்த மாதத்தின் சிறப்பாகும். மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக மார்கழி அமைகிறது. உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது.

பிரம்ம முகூர்த்தம்  அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்ற காலமும் இதுவே. இந்த நேரத்தில் ஓசோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும்; புத்துணர்ச்சி தரும். உள்ளத்துக்கு இதம் தரும்; புதுக் கிளர்ச்சி தரும். மார்கழி விடியற்காலையில், ஓசோன் வாயு நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது. இதன் காரணமாகவே பண்டைய தமிழர்கள் மார்கழி விடியற் காலையில் நோன்பிருந்து இறைவனை வணங்கினர்.

சரணாகதி தத்துவம் :-

மார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.

மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி – “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது இதன் பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள்.

மருத்துவ நூல்களில் மார்கழியைப் பீடை மாதம் என்று குறிப்பிடுகின்றன.மார்கழியின் பனிக்குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே, இது பீடை மாதமாகலாம். பீடு-பெருமை. பன்னிரு மாதங்களில் மிக்க பெருமையை உடையது பீடை மாதம் என்று மற்றொரு பொருளும் கூறலாம். பல காரணங்களால் மார்கழி பெருமையுடைய மாதம்.

மார்கழிப் பாடல்கள் :-

திருப்பாவை ஆண்டாள் இயற்றியது வைணவத் தொடர்புடையது. திருவெம்பாவை மாணிக்கவாசகர் இயற்றியது; சைவத் தொடர்புடையது. இந்த  இரண்டும் பாவை நோன்பு அல்லது மார்கழி நோன்பினைப் பாடுகின்றன.

மார்கழியில், திருப்பாவை, திருவெம்பாவை, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளி எழுச்சி, மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சி ஆகிய நான்கு நூற்பாடல்களை வீடுகளிலும், கோயில்களிலும் பாராயணம் செய்கின்றனர். மார்கழியில், சிறப்பாக பாராயணம் செய்ய வேண்டும் என்ற பெருமை இந்த நான்கு நூல்களுக்கே உண்டு.இவை தவிர வைணவக் கோயில்கள் சிலவற்றில் மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர்.

நல்ல வாழ்க்கைத்துணை :-

மார்கழி நோன்பு முழுக்க முழுக்க கன்னிப்பெண்களுக்கே உரியது. விடியலுக்கு முன் எழுந்து ஆற்றில் நீராடி நல்ல கணவன் கிடைக்க பாவை நோன்பு நோற்கின்றனர். பாவையை, வைணவக் கன்னியர்கள் கவுரி தேவியாகவும், சைவக் கன்னியர்கள் பார்வதி தேவியாகவும் போற்றி வழிபடுகின்றனர். பாவைப் பாடல்களைப் பாடி வணங்குகின்றனர்.

வாசல் நிறையும் கோலங்கள்.  மார்கழி மாதம் வந்து விட்டாலே இளம் பெண்கள் வாசலை அடைத்து தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரித்து கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர். விளக்கேற்றுகின்றனர்.

பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன. மார்கழி மாதத்தில் எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம் இவை அனைத்தும் இந்த மாதத்தின் சிறப்புகளாகும்.

திருவாடிப் பூரத்தில் உதித்து மார்கழியில்  திருப்பாவை பாடிய எங்கள் ஆழ்வார் ஆண்டாளைப்பற்றி நினைக்காமல் இருக்க முடியுமா இந்த  மார்கழி மாதத்தில் . அதுவும் வைகுந்த ஏகாதசித் திருநாளில் .

நல்ல வாக்கைத் துணை அரங்கனே என்றுணர்ந்து   அரங்க தோளில் சார்த்தும்போது அரங்கனுக்கு  எந்த உறுத்தலும் இருக்கக் கூடாதே என்று கவலைப்பட்டு ஒரு முறை தான் அந்த மாலையை அணிந்து தோஷமில்லாமல் இருக்கிறது என்று உணர்ந்து  அதன் பின்னே  அரங்கனுக்கு  மாலை சாற்றிய ஆண்டாள் போற்றிய மாதமல்லாவா மார்கழி மாதம்.

ஆகவே இந்த மார்கழி மாதம் வைகுந்த ஏகாதசித் திருநாளில் விடியற்காலையில் எழுந்து குளித்து  திருக்கோயிலை  அடைந்து பரமபத வாசல் வழியே  நமக்கு அருளும் அவனைச் சேவித்து  பரமன் துதி பாடி  நாமும் அந்த வைகுந்தம் அடையும் நற்பேற்றைப் பெறலாமே.

அன்புடன்

தமிழ்த்தேனீ

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மார்கழிப் பூவும் வைகுந்த வாசற்படியும்

  1. விஞ்ஞான மெஞ்ஞானக் கட்டுரை , விளக்கங்கள் , குறிப்புகள்  வெகு அழகாகத் தொகுத்துள்ளதற்கு என் மன‌ங்கனிந்த நன்றிகளும் பாராட்டுகளும். மார்கழி காலை பஜனைகளும்,திருப்பாவை/திருவெம்பாவை பாசுரங்களும், பொங்கல் / சுண்டல் பிரசாதங்களும், கோலங்களும், அதன் நடுவில் பரங்கி பூ /ஊமத்தம்பூக்களும்  குளிரை மறக்க வைத்து பக்தியின் சாயலில் ஆரோக்யத்தை ஊட்டின.  பிறந்த மாதமும், பிறந்த இடமும், கவி வளர்த்த அரங்கமும் ஏகாதசியின் மகத்துவமும் எனக்கொரு  தமிழ் தேனீர் விருந்து.அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.

  2. அருமையான தொகுப்புக்கு நன்றி. நல்ல தகவல்களும் கூட.  ஒரே ஒரு சின்ன விளக்கம் மட்டும் இங்கே சொல்லணும்னு நினைக்கிறேன்.

    இந்த இராப்பத்து, பகல்பத்து மார்கழி மாதம் ஒன்றாம் தேதினு ஆரம்பிக்காது.  மார்கழி மாத அமாவாசையிலிருந்து பத்து நாட்கள் பகல் பத்து எனவும், அதன் பின்னர் வரும் சுக்ல பக்ஷ ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாகவும், வைகுண்ட ஏகாதசிக்குப் பின்னர் வரும் அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து எனவும் சொல்லப்படும். 

    இந்த வருடம் ஜனவரி முதல் தேதி அமாவாசை என்பதால் அதிலிருந்து பகல்பத்து ஆரம்பித்தது.  இப்போது இன்றிலிருந்து இராப்பத்து உற்சவம்.  தைமாதம் பொங்கல் கடந்து பத்து நாட்கள் நடைபெறும்.  ஆகவே மார்கழி அமாவாசை தான் இந்த உற்சவங்களுக்குக் கணக்கு.  மார்கழி மாதம் அல்ல. 

    தப்பாய்ச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *