Category: Featured

Featured

  • கென்யா பயணம் – 3

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நைரோபியில் பார்க்க வேண்டிய இடங்களில் முக்கியமானவற்றில் ‘நைரோபி நேஷனல் மியுசியமும்’ ஒன்று.  கிழக்கு ஆப்பிரிக்கா பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தபோது இயற்கை ஆய்வாளர்கள் தாங்கள் சேகரித்த அரும்பொருள்களை சேகரித்துவைக்க ஒரு இடத்தைத் தேடியபோது மியுசியம் ஒன்று அமைக்க அரசு முடிவு செய்தது.  முதலில் ஒரு சிறிய இடத்தில் அமைக்கப்பட்ட மியுசியம் பின்னால் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களையும் சேமித்துவைக்கப் பெரிய இடத்திற்கு மியுசியத்தை மாற்றியது.  அதுவும் போதாமல் பின் இப்போது மியுசியம் இருக்கும் இடத்தில் பெரிய கட்டடம் ஒன்றைக் கட்டி பல பிரிவுகளாக அதை அமைத்தது.  பிரிட்டிஷ் ஆட்சியில் கென்யாவின் கவர்னராக இருந்த ராபர்ட் கோரிண்டன் என்பவரின் பெயரில் (Robert Coryndon)  கோரிண்டன் மியுசியம் என்று அழைக்கப்பட்ட இது 1963-இல் கென்யா சுதந்திரம் அடைந்தபிறகு நைரோபி நேஷனல் மியுசியம் என்ற பெயர் பெற்றது.

    இது நாங்கள் தங்கியிருந்த் ஓட்டலுக்கு மிக அருகாமையில் இருந்ததால் காலை எட்டரை மணிக்கு மியுசியம் திறப்பதற்கு கொஞ்சம் முன்னாலேயே அங்கு இருந்தோம்.  காலை அதைத் திறப்பதற்கு முன் தினமும் அதைச் சுத்தம் செய்வார்கள் போலும்.  சுத்தம் செய்யும் பெண்கள் கற்களினால் ஆன தரையை வாளியையும் துடைக்கும் துணியையும் கொண்டு துடைத்துக்கொண்டிருந்தார்கள்.  வளர்ந்துவிட்ட நாடுகளில் இப்படி கைகளினால் சுத்தம் செய்ய மாட்டார்கள்.  எல்லாவற்றிற்கும் மெஷின்கள் இருக்கும்.

    மியுசியத்தின் முகப்பில் தாயும் சேயுமான பெரிய கற்களால் ஆன சிலை நம்மை வரவேற்கிறது.  ஒரு பக்கமாக பெரிய டைனஸோர் ஒன்றின் மாதிரி இருக்கிறது.  மியுசியத்தைச் சுற்றி பல வகைத் தாவரங்கள் அடங்கிய தோட்டம் இருக்கிறது.  அதில் பல அரிய மரங்கள், செடிகள் வளர்க்கப்படுகின்றன.

    மியுசியத்திற்குள் முதல் முதலாக டிக்கெட் வாங்கி நுழைந்தது நாங்கள்தான்.  மியுசியத்திற்க்குரிய நுழைவுக் கட்டணம் வெளிநாட்டவர்களுக்கு கென்யா நாட்டவர்களை விட மிகவும் அதிகம்.  எல்லா உல்லாசப் பயண இடங்களிலும் இப்படித்தான்.  அதிக தூரம் நடந்தால் எனக்குக் களைப்பாகிவிடும் என்பதால் இம்மாதிரி அதிகம் நடக்க வேண்டிய இடங்களில் சக்கர நாற்காலி ஒன்றை மியுசியம் அதிகாரிகளிடமிருந்து இலவசமாகவோ வாடகைக்கோ எடுத்துக்கொள்வதுண்டு. இங்கும் அம்மாதிரி கேட்டோம்.  அங்கு இரண்டே நாற்காலிகள்தான் இருந்தன.  இரண்டின் சக்கரங்களிலும் போதிய காற்றழுத்தம் இல்லையென்றும் காற்றை அடைத்துத் தருவதாகவும் கூறினார்கள்.  நம் நாட்டில் சைக்கிளுக்கு காற்றடிப்பது போலவே அந்த சக்கர நாற்காலியின் சக்கரங்களுக்குக் காற்றடித்தார்கள்.  இதுவும் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது.  மேலைநாடுகளில் இப்படிக் கைகளால் காற்றடிப்பதைப் பார்க்க முடியாது.

    இந்த மியுசியம் கென்யாவின் பாரம்பரியத்தையும், சரித்திரத்தையும், கலாசாரத்தையும் கலைகளையும் எடுத்துச் சொல்ல அமைக்கப்பட்டது.  கென்யாவின் காடுகளில் அதிகமாகக் காணப்படும் யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், புலிகள், சிங்கங்கள், காண்டாமிருகங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் நகரின் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன.  நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் கூட ஒரு ஒட்டகச்சிவிங்கியின் மாதிரி ஓட்டலின் முன் முகப்பிலேயே வைக்கப்பட்டிருந்தது.  கென்யா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளுக்குக் கொடுக்கப்படும் உப்பு, மிளகுத் தூள், சர்க்கரை அடங்கிய பாக்கெட்டுகளில் இந்த மிருகங்களின் படங்களைப் பார்க்கலாம். கென்யர்கள் தங்கள் காடுகளில் இருக்கும் இந்த விலங்கினங்களால் மிகவும் பெருமை கொண்டுள்ளார்கள்.  அதன் அடையாளமாக எல்லா இடங்களிலும் இதன் மாதிரிகளைப் பார்க்கலாம்.

    மியுசியத்திற்குள் நுழைந்தவுடனேயே பெரிய யானையின் மாதிரி ஒன்று இருக்கிறது.  மிக நீண்ட தந்தங்களைக் கொண்ட, பிரபலமான இந்த யானை இறந்த பிறகு அதன் உடலைப் பதப்படுத்தி மியுசியத்தில் வைத்திருக்கிறார்கள். இந்த மியுசியத்தின் ஒரு பகுதியில் இம்மாதிரி பல primates-களின் மாதிரிகளை வைத்திருக்கிறார்கள்.  இன்னொரு பகுதியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் பறவைகளின் மாதிரிகள் இருக்கின்றன.  கென்யாவின் சரித்திரத்தை விளக்கும் காட்சிப் பொருள்கள், படங்கள் இன்னொரு பகுதியில் இருக்கின்றன.  பிரிட்டிஷ் அரசு போட்ட கென்யா-உகாண்டா ரயில்பாதை பற்றிய விபரங்களும் ரயிலின் மாதிரிகளும் அவை சம்பந்தப்பட்ட படங்களும் இன்னொரு பகுதியில் இருக்கின்றன.  இக்காலத்திய கலைப் படைப்புகளும் ஒரு பகுதியை அலங்கரிக்கின்றன.  முதல் மனிதன் கென்யாவில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.  அதற்கு ஆதாரமாக அகழ்வாராச்சியில் கிடைத்த பல அரிய பொருள்கள் ஒரு பகுதியில் இருக்கின்றன.  தனியாக ஒரு பகுதியில் பாம்பு, ஆமை போன்ற ஊரும் மிருகங்களும் வளர்க்கப்படுகின்றன.

    பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து கென்யாவை விடுவித்து கென்யா சுதந்திரம் கிடைக்கக் காரணமாகயிருந்த் முதல் ஜனாதிபதி ஜேமோ கென்யாட்டாவின் வாழ்க்கை வரலாறு, அவர் பிரிட்டிஷை எதிர்த்துச் செய்த சாகசச் செயல்கள் ஆகியவற்றை விளக்கும் கண்காட்சியை இன்னும் சில மாதங்களில் இந்த மியுசியத்தில் திறக்கப் போகிறார்களாம்.  அது சில மாதங்கள் இங்கு இயங்கிவிட்டுப் பின் மற்ற மியுசியங்களுக்கு கொண்டுபோகப்படும்.  (இந்த கென்யாட்டாவின் மகன்தான் இப்போது ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்டு ஆட்சி நடத்திவருகிறார்.  இவர் மேல் இனப்படுகொலை வழக்கு ஹேகில் உள்ள அகில உலக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  நாட்டின் நலனுக்காகப் பல தியாகங்கள் புரிந்த ஜேமோ கென்யாட்டாவின் மகன் ஊழல் வழக்கில் ஈடுபட்டிருக்கிறார் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  ஊழல் புரிந்தவர்களையும் எல்லா நாடுகளிலும் தங்களை ஆட்சி செய்ய மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் போலும்.)

    கென்யாவில் பல இடங்களில் இருக்கும் மியுசியங்கள் எல்லாம் National Museums of Kenya  என்ற அமைப்பின் கீழ் இயங்கி வருகின்றன.  எல்லா மியுசியங்களிலும் சிறந்ததாகக் கருதப்படும் நைரோபி நேஷனல் மியுசியம் 1930-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

    மியுசியத்தில் உள்ள கழிப்பறைகள் வளர்ந்துவிட்ட நாடுகளில் காணப்படும் கழிப்பறைகளுக்கு ஒப்பாக மிகவும் சுத்தமாக இருக்கின்றன.  கென்யாவில் எல்லாப் பொது இடங்களில் உள்ள கழிப்பறைகளும் நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றன.  அநேகமாக எல்லா இடங்களிலும் ஐரோப்பிய மாடல் டாய்லெட்டுகளும் சில இடங்களில் அவற்றோடு இந்திய மாடல் டாய்லெட்டுகளும் இருக்கின்றன.  இந்தியாவில் பொதுக் கழிப்பறைகளை உப்யோகிப்பதை நினைத்தாலே தலை சுற்றும்.  ஏன் நம்மால் அப்படிக் கழிப்பறைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியவில்லை?

    நைரோபியில் பார்க்க வேண்டிய இன்னொரு இடம் உகுரு (Uhuru) பார்க் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய பார்க்.  உகுரு என்றால் சுவாஹிலி மொழியில் சுதந்திரம் என்று அர்த்தமாம்.  கென்யா சுதந்திரம்அடைந்த பிறகு இப்பார்க்கிற்கு இந்தப் பெயர் வந்ததாம்.  இதில் 80,000 பேர் வரை கூடலாம்.  ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவியேற்ற பின் இந்தப் பார்க்கிலிருந்து மக்களுக்குத் தன் கொள்கைகளை அறிவிப்பாராம்.

    இந்தப் பார்க்கிற்குள்ளேயே ஒரு சிறிய ஏரி இருக்கிறது.  அதில் பார்க்கிற்கு வரும் உல்லாசப் பயணிகள் படகு விட்டு மகிழலாம்.  சிறு குழந்தைகளை சிறுவருக்கான சிறிய கார்களில் உட்காரவைத்து இதை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் பூங்காவிற்குள் உளள வீதியில் தள்ளிக்கொண்டே ஓடுகிறார்கள்.  இதற்குக் கட்டணம் உண்டு.  இப்படித் தள்ளிக்கொண்டே போவதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.  சிறு குழந்தைகளுடைய முகங்களில் பலவகையான வர்ணம் கொண்டு சித்திரம் தீட்டுகிறார்கள்.  இதற்கும் கட்டணம் உண்டு.  சிறு குழந்தைகள் பலர் முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர்.  குழந்தைகளை மட்டக் குதிரையில் உட்காரவைத்து குதிரைகளை நடத்திக்கொண்டு போகும் பொழுதுபோக்கும் உண்டு.  குழந்தைகள் அதை வெகுவாக ரசிக்கிறார்கள்.  இதற்கும் கட்டணம் உண்டு.

    இந்தப் பார்க்குக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.  இது ஏழைகள் பலருக்குப் பொழுதுபோக்கு இடமாக இருக்கிறது.  நாங்கள் சென்றது ஒரு ஞாயிற்றுக்கிழமை.  அன்று பார்க்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது.  அங்கு வந்திருந்தவர்களில் பலர் சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் என்று அவர்களைப் பார்த்தாலே தெரிந்தது.  அங்கு விற்கும் தின்பண்டங்களும் நம் நாட்டு எள்ளுருண்டை, குச்சி ஐஸ் போன்றவை.  சிறு குழதைகளுக்கான பலூனும் விற்கப்பட்டன.  கொக்கோ கோலா மாத்திரம் இதற்கு விதிவிலக்கு.  எங்கும் வியாபித்திருக்கும் இறைவன்போல் இந்த கொக்கோ கோலா மாத்திரம் உலகின் எல்லா இடங்களுக்குள்ளும் எப்படியோ புகுந்துவிடுகிறது.

    கென்யாவில் நாங்கள் ஒன்றைக் கவனித்தோம்.  இம்மாதிரி எளியவர்கள் வரும் இடங்களில் கென்ய நாட்டு இந்தியர்களைப் பார்க்கவில்லை.  இந்தியர்கள் பலர் ரயில்பாதை போடும்போது அதில் வேலைபார்க்க இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் அரசால் தொழிலாளர்களாக முதல்ல் கொண்டுவரப்பட்டார்கள்.  வேலை முடிந்ததும் பிரிட்டிஷ் அரசு கென்யாவிலேயே தங்க விரும்பியவர்களை தங்க அனுமதித்ததாம்.  அவர்களில் பலர் வாணிபம் செய்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். பின்னர் வணிகம் செய்வதற்கென்றே இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்தவர்களும் உண்டு. இவர்கள் கென்ய நாட்டு மக்களோடு ஒன்றிப் பழகுவதில்லை.  கல்யாண சம்பந்தமும் வைத்துக்கொள்வதில்லை.  அவர்களுடைய குடியிருப்புகள் தனியாக இருக்கின்றன.  கென்யாவின் பொருளாதாரத்தில் அவர்கள் பங்கு முக்கியமாதலால் கென்ய மக்களும் அவர்கள் மீது வன்மம் பாராட்டுவது மாதிரித் தெரியவில்லை.  ‘கென்யமக்கள் நவீனத்தொழில் பற்றித் தெரிந்துகொள்ளுவதற்கு முன்பாகவே அவர்கள் தொழில் நடத்தி வசதியான நிலைக்கு வந்துவிட்டார்கள்’ என்று ஒரு டாக்சி ஓட்டுனர் கூறினார்.

    (தொடரும்).

    நைரோபி பற்றியும் மியுசியம் பற்றியும் சில படங்களை இந்த இணைப்புகளில் பார்க்கலாம்.

    Nairobi

    https://picasaweb.google.com/108173580006522327175/ScenesFromNairobi?authkey=Gv1sRgCIellMKNpa7szgE

    Museum

    https://picasaweb.google.com/108173580006522327175/NairobiNationalMuseum?authkey=Gv1sRgCMbKkI7C59_n9wE

     

    படங்கள்: மெல்லியல்

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (21)

    பவள சங்கரி

    ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்

    பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அதை நீயே செய்.

    மனிதர்கள் புகழ்வதும் விரைவு, இகழ்வதும் விரைவு. எனவே மற்றவர்கள் உன்னைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளைக் கவனியாதே.

    3.bp.blogspot.com--A2e7CEAq6dg-UEJX_Q97iXI-AAAAAAAAA_E-NJ9xRqdIF-k-s1600-quotes-life2

    நாம் எல்லோருமே மாற்றங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அன்பும், கருணையும், பெருந்தன்மையும், பொறுமையும், மன்னிக்கும் மனமும் நிறைந்த அமைதியான உலகைக்காணவே விரும்புகிறோம். குற்றங்களும், தவறுகளும் மலிந்து கிடக்கிற மக்களின் செயல்கள் நம்மைக் கோபமூட்டி, ‘இவர்களெல்லாம் எப்பொழுதுதான் திருந்தப் போகிறார்களோ’ என்று எண்ண வைக்கிறது. நேர்மையற்ற வியாபாரிகள், லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், பொறாமை நிறைந்த சமூகம், சுயநலம் நிறைந்தவர்கள், கருணையும், அன்பும் துளியும் இல்லாதவர்கள் என்று பலவகையான மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் உலகம் இப்படி கெட்டுக் குட்டிச்சுவர் ஆகிவிட்டதே என்று நொந்து போகிறோம். இப்படி அடுத்தவரிடம் குறை காண ஒவ்வொரு முறையும் நம் ஆள்காட்டி விரலை நீட்டும் அதே சமயம் நம்முடைய மற்ற மூன்று விரல்களும் நம்மையே குறிபார்ப்பதைக் காணத் தவறிவிடுகிறோம். அடுத்தவரின் தரத்தை எடை போடும் அந்தக் கருவி தமக்கென்று வரும்போது தம்மையறியாமலே நியாயத்தை விட்டு விலகிப்போய்விடுகிறது. தமக்கான தீர்ப்பும் பாரபட்சமாகவே ஆகிவிடுகிறது.

    உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்கக்கூடிய நாம் அதற்கேற்றார்போல முதலில் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அன்பு, கருணை, நேர்மை, அமைதி, சுயநலமின்மை போன்ற அனைத்திலும் அடுத்தவரிடம் எதிர்பார்க்கிற அந்த தரத்தை நம்மிடம் முதலில் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டுமல்லவா? அப்படி இருக்கும்போது நாமே மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவும் முடியும். செய்த தவறுகளை துணிச்சலாக ஒப்புக்கொள்ளும்போது மட்டுமே நம்மால் அதைத் திருத்திக்கொள்ளவும் முடியும். நேர்மையான பார்வையுடன் நம்மை நாமே உணர ஆரம்பிக்கும்போதே நன்மையும், தீமையும் கலந்ததுதான் மனித மனம் என்பது விளங்கும். நம்முள் சக்தியும், பலவீனமும் சரிவிகிதத்தில் இருப்பதை உணர்ந்து ஒப்புக்கொள்ள ஆரம்பித்தாலே அடுத்தவரைப் பற்றிய நம்முடைய கண்ணோட்டமும் கபடமற்ற முறையில், மன்னிக்கும் மனோபாவத்துடன் இருக்க ஆரம்பித்துவிடும். முள்ளை முள்ளால் எடுக்க முடிவது போல வெறுப்பை, வெறுப்பால் நீக்க முடியாது. புத்தர்பிரான் சொல்வது போல, வெறுப்பை அன்பு கொண்டு மட்டுமே கைப்பற்றமுடியும் என்பதே மாறாத சட்டம். மன்னிக்கும் மனம் மட்டுமே என்றுமே அமைதி காண இயலும். மன்னிக்கும் குணம் மட்டுமே அன்பின் உச்சம். முழுமையாக மன்னிக்கும் மனம் மட்டுமே மகிழ்ச்சியையும், நிம்மதியையும் பெற வல்லது. இந்த நிம்மதியும், மகிழ்ச்சியும் மட்டுமே நம்மை வெற்றிப் பாதையில் வழிநடத்தக்கூடியது.

    quotesthoughts.com-wp-content-uploads-2013-02-motivational-Inspirational-quotes-thoughts-success-hardwork-self-confidence

    ஓய்வில்லாத மனம்

    வெகு நாட்களுக்குப் பிறகு வெளி நாட்டிலிருந்து வந்த என் தோழி திடீரென்று தொலைபேசியில் அழைத்து கோவைக்குச் செல்லும் வழியில், மதிய உணவிற்கு வருவதாகச் சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தாள். இரண்டு மணி நேரம் இருக்கிறதே, எத்தனையோ செய்யலாமே என்று ஆர்வக் கோளாரில் இனிப்பு, காரத்துடன், அவளுக்குப் பிடித்த காளான் பிரியாணி, தயிர் சேமியா, ஆந்திரா ஸ்டைல் பகாலாபாத், பன்னீர் மஞ்சூரியன் என அனைத்தையும் செய்ய ஆயத்தமானேன். நான்கு அடுப்பும் ஒரே நேரத்தில் ஜெகஜோதியாக எரிந்து கொண்டிருக்கிறது. பரபரவென ஒவ்வொன்றாக நறுக்கி தாளித்துக் கொண்டிருந்தேன். நேரம் ஆகிவிட்டது. அவள் அவசரமாகச் செல்வதால் வெகு நேரம் காக்க வைக்க முடியாது. இந்த பரபரப்பில், காளான் பிரியாணியில் ஊற்ற வேண்டிய தேங்காய்ப்பாலை பிசிபேலாபாத்திலும், பிசிபேலாபாத்தில் போட வேண்டிய மசாலாவை காளான் பிரியாணியிலும் போட்டுவிட்டேன். குழப்பம் அதிகமாக இரண்டையும் அனைத்தையும் அப்படியே நிறுத்திவிட்டு, தயிர் சேமியாவை முதலில் பொறுமையாகச் செய்து முடித்தேன். அடுத்து அன்னாசிப்பழக் கேசரியும் அருமையாக வந்துவிட்டது. பிசிபேலாபாத்தை மீண்டும் வேறு பாத்திரத்தில் பொறுமையாகச் செய்து முடித்தேன். அவள் சொன்னபடியே குறித்த நேரத்திற்கு வந்தாள் குடும்பத்துடன். சுவையான விருந்து என்று மகிழ்ச்சியுடன் சாப்பிட்டுவிட்டுச் சென்றாள். எனக்கும் மன நிறைவாக இருந்தது. இதை ஆரம்பத்திலேயே நிதானமாக முடிவெடுத்துச் செய்திருந்தால் இரண்டு பதார்த்தங்கள் வீணானதைத் தவிர்த்திருக்கலாம். ‘Mearsure twice, cut once’ என்ற ஆங்கிலப் பழமொழிதான் நினைவிற்கு வந்தது. இருக்கக்கூடிய நேரத்தைச் சரியாகக் கணக்கிட்டு, முடிந்ததை மட்டும் நிதானமாகச் செய்திருந்தால் இன்னும் அதிக தரத்துடன், சக்தி, காலம், பணம் என அனைத்து விரயத்தையும் தவிர்த்திருக்கலாம்.

    மனதின் அதிகப்படியான பணி நெருக்கடிச் சுமை குறிந்த விழிப்புணர்வைக் கொண்டோமானால் நம்முடைய வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான பெரும் மாற்றங்களைச் சந்திக்க முடியும். தத்தம் சக்தியின் அளவை அறிந்து அதற்கேற்றவாரு பணி நிர்ணயம் செய்யும் பழக்கம் மன அமைதியையும், மகிழ்ச்சியையும், நம்ப முடியாத அளவிற்கு நல்ல பலாபலன்களையும் தரவல்லது. பலவிதமான எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி குழப்பம் ஏற்படுத்துவதைக் காட்டிலும் ஒவ்வொருப் பணியாக எடுத்துக் கொண்டு அதில் நூறு சதவிகிதம் கவனம் செலுத்தி செயல்படும்போது அதன் பலன் மிகத்தரமானதாக ஆச்சரியப்படும் வகையில் இருக்கும் என்பதே நிதர்சனம். மற்றவர்களைக்காட்டிலும் அதிகமான உழைப்பைப் போடுவதான தோற்றம் அளித்தாலும், நம்முடைய சக்தி ஒழுங்கில்லாமல் தன் வழியில் சென்று இறுதியில் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. மனதிற்குள் மட்டுமன்றி வீட்டிற்குள்ளும் அளவிற்கு அதிகமான பொருட்களை அடைக்கும் போது, அது எத்துனை அழகான பொருட்களாக இருந்தாலும் ஒரு கசகசப்பை ஏற்படுத்தி அழகைக் கெடுத்துவிடும். சுத்தம் செய்வதற்கும் சிரமமாகவும் இருக்கும். எந்த நேரத்தில் எந்தப் பணியைச் செய்ய வேண்டும், எதை முதலில் செய்ய வேண்டும் என்று நிதானமாகத் திட்டமிடல் மட்டுமே வெற்றிக்கான பாதையை அடையும் வழி. இது போன்ற தெளிவான திட்டமிடல், குழப்பமானதொரு இருண்ட மனக்குகையிலிருந்து பளிச்சென்ற சூரிய ஒளி நிறைந்த பகுதிக்குள் வந்தது போன்றதொரு சுதந்திரமான நிலையை உருவாக்கும். இந்தச் சுதந்திர நிலையே வெற்றிக்கான ஆதாரம்.

    அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சல்லவா!

    0133

    படங்களுக்கு நன்றி :

    http://kootation.com/life-quotes-saying-wallpaper-and-animation/3.bp.blogspot.com*-A2e7CEAq6dg*UEJX_Q97iXI*AAAAAAAAA_E*NJ9xRqdIF-k*s1600*quotes-life2.jpg/

    http://kootation.com/motivational-quotes-thoughts-inspirational-success-hardwork-confidence/quotesthoughts.com*wp-content*uploads*2013*02*motivational-Inspirational-quotes-thoughts-success-hardwork-self-confidence.jpg/

    Share
  • “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து”

    தமிழ்த்தேனீ 

     

    toysசமீபத்தில் ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன். ஒரு அலமாரி திறந்து அதிலிருந்து குழந்தைகள் விளையாடும் நவீன விளையாட்டு பொம்மைகள் கீழே சிதறின. பார்த்து மலைத்துப் போனேன். ஆமாம் ஒரு கடையில் இருப்பதைப் போல் விதம் விதமாக அவ்வளவு பொம்மைகள்.

    ஆனால் யாருக்காக அவை வாங்கப் பட்டனவோ அந்தக் குழந்தை அழுது அடம் பிடித்துத்கொண்டு கீழே விழுந்து முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. ஆமாம்  அந்தக் குழந்தை இவ்வளவு விளையாட்டு பொம்மைகள் இருந்தும்  திருப்தி இல்லாமல் ஏதோ ஒன்றுக்கு  அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

    ஆகவே விளைவை யோசித்தால் அந்தப் பொம்மைகள் யாரால் வாங்கப்பட்டதோ  யாருக்கு கொடுக்கப்பட்டதோ இருவருக்குமே திருப்தி இல்லை,

    ஏன் இவ்வாறு குழந்தைகள் திருப்தி இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால், பெற்றவர்கள் குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கிக் கொடுப்பது அவர்களுடைய வேலைகளில் அந்தக் குழந்தை தலையிடாமல் இருந்து, அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்து அவர்கள் விளையாடவேண்டும். என்னும் சுயநலம் அதிகமாக இருக்கிரதே தவிர, ஆசையாய் வாங்கிக் கொடுக்கும் நிலை மாறிவிட்டது.

    எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகள் அழுது அடம் பிடிக்கக் கூடாது, சொன்ன பேச்சைக் கேட்க வேண்டும் என்னும் உயரிய கொள்கைக்காக ஏற்பட்ட வாங்கிக் கொடுக்கும் பழக்கம். நாளடைவில்  அந்தக் குழந்தைகளின் பிடிவாதத்தையும்  முரட்டுத் தனத்தையும் வளர்க்கும்  பேராசை எனும் கருவியாக, திருப்தி இன்மை என்னும் கருவியாக மாறிப் போனது  கொடுமை என்றால், இந்தக் கொடுமையை உணராத பெற்றோரின் மனநிலை இன்னமும் கொடுமை.

    எந்தப் பொம்மை வாங்கிக் கொடுத்தாலும்  அந்தப் பொம்மையை விளையாட முழுதுமாகக் கற்றுக் கொள்ளாமல், அதன் அதிக விலையை[ப் பற்றித் தெரியாமல், அதன் அருமையை உணராமல், அடுத்தடுத்து கிடைக்கும் பொம்மைகளால்   கவரப்பட்டு எதிலுமே நிலையில்லாமல் தவித்து அத்துணை பொம்மைகளையும் அலக்‌ஷியப் படுத்தி அடம் பிடிக்கும் குணத்தையும், திருப்தி இல்லாமை என்னும் பிடிவாத  குணத்தையும் மட்டுமே  உள்வாங்கும் குழந்தைகள்  நாளடைவில் வாழ்க்கையில், காதலில், படிப்பில், விளையாட்டில், எதிலுமே திருப்தி இல்லாமல் எப்போதும் எதையோ பறி கொடுத்தாற் போல, காதிலே ஒரு உயர்தர செல்போனை வைத்துக் கொண்டு  சாலையில் வாகனங்கள் வருவதுகூடத் தெரியாமல், ஆபத்துக்களை உணராமல் விரக்தியாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

    எண்ணிப் பார்க்கிறேன்,  எங்கள் குழந்தைப் பருவங்களை, அதிகமாகத் தெரிந்து கொள்ளாமல், அதாவது  அந்தப் பருவத்துக்கு எது வேண்டுமோ அதை மட்டும் தெரிந்து கொண்டு, மனதிலே கள்ளமில்லாமல் ஆடி, ஓடித் திரிந்த  குழந்தைகளாக, ஏதேனும் ஒன்று கிடைத்தாலும் அதிலே திருப்தி கொண்டு அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கத் தெரிந்த குழந்தையாக இருந்து, எப்போதும் மனதிலே உற்சாகமாக, குதூகலமாக வளையவந்த அந்தக் காலங்களில்  பெற்றோர்களும்  குழந்தைகளும் எல்லோருமே  அதிக ஆசைப்படாமல், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்னும்  பொன்னான வாசகத்தை மனதிலே வாங்கிக் கொண்டு  மகிழ்ச்சியாக வாழ்ந்தோம் என்பது புரிகிறது.

    குழந்தைகள் பல விளையாட்டுப் கேட்டாலும்  அந்தப் பல பொருட்களில்  எது அந்தக் குழந்தைக்கு வேண்டும்  என்று பெற்றவர்களும் புரிந்துகொண்டு, அதைக் குழந்தைகளுக்கும் புரியவைத்து  தேவையானதை மட்டும் வாங்கிக் கொடுத்து  வாங்கிக் கொடுத்த அந்தப் பொருளின்  உபயோகத்தையும்,, குழந்தைகளுக்கு உணர்த்து  அந்தக் குழந்தைகளின்  திருப்தி என்னும் உயரிய குணத்தை  வளர்த்து   வாழ்க்கையில் அவர்களை சிறப்பாக யோசிக்க வைத்து , உணர்ச்சி பூர்வமான முடிவுகளை எடுக்காமல் ஆராய்ந்து   முடிவெடுக்கும்  நல்ல பொறுப்பான குழந்தைகளாக வளர்த்த அந்தக் காலத்துப் பெற்றோரும், அதைப் புரிந்து கொண்டு நற்குணங்களை வளர்த்துக் கொண்ட அந்தக் காலத்துக் குழந்தைகள், இந்தக் காலத்துப் பெரியவர்களை மனதார வாழ்த்தத் தோன்றுகிறது.

    தீர்க்கமாக சிந்தித்தும் திடமான முடிவுகள் எடுக்காமல் எப்போதும் அலைபாயும் மனதோடு வாழும் இந்தக் காலத்துக் குழந்தைகளையும், அவர்களின் பெற்றோரையும், அவர்களின் வளர்ப்பு முறைகளையும் பற்றிக் கவலை வருகிறது. இந்தத் தலைமுறையினரைக் காணும் போது மனம் பதைக்கிறது.

    உடனடியாக யோசித்து உண்மைகளை உணர்ந்து மாற்றிக் கொள்ள வேண்டும்.  இந்தக் காலத்துப் பெற்றோர்களும் குழந்தைகளும் கவனித்து  தொடர்ந்து கடைப்பிடிக்க  வேண்டிய முது மொழி    “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து “  இல்லையென்றால் வாழ்க்கை இப்படித்தான் சிதறிப் போகும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(68)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    வணக்கத்துடன் மீண்டும் உங்களை இம்மடலில் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    ஒரு நாட்டின் சுதந்திரம், ஒரு நாட்டின் இறைமை, ஒரு நாட்டின் தனித்தன்மை என்பன அந்நாட்டின் பாதுகாப்பிலேயே தங்கியுள்ளது.

    தமது நாட்டின் பாதுகாப்பிற்காக மற்றொரு நாட்டில் தங்கியிருக்கும் எந்த நாடுமே உளசுத்தியோடு நேர்மையாக தம்முடைய கொள்கைகளை வழிநடத்துவதென்பது முடியாத காரியம்.

    ஆனால் இன்றய உலகச் சூழலில் பெரும்பான்மையான் நாடுகள் பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் சில சிறுபான்மையான நாடுகளிலேயே தங்கியிருக்கும் நிலையைக் காண்கிறோம்.

    ஒவ்வொரு நாட்டினது பாதுகாப்பிற்கும் அந்நாட்டின் இராணுவமே பொறுப்பாகிறது. தம்முடைய நாட்டிற்கான இராணுவத்தில் இணைந்து பணிபுரிவோர் தம் நாட்டின் மீதுள்ள அதீத பற்ரின் அடிப்படையிலே இணைந்து கொள்கிறார்கள்.

    நாட்டின் இராணுவத்தினருக்கு ஊதியம் கொடுக்கப்பட்டாலும் அது என்னவோ அடித்து விழுந்து ஓடிப்போய் பணியில் அமர்ந்து கொள்லும் வகையில் பெரியதோர் ஊதியமாக இருக்காது. இருந்தாலும் தமது நாட்டிற்கு அந்நியதோர் நாட்டினாலே ஆபத்து என்று கண்டு கொண்டதும் தமது உயிரைப் பணயம் வைத்து அந்நதந்த நாட்டு இராணுவங்கள் போரிடுவது அவ்விராணுவத்தினரின் தியாக மனப்பான்மையையே சுட்டிக் காட்டுகிறது.

    எதிலும், எங்கும் சில விதிவிலக்குகள் இருப்பது போல இவ்விராணுவத்தினர் மத்தியிலும் சில சுயநலம் கொண்ட,வர்கள் இல்லாமல் இல்லை ஆனால் அவர்கள் மிகச் சொற்ப அளவிலேயே கணப்படுவார்கள்.

    சரி என்னடா இவன் இராணுவத்தைப் பற்றி ஏதோ எமக்குத் தெரியாதவைகளைச் சொல்ல வந்தது போல சொல்லிக் கொண்டே போகிறான் என்று நீங்கள் சலிப்படையாதீர்கள் வழக்கம் போல எனது பீடிகைக்கு ஒரு காரணம் இருக்கிறது.

    கடந்தவாரம் இங்கிலாந்து தொலைக்காட்ச்சியில் தேசிய சேவையான பீ.பீ.சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் கண்ணுற்ற போது எழுத என் எண்ணப் பரிமாணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே மேற்கண்ட ஆரம்பம்.

    சமீபத்தில் இங்கிலாந்து இராணுவம் கண்ட போர்கள் கனமானவை, அதிக உயிரிழப்புகளைக் கொண்டவை. அவை மேற்கொள்ளப்பட்ட காரணங்களின் பின்னனியில் இருக்கும் நியாயத்தைப் பற்றி வாதிப்பதல்ல எனது இம்மடலின் நோக்கம். ஆயுதங்களின் பங்குபற்றி தற்போது இராணுவ சேவையிலிருந்து விடுபட்ட இராணுவ வீரர்களின் நிலை பற்றிய அதிர்ச்சிகரமான செய்தியை பற்றிய கருத்தோட்டமே இது.

    அத்தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படி கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகளில் உயிரிழந்த பிரித்தானிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை விட தற்கொலை செய்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கையே அதிகம் எனக் கூறப்பட்டது.

    களத்தில் நடைபெறும் போர் என்பது என்ன? மற்றொரு மனித உயிரைக் கொலை செய்வது அதேநேரம் எதிரியால் தனது உயிருக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமோ எனும் அச்சத்தில் வாழ்வது. இவையிரண்டும் ஒரு மனிதனின் மனதில் எப்போது பெரும்பான்மையாகக் குடி கொண்டிருந்தால் அம்மனிதனின் மனநிலை சீராக இருக்க முடியுமா?

    ஆனால் இத்தகிய சீரற்ற மனோநிலையைத் தாங்கி அதைலிருந்து வெளிவந்து விடக்கூடிய வல்லமை பலருக்கு இருந்தாலும் இம்மனோநிலையில் சிக்கி வாழ விரும்பாமல் தமது வாழ்வை முடித்துக் கொண்டு விடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

    2012ம் ஆண்டில் அப்கானிசஸ்தானில் பணியாற்றிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களில் ஏழு பேர் தமது உயிரைத் தாமாக மாய்த்துக் கொண்டார்கள் எனவும் மேலும் 14 பேரின் மரணம் தற்கொலை எனச் சந்தேகிக்கப்பட்டாலும் அவர்களின் மரணத்தைப் பற்றிய விசாரணை முற்றுப்பெறாததால் அவை ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என உத்தியியோகபூர்வமான அறிக்கை சொல்கிறது என்று டெய்லி டெலிகிராப் பத்திரிகை அறிக்கை ஒன்று கூறுகிறது..

    நான் மேற்சொன்ன கணிப்பு பணியாற்றிக் கொண்டிருந்த இராணுவவீரர்களைப் பற்றியது. ஆனால் ஏற்கனவே ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பாணியாற்றி விட்டு இராணுவ சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்ப்பி சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர்களில் 50க்கும் மேற்பட்டோர் கடந்த வருடம் தமது உயிரைப் பறித்துக் கொண்டார்கள் என்று இதே அறிக்கை கூறுகிறது..

    இராணுவ நடவடிக்கை என்பது பல சமயங்களில் மற்றவர்களின் உயிரைப் பறிக்கும் நடவடிக்கை ஆகிரது. இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டோர் மற்றும் தமது கண்முன்னால் தமது நண்பர்களின் உயிரைப் பறிகொடுத்தோர், தம்மோடு உண்டு, உடுத்தி, உறங்கி வாழ்ந்தோர் தமது கண்முன்னாலேயே உயிரிழப்பதைக் கண்ணுற்றோர் என பலவகையானோர் மனோநிலையில் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

    ஆனால் இத்தகைய மனஓநிலை பாதிக்கப்பட்டவர்களாக அரியப்பட்டோர் இராணுவ வாழ்க்கையில் இருந்து சகஜ வாழ்க்கைக்குத் திரும்போது அவர்களின் ஆரோக்கியத்தின் தொடர்ந்த பராமரிப்பை அரசாங்கம் சர்வரச் செய்கிறதா எனும் கேள்வியே இப்போது எழுந்துள்ளது.

    இவ்விடயத்தில் இப்போது இங்கிலாந்து ஊடகங்களில் எழுந்துள்ள வினாக்கள் அரசாங்கத் திணைக்களத்தையும் ஓரளவு தட்டி எழுப்பியுள்ளது.

    அது தவிர இத்தகிய தற்கொலைகளுக்குள்ளானவர்களின் குடும்ப அங்கத்தினர்கள் எடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் ஆங்காங்கே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.

    எமது பாதுகாப்பிர்காக, எம் நாட்டின் அரசாங்கத்தின் கட்டளைக்கிணங்கி தமது உயிரைப் பணயம் வைப்போருக்கு நாம் எத்தகய கெளரவத்தை அளிக்கிறோம்? எமது அரசாங்கத்தில் இராணுவப்பிரிவுக்கான அமைச்சர்கள் இதனை எத்தனை தூரம் மிகவும் முக்கியமான விடயமாகக் கருதுகிறார்கள்?

    கேள்விகளுக்கான விடைகள் சாதாரணத் தேர்தல் கோஷங்களாக இல்லாமல் நாட்டிற்க்குச் சேவை செய்யும் மனிதர்களில் நல்வாழ்க்கைக்கு வழிவகுக்கும் கொள்கைகளாக மிளிர வேண்டும் என்பதுவே பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    17.07.2013

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • கொண்டாடுவோம் தேசியத் திருநாட்களை

    முனைவர். ப. பானுமதி

    “ஆடுவோமே பள்ளு பாடுவோமே – ஆனந்த
    சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”

    என்று சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே துள்ளிக் குதித்தான் ஒரு இந்தியன். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆகஸ்டு, ஜனவரி மாதங்கள் வந்தால் சுதந்திர நன்னாளும் குடியரசு நன்னாளும் நினைவுக்குள் குதியாட்டம் போடும். எவ்வளவோ அடிபட்டு, உதைப்பட்டு, அல்லல் பட்டு, துன்பப் பட்டு, சிரமப்பட்டு, உயிரையும் தியாகம் செய்து வாங்கியது இந்தச் சுதந்திரம்.

    நம்மை நாமே ஆண்டுகொண்டால் வளர்ச்சிப் பாதையில் பிற நாடுகளுடன் போட்டிப் போடலாம் என்பதால் சுதந்திரம் பெற்ற தாய்த்திருநாடு குடியரசு நாடாக உருமாறியது. ஆனால் அன்னிய நாகரிகம் குடியேறி இருக்கும் இக்காலத்தில் இந்த நாட்கள் இன்றைய சமுதாயத்தினரிடம் நினைவில் இருக்கிறதா என்று வினா எழுப்பினால் இல்லை என்றே அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது.

    பொங்கல் திருநாளன்று ஒரு தொலைக்காட்சி ஊடகம் தகவல் தொழில் நுட்ப அலுவலகம் ஒன்றில் பணிபுரிவர்களிடம், அதாவது பொறியியல் பட்டப் படிப்புப் படித்தவர்களிடம், “பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்?” என்று வினா எழுப்பியது. அதற்கு ஒரு இளைஞர் “எனக்கு அதெல்லாம் தெரியாது. விடுமுறை கிடைக்கிறது. அதனால் கொண்டாடுகிறேன்” என்று மூன்று முறை ஒரே பதிலைத் திரும்பத் திரும்பச் சொன்னார். ஒரு தமிழனாகத் தமிழர்த் திருநாளைப் பற்றித் தெரியாமல் இருக்கின்றோமே என்னும் வெட்க உணர்வு சிறிதும் அந்த இளைஞரிடம் தென்படவில்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அதைவிட அதைத் தெரிந்து கொண்டால் ஒரு இன்கிரிமெண்டா (சம்பள உயர்வா) கிடைக்கப் போகிறது என்பது போல ஒரு ஏளனம் அவரது குரலில் தொணித்தது. அதனால் என்ன? விழா கொண்டாடுகின்றனர் வெகு மகிழ்ச்சியாக.

    “பஞ்சம் பஞ்சமென்று பரிதவிப்பார் அதன்
    காரணம் யாதெனும் அறிவுமிலார்”

    என்று பாரதியார் சொன்னது போல விழாக்களைக் கொண்டாடுகின்றனர். விடுமுறையைக் கழிக்கின்றனர். ஆனால் அதன் நோக்கமோ காரணமோ இளைய சமுதாயத்திற்குத் தெரியவில்லை. அதை முறையாகத் தெரிய வைக்காதது அல்லது கொண்டு சேர்க்காதது யார் குற்றம்? வீட்டில் விமர்சையாகக் கொண்டாடும் பொங்கல் விழாவுக்கே இந்நிலை என்றால் நாட்டில் கொண்டாடும் சுதந்திர தின விழாவும் குடியரசு தின விழாவும் அவர்கள் மனத்தில் எந்த இடத்தைப் பெற்றிருக்கும்?
    மெல்ல மெல்ல மறைந்து கொண்டு வரும் இந்தியக் கலாச்சாரத்தை மீட்க, அதே வேளையில் வெகு வேகமாக விஷ விருட்சமாக வளர்ந்து கொண்டு வரும் அன்னியக் கலாச்சாரத்தைப் போக்க என்ன செய்யப் போகிறோம் என்ற பெரிய வினா நம் கண் முன் விரிந்து கிடக்கிறது.

    இளைய சமுதாயம் அடுத்தடுத்து கோலாகலம், கொண்டாட்டம், ஆடல் பாடல், ஆரவாரம் என்று மகிழ்வாக இருக்கிறது. செப்டம்பரில் தீபாவளி வரும் என்று சொல்லும் இளைய சமுதாயத்திற்கு அதற்கு முந்தைய மாதம் ஆகஸ்டில் சுதந்திர தினம் வரும் என்னும் நினைவு இருப்பதில்லை. பிப்ரவரியில் காதலர் தினம் என்று மனத்தில் அழுத்தமாக பதிந்த அளவுக்கு அதற்கு முந்தைய மாதமான ஜனவரியில் குடியரசு தினம் என்று ஒன்று இருப்பது எந்த இளைஞனுக்கும் லேசாகக் கூட நினைவில் பதியவில்லை.

    எந்த மாணவனாலும் மறக்க முடியாத விழாவாக, அங்கு இங்கு எனாதபடி எங்கும் ஒளிமயமாய் சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஆயத்தம் ஆகத் தொடங்கி விடுகின்றது, எங்கோ இருந்து தமிழகத்தில் கால்கொண்ட காதலர் தினத் திருவிழா. இங்கு காதலர் தினத்தைக் கொண்டாடுவது தவறு என்று கூறுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. தெரிந்திருக்க வேண்டிய நம் வரலாறு தெரியவில்லையே என்னும் அங்கலாய்ப்பே.

    சுதந்திர தினத்தன்று நாம் இந்தியர் என்று பெருமிதமாகச் சட்டையில் குத்திக் கொள்ள ஒரு தேசியக் கொடிக்கு எங்கெங்கோ அலைய வேண்டியுள்ளது. காதலர் தினம் வர மாதங்கள் சில இருக்கும்போதே மழைக்காலக் காளான்களாகப் பரிசுகளும் வாழ்த்து அட்டைகளும் முளைத்து விடுகின்றன. இதில் விந்தை என்னவென்றால் வாலிபத்தின் வாசலில் நிற்பவர் மட்டுமல்ல. வயோதிகத்தைக் கடந்தோரும் காதலர் தினம் கொண்டாடுவோரில் இடம் பெறுவதுதான். இப்போதெல்லாம் இரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளின் கருத்திலும் கலந்திருப்பது காதலர்தினம். அதே போல எண்பது வயதைத் தொட்ட இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருப்போரும் காதலர்தினம் கொண்டாடுகின்றனர். காதலர் தினத்தன்று அனைவரும் ஒருவருக்கு ஒருவர் காதலர்தின வாழ்த்துப் பகிர்ந்து கொள்வது மரபாகிப் போனது. பெற்றோரையும், கல்வி புகட்டும் ஆசிரியர்களையும் தாத்தா பாட்டியையும் பார்த்து ‘ஹாப்பி வாலைண்டைன்ஸ் டே’ என்று வாழ்த்தும் கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    சர்வோதயா நாள் என்று ஒன்று இருந்தது. ஜனவரி 30 ஆம் நாள் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அது தற்போதைய குழந்தைகள் மட்டுமல்ல; பெற்றோர்கள் முதியவர்கள் என்று எவருக்குமே நினைவில் இல்லை. மகாத்மா காந்தியின் நினைவு நாள் சர்வோதயா நாளாக அனுஷ்டிக்கப் பட்டது. பள்ளிகளில் காலை 11 மணிக்கு ஒரு மணி அடிப்பார்கள். 11.02 மீண்டும் ஒர் மணி அடிப்பார்கள். அந்த இரண்டு நிமிடங்கள் பல இன்னல்களையும் தாங்கி அகிம்சை வழியில் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த மகாத்மா காந்திக்கு மெளன அஞ்சலி செலுத்துகிற வழக்கம் இருந்தது. இவ்வழக்கம் எங்கு போனது? எப்போது நின்று போனது? யாரால் நின்று போனது என்று தெரியவில்லை.

    சுந்தந்திர நாளிலும் குடியரசு நாளிலும் கல்விச்சாலைகளில் வண்ண வண்ண கொடிகள் கட்டி, காலையில் அனைவரும் ஒன்று கூடி தேசியக் கொடியை உயர்ந்த கம்பத்தில் பறக்க விட்டு, தேசபக்தி பாடல்களைப் பாடியும், சுதந்திரம் பெற்றுத் தந்த முன்னோர்களின் நினைவைப் போற்றும் வண்ணமாக பேசியும், நடித்தும்,ஆடியும் விழாவைக் கொண்டாடினர். இப்போது இதற்கெல்லாம் ஒருவருக்கும் நேரமில்லை. ஏதோ கடமைக்கு என்று கொடியேற்றப்படுகிறது. இந்த இரு விழாவுக்கும் பெரும்பான்மையான ஆங்கில வழிப் பள்ளிகள் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுப்பு அறிவித்து விடுகின்றன. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழைந்தகளாவது இனிப்புக் (சாக்லேட்டு)காகவாவது வருவார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கோ குடியரசு விழாவைப் போலவே சாக்லேட்டும் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. எண்ணி நான்கு மாணவர்களோ அல்லது அவர்களும் இல்லாமலோ ஆசிரியர்கள் மட்டிலுமே என்று கொடியேற்றுத் திருவிழா பள்ளிகளில் சுருக்கமாக முடிந்து விடுகின்றது.

    சில கல்விச் சாலைகளில் முதல் நாள் மாலையே காமா சாமாவென்று கொடியேற்று விழா இனிப்புடனோ இனிப்பின்றியோ அரைமணி நேர விழாவாக நடந்தேறுகின்றது. ஆசிரியர்கள் இந்த ஒரு மணி நேரத்திற்காகப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என்னும் புலம்பல்களுடன் வருவதும் வேண்டா வெறுப்பாக விழாவைக் கொண்டாடுவதும் வழக்கம் ஆகிப் போனது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆசிரியர்கள் கண்டிப்பாக வருகை தர வேண்டும் என்பது கல்வி நிறுவங்களின் கட்டளையாக இருப்பதால் அவர்கள் வருகின்றனர். இல்லாவிட்டால் ஆசிரியர்களும் வரமாட்டார்கள் என்பது நிதர்சனம்.

    கல்லூரிகளில் கேட்கவே தேவையில்லை. விடுதி இருப்பின் விடுதி மாணவர்கள் நான்கைந்து பேரைக் கொண்டு விடுதிக் காப்பாளர் கொடியேற்றி விடுவார். இல்லாவிட்டால் பத்து மாணவர்களுடன் பத்து நிமிட நிகழ்ச்சியாகக் கொடியேற்று விழா முடிவடைந்து விடுகின்றது.

    புற்றீசல் போல முளைத்துள்ள அத்தனை தொலைக்காட்சிகளும், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஒரு மாதத்திற்கு முன்னரே போட்டி போட்டுக் கொண்டு ப்ரமோ (நிகழ்ச்சிகள் பற்றிய முன்னோட்ட விளம்பரங்கள்) போட்டுக் காட்டுகின்றன. இது போல சுதந்திர தின நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் அவற்றில் இடம் பிடிப்பது இல்லை. தொடர்ந்து மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டிய சுதந்திர நாள், குடியரசு நாள் முதலிய தேசியத் திருநாள்களைக் கொண்டாடுவதை, அவை பற்றிய செய்திகளை வழங்குவதை அத்தனை தொலைக்காட்சிகளும் முற்றிலுமாக ஒதுக்கி விட்டன.

    ஒரு சில தொலைக்காட்சிகள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினக் கொண்டாட்டங்களை ஒளிப்பரப்புகின்றன என்றால் அவை ஆளும் அரசியல் கட்சிகளாக இருக்கும். இந்தத் தொலைக்காட்சிகள் கொடியேற்றுவதுடன் ஒரு சில நலத்திட்ட உதவிகள் வழங்குவதை காட்சியாக்கித் தம் கட்சிக்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற அளவில் நிறுத்திக் கொள்கின்றன. அரசு விடுமுறையை இன்பமாகக் கழிக்க நினைக்கும் இளைஞர்களுக்குச் சுவையான நிகழ்ச்சிகளைக் கொடுக்க வேண்டி முன்னணி நடிகர், நடிகையின் பேட்டியைப் போட்டு தம் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வதில் குறியாக உள்ளன அத்தனை தொலைக்காட்சிகளும். சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததில் அந்த நடிகர் அல்லது நடிகைகளின் பங்கு என்ன என்று தொலைக்காட்சிகள் சிந்திப்பதே இல்லை.

    அரசு தொலைக்காட்சி மட்டும் தொடர்ந்து ஆண்டுதோறும் இது போன்ற தேசிய விழாக்களின் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒளிபரப்புகிறது. ஆனால் அந்தத் தொலைக்காட்சியை இளைய சமுதாயம் ஒதுக்கி ஆண்டுகள் பல ஆயின.

    ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
    ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
    ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
    உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்

    குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
    கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
    நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
    ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்

    மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
    வானையளப் போம்கடல் மீனையளப்போம்
    சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
    சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.

    என்று எண்ணற்ற கனவுகளைக் கண்டு மறைந்தனர் அரும்பாடு பட்டுச் சுதந்திரம் வாங்கித் தந்தத் தியாகிகள். அவர்களை, அவர்களின் தியாகத்தை, அவர்களின் கனவை நினைவு கூர்வது தலையாய கடமை. அது மட்டுமல்ல.

    ஒவ்வொரு துறையிலும் நாடு சுதந்திரத்திற்கு முன்பு எப்படி இருந்தது. இப்போது என்ன நிலையில் இருக்கிறது? துறைகள் தோறும் அடைந்துள்ள உச்சம் என்ன?, இந்த உச்சம் எப்படி சாத்தியமானது என்று கூறும் விதமான நிகழ்ச்சிகளையாவது ஒளிபரப்ப வேண்டும். அந்தத் தார்மிகக் கடமைகள் ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் உள்ளது.

    அதே போன்று இக்கடமை தொலைக்காட்சிகளைக் காட்டிலும் சற்று கூடுதலாகக் கல்விச்சாலைகளுக்கு உள்ளது. இன்று கல்விச்சாலைகளின் நிலை எப்படி உள்ளது? புத்தகக் கல்வியே மதிப்பெண்ணுக்காக மட்டும் என்னும் வித்தகக் கல்வியாகிப் போனது. இந்நிலையில் இக்காலத்தில் இது போன்ற வாழ்க்கைக் கல்விகளையும் நாட்டுக்காக வாழ்ந்தோரைப் பற்றியும் கற்றுக்கொடுப்பதை வணிக நிறுவனங்களாக மாறிப் போன கல்வி நிலையங்கள் விரும்புவதில்லை.

    “விளையும் பயிர் முளையிலே’ என்பார்கள். சின்னக் குழந்தைகளாக இருக்கும் போது குழந்தைகள் விழாக்களை விரும்பிப் பார்ப்பார்கள். விரும்பிப் பார்க்கும் இவ்விழாக்கள் குழந்தைகளின் மனத்தின் ஆழத்தில் பதிந்துவிடும். இது போன்ற விழாக்களைப் பாலர் பள்ளி முதல் கல்லூரி வரை உள்ள கல்வி நிறுவனங்கள் விமர்சையாகக் கொண்டாடுதல் வேண்டும். அப்படிக் கொண்டாடும் போதுதான் குழந்தைகளின் மனத்தில் நாட்டுப் பற்று சிறிதாவது முளைக்கும்..

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பேரா. நாகராசன்

    இந்த வார வல்லமையாளர்  [227\2013 – 28/07\2013

    மெய் உலகில் கவின் கலைகளின் நுண்கலைகளில் ஆணாதிக்கம் கோலோச்சிப் பெண் படைப்பாளர்களின் பங்கு பணி உரிய கவனத்தைப் பெறத் தவறிவிட்டது. கவிஞர் கலைஞர் அறிஞர் பாகவதர் புலவர் என்று ஆண்பாலைச் சுட்டும் பெயர்களே நிலை பெற்று ஆண்கள் முன்னிலைபெற ஊடகங்கள் பெரிதும் உறுதுணையாக இருந்த நிலையில் தரமான படைப்புகளைப் படைத்து இந்த ஆமை முயல் ஓட்டப் போட்டியில் பல பெண் படைப்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  இலக்கிய இசை பண்பாட்டு தளங்கள் சமதளமாக இல்லாமல் ஏற்றத் தாழ்வும் மேடு பள்ளமும் நிறைந்த தளத்தில் அவர்தம் சீரிய முயற்சியால் பல பெண்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்.

    வாராது வந்த மாமணி என்று 20-ஆம் நூற்றாண்டில் போற்றி வரவேற்று வளர்த்த இணையத் தமிழ் உலகம் சாதி சமய இன மற்றும் பாலியல் வேற்றுமைகளால் பாதிக்கப்படாத சமத்துவப் புரத்தில் வாழும் வல்லமை கொண்டது என்று கருதப்பட்ட தளம் அத்தளத்தில் இணையத் தமிழ் வளர்ச்சியில் கவிதை முதன்மை பெறவில்லை என்றாலும் ஒரு முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. இணையத்தின் பன்முகங்களான கட்டுரை சிறு கதை, படத் தொகுப்பு விழியக்காட்சிகளுடன் தமிழ்க் கவிதையும் இணையத்தில் மின் கவிதைகளாக வெளிவர ஆரம்பித்தது.

    இணையப் படைப்பாளர்களில் பெரும்பான்மையோர் ஆண்களாக இருப்பினும் பெண் படைப்பாளர்கள் மெல்ல மெல்ல இணையத்தில் தங்கள் படைப்புகளுடன் உலா வர ஆரம்பித்தனர்.  இணையத்தின் அடையாளம் முகவரி தேவையில்லாத மெய்நிகர் வல்லமை அவர்களை அச்சமின்றித் தயக்கமின்றித் தங்கள் கருத்துகளைப் படைப்புகளாக வெளியிட வழிவகுத்தது.  ஆண்கள் பெண்களின் பெயரையே புனை பெயராகக் கொண்டு பெண்களைப் பற்றிய புனைவுகளையே பெரும்பாலும் படைத்துக் கொண்டிருந்த நிலையில் பெண் படைப்பாளிகள் தங்கள் பெயரிலும் அவ்வப்போது இயற்கை சார்ந்த புனை பெயரிலும் படைப்புகளை இயற்கை பெண் உரிமை தாய்மை என்று பன்முகப் படைப்புகளாகக் கவிதை கட்டுரை சிறு கதை என்று பல வடிவங்களில் உருவாக்கினர்

    சிறு கதை கட்டுரை படைத்தலில் பல பெண்கள் வெற்றி பெற்றிருந்தும் கவிதையில் கால் பதிக்கப் பெண்படைப்பாளிகள் அதிகம் முன் வரவில்லை.  இணையத்தில் பெண் கவிஞர்களும் அவர்களின் கவிதைகளும் அதிக எண்ணிக்கையில் இல்லை என்பது கவலைக்குரிய தகவல்.  மரபுக் கவிதைக்கான பயிற்சியின்மையும் புதுக் கவிதைக்கான கருத்துருக்களை அடையாளம் காண்பதிலும் நடைமுறை சிக்கல்கள் இருக்கக் கூடும் என்று கருதவேண்டியுள்ளது

    பெண்கல்வி வேகமெடுத்து உயர் கல்வியில் ஆண்களைவிட பெண்களே அதிக விழுக்காடு என்ற நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளும் கற்றுக்கொடுக்கும் பேராசிரியைகளும் இணையத் தமிழில் கவிதை படைக்க முன் வரவேண்டும் என்ற இன்றைய சூழலில் இந்தபணியைச் செவ்வனே செய்து  வெற்றிக்கொடி நாட்டியிருப்பவர்

    photoமுனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

    கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்று ஆயிரக்கணக்கான தமிழக மாணவிகளுக்குத் தமிழ்ப்பற்றை ஊட்டி வளர்ப்பவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

    வல்லமையில் குமுகத்துக்கு இன்றியமையாத சமகாலக் கருத்துகளைக் கட்டுரையாகத் தொடர்ந்து வெளியிட்டு வருபவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

    அனைத்துக்கும் மேலாக ஒரு பெண்கவிஞராக இணையத் தமிழில் கவிதைகள் படைப்பவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

    சுறுசுறுப்புக்குப் பேர் போன ஊரும் எறும்பினத்தில் எச்சரிக்கைக் கோட்டை தாண்டித் தற்கொலை செய்துகொள்ளும் கோழை எறும்புகளை அடையாளம் கண்டு அதைக் கவிதையாகப் படைத்தவர் முனைவர் பானுமதி என்கிற கவிஞர் ஆதிரா முல்லை

    தாய்மையைப் போற்றி இன்னொரு கவிதை அதற்குப் பின்புலமாகப் பெண்ணாகப் பிறந்து ஆணுலகத்தில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்ற வல்லமையாளர் எம்.எஸ்.எஸ் அம்மா அவர்களைப் படமாகக் காட்டியிருந்தார்

    பெண்மையின் இலக்கணப்படி திருமணம் செய்துகொண்டாலும் தாய்மை அடையாமல் எண்ணற்ற இசைப்படைப்புகளுக்குத் தாயாகிக் குடும்பம் இசை உலகம் இரண்டிலும் பேரரசியாக வலம் வந்த அந்த வல்லமைமிக்க மாதரசியே ஒவ்வொரு பெண் படைப்பாளர்களுக்கும் அடையாளம் என்று சொல்லாமல் சொல்லியிருந்தாரோ கவிஞர் என்று எண்ணத் தோன்றுகிறது

    முனைவர் பேராசிரியர் கவிஞர் என்று முப்பரிமாணம் பெற்ற பானுமதி என்கிற ஆதிரா முல்லை அவர்களே இந்த வார வல்லமையாளர்

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 19

    இன்னம்பூரான்

    auto-stik1மக்கள் நலத்தை நீண்டகாலமாக அசட்டை செய்வது போதாது என்று உச்சநீதி மன்றத்தின் ஆணைகளையே துச்சமாக மதித்து, சாக்குப்போக்குச்சொல்லி, சால்ஜாப்பு ராச்சியம் நடத்திய தமிழக அரசுக்கு, கொதித்தெழுந்த உச்சநீதி மன்றத்திலிருந்து ஒரு ‘சுளீர்’ அடி ஒன்று இன்று. சுரணையுடன், உரிய நடவடிக்கைகளை எடுத்து சீரிய ஆணைகளை அரசு பிறப்பிக்குமா என்ற ஐயம் நம்மை ஆட்டிப்படைத்தால், அது வியப்புக்குரியது அல்ல. ஏனெனில், எந்தக்கட்சி அரசாண்டாலும், ஏழை, எளியவர்கள் பிள்ளையார் கோயிலாண்டிகள் தான். ஊருக்கு இளைத்தவர்கள். தீண்டாமைச்சுவர்களும், இரட்டை டம்ளர் அவலமும், கந்து வட்டி கந்தரகோளமும், கல்வி தந்தைகளின் அசுரகதி திரவியம் தேடுதலும், சுண்ணாம்பு காளவாய் கொத்தடிமைகளும், சிறார்களை வறுத்தெடுத்து முறுக்கு சுடுவதும், தோட்டி மலம் சுமக்கும் அபாண்டமும் சட்டமீறல்களே. அவை சமுதாயத்தின் சுமுகத்தைக் குலைப்பதை பொது சமுதாயம் கண்டு கொள்வது இல்லை; அரசு கண்டும் காணாதது போல் பாசாங்கு செய்கிறது. கடமை தவறுகிறது.

    சரி. விஷயத்துக்கு வருவோம். தருமமிகு சென்னை மாநகரத்தில் நடுத்தர மக்கள் ஆட்டோரிக்க்ஷா சவாரி செய்ய அஞ்சுகிறார்கள்; ஆனால், தவிர்க்கமுடியவில்லையே.

    “பள்ளிக்கு செல்ல ரொம்பி வழியும் ஆட்டோரிக்க்ஷா!

    கொள்ளைப்பணம் கேட்டாலும் கொடுத்தாகவேண்டும்.”

    “ரயிலை பிடிக்கணுமா, செல்லக்கண்ணு.

    மயிலிறகு இறக்கி வை, செல்லக்கண்ணு.”

    அவசரமா ஆஸ்பத்திரி போகணுமா, ராசா?

    பரவசமா காசு கேட்பான், ஆட்டோ சங்கரு.”

    பாட்டு என்ன வேண்டிக்கிடக்கு? பாட்டு! இது ஷோக்கு சமாச்சாரம் இல்லை, சுவாமி. பூஜை வேளையிலே கரடி புகுந்தமாதிரி தமாசு என்ன வேண்டிக்கிடக்கு? பாயிண்டுக்கு வருவோம். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து, இந்த ஆட்டோரிக்க்ஷா அனாச்சாரம் சென்னை வாழ் மக்களை எரி தணலில் வீழ்ந்த புழுவைப்போல துடிக்க வைத்துள்ளது. ‘ஆட்டோரிக்க்ஷா’ என்ற பேச்சு எழுந்தவுடனேயே மன உளைச்சல், ரத்த அழுத்தம், அபரிமித கவலை, அவமானம், அனாவசிய வாக்குவாதம், விட்டால் போதும் என்ற மனோபாவம் பெரும்பான்மையான மக்களைப் பாடாய் படுத்துகிறது என்பதும், அவரவர்கள், தவிர்க்க முடியாத கட்டாயங்களால், ஆட்டோரிக்க்ஷா ஓட்டுனரின் பேராசைக்கு உட்பட்டு நடப்பதும், ஆட்டோரிக்க்ஷா அட்டூழியம் தமிழகம் முழுதும் ஆக்கிரமித்து விட்டது என்பதும், ஊரறிந்த உண்மை.

    பழங்கதை பேசினால், ஆளுக்கொரு சரடு அவிழ்த்து விடுவார்கள், அதிகார மையங்கள். இந்த விவகாரத்தில், முதல் அதிகாரமையம்: ஆட்டோரிக்க்ஷா சொந்தக்காரர்கள். அவர்களில் பெரும்பாலோர் லேவாதேவிக்காரர்கள். பசை இருப்பதால், நிதி நிறுவனங்களும், வங்கிகளும் அவர்கள் பக்கம். காவல்துறை அதிகாரிகளும் பெருமளவில், பினாமியாக, ஆட்டோரிக்க்ஷா சொந்தக்காரர்கள் என்ற தகவல், பல வருடங்களாக, யாதொரு மறுப்பும் இல்லாமல், உலா வருகிறது. இது முதல் அதிகார மையத்தை விட வலிமை வாய்ந்தது. பயிரை மேயும் வேலிக்கு ஆதிக்கம் அதிகம். ஆட்டோரிக்க்ஷா ஓட்டுனர்கள், மனித இனத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், ஒரு சிலரை தவிர, பெரும்பாலோர் ஈவு இரக்கமற்றவர்கள்; மனசாட்சியை தொலைத்தவர்கள். காசு பறிப்பவர்கள்.

    இந்த சூழ்நிலையில், கனம் கோர்ட்டாரிடம் அரசு இடக்கு செய்யும் டைம்-லைனை பாருங்கள்.

    டைம்-லைன்:

    டிசம்பர் 3, 2012:

    விண்ணப்பதாரர் எஸ்.வி.க்ருஷ்ணமூர்த்தி அவர்களின் மனுவை பரிசீலித்த உச்சநீதி மன்றம், இரண்டு வாரங்களுக்குள் ஆட்டோரிக்க்ஷாவுக்கான கட்டணங்களை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. வழக்கை ஜனவரி 28, 2013 அன்று விசாரிக்கப்போவதாக உத்தரவிட்டது.

    ஜனவரி 28, 2013:

    தமிழக அரசு வக்கீல் திரு. குரு கிருஷ்ணகுமார் நான்கு வாரங்களுக்கு வாய்தா கேட்டார். அது அளிக்கப்பட்டது.

    மார்ச் 4, 2013

    ‘மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி’ என்று செம்பை பாடியது போல, விண்ணப்பதாரரின் கோரிக்கைகளை அரசு ஆராய்கிறது எனக்கூறி, திரு. குரு கிருஷ்ணகுமார், மறுபடியும் எட்டு வாரங்களுக்கு வாய்தா கேட்டார். அதுவும் பொறுமையுடன் அளிக்கப்பட்டது.

    மே 6, 2013.

    திரு. குரு கிருஷ்ணகுமார் மறுபடியும் வாய்தா கேட்டார்! விண்ணப்பதாரர் ஆக்ஷேபித்த போதிலும், பொறுமையையே பூஷணமாகக்கொண்ட கனம் கோர்ட்டார் மனமுவந்து கேட்டபடி இரண்டு மாத வாய்தா அளித்தனர். இனி தாமதிக்காமல் கட்டணங்களை அரசு நிர்ணயித்து ஆக வேண்டும் என்ற வற்புறுத்தல், அந்த வாய்தாவின் உள்ளுறை. ஜூலை 22க்குள் அவ்வாறு செய்யப்படும் என்ற வாக்குறுதி அரசியல் தரப்பில் அளிக்கப்பட்டது.

    26 07 2013

    அரசு வக்கீல் திரு.எல்.என்.ராவ் அவர்கள், பல முனைகளில் இது விஷயமாக முன்னேற்றம் இருந்தாலும்,மேலும் அவகாசம் வேண்டும் என்று சொல்லி, மறுபடியும் வாய்தா விண்ணப்பம்!

    பொறுமையிழந்த கனம் கோர்ட்டார் ( நீதிபதிகள் ஆர்.எம்.லோடா அவர்களும், இப்ராஹீம் கலிஃபுல்லா அவர்களும்) வாய்தா கொடுத்தாலும், அரசை கண்டித்தனர். ரூபாய் 10,000/- அபராதம் விதித்தனர். அதை விண்ணப்பதாரருக்கு கொடுக்கவேண்டும் என்று ஆணையிட்டனர். ஆதியோடந்தமாக, இந்த வாய்தா அவலத்தை விவரித்த பின்னர், இறுதியாக நான்கு வார வாய்தா கொடுத்துள்ளனர். இத்தகைய அபராதம், வற்புறுத்தல் எல்லாம் அரசுக்கு ஒரு தலை குனிவு தான்.

    இந்த அழகில், மற்ற இடங்களைப் பற்றி, சற்றே கவனிப்போம்.

    ஹிந்து இதழ் ஆங்கில பதிப்பில் (ஜூலை 28, 2013) திரு. ஜே. வெங்கடேசன் குறிப்பிட்டது:

    புது டில்லி: முதல் கட்டணம் ரூ.25 /- + ரூ.8 /- கி.மீட்டருக்கு;

    மும்பாய்: முதல் கட்டணம் ரூ.15 /- + ரூ.9.87/- கி.மீட்டருக்கு;

    பெங்களூரு: முதல் கட்டணம் ரூ.20 /- + ரூ.11 /- கி.மீட்டருக்கு;

    ஹைதராபாத்: முதல் கட்டணம் ரூ.16 /- + ரூ.9/- கி.மீட்டருக்கு.

    முதல் கட்டணத்தொலைவில் சற்று வித்தியாசங்கள் இருந்தாலும், இரவு நேரத்தில் 25% அதிகப்படி கட்டணம் என்றாலும், மேற்படி நகரங்களில் இருப்பதை விட சென்னையில் பலமடங்கு அதிகம்; அடாவடி. கேள்வி முறை இல்லை.

    கொசுறு: இந்த 2ஜி விவகாரத்தில் ஜாயிண்ட் பார்லிமெண்டரி கமிட்டியின் தலைவர் திரு.பி.சி.சாக்கோ அவர்கள் ஆடிட்டர் ஜெனெரல் வரம்பு மீறி அரசின் கொள்கைகளை விமரிசித்தார் என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறார். ஒருவன் நாள்தோறும் பீடி பிடித்ததால் அவனை நுரையீரல் புற்று நோய் பீடித்தது. டாக்டர் அது பற்றி எழுதியதை ஆக்ஷேபித்து அவரின் நண்பர், ‘டாக்டர் புற்று நோயை பற்றி மட்டும் சொல்லவேண்டும். பீடி பிடித்தது பற்றி பேசுவது, கொள்கை விமரிசனம் என்று கண்டித்தாராம். அது நினைவுக்கு வந்தது.

    இன்னம்பூரான்

    28 07 2013

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர்!…(பகுதி – 1)

     

    ராமஸ்வாமி ஸம்பத்

     

    Alexander-The-Great-1

                                                                                                                                                                                                                                                                                                                                                                                  

     

     jhelum“இது நதியா அல்லது கடலா’’ என்ற ஐயப்பாடு எழும் அளவில், அகண்ட ஜீலம் நதி கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த்து. பருவக்காற்றினால் உந்தப்பட்டு அடாது கொட்டித்தீர்க்கும் மழை அந்த சிந்து மஹாநதியின் உபநதியை மேலும் மேலும் வெள்ளப்பெருக்கில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. உச்சிப் பொழுதாக இருந்தாலும் கார்மேகக் கூட்டம் வானத்தையே மூடிவிட்டதால் இயற்கை வெளிச்சம் வெகு குறைவாக இருந்தது. ’சல…சல..’. என்ற பலத்த அரவத்துடன் அலைமோதும் வெள்ளம், ‘விர்…விர்…’ என்று வீசும் அதிவேகக் காற்றின் பேரொலி, மற்றும் வான்முகில்களின் உருமல் அந்த பிராந்தியத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தன.

    அத்தகைய கண்கொள்ளாக் காட்சியைத் தனது போர்க் கூடாரத்திலிருந்து வெளிவந்து அந்த மழையினூடே நனைந்து கொண்டே ஆர்வத்துடன் ரசித்துக் கொண்டிருந்தான் மாசிடோனிய மாமன்னன் அலெக்சாண்டர். ஜீலத்தின் கிழக்குக் கரையில் இரண்டு நாட்களுக்கு முன்பே பவுரவ நாட்டு மன்னன் புருஷோத்தமனுடன் நடந்து ஓய்ந்திருந்த போரில் அந்த யவன மன்னன் உடலை சிராய்த்திருந்த விழுப்புண்களின் வலியைக்கூட  ஓரளவுக்கு அக்காட்சி மறக்கச் செய்தது.

    ‘ஆஹா, எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த ஹைடஸ்பெஸ்!**. இந்த உபநதியே இப்படியிருந்தால் இண்டஸ் (சிந்து மாநதி) எவ்வளவு பெரிதாக இருக்கும்! அப்புகழ்பெற்ற காஞ்ஜெஸ் (கங்கை மாநதி) எப்படியிருக்குமோ!’  என அவன் மனம் ஆலோசனையில் வீழ்ந்தது. ‘எப்படியாவது காஞ்ஜெஸ் சமவெளி நாடான மகதத்தையும் வெல்ல வேண்டும்’ என்ற ஒரு மனத்துடிப்பு வெளிப்பட்டது. சிந்து-கங்கை சமவெளி நாடுகளை வென்று கீழை நாடுகளையும் வீழ்த்தி தன் உலக ஏகாதிபத்தியத்தை நிலை நாட்டவேண்டும் என்பதே அவன் அவா.

    ஆனால் அவன் படைவீரர்களோ வீட்டு நினைவு மேலிட்டதாலும், மாதக் கணக்கில் போர் புரிந்து பல நாடுகளை வீழ்த்திய களைப்பினாலும் மேற்கொண்டு போரிட விரும்பவில்லை. அதுவும் தவிர ஜீலம் போரில் தாங்கள் இதுவரை கண்டறியாத யானைப்படையின் எதிர்த்தாக்குதலால் அவர்கள் சற்று அச்சம் அடைந்ததும் அவர்கள் உற்சாகக் குறைவுக்கு ஒரு காரணம். மகத சாம்ராட்டின் யானைப்படை பவுரவ மன்னனின் படையைவிட பல மடங்கு பெரியது என்ற தகவல் அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது.  மேலும் பரத கண்டத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த முல்லைப் பிரதேசத்தில் உள்ள மரக்கிளைகளில் தலை கீழாகத் தொங்கியவாறு தவம் செய்யும் யோகிகள் அவர்களுக்கு வியப்போடு அச்சத்தையும் ஏற்படுத்தினர். “ஐயோ! இவர்கள் மாயாவிகளோ என்னவோ, என்ன செய்வார்க்ளோ?” என்ற பயம் அவ்வீரர்களைப் பீடித்து, ’போதும் இந்த ஓயாத சண்டை’ என்று எண்ண வைத்தது.

    ’என்ன வீரர்கள் இவர்கள்! நான் இவர்களுக்கு என்ன குறை வைத்தேன்? கை நிறைய ஊதியம் கொடுத்ததோடல்லாமல் மாசிடோனியாவில் உள்ள இவர்கள் குடும்பத்தாருக்கு உணவுப் பொருட்களோடு எல்லா வசதிகளையும் இலவசமாக அளித்திருக்கிறேன். இவற்றைத் தவிர, எனது திக்விஜயத்தில் வீழ்ந்த நாடுகளில் சூறையாடப்பற்ற விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தையும் இவர்களுக்கே ஈந்தும் இவ்ர்கள் ஏன் இப்படி எனது ஆணையை மீறி நாடு திரும்ப விரும்புகிறார்கள்? நன்றி கெட்ட ஜன்மங்கள்!’ என அலெக்சாண்டர் பற்களைக் கடித்தான்.

    அதே நேரத்தில், ஜீலத்தின் கீழ்க்கரையில் நடந்து முடிந்த அந்த உக்கிரமான போரில் ’தான் மெய்யாக வெற்றி பெற்றோமா?’ எனும் சந்தேகம் அவனுள் எழுந்தது. ’…இந்த நாட்டு மன்னன் எப்பேற்பட்ட வீரன்! என்ன உயரம், ஏழடி இருப்பானோ? அவன் முன் நான் ஒரு சித்திரக்குள்ளனே. போர் யானையின் மீது அமர்ந்து எவ்வளவு லாவகமாக அம்புகளையும் ஈட்டிகளையும் மாற்றி மாற்றி என் மீது எறிந்து என்னை இப்படிக் காயப்படுத்தி உள்ளான். குருதி சொட்டும் காயங்களுடன் தரையில் வீழ்ந்த என்னை ஏன் அவன் கொல்லவில்லை? அவனது தயக்கத்தைப் பயன்படுத்தித்தானே என் மெய்க்காப்பாளர்கள் அவனை சிறைபிடித்தனர்! அப்படி அவன் தயக்கம் காட்டாதிருந்தால் வெற்றி அவனுடையதாக இருந்திருக்கும் அல்லவா…’ என்றெல்லாம் அலெக்சாண்டரின் சிந்தனை ஓடியது.

    ‘கீழைநாட்டாரை எவ்வளவு குறைவாக எடை போட்டிருந்தோம். இங்கு வாழும் மக்கள் காட்டுமிராண்டிகள் என்றும் இவர்களை வீழ்த்துவது மிக எளிது என்றல்லவா நினைத்திருந்தோம். நாம் இதுவரை கண்டிராத இவர் யானைப்படை எவ்வளவு நாசத்தை நம் படைகளுக்கு உண்டாக்கி விட்டிருக்கிறது. நஞ்சு தோய்க்கப்பட்டக் கணைகளைத் துதிக்கைகளால் எறிந்து அந்த யானைகள் எத்தனை சேதங்களை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக என் உயிருக்கு உயிரான புரவி பூசிபாலஸ் இப்படையின் யானையால்தான் கொல்லப்பட்டது. என் வலது கை போன்ற தளபதி நினேயியாவை இந்த யுத்தத்தில்தானே காவு கொடுத்தேன். இந்த என் வெற்றிக்கு எத்தனை பெரிய விலையைக் கொடுத்திருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக இப்படை யானைகள் சகதியான தரையில் சரியாகக் கால் ஊன்றமுடியாமல் பவுரவ நாட்டுப் படைகள் மீதே திரும்பிப் பாய்ந்ததால் அல்லவா அவர்கள் பக்கமும் பலத்த இழப்பு ஏற்பட்டது. கடந்த மாதங்களில் கிரேக்கம், எகிப்து, சிரியா, மத்தியதரைக் கடல் நாடுகள், பாரசீக நாடுகளெல்லாம் எவ்வளவு எளிதாக என்னிடம் சரண் அடைந்தன! இங்கு மட்டும் என் பராக்கிரமம் ஏன் செல்லவில்லை..?.’ என்று எண்ணி அந்த யவன அரசன் மனம் ஒடிந்து போனான்.

    ‘மேலும், பவுரவ நாட்டின் விரோதியான தக்‌ஷசீல சிற்றரசன் அம்பியின் உதவியில்லாமல் இந்த ஹைடஸ்பஸின் மேற்குக் கரையைக் கடந்து அதன் கீழ்க்கரையில் இப்போரினை நடத்தியிருக்க முடியுமா? பொற்குவைகளால் அவனை மயக்கி அல்லவா நான் கைபர் கணவாய் வழியாக இந்த பரத கண்டத்தில் கால் வைத்தேன். பவுரவ நாட்டிற்கு இந்த நதி இயற்கை அளித்துள்ள பெரிய அரண். அம்பியின் யோசனைப்படி இரவோடு இரவாக ஜீலத்தின் வடக்கு திசை நோக்கி படைகளை நகர்த்தி அகலக்குறைவான ஓரிடத்தில் பரிசல்கள் மூலம் கீழ்க்கரைக்கு வந்து சேர்ந்திராவிட்டால் மழை ஓயும்வரை நம்மால் எதுவும் செய்திருக்க முடியாது.’

    இவ்வாறெல்லாம் ஆலோசனை செய்த அலெக்சாண்டருக்குத் தன் ஆசான் அரிஸ்டாடில் சில ஆண்டுகளுக்கு முன்பே தன்னிடம் கூறியது நினைவுக்கு வந்தது: ‘கீழைநாட்டவர்கள் ஆன்மீக பலம் மிகுந்தவர்கள். அவர்களை வெல்வது அவ்வளவு எளிதல்ல.’ மேதை பிளாட்டோவின் முக்கிய சீடரான அவரது மதிப்பீடு எவ்வளவு சரியானது என்பதனை உணர்ந்த நிலையில், மழையில் அதிக நேரம் நனைந்ததால் ஏற்பட்ட விழுப்புண்களின் வலி தாங்கமுடியாமல், உள்ளே வந்து மஞ்சத்தில் வீழ்ந்தான்.

    “யாரங்கே? ரொக்ஸானாவைக் கூப்பிடுங்கள்” என்று உரத்த குரலில் கர்ஜித்தான்.

     “ஜீலம் நதி”  கிரேக்கர்களால் “ஹைடஸ்பெஸ்” என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

    (தொடரும்)

    Share
  • கென்யா பயணம் 2

    நாகேஸ்வரி அண்ணாமலை

    kenewzz

    நாங்கள் கென்யா ஏர்வேஸில் பம்பாய் வழியாக கென்யாவின் தலைநகரான நைரோபிக்குச் செல்வதென்று முடிவு செய்தோம். கென்யா ஏர்வேஸ் விமானம் எல்லா விமானங்களையும் போல் இருந்தாலும் விமானப் பணியாளர்கள் எனக்கு ஏற்கனவே பரிச்சயமாகியிருந்த விமானப் பணியாளர்கள் போல் இல்லை. அவர்களைப் போல் இவர்கள் நளினமாக நடந்துகொள்ளவில்லை. கடனே என்று இல்லாவிட்டாலும் ஒரு இயந்திர கதியில் உணவைப் பயணிகளுக்குக் கொடுப்பது, வேறு ஏதாவது தேவையா என்று கேட்பது ஆகிய காரியங்களைச் செய்தார்கள். விமானத்தில் நிறைய இடங்கள் காலியாக இருந்தன. பணியாளர்கள் நடந்துகொண்டதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் இன்னும் கொஞ்சம் சேவையின் தரத்தை உயர்த்தினால் நல்லது என்று நினைக்கிறேன்.

    நைரோபி விமான நிலையத்தில் போய் இறங்கி விமானத்தை விட்டு வெளியேறியதும் அதை அடுத்து இருந்த பகுதி எல்லா விமான நிலையங்களையும் போல் விஸ்தாரமாகவே இருந்தது. ஆனால் அதன் பிறகு உள்ள பகுதிகள் மிகச் சாதாரணமாக இருந்தன. அமெரிக்காவில் குடியேறல் பகுதி மிக பிரமாண்டமாக இருக்கும். அமெரிக்காவிற்குப் பல நாடுகளிலிருந்தும் விமானங்கள் வந்தவண்ணமாக இருக்கும். குடியேறல் பகுதியில் ஒரு அதிகாரி வரும் பயணிகளைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் இங்கே போங்கள், மற்றவர்கள் அந்தப் பக்க்ம் போங்கள் என்று அரட்டிக்கொண்டிருப்பான். அங்கு இருக்கும் அதிகாரிகள் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டிருப்பார்கள். நைரோபி விமானநிலயத்தின் குடியேறல் பகுதி மிகவும் சிறியதாக இருந்தது. இரண்டே அதிகாரிகள் இருந்தனர். கென்யாவிற்கு வரும் பயணிகளுக்கு விசா விமானநிலயத்திலேயே வழங்க வசதி இருந்ததால் அதற்கு இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவ்வளவே.

    சில நாட்கள் தங்குவதற்குரிய விசாவைப் பெற்றுக்கொண்டு விமானநிலையத்தை விட்டுவெளியே வந்தோம். சில்லென்று குளிர்ந்த காற்று வீசியது. அப்படிக் குளிர் அடித்ததே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சாதாரணமாக நாங்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும்போது விமானநிலையத்தை விட்டு வெளியே வந்தால் ஒரே வெக்கையாக இருக்கும். அது மாதிரி அமெரிக்கா சென்றடையும் போதும் கோடை காலமாக இருக்குமாதலால் குளிராக இருக்காது. மேலும் ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம் வெக்கையாக இருக்கும் என்று நான் தவறாக எண்ணியிருந்தேன். எங்கள் மாணவ நண்பர்கள் நைரோபி காலநிலை மைசூர் காலநிலை மாதிரி இருக்கும் என்று சொல்லியிருந்தாலும் அவர்கள் சொன்னது மனதில் பதிவாகியிருக்கவில்லை. நல்ல வேளை ஆளுக்கு ஒரு ஸ்வெட்டர் கொண்டுபோயிருந்தோம். வேக வேகமாக அதை எடுத்துப் போட்டுக்கொண்டோம்.

    பூமியில் பூமத்தியரேகைக்கு வடக்கில் இருக்கும் நாடுகள் வடமண்டலம் என்றும் தெற்கே இருக்கும் நாடுகள் தென்மண்டலம் என்றும் அழைக்கப்படுகின்றன. கென்யா நாட்டின் நடுவே பூமத்தியரேகை ஓடுகிறது. அதனால் பூமத்தியரேகைக்கு வடக்கே இருக்கும் பகுதிகள் வடமண்டலத்தைச் சேர்ந்தவை. தெற்கே இருக்கும் பகுதிகள் தென் மண்டலத்தைச் சேர்ந்தவை. கென்யாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் நாட்டின் தலைநகரான நைரோபி தென் மண்டலத்தைச் சேர்ந்ததால் இப்போது, அதாவது ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், அங்கு குளிர்காலம். குளிர்காலம் என்றாலும் பூமத்தியரேகைக்குப் பக்கத்தில் அவ்வளவு குளிர் இருப்பதில்லை. கடல் மட்டத்திற்கு மேலே 3000 அடி உயரத்தில் நைரோபி இருப்பதால் கொஞ்சம் குளிர்கிறது. சிங்கப்பூர் பூமத்தியரேகைக்கு வடக்கே 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. நைரோபி பூமத்தியரேகைக்குத் தெற்கே 100 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இரண்டும் பூமத்தியரேகையிலிருந்து சம தூரத்தில் இருந்தாலும் சிங்கப்பூர் கடல் மட்டத்தில் இருப்பதால் எப்போதும் சென்னையைப் போல வெக்கையாக இருக்கும். நைரோபி கடல்மட்டத்திற்கு மேலே இருப்பதால் எப்போதுமே மைசூரைப் போல கொஞ்சம் குளிராக இருக்கிறது.

    நைரோபி என்ற பெயர் அங்கு வாழ்ந்துவந்த மசாய் பழங்குடி மக்கள் அங்கு ஒடும் நதிக்கு இட்ட பெயர். அதன் மூலப் பெயர் நைலோபி மருவிப். பின்னால் நைரோபி ஆயிற்றாம். மசாய் மக்கள் நாடோடி மக்கள்; ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு இடம்விட்டு இடம் போய்க்கொண்டிருப்பர்கள். இப்போது இம்மக்கள் இந்த நகரத்திலும் அதன் பக்கத்திலும் இல்லை.
    ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் கென்யாவின் தலைநகரான நைரோபி ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள மற்ற நகரங்களை விட பின்தோன்றியது; வேகமாக வளர்ந்துவரும் இது அதி நவீனமானது; கிழக்கு ஆப்பிரிகாவில் அதிக உயரத்தில் இருப்பது; மற்ற நகரங்களை விடப் பெரியதும் கூட்.

    ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் ஆதிவாசிகள் வசித்துவந்தனர். ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் காலனி ஆதிக்கத்தை ஏற்படுத்தியபோது அவைக்ளுக்கிடையே அடிக்கடி போர் நடந்தது. அதனால் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பெர்லினில் ஒரு மாநாட்டைக் கூட்டி தங்களுக்குள் ஒரு ச்மரச உடன்படிக்கை செய்துகொண்டனர். அவரவர் பிடித்துக்கொண்ட இடஙகளை அவரவர் அதிகாரத்தில் வைத்துக்கொள்வதென்றும் பிடித்துக்கொண்ட ஒவ்வொரு இடத்திலும் அந்த இடங்களின் பாதுகாப்பிற்காக துருப்புக்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த மக்களிடம் நாகரீகத்தைப் பரப்ப கிறிஸ்துவ மதத்தை அந்த மக்களிடம் பரப்ப வேண்டும் என்றும் தங்களுக்குள் விதிகளை வகுத்துக்கொண்டனர். இப்படி அந்த நாடுகள் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள இடங்களை ஆக்கிரமித்துக்கொண்ட முறையிலேயே பல நாடுகளின் எல்லைகள் வகுக்கப்பட்டன. உலகில் உள்ள வெள்ளை இனத்தவர்கள்தான் நாகரீகம் அடைந்தவர்கள், மற்ற கருப்பு இனத்தவர்களை நாகரீகப்படுத்தும் ‘பொறுப்பு, சுமை’ வெள்ளை இனத்தவர்களைச் சேர்ந்தது என்று வெள்ளை இனத்தவர்கள் தாங்களாக நினைத்துக்கொண்ட காலம் அது. மற்ற நாடுகளைக் கைப்பற்றி தங்கள் ஆளுகைக்குள் வைத்துக்கொண்டதற்கு அவர்கள் கற்பித்துக்கொண்ட நியாயம் என்றும் சொல்லலாம். இப்படி மனிதனை மனிதன் அடிமை செய்து அரசாட்சி செய்தவர்கள் இப்போது மனித உரிமை பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள்.

    இப்படி ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பிரித்துக்கொண்டபோது ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள இப்போதைய கென்யா, டான்சினியா, எத்தியோப்பியா, உகாண்டா, போன்ற நாடுகளின் பல பகுதிகள் பிரிட்டனின் அதிகாரத்திற்குள் வந்தது. ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து கென்யா வழியாக உகாண்டா வரை பிரிட்டிஷ் அரசு தன் வணிகத்தை வளர்க்க ரயில்பாதை அமைக்க முடிவுசெய்தபோது பல இந்தியர்களை – அப்போது இந்தியாவும் பிரிட்டிஷாரால் ஆளப்பட்டு வந்தது – ரயில்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட அழைத்து வந்தது. ரயில்பாதை அமைக்கப்படும்போது பல இடங்களிலிருந்து வந்தவர்கள் தங்கும் இடமாக அமைந்த நைரோபி ஒரு நகரமாக 1899-இல் உருப்பெறத் தொடங்கியது. தற்காலிக நகரமாகத் தோன்றிய நைரோபி இன்று வெகு வேகமாக வள்ர்ந்துகொண்டிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளிலேயே கென்யாதான் தென்னாப்பிரிக்காவிற்கு அடுத்தபடி அதிக வளர்ச்சி பெற்ற நாடு என்று கூறுகிறார்கள்.

    நைரோபியை உலகின் சஃபாரி தலைநகர் என்று குறிப்பிடுகிறார்கள். நாட்டின் மக்க்ள்தொகையில் பத்து சதவிகிதத்தினர் இந்த நகரில் வசிக்கிறார்கள். சுமார் 32 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் நேஷனல் மியூசியம் ஆஃப் கென்யா, சுமார் எண்பதாயிரம் பேர் கூடக்கூடிய கென்யாவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் மக்களுக்கு உரையாற்றும் பெரிய நேஷனல் பார்க், கன்வென்ஷன் சென்ட்ர், நைரோபி சிட்டி மார்க்கெட், விலங்குகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் ஆகியவை இருக்கின்றன. சிறிய வேன்கள் அளவில் நிறைய டொயோட்டக்களும் ஹுயுண்டாக்களும் பவனி வரும் இந்நகரின் பெரிய தெருக்களில் கைவண்டிகளில் சாமான்களை ஏற்றிக்கொண்டு மனிதர்கள் தள்ளிக்கொண்டு வருவதைப் பார்க்கும்போது கென்யாவின் வறுமையும் ஏற்றத்தாழ்வும் மனதை நோகச் செய்கின்றன.

    (தொடரும்)

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (20)

    பவள சங்கரி

    துக்கத்தை சுமையென ஒதுக்க முடியுமா?

    487340_430840180309256_1635201260_n2

    “தோல்வி, வேதனை , போராட்டம், இழப்பு, அதள பாதாளங்களிலிருந்தும் மீண்டு வரும் வழி போன்றவற்றை அறிந்தவரே, நாம் அறிந்தவர்களிலேயே மிக அழகான மனிதர்கள். இந்த மனிதர்களே, பாராட்டு, உணர்திறன் மற்றும் கருணை, கனிவு, ஆழமான அன்பு போன்றவைகள் நிறைந்ததொரு புரிதலான வாழ்க்கையை வாழ்பவர்கள். அழகான மக்கள் சட்டென்று தோன்றுவதில்லை”.
    எலிசபெத் குப்ளர் ராஸ்

    books‘துக்கம்’ என்ற அந்த வார்த்தையே நம் ஒவ்வொருவரையும் புரட்டிப் போட்டுவிடுகிறது. நாம் அறிந்த ஒருவருக்கு அந்த சோகம் நிகழும் போதே நம் மனமும் கடந்து துடிக்கிறது. சில நேரங்களில் அதிலிருந்து முழுமையாக விலகிவிடவும் தோன்றும். அந்த நேரத்தில் இது போன்ற நிலை நமக்கும் ஒரு நாள் வரக்கூடும், நம்மைச் சேர்ந்த, நாம் உயிராய் மதிக்கிற ஒருவர் நம்மைப் பிரியும் தருணமும் வாய்க்கலாம் என்று அறிவு அறிந்தாலும், உணர்வு அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கி தப்பி ஓடவே பார்க்கிறது. சில காலம் முன்பு என் நெருங்கிய தோழி, சரியான புத்தகப்புழு என்று பெயர் வாங்கியவள், பலவிதமான புத்தகங்களையும் படிப்பவள். ஒரு நாள் எலிசபெத் குப்ளர் ராஸ் என்ற உளவியல் ஆய்வாளரின் On Death and Dying என்ற நூலைக் கொடுத்து படிக்கச் சொன்னாள். இருபதாம் நூற்றாண்டின் மிகப்பிரபலமான உளவியல் நூல்களின் ஒன்றான இது, இறப்பு மற்றும் மரணத்தின் வாயிலில் நிற்போர் பற்றிய கருத்தரங்கின் அடிப்படையில் வெளியிடப்பட்டது. இதில் மரணத்தைக் கையாள்வதற்குரிய யோசனைகள் , மறுப்பு மற்றும் தனிமை, கோபம், பேரம், மன அழுத்தம் மற்றும் ஏற்பு போன்ற ஐந்து நிலைகளில் ஆராயப்படுகின்றன. நேர்காணல் மற்றும் உரையாடல்கள் மூலம், திடீர் மரணம் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் அதற்கான தீர்வு, அந்த மரணத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவை போன்றவற்றை மிக அழகாக எடுத்துரைக்கும் நூல் இது என்றாலும், இதை ஏன் எனக்கு அவள் இப்போது கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும் என்று குழப்பமாகவே இருந்தது. அவளிடமே அதைக் கேட்ட பொழுது அவளும், இந்த உலகில் பிறந்த யாராக இருந்தாலும் ஏதோ ஒரு நாள் இது போன்ற ஒரு சூழலைச் சந்திக்காமல் இருக்க முடியாதே. இந்த உலகில் தோன்றியது எதுவும் நிலையாக இருக்கும் என்ற சாத்தியம் இல்லை. என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் அல்லது மாற்றம் பெறும். இது உறவுகளுக்கும் பொருந்தும். என்றோ ஒரு நாள் சந்திக்கப்போகும் அந்த சூழ்நிலைக்கு நம்மை நாம் முன்னரே தயார்படுத்தி வைத்துக்கொண்டால் அதன் பாதிப்பிலிருந்து ஓரளவிற்குத் தப்பிக்கலாமே. அல்லது நமக்கு வேண்டியவர்களுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படும்போது அதிலிருந்து அவர்கள் மீண்டுவர உதவலாமே என்றபோது, ‘அடடா, இப்படி ஒரு கோணத்தில் யோசிக்காமல் விட்டுவிட்டோமே’ என்று நினைத்ததோடு உடனே அதனை வாசித்தும் முடித்தேன்.

    சில நாட்கள் சென்றிருக்கும், எங்கள் தெருவில் சில வீடுகள் தள்ளி வசிக்கும் தோழி ஒருவருக்கு திடீரென்று இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று யாருமேseed1 எதிர்பார்க்கவில்லை. வங்கியில் மேலாளராகப் பணிபுரியும் இவருடைய கணவர் எந்த விதமான நோயும் இல்லாதவர். இவர்களுக்கு பள்ளியிறுதியாண்டு படிக்கும் அன்பான ஒரே மகன். மனைவி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் என்பதால் மகனை எப்படியும் மிக உயர்ந்த மதிப்பெண் பெறச்செய்து, நல்லதொரு பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பதை வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு படிக்க வைத்துக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாள் காலை அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தவர், லேசாக மயக்கமாக இருக்கிறது என்று படுத்தவர் திரும்பவும் எழுந்திருக்கவே இல்லை. அவசரமாக உடனே மருத்துவமனை எடுத்துச் சென்றபோதும், ‘மேசிவ் அட்டாக்’ என்று பெயர் சொல்லி அவரை வெறும் உடலாக திருப்பி அனுப்பிவிட்டார்கள். தன் கணவனும், மகனும் மட்டுமே உலகமாக நம்பி வாழ்ந்து வந்தவருக்கு அனைத்துமே சூன்யமாகத் தென்பட மன அழுத்தத்தின் எல்லைக்கேச் சென்றுவிட்டார். அவ்வப்போது வழியில் பார்க்கும்போதெல்லாம் நலம் விசாரிக்கும் அளவில் எங்கள் பழக்கம் இருந்தாலும் இந்த பேரிழப்பின் காரணமான அவர் நிலையைக் காணும் போது என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை. அந்த வீட்டில் மயான அமைதியே நிலவியிருந்தது. அவர் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோதும் அவரால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியவில்லை. மகனின் பள்ளியிறுதி தேர்வும் நெருங்கும் சமயம். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு அந்தத் தாய் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டியதுதான். இதனை எடுத்துச் சொல்லும் துணிச்சல் நெருங்கிய உறவினர்களுக்கு வரவில்லை. அதையும் மீறி ஓரிரு வார்த்தைகள் சொன்னதும் அதுவும் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. வேதனையின் உச்சத்தில் இருந்தவரிடம், “உன் துக்கத்தைப் புதைத்து விடு, அதைப்பற்றியே நினைக்காமல் கவனத்தை திசை திருப்பிக் கொள், உன் துன்பங்கள் மறைந்துவிடும்” என்ற ஒட்டு மொத்த அறிவுரை மேலும் துன்பத்தை அதிகப்படுத்துவதாகவே இருந்தது. இதற்கு பல உதாரணங்களைக் கொடுக்கலாம். ‘அவர் நேரம் அப்படி, அவர் போய்விட்டார்’, ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்பது போன்ற ஒரு சில வார்த்தைகள்கூட நன்மைகளுக்குப் பதிலாக நொந்த புண்ணில் உப்பைத் தூவுவதாகக்கூட அமையலாம்.

    தவிர்க்க இயலாத அந்த துக்கத்தை திறந்த மனதுடன், அறிவுப்பூர்வமாக, நட்புரீதியாக, உண்மையாக ஏற்றுக்கொள்வதால் அதிலிருந்து மீண்டுவர வழி பிறக்கும். இந்த வகையில் பேசி பாதிக்கப்பட்ட அந்தத் தாயை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வெகு விரைவில் கொண்டுவர முடிந்தது. இன்று மகன் தான் விரும்பியபடி பொறியாளராக ஒரு நல்ல அலுவலகத்தில் பணிபுரிய மகனுக்கு மணம் முடித்து தன் கணவனே வந்து பேரக் குழந்தையாகப் பிறந்திருப்பதாக மன நிறைவுடன் இருக்கிறார். நாம் எதிர்பார்த்தோ அல்லது எதிர்பாராமலோ நம்மை அணுகும் துக்கத்தை விட்டு விலகி ஓட நினைக்காமல் அதை, அதன் இயல்புடன் நின்று, இதயப்பூர்வமான துணிவுடன் எதிர்கொள்ள வேண்டியது அவசியம். நடைமுறைக்கு உதவக்கூடிய ஒரு சுமுகமான உறவை அந்த துக்கத்துடன் ஏற்படுத்திக் கொள்வதே அதிலிருந்து மீண்டுவர சிறந்த வழியாகும் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். மனித மனங்களின் இயற்கை குணங்களின் முக்கியமான ஒன்று ஏதேனும் ஒன்றை உறுதியாகப் பிடித்துக் கொண்டு வாழ்வது, குறிப்பாக நாம் அதிகமாக நேசிக்கும் உறவுகளை. இதனாலேயே நம் ஆன்றோர்கள் தாமரை இலைத் தண்ணீர் போன்றே நம் உறவுகளை நெருங்க வேண்டும் என்றனரோ? ஆனால் சிலர் நீண்ட காலங்களுக்கு பிடியைத் தளர்த்த மனமில்லாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பிரிவின் துயரம் சிலருக்கு மரண வேதனை கொடுக்கவும் செய்கிறது. சிலர் அந்த வலியை ஏற்றுக் கொண்டு அந்த ரணத்திலிருந்து மீண்டுவர முயற்சி எடுத்து வெற்றி பெறுகிறார்கள்.

    வேதனையில் இருக்கும் போது, கண்ணீரைத் துடைக்கும் அன்பான கரங்களை நாடுங்கள். தன்னைப் போலவும், அதற்கு மேலும் வேதனைப்படுபவர்கள் இந்த உலகில் பலர் இருக்கின்றனர் என்பதையும் உணருங்கள். மனம் ஆறுதல் பெற்று பணியில் நாட்டம் கொண்டு, வெற்றிக் கனியைப் பறிக்க வழிகாட்டும்.

    சுகமும், துக்கமும் இணைந்ததுதான் முழுமையான வாழ்க்கை அல்லவா?
    “ஆசை அறுமின், ஆசை அறுமின்
    ஈசனோடாயினும் ஆசை அறுமின்!”

    தொடருவோம்

    படங்களுக்கு நன்றி:

    http://rishikajain.com/2012/11/09/inspirational-life-learning-quotes/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(67)

    சக்தி சக்திதாசன்

     

    vaali

    clip_image002

     

     

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

    துயரம் தோய்ந்த உள்ளத்துடன் , எழுதும் இந்த விரல்கள் முக்கியமான் ஒரு வலுவை இழந்து போன்ற ஒரு கனத்த இதயத்தின் சுமையைத் தாங்கிய நிலையில் இம்மடலை உங்களுக்கு வரைகின்றேன்.

    “வாலி”பத்தின் முக்குயமான பகுதியத் தன் பெயரில் கொண்டிருந்ததினால் அவர் என்றுமே எங்களுடன் வாலிபக் கவிஞனாக இருந்து விடுவார் என்று நம்பிக் கொண்டிருந்தோம் போலிருக்கிறது. காலப்புத்தகத்தில் கடைசி அத்தியாயத்தை அனைவர்க்கும் எழுதும் ஒரு மாபெரும், மறைக்க முடியா எழுத்தாளன் காலன் எம் அன்புக்குரிய வலிபக் கவிஞர் வாலியின் வாழ்க்கைப் புத்தகத்திலும் கடைசி அத்தியாயத்தை எழுதி விட்டான்.

    என்ன செய்வது ? தமிழுலகம் ஒரு உன்னதப் படைப்பாளனை இழந்து விட்டது. தமிழ்த் திரையுலகம் நான்கு தலைமுறைகளுக்கு பாடல்கள் தந்த ஒரு வித்தக பாடலாசிரியனை இழந்து விட்டது.

    நானோ ?

    எப்போதும் தப்பாமல் என்னைத் தட்டிக் கொடுத்து நேசமிகு நல்ல பல கணங்களை எனக்குக் கொடுத்த ஒரு பாசமிகு குருநாதனை இழந்து விட்டேன்.

    ரங்கநாதன் எனும் இந்த ஸ்ரீரங்கம் தந்த ஒப்பர்ர ஒரு கவிஞனை , இலக்கிய வித்தகனை, தமிழை நேசித்தவனை நாம் இழந்து விட்டோம்.

    என் மானசீகக் குரு கவியரசர் கண்ணதாசனை அவர் வாழும் நாளில் நான் சந்திக்க முடியாமல் போய் விட்டதே எனும் ஆதங்கம் எப்போதும் என் மனதினுள் அழப்பதிந்து உறுத்திக் கொண்டே இருக்கிறது.

    அப்படியில்லாமல் என்னைக் கவர்ந்த இன் இனிய கவிஞர் வாலியை நான் என் வாழ்நாளில் நான் சந்தித்து விட வேண்டும் எனும் இலக்கிய தாகமே எம் சந்திப்புக்கு வித்திட்டது.

    அப்போது நான் தோழி நிர்மலாவின் “நிலாச்சாரல்” இணையத் தளத்தில் ஓய்வற்று எழுதிக் கொண்டிருந்த நேரம் .

    “ சக்தி தமிழக இலக்கியப் பிரபலங்களுடனான ஒரு நேர்காணல் தொடரை நீங்கள் எமக்காகத் தந்தால் என்ன ? “ என்று தோழி சிறு பொறியைத் தட்டி விட அது ஒரு அழகிய தொடராக ஒளியேற்றியது.

    எனது நீண்டநாள் மனவோசையான “கவிஞர் வாலியுடனான சந்திப்பு” என்பதற்கு இவ்நேர்காணல் ஒரு வழிகோல் சமைத்தது என்பதுவே உண்மை.

    ஆனால் அச்சந்திப்பு ஒரு ஊடகத்திற்கான நேர்காணல் சந்திப்பு என்பதை விட என் உளம் நிறைந்த “கவிஞர் வாலியுடன்” ஒரு ஒப்பற்ற நீண்டநாள் உறவுக்கு வழி சமைத்தது என்பது எனக்கு மனநிறைவைத் தருகிறது.

    அவ்வுறவு நட்பு அல்ல அதைத் தாண்டிய ஒரு “குரு சிஷ்ய” பக்தி என்றே சொல்ல வேண்டும். கவினர் வாலி என்பவரைப் பற்றி அதுவரை ஊடகங்களினூடாக அறிந்தவைகள் ஏராளம். ஆனால் அவருடனான நேர்ச் சந்திப்பு என்னுள் அவரிப்பற்ரி இருந்த மதிப்பை மென்மேலும் பன்மடங்கு உயர்த்தியது .

    “உண்மை , நேர்மை, உழைப்பு ” என்பனவற்றிற்கு கவிஞர் வாலி ஜயா கொடுத்த முக்கியத்துவம் உண்மையிலேயே என்னைச் சிலிர்க்க வைத்தது.

    இத்தகைய ஒரு உன்னத கவிஞன் அனைத்திற்கும் மேலாக ஒரு உத்தம மனிதன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதுவே எனக்குப் பெருமை,/ இ,ம் மாபெரும் கவிஞன் வலம் வந்த மண்ணிலே நானும் என் கால் பத்தித்திருக்கிறேன் என்பதுவே என் வாழ்வில் எனக்குப் பெருமை சேர்க்கும் விடயம்.

    ஒரு சாதாரண் ஈழத்தமிழன் புலம் பெயர்ந்து இங்கிலாந்திலே வாழ்பவன் ஏதோ கொஞ்சம் எழுத்திலே மோகம் கொண்டிருப்பவன் என்று எதையுமே கணக்கிலெடுக்காமல் என்னை மிகவும் அன்பாக உபசரித்த அந்த மனிதாபிமானம் மிக்க கவிஞர் வாலி வானளாவும் வகை உயர்ந்தவர் என்பதுவே உண்மை.

    அந்நாட்களில் கைகளினால் எழுதும் பிரதி போல கணனி மூலம் நான் தயாரிக்கும் “தமிழ்ப்பூங்கா” எனும் இதழைப் பார்த்து எனக்கு ஆக்கபூர்வமான பல ஆலோசனைகளைத் தந்தலிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முன்னர் வரை எப்போது நான் தமிழகம் வரும்போதும் நேரடியாகவும், இங்கிலாந்திலிருந்து தொலைபேசி வழியாகவும் தொடர்ந்து என்னைத் தட்டிக் கொடுத்து வந்த ஒரு உயர்ந்த இலக்கியச் சிற்பியின் இழப்பு என்னைத் துயரத்திலாழ்த்துகிறது..

    இவரைப் பற்றி பல செய்திகளை நான் உங்களுடன் இம்மடலின் மூலம் இனிவரும் காலங்களில் பகிர்ந்து கொள்வது நான் செய்ய வேண்டிய காலத்தின் கடமை என்றே கொள்கிறேன்.

    இம்மடலின் முடிவில் அவருடைய இரண்டு சிறிய ஆரம்பக் கவிதைகளை நினைவுகூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    அவர் பள்ளியில் படிக்கும் போது அவரின் “வாலி” எனும் புனைப்பெயரைக் கண்டு “வாலில்லையே உனக்கு பின் எப்படி வாலி என்று . . . . “ பரிகசித்த ஆசிரியருக்கு

    காலில்லை என்பதால்

    காடிகாரம் ஓடாதா ?

    வாலில்லை என்பதால்

    வாலியாக முடியாதா ? என்று இன்பத் தமிழாலே பதிலடி கொடுத்தாராம்

    இதோ என்ன்னைப் போன்றவர்களுக்கு அவர் தரும் ஊட்டச் சத்து ,

    ஊக்கு விக்க ஆளிருந்தால்

    ஈக்கு விக்கும் ஆள்கூட

    தேக்கு விற்பான்

    ஆமாம் எளிமை, இனிமை, புலமை இவையனைத்தின் மறுவடிவம் தாம் என் கவிஞர் வாலி ஜயா. இவரின் கடைசி அத்தியாயத்தை எழுதி விட்டதாக அந்தக் காலன் எண்ணலாம் ஆனால் இவ்வகிலத்தில் தமிழை நேசிக்கும் கடைசித் தமிழன் உள்ள வரை எம் வாலி ஜயா என்றும் முதிரா “வாலி”பனாக வாழ்ந்து கொண்டேயிருப்பார்.

    அவரின் ஆத்ம சாந்திக்காக ந்ல்லாம்வல்ல என் மனம் வாழும் திருஅண்ணாமலையான் பாதம் பணிகிறேன்.

    துயரத்துடன்

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர் [08/07/2013 – 14/07/2013]

     பேரா.  நாகராசன்

    சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்ற கவிதை வரிக்கேற்ப மடலாடர்கள் மற்றும் படைப்பாளர்கள் தங்கள் சிந்தனை வளங்களைக் கருத்து வடிவில் வல்லமை மின் இதழிலும் மடலாடல் குழுவிலும் வெளியிடுவது நாம் அறிந்ததே

    தனித்திருப்பவன் தனியனல்ல ஒருவரின் தனித்தன்மை ஒரு குழுவில் இருக்கும்போதே வெளிப்படும். தனித்தன்மை மிளிரத் தங்களின் ஆற்றல் வெளிப்படும் வண்ணம் தெரிந்தெடுத்த புலத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்துபவர்களே வல்லமையாளர்கள்

    photoநவீன விஞ்ஞானம் நாத்திகம் என்று தமிழ்க் குமுகம் தன்னுடைய நடுநாயகமான ஆன்மீகத்திலிருந்து விலகி வெகுதூரம் பயணிக்கும் ஆபத்தான சூழலில் தமிழகத்தின் சமயச் சிந்தனைகளைத் தொடராகக் கோர்வையுடம் எழுதும் வல்லமை உடையவர் அவர்

    சமயக் குரவர்களையும் பாணர்களையும் நினைவில் நிறுத்தும் வண்ணம் பல தலங்களுக்கு நேரில் சென்று அத்தலங்களின் பெருமைபற்றி ஆற்றொழுக்கான எளிய தமிழ் நடையில் எழுதும் வல்லமை படைத்தவர் அவர்

    பழமையான ஓலைவடிவிலும் அச்சு ஊடகத்திலும் உள்ள வளங்களில் சிறப்பான சிலவற்றித்  தேர்ந்தெடுத்து இணையத்துக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தும் அவர்  அருகிவரும் கருத்து வளங்களை எண்ணிமப்படுத்துவதில் வல்லவர்

     ஒவ்வொருநாளும் அதிகாலையில் எழுந்ததும் இணையத்தில் தன் பங்குக்கான தினம் ஒரு திவ்ய நாமம் நாள் தவறாமல் எழுதும் வல்லமையுடையவர் நல்லதொரு கருத்தென்றால் தயங்காமல் பாராட்டுவதும் குறையைச் சுட்டும்போது மென்மையான நிலைப்பாட்டையும் எடுத்துப் பிறர் மனம் புண்படாமல் எழுதும் வல்லமையாளர் இணையத்துக்கே இயல்பான கருத்து மோதல் கட்சி சேர்த்தல் பிறரை எள்ளி நகையாடல் போன்ற வல்லமைகள் இல்லாதவர் இணையத் தமிழுக்கு உயர்கல்வியில் உரிய இடம் கிடைக்கவேண்டும் என்ற மாறாப்  பற்று கொண்டவர் அவர் திரு.காளைராஜன் அவர்கள் அவரே இந்த வார வல்லமையாளர் அவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கிடைத்த பெருமை அவரே இந்த வார வல்லமையாளர்

     

    Share
  • “பவித்ரம்”

    பெருவை பார்த்தசாரதி

     DSC04625DSC04600DSC04602

    “பவித்ரம்” என்பதற்கு புனிதமான, சுத்தமான, உண்மையான என்கிற பல அர்த்தங்கள் உண்டு. சென்னையில் இயங்கி வரும் “பவித்ரம்” என்கிற தொண்டு நிறுவனமும் பல புனிதமான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு வருகிறது. இத்தொண்டு நிறுவனத்தின் தலைவராக திரு பேராசிரியர் கே.ஜி. ரகுநாதன் அவர்களும், பொதுச்செயலாளராக திரு ஆர். பாபுசேனன் அவர்களும், பொருளாளராக திருமதி ஜாய்ஸ் திலகம் அவர்களும், தங்களை முழுவதும் சமூக சேவையில் ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்நிறுவனத்தை மிகச் சிறப்பாக வழி நடத்திக்கொண்டு வருகிறார்கள். சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்களின் நலனில் அக்கரை கொண்ட நிறுவனம் என்பது பவித்ரத்தின் மற்றொரு சிறப்பு.

    பத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வரவேண்டும் என்கிற கொள்கையின் அடிப்படையில், முதல் நிகழ்ச்சியாக, மூன்று தமிழ் மாவட்டங்களில் “விவசாயிகளின் இன்றய நிலை” குறித்த கருத்தரங்கம்  ஒன்றை நடத்திச் சிறப்பித்தது. ஞாயிறு காலை, மைலாப்பூரில் அமைந்திருக்கும் கோகலே ஹாலில், இரண்டாவது நிகழ்ச்சியாக சிறந்த புத்தகங்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. தத்துவம், ஆன்மீகம், அறிவியல், சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்புக்கான நூல்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி படைப்பாளிகளை கெளரவித்தார்கள்.

    “ராமமூர்த்தி அறக்கட்டளை” சார்பில் சிறந்த புத்தகங்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.  இந்நிறுவனத்தின் அறக்காப்பாளராக திரு ஹரிஹரசுப்ரமணியம் அவர்கள் பதவி வகிக்கிறார்.  அவருடைய நண்பரின் நினைவாக, விருப்பமாக நண்பர் சேர்த்து வைத்துள்ள பணத்தை நல்ல முறையில் மிகச்சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்கிற மேலான எண்ணத்தில் தத்துவம், ஆன்மீகம் மற்றும் அற்வியல் நூல்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

    அடுத்து எழுத்தாளர், மொழிபெயர்பாளர் ‘காசிஸ்ரீஸ்ரீ” அவர்கள் குடும்பத்தினரின் சார்பாக சிறந்த மொழிமாற்ற நூல்களுக்கும், குறுநாவல்களுக்கும் பரிசுகளை வழங்கினார்கள்.

    அறிவியல் நோக்கில் வேதங்களை ஆய்வு செய்து, ஆக்கப் பூர்வமான அறிவியல் சிந்தனைக் களத்தின் துவக்கம் பாரதம் என்கிற நோக்கில் “வேதம் கண்ட விஞ்ஞானம்” என்கிற நூலை எழுதிய திரு பி. முத்துக்குமாரசுவாமி, திரு ஜே. வீரநாதன் எழுதிய “எம்எஸ் ஆபீஸ்”, திரு ஆர் சிவராமன் எழுதிய “எண்ணங்களின் எண்ணங்கள்”, திரு ரகுவீர பட்டாச்சார்யர் அவர்கள் எழுதிய “பாதுகா சகஸ்ரம்” என்கிற நூல், காம்கேர் புவனேஸ்வரி அவர்கள் எழுதிய “கம்ப்யூட்டரில் தமிழ்” என்கிற நூல், மிகச்சிறப்பாக மொழி பெயர்ப்பு நூல்களை எழுதிவரும்  திரு சாருகேசி அவர்களுக்கு ‘மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்’ என்கிற பட்டமும்,  சிறந்த குறுநாவலுக்கான பரிசாக “கருவேலங்காட்டுக் கதை” என்ற குறுநாவலை எழுதிய சினிமா இயக்குனர் திரு ராஜா செல்லப்பா, இவர்கள் அனைவருக்கும் பவித்ரம் சார்பாக பரிசும், சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப் பட்டனர். அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம்பிடித்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

    இவ்விழாவிலே, முக்கியமாக குறிப்பிட வேண்டியது, புத்தகங்களுக்கு மட்டுமல்லாமல், இணையதளத்திலே இடம்பெறுகின்ற சிறப்பான கட்டுரைகளையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு அதற்கும் பவித்ரம் சார்பாக சான்றிதழும், பரிசும் வழங்கியது. வல்லமை மின் இதழில் வெளியான ‘நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” என்ற என்னுடைய தொடர்கட்டுரைக்கு பரிசும்  சான்றிதழும் வழங்கப்பட்டது, வல்லமைக்கு மேலும் ஒரு சிறப்பு என்பதை மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பவித்ரம் தொண்டு நிறுவனம் நடத்திய பரிசளிப்பு விழாவை மிகச்சிறப்பாக வழிநடத்தியவர்கள்:: திரு கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் (கலைமகள் ஆசிரியர்), திரு முத்துக்குமார் (டிரினிட்டி – ஆசிரியர்), திரு எஸ்.எஸ். ராஜ்குமார் (புரவலர் – பவித்ரம்), திரு டான்ஸ்ரீ குமரன் (முன்னாள் மலேசிய மந்திரி), திருமதி ஜாய்ஸ் திலகம் (மருத்துவ அதிகாரி – தமிழ்நாடு மெடிக்கல் மன்றம், மற்றும் சென்னை மாநகராட்சி, திரு ஹரிஹரசுப்ரமணியம் (டிரஸ்டி – ராமமூர்த்தி அறக்கட்டளை, துணைத் தலைவர்-இண்டியா சிமெண்ட்ஸ்)

     

     

    Share
  • இன்னமும் நிறைவேறாத கனவு …

    தேமொழி

     

    Trayvon and Ilavarasan

     

    உலகின் இருவேறு மூலைகள், புவிக்கோளத்தின் வெவ்வேறு பக்கங்கள், இரு பகுதியிலும் இருக்கும் நாடுகளுக்கு இடையே உள்ள கால இடைவெளி சரியாக அரை நாள். ஒருநாட்டினர் உழைத்துக் கொண்டிருக்கும் பொழுது மற்றவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். கலாச்சாரத்திலும் பெரிய வேறுபாடு. ஆனால் இரு நாடுகளும் ஒன்றாக எதிர் கொண்டிருப்பதும், இரண்டாம் மில்லினியத்திலும், இந்த நூற்றாண்டிலும் இப்படியா என்று அதிர்ந்து போயிருப்பதற்கும் காரணம் … இரு இளைஞர்களின் அகால மரணம்.

    இயற்கையின் சீற்றத்தினாலோ, போக்குவரத்து விபத்தினாலோ, அல்லது நோயின் காரணமாகவோ அவர்கள் வாழ்வு ஆரம்பமாவதற்குள் முடிந்திருந்தால்கூட ஒருவகையில் மனது சமாதானம் அடையும். ஆனால் அவர்கள் உயிரிழக்க நேர்ந்ததன் அடிப்படைக் காரணம், சமுதாயத்தில் இன்றும் நிலைத்து வாழும் வேற்றுமை என்னும் மனநோயால்  என்பது வேதனைக்குரிய செய்தி. மக்களிடம் பரவி இருக்கும் மூடத்தனமான வேறுபாடுகள் பற்றியக் கருத்துக்களின் காரணமாக; கருப்பு-வெளுப்பு வேறுபாடு, தாழ்வு-உயர்வு வேறுபாடு என்று இன்றும் நிலவும் கொடுமையின் தீவிரத்திற்கு பலியாகி உள்ளார்கள் இந்த இளைஞர்கள். இந்த இளைஞர்களில் ஒருவர் தமிழக மக்கள் தாழ்ந்த குலமாகக் கருதும் ஒரு குலத்தினைச் சார்ந்த இளவரசன். மற்றொரு இளைஞர் அமெரிக்காவின் தாழ்ந்த இனமாகக் கருதப்படும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஃப்ளோரிடா மாநிலத்தில் வாழ்ந்த பள்ளிச் சிறுவன் ட்ரேவான் மார்ட்டின்(Trayvon Martin).

     

     

    சாதிப் பிரிவுகள் சொல்லி
    அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
    நீதிப் பிரிவுகள் செய்வார்
    அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
    சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
    அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
    ஆதர வுற்றிங்கு வாழ்வோம்
    தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்

    என்று பாரதி அறிவுறுத்திச் சென்று ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் பெரும்பாலான மக்களின் அறிவை அது சென்றடைந்ததாகத் தெரியவில்லை. அதற்கு எடுத்துக்காட்டு, தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன்- திவ்யா இவர்களின் காதல் கலப்புத் திருமணம் பட்டபாடு. செல்லங்கொட்டாய் கிராமத்து திவ்யா உயர் குலமாகக் கருதப்படும் ஒரு குலத்தில் பிறந்தவர். இவர் காதலித்ததோ நத்தம் காலனியைச்சேர்ந்த இளவரசனை. இவரோ தாழ்ந்த குலமாகக் கருதப்படும் குலத்தில் உதித்தவர். இந்த வேறுபாடுகள் காதலித்த இருவருக்கும் ஒரு பொருட்டாகவே இருந்திருக்கவில்லை. எங்கும் இயல்பாக இருக்கும், பெற்றோரின் அறிவுரைக்கு உடன்படாத பிள்ளைகளின் செயல்களால் வருத்தமடையும் குடும்பங்களின் பிரச்சனையும், இரு குடும்பங்களுக்குள் இருந்திருக்க வேண்டிய சாதாரண மன வருத்தங்களும், உறவுப் பிரச்னைகளும் தேவையற்றவர்களின் ஊடுருவலால் பெரிதாகி இளவரசன் வசித்த நத்தம் காலனி எரிக்கப்பட்டிருக்கிறது. காதலர்களையும் ஊர் ஊராக ஓடவைத்து இறுதியில் நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறது.

    இதற்கிடையில் பள்ளி நாட்களில் நண்பர்களாக இருந்த காதலர்களின் தந்தைகளுக்குள் பிரிவு ஏற்பட்டிருக்கிறது, இளவரசனுடன் சென்றுவிட்ட திவ்யாவின் செய்கையால் அதிர்ச்சியுற்ற அவளது தந்தை தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். பல உச்சக்கட்ட விறுவிறுப்பான நிகழ்ச்சிகளுக்குப் பிறகு தாயுடன் சேர்ந்த திவ்யா, நீதிமன்றத்தில் இளவரசனை விட்டுப் பிரிந்து வாழ முடிவெடுத்துவிட்டாதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து தற்கொலையா, கொலையா என்று கணிக்க முடியாத விதத்தில் இளவரசன் இறந்திருக்கிறார்.

    இளவரசனின் மரணம் தற்கொலையா… கொலையாயோ… என்ற கேள்விகளையும் கடந்து, இளவரசன் மரணத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதின் அடிப்படையை ஆராய்ந்தால், திவ்யா – இளவரசனைப் பிரித்ததில் முக்கியப் பங்கு யாருக்கு என்னும் கேள்வியை எழுப்பினால், இதற்குக் காரணம் சாதிக்கொடுமை என்ற மனித நேயமற்ற செயல் என்பது தெரிய வருகிறது. இந்தக் காதல் கலப்பு மணத்தில் அரசியல் மூக்கை நுழைத்து, திவ்யாவின் வாழ்க்கையைப் பாழாக்கி, இளவரசனின் உயிரைப் பறித்திருக்கிறது. பத்தொன்பது வயது இளைஞர் இளவரசனின் தேவையற்ற உயிரிழப்பிற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் சாதி வேற்றுமை பாராட்டி ஆரம்பத்தில் இருந்தே இளவரசன்-திவ்யா காதலைக் குலைத்தவர்கள்.

     

    அடுத்து அமெரிக்காவின் கதை; சென்ற ஆண்டு (2012) பெப்ரவரி மாதம், இரவு நேரம் வீட்டிற்கு அருகில் உள்ள தெருமுனையில் இருந்த கடையில் மிட்டாயும், குளிர்பானமும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறான் ட்ரேவான். வசதியான மக்கள் வாழும் பகுதியில் அமைந்திருந்திருக்கிறது அச்சிறுவன் தங்கியிருந்த வீடு. இது போன்ற பகுதிகளில் குற்றங்கள், கொள்ளைகளைத் தவிர்க்க அப்பகுதி மக்களே கண்காணிப்பில் கவனம் செலுத்தும் அமைப்பும் உள்ளது. அந்த அமைப்பின் உறுப்பினரான ஜார்ஜ் சிம்மர்மேன் (George Zimmerman), வெள்ளைக்கார தந்தைக்கும் பெரு நாட்டினைப் பூர்வீகமாகக் கொண்ட தாய்க்கும் பிறந்த கலப்பின மனிதர். சிம்மர்மேன் ஊர்தியில் வரும் பொழுது, அவர் கண்களில் தானுண்டு தனது வேலையுண்டு என்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ட்ரேவான் பட்டுவிடுகிறான்.

    கறுப்பர்கள் என்றாலே கயவர்கள் என்ற மனப்பான்மை இன்றும் பல அமெரிக்க மக்களின் மனதில் ஆழப் பதிந்திருக்கும் எண்ணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. கறுப்பர்களைத் தேவையில்லாமல் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும், அவர்களைத் தவிர்ப்பதும் பெரும்பான்மையோருக்கு வழக்கம். வசதியான கறுப்பர்கள் தங்களது விலை உயர்ந்த ஊர்தியில் சென்றால் காவலர்கள் அவர்களை நிறுத்தி, தேவையற்ற சந்தேகத்தின் பேரில் அவர்களது வண்டியின் உரிமத்தை சரிபார்த்து அது திருட்டு வண்டியா எனச் சோதனை செய்வதும், அவர்களை அடிக்கடி நிறுத்தி போதைப் பொருட்கள் வைத்திருக்கிறார்களா என்று வண்டியைச் சோதனை செய்வதும் மிகவும் கண்டனதிற்குள்ளானாலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இவ்வாறு இனத்தின் அடையாளம் கொண்டு, மனதில் ஒருவரைப்பற்றி ஆதாரம் இன்றி முடிவெடுக்கும் மனப்பான்மை ட்ரேவான் வீடு திரும்பிக் கொண்டிருந்த அன்றும் தனது வேலையைக் காட்டத் துவங்கியது.

    ட்ரேவானை ஒரு களவாணி என்று தானே முடிவு கட்டிய சிம்மர்மேன், காவல் துறைக்கு தொலை பேசியின் வழியாக ட்ரேவானைப் பற்றிய விவரம் கொடுத்திருக்கிறார். அவர் இது போன்று அடிக்கடி காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்பவரும் கூட. காவலர்கள் சிறுவனைத் தொடராதீர்கள் என்று பதிலுக்கு எச்சரித்தும் அதைப் பொருட்படுத்தாது சிம்மர்மேன் சிறுவனைத் தொடர்ந்து சென்று கேள்விகள் கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கும் நிலைக்கு சென்றுவிட்டது. இதன்முடிவாக ட்ரேவான் சிம்மர்மேனால் சுடப்பட்டு உயிரிழந்தான். சிம்மர்மேன் காவலரைக் கூப்பிட்டு நிலைமையை விளக்கினார். பலமணி நேர விசாரணைக்குப் பின், இருவருக்கும் ஏற்பட்ட தாக்குதலில், ட்ரேவான் சிம்மர்மேனின் தலையைத் தரையில் மோதி மோதித் தாக்கியதால், வேறு வழியின்றி தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தற்காப்பிற்காக சிம்மர்மேன் ட்ரேவானை சுட்டுக் கொல்ல நேர்ந்ததாக வாக்குமூலம் பதிவு செய்தார்கள் காவலர்கள். சிம்மர்மேனின் தலைக்காயங்களைக் குறித்துக் கொண்டு அவற்றிற்கு சிகிச்சை அளித்து, அவர் மேல் குற்றம் இல்லை, இது திட்டமிடப்படாத தற்காப்பிற்காக எடுத்த நடவடிக்கையில் ஏற்பட்ட உயிரிழப்பு என அறிக்கை தயார் செய்து கொண்டு அவரை விடுதலை செய்து விட்டனர்.

    இவ்வாறு காவலர்கள் ஒரு சிறுவனின் உயிர்ழப்பிற்குக் காரணமான ஒருவரை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தின் முன் கொண்டு சென்று நிறுத்தாமல் விடுதலை செய்தது கறுப்பின மக்களுக்கும், மனித நேயமுள்ளவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கோபமூட்ட அவர்கள் ட்ரேவானின் உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டுப் போராட்டம் நடத்தினார்கள். இதனால் திட்டமிடப்படாதக் கொலை, செகண்ட் டிகிரி மர்டர் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு சிம்மர்மேன் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். இந்த வழக்கு சென்ற மாதம் (ஜூன் 2013) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இந்த மாதம் (ஜூலை 2013) தீர்ப்பும் வழங்கப் பட்டது. சிம்மர்மேன் குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானார்.

    தீர்ப்பின் முடிவு கறுப்பின மக்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அமெரிக்க மக்கள் மத்தியில் இதைப் பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. பத்திரிக்கைகளும், ஆரய்ச்சி நிறுவனங்களும் மக்களின் கருத்துக் கணிப்பைச் சேகரித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. கருத்துக் கணிப்புக்களின்படி பெரும்பான்மையான கறுப்பின மக்களுக்கும், மகளிருக்கும், இளைய தலைமுறையைச் சார்ந்த வெள்ளையர்களுக்கும் தீர்ப்பின் முடிவு திருப்தி அளிக்கவில்லை என்று தெரிகிறது.

     

     

    வழக்கின் முடிவைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உரை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்புகளின் உதவியின்றி, முன் தயாரிக்கப்பட்ட உரையினைப் படிக்கும் வழக்கம் போல் இல்லாமல், அதிபர் ஒபாமா உணர்ச்சிபூர்வமாக, மனம் திறந்து உரையாற்றினார். கறுப்பின மக்களுக்கு நேரும் அநீதிகளைப் பற்றியக் கவலை அவர் உரையில் தொனித்தது. ட்ரேவான் கொலையுண்டபொழுது முன்னர் கருத்து தெரிவித்திருந்த அதிபர் ஒபாமா எனக்கொரு மகன் இருந்திருந்தால் இதே வயதில் ட்ரேவான் போலத்தான் இருந்திருப்பான் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்பொழுது தன்னையே ட்ரேவான் இடத்தில் வைத்துப் பார்த்து, 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் இருந்ததை ட்ரேவானுடன் ஒப்பிடுகிறேன். ட்ரேவான் போலத்தான் நானும் இனவேறுபாடுகளால் பல வேதனை தரும் சமுதாயத்தின் நடவடிக்கைகளை எதிர்கொண்டேன். மனிதர்களின் புறத்தோற்றத்தை, தோலின் நிறத்தைக் கொண்டு ஒருவரை எடைபோடுவதைத் தவிர்த்து, அவர்களது குணத்தைக் கொண்டு மதிக்கும் நாள் வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

    இக்கருத்தை முதலில் தெரிவிப்பவர் அதிபர் ஒபாமா மட்டுமல்ல. சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் கறுப்பின மக்களின் சம உரிமைக்காகப் போராடி, அந்தப் போராட்டத்தில் உயிரையும் விட்ட டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கும் சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தனது புகழ் பெற்ற உரையில் குறிப்பிட்டிருக்கிறார். “எனது கனவு” (“I Have a Dream” – a public speech delivered by American activist Martin Luther King, Jr. on August 28, 1963) என்ற உரையில், “எனக்கொரு கனவிருக்கிறது, எனது நான்கு குழந்தைகளும் வளரும் இந்த நாட்டில் ஒரு நாள் வரும், அந்நாளில் மக்கள் அவர்களது தோலின் நிறத்தினைக் கொண்டு மதிப்பிடப்படாமல் அவர்களது குணத்தின் அடிப்படையில் மதிக்கப் படுவார்கள்”, என்றார்.

    ட்ரேவான்  வெள்ளை இனத்தைச் சார்ந்த ஒரு இளைஞனாக இருந்திருந்தால், முதற்கண் அவன் சந்தேகக் கண்ணோடு பின்தொடரவேப் பட்டிருக்க மாட்டான், தனது நிலையை உணர்த்த வாக்குவாதத்தில் இறங்க வேண்டியத் தேவையும் அவனுக்கு இருந்திருக்காது, அதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று வன்முறையின் இறுதியாக உயிரை இழந்திருக்கவும் நேர்ந்திருக்காது என்பதுதான் அதிர்ச்சி தரும் இந்த நிகழ்ச்சியின் அடிப்படை உண்மை.

    எந்த நாடாக இருந்தாலும் பிரிவினை வேறுபாடுகள் தலையெடுத்தாடி உயிர்ப்பலி கேட்கிறது. மனிதர்கள் தன்னை ஒத்த மனிதர்களைத் தாழ்வாகக் கருதாது தன்னைப் போன்ற மனிதராகவே மதித்து நடத்தும் காலம் இந்த உலகில் என்றுதான் வருமோ என்ற ஏக்கமும் வருகிறது. மார்ட்டின் லூதர் கிங்கின் கனவு அரை நூற்றாண்டு கழிந்தும் நிறைவேறவில்லை என்பது வேதனைக்குரியது.

     

    References:

    Shooting of Trayvon Martin – http://en.wikipedia.org/wiki/Shooting_of_Trayvon_Martin

    Polls Show Wide Racial Gap On Trayvon Martin Case, by ALANA LEVINSON, NPR News. July 22, 2013 – http://www.npr.org/blogs/itsallpolitics/2013/07/22/204595068/polls-show-wide-racial-gap-on-trayvon-martin-case

    Pew Research Center poll: Big Racial Divide over Zimmerman Verdict, Whites Say Too Much Focus on Race, Blacks Disagree. July 22, 2013 – http://www.people-press.org/2013/07/22/big-racial-divide-over-zimmerman-verdict/

    A Washington Post/ABC News poll: Vast Racial Gap on Trayvon Martin Case Marks a Challenging Conversation. July 22, 2013 – http://www.langerresearch.com/uploads/1150a1TheMartinZimmermanCase.pdf

    Ilavarasan’s family seeks probe by independent agency, The Hindu. Jul 20, 2013 – http://www.thehindu.com/news/national/tamil-nadu/ilavarasans-family-seeks-probe-by-independent-agency/article4935296.ece

    Dalit man’s death in Tamil Nadu: Ilavarasan’s parents seek CBI probe. NDTV. Jul 20, 2013 – http://www.ndtv.com/article/india/dalit-man-s-death-in-tamil-nadu-ilavarasan-s-parents-seek-cbi-probe-394744

    Ilavarasan: ‘Killed’ by politics? NDTV. July 20, 2013 23 – http://www.ndtv.com/article/india/ilavarasan-killed-by-politics-394887

     

    Videos:
    Kelada Manida – http://www.youtube.com/watch?v=ScA2TJ-IUkU
    I Have a Dream Speech – http://www.youtube.com/watch?v=smEqnnklfYs
    President Obama Speaks on Trayvon Martin – http://www.youtube.com/watch?v=MHBdZWbncXI

    Pictures Courtesy:
    http://www.thehindu.com/multimedia/dynamic/01511/08_ilavarasan_1511753f.jpg
    http://en.wikipedia.org/wiki/File:Trayvon_Martin_on_the_backseat_of_a_car.png

     

     

     

     

    Share
  • இராம கதை (1) – மின்னூல்

    எஸ். கோபாலன்

    gopal0001-206x300

    சரஸ்வதி துதி

    ஆக்கும் ஆண்டவன் அயனின் தேவி கலைமகளருள் நோக்கும் ஆசியும் உண்டாகில் அறியாமை எனும்
    இருள் அகலும் அறிவொளி வீசும்- அன்னவள்
    அருள் வேண்டி வணங்கி இராமகதை எழுதலுற்றேன்

    பால காண்டம்

    ஆதவ குல அரசன் தசரதன் செய்த
    மாதவப் பயனாய் அழகிய அயோத்தி நாட்டில்
    அன்னை கோசலைக்கு அருமை மைந்தனாய் அவதரித்து
    தன்னையே தரணிக்கு இராமனாய் அளித்தான் நாரணன்
    மூன்று இளவல்களாம் இலக்குவன் பரதன், சத்துருக்கனனை
    ஈன்று அளித்தனர் அன்னையர் கைகேயியும் சுமத்திரையும்
    உரிய காலத்தில் வசிட்டரை தங்கள் குருவாய்க் கொண்டு
    தெரிய வேண்டிய கலைகள் அனைத்தும் கற்றனரே அரசகுமாரர்
    வேள்வி காக்க வருக என மாமுனி விசுவாமித்திரன் அழைத்திட
    கேள்வி கேட்காது அவருடன் சென்றனர் இராம இலக்குவர்
    வில்லை நாணேற்றி அம்பெய்து வல்லரக்கி தாடகையை வதம் செய்து
    தொல்லை தர வந்த மற்ற அரக்கரையும் அழித்தொழித்தனர் அரசகுமாரர்
    முறையுடன் மறை விதிப்படி வேள்வி செய்து முடித்திட்ட மன
    நிறைவுடன் மாமுனி இராம இலக்குவரோடு மிதிலைக்குப் செல்லலானார்
    செல்லும் வழியில் கல்லாகிக் கிடந்த அகலிகையின் கதையை மாமுனிவன்
    சொல்லக் கேட்டு கல்லைக் காலால் தொட்டு காரிகைக்கு நல்லுயிர் அளித்தான் இராமன்
    வில்லைக் கொண்டு தாடகையின் உயிர் அழித்த அன்னாளில் உன் கைவண்ணம் கண்டேன் கல்லைத் தீண்டி அகலிகைக்கு உயிர் அளித்த இன்னாளில் உன்கால்வண்ணம்கண்டேனென அளாவிலா மகிழ்ச்சி கொண்ட மாமுனிவன் இராம, இலக்குவரோடு
    இணையிலா அழகும் வளமும் மிக்க மிதிலை நகர் அடைந்தாரே.
    ஓவியப் பாவையாய் மாடத்தில் நின்ற மைதிலியின் மைவிழிகளும்
    காவிய நாயகன் இராமன் மாடத்தின் முன் நின்று நோக்கிய விழிகளும்
    ஒன்றில் மேல் ஒன்று ஒன்றின மற்றவரின் உள்ளத்தை ஊடுருவின வென்றன ஒருவருக்காக மற்றவரை நின்றன இமைகள் சற்றும் அசையாமல்
    தனது தவப்புதல்வி மைதிலியை மணம் புரிந்திட வேண்டுமென விழைபவர்
    சிவனது வில்லை வளைத்திட வேண்டுமென்பது மன்னன் சனகனது நிபந்தனை.
    மற்ற கொற்றவரெலாம் வில்லை அசைக்கவொணாது
    முற்றும் தோற்றிட பாசமிகு அன்னை கோசலை
    பெற்ற மைந்தன் இராமன் முனிவரை வணங்கி
    வெற்றி பெற்றிட அவர்தம் ஆசி பெற்று
    ஏறு நடையுடன் கம்பீரமாய் எழுந்து சென்று
    மேரு மலையோ என வியக்கும் வண்ணம் அங்கிருந்த
    முக்கண்ணன் வில்லை எடுத்து, நிறுத்தி, தொடுத்திட்ட
    அக்கணமே இற்று விழுந்ததே! இன்ப அலை எழுந்ததே!
    நிலமகள் அருளிய திருமகள் மைதிலியின் கரதலம்
    நலமுடன் பற்றி யாவரும் வாழ்த்திட இராமனும் மணமுடித்தானே!
    மற்ற மூன்று தம்பியர் மூவர்க்கும் மிதிலை அரசகுமாரிகள் மூவரை
    உற்ற துணைவியராய் ஏற்று மணம் செய்வித்த தந்தை தசரதன்
    சுற்றம் படை புடை சூழ அயோத்தி நோக்கி செல்லுங்கால்
    சீற்றம் கொண்டு சீறி வந்த பரசுராமனை எதிர்கொண்டான்
    “முன்னேயே சற்று முறிந்திருந்த சிவதனுசை ஒடித்தது
    என்னேதான் வீரம் இராமா” என ஏளனம் செய்த பரசுராமன்
    என்பால் உள்ள திருமால் வில்லை வாங்கி வளைத்திடென
    திருமால் திருஅவதாரமாம் இராமனிடமே செருக்குடன் செப்பிட
    இலகுவாய் அவ்வில்லை வாங்கி வளைத்து நாணேற்றிய இராமன்
    இலக்கு இதற்கு எதுவென வினவ எல்லாமுணர்ந்த பரசுராமன்
    தான் செய்த தவப்பேறு முழுதும் இலக்காய் அளித்திட
    நாண் இருந்து புறப்பட்ட அம்பு தவப்பயனை கவர்ந்து மீண்டிட
    வில்லை வருணனக்கு அளித்த இராமனும் அவன் செயல் கண்டு
    எல்லை இல்லா இன்பம் அடைந்த யாவரும் அயோத்தி அடைந்தனரே!

    அயோத்தியா காண்டம்

    தலை மகன் இராமனுக்கு முடிசூட்ட தசரதன் எடுத்த முடிவுக்கு
    உலை வந்தது உருவமும் உள்ளமும் கோணிய கூனி உருவில்
    நெஞ்சு நிறைய இராமனிடம் வாஞ்சை கொண்ட கைகேயி உள்ளத்தில்
    நஞ்சைப் பாய்ச்சினாள் தந்திரக்காரியான கூனி மந்தரை
    முன்னவன் இராமனுக்கு அரசு கொடாது ஈரேழாண்டு அடவிக்கு அனுப்பிவிட்டு
    தன்னவன் பரதனுக்கு அரசளித்து அரியணையில் அமர்த்திட வேண்டுமென கைகேயி
    என்றோ கோரிய வரங்களை இன்றே தந்திடென இடியை இறக்கிட
    நன்றோ இதுவென தசரதன் அதிர்ந்து உதிர்ந்து மயங்கி சாய்ந்தானே
    பெற்ற அன்னை கோசலை கலங்கிட உற்றோர் யாவரும் மலங்கிட
    மற்ற அன்னை கைகேயி மகிழ்ந்திட கூடியோர் அனைவரும் நெகிழ்ந்திட
    மன்னவன் பதவியை சற்றும் பற்றிலாது துறந்து மரவுரி தரித்து
    தன்னவள் சீதையுடனும் பின்னவன் இலக்குவனுடனும் காடேக தயாரானான்
    தடுத்து நிறுத்தி இராமன் கானகம் செல்வதை தவிர்க்க மந்திரனும் மற்றவரும் முயன்றும் எடுத்த முடிவினின்றும் கொடுத்த வாக்கினின்றும் பிறழ விழையா இராமன்
    அன்னையர் மூவர் தவிர அயோத்தி உறைவோர் யாவரும்
    தன்னைப் பின் தொடர கானகம் நோக்கி செல்லலானான்..
    வழியில் சோலை ஒன்றில் இளைப்பாறி உடன் வந்தோர் யாவரும்
    விழிகள் அயர்ந்த வேளையில் நள்ளிரவில் மூவரும் கானகத்துள் சென்றனரே.
    இனிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்துக்கொண்டே நடந்து
    புனித கங்கை நதியின் வடகரை அடைந்து முனிவரின் தவச்சாலை சேர்ந்தனரே.
    தந்தை சொல் மிக்கதோர் மந்திரமில்லையென மைந்தன் இராமன் கானகம் ஏகினான் சிந்தை குலைந்த தந்தை தசரதனோ புத்திரன் பிரிவு தாளாது வானகம் ஏகினான்
    இடர் சூழ் கானகந்தன்னில் தன் இனத்தாரோடு இனிது வாழ்ந்த
    வேடர் குலத்தலைவன் குகன் இராமனைக் காண வந்தான்
    தூய உள்ளத்தொடு தேனையும் மீனையும் அளித்த குகனை
    நேய உணர்வோடு உன்னோடு ஐவரானோமென தம்பியாய் இராமன் ஏற்றான் நாவாய் ஒன்று கொணர்ந்து எம்மைக் கங்கையின் அக்கரைக்கு அழைத்துப்
    போவாய் என இராமன் கூறிட குகனும் அவ்வாறே செய்தான்.
    பிரிந்து இராமன் செல்வதை எண்ணி வருந்திய குகனின் மனநிலை
    அறிந்து அவனைத் தேற்றி அவன் சேவையைப் போற்றி மூவரும் விடைபெற்றனரே.

    மாமுனிவன் பரத்துவாசன் மூவரையும் எதிர்கொண்டழைத்து அவர் ஆசிரமத்தில் தேன்கனிகள், காய்கள் அவர்களுக்கு அளித்து உபசரித்து உளம் மகிழ்ந்தார் தேவரும் தொழுதிடும் சித்திரகூடமலைக்குச் சென்று அங்கு தங்குக என்று முனிவர் கூறிட மூவரும் சித்திரக்கூடம் நோக்கி நடந்து யமுனை நதியை அடைந்தனரே.
    இலக்குவன் மூங்கிலால் தெப்பமொன்றை அமைத்திட அதில் இராமன் சீதை அமர்ந்திட இலக்கை நோக்கி இளையவன் நீந்திக்கொண்டே தள்ளிட தென்கரை அடைந்தனரே. தன் சித்திரங்களின் கூடமாக இயற்கை அன்னை தேர்ந்தெடுத்து அமைத்துக்கொண்ட சித்திரகூடத்தை அடைந்து எழிலான காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தனரே. அந்தி நேரம் நெருங்கி வந்திட இலக்குவன் பர்ணசாலை அமைத்துத் தந்திட இராமன் மிக மகிழ்ந்து சீதையுடன் குடிபுகுந்தான்.
    மிக்க மகிழ்வுடன் கேகேய நாட்டு மன்னன் அரண்மனையிலே, அயோத்தியில் உற்ற நிகழ்வுகளை சற்றும் அறியாது தங்கியிருந்த பரதன் விரைந்து அயோத்தி திரும்பிடுக என்ற தூதர் கொணர்ந்த செய்தியைப் பெற்ற நிறைந்த மனத்துடன் சத்துருக்கனனோடு அயோத்திக்கு புறப்பட்டானே. கோசல நாட்டை அடைந்த உடனேயே பரதன் கண்ணுற்ற அமங்கலக் காட்சிகள் அவனை மலங்கச் செய்தன.

    களையிழந்து வெறிச்சோடிக் கிடந்த அயோத்தியை கடுகி அடைந்து
    உளைந்த மனத்துடன் அரண்மனை புகுந்தானே.
    நடந்த நிகழ்வுகள் யாதென அறிந்த பரதன் எல்லை
    கடந்த கோபம் அன்னை கைகேயி மேல் கொண்டு
    கடும் சொற்களை அவளிடம் பேசினான்; பேயே பாவியேயென ஏசினான்; சுடும் கனல் துண்டுகளாய் வார்த்தைகளை அவள் மீது வீசினான்
    எந்தனை ஈன்று தீராப் பழிக்குள்ளாக்கிய உந்தனைக் கொன்றாலும் பாவமிலையென நிந்தனை செய்தான் வந்தனைக்குரிய தாயென இதுவரை கருதிய கைகேயியை. அவள் இழைத்த கொடுமையால் கானகம் சென்ற இராமனை தானே சென்று திரும்பி அழைத்து வந்திட கானகம் சென்றிட முடிவு செய்தான்
    குலகுரு வசிட்டர், அன்னையர் மூவர், சுமந்திரன் ,படையினர், குடிமக்கள் என பலரும் உடன் வர பரதன் சத்துருக்கனனுடன் கானகம் நோக்கிச் சென்றானே.
    பெரும் படையுடன் கங்கை வடகரை சேர்ந்த பரதன் அண்ணலுக்கு இடர்
    தரும் நோக்குடனே வந்துளான் என்றெண்ணி சீறியெழுந்தான் குகன்
    அண்ணனின் அருமை நண்பன் குகனென அறிந்து அவனைச் சென்று காணும் எண்ணத்துடன் அருகில் வந்த பரதனைக் கண்ட குகன் மனம் மாறியதே.
    மரவுரி தரித்த மாசு படிந்த மெய்யும்
    சிரமேல் குவித்த இரு கரங்களும்
    பொலிவற்று நகையற்று விளங்கிய முகமும்
    நலிவுற்று துயருற்று வாடிய தோற்றமும்
    கொண்ட பரதனை தன் அருகில்
    கண்ட குகனின் உள்ளம் உருகியதே
    அண்ணலின் சாயல் ஒத்த இவனால் பிழையேதும் இழைக்க
    எண்ணவும் இயலுமோ என உணர்ந்தான்.
    தனக்குரிய அரசுரிமையை வனவாசம் முடியும் வரையே இராமன் துறந்தான்
    தனக்கரிய என்றும் திரும்பப்பெற இயலாத அரச பதவியை பரதன் உதறினான் ஓராயிரம் இராமன் வரினும் ஒப்பிலா தியாகம் செய்துள்ள பரதனுக்கு நேராவாரோ என வியந்தான் வேடர்குலத்தலைவன் குகன்
    ஒருவரை ஒருவர் உளமாரத் தழுவினர் பரதனும் குகனும்
    ஒருவர் பதம் மற்றவர் பணிந்து வணங்கினர் இருவரும்.
    அக்கரை செல்ல உதவியை நாடிய பரதனையும் உடன் வந்தோரையும் மிக்க அக்கறையுடன் தன் நாவாய்களில் ஏற்றி பத்திரமாய் கொண்டு சேர்த்தான் குகன்.
    சற்று தூரத்தில் திரளாய் வந்திடும் மக்களை
    உற்று நோக்கியதில் பரதனையும் படையினரையும் பார்த்து
    கொதித்து எழுந்தான் சீறும் அரவத்தின் உருவமான இலக்குவன்
    துதித்துப் போற்ற வேண்டிய தமையனை காட்டிற்கு அனுப்பிவிட்டு
    தொடர்ந்து இங்கும் வந்து அவருக்கும் அன்னை சீதைக்கும்
    இடர் தந்திட எண்ணுவோரை அழித்துவிடுவேன் என
    இடியாய் முழங்கினான் கண்களில் கோபம் மின்னிட
    துடியாய்த் துடித்தான் வில்லில் நாணை ஏற்றிட.
    தம்பி பரதன் என்னைத் திரும்பி அயோத்தி அழைத்துச் செல்லவே வந்திருப்பான்
    நம்பிடு என்னையென ஆவேசமுற்ற இலக்குவனை ஆசுவாசப்படுத்தினான் இராமன்
    உள்ளம் உருக்கும் பரதனின் கோலத்தை கண்ணுற்ற இலக்குவனின் கோப
    வெள்ளம் தணிந்து விழிகளில் கண்ணீர் வெள்ளம் பெருகிற்றே.
    தந்தையின் நலத்தை தம்பி பரதனிடம் வினவிய இராமன் அவர்
    இறந்ததை அறிந்து இடிந்துபோய் மண்ணில் மயங்கி விழுந்தானே
    சற்று நேரம் கழித்து கண் விழித்து தெளிவடைந்த இராமன்
    முற்றும் கற்ற வசிட்டன் சொற்படி தந்தைக்கு நீர்க்கடன்களை செய்து முடித்தானே.
    மீண்டும் அயோத்தி திரும்பி வந்திடென பரதன் வேண்டுகோளை மறுத்து
    வேண்டும் தந்தையின் வாக்கை தவறாமல் காக்க என வலியுறுத்தி
    வனவாசம் முடிந்து நான் திரும்பி வரும் வரை நீயே ஆட்சி செய்திடு
    என பாசம் மிகு தம்பி பரதனுக்கு அன்புக் கட்டளையிட்டான் இராமன்.
    உன் பாதம் தாங்கும் பேறு பெற்ற பாதுகைகளை என்னிடம் தருக
    என் சிரம் மேல் தாங்கி அயோத்தி சென்று அரியணையில் வைத்து வழிபடுவேன் பாதுகைகளே உன் பிரதிநிதியாக அரசாளும் நான் அவற்றின்
    பாதுகாவலனாக பணி புரிவேன் என்றான் பரமோத்தமன் பரதன்;
    ஈரேழு ஆண்டுகள் வன வாசம் முடித்து திரும்பி அயோத்தி
    வாராது ஒரு நாள் தாமதித்தாலும் தீக்குளிப்பேன் என சூளுரைத்தான்.
    தலைமேல் பாதுகைகளைத் தாங்கிச் சென்று நந்தியெனும் சிற்றூரடைந்து தாமரை இலைமேல் தண்ணீர் போல பரதன் பற்றற்று வாழ பாதுகைகள் செங்கோலோச்சினவே.
    இராமனிடம் யாவரும் விடைபெற்று சித்திரக்கூடத்திலிருந்து நீங்கியபின்
    இராமனும் சீதை, இலக்குவனோடு தென் திசை நோக்கி புறப்பட்டானே.

    ஆரண்ய காண்டம்

    அத்திரி எனும் அருந்தவ முனிவனின் ஆசிரமம் அடைந்த மூவரையும்
    பத்தினி அனுசூயையும் முனிவனும் உபசரித்து உளமகிழ்ந்தனரே- பின்னர்
    தண்டகவனம் எனும் எழில் கொஞ்சும் வனத்தை மூவரும் அடைந்தபோது
    கண்டனரே எதிரில் விராதன் எனும் பெயர் கொண்ட வல்லரக்கனை வீழ்த்தினரே விராதனை இராம இலக்குவர் நீண்ட போருக்குப்பின்னர்
    வாழ்த்தினானே அவனும் சாபம் நீங்கி கந்தருவ உருவம் பெற்றபிறகு.
    தண்டகவனத்தின் எழில்மிகு காட்சிகளைக் கண்டு மூவரும் செல்கையில் எதிர்கொண்டனரே அங்கு வாழும் முனிவர்களை- அரக்கர்கள் தந்திடும்

    தொல்லைகளை அவர்கள் இராமனிடம் கூறி அவர்களைக் காத்திட வேண்டிட எல்லாயில்லா கருணை கொண்டு அவர்களுடன் பத்தாண்டுகள் வாழ்ந்தானே. அகத்தியனை சென்று காண்க என முனிவர்கள் உரைத்திட இராமனும் சீதை இலக்குவனோடு அவ்விடம் அகன்று தென்திசை சென்றானே.
    கடல் போல் பரந்த ஞானம் உடையோனும், தேவர்க்காக பரந்த
    கடல் முழுதும் ஒரு கையில் சேர்த்து விழுங்கி பின் உமிழ்ந்தவனும்,
    தென் திசை உயர்ந்து வட திசை தாழ்ந்து ஒருக்கால் உலகம் தடுமாற
    சமன் செய்ய தென் திசை வந்து ஈசனுக்கு சமமாய் அமர்ந்தவனும்,
    வஞ்சம் நிறைந்த வாதாபி எனுமசுரனை சீரணித்தவனுமான அகத்தியன்
    நெஞ்சம் மகிழ மூவரையும் வரவேற்று அன்புடன் உபசரித்தானே.
    அரியிடம் முற்காலத்திலிருந்து தற்போது தன்னிடமிருக்கும் வில்லையும் விரிசடைக்கடவுள் திரிபுரமெரிக்க மேருவை வில்லாக்கி எய்த அம்பையும் எதிரிகளுக்கு எமனாகும் அழிவற்ற சக்தி பெற்ற கூரியவாள் ஒன்றையும் கதிரவகுலத் தோன்றல் இராமனுக்கு அகத்தியர் அன்புடனும் ஆசியுடன் அளித்தாரே.
    பஞ்சவடி எனும் அழகிய இடத்திற்குச் சென்று வாழ்க என அகத்தியன் கூறிட
    பஞ்சு அடிகள் கொண்ட சீதையோடும், இலக்குவனோடும் அங்கு சென்றானே.
    அசைந்து அசைந்து அழகுடன் பாயும் கோதாவரிக் கரையில்
    அமைந்த பஞ்சவடி எனும் எழில்மிகு சோலையை அடைந்து
    இளையவன் இலக்குவன் அமைத்த அழகிய பர்ணசாலையில்
    துணையவள் சீதையுடன் இராமனும் சேர்ந்து வாழ்ந்தனரே.
    சூர்ப்பணகை எனும் பெயருடையாள் இலங்கை வேந்தன் இராவணன் இளையவள் பார்ப்பதற்கே அச்சம் ஏற்படுத்தும் பயங்கர தோற்றமுடைய அரக்கி அவள்
    மூவரும் தங்கிய அச்சோலைக்கு வந்து அழகுமிகு இராமனைக்கண்டாள்
    எவரும் மயங்கும் எழில் மங்கைஉருவம் கொண்டு இராமனிடம் வந்தாள்.
    தகாத அவள் பேச்சுக்களையும் செயல்களையும் கண்டு மனம்
    பொறாத இலக்குவன் அவள் செவிகளையும் மூக்கையும் கொய்து எறிந்தானே.
    இரத்தம் சொரியும் முகத்துடன் அவள் வந்த தோற்றம் கண்டு
    உன்மத்தம் கொண்ட அவள் சகோதர அரக்கர் கரன் தூடணன்,திரிசரன்
    வான் வையகம் அதிர பெரும்படையுடன் சென்று இராமனுடன் போரிட
    தான் ஒருவனாக வில்லொன்றே ஆயுதமாக அரக்கரையெல்லாம் அழித்தானே.
    பின்னமுற்ற முகத்துடன் தன் காலடியில் விழுந்த சூர்ப்பணகையைக்
    கண்ணுற்ற இராவணன் கடும் சினத்தால் கொதித்தெழுந்து இத்தகைய
    பெரிய இடர் இழைத்தவர் யாரென சூர்ப்பனகையை வினவ
    இரு மானிடர் இராம இலக்குவரின் செயல்களென விவரித்தபின்
    சூழ்ச்சியாக சீதையின் ஒப்பிலா மேனி அழகை விளக்கமாய் கூறி
    எழுச்சி பெறச் செய்தாளே இராவணனிடம் சீதையின் மேல் காம வெறியை.
    காமம் தலைக்கேறிய தசமுகன் சீதையைக் கவர்ந்திடும் வெறி உந்த
    மாமன் மாரீசனை மிரட்டி மாய மானாக மைதிலியிடம் அனுப்பிட
    மானைக் கண்டு மயங்கிய சீதை தனக்கு அந்த மான் வேண்டும் என
    இராமனை வேண்டிட இலக்குவன் தடுத்தும் இராமன் மான் பின் சென்றிட
    வெகு தூரம் வனத்துள் சென்று விரைவாய் அங்குமிங்கும் துள்ளி ஓடி
    நெடு நேரம் பிடிபடாத மானின் மாயை உணர்ந்த இராமன் வில்லையெடுத்து
    மானை நோக்கி எய்த அம்பு தாக்கிட மாரீசன் தன் சுய உருவத்தில்
    வானைப் பிளக்கும் ’சீதா,இலக்குமணா’ என்று இராமன் குரலில் கூவி வீழ்ந்தானே.
    கதறலைக் கேட்ட சீதை இராமனைக் காக்க விரைந்தெடன இலக்குவனை முடுக்கிட
    பதறல் வேண்டாம் இது அரக்கனின் மாயமென இலக்குவன் எடுத்துக் கூறிட
    வந்த சீற்றத்தால் கொதித்த சானகி கடுஞ் சொற்களால் இலக்குவனை சாடிட
    நொந்த மனத்துடன் இலக்குவன் அங்கிருந்து நீங்கி இராமனைத் தேடிச் சென்றானே.
    சீதை இருக்குமிடம் தேடி முதிர்ந்த முனிவன் உருவில் வந்த இராவணனனை
    பேதை சீதை அன்புடன் வரவேற்று அழைத்திட, பர்ணசாலையுள் வந்த கபட முனிவன் நான்முகன் சாபம் நினைவில்வர சீதையைத் தீண்டாது குடிலோடு பெயர்த்தெடுத்து
    தான் வந்த தேரினில் அதை வைத்து இலங்கை நோக்கி விரைந்து செல்லலானான்.
    சிறகடித்துப் பறந்து வந்து சீதையைக் காத்திட சமர் புரிந்த சடாயுவை சிவவாளால் சிறகொடித்துச் சிதைத்து இராவணன் வீழ்த்திட சடாயுவும் மண்ணில் விழுந்தானே. இலங்கை நோக்கி தோளில் குடிலைத் தாங்கி இராவணன் வான்வழியே சென்றடைந்து கலங்கி நின்ற சீதையை அசோகவனத்தில் அரக்கியர் நடுவே சிறை வைத்தானே.
    தேடிச் சென்று இராமனைக் கண்ட இலக்குவன் மகிழ்வுடன் தழுவிய பின்னர்
    ஓடி விரைந்து இருவரும் சீதையின் நிலை கண்டிட பர்ணசாலை திரும்பிட
    சீதையை பர்ணசாலையோடு காணாது திகைத்து தவித்த இருவரும் தேர் சென்ற பாதையைக் கண்டு அதன் வழியே சீதையின் தேடலில் சென்றனரே.
    ஏகும் வழியில் குருதிவெள்ளத்தில் கிடந்த சடாயுவைக் கண்டு தழுவினான் இராமன்
    போகும் உயிரைப் பிடித்து வைத்து இராமனிடம் யாவும் கூறி சடாயு உயிர்துறந்தான். பெற்ற தந்தையொத்த சடாயுவின் மரணம் கண்டு மனம் உருகி விழினீர் பெருகி
    உற்ற முறையில் ஈமக்கடன் யாவும் செய்து முடித்து இருவரும் பயணம் தொடர்ந்தனரே.
    மிகநீண்ட கரங்கள் கொண்ட கவந்தன் எனுமரக்கன் பிடியில் திடீரென சிக்கி,
    மீண்டனரே இருவரும் அவன் வானுயர் தோள்களை வெட்டி வீழ்த்திய பின்னர்.
    இராமன் கரம் பட்டு சாபம் நீங்கிய தனு எனும் அக்கந்தர்வன் ருசியமுக மலை வாழ்
    சுக்ரீவன் எனும் வானரக்கோன் துணை கொள்க எனக்கூறி வானுலகம் சென்றானே.
    சபரியெனும் தனது பக்தையை வழியில் கண்டு மகிழ்ந்த இராமன் அபரிமித பரிவுடன் அவள் அளித்த காய் கனிகளை ஏற்று உண்டபின்
    ருசியமுகம் மலைக்கு செல்லும் வழியை உலகுக்கே வழிகாட்டும் இராமனுக்கு கூறி வானுலகம் அடைந்தாளே கடுந்தவமியற்றும் முனிவரும் பெறமுடியா பேறு பெற்ற சபரி

    கிஷ்கிந்தா காண்டம்

    ருசியமுகம் மலையை இராம இலக்குவர் சென்றடைந்தனரே– அங்கு தன் அண்ணன் வாலி முகம் காணாது ஒளிந்து வாழ்ந்த வானரக்கோன் சுக்ரீவனைக் கண்டனரே. அண்ணன் வாலி தம்பிக்கிழைத்த கொடுமைகளை அங்கிருந்த அனுமன் விரிவாய்க் கூறிட அண்ணல் இராமனும் சுக்ரீவன்பால் பரிவு பொங்கிட உயிர்த் தோழமை கொண்டானே.
    வான் வழியே முன்னொரு நாள் இராவணன் கவர்ந்து சென்ற மங்கை ஒருவள்
    தான் அணிந்த அணிகலன்களை ஆடைத்துண்டில் முடிந்து நிலம் நோக்கி வீசிட
    அணிகல முடிப்புகளை வானரர் ஏந்திப்பிடித்து சுக்ரீவனிடம் கொடுத்த அவற்றை பணிவுடன் இராமனுக்குக் காட்டிட சீதை அணிகளைக் கண்ட இராமன் தன்வயமிழந்தானே. சூரிய குமாரன் சுக்ரீவன் சூரியகுலத்தோன்றல் இராமனைத் தேற்றிட
    கூரிய மதி படைத்த அனுமன் வாலியை வதம் செய்து சீதையைத் தேடுவோமென்றான்.
    ஒங்கி வளர்ந்த ஏழு மராமரங்களை ஒரே அம்பால் துளைத்த இராமன் திறன் கண்டு நீங்கியதே சுக்ரீவன் மனதுறுத்திய வாலியை அழிக்க இராமனனின் ஆற்றல் மேல் ஐயம்.
    அனைத்து உலகங்களையும் ஆட்டிப்படைத்த இராவணனையே தன் வாலில் கட்டிப் பிணைத்து எட்டு திக்கும் குருதி பெருக அலைக்கழித்த ஒப்பற்ற வலிமைமிகு வாலியும், தனது துணைவியைக் கவர்ந்து தனக்கும் கொடுந்துயரளித்த வாலியின் செயல்களை மனதுள் புதைத்து புழுங்கிப் பின் இராமன் துணை கிட்ட எழுச்சி பெற்ற சுக்ரீவனும்
    கடும் சமரில் பொருத தக்க தருணத்தில் மறைவிடமிருந்து இராமன் உயிரைத்
    தொடும் பாணம் ஒன்றை வாலியின் மேல் எய்திட அவனும் மண்ணில் வீழ்ந்தானே. மறைவாய் நின்று அம்பு எய்தது ஏனென வெகு நேரம் வாதிட்ட வாலி இறுதியில் இறைவனாய் இராமனை அறிந்து தலையால் வணங்கி போற்றினானே.
    அங்கதன் எனும் தன்னன்பு மைந்தனை இராமனிடம் அடைக்கலமாய் அளித்திட
    அங்கு தன் உடைவாளை இராமன் அங்கதனுக்கு ஈந்து அவனை ஏற்றுக்கொண்டானே. நிறைந்த மனத்துடனும் மிகுந்த நிம்மதியுடனும் வாலி வானுலகம் சென்றானே
    மறைந்த தந்தை வாலிக்கு இறுதிக்கடன்களை அங்கதன் மூலம் அனுமன் செய்வித்தானே
    உரிய முறையில் சுக்ரீவனுக்கு இலக்குவன் மூலம் முடிசூட்டிய இராமன்
    சீரிய முறையில் ஆட்சி செய்து நான்கு திங்கள் கார் காலம் கழித்து படையுடன்
    என்னிடம் வருக என சுக்ரீவனிடம் கூறிய இராமன் வேறொரு மலைக்குச் செல்ல தன்னிடமான கிட்கிந்தைக்கு அனுமனொடும் மற்ற வானரர்களுடன் சுக்ரீவன் சென்றான்.
    சல்லாபத்தில் மூழ்கித் திளைத்து நான்கு திங்கள் சென்றதே அறியாது உல்லாசத்தில் தனை மறந்த சுக்ரீவன் செயல் கண்டு வெகுண்ட இராமன்
    நேரே சென்று சுக்ரீவனைக் கண்டு காரணம் அறிந்து வர இலக்குவனைப் பணித்திட
    போரே செய்யத் தயாராக கடும் சினத்துடன் இலக்குவன் கிட்கிந்தை அடைந்தான்
    தனது தவறை நன்குணர்ந்த சுக்ரீவன் இலக்குவனுடன் இராமனிடம் சென்றடைந்து
    மனது உருகி இராமன் செந்தாள்களில் விழுந்து வணங்கிட அவனும் மனமிரங்கினான்.
    கடல் போல் திரண்ட வானர சேனையைக் கண்டு இராமனும் மகிழ்ந்திட சீதையைத்
    தேடல் பணியில் அச்சேனையை அமர்த்திடும் வழி வகையை ஆய்ந்தனரே.
    நான்கு திசைகளிலும் செல்ல சேனையைப் பிரித்து சுக்ரீவன் ஆணையிட
    நன்கு எல்லாம் அறிந்த அனுமன், சாம்பவான் அங்கதன் தென் திசை சென்றனரே.
    வானர வேந்தன் சுக்ரீவன் சொல்லிய வழியில் சென்றபடியே சீதையைத் தேடிய
    வானர வீரர் சீதையைக் காணாது உளம் சோர்ந்து மனம் மலங்கி
    இறுதியில் மயேந்திர மலையில் கூடினரே; வானர அரசன் சுக்ரீவன்
    உறுதியாய் குறித்த ஒரு மாத தவணையும் கழிந்ததை எண்ணி கலங்கினரே.
    திரும்ப கிட்கிந்தா செல்லாது மலையிலேயே இருப்பதை அல்லது மரிப்பதை
    விரும்பிய வானரர்களிடம் உரையாடிய அனுமன் சடாயுவின் வீர்மரணம் பற்றி குறிப்பிட சற்று எட்டியிருந்த கழுகரசன் சம்பாதி அதைக் கேட்டு தன் தம்பி சடாயுவின் மரணம் பற்றி முற்றும் அறிந்திட அனுமனிடம் வந்து கேட்டறிந்தபின் தன் கதை சொல்லலானான்
    எரிக்கும் சூரிய கிரணங்களிலிருந்து தம்பி சடாயுவைக் காத்திட தன் சிறகுகளை
    விரித்துப் பரப்பியபோது அவை எரிந்து தீய்ந்திட சம்பாதி பறக்கும் நிலை இழந்தான்
    இராம நாம உச்சாடனம் செய்ய அனைத்து வானரரையும் சம்பாதி வேண்ட
    இராம நாம மகிமையால் தீய்ந்த சிறகுகள் துளிர்த்து பெரிதாய் வளர்ந்தனவே.
    இலங்கையின் வேந்தன் சீதையைக் கவர்ந்து வான்வழி சென்றதைக் கண்டிருந்த சம்பாதி இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்டுள்ள செய்தியைச் சொன்னானே.
    மிகுந்த பாதுகாப்பும் காவலும் உள்ள இலங்கைக்கு பெரும் படையுடன் செல்வது
    உகந்தது ஆகாது ஒருவன் சென்று சீதையைக் கண்டு வருவதே உசிதமென சம்பாதி கூறிட வீர மாருதியே இதற்கு ஏற்றவன் என அனுபவப் பழம் சாம்பவான் உரைத்திட
    தீர மாருதியும் கம்பீரமாய் விஸ்வரூபம் எடுத்து மகேந்திர மலையில் நின்றானே.

    சுந்தர காண்டம்

    இராமனை மனதில் துதித்து தென் திசை நோக்கி இலங்கையை இலக்காக்கி
    இராமனின் வில் அம்பென வாயுகுமாரன் விண்வெளியில் விரைந்து சென்று
    எதிர் வந்த இடர்களையும் தடைகளையும் மதியாலும் வலிவாலும் வென்று
    எழில் மிகு பவள மலையிலிறங்கி அங்கிருந்து இலங்கையைக் கண்டு வியந்தானே. எங்கும் இருள் சூழ்ந்தபின் பவள மலையை விட்டகன்று இலங்கை ஊரடைந்து
    பொங்கும் கடலையே அகழியாய்க் கொண்ட மதில் சுவர் வழியே நகருள் புகுந்தானே. சல்லடைப் போட்டுத் தேடுவதுபோல் நகரிலும் அரண்மனையிலும் முழுதும் தேடியும் மெல்லிடையாள் சீதையைக் காணாது மனம் குழம்பிய அனுமன் வனமொன்றில் புகுந்தான்.
    அசோக வனமெனும் அவ்வனத்தில் அதுவரை சீதையைக் காணமுடியாததால் ஏற்பட்ட சோகமும் சோர்வும் அழுத்திட அனுமன் அங்கும் சீதையை இறுதியாய் தேட முற்பட்டான்
    பெருத்த உடலும் மிகுத்த கொடுமையும் கொண்ட அரக்கியர் சூழ்ந்திருக்க அவர் நடுவே கறுத்த மேகங்கள் மூடிமறைத்த வெண்ணிலவு போல் சீதை சிறை இருந்தாளே.
    புகை படிந்த ஓவியம்போல் பொலிவிழந்த தோற்றத்தோடு ஒளியிழந்த விளக்காய் நகை மறைந்து களை இழந்த முகத்தோடு வாடிய பயிராய் சீதை இருந்தாளே.
    வல்லரக்கிகளில் நடுவில் இருந்த ஒரே நல்லரக்கியாம் திரிசடை என்பவளிடம் ந
    ல்ல நிமித்தங்களாய் தனது இடது தோள் கண்கள் புருவம் துடிப்பதை சீதை கூறிட நல்லது இல்லாத தான் கண்ட கனவுகளை திரிசடையும் விவரமாய்க் கூறி அவை
    எல்லாம் இலங்கைக்கு வரவிருக்கும் பேரழிவை உணர்த்துவதாம் என்றாள்..
    கொடிய அரக்கிகளிடம் நடுவே சிக்கி வாடிய கொடி போலிருந்த சீதையை
    நெடிய மரமொன்றின் கிளையில் மறைந்திருந்து அனுமனும் நோக்கினானே.
    திரண்ட தோள்கள் கொண்ட இராவணன் அரம்பையர் அரக்கியர் திரண்டு உடன் வந்திட மருண்ட மான் போல் மிரண்டு அரக்கியர் நடுவிருந்த சீதை முன் நின்று
    இச்சகப் பேச்சுகள் பேசிய இராவணனை துச்சமாய் மதித்து உதாசீனம் செய்த சீதை மேல் உச்சமாய் கோபமுற்ற இராவணன் சீதை இணங்கிட இருமாத கெடு கொடுத்து அகன்றானே.
    தன் அவல நிலை கண்டு மாய்ந்த சீதை தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றபோது அவள் முன் வந்து நின்றான் அனுமன், ’இராமனது தூதன் நானென’ முழங்கிக் கொண்டே.
    அண்ணல் அடையாளமாய் கொடுத்தனுப்பிய கணையாழியை சீதையிடம் கொடுத்திட கண்ணில் ஒற்றி இராமனையே நேரில் கண்டால் போல் புளகாங்கிதம் அடைந்தாள்.
    எந்தன் தந்தையும் நீ, தாயும் நீ, உயிர் கொடுத்த உத்தமனும் நீ என உளமாரப் போற்றினாள் உந்தன் செயலுக்கு செயக்கூடிய கைமாறுளதோ, சிரஞ்சீவியாய் வாழ்கவென வாழ்த்தினாள்.
    எந்தன் தோளில் சுமந்து சென்று உன்னை இராமனிடம் சேர்ப்பேனென அனுமன் வேண்டிட உந்தன் செயல் இராமன் வில்லுக்கும் வீரத்திற்கும் இழுக்காகுமென சீதையும் மறுத்தாளே.
    அனுமனிடம் சீதை தன் சூடாமணியை அடையாளமாய் இராமனுக்குக் காட்டக் கொடுத்திட அனுமனும் அதைப் பெற்று சீதையை வணங்கி விடை பெற்றுச் சென்றானே.
    பேரெழில் மிக்க அசோக வனந்தனை பேருருவம் எடுத்து முற்றிலும் அழித்தான் அனுமன் பெருஞ்சினம் கொண்ட இராவணன் கேடிழைத்த குரங்கினைப் பிடித்துவர அனுப்பிய கிங்கரர்,சம்புமாலி, ஐந்து தானைத்தலைவர்கள்,அட்சய குமாரன், அரக்கர் படையினரை பயங்கரமாய் தனித்தே நின்று அனுமன் சமரிட்டு முற்றிலும் அழித்து ஒழித்தானே.
    தசமுகனின் தனையன் மேகனாதன் தானே அனுமனுடன் சமர் செய்ய சென்று நான்முகனின் அத்திரத்தை பிரயோகிக்க அனுமனும் அதை மதித்து கட்டுண்டானே. கட்டுண்ட அனுமனை நகர் வழியே இராவணனிடம் இழுத்துக் கொண்டு சென்றனரே கட்டுக்கடங்கா கோபமுற்ற இராவணன் அனுமனை அவனைப்பற்றிய விவரங்கள் வினவ இணையிலா வில் வீரன் இராமனின் தூதன் நான் என்று தன் அறிமுகம் தந்த பின் துணையிலா அவன் துணைவி சீதையை கபடமாய் கவர்ந்து வந்து சிறை வைத்த இழிவான செயல் புரிந்த நீ சீதையை இராமனிடம் சற்றும் தாமதியாது திருப்பி அனுப்பி அழிவான முடிவிலிருந்து உன்னைக் காத்துக்கொள் என அனுமனும் உணர்த்தினானே. சிரம் பத்திலும் சினம் கொதித்த இராவணன் அக்குரங்கை கொன்றிட ஆணையிட அறம் அறிந்த தம்பி விபீடணன் தூதனைக் கொல்வது தகாத செயல் என்றுணர்த்திட வாலைச் சுட்டெரித்து அவ்வானரத்தை துரத்திடுக என இராவணன் கட்டளையிட உடலைச் சுற்றிய நாக பாசத்தைத் தளர்த்தி பருமானன கயிற்றால் அனுமனைக் கட்டி வாலில் தீ வைத்திட சீதையின் அருளால் கனலும் புனல் போல் குளிர்ந்திட
    வாலைச் சுழற்றி சீதையின் இருப்பிடம் விட்டு இலங்கை நகரத்தையே தீக்கிரையாக்கி தான் வந்த வேலை முடிந்திட சீதையிடம் சென்று வணங்கி விடை பெற்று
    வான் வழியே விரைந்து சென்று மகேந்திர மலையில் இருந்த வானரரை அடைந்தானே.
    கண்டேன் சீதையை எனும் செய்தியை இராமனிடம் கடுகிச் சென்று விண்டான்
    கண்டிலேன் உனைப் போல என அண்ணலும் அளவிலா ஆனந்தம் கொண்டான்
    அன்னை சீதை அளித்த சூடாமணியை அனுமன் இராமனுக்குக் காட்டிட
    தன்னை மறந்த இராமன் சீதையையே கண்டது போல் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். இலங்கையில் வாடும் சீதையின் நிலையை விரிவாய் விளக்கிய அனுமன்
    ஒருதிங்களே உயிர் வாழ்வேன் என சீதை கூறிய வாக்கையும் இராமனிடம் கூறிட
    தென் திசை நோக்கிச் செல்ல எழுபது வெள்ளம் வானர சேனைக்கு சுக்ரீவன் ஆணையிட பன்னிரு நாள் மலை வழி நடந்து தென் திசைக் கடலை யாவரும் அடைந்தனரே.

    யுத்த காண்டம்

    தென் திசைக் கடலின் கரையிலே இராமன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்க
    தன் அரண்மனையில் மிக்க உற்றோருடன் இராவணன் மந்திராலோசனையில் இருந்தான் ஒருமுகமாய் கூடிய அரக்கர் யாவரும் இராமனுடன் போரிட்டு அழிக்கவேண்டுமெனக் கூற தனியனாய் விபீடணன் மட்டும் சீதையை இராமனிடம் திருப்பியனுப்பிட அறிவுறுத்திட நஞ்சு போல் இச்சொற்களை இராவணன் வெறுத்து விபீடணனை இகழ்ச்சியுடன் ஏசிட நெஞ்சு கனத்த விபீடணன் துணைவர் நால்வருடன் இலங்கை நீங்கி அக்கரை அடைந்தானே
    வானரப்படை சூழ வீற்றிருந்த இராமனிடம் விபீடணன் அடைக்கலம் வேண்டி பணிந்திட வானரத்தலைவர் யாவரும்,அனுமனைத்தவிர, அடைக்கலம் அளிப்பதை எதிர்த்திட அஞ்சனை மைந்தன் இலங்கையில் நேரில் கண்ட விபீடணன் பண்புகளை விளக்கிட நெஞ்சம் மகிழ்ந்த இராமன் அடைக்கலம் அளித்து விபீடணனை ஏற்றுக்கொண்டானே.
    கங்கையின் கரையில் குகனோடு ஐவரானோம் குன்றில் சுக்ரீவனோடு அறுவரானோம் எங்களை வந்தடைந்த உன்னோடு எழுவரானோமென அண்ணலும் மட்டிலா மகிழ்வுற்றான் இலங்கை அரசனாய் விபீடணனுக்கு இலக்குவன் கரங்களால் முடிசூட்ட இராமன் பணித்திட இருகை கூப்பி விபீடணன் பரதன்போல் இராமன் பாதுகைகளையே சிரமேல் சூடினானே.
    கருங்கடல் சூழ் இலங்கையின் அரண் அமைப்பையும் சேனைச் சிறப்பையும் பலத்தையும் பெருந்தோள் கொண்ட இராவணின் வலிமையும் விபீடணன் விரிவாய் விளக்கினான்.
    கரிய கடலைக் கடந்து இலங்கை அடைந்திட உரிய வழியாக வருணன்
    பெரிய மலைகளைக் கொட்டி அணை கட்டிட யோசனை கூறினான்
    வானரத்தலைவன் சுக்ரீவன் நளனெனும் வானரத் தச்சனிடம் பொறுப்பை ஒப்படைத்தான் வானரப்படைகள் குன்றுகளைப் பெயர்த்துக் கொணர்ந்து கடலில் கொட்டி மேடாக்கி
    நூறு யோசனை நீளம் பத்து யோசனை அகலம் கொண்ட அணையை
    மூன்று நாட்களில் இலங்கை வரை கட்டி சேதுபந்தனம் செய்து முடித்தனரே.
    இணையிலா இராமன் இலக்குவன் விபீடணன் வானரப்படைத்தலைவர்கள் வானரப்படைகள் அணை மேலே நடந்து சென்று கடலைக் கடந்து இலங்கைக் கரை அடைந்தனரே.
    ஒற்றர் மூலம் இராமன் விபீடணன் வானரப்படை சேதுபந்தனம் இவை பற்றிய செய்திகளை பெற்ற இராவணன் இனி செயத்தக்க செயல் யாதெனும் சிந்தனையில் ஆழ்ந்தான்.
    மலை ஒன்றின் மீதேறி நின்று இலங்கையின் மாட்சியையும் காட்சிகளையும் கண்டு மலைத்த இராமன் இலக்குவனிடம் அவை பற்றி விவரமாய் விளக்கிக் கூறலானான் தசமுகன் இராவணனும் அச்சமயம் வானுயர்ந்த அரண்மனை கோபுர உச்சிக்கு வந்து கமலமுகன் இராமனைக் கண்ணுற்று கடுஞ்சினமுற்று கனல் விழிகளால் நோக்கினான்.
    சாரன் எனுமரக்கன் இராமன் தரப்பு விவரங்களை இராவணனிடம் விளக்கிச் சொல்லிட இராமன் விபீடணனிடம் அரக்கர் தரப்பு வீரர்களைப் பற்றிய விவரங்களை வினவிட அண்ணன் இராவணனை விபீடணன் முதலில் சுட்டிக்காட்ட சினத்துடன் சுக்ரீவன் திடுமென விண்ணில் பகலவனைப் பிடிக்கப் பாய்ந்த அனுமன் போல் இராவணன் மேல் பாய்ந்தான். கடுஞ்சமர் இருவரும் புரிந்து படுகாயம் அடைந்து இளைப்பாற சற்று நேரம் நின்ற வேளை திடுமென சுக்ரீவன் இராவணன் தலைமுடிமணி பறித்து இராமன் பாதத்தில் வைத்தானே. அரக்கர் படைகளை போருக்கு ஆயத்தமாய் கொடுமை மிகுந்த இராவணன் அணி வகுத்திட இரக்க மனம் படைத்த இராமனோ அங்கதனை இராவணனிடம் சமரசம் பேச தூதனுப்பிட மூர்க்கனான இராவணன் அங்கதன் சொற்களை செவிமடுக்காது அவனைத் தாக்க முற்பட தீர்க்கமான முடிவு போரே சமாதானமன்று என்று திரும்பிவந்த அங்கதன் உரைத்தான்
    இவ்வண்ணம் தொடங்கியதே இராம-இராவண வானர- அரக்கர் படை யுத்தமாய் கார்வண்ண இராமனின் அவதார நோக்கமான தர்ம- அதர்ம யுத்தம்!
    கடல் போல பரந்து நின்ற அகழியை மலைகள் மரங்களால் வானரப் படைகள் தூர்த்து திடல் போல மேடாக்கி அங்கிருந்து ஓங்கி நின்ற மதில் சுவர் மேல் தாவி அதனையழித்து திரண்டு வந்த அரக்கர் சேனைகள் மேல் குன்றுகளையும் மரங்களையும் வானரப்படை வீச மிரண்டு போய் அரக்கர் படைகளும் பின் வாங்கி திரும்பி ஓடினரே.
    அரக்கர் சேனை சேதமடைந்து திரும்பி வந்துவிட்டதை அறிந்து சினத்தால் சிவந்த அரக்கர்கோன் இராவணன் தானே போர்க்களம் சென்றிட முடிவு செய்தானே.
    குரக்கினச் சேனைகள் அவற்றின் தலைவர்கள் சுக்ரீவன், அங்கதன், அனுமன் யாவரும் அரக்கர்கோனுடன் கடும் சமர் புரிந்தும் வெற்றி பெற இயலாது தளர்ந்திட
    தசமுகன் தன்னுடன் போர்புரிய களமிறங்கிய இலக்குவன் வில்லாற்றல் கண்டு வியந்து நான்முகன் தந்த வேல் ஆயுதத்தை இலக்குவன் மேல் பிரயோகம் செய்திட
    நெஞ்சில் அதை ஏற்ற இலக்குவன் மூர்ச்சித்து விழுந்ததைக் கண்டு
    நெஞ்சம் பதறிய அனுமன் அவனைத் தூக்கி பாதுகாப்பான வேறிடம் சென்றானே.
    அஞ்சன வண்ண இராமன் தானே நேரில் இராவணனுடன் போர் புரிய வந்திட
    அஞ்சனை மைந்தன் குன்றொத்த தன் தோள்களில் இராமனைச் சுமந்து சென்று
    தேர் மீதமர்ந்து போரிடும் இராவணன் முன் சென்று நின்றிட
    போர் தொடங்கியதே இராமனுக்கும், இராவணனுக்கும் இடையிலே.
    அரக்கர் கோன் இராவணனும் இராமனும் எய்த அம்புகளால் வான்வெளி நிறைந்ததே!
    அரக்கர் வானரர் சேனைகள் களிறுகள் கரிகள் பிணங்களால் பூமியும் மறைந்ததே!
    வீரன் இராமனின் வில்லினின்று விடுபட்ட அம்புகள் விரைந்து சென்று தாக்கி தீரன் இராவணனின் வில் தேர் வெண்குடை வீணைக்கொடி மணிமுடி யாவும் வீழ்ந்தனவே.
    களமிறங்கிய இராவணன் யாவும் இழந்து தனியனாய் நிராயுதபாணியாய் நின்றிட உளமிரங்கிய இராமன் இன்று போய் நாளை வா போருக்கு என கருணையுடன் கூறினான் நிலை குலைந்த இராவணன் தலை குனிந்து தன்னிடம் சேர்ந்து ஈசனின்
    சிலை முன்னமர்ந்து தன் அவல நிலை குறித்து உளமுடைந்து புலம்பினானே.
    ஒப்பற்ற ஆற்றலுற்ற தம்பி கும்பகருணனை அவனது ஆழ்துயிலினின்று எழச் செய்த கொற்றவன் இராவணன் அவனை இராமனோடு போர்புரிய போர்க்களம் செல்லப்பணித்திட முற்றும் தவறானது சீதையைக் கவர்ந்தது என உணர்த்தியும் இராவணன் கேளாததால் சற்றும் தயங்காது செஞ்சோற்றுக்கடனாற்ற போர்க்களம் செல்ல கும்பகருணன் தயாரானான் போரில் தன் வீரமரணத்திற்குப் பின்னாவது சீதையை விட்டு விடுக என வேண்டியபின் தேரில் ஏறி பெரும்படையுடன் இராவணனனிடம் விடைபெற்று கும்பகருணன் சென்றானே.
    அண்ணன் கும்பகருணனைக் களத்தில் கண்ட விபீடணன் அவனைப் பாசத்துடன் அணுகி கார்வண்ணன் இராமனிடம் அடைக்கலம் அடைந்திடு என்று அன்புடன் விடுத்த வேண்டுகோளை மறுத்த கும்பகருணன் இராவணனைத் துறவேனென உறுதியுடன் கூறி மீண்டும் இராமனிடமே சென்று இனிது வாழ்ந்திடென விபீடணனை வாழ்த்தி அனுப்பினான்.
    காலனும் கண்டஞ்சும் கடும் தோற்றமும் ஆயுதங்களும் கொண்ட கும்பகருணனை எதிர்த்த நீலன் அங்கதன் சுக்ரீவன் அனுமன் வனரப்படையினர் யாவரும் போரிட்டு தளர்ந்தனரே. அங்கு அச்சமயம் வந்த இலக்குவனின் அம்பு மழையில் சிக்கித் தவித்து
    அங்கும் இங்கும் சிதறி ஓடி அரக்கர் படையினர் சீரழிந்தனரே.
    நேரிலே இலக்குவனின் வில்லாண்மையைக் கண்டு வியந்த கும்பகருணன்
    தேரிலே சென்று இலக்குவன் இருக்குமிடத்தை அடைந்தானே.
    வாயு மைந்தன் தோள்களெனும் தேரிலமர்ந்த இலக்குவனின் வில்லினின்று விரைவுடன் பாயும் அம்புகள் கும்பகருணனின் தேரையும் தேர்ப்பாகனையும் வில்லையும் அழித்தனவே. சுக்ரீவனை சென்றடைந்த கும்பகருணன் அவனைக் கடுமையாய் தாக்கி வீழ்த்தியபின் அவனைத் தோளிலிட்டு சுமந்து இலங்கை நோக்கி செல்லலானான்.
    இதனைக் கண்ட இராமன் தனது வில்லம்புகளால் வான்வழிகள் அனைத்தும் அடைத்தான் இராமனை முதன்முறையாய் கண்ட கும்பகருணன் அவனுடன் சமர் புரியலுற்றானே.
    திரண்ட கும்பகருணன் கரங்களையும் கால்களைம் இராமனின் அம்புகள் சிதைத்திட வெருண்ட கும்பகருணன் விடாப்பிடியாய் தனது வாயையே ஆயுதமாக்கிப்
    போரிட்டான். மரணம் உறுதி என்று இறுதியாய் உணர்ந்த கும்பகருணன் இராமனை நோக்கி சரணம் அடைந்த தம்பி விபீடணனை இராவணனிடமிருந்துக் காத்திடுக எனவேண்டினான் தன் சிரத்தை அறுத்து எவரும் காணவியலாது ஆழ்கடலுள் அழுத்திடவும் வேண்டினான் தன் கரத்திருந்த வில்லில் நாணேற்றி அம்பெய்து இராமனும் அவ்வாறே செய்தருளினானே.
    மாய சனகனைப் படைத்து சீதை முன்னிறுத்தி அச்சுறுத்தி அவளை இணங்க வைத்திடும் தீய திட்டத்துடன் இராவணன் அசோகவனம் சென்று சீதைமுன் இருக்கையில்
    அளப்பரிய பாசம் கொண்ட சகோதரன் கும்பகருணன் போரில் மடிந்த செய்தி எட்டிட உளமொடிந்த இராவணன் அவ்விடமிருந்து அகன்று தன்னிடம் சென்றானே.
    இலக்குவனப் போரில் கொன்று இராமனையும் அவன் தம்பியை இழக்கச் செய்வேனென இலக்காய்க் கொண்டு அதிகாயன் எனும் இராவணன் மைந்தன் போர்க்களம் சென்றானே. தோள் தாள் தலை இவையெலாமின்றி கிடந்த கும்பகருணன் உடலை நோக்கித் துயறுற்று சூளுரைத்தான் அதிகாயன் இலக்குவனையும் கும்பகருணன் போல் செய்து முடிப்பேனென. வாயு மகன் அனுமன் தோள் மீதமர்ந்து இலக்குவன் அதிகாயனுடன் கடுஞ்சமர் புரிந்து நான்முகன் அத்திரத்தை இறுதியில் எய்திட அது அதியமான் சிரத்தை கொய்து சென்றதே.
    சோகக் கடலில் இராவணன் மனைவி தானியமாலி அதிகாயன் மரணத்தால் மூழ்கியிருக்க மேகனாதன்(இந்திரசித்து)எனும் மண்டோதரி வழி இராவணன் மைந்தன் அவ்விடம் வந்தான் அதிகாயன் சிறிய தந்தை கும்பகருணன் அவன் புதல்வர் கும்பன் நிகும்பன் மரணம் அறிந்து அதிகமாய் ஆத்திரமடைந்த இந்திரசித்து பெரும்படையுடன் போர்க்களம் புகுந்தான்.
    இந்திரசித்தை எதிர்த்த வானரவீரர்கள் பேரளவில் அழிந்திட வானரத்தலைவர் தளர்ந்திட இந்திரசித்தை எதிர்த்துப் போரிடஇலக்குவனால் மட்டுமே இயலுமென விபீடணன் இயம்பிட சூழ்ந்து நின்ற அரக்கர் படையை இலக்குவன் தன் வில்லம்புகளால் வீழ்த்திட
    வீழ்ந்த அரக்கர்களைக் கண்ட இந்திரசித்து தேரிலே சென்று இலக்குவன் முன் நின்றான். தேரிலே அமர்ந்து இந்திரசித்தும் அனுமன் தோளிலே அமர்ந்து இலக்குவனும்
    நேரிலே ஒருவரோடு ஒருவர் பொருதி கடுஞ்சமரில் ஈடுபட்டனரே.
    மேகனாதனின் தேர்க்கொடியையும் தேர்ப்பாகனையும் தேரில் பூட்டிய சிங்கங்களையும் வேகமாய் செலுத்திய அம்பு மழையால் இலக்குவன் வீழ்த்தியபின்
    அவனது கவசத்தை ஊடுருவி அவனது மார்பையும் அம்புகளால் துளைத்தான்
    தனது வில்லைத் தேரில் ஊன்றி செயலற்று நின்ற எதிரியைக் கொல்லவும் நினைத்தான் சித்து செய்வதில் பிரசித்தி பெற்ற இந்திரசித்துவிண்ணில் மறைந்து நாகபாசமெனும் அத்திரத்தை எய்திட இலக்குவன் வானரப்படையினர் யாவரும் கட்டுண்டு வீழ்ந்தனரே இரத்தம் பெருகிட இந்திரசித்து தன் அரண்மனைக்கு தளர்ச்சியைப் போக்கிடச் சென்றான் சித்தம் குலைந்த விபீடணன் தன் இயலாமையை எண்ணி எண்ணி புலம்பலுற்றானே. சமர்க்களம் அடைந்த இராமன் கட்டுண்ட இலக்குவனையும் மற்ற யாவரையும் கண்டு தன்னுளம் உடைந்து விழி நீர் பெருக விபீடணன் மூலம் யாவும் கேட்டறிந்தான்
    வானுலகத்திருந்து இவை யாவும் கண்ட கருடன் இராமன் கலங்குவதை காணச் சகியாது தானிருக்குமிடத்திருந்து மிகப்பரந்த தன் சிறகடித்துப் பறந்து வந்து இராமனிடம் சேர்ந்தான் கருடனின் வருகையால் நாகபாசங்கள் யாவும் சிதறிட கட்டுண்ட யாவரும் விடுபட்டனரே! கருடன் பின்னர் திருமாலின் அம்சமான இராமனிடம் விடை பெற்றுச் சென்றானே.
    பெற்ற மைந்தன் இந்திரசித்தை இராவணன் மறுபடியும் போர்க்களம் அனுப்புமுன்
    மற்ற அரக்கர் தலைவர்கள் இராவணனை வேண்டி போர்க்களம் புகுந்தனரே.
    நீண்ட நேரம் அவ்வரக்கர்கள் வானரத்தலைவர் இலக்குவன் இராமன் இவர்களுடன் பொருதி மாண்ட செய்தி இராவணனுக்கு எட்டிட அவன் இந்திரசித்தை களம் செல்லப் பணித்தான்.
    இந்திரசித்து பெரும் படையுடனும் ஆரவாரத்துடனும் போர்க்களமடைந்து அங்கு வந்தெதிர்த்த வானரப்படையைக் கடுமையையாய்த் தாக்கி பேரளவில் அழித்தானே. இலக்குவனுடன் பின்னர் தனியே நேருக்கு நேர் பொருதியபொழுது இந்திரசித்து இலக்குவனின் தாக்குதலில் தன் கவசத்தையும் தேரையும் இழந்து நின்றானே.
    மேகனாதன்மேல் இலக்குவன் பிரம்மாத்திரத்தை பிரயோகிக்க விழைந்திட
    கார்மேக வண்ணன் இராமன் மூவுலகங்களும் அதைத் தாங்க இயலாதென தடுத்தான். இதையறிந்த வஞ்சகன் இந்திரசித்து மாயமாய் விண்வெளி அடைந்து மேகத்தில் மறைந்து விரைந்து இலங்கை அடைந்து பிரம்மாத்திரம் செலுத்த வேள்வி மேற்கொண்டானே.
    அச்சமயம் நடந்துகொண்டிருந்த போரில் அரக்கர்படை பேரிழிவைச் சந்திக்க
    இச்செய்தி இராவணனையும் இந்திரசித்தையும் எட்டிட இருவரும் மிக்க சினமுற்றனரே. ஒருவரும் காணாவண்ணம் விண்ணில் மாயமாய் மறைந்திருந்து இந்திரசித்து
    பழம்பெரும் பிரம்மாத்திரத்தை கண்ணிமைக்கும்நேரத்தில் இராமன் படைமேல் விடுத்தானே. இலக்குவனும் எல்லா வானரத்தலைவர்களும் வானரப்படையினரும் பிரம்மாத்திரத்துக்கு இலக்காகி மூச்சிழந்து செயலற்று உயிரொடுங்கி நிலத்தில் வீழ்ந்தனரே.
    நடந்தது அறியாது வேறிடத்திருந்த இராமன் போர்க்களம் சென்றபொழுது அங்கு வீழ்ந்து கிடந்த இலக்குவனையும் அனுமனையும் சுக்ரீவனையும் மற்ற யாவரையும் கண்டு இன்னலுற்றுப் புலம்பினான் அழுதான் செய்வதறியாது திகைத்தான்
    தன்னாலேதும் செய்ய இயாலாமையை எண்ணி எண்ணி மருகினான்.
    இறந்தவன் போல் விழுந்து கிடந்த இலக்குவனைக் கண்ட இராமன் தன்னையே
    மறந்து அவன் உடலை தன் மார்போடு அணைத்து துயில்வுற்றான்.
    இராம இலக்குவர் உயிரிழந்தெனரென தூதுவர் செய்தியை இராவணனிடம் தெரிவிக்க இராவணன் பெருமகிழ்ச்சி அடந்து அண்டமே அதிரும் வண்ணம் ஆர்ப்பரித்தான்
    சீதையை அரக்கியர் காவலுடன் ஓர் விமானத்திலேற்றி போர்க்களத்திற்கு அனுப்பி பேதையை இராம இலக்குவர் வீழ்ந்து கிடந்த காட்சியைக் காணச் செய்தான்.
    கணவன் இராமனின் அசைவற்ற உடலைக் கண்ணுற்ற சீதை நஞ்சுண்டது போல் உணர்வும் உடலும் உயிர்த்தலும் ஓய்ந்து அடியற்ற மரம் போல் சாய்ந்தாளே.
    நெடு நேரம் கழித்து கண்விழித்த சீதையை நல்லரக்கியாம் திரிசடை அன்புடன் அணைத்து கொடும் அரக்கர் செய்த மாயையே அக்காட்சி என உணர்த்தி தேற்றினாள்.
    திருமாலின் அம்சமாம் இராமனையும் தம்பி இலக்குவனையும் சிரஞ்சீவி அனுமனையும் ஒருக்காலும் அதர்ம அரக்கர் படையால் அழிக்க இயலாதென சீதைக்கு தெளிவுறுத்தினாள்.
    களம் அடைந்த விபீடணன் முதலில் அனுமனைக்கண்டு மூர்ச்சை பெறச்செய்தான் உளம் மகிழ்ந்த இருவரும் சாம்பவானைத் தேடிச்சென்று அவனை உயிருடன் கண்டனரே. ஒருகணமும் தாமதியாமல் விரைந்து பறந்து சஞ்சீவினி எனும் உயிரளிக்கும் அருமருந்தினைக் கொணர்ந்திடு என அனுமனிடம் கூறிய சாம்பவான் அம்மருந்துள்ள
    கரிய மலைக்குச் செல்லும் வழியையும் அம்மருந்தின் அடையாளங்களையும் கூறினான் பெரிய உருவம் கொண்டு அனுமன் பறந்து சென்று மருந்திருக்கும் மலையையே அடியுடன் பெயர்த்துக் கரத்தில் தாங்கி வந்து போர்க்களம் அடைந்திட அம்மூலிகைக் காற்றால் உயிர்த்து எழுந்தனரே இலக்குவனும் மாண்டு வீழ்ந்து கிடந்த வானரப்படையினரும்.
    மிக்க மகிழ்ச்சியுற்ற இராமன் எதிரில் உயிருடன் நின்ற இலக்குவனைத் தழுவி பின்னர் தக்க தருணத்தில் சஞ்ஜீவினி கொணர்ந்த அனுமனை நீடுழி வாழ்கவென வாழ்த்தினான்.
    மாண்ட வானரப்படை மீண்டும் உயிர் பெற்ற செய்தி ஒற்றர் மூலம் அறிந்து
    வெகுண்ட இராவணன் தனக்கு மிக்க நெருங்கியவரோடு ஆலோசனை நடத்தினான்
    நிகும்பலை எனுமிடத்தில் அரக்கர் துயர் தீர்க்க தான் நடத்தயுள்ள வேள்வியைப்பற்றியும் வானரக்கும்பலை அவ்வேள்வி முடியும்வரை அவ்விடம் வாரது தடுத்திட
    மாய சீதையை உருவாக்கி அனுமன் முன் அவளைக் கொன்று எதிரியை திசை திருப்பிட தீய திட்டம் ஒன்றை இந்திரசித்து விளக்கிக் கூறிட இராவணனும் மகிழ்வுடன் இசைந்தான்
    சூழ்ச்சியாக மாய சீதையை வெட்டி வீழ்த்த அதைக் கண்ட அனுமன் அதிர்ச்சியால்
    வீழ்ச்சி அடைந்திட அயோத்தியை நோக்கி அதை அழிக்கச் செல்வதுபோல் போக்கு காட்டிய மேகனாதன் நிகும்பலையை அடைந்து வேள்வி இயற்ற முற்பட சீதை வதை செய்யப்பட்ட சோக செய்தியை அனுமன் இராமனிடம் சென்று தெரிவிக்க யாவரும் நிலை குலைந்தனரே.
    வண்டு உருவம் கொண்டு விபீடணன் அசோகவனம் சென்று சீதையை உயிருடன் கண்டு மீண்டு வந்து இராமனிடம் யாவும் அரக்கரின் மாயையே என உண்மையை விண்டான் மேகனாதனை வென்றிட அவன் வேள்வியை அழிப்பது அவசியமென விபீடணன் கூறிட வேகமாய் சென்றனரே நிகும்பலையை நோக்கி இலக்குவன் அனுமன் மற்ற யாவரும்.
    இலக்குவன் அம்பு மழை பொழிந்து அரக்கர் படையை அழித்தபின் யாககுண்டத்தை இலக்காக்கி அதனையும் அழித்து மேகனாதனின் வேள்வியையும் நிறைவுறாது செய்தானே உள்ளம் நொந்த இந்திரசித்து அனுமனுடனும் பின் இலக்குவனுடனும் போர் புரியலானான் வெள்ளம்போல் பாய்ந்தனவே ஒருவர் மேல் ஒருவர் எய்த அம்புகளும் ஆயுதங்களும் இறுதியில் இலக்குவன் இந்திரசித்தின் கவசம் தேர்க்கொடி தேர் யாவற்றையும் வீழ்த்த குருதி சொரிய இந்திரசித்து மாயமாய் மறைந்து இலங்கை சென்றடைந்தானே.
    மீண்டும் போர்க்களம் செல்லத் தயாரான மேகனாதன் தான் உயிருடன்
    மீண்டு வாராது மாண்ட பிறகாவது சீதையை விட்டு விடுக என்று தந்தையிடம் கூறிவிட்டு தேரிலே ஏறி பெருமுழக்கத்துடன் போர்க்களம் அடைந்து இலக்குவனைத் தேடிய அவனும் எதிரே வந்த இலக்குவனும் ஒருவர் மேல் விண்ணதிர அம்பு மழைப் பொழிந்தனரே. கடுஞ்சமர் புரிந்தபின் இலக்குவன் இந்திரசித்தின் தேரை அழித்திட
    திடுமென வானத்தில் மறைந்த இந்திரசித்தை இலக்குவன் கண்டறிந்து தனது வில்லினின்று கொடிய அம்பொன்றை எய்து இந்திரசித்தின் இடது கரத்தை வெட்டிட வில்லைப் பிடித்தவாறே அக்கரம் வானிலிருந்து நிலத்தின் மீது வீழ்ந்ததுவே.
    காலனும் அஞ்சும் மற்றொரு அம்பை விடுத்து இந்திரசித்தின் தலையைக் கொய்திட
    சூலம் பிடித்த வலக்கையுடன் உடலும் வெட்டுண்ட தலையும் தரையில் வீழ்ந்தனவே. மேகனாதன் சிரத்தைத் தாங்கிச் சென்ற அங்கதன்
    இராமனது பாதங்களில் காணிக்கையாய் வைத்து வணங்கினானே.
    தலை பத்து கொண்ட இலங்கைத் தலைவனும் அவனது தலைவி மண்டோதரியும் தங்கள் தலைமகன் மேகனாதனின் தலையற்ற உடலைக் காணும் தலைவிதிக்கு உள்ளாயினரே. சோகத்தில் நொந்து பின் கோபத்தில் வெந்த இலங்கை வேந்தன் இராவணன்
    மேகனாதன் தலையைக் கொய்த பகைவர்களின் தலைகளைப் பறிப்பேனென சூளுரைத்தான் தன்னிரு மைந்தர்கள் அட்சயகுமாரனையும் மேகனாதனையும் பறிகொடுத்த மண்டோதரி தன்னுயிர் கணவன் சீதையெனும் அமுதால் செய்த நஞ்சால் மடிவானோ என மயங்கினாள்.
    எல்லாத் திசைகளிலும் பரவி நிறைந்திருந்த அரக்கர் படையினரை இராவணன் அழைத்திட எல்லை இல்லாக் கடல் போல் இலங்கை வந்து குவிந்தனரே அம்மூலப்படையினர்.
    மூலப்படையினரை இராம இலக்குவருடன் போரிட்டு அழித்திட அனுப்பிய இராவணன் வானரப்படையினருடன் போர் புரிந்து அவர்களை அழித்திடத் தானே களமிரங்கினான் வானரப்படைகளைக் காக்குமாறு இலக்குவன், அனுமன் மற்ற யாவர்க்கும் பணித்த இராமன் தானொருவனாய் வில்லேந்ததி அரக்கர் படையுடன் போர்புரிந்திட முன்னே வந்தான். இராமனின் வில்லிலிருந்து பெய்த அம்பு மழையில் அரக்கர் படை அல்லலுற்று அழிந்தது இராமன் பின்னர் இராவணன் இலக்குவனுடன் போரிடும் இடத்தை சென்றடைந்தான் வாயுமகன் தோள் மீதமர்ந்து சமர் புரியும் இலக்குவன் விபீடணன் அளித்த யோசனைப்படி
    தசமுகன் எய்த கணைகளையெல்லாம் உரிய மாற்றுக்கணைகளால் முறியடித்தான் எதிரிக்கு துணையாயிருந்து குறிப்புகளைக் கூறிக்கொண்டிருக்கும் விபீடணனைக் கண்டு குருதி கொதித்த இராவணன் மயன் கொடுத்த கொடிய வேலாயுதத்தை அவன் மேல் வீசிட சரணம் என வந்தடைந்த விபீடணனைக் காப்பது கடமையெனக் கருதிய இலக்குவன் மரணம் வந்தாலும் பொருட்படுத்தாது அவ்வேலை தன் மார்பில் ஏற்று கீழேசாய்ந்தானே.
    கடுஞ்சினம் கொண்ட விபீடணன் இராவணன் தேர்க்குதிரைகளை பாகனை வீழ்த்திட நெடுவானில் சென்ற இராவணன் தம்பி மேல் அம்புகள் எய்து இலங்கை சென்றடைந்தானே வீழ்ந்து கிடந்த இலக்குவனைக் கண்டு யாவரும் கலங்கி நிற்க சாம்பவான் சொற்படி
    விரைந்து சென்று சஞ்ஜீவனி கொணர்ந்து இலக்குவன் உயிர் காத்தானே வீர அனுமன். விழித்தெழுந்த இலக்குவன் விபீடணன் நலம் குறித்து கேட்டறிந்து மகிழ அவ்விடம் மகிழ்ந்து நின்ற இராமன் இலக்குவனையும் அனுமனையும் உளமாரத்தழுவி வாழ்த்தினான்.
    ஒற்றர் மூலம் அரக்கர் படை அழிவையும் இராம இலக்குவர் உயிருடன் இருக்கும் செய்தி பெற்ற இராவணன் துணுக்குற்று போர்க்கோலம் பூண்டு தேரேறி போர்க்களம் புகுந்தானே. முக்கண்ணன் இந்திரனிடம் அவன் தெய்வீகத்தேரை இராமனிடம் அனுப்பப் பணித்திட தக்கதருணத்தில் தேர்ப்பாகன் மாதலி தேரை இராமன் முன் கொணர்ந்து நிறுத்தினானே.
    இலங்கை வேந்தன் இராவணனுடன் வந்த மிகப் பெரிய அரக்கர் படையை இராமன் தன்கையில் ஏந்திய வில்லினின்று பொழிந்த கணைகளால் அழித்து ஒழித்தானே! விரைவாய் இராமனை நோக்கி தேரினைச் செலுத்த பாகனை இராவணன் பணித்திட நேராய் இராமன் முன் தேரைக் கொண்டு நிறுத்தினானே இராவணன் பாகனும்.
    நேருக்கு நேர் இராமனும் இராவணனும் தம் இணையற்ற வில்களை ஏந்தி
    போருக்குத் தயாராய் தத்தம் தேர்களில் எதிர் கொண்டு நின்றனரே!
    இராவணன் எய்த அம்புகளையும் வீசிய ஆயுதங்களையும், படைக்கலங்களையும் இராமன் தன் வில்லினின்று பொழிந்த அம்பு மழையால் செயலிழக்கச் செய்தானே. விண்ணில் திடுமென இராவணன் தன் தேருடன் எழுந்து வானரப் படைகளை அழிப்பதைக் கண்ணுற்ற இராமன் தனது தேரையும் வானில் செலுத்த பாகன் மாதலிக்கு கூறினான். வான் வெளியில் இருவரும் தத்தம் தேர்களில் சுற்றிச் சுற்றி கடுஞ்சமர் புரிந்தட
    காணக் குழுமிய தேவர்கள் யாவரும் ஒன்றும் செய்வதறியாது திகைத்து நின்றனரே! இலங்கை வேந்தன் தேர்க் கொடியை இராமன் அம்பெய்து வீழ்த்திய பின்னர் அவன் வீசிய
    கலங்க வைக்கும் அத்திரங்களையும் ஆயுதங்களையும் தக்க எதிர் படைகளால் அழித்தான். தானெய்த கணைகள் கொய்த இராவணன் சிரங்களும் கரங்களும் மீண்டுமீண்டு முளைத்திட பெய்ததே அம்பு மழை இராமன் வில்லிலிருந்து சிதறி வீழ்ந்தனவே இராவணன்
    தலைகள்! பின் இராமன் இராவணன் மேனி முழுதும் வில்லம்புகளால் மூடச்செய்தான்
    தன் நிலை குலைந்த இராவணன் தளர்வடைந்து செயலற்று மூர்ச்சித்து விழுந்தான் . சற்று நேரத்தில் தெளிவுற்ற இராவணன் மீண்டும் சமர் புரிய முயற்சித்திட
    இற்று இரு துண்டாய் அவன் வில் நிலத்தில் விழும்படியாய் இராமன் வீழ்த்தினான். நான்முகனின் கொடிய அம்பு ஒன்றை இராமன் இறுதியில் எய்திட நான்கு முகங்களுடன் தசமுகனின் மார்பில் அது பாய்ந்து உடலக் குடைந்து உயிரைக் குடித்து வெளிப்பட்டதே! தேரிலிருந்து இராவணன் உடல் சினம் மிக்க முகம் தரையில் பட வீழ்ந்ததுவே!
    தன் தேரிலே இராமனும் பூமியிலிறங்கிப் பின்னர் தேரை வானுலகிற்கு அனுப்பினான்.
    முறைப்படி இறுதிக்கடன்களை அண்ணனுக்கு செய்திடு என விபீடணனிடம் இராமன் கூறிட முறையிலா காமத்தால் தன் முடிவைத்தேடிக்கொண்ட அண்ணனை எண்ணி அழுதான். மண்டோதரி கணவன் இராவணன் மரணச் செய்தி அறிந்து போர்க்களம் அடைந்து
    மாண்டு கிடந்த அவன் உடலைக் கண்டு அதன் மீது வீழ்ந்து கதறிக் கதறி அழுதாள். எள்ளிருக்கவும் இடமின்றி உடல் முழுதும் அம்புகள் உயிரைத்தேடி துளைத்தனவோ உடலுள்ளிருக்குமோ சீதைமேல் வைத்த காதலென அதைத் தேடினவோ என்றெல்லாம் தலைசிறந்த கற்பரசிகளில் ஒருவளாய் போற்றப்படும் மண்டோதரி அரற்றி அழுது தலைவன் இராவணின் மார்பைத் தன் தளிர்க் கரங்களால் தழுவி உயிர் துறந்தாளே! அண்ணன் இராவணனுக்கும் அவன் மனைவி மண்டோதரிக்கும் மற்றும்
    எண்ணற்ற மாண்ட அரக்கர்களுக்கும் விபீடணன் ஈமக்கடன்களை செய்து முடித்தானே!
    விபீடணனுக்கு இலங்கை வேந்தனாய் இராமன் பணித்தபடி இலக்குவன் முடிசூட்டினானே. விபீடணனை இராமன் சீதையை சீருடன் அழைத்து வருக என அனுப்பினானே.
    அலங்கரித்த சீதையை இராமன் கட்டளைப்படி விபீடணனும் அழைத்து வந்திட
    படம் விரித்த பாம்பென இராமன் திடீரென சினம் கொண்டு சீதையை நோக்கி சற்றும் எதிர்பாரா வண்ணம் அவள் கற்பு மேல் ஐயம் எழுப்பி கடும் சொற்களை வீசிட முற்றும் நிலை குலைந்த சீதை இலக்குவனை தீ வளர்த்திடச் செய்து அதை வலம்வந்து சொல்லாலோ மனத்தாலோ செயலாலோ களங்கமுற்றிருந்தால் எரித்தெடென தயக்கமே இல்லாமல் தீயினுள் புகுந்தாளே அவள் கற்புக்கனலின் வெப்பம் சுட்டெரிப்பதை
    தாங்க இயலாத அக்னித்தேவன் பெருத்த ஒலியுடன் சீதையைத் தன் கரங்களில்
    தாங்கிய வண்ணம் மேலுழுந்து வந்து சீதையை இராமனிடம் தந்தானே.
    சிவனும் பிரமனும் அங்கு வந்து இராமனே திருமால் சீதை இலக்குமி என உணர்த்தினரே. தசரதனும் வானுலகத்திருந்து வந்து உளமகிழ்ந்து வேண்டும் வரம் கேட்க இராமனிடம் கூற கொடியவளென கைவிட்ட கைகேயியையும் அவள் மகன் பரதனையும் மீண்டும் ஏற்று அடியவனெனக்கு வரம் தரவென இராமன் வேண்ட தசரதனும் அளித்து வானுலகமேகினான்
    விரைந்து சென்று பரதனை அடைந்திட ஊர்தி ஏதேனுமுளதா என இராமன் வினவிட மறைந்த இராவணன் குபேரனிடமிருந்து கவர்ந்த புட்பக விமானத்தை விபீடணன் அளித்திட வானரர் அரக்கர் அவர்கள் தலைவர்கள் யாவரும் மனித ரூபத்தில் விமானத்தில் அமர்ந்திட இராமன் இலக்குவன் சீதை மூவரும் அமர்ந்தபின் விமானம் விண்ணில் எழுந்ததுவே. செல்லும் வழியெலாம் இராமன் சீதைக்கு இலங்கை நகர், போர்க்களம் சேதுப்பாலம் என எல்லா இடங்களையும் காட்டிக்கொண்டே செல்ல கிட்கிந்தையில் விமானத்தையிறக்கி வானரப் பெண்களையும் அழைத்து வந்து விமானத்தில் ஏற்றிட சீதை கூறிட
    வானரத் தலைவன் அவ்வாறே செய்து முடித்திட விமானம் தன் பயணம் தொடர்ந்ததே. மாமுனிவன் பரத்துவாசன் ஆசிரமத்தின் அருகிலிருந்த இடத்தில் விமானத்தை இறக்கி அம்முனிவன் விருந்தினராய் தங்கி அவர் ஆசி பெறவேண்டுமென இராமன் விழைந்தான். வேதங்களில் வல்ல பரத்துவாசன் அனைவரையும் மிக்க அன்புடன் உபசரித்திட அவன் பாதங்களில் இராமனும் யாவரும் வீழ்ந்து வணங்கி அவர் உளமார்ந்த ஆசியை பெற்றனரே. பரதனிடம் சென்று தான் வரும் செய்தியைக் தெரிவித்திடென அனுமனிடம் இராமன் கூறிட துரிதமாய் பறந்து வழியில் குகனிடமும் கூறிய பின் நந்திக்கிராமம் சென்றடைந்தானே.
    வனவாசம் முடிந்து வர வேண்டிய அன்னாளில் அதுவரை இராமனைக் காணாது மனக்கிலேசம் அடைந்த பரதன் சத்துருக்கனனை தீ வளர்க்கச் செய்து அதில்
    புகுந்து உயிர்விட ஆயத்தமானபோது தன் பேருருவத்துடன் விண்ணிலிருந்து குதித்து அங்கு வந்த அனுமன் இராமன் வரும் செய்தியை அறிவித்து தீயையும் அணைத்தானே. இராமன் அனுப்பிய அடையாள மோதிரத்தை அனுமன் பரதனுக்கு காட்டிட யாவரும் இராமனின் மோதிரத்தைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனரே. புட்பக விமானத்தில் இராமனும் யாவரும் அவ்விடம் அடைந்து நிலத்தில் இறங்கினரே. வசிட்ட முனிவர் பின்னர் கைகேயி, கோசலை, சுமித்திரை அன்னயரை இராமன் வணங்கினான் இரண்டு பாதுகைகளையும் பக்தியோடு பாத காணிக்கையையாய் அளித்து வணங்கிய பரதனை தன்னிரண்டு கரங்களாலும் தூக்கி நிறுத்தி இராமன் நெஞ்சாரத் தழுவி விழினீர் பெருக்கினானே! பின்பு இராமனும் அவன் தம்பிகளும் பழைய தோற்றங்களைக் களைந்து சரயு நதியில் நீராடி நன்கு அலங்கரித்த தோற்றத்தோடு தங்கத் தேரினில் அயோத்தி நகர் சென்றடைந்தனரே. வானரப் பெண்டிர் வானவர் பெண்கள் வடிவினராய் சுற்றி அமர்ந்து உடன் வர விமானத்தில் சென்று சீதையும் அயோத்தி அடைந்தாளே.
    இராமன் முடிசூட்டு விழாவிற்கு மறு நாளே நல்லனாளென நேரத்தையும் வசிட்டன் குறித்திட நான்முகன் ஆணைப்படி மயன் வியத்தகு மண்டபமொன்று கட்டி அமைத்தான் சுக்ரீவன் ஆணைப்படி ஏழுகடல் மற்றும் புண்ணிய நதிகளின் நீர்களை அனுமன் கொணர்ந்தான் தங்க பீடமொன்றில் இராமனும் சீதையும் திருமால் இலக்குமியென அமர்ந்து
    மங்கல ஒலிகளும் வாத்திய ஒலிகளும் வேத ஒலிகளும் முழங்க மங்கள நீர் முழுக்காடினரே.
    அனுமன் அரியணையைத் தாங்கிட அங்கதன் உடைவாளை ஏந்தி நின்றிட
    பரதன் வெண் கொற்றக்கொடை பிடித்திட இலக்குவ சத்துருக்கனர் வெண்சாமரம் வீசிட வேத விற்பன்னன் வசிட்டன் இராமனுக்கு முடிசூட்டினானே! அரக்க குரு சுக்கிரனும் தேவ குரு வியாழனும் இட்டமுறைப்படி இராமன் அரசு முடியைத் தலையில் சூடினானே இராமன் இளையவன் பரதனுக்கு இளவரசனாக முடிசூட்டி மகிழ்ந்தானே.
    அரியணையில் அரசி சீதையுடன் அமர்ந்த இராமன் வந்த விருந்தினர் யாவர்க்கும் உரிய முறையில் பரிசுகளித்து கௌரவித்து பேருவகையில் ஆழ்த்தினான் அண்ணல் இராமன் அனுமனை நெஞ்சாரத் தழுவுக என்று அருகில் அழைத்தான் அன்னை சீதை அழகிய முத்தாரமொன்றை அன்புடனும் ஆசியுடனும் அளித்தாள் தரங்கம்சூழ் இலங்கையின் புதிய வேந்தன் விபீடணனுக்கு தன் குலதனமான
    அரங்கனாதன் வழிபாடு விக்ரஹத்தை மனமுவந்து இராமன் அளித்தான் பின்னர் யாவர்க்கும் அவரவர் இடங்களுக்குத் திரும்பிட இராமன் விடை கொடுத்தனுப்பினான்

    அன்னவர் யாவரும் தத்தமிடங்களுக்கு மன நிறவுடனும் மகிழ்ச்சியுடனும் சென்றடைந்தனரே.
    மேல் உலகத்திருந்து இவ்வுலகம் வரை உள்ள ஈரேழு உலகத்தவரும் போற்ற இராமன் பால் போன்ற தூய உளம் கொண்ட தம்பியருடன் பல்லாயிரம் ஆண்டுகள் அரசாண்டானே!

    இராம கதை முற்றிற்று சுபம்

    பின்னவர் மூவரும் அன்புடன் சூழ்ந்திருக்க
    தன்னவள் சீதையொடு இராமன் வீற்றிருக்க
    அனுமன் இராமன் திருவடியில் அமர்ந்திருக்க
    என்றுமென் நெஞ்சில் நிறைந்த காட்சியாகுமே

     

    Share