தேமொழி

 

Trayvon and Ilavarasan

 

உலகின் இருவேறு மூலைகள், புவிக்கோளத்தின் வெவ்வேறு பக்கங்கள், இரு பகுதியிலும் இருக்கும் நாடுகளுக்கு இடையே உள்ள கால இடைவெளி சரியாக அரை நாள். ஒருநாட்டினர் உழைத்துக் கொண்டிருக்கும் பொழுது மற்றவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். கலாச்சாரத்திலும் பெரிய வேறுபாடு. ஆனால் இரு நாடுகளும் ஒன்றாக எதிர் கொண்டிருப்பதும், இரண்டாம் மில்லினியத்திலும், இந்த நூற்றாண்டிலும் இப்படியா என்று அதிர்ந்து போயிருப்பதற்கும் காரணம் … இரு இளைஞர்களின் அகால மரணம்.

இயற்கையின் சீற்றத்தினாலோ, போக்குவரத்து விபத்தினாலோ, அல்லது நோயின் காரணமாகவோ அவர்கள் வாழ்வு ஆரம்பமாவதற்குள் முடிந்திருந்தால்கூட ஒருவகையில் மனது சமாதானம் அடையும். ஆனால் அவர்கள் உயிரிழக்க நேர்ந்ததன் அடிப்படைக் காரணம், சமுதாயத்தில் இன்றும் நிலைத்து வாழும் வேற்றுமை என்னும் மனநோயால்  என்பது வேதனைக்குரிய செய்தி. மக்களிடம் பரவி இருக்கும் மூடத்தனமான வேறுபாடுகள் பற்றியக் கருத்துக்களின் காரணமாக; கருப்பு-வெளுப்பு வேறுபாடு, தாழ்வு-உயர்வு வேறுபாடு என்று இன்றும் நிலவும் கொடுமையின் தீவிரத்திற்கு பலியாகி உள்ளார்கள் இந்த இளைஞர்கள். இந்த இளைஞர்களில் ஒருவர் தமிழக மக்கள் தாழ்ந்த குலமாகக் கருதும் ஒரு குலத்தினைச் சார்ந்த இளவரசன். மற்றொரு இளைஞர் அமெரிக்காவின் தாழ்ந்த இனமாகக் கருதப்படும் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஃப்ளோரிடா மாநிலத்தில் வாழ்ந்த பள்ளிச் சிறுவன் ட்ரேவான் மார்ட்டின்(Trayvon Martin).

 

 

சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்

என்று பாரதி அறிவுறுத்திச் சென்று ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால் பெரும்பாலான மக்களின் அறிவை அது சென்றடைந்ததாகத் தெரியவில்லை. அதற்கு எடுத்துக்காட்டு, தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன்- திவ்யா இவர்களின் காதல் கலப்புத் திருமணம் பட்டபாடு. செல்லங்கொட்டாய் கிராமத்து திவ்யா உயர் குலமாகக் கருதப்படும் ஒரு குலத்தில் பிறந்தவர். இவர் காதலித்ததோ நத்தம் காலனியைச்சேர்ந்த இளவரசனை. இவரோ தாழ்ந்த குலமாகக் கருதப்படும் குலத்தில் உதித்தவர். இந்த வேறுபாடுகள் காதலித்த இருவருக்கும் ஒரு பொருட்டாகவே இருந்திருக்கவில்லை. எங்கும் இயல்பாக இருக்கும், பெற்றோரின் அறிவுரைக்கு உடன்படாத பிள்ளைகளின் செயல்களால் வருத்தமடையும் குடும்பங்களின் பிரச்சனையும், இரு குடும்பங்களுக்குள் இருந்திருக்க வேண்டிய சாதாரண மன வருத்தங்களும், உறவுப் பிரச்னைகளும் தேவையற்றவர்களின் ஊடுருவலால் பெரிதாகி இளவரசன் வசித்த நத்தம் காலனி எரிக்கப்பட்டிருக்கிறது. காதலர்களையும் ஊர் ஊராக ஓடவைத்து இறுதியில் நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறது.

இதற்கிடையில் பள்ளி நாட்களில் நண்பர்களாக இருந்த காதலர்களின் தந்தைகளுக்குள் பிரிவு ஏற்பட்டிருக்கிறது, இளவரசனுடன் சென்றுவிட்ட திவ்யாவின் செய்கையால் அதிர்ச்சியுற்ற அவளது தந்தை தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். பல உச்சக்கட்ட விறுவிறுப்பான நிகழ்ச்சிகளுக்குப் பிறகு தாயுடன் சேர்ந்த திவ்யா, நீதிமன்றத்தில் இளவரசனை விட்டுப் பிரிந்து வாழ முடிவெடுத்துவிட்டாதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து தற்கொலையா, கொலையா என்று கணிக்க முடியாத விதத்தில் இளவரசன் இறந்திருக்கிறார்.

இளவரசனின் மரணம் தற்கொலையா… கொலையாயோ… என்ற கேள்விகளையும் கடந்து, இளவரசன் மரணத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதின் அடிப்படையை ஆராய்ந்தால், திவ்யா – இளவரசனைப் பிரித்ததில் முக்கியப் பங்கு யாருக்கு என்னும் கேள்வியை எழுப்பினால், இதற்குக் காரணம் சாதிக்கொடுமை என்ற மனித நேயமற்ற செயல் என்பது தெரிய வருகிறது. இந்தக் காதல் கலப்பு மணத்தில் அரசியல் மூக்கை நுழைத்து, திவ்யாவின் வாழ்க்கையைப் பாழாக்கி, இளவரசனின் உயிரைப் பறித்திருக்கிறது. பத்தொன்பது வயது இளைஞர் இளவரசனின் தேவையற்ற உயிரிழப்பிற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் சாதி வேற்றுமை பாராட்டி ஆரம்பத்தில் இருந்தே இளவரசன்-திவ்யா காதலைக் குலைத்தவர்கள்.

 

அடுத்து அமெரிக்காவின் கதை; சென்ற ஆண்டு (2012) பெப்ரவரி மாதம், இரவு நேரம் வீட்டிற்கு அருகில் உள்ள தெருமுனையில் இருந்த கடையில் மிட்டாயும், குளிர்பானமும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புகிறான் ட்ரேவான். வசதியான மக்கள் வாழும் பகுதியில் அமைந்திருந்திருக்கிறது அச்சிறுவன் தங்கியிருந்த வீடு. இது போன்ற பகுதிகளில் குற்றங்கள், கொள்ளைகளைத் தவிர்க்க அப்பகுதி மக்களே கண்காணிப்பில் கவனம் செலுத்தும் அமைப்பும் உள்ளது. அந்த அமைப்பின் உறுப்பினரான ஜார்ஜ் சிம்மர்மேன் (George Zimmerman), வெள்ளைக்கார தந்தைக்கும் பெரு நாட்டினைப் பூர்வீகமாகக் கொண்ட தாய்க்கும் பிறந்த கலப்பின மனிதர். சிம்மர்மேன் ஊர்தியில் வரும் பொழுது, அவர் கண்களில் தானுண்டு தனது வேலையுண்டு என்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ட்ரேவான் பட்டுவிடுகிறான்.

கறுப்பர்கள் என்றாலே கயவர்கள் என்ற மனப்பான்மை இன்றும் பல அமெரிக்க மக்களின் மனதில் ஆழப் பதிந்திருக்கும் எண்ணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. கறுப்பர்களைத் தேவையில்லாமல் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும், அவர்களைத் தவிர்ப்பதும் பெரும்பான்மையோருக்கு வழக்கம். வசதியான கறுப்பர்கள் தங்களது விலை உயர்ந்த ஊர்தியில் சென்றால் காவலர்கள் அவர்களை நிறுத்தி, தேவையற்ற சந்தேகத்தின் பேரில் அவர்களது வண்டியின் உரிமத்தை சரிபார்த்து அது திருட்டு வண்டியா எனச் சோதனை செய்வதும், அவர்களை அடிக்கடி நிறுத்தி போதைப் பொருட்கள் வைத்திருக்கிறார்களா என்று வண்டியைச் சோதனை செய்வதும் மிகவும் கண்டனதிற்குள்ளானாலும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இவ்வாறு இனத்தின் அடையாளம் கொண்டு, மனதில் ஒருவரைப்பற்றி ஆதாரம் இன்றி முடிவெடுக்கும் மனப்பான்மை ட்ரேவான் வீடு திரும்பிக் கொண்டிருந்த அன்றும் தனது வேலையைக் காட்டத் துவங்கியது.

ட்ரேவானை ஒரு களவாணி என்று தானே முடிவு கட்டிய சிம்மர்மேன், காவல் துறைக்கு தொலை பேசியின் வழியாக ட்ரேவானைப் பற்றிய விவரம் கொடுத்திருக்கிறார். அவர் இது போன்று அடிக்கடி காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்பவரும் கூட. காவலர்கள் சிறுவனைத் தொடராதீர்கள் என்று பதிலுக்கு எச்சரித்தும் அதைப் பொருட்படுத்தாது சிம்மர்மேன் சிறுவனைத் தொடர்ந்து சென்று கேள்விகள் கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கும் நிலைக்கு சென்றுவிட்டது. இதன்முடிவாக ட்ரேவான் சிம்மர்மேனால் சுடப்பட்டு உயிரிழந்தான். சிம்மர்மேன் காவலரைக் கூப்பிட்டு நிலைமையை விளக்கினார். பலமணி நேர விசாரணைக்குப் பின், இருவருக்கும் ஏற்பட்ட தாக்குதலில், ட்ரேவான் சிம்மர்மேனின் தலையைத் தரையில் மோதி மோதித் தாக்கியதால், வேறு வழியின்றி தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தற்காப்பிற்காக சிம்மர்மேன் ட்ரேவானை சுட்டுக் கொல்ல நேர்ந்ததாக வாக்குமூலம் பதிவு செய்தார்கள் காவலர்கள். சிம்மர்மேனின் தலைக்காயங்களைக் குறித்துக் கொண்டு அவற்றிற்கு சிகிச்சை அளித்து, அவர் மேல் குற்றம் இல்லை, இது திட்டமிடப்படாத தற்காப்பிற்காக எடுத்த நடவடிக்கையில் ஏற்பட்ட உயிரிழப்பு என அறிக்கை தயார் செய்து கொண்டு அவரை விடுதலை செய்து விட்டனர்.

இவ்வாறு காவலர்கள் ஒரு சிறுவனின் உயிர்ழப்பிற்குக் காரணமான ஒருவரை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தின் முன் கொண்டு சென்று நிறுத்தாமல் விடுதலை செய்தது கறுப்பின மக்களுக்கும், மனித நேயமுள்ளவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கோபமூட்ட அவர்கள் ட்ரேவானின் உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டுப் போராட்டம் நடத்தினார்கள். இதனால் திட்டமிடப்படாதக் கொலை, செகண்ட் டிகிரி மர்டர் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு சிம்மர்மேன் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். இந்த வழக்கு சென்ற மாதம் (ஜூன் 2013) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இந்த மாதம் (ஜூலை 2013) தீர்ப்பும் வழங்கப் பட்டது. சிம்மர்மேன் குற்றவாளி அல்ல எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானார்.

தீர்ப்பின் முடிவு கறுப்பின மக்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அமெரிக்க மக்கள் மத்தியில் இதைப் பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. பத்திரிக்கைகளும், ஆரய்ச்சி நிறுவனங்களும் மக்களின் கருத்துக் கணிப்பைச் சேகரித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. கருத்துக் கணிப்புக்களின்படி பெரும்பான்மையான கறுப்பின மக்களுக்கும், மகளிருக்கும், இளைய தலைமுறையைச் சார்ந்த வெள்ளையர்களுக்கும் தீர்ப்பின் முடிவு திருப்தி அளிக்கவில்லை என்று தெரிகிறது.

 

 

வழக்கின் முடிவைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உரை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்புகளின் உதவியின்றி, முன் தயாரிக்கப்பட்ட உரையினைப் படிக்கும் வழக்கம் போல் இல்லாமல், அதிபர் ஒபாமா உணர்ச்சிபூர்வமாக, மனம் திறந்து உரையாற்றினார். கறுப்பின மக்களுக்கு நேரும் அநீதிகளைப் பற்றியக் கவலை அவர் உரையில் தொனித்தது. ட்ரேவான் கொலையுண்டபொழுது முன்னர் கருத்து தெரிவித்திருந்த அதிபர் ஒபாமா எனக்கொரு மகன் இருந்திருந்தால் இதே வயதில் ட்ரேவான் போலத்தான் இருந்திருப்பான் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இப்பொழுது தன்னையே ட்ரேவான் இடத்தில் வைத்துப் பார்த்து, 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் இருந்ததை ட்ரேவானுடன் ஒப்பிடுகிறேன். ட்ரேவான் போலத்தான் நானும் இனவேறுபாடுகளால் பல வேதனை தரும் சமுதாயத்தின் நடவடிக்கைகளை எதிர்கொண்டேன். மனிதர்களின் புறத்தோற்றத்தை, தோலின் நிறத்தைக் கொண்டு ஒருவரை எடைபோடுவதைத் தவிர்த்து, அவர்களது குணத்தைக் கொண்டு மதிக்கும் நாள் வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

இக்கருத்தை முதலில் தெரிவிப்பவர் அதிபர் ஒபாமா மட்டுமல்ல. சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் கறுப்பின மக்களின் சம உரிமைக்காகப் போராடி, அந்தப் போராட்டத்தில் உயிரையும் விட்ட டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கும் சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தனது புகழ் பெற்ற உரையில் குறிப்பிட்டிருக்கிறார். “எனது கனவு” (“I Have a Dream” – a public speech delivered by American activist Martin Luther King, Jr. on August 28, 1963) என்ற உரையில், “எனக்கொரு கனவிருக்கிறது, எனது நான்கு குழந்தைகளும் வளரும் இந்த நாட்டில் ஒரு நாள் வரும், அந்நாளில் மக்கள் அவர்களது தோலின் நிறத்தினைக் கொண்டு மதிப்பிடப்படாமல் அவர்களது குணத்தின் அடிப்படையில் மதிக்கப் படுவார்கள்”, என்றார்.

ட்ரேவான்  வெள்ளை இனத்தைச் சார்ந்த ஒரு இளைஞனாக இருந்திருந்தால், முதற்கண் அவன் சந்தேகக் கண்ணோடு பின்தொடரவேப் பட்டிருக்க மாட்டான், தனது நிலையை உணர்த்த வாக்குவாதத்தில் இறங்க வேண்டியத் தேவையும் அவனுக்கு இருந்திருக்காது, அதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று வன்முறையின் இறுதியாக உயிரை இழந்திருக்கவும் நேர்ந்திருக்காது என்பதுதான் அதிர்ச்சி தரும் இந்த நிகழ்ச்சியின் அடிப்படை உண்மை.

எந்த நாடாக இருந்தாலும் பிரிவினை வேறுபாடுகள் தலையெடுத்தாடி உயிர்ப்பலி கேட்கிறது. மனிதர்கள் தன்னை ஒத்த மனிதர்களைத் தாழ்வாகக் கருதாது தன்னைப் போன்ற மனிதராகவே மதித்து நடத்தும் காலம் இந்த உலகில் என்றுதான் வருமோ என்ற ஏக்கமும் வருகிறது. மார்ட்டின் லூதர் கிங்கின் கனவு அரை நூற்றாண்டு கழிந்தும் நிறைவேறவில்லை என்பது வேதனைக்குரியது.

 

References:

Shooting of Trayvon Martin – http://en.wikipedia.org/wiki/Shooting_of_Trayvon_Martin

Polls Show Wide Racial Gap On Trayvon Martin Case, by ALANA LEVINSON, NPR News. July 22, 2013 – http://www.npr.org/blogs/itsallpolitics/2013/07/22/204595068/polls-show-wide-racial-gap-on-trayvon-martin-case

Pew Research Center poll: Big Racial Divide over Zimmerman Verdict, Whites Say Too Much Focus on Race, Blacks Disagree. July 22, 2013 – http://www.people-press.org/2013/07/22/big-racial-divide-over-zimmerman-verdict/

A Washington Post/ABC News poll: Vast Racial Gap on Trayvon Martin Case Marks a Challenging Conversation. July 22, 2013 – http://www.langerresearch.com/uploads/1150a1TheMartinZimmermanCase.pdf

Ilavarasan’s family seeks probe by independent agency, The Hindu. Jul 20, 2013 – http://www.thehindu.com/news/national/tamil-nadu/ilavarasans-family-seeks-probe-by-independent-agency/article4935296.ece

Dalit man’s death in Tamil Nadu: Ilavarasan’s parents seek CBI probe. NDTV. Jul 20, 2013 – http://www.ndtv.com/article/india/dalit-man-s-death-in-tamil-nadu-ilavarasan-s-parents-seek-cbi-probe-394744

Ilavarasan: ‘Killed’ by politics? NDTV. July 20, 2013 23 – http://www.ndtv.com/article/india/ilavarasan-killed-by-politics-394887

 

Videos:
Kelada Manida – http://www.youtube.com/watch?v=ScA2TJ-IUkU
I Have a Dream Speech – http://www.youtube.com/watch?v=smEqnnklfYs
President Obama Speaks on Trayvon Martin – http://www.youtube.com/watch?v=MHBdZWbncXI

Pictures Courtesy:
http://www.thehindu.com/multimedia/dynamic/01511/08_ilavarasan_1511753f.jpg
http://en.wikipedia.org/wiki/File:Trayvon_Martin_on_the_backseat_of_a_car.png

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “இன்னமும் நிறைவேறாத கனவு …

  1. நெஞ்சு பொறுக்குதில்லையே!

  2. மிகச் சரியாகத் தலைப்பிட்டிருக்கிறீர்கள். இளவரசனின் மரணம் உண்மையிலேயே உள்ளத்தை உலுக்கும், உருக்கும் ஒரு நிகழ்வு. என் சிறு வயதில், இதே போன்ற ஒரு நிகழ்வைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதில் சம்பந்தப்பட்ட இருவரும் மாண்டு போனார்கள். மிகக் கொடூரமான நிகழ்வு அது. ஆகவே, இளவரசன் மரணம் மிகவும் பாதித்தது. 
    முன்னேறிய நாடுகளிலும் நிறவெறி இன்னும் ஓயாதது கண்டு மனம் புழுங்கினேன்.

     
     

  3. தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, வேதனையில் பங்கேற்ற சச்சிதானந்தம் மற்றும் பார்வதி  ஆகியோருக்கு நன்றிகள்.

    அன்புடன் 
    ….. தேமொழி 

  4. தங்கள் கட்டுரை சுட்டும் சம்பவங்கள் இரண்டுமே நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்கின்றன தேமொழி.
    கறுப்பின மக்களின் முன்னேற்றத்திற்காகத் தன் இன்னுயிரை நீத்த மார்ட்டின் லூதர் கிங்கின் கனவும் நிறைவேறவில்லை.
    சமுதாய மறுமலர்ச்சிக்காகவும், சாதி வேறுபாடுகளை ஒழிப்பதற்காகவும் தன் வாழ்நாளெல்லாம் உழைத்த ஈரோட்டுச் சிங்கம் தந்தை பெரியாரின் கனவும் நிறைவேறவில்லை. நாடுகள் வேறானபோதிலும் வக்கிர எண்ணங்களும், மெலியோரை வலியோர் வருத்தும் கொடூரமும் பொதுவானதுதானோ??
    சிந்திக்க வைத்த சிறந்த கட்டுரையைத் தந்த தேமொழிக்குப் பாராட்டுக்கள்!

  5. உண்மைதான் தந்தை பெரியாரின் கனவும் நிறைவேறவில்லை. 
    உங்கள் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேகலா. 

    அன்புடன் 
    ….. தேமொழி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *