தி.சுபாஷிணி

பள்ளி கொண்டிருந்த அந்த புத்தர் சிலையைக் சென்ற வருடம் மைசூர் தசராவிற்கு சென்றபோது வாங்கி வந்தது. அதில் செரியால் ஓவியத்தின் அழகு படிந்து இருந்தது. முகத்தின் அமைதியில் அன்பான ஆக்கிரமிப்பு தெரிந்தது. குவிந்த உதடு உமிழ்ந்த சிரிப்பில் புத்தர் ஓவியத்தை நினைவூட்டியது. வந்தவுடன் அதை மிகவும் பத்திரமாக எடுத்து தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் வைத்தேன். அப்படி வைத்த சில நிமிடங்களில் அந்த அறையே சாந்தத்தின் அழகில் மிளிரத் தொடங்கி விட்டது. பக்கத்துவிட்டு சாரதாம்மா வந்திருந்தாங்க. அவங்களையும் அந்த புத்தர் சிலையைக் கவர்ந்தது. வந்ததும் என் மைசூர் பயணத்தைப் பற்றி விசாரித்தலும், உதடுகள்தான் என்னிடம் பேசிக் கொண்டிருந்தன. அவரது கண்கள் புத்தரின் அழகில் வயித்துப் போயிருந்தன.

சாரதாம்மா எனக்கு ஒரு வரப்பிரசாதம். நான் இம்முறை இந்தியா வந்தபோது, அதிர்ஷ்ட வசமாக அவர்கள் வீட்டின் பக்கத்து வீட்டில் போயிருந்தேன். நான் காலையில் எழுந்து , பால் வாங்கி வரும்போது அவர்கள் எனக்குப் பழக்கமானார்கள். தினந்தோறும் காலையில் அவர்கள் வீட்டிற்குச் சென்று காபி குடிப்பது வழக்கமாகிவிட்டது. நல்ல டிக்காஷன் காபி. சரியான விகிதத்தில் பாலும் டிக்காஷனும் கலந்து, அளவான சர்க்கரையும் போட்டு, கசப்பும் தெரிந்த களிப்பான கமகமக்கும் மணமாக காபியைத் தரும் போது, அவர்களது தோழமையின் பரிவின் வாசனை மேலோங்கித் தெரியும். தன் கணவரோடு, மகன், மருமகள், 2 வயது பேத்தி என அளவிற்கு சிறிய குடும்பம் அவர்களுடையது. அவரைப்போலவே அவரது மருமகளும் என்னிடம் மிகவும் பிரியமாய் இருப்பாள். காபியில்தான் தொடங்கியது எனக்கும் சாரதாம்மாவிற்கும் உள்ள நட்பு. பின் காலை உணவு என்று நீண்டது. விதவிதமான சிற்றுண்டி தயாரிப்பதில் வல்லவர் அவர். மாதம் ஒரு தொகை வாங்கிக் கொண்டால்தான் நான் இந்த உதவியைப் பெற்றுக் கொள்வேன் என்று நான் சொன்ன அழுத்தத்தில், அவர்களது குடும்பம் ஒத்துக் கொண்டது. இப்படித்தான் பல நாட்களில் நிச்சயமாக எனக்கு அங்குதான் விருந்து நான் வெளியில் சென்றாலும், வெளி ஊருக்குச் சென்றாலும் இந்தியால் எனக்காக கவலைப்படும் ஜீவன் சாரதாம்மா தான். பல சமயங்களில் வெய்யிலில் அலைந்து திரிந்து ‘அப்பாடா’ என அவரது வீட்டில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் என் வீடு செல்வேன். அப்பொழுதெல்லாம் அவர்களது பரிவு என்னை உருக்கி எடுத்துவிடும். சாரத்மாவின் பேத்தி படு சுட்டி. அவளுக்கு பாட்டுப் பாடுவேன் இரண்டு வயது ஆகிறது. . நேரம் கிடைக்கும் போதெல்லாம் அக்குழந்தையை என் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவேன். அதற்காக விளையாட்டு சாமான்கள் கொடுத்து, அவளுடன் விளையாடுவேன். அக்கம் பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொடுப்பேன். அப்போது அக்குழந்தை பக்கத்திலிருந்து அமைதியாய் அனைத்தையும் கவனிதர்துக் கொண்டிருப்பாள். சாரதம்மாவிற்கு அது பேருதவியாக இருக்கிறது என்பார். சாரதம்மா தன் மருமகளை சொந்த மகள் போல் பாதுகாப்பாள். அதில் அவ்வளவு அன்பும் அக்கரையும் தெரியும். மருமகளும் பண்பும் பணிவும் உடையவளாய்த் திகழ்ந்தாள். . ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறாள். வேலை நேரம் போக மாமியருக்கு உதவும் இயல்புடையது.

ஆனால் சாரதம்மாவோ, அவள் பள்ளியிலிருந்து எடுத்து வரும் வேலைக்குத், தன் பேத்தியால் பங்கம் வராது பாதுகாப்பு அளிப்பார். எனக்கு மட்டுமல்லாது என்னைத் தேடி வருபவர்களையும் உபசரிப்பதில் மகிழ்ச்சிக் கொள்வார். அவர்களை வரவேற்றல், என் தபால்களை பார்த்து பதில் அளித்தல், இவை , அனைத்திலும், உபசரிப்பு, உதவும் குணம் எல்லாமே இயல்பாக இருக்கும். எனக்கு நம் கோயில் அமைப்பு, அவற்றோடு கூடிய தெய்வ வழிப்பாடுகள், விழாக்கள், தெருக்கூத்து எல்லாம் மிகவும் பிடிக்கும். இவ்வாறெல்லாம் எங்கு நடக்கும் என்று தேடி பிடித்துப் பார்க்கப் போய்விடுவேன். சாரதாம்மாவிற்கு இது தெரியும் என்பதால், ஒரு முறை அவர்கள் சொந்த ஊரில் நடந்த பூக்குழித் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த ஊரில் அனைவரும் “சாரதம்மா சாரதாம்மா’ என அத்தனைப் பிரியமாகய் இருந்தார்கள். சாரதம்மாவும் தன் பிரியம் அனைத்தையும் அங்கேயே கொட்டிக் கவிழ்த்து, அவர்களை அபிஷேகம் பண்ணினார்.

நான் அமெரிக்கா திரும்பும் நாட்களைப் பற்றி எண்ண, மனமில்லைதான். எவ்வளவுதான் சுதந்திர தாகம் எடுத்து அலைந்து திரிந்தாலும், இயல்பாய் இருக்கும் பெண்மைத் தன் குடும்ப அக்கரையில் சுருண்டு படுத்து விடும். அங்கிருந்து மகளும் மகனும் அழைக்கத் தொடங்கி விட்டனர். சாரதம்மாவிற்கு, அவர்கள் குடும்பத்திற்கு அவ்வப்போது ஏதாவது பரிசும் உண்டு. அவர்கள் ஒன்றும் பணக்காரர்கள் இல்லை. அதற்காக சாப்பாட்டிற்குத் திண்டாடும் ரகமும் இல்லை. காஞ்சிபுரம் சென்றபோது அவருக்குப் பட்டுப்புடவை வாங்கி வந்து கொடுத்தேன். அவர்களது பேத்திக்குப் பட்டுப் பாவாடை நிச்சயம் கொடுத்திருப்பேன் என்பதை நீங்கள் நான் சொல்லாமலே அறிந்து கொள்வீர்கள் தானே! வீட்டில் உள்ள சில பொருட்கள் அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். தஞ்சாவூரில் ஒரு திருமணம் இருந்தால், மழைக்காலம் என்பதால் வீட்டு சாவியை அவர்களிடம் கொடுத்து விட்டுச் சென்றேன். மழைவந்தால் வீட்டை திறந்து பாருங்கள் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அவர்கள் மறுக்கும் பண்பு உடையவரல்லர். நானும் திருமணத்திற்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து திருச்சி, மதுரை என ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரத் தாமதமாகி விட்டது. வந்ததும் அவர்களிடமிருந்து காவியைப் பெற்றுக் கொண்டு விட்டிற்குச் சென்றேன்.

வீடு படுசுத்தமாக காணப்பட்டது. சாரதம்மாதான் அடிக்கடி வந்து கவனித்திருப்பார்கள் என நினைக்கிறேன். இரண்டு நாட்கள் ஊரிலிருந்து எடுத்து வந்த ஞாபகம் அப்படியே இருந்தது, அலுப்பில் ஓய்வெடுத்துமுக் கொண்டேன். பின் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கினேன. என் படுக்கையறையில் என்னுடைய அம்மா கொடுத்த இரண்டு பட்டுப் புடவைகள் அப்படியே போட்டுவிட்டுச் சென்றிருந்தேன். அதைக் காணவில்லை சரி, பீரோவில் இருக்கும் என்று விட்டுவிட்டேன். மூன்று நாட்களுக்குப்பின், சமைலயறையில் இருந்த சிலப் பாத்திரங்கள் கண்ணில் படவில்லை. மனதில் ஏதோ நெருடியது. பீரோவைத் திறந்து அந்தப்புடவைகளைத் தேடினேன். கண்ணுக்குப் புலப்படவில்லை. மனம் பதட்டப்பட்டு விட்டது. என்னையறியாது ஓர் அச்சம் வெளிப்பட்டது. உடலும் உள்ளமும் வியர்த்துக் கொட்டியது. புடவைகள் காணாமல் போயின என்பது உரைத்தது. எனக்கு எதுவும் சொல்லவோ, நினைக்கவோ தோன்றவில்லை. வீட்டுச்சாவி சாரதம்மாவிடம்தான் இருந்தது. அவர்களை நான் தான் வீட்டை அவ்வப்போது திறந்து கவனித்துக் கொள்ளச் சொன்னேன். ஆனால் இப்படியொரு நிகழ்வை ? நினைக்கவே கூசுகிறது. இது மனதில் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தது சாரதம்மாவிடம் கேட்கும் துணிவு என் உள்ளத்திற்கும் இல்லை. உரைக்க உதடுகளுக்கும் தைரியம் இல்லை.

சஞ்சய் சுப்பரமணியம் கச்சேரி என்றால் எனக்கு பைத்தியம். ஒருநா£ள் அவரது கச்சேரி காலையில் ஆஸ்திக் சமாஜத்தில் நடந்தது. ஒரு இசை இலக்கியக் கூட்டம். அதில் சஞ்சய் கலந்து கொண்டு “ஓர் ஆய்வு” நிகழச்சியை நடத்தினார். அவரது வாய்ப்பாட்டின் மயக்கதில் அமிழ்ந்து, அவரது இசை நுணிக்க அறிவையும், துய்த்துவிட்டு வீடு வந்து சேர முற்பகல் 11.30 ஆகிவிட்டது. வழக்கம்போல் சாரதம்மாவின் வீட்டிற்குப் போய் அமர்ந்தேன். இன்னும் சஞ்சய் சுப்ரமணியத்திடமிருந்து நான் விலகவில்லை. சாரதம்மா குழந்தையை குளிப்பாட்ட பாத்ருமிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். ஆதனால் அவரின் ஹாலில் என்ன அமரச் சொல்லிவிட்டுக் குழந்தையைப் குளிப்பாட்டி விட்டு வருகிறேன் என்றார். எனக்கும் கொஞ்சம் ஆசுவாசம் தேவைப்பட்டது.

அவர்கள் வீடு, எப்படி இருக்குமெனில், ஒரு குறுகிய வழி இருக்கும். முதலில் இரு அறைகள் உண்டு. ஒரு அறைதான் வசிக்கும் அறை. அதனுள் நுழைந்தால் அவர்கள் வீட்டுச் சமையலறை அடுத்து ஓர் அறை வாசல். நான் குளியலறைக்கு முதல் அறையில் இட்டு செல்லும் இடத்தில் நின்று விடுவேன். அதில் ஓரு பெரிய சோபா போட்டிருப்பார்கள். அங்கு உட்கார்ந்திருந்தால் அவர்களது சமயறையில் முழுப் பார்வையும் கிடைக்கும். எப்போது சோபாவின் நடுப்பகுதியில் உட்கார்வதால் சமையலறையின் இடதுபக்கம் பார்க்க முடியாது. இன்று வந்ததும் வராததுமாய் சோபா தொடங்கும் இடத்தில் அமர்ந்தேன். களைப்பும் இசை மயக்கம் இருந்ததால் முதலில் கண்மூடி, களைப்பின் …. மயக்கத்தின் கிறக்கத்தையும் அனுபவித்தேன். இப்படி ஒரு 5 நிமிடங்கள் சென்று இருக்கும். என் கண்கள் விழித்தன. முதலில் கண்டது அந்த வீட்டுச் சமையலறையின் இடது பக்கம். இதுவரை நான் அந்தப் பகுதியைக் கண்டதில்லை. அங்கு குளிச்சாதனப் பெட்டி ஒன்று இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு சிறிய பெஞ்ச் ஒன்று இருந்து. அதில் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பின் மிக்ஸி ஒன்று இருந்தது. அதனையொட்டி கிரைண்டரும் இருந்தது. பின் என் பார்வை மீண்டும் குளிர்சாதனப் பெட்டிகள் மேல் சென்றது. அவ்வளவுதான்! என்ன சொல்லேன்! என் இருதயம் துடிப்பை மறந்தது. மூச்சுத்திணறல் உண்டு பண்ணியது! அந்த குளிர்சாதனப் பெட்டியின் மேல் நான் மைசூரிலிருந்து வாங்கி வந்த அழகான அந்த செரியால் ஓவியம் வடிவத்திலமைந்த அந்த புத்தரின் பள்ளிக் கொண்ட சிலை புத்தர் எப்படி என் வீட்டிலிருந்து இங்கு வந்ததது! மனம் இதனால் செயல் இழந்தது.

சாரதம்மா! நீங்களா இப்படி என்னிடம் கேட்டிருக்கலாமே! இரத்தம் அழுத்தம் அதிகரித்தது…………. என்ன செய்யலாம்? அப்படியே விட்டுவிடுவோமா! இதை நான் பார்க்கவில்லை என்ற அந்த மனதை சமாதானமாய் கொல்லச் செய்வோமா! என்ன செய்யலாம்! இதற்காக சிவசிவா, இது நாளுக்குப் பின்னும் தொடரும் நட்பை முறியடிப்பதா? என் நடபு முக்கியம். அப்படியெனில் அந்தப்புடவைகள், பாத்திரங்கள்… சாரதம்மா! ஏனிப்படி! கலக்கமாகி நிற்கிறீர்கள். சிலை உங்களைக் கவாந்தது எனக்கு எப்படி தெரிந்தது! இந்த புத்தரின் பால் உள்ள ஆசை திரும்பி பார்க்கச் செய்ததா? அடடா! என் கண்முன் ஏன் வைத்தீர்கள்! வீட்டில் பீரோவில் வைத்திருக்கலாமே! என் வீட்டின் வெறுமையை உணராதே போயிருப்பேனே! இந்த நிமிஷம் வரை அது வீட்டில் இல்லை என்கிற உணர்வே இல்லாமல் இருந்தேனே! அப்படியே என்னை விட்டிருக்கலாமே சாரதாம்மா! சாரதாம்மா! உங்கள் அன்பையும் நட்பையும் ஒருக்காலும் இழக்கமாட்டேன். அது என்னுடனே இருக்க வேண்டும். ஆனாலும் நீங்கள் செய்த இந்த காரியம் சரியில்லையே சாரதம்மா! அறிவு அச்சுறுத்தியது சாரதம்மா குழந்தையைக் குளிப்பாட்டி விட்டு சில நிமிடங்கள் வந்த விடுவார்கள். தயவு செய்து ஏதாவது செய்து அகற்று உடனே என்றது அறிவு.

சட்டென்று எழுந்தேன்! வேகமாக உள்ளே நுழைந்தேன். பட்டென்று பற்றினேன் புத்தரை. என் பையில் போட்டுக்கொண்டு நான் அமர்ந்த இடத்திற்கு வந்து மீண்டும் அமர்ந்து விட்டேன். இதயம் படபடத்தது. ஏதோ பெரிய காரியம் முடித்தது போல் அமைதியாய் இருக்க முயன்றேன். நிமிடங்கள் கரைய கரைய நானும் இயல்பாகி விட்டேன். என்னை சரியாக்கி இயல்பாக்கி கொள்வதற்குகுள் சாரதம்மா வந்து விட்டார்கள். கமகமக்கும் குழந்தை சோப்பின் மனத்தோடு குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு எனக்கு காபி கொடுத்தார்கள். நானும் குழந்தையைக் கொஞ்சியவாறே காபியை கொடுத்துவிட்டு சாரதம்மாவிடம் விடைப்பெற்று கொண்டு என் வீட்டிற்கு கிளம்பினேன்.
நான் மதிக்கும் நட்பை, புத்தர் இருந்த இடத்தில் வைத்துவிட்டு, புத்தர் இருந்த பையை மறக்காது என்னுடன் எடுத்துக் கொண்டு அடுத்த வீடாகிய என் வீட்டினுள் நுழைந்தேன்.

 

படம் உதவி:  https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/521972_578076128869715_666810801_n.jpg

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.