பெருவை பார்த்தசாரதி
“பவித்ரம்” என்பதற்கு புனிதமான, சுத்தமான, உண்மையான என்கிற பல அர்த்தங்கள் உண்டு. சென்னையில் இயங்கி வரும் “பவித்ரம்” என்கிற தொண்டு நிறுவனமும் பல புனிதமான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு வருகிறது. இத்தொண்டு நிறுவனத்தின் தலைவராக திரு பேராசிரியர் கே.ஜி. ரகுநாதன் அவர்களும், பொதுச்செயலாளராக திரு ஆர். பாபுசேனன் அவர்களும், பொருளாளராக திருமதி ஜாய்ஸ் திலகம் அவர்களும், தங்களை முழுவதும் சமூக சேவையில் ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்து 10 ஆண்டுகளாக இந்நிறுவனத்தை மிகச் சிறப்பாக வழி நடத்திக்கொண்டு வருகிறார்கள். சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்களின் நலனில் அக்கரை கொண்ட நிறுவனம் என்பது பவித்ரத்தின் மற்றொரு சிறப்பு.
பத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வரவேண்டும் என்கிற கொள்கையின் அடிப்படையில், முதல் நிகழ்ச்சியாக, மூன்று தமிழ் மாவட்டங்களில் “விவசாயிகளின் இன்றய நிலை” குறித்த கருத்தரங்கம் ஒன்றை நடத்திச் சிறப்பித்தது. ஞாயிறு காலை, மைலாப்பூரில் அமைந்திருக்கும் கோகலே ஹாலில், இரண்டாவது நிகழ்ச்சியாக சிறந்த புத்தகங்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. தத்துவம், ஆன்மீகம், அறிவியல், சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்புக்கான நூல்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி படைப்பாளிகளை கெளரவித்தார்கள்.
“ராமமூர்த்தி அறக்கட்டளை” சார்பில் சிறந்த புத்தகங்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்கள். இந்நிறுவனத்தின் அறக்காப்பாளராக திரு ஹரிஹரசுப்ரமணியம் அவர்கள் பதவி வகிக்கிறார். அவருடைய நண்பரின் நினைவாக, விருப்பமாக நண்பர் சேர்த்து வைத்துள்ள பணத்தை நல்ல முறையில் மிகச்சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்கிற மேலான எண்ணத்தில் தத்துவம், ஆன்மீகம் மற்றும் அற்வியல் நூல்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
அடுத்து எழுத்தாளர், மொழிபெயர்பாளர் ‘காசிஸ்ரீஸ்ரீ” அவர்கள் குடும்பத்தினரின் சார்பாக சிறந்த மொழிமாற்ற நூல்களுக்கும், குறுநாவல்களுக்கும் பரிசுகளை வழங்கினார்கள்.
அறிவியல் நோக்கில் வேதங்களை ஆய்வு செய்து, ஆக்கப் பூர்வமான அறிவியல் சிந்தனைக் களத்தின் துவக்கம் பாரதம் என்கிற நோக்கில் “வேதம் கண்ட விஞ்ஞானம்” என்கிற நூலை எழுதிய திரு பி. முத்துக்குமாரசுவாமி, திரு ஜே. வீரநாதன் எழுதிய “எம்எஸ் ஆபீஸ்”, திரு ஆர் சிவராமன் எழுதிய “எண்ணங்களின் எண்ணங்கள்”, திரு ரகுவீர பட்டாச்சார்யர் அவர்கள் எழுதிய “பாதுகா சகஸ்ரம்” என்கிற நூல், காம்கேர் புவனேஸ்வரி அவர்கள் எழுதிய “கம்ப்யூட்டரில் தமிழ்” என்கிற நூல், மிகச்சிறப்பாக மொழி பெயர்ப்பு நூல்களை எழுதிவரும் திரு சாருகேசி அவர்களுக்கு ‘மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்’ என்கிற பட்டமும், சிறந்த குறுநாவலுக்கான பரிசாக “கருவேலங்காட்டுக் கதை” என்ற குறுநாவலை எழுதிய சினிமா இயக்குனர் திரு ராஜா செல்லப்பா, இவர்கள் அனைவருக்கும் பவித்ரம் சார்பாக பரிசும், சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப் பட்டனர். அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம்பிடித்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவிலே, முக்கியமாக குறிப்பிட வேண்டியது, புத்தகங்களுக்கு மட்டுமல்லாமல், இணையதளத்திலே இடம்பெறுகின்ற சிறப்பான கட்டுரைகளையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு அதற்கும் பவித்ரம் சார்பாக சான்றிதழும், பரிசும் வழங்கியது. வல்லமை மின் இதழில் வெளியான ‘நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” என்ற என்னுடைய தொடர்கட்டுரைக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது, வல்லமைக்கு மேலும் ஒரு சிறப்பு என்பதை மிகப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பவித்ரம் தொண்டு நிறுவனம் நடத்திய பரிசளிப்பு விழாவை மிகச்சிறப்பாக வழிநடத்தியவர்கள்:: திரு கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் (கலைமகள் ஆசிரியர்), திரு முத்துக்குமார் (டிரினிட்டி – ஆசிரியர்), திரு எஸ்.எஸ். ராஜ்குமார் (புரவலர் – பவித்ரம்), திரு டான்ஸ்ரீ குமரன் (முன்னாள் மலேசிய மந்திரி), திருமதி ஜாய்ஸ் திலகம் (மருத்துவ அதிகாரி – தமிழ்நாடு மெடிக்கல் மன்றம், மற்றும் சென்னை மாநகராட்சி, திரு ஹரிஹரசுப்ரமணியம் (டிரஸ்டி – ராமமூர்த்தி அறக்கட்டளை, துணைத் தலைவர்-இண்டியா சிமெண்ட்ஸ்)




Leave a Reply