எஸ். கோபாலன்

gopal0001-206x300

சரஸ்வதி துதி

ஆக்கும் ஆண்டவன் அயனின் தேவி கலைமகளருள் நோக்கும் ஆசியும் உண்டாகில் அறியாமை எனும்
இருள் அகலும் அறிவொளி வீசும்- அன்னவள்
அருள் வேண்டி வணங்கி இராமகதை எழுதலுற்றேன்

பால காண்டம்

ஆதவ குல அரசன் தசரதன் செய்த
மாதவப் பயனாய் அழகிய அயோத்தி நாட்டில்
அன்னை கோசலைக்கு அருமை மைந்தனாய் அவதரித்து
தன்னையே தரணிக்கு இராமனாய் அளித்தான் நாரணன்
மூன்று இளவல்களாம் இலக்குவன் பரதன், சத்துருக்கனனை
ஈன்று அளித்தனர் அன்னையர் கைகேயியும் சுமத்திரையும்
உரிய காலத்தில் வசிட்டரை தங்கள் குருவாய்க் கொண்டு
தெரிய வேண்டிய கலைகள் அனைத்தும் கற்றனரே அரசகுமாரர்
வேள்வி காக்க வருக என மாமுனி விசுவாமித்திரன் அழைத்திட
கேள்வி கேட்காது அவருடன் சென்றனர் இராம இலக்குவர்
வில்லை நாணேற்றி அம்பெய்து வல்லரக்கி தாடகையை வதம் செய்து
தொல்லை தர வந்த மற்ற அரக்கரையும் அழித்தொழித்தனர் அரசகுமாரர்
முறையுடன் மறை விதிப்படி வேள்வி செய்து முடித்திட்ட மன
நிறைவுடன் மாமுனி இராம இலக்குவரோடு மிதிலைக்குப் செல்லலானார்
செல்லும் வழியில் கல்லாகிக் கிடந்த அகலிகையின் கதையை மாமுனிவன்
சொல்லக் கேட்டு கல்லைக் காலால் தொட்டு காரிகைக்கு நல்லுயிர் அளித்தான் இராமன்
வில்லைக் கொண்டு தாடகையின் உயிர் அழித்த அன்னாளில் உன் கைவண்ணம் கண்டேன் கல்லைத் தீண்டி அகலிகைக்கு உயிர் அளித்த இன்னாளில் உன்கால்வண்ணம்கண்டேனென அளாவிலா மகிழ்ச்சி கொண்ட மாமுனிவன் இராம, இலக்குவரோடு
இணையிலா அழகும் வளமும் மிக்க மிதிலை நகர் அடைந்தாரே.
ஓவியப் பாவையாய் மாடத்தில் நின்ற மைதிலியின் மைவிழிகளும்
காவிய நாயகன் இராமன் மாடத்தின் முன் நின்று நோக்கிய விழிகளும்
ஒன்றில் மேல் ஒன்று ஒன்றின மற்றவரின் உள்ளத்தை ஊடுருவின வென்றன ஒருவருக்காக மற்றவரை நின்றன இமைகள் சற்றும் அசையாமல்
தனது தவப்புதல்வி மைதிலியை மணம் புரிந்திட வேண்டுமென விழைபவர்
சிவனது வில்லை வளைத்திட வேண்டுமென்பது மன்னன் சனகனது நிபந்தனை.
மற்ற கொற்றவரெலாம் வில்லை அசைக்கவொணாது
முற்றும் தோற்றிட பாசமிகு அன்னை கோசலை
பெற்ற மைந்தன் இராமன் முனிவரை வணங்கி
வெற்றி பெற்றிட அவர்தம் ஆசி பெற்று
ஏறு நடையுடன் கம்பீரமாய் எழுந்து சென்று
மேரு மலையோ என வியக்கும் வண்ணம் அங்கிருந்த
முக்கண்ணன் வில்லை எடுத்து, நிறுத்தி, தொடுத்திட்ட
அக்கணமே இற்று விழுந்ததே! இன்ப அலை எழுந்ததே!
நிலமகள் அருளிய திருமகள் மைதிலியின் கரதலம்
நலமுடன் பற்றி யாவரும் வாழ்த்திட இராமனும் மணமுடித்தானே!
மற்ற மூன்று தம்பியர் மூவர்க்கும் மிதிலை அரசகுமாரிகள் மூவரை
உற்ற துணைவியராய் ஏற்று மணம் செய்வித்த தந்தை தசரதன்
சுற்றம் படை புடை சூழ அயோத்தி நோக்கி செல்லுங்கால்
சீற்றம் கொண்டு சீறி வந்த பரசுராமனை எதிர்கொண்டான்
“முன்னேயே சற்று முறிந்திருந்த சிவதனுசை ஒடித்தது
என்னேதான் வீரம் இராமா” என ஏளனம் செய்த பரசுராமன்
என்பால் உள்ள திருமால் வில்லை வாங்கி வளைத்திடென
திருமால் திருஅவதாரமாம் இராமனிடமே செருக்குடன் செப்பிட
இலகுவாய் அவ்வில்லை வாங்கி வளைத்து நாணேற்றிய இராமன்
இலக்கு இதற்கு எதுவென வினவ எல்லாமுணர்ந்த பரசுராமன்
தான் செய்த தவப்பேறு முழுதும் இலக்காய் அளித்திட
நாண் இருந்து புறப்பட்ட அம்பு தவப்பயனை கவர்ந்து மீண்டிட
வில்லை வருணனக்கு அளித்த இராமனும் அவன் செயல் கண்டு
எல்லை இல்லா இன்பம் அடைந்த யாவரும் அயோத்தி அடைந்தனரே!

அயோத்தியா காண்டம்

தலை மகன் இராமனுக்கு முடிசூட்ட தசரதன் எடுத்த முடிவுக்கு
உலை வந்தது உருவமும் உள்ளமும் கோணிய கூனி உருவில்
நெஞ்சு நிறைய இராமனிடம் வாஞ்சை கொண்ட கைகேயி உள்ளத்தில்
நஞ்சைப் பாய்ச்சினாள் தந்திரக்காரியான கூனி மந்தரை
முன்னவன் இராமனுக்கு அரசு கொடாது ஈரேழாண்டு அடவிக்கு அனுப்பிவிட்டு
தன்னவன் பரதனுக்கு அரசளித்து அரியணையில் அமர்த்திட வேண்டுமென கைகேயி
என்றோ கோரிய வரங்களை இன்றே தந்திடென இடியை இறக்கிட
நன்றோ இதுவென தசரதன் அதிர்ந்து உதிர்ந்து மயங்கி சாய்ந்தானே
பெற்ற அன்னை கோசலை கலங்கிட உற்றோர் யாவரும் மலங்கிட
மற்ற அன்னை கைகேயி மகிழ்ந்திட கூடியோர் அனைவரும் நெகிழ்ந்திட
மன்னவன் பதவியை சற்றும் பற்றிலாது துறந்து மரவுரி தரித்து
தன்னவள் சீதையுடனும் பின்னவன் இலக்குவனுடனும் காடேக தயாரானான்
தடுத்து நிறுத்தி இராமன் கானகம் செல்வதை தவிர்க்க மந்திரனும் மற்றவரும் முயன்றும் எடுத்த முடிவினின்றும் கொடுத்த வாக்கினின்றும் பிறழ விழையா இராமன்
அன்னையர் மூவர் தவிர அயோத்தி உறைவோர் யாவரும்
தன்னைப் பின் தொடர கானகம் நோக்கி செல்லலானான்..
வழியில் சோலை ஒன்றில் இளைப்பாறி உடன் வந்தோர் யாவரும்
விழிகள் அயர்ந்த வேளையில் நள்ளிரவில் மூவரும் கானகத்துள் சென்றனரே.
இனிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்துக்கொண்டே நடந்து
புனித கங்கை நதியின் வடகரை அடைந்து முனிவரின் தவச்சாலை சேர்ந்தனரே.
தந்தை சொல் மிக்கதோர் மந்திரமில்லையென மைந்தன் இராமன் கானகம் ஏகினான் சிந்தை குலைந்த தந்தை தசரதனோ புத்திரன் பிரிவு தாளாது வானகம் ஏகினான்
இடர் சூழ் கானகந்தன்னில் தன் இனத்தாரோடு இனிது வாழ்ந்த
வேடர் குலத்தலைவன் குகன் இராமனைக் காண வந்தான்
தூய உள்ளத்தொடு தேனையும் மீனையும் அளித்த குகனை
நேய உணர்வோடு உன்னோடு ஐவரானோமென தம்பியாய் இராமன் ஏற்றான் நாவாய் ஒன்று கொணர்ந்து எம்மைக் கங்கையின் அக்கரைக்கு அழைத்துப்
போவாய் என இராமன் கூறிட குகனும் அவ்வாறே செய்தான்.
பிரிந்து இராமன் செல்வதை எண்ணி வருந்திய குகனின் மனநிலை
அறிந்து அவனைத் தேற்றி அவன் சேவையைப் போற்றி மூவரும் விடைபெற்றனரே.

மாமுனிவன் பரத்துவாசன் மூவரையும் எதிர்கொண்டழைத்து அவர் ஆசிரமத்தில் தேன்கனிகள், காய்கள் அவர்களுக்கு அளித்து உபசரித்து உளம் மகிழ்ந்தார் தேவரும் தொழுதிடும் சித்திரகூடமலைக்குச் சென்று அங்கு தங்குக என்று முனிவர் கூறிட மூவரும் சித்திரக்கூடம் நோக்கி நடந்து யமுனை நதியை அடைந்தனரே.
இலக்குவன் மூங்கிலால் தெப்பமொன்றை அமைத்திட அதில் இராமன் சீதை அமர்ந்திட இலக்கை நோக்கி இளையவன் நீந்திக்கொண்டே தள்ளிட தென்கரை அடைந்தனரே. தன் சித்திரங்களின் கூடமாக இயற்கை அன்னை தேர்ந்தெடுத்து அமைத்துக்கொண்ட சித்திரகூடத்தை அடைந்து எழிலான காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தனரே. அந்தி நேரம் நெருங்கி வந்திட இலக்குவன் பர்ணசாலை அமைத்துத் தந்திட இராமன் மிக மகிழ்ந்து சீதையுடன் குடிபுகுந்தான்.
மிக்க மகிழ்வுடன் கேகேய நாட்டு மன்னன் அரண்மனையிலே, அயோத்தியில் உற்ற நிகழ்வுகளை சற்றும் அறியாது தங்கியிருந்த பரதன் விரைந்து அயோத்தி திரும்பிடுக என்ற தூதர் கொணர்ந்த செய்தியைப் பெற்ற நிறைந்த மனத்துடன் சத்துருக்கனனோடு அயோத்திக்கு புறப்பட்டானே. கோசல நாட்டை அடைந்த உடனேயே பரதன் கண்ணுற்ற அமங்கலக் காட்சிகள் அவனை மலங்கச் செய்தன.

களையிழந்து வெறிச்சோடிக் கிடந்த அயோத்தியை கடுகி அடைந்து
உளைந்த மனத்துடன் அரண்மனை புகுந்தானே.
நடந்த நிகழ்வுகள் யாதென அறிந்த பரதன் எல்லை
கடந்த கோபம் அன்னை கைகேயி மேல் கொண்டு
கடும் சொற்களை அவளிடம் பேசினான்; பேயே பாவியேயென ஏசினான்; சுடும் கனல் துண்டுகளாய் வார்த்தைகளை அவள் மீது வீசினான்
எந்தனை ஈன்று தீராப் பழிக்குள்ளாக்கிய உந்தனைக் கொன்றாலும் பாவமிலையென நிந்தனை செய்தான் வந்தனைக்குரிய தாயென இதுவரை கருதிய கைகேயியை. அவள் இழைத்த கொடுமையால் கானகம் சென்ற இராமனை தானே சென்று திரும்பி அழைத்து வந்திட கானகம் சென்றிட முடிவு செய்தான்
குலகுரு வசிட்டர், அன்னையர் மூவர், சுமந்திரன் ,படையினர், குடிமக்கள் என பலரும் உடன் வர பரதன் சத்துருக்கனனுடன் கானகம் நோக்கிச் சென்றானே.
பெரும் படையுடன் கங்கை வடகரை சேர்ந்த பரதன் அண்ணலுக்கு இடர்
தரும் நோக்குடனே வந்துளான் என்றெண்ணி சீறியெழுந்தான் குகன்
அண்ணனின் அருமை நண்பன் குகனென அறிந்து அவனைச் சென்று காணும் எண்ணத்துடன் அருகில் வந்த பரதனைக் கண்ட குகன் மனம் மாறியதே.
மரவுரி தரித்த மாசு படிந்த மெய்யும்
சிரமேல் குவித்த இரு கரங்களும்
பொலிவற்று நகையற்று விளங்கிய முகமும்
நலிவுற்று துயருற்று வாடிய தோற்றமும்
கொண்ட பரதனை தன் அருகில்
கண்ட குகனின் உள்ளம் உருகியதே
அண்ணலின் சாயல் ஒத்த இவனால் பிழையேதும் இழைக்க
எண்ணவும் இயலுமோ என உணர்ந்தான்.
தனக்குரிய அரசுரிமையை வனவாசம் முடியும் வரையே இராமன் துறந்தான்
தனக்கரிய என்றும் திரும்பப்பெற இயலாத அரச பதவியை பரதன் உதறினான் ஓராயிரம் இராமன் வரினும் ஒப்பிலா தியாகம் செய்துள்ள பரதனுக்கு நேராவாரோ என வியந்தான் வேடர்குலத்தலைவன் குகன்
ஒருவரை ஒருவர் உளமாரத் தழுவினர் பரதனும் குகனும்
ஒருவர் பதம் மற்றவர் பணிந்து வணங்கினர் இருவரும்.
அக்கரை செல்ல உதவியை நாடிய பரதனையும் உடன் வந்தோரையும் மிக்க அக்கறையுடன் தன் நாவாய்களில் ஏற்றி பத்திரமாய் கொண்டு சேர்த்தான் குகன்.
சற்று தூரத்தில் திரளாய் வந்திடும் மக்களை
உற்று நோக்கியதில் பரதனையும் படையினரையும் பார்த்து
கொதித்து எழுந்தான் சீறும் அரவத்தின் உருவமான இலக்குவன்
துதித்துப் போற்ற வேண்டிய தமையனை காட்டிற்கு அனுப்பிவிட்டு
தொடர்ந்து இங்கும் வந்து அவருக்கும் அன்னை சீதைக்கும்
இடர் தந்திட எண்ணுவோரை அழித்துவிடுவேன் என
இடியாய் முழங்கினான் கண்களில் கோபம் மின்னிட
துடியாய்த் துடித்தான் வில்லில் நாணை ஏற்றிட.
தம்பி பரதன் என்னைத் திரும்பி அயோத்தி அழைத்துச் செல்லவே வந்திருப்பான்
நம்பிடு என்னையென ஆவேசமுற்ற இலக்குவனை ஆசுவாசப்படுத்தினான் இராமன்
உள்ளம் உருக்கும் பரதனின் கோலத்தை கண்ணுற்ற இலக்குவனின் கோப
வெள்ளம் தணிந்து விழிகளில் கண்ணீர் வெள்ளம் பெருகிற்றே.
தந்தையின் நலத்தை தம்பி பரதனிடம் வினவிய இராமன் அவர்
இறந்ததை அறிந்து இடிந்துபோய் மண்ணில் மயங்கி விழுந்தானே
சற்று நேரம் கழித்து கண் விழித்து தெளிவடைந்த இராமன்
முற்றும் கற்ற வசிட்டன் சொற்படி தந்தைக்கு நீர்க்கடன்களை செய்து முடித்தானே.
மீண்டும் அயோத்தி திரும்பி வந்திடென பரதன் வேண்டுகோளை மறுத்து
வேண்டும் தந்தையின் வாக்கை தவறாமல் காக்க என வலியுறுத்தி
வனவாசம் முடிந்து நான் திரும்பி வரும் வரை நீயே ஆட்சி செய்திடு
என பாசம் மிகு தம்பி பரதனுக்கு அன்புக் கட்டளையிட்டான் இராமன்.
உன் பாதம் தாங்கும் பேறு பெற்ற பாதுகைகளை என்னிடம் தருக
என் சிரம் மேல் தாங்கி அயோத்தி சென்று அரியணையில் வைத்து வழிபடுவேன் பாதுகைகளே உன் பிரதிநிதியாக அரசாளும் நான் அவற்றின்
பாதுகாவலனாக பணி புரிவேன் என்றான் பரமோத்தமன் பரதன்;
ஈரேழு ஆண்டுகள் வன வாசம் முடித்து திரும்பி அயோத்தி
வாராது ஒரு நாள் தாமதித்தாலும் தீக்குளிப்பேன் என சூளுரைத்தான்.
தலைமேல் பாதுகைகளைத் தாங்கிச் சென்று நந்தியெனும் சிற்றூரடைந்து தாமரை இலைமேல் தண்ணீர் போல பரதன் பற்றற்று வாழ பாதுகைகள் செங்கோலோச்சினவே.
இராமனிடம் யாவரும் விடைபெற்று சித்திரக்கூடத்திலிருந்து நீங்கியபின்
இராமனும் சீதை, இலக்குவனோடு தென் திசை நோக்கி புறப்பட்டானே.

ஆரண்ய காண்டம்

அத்திரி எனும் அருந்தவ முனிவனின் ஆசிரமம் அடைந்த மூவரையும்
பத்தினி அனுசூயையும் முனிவனும் உபசரித்து உளமகிழ்ந்தனரே- பின்னர்
தண்டகவனம் எனும் எழில் கொஞ்சும் வனத்தை மூவரும் அடைந்தபோது
கண்டனரே எதிரில் விராதன் எனும் பெயர் கொண்ட வல்லரக்கனை வீழ்த்தினரே விராதனை இராம இலக்குவர் நீண்ட போருக்குப்பின்னர்
வாழ்த்தினானே அவனும் சாபம் நீங்கி கந்தருவ உருவம் பெற்றபிறகு.
தண்டகவனத்தின் எழில்மிகு காட்சிகளைக் கண்டு மூவரும் செல்கையில் எதிர்கொண்டனரே அங்கு வாழும் முனிவர்களை- அரக்கர்கள் தந்திடும்

தொல்லைகளை அவர்கள் இராமனிடம் கூறி அவர்களைக் காத்திட வேண்டிட எல்லாயில்லா கருணை கொண்டு அவர்களுடன் பத்தாண்டுகள் வாழ்ந்தானே. அகத்தியனை சென்று காண்க என முனிவர்கள் உரைத்திட இராமனும் சீதை இலக்குவனோடு அவ்விடம் அகன்று தென்திசை சென்றானே.
கடல் போல் பரந்த ஞானம் உடையோனும், தேவர்க்காக பரந்த
கடல் முழுதும் ஒரு கையில் சேர்த்து விழுங்கி பின் உமிழ்ந்தவனும்,
தென் திசை உயர்ந்து வட திசை தாழ்ந்து ஒருக்கால் உலகம் தடுமாற
சமன் செய்ய தென் திசை வந்து ஈசனுக்கு சமமாய் அமர்ந்தவனும்,
வஞ்சம் நிறைந்த வாதாபி எனுமசுரனை சீரணித்தவனுமான அகத்தியன்
நெஞ்சம் மகிழ மூவரையும் வரவேற்று அன்புடன் உபசரித்தானே.
அரியிடம் முற்காலத்திலிருந்து தற்போது தன்னிடமிருக்கும் வில்லையும் விரிசடைக்கடவுள் திரிபுரமெரிக்க மேருவை வில்லாக்கி எய்த அம்பையும் எதிரிகளுக்கு எமனாகும் அழிவற்ற சக்தி பெற்ற கூரியவாள் ஒன்றையும் கதிரவகுலத் தோன்றல் இராமனுக்கு அகத்தியர் அன்புடனும் ஆசியுடன் அளித்தாரே.
பஞ்சவடி எனும் அழகிய இடத்திற்குச் சென்று வாழ்க என அகத்தியன் கூறிட
பஞ்சு அடிகள் கொண்ட சீதையோடும், இலக்குவனோடும் அங்கு சென்றானே.
அசைந்து அசைந்து அழகுடன் பாயும் கோதாவரிக் கரையில்
அமைந்த பஞ்சவடி எனும் எழில்மிகு சோலையை அடைந்து
இளையவன் இலக்குவன் அமைத்த அழகிய பர்ணசாலையில்
துணையவள் சீதையுடன் இராமனும் சேர்ந்து வாழ்ந்தனரே.
சூர்ப்பணகை எனும் பெயருடையாள் இலங்கை வேந்தன் இராவணன் இளையவள் பார்ப்பதற்கே அச்சம் ஏற்படுத்தும் பயங்கர தோற்றமுடைய அரக்கி அவள்
மூவரும் தங்கிய அச்சோலைக்கு வந்து அழகுமிகு இராமனைக்கண்டாள்
எவரும் மயங்கும் எழில் மங்கைஉருவம் கொண்டு இராமனிடம் வந்தாள்.
தகாத அவள் பேச்சுக்களையும் செயல்களையும் கண்டு மனம்
பொறாத இலக்குவன் அவள் செவிகளையும் மூக்கையும் கொய்து எறிந்தானே.
இரத்தம் சொரியும் முகத்துடன் அவள் வந்த தோற்றம் கண்டு
உன்மத்தம் கொண்ட அவள் சகோதர அரக்கர் கரன் தூடணன்,திரிசரன்
வான் வையகம் அதிர பெரும்படையுடன் சென்று இராமனுடன் போரிட
தான் ஒருவனாக வில்லொன்றே ஆயுதமாக அரக்கரையெல்லாம் அழித்தானே.
பின்னமுற்ற முகத்துடன் தன் காலடியில் விழுந்த சூர்ப்பணகையைக்
கண்ணுற்ற இராவணன் கடும் சினத்தால் கொதித்தெழுந்து இத்தகைய
பெரிய இடர் இழைத்தவர் யாரென சூர்ப்பனகையை வினவ
இரு மானிடர் இராம இலக்குவரின் செயல்களென விவரித்தபின்
சூழ்ச்சியாக சீதையின் ஒப்பிலா மேனி அழகை விளக்கமாய் கூறி
எழுச்சி பெறச் செய்தாளே இராவணனிடம் சீதையின் மேல் காம வெறியை.
காமம் தலைக்கேறிய தசமுகன் சீதையைக் கவர்ந்திடும் வெறி உந்த
மாமன் மாரீசனை மிரட்டி மாய மானாக மைதிலியிடம் அனுப்பிட
மானைக் கண்டு மயங்கிய சீதை தனக்கு அந்த மான் வேண்டும் என
இராமனை வேண்டிட இலக்குவன் தடுத்தும் இராமன் மான் பின் சென்றிட
வெகு தூரம் வனத்துள் சென்று விரைவாய் அங்குமிங்கும் துள்ளி ஓடி
நெடு நேரம் பிடிபடாத மானின் மாயை உணர்ந்த இராமன் வில்லையெடுத்து
மானை நோக்கி எய்த அம்பு தாக்கிட மாரீசன் தன் சுய உருவத்தில்
வானைப் பிளக்கும் ’சீதா,இலக்குமணா’ என்று இராமன் குரலில் கூவி வீழ்ந்தானே.
கதறலைக் கேட்ட சீதை இராமனைக் காக்க விரைந்தெடன இலக்குவனை முடுக்கிட
பதறல் வேண்டாம் இது அரக்கனின் மாயமென இலக்குவன் எடுத்துக் கூறிட
வந்த சீற்றத்தால் கொதித்த சானகி கடுஞ் சொற்களால் இலக்குவனை சாடிட
நொந்த மனத்துடன் இலக்குவன் அங்கிருந்து நீங்கி இராமனைத் தேடிச் சென்றானே.
சீதை இருக்குமிடம் தேடி முதிர்ந்த முனிவன் உருவில் வந்த இராவணனனை
பேதை சீதை அன்புடன் வரவேற்று அழைத்திட, பர்ணசாலையுள் வந்த கபட முனிவன் நான்முகன் சாபம் நினைவில்வர சீதையைத் தீண்டாது குடிலோடு பெயர்த்தெடுத்து
தான் வந்த தேரினில் அதை வைத்து இலங்கை நோக்கி விரைந்து செல்லலானான்.
சிறகடித்துப் பறந்து வந்து சீதையைக் காத்திட சமர் புரிந்த சடாயுவை சிவவாளால் சிறகொடித்துச் சிதைத்து இராவணன் வீழ்த்திட சடாயுவும் மண்ணில் விழுந்தானே. இலங்கை நோக்கி தோளில் குடிலைத் தாங்கி இராவணன் வான்வழியே சென்றடைந்து கலங்கி நின்ற சீதையை அசோகவனத்தில் அரக்கியர் நடுவே சிறை வைத்தானே.
தேடிச் சென்று இராமனைக் கண்ட இலக்குவன் மகிழ்வுடன் தழுவிய பின்னர்
ஓடி விரைந்து இருவரும் சீதையின் நிலை கண்டிட பர்ணசாலை திரும்பிட
சீதையை பர்ணசாலையோடு காணாது திகைத்து தவித்த இருவரும் தேர் சென்ற பாதையைக் கண்டு அதன் வழியே சீதையின் தேடலில் சென்றனரே.
ஏகும் வழியில் குருதிவெள்ளத்தில் கிடந்த சடாயுவைக் கண்டு தழுவினான் இராமன்
போகும் உயிரைப் பிடித்து வைத்து இராமனிடம் யாவும் கூறி சடாயு உயிர்துறந்தான். பெற்ற தந்தையொத்த சடாயுவின் மரணம் கண்டு மனம் உருகி விழினீர் பெருகி
உற்ற முறையில் ஈமக்கடன் யாவும் செய்து முடித்து இருவரும் பயணம் தொடர்ந்தனரே.
மிகநீண்ட கரங்கள் கொண்ட கவந்தன் எனுமரக்கன் பிடியில் திடீரென சிக்கி,
மீண்டனரே இருவரும் அவன் வானுயர் தோள்களை வெட்டி வீழ்த்திய பின்னர்.
இராமன் கரம் பட்டு சாபம் நீங்கிய தனு எனும் அக்கந்தர்வன் ருசியமுக மலை வாழ்
சுக்ரீவன் எனும் வானரக்கோன் துணை கொள்க எனக்கூறி வானுலகம் சென்றானே.
சபரியெனும் தனது பக்தையை வழியில் கண்டு மகிழ்ந்த இராமன் அபரிமித பரிவுடன் அவள் அளித்த காய் கனிகளை ஏற்று உண்டபின்
ருசியமுகம் மலைக்கு செல்லும் வழியை உலகுக்கே வழிகாட்டும் இராமனுக்கு கூறி வானுலகம் அடைந்தாளே கடுந்தவமியற்றும் முனிவரும் பெறமுடியா பேறு பெற்ற சபரி

கிஷ்கிந்தா காண்டம்

ருசியமுகம் மலையை இராம இலக்குவர் சென்றடைந்தனரே– அங்கு தன் அண்ணன் வாலி முகம் காணாது ஒளிந்து வாழ்ந்த வானரக்கோன் சுக்ரீவனைக் கண்டனரே. அண்ணன் வாலி தம்பிக்கிழைத்த கொடுமைகளை அங்கிருந்த அனுமன் விரிவாய்க் கூறிட அண்ணல் இராமனும் சுக்ரீவன்பால் பரிவு பொங்கிட உயிர்த் தோழமை கொண்டானே.
வான் வழியே முன்னொரு நாள் இராவணன் கவர்ந்து சென்ற மங்கை ஒருவள்
தான் அணிந்த அணிகலன்களை ஆடைத்துண்டில் முடிந்து நிலம் நோக்கி வீசிட
அணிகல முடிப்புகளை வானரர் ஏந்திப்பிடித்து சுக்ரீவனிடம் கொடுத்த அவற்றை பணிவுடன் இராமனுக்குக் காட்டிட சீதை அணிகளைக் கண்ட இராமன் தன்வயமிழந்தானே. சூரிய குமாரன் சுக்ரீவன் சூரியகுலத்தோன்றல் இராமனைத் தேற்றிட
கூரிய மதி படைத்த அனுமன் வாலியை வதம் செய்து சீதையைத் தேடுவோமென்றான்.
ஒங்கி வளர்ந்த ஏழு மராமரங்களை ஒரே அம்பால் துளைத்த இராமன் திறன் கண்டு நீங்கியதே சுக்ரீவன் மனதுறுத்திய வாலியை அழிக்க இராமனனின் ஆற்றல் மேல் ஐயம்.
அனைத்து உலகங்களையும் ஆட்டிப்படைத்த இராவணனையே தன் வாலில் கட்டிப் பிணைத்து எட்டு திக்கும் குருதி பெருக அலைக்கழித்த ஒப்பற்ற வலிமைமிகு வாலியும், தனது துணைவியைக் கவர்ந்து தனக்கும் கொடுந்துயரளித்த வாலியின் செயல்களை மனதுள் புதைத்து புழுங்கிப் பின் இராமன் துணை கிட்ட எழுச்சி பெற்ற சுக்ரீவனும்
கடும் சமரில் பொருத தக்க தருணத்தில் மறைவிடமிருந்து இராமன் உயிரைத்
தொடும் பாணம் ஒன்றை வாலியின் மேல் எய்திட அவனும் மண்ணில் வீழ்ந்தானே. மறைவாய் நின்று அம்பு எய்தது ஏனென வெகு நேரம் வாதிட்ட வாலி இறுதியில் இறைவனாய் இராமனை அறிந்து தலையால் வணங்கி போற்றினானே.
அங்கதன் எனும் தன்னன்பு மைந்தனை இராமனிடம் அடைக்கலமாய் அளித்திட
அங்கு தன் உடைவாளை இராமன் அங்கதனுக்கு ஈந்து அவனை ஏற்றுக்கொண்டானே. நிறைந்த மனத்துடனும் மிகுந்த நிம்மதியுடனும் வாலி வானுலகம் சென்றானே
மறைந்த தந்தை வாலிக்கு இறுதிக்கடன்களை அங்கதன் மூலம் அனுமன் செய்வித்தானே
உரிய முறையில் சுக்ரீவனுக்கு இலக்குவன் மூலம் முடிசூட்டிய இராமன்
சீரிய முறையில் ஆட்சி செய்து நான்கு திங்கள் கார் காலம் கழித்து படையுடன்
என்னிடம் வருக என சுக்ரீவனிடம் கூறிய இராமன் வேறொரு மலைக்குச் செல்ல தன்னிடமான கிட்கிந்தைக்கு அனுமனொடும் மற்ற வானரர்களுடன் சுக்ரீவன் சென்றான்.
சல்லாபத்தில் மூழ்கித் திளைத்து நான்கு திங்கள் சென்றதே அறியாது உல்லாசத்தில் தனை மறந்த சுக்ரீவன் செயல் கண்டு வெகுண்ட இராமன்
நேரே சென்று சுக்ரீவனைக் கண்டு காரணம் அறிந்து வர இலக்குவனைப் பணித்திட
போரே செய்யத் தயாராக கடும் சினத்துடன் இலக்குவன் கிட்கிந்தை அடைந்தான்
தனது தவறை நன்குணர்ந்த சுக்ரீவன் இலக்குவனுடன் இராமனிடம் சென்றடைந்து
மனது உருகி இராமன் செந்தாள்களில் விழுந்து வணங்கிட அவனும் மனமிரங்கினான்.
கடல் போல் திரண்ட வானர சேனையைக் கண்டு இராமனும் மகிழ்ந்திட சீதையைத்
தேடல் பணியில் அச்சேனையை அமர்த்திடும் வழி வகையை ஆய்ந்தனரே.
நான்கு திசைகளிலும் செல்ல சேனையைப் பிரித்து சுக்ரீவன் ஆணையிட
நன்கு எல்லாம் அறிந்த அனுமன், சாம்பவான் அங்கதன் தென் திசை சென்றனரே.
வானர வேந்தன் சுக்ரீவன் சொல்லிய வழியில் சென்றபடியே சீதையைத் தேடிய
வானர வீரர் சீதையைக் காணாது உளம் சோர்ந்து மனம் மலங்கி
இறுதியில் மயேந்திர மலையில் கூடினரே; வானர அரசன் சுக்ரீவன்
உறுதியாய் குறித்த ஒரு மாத தவணையும் கழிந்ததை எண்ணி கலங்கினரே.
திரும்ப கிட்கிந்தா செல்லாது மலையிலேயே இருப்பதை அல்லது மரிப்பதை
விரும்பிய வானரர்களிடம் உரையாடிய அனுமன் சடாயுவின் வீர்மரணம் பற்றி குறிப்பிட சற்று எட்டியிருந்த கழுகரசன் சம்பாதி அதைக் கேட்டு தன் தம்பி சடாயுவின் மரணம் பற்றி முற்றும் அறிந்திட அனுமனிடம் வந்து கேட்டறிந்தபின் தன் கதை சொல்லலானான்
எரிக்கும் சூரிய கிரணங்களிலிருந்து தம்பி சடாயுவைக் காத்திட தன் சிறகுகளை
விரித்துப் பரப்பியபோது அவை எரிந்து தீய்ந்திட சம்பாதி பறக்கும் நிலை இழந்தான்
இராம நாம உச்சாடனம் செய்ய அனைத்து வானரரையும் சம்பாதி வேண்ட
இராம நாம மகிமையால் தீய்ந்த சிறகுகள் துளிர்த்து பெரிதாய் வளர்ந்தனவே.
இலங்கையின் வேந்தன் சீதையைக் கவர்ந்து வான்வழி சென்றதைக் கண்டிருந்த சம்பாதி இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்டுள்ள செய்தியைச் சொன்னானே.
மிகுந்த பாதுகாப்பும் காவலும் உள்ள இலங்கைக்கு பெரும் படையுடன் செல்வது
உகந்தது ஆகாது ஒருவன் சென்று சீதையைக் கண்டு வருவதே உசிதமென சம்பாதி கூறிட வீர மாருதியே இதற்கு ஏற்றவன் என அனுபவப் பழம் சாம்பவான் உரைத்திட
தீர மாருதியும் கம்பீரமாய் விஸ்வரூபம் எடுத்து மகேந்திர மலையில் நின்றானே.

சுந்தர காண்டம்

இராமனை மனதில் துதித்து தென் திசை நோக்கி இலங்கையை இலக்காக்கி
இராமனின் வில் அம்பென வாயுகுமாரன் விண்வெளியில் விரைந்து சென்று
எதிர் வந்த இடர்களையும் தடைகளையும் மதியாலும் வலிவாலும் வென்று
எழில் மிகு பவள மலையிலிறங்கி அங்கிருந்து இலங்கையைக் கண்டு வியந்தானே. எங்கும் இருள் சூழ்ந்தபின் பவள மலையை விட்டகன்று இலங்கை ஊரடைந்து
பொங்கும் கடலையே அகழியாய்க் கொண்ட மதில் சுவர் வழியே நகருள் புகுந்தானே. சல்லடைப் போட்டுத் தேடுவதுபோல் நகரிலும் அரண்மனையிலும் முழுதும் தேடியும் மெல்லிடையாள் சீதையைக் காணாது மனம் குழம்பிய அனுமன் வனமொன்றில் புகுந்தான்.
அசோக வனமெனும் அவ்வனத்தில் அதுவரை சீதையைக் காணமுடியாததால் ஏற்பட்ட சோகமும் சோர்வும் அழுத்திட அனுமன் அங்கும் சீதையை இறுதியாய் தேட முற்பட்டான்
பெருத்த உடலும் மிகுத்த கொடுமையும் கொண்ட அரக்கியர் சூழ்ந்திருக்க அவர் நடுவே கறுத்த மேகங்கள் மூடிமறைத்த வெண்ணிலவு போல் சீதை சிறை இருந்தாளே.
புகை படிந்த ஓவியம்போல் பொலிவிழந்த தோற்றத்தோடு ஒளியிழந்த விளக்காய் நகை மறைந்து களை இழந்த முகத்தோடு வாடிய பயிராய் சீதை இருந்தாளே.
வல்லரக்கிகளில் நடுவில் இருந்த ஒரே நல்லரக்கியாம் திரிசடை என்பவளிடம் ந
ல்ல நிமித்தங்களாய் தனது இடது தோள் கண்கள் புருவம் துடிப்பதை சீதை கூறிட நல்லது இல்லாத தான் கண்ட கனவுகளை திரிசடையும் விவரமாய்க் கூறி அவை
எல்லாம் இலங்கைக்கு வரவிருக்கும் பேரழிவை உணர்த்துவதாம் என்றாள்..
கொடிய அரக்கிகளிடம் நடுவே சிக்கி வாடிய கொடி போலிருந்த சீதையை
நெடிய மரமொன்றின் கிளையில் மறைந்திருந்து அனுமனும் நோக்கினானே.
திரண்ட தோள்கள் கொண்ட இராவணன் அரம்பையர் அரக்கியர் திரண்டு உடன் வந்திட மருண்ட மான் போல் மிரண்டு அரக்கியர் நடுவிருந்த சீதை முன் நின்று
இச்சகப் பேச்சுகள் பேசிய இராவணனை துச்சமாய் மதித்து உதாசீனம் செய்த சீதை மேல் உச்சமாய் கோபமுற்ற இராவணன் சீதை இணங்கிட இருமாத கெடு கொடுத்து அகன்றானே.
தன் அவல நிலை கண்டு மாய்ந்த சீதை தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றபோது அவள் முன் வந்து நின்றான் அனுமன், ’இராமனது தூதன் நானென’ முழங்கிக் கொண்டே.
அண்ணல் அடையாளமாய் கொடுத்தனுப்பிய கணையாழியை சீதையிடம் கொடுத்திட கண்ணில் ஒற்றி இராமனையே நேரில் கண்டால் போல் புளகாங்கிதம் அடைந்தாள்.
எந்தன் தந்தையும் நீ, தாயும் நீ, உயிர் கொடுத்த உத்தமனும் நீ என உளமாரப் போற்றினாள் உந்தன் செயலுக்கு செயக்கூடிய கைமாறுளதோ, சிரஞ்சீவியாய் வாழ்கவென வாழ்த்தினாள்.
எந்தன் தோளில் சுமந்து சென்று உன்னை இராமனிடம் சேர்ப்பேனென அனுமன் வேண்டிட உந்தன் செயல் இராமன் வில்லுக்கும் வீரத்திற்கும் இழுக்காகுமென சீதையும் மறுத்தாளே.
அனுமனிடம் சீதை தன் சூடாமணியை அடையாளமாய் இராமனுக்குக் காட்டக் கொடுத்திட அனுமனும் அதைப் பெற்று சீதையை வணங்கி விடை பெற்றுச் சென்றானே.
பேரெழில் மிக்க அசோக வனந்தனை பேருருவம் எடுத்து முற்றிலும் அழித்தான் அனுமன் பெருஞ்சினம் கொண்ட இராவணன் கேடிழைத்த குரங்கினைப் பிடித்துவர அனுப்பிய கிங்கரர்,சம்புமாலி, ஐந்து தானைத்தலைவர்கள்,அட்சய குமாரன், அரக்கர் படையினரை பயங்கரமாய் தனித்தே நின்று அனுமன் சமரிட்டு முற்றிலும் அழித்து ஒழித்தானே.
தசமுகனின் தனையன் மேகனாதன் தானே அனுமனுடன் சமர் செய்ய சென்று நான்முகனின் அத்திரத்தை பிரயோகிக்க அனுமனும் அதை மதித்து கட்டுண்டானே. கட்டுண்ட அனுமனை நகர் வழியே இராவணனிடம் இழுத்துக் கொண்டு சென்றனரே கட்டுக்கடங்கா கோபமுற்ற இராவணன் அனுமனை அவனைப்பற்றிய விவரங்கள் வினவ இணையிலா வில் வீரன் இராமனின் தூதன் நான் என்று தன் அறிமுகம் தந்த பின் துணையிலா அவன் துணைவி சீதையை கபடமாய் கவர்ந்து வந்து சிறை வைத்த இழிவான செயல் புரிந்த நீ சீதையை இராமனிடம் சற்றும் தாமதியாது திருப்பி அனுப்பி அழிவான முடிவிலிருந்து உன்னைக் காத்துக்கொள் என அனுமனும் உணர்த்தினானே. சிரம் பத்திலும் சினம் கொதித்த இராவணன் அக்குரங்கை கொன்றிட ஆணையிட அறம் அறிந்த தம்பி விபீடணன் தூதனைக் கொல்வது தகாத செயல் என்றுணர்த்திட வாலைச் சுட்டெரித்து அவ்வானரத்தை துரத்திடுக என இராவணன் கட்டளையிட உடலைச் சுற்றிய நாக பாசத்தைத் தளர்த்தி பருமானன கயிற்றால் அனுமனைக் கட்டி வாலில் தீ வைத்திட சீதையின் அருளால் கனலும் புனல் போல் குளிர்ந்திட
வாலைச் சுழற்றி சீதையின் இருப்பிடம் விட்டு இலங்கை நகரத்தையே தீக்கிரையாக்கி தான் வந்த வேலை முடிந்திட சீதையிடம் சென்று வணங்கி விடை பெற்று
வான் வழியே விரைந்து சென்று மகேந்திர மலையில் இருந்த வானரரை அடைந்தானே.
கண்டேன் சீதையை எனும் செய்தியை இராமனிடம் கடுகிச் சென்று விண்டான்
கண்டிலேன் உனைப் போல என அண்ணலும் அளவிலா ஆனந்தம் கொண்டான்
அன்னை சீதை அளித்த சூடாமணியை அனுமன் இராமனுக்குக் காட்டிட
தன்னை மறந்த இராமன் சீதையையே கண்டது போல் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். இலங்கையில் வாடும் சீதையின் நிலையை விரிவாய் விளக்கிய அனுமன்
ஒருதிங்களே உயிர் வாழ்வேன் என சீதை கூறிய வாக்கையும் இராமனிடம் கூறிட
தென் திசை நோக்கிச் செல்ல எழுபது வெள்ளம் வானர சேனைக்கு சுக்ரீவன் ஆணையிட பன்னிரு நாள் மலை வழி நடந்து தென் திசைக் கடலை யாவரும் அடைந்தனரே.

யுத்த காண்டம்

தென் திசைக் கடலின் கரையிலே இராமன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்க
தன் அரண்மனையில் மிக்க உற்றோருடன் இராவணன் மந்திராலோசனையில் இருந்தான் ஒருமுகமாய் கூடிய அரக்கர் யாவரும் இராமனுடன் போரிட்டு அழிக்கவேண்டுமெனக் கூற தனியனாய் விபீடணன் மட்டும் சீதையை இராமனிடம் திருப்பியனுப்பிட அறிவுறுத்திட நஞ்சு போல் இச்சொற்களை இராவணன் வெறுத்து விபீடணனை இகழ்ச்சியுடன் ஏசிட நெஞ்சு கனத்த விபீடணன் துணைவர் நால்வருடன் இலங்கை நீங்கி அக்கரை அடைந்தானே
வானரப்படை சூழ வீற்றிருந்த இராமனிடம் விபீடணன் அடைக்கலம் வேண்டி பணிந்திட வானரத்தலைவர் யாவரும்,அனுமனைத்தவிர, அடைக்கலம் அளிப்பதை எதிர்த்திட அஞ்சனை மைந்தன் இலங்கையில் நேரில் கண்ட விபீடணன் பண்புகளை விளக்கிட நெஞ்சம் மகிழ்ந்த இராமன் அடைக்கலம் அளித்து விபீடணனை ஏற்றுக்கொண்டானே.
கங்கையின் கரையில் குகனோடு ஐவரானோம் குன்றில் சுக்ரீவனோடு அறுவரானோம் எங்களை வந்தடைந்த உன்னோடு எழுவரானோமென அண்ணலும் மட்டிலா மகிழ்வுற்றான் இலங்கை அரசனாய் விபீடணனுக்கு இலக்குவன் கரங்களால் முடிசூட்ட இராமன் பணித்திட இருகை கூப்பி விபீடணன் பரதன்போல் இராமன் பாதுகைகளையே சிரமேல் சூடினானே.
கருங்கடல் சூழ் இலங்கையின் அரண் அமைப்பையும் சேனைச் சிறப்பையும் பலத்தையும் பெருந்தோள் கொண்ட இராவணின் வலிமையும் விபீடணன் விரிவாய் விளக்கினான்.
கரிய கடலைக் கடந்து இலங்கை அடைந்திட உரிய வழியாக வருணன்
பெரிய மலைகளைக் கொட்டி அணை கட்டிட யோசனை கூறினான்
வானரத்தலைவன் சுக்ரீவன் நளனெனும் வானரத் தச்சனிடம் பொறுப்பை ஒப்படைத்தான் வானரப்படைகள் குன்றுகளைப் பெயர்த்துக் கொணர்ந்து கடலில் கொட்டி மேடாக்கி
நூறு யோசனை நீளம் பத்து யோசனை அகலம் கொண்ட அணையை
மூன்று நாட்களில் இலங்கை வரை கட்டி சேதுபந்தனம் செய்து முடித்தனரே.
இணையிலா இராமன் இலக்குவன் விபீடணன் வானரப்படைத்தலைவர்கள் வானரப்படைகள் அணை மேலே நடந்து சென்று கடலைக் கடந்து இலங்கைக் கரை அடைந்தனரே.
ஒற்றர் மூலம் இராமன் விபீடணன் வானரப்படை சேதுபந்தனம் இவை பற்றிய செய்திகளை பெற்ற இராவணன் இனி செயத்தக்க செயல் யாதெனும் சிந்தனையில் ஆழ்ந்தான்.
மலை ஒன்றின் மீதேறி நின்று இலங்கையின் மாட்சியையும் காட்சிகளையும் கண்டு மலைத்த இராமன் இலக்குவனிடம் அவை பற்றி விவரமாய் விளக்கிக் கூறலானான் தசமுகன் இராவணனும் அச்சமயம் வானுயர்ந்த அரண்மனை கோபுர உச்சிக்கு வந்து கமலமுகன் இராமனைக் கண்ணுற்று கடுஞ்சினமுற்று கனல் விழிகளால் நோக்கினான்.
சாரன் எனுமரக்கன் இராமன் தரப்பு விவரங்களை இராவணனிடம் விளக்கிச் சொல்லிட இராமன் விபீடணனிடம் அரக்கர் தரப்பு வீரர்களைப் பற்றிய விவரங்களை வினவிட அண்ணன் இராவணனை விபீடணன் முதலில் சுட்டிக்காட்ட சினத்துடன் சுக்ரீவன் திடுமென விண்ணில் பகலவனைப் பிடிக்கப் பாய்ந்த அனுமன் போல் இராவணன் மேல் பாய்ந்தான். கடுஞ்சமர் இருவரும் புரிந்து படுகாயம் அடைந்து இளைப்பாற சற்று நேரம் நின்ற வேளை திடுமென சுக்ரீவன் இராவணன் தலைமுடிமணி பறித்து இராமன் பாதத்தில் வைத்தானே. அரக்கர் படைகளை போருக்கு ஆயத்தமாய் கொடுமை மிகுந்த இராவணன் அணி வகுத்திட இரக்க மனம் படைத்த இராமனோ அங்கதனை இராவணனிடம் சமரசம் பேச தூதனுப்பிட மூர்க்கனான இராவணன் அங்கதன் சொற்களை செவிமடுக்காது அவனைத் தாக்க முற்பட தீர்க்கமான முடிவு போரே சமாதானமன்று என்று திரும்பிவந்த அங்கதன் உரைத்தான்
இவ்வண்ணம் தொடங்கியதே இராம-இராவண வானர- அரக்கர் படை யுத்தமாய் கார்வண்ண இராமனின் அவதார நோக்கமான தர்ம- அதர்ம யுத்தம்!
கடல் போல பரந்து நின்ற அகழியை மலைகள் மரங்களால் வானரப் படைகள் தூர்த்து திடல் போல மேடாக்கி அங்கிருந்து ஓங்கி நின்ற மதில் சுவர் மேல் தாவி அதனையழித்து திரண்டு வந்த அரக்கர் சேனைகள் மேல் குன்றுகளையும் மரங்களையும் வானரப்படை வீச மிரண்டு போய் அரக்கர் படைகளும் பின் வாங்கி திரும்பி ஓடினரே.
அரக்கர் சேனை சேதமடைந்து திரும்பி வந்துவிட்டதை அறிந்து சினத்தால் சிவந்த அரக்கர்கோன் இராவணன் தானே போர்க்களம் சென்றிட முடிவு செய்தானே.
குரக்கினச் சேனைகள் அவற்றின் தலைவர்கள் சுக்ரீவன், அங்கதன், அனுமன் யாவரும் அரக்கர்கோனுடன் கடும் சமர் புரிந்தும் வெற்றி பெற இயலாது தளர்ந்திட
தசமுகன் தன்னுடன் போர்புரிய களமிறங்கிய இலக்குவன் வில்லாற்றல் கண்டு வியந்து நான்முகன் தந்த வேல் ஆயுதத்தை இலக்குவன் மேல் பிரயோகம் செய்திட
நெஞ்சில் அதை ஏற்ற இலக்குவன் மூர்ச்சித்து விழுந்ததைக் கண்டு
நெஞ்சம் பதறிய அனுமன் அவனைத் தூக்கி பாதுகாப்பான வேறிடம் சென்றானே.
அஞ்சன வண்ண இராமன் தானே நேரில் இராவணனுடன் போர் புரிய வந்திட
அஞ்சனை மைந்தன் குன்றொத்த தன் தோள்களில் இராமனைச் சுமந்து சென்று
தேர் மீதமர்ந்து போரிடும் இராவணன் முன் சென்று நின்றிட
போர் தொடங்கியதே இராமனுக்கும், இராவணனுக்கும் இடையிலே.
அரக்கர் கோன் இராவணனும் இராமனும் எய்த அம்புகளால் வான்வெளி நிறைந்ததே!
அரக்கர் வானரர் சேனைகள் களிறுகள் கரிகள் பிணங்களால் பூமியும் மறைந்ததே!
வீரன் இராமனின் வில்லினின்று விடுபட்ட அம்புகள் விரைந்து சென்று தாக்கி தீரன் இராவணனின் வில் தேர் வெண்குடை வீணைக்கொடி மணிமுடி யாவும் வீழ்ந்தனவே.
களமிறங்கிய இராவணன் யாவும் இழந்து தனியனாய் நிராயுதபாணியாய் நின்றிட உளமிரங்கிய இராமன் இன்று போய் நாளை வா போருக்கு என கருணையுடன் கூறினான் நிலை குலைந்த இராவணன் தலை குனிந்து தன்னிடம் சேர்ந்து ஈசனின்
சிலை முன்னமர்ந்து தன் அவல நிலை குறித்து உளமுடைந்து புலம்பினானே.
ஒப்பற்ற ஆற்றலுற்ற தம்பி கும்பகருணனை அவனது ஆழ்துயிலினின்று எழச் செய்த கொற்றவன் இராவணன் அவனை இராமனோடு போர்புரிய போர்க்களம் செல்லப்பணித்திட முற்றும் தவறானது சீதையைக் கவர்ந்தது என உணர்த்தியும் இராவணன் கேளாததால் சற்றும் தயங்காது செஞ்சோற்றுக்கடனாற்ற போர்க்களம் செல்ல கும்பகருணன் தயாரானான் போரில் தன் வீரமரணத்திற்குப் பின்னாவது சீதையை விட்டு விடுக என வேண்டியபின் தேரில் ஏறி பெரும்படையுடன் இராவணனனிடம் விடைபெற்று கும்பகருணன் சென்றானே.
அண்ணன் கும்பகருணனைக் களத்தில் கண்ட விபீடணன் அவனைப் பாசத்துடன் அணுகி கார்வண்ணன் இராமனிடம் அடைக்கலம் அடைந்திடு என்று அன்புடன் விடுத்த வேண்டுகோளை மறுத்த கும்பகருணன் இராவணனைத் துறவேனென உறுதியுடன் கூறி மீண்டும் இராமனிடமே சென்று இனிது வாழ்ந்திடென விபீடணனை வாழ்த்தி அனுப்பினான்.
காலனும் கண்டஞ்சும் கடும் தோற்றமும் ஆயுதங்களும் கொண்ட கும்பகருணனை எதிர்த்த நீலன் அங்கதன் சுக்ரீவன் அனுமன் வனரப்படையினர் யாவரும் போரிட்டு தளர்ந்தனரே. அங்கு அச்சமயம் வந்த இலக்குவனின் அம்பு மழையில் சிக்கித் தவித்து
அங்கும் இங்கும் சிதறி ஓடி அரக்கர் படையினர் சீரழிந்தனரே.
நேரிலே இலக்குவனின் வில்லாண்மையைக் கண்டு வியந்த கும்பகருணன்
தேரிலே சென்று இலக்குவன் இருக்குமிடத்தை அடைந்தானே.
வாயு மைந்தன் தோள்களெனும் தேரிலமர்ந்த இலக்குவனின் வில்லினின்று விரைவுடன் பாயும் அம்புகள் கும்பகருணனின் தேரையும் தேர்ப்பாகனையும் வில்லையும் அழித்தனவே. சுக்ரீவனை சென்றடைந்த கும்பகருணன் அவனைக் கடுமையாய் தாக்கி வீழ்த்தியபின் அவனைத் தோளிலிட்டு சுமந்து இலங்கை நோக்கி செல்லலானான்.
இதனைக் கண்ட இராமன் தனது வில்லம்புகளால் வான்வழிகள் அனைத்தும் அடைத்தான் இராமனை முதன்முறையாய் கண்ட கும்பகருணன் அவனுடன் சமர் புரியலுற்றானே.
திரண்ட கும்பகருணன் கரங்களையும் கால்களைம் இராமனின் அம்புகள் சிதைத்திட வெருண்ட கும்பகருணன் விடாப்பிடியாய் தனது வாயையே ஆயுதமாக்கிப்
போரிட்டான். மரணம் உறுதி என்று இறுதியாய் உணர்ந்த கும்பகருணன் இராமனை நோக்கி சரணம் அடைந்த தம்பி விபீடணனை இராவணனிடமிருந்துக் காத்திடுக எனவேண்டினான் தன் சிரத்தை அறுத்து எவரும் காணவியலாது ஆழ்கடலுள் அழுத்திடவும் வேண்டினான் தன் கரத்திருந்த வில்லில் நாணேற்றி அம்பெய்து இராமனும் அவ்வாறே செய்தருளினானே.
மாய சனகனைப் படைத்து சீதை முன்னிறுத்தி அச்சுறுத்தி அவளை இணங்க வைத்திடும் தீய திட்டத்துடன் இராவணன் அசோகவனம் சென்று சீதைமுன் இருக்கையில்
அளப்பரிய பாசம் கொண்ட சகோதரன் கும்பகருணன் போரில் மடிந்த செய்தி எட்டிட உளமொடிந்த இராவணன் அவ்விடமிருந்து அகன்று தன்னிடம் சென்றானே.
இலக்குவனப் போரில் கொன்று இராமனையும் அவன் தம்பியை இழக்கச் செய்வேனென இலக்காய்க் கொண்டு அதிகாயன் எனும் இராவணன் மைந்தன் போர்க்களம் சென்றானே. தோள் தாள் தலை இவையெலாமின்றி கிடந்த கும்பகருணன் உடலை நோக்கித் துயறுற்று சூளுரைத்தான் அதிகாயன் இலக்குவனையும் கும்பகருணன் போல் செய்து முடிப்பேனென. வாயு மகன் அனுமன் தோள் மீதமர்ந்து இலக்குவன் அதிகாயனுடன் கடுஞ்சமர் புரிந்து நான்முகன் அத்திரத்தை இறுதியில் எய்திட அது அதியமான் சிரத்தை கொய்து சென்றதே.
சோகக் கடலில் இராவணன் மனைவி தானியமாலி அதிகாயன் மரணத்தால் மூழ்கியிருக்க மேகனாதன்(இந்திரசித்து)எனும் மண்டோதரி வழி இராவணன் மைந்தன் அவ்விடம் வந்தான் அதிகாயன் சிறிய தந்தை கும்பகருணன் அவன் புதல்வர் கும்பன் நிகும்பன் மரணம் அறிந்து அதிகமாய் ஆத்திரமடைந்த இந்திரசித்து பெரும்படையுடன் போர்க்களம் புகுந்தான்.
இந்திரசித்தை எதிர்த்த வானரவீரர்கள் பேரளவில் அழிந்திட வானரத்தலைவர் தளர்ந்திட இந்திரசித்தை எதிர்த்துப் போரிடஇலக்குவனால் மட்டுமே இயலுமென விபீடணன் இயம்பிட சூழ்ந்து நின்ற அரக்கர் படையை இலக்குவன் தன் வில்லம்புகளால் வீழ்த்திட
வீழ்ந்த அரக்கர்களைக் கண்ட இந்திரசித்து தேரிலே சென்று இலக்குவன் முன் நின்றான். தேரிலே அமர்ந்து இந்திரசித்தும் அனுமன் தோளிலே அமர்ந்து இலக்குவனும்
நேரிலே ஒருவரோடு ஒருவர் பொருதி கடுஞ்சமரில் ஈடுபட்டனரே.
மேகனாதனின் தேர்க்கொடியையும் தேர்ப்பாகனையும் தேரில் பூட்டிய சிங்கங்களையும் வேகமாய் செலுத்திய அம்பு மழையால் இலக்குவன் வீழ்த்தியபின்
அவனது கவசத்தை ஊடுருவி அவனது மார்பையும் அம்புகளால் துளைத்தான்
தனது வில்லைத் தேரில் ஊன்றி செயலற்று நின்ற எதிரியைக் கொல்லவும் நினைத்தான் சித்து செய்வதில் பிரசித்தி பெற்ற இந்திரசித்துவிண்ணில் மறைந்து நாகபாசமெனும் அத்திரத்தை எய்திட இலக்குவன் வானரப்படையினர் யாவரும் கட்டுண்டு வீழ்ந்தனரே இரத்தம் பெருகிட இந்திரசித்து தன் அரண்மனைக்கு தளர்ச்சியைப் போக்கிடச் சென்றான் சித்தம் குலைந்த விபீடணன் தன் இயலாமையை எண்ணி எண்ணி புலம்பலுற்றானே. சமர்க்களம் அடைந்த இராமன் கட்டுண்ட இலக்குவனையும் மற்ற யாவரையும் கண்டு தன்னுளம் உடைந்து விழி நீர் பெருக விபீடணன் மூலம் யாவும் கேட்டறிந்தான்
வானுலகத்திருந்து இவை யாவும் கண்ட கருடன் இராமன் கலங்குவதை காணச் சகியாது தானிருக்குமிடத்திருந்து மிகப்பரந்த தன் சிறகடித்துப் பறந்து வந்து இராமனிடம் சேர்ந்தான் கருடனின் வருகையால் நாகபாசங்கள் யாவும் சிதறிட கட்டுண்ட யாவரும் விடுபட்டனரே! கருடன் பின்னர் திருமாலின் அம்சமான இராமனிடம் விடை பெற்றுச் சென்றானே.
பெற்ற மைந்தன் இந்திரசித்தை இராவணன் மறுபடியும் போர்க்களம் அனுப்புமுன்
மற்ற அரக்கர் தலைவர்கள் இராவணனை வேண்டி போர்க்களம் புகுந்தனரே.
நீண்ட நேரம் அவ்வரக்கர்கள் வானரத்தலைவர் இலக்குவன் இராமன் இவர்களுடன் பொருதி மாண்ட செய்தி இராவணனுக்கு எட்டிட அவன் இந்திரசித்தை களம் செல்லப் பணித்தான்.
இந்திரசித்து பெரும் படையுடனும் ஆரவாரத்துடனும் போர்க்களமடைந்து அங்கு வந்தெதிர்த்த வானரப்படையைக் கடுமையையாய்த் தாக்கி பேரளவில் அழித்தானே. இலக்குவனுடன் பின்னர் தனியே நேருக்கு நேர் பொருதியபொழுது இந்திரசித்து இலக்குவனின் தாக்குதலில் தன் கவசத்தையும் தேரையும் இழந்து நின்றானே.
மேகனாதன்மேல் இலக்குவன் பிரம்மாத்திரத்தை பிரயோகிக்க விழைந்திட
கார்மேக வண்ணன் இராமன் மூவுலகங்களும் அதைத் தாங்க இயலாதென தடுத்தான். இதையறிந்த வஞ்சகன் இந்திரசித்து மாயமாய் விண்வெளி அடைந்து மேகத்தில் மறைந்து விரைந்து இலங்கை அடைந்து பிரம்மாத்திரம் செலுத்த வேள்வி மேற்கொண்டானே.
அச்சமயம் நடந்துகொண்டிருந்த போரில் அரக்கர்படை பேரிழிவைச் சந்திக்க
இச்செய்தி இராவணனையும் இந்திரசித்தையும் எட்டிட இருவரும் மிக்க சினமுற்றனரே. ஒருவரும் காணாவண்ணம் விண்ணில் மாயமாய் மறைந்திருந்து இந்திரசித்து
பழம்பெரும் பிரம்மாத்திரத்தை கண்ணிமைக்கும்நேரத்தில் இராமன் படைமேல் விடுத்தானே. இலக்குவனும் எல்லா வானரத்தலைவர்களும் வானரப்படையினரும் பிரம்மாத்திரத்துக்கு இலக்காகி மூச்சிழந்து செயலற்று உயிரொடுங்கி நிலத்தில் வீழ்ந்தனரே.
நடந்தது அறியாது வேறிடத்திருந்த இராமன் போர்க்களம் சென்றபொழுது அங்கு வீழ்ந்து கிடந்த இலக்குவனையும் அனுமனையும் சுக்ரீவனையும் மற்ற யாவரையும் கண்டு இன்னலுற்றுப் புலம்பினான் அழுதான் செய்வதறியாது திகைத்தான்
தன்னாலேதும் செய்ய இயாலாமையை எண்ணி எண்ணி மருகினான்.
இறந்தவன் போல் விழுந்து கிடந்த இலக்குவனைக் கண்ட இராமன் தன்னையே
மறந்து அவன் உடலை தன் மார்போடு அணைத்து துயில்வுற்றான்.
இராம இலக்குவர் உயிரிழந்தெனரென தூதுவர் செய்தியை இராவணனிடம் தெரிவிக்க இராவணன் பெருமகிழ்ச்சி அடந்து அண்டமே அதிரும் வண்ணம் ஆர்ப்பரித்தான்
சீதையை அரக்கியர் காவலுடன் ஓர் விமானத்திலேற்றி போர்க்களத்திற்கு அனுப்பி பேதையை இராம இலக்குவர் வீழ்ந்து கிடந்த காட்சியைக் காணச் செய்தான்.
கணவன் இராமனின் அசைவற்ற உடலைக் கண்ணுற்ற சீதை நஞ்சுண்டது போல் உணர்வும் உடலும் உயிர்த்தலும் ஓய்ந்து அடியற்ற மரம் போல் சாய்ந்தாளே.
நெடு நேரம் கழித்து கண்விழித்த சீதையை நல்லரக்கியாம் திரிசடை அன்புடன் அணைத்து கொடும் அரக்கர் செய்த மாயையே அக்காட்சி என உணர்த்தி தேற்றினாள்.
திருமாலின் அம்சமாம் இராமனையும் தம்பி இலக்குவனையும் சிரஞ்சீவி அனுமனையும் ஒருக்காலும் அதர்ம அரக்கர் படையால் அழிக்க இயலாதென சீதைக்கு தெளிவுறுத்தினாள்.
களம் அடைந்த விபீடணன் முதலில் அனுமனைக்கண்டு மூர்ச்சை பெறச்செய்தான் உளம் மகிழ்ந்த இருவரும் சாம்பவானைத் தேடிச்சென்று அவனை உயிருடன் கண்டனரே. ஒருகணமும் தாமதியாமல் விரைந்து பறந்து சஞ்சீவினி எனும் உயிரளிக்கும் அருமருந்தினைக் கொணர்ந்திடு என அனுமனிடம் கூறிய சாம்பவான் அம்மருந்துள்ள
கரிய மலைக்குச் செல்லும் வழியையும் அம்மருந்தின் அடையாளங்களையும் கூறினான் பெரிய உருவம் கொண்டு அனுமன் பறந்து சென்று மருந்திருக்கும் மலையையே அடியுடன் பெயர்த்துக் கரத்தில் தாங்கி வந்து போர்க்களம் அடைந்திட அம்மூலிகைக் காற்றால் உயிர்த்து எழுந்தனரே இலக்குவனும் மாண்டு வீழ்ந்து கிடந்த வானரப்படையினரும்.
மிக்க மகிழ்ச்சியுற்ற இராமன் எதிரில் உயிருடன் நின்ற இலக்குவனைத் தழுவி பின்னர் தக்க தருணத்தில் சஞ்ஜீவினி கொணர்ந்த அனுமனை நீடுழி வாழ்கவென வாழ்த்தினான்.
மாண்ட வானரப்படை மீண்டும் உயிர் பெற்ற செய்தி ஒற்றர் மூலம் அறிந்து
வெகுண்ட இராவணன் தனக்கு மிக்க நெருங்கியவரோடு ஆலோசனை நடத்தினான்
நிகும்பலை எனுமிடத்தில் அரக்கர் துயர் தீர்க்க தான் நடத்தயுள்ள வேள்வியைப்பற்றியும் வானரக்கும்பலை அவ்வேள்வி முடியும்வரை அவ்விடம் வாரது தடுத்திட
மாய சீதையை உருவாக்கி அனுமன் முன் அவளைக் கொன்று எதிரியை திசை திருப்பிட தீய திட்டம் ஒன்றை இந்திரசித்து விளக்கிக் கூறிட இராவணனும் மகிழ்வுடன் இசைந்தான்
சூழ்ச்சியாக மாய சீதையை வெட்டி வீழ்த்த அதைக் கண்ட அனுமன் அதிர்ச்சியால்
வீழ்ச்சி அடைந்திட அயோத்தியை நோக்கி அதை அழிக்கச் செல்வதுபோல் போக்கு காட்டிய மேகனாதன் நிகும்பலையை அடைந்து வேள்வி இயற்ற முற்பட சீதை வதை செய்யப்பட்ட சோக செய்தியை அனுமன் இராமனிடம் சென்று தெரிவிக்க யாவரும் நிலை குலைந்தனரே.
வண்டு உருவம் கொண்டு விபீடணன் அசோகவனம் சென்று சீதையை உயிருடன் கண்டு மீண்டு வந்து இராமனிடம் யாவும் அரக்கரின் மாயையே என உண்மையை விண்டான் மேகனாதனை வென்றிட அவன் வேள்வியை அழிப்பது அவசியமென விபீடணன் கூறிட வேகமாய் சென்றனரே நிகும்பலையை நோக்கி இலக்குவன் அனுமன் மற்ற யாவரும்.
இலக்குவன் அம்பு மழை பொழிந்து அரக்கர் படையை அழித்தபின் யாககுண்டத்தை இலக்காக்கி அதனையும் அழித்து மேகனாதனின் வேள்வியையும் நிறைவுறாது செய்தானே உள்ளம் நொந்த இந்திரசித்து அனுமனுடனும் பின் இலக்குவனுடனும் போர் புரியலானான் வெள்ளம்போல் பாய்ந்தனவே ஒருவர் மேல் ஒருவர் எய்த அம்புகளும் ஆயுதங்களும் இறுதியில் இலக்குவன் இந்திரசித்தின் கவசம் தேர்க்கொடி தேர் யாவற்றையும் வீழ்த்த குருதி சொரிய இந்திரசித்து மாயமாய் மறைந்து இலங்கை சென்றடைந்தானே.
மீண்டும் போர்க்களம் செல்லத் தயாரான மேகனாதன் தான் உயிருடன்
மீண்டு வாராது மாண்ட பிறகாவது சீதையை விட்டு விடுக என்று தந்தையிடம் கூறிவிட்டு தேரிலே ஏறி பெருமுழக்கத்துடன் போர்க்களம் அடைந்து இலக்குவனைத் தேடிய அவனும் எதிரே வந்த இலக்குவனும் ஒருவர் மேல் விண்ணதிர அம்பு மழைப் பொழிந்தனரே. கடுஞ்சமர் புரிந்தபின் இலக்குவன் இந்திரசித்தின் தேரை அழித்திட
திடுமென வானத்தில் மறைந்த இந்திரசித்தை இலக்குவன் கண்டறிந்து தனது வில்லினின்று கொடிய அம்பொன்றை எய்து இந்திரசித்தின் இடது கரத்தை வெட்டிட வில்லைப் பிடித்தவாறே அக்கரம் வானிலிருந்து நிலத்தின் மீது வீழ்ந்ததுவே.
காலனும் அஞ்சும் மற்றொரு அம்பை விடுத்து இந்திரசித்தின் தலையைக் கொய்திட
சூலம் பிடித்த வலக்கையுடன் உடலும் வெட்டுண்ட தலையும் தரையில் வீழ்ந்தனவே. மேகனாதன் சிரத்தைத் தாங்கிச் சென்ற அங்கதன்
இராமனது பாதங்களில் காணிக்கையாய் வைத்து வணங்கினானே.
தலை பத்து கொண்ட இலங்கைத் தலைவனும் அவனது தலைவி மண்டோதரியும் தங்கள் தலைமகன் மேகனாதனின் தலையற்ற உடலைக் காணும் தலைவிதிக்கு உள்ளாயினரே. சோகத்தில் நொந்து பின் கோபத்தில் வெந்த இலங்கை வேந்தன் இராவணன்
மேகனாதன் தலையைக் கொய்த பகைவர்களின் தலைகளைப் பறிப்பேனென சூளுரைத்தான் தன்னிரு மைந்தர்கள் அட்சயகுமாரனையும் மேகனாதனையும் பறிகொடுத்த மண்டோதரி தன்னுயிர் கணவன் சீதையெனும் அமுதால் செய்த நஞ்சால் மடிவானோ என மயங்கினாள்.
எல்லாத் திசைகளிலும் பரவி நிறைந்திருந்த அரக்கர் படையினரை இராவணன் அழைத்திட எல்லை இல்லாக் கடல் போல் இலங்கை வந்து குவிந்தனரே அம்மூலப்படையினர்.
மூலப்படையினரை இராம இலக்குவருடன் போரிட்டு அழித்திட அனுப்பிய இராவணன் வானரப்படையினருடன் போர் புரிந்து அவர்களை அழித்திடத் தானே களமிரங்கினான் வானரப்படைகளைக் காக்குமாறு இலக்குவன், அனுமன் மற்ற யாவர்க்கும் பணித்த இராமன் தானொருவனாய் வில்லேந்ததி அரக்கர் படையுடன் போர்புரிந்திட முன்னே வந்தான். இராமனின் வில்லிலிருந்து பெய்த அம்பு மழையில் அரக்கர் படை அல்லலுற்று அழிந்தது இராமன் பின்னர் இராவணன் இலக்குவனுடன் போரிடும் இடத்தை சென்றடைந்தான் வாயுமகன் தோள் மீதமர்ந்து சமர் புரியும் இலக்குவன் விபீடணன் அளித்த யோசனைப்படி
தசமுகன் எய்த கணைகளையெல்லாம் உரிய மாற்றுக்கணைகளால் முறியடித்தான் எதிரிக்கு துணையாயிருந்து குறிப்புகளைக் கூறிக்கொண்டிருக்கும் விபீடணனைக் கண்டு குருதி கொதித்த இராவணன் மயன் கொடுத்த கொடிய வேலாயுதத்தை அவன் மேல் வீசிட சரணம் என வந்தடைந்த விபீடணனைக் காப்பது கடமையெனக் கருதிய இலக்குவன் மரணம் வந்தாலும் பொருட்படுத்தாது அவ்வேலை தன் மார்பில் ஏற்று கீழேசாய்ந்தானே.
கடுஞ்சினம் கொண்ட விபீடணன் இராவணன் தேர்க்குதிரைகளை பாகனை வீழ்த்திட நெடுவானில் சென்ற இராவணன் தம்பி மேல் அம்புகள் எய்து இலங்கை சென்றடைந்தானே வீழ்ந்து கிடந்த இலக்குவனைக் கண்டு யாவரும் கலங்கி நிற்க சாம்பவான் சொற்படி
விரைந்து சென்று சஞ்ஜீவனி கொணர்ந்து இலக்குவன் உயிர் காத்தானே வீர அனுமன். விழித்தெழுந்த இலக்குவன் விபீடணன் நலம் குறித்து கேட்டறிந்து மகிழ அவ்விடம் மகிழ்ந்து நின்ற இராமன் இலக்குவனையும் அனுமனையும் உளமாரத்தழுவி வாழ்த்தினான்.
ஒற்றர் மூலம் அரக்கர் படை அழிவையும் இராம இலக்குவர் உயிருடன் இருக்கும் செய்தி பெற்ற இராவணன் துணுக்குற்று போர்க்கோலம் பூண்டு தேரேறி போர்க்களம் புகுந்தானே. முக்கண்ணன் இந்திரனிடம் அவன் தெய்வீகத்தேரை இராமனிடம் அனுப்பப் பணித்திட தக்கதருணத்தில் தேர்ப்பாகன் மாதலி தேரை இராமன் முன் கொணர்ந்து நிறுத்தினானே.
இலங்கை வேந்தன் இராவணனுடன் வந்த மிகப் பெரிய அரக்கர் படையை இராமன் தன்கையில் ஏந்திய வில்லினின்று பொழிந்த கணைகளால் அழித்து ஒழித்தானே! விரைவாய் இராமனை நோக்கி தேரினைச் செலுத்த பாகனை இராவணன் பணித்திட நேராய் இராமன் முன் தேரைக் கொண்டு நிறுத்தினானே இராவணன் பாகனும்.
நேருக்கு நேர் இராமனும் இராவணனும் தம் இணையற்ற வில்களை ஏந்தி
போருக்குத் தயாராய் தத்தம் தேர்களில் எதிர் கொண்டு நின்றனரே!
இராவணன் எய்த அம்புகளையும் வீசிய ஆயுதங்களையும், படைக்கலங்களையும் இராமன் தன் வில்லினின்று பொழிந்த அம்பு மழையால் செயலிழக்கச் செய்தானே. விண்ணில் திடுமென இராவணன் தன் தேருடன் எழுந்து வானரப் படைகளை அழிப்பதைக் கண்ணுற்ற இராமன் தனது தேரையும் வானில் செலுத்த பாகன் மாதலிக்கு கூறினான். வான் வெளியில் இருவரும் தத்தம் தேர்களில் சுற்றிச் சுற்றி கடுஞ்சமர் புரிந்தட
காணக் குழுமிய தேவர்கள் யாவரும் ஒன்றும் செய்வதறியாது திகைத்து நின்றனரே! இலங்கை வேந்தன் தேர்க் கொடியை இராமன் அம்பெய்து வீழ்த்திய பின்னர் அவன் வீசிய
கலங்க வைக்கும் அத்திரங்களையும் ஆயுதங்களையும் தக்க எதிர் படைகளால் அழித்தான். தானெய்த கணைகள் கொய்த இராவணன் சிரங்களும் கரங்களும் மீண்டுமீண்டு முளைத்திட பெய்ததே அம்பு மழை இராமன் வில்லிலிருந்து சிதறி வீழ்ந்தனவே இராவணன்
தலைகள்! பின் இராமன் இராவணன் மேனி முழுதும் வில்லம்புகளால் மூடச்செய்தான்
தன் நிலை குலைந்த இராவணன் தளர்வடைந்து செயலற்று மூர்ச்சித்து விழுந்தான் . சற்று நேரத்தில் தெளிவுற்ற இராவணன் மீண்டும் சமர் புரிய முயற்சித்திட
இற்று இரு துண்டாய் அவன் வில் நிலத்தில் விழும்படியாய் இராமன் வீழ்த்தினான். நான்முகனின் கொடிய அம்பு ஒன்றை இராமன் இறுதியில் எய்திட நான்கு முகங்களுடன் தசமுகனின் மார்பில் அது பாய்ந்து உடலக் குடைந்து உயிரைக் குடித்து வெளிப்பட்டதே! தேரிலிருந்து இராவணன் உடல் சினம் மிக்க முகம் தரையில் பட வீழ்ந்ததுவே!
தன் தேரிலே இராமனும் பூமியிலிறங்கிப் பின்னர் தேரை வானுலகிற்கு அனுப்பினான்.
முறைப்படி இறுதிக்கடன்களை அண்ணனுக்கு செய்திடு என விபீடணனிடம் இராமன் கூறிட முறையிலா காமத்தால் தன் முடிவைத்தேடிக்கொண்ட அண்ணனை எண்ணி அழுதான். மண்டோதரி கணவன் இராவணன் மரணச் செய்தி அறிந்து போர்க்களம் அடைந்து
மாண்டு கிடந்த அவன் உடலைக் கண்டு அதன் மீது வீழ்ந்து கதறிக் கதறி அழுதாள். எள்ளிருக்கவும் இடமின்றி உடல் முழுதும் அம்புகள் உயிரைத்தேடி துளைத்தனவோ உடலுள்ளிருக்குமோ சீதைமேல் வைத்த காதலென அதைத் தேடினவோ என்றெல்லாம் தலைசிறந்த கற்பரசிகளில் ஒருவளாய் போற்றப்படும் மண்டோதரி அரற்றி அழுது தலைவன் இராவணின் மார்பைத் தன் தளிர்க் கரங்களால் தழுவி உயிர் துறந்தாளே! அண்ணன் இராவணனுக்கும் அவன் மனைவி மண்டோதரிக்கும் மற்றும்
எண்ணற்ற மாண்ட அரக்கர்களுக்கும் விபீடணன் ஈமக்கடன்களை செய்து முடித்தானே!
விபீடணனுக்கு இலங்கை வேந்தனாய் இராமன் பணித்தபடி இலக்குவன் முடிசூட்டினானே. விபீடணனை இராமன் சீதையை சீருடன் அழைத்து வருக என அனுப்பினானே.
அலங்கரித்த சீதையை இராமன் கட்டளைப்படி விபீடணனும் அழைத்து வந்திட
படம் விரித்த பாம்பென இராமன் திடீரென சினம் கொண்டு சீதையை நோக்கி சற்றும் எதிர்பாரா வண்ணம் அவள் கற்பு மேல் ஐயம் எழுப்பி கடும் சொற்களை வீசிட முற்றும் நிலை குலைந்த சீதை இலக்குவனை தீ வளர்த்திடச் செய்து அதை வலம்வந்து சொல்லாலோ மனத்தாலோ செயலாலோ களங்கமுற்றிருந்தால் எரித்தெடென தயக்கமே இல்லாமல் தீயினுள் புகுந்தாளே அவள் கற்புக்கனலின் வெப்பம் சுட்டெரிப்பதை
தாங்க இயலாத அக்னித்தேவன் பெருத்த ஒலியுடன் சீதையைத் தன் கரங்களில்
தாங்கிய வண்ணம் மேலுழுந்து வந்து சீதையை இராமனிடம் தந்தானே.
சிவனும் பிரமனும் அங்கு வந்து இராமனே திருமால் சீதை இலக்குமி என உணர்த்தினரே. தசரதனும் வானுலகத்திருந்து வந்து உளமகிழ்ந்து வேண்டும் வரம் கேட்க இராமனிடம் கூற கொடியவளென கைவிட்ட கைகேயியையும் அவள் மகன் பரதனையும் மீண்டும் ஏற்று அடியவனெனக்கு வரம் தரவென இராமன் வேண்ட தசரதனும் அளித்து வானுலகமேகினான்
விரைந்து சென்று பரதனை அடைந்திட ஊர்தி ஏதேனுமுளதா என இராமன் வினவிட மறைந்த இராவணன் குபேரனிடமிருந்து கவர்ந்த புட்பக விமானத்தை விபீடணன் அளித்திட வானரர் அரக்கர் அவர்கள் தலைவர்கள் யாவரும் மனித ரூபத்தில் விமானத்தில் அமர்ந்திட இராமன் இலக்குவன் சீதை மூவரும் அமர்ந்தபின் விமானம் விண்ணில் எழுந்ததுவே. செல்லும் வழியெலாம் இராமன் சீதைக்கு இலங்கை நகர், போர்க்களம் சேதுப்பாலம் என எல்லா இடங்களையும் காட்டிக்கொண்டே செல்ல கிட்கிந்தையில் விமானத்தையிறக்கி வானரப் பெண்களையும் அழைத்து வந்து விமானத்தில் ஏற்றிட சீதை கூறிட
வானரத் தலைவன் அவ்வாறே செய்து முடித்திட விமானம் தன் பயணம் தொடர்ந்ததே. மாமுனிவன் பரத்துவாசன் ஆசிரமத்தின் அருகிலிருந்த இடத்தில் விமானத்தை இறக்கி அம்முனிவன் விருந்தினராய் தங்கி அவர் ஆசி பெறவேண்டுமென இராமன் விழைந்தான். வேதங்களில் வல்ல பரத்துவாசன் அனைவரையும் மிக்க அன்புடன் உபசரித்திட அவன் பாதங்களில் இராமனும் யாவரும் வீழ்ந்து வணங்கி அவர் உளமார்ந்த ஆசியை பெற்றனரே. பரதனிடம் சென்று தான் வரும் செய்தியைக் தெரிவித்திடென அனுமனிடம் இராமன் கூறிட துரிதமாய் பறந்து வழியில் குகனிடமும் கூறிய பின் நந்திக்கிராமம் சென்றடைந்தானே.
வனவாசம் முடிந்து வர வேண்டிய அன்னாளில் அதுவரை இராமனைக் காணாது மனக்கிலேசம் அடைந்த பரதன் சத்துருக்கனனை தீ வளர்க்கச் செய்து அதில்
புகுந்து உயிர்விட ஆயத்தமானபோது தன் பேருருவத்துடன் விண்ணிலிருந்து குதித்து அங்கு வந்த அனுமன் இராமன் வரும் செய்தியை அறிவித்து தீயையும் அணைத்தானே. இராமன் அனுப்பிய அடையாள மோதிரத்தை அனுமன் பரதனுக்கு காட்டிட யாவரும் இராமனின் மோதிரத்தைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனரே. புட்பக விமானத்தில் இராமனும் யாவரும் அவ்விடம் அடைந்து நிலத்தில் இறங்கினரே. வசிட்ட முனிவர் பின்னர் கைகேயி, கோசலை, சுமித்திரை அன்னயரை இராமன் வணங்கினான் இரண்டு பாதுகைகளையும் பக்தியோடு பாத காணிக்கையையாய் அளித்து வணங்கிய பரதனை தன்னிரண்டு கரங்களாலும் தூக்கி நிறுத்தி இராமன் நெஞ்சாரத் தழுவி விழினீர் பெருக்கினானே! பின்பு இராமனும் அவன் தம்பிகளும் பழைய தோற்றங்களைக் களைந்து சரயு நதியில் நீராடி நன்கு அலங்கரித்த தோற்றத்தோடு தங்கத் தேரினில் அயோத்தி நகர் சென்றடைந்தனரே. வானரப் பெண்டிர் வானவர் பெண்கள் வடிவினராய் சுற்றி அமர்ந்து உடன் வர விமானத்தில் சென்று சீதையும் அயோத்தி அடைந்தாளே.
இராமன் முடிசூட்டு விழாவிற்கு மறு நாளே நல்லனாளென நேரத்தையும் வசிட்டன் குறித்திட நான்முகன் ஆணைப்படி மயன் வியத்தகு மண்டபமொன்று கட்டி அமைத்தான் சுக்ரீவன் ஆணைப்படி ஏழுகடல் மற்றும் புண்ணிய நதிகளின் நீர்களை அனுமன் கொணர்ந்தான் தங்க பீடமொன்றில் இராமனும் சீதையும் திருமால் இலக்குமியென அமர்ந்து
மங்கல ஒலிகளும் வாத்திய ஒலிகளும் வேத ஒலிகளும் முழங்க மங்கள நீர் முழுக்காடினரே.
அனுமன் அரியணையைத் தாங்கிட அங்கதன் உடைவாளை ஏந்தி நின்றிட
பரதன் வெண் கொற்றக்கொடை பிடித்திட இலக்குவ சத்துருக்கனர் வெண்சாமரம் வீசிட வேத விற்பன்னன் வசிட்டன் இராமனுக்கு முடிசூட்டினானே! அரக்க குரு சுக்கிரனும் தேவ குரு வியாழனும் இட்டமுறைப்படி இராமன் அரசு முடியைத் தலையில் சூடினானே இராமன் இளையவன் பரதனுக்கு இளவரசனாக முடிசூட்டி மகிழ்ந்தானே.
அரியணையில் அரசி சீதையுடன் அமர்ந்த இராமன் வந்த விருந்தினர் யாவர்க்கும் உரிய முறையில் பரிசுகளித்து கௌரவித்து பேருவகையில் ஆழ்த்தினான் அண்ணல் இராமன் அனுமனை நெஞ்சாரத் தழுவுக என்று அருகில் அழைத்தான் அன்னை சீதை அழகிய முத்தாரமொன்றை அன்புடனும் ஆசியுடனும் அளித்தாள் தரங்கம்சூழ் இலங்கையின் புதிய வேந்தன் விபீடணனுக்கு தன் குலதனமான
அரங்கனாதன் வழிபாடு விக்ரஹத்தை மனமுவந்து இராமன் அளித்தான் பின்னர் யாவர்க்கும் அவரவர் இடங்களுக்குத் திரும்பிட இராமன் விடை கொடுத்தனுப்பினான்

அன்னவர் யாவரும் தத்தமிடங்களுக்கு மன நிறவுடனும் மகிழ்ச்சியுடனும் சென்றடைந்தனரே.
மேல் உலகத்திருந்து இவ்வுலகம் வரை உள்ள ஈரேழு உலகத்தவரும் போற்ற இராமன் பால் போன்ற தூய உளம் கொண்ட தம்பியருடன் பல்லாயிரம் ஆண்டுகள் அரசாண்டானே!

இராம கதை முற்றிற்று சுபம்

பின்னவர் மூவரும் அன்புடன் சூழ்ந்திருக்க
தன்னவள் சீதையொடு இராமன் வீற்றிருக்க
அனுமன் இராமன் திருவடியில் அமர்ந்திருக்க
என்றுமென் நெஞ்சில் நிறைந்த காட்சியாகுமே

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.