Category: Featured

Featured

  • நான் அறிந்த சிலம்பு – 81 (22.07.13)

    மலர் சபாkovalan and vasanthamalai

    புகார்க்காண்டம் – 08. வேனில்காதை

     

    வசந்தமாலை, கடைவீதியில் கோவலனைக் கண்டு மாதவி எழுதிய திருமுகத்தைச் சேர்த்தல்

    அங்ஙனம் மாதவி கொடுத்த
    மாலையைக் கையில் வாங்கிய
    வேல் போன்ற செவ்வரி மேவிய
    நீண்ட கண்களை உடைய வசந்தமாலை,
    கோவலனைத் தேடிச் சென்று
    கூலங்கள் செறிந்திருந்த வீதியில்
    அவனைக் கண்டு
    அக்கடிதத்தை அவனிடம் கொடுத்தாள்.

    கோவலன் மாதவியின் திருமுகத்தை மறுத்தல்

    வசந்தமாலை தந்த கடிதத்தை
    வாங்க மறுத்த கோவலன்
    பின்வருமாறு கூறலானான்.

    நெற்றியில் திலகமும்
    அதன் மேல் கூந்தலும்
    புருவம் எனச் சிறிய கரிய வில்லும்
    கண்கள் எனக் குவளை மலரும்
    மூக்கு எனக் குமிழ் மலரும்
    வாய் எனக் கொவ்வைக் கனியும்
    உறுப்புகளாகக் கொண்டு….

    என் மேல் காதல் கொண்டவள் போல்
    மதர்த்த எண்ணத்தோடு
    என் முன்னே அன்றொரு நாள்
    இங்ஙனம் தோன்றி நடித்தாளே மாதவி..
    வசந்த மாலையே!
    இதுதான் அவள் நடித்த கண்கூடு வரி.

    கூந்தல் என மேகத்தைச் சுமந்து
    அதன் சுமை தாங்காமல் வருந்தி
    ஒளியைப் பொழியும்
    மதி போன்ற முகம் தன்னில்
    கண்கள் எனக் கயல்மீன்கள்
    உலாவித் திரிகின்ற
    தம் அழகை வெளிப்படுத்தி
    தேன் செறிந்த தன் பவள வாயைத் திறந்து
    ஒளியைத் தருகின்ற இளமுத்து போன்ற
    புன்னகையைக் காட்டி

    நான் ‘வா’ என்றழைத்தால் வந்தும்
    ‘போ’ என்று சொன்னபோது சென்றும்
    உண்மையாய் இருப்பவள் போல் நடப்பாளே..
    அந்தக் கரிய நெடுங்கண்ணி..
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த காண்வரி.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 72 – 77
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

    படத்துக்கு நன்றி
    http://dinamani.com/weekly_supplements

     

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை

    சாகர் பொன்னியின்செல்வன்

    8. தென் திசைப் பயணம்.

    அல் ஹுசைன் மசூதி படம் : சாகர்

    sa 1

    எகிப்தின் மிகவும் புராதனம் வாய்ந்த அங்காடிகளில் ஒன்று கான் அல் கலிலி (Khan el Khalili Bazaar)அங்காடி. துருக்கியில் இஸ்தான்புல்லில் உள்ள எகிப்திய அங்காடி மிகவும் பழமை வாய்ந்தது, அதனைப் பார்த்து நாங்கள் பிரமித்தது இப்போது நினைவுக்கு வந்தது. இந்த அங்காடியினைத் துருக்கிய அங்காடி என்றும் அழைத்தனர். இந்த அங்காடி 14ம் நூற்றாண்டில் மல்முக் வம்சத்தினரால் கட்டப்பட்டது. மல்முக் வம்சத்தினர் துருக்கிய ஓட்டமன் பேரரசர்களின் ஒருவகை அடிமை வம்சத்தினர்.

    சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து புழங்கும் இந்த முக்கிய ஸ்தலம் சமீபத்தில் வன்முறையாளர்கள் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இருமுறை பலியானது. மேல்நாட்டுப் பயணிகள் அதிகம் வரும் இந்த இடம் என்பதால் 2005 மற்றும் 2009ல் இந்த அங்காடி தற்கொலை படை தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானதில் பல உயிர்கள் பலியானது வருந்தத்தக்கது. இவற்றைத் தொடர்ந்து எகிப்திய சுற்றுலா வருவாய் குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.

    சிறிது நேர தூரம்தான் என்றாலும் நாங்கள் வந்து சேர்வதற்கு ஐந்தரை மணி ஆகிவிட்டது. எங்கள் ரயில் எட்டு மணிக்கு எனவே எங்களால் அங்கு சிறிது நேரம்தான் செலவிட முடிந்தது.

    சென்னையில் உள்ள தியாகராயநகர் அங்காடிகளை போல் ஒரே கூட்டம். எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணக் காவலர் வேறு.வண்டியை விட்டு இறங்கியவுடன் கண்ணில் முதலில் தென்பட்டது அல் ஹுசைன் மசூதி(Al Hussain Mosque) தான். கைரோவின் மிக புராதான மசூதிகளில் ஒன்று இந்த பெரிய மசூதி . முஹமது நபியின் பேரர் முகம்மது ஹுசைன் இப்ன் அலியின் (Mohamad Hussain Ibn Ali) தலை இங்கு அடக்கம் செய்யபட்டிருப்பதாகவும் அதனால் இது இஸ்லாமியரின் புனித தளங்களில் ஒன்று என்று மஹ்மூத் கூறினார். 1154ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதி 19ம் நூற்றாண்டில் புதுபிக்கபட்டுள்ளது. இந்த முசூதியில் உள்ள மற்றொரு புனித பொருள் உலகில் உள்ள பழமையான குரான்களில் ஒன்றாகும். இந்த புனித ஸ்தலத்தில் முஹம்மது ஹுசைனின் மகத்துவத்தை விளக்குவதாகச் சொல்லும் ஒரு சலவைக் கல், “ஹுசைனும் நானும் ஒன்று, என்னை விரும்புவர்கள் அவரையும் விரும்புவர்” என்று பறை சாற்றுவதகவும் கூறினார்.

    அந்திவேளை தொழுகை நேரம் என்பதால் எங்களால் உள்ளே போகமுடியவில்லை.அடுத்ததாக நாங்கள் அங்காடிகளுக்குள் நுழைந்தோம். எங்கு பார்த்தாலும் எகிப்து தேச கலைப்பொக்கிஷங்கள், சிறியதாகவும் பெரியதாகவும் கண்களைக் கவர்ந்தன. பிரமிடுகள், எகிப்திய கடவுள் சிலைகள், ஸ்பின்க்ஸ் உருவங்கள் மற்றும் ஒபெளிஸ்க் எனப்படும் நீண்ட தூண்கள் என்று பலவிதமான பொம்மைகள். .

    சிலை வழிபாடு இல்லாத இஸ்லாம் மதம் போற்றும் நாடான எகிப்தில் இவ்வளவு விதமான சிலைகள்! இந்த சிலைகளையும் பண்டை எகிப்திய கோவில்களையும் கலையாகவும் அன்னிய செலாவணி ஈட்டும் நல்ல வியாபாரம் என்ற வகையில் புரிந்தமையால் இவற்றை எகிப்தியர்கள் நல்ல முறையில் உபயோகித்துக் கொண்டனர்.

    மீண்டும் ஷாருக், அமிதாப்பச்சன் , கரீணா கபூர் என்ற அழைப்புகள் எங்களை எதிர்கொண்டன. காந்திஜி என் கடையில் வாங்கினார் நீங்களும்தான் வாங்குங்களேன் என்ற வியாபார தந்திரம் வேறு. ஹோரஸ், ரா, போன்ற கடவுள் பொம்மைகளை ரசித்துவிட்டு மெல்ல நகர்ந்தோம்.

    எகிப்திய பருத்தி ஆடைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை, அந்த ஆடைகளின் சிறப்பு அதன் மென்மை தன்மை, இந்தப் பருத்தி ஆடைகளில் பண்டை எகிப்திய ஓவியங்களையும் கோவில்களையும் வரைந்தும், அச்சு செய்தும் விற்றனர். கிளியோபட்ரா (Cleopatra), ஹத்ஷேபுட்(Hatsheput) , ராமேசெஸ் (Rameses) போன்ற எகிப்திய ராஜவம்சதினர் மற்றும் பிரமிட் மற்றும் எகிப்திய கடவுள் வடிவங்கள் பெரும்பாலாகக் காணப்பட்டன!

    அரபிய தேசங்கள் என்றாலே ஜீணிகள் கொண்ட அற்புதவிளக்கு மிகவும் பிரசித்தம் இங்கேயும் அதுபோல வண்ண வண்ண வகைவகையான அற்புத விளக்குகள்.என்ற விளக்கில் எந்த ஜீணியோ?!

    கடைக்கடையாக பார்த்தவரே நடந்து போனதில் நேரம் போனதே தெரியவில்லை. மஹ்மூத் வந்து எங்களை அழைத்தும் தான் ரயிலுக்கு நேரமானது தெரிந்தது.

    காண் அல் கலிலி அங்காடி

    படம்: விக்கிபிடியா.

    sa 2

    அரைமணிநேர பயணத்தில் கிஸா ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். அப்துல் அங்கே எங்களுக்காகக் காத்திருந்தார். மஹ்மூதிடம் விடை பெற்றுக்கொண்டு நாங்கள் எங்கள் தென் திசை பயணத்தினை எதிர்நோக்கி உள்ளே சென்றோம்.

    உள்ளே எங்கு பார்த்தாலும் தமிழ். கூட்டம்கூட்டமாக இந்தியர்கள். என் மனைவி உடனே அவர்களில் சிலரைப் பார்த்து விசாரித்துப் பேசி வந்துவிட்டார். அவர்கள் எல்லாம் சென்னையின் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் என்றும் அணிவரும் எங்களைப் போலவே லக்சொருக்கு செல்கின்றனர் என்றும் அறிந்துகொண்டார். அவர்கள் ஒரு முழு சொகுசுப்படகையும் தனியாக ஏற்பாடு செய்திருந்தனர்.

    ரயில் வரும் நேரம் ஆனது! மெல்ல ஒரு வண்டி ரயில் நிலையத்துக்குள் வந்தது. ஒரு வருடம் குளிக்காத பிச்சைக்காரனைப் போல் ஒரே அழுக்கு. எல்லா ஜன்னல்களும் உடைந்து பார்க்கவே பயமாக இருந்தது. எங்கள் பயத்தை உணர்ந்தது போலவோ என்னவோ அப்துல்,

    “இது சாதாரண வண்டி, உங்கள் ரயில் சொகுசு வண்டி அது இன்னும் சிறிது நேரத்தில் வரும்” என்றார்.

    “எவ்வளவு நேரத்தில் வரும்” என்று வருண் “கேட்க வரும் நேரத்தில் வரும்” என்று அவர் பதிலளித்தார்.

    எங்களைப் போலவே இன்னும் சில குடும்பங்களும் ரயிலுக்குக் காத்திருந்தன. அவற்றில் சில மெம்பிஸ் டூர்ஸ் வழிகாட்டிகளோடு காத்திருந்தனர். அப்துல் என்னிடம் ஒரு கைப்பேசியைக் கொடுத்தார். எங்களை லக்சொரில் மற்றொரு மெம்பிஸ் துணைவர் எதிர்கொண்டு அழைத்துச் செல்வார் என்றும் சொன்னார்.

    பேசிக்கொண்டேயிருக்கும்போது மெல்ல எங்களைத் தெற்குநோக்கி அழைத்துச் செல்ல அஸ்வான் நோக்கிச் செல்லும் சொகுசு துரித ரயில்வண்டி வந்து சேர்ந்தது.

    (தொடரும்)

    Share
  • வாலியின் புகழ் வாழியவே…..!

     

    வே.ம.அருச்சுணன்– மலேசியா

    stars-with-vaali-1000-in-vasanth-tv-stills_4_165414123
    தமிழைக் கற்றவருக்கு
    ஆயுள் நீளம் என்பார்
    உன் நாவில் விளையாடியது
    தேன் சிந்தும் தமிழ் அல்லவா…..!

    மனம் குளிர்ந்த தமிழன்னை
    உமக்கு நீண்ட ஆயுளைத்தந்தார்
    82 அகவையிலும் இளசுகளின்
    உள்ளங்களைத் துள்ளல் நடை போடவைத்த
    வாலிபக் கவிஞன் நீ………..!

    அற்புதக் கவிகளால்
    கவியரசு கண்ணதாசன் மனம்
    கவர்ந்த கவிஞனே
    கலைஞர் காவியம் பாடிய
    காவியக் கவிஞனே
    உனைத்தவிர வேறு யாரும் அப்படியொரு
    காவியத்தைச் செதுக்கி இருக்க முடியாது…………..!

    பெற்ற அன்னை இட்டபெயர் இரங்கராஜன்
    தமிழ் அன்னை சூட்டிய பெயர் வாலி
    பாடல்களின் பிரம்மனே
    வாலியின் பெயரே உனை
    சிகரத்தில் நிறுத்தியது
    மக்களின் மனங்களில் குதி போட்டு நின்றது………!

    நீ வடித்த பாடல்கள் சாகா வரம் பெற்றவை
    பத்தாயிரம் பாடல்கள் தந்து
    தமிழுள்ளங்களைக் குளிர வைத்தாய்
    கேட்போர் வாழ்வை நிமிரவைத்தாய்…………!

    இரவும் பகலும் உன்
    கடும் உழைப்பைக் கண்டு
    இயற்கை உன்னிடம் தலை வணங்கியது
    உழைப்பே மனிதனை உயர்த்தும்
    என்பதற்கு ஓர் உதாரணம் நீ
    தன்னம்பிக்கையின் சக்கரவர்த்தி நீ………!

    சோதனைகளைச் சாதனையாக்கிய
    கவிஞனே பல்லாண்டுகள் இன்னும்
    வாழ்வாய் என்ற கணக்கில்
    மண் விழுந்து விட்டதே
    தரைமேல் பிறக்க வைத்த இறைவன்
    எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்………!

    நீ மறைந்தாலும்
    உன் வைர வரிகள் பல்லாண்டுகள்
    எங்களை வாழவைக்கும்
    வாழியவே உன் புகழ்………….!

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (19)

     பவள சங்கரி

    “ஒருவரை விடுவிக்க வெறுமனே அவருடைய சங்கிலிகளை உடைத்தெறிவது மட்டுமல்லாமல் அடுத்தவர்களின் சுதந்திரத்தை மதிப்பதோடு அதை மேம்படுத்தும் வகையில் வாழ்வதில்தான் இருக்கிறது.
    _நெல்சன் மண்டேலா

    tumblr_lxsk9376ZK1qfwg0ho1_500

    அறியாததை அறிந்து, தெரியாததற்குள் காலடி வைக்கலாமா?

    நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டு வாளாவிருக்கலாமா? அல்லது நம்மை மீறி நடப்பவைகளை எதிர்த்து நின்று போராடலாமா? அல்லது விட்டுவிலகி வேறு பாதையை நாடலாமா?

    சமீபத்தில் என் நண்பர் ஒருவரை வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். அவர் சமீபத்தில் மிகப்பெரிய வியாபார காந்தமாக மாறிவிட்டதாகக் கேள்விப்பட்டிருந்தேன். உண்மையில் அவரை எனக்குத் தெரியும் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கும் பெருமையாக இருந்தது. காரணம் வாழ்க்கையின் அடி மட்டத்திலிருந்து உழைப்பினால் மேல் நிலைக்கு வந்தவர். அன்று அவரைப் பார்த்தபோது என் கற்பனைக்குச் சற்றும் எட்டாத நிலையில் மிகவும் வேதனையாகக் காணப்பட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய வியாபார பங்குதாரர் தன்னை ஏமாற்றிவிட்டு பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்று புலம்பினார். இத்தனைக்கும் அந்தக் கூட்டாளி இவருடைய நெருங்கிய நண்பர். தான் ஏமாற்றப்பட்டதால், வேதனையிலும், கோபத்திலும் உழன்று நொந்து போயிருந்தார். இது நடந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆன நிலையில் இன்னும் அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல், தன் வேதனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் முகமாக, இந்த ஏமாற்றத்திற்கு தர்க்கரீதியான ஒரு காரணத்தைத் தேடி தன் மூளையை கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கிறார். எப்படியாவது அதை அறிந்தே ஆக வேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறார்.

    ஆம், அவர் இன்னும் ஓராண்டுக்கும் மேலாக எவ்வளவுதான் உறுதியாக முயன்றாலும், அதற்கான விடை என்னவோ மேலும் விரக்தியான நிலைதான். எவ்வளவு அதிகமாக அதனை அறிய முற்படுகிறாரோ அவ்வளவு குழப்ப நிலைக்குத் தள்ளப்படப்போகிறார் என்பதே நிதர்சனம். அகத்தின் அழகு முகத்தில் எள்ளும் கொள்ளுமாக வெடிக்க, இனி எவரையும் தன் வாழ்நாளில் நம்பவே கூடாது என்ற எண்ணத்தில் சுற்றிச் சுற்றி வருகிறார். இறுதியில் மனமாற்றத்திற்காகத் தன் ஆன்மீகக் குருவைச் சந்தித்தவர், ஓரளவு சமாதானம் அடைந்தவுடன், எல்லாம் தன் துரதிருஷ்டம் என்ற முடிவோடு, யதார்த்தமான நிலைக்குத் திரும்பினார். சில விசயங்கள் ஏன் நடக்கிறது என்று நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத நேரத்தில் அதைவிட்டு விலகிவிடுதல் உத்தமம் இல்லையா. அதை விடுத்து அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு கால விரயமும், மன நிம்மதியையும் இழப்பதைக் காட்டிலும் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை உணர வேண்டும். நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற நிலை வரும்போது அதைக் கடந்த காலமாக ஒதுக்கிவிட்டு, அது எவ்வளவு வேதனையானதாக இருப்பினும் சரி, அடுத்ததை நோக்கி நகர ஆரம்பித்துவிட வேண்டுமல்லவா. இது போன்ற ஏமாற்றுக்காரர்களை, நம்பிக்கை துரோகிகளை, நியாயமும், ஒழுக்கமும் கெட்டவர்களை பணியில் மூழ்கியிருக்கும்போது அறிய முடியாமல் போவதும் இயற்கையே. உலகம் முழுவதும் இது போன்ற ஏமாற்றமான முடிவை ஏற்படுத்துகிற உள்குத்து ஆசாமிகளும், கூட இருந்தே குழி பறிப்பவர்களும், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தச் சம்பவத்தில், நண்பர் ஆரம்பத்திலேயே, தான் அறியாமல் அவரிடம் ஏமாந்ததை உணர்ந்து கொண்டு அடுத்து ஆக வேண்டிய காரியத்தில் கவனம் கொண்டிருந்தால் எத்தனையோ காரியங்களை முடித்திருக்கக்கூடும். தன்னை சரியானவன் என்று நிரூபிப்பதற்கு ஒருவர் அதீத முயற்சி மேற்கொள்ள வேண்டியதாகிறது. தான் அதிகம் நேசிக்கும் தம் குடும்பத்தினரைக்கூட விமர்சிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியில் அதனாலும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி வந்துவிடுகிறது.

    வேலையைச் செய்வதற்கு மாற்றுத் திறனாளிகள் படும்பாடு வெளிப்படையாகத் தெரியும். ஆனால் மனதளவில் பிரச்சனைகளால் முடமாகிப் போனவர்களை பார்த்தவுடன் கண்டுபிடிப்பது அரிது. தங்களுக்குள்ளாகவே ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பார்கள். ஒரு கதை படித்தது நினைவிற்கு வருகிறது. காட்டுத்தீ பரவியிருந்த ஒரு பெரிய வனத்திலிருந்து மீட்கப்பட்டு , ஒரு கூண்டின் மூலமாக பயணப்பட்டு வந்து சேர்ந்த ஒரு பெரிய சிங்கம், தேவையான இயற்கை உணவு, அதிகமான நீர் வளம் என அதற்குத் தகுந்த தங்குமிடமாக இருந்தும் அந்தச் சிங்கம் அந்தக்கூண்டை விட்டு வெளிவர மறுக்கிறது. அந்தக் கூண்டிற்குள் இருப்பதே தனக்குப் பாதுகாப்பான சூழல் என்று எண்ணுகிறது. கூண்டின் கதவு பரவலாகத் திறந்த பின்னும் அது வெளியே வர மறுத்து, அந்தக் கூண்டின் ஒரு மூலையில் சென்று முடங்குகிறது. ஒரு சிங்கத்திற்கு கூண்டில் அடைந்து கிடப்பதைக்காட்டிலும் அதிகமாக வேறு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது. ஆனால் கூண்டிற்குள்ளிலிருந்து, தெரியாத புதிய உலகில் அடி எடுத்து வைப்பதைக்காட்டிலும் கூண்டிற்குள்ளேயே இறந்துபட்டாலும் தேவலாம் என்ற முடிவிற்கு வருகிறது. நம்மில் பலர் இந்த சிங்கத்தின் நிலையில்தான் இருக்கிறோம். நம்மைச் சுற்றி நாமே உருவாக்கிக் கொள்ளும் கூண்டில் அடைபட்டு வெளிவரத் தயங்குகிறோம். குறிப்பாக திருமண வாழ்க்கையில் தோல்வியுற்ற பல பெண்கள் அடுத்து வரும் நல்ல வாழ்க்கையைக்கூட ஏற்கத் தயங்குகின்றனர். வாழ வேண்டிய காலம் கடந்த பின்பு, உள்ளார்வமும், இழந்த இளமையையும் எண்ணி ஏங்கிப் போகின்றனர்.

    slide_8209_109366_large

    வலி நிறைந்த சூழலை விட்டு விலகி அதீதமான சுதந்திரம் பெறுவதற்கான வழி, முதலில் அந்தக் கூண்டை ஒப்புக் கொண்டு அதில் ஏறி வந்தாலும், விரைவில் அதிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகச் செயல்படத் துவங்கிவிட வேண்டும். ஆனால் கூண்டில் அடைபட்டுக் கிடந்தால் பாதுகாப்பற்ற சூழலும், துன்பத்திலிருந்து தப்பிக்கும் உபாயமும் கிடைக்காது. மாறாக துன்பச் சுமை கூடிக்கொண்டேதான் போகும். பழக்கப்பட்ட கூண்டைவிட்டு வெளியே வர வேண்டுவதெல்லாம், சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஆர்வம் மற்றும் புதிய சூழலை எதிர்கொள்ளும் துணிச்சலும் மட்டுமே!

    பரந்த உலகில் அறிந்த கூண்டிற்குள் அடைபட்டு சித்திரவதைபடுவதைக் காட்டிலும், அறியாத புதிய சூழலை துணிவுடன் எதிர்கொண்டு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்வதே வெற்றிப்பாதை அல்லவா!

    தொடருவோம்

     படங்களுக்கு நன்றி ;

    http://www.huffingtonpost.com/

    http://inspirational-images.tumblr.com/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (66)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !
    அன்பான வணக்கங்களுடன் உங்களுடன் அடுத்த மடலில் உறவாடுவதில் மகிழ்கிறேன். காலமாற்றம் மனிதர்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில் சில முன்னேற்றங்களாகவும், வேறு சில பின் தள்ளல்களாகவும் இருக்கின்றன.

    ஒவ்வொரு நாடும் காலத்தோடு தனது நாட்டு மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவே அந்நதந்த அரசாங்கங்களின் மூலம் முயற்சிக்கின்றன.

    ஆதிவாசிகளான காடுகளில் வாழ்ந்த மனிதன் இன்று நாகரீகமாக நகரங்களில் வசதிகளோடு வாழும் ஒரு நிலை மக்களின் தேவைகளின் நிமித்தமே சாத்தியமாயிற்று.

    நான் வாழும் இந்தப்புலம் பெயர் தேசமான இங்கிலாந்து நாட்டில் மக்களின் வாழ்க்கை முறையில் காலகாலமாக பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

    எத்தனையோ நூறு வருடங்களாகப் பொருளாதார வளர்ச்சியில் துரித முன்னேற்றத்தைக் கண்ட நாடு இங்கிலாந்து. பல கண்டு பிடிப்புகள், பல ஆராய்ச்சிகள் என்பனவற்றின் பிறப்பிடமாக இவ்விங்கிலாந்து தேசம் விளங்கியிருக்கிறது.

    ஆனால் இன்றோ பொருளாதார வீழ்ச்சி எனும் சிக்கலுக்குள் அமிழ்ந்து தள்ளாடிக் கொண்டிருக்கும் ஜரோப்பிய நாடுகளில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

    இப்பொருளாதாரச் சிக்கலுக்கு யார் காரணம் அல்லது இது ஏன் நிகழ்ந்தது எனும் ஆராய்ச்சிகளை ஒரு பக்கம் வைத்து விடுவோம். நம் முன்னே பூதாகரமாக இருக்கும் உண்மை நாம் பொருளாதாரச் சிக்கல் எனும் நிலைக்காட்பட்ட ஒரு தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே.

    அடிமட்ட மனிதனும் தன் அன்றாட வாழ்விற்கு அல்லாடக் கூடாது எனும் காரணத்திற்காகவே இங்கிலாந்தில் பல காலங்களாக “சமூக வாழ்வாதாரம் (சோஷல் வெல்வெயார்) “ எனும் ஒரு சலூகை அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    அதாவது வேலையின்றித் தவிக்கும் மக்களுக்கு அவர்களின் அன்றாடத் தேவைகளுக்காக ரசாங்கம் உதவிப் பணம் கொடுத்து வருகிறது.

    ஆனால் இத்தகைய சலுகையே இன்று மக்களின் சோம்பலுக்கு வித்திட்டு விட்டது எனும் கருத்தே பலரின் மத்தியில் மிகவும் பாரமான வினாவாக எழுந்துள்ளது.

    வேலையின்றி அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தையே தமது தொழிலாகக் கொண்டு வாழும் ஒரு பகுதி இன்று சமுதாயத்தில் உருவாகி விட்டது என்பது அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகக் காணப்படுகிறது.

    அரசியல்வாதிகளின் மத்தியில் காணப்படும் இந்த ஒருமித்த அடிப்படைக் கருத்துக்குக் காரணம் பொதுவான மக்களின் மனதில் அலையடிக்கும் பொதுக்கருத்துக் கணிப்பே.

    இத்தகைய “அரசாங்க உதவிப்பண” வாழ்வாளர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருந்தாலும் இவர்களைப் பற்றிய அன்றாட ஊடகங்களின் அங்கலாய்ப்புகளும், இவர்களின் சலுகைத் துஷ்பிரயோகத்திற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் அரசாங்கத்திர்கு வரிப்பணத்தைச் செலுத்தி ஒழுங்காக வாழும் மக்களின் மனதில் ஒருவகை ஆவேசத்தைக் கிளறி விட்டுள்ளது.

    இதற்கு மிக முக்கியமான காரணம் இன்றையப் பொருளாதாரச் சிக்கல் என்று சொன்னால் மிகையாகாது. அரசாங்கத்தின் வரவு செலவுக் கணக்கைச் சீர் செய்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துகிறோம் என்று கூறி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட இன்றைய கூட்டரசாங்கம் இந்த மூன்றரை வருடங்களில் அதற்கான வழி பல அரசாங்கத் திட்டங்களை கட்டுப்படுத்திப் பொதுத்துறைகளுக்கான செலவுகளைக் குறைப்பது என்று கூறி மக்களுக்கான சேவையில் பலரைக் குறைத்து விட்டது என்று கூறலாம்.

    தாம் தமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளுக்காகவே வரிப்பணத்தைச் செலுத்துகிறோம் ஆனால் தமக்கான சேவைகளைக் கட்டுப்படுத்தி, வேலையில்லாமல் வாழ்வோர்களுக்கான உதவிப் பணத்தை மட்டும் தாராளமாக வழங்குவது எவ்வகையில் நியாயமாகும் என்று பலரின் மனதில் சீற்றம் தோன்றியுள்ளது.

    அது மட்டுமல்ல மற்றைய நாடுகளில் இருந்து அகதிகளாகவும், குடியேற்றம் செய்பவர்களும் இதே சலுகைகளைப் பெறுவது எவ்வகையில் நியாயம் என்பது வலதுசார அரசியல்வாதிகளினதும், வலதுசார எண்ணங் கொண்டவர்களினதும் வாதம்.

    அதேசமயம் அரசாங்கம் செய்யும் ஆட்குறைப்பு முதலான பொருளாதாரக் கட்டுப்படுத்தும் கொள்கைகளின் மூலம் பதிவியிழந்த பலர் இத்தகைய உதவியகளைக் குறைப்பதன் மூலம் பாதிக்கப்படுகிறார்களே ! இவர்களை சோம்பேறிகள் என்று வாதிடுவது எவ்வகையில் நியாயமாகும் என்று வாதிடுகிறார்கள் மறுசாரார்.

    பணிபுரியும் போது மிகவும் வசதியாக பெரிய மனைகளில் வசித்து வந்தவர்கள் பதவியிழந்த பின்பும் அதே மனையில் வசிப்பதற்கு எதற்காக அரசாங்கம் அவர்களுக்கு உதவிப்பணம் கொடுக்க வேண்டும் ? வேலையை இழந்து விட்டால் அவர்கள் தமது பெரியமனைகளில் வசிக்க வசதியில்லை என்றால் தம்மால் பராமரிக்கக் கூடிய சிறிய மனைகளுக்கு இடம் மாறவேண்டியது தானே நியாயம் என்று வாதிடுபவர்கள் பலர்.

    நாம் பணிபுரியும் போது அனைவரையும் போலத்தானே வரிப்பணம் செலுத்தினோம் இப்போது அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையினால் பதவியிழந்த நாம் எமது இல்லத்தை விட்டு குடிபெயர்ந்து சிறிய இல்லங்களில் வசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயமாகும் என்பது மறு பகுதியினருடைய வாதம்.

    வேலையற்றோருக்கு கிடைக்கும் உதவிப்பணத்தை விட முறைவான தொலையே வேலை செய்யும் போது ஊதியமாகக் கிடைக்கிறது எனவே நாம் வேலை தேடிச் செய்வது எமக்கு நஷ்டமே என்பதால் அரசாங்க உதவிப்பணத்தில் வாழ்வதையே தமது பணியாகக் கொண்டோர்கள் இல்லாமலில்லை.

    இவர்களில் பலர் இதை மிகவும் வெளிப்படையாக ஏதோ தமது புத்திசாலித்தனம் போல தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் இதை ஊடகங்கள் வேறு ஊதிப் பெரிதாக்குகிறார்கள். அதுவும் அவர்கள் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றால் அதைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

    இந்த பொதுமக்களின் அபிப்பிராய அலையைத் தமக்கு சாதமாக்கிக் கொள்ள கூட்டரசாங்கத்தின் முக்கிய கட்சியான கன்சர்வேடிவ் கட்சி முயற்சிக்கிறது. அதன் பலனாக அவர்கள் கொண்டு வந்த பல புதிய சட்டங்கள் நேற்றிலிருந்து (15.07.2013) அமுலுக்கு வந்துள்ளன.

    இதன் விளைவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை
    அன்புடன்
    சக்தி

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இன்னம்பூர் பற்றிய தகவல்!..(2)

    விசாலம்

     

    திருஞான சம்பந்தர் “எண்திசைக்கும் புகழ் இன்னம்பர் “என்று இந்தத் திருத்தல ஈசனைப் பற்றி புகழ்ந்து பாடியுள்ளார். திருநாவுக்கரசரும் இவரைப்பற்றி “இன்னம்பரான் “என்று புகழ்ந்திருக்கிறார் . இத்தலத்திருநாதன் தன் பக்தன் சுதன்மனைக் காப்பாற்ற தானே கீழ்க்கணக்கராக மாறி சோழப்பேரரசர் முன் சென்று வரவு சிலவு கணக்குகளைச் சமர்ப்பித்தார் . இது என்ன கதை? சுதன்மன் என்ற சிவபக்தனும் அவன் தந்தையும் அந்தக் கோயிலில் கணக்கர்கள். முதலில் தந்தை பார்த்துக்கொள்ள பின் சுதன்மன் அதை ஏற்றுக்கொண்டான் . தினமும் வரவு செலவுகளை சண்டிகர் முன் ஒப்பித்து விடுவது அவன் வழக்கம் . சண்டீஸ்வரரே கணக்குகளுக்கு அதிபதி.  அவரே ஆடிட்டர்.  அவர் முன்னால் தப்பு கணக்கு காட்ட முடியாது. வரவுக்கேற்ப செலவும் இருக்கும் . அதற்கெல்லாம் சாட்சி சண்டிகேஸ்வரர்தான்.

    கோயில் திருப்பணி ஆரம்பமானது . பலர் நன்கொடையாக மரங்கள், சிற்பங்கள், பாறைகள் என கொடுத்தனர். அப்படிக் கொடுக்கும் போது சண்டிகேஸ்வரர் முன் நின்று தான் கொடுக்கப் போகும் பொருளைச் சொல்லி சம்மதம் வாங்கி கொடுப்பர். இதற்கெல்லாம் எழுத்து வழியாக கணக்கு வைத்துக் கொள்ளவில்லை எல்லாவற்றுக்கும் ஈசனே சாட்சி . திடீரென்று சோழ மன்னன் அந்தக்கோயிலுக்கு வந்து நடக்கும் பணிகளை பார்வையிட்டு பின் எல்லாவற்றுக்கும் ஏடுகள் மூலமாக கணக்கு காட்டவேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தார். சுதன்மன் ஈசனையே மனதில் நினைத்து கவலையின்றி வேலைகளை கவனித்தார். ஆனால் மன்னர் திரும்பவும் இதைப்பற்றி உடனே தகவல் சொல்லும்படி உத்தரவு பிறப்பிக்க சுதன்மனுக்கு இரவில் நித்திரை வரவில்லை. ஏதோ ஞாபகம் வந்ததைக் குறித்து எழுதி அனுப்பி வைக்கலாம் என்றால் பின்னால் ஏதாவது விட்டிருந்தால் தவறாகிவிடுமே ! குழம்பிப்போனான். பக்தன் கண் கலங்க விடுவாரா ஈசன்! கிளம்பிவிட்டார் தன் கணக்கர் சண்டிகேஸ்வரருடன் . சிவபெருமான் சுதன்மன் ஆனார். சண்டேஸ்வரர் கணக்குப் பிள்ளையானார் . பின் என்ன ? மிகத் துல்லியமான கணக்கு மன்னர் முன் சமர்ப்பிக்கப்பட்டது. பேரரசர் பிரமித்துப் போனார் . புகழ்ந்தார் பின் சுதன்மனுக்கு தலைமை கணக்கர் என்ற சான்றிதழ் வழங்கினார் . பின் தன்னிடம் இருந்த கணக்கர்களை சுதன்மனிடம் கணக்கு படிக்க அனுப்பிவிட்டார். நடந்த விவரம் எல்லாம் புரிந்தவுடன் சுதன்மன் “எல்லாம் என் ஈசனின் கருணை “என்று மெய்யுருகிப் போனான். சுதன்மனுக்கு உதவிய “எழுத்தறிநாதர்”எழுந்தருளியிருக்கும் இடம் தான் இந்த இன்னம்பூர் .சுதன்மன் எழுதாமல் மனதிலேயே எழுதி வைத்த கணக்கை எழுதியதலால் இவருக்கு இந்தப்பெயர் வந்ததாம்.

    ஊருக்குள் நுழைந்தவுடன் எளிதாக இந்தகோயிலைக் கண்டு பிடித்து விடலாம். முதல் பிரகாரத்தில் கிழக்குத் திசையில் சூரியனைக் காண்கின்றோம். உள் பிரகாரம் மிகப் பெரிதாக இருக்கிறது. மேற்கு பகுதியில் வாகனங்கள் வைக்கும் இடம் உள்ளது. தெற்கு மூலையில் கன்னிமூலை கணபதி அருள் புரிகிறார் . பின் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி . அருள்மிகு பாலசுப்பிரமண்யர், விஷ்ணுதுர்க்கை , ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ காலபைரவர் என்று பல தெய்வங்களைப் பார்க்க முடிகிறது. இந்த ஊரில் சூரியனும் ஈசனை வழிப்பட்டாராம். இதனால் சூரியன் பங்குனி மாதம் பதிமூன்று,பதினாலு,பதினைந்து தேதிகளில் ஈசன் மேல் தன் ஒளியை வீசி வணங்குகிறார். காலை நேரத்தில் இதைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் இந்தக் கண் கொள்ளாக் காட்சியை ரசிக்கும்.

    பண்டைக்காலத்தில் காலையில் மூன்று பிரகாரங்களைச் சுற்றி வந்தாலே நல்ல “வாகிங் ” தேகப் பயிற்சி என்பதை உணர்ந்து அந்தக் கால மக்களும் காலை ,மாலை இரு நேரங்களும் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் பக்தியும் பெருகியது. ஆன்மீகமும் வளர்ந்தது . மனம் தவறு செய்யும் முன் இரு முறை யோசித்தது . கோயிலுக்குச் சென்று அமைதியாய் அங்கிருக்கும் ஒவ்வொரு சிற்பங்களையும் ரசித்து கர்ப்பகிரகத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் மூலவரை தியானத்துடன் வணங்க அதனால் கிடைக்கும் அமைதியே தனிதான். ஓம் சாந்தி.

     

    Share
  • பிக்கோலிம் புளுகு – 6

    தேமொழி

    (கட்டுரையின் நிறைவுப் பகுதி)

    முன் குறிப்பு:
    இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.
    _____________________________________________

    Related Articles:

    War is over: Imaginary ‘Bicholim Conflict’ page removed from Wikipedia after five years, Eric Pfeiffer, Yahoo! News. Eric Pfeiffer, Yahoo! News January 4, 2013, http://news.yahoo.com/blogs/sideshow/war-over-imaginary-bicholim-conflict-page-removed-wikipedia-234717353.html

    A copy of the deleted Wikipedia’s Bicholim Conflict Article:  http://www.absoluteastronomy.com/topics/Bicholim_conflict
    _____________________________________________

     

    alorna fort

     

    எழுச்சியின் துவக்கம்

    மராட்டியர்கள் மேலும் படைகளை அனுப்பி போரிட இயலாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள்  விரைவாகவும் திறம்படவும் முன் நிகழ்த்திய போர்களுக்கு எதிர் மாறாக, இப்போரில் போர்ச்சுக்கீசியர்களின் அதிநுட்ப போர்க்கருவிகளின் தாக்குதலைத் தவிர்ப்பதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது [9]. மராட்டியர்களின் படை வதாடியோவில் முற்றுகையில் சிக்கித் தவித்தது. அவர்கள் தங்களுக்கு அதிக இழப்புகளைத் தரும் நடவடிக்கைகளைத்  தவிர்க்க எண்ணி சூழ்நிலை சாதகமாக மாறும் காலத்தை எதிர்நோக்கி இருந்தார்கள் [9].

    ஆனால் போர்ச்சுக்கீசியர்கள் வதாடியோ நகரில் வாழ்ந்த இந்துக்களை கைது செய்ததும், அவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தியதும் அருகில் உள்ள கோவாவின் கிராமப் பகுதிகளுக்கு வெகு வேகமாகப் பரவியது [16]. டிசம்பர் மாதத் தொடக்கத்தில் போர்ச்சுக்கீசியர்களின் விருப்பத்திற்கு மாறாக மராட்டியர்களுடன் இணைந்த வதாடியோ மக்கள் படுகொலைகள்  செய்யப்பட்டதாக மிகைப்படுத்தப்பட்ட வதந்திகள் உருவெடுத்து கதைகள் பரவ ஆரம்பித்தது [11]. இப்ரம்பூர் நகரில் முதல் பெரிய எதிர்ப்பு தோன்றியது. இப்ரம்பூர் முதலில் மராட்டியர்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும் இப்பொழுது அவர்கள் போர்ச்சுக்கீசியர்களின் பலத்த கட்டுப்பாட்டின் கீழ் இருந்தார்கள் [9].  இம்பரம்பூர் மக்கள் தங்கள் பணிகளை விட்டுவிட்டு போர்ச்சுக்கீசியப் படைகளை எதிர்க்க முனைந்தார்கள். ஆயுதமற்ற கலகக்காரர்கள்  நிகழ்த்திய இந்த எதிர்ப்பை, போர்ச்சுக்கீசியர்கள் வானை நோக்கிச் சுட்டுப்  பலரைக்  கதிகலங்கச் செய்தும், அடங்காது தொல்லைகள் கொடுத்தவர்களைச்  சிறையிலடைத்தும் சுலபமாக கலவரத்தை அடக்கி நகருக்கு அதிகம் சேதம் விளைவிக்காத நடவடிக்கைகளை மேற்கொண்டனர் [9].  இப்ரம்பூருக்கு வடக்கில் இருந்த அன்கோனம் (Anconem) நகருக்கும் இதே கதிதான் ஏற்பட்டது [9].

    எனினும், அலோர்னா கோட்டைக்கு வடக்கில் உள்ள தற்றாடிங்கம் (Tatradingam) என்ற குக்கிராமத்தின் மக்கள் கோட்டைக்கு ஊர்வலமாகச் சென்று, போர்ச்சுக்கீசியர்கள் பேர்நேம்மை  (Pernem) மராட்டியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நிர்பந்தித்தார்கள், இதன் விளைவாக சிறிய சண்டையும் நிகழ்ந்தது [9]. அத்துமீறி கோட்டைக்குள் நுழைந்த கிராம மக்களிடம் போர்சுகீசியப் பிரதிநிதிகள் எந்த உடன்படிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இது இராணுவ தளத்தின் மீது நிகழ்த்தப் பட்ட அத்துமீறிய ஊடுருவல் என்பதால், கோட்டையின் தளபதி  மக்களைத் தாக்க முடிவெடுத்து மக்களில் சிலரைக் காயமுறவும் செய்தார் [9]. அவர் கட்டளையின் கீழ் அதி உற்சாகமாகத்  தாக்கிய படையினர் மக்களில் பெரும்பகுதியினரை மரண காயங்கள் ஏற்படும் அளவிற்குத் தாக்கினர். காயமடைந்தோரால் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் இயலாது போனது [9]. டி ஆல்பெகுயிர்கேவும்  (De Albequerque) படைத்தளத்தை பாதுகாக்க இத்தாக்குதல் அத்தியாவசியம் என்ற கண்ணோட்டத்துடன் இந்தத் தாக்குதலை அணுகியதால், இந்த வன்முறையை அவரும்  கண்டிக்கவில்லை[9].

    பிக்கோலிம் நகர மக்கள் டி மெல்லோ (D’Mello) தங்கியிருந்த அரசு மாளிகையைச் சூழ்ந்துகொண்டு இந்தப் படுகொலைகளை நிறுத்தச் சொல்லிப் போராட்டம் நடத்தினார்கள் [9]. ஆனால் டி மெல்லோ சர்ச்சைக்குரிய விதத்தில் படைகளிடம் நகரில் ஊரடங்கு உத்திரவை  நிறைவேற்றக் கட்டளை இட்டார் [9]. இந்த ஊரடங்கு உத்தரவு பிக்கோலிமின் பிற பகுதிகளுக்கும் அதிகப் படைகளின் கண்காணிப்பின் கீழ் நீட்டிக்கப் பட்டது  [9]. சிரிகவோ (Sirigao) பகுதியில் துவங்கிய மற்றொரு புரட்சி எழுச்சி பிக்கோலிம் பகுதி முழுமையிலுமே (போர்ச்ச்கீசியர்களின்  கட்டுப்பாட் டிற்குள் அடங்கிய பகுதிகளில்) அவசர நிலைப்  பிரககடனத்தை அறிவிக்கும்படி செய்தது[9]. பேரிநேமின் கிழக்குப் பகுதியும் இராணுவத்தின்  அவசரகாலச்  சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது [9].

    டிசெம்பர் மாத இறுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகையை எதிர்நோக்கி இருக்கும் பொழுது, பார்டெஸ் (Bardez) நகரின் ட்ராவிண்டா (Dravinda) பகுதியில், ஐந்திலிருந்து பத்து இந்துக்கள் அடங்கிய ஒரு குழுவினர்  நகரில் உள்ள வீடுகளுக்குத் தீ வைத்தனர். அவர்கள் கோவாவை சுதந்திரமடையச் செய்து மராட்டியர்களிடம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்தார்கள் [11]. இத்தாக்குதல் மோசமான பழிவாங்கும் எதிர் விளைவை ஏற்படுத்தியது.  போர்சுக்கீசியர்கள் இந்த ட்ராவிண்டா கலகக் கும்பலை சுற்றி வளைத்தனர்.  இவர்களுடன் சேர்ந்து சதி செய்தவர்களையும், இப்போராட்டக் குழுவினரையும் தண்டிக்கும் பொருட்டு பொதுமக்கள் முன்னிலையில் அவர்களைத் தூக்கிலிட்டனர் [11].

    புத்தாண்டு பிறந்ததும், போர்ச்சுக்கீசியர்கள் மவுலிஞ்சியம் (Maulinguem) பகுதியில் மராட்டியர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த சிறுபகுதியைத் தாக்கினர் [9]. வெற்றிகரமான இத்தாக்குதலின் இறுதியில் அதிக இழப்பின்றி நகரைக் கைப்பற்றினர் [9]. மீண்டும் துரோகிகள் என்று குற்றம் சாட்டி மேலும் சில குடிமக்களைக் கைது செய்தனர் [9]. பிக்கோலிம்மில் தாங்கள் இழந்த பகுதியைக் கைப்பற்றும் எண்ணத்தில் போர்சுக்கீசியர்கள் முன்னேறினார்கள். மராட்டியப்படைகள்  தங்கள் கைவசம் இருந்த பகுதிகள் போர்ச்சுக்கீசியர்கள் வசம் செல்லத் தொடங்கியதும் கோவாவை விட்டு வெளியேற நேர்ந்தது[9]. எனினும், மேலும் பல மராட்டியப் படையினர் எல்லையில் ஒருங்கிணைந்து மீண்டும் தாக்குதலைத் தொடங்கும் வாய்ப்பினை எதிர்நோக்கி இருந்தனர் [9]. அந்நிலையில் கோவாவில் மராட்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரே பகுதி வதாடியோ மட்டுமே [9]. அங்கும் மராட்டியப் படை இரண்டு மாதங்களாக முற்றுகைக்கு கீழ் இருந்ததால் தீவிர மராட்டிய ஆதரவாளர்களும் அமைதியை இழக்கத் துவங்கினர் [9].

     

    சமாதான உடன்படிக்கை

    வதாடியோவில் மராட்டியர்களின் உணவுக் கிடங்குகள் போர்ச்சுகீசியர்களால் நாசப்படுத்தப்பட்டது, இது அவர்கள் உறுதியைக் குலைக்கும் இறுதிப் பேரிடியாக இறங்கியது. எனினும் மராட்டியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வதாடியோ நகர மக்கள் பட்டினி கிடந்து மரணத்தை தழுவும் அவலத்தை விரும்பாததால், 1641 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வெள்ளைக்கொடியை உயர்த்தி சமாதானத்தைத் தெரிவித்துச்  சரணடைந்தார்கள் [9]. முதலில் இந்த நடவடிக்க்கையைச் சந்தேகித்த போர்ச்சுகீசியர்கள் தாக்குதலை எதிர்பார்த்துத் தயாராக இருந்தார்கள்.  ஆனால் சிறு சிறு குழுக்களாக நகரில் இருந்து வெளியேறிய மராட்டியப் படைகள் எந்த வித தீங்கும் இழைப்பதாகத் தெரியவில்லை [9]. போர்ச்சுக்கீசியர்களும் தங்கள் பங்கிற்கு, மராட்டியப் படையினர் நகரை விட்டு சுதந்திரமாக வெளியேற அனுமதித்தனர். உடனடியாக தங்கள் ஆயுதங்களை ஒப்புவிக்காத மராட்டியப் படையினரை மட்டுமே அவர்கள் கைது செய்தனர் [9]. மராட்டியப் படை வீரர்கள் போர்சுக்கீசியர்களைத் தாக்க எண்ணியிருந்தாலும் பலநாள் பட்டினியினாலும், மனஉறுதி குலைந்த நிலையிலும் மிக எளிதில் போரில் தோல்வி அடைந்திருப்பார்கள் என ஸ்ரீநிவாசன் வசந்தகுலன் கருதுகிறார். போர்ச்சுக்கீசியர்கள் மிக விரைவில் படைகளை பலப்படுத்தியதால் மராட்டியர்களைவிட போர்ச்சுக்கீசியப் படையினரின் எண்ணிக்கை நகரில் அதிக அளவு இருந்தது [9].

    பிப்ரவரி மாதத்  துவக்கத்தில் மராட்டியப் படைகள் இப்ரம்பூருக்குள் நுழைந்தது. ஆனால் இம்முறை அவர்கள் உடன்படிக்கை ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதைத் தெரிவித்தனர். மராட்டியப் போர்க் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், மராட்டிய ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட குடிமக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் நிறுத்தப் படவேண்டும் என்றக் கோரிக்கைகளையும் முன் வைத்தனர் [9]. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியே டி’ ஆல்பெகுயிர்கேவை நேரில் சந்தித்து சமாதான உடன்படிக்கைக் கோரிக்கைகளைக் குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்தினார். அந்த  உடன்படிக்கையின் படி; மராட்டியப் பேரரசுக்கும் போர்ச்க்கீசியர்களின் கோவாவிற்கும் இடையிலான எல்லையையும், அருகில் உள்ள  சிற்றரசுகளின் எல்லைகளையும் மராட்டியர்கள்  அங்கீகரிப்பதாகத்  தெரிவிக்கப் பட்டது [9].  பதிலுக்கு போர்ச்சுகீசியர்களும் தங்கள் வடபகுதியின் எல்லையை விரிவுபடுத்த முயற்சிப்பதில்லை எனவும் முடிவானது [9].

    இந்த உடன்படிக்கை ஏற்பட்டதன் காரணங்கள் பற்பல [11] [13]. மராட்டியர்கள் வதாடியோவில் கைது செய்யப்பட்டிருக்கும் அவர்களது படைவீரர்களை மீட்டு மீண்டும் தங்கள் படையில் இணைத்துக் கொள்ள விரும்பினர். மராட்டியர்கள்  தாங்கள்  முன் நினைத்திருந்ததைப் போல கோவாவை விரைவானத் தாக்குதல் மூலம் கைப்பற்றி  விடலாம் என்பது இனி நிச்சயமற்ற நிலை என அறிந்திருந்தனர். அத்துடன் முதலில் திட்டமிட்டபடியே மராட்டியப் பேரரசின் தென் எல்லையை மட்டும் பாதுகாப்பதே போதுமானது என்ற முடிவுக்கும் வந்தனர். இதனால் தெற்கெல்லையில் போரைத் தொடர அவர்களுக்கு விருப்பம் இருக்கவில்லை. இந்த உடன்படிக்கையின் மூலம், இரு அரசுகளுக்கும் இடையே இருந்த மராட்டியர்களின் தெற்கெல்லை முழுவதிலுமே   அமைதியான முறையில்  பாதுகாப்பினைப் பெற வழி கிடைக்கும் [11].

    போர்ச்சுக்கீசியர்களின் கண்ணோட்டதில், பிக்கோலிம்மிலும் பேரிநேமிலும் ஏற்பட்டது போன்ற மக்களின் புரட்சிகரமான எழுச்சி விரைவில் மற்ற பகுதிகளுக்கும் பரவி, அந்த சூழ்நிலை மராட்டியர்களுக்கு ஆதரவாக மாறிவிடலாம் என்ற அதிகப்படியான அச்சம் இருந்தது. அத்துடன் அவர்களுக்கு மராட்டியர்கள் எல்லைபகுதியில் படைகளைக் குவித்து தங்களைப் பலப்படுத்திக் கொண்டிருப்பதும் தெரிந்திருந்தது . ஒரே சமயத்தில் மக்களின் எழுச்சிப் போராட்டமும், எல்லையிலிருக்கும் மராட்டியப் படைகளின் தாக்குதல்களும் நிகழ்ந்தால்  கோவாவின் வட பகுதி முழுமையையுமே மராட்டியர் வசம் இழக்க நேரிடலாம்.  அத்துடன் பான்ஞ்சிம் (Pangim) மற்றும் வாஸ் கோடா காமா நகர்களின் பாதுகாப்பான நிலையும் கேள்விக்குறியாகிவிடும் என்பதும் போர்ச்சுக்கீசியர்களுக்குப் புரிந்திருந்தது [9] [11]. ஒப்பந்த பேச்சுவார்த்தை நிகழ்ந்த பொழுதே மராட்டியர்களும் தங்களால் இப்ரம்பூரை எந்தவித  எதிர்ப்புமின்றி தாக்க முடியும் என்பதையும் போர்ச்சுக்கீசியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் [11].

    ஒரு சில கோவா குடிமக்களுக்கு இந்த உடன்படிக்கை திருப்தி அளிக்கவில்லை. மராட்டிய எல்லையை விரிவுபடுத்த கிடைத்த வாய்ப்பு நழுவிப் போனது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. ஆனால் பெரும்பாலோருக்கு இந்த உடன்படிக்கை ஏற்பட்டது மகிழ்ச்சியையும் திருப்தியையும் தந்தது. மராட்டியர்களுக்கும் போர்சுக்கீசியர்களுக்கும் ஏற்படும் உடன்படிக்கை மூலம் அமைதி நிலவிட்டால் தாங்கள் எதிர்கொள்ளும்  பாரபட்சமான நடவடிக்கைகள் தொடராது என இவர்கள் கருதினர் [2]. போர் கோவாவின் மக்களிடையே தோன்றிய எழுச்சியை நிறுத்தாவிட்டாலும் அதைத்  தீவிரமாகக் குறைத்தது. மேலும் மராட்டியர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே நிகழ்ந்த இந்தப் போராட்டம் போர் என்ற முறையில் வரலாற்றில் எங்குமே குறிப்பிடப் படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்குக்  காரணம் இருதரப்பினருமே தாங்கள் போர் நிகழ்த்துவதாக வெளிப்படையாக அறிவிக்கவே இல்லை.  ஆயினும் மராட்டியர்களும் போர்ச்சுக்கீசியர்களும் ஒருவரை ஒருவர் தாக்க, போருக்குத் தங்களைத் தயார் படுத்திய வண்ணமே இருந்தனர் [9].

     

    பாரம்பரிய சிறப்பு

    வரலாற்றுச் சிறப்பு

    இந்தச் சிறப்பு மிக்க சமாதான உடன்படிக்கையின் காரணத்தினால் மராட்டியர்களுக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே நம்பிக்கையும் நல்லெண்ணமும் வளர்ந்தது. இதன் காரணமாக பின்னர் மராட்டியப் பேரரசு மிகவும் வலிமை நிறைந்ததாக இருந்த காலத்திலும் கோவாவை நோக்கித்  தனது  தெற்கு எல்லையை விரிவு படுத்த முயலவில்லை. இதனால் போர்ச்சுக்கீசியர்கள்  கட்டுபாட்டிலேயே கோவா தொடர்ந்து இருந்து வந்தது, பின்னர் இந்தியாவின் நடுவண் அரசின் ஒன்றிய ஆளுமைப் பகுதிகளில் ஒன்றாக1961 இல்  இணைத்துக் கொள்ளப்பட்டது [17]. தற்கால கோவா தனக்கென ஒரு அரசாங்கமும், கலாச்சாரமும் கொண்டு, தன்னுரிமைப் பெற்று இந்தியாவின் ஒன்றிய ஆளுமைப் பகுதியாக விளங்கி வருகிறது.

    கலாச்சார சிறப்பு

    இந்தப் போர் மிகக் குறுகியது, இதன் தாக்கமும், போரின் இழப்புகளும், சேதங்களும் மிகக் குறைவு. இதன் காரணமாக வரலாற்று ஆசிரியர்களின் கவனத்தையோ, திரைப்படத் தயாரிப்பளர்களின் கவனத்தையோ இது சற்றும் ஈர்க்கவில்லை.  1921 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபிராங்க் மெச்காலஸ் (Frank McCallus) எழுதிய புதினமொன்றில் விவரிக்கப்பட்ட இந்தியப் புரட்சி பற்றிய நிகழ்ச்சியில் பிக்கோலிம் போர் போன்ற நிகழ்சிகளின் குறிப்பிடத்தக்க சாயல்கள்  உள்ளது [17]. மற்றொரு கோவாவின் எழுத்தாளர் விக்டர் டி’ ஸோசா 1958 இல் வெளியிட்ட ‘கோவாவில் வாழ்க்கை’ (Goan  Life, a Book by Victor D’ Souza) என்ற நூலில், கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்துவக் குடும்பம் ஒன்று மராட்டியப்  பேரரசின் மீது உள்ள தங்கள் பற்றுதலை விளக்கிக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.  பெரும்பாலும் இந்தக்  கதை பிக்கோலிம்போரினால் ஏற்பட்ட தாக்கத்தினால், அந்த நிகழ்சிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம் [17].

     

    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
    [4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
    [5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
    [6] Thompson op cit. p 199.
    [7] Thompson op cit. p 200.
    [8] Thompson op cit. p 201.
    [9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
    [10] Thompson op cit. p 203.
    [11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
    [12] Thompson op cit. p 211.
    [13] Thompson op cit. p 212.
    [14] Thompson op cit. p 206.
    [15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
    [16] Thompson op cit. p 215.
    [17] Thompson op cit. p 219.

    Further reading
    Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
    Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
    Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003

    ______________________________________

    குறிப்பு:
    இத்துடன் ‘பிக்கோலிம் போர்’ என்ற தலைப்பில் விக்கிபீடியாவில்  இடம்பிடித்து பின்பு நீக்கப்பட்ட,  அண்டப் புளுகு, ஆகாசப் புளுகுக் கட்டுரையின் மொழி பெயர்ப்பான ‘பிக்கோலிம் புளுகு’ கட்டுரையும் நிறைவு பெறுகிறது.

    படம் உதவி:
    அலோர்னா கோட்டை- http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg

    ______________________________________

     

     

     

    Share
  • இராம கதை – ஒரு சிறு விமர்சனம்.

    நரசய்யா

    கைக்கு அடக்கமான ஒரு சிறு நூல்; ஆனால் கடலளவு தன்னுள் அடக்கியுள்ள பெரு நூல்! அப்படித்தான் இந்த இராமகதை என்ற நூலைப் பற்றிச் சொல்லத் தோன்றுகிறது!

    gopal0001

    அழகான அட்டைப்படம், பூஜை அறையில் வைக்கவேண்டுமென்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றது. 60 பக்கங்களே கொண்ட இப்புத்தகத்தில், முதல் 28 பக்கங்களில் இராமகதை சுருக்கமாக, ஆனால் படிப்பதற்கு வசதியான எளிமையான் தமிழ் பேசுகவிதையில் வார்க்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் கம்பராமாயணத்தைச் சார்ந்து தான் எழுதப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நான் சமீபத்தில் திரு. மணவாளன் அவர்களைப் பற்றிப் பேசியதை நினைவு கூறுகிறேன். முனைவர் மணவாளன் 2011 ஆம் வருடத்திற்கான சரஸ்வத் சம்மான் பெற்றவர். இவ்விருது அவர் எழுதிய இராமகாதையும் இராமாயணங்களும் என்ற நூலுக்கு வழங்கப்பட்டது. சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், திபேத்தியம், தமிழ், பழைய ஜாவானியம், ஜப்பானியம், தெலுங்கு, அஸ்ஸாமி, மலையாளம், வங்கமொழி, கன்னடம், மராத்தி, இந்தி, ஒடிசி, பாரசீகம், மலேசியா, பர்மா, மரோனா, தாய், லாவோசியா, காஷ்மீரி, முதலான 48 மொழிகளில் உள்ள இராமாயணங்களை இந்த நூலில் மணவாளன் ஒப்பீடு செய்துள்ளார்! அதன் மூலம், ஒப்பீட்டுத் திறனாய்வுக்காக அவர் விருது பெற்றார். மனித இயல்பிலே ஒப்பிடுவது சாதாரணமாக நிகழ்வதே. ஒப்பிடுவதின் நோக்கம் இன்றைய பட்டிமன்றங்கள் போன்றது அல்ல; ஒன்றனை விட மற்றொன்று சிறப்பானது என்று கூறுவதற்கும் அல்ல; ஒவ்வொன்றின் சிறப்பையும் தனித்தனியே அறிவதற்கு மட்டுமே; ஒரு வழிமுறை அல்லது உத்தி எனலாம். அதுதான் ஒப்பிலக்கியத்தின் முக்கிய நோக்கம். அப்படிப் பார்க்கப்போனால், கோபாலனின் நூலும் இத்திறனாய்வில் பங்கு பெறலாம்!

    எது எவ்வாறாயினும் ஒப்பிடுகையில் நாம் பார்ப்பது என்ன?

    கம்பராமாயணத்தில் குகப்படலத்தில் , கம்பர் சொல்வது:

    வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை
    நல்கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை
    கல்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
    வில்கையின் நின்று இடை வீழ விம்முற்று நின்றொழிந்தான்.

    இதையே திரு கோபாலன் இவ்வாறு வார்க்கிறார்:

    மரவுரி தரித்த மாசு படிந்த மெய்யும்
    சிரமேல் குவித்த இருகரங்களும்
    பொலிவற்று நகையற்று விளங்கிய முகமும்
    நலிவுற்று துயருற்று வாடிய தோற்றமும் . . .

     

    அதே போல, கம்பனின் தாக்கம் மண்டோதரி கதறுகையில் முற்றிலுமாகவே காண முடிகிறது. இது போன்று பல இடங்களில், தமது விளக்கங்களில் கம்பனையே ஆசானாகக் கொண்டு எழுதியுள்ளமை தெரிகிறது. ஆங்காங்கு வால்மீகியையும் கருத்தில் கொண்டு படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டுமாறு கதையை நடத்துகிறார். நூல் சிறிதேயாயினும் எங்கும் முக்கிய விஷயங்களைத் தவறாது சொல்லியுள்ளார்.

    சில இடங்களில் மொழி எளிமையில் அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனையையும் ஒத்துள்ளது. பாட்டு கற்றவர்களுக்கு, பாடுவதற்கு வசதியாகக் கூட இருக்கலாம்!

    இராமகதை சொல்லி முடித்த கையோடு, பஜனை செய்வதற்கு வசதியாக, ஸ்ரீராமஜெயம் மகிமை, இராமாயண அட்சரமாலை, அனுமான் நாற்பது (ஹனுமான் சார்லீஸ் உரையுடன்) சங்கடமோசன அனுமானஷ்டகம், அனுமன், அனுமான் பிரசாதம் மற்றும் பக்தி கவிதைக் கொத்து முதலியவற்றையும் சுமார் முப்பது பக்கங்களில் தந்துள்ளார். முக்கியமாக ஹனுமான் சார்லீஸ் பாராயணம் செய்பவர்களுக்கு ஒரு பிரசாதம். ஏனெனில் இதுவரை வந்துள்ள சர்லீஸ் பொருளுரைக்குப் பதிலாக, இவரது உரையும் பாடத் தகுந்ததே!

    மொத்தத்தில் இந்த நூல் பக்தர்களுக்கு ஒரு சிறந்த பரிசெனவே சொல்லலாம். ஒரு சிறந்த அதிகாரியாக, மத்திய அரசில் உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்று பின்னர் சுமார் பத்து வருடங்கள் அரசு ஆலோசகராகப் பணிபுரிந்த கோபாலன், அளித்துள்ள இந்த நூல் அவரது சிறந்த சமூகத் தொண்டெனவே கூறலாம்!

    இப்படி ஒரு சிறந்த நூலை அளித்ததற்கு அவருக்கு இராமபிரான் அருள் பாலிக்கவேண்டுகிறேன்.

    தொடர்பிற்கு:

    திரு எஸ். கோபாலன்

    T – 75A, Triyambhava,

    Kalapatti Rd, (Near SITRA)

    Coimbatore – 641014,

    Mobile – 9600801888

    E-mail : subragopalan@hotmail.com

    Share
  • கென்யா பயணம் 1

    நாகேஸ்வரி அண்ணாமலை

    kenewzz
    எனக்கு வெகு நாட்களாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாட்டைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. பல வருடங்களுக்கு முன் எகிப்துக்குப் போயிருக்கிறேன். அந்த நாட்டை ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒரு மாதிரி என்று சொல்ல முடியாது. அமெரிக்க, ரஷ்ய, பிரிட்டிஷ் நாடுகளின் தாக்கம் அங்கு அதிகம். (இப்போது அங்கு பல மாற்றங்கள் நடந்து கொண்டி- ருக்கின்றன.) அதனால் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தேன். வட, தென் அமெரிக்கக் கண்டங்கள், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளில் ஒன்றையாவது பார்த்திருப்பதால் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஒரு நாட்டைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை பல நாட்களாக எனக்குள் இருந்து வந்தது.

    நான் பார்த்திருப்பதாகக் கூறியிருக்கும் நாடுகளுக்கு என் கணவருடன் அவருடைய வேலை நிமித்தமாக அவர் போகும்போது போயிருக்கிறேன். சில நாடுகளில் ஆராய்ச்சிக்காக அந்த நாடுகளின் பல்கலைக்கழகங்களில் கணவர் சில மாதங்கள் தங்கியிருந்தபோது அவருடன் நானும் தங்கியிருந்திருக்கிறேன். வேறு சில நாடுகளில் மாநாடுகளில் கலந்துகொள்ளப் போனபோது சில தினங்களே என்றாலும் உடன் போயிருக்கிறேன். ஒரு நாட்டை, ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ளப் பல காலம் எடுக்கும் என்றாலும் அதைப் பற்றிய ஒரு பார்வை (glimpse) குறுகிய காலத்தில் கிடைக்கும். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவுக்குச் செல்ல ஒரு முறை கணவருக்கு வாய்ப்புக் கிடைத்தபோது என்னால் அவரோடு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதைப் பற்றிப் பல முறை ஏங்கியிருக்கிறேன்.

    இப்படிப் பல நாடகளாகக் காத்திருந்த வாய்ப்பு இன்னொரு விதத்தில் கிடைத்தது. நாங்கள் அமெரிக்காவில் வருடத்தில் பல மாதங்கள் தங்கியிருக்க ஆரம்பித்ததும் மைசூர் வீட்டிற்குக் கொஞ்சமாவது பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி மைசூரில் எங்கள் வீட்டு கார் ஷெட்டிற்கு மேல் ஒரு ஃப்ளாட் கட்டி அதை வாடகைக்கு விட்டால் வீட்டின் அருகில் நடமாட்டம் இருந்துகொண்டிருக்கும் என்று நினைத்தோம். ஃபிளாட் என்றால் ஒரு பெரிய அறையில் சிறிய சமையலறை, குளியலறை, ஹால் ஆகியவை எல்லாம் அடங்கிய ஒரு குடியிருக்கும் வச்தி ஃபிளாட்டைக் கட்டி முடித்ததும் யாருக்கு வாடகைக்கு விடுவது என்ற கேள்வி எழுந்தது. எங்களுக்குத் தேவைப்பட்டால் காலிசெய்து கொடுப்பவர்களாகப் பார்ப்பது என்று முடிவு செய்தோம். அந்தச் சமயத்தில் கென்யாவிலிருந்து எங்கள் வீட்டிற்கு மிக அருகில் உள்ள சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இருவர் வாடகைக்கு இடம் இருப்பதாக அறிந்து எங்களிடம் அது பற்றி விசாரிக்க எங்களை அணுகினர். படிப்பு முடிந்ததும் இடத்தைக் காலிபண்ணிவிடுவார்கள் என்பது எங்களுக்குப் பிடித்த அம்சமாக இருந்தாலும் ஒழுங்காக வாடகை கொடுப்பார்களா, வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வார்களா என்ற கேள்விகள் தோன்றத் தொடங்கின. அவர்கள் படிக்கும் கல்லூரியின் முதல்வரைச் சந்தித்து எங்கள் சந்தேகங்களை அவரிடம் கேட்டோம். அவர் ‘அந்தக் கவலையை விடுங்கள். அவர்கள் நல்ல மாணவர்கள். அப்படியே ஏதேனும் தொந்தரவு கொடுத்தால் என்னிடன் வாருங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார். அவர் இப்படிக் கூறியது எங்களுக்கு மிகுந்த தெம்பை அளித்தது. உடனேயே அந்த மாணவிகளைத் தொடர்பு கொண்டு எங்கள் ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும்படி கூறினோம்.
    அவர்கள் குடிவந்த நாளன்று ஒரு சிறிய லாரியில் தங்கள் சாமான்களைக் கொண்டுவந்தனர். அவற்றைப் பார்த்துவிட்டு , இத்தனை சாமான்களையும் எங்கள் ஃபிளாட்டிற்குள் அடக்கிவிடுவார்களா என்று நான் மலைத்தேன். எல்லா சாமான்களையும் இறக்கிவிட்டுவிட்டு ஒரு மாணவி வெளியே வந்துகொண்டிருந்தார். எல்லாச் சாமான்களையும் வைப்பதற்கு இடம் இருந்ததா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டேன். ‘தேவையான இடம் இருக்கிறது. அதில் ஒரு கஷ்டமும் இல்லை’ என்று அந்தப் பெண் கூறியதும்தான் எனக்கு நிம்மதியாயிற்று.
    அந்த மாணவிகள் இருவரும் நான்கு வருடங்களில் சட்டம் படித்து முடித்த பிறகு இடத்தைக் காலிசெய்யும் நேரம் வந்தது. ‘இனி இவர்களைப் போல் நல்ல வாடகைதாரர்கள் கிடைப்பார்களா? மறுபடி வாடகைதாரர் தேடும் வேலை இருக்கிறதே’ என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போது இந்த மாணவிகளே தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவரைக் கூட்டிவந்து எங்களுடைய அடுத்த வாடகைதாரராக அவரை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டபோது எங்களுக்கு மிகவும் நிம்மதியாகப் போயிற்று. இவரும் அதே சட்டக் கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருந்ததால் அவரைப் பற்றியும் முதல்வரிடம் விசாரித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அவரை அழைத்துவருமாறு கூறினோம். அவர் குடியேறி இரண்டு வருடங்களில் காலி செய்யத் தயாரானபோது இன்னொரு மாணவரைக் கூட்டிவந்தார். இவரும் கென்யா நாட்டைச் சேர்ந்தவரே. இப்படியாகக் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக ஒவ்வொரு வாடகைதாரரும் காலிசெய்யும்போது இன்னொருவரை அறிமுகம் செய்துவிட்டுச் சென்றார். எல்லோரும் கென்யா நாட்டைச் சேர்ந்தவர்கள். இதுவரை அவர்களால் எங்களுக்கு எந்த விதத் தொந்தரவும் இல்லை. இந்தியாவுக்கு வெளியே நாங்கள் இருப்பதால் அவர்களுக்கும் எங்களால் எந்த விதத் தொந்தரவும் இல்லை. ஒரு வாடகைதாரர் காலிசெய்யும்போது இடத்தை நாங்கள் பார்ப்பது கூட இல்லை. புதிதாக வருபவரிடம் எல்லாவற்றையும் நன்றாகப் பார்த்துக்கொண்டீர்கள் அல்லவா என்று கேட்போம். அவர்களும் ஆம் என்பார்கள். நாங்கள் வெளியே இருக்கும்போது ஏதாவது ரிப்பேர் என்றால் அதை எங்கள் பக்கத்து வீட்டு நண்பர் மூலம் செய்து கொடுப்போம். இப்படியாக எங்கள் உறவு சுமுகமாகப் போய்க்கொண்டிருந்ததோடு அவர்களோடு எங்களுக்கு நட்பும் ஏற்பட்டு, அவர்கள் மேல் மட்டுமின்றி கென்யா நாட்டின் மேலும் ஒரு பற்று ஏற்படத் தொடங்கியது. ஆப்பிரிக்க நாடு ஒன்றைப் பார்க்க வேண்டும் என்ற என் ஆவலும் பூர்த்தியாகும் தருணம் வந்தது.

    கென்யாவிற்கு வந்தால் எங்களுக்கு எல்லா உதவிகளும் செய்து தருவதாக அவர்கள் கூறியதும் கென்யாவிற்குப் போகும் ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தோம். இதுவரை எங்களுக்கு வாடகைதாரர்களாக இருந்த எல்லா மாணவ, மாணவிகளோடும் மின்னஞ்சல் தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததால், எங்கள் வீட்டில் இருந்துவிட்டு கென்யாவிற்குத் திரும்பிப் போயிருந்த எல்லோரிடமும் தொடர்புகொள்வது எளிதாக இருந்தது. கென்யாவிற்குப் போன பிறகுதான் தெரிந்தது அந்த நாட்டைச் சேர்ந்தவரின் உதவி எவ்வளவு உபயோகமானது என்பது. முதலில் வாடகைக்கு இருந்த பெண்களில் ஒருத்தி லண்டனில் வேலை பார்க்கிறாள். கென்யாவின் வெளியுறவுத் துறையில் வேலை பார்க்கிறாள். பழைய வாடகைதாரரில் இருவர் பக்கத்து நாடான ரவாண்டாவில் ஒரு கல்லூரியில் வேலைபார்த்துக் கொண்டிருகின்றனர். அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் நைரோபியில் இருந்தனர். எங்களை வந்து பார்த்தனர். முடிந்த அளவு உதவிகள் செய்தனர். ஒரு பெண் கென்யாவில் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி நிலையத்தில் வேலைபார்க்கிறாள். இன்னொரு மாணவன் செஞ்சிலுவைச் சஙக்த்தில் வேலை பார்க்கிறான். சாகசச் செயல்களில் ஆர்வம் உடையவன் வன்முறை மலிந்த சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளுக்குப் போகும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறான். எங்கள் வீட்டில் தங்கிப் படித்த எல்லா மாணவர்களும் இப்போது நல்ல நிலையில் இருப்பதாக ஒரு பெண் குறிப்பிட்டாள். அதைக் கேட்க மனதிற்கு இதமாக இருந்தது.

    அமெரிக்காவில் படித்த இந்திய மாணவர்களுக்கு இந்தியாவில் நல்ல வேலை கிடைப்பதைப் போல இந்தியாவில் பட்டம் பெறும் கென்யா மாணவர்களுக்கு அவர்கள் நாட்டில் நல்ல வேலை கிடைக்கிறது போலும்.

    தொடரும்

    படத்திற்கு நன்றி:

    http://www.worldatlas.com/webimage/countrys/africa/ke.htm#.UeXq1o3I2gQ

    Share
  • இன்னம்பூர் பற்றிய தகவல்!..

    விசாலம்

    சமீபத்தில் திரு இன்னம்பூரான் அவர்களைக் காணும் பாக்கியம் கிடைத்தது அவரது பெயர் அவரது ஊரைக்கொண்டு  வைக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொண்டேன் என் வீட்டின் கீழே இருக்கும் வைஷ்ணவர் சமீபத்தில் கும்பகோணம் போய் அருகில் இருந்த பல பெயர்ப்பெற்ற கோயில்களைக் கண்டு அதன் குறிப்புகளையும் கொண்டு வந்திருந்தார்.ஏனென்றால் நான் எப்போதும் கோயில் பற்றிய செய்திகளை அறிய ஆவலாக இருப்பது அவருக்கு தெரியும் .அதில் அவர் போன கோயிலில் ஒன்று இன்னம்பூர் .

    ஆஹா அருமையான செய்தி என்று அவரிடம் பேசி பல தகவல்களைத்தெரிந்து கொண்டேன் ,இந்த இடம் முழுவதும் முதலில் சண்பகமரங்கள் மிகுந்த காடுகளாக இருந்தன.ஆகையால் இதற்கு சம்பகாரண்யம் என்ற பெயர் இருந்தது ஒரு சமயம் ஒரு காட்டு யானை அங்கு வந்தது அதற்கு மிகுந்த தாகம் ஏற்பட்டதால் நீரைத் தேடியது .தண்ணீர் கிடைக்காததால் தன் தும்பிக்கையினால் பூமியைத்தோண்ட முற்பட்டது.”டபார்”என்ற வெடி சத்தம் பூமி வெடித்து இன்னம்பரான் என்று போற்றப்படும் சிவன் லிங்கரூபமாக தோன்றினார்  காட்டுயானை அருகிலேயே தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிப்பட்டது.இந்த இடத்தில் பூஜை செய்ய சர்வ பாபங்களும் விலகுமாம் ஏனென்றால் இந்திரனது யானை ஐராவதம் பாற்கடலில் தோன்றி நாலு கொம்புகளைக் கொண்டது  ஒரு சமயம் துர்வாசருக்கு மரியாதை கொடுக்கத்தவறியது  துர்வாசரது கோபம் தான் தெரியுமே .பிடி சாபம் என்று சபித்துவிட்டார் மன்னிப்பு கேட்டவுடன் இன்னம்பூரில்தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி இறைவனை வழிபட சாபம் தீரும் என அறிந்து தீர்த்தம் உண்டுபண்ணியது பின் அதில் ஸ்னானம் செய்து சாபத்தைத் தீர்த்துக்கொண்டது அந்தத்தீர்த்தம்தான் “ஐராவத தீர்த்தம் “

    கோபுரம் தாண்டி வெளிப்பிரகாரத்தில்  கணபதி  பலி பீடம் ,நந்தி , சுகந்த குந்தளாம்பாள் அம்மன் எல்லாம் பார்க்கமுடிகிறது உள் பிரகாரம் வந்து மூலவர் நோக்கி நகர ஒருதூணில் நடனம் ஆடும் கணபதி அழகு சொட்ட ஆடுகிறார் பின் வருகிறது நித்யகல்யாணி அம்பாள் சந்நிதி அம்பாளின் அழகு முகமும் அதில் தவிழும் புன்னகையும் அந்த இடத்தை விட்டு அகல தோன்றுவதில்லை மூலவர் சந்நிதியில் துவாரபாலகரை தரிசனம் செய்து விட்டு உள்ளே பார்க்க அங்கிருக்கும் ஈசன் ஸ்ரீ அட்சரபுரீஸ்வரர்  என்ற பெயரில் அருள் புரிகிறார் தமிழில் அவர் பெயர் அருள்மிகு எழுத்தறிநாதர் .தமிழ் ஞானம் பெற்ற அகஸ்திய மஹரிஷி தமிழ் இலக்கியம் படிக்க இன்னம்பூருக்கு வந்து தான் தமிழ் இலக்கணம் கற்றாராம் இதனால் இந்த ஈசனுக்கு அட்சரபுரிஸ்வரர் என்ற பெயர் வந்தது என்கின்றனர் சிலர் .படிப்பில் வெற்றியடைய .காலேஜில் இடம் கிடைக்க வெளிநாடுக்கு மேற்படிப்புக்குச்செல்ல இங்கு பலர் வந்து பிரார்த்தனை செய்கின்றனர் முதன் முதலாக அட்சராப்பியாசம் செய்யவும் சிறு குழந்தைகளுடன் தாய்மார்கள் வருகின்றனர்  திக்கித்திக்கிப்பேசும்  குழந்தைகளுக்கு நாக்கில் ஈசனது மலரால் எழுத அந்த எழுத்தறிநாதர் நல்ல பேச்சுத்திறனை அளித்துவிடுகிறார்.இதனால் இவரே பிரும்மா,சரஸ்வதி ஆகிவிடுகிறார் பாபங்களைப் போக்குவதால் இவரே பரிகாரஸ்தலமாகி அருள்புரிகிறார் கும்பகோணம் திருவையாறு பாதையில் புளியஞ்சேரி என்ற இடம் வரும். அதிலிருந்து வலதுபக்கம் திரும்பி திருப்புறம்பியம்  வழியாக சுமார் 2 கிமீ சென்றால் இன்னம்பூர் வந்துவிடும்   மேலும் பல தகவல்கள் அடுத்த பகுதியில் எழுதுகிறேன்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 80

    மலர் சபா

     

    thalavi thozhi

     

    புகார்க்காண்டம் – 08. வேனில்காதை

     
    மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைந்து வசந்த மாலையிடம் கொடுத்து அனுப்புதல்

     

    கட்டுப்பாட்டுடன் இதுகாறும்
    தன்னுடன் இருந்த
    ‘நிறை’ எனும் குணம்
    காமத்தின் மிகுதியால்
    கட்டவிழ்ந்து போனதால்…..

    இணைந்தே இதுகாறும்
    தம்முடன் இருந்த
    அறுபத்து நான்கு கலைகளும்
    தொடர்ந்து தம்முடன் வாராமல் போனதால்…..

    கலைகள் அவற்றுள் ஒன்றான
    பண்பாடும் அவள் திறன்
    அவள்தமக்கே நட்பு மறந்து
    உட்பகையாகி நின்று
    பிறர் புறங்கூறக் காரணமாய் அமைந்திட்டதே……

    இங்ஙனம் மழலை மாறாத
    மொழிகள் பலவும்
    தமது நாவினால்
    சொல்லிக் கொண்டே
    மடல் வரைந்தனள் மாதவி.

    பசலை படர்ந்த மேனியளாய்
    கோவலன் நினைவு மிகுந்து வருந்தும்
    மாலைக் காலத்தே
    தம் தோழியாம் வசந்தமாலையை
    வா என்றழைத்து
    “தூய மலர் மாலை போன்ற
    இக்கடிதத்தில் யாம் எழுதியவற்றின்
    பொருள் அனைத்தும்
    கோவலனுக்குப் புரியுமாறு எடுத்தியம்பி
    இப்போதே இங்கு அழைத்து வருக” என்றனள்.
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 65 – 71
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

    படத்துக்கு நன்றி
    http://dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/05

     

    Share
  • ஓர் அதிர்ச்சி மரணம் எழுப்பும் நினைவலைகள்……..

    எஸ் வி வேணுகோபாலன்

    இளவரசன் மரணம் மிகுந்த அதிர்ச்சிக்குரிய விதத்தில் நேரிட்டுள்ளது. எட்டு மாத தொடர் போராட்டம், அலைக்கழிப்பு, மன உளைச்சல், இருபத்து நான்கு மணி நேரமும் அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்றே நாற்புறமும் நடுநடுங்கிப் பார்த்துக் கொண்டிருக்குமாறு மிரட்டிக் கொண்டிருந்த சாதிய சக்திகளின் சவால்கள் நிரம்பிய அச்சம் நிரம்பிய சூழல்……இவற்றினிடையே தத்தளித்துக் கொண்டிருந்த இரு மலர்களில் ஒன்று உதிர்ந்து விழுந்தே விட்டது. உளவியல் ரீதியாக ஏற்கெனவே அவர்கள் மீது வீசப்பட்டிருந்த கட்டாரி, இப்போது உடலியல் ரீதியாக அந்த இளைஞனின் மரணத்தை அறிவித்திருக்கிறது. வாழத் துடித்த இளைஞனின் அகால மரணம் இது என்பது கவனத்திற்குரியது.

    ilavarasan with his mother

    ஊடக விவாதங்கள், பெரும்பாலும் அது தற்கொலையா கொலையா என்று திருப்பிவிடப்பட்டது. ஒரு நண்பர் சொன்னார், தமக்கு வந்த முதல் செய்தி இப்படி இருந்ததாம்: ‘இளவரசனை தற்கொலை செய்துவிட்டனர்’ என்று. வாய் தவறி சொல்லப்பட்டது போல் தெரியும் இந்தச் சொற்களை வேறு முறையில் வாசித்தால் எத்தனை ஆழமான உண்மையும், சமூக அதிர்ச்சியும் இந்த வாக்கியத்தில் நிரம்பியிருக்கிறது. காதல் மணத்தில் இணைந்த இளவரசனும், திவ்யாவும் ஒரு சேர இருந்தவரைக்கும்கூட ஒரு வன்மம் மிகுந்த தாக்குதலை எந்த நேரமும் எதிர்பார்த்திருந்த வாழ்க்கையாகத் தான் அது இருந்திருக்கிறது. ஆனால் அண்மைக் காலத்தில் மிக வேகமாக நிகழ்ந்துவிட்ட சில நடப்புகளை அடுத்து திவ்யா தாம் தமது தாயோடு செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துப் பிரிந்து சென்றுவிட்ட பிறகு, முன்னைவிடவும் பதட்டம் கூடிய சூழலின்வசம் இளவரசன் வாழ்க்கை தள்ளப்பட்டது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்தப் பின்புலத்தில் நேர்ந்திருக்கும் அவரது மரணம் ஓர் அராஜக அரசியல் வன்முறைக் களத்தில்பலி வாங்கப் பட்ட உயிர் என்பதை எப்படி மறுக்க முடியும்?

    உயிர்களையே பலி கேட்கும் சமூக திரட்டல், இப்போது குதித்துக் கொண்டாடவோ, கொக்கரிக்கவோ என்ன சாதித்தது என்பது வேதனை தரும் கேள்வி. தாமாக உள்ளன்போடு பேசிய அந்த அப்பாவிப் பெண்ணிடமிருந்து பின்னர் எத்தனை சொற்கள் மாறி மாறி பிடுங்கி எடுக்கப் பட்டன. தந்தையும் இல்லாத நிலையில், தாம் தமது தாயோடு செல்ல விரும்புவதாகவும், ஆனால் தமது கணவர் இளவரசன்பால் தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்று முதலில் சொன்ன அவர், பிறகு அடுத்தடுத்துப் பேசுகையில் வேறு முறையிலும் கருத்துக்கள் சொன்னதாக ஊடகங்கள் தெரிவித்தன. சாதி இத்தனை பெரிய அம்சமாகத் தங்களது திருமண வாழ்வில் குறுக்கிடும் என்று தாம் உணர்ந்திருக்கவில்லை என்று சொன்ன அவர், அம்மா விருப்பத்தையும் பெற்று மீண்டும் இளவரசனுடன் இணைவேன் என்றும் சொன்னார். ஆனால், பிறகு தாம் அப்படி சொல்லியிருக்கவில்லை, இனி இளவரசனோடு இணைவது என்ற பேச்சே இல்லை என்று சொல்லிவிட்டதாக இறுதியில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.

    divya 2

    தமது உள்ளத்தின் அன்பில் தோய்த்தெடுத்த சொற்களை அந்தப் பெண் தமது உதடுகளை நோக்கி எடுத்துக் கொண்டுவருவதற்குள் அதன் பாதையிலேயே அந்தச் சொற்களை வழி மறித்து, அடித்துத் திருத்தி வலியும், வேதனையும் நிரம்பிய வேற்று மொழி ஒன்றை இரத்தப் பிசுக்கோடு வெளியேற்ற வைத்ததில் என்ன ஆனந்தம் ஆதிக்க சக்திகளுக்கு? சொல்லப்பட்டவையும், மாற்றிச் சொன்னதாக மாற்றிச் சொல்லப்பட்டவையும், சொன்னதாக சொல்லப்பட்டவையும், சொல்லாதது என்று அறிவிக்கப்பட்டவையுமாக சொற்களும் கற்களும் இறைந்து கிடக்கும் ரயில் தண்டவாளத்திற்கு அருகேதான் கிடைத்திருக்கிறது இளவரசனின் உடல். அது வாழ்வைத் தொலைத்தவரின் சடலம் அல்ல, வாழ்வு பறிக்கப்பட்டவரின் உடல்.

    ஒரு காதல் மணத்தை முன்வைத்து ஏற்கெனவே விளைவிக்கப்பட்ட ஒரு மரணம் – அதன் நிமித்தம் மேலும் ஒரு மரணமும் தேவைப்பட்டிருக்கிறது ஆதிக்க உணர்வுகளின் வேட்கைக்கு. மிகச் சில மணி நேரங்களில் இடித்தும், எரித்தும் தரைமட்டமாக்கப்பட்ட முன்னூறு வீடுகளின் கரிப்புகையும், சாம்பல் நாற்றமும் இன்னமும் அடங்காதிருக்க, இளம் காதல் வாழ்க்கையின் மீது தீர்மானமாக வீசப்பட்ட தீ பற்றி எரிகிறது இப்போது! குடும்பங்களும், குடியிருப்புகளும், சமூகமும் எல்லாம் ஒரு வன்மத்தின் சாபத்திற்கு இலக்கு ஆக்கப்பட்டாற்ப் போல கலைத்துப் போடப்படுவதை எந்த நாகரிக உலகம் அனுமதிக்க முடியும்?

    அடிப்படை மனித உணர்வுகள் கேள்விக்குள்ளாக்கப்படும் சமூகம் தன்னைப் பண்பட்டதாக அறிவித்துக் கொள்ள முடியாது. ஏற்புடைமையும், நிராகரிப்பும் வேண்டுமானால் அவரவர் விருப்பம் சார்ந்ததாக இருக்கலாம். தாங்கள் விரும்பாததைக் கிள்ளிப் போடவும், அதன் மீது நெருப்பை அள்ளிப் போடவும் யாருக்கும் உரிமை கிடையாது.

    கால காலமாக நட்பும், நேயமும் கெழுமிய அண்டை அயலாராக மற்ற சமூகத்தினரோடு வாழ்ந்து வந்ததாகவே நாய்க்கன் கொட்டாய் பகுதியின் காலனி மக்கள் நவம்பர் 7 தாக்குதலுக்குப் பின் சென்று சந்திக்கும்போது கூறினர்.பரஸ்பரம் குடும்ப நிகழ்வுகளில், கொண்டாட்டங்களில், திருவிழாக்காலங்களில் கலந்து பழகியவர்கள், சேர்ந்து உண்டவர்கள் எப்படி திடீரென்று வாளை உருவிக் கொண்டு எதிரே வந்து நின்றனர் என்ற மலைப்பில் இருந்து அவர்கள் மீளாததைப் பார்க்க முடிந்தது. மண்ணில் புதைந்திருக்கும் வேரில் கலந்தது மாதிரி மனத்தின் அடியாழத்தில் கிடக்கும் உணர்வுகளைக் கீறி வெறுப்பும், பகைமையும் வெடிக்குமாறு தூண்டுபவர்கள் எப்படி மக்கள் தலைவர்களாக விளங்க முடியும்?

    மூன்று காலனிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் தன்மையிலும் ஓர் அரசியல் பளிச்சென்று புலப்பட்டது. கலப்பு மணம் செய்திருந்த தலித் குடும்பங்கள் மீது வன்முறை கூடுதலாக நிகழ்த்தப்பட்டது. அந்த வீடுகள் மிக அதிகபட்ச வன்மத் தாக்குதலின் சாட்சியங்களாக நிற்கின்றன. தங்களை விட உயர் சாதி பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் தலித் வாலிபர்களின் நோக்கம் சொத்துக்களை அடித்துப் பிடுங்குவது, பிறகு அந்தப் பெண்ணைக் கைவிடுவது என்றெல்லாம் பா ம க தலைவர்கள் பொழிந்து தள்ளிய அவதூறுகளை, மிக காட்டமாகவும், ஆவேசத்தோடும் மறுத்த பெண்மணி ஒருவரை, வங்கி ஊழியர் இயக்கத்தின் சார்பில் அந்தப் பகுதிக்குச் சென்றபோது நாங்கள் சந்தித்தோம்.

    “என்னைத் திருமணம் செய்தபிறகு எனது கணவர் ஒற்றை நயா பைசா கூட எனது பெற்றோரிடம் சென்று மிரட்டிப் பறிக்கவில்லை. நாங்கள் அந்தப் பக்கம் செல்லவே இல்லை. எங்களை ஏற்காத எனது பெற்றோர் வழி உறவுகள் யாரையும் எனது குழந்தைகளுக்கு இன்றுவரை தெரியாது. எங்களை ஏன் வம்புக்கிழுக்கிறது பா ம க ? அடுத்தடுத்து தேர்தலில் தோல்வி கண்ட அந்தக் கட்சிக்கு கொள்கை கோட்பாடு எல்லாம் திவால் ஆகிப் போன பிறகு, அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குத் தங்களை முன்னிறுத்த வேறு எதுவும் கிடைக்கவில்லை. தலித் விரோத அரசியலை முன்னெடுக்கின்றனர்” என்றார் அவர். கணவரை இழந்துவிட்ட அந்தப் பெண்மணியின் வீட்டில் கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்ட நேரம், அவரது மகள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தாக்கிய வெறி கும்பலுக்கும் இதெல்லாம் தெரியும். தங்களுக்கு எந்தத் தொடர்பும் அற்ற ஒரு நிகழ்வுக்காகத் தங்களை இப்படி தாக்க இவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது என்று கேட்டனர் அவர்கள்.

    முட்புதர்களுக்கு இடையே வயதுக்கு வந்த தனது மகளையும், நடுங்கிக் கொண்டிருந்த சிறு வயது மகனையும் பெரும் அச்சத்தோடு சேர்த்தணைத்துக் கொண்டு அன்றைய பாழிரவு எப்படி கடந்து போகும் என்று தாம் பட்ட பாட்டை, தையல் நாயகி என்ற பெண்மணி டிசம்பர் 5, 2012 அன்று தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்ட மேடையில் எடுத்துரைத்தபோது அதிர்ந்து கேட்டது ஜனத் திரள். ‘நாளை மீண்டும் இதைப் போலவே தாக்க வந்தால் நாம் என்ன செய்வோம்’ என்று தனது மகன் கேட்டதைச் சொன்ன அவர், தலித்தாகப் பிறந்தது எங்கள் குற்றமா என்று கேட்ட கேள்விக்கு ஆதிக்க சக்திகளின் பதில் என்ன?

    ஒரு தருமபுரி செய்தி மட்டும்தான் கவனத்தை தேசிய அளவில் ஈர்த்திருக்கிறது. அதற்கு முன்பாகப் பல நிகழ்வுகள் தமிழகத்தின் வடமாவட்டங்களில் நடக்கவே செய்தன. கட்டைப் பஞ்சாயத்துகள் நடத்தி இப்படியான காதல் திருமணங்கள் கேள்விக்குள்ளாக்கப் பட்டன. ரத்து செய்து அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குடும்பங்கள் மிரட்டப்பட்டன. தத்தமது மகனையோ, மகளையோ தீர்த்துக் கட்டிவிடுமாறு தீர்ப்புகள் வழங்கப்பட்டு நிறைவேற்றப் பட்ட கொடுமைகளும் நடந்திருக்கின்றன.

    தருமபுரி நிகழ்வுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக எழுத்தாளர் இமையம் உயிர்மை இதழில் எழுதிய “பெத்தவன்” நெடுங்கதை (பாரதி புத்தகாலயம் அதை சிறு நூலாக வெளியிட்டிருக்கிறது) அத்தகைய அதிர்ச்சி மிக்க நடப்புகளை நேரடியாகப் பேசியது. உழைப்பாளி மக்களை அடையாள அரசியல் எப்படி கூறுபோடுகிறது என்பதை அதன் இலக்கிய வடிவம் தொட்டுக் காட்டியது.

    தலித் காலனி மக்களுக்கு ஆர்வத்தோடு வங்கிச் சேவை கிடைக்க உதவிய கிராம வேளாண் வங்கி ஊழியராக இருந்த நாகராஜன், திவ்யாவின் தந்தை என்ற முறையில், சாதி ரீதியாகக் கூட்டப்பட்ட பஞ்சாயத்து எதிரே எப்படி கூனிக் குறுகி நிறுத்தப்பட்டார் என்பதும், அதன் தொடர் நிகழ்வுகளில் நேர்ந்த அவரது மரணமும், அதன்மீது கட்டமைக்கப்பட்ட தாக்குதல் வன்முறையும் ஒரு தனிப்பட்ட காதல் திருமணத்திற்கு எதிரானது மட்டும் அல்ல. ஓர் அரசியல் நடவடிக்கை அது. சமூக எச்சரிக்கை. தங்களது அணியைத் தமது அரசியல் விருப்பங்களுக்கு ஒத்திசைவாகத் திரட்டுதலின் வன்முறை அறிவிப்பு அது. தங்களைப் போன்றே இருக்கும் வேறு பல இடைநிலை சாதி அமைப்புகளையும் தங்களது பாணியிலேயே நடந்து கொள்ளுமாறு தங்களது மேடையில் நிறுத்தி வைத்து அறிவுறுத்தும் அபாய அரசியல் அது.

    தாராளமய கொள்கைகளால் காயப்பட்டுப் போயிருக்கும் அன்றாட வாழ்க்கை, கல்வி-சுகாதாரம் எல்லாம் காசு உள்ளவர்க்கே என்று ஆக்கப்பட்டிருக்கும் சவாலான நிகழ்காலம், நிச்சயமற்ற எதிர்காலம் இவற்றின் பின்புலத்தில் தங்களது பொது எதிரிக்கு எதிராகத் திரள வேண்டிய மக்களை மிகுந்த சுயநலத்தோடு பிரித்துப் போடும் இத்தகைய அரசியல் யாருக்கு சாதகமானது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். கொலைகளும், தற்கொலைகளும் பெருகும் ஒரு சமூகமாக தமிழகம் உருமாறிக் கொண்டிருப்பதன் பிரதிபலிப்பாக வெளியாகும் அண்மைக் கால புள்ளிவிவரங்கள் வேதனை அளிப்பவை.

    ஒரு தனிப்பட்ட வாழ்க்கை, இரண்டு உள்ளங்களின் பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் நேர்ந்த காதல் திருமணம் இன்று ஒரு பொது பிரச்சனையாக மாற்றப் பட்டதும், அவர்களது விருப்பத்திற்கு எதிரான திசையில் அந்த வாழ்க்கை இப்போது மிக கோரமான முறையில் முடிக்கப்பட்டிருப்பதும் இந்த நிகழ்வுகளை இன்னும் ஆழமான புரிதலோடு பார்க்குமாறு சமூகத்தைப் பணிக்கின்றன. சாதி கௌரவம் என்ற போர்வையில் நடத்தப்படும் அத்து மீறிய தலையீடுகளைக் குறித்து எச்சரிக்கை கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றன. வன்மமும், வன்முறையும் குடும்ப வாழ்க்கையின் சன்னல்களை உடைத்தெறிந்து உள்ளே நுழைவதை உரத்த குரலில் நிராகரிக்குமாறு வற்புறுத்துகின்றன. சோதனை மிகுந்த இந்த நேரத்தில் அன்பின் வழியது உயிர்நிலை என்ற உன்னதமான வாழ்க்கை நெறியை உயர்த்திப் பிடிக்குமாறு மன்றாடிக் கேட்கின்றன. பகைமையும், வெறுப்பும், கசப்பும் பரவி விரவும் – மானுடத்திற்கு எதிரான – கருத்தாக்கங்களில் இருந்து விடுபட்டு – காதல் இருவர் கருத்து ஒருமித்து வாழ முன் வரும்போது அதற்கு ஆதரவு தந்து இன்பம் அடையப் பழகுமாறு கோரிக்கை விடுக்கின்றன. உழைப்பாளி மக்களின் விடியல் தங்களிடையே பிரிந்து கூறுபட்டு நிற்பதில் அல்ல, ஒன்றுபட்டு நிற்பதில், பொது எதிரிக்கு எதிராகக் கூட்டாகப் போராடுவதில் தான் அடங்கி இருக்கிறது என்றும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

    தமது தாயின் அருகே இளவரசன் இறுக்கம் கலந்த – ஆனால், நம்பிக்கை மிஞ்சி இருந்த பார்வையோடு நின்ற காட்சியும், பாதுகாப்பு வளையத்துக்குள் பதட்டத்தோடு திவ்யா பார்த்த பார்வையும் நாளேடுகளை நிரப்புகின்றன. இரண்டுக்குமே பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது. அது ஆரோக்கியமான மாற்று சிந்தனையின் வழித் தடத்தில் இருக்கிறது.
    **************
    நன்றி: வண்ணக்கதிர் (ஜூலை 14, 2013)

    Share
  • சேதுக் கால்வாய்த் திட்டம்

    தமிழகத்தை ஒட்டிய வடகடலிலும் தென்கடலிலும் 12 ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து கடலியல் வல்லுனராகி,  ஐநா.வில் 23 அரசுகளுக்கு ஆலோசகராக இருந்த திரு. மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுடன் நேர்காணல்

    06sethu-depths1

    1. சேதுக் கால்வாய்த் திட்டத்தால் பவளப் பாறைகளுக்கு ஆபத்து என்கிறார்களே, அஃது உண்மையா?

    சேதுக் கால்வாய் தமிழன் கால்வாய்.

    கிழக்கே வங்காள விரிகுடாவையும், தெற்கே மன்னார் வளைகுடாவையும் இணைக்கின்ற 165 கிமீ. நீளமும் 12 மீ. ஆளமும் 300 மீ. அகலமும் கொண்ட வழித்தடம்.

    55 கிமீ.  நீளத்துக்கு கோடிக் கரைக்கு அருகே கடல்தரையில் உள்ள மேடுகளை உடைத்து 300 மீ. அகலத்தில் 12 மீ வரை ஆழமாக்குதல்.

    download

    55 கிமீ.  நீளத்துக்கு சேதுத்திடல் பகுதியில் கடல்தரையில் உள்ள மேடுகளை உடைத்து 300 மீ. அகலத்தில் 12 மீ வரை ஆழமாக்குதல்.

    இந்த 85 கிமீ. நீளத்தைத் தவிர வேறு எந்தக் கடல்தரையையும் ஆழமாக்கவில்லை.

    இந்த 165 கிமீ. நீள வழித்தடத்தில் கடல்தரையில் பவளப் பாறைகள் இல்லை, கிடையவே கிடையாது.

    biosphere

    பவளப்பாறைகள் எங்கே இருக்கின்றன?

    வடகடலில்

    1. இலங்கைத் தீவின் வடக்கே பருத்தித்துறை தொடங்கி, மாதகல் வரை இருக்கின்றன.
    2. யாழ்குடா நாட்டின் தெற்கே இரணைத் தீவு, அதை ஒட்டிய பகுதிகள், பல்லவராயன் கட்டுக் கரை, மேலும் தெற்கே விடத்தல் தீவுக் கரை.

    eezindia

    தென் கடலில்

    1.  இராமேச்சரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடையே, கரையோரத்தில், தெற்கே வான்தீவு தொடக்கம் வடக்கே செங்கால் தீவுவரை உள்ள 21 தீவுகளை ஒட்டிப் பவளப் பாறைகள் இருக்கின்றன.

    download (1)இலங்கைக் கரைகளில், கால்வாயின் வழித்தடத்தில் இருந்து ஆகக் குறைந்தது 20 கிமீ. தொலைவில் பவளப் பாறைகள் இருக்கின்றன.

    தமிழகக் கரைகளில், கால்வாயின் வழித்தடத்தின் தென்முனையில் இருந்து 20 கிமீ.தென்மேற்கே  மேற்கே செங்கால் தீவை ஒட்டிப் பவளப் பாறைகள் இருக்கின்றன.

    பவளங்கள் இல்லாத கரையோரக் கடல்கள் உலர் வலையக் கடல்களில் இல்லை. ஆனால் அவை பாறைகளாக அமைகின்ற கரையோரங்கள் மிகக் குறைவு. ஒதுக்கிடக் கரையோரங்களைத் தேடிப் பவளங்கள் பாறைகளாகக் குவிந்து வளர்கின்றன.

     கால்வாய் அமையும் 165 கிமீ. நீளத்திற்கு இரு பகுதிகளிலும் 20 கிலோ மீட்டர் அகலம்வரை பவளப் பாறைகள் இல்லை, இல்லவே இல்லை.

    சேதுக் கால்வாயை அமைக்கக் கடல் தரையை  ஆழமாக்குவதால் பவளப் பாறைகள் உடையும், பெருகுவது குறையும், பாதிப்புறும் என்ற கருத்துப் பொருளற்ற புனைவு.

    2. இந்தத் திட்டத்தால் கடல் குதிரைகள் போன்ற அரிய வகைக் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்பது உண்மையா?

    கடலில் கப்பலை ஓட்டினால் கடல்வாழ் உயிரினங்களைப் பாதிக்கும். கப்பல்கள் எங்கே ஓடினாலும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஓரளவு பாதிப்பு இருக்கும். விசைப் படகுகளையோ கட்டுமரங்களையோ ஓட்டினாலும் பாதிப்பு இருக்கவே இருக்கும். அதில் எவ்வித ஐயமும் இல்லை.

    கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்பதால் யாரும் கப்பல்களை ஒட்டாமல் விடுவதில்லை.  தொழிலுக்கு மீனவர் போகாதிருப்பரா?

    தூத்துக்குடியில் இருந்து வடக்கே இராமேச்சரம் வரை ஒட்டிய மன்னார் வளைகுடாவில் உயிரினப் பாதுகாப்பு வலையம் உண்டு.

    அங்கே அரிய வகையான கடல்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன.

    சேதுஅணைக்குத் தெற்கே உள்ள அந்த உயிரினப் பாதுகாப்பு வலையத்தில் கால்வாயின் வழித்தடம் அமையாது. அதனால் அந்த அரிய அரிய வகையான கடல்வாழ் உயிரினங்களுக்குக் கால்வாய் ஆழமாக்குவதால் எந்தப் பாதிப்புமில்லை.

    3. சேதுக் கால்வாய்த் திட்டம் மீனவர் வாழ்வுக்கு எதிரானது என்று  சொல்கிறார்களே! உங்கள் கருத்து என்ன?

    1. அடிப்படைத் தகவல்கள் காண்க, அதன்பின் ஆய்க.

    தமிழ் நாட்டின் மொத்தக் கடற்கரையின் நீளம் 1,076 கிமீ.  அதனுள் கோடிக்கரைக்குத் தெற்கே கால்வாய் அமையும் கடலை ஒட்டிய கரை 545 கிமீ. நீளம் (50.6%).

    நாகப்பட்டினம் மாவட்டம்170 கிமீ.

    திருவாரூர்  மாவட்டம் 20 கிமீ.

    தஞ்சாவூர்  மாவட்டம் 45 கிமீ.

    புதுக்கோட்டை  மாவட்டம்39 கிமீ.

    இராமநாதபுரம் மாவட்டம் 271 கிமீ.

    மொத்தம் 5 மாவட்டங்களில் 545 கிமீ.

    தமிழ் நாட்டில் 442 மீனவ ஊர்கள் உள. அவற்றுள் 224 ஊர்கள் (50.6%) சேதுக்கால்வாய் வழித்தடத்தை ஒட்டி உள்ளன.

    நாகப்பட்டினம் மாவட்டம் 60 மீனவ ஊர்கள்.

    திருவாரூர்  மாவட்டம் 04 மீனவ ஊர்கள்.

    தஞ்சாவூர்  மாவட்டம் 27 மீனவ ஊர்கள்.

    புதுக்கோட்டை  மாவட்டம் 34 மீனவ ஊர்கள்.

    இராமநாதபுரம் மாவட்டம் 99 மீனவ ஊர்கள்.

    மொத்தம் 5 மாவட்டங்களில் 224 மீனவ ஊர்கள்.

    தமிழ் நாட்டில் தோராயமாக 5.5 இலட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர் (2011 கணக்கு). அவர்களுள் 3.79 இலட்சத்தினர் (69%) சேதுக்கால்வாய் வழித்தடத்தை ஒட்டி வாழ்கின்றனர்

    நாகப்பட்டினம் மாவட்டம் 140,000 மீனவர்.

    திருவாரூர்  மாவட்டம் 13,000 மீனவர்.

    தஞ்சாவூர்  மாவட்டம் 21,000 மீனவர்.

    புதுக்கோட்டை  மாவட்டம் 15,000 மீனவர்.

    இராமநாதபுரம் மாவட்டம் 190,000 மீனவர்.

    மொத்தம் 5 மாவட்டங்களில் 379,000 மீனவர்

    தமிழ் நாட்டில் தோராயமாக 40,000 மீன்பிடிக் கலங்கள் உள (2011 கணக்கு). அவற்றுள் 21,000 000 மீன்பிடிக் கலங்கள் (53%) சேதுக் கால்வாய் வழித்தடத்தை ஒட்டிய தமிழக மீனவர்களிடம் உள.

    நாகப்பட்டினம் மாவட்டம் 1500 கரையோரக் கலங்கள் 4,000 விசைப் படகுகள்.

    திருவாரூர்  மாவட்டம் 50 கரையோரக் கலங்கள்.

    தஞ்சாவூர்  மாவட்டம் 1000 கரையோரக் கலங்கள் 200 விசைப் படகுகள்.

    புதுக்கோட்டை  மாவட்டம் 200 கரையோரக் கலங்கள் 50 விசைப் படகுகள்.

    இராமநாதபுரம் மாவட்டம் 10,000 கரையோரக் கலங்கள் 4,500 விசைப் படகுகள்.

    மொத்தம் 5 மாவட்டங்களில் 12,750 கரையோரக் கலங்கள் 8,750 விசைப் படகுகள்

    தமிழ்நாட்டின் கடல் உயிரின வள உற்பத்தி மொத்தம் தோராயமாக 4 இலட்சம் மெட்ரிக் தொன். அதில் இந்த 15 மாவட்டங்களில் 2.5 இலட்சம் மெட்ரிக் தொன் (60%)கடல் உயிரின வளத்தைக் கரையேற்றுகிறார்கள்.

    நாகப்பட்டினம் மாவட்டம் 100,000 மெட்ரிக் தொன்.

    திருவாரூர்  மாவட்டம் 2,800 மெட்ரிக் தொன்.

    தஞ்சாவூர்  மாவட்டம் 15,200 மெட்ரிக் தொன்.

    புதுக்கோட்டை  மாவட்டம் 12,000 மெட்ரிக் தொன்.

    இராமநாதபுரம் மாவட்டம் 120,000 மெட்ரிக் தொன்.

    மொத்தம் 5 மாவட்டங்களில் 250,000 மெட்ரிக் தொன்.

    தமிழ்நாட்டின் 50% கடற்கரைநீளத்தில் வாழும், 70% மீனவர்கள்,  60% கடல் உயிரினவள உற்பத்தியைக் கரையேற்றுகிறார்கள்.

    இந்த ஐந்து மாவட்டங்களே மீன் உற்பத்திக் களஞ்சியங்கள். இந்த மீனவர்கள் எங்கே மீன் பிடிக்கிறார்கள்?

    இந்த 5 மாவட்ட மீனவர்களுள் 65% சதவீத மீனவர்கள் வடகடலில் மீன் பிடிக்கிறார்கள்.

    sethu cross section

    1. 2.  வடகடலின் பற்றாக்குறை அறுவடை

    வடகடலின் மற்றறொரு பெயர் பாக்கு நீரிணை. வடகடலின் மொத்தப் பரப்பளவு 10,000 சகிமீ. இதில் சரிபாதி இலங்கைக்குச் சொந்தமானது.

    எனவே ஏறத்தாழ 5,000 விசைப்படகுகள், 10,000 கலங்கள் என வைத்திருக்கும் 3.2 இலட்சம் மீனவர்களும் இந்த 5,000 சகிமீ. பரப்பளவிலுள்ள கடல் உயிரின வளத்தையே தம் வாழ்வாதாரமாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

    1974ஆம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டிற்குப் பின்னரே இந்தக் கடற்கரையோர மீனவர்களின் பரப்பளவு 5,000 சகிமீ. ஆகச் சுருங்கியது.

    அதற்கு முன்பு எல்லையற்ற கடல். அப்பொழுது அண்ணளவாக இந்தக் கரையில் ஒன்றரை இலட்சம் மீனவர் எண்ணிக்கை. கடற்கலங்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டவில்லை. விசைப்படகுகளோ 1,000 வரைதான் இருந்தன. மீன் உற்பத்தியும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன்னைத் தாண்டவில்லை.

    அக்காலங்களில் இலங்கை மீனவர்களும், ஈழத்து மீனவர்களும், தமிழக மீனவர்களும் ஒரே கடலில் எல்லைகள் தெரியாமல் மீன்பிடித்தது மட்டுமில்லை, தாங்கள் பிடித்த மீன்களை இரு கரையோரங்களின் சந்தைகளில் விற்பார்கள். திருமண உறவுகளையும் வைத்திருந்து உறவுமுறையுடன் மீன்பிடித்தனர். கடலில் ஒருவருக்கு ஒருவர் பேருதவியாக இருந்தனர்.

    இது 1974க்கு முன்பு. கள்ளத்தோணி என்றும், கடத்தல்காரர் என்றும் தமிழரைச் சிங்களக் கடற்படை சிறைப்பிடித்த சுட்டுவீழ்த்திய காலங்கள். மீனவர்களை அல்ல.

    கடந்த 40 ஆண்டுகளில் இந்தக் கரையோர 5 மாவட்டங்களிலும் விசைப்படகுகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்ந்து விட்டது. இக்காலத்தில் இறால், சிங்க இறால், நண்டு போன்ற உயிரின வகைகள் ஏற்றமதிப் பொருளாயின. ஏற்கனவே இக்கடலில் சுழியோடிக் குற்றிய சங்கு, வங்காள தேசத்திற்கும், கடலட்டை சிங்கப்பூருக்கும் ஏற்றுமதியாகிக் கொண்டிருந்த காலம்.

    கடல்பரப்பு அளவு மாறவில்லை. கடல் வளக் கொள்ளளவு மாறவில்லை. ஆனால் மீனவர்கள் எண்ணிக்கையோ மூன்று மடங்காகியது. விசைப்படகுகள் எண்ணிக்கையோ ஐந்து மடங்கு பெருகியது. கடலோரக் கலங்களின் எண்ணிக்கையும் பெருகியது.

    கடலின் வளமோ மாறாமல் இருக்க, மக்கள் தொகைப் பெருக்கமும், ஏற்றுமதி வாய்ப்புகளும், மீன்பிடி பரப்பளவில் சரிபாதி குறுக்கமும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையுப் பாதிக்கத் தொடங்கின.

    1970களில் இக்கடலருகலுள்ள மீனவர்களின் தனிமனித வருவாய்க் கடுமையாகக் குறைந்தது. எனவே தமிழக மீனவர்கள் தமிழக எல்லைக்குள்ளான 5,000 கிமீ. பரப்பளவைத் தாண்டி, இலங்கையின் 5,000 சகீமீ. பரப்பளவிலும் சென்று மீன்பிடிக்கத் தொடங்கினர்.

    இலங்கைப் போரினால், 1980களுக்குப் பின்பு இலங்கைக் வட கரையோரங்களில் மீன்பிடிக்கத் தடை. அக்காலத்தில் சிங்களக் கடற்படை போராளிகள் எனத் தமிழரைத் தேடியது. எனவே மீனவர்களையும் துன்புறத்தத் தொடங்கியது. கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களைச் சிங்களப்படை கடுமையாகத் தாக்கத் தொடங்கியது.

    கடந்த 30 ஆண்டுகளாகக் கடல்வள உயிரின உற்பத்தி வளர்ச்சி வேகம் தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களிலும் குறைந்தது. தனிநபர் வருமானம் குன்றியது. மீன்பிடிப் பரப்பெல்லைகள் குறுகின. மக்கள் தொகை பெருகியது. கலங்கள் பெருகின. இம் மீனவர்களின் வாழ்வாதாரம் படிப்படியாகச் சீர்குலைந்தது.

    1. 3.  வடகடல் மீனவர் தொழில்திறன்

    தமிழ்நாட்டின் மொத்த மீனவர்களுள் இந்த ஐந்து மாவட்டங்களில் வாழ்கின்ற மீனவர்களுக்குரிய திறமைகள், ஆற்றல்கள் ஆழ்கடல் மீன்பிடியை ஒட்டியதல்ல. அவை தரவைக்கடல் அல்லது கரையோரக் கடலை ஒட்டியது. ஆனாலும் ஏனைய மாவட்ட மீனவர்களை விட இவர்களுக்குக் கடல் வாழ் அனுபவம் அதிகம்.

    வைகாசி, ஆனி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதங்கள் அவர்கள் கடலுக்குள் போவதைக் குறைத்துக் கொள்ளும் மாதங்கள். ஏனெனில், உயிரின மீன் உற்பத்திக்கு உரிய காம விதைகள், கருக்கட்டல்கள், கடலின் பருவ நிலை மாற்றங்கள் இந்த நான்கு மாதங்களில் மிகை. வைகாசியில் அரசே மீன்பிடையத் தடுக்கிறது. மார்கழியில் பருவநிலை தடுக்கிறது.

    வழமையாக இந்த மீனவர்கள் மதியம் 2 மணிக்குக் கடலுக்குச்செல்வர், விடிய 4 மணிக்குக் கரை திரும்புவர். அதற்கேற்றவாறு அவர்கள் படகுகளில், விசைப்படகுகளில் வசதிகளை வைத்திருப்பர்.

    ஆற்றல், திறமை, கடல்வாழ் அனுபவம் கொண்ட மூன்று லட்சம் மீனவர்கள், தனிநபர் வருவாய்க் குறைவாலும், அறுவடைப் பற்றாக் குறையாலும் துன்புறும் பொழுது வேறு தொழில்களுக்கு அவர்கள் போகாமலும், தமக்குத் தெரிந்த தொழிலை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கவும் வளர்ச்சிக்குத் திட்டமிடுவோரே வழிகாட்ட வேண்டும்.

    சேதுக்கால்வாய்த் திட்டம் அத்தகை வழிகாட்டல் திட்டமே. மீனவரின் வாழ்வாதரத்தைப் பன்மடங்கு பெருக்கும் வழிகாட்டல் திட்டமே.

    1. 4.  வங்காள விரிகுடாவை நோக்கி

    இத்திட்டத்துக்கு அமைய கோடிக்கரைக்கும் காங்கேயன் துறைக்கும் இடையே 55 கிமீ. நீளத்துக்கு 300 மீ. அகலத்தில் கடல் தரையை 12 மீ. ஆழமாக்கினால், 3 இலட்சம் மீனவர்களின் மீன்பிடிப் பரப்பெல்லை இன்றைய 5,000 சகிமீ. இலிருந்து, நாளையே 16 இலட்சம் சகிமீ. பரப்பளவாக விரியும்.

    தமிழக, ஆந்திர, கலிங்கக் கடற்கரைகள் மேற்கு எல்லை. வங்க மியான்மார் கடற்கரைகள் வடக்கு எல்லை. தாய்லாந்து, மலேசியா, சுமாத்திரா கடற்கரைகள் கிழக்கெல்லை.  இந்த எல்லைகள் கொண்ட வங்காள விரிகுடாவின் 16 இலட்சம் சகிமீ. பரப்பளவு கொண்ட தமிழருக்காக மீன்பிடிக்க விரியும்.

    bayof bengal

    வங்காள விரிகுடாவின் இந்தியப் பொருளாதாரக் கடல் வலையத்துள் ஆண்டுக்கு 22 தொடக்கம் 30 இலட்சம் மெட்ரிக் தொன் கடல் உயிரின வளத்தை அள்ளும் வாய்ப்பு இந்திய மீனவர்ளுக்கு உண்டு.

    வங்காள விரிகுடாவின் இந்த வளத்தை இப்போது தாய்லாந்தும், தாய்வானும் இந்தோனேசியாவும் நவீனமயமாக்கப்பட்ட மீன்பிடிக் கப்பல்களை வைத்துக் கடலில் சில வாரங்கள் தங்கிக் கடலுயிரின வளங்ளை அள்ளிக்கொண்டு போகிறார்கள்.  இந்தியப் பொருளாதார வலையத்துள் தாராளமாக வந்து அள்ளிக்கொண்டு போகிறார்கள். தாய்வான் கப்பல்கள் சீனாவின் கிழக்குக் கரையிலிருந்து நெடுந்தொலைவு பயணித்து வருகின்றன.

    மியான்மர், வங்கதேசம், இலங்கை, இந்தியா ஆகிய ஏனைய எல்லை நாடுகள், இந்தோனேசியா தாய்லாந்து வைத்திருக்கும் மீன்பிடி நவீனக் கப்பல்களை வைத்திருக்கவில்லை.

    வங்காள விரிகுடாவின் இந்த 22-30 இலட்சம் மெட்ரிக் தொன் கடலுயிரின வளங்களில் பெரும்பாலானவை சூரை மீன்களும் சுறாக்கள் போன்ற நெடுங்கடல் உயிரின வளங்கள். கரையோர வளங்களான இறால், நண்டு, திருக்கை போன்ற கடல்தரையினவோ, நெத்தலி, சாலை, சிறுசுறா போன்ற நூற்றுக்கணக்கான மீன் வகைகள் நெடுங்கடலில் மிக மிகக் குறைவு.

    சேதுக் கால்வாய்க் கரையோர மாவட்ட மீனவர் பயன்படுத்தும் கலங்கலளோ வலைகளோ சிறிய மீன்களையும் தரை வகையினரையும் நோக்கியன.

    சூரை மீன், பெருஞ்சுறா வகைகள் ஒரு மீனே ஒரு கிலோவுக்கு அதிக எடை கொண்டன. பல நூறு கிலோ எடையுள்ளனவும் உள.

    இரு வாரங்களுக்கு மேல் கடலில் தங்க வேண்டும். நெடுந் தூண்டில்களை மிதக்க விட வேண்டும். அள்ளிய மீன் வளத்தை உறைபனிக் குளிரில் சேமிக்க வேண்டும்.

    கடலில் தங்கும் நாட்களுக்கு உணவு, நீர், படுக்கை வசதி கொண்டு செல்ல வேண்டும். கரைக்கு வந்தவுடன் இறக்கத் துறைமுக வசதி, சேமிக்க உறைபனி வசதி, சந்தைக்கு உறைபனிப்பெட்டகச் சரக்குந்து வசதிகள் வேண்டும்.

    100 பாரிய மீன்பிடிக் கப்பல்கள், 50,000 மீனவத் தொழிலாளர், ஆண்டு தோறும் ஆகக் குறைந்தது 10 இலட்சம் மெட்ரிக் தொன் மீன்களை வங்காள விரிகுடாவின் இந்தியப் பொருளாதார வலையத்துளிருந்து அள்ளிக் கொணடு வரலாம்.

    1. 5.  மீன்பிடித் தொழிலின் பங்களிப்பு

    சேதுக் கால்வாயின் வடக்கில் 55 கிமீ. ஆழமாக்கினாலே வங்காள விரிகுடா முழுவதும் இந்த 5 மாவட்ட மீனவர்களுக்குத் திறநக்கும். தனிநபர் வருமானம் உயரும். வாழ்வாதாரம் பெருகும். மீன்பிடி தொழில் நுட்பம் மேம்படும்.

    விசைப்படகுகள் ஓட்டியோர் மீகாமானாகப் பயில்வர். வீச்சு வலையோடும் விடுவலையோடும் முடங்கி முனங்கியோர் நெடுந்தூண்டிலுடன் சுறாக்களையும், சூரைகளையும் அள்ளிக் கொண்டு வந்து மகிழ்வர். கடலாடிகளாக மீண்டும் தமிழரின் தொழில் தரமுமுயரும்.

    நாகப்பட்டினம், காரைக்கால், அதிராம்பட்டினம், இராமேச்சரம், தனுக்கோடி ஆகியன சேதுத் திட்டத்தின் மீனவர் வளர்ச்சி முயற்சியாகப் பாரிய கப்பல்களை நிறுத்தும் துறைமுகங்களாகும். கப்பல் கட்டும் தொழிலகங்கள், கப்பல் திருத்தும் நிலையங்கள், கப்பல் சார் பணியாளருக்கான பயிலகங்கள், தொலைத் தொடர்பாளர், செய்மதித் தொடர்பு இணைப்பாளர் பயிலகங்கள், எனக் கடற் பயணம்சார் அமைப்புகள் ஐந்து மாவட்டங்களிலும் அமைப்பதற்குச் சேதுக்கால்வாய்த் திட்டம் வழிகாட்டியாக அமையும்.

       உறைபனிக் கிடங்குகள் இத்துறைமுகங்களை ஒட்டி அமையும். அந்தக் கிடங்குகளில் இருந்து ஏற்றிச் செல்லும் உறைபனிப்பெட்டகச் சரக்குந்துகள் பெருகும். சூரை மீன்களைத் தகரத்தில் அடைக்கும் தொழிலகங்கள் சூழும்.  கடலுயிரினச் சேமிப்பு, பதப்படுத்தல் துறைகள் வளர, அத்துறைகளில் வல்லுனரை உருவாக்கும் பயிலகங்கள் அமையும்.

    கரையேறிய கடல் வளத்துக்கு ஏற்றுமதிச் சந்தையே சிறப்பிடமாதலால், சாலைப் போக்குவரத்து, தொடர்வண்டிப் போக்கு வரத்து, விமானப் போக்குவரத்து ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்புகளில் முதலீடு பெருகும்.

    நாமக்கல்லில் சரக்குந்து, சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, ஈரோடில் மஞ்சள், திருப்பூரில் பின்னலாடை என மையம்கொண்டு அந்தந்த மாவட்டங்கள் வளர்ந்தது போல, சேதுக் கால்வாய்க் கரையோர மாவட்டங்கள் மீன்பிடித் தொழிலை மையமாக்கி வளரும். பிற மாநிலத்தவர் மற்றும் அந்நிய முதலீட்டாளரை ஈர்க்கும்.

    அறுவடைக்காக இலங்கை எல்லைக்குள் அலைபாயாது, சிங்களக் கடற்படையின் அட்டூழியத்திற்கு உட்படாமல், 16 இலட்சம் சகிமீ. ஆக விரிந்த கடற் பரப்பில் தாய்லாந்து மலேசியா, இந்தோனேசியா, தாய்வான் மீன்பிடிக் கப்பல் கலங்களின் அத்து மீறலுக்கு இடம் கொடாது, இந்த ஐந்து மாவட்ட மீனவர்களும் வங்காள விரிகுடாவின் கடலுயிரின வளத்தை அள்ளிக் கொண்டுவரச் சேதுக்கால்வாய்த்திட்டம் வழிவகுக்கும்.

    1. 6.  தென் கடலை நோக்கி

    சேதுக் கால்வாய்த் திட்டத்தின் தென் பகுதியாகச் சேதுத் திடல்களின் ஊடே 30 கிமீ. நீளத்துக்கு, 300 மீ. அகலத்துக்கு, 12 மீ. ஆழத்துக்குக் கப்பல் கால்வாய் அமைப்பதாகும்.

     இவ்வாறு ஆழமாக்கல் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கான வாழ்வாதாரக் கொடையாகும்.

    பாம்பன் பாலத்துக்கு கீழேயுள்ள கால்வாய் வழி தென்கடலுக்குச் செல்லும் விசைப் படகுகள், நெடுங்கடலுக்கும் போகும் வலுவற்றன. பாம்பன் பாலத்தைக் கடந்து தெற்கே போகும் இவற்றைக் கரையோரக் கடலில் மீன்பிடிக்க விடாது தடுப்போர் மன்னார் வளைகுடா உயிரினப் பாதுகாப்பு வலையத்தினர்.

    பட்டினப்பாலையில் தொடங்கிப் பத்திப் பாடல்கள் காலத்திலும் பாரதியார் ஊடாக இன்று வரையும் பேசப்படும் தென் கடலின் பரப்பளவு 20,000 சகிமீ. தென் கடலுக்குக் கீழே இந்துப் பெருங்கடலோ எல்லை தெரியாது விரிகிறது.

    தென் கடலின் பெருவளமே முத்துப் படுகைகள். அவை படிப்படியாக அழிந்து வருகின்றன. முத்துப் படுகைகள் 2000 ஆண்டுகளாக வளர்ந்த தென்கடல் பகுதியில், தூத்துக்குடிக்குக் கிழக்கே, இலங்கையின் புத்தளத்துக்கு மேற்கே, கடலுயிரினப் பாதுகாப்பு வலையம் சார்ந்த பகுதியில் எண்ணெய்க் கிணறுகளுக்கான ஆழ்துளைகளை அமைக்க ஒரு சதுரத்தைச் சீனாவுக்கும் மற்றச் சதுரத்தை இந்தியாவுக்கும் கொடுக்க இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ள நிலையால் முத்துப் படுகைகள் முற்றாக அழியும் வாய்ப்பும் பரம்பரை வளங்கள் அற்றுப்போகும் நிலையும் உருவாகி வருகிறதே.

    தென்கடலுக்குக் கீழே, கன்னியாகுமரிக்குத் தெற்கே குமரித் தரவை (Wadge Bank) உள்ளது. ஆழ் கடலுக்கு நடுவே ஆழமற்ற மேட்டுத் தரவை. 1974 வரை இக் குமரித் தரவையில் இலங்கை மீன்பிடிக் கலங்களுக்கே மீன்பிடி உரிமை இருந்தது. இழுவைக் கப்பல்களை அனுப்பிப் பெருமளவு மீன்வளத்தை அவை அள்ளிச் சென்றன.

    1974இன் கச்சத் தீவு உடன்பாட்டில் இந்தத் தரவையின் மீன்பிடி உரிமை இந்தியாவுக்காயது. எனினும் 1974 தொடக்கம் அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கைக் கப்பல்கள் மீன்பிடிக்க அந்த உடன்பாடு வழிசெய்தது.

    எனினும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பாலும் இன்று வரை இலங்கை மீன்பிடி இழுவைக் கப்பல்களே அங்கு மீன்வளங்களை அள்ளிச் செல்கின்றன.  கன்னியாகுமரி மீனவர்கள் இதை நன்றாக அறிவார்கள். அவர்களிடம் இழுவைக் கப்பல்கள் இருந்தால் அங்குள்ள கடலுயிரின வளங்களைக் கொணரலாம்.

    தெற்கே இந்துப் பெருங்கடலில் இந்தியப் பொருளாதார வலையத்துக்கு உள்ளேயும் புறத்தேயும் சூரை மற்றும் சுறா மீன்களை அள்ளிச் செல்ல ஐரோப்பிய யப்பானிய மீன்பிடிக் கப்பல்கள் வருகின்றன.

    உறைபனிச் சேமிப்பு வசதியும் தகர மீன் தொழிலகமும் கொண்ட, பாரிய தாய்க்கப்பல்கள். அவற்றுக்கு மீன்களைப் பிடித்துக் கொண்டுவரும் சிறிய ஊட்டக் கப்பல்கள் எனப் பன்னாட்டு மீன்பிடிப் படைகளே அந்தக் கடலில் மாலைதீவுக்குக் கிழக்கேயும் மேற்கேயும் தெற்கேயும் நிலைகொண்டுள்ளன.

    ஐரோப்பியக் கப்பல்களுக்கு இடியாகோ கார்சியா, இறியூனியன் துறைமுகங்கள் ஓய்வு மற்றும் மீளளிப்பு நிலையங்களாகின்றன. யப்பான் மற்றும் தாய்வான் கப்பல்களுக்குச் சிங்கப்பூர் மற்றும் கிள்ளான் துறைமுகங்கள்  ஓய்வு மற்றும் மீளளிப்பு நிலையங்களாகின்றன.

    சேதுக் கால்வாயின் தென் கால்வாயான சேதுவை ஊடறுக்கும் கால்வாய் அமைந்ததும், இராமேச்சர மீனவர்கள் இந்துப் பெருங்கடல் வரை நெடும் பாய்ச்சலில் செல்லலாம்.

    குமரித் தரவைக்கு இழுவைக் கப்பல்களைக் கொண்டு செல்லலாம். இந்துப் பெருங்கடலுக்குச் சூரை மீன்பிடிக் கப்பல்களுடன் போகலாம்.

    100 மீன்பிடிக் கப்பல்கள், 50,000 மீன்பிடித் தொழிலாளர், ஏறத்தாழ 15 இலட்சம் மெட்றிக் தொன் மீன் வளங்களை ஆண்டுதோறும் அள்ளிவரும் வாய்ப்பைச் சேதுக் கால்வாய்த் திட்டம் அமைத்துக் கொடுக்கும்.

    chinabridge

    1. 7.  வாழ்வாதாரத்தை வளர்க்கவே சேதுக் கால்வாய்

    தமிழக மீனவர்களின் கப்பல்கள் கட்டணமெதுவுமின்றிச் சேதுக் கால்வாயைப் பயன்படுத்தலாம் என்ற அரசின் அறிவிப்பு இந்த மீனவர் வாழ்வாதார வளர்ச்சித் திசையை நோக்கியதாம்.

    வடகடலுக்கு வடகிழக்காக வங்காள விரிகுடா விரிந்திருக்கிறதே. வட கடலுக்குத் தெற்காகத் தென்கடல், குமரித் தரவை, இந்துப் பெருங்கடல் யாவும் விரிந்து வரவேற்கிறதே.

    வாழ்வாதாரம் பறிபோகிறதே எனக் கொடி பிடிப்பவர்கள், வாழ்வாதாரத்தைப் பெருக்கக் கப்பல்களின் சுக்கான்களைப் பிடிப்பார்களாக. கடலாடிகளாகிக் கடல் உயிரின வளங்களை அள்ளிக் கொணர்வார்களாக.

    வறுமையை விரட்டி, மகிழ்ச்சியைப் பெருக்கித் தொழில் தராதரத்தை உயர்த்தச் சேதுக் கால்வாயை வரவேற்போமாக.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (65)

    சக்தி சக்திதாசன்

    ramsey

    அன்பினியவர்களே வணக்கம் ,
    உங்களை அடுத்த மடலில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் உங்கள் முன்னே நான். விசித்திரமான சூழல் வித்தியாசமான காலங்கள் மாற்றங்களை வலுவாக அனைவர்க்குள்ளும் புகுத்துகின்றன.

    மனிதர்களுடைய வாழ்க்கை முறையை நிர்ணயிக்கும் காரணிகள் , அவனின் வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறைகள், அவனுடைய எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கைத் தரத்தைக் கணிக்கும் வழிமுறைகள் என்பன ஒவ்வொரு சமுதாயத்திலும் அந்நாட்டின் அதிகாரத்தை நிர்ணயிக்கும் அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.

    இம்மென்னெடுப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஜனநாயகம் என்று சொல்லப்படும் ஒரு மனிதன் ஒரு வாக்கு என்னும் முறை சில நாடுகளிலும் , சர்வாதிகாரம் என்று தம்மைத்தாமே அந்நாட்டுக்கு அதிபர்களாக்கிக் கொள்ளும் வகையில்,  அந்நாட்டு ராணுவங்களினால் மக்களைக் கட்டுப்படுத்தும் மற்றொரு வகையுமே பிரதானமாக இன்றைய நடைமுறையில் எம்முன்னே முன்னெடுக்கப் படுகின்றன..

    இம்முறைகளில் ஜனநாயகம் எனும் முறையில் நடக்கும் தேர்தல்களில் நடக்கும் தில்லு முல்லுகளைப் பற்றி நான் இங்கே கணக்கிலெடுக்கவில்லை அந்நாட்டின் அரசியல் நடப்புகளை பற்றியே குறிப்பிடுகிறேன்.

    சரி இந்த வகையிலே நான் இவ்வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்த விடயத்திற்கு வருவோம்.

    இங்கிலாந்து அரசியலில், அரசியல் உலகில் பொதுவாக பேசப்படும் ஜனநாயக முறையிலான வகையிலேயே தேர்தல் நடைபெற்று அரசாங்கங்கள் தெரிவாகின்றன.

    இங்கிலாந்தில் 1900 ம் ஆண்டு வரை இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமே அரசியலில் ஈடுபட்டு இருந்தன. அவை கன்சர்வேடிவ் கட்சியும் , லிபரல் கட்சிகளுமே யாகும். இவைகளில் கன்சர்வேடிவ் கட்சி பிரபுக்களையும் , நில முதலாளிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது லிபரல் கட்சி தாம் சுதந்திரமான கொள்கைகளைக் கொண்டவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் அக்கட்சியிலும் பணமுதலைகளே இருந்தார்கள்.

    இதன் காரணமாக சாதாரண அன்றாடத் தொழிலாளரின் அபிலாஷைகளை முன்னெடுக்கும் வகையிலான அரசியலைப் பிரதிபலிக்கும் கட்சி இல்லை என்ற தொழிலாளரின் ஆதங்கம் 1900ம் ஆண்டு இங்கிலாந்தில் லேபர் கட்சியைத் தோற்றுவித்தது,

    சாதாரண தொழிலாளர்களின் கூடுதலாக ஆரம்பித்த இக்கட்சிக்கு பலகாலங்கள் அரசாங்கம் அமைக்கும் வகையிலான ஆதரவு இருந்ததில்லை. அக்கால லிபரல் கட்சியுடன் இணைந்து அவர்களின் அரசாங்கம் அமையும் போது தமது கொள்கைகளை சிலவற்றை அதனுடன்  முன்வைப்பது ஒன்றே இவர்களது அன்றைய அரசியல் முனைப்பாக இருந்தது.

    1916ம் ஆண்டளவில் லிபரல் கட்சி இரண்டாக பிளவு பட்ட போதே லேபர் கட்சியின் செல்வாக்கு மிகைப்பட்டது. அக்கட்சி தனது முதலாவது அரசாங்கத்தை 1924ம் ஆண்டு “ராம்சி மக்டொனால்ட்” என்பவரின் தலைமையில் அமைத்தது. இவர் லேபர் கட்சியின் முதலாவது பிரதமராவார்.

    இங்கிலாந்தின் தொழிலாளர் யூனியன்கள்  இணைந்து அவ்விணைப்பினால் உருவானதே லேபர் கட்சியாகும். இன்றுவரை இங்கிலாந்தின் ஏதாவது தொழிலாளர் யூனியனில் மெம்பராக இருந்தால் அவர்கள் செலுத்தும் சந்தாப்பணத்தின் ஒரு பகுதி லேபர் கட்சிக்கு அளிக்கப்படுகிறது.

    இது தவறு என பல காலமாக வாதிட்டு வந்த கன்சர்வேடிவ் கட்சியின் பிரச்சாரத்தினால்,  யாராவது தொழிலாளர் யூனியன் மெம்பர் விரும்பினால் தமது சந்தாப்பணத்திலிருந்து லேபர் கட்சிக்குத் தாம் பணம் கொடுக்க விரும்பவில்லை என்று அறிவித்தால் அவர்களது சந்தாவிலிருந்து லேபர் கட்சிக்குப் பணம் செல்வதை நிறுத்தலாம் என்பது சட்ட மூலமாக்கப்பட்டது.

    சரி இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்கிறீர்களா?

    இன்றைய காலகட்டத்தின் அரசியல் மாறிவிட்டது. லேபர் கட்சிக்குள் தொழிலாளர் யூனியனின் ஆதிக்கம் கூடி அவர்கள் கண்மூடித்தனமான கோரிக்கைகளை முன்வைப்பதினால் நாட்டின் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க முடியாதிருக்கிறது எனும் வாதத்தை முன்வைக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்குப் பலம் அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்டு லேபர் கட்சித் தலைவர் “எட் மில்லிபாண்ட்” லேபர் கட்சியை தொழிலாளர் யூனியன்களிலிருந்து அந்நியப் படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

    ஆமாம் கட்சியை ஸ்தாபித்தவர்களின் உறவைத் துண்டித்து அவர்களை அந்நியப் படுத்தும் முயற்சியில் “எட் மில்லிபாண்ட்” வெல்வாரா? இங்கிலாந்து மக்களின் மனதில் உள்ள லேபர் கட்சிக்கும், யூனியன்களுக்கு உள்ள தொடர்பின் பிரதிபலிப்பு மாறுமா?

    காத்திருப்போம் காலம் விடையளிக்கும்

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    ed_66455179_66455178

     

     

     

     

     

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா ! (18)

    பவள சங்கரி

    மகிழ்ச்சியின் ஒரு வாயில் அடைபட்டால், அடுத்தது திறக்கிறது, ஆனால் நாம் மூடிய அந்தக் கதவையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பதால், நமக்காகத் திறக்கப்பட்ட மற்றொரு கதவைப் பார்க்க முடியாமல் போய்விடுகிறது. – ஹெலென் கெல்லர்.

    tumblr_lmbd7k5mNI1qcxieko1_500

    வாழ்க்கையை உள்ளது உள்ளபடி அப்படியே எதிர்கொள்வோம்!

    “சில நேரங்களில் நம் வாழ்க்கையில் வருவதை, எந்தத் தடுப்பு நடவடிக்கையோ, முன்கூட்டிய திட்டமோ அல்லது தீர்மானமோ என ஏதுமின்றி உள்ளது உள்ளபடி, அப்படியே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் நாம் தொடர்ந்து அந்த விளைவை கட்டுப்படுத்த முயற்சிக்கும்போது, தற்செயலான மற்றும் வளர்ச்சிக்கு மிகக் குறுகிய இடமே அளிக்கிறோம்”.
    ஜீனைன் கேரோன்

    சில நேரங்களில் வாழ்க்கை தொடர்ந்த பற்பல எதிர்மறை விளைவுகளை வரிசையாக ஏற்படுத்திக் கொண்டிருப்பதை உணருகிறோம். நம் பாதையில் இடருகிற மிகப்பெரும் தடைக்கற்களை எதிர்த்து அப்புறப்படுத்த நினைக்கிறோம். வாழ்க்கை பெரும் பாரமாகவும், மகிழ்ச்சியை மொத்தமாக கபளீகரம் செய்யக்கூடியதாகக்கூடத் தோன்றலாம்.

    வாழ்க்கை என்றுமே ஒரு சவாலாகத்தான் இருக்கிறது. சில நேரங்களில் சலிப்பும் கூட ஏற்படுகிறது. ஆனால் அறிவுடைமை என்பது அனைத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வதிலேயே இருக்கிறது. நம் வாழ்க்கையில் தடைகளும், தவிப்புகளும் தவிர்க்க முடியாத பகுதிகளே. அதிலிருந்து எவரும் தப்பிக்க இயலாது. ஆகவே நம் பாதையில் இடறும் எதையும் பொறுமையுடன் மற்றும் கௌரவத்துடன் கடக்கப் பழக வேண்டும். துன்பமோ அல்லது மன அழுத்தமோ நம்மைப் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. வாழ்க்கையின் அழகை முழுமையாக இரசிக்கத் தடையாக இருக்கும் அளவிற்கு எந்த ஒரு பிரச்சனையையும் தீவிரமாக உணரக்கூடாது. மகிழ்ச்சி என்பது எப்பொழுதும் நம்மைச் சுற்றியே இருப்பதால், அதனை உணர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபாடு கொள்ள அதனைப் பயன்படுத்திக்கொள்ளல் வேண்டும்.

    “அனைத்துமே உங்களுக்கு எதிராகப் போவதாகத் தெரியும்போது, விமானம் காற்றோடு இல்லாமல் அதனை எதிர்த்துக்கொண்டுதான் மேலெழும்புவதை நினைவில் கொள்ளுங்கள்”, என்கிறார் ஹென்றி ஃபோர்ட்.

    07slid1பேட்ரீசியா நாராயணன் , 54 வயதில், இன்று ஒரு மிகப்பெரும் தொழிலதிபர். பிறநாட்டு கூட்டமைப்பின் இந்திய வர்த்தகக் குழு மற்றும் தொழிற்துறைகளின் , (FICCI) ஆண்டின் சிறந்த பெண்மணி விருதை வென்றவர். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு 20 வயது இளம் பெண்ணாக அவர் பட்ட துன்பங்கள் சொல்லி மாளாது. ஆம், ஒரு குடிகாரக் கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு, தன்னுடைய 20வது வயதில் இரண்டு குழந்தைகளுடன், வேலையில்லாத கணவனுடன் நடுத் தெருவிற்கு வந்துவிட்டவர். தன் பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பிச் சென்று அங்கிருந்தபடியே, உழைத்து தன்னையும், தம் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள முடிவெடுத்தார். மற்ற சாதாரணப் பெண்களைப் போல சோகத்தில் மூலையில் முடங்கிவிடாமல், அடுத்தவருக்கு பாரமாக இராமல் துணிவுடன் தம் வாழ்க்கையை தாமே எதிர்கொள்ளத் துணிந்தார். அவருடைய பெற்றோர் இருவரும் நல்ல வருமானத்துடன் பணியில் இருந்தபோதும், அவர்களை அண்டிப் பிழைக்க விரும்பவில்லை அவர். எப்படியும் வாழ்க்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்ற தீர்மானமும், தீவிர ஆவலும்தான் அவரை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறது. சமையல் கலையில் நல்ல தேர்ச்சி பெற்றவர் பேட்ரீசியா. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தம்முடைய கைப்பக்குவத்தைப் புகழ்ந்ததன் விளைவு, அதையேத் தம் தொழிலாக்கிக் கொள்ளத் திட்டமிட்டார். ஊறுகாய், பழக்கூழ், என நண்பர்கள் மத்தியில் சிறிய அளவில் தம் வியாபாரத்தைத் தொடங்கியவர், பின்பு சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு தள்ளு வண்டியில் சிறிய உணவகத்தை ஆரம்பித்தார். அதற்கான உரிமம் பெற ஓராண்டிற்கும் மேலாக பெரும் போராட்டத்தை நடத்தினாலும், இறுதியில் வெற்றி வாகை சூடி, முதலில் வீட்டில் தயாரித்த கட்லெட், ரொட்டி,பஜ்ஜி, சமோசா, தேநீர், காப்பி மற்றும் சிறு தீனி வகைகளை விற்க ஆரம்பித்தார். இதற்காக அவர் தம் கணவர் மற்றும் ஐந்து உதவியாளர்களுடன், நாளொன்றுக்கு 16 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. இதற்கிடையில் வாழ்க்கையின் மற்ற கோர முகங்களையும் அவர் சந்திக்க வேண்டி வந்தது. 1991ல் அவருடைய திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு விவாகரத்தில் முடிந்தது. இதிலிருந்து மீண்டு வருவதற்குள், 2004ம் ஆண்டில் தன் அன்பு மகள் பிரதீபா, திருமணம் ஆன கையோடு, தன் கணவனுடன் ஒரு சாலை விபத்தில் இருவரும் உயிரிழந்தது பெரும் சோகமாகிப் போனது. அதற்குப் பிறகு மகன் பிரவீண் தம் வேலையை விட்டுவிட்டு வந்து தாயுடன் உதவியிருக்கிறார். மருத்துவ ஊர்தியின் உதவி இல்லாத பகுதியில் அடிபட்டதால் தம் மகளையும், மருமகனையும் காப்பாற்ற முடியாமல் போனதால், அதிகமாக விபத்து நடக்கக்கூடிய அந்த இடத்திற்கு விரைவாக மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் ஊர்தி (ஆம்புலன்ஸ்) வாங்கிக் கொடுத்தார். 2006ம் ஆண்டில் சந்தீபா என்ற தன்னுடைய சொந்த உணவு விடுதியை திறந்தார். சென்னையில் வெற்றிகரமாக 19 கிளைகளைப் பரப்பிக்கொண்டு நிற்கிறது இன்று அது. ஐம்பது பைசாவில் ஆரம்பித்த அவருடைய ஒரு நாளைய வருமானம் இன்று ரூபாய் 200,000 என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. முயற்சியும், மன உறுதியும் மட்டும் இருந்தால் எந்தத் தடையையும் தகர்த்தெறிந்து வெற்றி வாகை சூட முடியும் என்பதற்கு பேட்ரீசியா ஒரு உதாரணம்.

    வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டு , நாம் நினைத்ததைப் பிடிக்க வேண்டும். அதுதான் அறிவாளிகளின் திறன். வாழ்க்கையின் இனிய தருணங்களைக் கொண்டாடக் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதிர்படும் சிக்கல்களை கருணையுடன் ஏற்று அதை நம் மதிப்பை உயர்த்திக்கொள்ளக் கிடைத்த ஒரு வாய்ப்பாக எண்ணிக்கொள்ள வேண்டும். வெற்றி பெற்றால் அதைக் கொண்டாடுவோம். இல்லையென்றால் நாம் துணிவுடன் முயற்சி எடுத்ததற்கு மகிழ்ச்சி கொள்ளலாம். இது நம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், சுய மரியாதையையும் அதிகரிக்கச் செய்யும். அதே சமயம்  நல்ல அனுபவங்கள் மூலம் வாழ்க்கையின் உச்சத்தை அடைவதும் திண்ணம்.

    வாழ்க்கையின் வெற்றி என்பது சொத்துக்களையும், கோடி, கோடியாகப் பணம் சம்பாதிப்பதிலும் மட்டும் இல்லை. நல்ல உறவுகளையும், நட்புகளையும் சம்பாதித்துக் கொள்வதிலும், அதனைத் தக்க வைத்துக் கொள்வதிலுமே இருக்கிறது. பல நேரங்களில் அதிகமாகச் சேரும் இந்த சொத்தும், பணமும் மிக எளிதாக உறவுகளையும், நட்புகளையும் விலக்கி வைத்துவிடுகிறது. தம்மிடம் உள்ள பணம் ஏமாற்றி பிடுங்கப்பட்டுவிடுமோ அல்லது கொள்ளையடிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே, அதையே காவல் காத்துக்கொண்டு ஒருவரையும் அண்ட விடாமல் தள்ளி நிற்பவரும் ஒரு வகையில் உறவில்லாத ஏழைகளே. இதனை உணருவதற்கும் நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டேயிருந்து தம் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் வெறுமை மட்டும் உறவாகிப்போக நல்ல உறவுகளுக்காக ஏங்கியே தீர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுபவர்களும் உண்டு. வாழும் காலத்தில் நல்லவைகள் அனைத்தையும் சிந்திந்து செயல்பட வேண்டியது முக்கியம் இல்லையா.

    மன நிம்மதியே ஒருவருக்கு மிகப்பெரும் சொத்து. ஏனைய மற்ற சொத்தும், காசு பணமும் மட்டும் ஒருவருக்கு மன நிம்மதியை அளிப்பதில்லை!

    மீண்டும் சந்திப்போம்

    படங்களுக்கு நன்றி:

    http://business.rediff.com/slide-show/2010/jun/08/slide-show-1-from-50-paise-to-rs-2-lakh-a-day-success-story.htm

    http://www.vallamai.com/wp-content/uploads/2013/07/tumblr_lmbd7k5mNI1qcxieko1_500.jpg

    Share