சேதுக் கால்வாய்த் திட்டம்
தமிழகத்தை ஒட்டிய வடகடலிலும் தென்கடலிலும் 12 ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து கடலியல் வல்லுனராகி, ஐநா.வில் 23 அரசுகளுக்கு ஆலோசகராக இருந்த திரு. மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுடன் நேர்காணல்
1. சேதுக் கால்வாய்த் திட்டத்தால் பவளப் பாறைகளுக்கு ஆபத்து என்கிறார்களே, அஃது உண்மையா?
சேதுக் கால்வாய் தமிழன் கால்வாய்.
கிழக்கே வங்காள விரிகுடாவையும், தெற்கே மன்னார் வளைகுடாவையும் இணைக்கின்ற 165 கிமீ. நீளமும் 12 மீ. ஆளமும் 300 மீ. அகலமும் கொண்ட வழித்தடம்.
55 கிமீ. நீளத்துக்கு கோடிக் கரைக்கு அருகே கடல்தரையில் உள்ள மேடுகளை உடைத்து 300 மீ. அகலத்தில் 12 மீ வரை ஆழமாக்குதல்.
55 கிமீ. நீளத்துக்கு சேதுத்திடல் பகுதியில் கடல்தரையில் உள்ள மேடுகளை உடைத்து 300 மீ. அகலத்தில் 12 மீ வரை ஆழமாக்குதல்.
இந்த 85 கிமீ. நீளத்தைத் தவிர வேறு எந்தக் கடல்தரையையும் ஆழமாக்கவில்லை.
இந்த 165 கிமீ. நீள வழித்தடத்தில் கடல்தரையில் பவளப் பாறைகள் இல்லை, கிடையவே கிடையாது.
பவளப்பாறைகள் எங்கே இருக்கின்றன?
வடகடலில்
- இலங்கைத் தீவின் வடக்கே பருத்தித்துறை தொடங்கி, மாதகல் வரை இருக்கின்றன.
- யாழ்குடா நாட்டின் தெற்கே இரணைத் தீவு, அதை ஒட்டிய பகுதிகள், பல்லவராயன் கட்டுக் கரை, மேலும் தெற்கே விடத்தல் தீவுக் கரை.
தென் கடலில்
- இராமேச்சரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடையே, கரையோரத்தில், தெற்கே வான்தீவு தொடக்கம் வடக்கே செங்கால் தீவுவரை உள்ள 21 தீவுகளை ஒட்டிப் பவளப் பாறைகள் இருக்கின்றன.
இலங்கைக் கரைகளில், கால்வாயின் வழித்தடத்தில் இருந்து ஆகக் குறைந்தது 20 கிமீ. தொலைவில் பவளப் பாறைகள் இருக்கின்றன.
தமிழகக் கரைகளில், கால்வாயின் வழித்தடத்தின் தென்முனையில் இருந்து 20 கிமீ.தென்மேற்கே மேற்கே செங்கால் தீவை ஒட்டிப் பவளப் பாறைகள் இருக்கின்றன.
பவளங்கள் இல்லாத கரையோரக் கடல்கள் உலர் வலையக் கடல்களில் இல்லை. ஆனால் அவை பாறைகளாக அமைகின்ற கரையோரங்கள் மிகக் குறைவு. ஒதுக்கிடக் கரையோரங்களைத் தேடிப் பவளங்கள் பாறைகளாகக் குவிந்து வளர்கின்றன.
கால்வாய் அமையும் 165 கிமீ. நீளத்திற்கு இரு பகுதிகளிலும் 20 கிலோ மீட்டர் அகலம்வரை பவளப் பாறைகள் இல்லை, இல்லவே இல்லை.
சேதுக் கால்வாயை அமைக்கக் கடல் தரையை ஆழமாக்குவதால் பவளப் பாறைகள் உடையும், பெருகுவது குறையும், பாதிப்புறும் என்ற கருத்துப் பொருளற்ற புனைவு.
2. இந்தத் திட்டத்தால் கடல் குதிரைகள் போன்ற அரிய வகைக் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்பது உண்மையா?
கடலில் கப்பலை ஓட்டினால் கடல்வாழ் உயிரினங்களைப் பாதிக்கும். கப்பல்கள் எங்கே ஓடினாலும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஓரளவு பாதிப்பு இருக்கும். விசைப் படகுகளையோ கட்டுமரங்களையோ ஓட்டினாலும் பாதிப்பு இருக்கவே இருக்கும். அதில் எவ்வித ஐயமும் இல்லை.
கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்பதால் யாரும் கப்பல்களை ஒட்டாமல் விடுவதில்லை. தொழிலுக்கு மீனவர் போகாதிருப்பரா?
தூத்துக்குடியில் இருந்து வடக்கே இராமேச்சரம் வரை ஒட்டிய மன்னார் வளைகுடாவில் உயிரினப் பாதுகாப்பு வலையம் உண்டு.
அங்கே அரிய வகையான கடல்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன.
சேதுஅணைக்குத் தெற்கே உள்ள அந்த உயிரினப் பாதுகாப்பு வலையத்தில் கால்வாயின் வழித்தடம் அமையாது. அதனால் அந்த அரிய அரிய வகையான கடல்வாழ் உயிரினங்களுக்குக் கால்வாய் ஆழமாக்குவதால் எந்தப் பாதிப்புமில்லை.
3. சேதுக் கால்வாய்த் திட்டம் மீனவர் வாழ்வுக்கு எதிரானது என்று சொல்கிறார்களே! உங்கள் கருத்து என்ன?
1. அடிப்படைத் தகவல்கள் காண்க, அதன்பின் ஆய்க.
தமிழ் நாட்டின் மொத்தக் கடற்கரையின் நீளம் 1,076 கிமீ. அதனுள் கோடிக்கரைக்குத் தெற்கே கால்வாய் அமையும் கடலை ஒட்டிய கரை 545 கிமீ. நீளம் (50.6%).
நாகப்பட்டினம் மாவட்டம்170 கிமீ.
திருவாரூர் மாவட்டம் 20 கிமீ.
தஞ்சாவூர் மாவட்டம் 45 கிமீ.
புதுக்கோட்டை மாவட்டம்39 கிமீ.
இராமநாதபுரம் மாவட்டம் 271 கிமீ.
மொத்தம் 5 மாவட்டங்களில் 545 கிமீ.
தமிழ் நாட்டில் 442 மீனவ ஊர்கள் உள. அவற்றுள் 224 ஊர்கள் (50.6%) சேதுக்கால்வாய் வழித்தடத்தை ஒட்டி உள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம் 60 மீனவ ஊர்கள்.
திருவாரூர் மாவட்டம் 04 மீனவ ஊர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் 27 மீனவ ஊர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் 34 மீனவ ஊர்கள்.
இராமநாதபுரம் மாவட்டம் 99 மீனவ ஊர்கள்.
மொத்தம் 5 மாவட்டங்களில் 224 மீனவ ஊர்கள்.
தமிழ் நாட்டில் தோராயமாக 5.5 இலட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர் (2011 கணக்கு). அவர்களுள் 3.79 இலட்சத்தினர் (69%) சேதுக்கால்வாய் வழித்தடத்தை ஒட்டி வாழ்கின்றனர்
நாகப்பட்டினம் மாவட்டம் 140,000 மீனவர்.
திருவாரூர் மாவட்டம் 13,000 மீனவர்.
தஞ்சாவூர் மாவட்டம் 21,000 மீனவர்.
புதுக்கோட்டை மாவட்டம் 15,000 மீனவர்.
இராமநாதபுரம் மாவட்டம் 190,000 மீனவர்.
மொத்தம் 5 மாவட்டங்களில் 379,000 மீனவர்
தமிழ் நாட்டில் தோராயமாக 40,000 மீன்பிடிக் கலங்கள் உள (2011 கணக்கு). அவற்றுள் 21,000 000 மீன்பிடிக் கலங்கள் (53%) சேதுக் கால்வாய் வழித்தடத்தை ஒட்டிய தமிழக மீனவர்களிடம் உள.
நாகப்பட்டினம் மாவட்டம் 1500 கரையோரக் கலங்கள் 4,000 விசைப் படகுகள்.
திருவாரூர் மாவட்டம் 50 கரையோரக் கலங்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் 1000 கரையோரக் கலங்கள் 200 விசைப் படகுகள்.
புதுக்கோட்டை மாவட்டம் 200 கரையோரக் கலங்கள் 50 விசைப் படகுகள்.
இராமநாதபுரம் மாவட்டம் 10,000 கரையோரக் கலங்கள் 4,500 விசைப் படகுகள்.
மொத்தம் 5 மாவட்டங்களில் 12,750 கரையோரக் கலங்கள் 8,750 விசைப் படகுகள்
தமிழ்நாட்டின் கடல் உயிரின வள உற்பத்தி மொத்தம் தோராயமாக 4 இலட்சம் மெட்ரிக் தொன். அதில் இந்த 15 மாவட்டங்களில் 2.5 இலட்சம் மெட்ரிக் தொன் (60%)கடல் உயிரின வளத்தைக் கரையேற்றுகிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் 100,000 மெட்ரிக் தொன்.
திருவாரூர் மாவட்டம் 2,800 மெட்ரிக் தொன்.
தஞ்சாவூர் மாவட்டம் 15,200 மெட்ரிக் தொன்.
புதுக்கோட்டை மாவட்டம் 12,000 மெட்ரிக் தொன்.
இராமநாதபுரம் மாவட்டம் 120,000 மெட்ரிக் தொன்.
மொத்தம் 5 மாவட்டங்களில் 250,000 மெட்ரிக் தொன்.
தமிழ்நாட்டின் 50% கடற்கரைநீளத்தில் வாழும், 70% மீனவர்கள், 60% கடல் உயிரினவள உற்பத்தியைக் கரையேற்றுகிறார்கள்.
இந்த ஐந்து மாவட்டங்களே மீன் உற்பத்திக் களஞ்சியங்கள். இந்த மீனவர்கள் எங்கே மீன் பிடிக்கிறார்கள்?
இந்த 5 மாவட்ட மீனவர்களுள் 65% சதவீத மீனவர்கள் வடகடலில் மீன் பிடிக்கிறார்கள்.
- 2. வடகடலின் பற்றாக்குறை அறுவடை
வடகடலின் மற்றறொரு பெயர் பாக்கு நீரிணை. வடகடலின் மொத்தப் பரப்பளவு 10,000 சகிமீ. இதில் சரிபாதி இலங்கைக்குச் சொந்தமானது.
எனவே ஏறத்தாழ 5,000 விசைப்படகுகள், 10,000 கலங்கள் என வைத்திருக்கும் 3.2 இலட்சம் மீனவர்களும் இந்த 5,000 சகிமீ. பரப்பளவிலுள்ள கடல் உயிரின வளத்தையே தம் வாழ்வாதாரமாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
1974ஆம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டிற்குப் பின்னரே இந்தக் கடற்கரையோர மீனவர்களின் பரப்பளவு 5,000 சகிமீ. ஆகச் சுருங்கியது.
அதற்கு முன்பு எல்லையற்ற கடல். அப்பொழுது அண்ணளவாக இந்தக் கரையில் ஒன்றரை இலட்சம் மீனவர் எண்ணிக்கை. கடற்கலங்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டவில்லை. விசைப்படகுகளோ 1,000 வரைதான் இருந்தன. மீன் உற்பத்தியும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன்னைத் தாண்டவில்லை.
அக்காலங்களில் இலங்கை மீனவர்களும், ஈழத்து மீனவர்களும், தமிழக மீனவர்களும் ஒரே கடலில் எல்லைகள் தெரியாமல் மீன்பிடித்தது மட்டுமில்லை, தாங்கள் பிடித்த மீன்களை இரு கரையோரங்களின் சந்தைகளில் விற்பார்கள். திருமண உறவுகளையும் வைத்திருந்து உறவுமுறையுடன் மீன்பிடித்தனர். கடலில் ஒருவருக்கு ஒருவர் பேருதவியாக இருந்தனர்.
இது 1974க்கு முன்பு. கள்ளத்தோணி என்றும், கடத்தல்காரர் என்றும் தமிழரைச் சிங்களக் கடற்படை சிறைப்பிடித்த சுட்டுவீழ்த்திய காலங்கள். மீனவர்களை அல்ல.
கடந்த 40 ஆண்டுகளில் இந்தக் கரையோர 5 மாவட்டங்களிலும் விசைப்படகுகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக உயர்ந்து விட்டது. இக்காலத்தில் இறால், சிங்க இறால், நண்டு போன்ற உயிரின வகைகள் ஏற்றமதிப் பொருளாயின. ஏற்கனவே இக்கடலில் சுழியோடிக் குற்றிய சங்கு, வங்காள தேசத்திற்கும், கடலட்டை சிங்கப்பூருக்கும் ஏற்றுமதியாகிக் கொண்டிருந்த காலம்.
கடல்பரப்பு அளவு மாறவில்லை. கடல் வளக் கொள்ளளவு மாறவில்லை. ஆனால் மீனவர்கள் எண்ணிக்கையோ மூன்று மடங்காகியது. விசைப்படகுகள் எண்ணிக்கையோ ஐந்து மடங்கு பெருகியது. கடலோரக் கலங்களின் எண்ணிக்கையும் பெருகியது.
கடலின் வளமோ மாறாமல் இருக்க, மக்கள் தொகைப் பெருக்கமும், ஏற்றுமதி வாய்ப்புகளும், மீன்பிடி பரப்பளவில் சரிபாதி குறுக்கமும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையுப் பாதிக்கத் தொடங்கின.
1970களில் இக்கடலருகலுள்ள மீனவர்களின் தனிமனித வருவாய்க் கடுமையாகக் குறைந்தது. எனவே தமிழக மீனவர்கள் தமிழக எல்லைக்குள்ளான 5,000 கிமீ. பரப்பளவைத் தாண்டி, இலங்கையின் 5,000 சகீமீ. பரப்பளவிலும் சென்று மீன்பிடிக்கத் தொடங்கினர்.
இலங்கைப் போரினால், 1980களுக்குப் பின்பு இலங்கைக் வட கரையோரங்களில் மீன்பிடிக்கத் தடை. அக்காலத்தில் சிங்களக் கடற்படை போராளிகள் எனத் தமிழரைத் தேடியது. எனவே மீனவர்களையும் துன்புறத்தத் தொடங்கியது. கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களைச் சிங்களப்படை கடுமையாகத் தாக்கத் தொடங்கியது.
கடந்த 30 ஆண்டுகளாகக் கடல்வள உயிரின உற்பத்தி வளர்ச்சி வேகம் தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களிலும் குறைந்தது. தனிநபர் வருமானம் குன்றியது. மீன்பிடிப் பரப்பெல்லைகள் குறுகின. மக்கள் தொகை பெருகியது. கலங்கள் பெருகின. இம் மீனவர்களின் வாழ்வாதாரம் படிப்படியாகச் சீர்குலைந்தது.
- 3. வடகடல் மீனவர் தொழில்திறன்
தமிழ்நாட்டின் மொத்த மீனவர்களுள் இந்த ஐந்து மாவட்டங்களில் வாழ்கின்ற மீனவர்களுக்குரிய திறமைகள், ஆற்றல்கள் ஆழ்கடல் மீன்பிடியை ஒட்டியதல்ல. அவை தரவைக்கடல் அல்லது கரையோரக் கடலை ஒட்டியது. ஆனாலும் ஏனைய மாவட்ட மீனவர்களை விட இவர்களுக்குக் கடல் வாழ் அனுபவம் அதிகம்.
வைகாசி, ஆனி, கார்த்திகை, மார்கழி ஆகிய நான்கு மாதங்கள் அவர்கள் கடலுக்குள் போவதைக் குறைத்துக் கொள்ளும் மாதங்கள். ஏனெனில், உயிரின மீன் உற்பத்திக்கு உரிய காம விதைகள், கருக்கட்டல்கள், கடலின் பருவ நிலை மாற்றங்கள் இந்த நான்கு மாதங்களில் மிகை. வைகாசியில் அரசே மீன்பிடையத் தடுக்கிறது. மார்கழியில் பருவநிலை தடுக்கிறது.
வழமையாக இந்த மீனவர்கள் மதியம் 2 மணிக்குக் கடலுக்குச்செல்வர், விடிய 4 மணிக்குக் கரை திரும்புவர். அதற்கேற்றவாறு அவர்கள் படகுகளில், விசைப்படகுகளில் வசதிகளை வைத்திருப்பர்.
ஆற்றல், திறமை, கடல்வாழ் அனுபவம் கொண்ட மூன்று லட்சம் மீனவர்கள், தனிநபர் வருவாய்க் குறைவாலும், அறுவடைப் பற்றாக் குறையாலும் துன்புறும் பொழுது வேறு தொழில்களுக்கு அவர்கள் போகாமலும், தமக்குத் தெரிந்த தொழிலை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கவும் வளர்ச்சிக்குத் திட்டமிடுவோரே வழிகாட்ட வேண்டும்.
சேதுக்கால்வாய்த் திட்டம் அத்தகை வழிகாட்டல் திட்டமே. மீனவரின் வாழ்வாதரத்தைப் பன்மடங்கு பெருக்கும் வழிகாட்டல் திட்டமே.
- 4. வங்காள விரிகுடாவை நோக்கி
இத்திட்டத்துக்கு அமைய கோடிக்கரைக்கும் காங்கேயன் துறைக்கும் இடையே 55 கிமீ. நீளத்துக்கு 300 மீ. அகலத்தில் கடல் தரையை 12 மீ. ஆழமாக்கினால், 3 இலட்சம் மீனவர்களின் மீன்பிடிப் பரப்பெல்லை இன்றைய 5,000 சகிமீ. இலிருந்து, நாளையே 16 இலட்சம் சகிமீ. பரப்பளவாக விரியும்.
தமிழக, ஆந்திர, கலிங்கக் கடற்கரைகள் மேற்கு எல்லை. வங்க மியான்மார் கடற்கரைகள் வடக்கு எல்லை. தாய்லாந்து, மலேசியா, சுமாத்திரா கடற்கரைகள் கிழக்கெல்லை. இந்த எல்லைகள் கொண்ட வங்காள விரிகுடாவின் 16 இலட்சம் சகிமீ. பரப்பளவு கொண்ட தமிழருக்காக மீன்பிடிக்க விரியும்.
வங்காள விரிகுடாவின் இந்தியப் பொருளாதாரக் கடல் வலையத்துள் ஆண்டுக்கு 22 தொடக்கம் 30 இலட்சம் மெட்ரிக் தொன் கடல் உயிரின வளத்தை அள்ளும் வாய்ப்பு இந்திய மீனவர்ளுக்கு உண்டு.
வங்காள விரிகுடாவின் இந்த வளத்தை இப்போது தாய்லாந்தும், தாய்வானும் இந்தோனேசியாவும் நவீனமயமாக்கப்பட்ட மீன்பிடிக் கப்பல்களை வைத்துக் கடலில் சில வாரங்கள் தங்கிக் கடலுயிரின வளங்ளை அள்ளிக்கொண்டு போகிறார்கள். இந்தியப் பொருளாதார வலையத்துள் தாராளமாக வந்து அள்ளிக்கொண்டு போகிறார்கள். தாய்வான் கப்பல்கள் சீனாவின் கிழக்குக் கரையிலிருந்து நெடுந்தொலைவு பயணித்து வருகின்றன.
மியான்மர், வங்கதேசம், இலங்கை, இந்தியா ஆகிய ஏனைய எல்லை நாடுகள், இந்தோனேசியா தாய்லாந்து வைத்திருக்கும் மீன்பிடி நவீனக் கப்பல்களை வைத்திருக்கவில்லை.
வங்காள விரிகுடாவின் இந்த 22-30 இலட்சம் மெட்ரிக் தொன் கடலுயிரின வளங்களில் பெரும்பாலானவை சூரை மீன்களும் சுறாக்கள் போன்ற நெடுங்கடல் உயிரின வளங்கள். கரையோர வளங்களான இறால், நண்டு, திருக்கை போன்ற கடல்தரையினவோ, நெத்தலி, சாலை, சிறுசுறா போன்ற நூற்றுக்கணக்கான மீன் வகைகள் நெடுங்கடலில் மிக மிகக் குறைவு.
சேதுக் கால்வாய்க் கரையோர மாவட்ட மீனவர் பயன்படுத்தும் கலங்கலளோ வலைகளோ சிறிய மீன்களையும் தரை வகையினரையும் நோக்கியன.
சூரை மீன், பெருஞ்சுறா வகைகள் ஒரு மீனே ஒரு கிலோவுக்கு அதிக எடை கொண்டன. பல நூறு கிலோ எடையுள்ளனவும் உள.
இரு வாரங்களுக்கு மேல் கடலில் தங்க வேண்டும். நெடுந் தூண்டில்களை மிதக்க விட வேண்டும். அள்ளிய மீன் வளத்தை உறைபனிக் குளிரில் சேமிக்க வேண்டும்.
கடலில் தங்கும் நாட்களுக்கு உணவு, நீர், படுக்கை வசதி கொண்டு செல்ல வேண்டும். கரைக்கு வந்தவுடன் இறக்கத் துறைமுக வசதி, சேமிக்க உறைபனி வசதி, சந்தைக்கு உறைபனிப்பெட்டகச் சரக்குந்து வசதிகள் வேண்டும்.
100 பாரிய மீன்பிடிக் கப்பல்கள், 50,000 மீனவத் தொழிலாளர், ஆண்டு தோறும் ஆகக் குறைந்தது 10 இலட்சம் மெட்ரிக் தொன் மீன்களை வங்காள விரிகுடாவின் இந்தியப் பொருளாதார வலையத்துளிருந்து அள்ளிக் கொணடு வரலாம்.
- 5. மீன்பிடித் தொழிலின் பங்களிப்பு
சேதுக் கால்வாயின் வடக்கில் 55 கிமீ. ஆழமாக்கினாலே வங்காள விரிகுடா முழுவதும் இந்த 5 மாவட்ட மீனவர்களுக்குத் திறநக்கும். தனிநபர் வருமானம் உயரும். வாழ்வாதாரம் பெருகும். மீன்பிடி தொழில் நுட்பம் மேம்படும்.
விசைப்படகுகள் ஓட்டியோர் மீகாமானாகப் பயில்வர். வீச்சு வலையோடும் விடுவலையோடும் முடங்கி முனங்கியோர் நெடுந்தூண்டிலுடன் சுறாக்களையும், சூரைகளையும் அள்ளிக் கொண்டு வந்து மகிழ்வர். கடலாடிகளாக மீண்டும் தமிழரின் தொழில் தரமுமுயரும்.
நாகப்பட்டினம், காரைக்கால், அதிராம்பட்டினம், இராமேச்சரம், தனுக்கோடி ஆகியன சேதுத் திட்டத்தின் மீனவர் வளர்ச்சி முயற்சியாகப் பாரிய கப்பல்களை நிறுத்தும் துறைமுகங்களாகும். கப்பல் கட்டும் தொழிலகங்கள், கப்பல் திருத்தும் நிலையங்கள், கப்பல் சார் பணியாளருக்கான பயிலகங்கள், தொலைத் தொடர்பாளர், செய்மதித் தொடர்பு இணைப்பாளர் பயிலகங்கள், எனக் கடற் பயணம்சார் அமைப்புகள் ஐந்து மாவட்டங்களிலும் அமைப்பதற்குச் சேதுக்கால்வாய்த் திட்டம் வழிகாட்டியாக அமையும்.
உறைபனிக் கிடங்குகள் இத்துறைமுகங்களை ஒட்டி அமையும். அந்தக் கிடங்குகளில் இருந்து ஏற்றிச் செல்லும் உறைபனிப்பெட்டகச் சரக்குந்துகள் பெருகும். சூரை மீன்களைத் தகரத்தில் அடைக்கும் தொழிலகங்கள் சூழும். கடலுயிரினச் சேமிப்பு, பதப்படுத்தல் துறைகள் வளர, அத்துறைகளில் வல்லுனரை உருவாக்கும் பயிலகங்கள் அமையும்.
கரையேறிய கடல் வளத்துக்கு ஏற்றுமதிச் சந்தையே சிறப்பிடமாதலால், சாலைப் போக்குவரத்து, தொடர்வண்டிப் போக்கு வரத்து, விமானப் போக்குவரத்து ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்புகளில் முதலீடு பெருகும்.
நாமக்கல்லில் சரக்குந்து, சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, ஈரோடில் மஞ்சள், திருப்பூரில் பின்னலாடை என மையம்கொண்டு அந்தந்த மாவட்டங்கள் வளர்ந்தது போல, சேதுக் கால்வாய்க் கரையோர மாவட்டங்கள் மீன்பிடித் தொழிலை மையமாக்கி வளரும். பிற மாநிலத்தவர் மற்றும் அந்நிய முதலீட்டாளரை ஈர்க்கும்.
அறுவடைக்காக இலங்கை எல்லைக்குள் அலைபாயாது, சிங்களக் கடற்படையின் அட்டூழியத்திற்கு உட்படாமல், 16 இலட்சம் சகிமீ. ஆக விரிந்த கடற் பரப்பில் தாய்லாந்து மலேசியா, இந்தோனேசியா, தாய்வான் மீன்பிடிக் கப்பல் கலங்களின் அத்து மீறலுக்கு இடம் கொடாது, இந்த ஐந்து மாவட்ட மீனவர்களும் வங்காள விரிகுடாவின் கடலுயிரின வளத்தை அள்ளிக் கொண்டுவரச் சேதுக்கால்வாய்த்திட்டம் வழிவகுக்கும்.
- 6. தென் கடலை நோக்கி
சேதுக் கால்வாய்த் திட்டத்தின் தென் பகுதியாகச் சேதுத் திடல்களின் ஊடே 30 கிமீ. நீளத்துக்கு, 300 மீ. அகலத்துக்கு, 12 மீ. ஆழத்துக்குக் கப்பல் கால்வாய் அமைப்பதாகும்.
இவ்வாறு ஆழமாக்கல் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கான வாழ்வாதாரக் கொடையாகும்.
பாம்பன் பாலத்துக்கு கீழேயுள்ள கால்வாய் வழி தென்கடலுக்குச் செல்லும் விசைப் படகுகள், நெடுங்கடலுக்கும் போகும் வலுவற்றன. பாம்பன் பாலத்தைக் கடந்து தெற்கே போகும் இவற்றைக் கரையோரக் கடலில் மீன்பிடிக்க விடாது தடுப்போர் மன்னார் வளைகுடா உயிரினப் பாதுகாப்பு வலையத்தினர்.
பட்டினப்பாலையில் தொடங்கிப் பத்திப் பாடல்கள் காலத்திலும் பாரதியார் ஊடாக இன்று வரையும் பேசப்படும் தென் கடலின் பரப்பளவு 20,000 சகிமீ. தென் கடலுக்குக் கீழே இந்துப் பெருங்கடலோ எல்லை தெரியாது விரிகிறது.
தென் கடலின் பெருவளமே முத்துப் படுகைகள். அவை படிப்படியாக அழிந்து வருகின்றன. முத்துப் படுகைகள் 2000 ஆண்டுகளாக வளர்ந்த தென்கடல் பகுதியில், தூத்துக்குடிக்குக் கிழக்கே, இலங்கையின் புத்தளத்துக்கு மேற்கே, கடலுயிரினப் பாதுகாப்பு வலையம் சார்ந்த பகுதியில் எண்ணெய்க் கிணறுகளுக்கான ஆழ்துளைகளை அமைக்க ஒரு சதுரத்தைச் சீனாவுக்கும் மற்றச் சதுரத்தை இந்தியாவுக்கும் கொடுக்க இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ள நிலையால் முத்துப் படுகைகள் முற்றாக அழியும் வாய்ப்பும் பரம்பரை வளங்கள் அற்றுப்போகும் நிலையும் உருவாகி வருகிறதே.
தென்கடலுக்குக் கீழே, கன்னியாகுமரிக்குத் தெற்கே குமரித் தரவை (Wadge Bank) உள்ளது. ஆழ் கடலுக்கு நடுவே ஆழமற்ற மேட்டுத் தரவை. 1974 வரை இக் குமரித் தரவையில் இலங்கை மீன்பிடிக் கலங்களுக்கே மீன்பிடி உரிமை இருந்தது. இழுவைக் கப்பல்களை அனுப்பிப் பெருமளவு மீன்வளத்தை அவை அள்ளிச் சென்றன.
1974இன் கச்சத் தீவு உடன்பாட்டில் இந்தத் தரவையின் மீன்பிடி உரிமை இந்தியாவுக்காயது. எனினும் 1974 தொடக்கம் அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கைக் கப்பல்கள் மீன்பிடிக்க அந்த உடன்பாடு வழிசெய்தது.
எனினும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பாலும் இன்று வரை இலங்கை மீன்பிடி இழுவைக் கப்பல்களே அங்கு மீன்வளங்களை அள்ளிச் செல்கின்றன. கன்னியாகுமரி மீனவர்கள் இதை நன்றாக அறிவார்கள். அவர்களிடம் இழுவைக் கப்பல்கள் இருந்தால் அங்குள்ள கடலுயிரின வளங்களைக் கொணரலாம்.
தெற்கே இந்துப் பெருங்கடலில் இந்தியப் பொருளாதார வலையத்துக்கு உள்ளேயும் புறத்தேயும் சூரை மற்றும் சுறா மீன்களை அள்ளிச் செல்ல ஐரோப்பிய யப்பானிய மீன்பிடிக் கப்பல்கள் வருகின்றன.
உறைபனிச் சேமிப்பு வசதியும் தகர மீன் தொழிலகமும் கொண்ட, பாரிய தாய்க்கப்பல்கள். அவற்றுக்கு மீன்களைப் பிடித்துக் கொண்டுவரும் சிறிய ஊட்டக் கப்பல்கள் எனப் பன்னாட்டு மீன்பிடிப் படைகளே அந்தக் கடலில் மாலைதீவுக்குக் கிழக்கேயும் மேற்கேயும் தெற்கேயும் நிலைகொண்டுள்ளன.
ஐரோப்பியக் கப்பல்களுக்கு இடியாகோ கார்சியா, இறியூனியன் துறைமுகங்கள் ஓய்வு மற்றும் மீளளிப்பு நிலையங்களாகின்றன. யப்பான் மற்றும் தாய்வான் கப்பல்களுக்குச் சிங்கப்பூர் மற்றும் கிள்ளான் துறைமுகங்கள் ஓய்வு மற்றும் மீளளிப்பு நிலையங்களாகின்றன.
சேதுக் கால்வாயின் தென் கால்வாயான சேதுவை ஊடறுக்கும் கால்வாய் அமைந்ததும், இராமேச்சர மீனவர்கள் இந்துப் பெருங்கடல் வரை நெடும் பாய்ச்சலில் செல்லலாம்.
குமரித் தரவைக்கு இழுவைக் கப்பல்களைக் கொண்டு செல்லலாம். இந்துப் பெருங்கடலுக்குச் சூரை மீன்பிடிக் கப்பல்களுடன் போகலாம்.
100 மீன்பிடிக் கப்பல்கள், 50,000 மீன்பிடித் தொழிலாளர், ஏறத்தாழ 15 இலட்சம் மெட்றிக் தொன் மீன் வளங்களை ஆண்டுதோறும் அள்ளிவரும் வாய்ப்பைச் சேதுக் கால்வாய்த் திட்டம் அமைத்துக் கொடுக்கும்.
- 7. வாழ்வாதாரத்தை வளர்க்கவே சேதுக் கால்வாய்
தமிழக மீனவர்களின் கப்பல்கள் கட்டணமெதுவுமின்றிச் சேதுக் கால்வாயைப் பயன்படுத்தலாம் என்ற அரசின் அறிவிப்பு இந்த மீனவர் வாழ்வாதார வளர்ச்சித் திசையை நோக்கியதாம்.
வடகடலுக்கு வடகிழக்காக வங்காள விரிகுடா விரிந்திருக்கிறதே. வட கடலுக்குத் தெற்காகத் தென்கடல், குமரித் தரவை, இந்துப் பெருங்கடல் யாவும் விரிந்து வரவேற்கிறதே.
வாழ்வாதாரம் பறிபோகிறதே எனக் கொடி பிடிப்பவர்கள், வாழ்வாதாரத்தைப் பெருக்கக் கப்பல்களின் சுக்கான்களைப் பிடிப்பார்களாக. கடலாடிகளாகிக் கடல் உயிரின வளங்களை அள்ளிக் கொணர்வார்களாக.
வறுமையை விரட்டி, மகிழ்ச்சியைப் பெருக்கித் தொழில் தராதரத்தை உயர்த்தச் சேதுக் கால்வாயை வரவேற்போமாக.








சேது கால்வாய்த் திட்டத்தின் தொழில்நுட்பப் பின்னணி குறித்த அடிப்படை செய்திகளை அறிந்து கொள்ள உதவிய மிகவும் பயனுள்ள நேர்காணல். நன்றி ஐயா!