ஓர் அதிர்ச்சி மரணம் எழுப்பும் நினைவலைகள்……..

0

எஸ் வி வேணுகோபாலன்

இளவரசன் மரணம் மிகுந்த அதிர்ச்சிக்குரிய விதத்தில் நேரிட்டுள்ளது. எட்டு மாத தொடர் போராட்டம், அலைக்கழிப்பு, மன உளைச்சல், இருபத்து நான்கு மணி நேரமும் அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்றே நாற்புறமும் நடுநடுங்கிப் பார்த்துக் கொண்டிருக்குமாறு மிரட்டிக் கொண்டிருந்த சாதிய சக்திகளின் சவால்கள் நிரம்பிய அச்சம் நிரம்பிய சூழல்……இவற்றினிடையே தத்தளித்துக் கொண்டிருந்த இரு மலர்களில் ஒன்று உதிர்ந்து விழுந்தே விட்டது. உளவியல் ரீதியாக ஏற்கெனவே அவர்கள் மீது வீசப்பட்டிருந்த கட்டாரி, இப்போது உடலியல் ரீதியாக அந்த இளைஞனின் மரணத்தை அறிவித்திருக்கிறது. வாழத் துடித்த இளைஞனின் அகால மரணம் இது என்பது கவனத்திற்குரியது.

ilavarasan with his mother

ஊடக விவாதங்கள், பெரும்பாலும் அது தற்கொலையா கொலையா என்று திருப்பிவிடப்பட்டது. ஒரு நண்பர் சொன்னார், தமக்கு வந்த முதல் செய்தி இப்படி இருந்ததாம்: ‘இளவரசனை தற்கொலை செய்துவிட்டனர்’ என்று. வாய் தவறி சொல்லப்பட்டது போல் தெரியும் இந்தச் சொற்களை வேறு முறையில் வாசித்தால் எத்தனை ஆழமான உண்மையும், சமூக அதிர்ச்சியும் இந்த வாக்கியத்தில் நிரம்பியிருக்கிறது. காதல் மணத்தில் இணைந்த இளவரசனும், திவ்யாவும் ஒரு சேர இருந்தவரைக்கும்கூட ஒரு வன்மம் மிகுந்த தாக்குதலை எந்த நேரமும் எதிர்பார்த்திருந்த வாழ்க்கையாகத் தான் அது இருந்திருக்கிறது. ஆனால் அண்மைக் காலத்தில் மிக வேகமாக நிகழ்ந்துவிட்ட சில நடப்புகளை அடுத்து திவ்யா தாம் தமது தாயோடு செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துப் பிரிந்து சென்றுவிட்ட பிறகு, முன்னைவிடவும் பதட்டம் கூடிய சூழலின்வசம் இளவரசன் வாழ்க்கை தள்ளப்பட்டது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்தப் பின்புலத்தில் நேர்ந்திருக்கும் அவரது மரணம் ஓர் அராஜக அரசியல் வன்முறைக் களத்தில்பலி வாங்கப் பட்ட உயிர் என்பதை எப்படி மறுக்க முடியும்?

உயிர்களையே பலி கேட்கும் சமூக திரட்டல், இப்போது குதித்துக் கொண்டாடவோ, கொக்கரிக்கவோ என்ன சாதித்தது என்பது வேதனை தரும் கேள்வி. தாமாக உள்ளன்போடு பேசிய அந்த அப்பாவிப் பெண்ணிடமிருந்து பின்னர் எத்தனை சொற்கள் மாறி மாறி பிடுங்கி எடுக்கப் பட்டன. தந்தையும் இல்லாத நிலையில், தாம் தமது தாயோடு செல்ல விரும்புவதாகவும், ஆனால் தமது கணவர் இளவரசன்பால் தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்று முதலில் சொன்ன அவர், பிறகு அடுத்தடுத்துப் பேசுகையில் வேறு முறையிலும் கருத்துக்கள் சொன்னதாக ஊடகங்கள் தெரிவித்தன. சாதி இத்தனை பெரிய அம்சமாகத் தங்களது திருமண வாழ்வில் குறுக்கிடும் என்று தாம் உணர்ந்திருக்கவில்லை என்று சொன்ன அவர், அம்மா விருப்பத்தையும் பெற்று மீண்டும் இளவரசனுடன் இணைவேன் என்றும் சொன்னார். ஆனால், பிறகு தாம் அப்படி சொல்லியிருக்கவில்லை, இனி இளவரசனோடு இணைவது என்ற பேச்சே இல்லை என்று சொல்லிவிட்டதாக இறுதியில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.

divya 2

தமது உள்ளத்தின் அன்பில் தோய்த்தெடுத்த சொற்களை அந்தப் பெண் தமது உதடுகளை நோக்கி எடுத்துக் கொண்டுவருவதற்குள் அதன் பாதையிலேயே அந்தச் சொற்களை வழி மறித்து, அடித்துத் திருத்தி வலியும், வேதனையும் நிரம்பிய வேற்று மொழி ஒன்றை இரத்தப் பிசுக்கோடு வெளியேற்ற வைத்ததில் என்ன ஆனந்தம் ஆதிக்க சக்திகளுக்கு? சொல்லப்பட்டவையும், மாற்றிச் சொன்னதாக மாற்றிச் சொல்லப்பட்டவையும், சொன்னதாக சொல்லப்பட்டவையும், சொல்லாதது என்று அறிவிக்கப்பட்டவையுமாக சொற்களும் கற்களும் இறைந்து கிடக்கும் ரயில் தண்டவாளத்திற்கு அருகேதான் கிடைத்திருக்கிறது இளவரசனின் உடல். அது வாழ்வைத் தொலைத்தவரின் சடலம் அல்ல, வாழ்வு பறிக்கப்பட்டவரின் உடல்.

ஒரு காதல் மணத்தை முன்வைத்து ஏற்கெனவே விளைவிக்கப்பட்ட ஒரு மரணம் – அதன் நிமித்தம் மேலும் ஒரு மரணமும் தேவைப்பட்டிருக்கிறது ஆதிக்க உணர்வுகளின் வேட்கைக்கு. மிகச் சில மணி நேரங்களில் இடித்தும், எரித்தும் தரைமட்டமாக்கப்பட்ட முன்னூறு வீடுகளின் கரிப்புகையும், சாம்பல் நாற்றமும் இன்னமும் அடங்காதிருக்க, இளம் காதல் வாழ்க்கையின் மீது தீர்மானமாக வீசப்பட்ட தீ பற்றி எரிகிறது இப்போது! குடும்பங்களும், குடியிருப்புகளும், சமூகமும் எல்லாம் ஒரு வன்மத்தின் சாபத்திற்கு இலக்கு ஆக்கப்பட்டாற்ப் போல கலைத்துப் போடப்படுவதை எந்த நாகரிக உலகம் அனுமதிக்க முடியும்?

அடிப்படை மனித உணர்வுகள் கேள்விக்குள்ளாக்கப்படும் சமூகம் தன்னைப் பண்பட்டதாக அறிவித்துக் கொள்ள முடியாது. ஏற்புடைமையும், நிராகரிப்பும் வேண்டுமானால் அவரவர் விருப்பம் சார்ந்ததாக இருக்கலாம். தாங்கள் விரும்பாததைக் கிள்ளிப் போடவும், அதன் மீது நெருப்பை அள்ளிப் போடவும் யாருக்கும் உரிமை கிடையாது.

கால காலமாக நட்பும், நேயமும் கெழுமிய அண்டை அயலாராக மற்ற சமூகத்தினரோடு வாழ்ந்து வந்ததாகவே நாய்க்கன் கொட்டாய் பகுதியின் காலனி மக்கள் நவம்பர் 7 தாக்குதலுக்குப் பின் சென்று சந்திக்கும்போது கூறினர்.பரஸ்பரம் குடும்ப நிகழ்வுகளில், கொண்டாட்டங்களில், திருவிழாக்காலங்களில் கலந்து பழகியவர்கள், சேர்ந்து உண்டவர்கள் எப்படி திடீரென்று வாளை உருவிக் கொண்டு எதிரே வந்து நின்றனர் என்ற மலைப்பில் இருந்து அவர்கள் மீளாததைப் பார்க்க முடிந்தது. மண்ணில் புதைந்திருக்கும் வேரில் கலந்தது மாதிரி மனத்தின் அடியாழத்தில் கிடக்கும் உணர்வுகளைக் கீறி வெறுப்பும், பகைமையும் வெடிக்குமாறு தூண்டுபவர்கள் எப்படி மக்கள் தலைவர்களாக விளங்க முடியும்?

மூன்று காலனிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் தன்மையிலும் ஓர் அரசியல் பளிச்சென்று புலப்பட்டது. கலப்பு மணம் செய்திருந்த தலித் குடும்பங்கள் மீது வன்முறை கூடுதலாக நிகழ்த்தப்பட்டது. அந்த வீடுகள் மிக அதிகபட்ச வன்மத் தாக்குதலின் சாட்சியங்களாக நிற்கின்றன. தங்களை விட உயர் சாதி பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் தலித் வாலிபர்களின் நோக்கம் சொத்துக்களை அடித்துப் பிடுங்குவது, பிறகு அந்தப் பெண்ணைக் கைவிடுவது என்றெல்லாம் பா ம க தலைவர்கள் பொழிந்து தள்ளிய அவதூறுகளை, மிக காட்டமாகவும், ஆவேசத்தோடும் மறுத்த பெண்மணி ஒருவரை, வங்கி ஊழியர் இயக்கத்தின் சார்பில் அந்தப் பகுதிக்குச் சென்றபோது நாங்கள் சந்தித்தோம்.

“என்னைத் திருமணம் செய்தபிறகு எனது கணவர் ஒற்றை நயா பைசா கூட எனது பெற்றோரிடம் சென்று மிரட்டிப் பறிக்கவில்லை. நாங்கள் அந்தப் பக்கம் செல்லவே இல்லை. எங்களை ஏற்காத எனது பெற்றோர் வழி உறவுகள் யாரையும் எனது குழந்தைகளுக்கு இன்றுவரை தெரியாது. எங்களை ஏன் வம்புக்கிழுக்கிறது பா ம க ? அடுத்தடுத்து தேர்தலில் தோல்வி கண்ட அந்தக் கட்சிக்கு கொள்கை கோட்பாடு எல்லாம் திவால் ஆகிப் போன பிறகு, அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குத் தங்களை முன்னிறுத்த வேறு எதுவும் கிடைக்கவில்லை. தலித் விரோத அரசியலை முன்னெடுக்கின்றனர்” என்றார் அவர். கணவரை இழந்துவிட்ட அந்தப் பெண்மணியின் வீட்டில் கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்ட நேரம், அவரது மகள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தாக்கிய வெறி கும்பலுக்கும் இதெல்லாம் தெரியும். தங்களுக்கு எந்தத் தொடர்பும் அற்ற ஒரு நிகழ்வுக்காகத் தங்களை இப்படி தாக்க இவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது என்று கேட்டனர் அவர்கள்.

முட்புதர்களுக்கு இடையே வயதுக்கு வந்த தனது மகளையும், நடுங்கிக் கொண்டிருந்த சிறு வயது மகனையும் பெரும் அச்சத்தோடு சேர்த்தணைத்துக் கொண்டு அன்றைய பாழிரவு எப்படி கடந்து போகும் என்று தாம் பட்ட பாட்டை, தையல் நாயகி என்ற பெண்மணி டிசம்பர் 5, 2012 அன்று தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்ட மேடையில் எடுத்துரைத்தபோது அதிர்ந்து கேட்டது ஜனத் திரள். ‘நாளை மீண்டும் இதைப் போலவே தாக்க வந்தால் நாம் என்ன செய்வோம்’ என்று தனது மகன் கேட்டதைச் சொன்ன அவர், தலித்தாகப் பிறந்தது எங்கள் குற்றமா என்று கேட்ட கேள்விக்கு ஆதிக்க சக்திகளின் பதில் என்ன?

ஒரு தருமபுரி செய்தி மட்டும்தான் கவனத்தை தேசிய அளவில் ஈர்த்திருக்கிறது. அதற்கு முன்பாகப் பல நிகழ்வுகள் தமிழகத்தின் வடமாவட்டங்களில் நடக்கவே செய்தன. கட்டைப் பஞ்சாயத்துகள் நடத்தி இப்படியான காதல் திருமணங்கள் கேள்விக்குள்ளாக்கப் பட்டன. ரத்து செய்து அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குடும்பங்கள் மிரட்டப்பட்டன. தத்தமது மகனையோ, மகளையோ தீர்த்துக் கட்டிவிடுமாறு தீர்ப்புகள் வழங்கப்பட்டு நிறைவேற்றப் பட்ட கொடுமைகளும் நடந்திருக்கின்றன.

தருமபுரி நிகழ்வுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக எழுத்தாளர் இமையம் உயிர்மை இதழில் எழுதிய “பெத்தவன்” நெடுங்கதை (பாரதி புத்தகாலயம் அதை சிறு நூலாக வெளியிட்டிருக்கிறது) அத்தகைய அதிர்ச்சி மிக்க நடப்புகளை நேரடியாகப் பேசியது. உழைப்பாளி மக்களை அடையாள அரசியல் எப்படி கூறுபோடுகிறது என்பதை அதன் இலக்கிய வடிவம் தொட்டுக் காட்டியது.

தலித் காலனி மக்களுக்கு ஆர்வத்தோடு வங்கிச் சேவை கிடைக்க உதவிய கிராம வேளாண் வங்கி ஊழியராக இருந்த நாகராஜன், திவ்யாவின் தந்தை என்ற முறையில், சாதி ரீதியாகக் கூட்டப்பட்ட பஞ்சாயத்து எதிரே எப்படி கூனிக் குறுகி நிறுத்தப்பட்டார் என்பதும், அதன் தொடர் நிகழ்வுகளில் நேர்ந்த அவரது மரணமும், அதன்மீது கட்டமைக்கப்பட்ட தாக்குதல் வன்முறையும் ஒரு தனிப்பட்ட காதல் திருமணத்திற்கு எதிரானது மட்டும் அல்ல. ஓர் அரசியல் நடவடிக்கை அது. சமூக எச்சரிக்கை. தங்களது அணியைத் தமது அரசியல் விருப்பங்களுக்கு ஒத்திசைவாகத் திரட்டுதலின் வன்முறை அறிவிப்பு அது. தங்களைப் போன்றே இருக்கும் வேறு பல இடைநிலை சாதி அமைப்புகளையும் தங்களது பாணியிலேயே நடந்து கொள்ளுமாறு தங்களது மேடையில் நிறுத்தி வைத்து அறிவுறுத்தும் அபாய அரசியல் அது.

தாராளமய கொள்கைகளால் காயப்பட்டுப் போயிருக்கும் அன்றாட வாழ்க்கை, கல்வி-சுகாதாரம் எல்லாம் காசு உள்ளவர்க்கே என்று ஆக்கப்பட்டிருக்கும் சவாலான நிகழ்காலம், நிச்சயமற்ற எதிர்காலம் இவற்றின் பின்புலத்தில் தங்களது பொது எதிரிக்கு எதிராகத் திரள வேண்டிய மக்களை மிகுந்த சுயநலத்தோடு பிரித்துப் போடும் இத்தகைய அரசியல் யாருக்கு சாதகமானது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். கொலைகளும், தற்கொலைகளும் பெருகும் ஒரு சமூகமாக தமிழகம் உருமாறிக் கொண்டிருப்பதன் பிரதிபலிப்பாக வெளியாகும் அண்மைக் கால புள்ளிவிவரங்கள் வேதனை அளிப்பவை.

ஒரு தனிப்பட்ட வாழ்க்கை, இரண்டு உள்ளங்களின் பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் நேர்ந்த காதல் திருமணம் இன்று ஒரு பொது பிரச்சனையாக மாற்றப் பட்டதும், அவர்களது விருப்பத்திற்கு எதிரான திசையில் அந்த வாழ்க்கை இப்போது மிக கோரமான முறையில் முடிக்கப்பட்டிருப்பதும் இந்த நிகழ்வுகளை இன்னும் ஆழமான புரிதலோடு பார்க்குமாறு சமூகத்தைப் பணிக்கின்றன. சாதி கௌரவம் என்ற போர்வையில் நடத்தப்படும் அத்து மீறிய தலையீடுகளைக் குறித்து எச்சரிக்கை கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றன. வன்மமும், வன்முறையும் குடும்ப வாழ்க்கையின் சன்னல்களை உடைத்தெறிந்து உள்ளே நுழைவதை உரத்த குரலில் நிராகரிக்குமாறு வற்புறுத்துகின்றன. சோதனை மிகுந்த இந்த நேரத்தில் அன்பின் வழியது உயிர்நிலை என்ற உன்னதமான வாழ்க்கை நெறியை உயர்த்திப் பிடிக்குமாறு மன்றாடிக் கேட்கின்றன. பகைமையும், வெறுப்பும், கசப்பும் பரவி விரவும் – மானுடத்திற்கு எதிரான – கருத்தாக்கங்களில் இருந்து விடுபட்டு – காதல் இருவர் கருத்து ஒருமித்து வாழ முன் வரும்போது அதற்கு ஆதரவு தந்து இன்பம் அடையப் பழகுமாறு கோரிக்கை விடுக்கின்றன. உழைப்பாளி மக்களின் விடியல் தங்களிடையே பிரிந்து கூறுபட்டு நிற்பதில் அல்ல, ஒன்றுபட்டு நிற்பதில், பொது எதிரிக்கு எதிராகக் கூட்டாகப் போராடுவதில் தான் அடங்கி இருக்கிறது என்றும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

தமது தாயின் அருகே இளவரசன் இறுக்கம் கலந்த – ஆனால், நம்பிக்கை மிஞ்சி இருந்த பார்வையோடு நின்ற காட்சியும், பாதுகாப்பு வளையத்துக்குள் பதட்டத்தோடு திவ்யா பார்த்த பார்வையும் நாளேடுகளை நிரப்புகின்றன. இரண்டுக்குமே பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது. அது ஆரோக்கியமான மாற்று சிந்தனையின் வழித் தடத்தில் இருக்கிறது.
**************
நன்றி: வண்ணக்கதிர் (ஜூலை 14, 2013)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.