செண்பக ஜெகதீசன்
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
-திருக்குறள்- 129 (அடக்கமுடைமை)
புதுக் கவிதையில்…
தீபட்ட புண்ணதுவும்
தீதின்றி ஆறிவிடும்
தொடர்ந்து நீ மருந்திட்டால்..
தீயொத்த கொடுஞ்சொல்லால்
பட்ட வடு
போகாதே வாழ்நாளெல்லாம்…!
குறும்பாவில்…
தீப்புண் ஆறிடும் விரைவில்,
மாறுவதில்லை
சுடுசொல் சுட்ட வடு…!
மரபுக் கவிதையில்…
எரியும் நெருப்பு மேனியிலே
எங்கே படினும் புண்ணாகும்,
எரியும் வேதனை குறைந்திடவே
எடுக்கும் மருந்தில் குணமாகும்,
சரியாய்ப் பிறரைப் புரியாமல்
சொல்லும் கொடிய சுடுசொல்லால்
பெரிதாய்ச் சுட்ட வடுவதுதான்
போவ தில்லை இதயத்திலே…!
லிமரைக்கூவில்…
விரைவில் ஆறிடும் தீக்காயம்,
வன்சொல்லாய் வந்ததுதான் மாறாமல்
வடுவாய் நிலைத்திடும் நாக்காயம்…!
லிமரிக்…
புண்ணாகும் தீயினில் தொட்டால்,
போய்விடும் மருந்ததில் விட்டால்,
உறவும் தேறாது
வடுவும் மாறாது
வார்த்தைத் தீயால் சுட்டால்…!
கிராமிய பாணியில்…
கிட்டப்போனா சுட்டுப்புடும்
தொட்டுப்புட்டா வெந்துபோவும்
பாத்து நடந்துக்கோ – தீயப்
பாத்து நடந்துக்கோ..
சுட்டுப்புட்டா சோந்திடாத
கட்டுப்போட்டா ஆறிப்போவும்
காயமெல்லாம் மாறிப்போவும்..
ஆனாலும்,
பாத்து நடந்துக்கோ – தீயப்
பாத்து நடந்துக்கோ..
நாக்குசுட்டா ஆறாதய்யா
அந்தவடுவு மாறாதய்யா
ஆயிசுக்கும் போவாதய்யா..
அதாலே,
பாத்துப் பேசிக்கோ- நல்லதா
பாத்துப் பேசிக்கோ…!

Leave a Reply