நாகேஸ்வரி அண்ணாமலை

kenewzz
எனக்கு வெகு நாட்களாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாட்டைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. பல வருடங்களுக்கு முன் எகிப்துக்குப் போயிருக்கிறேன். அந்த நாட்டை ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒரு மாதிரி என்று சொல்ல முடியாது. அமெரிக்க, ரஷ்ய, பிரிட்டிஷ் நாடுகளின் தாக்கம் அங்கு அதிகம். (இப்போது அங்கு பல மாற்றங்கள் நடந்து கொண்டி- ருக்கின்றன.) அதனால் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தேன். வட, தென் அமெரிக்கக் கண்டங்கள், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளில் ஒன்றையாவது பார்த்திருப்பதால் ஆப்பிரிக்கக் கண்டத்திலும் ஒரு நாட்டைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை பல நாட்களாக எனக்குள் இருந்து வந்தது.

நான் பார்த்திருப்பதாகக் கூறியிருக்கும் நாடுகளுக்கு என் கணவருடன் அவருடைய வேலை நிமித்தமாக அவர் போகும்போது போயிருக்கிறேன். சில நாடுகளில் ஆராய்ச்சிக்காக அந்த நாடுகளின் பல்கலைக்கழகங்களில் கணவர் சில மாதங்கள் தங்கியிருந்தபோது அவருடன் நானும் தங்கியிருந்திருக்கிறேன். வேறு சில நாடுகளில் மாநாடுகளில் கலந்துகொள்ளப் போனபோது சில தினங்களே என்றாலும் உடன் போயிருக்கிறேன். ஒரு நாட்டை, ஒரு சமூகத்தைப் புரிந்துகொள்ளப் பல காலம் எடுக்கும் என்றாலும் அதைப் பற்றிய ஒரு பார்வை (glimpse) குறுகிய காலத்தில் கிடைக்கும். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவுக்குச் செல்ல ஒரு முறை கணவருக்கு வாய்ப்புக் கிடைத்தபோது என்னால் அவரோடு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதைப் பற்றிப் பல முறை ஏங்கியிருக்கிறேன்.

இப்படிப் பல நாடகளாகக் காத்திருந்த வாய்ப்பு இன்னொரு விதத்தில் கிடைத்தது. நாங்கள் அமெரிக்காவில் வருடத்தில் பல மாதங்கள் தங்கியிருக்க ஆரம்பித்ததும் மைசூர் வீட்டிற்குக் கொஞ்சமாவது பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி மைசூரில் எங்கள் வீட்டு கார் ஷெட்டிற்கு மேல் ஒரு ஃப்ளாட் கட்டி அதை வாடகைக்கு விட்டால் வீட்டின் அருகில் நடமாட்டம் இருந்துகொண்டிருக்கும் என்று நினைத்தோம். ஃபிளாட் என்றால் ஒரு பெரிய அறையில் சிறிய சமையலறை, குளியலறை, ஹால் ஆகியவை எல்லாம் அடங்கிய ஒரு குடியிருக்கும் வச்தி ஃபிளாட்டைக் கட்டி முடித்ததும் யாருக்கு வாடகைக்கு விடுவது என்ற கேள்வி எழுந்தது. எங்களுக்குத் தேவைப்பட்டால் காலிசெய்து கொடுப்பவர்களாகப் பார்ப்பது என்று முடிவு செய்தோம். அந்தச் சமயத்தில் கென்யாவிலிருந்து எங்கள் வீட்டிற்கு மிக அருகில் உள்ள சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இருவர் வாடகைக்கு இடம் இருப்பதாக அறிந்து எங்களிடம் அது பற்றி விசாரிக்க எங்களை அணுகினர். படிப்பு முடிந்ததும் இடத்தைக் காலிபண்ணிவிடுவார்கள் என்பது எங்களுக்குப் பிடித்த அம்சமாக இருந்தாலும் ஒழுங்காக வாடகை கொடுப்பார்களா, வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வார்களா என்ற கேள்விகள் தோன்றத் தொடங்கின. அவர்கள் படிக்கும் கல்லூரியின் முதல்வரைச் சந்தித்து எங்கள் சந்தேகங்களை அவரிடம் கேட்டோம். அவர் ‘அந்தக் கவலையை விடுங்கள். அவர்கள் நல்ல மாணவர்கள். அப்படியே ஏதேனும் தொந்தரவு கொடுத்தால் என்னிடன் வாருங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார். அவர் இப்படிக் கூறியது எங்களுக்கு மிகுந்த தெம்பை அளித்தது. உடனேயே அந்த மாணவிகளைத் தொடர்பு கொண்டு எங்கள் ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும்படி கூறினோம்.
அவர்கள் குடிவந்த நாளன்று ஒரு சிறிய லாரியில் தங்கள் சாமான்களைக் கொண்டுவந்தனர். அவற்றைப் பார்த்துவிட்டு , இத்தனை சாமான்களையும் எங்கள் ஃபிளாட்டிற்குள் அடக்கிவிடுவார்களா என்று நான் மலைத்தேன். எல்லா சாமான்களையும் இறக்கிவிட்டுவிட்டு ஒரு மாணவி வெளியே வந்துகொண்டிருந்தார். எல்லாச் சாமான்களையும் வைப்பதற்கு இடம் இருந்ததா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டேன். ‘தேவையான இடம் இருக்கிறது. அதில் ஒரு கஷ்டமும் இல்லை’ என்று அந்தப் பெண் கூறியதும்தான் எனக்கு நிம்மதியாயிற்று.
அந்த மாணவிகள் இருவரும் நான்கு வருடங்களில் சட்டம் படித்து முடித்த பிறகு இடத்தைக் காலிசெய்யும் நேரம் வந்தது. ‘இனி இவர்களைப் போல் நல்ல வாடகைதாரர்கள் கிடைப்பார்களா? மறுபடி வாடகைதாரர் தேடும் வேலை இருக்கிறதே’ என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போது இந்த மாணவிகளே தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவரைக் கூட்டிவந்து எங்களுடைய அடுத்த வாடகைதாரராக அவரை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்டபோது எங்களுக்கு மிகவும் நிம்மதியாகப் போயிற்று. இவரும் அதே சட்டக் கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருந்ததால் அவரைப் பற்றியும் முதல்வரிடம் விசாரித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அவரை அழைத்துவருமாறு கூறினோம். அவர் குடியேறி இரண்டு வருடங்களில் காலி செய்யத் தயாரானபோது இன்னொரு மாணவரைக் கூட்டிவந்தார். இவரும் கென்யா நாட்டைச் சேர்ந்தவரே. இப்படியாகக் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக ஒவ்வொரு வாடகைதாரரும் காலிசெய்யும்போது இன்னொருவரை அறிமுகம் செய்துவிட்டுச் சென்றார். எல்லோரும் கென்யா நாட்டைச் சேர்ந்தவர்கள். இதுவரை அவர்களால் எங்களுக்கு எந்த விதத் தொந்தரவும் இல்லை. இந்தியாவுக்கு வெளியே நாங்கள் இருப்பதால் அவர்களுக்கும் எங்களால் எந்த விதத் தொந்தரவும் இல்லை. ஒரு வாடகைதாரர் காலிசெய்யும்போது இடத்தை நாங்கள் பார்ப்பது கூட இல்லை. புதிதாக வருபவரிடம் எல்லாவற்றையும் நன்றாகப் பார்த்துக்கொண்டீர்கள் அல்லவா என்று கேட்போம். அவர்களும் ஆம் என்பார்கள். நாங்கள் வெளியே இருக்கும்போது ஏதாவது ரிப்பேர் என்றால் அதை எங்கள் பக்கத்து வீட்டு நண்பர் மூலம் செய்து கொடுப்போம். இப்படியாக எங்கள் உறவு சுமுகமாகப் போய்க்கொண்டிருந்ததோடு அவர்களோடு எங்களுக்கு நட்பும் ஏற்பட்டு, அவர்கள் மேல் மட்டுமின்றி கென்யா நாட்டின் மேலும் ஒரு பற்று ஏற்படத் தொடங்கியது. ஆப்பிரிக்க நாடு ஒன்றைப் பார்க்க வேண்டும் என்ற என் ஆவலும் பூர்த்தியாகும் தருணம் வந்தது.

கென்யாவிற்கு வந்தால் எங்களுக்கு எல்லா உதவிகளும் செய்து தருவதாக அவர்கள் கூறியதும் கென்யாவிற்குப் போகும் ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தோம். இதுவரை எங்களுக்கு வாடகைதாரர்களாக இருந்த எல்லா மாணவ, மாணவிகளோடும் மின்னஞ்சல் தொடர்பு வைத்துக் கொண்டிருந்ததால், எங்கள் வீட்டில் இருந்துவிட்டு கென்யாவிற்குத் திரும்பிப் போயிருந்த எல்லோரிடமும் தொடர்புகொள்வது எளிதாக இருந்தது. கென்யாவிற்குப் போன பிறகுதான் தெரிந்தது அந்த நாட்டைச் சேர்ந்தவரின் உதவி எவ்வளவு உபயோகமானது என்பது. முதலில் வாடகைக்கு இருந்த பெண்களில் ஒருத்தி லண்டனில் வேலை பார்க்கிறாள். கென்யாவின் வெளியுறவுத் துறையில் வேலை பார்க்கிறாள். பழைய வாடகைதாரரில் இருவர் பக்கத்து நாடான ரவாண்டாவில் ஒரு கல்லூரியில் வேலைபார்த்துக் கொண்டிருகின்றனர். அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் நைரோபியில் இருந்தனர். எங்களை வந்து பார்த்தனர். முடிந்த அளவு உதவிகள் செய்தனர். ஒரு பெண் கென்யாவில் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி நிலையத்தில் வேலைபார்க்கிறாள். இன்னொரு மாணவன் செஞ்சிலுவைச் சஙக்த்தில் வேலை பார்க்கிறான். சாகசச் செயல்களில் ஆர்வம் உடையவன் வன்முறை மலிந்த சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளுக்குப் போகும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறான். எங்கள் வீட்டில் தங்கிப் படித்த எல்லா மாணவர்களும் இப்போது நல்ல நிலையில் இருப்பதாக ஒரு பெண் குறிப்பிட்டாள். அதைக் கேட்க மனதிற்கு இதமாக இருந்தது.

அமெரிக்காவில் படித்த இந்திய மாணவர்களுக்கு இந்தியாவில் நல்ல வேலை கிடைப்பதைப் போல இந்தியாவில் பட்டம் பெறும் கென்யா மாணவர்களுக்கு அவர்கள் நாட்டில் நல்ல வேலை கிடைக்கிறது போலும்.

தொடரும்

படத்திற்கு நன்றி:

http://www.worldatlas.com/webimage/countrys/africa/ke.htm#.UeXq1o3I2gQ

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கென்யா பயணம் 1

  1. கென்யாவில் தாங்கள் பயணம் செய்ததைப் பற்றி எடுத்தவுடன் எழுதாமல், கென்ய மாணவர்களுடன் தாங்கள் கொண்டிருந்த நல்லுறவைப் பற்றிய முன்னுரையுடன் கட்டுரையைத் தொடங்கி இருப்பது நன்று. தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *