இராம கதை – ஒரு சிறு விமர்சனம்.

நரசய்யா

கைக்கு அடக்கமான ஒரு சிறு நூல்; ஆனால் கடலளவு தன்னுள் அடக்கியுள்ள பெரு நூல்! அப்படித்தான் இந்த இராமகதை என்ற நூலைப் பற்றிச் சொல்லத் தோன்றுகிறது!

gopal0001

அழகான அட்டைப்படம், பூஜை அறையில் வைக்கவேண்டுமென்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றது. 60 பக்கங்களே கொண்ட இப்புத்தகத்தில், முதல் 28 பக்கங்களில் இராமகதை சுருக்கமாக, ஆனால் படிப்பதற்கு வசதியான எளிமையான் தமிழ் பேசுகவிதையில் வார்க்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் கம்பராமாயணத்தைச் சார்ந்து தான் எழுதப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நான் சமீபத்தில் திரு. மணவாளன் அவர்களைப் பற்றிப் பேசியதை நினைவு கூறுகிறேன். முனைவர் மணவாளன் 2011 ஆம் வருடத்திற்கான சரஸ்வத் சம்மான் பெற்றவர். இவ்விருது அவர் எழுதிய இராமகாதையும் இராமாயணங்களும் என்ற நூலுக்கு வழங்கப்பட்டது. சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், திபேத்தியம், தமிழ், பழைய ஜாவானியம், ஜப்பானியம், தெலுங்கு, அஸ்ஸாமி, மலையாளம், வங்கமொழி, கன்னடம், மராத்தி, இந்தி, ஒடிசி, பாரசீகம், மலேசியா, பர்மா, மரோனா, தாய், லாவோசியா, காஷ்மீரி, முதலான 48 மொழிகளில் உள்ள இராமாயணங்களை இந்த நூலில் மணவாளன் ஒப்பீடு செய்துள்ளார்! அதன் மூலம், ஒப்பீட்டுத் திறனாய்வுக்காக அவர் விருது பெற்றார். மனித இயல்பிலே ஒப்பிடுவது சாதாரணமாக நிகழ்வதே. ஒப்பிடுவதின் நோக்கம் இன்றைய பட்டிமன்றங்கள் போன்றது அல்ல; ஒன்றனை விட மற்றொன்று சிறப்பானது என்று கூறுவதற்கும் அல்ல; ஒவ்வொன்றின் சிறப்பையும் தனித்தனியே அறிவதற்கு மட்டுமே; ஒரு வழிமுறை அல்லது உத்தி எனலாம். அதுதான் ஒப்பிலக்கியத்தின் முக்கிய நோக்கம். அப்படிப் பார்க்கப்போனால், கோபாலனின் நூலும் இத்திறனாய்வில் பங்கு பெறலாம்!

எது எவ்வாறாயினும் ஒப்பிடுகையில் நாம் பார்ப்பது என்ன?

கம்பராமாயணத்தில் குகப்படலத்தில் , கம்பர் சொல்வது:

வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை
நல்கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை
கல்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்
வில்கையின் நின்று இடை வீழ விம்முற்று நின்றொழிந்தான்.

இதையே திரு கோபாலன் இவ்வாறு வார்க்கிறார்:

மரவுரி தரித்த மாசு படிந்த மெய்யும்
சிரமேல் குவித்த இருகரங்களும்
பொலிவற்று நகையற்று விளங்கிய முகமும்
நலிவுற்று துயருற்று வாடிய தோற்றமும் . . .

 

அதே போல, கம்பனின் தாக்கம் மண்டோதரி கதறுகையில் முற்றிலுமாகவே காண முடிகிறது. இது போன்று பல இடங்களில், தமது விளக்கங்களில் கம்பனையே ஆசானாகக் கொண்டு எழுதியுள்ளமை தெரிகிறது. ஆங்காங்கு வால்மீகியையும் கருத்தில் கொண்டு படிப்பவர்களுக்கு ஆர்வமூட்டுமாறு கதையை நடத்துகிறார். நூல் சிறிதேயாயினும் எங்கும் முக்கிய விஷயங்களைத் தவறாது சொல்லியுள்ளார்.

சில இடங்களில் மொழி எளிமையில் அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனையையும் ஒத்துள்ளது. பாட்டு கற்றவர்களுக்கு, பாடுவதற்கு வசதியாகக் கூட இருக்கலாம்!

இராமகதை சொல்லி முடித்த கையோடு, பஜனை செய்வதற்கு வசதியாக, ஸ்ரீராமஜெயம் மகிமை, இராமாயண அட்சரமாலை, அனுமான் நாற்பது (ஹனுமான் சார்லீஸ் உரையுடன்) சங்கடமோசன அனுமானஷ்டகம், அனுமன், அனுமான் பிரசாதம் மற்றும் பக்தி கவிதைக் கொத்து முதலியவற்றையும் சுமார் முப்பது பக்கங்களில் தந்துள்ளார். முக்கியமாக ஹனுமான் சார்லீஸ் பாராயணம் செய்பவர்களுக்கு ஒரு பிரசாதம். ஏனெனில் இதுவரை வந்துள்ள சர்லீஸ் பொருளுரைக்குப் பதிலாக, இவரது உரையும் பாடத் தகுந்ததே!

மொத்தத்தில் இந்த நூல் பக்தர்களுக்கு ஒரு சிறந்த பரிசெனவே சொல்லலாம். ஒரு சிறந்த அதிகாரியாக, மத்திய அரசில் உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்று பின்னர் சுமார் பத்து வருடங்கள் அரசு ஆலோசகராகப் பணிபுரிந்த கோபாலன், அளித்துள்ள இந்த நூல் அவரது சிறந்த சமூகத் தொண்டெனவே கூறலாம்!

இப்படி ஒரு சிறந்த நூலை அளித்ததற்கு அவருக்கு இராமபிரான் அருள் பாலிக்கவேண்டுகிறேன்.

தொடர்பிற்கு:

திரு எஸ். கோபாலன்

T – 75A, Triyambhava,

Kalapatti Rd, (Near SITRA)

Coimbatore – 641014,

Mobile – 9600801888

E-mail : subragopalan@hotmail.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இராம கதை – ஒரு சிறு விமர்சனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *