நான் அறிந்த சிலம்பு – 81 (22.07.13)
வசந்தமாலை, கடைவீதியில் கோவலனைக் கண்டு மாதவி எழுதிய திருமுகத்தைச் சேர்த்தல்
அங்ஙனம் மாதவி கொடுத்த
மாலையைக் கையில் வாங்கிய
வேல் போன்ற செவ்வரி மேவிய
நீண்ட கண்களை உடைய வசந்தமாலை,
கோவலனைத் தேடிச் சென்று
கூலங்கள் செறிந்திருந்த வீதியில்
அவனைக் கண்டு
அக்கடிதத்தை அவனிடம் கொடுத்தாள்.
கோவலன் மாதவியின் திருமுகத்தை மறுத்தல்
வசந்தமாலை தந்த கடிதத்தை
வாங்க மறுத்த கோவலன்
பின்வருமாறு கூறலானான்.
நெற்றியில் திலகமும்
அதன் மேல் கூந்தலும்
புருவம் எனச் சிறிய கரிய வில்லும்
கண்கள் எனக் குவளை மலரும்
மூக்கு எனக் குமிழ் மலரும்
வாய் எனக் கொவ்வைக் கனியும்
உறுப்புகளாகக் கொண்டு….
என் மேல் காதல் கொண்டவள் போல்
மதர்த்த எண்ணத்தோடு
என் முன்னே அன்றொரு நாள்
இங்ஙனம் தோன்றி நடித்தாளே மாதவி..
வசந்த மாலையே!
இதுதான் அவள் நடித்த கண்கூடு வரி.
கூந்தல் என மேகத்தைச் சுமந்து
அதன் சுமை தாங்காமல் வருந்தி
ஒளியைப் பொழியும்
மதி போன்ற முகம் தன்னில்
கண்கள் எனக் கயல்மீன்கள்
உலாவித் திரிகின்ற
தம் அழகை வெளிப்படுத்தி
தேன் செறிந்த தன் பவள வாயைத் திறந்து
ஒளியைத் தருகின்ற இளமுத்து போன்ற
புன்னகையைக் காட்டி
நான் ‘வா’ என்றழைத்தால் வந்தும்
‘போ’ என்று சொன்னபோது சென்றும்
உண்மையாய் இருப்பவள் போல் நடப்பாளே..
அந்தக் கரிய நெடுங்கண்ணி..
வசந்தமாலையே!
இதுதான் அவள் நடித்த காண்வரி.
அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 72 – 77
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html
படத்துக்கு நன்றி
http://dinamani.com/weekly_supplements