வல்லமை அன்பர்கள் சந்திப்பு!…ஒரு தொகுப்பறிக்கை
வல்லமை மின்னிதழின் மூன்றாம் ஆண்டு நிறைவடையும் தருணத்தில், வல்லமையின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து ஆலோசிக்க, ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என, பெருவை பார்த்தசாரதி வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, 13.07.2013 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில், எழும்பூர், பாந்தியன் சாலையில், வல்லமை ஆலோசகர் மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்த அமர்வில் மறவன்புலவு சச்சிதானந்தன், இன்னம்பூரான், பேராசிரியர் நாகராஜன் வடிவேல், ஸம்பத் ராமசாமி, விசாலம், நூ.த.லோக சுந்தரம், மதுமிதா, முனைவர் பானுமதி (ஆதிரா முல்லை), மருத்துவர் செம்மல், பெருவை பார்த்தசாரதி, அண்ணாகண்ணன் ஆகியோர் நேரில் பங்கேற்றனர். திவாகர் தொலைபேசி வாயிலாகவும் பழமைபேசி ஸ்கைப் வழியாகவும் பங்கேற்றனர்.
விசாலம் அம்மையார் அவர்களின் இனிய பாடலோடு அமர்வு தொடங்கியது. முயற்சியினாலே வெற்றி கிட்டும் என்ற பொருள் அமைந்த பாடல், சந்திப்பின் நோக்கத்துக்குப் பொருத்தமாக அமைந்தது. திவாகர் அவர்கள், தொலைபேசியில் தொடர்புகொண்டு, வல்லமை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த மேலும் ஒரு எழுத்தாளரை (1+1) வல்லமையில் எழுதவும் வாசிக்கவும் ஆற்றுப்படுத்த வேண்டும் என வேண்டினார்.
வல்லமையில் பங்கு பெறும் அனைவரும், தங்கள் பெற்றோர் / உறவினரின் திறமைகளை வல்லமையில் வெளிக்கொணர வேண்டும். இதனைச் சுய விளம்பரமாகவோ, நம் பெற்றோர் பற்றி நாமே எழுதுவதா என்றும் நினைக்கக் கூடாது. வல்லமையில் இடம்பெறும் பதிவைப் படித்த பிறகு, வாசகர்கள் கண்டிப்பாகத் தங்களுக்குத் தோன்றிய கருத்தைப் பின்னூட்டமாகப் பதிவு செய்ய வேண்டும்; ஒரு பதிவை எவ்வளவு வாசகர்கள் படித்தார்கள் என்பது அந்தப் பதிவிலேயே தெரிவதற்கு வழி செய்ய வேண்டும்; வல்லமையை நடத்தத் தேவையான பணவசதிக்காக விளம்பரதாரர்களை அணுக வேண்டும்… உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்தார். மேலும், வல்லமையின் வளர்ச்சிக்காகத் தாம் ஆண்டுதோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவதாகவும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது வல்லமையின் முடிவு என்றும் இன்னம்பூரான் அறிவித்தார்.
வல்லமை மின்னிதழில் பின்னூட்டம் இடுகையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஓர் எளிய கணக்குப் புதிருக்கு விடை அளிக்க வேண்டியுள்ளது. இதனைப் பரிசோதனை முயற்சியாக ஒரு வாரத்துக்கு நீக்கலாம் என்றும் குறிப்பிட்டார். ஸ்பாம் தாக்குதல்கள் அதிகம் வருவதன் ஆபத்தை அண்ணாகண்ணன் எடுத்துரைத்தார். இந்தச் சந்திப்பில் ஸ்கைப் வழியாகப் பங்கேற்ற பழமைபேசி, தமது வலைப்பதிவில் ஜப்பான், இஸ்ரேல் தொடர்பான பதிவுகளுக்கு ஸ்பாம் பின்னூட்டங்கள் அதிகமாக வந்ததாகக் குறிப்பிட்டார்.
மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள், வல்லமையைத் தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்த வேண்டும். எங்கிருந்தாலும், எந்தக் கையடக்கக் கருவியின் வாயிலாகவும் வாசிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
விசாலம் அவர்கள், மூலிகை மருத்துவம், மாற்று மருத்துவம் மற்றும் இசை சம்பந்தப்பட்ட கட்டுரைகள் வல்லமையில் இடம்பெறச் செய்யவேண்டும் என்று கூறினார்.
பேராசிரியர் நாகராஜன் அவர்கள், மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் சிறப்பிதழ் வெளியிட வேண்டும் என்றார். மேலும், வல்லமையில் வெளியாகும் படைப்புகளை மின்னூல் ஆகப் படிக்க, இதழ் 1, இதழ் 2 எனத் தொகுக்க வேண்டும் என்றார்.
கவிதாயினி மதுமிதா அவர்கள், படைப்பாளர்களையும் விமர்சகர்களையும் ஒருசேர ஊக்குவிக்கும் விதமாக, சிறந்த நூல் விமர்சனப் போட்டி நடத்தலாம் என்றார். இதற்கான பரிசுகளுக்காகத் தாம் ரூ.2 ஆயிரம் வழங்குவதாகவும் அறிவித்தார். இந்தப் போட்டி குறித்த விவரங்கள், அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும். மாதந்தோறும் சிறப்பிதழ் வெளியிடுவதை ஆதரித்த இவர், மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வெளியிடலாம் என ஆலோசனை வழங்கினார்.
திருமதி ஆதிரா முல்லை (முனைவர் பானுமதி) அவர்கள், தங்களின் படைப்புகள் வேறு பத்திரிகைகளில் வெளிவந்திருந்தாலும் அதை வல்லமையில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் (இந்த முறை மறு பகிர்வு என்ற பிரிவில், ஏற்கெனவே வல்லமையில் செயல்பாட்டில் உள்ளது). மேலும், முக்கிய அறிவிப்புகளைக் குழுமத்தில் மட்டும் வெளியிடாமல், வல்லமை உறுப்பினர்கள் அனைவரின் மின்னஞ்சல் முகவரிக்கும் தனி அஞ்சலாகவும் இட வேண்டும் என்றார்.
நூ.த.லோக சுந்தரம் அவர்கள், வல்லமையின் இலக்குகளைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்றார். தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன் சார்ந்த எதற்கும் முக்கியத்துவம் அளிப்பது என்பது, மிகவும் விரிவான களமாய் இருக்கிறது. இன்னும் குறிப்பிடத்தகுந்த இலக்குகளை வகுக்க வலியுறுத்தினார்.
ஸம்பத் ராமசாமி அவர்கள், அரசியல் தவிர மற்ற எந்தத் துறைக்கும் முன்னுரிமை அளித்து, புதிய படைப்புகளைப் பெற முயல வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். வல்லமையில் அரசியல் கூடாது எனக் கட்டுப்படுத்த இயலாது, கருத்துச் சுதந்திரத்தைக் காத்தல் என்பது வல்லமையின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. வெளியிடும் கருத்துகளை சட்ட, நீதி நெறிகளுக்கு உட்பட்டு, உரிய சான்றுகளுடன், கண்ணியமாக வெளியிடலாம் என அண்ணாகண்ணன் நினைவூட்டினார்.
கூட்டம் முடிவடையும் நேரத்தில், மருத்துவர் செம்மல் அவர்கள், ஒரு போட்டியை அறிவித்தார். முதலில் ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு படிக்கும் மாணவர்களில் சிறந்த 5 பேச்சாளர்களை அந்தப் பள்ளியே முன்மொழிய வேண்டும். வல்லமை கொடுக்கும் ஒரு தலைப்பில், அந்த 5 மாணவர்களும் தலா 7 நிமிடங்கள் பேச வேண்டும். அவற்றைக் காணொலியாகப் பதிய வேண்டும். ஒரே நேரத்தில் ஐந்து காணொலியையும் அறிவியல் தமிழ் மன்றத்தின் யூடியூப் தளத்தில் வெளியிட வேண்டும். இந்த 5 காணொலிகளும் அடுத்த 100 நாள்களில் எவ்வளவு பார்வைகளைப் பெறுகின்றன என்பதைப் பொறுத்தும் வல்லமை நடுவர் குழுவின் கருத்தினை ஒட்டியும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு ரூ.3 ஆயிரம் பரிசளிக்கப்படும் என்றும் அறிவித்தார். போட்டியில் பங்கேற்கும் பள்ளி, சென்னையில் இருந்தால் தாமே நேரடியாகச் சென்று பதிவதாகவும் வெளியூரில் இருந்தால் அந்தந்தப் பள்ளியே காணொலியைப் பதிந்து அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார். போட்டியாளர்களைக் கொண்ட பள்ளியைத் தேர்ந்தெடுப்பது, போட்டிக்கான தலைப்பு, நடுவர் தேர்வு போன்ற பணிகளை வல்லமை கவனிக்கும். காணொலியைப் பதிந்து, வலையேற்றுவது, பரிசளிப்பு ஆகிய பணிகளை அறிவியல் தமிழ் மன்றம் ஏற்கும் என்றார்.
பெருவை பார்த்தசாரதி, ஆசிரியர் குழுவின் பிரதிநிதியாகச் சில கருத்துகளை முன்வைத்தார். படைப்புகளைப் பதிவேற்றி வெளியிடும் முறையில் சற்று மாறுதல் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். தற்போது, எழுத்தாளர்கள் அனைவரும் தங்களது படைப்புகளை ஒரு குறிப்பிட்ட வடிவம் என்ற முறை இல்லாமல், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப PDF அல்லது ஒருங்குறி அல்லாத வேறு எழுத்துருவில் ஆசிரியரின் முகவரிக்கு வந்து சேருகிறது. பிறகு அதனை ஆசிரியர் குழுவினர் பரிசீலித்து, எழுத்துப் பிழைகளைத் திருத்தி, உரிய படங்களைத் தேடி இணைத்து, முறையான ஒரு வடிவத்தில் வல்லமையில் பதிவேற்றப் பெறுகிறது. இவற்றுக்கு ஆசிரியர் குழுவினர் அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. சில நேரங்களில், சிலரின் ஒரு படைப்புக்கே ஒரு மணி நேரம் செலவிட நேர்வதும் உண்டு. எனவே, இம்முறைக்குப் பதிலாக, படைப்பாளர்களே, தங்கள் படைப்புகளைத் தாங்களே திருத்தி, முழுவதுமாக வடிவமைத்த (completes editing work) பிறகு, பதிவேற்றத் தயாரான நிலையில் ஆசியருக்கு அனுப்ப வேண்டும். அதன் பின்னர், ஆசிரியரின் ஒப்புதலுக்குப் பிறகு அது வெளியிடப்படவேண்டும். இதன் மூலம் ஆசிரியரின் பணிப் பளு பெருமளவு குறையும். மேலும் படைப்பாளியே எப்படி வெளியாக வேண்டும் எனப் பக்கத்தை வடிவமைக்கும் வாய்ப்பையும் பெறலாம். எந்த இடத்தில் எந்தப் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க முடியும் என்ற யோசனையைப் பெருவை பார்த்தசாரதி முன்மொழிந்தார்.
இம்மாற்றத்தைக் கொண்டுவரும் நிலையில், படைப்பாளிகள் தங்களது படைப்புகளைனத் திருத்தி வடிவமைத்த பிறகு அதைச் சரிபார்க்க மட்டுமே (editing and view) முடியும் என்பதையும், அதை வெளியிடும் (Publish) உரிமை ஆசிரியருக்கு மட்டுமே உரியது என்பதையும் பெருவை பார்த்தசாரதி நினைவூட்டினார்.
மதியம் இரண்டு மணி அளவில், கலந்துரையாடல் கூட்டம் இனிதே முடிந்து, அசோகா உணவகத்தில் உணவருந்திவிட்டு அனைவரும் விடைபெற்றோம்.
வல்லமை ஆலோசகர் விஜய திருவேங்கடம் அவர்கள், இந்தக் கூட்டத்துக்காகப் புறப்பட்டு வந்தபோதும், உரிய முகவரியை எடுத்து வர மறந்ததால், பெரும் அலைச்சலுக்குப் பிறகு, வேறு வழியின்றி வீடு திரும்பினார். அண்ணாகண்ணனின் முந்தைய செல்பேசி எண்ணைத் தொடர்புகொண்டுள்ளார். ஆனால், அது முதன்மைப் பயன்பாட்டில் இல்லாததால், மவுனித்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் விஜய திருவேங்கடம் அவர்கள், திட்டமிட்டபடி, இந்தச் சந்திப்புக்கு வர இயலாமல் போயிற்று. வேறு நெருக்கடி காரணமாகச் செல்வ முரளியும் இதில் பங்கேற்கவில்லை.
இந்தச் சந்திப்பில் பங்கேற்ற அனைவருக்கும் வல்லமை வளர் தமிழ் மையம், உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது. ஆலோசனைகள் வழங்கியும் நிதியளிக்க இசைந்தும் போட்டிகளை அறிவித்தும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வழங்கியும் பலரும் வல்லமையின் வளர்ச்சிக்கு வழிகோலுகின்றனர். உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியே எங்கள் நன்றிகள்.
ஒரு முக்கிய வேண்டுகோள்:: வல்லமையின் வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாத அன்பர்கள் அனைவரும் தங்களது கருத்துகளைத் தொடர்ந்து தெரிவிக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதோடு, தம்மால் எந்த விதத்தில் வல்லமையின் வளர்ச்சிக்குப் பணியாற்ற முடியும் என்பதையும் தெரிவித்தால், பெரிதும் உதவிகரமாக அமையும். இணைந்து செயலாற்றுவோம், இன்னும் பல முத்திரைகள் பதிப்போம்.
சிந்தனை, செயல், முன்னேற்றம்.
பகிர்வுக்கு நன்றி.
எனது வலைப்பதிவில் அல்ல. வல்லமை தளத்தில்தான் அவ்வாறு நிகழ்கிறது.
நன்றி, பழமை பேசி. உமது இடுகையும் என் ஆலோசனையும் முரண் இல்லை என்பது தெளிவு ஆயிற்று.
வல்லமை அன்பர்களின் சந்திப்பும் அதன் தொகுப்பறிக்கையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. அனைவரின் கருத்துகளும் நல்லதொரு கருத்தாகவே உள்ளது. அதில் மிகவும் பிடித்தது திவாகர் அவர்கள் சொன்ன 1+1. ஒரு எழுத்தாளரைக் கொண்டு வருகிறோமோ இல்லையோ, ஒரு வாசிப்போரைக் கொண்டு வருவது கண்டிப்பாக வேண்டும்.
இன்னம்பூரான் ஐயா அவர்களின் யோசனையும் வரவேற்கத் தக்கது. இதன் மூலம் ஒரு ஆட்டோகிராப் கிடைக்கும். ஸ்வாரஸ்யமாகவும் இருக்கும்.
பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.
Happy to hear about your meeting and it’s detail. If it is possible to participate through skype, definitely next time i will join . Being my job is policy making and ICT consultations to Govt my tips are :-
1. Home page should have a dash board link which reflects the web popularity of our site like, visitors, visits, hits, Number of contributors, Number of contribution in this month, contributors and their number contribution list , trends
2. Links to on line tamil libraries and resources including dictionaries / akarathi
3. Links to the popular contributors to the tamil literature
4. Interface for Online chatting and group discussions
5. Facilitate to a online grammar checker / yappu checker like Naavi
6. In order to increase popularity, enrich more Meta data related Tamil literature, share it on social sites , banners in social functions etc.
All the best
ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சந்திப்புப் பற்றிய பகிர்விற்கு நன்றி.