Category: Featured

Featured

  • ஸ்ரீராமனும் நம்மாழ்வாரும்

    திவாகர்

    ராமாயணத்தை செந்தமிழில் எழுதிய பேரரறிஞர் ராஜாஜி, அந்த ராமாயணத்தை முடிக்கும் தருவாயில், ராமர் கதை முடிந்து போகிறதே, இப்போது அவனை விட்டுப் பிரிய வேண்டுமே என மிகவும் வருந்தியதாக எழுதி முடித்திருப்பார். ராமாயணம் ஒரு சாதாரணமான காவியமா.. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எப்படியெல்லாம் வாழவேண்டும் என வலியுறுத்திச் சொன்ன காவியம் அல்லவா அது!. தர்மத்தின் உச்சகட்டம்தாம் ஸ்ரீராமன். அவன் பிறந்ததிலிருந்து மானிடருக்கான தர்மத்தை எப்படியெல்லாம் கடைபிடித்தான் என்றுதான் இக் காவியத்திலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.

    பெற்றோரை மதித்தவன் ராமன்.. சீதையை மணமுடிக்க, வில்லை முறித்தவுடன் விசுவமுனி அவனை மணம் புரியுமாறு வேண்ட, தந்தை ஒப்புதல் பெற்றால் மட்டுமே மணம் புரிவேன் என்றவன்.

    தந்தையின் வரம் காக்க, அவர் தம் வாயால் கேட்குமுன்னே கானகம் புகுந்தவன் அல்லவா..

    இனிக்கும் ராஜசுகத்தையும் கடும் காட்டு வாழ்க்கையும் ஒன்றாக நினைத்து வாழ்ந்தவன் ராமன்

    மனித தர்மம் என்பது சக மனிதரிடம், ஏற்ற தாழ்வு பாராமல் பண்புடன் வாழ்வதுதான் என்பதை குகனின் நட்பு மூலம் எடுத்துக் காட்டியவன் ராமன்.

    நட்புக்கும் உதாரணம் அவனே, குகனோடு, சுக்கிரீவனையும், அனுமனையும், அசுரனான விபீஷணனையும் நண்பனாகவே பாவித்தவன் ராமன்.

    சகோதரத்துவத்தின் மகிமைக்கு உதாரணம் கூட ராமனே, உறவுக்கு கை கொடுப்பவனும் ராமனே!

    பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்தவன். தாடகை கடும் அரக்கியாக இருந்தாலும், அவளை அழிப்பதற்கு முன், பெண் என்பதை மறக்காமல் அவளுக்காக முனிவரிடம் பரிந்து பேசியவன்

    மனைவியின் கௌரவம் காத்தவன் ராமன், மனைவியின் கௌரவப் போராட்டம்தானே சீதாராமனின் கதை!

    பறவையாக இருந்தாலும், அணிலாக இருந்தாலும் எல்லா உயிரினத்திடமும் பரிவு காட்டியவன் ராமன்

    தன் மீது அன்புள்ளவர்களை அவன் கைவிட்டதாக சரித்திரம் இல்லை, உதாரணம்: ஹனுமன், விபீடணன், சுக்கிரீவன், சபரி  என இன்னும் எத்தனையோ பேர்

    எதிரிக்கும் இரங்கியவன் ராமன், அதனாலல்லவோ இன்று போய் நாளை வா, என ராவணனை மன்னித்து அனுப்பியவன்!

    பெரியவர்களுக்கு கௌரவம் கொடுத்து வளர்ந்தவன் ராமன், விசுவமுனியிலிருந்து அகத்தியர் வரை ராமனின் இந்த குணத்தில் மயங்காத பெரியவர் யார்? பாலகனாயிற்றே என்று தசரதன் தயங்கியபோதும், விசுவமுனியோடு தனியே சென்று அசுரர்களை அழிப்பேன் என்றவன் அல்லவா..

    தவறுகளை மன்னிக்கும் பெருங்குணம் கொண்டவன் ராமன், தன் மனைவியை சீண்டிய காகாசுரனும் தவறுக்கு வருந்தியபோது மன்னித்தவன்

    கோபத்தை அடக்கிக் காட்டியவனும் ராமனே. பரதன் தங்களைத் தேடி அழிக்க வருகிறான் என்ற கற்பனையில் தம்பி இலக்குவன் பொங்கியபோது, கோபத்தை வென்றதோடு, இலக்குவனுக்கும் பொறுமையை போதித்தவன் ராம்ன்.

    பொறுமைக்கும் ராமன் தான் உதாரணம். யுத்தத்தின் கடைசி நாள் வரை ராவணனுக்கு சந்தர்ப்பம் கொடுத்தவனாயிற்றே!

    பாருங்கள் ராமபிரானுக்கு எத்தனை நற்குணங்கள்..

    இவையெல்லாம் ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை என்பதை குணசீலனான ராமன் கதை சொல்கிறதல்லவா…. சாதாரண மனிதனுக்கான எல்லாவித சற்குணங்களையும் கைக் கொண்டால் ஒரு மனிதன் தெய்வமாக முடியும்.. அந்தத் தெய்வத்தின் தன்மையையும் தானாகவே பெறுகிறான்.. அதனால்தானோ நம்மாழ்வார் ராமர் சரிதையை கற்றுத் தெளியச் சொல்கிறாரோ ராமபிரான் சரிதை சரியாகத் தெரிந்தாலே போதும்.. வேறெதுவும் தேவையில்லை.. முக்திக்கு அவனே மார்க்கம் என்கிறார்..

    “கற்பார் இராமபிரானை யல்லால் மற்றுங் கற்பரோ?
    புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன்றின்றியே
    நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
    நற்பாலுக் குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே”

    கற்பவர்கள் உயர்ந்த ராமபிரானின் கதையையன்றி வேறொன்றும் கற்பரோ? தாவரங்களானாலும் புல்லும் பூண்டும், ஊர்வனவான எறும்பு முதலியன அண்ட சராசரங்களில் தோன்றும் அனைத்து உயிரினங்களுக்கும், ராமபிரான் பிறந்த பிரம்மன் படைத்த தேசமான ஒரு அயோத்தி நகரத்தில் பிறந்த பேறுக்காக,  மோட்சத்திற்கான நற்கதி கொடுத்தருளியவன் அல்லவா..- நம்மாழ்வார்.

    படங்களுக்கு நன்றி:

    http://www.mythicmaps.net/Festival_calendar/April/Rama_Navami.htm

    http://library.thinkquest.org/11719/vasishtfiles/ramanavami.html

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை- 4

    சாகர் பொன்னியின்செல்வன்

    ஸ்பின்க்ஸ்

    காலத்தை கடந்த கல் அதிசயங்களை தூரத்திலிருந்து பார்த்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும் என்று மஹ்மூத் எங்களை வண்டிக்கு அழைத்தார்.மணல் சாலையில் பத்து நிமிடம் பாலைவனத்தில் பயணம் செய்ததும் ஒரு சிறிய சந்தை போன்ற ஒரு இடத்தை அடைந்தோம்.

    சந்தை என்று சொல்லுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். எங்கு பார்த்தாலும் ஒட்டகங்கள். பக்கத்தில் கலாபியா என்ற எகிப்திய உடையை அணிந்த பலரும் மீண்டும் கரீனா கபூர் ஷாருக்கான் என்று அழைத்த ஓலங்கள் எங்களை எதிர்கொண்டன!  அனைவருக்கும் சுக்றான் சுக்றான் (நன்றி) கூறியவாறு மஹ்மூதை பின் தொடர்ந்தோம்.அதில் ஒரு இளைஞன், ‘‘நீ ஏன் சுக்றான் என்று அராபிய மொழியில் சொல்கிறாய் உன்னால் அரபிக் பேசமுடியாது அல்லவா தாங்க்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லு’’ என்ற அறிவுரை வேறு.

    ஒரு வழியாக ஒரு ஓரத்தில் சில ஓட்டங்கங்களுடன் நின்ற ஒரு முதியவரிடம் வந்து எங்களை சேர்த்தார் மஹ்மூத். “நீங்கள் இவரது ஒட்டகங்களில் பயணித்து சிறிது தூரம் பாலைவனத்துக்குள் சென்றால் பிரமிடுகளை மிகவும் நன்றாக பார்க்கமுடியும்” என்றார்.

    ஒட்டகங்கள் என்றதும் பிள்ளைகள் மிகவும் ஆர்வமாக போகலாம் போகலாம் என்றார்கள். சரியென்று இரண்டு ஒட்டகங்களை ஏற்பாடு செய்துகொண்டு, செல்ல ஆயுத்தமானோம். வருணும் ஆனந்தியும் ஒரு ஒட்டகத்திலும் நானும் சக்தியும் இன்னொரு ஒட்டகத்திலும் ஏறினோம்.

    ஒட்டகம் ஒரு விசித்திரமான மிருகம், இறுகியமுகம், உயிரற்ற கண்கள் வாடையுள்ள உடம்பு குறுகிய கால்கள், குதிரைக்கு உள்ள வாளிப்பும் அழகும் இதற்கு கிடையாது. என்றாலும் பாலைவனத்தின் நாயகன் ஒட்டகம் தான்.

    ஒட்டகத்தின் மேல் ஏறுவது மிகவும் சுலபம் ஆனால் உட்கார்ந்திருக்கும் ஒட்டகம் நாம் ஏறியதும் எழும்பும் போது முதலில் பின்னங்கால்களை முதலில் நேர்செய்து எழும்போது நாம் கீழே விழுவது போன்று தோன்றும். பின்னர் மெல்ல அது முன் கால்களை நேர்செய்து நம்மை உயரே தூக்கி நடக்கும். மணலில் அது மெல்ல அடிமேல் அடி வைத்து நடப்பது ஒரு வித அழகு தான்.

    ஒரு கால்மணிநேரம் இரண்டு ஒட்டகங்களையும் மெல்ல நடத்திக்கொண்டு எங்களை பாலைவனதிற்குள் அழைத்து சென்றனர். எங்கு பார்த்தாலும் மணல் வெளி, சிறுது நேரத்திற்கு முன் இருந்த வாகனங்கள்,மனிதர்கள், சந்தை எல்லாம் மறைந்துவிட்டன.

    நாற்புறமும் மணல், தூரத்தில் மூன்று பிரமிடுகள். அந்த நிமிடம் நாங்கள் இருந்த சூழ்நிலை இன்றோ மூவாயிரம் ஆண்டுகள் முன்னரோ என்று சொல்லுவதற்கு சாட்சி எதுவும் இல்லை. அன்றிருந்த மேனிக்கு இன்றும் கம்பீரமாக மணலில் காட்சியளித்தன பிரமிடுகள்! நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டுதான் இருக்க தோன்றியது, என்றாலும் மேலும் பார்க்க வேண்டிய இடங்கள் இருந்ததால் பிரியாவிடை கொடுத்து மீண்டும் சந்தை கடையை வந்தடைந்தோம். “ஒரு ஒட்டகத்திற்கு இருபது டாலர் வாடகை”, என்றார் முதியவர். சரி என்று ஐம்பது டாலர் நோட்டை கொடுத்தேன். “இரண்டு ஒட்டகத்திற்கும் நாற்பது எனக்கு டிப் பத்து டாலர்” என்றார். எகிப்தில் டிப் என்பது நாம் தருவது அல்ல அவர்களே எடுத்துகொள்வது என்பது அப்போது தான் புரிந்தது. சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள் எவ்வளோவோ மேல் என்று தோன்றியது.

    எங்கள் வண்டியில் ஏறிக்கொண்டு மீண்டும் பிரமிடுகளை கடந்து ஒரு மைல் தொலைவில் இருந்த ஸ்பிங்க்ஸ் வந்து சேர்ந்தோம். சிவாஜி நடித்த சிவந்தமண் படத்தில் வரும் பட்டத்து ராணி பாடலில் கண்களை கவரும் வண்ணம் பின்னால் நிற்கும் சிலை தான் ஸ்பிங்க்ஸ்.எகிப்திய மன்னர்கள் தங்கள் வல்லமையை பறைசாற்ற தங்கள் உருவங்களை சிங்க உடலின் மேல் வைத்து படைத்த உருவங்கள் தான் இந்த ஸ்பிங்க்ஸ்.

    கீஸாவில் உள்ள இந்த சுண்ணாம்புப் பாறை ஸ்பிங்க்ஸ் சிலை உலகத்தில் உள்ள சிலைகளில் எல்லாம் மிகவும் பெரியது. 241 அடி நீளம் 63 அடி அகலமும் 66.34 அடி உயரம் கொண்டது இந்த கம்பீரமான மனிதமுகம் கொண்ட சிங்கம்.

    ஸ்பிங்க்ஸ் என்பது பண்டை கிரேக்க மற்றும் எகிப்திய கலாச்சரம் மற்றும் இதிகாசங்களில் உள்ள ஒரு ஜீவன்.

    கிரேக்க ஸ்பிங்க்ஸ் உருவமானது சிங்க உடல், பெண் முகம் கொண்டதுடன் பறவைகளின் இறகுகளும் கொண்டது.கிரேக்க ஸ்பிங்க்ஸ் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாத பயணிகளை கொடிய மிருகங்களுக்கு இரையாக கொடுக்கும் கொடுமையானது கிரேக்க  ஸ்பிங்க்ஸ், அனால் எகிப்திய ஸ்பிங்க்ஸ் அரசர்களின் அம்சம் மற்றும் ஆதரவின் அம்சம். எல்லா கோவில் வாசல்களிலும் துவாரபாலகர்கள் போல் பல ஸ்பிங்க்ஸ் சிலைகள் அணிவகுத்திருக்கும்.

    மிக கம்பீரமாக நிற்கும் இந்த ஸ்பிங்க்ஸ் குப்று மன்னனின் தலையை கொண்டது. மூக்கறுந்த நிலையில் உள்ள இந்த  ஸ்பிங்க்சை பற்றி பல கதைகள் உள்ளன. மிகவும் பொதுவாக சொல்லப்படும் சோக கதை ஐரோப்பிய படைவீரர்கள் இந்த சிலையின் மூக்கை குறிபார்க்கும் மையமாக வைத்து சுட்டதின் விளைவுதான்  இந்த மகத்தான சிலை மூக்கை இழந்து நிற்கும் அவலநிலை அடைந்தது.

    ஸ்பிங்க்ஸ் சிலையை ஒட்டி ஒரு கோவிலும் உள்ளது. சிதைந்த நிலையில் உள்ள இந்த கோவிலில் இன்று நிற்பது வெறும் தூண்களும் சில சுவர்களும் தான்.

    ஸ்பிங்க்ஸ் தூரத்திலிருந்து பார்க்கும்போது சிறிய சிலைபோல் தோன்றினாலும் கிட்டே வந்ததும் எவ்வளவு பிரமாண்டமாக உள்ளது என்பது வியக்கவைக்கும்  காட்சி. பண்டை நாட்களில் இந்த சிலை வண்ண பூச்சுகளுடன் இருந்தது என்பதற்கு அத்தாட்சியாக இன்றும் சில இடங்களில் அதன் காதுகளில் ஊதா வண்ணம் துகள்கள் துகள்களாக தெரிகிறது.

    ஸ்பிங்க்ஸுடன்  பல்வேறு விதமாக புகைப்படங்கள் எடுக்கும் சுற்றுல்லா பயணிகள் நடுவே நாங்களும் ஒரு வழியாக சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். தூரத்தில் தெரியும் மூன்று பிரமிடுகள் அழகிய முக்கோணங்களாக ஒளிர்ந்தன!

    ஒருவழியாக அலுப்பு தீரும்வரை ஸ்பிங்க்ஸுடன் தங்கிவிட்டு எங்கள் வண்டிக்கு வந்து மதிய உணவருந்த சென்றோம்.வண்டியில் ஏறும் முன் எங்கள் வழிகாட்டி மஹ்மூத் ஆளுக்கொரு தண்ணீர் புட்டி கொண்டுவந்து கொடுத்தார்.தினமும் ஒரு புட்டி தண்ணீர் இலவசம்! பத்து நிமிட பயணத்துக்குள் கிளியோபாட்ரா என்ற ஒரு உணவு விடுதியை வந்தடைந்தோம்.

    உணவு மெம்பிஸ் டூர்ஸ் ஏற்பாடு செய்து பணம் செலுத்தியுள்ளது உங்களுக்கு வேண்டியதை புபே உணவுதொகுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் மஹ்மூத்.நிறைய சாலட் மற்றும் பலவித எகிப்திய உணவு படைப்புகள் அணிவகுத்திருந்தன. என்ன ஒரே பிரச்னை எல்லாம் அசைவ உணவுகள். சாலட், புலவு மற்றும் மேடிதேறேனியன் மொச்சை மசியல் தவிர எல்லாம் மீன் மற்றும் கறி உள்ள உணவுவகைகள். என் மனைவியோ சைவம்!

    நான் அங்குள்ள பணியாளரிடம்,“வேறு சைவ உணவு எதுவும் இல்லையா?” என்று கேட்டதற்கு “மீன் எடுத்துவிட்டு சாப்பிட்டால் அது

    காய்குழம்புதானே” என்றார். சைவம் பற்றிய ஒரு உணர்வே இல்லாத ஊர் இது என்பது அப்போது தான் புரிந்தது.

    பிட்டா ரொட்டியும் ஹுமுஸ் மற்றும் இருந்த சைவ உணவுகளை ஆனந்தி மெல்ல சாப்பிட, பசங்களும் நானும் மீன்குழம்பும் கோழி பிரியாணியும் கெபாபும் ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.நைல் நதி மீன்களுக்கு ஒரு தனி ருசிதான்.

    உண்ட உணவைவிட எங்கள் கிளியோபாட்ரா ஹோட்டலில் இருந்து பிரமிடுகள் மிக துல்லியமாக தெரிந்த காட்சி மகிழ வைத்தது. ஹோட்டல் இருந்த உயரத்தில் இருந்து பார்க்கும்போது ஊரில் இருந்த கட்டிடங்களுக்கு மேல் ஸ்பிங்க்ஸுடம் பிரமிட் கோபுரங்களும் மிக அழகாக அணிவகுத்து நின்றன.

    கண்ணுக்கு  விருந்தான பிரமிடுகளையும் வயிற்றிருக்கு விருந்தான உணவையும் முடித்துக்கொண்டு கைரோ நகரை நோக்கி பயணப்பட்டோம்.

    Share
  • நிலா ! . . .

    விசாலம்

    நிலா என்பது  கவிதையில் எல்லோரலும் உபயோகப்படுத்தப்  படுகிறது சின்ன பாப்பாவுக்கு அதன் அம்மா “நிலா நிலா வா வா ,நில்லாமல் ஓடிவா மலை மேலெ ஏறி வா மல்லிகைப் பூ கொண்டுவா  என்று  பாடி சாதம் ஊட்டுகிறாள் காதலர்கள் நிலவை ரசித்து தன்னை மறக்கின்றனர் உலகம் துறந்தவர் அல்லது சன்யாசிகளும் நிலாவின் குளுமையில் வெற்று வெளிச்சத்தில் அமர்ந்து தியானம்  செய்கின்றனர் ,முழுநிலாவின் போது அதாவது   பௌர்ணமி அன்றுதான்  ஸ்ரீ சத்யநாராயண பூஜையும் மாலை நேரம் நடக்கிறது ,

    மஹாகவி பாரதியார் வெண்ணிலவைக் குறித்து கவிதை இயற்றி இருக்கிறார்
    “எல்லைக் யில்லாததோர்  வானக் கடலிடை
    வெண்ணிலாவே! –விழிக்
    கின்ப மளிப்பதோர்  தீவென் றிலகுவை
    வெண்ணிலாவே
    நல்ல ஒளியின்  வகைபல  கண்டிலன்
    வெண்ணிலாவே—இந்த
    நனவை மறந்திட செய்வது கண்டிலன்
    வெண்ணிலாவே !
    தீது  புரிந்திட  வந்திடும்  தீயர்க்கும்
    வெண்ணிலாவே –நலஞ்
    செய்தொளி  நல்குவர்  மேலவ  ராமன்றோ
    வெண்ணிலாவே ,,,,
    சினிமாவிலும் நிலாவை  வைத்து பல பாடல்கள் உள்ளன , பழையக் கால பாடல் ”  அமுதைப் பொழியும் நிலவே  நீ அருகில்  வராததேனோ?” மிகவும்  ரசிக்கப்பட்டது இதேபோல் நிலவே என்னிடம் நெருங்காதே ” என்ற பாடலும் ஹிட் ஆனது இந்தக்கால படங்களிலும் பல பாடல்கள் நிலாவைக்குறித்து பாடபடுகின்றன குறித்து பாடப் படுகின்றன.
    சரி நிலா எங்கேயாவது கீழே விழுமா? விழுந்ததே ,,,,,  ஒரு பெரிய மரத்தின் கீழ்  குரங்குகள் அடித்த லூட்டியைக்  ஒரு கவிதை மூலம் பார்க்கலாம்
    என்  நிலா உடைந்து போனதே,,,,,
    பௌர்ணமி நிலவில்
    ஒரு நாள்
    ஆலமரத்தின் கீழ்
    ஒரு  வானரப் பட்டாளம்
    தாவித் தாவிக் களித்தன
    வம்புச் சண்டை போட்டன
    வாலைப் பிடித்து இழுத்தன
    முதுகில் சவாரி செய்தன ,
    பழங்களைப் பிடுங்கின
    கிளைகளை உலுக்கின .
    ஒரு  குட்டிக்குரங்கு
    கிணற்றில் தாவ
    கண்டது முழுநிலவைத்தான்
    “ஐயோ காபாற்றுங்கள்
    நிலா விழுந்து விட்டது நீரில்”
    அலறிபுடைத்துக்கொண்டு
    வந்தது ஒரு பட்டாளம்
    நீரிலிருந்து எடுத்தது நிலாவை
    நிலவும் கலைந்து போனது
    குட்டிக்குரங்கின் அழுகை
    வானத்தை எட்டியது .
    “ஐயோ என் நிலா
    இப்படி உடைந்து போனதே “!
    வ்ந்தது அங்கு வயதான வானரம்
    “அட முட்டாள்1
    வானத்தைப் பார்
    நிலா உடையவில்லை
    நிலா மாறவில்லை
    நிலா அழியவில்லை
    அதோ பார் வெண்நிலா
    பவனி வரும் அதன்
    அழகைப் பார் !..
    Share
  • ” தூர தரிசனம் “

    தமிழ்த்தேனீ

     

    தொலைபேசி உரையாடல் : மனைவி பேசிக்கொண்டிருக்கிறார் அவருடைய கணவர் அருகிலிருக்கிறார்

    மனைவி :ஹலோ யாரு? ஓ கமலியா சொல்லுங்க நல்லா இருக்கீங்களா

    எதிர் முனை: ……

    மனைவி :ஐயய்யோ அப்படியா

    எதிர் முனை: ….. மனைவி : ஐயய்யோ அப்புறம் என்னாச்சு!

    எதிர் முனை : …..

    மனைவி :…. அடடா ஏன் இப்பிடி செஞ்சுட்டாங்க அடேடே ….ஐயய்யோ. போச்சு போச்சு .கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டாமா?

    எதிர் முனை:..

    மனைவி :சரி ஒண்ணும் கவலைப்படாதீங்க . வேற வழியில்லே விதி, யாரை விட்டுது.

    எதிர்முனை:….

    மனைவி : அய்யோ… எல்லாம் தலையெழுத்து

    எதிர் முனை:….

    மனைவி: (கண்ணில் நீர் வழிய பேசுகிறார்) நான் எதிர்பார்க்கவே இல்லே இப்பிடியாகும்னு

    (இந்தத் தொலைபேசி உரையாடல் கவனத்தை ஈர்க்கவே பதைபதைப்புடன் உட்கார்ந்திருக்கும் கணவர் சைகையினால் கேட்கிறார் என்ன ஆச்சு யாரு போன்லே?)

    மனைவி : சத்தம் போடாதீங்க என்று சைகை காட்டவே அமைதியாக ஆனால் பதட்டமாகவே உட்கார்ந்திருக்கும் கணவர்

    மனைவி : சரி நாம் கவலைப்பட்டு என்ன ஆவப்போகுது . மனசைத் தேத்திக்குங்க. வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜம்தான்.

    நம்மோட முன்னொர்கள் எத்தனையோ பேரு செத்துப்போயிட்டாங்க அதுக்காக புருஷனோ பொண்டாட்டியோ அவங்களோடயே செத்துப் போயிர்றாங்களா?நீங்கதான் மனசைத் தேத்திக்கணும்

    எதிர் முனை: …..

    மனைவி: சரி அழுது என்னா ஆவபோகுது மேலே நடக்கறதை கவனிங்க என்னதான் ஆறுதல் சொன்னாலும் போனவங்க திரும்பி வரபோறாங்களா? இல்லே ஆறுதல் சொல்லி தீரப்போற துக்கமா இது? மனசைத் தேத்திக்கோங்க.

    எதிர் முனை:………..

    மனைவி: சரி உங்க உடம்பைப் பாத்துக்கோங்க , உணர்ச்சி வசப்படாதீங்க ஏற்கெனவே உங்களுக்கு ப்ரஷர் அதிகம். எனக்கும் இந்தச் சேதியைக் கேள்விப்பட்டதிலேருந்து படபடன்னு வருது. சரிங்க ஜாக்கிரதை நேர்லே சந்திப்போம், ஹும் வரேன், வீட்டுக்காரரையும் கூட்டிகிட்டு வரேன். சரி போனை வெச்சிடறேன். என்று புருஷன் போயிட்டாலும் நாம் இருக்கறவரைக்கும் குழந்தைங்களுக்காகவாவது வாழ்ந்து தானே ஆகணும் ,நீங்க மனசைத் தேத்திக்கங்க பாப்போம் அடுத்து என்ன நடக்குதுன்னு என்று கூறிவிட்டு ரிசீவரை வைத்தாள் மனைவி.

    கணவர்: என்னாதும்மா என்ன ஆச்சு ஏதாவது சீரியஸ்ஸான விஷயமா

    மனைவி: ஒண்ணுமில்லே என்றபடி போகிறாள்

    கணவர்: ஆத்திரத்துடன் நான் ஒருத்தன் இங்கே பயந்துகிட்டே உக்காந்திருக்கேன் நீ பேசிப் பேசியே என் ப்ரஷரை தூண்டிவிட்டுட்டு ஒண்னுமில்லேன்னு போயிகிட்டே இருக்கியே என்னா விஷயம்ன்னு சொல்லு

    காமாஷிஅம்மா அதாங்க நம்மோட உறவுக்காரங்க ,அவங்க புருஷன் ராமநாதன் சர் கூட கம்ப்யூட்டர் கம்பனிலே மேனேஜரா இருக்காரே.

    கணவன்: ஆமா அவருக்கு என்ன என்று பதறியபடி கேட்கிறார்

    மனைவி : “காவேரி” தொலைகாட்சித் தொடர்லே நடிச்சிட்டு இருந்தாரே அவரை சாகடிச்சிட்டாங்க

    புருஷன் : என்னாது ! என்கிறார் பதறியபடி

    ஆமாங்க: அவரு நடிச்சதுக்கு பணம் குடுக்காம ஏமாத்திகிட்டே இருந்திருக்காங்க. அந்தக் கம்பனிக் காரங்க ,இவரு ஒரு நாளு பெரிய சண்டை போட்டிருக்காரு இனிமே பணம் குடுத்தாதான் நடிக்க வருவேன்னு சொல்லிட்டாரு கறாரா.

    புருஷன்: நியாயம்தானே , நிறையப் பேரு பணத்துக்குதானே நடிக்கறாங்க அதக் குடுக்காட்டி கேக்க மாட்டாங்களா ? அவரு நடிச்சதுக்குதானே பணம் கேட்டிருக்காரு . அதுக்கு கொலையே பண்ணிட்டாங்களா?

    மனைவி: பாவங்க இவரு நியாயத்தைக் கேக்கப் போயி சாகடிச்சிட்டாங்க

    புருஷன்: நாட்டிலே வர வர அநியாயம் அதிகமாயிட்டே போவுது .

    மனைவி : இவரு நடிக்கறாரே அந்த அப்பா கேர்க்டருக்கு இவர் பேரையே வெச்சாங்க ராமநாதன்னு.  இவரு பணம் கேட்டு தொந்தரவு செய்யறாருன்னு அந்த கதாபாத்திர மேக்கப்போட இவங்களை போட்டோ எடுத்து அந்த வீட்டுலே இவரு போட்டோவை மாட்டி ஒரு மாலையை போட்டுட்டு ராமநாதன் செத்துப் போயிட்டாருன்னு கதையை மாத்தி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். அதான் பேசிகிட்டு இருந்தோம் என்றாள் சாவகாசமாக.

     

     

    Share
  • அவலச் சுவையில் ஒரு மிடறு தேநீர்!..

    வருணன்

    அன்றாட வாழ்வில், குறிப்பாக உழைக்கும் பாட்டாளிகளின் வாழ்வியலோடு ஒன்றிய ஒரு விடயம் தேநீர் அருந்துதல். அதுதான் உடலெனும் இயந்திரத்தை இயக்குகிற எரிபொருள் அவர்களுக்கு. உணவே அதுதான், பல நாட்களில். களைத்திருக்கும் தேகத்தின் ஒவ்வொரு தசையையும் புத்துணர்வேற்றுவது சுவை மொட்டுக்களின் மீது படரும் சில மிடறு தேநீர்தான். நாம் பயன்படுத்தும் எல்லா அன்றாட பொருட்களும், அவை எவ்வளவு சிறியதாயினும், யாரோ ஒரு முகமறியா உழைப்பாளியின் வியர்வையே. பணம் கொடுத்துப் பெற்ற எந்த ஒரு பொருளுக்கு பின்னாலும் ஒரு கதையிருக்கும். உறிஞ்சும் தேநீர் விதிவிலக்கல்ல.  அரிதான மலைப்பிரதேசப் பயணங்களில் எனை மிகவும் கவர்பவை உதறி விரித்த பச்சைக் கம்பளமாய் காணக் கிடைக்கும் குளிர்ச்சியான தேயிலைத் தோட்டங்கள் தாம். அடுக்கடுக்காய், ஒரே சீராய் இயற்கை அன்னையின் தலை வகிடு போல. இந்த நயமான பிம்பத்தை புரட்டிப் போட்டிருக்கிறது ஒரு திரை அனுபவம். முதல் படைப்பிலிருந்தே தான் வழிகளை உருவாக்குபவன், பழகிய தடங்களில் பயணிப்பவன் அல்லன் என உரக்கச் சொல்லும் கலைஞன் பாலா. வணிக பரிமாணத்திற்கும் கலாப்பூர்வ பரிமாணத்திற்கும் இடையேயான சினிமாவின் விளையாட்டில் ஆடும் லாவகம் தெரிந்த படைப்பாளி.

    விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை தொடர்ந்து பதிவு செய்யும் திரைக் கலைஞன். இவர்களுடையதும் வாழ்க்கைதான். இவர்களும் மனிதர்கள் தான் என இவர்களைப் பற்றிய கதைகளை நம் கவனத்திற்கு கொண்டு வருகின்றன இவரது ஒவ்வொரு படைப்பும். சினிமா என்பது சொல்லப் போனால் புனைவுகளின் காட்சி மேடையே. திரையரங்க இருளில் நிழலின் வழியே நிசத்தைத் கண்டடையும் ஒரு கலாப்பூர்வாமான எத்தணிப்பு. தேயிலைத் தோட்ட கொத்தடிமைகளின் வாழ்க்கைப் பக்கங்களை வழிந்தோடும் கண்ணீரின் உவர்ப்போடு சொல்லும் ‘பரதேசி’யை பாலாவால் மட்டுமே எடுக்க முடியும். வேறு யாராலும் இது போல படைக்க முடியாது என்பதல்ல இதன் அர்த்த நீட்சி. சமரசங்களுக்கு தன் படைப்பைத் தாரை வார்க்காமலேயே வணிக சினிமாவின் எல்லைகளை விரிவாக்கும் சாத்தியப்பாடும் துணிவும் அவருக்கு மட்டுமே உண்டு, இன்றைய சூழலில். மையங்களை விடுத்து மற்றமைகளை மையங்களாக்குதல் பின்நவீனத்துவத்தின் ஒரு முக்கிய அம்சம். அந்த வகையில் பாலா ஒரு அசலான பின்நவீனத்துவ படைப்பாளி.

    வெள்ளைக்கார பிரபுக்கள் காலனீய இந்தியாவின் வெம்மையை தாக்குப் பிடிக்க இயலாமல் மலைப் பிரதேசங்களில் புகுந்து கொண்டனர். கூடவே அந்த நிலவியல் தேயிலை பயிரிட சாதகமாய் இருக்கவே பயிரிடல் ஆரம்பமானது. அட்டைகள் ஊறும் தோட்டங்களில் உழைக்கக் கொத்தடிமைகள் தேவைப்பட்டனர் அதிகளவில். அவர்களைக் கொண்டு வர அதிகார நிலையில் அடிமைகளும் வெள்ளையர் வசம். உறிஞ்சபட்ட உழைப்பின் நெடிய வரலாற்றைச் சுருங்க அறிமுகம் செய்கிறது படைப்பின் துவக்கக் குறிப்பு.

    திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் படைப்பு பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்துள்ளது அனைவரும் அறிந்ததே. திரைப்படத்தின் கதை என்னவென்பது ஏறக்குறைய வாசிக்கும் எல்லோருக்கும் தெரியுமாதலால் அதன் வழி கிடைக்கப் பெற்ற அனுபவத்தையும் அதன் நீட்சியாய் மனதை அழுத்தியஅவதானிப்புகளிலும் கவனத்தைக் குவித்துள்ளேன். உலக சினிமா என்று அழைக்கப்படுபவை பெரும்பாலும் அந்தந்த பிரதேசங்களின் அழகியலையும், அங்குள்ள மக்களின் கலாச்சார, சமூக, உளவியல் கூறுகளையும் உயிர்ப்போடு எடுத்துக் காட்டுபவையே. இதனை பிரதியெடுத்தல் முட்டாள் தனமானது. மற்றொருவரின் ஆடை அளவுகளின் அடிப்படையில் தனக்கு உடுப்புத் தைத்துக் கொள்வது போன்றது. வெல்லும் மோகத்தின் அவசரத்தில் பல தமிழ்படைப்புகளில் இது நிகழ்ந்துள்ளது. பரதேசியில் நாற்பதுகளின் தமிழ் மகளின் அழகியல் அதன் உயிர்ப்போடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நீர் பருகும் சுரக்குடுவைகளும், சாமானியர்களின் உடைகளும், கிராமிய திருமண முறைகளும், ‘வாப்பா நெல்லு சோற கணக்கு பன்ணுவோ’ என்பதாக அவர்களின் யதார்த்தமும் அதனதன் அழகோடு கடந்து போகின்றன.

    துவக்கக் காட்சியில் காமிரா கதையின் துவக்கப் புள்ளியான சாலூர் கிராமத்தின் நிலவியலை பார்வையாளனுக்கு அறிமுகம் செய்கிறது , சந்து பொந்துகளில் துள்ளித் திரியும் விளையாட்டுச் சிறுவனின் துறுதுறுப்போடு. (இதே மாதிரியான  ஒரு காமிரா நகர்வு பின் பாதியில் கொள்ளை நோய் கண்ட அடிமைகளின் குடியிருப்புப் பகுதியை காட்டியிருக்கும் – A Beautiful Visual Design!). தண்டோரா போட்டு சேதி சொல்லும் ஒட்டுப் பொறுக்கியெனும் ராசா கதையின் நாயகன். விளிம்பு நிலை மாந்தரின் கூட்டத்தில் அவர்களாலேயே நகைக்கப் படும் மிகப் பரிதாபமன ஆத்மா.

    ஊருக்கு திருமணத்தை அறிவிக்கும் காட்சியிலும் அதன் தொடர்ச்சியிலும், தமிழரின் அன்றைய வாழ்வியலில் குழு வாழ்க்கையின் எச்சங்கள் விரவிக் கிடப்பதை அறிய முடிகிறது. உலகமயமாகலுக்குப் பிறகான இன்றைய காலகட்டதில் அந்த மிச்சங்கள் கூட முழுமையாய் தடயமின்றி அழிக்கபட்டு கூட்டுக் குடும்பங்களுக்கான சாத்தியங்கள் கூட இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. காண்கிற யாவரையும் உறவு சொல்லி அழைக்கும் நாயகனும் அதற்கு அவர்கள் கொடுக்கும் நக்கலான பதில்களும் அழகு. வெள்ளேந்தியான மனிதர்களின் பாசாங்கில்லாத உலகினை உரையாடல் வழி சொல்லும் நாஞ்சில் நாடனின் எழுதுகோல் அங்கதச் சவுக்கை நேர்த்தியாய் சுழற்றுகிறது இத்தருணங்களில். அங்கதச் சுவையோடு துவங்கும் கதையோட்டத்தில் மெல்ல கவிகிறது அவலச் சுவை. நாயகி அங்கம்மா ராசாவின் மீதான தன் பிரியங்களை எள்ளல் வழியாகவே அவனுக்கு வெளிப்படுத்துகிறாள். மனதால் இணையும் அவர்கள் உடலால் இணையும் பகுதிகளை காட்சியாக்குவதில் பாலா காட்டியிருக்கும் அக்கறை அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகரிக்கிறது. பூடகமாய் நடந்தவற்றை பார்வையாளனுக்கு கடத்துவதில் பாலாவின் கலா நேர்த்தி மிளிர்கிறது. போலவே வெள்ளைக்கார துரையின் உடற்பசிக்கு இரையாக்கப்பட்ட அப்பெண்ணின் உடல்மொழியும் அக்காட்சியினூடே கனத்து இறங்கும் மௌன நொடியும் இன்னுமொரு சான்று.

    சினிமா ஒரு காட்சி ஊடகம். கதையையும் அதன் வழியாக இயக்குனனின்சமூகத்துடனான உரையாடலையும் முன்னிறுத்துவது கதாபாத்திரங்களே. அவர்கள்மூலமாகவே இயக்குனர் புனைவின் வழி சொல்ல விழைபவை அனைத்தும்பார்வையாளர்களுக்கு கடத்தப்படுகிறது. பாத்திரப் படைப்பு எந்த அளவிற்குஉயிரோட்டமுடையதாகவும், குண விளக்கமுடையதாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்குஅதன் நம்பகத்தன்மை அதிகரிக்கும். நம்பகத்தன்மை மிகுந்த பாத்திரங்களைச்சுற்றி கட்டமைக்கப்படும் கதை வெளி உண்மையின் நிழல் போலாகும். இதில் அதுகச்சிதமாய் அமைந்திருக்கிறது( ஏனோ பரிசுத்தம் எனும் மருத்துவர் பாத்திரம்மட்டும் ஒரு பூங்கொத்தில் துருத்தியபடியிருக்கும் ஒரு வாடிய மலர் போலஇருந்தது.).

    அடிமை வாழ்வின் வலியை, அவர்களின் இயலாமையை, கையறு நிலையை மிகுந்தசிரத்தையோடு- அத்துணை கலைஞர்களின் பெரு உழைப்போடு- பதிவுசெய்திருக்கிறார் பாலா. ஒரு சிறந்த கதைக்கரு படைப்பின் ஆன்மா. திரைக்கதைஅதன் உயிர். அது உயிர்ப்போடிருக்கத் தேவையான சுவாசத்தைத் தருபவைகதாபாத்திரங்களே. வலிந்து திணிக்கப்படாத கதாபாத்திரங்கள் கதையோட்டத்தின்ஒவ்வொரு நகர்வையும் அதன் திருப்பத்தையும், அதனால் உருவாகும் விளைவு-எதிர்விளைவுகளையும் அர்த்தப்படுத்துகின்றன.

    ஒரு இயக்குனனின் கனவை காட்சிப்படுத்துவது ஒளிப்பதிவாளரே. அவரே இயக்குனன்அடை காத்திட்ட அக மனக்காட்சியை திரைச் சுருளுக்குள் அடைக்கிறார். செழியன்தனது கவித்துவமான புனைவு மொழி போலவே காட்சி மொழியையும் கையாண்டுள்ளார்.சாலூர் மற்றும் பச்சை மலையென கதை நகரும் இரண்டு நிலப்பகுதிகளையும்தனித்துவமாய் வேறுபடுத்திக் காட்டுகிறது காட்சிகளின் வண்ணத் தேர்வுகள்.புழுதியப்பிய சாலூரின் நிலம் வரண்டிருப்பினும் மனித மனங்கள் ஈரமாகவேஇருக்கின்றன. திசையெங்கும் பசுமை விரிப்பின் வனப்பில் கொழிக்கும் பச்சைமலை, கொத்தடிமைகளை அவர்களது வாழ்க்கை குறித்த கனவுகளோடு பொசுக்கும்இடுகாடன்றி வேறல்ல. பாடல்களை கதை சொல்லும் கருவியாய் சர்வ நேர்த்தியாய்பயன்படுத்திக் கொள்ளும் படைப்பாளிகளுள் முதன்மையானவர் பாலா.இப்படைப்பிலும் அதுவே நிகழ்ந்துள்ளது.

    பஞ்சம் பிழைக்க போகும் வழியில் பொட்டல் வெளியில் ஒரு மண்டல களைப்பு (அனைவருக்கும் தாடி மட்டும் வளர்ந்து தலைமுடி வளராமல் இருப்பது ஒரு பிழையான சித்தரிப்பே) அழுத்த நிலைகுலையும் ஒருவனை விடுத்து அவன் மனைவியையும் கூட்டத்தோடு இழுத்துச் செல்லும் கணத்தில், அந்த சரளைப் பாதையினூடே நீளும் அந்த கரம் திரையும், கூடவே மனதையும்,  வியாபிக்கிறது. உயரும் கை சொல்வதென்ன? அது யாசிப்பா அல்லது இறையை நோக்கிய முறையிடலா?

    இரண்டாம் பாதியில் தொடரும் காட்சிகள் கதை மாந்தரின் வாழ்வைச் சூழ்ந்திருக்கும் இருண்மையை அணிந்து கொள்கின்றன. காட்சிகள் நகர நகர திரையரங்கம் மெல்ல தன் சலனங்களை ஒடுக்கிக் கொண்டு நிசப்தத்தில் உரையத் துவங்குகிறது. இப்பகுதியில் எனது சிந்தனையை நிறைத்தது மதங்கள் குறித்த அவதானிப்பே. பரிசுத்தம் எனும் மருத்துவர் பாத்திரமும் அவரது மனைவியின் பாத்திரப் படைப்பும் ஏற்றுக் கொள்ளல் கூடியதாகவே இல்லை தான். அது குறித்து ஏறக்குறைய எல்லா விமர்சனங்களும் காய்ச்சி எடுத்து விட்டார்கள். அதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இன்னொமொரு கோணம் அவதனிப்பதற்கு இருக்கவே செய்கிறது.

    உலகின் சகல மதங்களும் நோய்மையிலிருந்தும், கவலைகளிலிருந்தும் மனிதர்களை விடுவிக்குமென்ற அவர்களது நம்பிக்கைகளைச் சுற்றியே கட்டமைக்கப் பட்டிருக்கின்றன என்பார் எஸ்.ரா. தனது கட்டுரை ஒன்றில். எத்தனை உண்மை! கொள்ளை நோய் கொத்துக் கொத்தாய் மனிதர்களை காவு கொள்ளும் தருணத்தில் வரும் மருத்துவர் மருந்துகளோடு மதத்தினையும் எடுத்துக் கொண்டு வருகிறார் என சித்தரிக்கப்படுகிறது. சொந்த மண்ணில் தனது வேர்கள் இல்லாத எந்த ஒரு மதம் எதுவாயினும் அது ஆரம்பத்தில் அதிகாரத்தின் நிர்பந்தத்தின் வழியாகவே பரவுகின்றது. இயேசு (தம்மை ஆண்டு நசிக்கும் வெள்ளையர் வணங்கும் அதே கடவுளே) தங்களை கவலைகளில் இருந்து மீட்டு இரட்சிக்க வந்தவர் என மருத்துவர் சொல்வது இந்த புனைவின் தளத்தில் பொருத்திப் பார்க்கையில் நகை முரணாகவே படுகிறது. பழைய கங்காணியை விடவும் இந்த மருத்துவன் ஆபத்தானவன்எனும் பரங்கித் துரையின் சொற்கள் அந்த பாத்திரத்தின் குணநலனின் மீதான மெய் விமர்சனமே. ஆனால் திரைப்படம் அடிப்படையாகக் கொண்ட நாவலை எழுதியதும் ஒரு மருத்துவர்(மருத்துவர் டானியேல்) தான் என்பது பனதில் நிழலாடுகையில் மனம் இப்பாத்திரத்தை மறுத்து முற்றாக புறக்கணிக்கிறது.   ’தன்னைத் தானே தந்தானைத் துதிப்போம்’ என தனது காதல் மனைவியோடு அவர் ஆடும் போது, ஒரு வேளை இவர் சொல்வது உண்மையாகி தங்களை இவர் சொல்லிமிந்த கடவுள் இந்நரகத்தினின்று மீட்டெடுப்பாரோ என்ற எதிர்பார்ப்போடு சாவிகொடுத்த பொம்மை போல இயந்திரத்தனமாய் ஆடும் மக்களின் கண்களில் ஒளிர்கிறது மீதமிருக்கும் நம்பிக்கையின் கடைசித் துளியும் , விரக்தியும் சரிவிகிதத்தில்.

    பொதுவாக பாலாவின் படைப்புகள் அவர் வன்முறையை ஆராத்திக்கிறாரோ எனும் ஐயத்தை நிச்சயம் உண்டாக்கும். சில நேரங்களில் முடிவுகள் வலிந்து திணிக்கப்பட்டதைப் போன்ற சாயலைப் பெற்றிருக்கும். ஆனால் அந்த் தடையை இப்படைப்பில் பாலா கடந்திருக்கிறார்.யாரும் யாரையும் கொன்று நியாயத்தை நிலை நாட்டவில்லை. பச்சை பலையில் மொத்தமாய் செத்துவிட்ட நியாயத்தை எங்கெயிருந்து நிலை நாட்டுவது?  தனக்கு அண்ட இடமளித்த பெண்ணின் மகளோடு கணக்கு முடிந்ததா என தெரிந்து கொள்ள  வருகிறான் ராசா. அச்சிறுமியையே காரணம் காட்டி நரகத்தின் வாயிலுக்கே மறுபடியும் அவன் அனுப்பப்படும் தருணத்தில் ஒரு நொடித் தயக்கம்அவன் கண்களில் மின்னுகிறது. ஆனால் அவன் அக்குழந்தைக்காய் தன்னை மறுபடியும் ஒப்புவிக்கிறான். ஒன்றும் இல்லாதவனே திறந்த மனதுடன் பிறருக்குத் தருவான் என எப்போதோ வாசித்தது உண்மையே.

    இறுதிக் காட்சியில் அங்கம்மாவும் அங்கேயே வந்து சேர உடைந்து கதறும் ராசா, “ நரகக் குழியில் வந்து விழுந்திட்டியே அங்கம்மா “ , என ஓலமிடும் போது காமிரா மெல்ல உயர்ந்து அந்தபச்சை பலை முழுவதையும் சுற்றி மீண்டும் அவனிடமே வரும் போது அந்த ஷாட் மொத்த கதையின் சாரத்தையும் அதன் நோக்கத்தையும் காட்டுகிறது. (எல்லோரும் இதப் பாருங்க எனும் த்வனியில் காமரா சுழன்றதாக தேன்றியது)

    அச்சிறுமியோடு பாறையின் மீதமர்ந்து “ நியாமாரே…” என்று கதறும் கதறல் நம் ஒவ்வொருவரை நோக்கியதாகவே இருக்கிறது. நாம் சில மிடறு தேநீர் உறிஞ்சி சுகித்திருக்க, தங்களின் வாழ்க்கையையே பெருமுதலாளிகளுக்கும் அட்டைகளுக்கும் (இரண்டிற்கும் பெரிய வித்தியாசமில்லை) உறிஞ்சக் கையளித்தவர்களின் வாழ்க்கையை வலிக்க வலிக்க சொல்லியிருக்கிறார் பாலா. விமர்சனங்களைத் தாண்டி படைப்பு நிற்கவே செய்கிறது முக்கியமான படைப்பாக.

    படத்தை குறித்து சில முக்கிய விமர்சனங்கள் பரவலாக எல்லா விமர்சனக் கட்டுரைகளிலும் காண முடிந்தது. அதில் முதலாவது திரைப்படம் அது தழுவி எடுக்கப்பட்ட நாவலுக்கு நியாயம் சேர்க்கவில்லை எனும் விமர்சனம். ஒரு பார்வையாளனுக்கும் ஒரு வாசகனுக்கும் உள்ள வித்தியாசங்கள் நிறைய. வாசகன்

    அறிவார்ந்த தளத்திலிருந்து படைப்பை அணுகுபவன்.  பார்வையாளர்களில் பெரும்பான்மையினர் அந்த தளத்தில் இருந்து படைப்பை அணுகுவதே இல்லை. படத்தில் பிற்பாதியில் தான் நாவலே துவங்குகிறது. முற்பாதி முழுவதும் பாலா ‘எடலக்குடி ராசா’ எனும் நாஞ்சில் நாடனின் சிறுகதையையே எடுத்தாண்டுள்ளார். இதனால் அவர் படைப்பை இருட்டடிப்பு செய்துள்ளார் என்பது விமர்ச்னம். முற்பாதியில் இலகுத் தன்மை இருந்ததால் தான் படத்தின் இறுக்கம் சற்றே குறைந்தது.

    படம் விளிம்பு நிலை வரலாற்றையே திரித்து எழுதியுள்ளது இது ஒரு வரலாற்று அரசியல் என ஒருவர் கடுமையாய் விமர்சித்திருந்தார் ஒரு விமர்சகர், சிற்றிதழ் ஒன்றில். தற்செயலாய் அவரே எழுதியிருந்த ஒரு வெகுசன பத்திரிக்கையில் வேறொரு ஆங்கிலப் படத்திற்கான விமர்சனத்தை வாசிக்க நேர்ந்தது. அதில் அவரது இறுக்கமான மொழி நடையோ, கருத்தாழமோ, ஆய்வுத்தன்மையோ எதுவுமே இல்லை. வெகுசனப் பத்திரிக்கைகளின் வாசகர்கள் சிற்றிதழ் வாசகர் போல தீவிரத் தன்மைக்கு பரிச்சயமற்றவர்கள் என்பதே இதற்கு காரணம். அதனை மனதில் வைத்துத் தான் அவர் அப்படி எழுதியிருக்கிறார். இத்தனைக்கும் அந்த ஆங்கிலப் படம் குறித்துப் பேசுவதற்கு ஏராளம் இருந்தது. ஆனால் அவரது வழமையான தீவிர அணுகுமுறை அத்திரைப்பட விமர்சனத்தில் அறவே இல்லை. ஒரு விமர்சனத்தையே தளத்திற்கு ஏற்றார் போல மாற்றிக் கொள்ளும் ஒரு விமர்சகர்எந்த முகாந்திரத்தில் படைப்பின் நேர்மையை கிழித்து எடுக்கிறார் என்பது எனக்கு விளங்க முடியாத ஆச்சரியமாகவே இருக்கிறது.

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகளும், காட்டுமிராண்டி உணவுமுறையும் – 6.

    செல்வன்

    கொலஸ்டிராலை வேண்டியமட்டும் அலசியாகி விட்டது. நாகரிக மனிதனின் இன்னொரு வியாதியான டயபடிஸ் எனும் சர்க்கரை வியாதியை அடுத்து அலசுவோம்.

    டயபடிஸில் முக்கியமான மூன்றுவகைகள் உண்டு. டைப் 1, டைப் 2 மற்றும் ப்ரி டயபடிஸ் என மூன்று முக்கியவகை டயபடிஸ் உண்டு. இதில் டைப் 1 டயபடிஸ் என்பது நம் உடலில் உள்ள பேன்க்ரியாஸ் எனும் உள்ளுறுப்பு கிருமிகளால் பாதிக்கப்படுவதால் அல்லது வேறு நோய்களால் பாதிக்கப்படுவதால் வருவது. பேன்க்ரியாஸ் தான் இன்சுலினை சுரக்கும் உறுப்பு என்பதால் இன்சுலின் சுரப்பது பாதிக்கப்படுகையில் நமக்கு டைப் 1 டயபடிஸ் வருகிறது.

    டைப் 2 டயபடிஸ் தான் பெரும்பாலானோருக்கு வருவது. இது நம் உணவு பழக்கங்களாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும் வருவது. நம் ரத்த அளவில் உள்ள சர்க்கரை 125 மிகி/ டிஎல் எனும் அளவைத் தாண்டுகையில் நாம் சர்க்கரை நோயாளி என அறியப்படுகிறோம். 100 மிகி/டிஎல் முதல் 125 மிகி/டிஎல் அளவில் சர்க்கரை இருந்தால் நாம் ப்ரிடயபடிக் என அழைக்கபடுகிறோம். 100 மிகி/டிஎல் அளவுக்கு கீழ் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என பொருள்.

    டயபடிஸ் வரக் காரணம் என்ன?

    நம் உணவில் உள்ள சர்க்கரை (கார்போஹைட்ரேட்) தான் சர்க்கரை நோய்க்கு காரணம். சர்க்கரை அரிசி, கோதுமை, பழங்கள், காய்கள் முதலிய பலவற்றிலும் ஏராளமாக இருக்கிறது. சர்க்கரையில் மூன்றூவகை உண்டு

    க்ளுகோஸ்

    லாக்டோஸ் – பாலில் இருக்கும் சர்க்கரை

    ப்ருக்டோஸ் – பழத்தில் இருக்கும் சர்க்கரை

    நாம் உண்ணும் அரிசி, கோதுமை முதலிய உணவுகளில் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை உண்டு. இது நேரடியாக குளுகோஸ் ஆக மாறுகிறது. அந்த குளுகோஸ் உடலில் இறங்கியவுடன் அதை ஜீரணம் செய்ய நம் பேன்க்ரியாஸ் இன்சுலினை உற்பத்தி செய்யவேண்டி உள்ளது. இன்சுலின் உற்பத்தி ஆனதும் பல தீய விளைவுகள் உடலில் நிகழ்கின்றன.

    ஆதி மனிதன் தினமும் மூன்று வேளை உண்ணும் வழக்கம் உடையவன் அல்ல. ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பதே சிரமம் எனும் நிலையில் இருந்தவன். அதனால் தேவைக்கு அதிகமாக உண்டால் அந்த அதிகபட்ச உணவை சேமித்து பஞ்சகாலத்தில் பயன்படுத்தும் அவசியம் அவனுக்கு இருந்தது. அதற்கு இன்சுலின் பேரளவில் பயன்பட்டது. ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக குளுகோஸ் கலந்தால் இன்சுலின் உற்பத்தி ஆகிறது. இன்சுலினின் உற்பத்தி நம் உடலில் உள்ள செல்களுக்கு அந்த கூடுதல் சர்க்கரையை சேமிக்கும் சிக்னல். கூடுதல் சர்க்கரையை எப்படி சேமிக்க முடியும்? இரு வழிகளில். ஒன்று கிளைகோஜென். கிளைகோஜென் நம் உடலின் ஆற்றல் தேவைகளுக்கு பயன்படும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் உடலுக்கு இரு நாள் அளவுக்கு மேல் தேவையான ஆற்றலை கிளைகோஜென்னாக சேமிக்கும் சக்தி இல்லை. ஆனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஏராளமாக கொழுப்பைச் சேர்க்கும் ஆற்றல் உள்ளது. அதனால் நம் உணவில் உள்ள சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு தொப்பையில் சேர்க்கபடுகிறது. நாமும் குண்டோதரர் ஆகிறோம்.

    சர்க்கரை வியாதி இதில் எப்படி வருகிறது?

    இன்சுலின் என்பது ஃபயர் எஞ்சின் மாதிரி. கூடுதல் சர்க்கரை உடலில் சேர்ந்தால் ஒரு எமெர்ஜென்சி எனும் அளவில் இன்சுலின் சுரந்து அதை கட்டுக்குள் வைக்கும். ஆனால் தினம் மூன்று வேளையும் நெருப்பு பிடித்து அலாரம் அடித்துக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்? இதுவே தொடர்ந்து நாற்பது வருடம் நீடித்தால் என்ன ஆகும்?

    ஓடிக்கொன்டிருக்கும் ஃபயர் எஞ்சின் களைத்துப் போய் நின்றுவிடும். அதாவது பேன்க்ரியாஸ் தன் இன்சுலின் சுரக்கும் திறனை இழந்துவிடும் அல்லது குறைத்துக் கொள்ளும். இன்சுலின் சுரப்பது குறைந்தால் உடலில் சர்க்கரை அளவு அதிகம் ஆகி நமக்கு சர்க்கரை வியாதி வரும். அதன்பின் செயற்கையாக ஊசிமூலம் இன்சுலினை ஏற்றும் நிலைக்குச் செல்வோம்.

    துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டு உணவுவகைகள் பலவும் ஏராளமான சர்க்கரை சத்து கொன்டவையாகவே உள்ளன. நம் காலை உணவான இட்லியை எடுத்துக்கொள்வோம். ஒரு இட்லியில் சுமார் 15 கிராம் சர்க்கரை உள்ளது. ஒரே ஒரு இட்லி சாப்பிடுவது சுமார் நான்கு டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதற்கு சமம். காலையில் ஐந்து இட்லியும், சாம்பாரும் சாப்பிட்டால் நீங்கள் காலையில் மட்டும் 20 ஸ்பூன் சர்க்கரை (75 கிராம் சர்க்கரை)உண்கிறீர்கள் என பொருள்.

    “இட்லி சாப்பிடுவதும் சர்க்கரை சாப்பிடுவதும் ஒன்றா? இட்லி ஆரோக்கிய உணவு அல்லவா?” எனக் கேட்டு நீங்கள் என் மேல் கோபப்படலாம். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

    ஐந்து இட்டிலி சாப்பிடுவது நேரடியாக 75 கிராம் வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதை விட மோசமானது.

    சில உணவுகள் நம் உடலில் நுழைந்தவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதில் உச்சக்கட்டமாக, உடனடியாக எரிந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு க்ளுகோஸ். க்ளுகோஸ் சாப்பிட்டவுடன் உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு நமக்கு இருக்கும். அதற்கு காரணம் இதுதான். ரத்தத்தில் சர்க்கரை ஏறியவுடன் உடல் சுறுசுறுப்பு அடையும். உடல் உடனே அதை ஜீரணிக்க இன்சுலினை அனுப்பும். இன்சுலின் சுரந்தவுடன் பசி எடுக்கும். மேலும் எதையாவது உண்ணவேண்டும் போல் தோன்றும்.

    ஆக க்ளுகோஸ் ரத்தத்தில் கரையும் விகிதம் 100 என்பதை மையமாக வைத்து க்ளைசெமிக் இண்டெக்ஸ் எனும் இண்டெக்ஸ் உருவாக்கப்பட்டது. 72 தாண்டி இதில் இருக்கும் உணவுகள் ஆபத்தானவை. 72க்கு எத்தனை கீழே எண்ணிக்கை இருக்கிறதோ அத்தனைக்கத்தனை அந்த உணவு நல்லது. காரணம் அது மெதுவாக எரிந்து உடலுக்குத் தேவையான எனெர்ஜியை அளிக்கும். இன்சுலின் சுரப்பின் தேவையை குறைக்கும். இது உடலுக்கு மிகவும் நன்மையளிக்கும் சமாச்சாரம். உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

    சில உணவுகளில் க்ளைசெமிக் இண்டெக்சை பார்க்கலாம்

    நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் கொடுக்கும் லிக்விட் க்ளுகோஸ் 100

    உருளைகிழங்கு 80 முதல் 98 (வகையை பொறுத்து)

    வெள்ளை சர்க்கரை 64

    முழு கோதுமை ரொட்டி 64 முதல் 87 வரை

    வெள்ளை அரிசி 64 முதல் 87 வரை (வகையை பொறுத்தது)

    வெள்ளை ரொட்டி 87

    ஆக சர்க்கரை, க்ளுகோஸ் ஆகியவற்றை உண்ணுவது நம் ரத்தத்தில் க்ளுகோஸ் சுரப்பை அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் க்ளுகோஸ் லெவெல்கள் உடலை வெலவெலத்துப் போகச் செய்யும். அதைக் குறைக்க உடனடியாக இன்சுலினை சுரக்கவேன்டியது கட்டாயம். ஒரு நாளுக்கு நாலைந்து தடவை இப்படி இன்சுலினை சுரந்தால் உடல் ஒரு கட்டத்தில் இன்சுலினை சுரக்கும் சக்தியை இழந்துவிடும். நாம் டைப் 2 டயபடிஸில் வீழ்வோம். அதன்பின் செயற்கையாக இன்சுலினை ஊசி மூலம் ஏற்றவேன்டியதுதான்.

    ஆக நம்மில் பெரும்பாலானோர் உண்ணும் அரிசி, கோதுமை (முழு கோதுமையாக இருப்பினும்) ஆகியவை சர்க்கரையை விட அதிக வேகத்தில் நம் ரத்தத்தில் கரைந்து க்ளுகோஸ் லெவெலை ஏற்றும். சர்க்கரை வியாதியை அதிகரிக்க/வரவழைக்க வேன்டுமனால் அதற்கு குறுக்கு வழி சர்க்கரை தின்பது கூட அல்ல. அரிசியையும், ப்ரெட்டையும் உண்பதே.

    ஆக “நான் குறைவாக தான் சாப்பிடுகிறேன். உடல் இளைக்கவில்லை” என சொல்லுகையில் அதற்கான காரணம் இதுதான்.

    காலை ஐந்து இட்டிலி

    மதியம் சாதம், சாம்பார், ரசம்,

    மாலை வடை, டீ காப்பி

    இரவு சப்பாத்தி, உருளைகிழங்கு குருமா

    இப்படி சராசரியான தமிழ்நாட்டு உணவை உண்பது தினம் சுமார் அரை கிலோ முதல் முக்கால் கிலோ வெள்ளை சர்க்கரையை நேரடியாக உண்பதற்கு சமம்.

    தினம் அரை கிலோ வெள்ளை சர்க்கரையை 40, 50 வருடங்களாக தொடர்ந்து உண்டுவந்தால் டயபடிஸ் வருவதிலும், உடல் எடை கூடுவதிலும், கொலஸ்டிரால் வருவதிலும் வியப்பு என்ன?

    இது எல்லாம் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

    காட்டுமிராண்டி உணவில் இருக்கும் சர்க்கரையின் அளவு என்ன?

    கிட்டத்தட்ட பூஜ்ஜியத்துக்கு சமம்.

    காரணம் ஆதிமனிதன் உண்டது பெருமளவில் மாமிசம், சில வேர்கள், காய்கள். கோடையில் மட்டும் சில பழங்களை உண்டான். அதிலும் வேட்டை கிடைக்காத நாட்களில் முழு பட்டினி. தவிரவும் சர்க்கரை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற விவசாயகாலகட்ட பழங்கள் அவன் காலத்தில் இல்லை. ஆக ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 30 கிராம் அளவு சர்க்கரை அவன் உடலில் சேர்ந்திருந்தாலே பெரிய விஷயம். மேலும் 10,000 ஆன்டுகளுக்கு முன்புவரை உலகின் பெரும்பகுதி பனியால் சூழப்பட்டு இருந்தது. அதனால் மாமிசம் தான் அவன் முதன்மை உணவாக இருந்தது. இன்றும் பனிபடர்ந்த பகுதிகளில் வாழும் எஸ்கிமோ உணவில் 97% மாமிசம். மாமிசத்தில் துளி சர்க்கரை இல்லை. அதனால் ஆதிமனிதன் நாம் உண்பதைப் போன்ற பெரும் அளவுகளில் சர்க்கரையை உண்ணவில்லை. அதனால் அவனுக்கு சர்க்கரை வியாதியும் வரவில்லை.

    ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு நம் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு என்ன?

    இட்டிலி மற்றும் சப்பாத்தி.

    சப்பாத்தியின் கிளைசெமிக் எண் வெள்ளை சர்க்கரையின் கிளைசெமிக் இண்டெக்சை விட அதிகம்.

    சர்க்கரை நோயாளிகள் நாலு சப்பாத்தியை சாப்பிட்டு அதில் உள்ள சர்க்கரையை கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வது என்பது அரை கிலோ சர்க்கரையை சாப்பிட்டுவிட்டு அதைக் கரைக்க இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வதற்கு சமம்!!!

    இப்படி இட்டிலி, சப்பாத்தி போன்ற “ஆரோக்கிய உணவுகளை” தொடர்ந்து உண்டுவந்தால் அப்புறம் எப்படி சர்க்கரை வியாதி குணம் ஆகும்?

    (தொடரும்….)

    Share
  • மனமே மகிழ்ச்சி கொள்!….

    மேகலா இராமமூர்த்தி

    மனித வாழ்க்கையின் வெற்றியே அவர்தம் எண்ணத்தின் வலிமை கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது எனலாம். உற்சாகமும், தன்னம்பிக்கையும் மனத்தில் நிறைந்திருந்தால் எத்துணை கடினமான வேலையையும் நம்மால் துவளாமல் செய்யமுடியும். மாறாக மனம் சோர்வுடனும், ஆற்றல் குன்றியும் இருந்தால் எளிய வேலைகள் கூட நமக்கு மிகப்பெரிய சுமையாக மாறிவிடக்கூடும்.

    நம் மனத்தை மகிழ்ச்சியின் ஊற்றாய், ஆற்றலின் கொள்கலனாய் எப்போதும் வைத்திருக்க முடியுமானால் நம் கனவுகள் மெய்ப்படும். வானம் வசப்படும். நடைமுறை வாழ்வில் சிலவற்றை நாம் பின்பற்றுவதன் வாயிலாக நம் மனத்தைச் சோர்வற்றுப் புத்துணர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் வைத்திருக்க முடியும். அவை யாவை என்பது குறித்துச் சற்றே ஆய்ந்து பார்ப்போம்.

    காலை எழுந்தவுடன் சூரிய உதயத்தை இரசிப்பது, அந்த இளவெயிலில் (பச்சைப் புல்வெளியில்) சற்றுதூரம் காலார நடப்பது போன்றவை நம் அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியோடு தொடங்க உதவி புரிபவை. அதுமட்டுமல்ல, இளங் காலைநேரச் சூரியஒளியில் நிறைந்திருக்கும் வைட்டமின் ’டி’ (vitamin D) நம் உடலுக்கு மிகவும் நன்மைதரக் கூடியது. இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் என்ற ஒன்றை அக்காலத்தில் தினசரி வழக்கமாகப் பின்பற்றி வந்திருக்க வேண்டும்.

    அதிகாலைச் சூரிய ஒளியில் நடக்க இயலவில்லையா? வருந்தத் தேவையில்லை. வீட்டிலிருந்தபடியே இயற்கை அன்னையின் அழகைக் கண்களால் பருகி மகிழலாம். சன்னலோரம் நின்ற வண்ணமே பறவைகள் எழுப்பும் இனிய ஒலிகளைச் செவிகுளிரக் கேட்டுக் களிக்கலாம்.

    காக்கை குருவி எங்கள் சாதி

    நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்

    நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
    நோக்க நோக்கக் களியாட்டம்.”

    என்ற மகாகவியின் பாடலைப் பாடியபடியே பறவைகளின் அழகையும், அவற்றின் இனிய கீதத்தையும் ரசிக்கலாம். இன்றைய நகர (நரக) வாழ்க்கையில் பறவைகளை எங்கே போய்த் தேடுவது என்று கேட்கின்றீர்களா……சாத்தியமானால் வீட்டிலிருந்தபடியே புள்ளினங்கள் பாடும் பள்ளியெழுச்சியைக் கேட்டு மகிழ்வோம். இல்லையெனில் பறவைகளின் இனிய கீதம், அருவிகள் பாயும்போது எழும் ஓங்கார ஒலி முதலியவற்றைப் ’பதிவு’ செய்து வைத்துக்கொண்டுகூட அதிகாலை நேரத்தில் கேட்டு மகிழலாம். அவ்வொலிகள் நம் மனத்திற்குப் புதிய உற்சாகத்தை அளிக்கும்; அன்றைய நாளின் தொடக்கத்தை இனியதாக்கும் என்று உளவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதனால் நாம் அறிவது என்ன? இயற்கையை இரசிப்பதும், இயற்கையோடு இயைந்து வாழ்வதுமே மானுட வாழ்வின் இயல்பான மனமகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதே. நகரமயமாதலினால் (urbanization) எழில் கொஞ்சும் சோலைகளும், நீர்நிலைகளும், புள்ளினங்களும் விரைவாக அழிந்துவருகின்றன. அதனால் இயற்கையோடு இயைந்த இனிய வாழ்வு என்பதே இப்போது அருகிப்போய் வருகின்றது.

    மனத்தை நாள்முழுவதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் அடுத்த வழிமுறையாகக் காலையில் படுக்கையைவிட்டு எழுந்தவுடன் சில நிமிடங்கள் கண்களை மூடி அன்றைய தினம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகின்றோமோ அவ்வாறே கற்பனை செய்து பார்க்கலாம். (இதற்கான தியானப் பயிற்சிகளும் இப்போது கற்றுத் தரப்படுகின்றன.) அன்று செய்யவேண்டிய வழக்கமான செயல்களை நம் மனக் கண்ணில் வரிசைப்படுத்தி அதில் ஓரிரு செயல்களையேனும் நமக்குப் பிடித்தமானவைகளாகச் சேர்த்துக்கொள்வோம். உதாரணமாக, நமக்கு இசையை இரசிப்பதில் ஆர்வம் என்று வைத்துக்கொண்டால் அதற்காகச் சிறிது நேரத்தை ஒதுக்கி நம் மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். அது இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமியின் தேவ கானமாகவும் இருக்கலாம் அல்லது திரைப்படப் பாடலாகவும் இருக்கலாம்……நமக்குத் தேவை மன மகிழ்ச்சி. இசையை விடப் புத்தகங்கள் படிப்பதில் ஈடுபாடு அதிகமா? சிறிது நேரம் புத்தக வாசிப்பில் பொழுதைச் செலவிட்டு மனத்தை உற்சாகப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு நமக்குப் பிடித்த செயல்கள் ஒன்றிரண்டையேனும் நம் அன்றாட அலுவல் பட்டியலில் நுழைத்துவிட்டால் போதும். நமக்கு அவ்வளவாக விருப்பமில்லாத மற்ற செயல்களையும்கூட நாம் விருப்பத்தோடு செய்யத் தொடங்கிவிடுவோம். அப்புறமென்ன…? மனச்சோர்வு, மனஅழுத்தம் ஆகியவை நம்மைக் கண்டு காததூரம் ஓடிவிடும்.

    அடுத்ததாக, நம்மைக் குறித்தும், நம்மிடமிருக்கும் திறமைகள் குறித்தும் அவ்வப்போது சிந்தித்துப் பார்க்க நேரம் ஒதுக்க வேண்டும். ‘தன்னை அறிய தனக்கொரு கேடில்லை’ என்பது திருமூலர் வாக்கு. ஆகவே நம்மிடம் உள்ள திறமைகளை இனம்கண்டு நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளவேண்டும். அத்திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்துச் சிந்தித்து அவற்றை மேலும் மெருகேற்றிக் கொள்ள முயலவேண்டும். ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒரு திறமையேனும் நிச்சயம் ஒளிந்திருக்கும். அதனைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டாலே போதும், பாதிவெற்றி அடைந்துவிட்ட மாதிரிதான். நம்மைப் பற்றியும், நம் திறன்கள் பற்றியும் உயர்வாகவும், பெருமிதத்துடனும் எண்ண  ஆரம்பித்துவிட்டாலே, தாழ்வு மனப்பான்மை அகன்று வாழ்வைப் பிறர் போற்றும் வகையில் நடத்தும்வழி நமக்குப் புலப்பட்டுவிடும்.

    “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

    தள்ளினும் தள்ளாமை நீர்த்து.” என்பது வள்ளுவம்.

    எப்போதும் உயர்வானவற்றையே சிந்தித்து நம் வாழ்வையும் உயர்வானதாகவும், வளமானதாகவும் ஆக்கலாம்.

    மனித மனம் மகிழ்ச்சியிழப்பதற்கு மற்றொரு முக்கியக் காரணமாக உளவியலாளர்கள் சொல்வது ‘தனிமை.’ தனிமையிலே இனிமை காண முடியுமா? முடியாதுதான். ஆனால் இன்றைய நவநாகரிக உலகில் யாரும் யாருடனும் பேசுவதில்லை; பழகுவதில்லை, கேட்டால்….’இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது?’ என்ற கேள்வி உடனே புறப்படும். அண்டை வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூடப் பலருக்குத் தெரிவதில்லை. இதனாலேயே பிள்ளைகளைப் பிரிந்து தனியே வசிக்கும் முதியோரில் பலர் மன அழுத்தத்திற்கும், வேறுபல மனநல பாதிப்புக்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

    இன்றைய வாழ்க்கைமுறையில் தனிமை என்பது அனைவருக்குமே (வயது வித்தியாசமில்லாமல்) ஏதோ ஒரு காலகட்டத்தில் தவிர்க்கவியலாததாகவே இருக்கும்பட்சத்தில், அந்தத் தனிமையைத் துன்பம் நிறைந்ததாகவும், கழிவிரக்கம் கொள்ளத்தக்கதாகவும் மாற்றிவிடாமல் அதிலும் மகிழ்ச்சியோடு இருப்பது எப்படி? உற்சாகத்தோடு வாழ்வது எப்படி? என்று சிந்தித்தால் வழிகள் புலப்படாமலா போய்விடும்?

    ’மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்பது அனுபவ மொழி. யோசித்துப் பார்த்தால், நம்மைச் சூழ்ந்துகொண்டு பயமுறுத்தும் தனிமையை விரட்டவும் சில நல்ல வழிகள் இருப்பது புலப்படும். நமக்குத் துணையாகவும், ஆறுதலாகவும் இருக்கக்கூடிய உறவினர்கள் யாரேனும் இருக்கிறார்களா….எனப் பார்த்து அவர்களுடனான நம் உறவை பலப்படுத்திக் கொள்ளலாம். அவர்களோடு நாமும் அல்லது நம்மோடு அவர்களும் இணைந்து வாழ்ந்து, மனம்விட்டுப் பேசி வாழ்வில் புதுவசந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம். அல்லது புதிய நட்புக்களை (வாய்ப்பிருந்தால்) ஏற்படுத்திக் கொண்டு அவர்களோடு நம் எண்ணங்களையும், உணர்வுகளையும் பகிர்ந்து மன மகிழ்ச்சி கொள்ளலாம்.

    உறவுகளும், நட்பும் சரியாய் அமையவில்லையா? சோர்வடையத் தேவையில்லை. நம் உடலில் வலுவிருந்தால், உள்ளத்தில் ஊக்கமிருந்தால் வீட்டிலேயே தோட்டம் அமைப்பது, அவற்றைப் பராமரிப்பது போன்றவற்றில் நேரத்தைச் செலவிட்டுத் தனிமைக்கு வடிகால் தேடலாம்.

    தோட்டவேலைகள் (gardening) செய்வதில் சிலருக்கு மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் இருக்கும். அப்படி இருப்பின் அத்தகையோர் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம். ஏனெனில் அதனால் விளையும் நன்மைகள் பல. தோட்டவேலைகள் செய்வதென்பது ’ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிப்பதற்குச் சமமாகும்’. எப்படியென்றால்…வீட்டிலே தோட்டங்கள் அமைப்பதும், அவற்றைப் பராமரிப்பதும் சிறந்த, பயன்தரும் உடலுழைப்பாக அமைந்துவிடுகின்றது. அதன்மூலம் வீட்டிற்குத் தேவையான இரசாயன உரங்களற்ற காய்கனிகள், பூக்கள் போன்றவற்றை நாம் பெறுகின்றோம். அத்தோடு, உடற்பயிற்சியாகவும் அது அமைந்துவிடுகின்ற காரணத்தால் உடலும் நோய்களின்றிச் சுறுசுறுப்பாகத் திகழ்கின்றது. இரவில் நல்ல உறக்கமும் வருகின்றது. சமீபத்தில் டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் (University of Texas, America) நடத்தப்பட்ட ஆய்வில் வீட்டிலே தோட்டம் அமைத்து அவற்றின் பராமரிப்பில் நேரம் செலவிடுவோர், அதனைச் செய்யாத மற்றவர்களைக் காட்டிலும் அதிகச் சுறுசுறுப்பானவர்களாகவும், வாழ்க்கையில் திருப்தி நிறைந்தவர்களாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வீட்டில் தோட்டவேலைகள் செய்வது மனஅழுத்த நோய்க்கு மிகச் சிறந்த மாற்று மருந்தாகவும் திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ‘Horticultural therapy’ என்ற பெயரால் இதனை அழைக்கும் மருத்துவ உலகம் பல்வேறு மனநோய்களுக்கும் (anxiety and depression disorders), மறதிநோய்க்கும் (dementia) ’கைகண்ட’ மருந்தாக (நாம் மிகவும் சாதாரணமாக எண்ணும்) தோட்டவேலையைச் சிபாரிசு செய்கின்றது.

    அடுத்தபடியாக, நமக்குப் பிடித்த கலையையோ, மொழியையோ கற்றுக்கொள்வதன் மூலமாக மனச்சோர்வை விரட்டி மகிழ்ச்சியைச் சொந்தமாக்கிக்கொள்ள முடியும். யோகக் கலை, மனவளக் கலை போன்ற வாழ்வை வண்ணமயமாக்கும் எண்ணற்ற கலைகள் இப்போது எல்லா ஊர்களிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஆன்மிக நாட்டம் மிகுந்தோராயின் அவர்களுக்குப் பிடித்த கோயில், குளங்களுக்கும், புனிதத் தலங்களுக்கும் சென்றுவரலாம்.

    நம்மை விட வாழ்விலும், வசதியிலும் நலிவடைந்திருப்பவர்களைச் சந்தித்து அவர்கட்கு உதவலாம். ’உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்ற கவியரசு கண்ணதாசனின் பொருள்பொதிந்த பாடல் வரிகளை எண்ணி மன அமைதியடையலாம். இவ்வாறு மனத்திற்கும், ஆன்மாவிற்கும் மகிழ்ச்சியையும், நிறைவையும் தரத்தக்க நல்ல செயல்களைத் தேடித் தேடிச் செய்வது, பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடுவது என்று ஆரம்பித்தால் தனிமை தானாகவே விடைபெற்றுப் போய்விடும்.

    அதுபோலவே, நம் மனத்திற்குப் பிடித்த மனிதர்கள், அவர்களோடு செலவிட்ட இனிய தருணங்கள், வாழ்வில் நடைபெற்ற என்றும் மறக்கவியலா இனிமையான சம்பவங்கள் ஆகியவற்றை அவ்வப்போது நம் மனத்திரையில் ஓடவிட்டுப் பார்ப்பது மனித மனங்களுக்கு ’இன்ஸ்டண்ட்’ மகிழ்ச்சியைத் தரக்கூடியது. அனைவர் வாழ்விலும் ஏதேனும் ஒன்றிரண்டு நல்ல சம்பவங்களேனும் நடந்திராமல் போயிராது. மனிதர்களாகிய நாம்தான் எப்போதும் நம் வாழ்வில் நிகழ்ந்த அவலங்களையும், துன்பங்களையும், மனத்தில் ஏற்பட்ட இரணங்களையுமே நினைத்து நினைத்து வருந்தி, நம்மைச் சுற்றி ஓர் சோக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி அதிலேயே காலம் கழிக்கின்றோம். பொதுவாக எதிர்மறையான எண்ணங்களுக்கு நற்சிந்தனைகளைவிட வலிமை அதிகம்தான்; மறுப்பதற்கில்லை. அதனால்தான் அவை நம் மனத்தை எளிதில் ஆக்கிரமித்து நம்மைச் செயலிழக்க வைக்கின்றன என்பது உளவியல் ரீதியான உண்மை. ஆயினும், அந்த வலிமை வாய்ந்த பகைவனை ’ நல்லதையே எண்ணுவோம்; நல்லதே நடக்கும்’ என்ற நற்சிந்தனையின் துணையோடு நாம் வீழ்த்தி வெற்றிகாணத்தான் வேண்டும்.

    நாம் உடலால் வளர்ந்து விட்டாலும் நம் மனம் என்றுமே ஓர் குழந்தைதான். எப்படி ஒரு குழந்தை சாக்லெட் தந்தால் சிரிக்கின்றது….ஊசி போட்டால் அழுகின்றதோ….அதுபோலவே நம் மனமும், அது மகிழும்படியான இனிய தகவல்களையும், நிகழ்வுகளையும் அதனிடம் பதிவுசெய்தால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றது. வருத்தம் தரத்தக்கத் துயர நிகழ்வுகளையும், நேர்ந்த அவமானங்களையும் பதிவு செய்யும்போது, ஒன்று கோபம் கொண்டு வெகுண்டெழுகின்றது; அதனால் பழிவாங்கும் உணர்ச்சி மேலிடுகின்றது….அல்லது தன் இயலாமையை நினைந்து வருந்தி அழுகின்றது. ஆகவே, நல்லவற்றையே நம் மனத்திற்குத் தீனியாகக் கொடுத்து அதனை எப்போதும் உற்சாகமாகவும், இன்பமாகவும் வைத்திருப்போம்.

    மன மகிழ்ச்சிக்கு வித்திடுவதில் நகைச்சுவை உணர்வுக்கு ஓர் முக்கியப் பங்குண்டு. நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்கள் எப்போதும் தம்மைச் சுற்றி மகிழ்ச்சி அலைகளைப் பரப்பிக் கொண்டே இருப்பர் எனலாம். அந்த நகைச்சுவை உணர்வு அவர்தம் முகத்தில் புன்னகையை நிரந்தரமாகக் குடியமர்த்தும். அதனால் கவலைகளும், மன அழுத்தமும் அங்கே தங்குவதே இல்லை. அவர்கள் தாமும் மகிழ்ந்து, தம்மைச் சுற்றி இருப்பவர்களையும் தம் நகைச்சுவை ததும்பும் பேச்சுக்களால் வசீகரித்து விடுவதால் அவர்கள் அருகில் இருப்பதே ஓர் மகிழ்ச்சியான அனுபவம்தான்.

    மன வலிமை, மன மகிழ்ச்சி என்று பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பதனால் அது கிடைத்துவிடுமா? சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுத முடியும். அதுபோல மனம் மகிழ்ச்சியோடிருக்க மிகவும் அடிப்படையானது நல்ல உடல்நலம். அதற்கு உடலை நன்றாய்ப் பேணுதல் மிக அவசியம்.

    ”உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

    திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
    உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.” என்கிறார் திருமூலர்.

    உடலை ஓம்பவேண்டியதன் அவசியத்தை அழகாயும், ஆழமாயும் விளக்குகின்றது இப்பாடல்.

    உடல் தெம்பாகவும், திடமாகவும் இருக்க நல்ல சத்துள்ள, சமச்சீரான உணவை (well-balanced diet) அதற்கு எப்போதும் அளிக்க வேண்டும். காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழு தானியங்கள் (whole grains), சிறு தானியங்கள் ( தினை, கம்பு, கேழ்வரகு முதலியன), பால், முட்டை, மீன் வகைகள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலிற்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதேசமயம் ’மீதூண் விரும்பேல்’ என்ற பொன்மொழியையும் நினைவில் கொண்டு பசியறிந்து, உண்ணும் அளவறிந்து உண்டால் நம் உடலில் நோய்கள் குடிபுகா. உடல் பிணியற்றிருந்தால் உள்ளமும் பிணியின்றி மகிழ்ந்திருக்கும்.

    இவ்வாறு அனுதினமும் அதிகாலையில் எழுந்து இயற்கையை இரசித்து, இனியவைகளையே நினைந்து, தன்னம்பிக்கையோடும், மகிழ்வோடும் நாளைத் தொடங்கினால் அங்கே மனச் சோர்வுக்கோ, சோம்பலுக்கோ இடமேது?

    இயற்கையிலேயே அதிகச் சக்தியுடனும், திறனுடனும் படைக்கப்பட்டுள்ள நம் மனத்தில் வேண்டாத எண்ணங்களாகிய குப்பைகளையும், கூளங்களையும் நிரப்பி அங்கே துர்நாற்றம் வீசச் செய்வதைத் தவிர்த்து இனிய நினைவுகள், நிகழ்வுகள், நம்மிடமுள்ள சாதகமான அம்சங்கள், திறமைகள், கிடைத்த அங்கீகாரங்கள், இனியும் தொடர்ந்து செய்ய வேண்டிய நற்பணிகள் ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்துச் செயலாற்றுவோம். மனதிலுறுதியும், வாக்கினில் இனிமையும், நல்ல எண்ணங்களும் கொண்டவர்களாய் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம். மனத்தின் அளப்பரிய ஆற்றலைப் பன்மடங்கு பெருக்குவோம். வாழ்வில் உயர்வோம்.

    Share
  • குட்டிச் சுட்டீஸ்

     

    -கவிநயா

     

    ஞாயிற்றுக் கிழமைகளில் சன் டி.வி.யில் வருகிற குட்டிப் பிள்ளைகள் நிகழ்ச்சி. அந்த நேரம் வீட்டில் இருந்தால், பார்ப்பதுண்டு. குட்டிப் பிள்ளைகள், அதுவும் மழலை மாறாமல் இருக்கையில் அவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டால், “குழலும் யாழும் இனிதென்று சொன்னவருக்கு அப்படிச் சொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ?” என்று கேட்கத் தோன்றுமல்லவா?

    நிகழ்ச்சி, ரசிக்கும்படியே இருந்தது, போன வாரம் பார்க்கும் வரையில்…

    போன வாரம் வந்த குழந்தைகளில் ஒரு குழந்தை… மிஞ்சி மிஞ்சிப் போனால் 4 வயது இருக்கும். அந்தக் குட்டிப் பிள்ளை சொல்கிறது, “அப்பா ‘சரக்கு’ குடிப்பார்”, என்று! அப்படி என்றால் என்னவென்று தெரியாமல்தான் சொல்கிறது… அது தெரிகிறது… இருந்தாலும், அப்படி ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்தால் அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது? வீட்டில் பெரியவர்கள் பேசுவதையும் செய்வதையும் கவனித்துத் தானே இந்தப் பிள்ளைகள் இவ்வளவும் கற்றுக் கொள்கிறார்கள்?

    கள்ளம் கபடம் இல்லாத உள்ளத்தைக் குழந்தை உள்ளம் என்று சொல்கிறோம், ஆனால் இப்போது அந்தக் குழந்தை உள்ளம் குழந்தைகளிடமே கூட இல்லாமல் விரைவில் காணாமல் போய் விடுகிற அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

    சரி, இது கூட அந்தக் குழந்தை தெரியாமல் ஏதோ சொல்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அடுத்து வந்ததுதான் எனக்கு கிட்டத்தட்ட மாரடைப்பையே கொடுத்து விட்டது!

    அதாவது, நிகழ்ச்சி முடியும் போது ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசுகள் கொடுப்பார்கள். இந்த முறை நிகழ்ச்சி முடியும் போது, “நிகழ்ச்சியை முடித்துக் கொள்வோமா?” என்று நிகழ்ச்சி நடத்துபவர் சொன்னதும், போன பத்தியில் சொன்ன அதே குழந்தை, “பரிசு எங்கே?” என்று கேட்டது.  அவரும் விளையாட்டாக, “இன்றைக்குப் பரிசெல்லாம் கிடையாது பாப்பா. எல்லோரும் அப்படியே அவங்கவங்க வீட்டுக்குப் போக வேண்டியதுதான்”, என்றார்.

    அதற்கு அந்தக் குழந்தை என்ன சொன்னது தெரியுமா?

    “பரிசு கொடுக்கலைன்னா தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்!”

    அட, உண்மையாகத்தான் சொல்கிறேன்! சத்தியமாக நான் கதை கட்டவில்லை! இந்த அளவிற்கெல்லாம் எனக்குக் கற்பனை வளமும் இல்லை!

    நிகழ்ச்சியாளரும் அசந்து போய் விட்டார் என்று நினைக்கிறேன். “பரிசு கொடுக்கலைன்னா என்ன செய்வே?” மறுபடியும் கேட்டார்.

    “தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்!”

    “அப்பவும் கொடுக்கலைன்னா என்ன பண்ணுவே?”

    “உங்களை மரத்துல தலை கீழா கட்டித் தொங்க விடச் சொல்லுவேன்”

    அவர் இன்னும் அசந்து விட்டார்.

    “நீ இப்படில்லாம் பேசினதாலயே உனக்குப் பரிசு கிடையாது”, என்று சொல்லி விட்டார்!

    அது வரையில் கொஞ்சம் பரவாயில்லை.

    பிறகு அந்தக் குழந்தை அவரை அருகில் வரச் சொல்லி, காதோடு, “ஏன் பரிசு தர மாட்டீங்க?” என்று கேட்டது.

    அவரும், “நீ அரிவாளைத் தூக்கச் சொல்வேன்னு சொன்னேல்ல? அதுக்குதான்”, என்றார்.

    “சரி நான் அப்படிச் சொல்ல மாட்டேன், பரிசு குடுங்க”, என்றது குழந்தை.

    பிறகுதான் அவர் பரிசு கொடுத்தார்.

    “உங்கள் குழந்தைகள் உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்”, என்ற எச்சரிக்கையோடு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

    நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் மனதில் ஏறிய சுமை என்னவோ இன்னும் அப்படியேதான் இருக்கிறது 🙁

     

    படத்துக்கு நன்றி: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=9095&id1=6 (படத்தில் இருப்பது வேறு நிகழ்ச்சி)

     

    Share
  • ” உங்களுக்கும் வியர்க்கிறதா “….

    தமிழ்த்தேனீ

     தொலைக்காட்சிப் நிகழ்ச்சியில் நடிக நடிகையர் நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!  தினசரி, வாராந்தரி, மாதாந்திரப் பத்திரிகைகளில் கிளு கிளு சமாச்சாரங்கள் படித்து மனதைக் கிளுகிளுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!

    ஆங்கிலப் படங்கள் பார்த்து அதில் வரும் கொச்சையான காட்சிகளை , ரசித்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே தகப்பன்மார்களே!  செல்போனில் நண்பர் அனுப்பிய கிளுகிளு தொடுப்பை சொடுக்கி நீலப்படம் பார்த்துக்கொண்டிருக்கும் தாய்மார்களே தகப்பன்மார்களே!

    நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை தோலுரிக்கிறோம் பேர்வழியே என்று கண்டதையெல்லாம் , காணாததையெல்லாம் கிசுகிசுக்களாகப் பரப்பி வரும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் இனிமை காணும் தாய்மார்களே, தகப்பன்மார்களே!    உங்களுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கைக் கடிதமாகவே இந்தக் கடிதத்தை வரைகிறேன்.

    உங்களுக்கு பருவ வயதை நெருங்கும் பிள்ளைகள், பெண்கள் இருக்கிறார்களா?  அவர்களை இன்னமும் குழந்தைகள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.? சற்றே விழிப்புணர்வு பெறுங்கள்!

    பல வருடங்களுக்கு முன் என் தாயார் கூறியது காதில் ஒலிக்கிறது.

    1. பெண்கள் முதல் படியில் கால் வைக்கும் போதே மிகுந்த கவனத்துடன் கவனத்துடன் வைக்க வேண்டும்.

           2. தவறான அணுகு முறையில் கால் வைத்து உருண்டு விட்டால் கடைசீப் படி வரை அவளால் எழவே முடியாது.

           3.  அதே போல் ஆணோ பெண்ணோ அடிப்படை தர்மத்தை மறந்து  வேறுபாதையில் சென்றால் பலன்கள் மிகவும் விபரீதமாக இருக்கும்

           4. எப்போதும் தன் நிலை தவறாமை இருபாலருக்கும் நன்மை செய்யும்

    மேற்கண்ட வாசகங்களை இப்போதும் கவனத்தில் வைத்திருக்கிறேன்.

     தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைக்காமையினால் நேர்மையாக இருப்பது பெரிதல்ல . தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தாலும் தவறு செய்யாதவரே நேர்மையாளர்கள், என்று கூறுவார் என் தாயார்.

     தீய வழக்கங்கள் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் நீரைப் போன்றது. ஆனால் நேர்மை என்னும் ஒழுக்கம் அதே நீர் பாதாளத்திலிருந்து மலை உச்சியை அடைவதைப் போன்றது. அதற்கு முயற்சி தேவை. கடினமான முயற்சியும் ஒரு விசையும் தேவை. அந்த விசைதான் ஒழுக்கம் , மனோதிடம், என்பார்கள்.”

     இப்போது நடைமுறையில் இருக்கும் காலம் சிறுவர்களுக்கும் ,சிறுமியர்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் மோசமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காத்திருக்கும் தாய்மார்களே, தகப்பன்மார்களே சற்றே நினைத்துப் பாருங்கள், எத்தனை மணித் துளிகள் உங்களால் உங்கள் பிள்ளைகளோடு செலவிட முடிகிறது? மிகக் குறைவான நேரமே செலவிடமுடிகிறது என்பதை மனதில் உணருங்கள்.

     அந்தக் குறைவான நேரத்தில் உங்கள் பிள்ளைகளின் எதிர்கால மேன்மைக்கு திட்டமிடுகிறீர்களா? உங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச உங்களால் முடிகிறதா? அல்லது நீங்கள் பேசுவதை உங்கள் பிள்ளைகள் காதில் வாங்குகின்றார்களா? அப்படியே காதில் வாங்கினாலும் கடைப் பிடிக்கிறார்களா? எப்படி அறிந்து கொள்வது இவற்றையெல்லாம் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இயலாது என்று ஒரு பதிலும் கேட்கிறது.

    நான் காலையில் எழுந்து சமைத்து பள்ளிக்குச் செல்ல பிள்ளைகளுக்கு எடுத்து வைத்து , கணவருக்கு வேண்டியவற்றை செய்து, அவர்களை அனுப்பிவிட்டு மீதமிருக்கும் கடமைகளை முடிக்கவே நேரம் போதவில்லையே என்று வருத்தப் படும் தாய்மார்களே , உங்கள் கஷ்டம் புரிகிறது.

    காலையில் இந்த வாகன நெரிசலில் அலுவலகத்துக்கு சென்று அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு களைத்துப் போய்த் திரும்புகிறோம் நாங்கள் என்று கூறும் உங்கள் குரலும் காதில் விழுகிறது தகப்பன்மார்களே , உங்கள் கஷ்டமும் புரிகிறது.  நாங்களும் உங்கள் வயதில் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தானே உங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கினோம்.  ஆனால் இவையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள் எப்போதும்.

     ஏனென்றால் முடிவில் உங்கள் பிள்ளை அல்லது பெண் எப்படி வளர்ந்திருக்கிறார்கள் என்னும் முடிவை ஆராயும்போது நல்லவிதமாக வளர்ந்திருந்தால் சரி, மாறாக தீய வழிகளில் கவனம் செலுத்தி வழிமாறியிருந்தால்? இந்த வாதங்கள் அனைத்துமே ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களாக மாறும் அல்லவா?

     யாரையும் பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை . உண்மையைச் சொல்கிறேன். உங்கள் பிள்ளைகளைக் கவனியுங்கள்.

     “பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா?

    பேணி வளர்க்க வேணும் தெரியுமா? “

     என்று ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

    எங்கள் வாலிப வயதில் இலைமறை காய்மறைவாக இருந்த அத்துணை விஷயங்களும் அம்பலத்துக்கு வந்துவிட்டது இப்போது. தொலைக்காட்சி, இணையம், செல்போன் .எல்லாவற்றிலுமே விரல் நுனியில் உலகம் என்று எல்லாவற்றையும் பார்க்கும் வசதிகள் பெருகிவிட்டன.

    அதனால் பயமாக இருக்கிறது. சரியான நேரத்தில் முறையாக வழிகாட்டி வளர்க்கப்படும் பிள்ளைகளே எதிர்காலத்தில் சரியான பாதையில் வளர்ந்து நல்லவிதமாக வாழ்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

     அலுவலகத்துக்கு போகும் மனைவியையோ, கணவரையோ, அல்லது பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளையோ வேவு பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி நினைத்தாலும் நம்மால் அது இயலாது ,ஆனால் கண் காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

     ஆதரவான, அனுசரணையான, அன்பான கவனிப்பினால் அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறேன். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு முறையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் பெரியவர்கள்.

     1. ஐந்து வயது வரை இளவரசனாக, அல்லது இளவரசியாக வளர்க்க வேண்டும்.

    2. ஐந்து வயதிலிருந்து 12 வயது வரை அடிமையாக வளர்க்க வேண்டும்

    3. 13 வயது முதல் 19 வயது வரை ராஜ குமாரனாக ,அல்லது ராஜ குமாரியாக வளர்க்க வேண்டும்.

    20 வயதிலிருந்து தோழனாக, தோழியாக பழகவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

     ஆனால் அப்போது குழந்தைகள் குழந்தைகளாகவே இருந்தார்கள். இப்போது ஐந்து வயதுக் குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற நம்மால் முடியவில்லை. ஆமாம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி, பொது அறிவு வளர்ச்சி போன்றவை முற்காலத்தைவிட அதிகரித்திருக்கிறது. இளம் வயதிலேயே அதிகம் யோசிக்கிறார்கள்.

     அதிகம் தெரிந்து கொள்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களுக்கு இணையாக தெரிந்துகொண்டால்தான் அவர்களைக் கையாள முடியும்.  ஆகவே பழைய காலம் போல் வளர்க்க முடியாது என்னும் நடைமுறை தெரிகிறது இருந்தாலும் இன்னமும் அதிக கவனம் எடுத்துக்கொன்டு அவர்களின் கவனம் வேண்டாத தீய வழக்கங்களை நாடாத அளவுக்கு , அவர்களுக்கு புரியவைத்து, அவர்களுடன் கலந்து பேசி , அவர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.

     இணையத்தில் மேய அவர்களை அனுமதிக்காமல் இருந்தாலோ, செல்போன் போன்ற நவீன கருவிகளை உபயோகிக்க அனுமதி அளிக்காமல் இருந்தாலோ, திரைப்படங்கள் போன்றவற்றை பார்க்க அனுமதிக்காமல் இருந்தாலோ தவிர்த்துவிடலாம் என்னும் குறுகிய மனோபாவத்தை விட்டுவிட்டு.

     எல்லாவற்றுக்கும் அவர்களை அனுமதித்து, அப்படி அனுமதிக்கும்போதே அவற்றிலுள்ள தீயவைகளைச் சுட்டிக் காட்டி அவற்றினால் வரும் கெடுதல்களை எடுத்துச் சொல்லி அவர்களை அதிலிருந்து விலக்கி, இணையம் போன்ற நவீன விஞ்ஞான முன்னேற்றத்தினால் எப்படி நற்பலன்களைப் பெறலாம் என்று அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்களை முன்னேற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம் நாம்.

     பொதுவாக சைக்கிளை குழந்தை ஓட்டினால் உடனே தாய் ஜாக்கிறதை இங்கேயே ஓட்டு ப்ரதான சாலைக்கு செல்லாதே என்று எச்சரிக்கிறாள், இதற்கு காரணம் குழந்தையின் மேலுள்ள அக்கறை ஒருபுறமென்றாலும் அந்தத் தாய்க்கு இருக்கும் பயம் மற்றொரு காரணம்.

    நம் பயத்தையெல்லாம் அந்தப் பிஞ்சு மனதில் ஏற்றக்கூடாது, அப்படி ப்ரதான சாலையில் சைக்கிள் ஓட்டாவிட்டால் அந்தக் குழந்தைக்கு எப்படி சாலை விதிகள், சாலையில் வண்டியோட்டும் முறை, நெளிவு சுளிவுகள் மனதில் பாடமாகும். ஆகவே அனுமதியுங்கள், ஆனால் பாதுகாப்பான முறையை கற்றுக் கொடுங்கள், அதுதான் வாழ்க்கையில் அவர்களை முன்னேற்றும் கருவி.

     இந்த உலகத்தில் இத்தனை தீமைகள் நிறைந்த உலகத்தில்தானே நம் பிள்ளைகள் வாழவேண்டும்? அப்படியானால் இந்த உலகத்தில் வாழ முறையான ,சரியான வழியை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்நாம். இந்தக் கட்டுரை எழுதக் காரணமாயிருந்த ஒரு நிகழ்வை பகிர்ந்துகொள்கிறேன்.

     ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றேன், வாயிலில் இருந்து குரல் கொடுத்தேன் எதிர் விளைவு இல்லை ,ஆகவே எப்போது வழக்கமாக செல்லும் நண்பர் வீடுதானே என்று உள்ளே நுழைந்தேன். எதிரே கணிணியில் அந்த நண்பரின் பிள்ளை பள்ளியில் படிக்கும் பிள்ளை தன்னை மறந்து எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.

     அடுத்தவர் கணிணியை எட்டிப் பார்க்கும் வழக்கமில்லாத நான் என் கண்ணைத் திருப்பும் ஒரு வினாடிக்குமுன் என் கண்ணில் பட்ட காட்சி என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. ஆம் அது ஒரு நீலப்படம். நான் வந்தது கூடத் தெரியாமல் அந்தப் பிள்ளை அதிலே மூழ்கியிருக்கிறான். சத்தம் போடாமல் வெளியே வந்தேன்.

     வியர்த்துக் கொட்டியது எனக்கு. எனக்கு ஏன் வியர்க்கிறது என்று எண்ணிப் பார்த்தேன், நம் நாட்டின் ,நம் பாரம்பரியத்தின் நம் வம்சாவழியின் வருங்காலத் தூண்கள் இந்தப் பிள்ளைகள் , அவர்களின் வாழ்க்கை சிதறிவிடுமோ என்கிற பயம் எனக்கு வந்ததால் எனக்கு வியர்த்தது.

    உங்களுக்கும் வியர்க்கிறதா?

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Contact No : 9840884088    Email : rkc1947@gmail.com  ,  http://thamizththenee.blogspot.com

    Share
  • தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 29

    இன்னம்பூரான்

    இந்தத் தொடரை விட்ட குறை எட்டு மாதங்களுக்கு முன், ஒரு வாசகரின் பதிலுக்குக் காத்திருந்ததால். ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருப்பதில்லையே! தற்காலத்திய ஆடிட்டர் ஜெனெரல் திரு. விநோத் ராய் அவர்கள் மே மாதம் வேலையிலிருந்து ஓய்வு பெறுவார். புதிய ஆடிட்டர் ஜெனெரல் நியமனம், பிரதமர் கையில். இது தான் முப்பது-நாற்பது வருடங்களாக நடந்து வருகிறது. தணிக்கைத் துறையிலிருந்து தலைமையை தேர்வு செய்வதில்லை. எல்லாம் ஐ.ஏ.எஸ். தலைகள். திரு. விநோத் ராயும் அங்கிருந்து வந்தவர் தான். ஆனால் பாருங்கள். தணிக்கைத்துறை, தன்னுடைய சீரிய மரபுகள், உகந்த நடைமுறைகள், வைக்கோல் போரில் ஒளித்து வைத்த ஊசியை தேடிப் பிடித்து விடும் திறன், விருப்பு/வெறுப்புக்கு அப்பாற்பட்ட தன்மை, அச்சம் தவிர்த்த மனப்பான்மை ஆகியவை மூலம் அவரைப் போன்ற, காலம் சென்ற திரு. சி.ஜி.சோமையா அவர்களைப் போன்ற உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தன்வசம் இழுத்துக்கொண்டது. தற்காலம் ஊடகமெங்கும், உலகளாவிய வகையில் இந்திய தணிக்கைத் துறையின் சாதனைகள் புகழப்படுகின்றன. ஐ.நா. அமைப்புகள் எல்லாவற்றிலும், இத்துறையினர் பேரும், புகழுமாக, பணி செய்கிறார்கள். மத்திய அரசின் அசரீரி வாக்கு ஆகிய அமைச்சரொருவர், ‘ஒருவர் தலைமை’ வேண்டாம். ஒரு ஆடிட் குழு அமைக்கலாமே என்று பட்டம் விட்டுப் பார்த்தார். துரிதமாக, அதை வாபஸ் பெற்றார். மற்றொரு அழகிய பெருமாள் அமைச்சர், ‘அதிகாரிகள் என்ன? நானே ஆடிட்டுக்கு அஞ்சுகிறேன்!’ என்று பூச்சாண்டி காண்பித்து விட்டு, எள்ளல் செய்கிறார்.

    எதற்கும், இங்கு நினைவூட்ட வேண்டியது,  மே 30, 1949 அன்று, அரசியல் சாஸனம் வகுக்கும் அவையில் டாக்டர் அம்பேத்கார் அவர்கள், ‘…இந்திய அரசியல் சாசனத்தின் முதல் முக்கிய பதவியாக ஆடிட்டர் ஜெனெரல் பதவியைக் கருதுகிறேன்…நீதிபதிகளின் ஸ்தானத்தை விட இது மேலும் பொறுப்பு மிகுந்த பதவி.. நீதித்துறையை விட இதை முக்கியமாகக் கருதுகிறேன்..‘என்றார், என்பதே. பல சான்றோர்கள் அதை வழி மொழிந்தார்கள். தணிக்கை மட்டுமல்ல; அரசின் வரவு/செலவு விஷயங்களை, ஆதியோடந்தமாக அலச வேண்டியதால், Comptroller and Auditor General என்ற நாமகரணம் தேவை என்றார், திரு.டி.டி.கிருஷ்ணமாச்சாரி. அதையெல்லாம் முற்றும் புறக்கணித்து விட்டார்கள். அரசு-தணிக்கை மோதலை கண்டு மனம் வருந்தி, ஓய்வு பெற்ற சில தணிக்கை அதிகாரிகள் ஜனாதிபதியிடம், ஒரு மேன்மை குழு மூலம்தான் அடுத்தத் தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்கள். அதில் என்னுடைய கருத்து, அமெரிக்கா/இங்கிலாந்து போல, ஓய்வு பெறும் ஆடிட்டர் ஜெனரலும் அந்தக் குழுவில் இருக்க வேண்டும் என்பதே. என்ன செய்யப்போகிறார்களோ! தெரியவில்லை, பாரதமாதாவே! நல்லதே நடக்கட்டும்.

    அடுத்த செய்தி விசித்திரமானது. சில அரசுத் துறைகள், ‘நாங்கள் செய்யும் வேலைகளை முன்னாலேயே பரிசீலித்து, தணிக்கைத்துறை நற்சான்று கொடுக்கட்டும்.’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரோடு போடப்போறோம். ஒப்பந்தம் வரையுமுன், எங்கள் திட்டவட்டத்தைப் பாருங்கள் என்கிறார்கள், ஒரு துறையினர். நாங்கள் டெண்டர் திறகும்போது, வந்து சாட்சி இருங்கள் என்கிறது, மற்றொரு துறை. திரு.கேம்கா என்ற யோக்கியமான ஐ,ஏ.எஸ். அதிகாரியை வறுத்தெடுக்கும் ஹரியானா அரசு, நிலபுலன்கள் மதிப்பை தணிக்கைத்துறையே போடட்டும் என்று சொல்கிறது.  இது ஒரு பகடியாகத்தான் தோன்றுகிறது. என்னுடைய அனுபவத்தில் தணிக்கைத்துறை முன்கூட்டியே அரிதான சில சமயங்களில் அரசை அன்புக் கட்டளையாக எச்சரித்தது உண்டு. ஆனால், ‘நாங்கள் செய்யும் வேலைகளை முன்னாலேயே பரிசீலித்து, தணிக்கைத்துறை நற்சான்று கொடுக்கட்டும்.’ என்று கோஷமிடுவது ஒரு தகிடுதத்தமே அல்லது பகடியே. வாசகர்களின் விருப்பத்தைப் பொறுத்து, அது பற்றி, விவரமாக அலசி, அடுத்த கட்டுரை அமையலாம். சமைக்கும் முன் ருசி பார்ப்பது எப்படி?

    சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/-QuT8xa5bgrc/UNGPnQOl_xI/AAAAAAAAFCY/_0hUWBnS_DY/s400/auditor.jpg

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 67

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    “மயங்கு திணைநிலை வரி அலர் அறிவுறுத்தி வரைவு கடாதல்”
    (37)

     

    நல்ல முத்துகளால் செய்த அணிகளை அணிந்த
    நன்மை பொருந்திய பவளத்தால் ஆன மேகலை அணிந்த
    செந்நெல் பயிரையுடைய மருத நிலம் தோறும்
    அலைகள் உலாவிடும் கடலின் கரைகளையுடைய
    நெய்தல் நிலத் தலைவனே!

    புன்னை மரங்களடர்ந்த சோலையதனில்
    வலிய மீன்கொடி உடைய மன்மதன் ஏவிய அம்புகளால்
    என் மேனியில் மேவிய புதிய புண்கள்
    என்னை அடையாளமே கண்டுகொள்ள முடியாவண்ணம்
    என் அழகதனை மறைத்துதான் விளங்குகின்றன.
    இதை என் அன்னையவள் அறிந்தால்
    என்னதான் நான் செய்வேன்?!

    (38)

    அழகிய பவளவாய் திறந்து
    கடல் முத்து நிகர்த்த புன்னகை புரியும்
    பரதவர் சேரியில் வலைகள் உலரும்
    அலைகள் உலாவிடும் கடலின் கரைகளையுடைய
    நெய்தல் நிலத் தலைவனே!

    மழைக்காலத்து மலரும் பீர்க்கம்பூக்களின்
    நிறமொத்த மேனியளாய்ப்
    பசலை படர்ந்த என் மேனி
    பொன்னிறத்தில் பொலிகின்றது.
    வெறியாட்டு நிகழ்த்தி தெய்வமது வழிபட்டு
    இக்கொடுமை செய்தவர் யார் என
    என் அன்னையவள் ஆராய்ந்து அறிந்தால்
    என்னதான் நான் செய்வேன்?!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/diploma/a031/a0312/html/a0312103.htm

    Share
  • “நாகரீக பெப்பே”…….

    தமிழ்த்தேனீ

     உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே  என்று முன் காலத்தில் ஏமாற்றுபவர்கள் கொக்கரிப்பது வழக்கம் .ஆனால் அந்தக் காலத்தில் வெறும் கோமணம் அல்லது,லங்கோட்டா என்று சொல்லுவார்கள் அதை உடுத்துக் கொண்டு, பாதுகாப்பாக வாழ்ந்தவர்கள்தான் அதிகம் பேர், அதற்குப் பிறகு அரை நிஜார், அரை நிக்கர் என்று சொல்லக் கூடிய பாதி கால்சட்டை வழக்கத்துக்கு வந்தது .

    பிறகு அயல் நாட்டாரைப் பார்த்து நாமும் முழுக் கால் சட்டையை

    அணிய ஆரம்பித்தோம் .ஆனால் நம்முடைய அரைக்கால் சட்டையிலிருந்து தோன்றியதுதான் அயல்நாட்டவரின் முழுக்கால் சட்டை.

    இப்போதெல்லாம் நாம் அனேகமாக அயல் நாட்டு நாகரீகத்துக்கு

    முழுமையாக ஆட்பட்டுவிட்டோம்.

    அதன் படி வீட்டிலே வேட்டி கட்டிக் கொண்டிருந்த ஆண்களும்

    வசதி காரணமாக  நம்முடைய பழைய அரைக்கால் சட்டையின் புதுப்பிக்கப் பட்ட வடிவமான தொளதொளவென்றிருக்கும் ஷார்ட்ஸ் என்று சொல்லக்கூடிய

    உடையை அணியத் தொடங்கி விட்டோம்

    தினமலரில் மேற் கண்ட செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.  இந்த பெப்பே என்கிற நிறுவனம் அரைக்கால் சட்டையைத் தயாரிக்க  இந்தியாவில் 150 கோடி ரூபாய்களை முதலீடு செய்யப் போகிறதாம்….ஜாக்கிரதை  .நம்முடைய வருமானத்தில் இன்னும் அதிகமாக  நம்மிடமிருந்து அரைக்கால் சட்டைக்காக அளிக்கப் போகிறோம்.  நம்முடைய பழைய கலாச்சாரங்கள் எப்படி உருமாறி நம்மிடமே  திரும்பி வந்து நமக்கே செலவு வைக்கிறது .

    சமீப காலங்களில்  கணிணித் துறையின் அமோக வளர்ச்சியால் பல இந்திய நடுத்தரக் குடும்பங்களில் இருந்து பல இளைஞர்கள்  அமெரிக்கா போன்ற அயல் நாடுகளுக்கு  கணிணித் துறை வல்லுனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆங்கே சென்று  வாழ்க்கையைத் தொடங்கி  நம் நாட்டுக் கலாச்சரத்திலும்  அன்னிய நாட்டுக் கலாசாரத்திலும் இங்கொரு கால்  அங்கொரு கால் என்று  வைத்துக் கொண்டு நிலைதடுமாறி விட்டு கடைசியில்  இயலாமையினால்  அன்னிய நாட்டுக் கலாசாரத்தையே  முழுமையாக கடைப்பிடிப்பது  என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள்,

    அப்படி அவர்கள் கலாச்சார மாறுதல்களுக்கு உட்பட்டு , ஜீன்ஸ், ஷார்ட்ஸ் என்று ஏகத்துக்கும் மாறிவிட்டதால்  பெற்றோரை அங்கே அழைத்துச் சென்று அவர்களுக்கும் அன்னிய நாட்டுக் கலாசாரத்தை கற்றுக் கொடுத்து  வாழப் பழக்கி விடுகிறார்கள்.  அப்படிப் பட்ட பெற்றோர் மறுபடியும்  இந்தியாவுக்கு திரும்பும்போது ஜீன்ஸ் , ஷார்ட்ஸ் என்று  அணிந்து கொண்டு  உலா வருகிறார்கள்.

    வேட்டி, சொக்காய் என்பதெல்லாம் மலையேறி வெகு காலம் ஆகிவிட்டது

    ஆகவே இந்தியாவிலும்  இந்த   பெப்பே நிறுவனம் தயாரிக்கும்    ஜீன்ஸ், ஷார்ட்ஸ் போன்றவை அதிக அளவிலே விற்கிறது.    ஒரு அரை நிஜார் தைக்க அந்தக் காலத்திலே   அரையணா  ஆகுமென்று வைத்துக் கொள்வோம்.   இப்போது அதே அரை  நிஜார் ,அதாவது அரைக்கால் சட்டை   உருமாறி ஷாட்ஸ் என்று ஒப்பனை செய்து  கொண்டு  இருப்பதால்

    ஒரு ஷார்ட்ஸ்  450 ரூபாய் ஆகிறது.

     அனேக வயதானவர்களும்  ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு    கையில் உயர்தர செல்போனையும் (பிள்ளைகள் வாங்கிக் கொடுத்தது)  பிடித்துக் கொண்டு  உலா வருகிறார்கள்.    இங்கே  அயல் நாடுகளுக்கு செல்ல இயலாமல்  இருக்கும் இளசுகள்,      அடேயப்பா  இந்தப் பெரிசுகள்  அலட்டும் அலட்டல் இருக்கிறதே   தாங்க முடியலைப்பா   என்று முணுமுணுப்பது  காதில் விழுகிறதா.அடிப்படைக் கலாச்சாரம்  மாறாமல்  பெரியவர்களும்  நடந்துகொண்டு பிள்ளைகளுக்கும் நம் கலாச்சாரத்தின் மேன்மையை உணர்த்த வேண்டிய தருணம் இது.   நாம் ஷார்ட்ஸில் மட்டும் மாறவில்லை,  மொத்த நாகரீகத்தின் ஆணி வேரையே   மாற்றிவிட்டோமோ  என்று தோன்றுகிறது

    ஷார்ட்ஸ் அணிய வேண்டாம் என்று சொல்லவில்லை  நம்  நாகரீகத்தையும் , நம் கலாச்சாரத்தையும்   முறையாகப் புரிந்து கொள்ளாமல்,  வேட்டி , அரை நிஜார்  ஆக மாறி , அரை  நிஜார்  ஷார்ட்ஸ்  ஆக மாறியதைப் போல

    நம் நாகரீகத்தின் பல மேன்மைகளைக் கைவிட்டு , நம் வசதிக்காக  நம் கலாச்சாரத்தை   சுருக்கி  மாற்றிவிட்டோம்.

    அதனால்தான்  இப்போது முறையற்ற திருமணங்கள், திருமணமாகி குறுகிய காலத்துக்குள்ளே  விவாகரத்துகள்,  சிறு வயதிலேயே  முறையற்ற கர்ப்பம்தரித்தல், குழந்தையைப் பெற்று குப்பைத் தொட்டியில் வீசுதல்,

    திருமணமான பிறகும்  ஆணுக்கு அன்னிய பெண்ணின் மேல் காதலும் , பெண்ணுக்கு அன்னிய ஆடவரின் மேல காதலும்  ஏற்படும் நிலை.

    தகாத காதல்களுக்காக   கொலைகள்,   என்றெல்லாம் நம் கலாச்சாரம் சீரழிக்கப்பட்டு விட்டதே.

    நாமாக  தவறான பாதையில் சென்றாலும் தடுக்கி விழுந்துஇ  அந்தப் பாதையில் பயணித்தாலும்  விபரீத விளைவுகளே   ஏற்படும்  என்பதற்கு இந்த   ஷார்ட்ஸ் என்னும் பெப்பே   ஒரு சிறிய உதாரணம்தான்  ஆனால் தற்போதைய   நாகரீகக் கலாச்சாரம்  உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே  என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறது

     திசை தெரியாமல் குழம்பி  திரு திருவென்று விழித்துக் கொண்டிருப்போரை  ஏன் இப்படி   பேபே   என்று விழிக்கிறாய் என்பார்கள் .இப்படித்தான் நாமும் விழித்துக் கொண்டிருக்கிறோம்  ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாய்

    இப்படியே நாம் விழித்துக் கொண்டிருந்தால் மொத்தக்  கலாச்சாரமும்  அழிந்து போகும் என்பதில் சந்தேகமில்லைஆமாம்  இந்தியர்கள்  என்னதான் செய்து கொண்டிருக்கிறோம்.

    விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது !

     

     

     

     

    Share
  • ஶ்ரீவைகுண்டம் கோதண்ட ராமன்

     

    சு. ரவி

    சித்திரை, நவமி, புனர்வஸு நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் ஶ்ரீ ராம அவதாரம் நிகழ்ந்தது.

     

    “நீதிதன்னைநிலைநாட்ட-

    நைந்தவர்க்கு வழிகாட்ட

    வேதமந்த்ர சுகமார்க்கம்-மண்ணில்

    வாழ்ந்துகாட்ட வந்த மேகம்”

    என்றும்,

    “விழிகளரவிந்தம்-அதில்

    கருணை மகரந்தம்

    விதி கதி கலங்கவரும் கோதண்டம்”

    என்றும்,

    நணபன், கவிஞன் க.ரவியின் சொல்வண்ணத்திலே தீட்டப்பெற்ற

    கோதண்ட ராமனின் நெடிதுயர்ந்த திருக்க்கோலத்தை, ஶ்ரீவைகுண்டம் கோயிலில் உள்ளபடி

    அனுமன் மற்றும், சீதை சமேதனாகக் கோட்டோவியத்தில்

    முயற்சித்துள்ளேன் (இணைப்பு காண்க).

    பார்க்க, படிக்க, ரசிக்க…..

    தனுவினை இடக்கரத்தில்

    தாங்கிடும் தடந்தோள் வீரா

    இனகுலம் விளங்க வந்த

    இணையிலாக் கருணை ஊற்றே!

    அனுமனை வலக்கரத்தால்

    அணைந்து நீ நிற்கும் கோலம்

    மனமெலாம் நிறைத்ததையா!

    மலரடி சரணம் ராமா!

    வில்லிலே வீரம் வைத்தாய்

    விழியிலே ஈரம் வைத்தாய்

    சொல்லிலே வாய்மை வைத்தாய்

    செயலிலே நேர்மை வைத்தாய்

    இல்லிலெம்    ஜானகித்தாய்

    ஒருத்தியை இருத்திவைத்தாய்

    கல்லிலும் உயிர்கொடுத்தாய்

    கழலிணை சரணம் ராமா!

    விண்திரள் கார்மேகம் போல்

    விளங்கிடும் கரியமேனி

    கண்களோ பொய்கை பூத்த

    கமலமாய் விரிந்திருக்கும்

    திண்திறல் புஜங்கள் எங்கள்

    துயரெலாம் தாங்கிக் கொள்ளும்

    மண்ணிலே நடந்து சென்ற

    மலரடி சரணம் ராமா!

    கங்கையின் ஓடக்காரன்,

    குகனொரு தம்பி என்றாய்

    அங்கொரு வானரர் கோன்

    அவனையும் தம்பிஎன்றாய்

    வெங்களம் சரண்புகுந்த

    வீடணன் தம்பியானான்

    இங்கெனை ஏற்றுக் கொள்ள

    இன்னுமேன் தயக்கம் ராமா!

    வயோதிகம் நெருங்கும் போது

    வார்த்தையும் வருவதில்லை!

    வியாகுலம் சூழ்ந்த நெஞ்சில்

    விளைவகள் விளங்கவில்லை

    அயோத்தியின் அரசே, நானுன்

    அடைக்கலம், ஏற்றுக்கொள்வாய்!

    தயாபரா!   தாமதம் ஏன்?

    தளிர்ப்பதம் சரணம் ராமா!

    சு.ரவி
    Vice President – IT
    Alicon Castalloy Limited
    Gat No: 1426, Village Shikrapur, Tal. Shirur,
    Dist. Pune 412 208  Maharashtra, India

    Share
  • நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – 30 (கடைசிப் பகுதி )

    பெருவை பார்த்தசாரதி

    நமக்கு நேரம் கிடைக்கும் போது, அதை நல்வழியில் செலவழிக்க விரும்புவதையே அனைவரும் விரும்புவோம் அல்லவா!….  கேளிக்கை என்று வரும்போது சினிமா, நாடகம், கடற்கரை மணலில் காற்று வாங்குதல், அலைபேசியில் அரட்டை அடித்தல், டிவி நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தல், அனேகமாக இதுபோன்ற ஏதாவொதொன்றில் நேரம் கழிந்துவிடுவது சகஜம்.

    அனேகமாக எல்லா நாட்களும் இது போன்று கழிந்து விடுகின்ற நிலையில், ஒரு மாதத்தில், ஒரு நாளில், ஒரு 2 மணி நேரத்தை நல்ல விஷயங்களைக் கேட்க சத்சங்களுக்குச் சென்று வந்தால் என்ன என்று தோன்றும். அச்சமயத்தில், மற்றவர் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவதே, இந்த சத்சங்கத்தின் நோக்கம். ‘கற்றலில் கேட்டலே நன்று’ என்பது போல. கண்ணால் பார்த்து களிப்படைவதும், வாயால் உண்டு மகிழ்வதும், மூக்கால் வாசனை முகர்ந்து மலர்வதும், மெய்யால் உற்றறிதலும், காதால் நன்னெறிகளைக் கேட்டலும் சரிவர நடைபெற்றால்தான் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஊக்கம் அளித்து உடலைச் சரிவர இயக்க முடியும்.

    ஏனைய மற்ற உடல் உறுப்புகளில் கண்ணுக்கும், காதுக்கும் தனிப்பட்ட சிறப்பு உண்டு. நாம் காணுகின்ற ஒரு பொருளின் ‘தோற்றம்’,  செவியின் மூலமாக வரும் ‘ஒலி’  இவையிரண்டும் மூளையில் பதிவு செய்யப்படுகிறது. செவிப்புலனுக்கு கண்புலனை விட சற்று மதிப்பு அதிகம். மனிதன் பெற்ற செல்வத்துள் செவிச்செல்வம் ஒப்பற்றது. அதனால்தான் “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்” என்ற சிறப்பை செவிப்புலன் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வாயால் கற்பித்தல் என்று வரும்போது காதால் கேட்டல் என்பதும் கூட வருகிறதல்லவா!….

    கற்பிப்பவரின் அறநெறிகள், அறிவுரைகள், போதனைகள், கேட்பவரின் செவி வழியே சென்று அறிவைப் புகட்டுகிறது. சிந்தனையைத் தூண்டுகிறது. மனதில் தோன்றும் எண்ணங்களை வடிகட்டி, தீயவைகளைக் களைந்து, நல்ல எண்ணங்களுக்கு வழி வகுப்பது சிந்தனை ஒன்றுதான். கேட்டலும், சிந்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. கேட்கும் திறன் குறைவாக இருந்தால் சிந்தனையும் குறைவாகத்தான் இருக்கும். நாம் எப்போதுமே பேசிக்கொண்டிருக்கிறோம், என்றைக்காவது யாராவது சொல்வதை நின்று நிதானித்துக் கேட்டதை காதில் வாங்கிக்கொண்டு சிந்தித்திருக்கிறோமா?.. முயற்சி செய்து பார்த்தால் கேட்டலின் திறம் சிந்தைனை மூலம் புலப்படும்.

    இந்தக் தொடரின் கடைசி பகுதியின் மூலம், எனக்குத் தோன்றிய ஒரு சிறிய கருத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிலசமயங்களில் நாம் பேசுவதை சற்று நிறுத்திவிட்டு, அறிவார்ந்த அறிஞர் பெருமக்கள் பலர் சொல்வதைக் காது கொடுத்து பொறுமையாகக் கேட்டாலே வாழ்க்கை முறைக்குப் பயனுள்ள தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் மிக எளிதாகப் பெற்றுவிட முடியும். நேரம் கிடைக்கும் போது, குடியிருப்புக்கு அருகில் நடந்து கொண்டிருக்கும் ஏதாவதொரு சத்சங்கத்திற்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதனால் ஏற்படும் எண்ணற்ற பலன்களையும், அனுபவங்களையும் எளிதாக உணர்ந்து கொள்ளமுடியும்.

    அனுதினமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நமக்கு, சற்று நேரம் மன நிம்மதிக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் சத்சங்கங்கள் துணைபுரிகின்றன. நமது வாழ்க்கையில் இடம்பெரும் அத்தியாவசிய அங்கங்களில் சத்சங்கங்களும் விலக்க முடியாத ஒன்றாகி விட்டது என்பதே உண்மை.

    நன்னெறிகளைக் கேட்பதின் மூலம் சில சங்கடங்கள் கூடத் தீரும் என்பதற்கு பாகவதம் ஒரு சிறந்த உதாரணம். “இன்னும் ஏழு நாட்களே உயிரோடிருப்பேன், அதற்குள் ஞானம் பெறுவது எப்போது” என்று கேட்ட பரீட்சித்து மகராஜாவிற்கு, சுக முனிவரின் உபதேசம் சாந்தி அளித்து, முக்திக்கும், ஞானத்திற்கும் வழிகாட்டும் கருவியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு சுகர் சொல்வதை பரீட்சித்து பொருமையாக கவனித்து காதில் வாங்கிக்கொள்வதை கவனத்தில் கொள்ளவேண்டும். பரீட்சித்து மகராஜாவின் தொடர்ந்து வரும் கேள்விக்கெல்லாம், பதிலாக வருகின்ற சுகரின் பகவத் தத்துவத்தை விளக்குகின்ற முறையில் சொல்லும் விதமாகவும் கேட்கும் விதமாகவும், அமைந்த “ஸ்ரீமத் பாகவதம்” 18000 சுலோகங்கள் கொண்டது. வியாச பகவான் இயற்றிய இந்த உபதேசம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற அரிய பொக்கிஷங்கள் அடங்கிய 18 புராணங்களில் சிறந்த ஒன்று. பாரதத்தை ஒரே தேசமாக அடையாளம் காட்டிய பெருமை மகாபாரதத்துக்கும், இராமாயணத்துக்கும், 18 புராணங்களுக்கும் உண்டு.

    ‘சத்’ என்றால் உண்மை,    ‘சங்கம்’ என்றால் ‘சங்கமித்தல்’ அல்லது ஒன்றாகச் சந்திப்பது என்பது பொருள். பலர் ஒன்றாக, ஒரு இடத்தில் குழுமியிருந்து, செவிக்கு இனிமையான, இசையோடு கூடிய  சொற்பொழிவாற்றலை கேட்பது அல்லது கேள்வி, பதில் போன்றவற்றால் உரையாடுவது என்பதே “சத்சங்கம்” என்றழைக்கப்படுகிறது. இப்போதெல்லாம், அலுவலகத்தில் அல்லது வீட்டிலிருந்தபடியே, சத்சங்களில் நடப்பதை செலவில்லாமல் தொலைக்காட்சி மூலமாகவும் பார்க்க முடிகிறது. அதிகாலை ஒவ்வொரு தொலைக்காட்சியிலும், யாராவது ஒரு மஹான் அல்லது குருஜி, மக்கள் மத்தியிலே சத்சங்கம் நிகழ்த்திக் கொண்டிருப்பதைக் காணலாம்.

    இன்றைய காலகட்டத்தில் நடத்தப்படும் சத்சங்கங்களுக்கும், பண்டைய காலத்தில் நடத்தப்பட்டவைக்கும் இருந்த வேறுபாடு என்னவென்றால், பழங்காலத்தில் எவ்வித பலனும் இன்றி நேர்மையோடும், நாணயத்தோடும் சத்சங்கம் நடத்தினார்கள், ஆனால் இன்று அப்படி இல்லை, நம் கையில் கொஞ்சம் நாணயம்(பைசா)  இருந்தால்தான் இது போன்ற மஹாசத்சங்களில் பங்கேற்க முடியும் என்பதற்கு, தலா 200 ரூபாய் கொடுத்து வாங்குகின்ற நுழைவுச் சீட்டே ஆதாரம். கலந்து கொண்ட பிறகு பணவிஷயம் மேலும் தொடரலாம் என்பது நுழைவுச் சீட்டின் பின்புறம் மிகச்சிறிய எழுத்தில் படிக்கமுடியாதபடி அச்சடிக்கப்பட்டிருக்கும்.

    கோடானு கோடி மக்களுக்கு மானசீக குருவாகத் திகழ்ந்த ஸ்ரீஆதிசங்கரர், தனது வாழ்நாள் முழுவதும் உஞ்சவிருத்தி செய்த படியே சத்சங்கம் நிகழ்த்தியதாகவும், சத்சங்கத்தின் அருமை, பெருமைகளை தனது பஜகோவிந்தத்தில் நிறைய இடத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் ஒரு நூலில் படித்திருக்கிறேன். இன்று பொருளாதார வசதியில்லாதவர்களுக்கென்றே, நகரத்தில் சில இடங்களில் நித்திய சத்சங்கள் நடத்தப்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. போதிய இடவசதி இல்லையென்றாலும், சாலையோரத்தில் ஓரமாக நின்று கொண்டு, நல்வாழ்க்கைக்கு வேண்டிய அறநெறிகளையும், தத்துவங்கள், போதனைகள் போன்றவற்றைப் பெற்றுவிடமுடியும்.

    சத்சங்களில் கலந்து கொள்வதால் என்ன பலன்?…என்று கேட்கிறவர்களுக்கு!….இறுகிய மனது இளகி, இயல்பான நிலைக்குத் திரும்ப வழி செய்கிறது என்பது மஹான்களின் ஆலோசனை.  அங்கிருக்கும் நிசப்தமான சூழ்நிலை, மெல்லிய இசை, உரை நிகழ்த்துபவரின் கூச்சல் இல்லாத பேச்சு இவையெல்லாம் எந்திரத் தன்மை பெற்ற நம் மனதை சிந்திக்க வைத்து, மனதுக்கு இதமளிக்கிறது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. இதுபோன்ற பல காரணங்களால், மனம் அமைதி பெற்று, மறுபடி செல்லவேண்டும் என்ற ஒரு வித ஈர்ப்பு சக்தியை நம்மிடம் பரவச் செய்யும்.

    ஒரு புத்திசாலிக்குக் கூட சில சமயம் முடிவு எடுக்க முடியாமல் தத்தளிக்கும் நேரம் வருவதுண்டு.  அச்சமயத்தில் அவருக்குச் சரியான பாதை தெரியாமல் விழிக்கும் போது, சாதுக்களும், ஞானிகளும் வழிகாட்டுகிறார்கள். கோடா வெங்கடேஸ்வர சாஸ்திரிகள் நடத்திய ஆன்மீகச் சொற்பொழிவில் வெளிவந்த, இக்கட்டுரைத் தொடருக்கு தொடர்புடைய தகவல் ஒன்றை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

    ஞானிகள் என்றுமே அசத் சங்கத்தை விரும்பாதவர்கள்.  அவர்களுடைய பேச்சு என்றுமே உண்மையானதாகவும், நேர்மையானதாகவும், ஆத்ம ஞானத்தைப் பற்றியே இருக்கும். தனது இயல்பு நிலையிலிருந்து, மனிதன் உயர்வு நிலைக்குச் செல்ல, வாழ்வில் சத்சங்கம் இருக்கவேண்டும், ஆனால் அசத்சங்கம் ஒரு போதும் இருக்கக் கூடாது.

    பொய் பேசும் மனிதனுக்கு மன நிம்மதி என்பது இராது.  ஒரு பொய்யைச் சொல்லி பிறகு அதை மறைக்க பல பொய்களை மேலும் சொல்லி, முடிவில் மன சஞ்சலத்தை அடைந்து அதிலிருந்து வெளிவரமுடியாமல் உழலும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். மன சஞ்சலத்திற்க்கும், மன உளைச்சலுக்கும் ஆளான மனிதன், ஞானிகளின் அறிவுரைப்படி நடந்தால், மனத்தெளிவு பெற்று நல்முடிவு எடுக்கும் நிலையை அடைந்து, மன ஆரோக்கியத்தை எளிதில் பெறமுடியும். ஒரு பலனையும் எதிர்பார்க்காமல், பிறருக்கு உதவி செய்தால், தனக்கு வேண்டிய உதவி பிறரிடமிருந்து தானாகவே வந்து சேரும் என்பதற்கு ஒரு சின்ன கதையையும் சொல்லி இருக்கிறார்.

    ஒரு ஏழை, தினமும் ஒரு ஞானிக்கு உணவளிப்பதைக் கடமையாகக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் தன்னுடைய மூதாதையர்களுக்குத் திதி கொடுப்பதற்கு தன்னிடம் எவ்வித பொருளும் இல்லாததால், ஞானியிடம் சென்று உதவி கேட்கிறான்.  தன்னிடம் கொடுப்பதற்க்கு எதுவும் இல்லாத ஞானி, ஒரு காய்ந்த சுரைக்காயை அவனிடம் கொடுக்கிறார். மனைவியிடம் விபரத்தைச் சொல்லி வெறுப்போடு, அச்சுரைக்காயைக் வைத்து ஏதாவது செய் என்று சொல்கிறான். வேறு ஒன்றும் கைகொடுக்காததால், இருக்கின்ற சுரைக்காயை வைத்து திதி கொடுத்து விடலாம் என்று நினைத்து, மிகவும் சிரத்தையோடு சுரைக்காயை நறுக்குகிறாள் மனைவி.  அச்சமயத்தில் ஒரு அதிசயம் நிகழ்கிறது. சுரைக்காய்க்குள் இருக்கும் விதைகள், வைரக் கற்களாகப் பளிச்சிடுகின்றன. இருட்டாக இருந்த அவனது வாழ்க்கைக்கு, ஞானியின் தவ சக்தியின் மூலமாக வெளிச்சம் கிடைத்தது. தன்னிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லாத ஞானி, இறைவனின் மூலமாக, நேர்மையோடும், நாணயத்தோடும் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உதவி செய்த ஒருவனுக்கு, உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டுகிறார். இது கதையாகத் தோன்றினாலும் “பிறருக்கு நீ உதவினால், மற்றவர் உனக்கு உதவுவார்” உண்மையைப் பிரதிபலிக்கிறது.

         தனி மனிதனுக்கு வரும் துன்பங்களுக்கும், அவசர யுகத்தில் அழுத்தம் நிரம்பிய அல்லல் வாழ்க்கைக்கு ஆறுதல் பெறவும், அருமருந்தாகச் செயல்படுவது ‘சத்சங்கம்’ என்ற கூடம். சமுதாயத்தைச் சார்ந்துதான் தனிமனிதன் வாழமுடியுமே தவிர, தனக்காக மட்டும் வாழ்வது என்பது இயலாத காரியம் என்பது சத்சங்கத்தின் விளக்கம். சத்சங்கங்களுக்கு சென்று உங்களுக்கு வரக்கூடிய சங்கடங்கள் சற்று விலகும் என்றும், பெரிய அளவில் வரும் ஆபத்துகள் தவிர்க்கப்படலாம் எனவும் ஸ்வாமி சின்மயானந்தர் அறிவுருத்துகிறார். சத்சங்கங்களில் மூலம் தங்களுக்குக் கிடைத்த அறிய செய்திகளை, இந்நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள இயலாதவர்களுடன் பகிர்ந்து கொண்டால்?….சத்சங்கங்களுக்கு மட்டுமல்லாமல், அதை மற்றவர்களுக்கு தெரியப் படுத்தியவர்களுக்கும் பெருமைதானே?….

    சத்சங்கங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், அதிகாலையில் டிவி சேனல்களைத் திறந்து பாருங்கள். இனிமையான காலை வேளையில்,சத்சங்கங்களில் மனதுக்கு இனிமையான வார்த்தைகளால் சொற்பொழிவாற்றி, ஆன்மிக சம்பத்தப் பட்டசந்தேகங்களுக்கும் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் அவதாரம் செய்த இடங்களைத் தேர்ந்தெடுத்து, சத்சங்கம் நிகழ்த்துபவர் சிலர்.  இன்னொருவர், நாம சங்கீர்த்தனத்தோடு சத்சங்கத்தையும் சேர்த்து அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டேயிருக்கிறார். வெளிநாட்டவரையும், அண்டை மாநிலத்தவரையும்  ஒன்றாக்குகிறது இந்த சத்சங்கம். சத்சங்கத்தை உதாசீனப் படுத்தாமல், மதிப்பவர்கள் என்றுமே இறைவனுக்கு பிரியமானவர்கள் என்பது மேலே குறிப்பிட்ட அனைவரும் ஒரு மனதாகச் சொல்லும் அறிவுரை.      இவர்களில் சிலர் உலகில் அதிக இடங்களுக்குச் சென்று, மஹாசத்சங்கம் நிகழ்த்தியவர்களும் உண்டு. சைனாவில் சத்சங்கம் நிகழ்த்துவதற்காக, நம்நாட்டு பிரஜைக்கு அந்நாட்டு அரசாங்கம் ஒரு தனி இடத்தையே கொடுத்திருக்கிறது என்பது பத்திரிகைச் செய்தி. இவர்கள் அனைவரையும் விட, முக்கியமாக ஒருவர் சத்சங்கம் மூலம் இந்தியாவை உலகளவில் பிரபலப்படுத்திய பெருமை சுவாமி விவேகானந்தரைச் சாரும்.

    தாம் பெற்ற அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, மறைமுகமாக மற்றவருக்கு உதவி செய்கிறோம் என்று அர்த்தமாகிவிடுகிறது. சத்சங்கம் அதற்குத் உறுதுணையாக நிற்கிறது. ஒரு மனிதன் முழு அளவில் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் ‘சத்சங்கங்களின்’ மூலம் கேட்டறிந்து கொண்டால், அது என்றும் நம் நல்வாழ்விற்கு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.

    ஒர் அறிவிப்பு::

    இத்துடன் எனது “நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” கட்டுரைத் தொடர் முடிவடைகிறது. தொடர்ந்து முப்பது (30) கட்டுரைகளுக்கும் மதிப்பளித்து, பொறுமையாகப் படித்து, தங்கள் கருத்துக்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்த அனைத்து எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     

    ******* முற்றும் *******

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . (53)

     சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இங்கிலாந்துப் பிரதமர்களில் அதிகளவு சர்ச்சைக்குள்ளாக்கியவரும் மிகவும் பிரபலமானவரும், சரித்திரத்தில் இடம் பெற்றவருமான திருமதி மார்கரெட் தாச்சர் (Mrs.Margeret Thatcher) தனது 87 வது வயதில் லண்டனினுள்ள ரிட்ஸ் (Ritz) எனும் ஹோட்டல் அறையிலே காலமான செய்தியைத் தாங்கி இம்மடல் உங்களை வந்தடைகிறது.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவராக திருமதி மார்கரேட் தாட்சர் விளங்கியதற்குக் காரணங்கள் பலவுண்டு.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர்களில் முதலாவது பெண் பிரதமரும், இதுவரை ஒரேயொரு பெண் பிரதமரும் ஆகிய காரணம் இவற்றில் முக்கியமான காரணங்களாகும்.

    அடுத்து இங்கிலாந்து நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் துணிச்சலான பல கொள்கைகளை எடுத்த வகையில் பிரபலமடைந்திருந்தார்.

    இங்கிலாந்து நாட்டில் லிங்கன்சையர் (Lincolnshire) என்னும் இடத்தைச் சேர்ந்த ராபெர்ட்ஸ் (Roberts) எனும் ஒரு பலசரக்குக் கடை உரிமையாளரின் மகளாக 1925ம் ஆண்டு ஜனித்தார் திருமதி தாட்சர். இவரது இயர்பெயர் மார்கரேட் ஹில்டா ராபெர்ட்ஸ் ( Margret Hilda Roberts ) ஆகும்.

    ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர் இரசாயணவியல் ஆராய்ச்சியாளாரகப் பணியாற்றினார். அதன் பின்பு 1951ம் ஆண்டு வெல்வ வளம் கொழித்த வர்த்தகரான டெனிஸ் தாட்சர் (Dennis Thatcher) அவர்களை மணமுடித்தார். வழக்குரைஞர் கல்வியில் அதிபர் பட்டமான பாரீஸ்டர் பட்டம் பெறுவதற்கான பயிற்சியை மேற்கொண்டு 1955ம் ஆண்டு அதை நிறைவு செய்தார்.

    தன் தந்தைவழி கன்சர்வேடிவ் கட்சியின் அரசியலில் குதித்த இவர் 1959ம் ஆண்டு இலண்டனிலுள்ள ஃபின்ச்லி (Finchly) எனும் இடத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இதே தொகுதியில் தொடர்ந்து 1992ம் ஆண்டு வரை பாராளுமன்ற அங்கத்தினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

    இவரது முதலாவது பாராளுமன்ற அமைச்சுப்பதவி 1964ம் ஆண்டு ஹரோல்டு மக்மிலன் (Harold Macmillan) எனும் பிரதம மந்திரியின் கீழ் ஓய்வூதியத் துறையின் துணை அமைச்சர் பதவியேயாகும்.

    அதைத் தொடர்ந்து எட்வேர்டு ஹீத் (Edward Heath) கன்சர்வேடிவ் பிரதம மந்திரியாக விருந்த சமயம் கல்வித்துறை அமைச்சர் பதவி வகித்தார்.

    1972ம் ஆண்டு எட்வேர்டு ஹீத் அவர்களின் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய போது அவரின் தலைமைத்துவத்திற்கு எதிராகப் போட்டியிட்டு பலரின் ஆச்சர்யத்திற்குள்ளாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றார்.

    அதைத் தொடர்ந்து 1979ம் ஆண்டுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தேர்தலில் வெற்றியடைந்ததும் அதன் பிரதம மந்திரியாகப் பதவியேற்று இங்கிலாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் எனும் சரித்திரம் படைத்தார்.

    அரசு நிறுவனங்களையும், தேசிய ஸ்தாபனங்களையும் தனியார் மயப்படுத்தும் கொள்கையில் மிகவும் அழுத்தமான் கொள்கைகளைக் கொண்டிருந்தார். இவரது முக்கிய அரசியல் விஞஞாபங்களாக சமூக சேவைகளுக்கான செலவுகளைக் குறைப்பதும், மக்களின் வரிப்பணத்தைக் குறைப்பதும் ஆன கொள்கைகள் முக்கிய இடங்களை வகித்தன.

    இவரது பதவிக் காலத்தில் பண்வீக்கத்தைக் குறைத்தாலும் வேலையில்லாதோர் தொகை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    1982ம் ஆண்டு அர்ஜெண்டீனா இங்கிலாந்து நாட்டின் இறைமையிலிருந்த வோக்லண்ட்ஸ் (Falklands) தீவினை ஆக்கிரமித்த போது தனது நாட்டின் படையை அனுப்பி அத்தீவினை மீட்டெடுத்தது இங்கிலாந்து மக்களிடையேயும், சர்வதேச அளவிலும் இவரது செல்வாக்கை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து வந்த 1082ம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டி மீண்டும் பிரதமரானார்.

    அக்காலப்பகுதியில் அமெரிக்க ஜ்னாதிபதியாக இருந்த ரொனால்ட் ரீகன் (Ronald Regan) அவர்களுடன் மிக நெருக்கமான அரசியல் உறவுகளைப் பேணி வந்தார். இருவருக்கும் கம்பூனிசத்தின் மீது இருந்த எதிர்ப்புத்தன்மையும், கட்டுப்பாடற்ற வியாபாரக் கொள்கையில் இருந்த ஈடுபாடும் இவர்களைப் பலமாக இணைத்தது.

    அந்நாளைய சோவியத் யூனியனால் இவரது அழுங்குப்பிடியான கொள்கைகளினால் “இரும்பு மனுஷி” (Iron Lady) என்று அழைக்கப்பட்டார்.

    அப்போதைய சோவியத் யூனியனின் அதிபரான் கோர்பச்சேவ் அவர்களின் கம்பூனிசத் தளர்வுக் கொள்கைக மனப்பான்மையை அறிந்து கொண்ட தாட்சர் அவர்கள் அவரை மேற்குலக ஜனநாயகப் பாணியிலான அரசியலமைப்பை நோக்கி நகர்த்தும் முயற்சிகளில் முன்னின்றார்.

    1987ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி மூன்றாவது முறையாக பிரதமராகிய முதலாவது நபர் எனும் சரித்திரம் படைத்தார். இக்காலகட்டத்தில் இவரது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள முடியாத தலைவர் எனும் பெயர் பெருமளவிற்கு பொதுமக்களால் மிகவும் எதிர்க்கப்பட்ட “போல் டக்ஸ்” (Poll Tax) எனும் கொள்கை உட்பட பல கொள்கைகளை அமுல்படுத்த முயன்றதினால் இவரது கட்சிக்குள்ளிருந்தே இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது.

    விளைவாக ,

    1990ம் ஆண்டு நவம்பர் மாதம் தலைமைத்துவப் போட்டியில் ஜான் மேஜர் (John Major) அவர்களினால் தனது தலைமைப் பதவியை இழந்தார்.

    1992ம் ஆண்டு இவர் பாராளுமன்ற அரசியலில் இருந்து விலகினார். இவருக்கு இங்கிலாந்து நாட்டின் அரசியல் கெளரவமான ” லேடி” எனும் பட்டம் வழங்கப்பட்டது. 1995ம் ஆண்டு தாட்சர் பவுண்டேஷன் எனும அமைப்பைத் தோற்றுவித்து புதிதாக கம்யூனிச கட்டமைப்பில் இருந்து விடுபட்ட கிழக்கு ஜரோப்பிய நாடுகளுக்கு ஜனநாயகத்தைப் பற்றிய பல சொற்பொழிவுகளையும், விரிவுரைகளையும் செய்தார்.

    பல சிறிய ஸ்ட்ரோக் எனும் இதய வியாதிகளால் பாதிக்கப்பட்டதினால் 2002ம் ஆண்டிலிருந்து பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கினார்.

    இவரது கொள்கைகள் நாட்டினைப் பிளவு படுத்தியது எனும் வாதம் இவரின் மறைவிற்குப் பின்னரும் கூட இன்றும் பலமூலைகளில் விவாத வடிவில் விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

    நிலககரிச் சுரங்கத் தொழிலாளர்களின் யூயனின் பலத்தைச் சிதைத்து இங்கிலாந்தில் பல யூனியன்களின் பலத்தை தான் கொண்டு வந்த சட்டங்களின் மூலம் பலமிழக்கச் செய்தார்.

    வீடு வாங்கும் வசதியர்ரோருக்கு மாநகர சபைகளினால் வழங்கப்பட்டு வந்த அர்சாங்க வாடகை வீடுகளை அவ்வீடுகளில் குடியிருப்போருக்கு மிகவும் குறைந்த விலையில் அநேகர் வீட்டுச் சொந்தக்காரர் ஆக்கினார்.

    இது பலருக்கு வாழ்வில் தகுதியை உயர்த்த உதவியது என்ற வாதம் இவரது ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டாலும் பலர் இன்றைய சமூக வீடுகளின் தட்டுப்பாட்டுக்கு இவரே காரணம் என்று மறுபகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஜாரோப்பிய யூனியன் இக்கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மீது பல அநியாயமான கட்டுப்பாடுகளை விதித்து நாட்டின் இறைமையைப் பாதிக்கின்றன எனும் வாதத்தை மிகவும் ஆணித்தரமாக முன்னெடுத்தவர்களில் இவர் முதன்மையானவர்.

    இன்றைய ஜரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடிகள் இவரது வாதத்திற்கு வலுச் சேர்க்கிறதோ என்று எண்ணச் செய்யும் வகையில் இன்றைய நிலைமைகள் இருக்கின்றன.

    சரியான வகையிலோ அன்றித் தவறான வகையிலோ பிரித்தானிய சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக இவரது ஆட்சிக்காலம் அமைந்திருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

    இங்கிலாந்தின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயரெடுத்திருந்த போதும் தனது பதவிக்காலத்தில் பெண்களை அரசியலில் முன்னனிக்கு கொண்டுவருவதற்காக இவர் எவ்வகையிலும் சேவை ஆற்றவில்லை என்று பல பெண்ணியவாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

    இவரது மாற்றங்களின் தாக்கம் இங்கிலாந்தைப் பொறுத்தவரை எவ்வகையில் அமைந்தது என்பதற்கான தீர்ப்பை சரித்திரம் வழங்கும்.

    “அயர்ன் லேடி” என்று அழைக்கப்பட்ட இவ்வுறுதி மனத்தைக் கொண்ட தலைவியின் ஆத்ம சாந்திக்காக இப்புலம்பெயர் தமிழனின் மனம் பிரார்த்திக்கின்றது.

    அடுத்த மடலில் சந்திக்கும்வரை
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    10.04.2013

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share