அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை- 4

1

சாகர் பொன்னியின்செல்வன்

ஸ்பின்க்ஸ்

காலத்தை கடந்த கல் அதிசயங்களை தூரத்திலிருந்து பார்த்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும் என்று மஹ்மூத் எங்களை வண்டிக்கு அழைத்தார்.மணல் சாலையில் பத்து நிமிடம் பாலைவனத்தில் பயணம் செய்ததும் ஒரு சிறிய சந்தை போன்ற ஒரு இடத்தை அடைந்தோம்.

சந்தை என்று சொல்லுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். எங்கு பார்த்தாலும் ஒட்டகங்கள். பக்கத்தில் கலாபியா என்ற எகிப்திய உடையை அணிந்த பலரும் மீண்டும் கரீனா கபூர் ஷாருக்கான் என்று அழைத்த ஓலங்கள் எங்களை எதிர்கொண்டன!  அனைவருக்கும் சுக்றான் சுக்றான் (நன்றி) கூறியவாறு மஹ்மூதை பின் தொடர்ந்தோம்.அதில் ஒரு இளைஞன், ‘‘நீ ஏன் சுக்றான் என்று அராபிய மொழியில் சொல்கிறாய் உன்னால் அரபிக் பேசமுடியாது அல்லவா தாங்க்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லு’’ என்ற அறிவுரை வேறு.

ஒரு வழியாக ஒரு ஓரத்தில் சில ஓட்டங்கங்களுடன் நின்ற ஒரு முதியவரிடம் வந்து எங்களை சேர்த்தார் மஹ்மூத். “நீங்கள் இவரது ஒட்டகங்களில் பயணித்து சிறிது தூரம் பாலைவனத்துக்குள் சென்றால் பிரமிடுகளை மிகவும் நன்றாக பார்க்கமுடியும்” என்றார்.

ஒட்டகங்கள் என்றதும் பிள்ளைகள் மிகவும் ஆர்வமாக போகலாம் போகலாம் என்றார்கள். சரியென்று இரண்டு ஒட்டகங்களை ஏற்பாடு செய்துகொண்டு, செல்ல ஆயுத்தமானோம். வருணும் ஆனந்தியும் ஒரு ஒட்டகத்திலும் நானும் சக்தியும் இன்னொரு ஒட்டகத்திலும் ஏறினோம்.

ஒட்டகம் ஒரு விசித்திரமான மிருகம், இறுகியமுகம், உயிரற்ற கண்கள் வாடையுள்ள உடம்பு குறுகிய கால்கள், குதிரைக்கு உள்ள வாளிப்பும் அழகும் இதற்கு கிடையாது. என்றாலும் பாலைவனத்தின் நாயகன் ஒட்டகம் தான்.

ஒட்டகத்தின் மேல் ஏறுவது மிகவும் சுலபம் ஆனால் உட்கார்ந்திருக்கும் ஒட்டகம் நாம் ஏறியதும் எழும்பும் போது முதலில் பின்னங்கால்களை முதலில் நேர்செய்து எழும்போது நாம் கீழே விழுவது போன்று தோன்றும். பின்னர் மெல்ல அது முன் கால்களை நேர்செய்து நம்மை உயரே தூக்கி நடக்கும். மணலில் அது மெல்ல அடிமேல் அடி வைத்து நடப்பது ஒரு வித அழகு தான்.

ஒரு கால்மணிநேரம் இரண்டு ஒட்டகங்களையும் மெல்ல நடத்திக்கொண்டு எங்களை பாலைவனதிற்குள் அழைத்து சென்றனர். எங்கு பார்த்தாலும் மணல் வெளி, சிறுது நேரத்திற்கு முன் இருந்த வாகனங்கள்,மனிதர்கள், சந்தை எல்லாம் மறைந்துவிட்டன.

நாற்புறமும் மணல், தூரத்தில் மூன்று பிரமிடுகள். அந்த நிமிடம் நாங்கள் இருந்த சூழ்நிலை இன்றோ மூவாயிரம் ஆண்டுகள் முன்னரோ என்று சொல்லுவதற்கு சாட்சி எதுவும் இல்லை. அன்றிருந்த மேனிக்கு இன்றும் கம்பீரமாக மணலில் காட்சியளித்தன பிரமிடுகள்! நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டுதான் இருக்க தோன்றியது, என்றாலும் மேலும் பார்க்க வேண்டிய இடங்கள் இருந்ததால் பிரியாவிடை கொடுத்து மீண்டும் சந்தை கடையை வந்தடைந்தோம். “ஒரு ஒட்டகத்திற்கு இருபது டாலர் வாடகை”, என்றார் முதியவர். சரி என்று ஐம்பது டாலர் நோட்டை கொடுத்தேன். “இரண்டு ஒட்டகத்திற்கும் நாற்பது எனக்கு டிப் பத்து டாலர்” என்றார். எகிப்தில் டிப் என்பது நாம் தருவது அல்ல அவர்களே எடுத்துகொள்வது என்பது அப்போது தான் புரிந்தது. சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள் எவ்வளோவோ மேல் என்று தோன்றியது.

எங்கள் வண்டியில் ஏறிக்கொண்டு மீண்டும் பிரமிடுகளை கடந்து ஒரு மைல் தொலைவில் இருந்த ஸ்பிங்க்ஸ் வந்து சேர்ந்தோம். சிவாஜி நடித்த சிவந்தமண் படத்தில் வரும் பட்டத்து ராணி பாடலில் கண்களை கவரும் வண்ணம் பின்னால் நிற்கும் சிலை தான் ஸ்பிங்க்ஸ்.எகிப்திய மன்னர்கள் தங்கள் வல்லமையை பறைசாற்ற தங்கள் உருவங்களை சிங்க உடலின் மேல் வைத்து படைத்த உருவங்கள் தான் இந்த ஸ்பிங்க்ஸ்.

கீஸாவில் உள்ள இந்த சுண்ணாம்புப் பாறை ஸ்பிங்க்ஸ் சிலை உலகத்தில் உள்ள சிலைகளில் எல்லாம் மிகவும் பெரியது. 241 அடி நீளம் 63 அடி அகலமும் 66.34 அடி உயரம் கொண்டது இந்த கம்பீரமான மனிதமுகம் கொண்ட சிங்கம்.

ஸ்பிங்க்ஸ் என்பது பண்டை கிரேக்க மற்றும் எகிப்திய கலாச்சரம் மற்றும் இதிகாசங்களில் உள்ள ஒரு ஜீவன்.

கிரேக்க ஸ்பிங்க்ஸ் உருவமானது சிங்க உடல், பெண் முகம் கொண்டதுடன் பறவைகளின் இறகுகளும் கொண்டது.கிரேக்க ஸ்பிங்க்ஸ் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாத பயணிகளை கொடிய மிருகங்களுக்கு இரையாக கொடுக்கும் கொடுமையானது கிரேக்க  ஸ்பிங்க்ஸ், அனால் எகிப்திய ஸ்பிங்க்ஸ் அரசர்களின் அம்சம் மற்றும் ஆதரவின் அம்சம். எல்லா கோவில் வாசல்களிலும் துவாரபாலகர்கள் போல் பல ஸ்பிங்க்ஸ் சிலைகள் அணிவகுத்திருக்கும்.

மிக கம்பீரமாக நிற்கும் இந்த ஸ்பிங்க்ஸ் குப்று மன்னனின் தலையை கொண்டது. மூக்கறுந்த நிலையில் உள்ள இந்த  ஸ்பிங்க்சை பற்றி பல கதைகள் உள்ளன. மிகவும் பொதுவாக சொல்லப்படும் சோக கதை ஐரோப்பிய படைவீரர்கள் இந்த சிலையின் மூக்கை குறிபார்க்கும் மையமாக வைத்து சுட்டதின் விளைவுதான்  இந்த மகத்தான சிலை மூக்கை இழந்து நிற்கும் அவலநிலை அடைந்தது.

ஸ்பிங்க்ஸ் சிலையை ஒட்டி ஒரு கோவிலும் உள்ளது. சிதைந்த நிலையில் உள்ள இந்த கோவிலில் இன்று நிற்பது வெறும் தூண்களும் சில சுவர்களும் தான்.

ஸ்பிங்க்ஸ் தூரத்திலிருந்து பார்க்கும்போது சிறிய சிலைபோல் தோன்றினாலும் கிட்டே வந்ததும் எவ்வளவு பிரமாண்டமாக உள்ளது என்பது வியக்கவைக்கும்  காட்சி. பண்டை நாட்களில் இந்த சிலை வண்ண பூச்சுகளுடன் இருந்தது என்பதற்கு அத்தாட்சியாக இன்றும் சில இடங்களில் அதன் காதுகளில் ஊதா வண்ணம் துகள்கள் துகள்களாக தெரிகிறது.

ஸ்பிங்க்ஸுடன்  பல்வேறு விதமாக புகைப்படங்கள் எடுக்கும் சுற்றுல்லா பயணிகள் நடுவே நாங்களும் ஒரு வழியாக சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். தூரத்தில் தெரியும் மூன்று பிரமிடுகள் அழகிய முக்கோணங்களாக ஒளிர்ந்தன!

ஒருவழியாக அலுப்பு தீரும்வரை ஸ்பிங்க்ஸுடன் தங்கிவிட்டு எங்கள் வண்டிக்கு வந்து மதிய உணவருந்த சென்றோம்.வண்டியில் ஏறும் முன் எங்கள் வழிகாட்டி மஹ்மூத் ஆளுக்கொரு தண்ணீர் புட்டி கொண்டுவந்து கொடுத்தார்.தினமும் ஒரு புட்டி தண்ணீர் இலவசம்! பத்து நிமிட பயணத்துக்குள் கிளியோபாட்ரா என்ற ஒரு உணவு விடுதியை வந்தடைந்தோம்.

உணவு மெம்பிஸ் டூர்ஸ் ஏற்பாடு செய்து பணம் செலுத்தியுள்ளது உங்களுக்கு வேண்டியதை புபே உணவுதொகுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் மஹ்மூத்.நிறைய சாலட் மற்றும் பலவித எகிப்திய உணவு படைப்புகள் அணிவகுத்திருந்தன. என்ன ஒரே பிரச்னை எல்லாம் அசைவ உணவுகள். சாலட், புலவு மற்றும் மேடிதேறேனியன் மொச்சை மசியல் தவிர எல்லாம் மீன் மற்றும் கறி உள்ள உணவுவகைகள். என் மனைவியோ சைவம்!

நான் அங்குள்ள பணியாளரிடம்,“வேறு சைவ உணவு எதுவும் இல்லையா?” என்று கேட்டதற்கு “மீன் எடுத்துவிட்டு சாப்பிட்டால் அது

காய்குழம்புதானே” என்றார். சைவம் பற்றிய ஒரு உணர்வே இல்லாத ஊர் இது என்பது அப்போது தான் புரிந்தது.

பிட்டா ரொட்டியும் ஹுமுஸ் மற்றும் இருந்த சைவ உணவுகளை ஆனந்தி மெல்ல சாப்பிட, பசங்களும் நானும் மீன்குழம்பும் கோழி பிரியாணியும் கெபாபும் ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.நைல் நதி மீன்களுக்கு ஒரு தனி ருசிதான்.

உண்ட உணவைவிட எங்கள் கிளியோபாட்ரா ஹோட்டலில் இருந்து பிரமிடுகள் மிக துல்லியமாக தெரிந்த காட்சி மகிழ வைத்தது. ஹோட்டல் இருந்த உயரத்தில் இருந்து பார்க்கும்போது ஊரில் இருந்த கட்டிடங்களுக்கு மேல் ஸ்பிங்க்ஸுடம் பிரமிட் கோபுரங்களும் மிக அழகாக அணிவகுத்து நின்றன.

கண்ணுக்கு  விருந்தான பிரமிடுகளையும் வயிற்றிருக்கு விருந்தான உணவையும் முடித்துக்கொண்டு கைரோ நகரை நோக்கி பயணப்பட்டோம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை- 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *