நான் அறிந்த சிலம்பு – 67

 

மலர் சபா

 

புகார்க் காண்டம் – 07. கானல் வரி

“மயங்கு திணைநிலை வரி அலர் அறிவுறுத்தி வரைவு கடாதல்”
(37)

 

நல்ல முத்துகளால் செய்த அணிகளை அணிந்த
நன்மை பொருந்திய பவளத்தால் ஆன மேகலை அணிந்த
செந்நெல் பயிரையுடைய மருத நிலம் தோறும்
அலைகள் உலாவிடும் கடலின் கரைகளையுடைய
நெய்தல் நிலத் தலைவனே!

புன்னை மரங்களடர்ந்த சோலையதனில்
வலிய மீன்கொடி உடைய மன்மதன் ஏவிய அம்புகளால்
என் மேனியில் மேவிய புதிய புண்கள்
என்னை அடையாளமே கண்டுகொள்ள முடியாவண்ணம்
என் அழகதனை மறைத்துதான் விளங்குகின்றன.
இதை என் அன்னையவள் அறிந்தால்
என்னதான் நான் செய்வேன்?!

(38)

அழகிய பவளவாய் திறந்து
கடல் முத்து நிகர்த்த புன்னகை புரியும்
பரதவர் சேரியில் வலைகள் உலரும்
அலைகள் உலாவிடும் கடலின் கரைகளையுடைய
நெய்தல் நிலத் தலைவனே!

மழைக்காலத்து மலரும் பீர்க்கம்பூக்களின்
நிறமொத்த மேனியளாய்ப்
பசலை படர்ந்த என் மேனி
பொன்னிறத்தில் பொலிகின்றது.
வெறியாட்டு நிகழ்த்தி தெய்வமது வழிபட்டு
இக்கொடுமை செய்தவர் யார் என
என் அன்னையவள் ஆராய்ந்து அறிந்தால்
என்னதான் நான் செய்வேன்?!

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram21.html

படத்துக்கு நன்றி:
http://www.tamilvu.org/courses/diploma/a031/a0312/html/a0312103.htm

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க