திவாகர்

ராமாயணத்தை செந்தமிழில் எழுதிய பேரரறிஞர் ராஜாஜி, அந்த ராமாயணத்தை முடிக்கும் தருவாயில், ராமர் கதை முடிந்து போகிறதே, இப்போது அவனை விட்டுப் பிரிய வேண்டுமே என மிகவும் வருந்தியதாக எழுதி முடித்திருப்பார். ராமாயணம் ஒரு சாதாரணமான காவியமா.. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எப்படியெல்லாம் வாழவேண்டும் என வலியுறுத்திச் சொன்ன காவியம் அல்லவா அது!. தர்மத்தின் உச்சகட்டம்தாம் ஸ்ரீராமன். அவன் பிறந்ததிலிருந்து மானிடருக்கான தர்மத்தை எப்படியெல்லாம் கடைபிடித்தான் என்றுதான் இக் காவியத்திலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.

பெற்றோரை மதித்தவன் ராமன்.. சீதையை மணமுடிக்க, வில்லை முறித்தவுடன் விசுவமுனி அவனை மணம் புரியுமாறு வேண்ட, தந்தை ஒப்புதல் பெற்றால் மட்டுமே மணம் புரிவேன் என்றவன்.

தந்தையின் வரம் காக்க, அவர் தம் வாயால் கேட்குமுன்னே கானகம் புகுந்தவன் அல்லவா..

இனிக்கும் ராஜசுகத்தையும் கடும் காட்டு வாழ்க்கையும் ஒன்றாக நினைத்து வாழ்ந்தவன் ராமன்

மனித தர்மம் என்பது சக மனிதரிடம், ஏற்ற தாழ்வு பாராமல் பண்புடன் வாழ்வதுதான் என்பதை குகனின் நட்பு மூலம் எடுத்துக் காட்டியவன் ராமன்.

நட்புக்கும் உதாரணம் அவனே, குகனோடு, சுக்கிரீவனையும், அனுமனையும், அசுரனான விபீஷணனையும் நண்பனாகவே பாவித்தவன் ராமன்.

சகோதரத்துவத்தின் மகிமைக்கு உதாரணம் கூட ராமனே, உறவுக்கு கை கொடுப்பவனும் ராமனே!

பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்தவன். தாடகை கடும் அரக்கியாக இருந்தாலும், அவளை அழிப்பதற்கு முன், பெண் என்பதை மறக்காமல் அவளுக்காக முனிவரிடம் பரிந்து பேசியவன்

மனைவியின் கௌரவம் காத்தவன் ராமன், மனைவியின் கௌரவப் போராட்டம்தானே சீதாராமனின் கதை!

பறவையாக இருந்தாலும், அணிலாக இருந்தாலும் எல்லா உயிரினத்திடமும் பரிவு காட்டியவன் ராமன்

தன் மீது அன்புள்ளவர்களை அவன் கைவிட்டதாக சரித்திரம் இல்லை, உதாரணம்: ஹனுமன், விபீடணன், சுக்கிரீவன், சபரி  என இன்னும் எத்தனையோ பேர்

எதிரிக்கும் இரங்கியவன் ராமன், அதனாலல்லவோ இன்று போய் நாளை வா, என ராவணனை மன்னித்து அனுப்பியவன்!

பெரியவர்களுக்கு கௌரவம் கொடுத்து வளர்ந்தவன் ராமன், விசுவமுனியிலிருந்து அகத்தியர் வரை ராமனின் இந்த குணத்தில் மயங்காத பெரியவர் யார்? பாலகனாயிற்றே என்று தசரதன் தயங்கியபோதும், விசுவமுனியோடு தனியே சென்று அசுரர்களை அழிப்பேன் என்றவன் அல்லவா..

தவறுகளை மன்னிக்கும் பெருங்குணம் கொண்டவன் ராமன், தன் மனைவியை சீண்டிய காகாசுரனும் தவறுக்கு வருந்தியபோது மன்னித்தவன்

கோபத்தை அடக்கிக் காட்டியவனும் ராமனே. பரதன் தங்களைத் தேடி அழிக்க வருகிறான் என்ற கற்பனையில் தம்பி இலக்குவன் பொங்கியபோது, கோபத்தை வென்றதோடு, இலக்குவனுக்கும் பொறுமையை போதித்தவன் ராம்ன்.

பொறுமைக்கும் ராமன் தான் உதாரணம். யுத்தத்தின் கடைசி நாள் வரை ராவணனுக்கு சந்தர்ப்பம் கொடுத்தவனாயிற்றே!

பாருங்கள் ராமபிரானுக்கு எத்தனை நற்குணங்கள்..

இவையெல்லாம் ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை என்பதை குணசீலனான ராமன் கதை சொல்கிறதல்லவா…. சாதாரண மனிதனுக்கான எல்லாவித சற்குணங்களையும் கைக் கொண்டால் ஒரு மனிதன் தெய்வமாக முடியும்.. அந்தத் தெய்வத்தின் தன்மையையும் தானாகவே பெறுகிறான்.. அதனால்தானோ நம்மாழ்வார் ராமர் சரிதையை கற்றுத் தெளியச் சொல்கிறாரோ ராமபிரான் சரிதை சரியாகத் தெரிந்தாலே போதும்.. வேறெதுவும் தேவையில்லை.. முக்திக்கு அவனே மார்க்கம் என்கிறார்..

“கற்பார் இராமபிரானை யல்லால் மற்றுங் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும் பாதியொன்றின்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக் குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே”

கற்பவர்கள் உயர்ந்த ராமபிரானின் கதையையன்றி வேறொன்றும் கற்பரோ? தாவரங்களானாலும் புல்லும் பூண்டும், ஊர்வனவான எறும்பு முதலியன அண்ட சராசரங்களில் தோன்றும் அனைத்து உயிரினங்களுக்கும், ராமபிரான் பிறந்த பிரம்மன் படைத்த தேசமான ஒரு அயோத்தி நகரத்தில் பிறந்த பேறுக்காக,  மோட்சத்திற்கான நற்கதி கொடுத்தருளியவன் அல்லவா..- நம்மாழ்வார்.

படங்களுக்கு நன்றி:

http://www.mythicmaps.net/Festival_calendar/April/Rama_Navami.htm

http://library.thinkquest.org/11719/vasishtfiles/ramanavami.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஸ்ரீராமனும் நம்மாழ்வாரும்

  1. ராமனின் பாணம் (வில்) வெற்றி தரும். 
    கம்பனின் பாணம் (கவி) தமிழ்தரும். 
    அன்பினால் அரசும் கொடுத்தவன்
    அனுமனால்  அகிலம் செழித்தவன்.
    ராமாயணத்தை செந்தமிழில் எழுதிய பேரரறிஞர் ராஜாஜி. அதன் உட்சாரத்தை பிழிந்து அமுதத் துளியாகத்  தமிழ்நடையில் வடிவமைத்த திரு திவாகர் பெருமகனார்க்கு பாராட்டுகள். சீரிய சூரியக் குலத்தைப் புகழின் உச்சிக்கு உயர்த்திய ஸ்ரீராமனுக்கு சூரியன் அல்லாது , அதாவது திவாகரன் அல்லாது வேறுயார் பெருமையேற்ற முடியும்.  நற்குணங்கள் வடிவெடுத்த அவன் தலைவர்களாவதற்கு இலக்கணம். Global Ethics Standard.  ஸ்ரீராம விஜய ராம ஜய ராம ராம . அன்புடன் சத்தியமணி. 
     

  2. நன்றி சத்தியமணி! திவாகர் என்பவன் சிறியவன்.. சிறியோனும் புகழும்படியான எளிமையான தன்மை கொண்டவன் ராமன்.. உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *