-கவிநயா

 

ஞாயிற்றுக் கிழமைகளில் சன் டி.வி.யில் வருகிற குட்டிப் பிள்ளைகள் நிகழ்ச்சி. அந்த நேரம் வீட்டில் இருந்தால், பார்ப்பதுண்டு. குட்டிப் பிள்ளைகள், அதுவும் மழலை மாறாமல் இருக்கையில் அவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டால், “குழலும் யாழும் இனிதென்று சொன்னவருக்கு அப்படிச் சொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ?” என்று கேட்கத் தோன்றுமல்லவா?

நிகழ்ச்சி, ரசிக்கும்படியே இருந்தது, போன வாரம் பார்க்கும் வரையில்…

போன வாரம் வந்த குழந்தைகளில் ஒரு குழந்தை… மிஞ்சி மிஞ்சிப் போனால் 4 வயது இருக்கும். அந்தக் குட்டிப் பிள்ளை சொல்கிறது, “அப்பா ‘சரக்கு’ குடிப்பார்”, என்று! அப்படி என்றால் என்னவென்று தெரியாமல்தான் சொல்கிறது… அது தெரிகிறது… இருந்தாலும், அப்படி ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்தால் அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது? வீட்டில் பெரியவர்கள் பேசுவதையும் செய்வதையும் கவனித்துத் தானே இந்தப் பிள்ளைகள் இவ்வளவும் கற்றுக் கொள்கிறார்கள்?

கள்ளம் கபடம் இல்லாத உள்ளத்தைக் குழந்தை உள்ளம் என்று சொல்கிறோம், ஆனால் இப்போது அந்தக் குழந்தை உள்ளம் குழந்தைகளிடமே கூட இல்லாமல் விரைவில் காணாமல் போய் விடுகிற அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

சரி, இது கூட அந்தக் குழந்தை தெரியாமல் ஏதோ சொல்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அடுத்து வந்ததுதான் எனக்கு கிட்டத்தட்ட மாரடைப்பையே கொடுத்து விட்டது!

அதாவது, நிகழ்ச்சி முடியும் போது ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசுகள் கொடுப்பார்கள். இந்த முறை நிகழ்ச்சி முடியும் போது, “நிகழ்ச்சியை முடித்துக் கொள்வோமா?” என்று நிகழ்ச்சி நடத்துபவர் சொன்னதும், போன பத்தியில் சொன்ன அதே குழந்தை, “பரிசு எங்கே?” என்று கேட்டது.  அவரும் விளையாட்டாக, “இன்றைக்குப் பரிசெல்லாம் கிடையாது பாப்பா. எல்லோரும் அப்படியே அவங்கவங்க வீட்டுக்குப் போக வேண்டியதுதான்”, என்றார்.

அதற்கு அந்தக் குழந்தை என்ன சொன்னது தெரியுமா?

“பரிசு கொடுக்கலைன்னா தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்!”

அட, உண்மையாகத்தான் சொல்கிறேன்! சத்தியமாக நான் கதை கட்டவில்லை! இந்த அளவிற்கெல்லாம் எனக்குக் கற்பனை வளமும் இல்லை!

நிகழ்ச்சியாளரும் அசந்து போய் விட்டார் என்று நினைக்கிறேன். “பரிசு கொடுக்கலைன்னா என்ன செய்வே?” மறுபடியும் கேட்டார்.

“தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்!”

“அப்பவும் கொடுக்கலைன்னா என்ன பண்ணுவே?”

“உங்களை மரத்துல தலை கீழா கட்டித் தொங்க விடச் சொல்லுவேன்”

அவர் இன்னும் அசந்து விட்டார்.

“நீ இப்படில்லாம் பேசினதாலயே உனக்குப் பரிசு கிடையாது”, என்று சொல்லி விட்டார்!

அது வரையில் கொஞ்சம் பரவாயில்லை.

பிறகு அந்தக் குழந்தை அவரை அருகில் வரச் சொல்லி, காதோடு, “ஏன் பரிசு தர மாட்டீங்க?” என்று கேட்டது.

அவரும், “நீ அரிவாளைத் தூக்கச் சொல்வேன்னு சொன்னேல்ல? அதுக்குதான்”, என்றார்.

“சரி நான் அப்படிச் சொல்ல மாட்டேன், பரிசு குடுங்க”, என்றது குழந்தை.

பிறகுதான் அவர் பரிசு கொடுத்தார்.

“உங்கள் குழந்தைகள் உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்”, என்ற எச்சரிக்கையோடு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் மனதில் ஏறிய சுமை என்னவோ இன்னும் அப்படியேதான் இருக்கிறது 🙁

 

படத்துக்கு நன்றி: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=9095&id1=6 (படத்தில் இருப்பது வேறு நிகழ்ச்சி)

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “குட்டிச் சுட்டீஸ்

 1. “உங்களுக்கும் வியர்க்கிறதா?” என்னும் கட்டுரையில் திரு.தமிழ்தேனீ அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் செய்தியயையும் இந்தக் கட்டுரையில் தாங்கள் கூறியிருக்கும் செய்தியையும் படிக்கும் பொழுது உண்மையிலேயே நாளைய தலைமுறையைப் பற்றி மனதில் ஒரு அச்சம் பரவுகிறது,

 2. ஆம்..இன்றைய இளம் தளிர்கள், நாளை சமுதாயத்தையே தாங்கி நிற்கப்போகும் தூண்கள் என்றெல்லாம் நாம் ஒரு பக்கம் ‘சினிமா’ வசனம் பேசிக்கொண்டிருந்தாலும் இன்றைய தலைமுறையினர் எங்கே போய்க் கொண்டிருக்கின்றார்கள்? என்ற கவலையும், குழப்பமும் ஒருபக்கம் நெஞ்சை அரிக்கவே செய்கின்றது.

  தொழில்நுட்ப முன்னேற்றங்களும், வசதிகளும் ஒரே இரவில் தொலைந்துபோய் மீண்டும் (இந்தத் தொல்லைகளும், இம்சைகளும் இல்லாத) முந்தைய நூற்றாண்டிற்கே சென்றுவிட மாட்டோமா? என்றுகூட சிலச் சமயங்களில் மனம் எண்ணவும், ஏங்கவும் தொடங்கிவிட்டது. 🙁

  சிறந்த பதிவு கவிநயா, பாராட்டுக்கள்!

 3. நானும் அந்த  நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறேன். மேலோட்டமாக நகைச்சுவையாகப் பட்டாலும் மனம் வருந்தும் நிகழ்வுகளில், உதாரணத்துக்கு ஒன்றை சிறந்த முறையில் தந்திருக்கிறீர்கள். இதே நிகழ்ச்சியில், இன்னொரு எபிசொடில், ஒரு குழந்தையிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்குக் குழந்தையின் பதிலும்  கீழே:

  ‘நூறு ரூபா நோட்டுல கண்ணாடி மாட்டிட்டு சிரிக்கிறாரே அந்தத் தாத்தா யார்?’

  ‘பவர் ஸ்டார்!!’

  அதிர்ந்து தான் போனேன். தேசத்தந்தையைத் தெரியவில்லை. பவர் ஸ்டாரைத் தெரிகிறது. இது யாருடைய தப்பு?.  இது குறித்த விழிப்புணர்வு அவசரத் தேவை.

 4. நான் அதிகம் T.V நிகழ்சிகள் பார்ப்பதில்லை. செய்திகள் பார்ப்பதோடு சரி. முக்கியமான ஃபிளாஷ் நியுஸ் வரும்போது மட்டும் அதனை அப் டேட் செய்வதில் தொடர்ந்து பார்ப்பேன், மற்றபடி தொலைக்காட்சிக்கும் எனக்கும் தொடர்பு அவ்வளவு தான்.

  இந்த நிகழ்சியில் நடந்த விவரங்களும் மதிப்பிற்குரிய பார்வதி அவர்கள் பதித்திருக்கும் கருத்தும் படிக்கும் போது மேலோட்டமாக சிரிப்பு வந்தாலும். இந்த வேதனையை என்ன என்று சொல்ல.

  நம் பிள்ளைகள் எது செய்தாலும் நமக்கு பெருமைதான். பூரிப்புதான். பிள்ளைகள் எதையும் சட்டென்று கற்றுக்கொள்வார்கள். அதனால் பிள்ளைகள் எனும் புரிந்துனர்வு அந்த பிள்ளைகளுக்கு இருப்பதை விட பெற்றோருக்குத்தான் அதிகம் வேண்டும்.

 5. என்னுடைய ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்ட சச்சிதானந்தம், மேகலா, பார்வதி, தனுசு, அனைவருக்கும் நன்றிகள் பல.

  //தொழில்நுட்ப முன்னேற்றங்களும், வசதிகளும் ஒரே இரவில் தொலைந்துபோய் மீண்டும் (இந்தத் தொல்லைகளும், இம்சைகளும் இல்லாத) முந்தைய நூற்றாண்டிற்கே சென்றுவிட மாட்டோமா? என்றுகூட சிலச் சமயங்களில் மனம் எண்ணவும், ஏங்கவும் தொடங்கிவிட்டது//

  மேகலா சொன்னது போல் எனக்கும் இந்த ஏக்கம் ஏற்பட்டிருக்கிறது. பார்வதி சொன்னது போல் பெற்றோருக்கு முதலில் விழிப்புணர்வு வேண்டும். தவறான பாதையில் வெகு தூரம் போவதற்குள், உணர்ந்து திருந்தி திரும்பி விட வேண்டும். நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *