இலக்கியம்கவிதைகள்

சுண்டு விரலின் ஏக்கம்

 

-தனுசு

 

ப்ரியமான மகளே…
வளர்ச்சி அடைந்தால்
இடைவெளி உண்டாகிவிடுமா?
நீ வளர்ந்ததால்
நமக்குள்ளும் அதுதான் உண்டானதா?

என் சுண்டு விரலின் ஏக்கம்
நீண்டு கொண்டே போகிறது.
அது
உன்னோடு கட்டுண்டு இருந்த காலம் நினைத்து
இன்னும் ஒரு
தாகம் தருகிறது.

படரத் துடிக்கும் கொடிபோல்
முளைக்கத் துடிக்கும் விதை போல்
நீரை விட்ட மீன்போல்
உன் விரல்களின் ஸ்பரிசம் இல்லாததால்
என் சுண்டு விரல் படும் அவஸ்தை
எதை என்று சொல்ல…

என் கட்டை விரலாலேயே
அந்தக் குட்டை விரலுக்கு
ஆறுதல் அளிக்கிறேன்.
அன்பின் உச்சத்தில்
அன்று நீ பெற்ற முத்தங்கள்
இன்று
ஆதங்கத்தில்
அந்த விரலே பெறுகிறது.

அன்றைய
நம் அன்பின் சுவாசத்தை முகர
இன்று
அந்த விரலையே முகர்ந்து பார்க்கிறேன்.
இன்னும்
அன்றைய ஆசையில்
அதனிடம் பேசவும் செய்கிறேன்.

உன்
பஞ்சு போன்ற
அஞ்சு விரலின் நினைவு
என்
நெஞ்சுக் கூட்டை அரிக்குது!
உன்
பிள்ளைப்பருவ
பிஞ்சு விரல்கள்
பிரிஞ்சு போனதால்
எனக்கு
நஞ்சுகூட இனிக்குது!

எனை தாங்க ஒரு கைத்தடி
எனக்காக காத்திருக்கும் மண்ணின் ஆறடி
இவைகளை நான் தொடும் முன்…
மீண்டும் ஒரு வசந்தமோ
அவைகளை தொட்ட பின்…
மீண்டும் ஒரு பிறவியோ
எனக்கு வேண்டாம்

ஒரு நிம்மதி பெருமூச்சு வேண்டும்!
அது
என் சுண்டு விரல் நீ பிடிக்க
நாம் நடக்க
என் இதயம் அடைய வேண்டும்.

 

படத்துக்கு நன்றி: http://pmbl.deviantart.com/art/Pinky-promise-212631494

 

Print Friendly, PDF & Email
Share

Comments (6)

 1. Avatar

  மிகவும் இனிமை. “சுண்டு விரலின் ஏக்கம்” என்ற தலைப்பைப் பார்த்த உடனேயே கவிதையைப் படிக்க வேண்டும் என்று மனம் தூண்டப்பட்டுவிட்டது.
  மனதின் மென்மையான பக்கங்களைக் கவிதை என்னும் தென்றல் கொண்டு நயமாகப் புரட்டி இருக்கிறீர்கள் திரு.தனுசு அவர்களே. வாழ்த்துக்கள்.

 2. Avatar

  சுண்டு விரலின் ஏக்கமாய் வழிந்தோடுகின்றன பெண் குழந்தையின் விரல் பற்றி நடந்த தந்தையின்/தாயின் கடந்த கால நினைவுகள். வரிகள் ஒவ்வொன்றும் அந்த ஏக்கத்தை அழகாக, அழுத்தமாகப் பிரதிபலிக்கின்றன. அருமையான கவிதையைப் படைத்த திரு. தனுசு அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

 3. Avatar

  தலைப்பே தனிக் கவிதை. குழந்தைகள் நம் விரல் பற்றி நடக்கும் போது, குழந்தைகளே நம்மை அழைத்துச் செல்வது போல் தோன்றும். கவிதையின்  வரிகள் ஒவ்வொன்றும் மனதின் ஆழம் தொட்டு மீள்கின்றன. 
  ////அன்பின் உச்சத்தில்
  அன்று நீ பெற்ற முத்தங்கள் 
  இன்று
  ஆதங்கத்தில்
  அந்த விரலே பெறுகிறது////

  கண்ணில் நீர் வந்து விட்டது. ஒரு தந்தை/ தாயின் இதயத் துடிப்பை இதனினும் பதிவு செய்வது கடினம். நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் கவிஞரே!!!

 4. Avatar

  என் கவிதைக்கு பொருத்தமாக படம் தேர்வு செய்து வெளியிட்ட ஆசிரியருக்கு என் முதல் நன்றி.

  சச்சிதானந்தம் wrote ////“ சுண்டு விரலின் ஏக்கம்” என்ற தலைப்பைப் பார்த்த உடனேயே கவிதையைப் படிக்க வேண்டும் என்று மனம் தூண்டப்பட்டுவிட்டது.
  மனதின் மென்மையான பக்கங்களைக் கவிதை என்னும் தென்றல் கொண்டு நயமாகப் புரட்டி இருக்கிறீர்கள்….////

  மேகலா இராமமூர்த்தி wrote/// பெண் குழந்தையின் விரல் பற்றி நடந்த தந்தையின்/தாயின் கடந்த கால நினைவுகள். வரிகள் ஒவ்வொன்றும் அந்த ஏக்கத்தை அழகாக, அழுத்தமாகப் பிரதிபலிக்கின்றன….////

  பார்வதி இராமச்சந்திரன். wrote/// தலைப்பே தனிக் கவிதை. குழந்தைகள் நம் விரல் பற்றி நடக்கும் போது, குழந்தைகளே நம்மை அழைத்துச் செல்வது போல் தோன்றும். கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் மனதின் ஆழம் தொட்டு மீள்கின்றன.
  ////அன்பின் உச்சத்தில்
  அன்று நீ பெற்ற முத்தங்கள்
  இன்று
  ஆதங்கத்தில்
  அந்த விரலே பெறுகிறது////

  கண்ணில் நீர் வந்து விட்டது. ஒரு தந்தை/ தாயின் இதயத் துடிப்பை இதனினும் பதிவு செய்வது கடினம். நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் கவிஞரே!!!

  சாமரம் கொண்டு வீசியது போல் ஒரு இதமான சுகம் உங்கள் அனைவரின் பாராட்டுகளிலும் மிக்க நன்றிகள்.

 5. Avatar

  சுண்டு விரலின் ஏக்கம் சுண்டி விட்டது 
  கண்ட விழிகளின் ஏக்கம் கணணீர் விட்டது 
  பெண்டுப் பிள்ளைகள் பிரிவால் பெற்றது எண்ண 
  தண்டு வாழைபோலத் தனுசின் பாசம்கவிப் பின்ன‌ 
  மீண்டு மகளும் வந்துசேரும் ஆசைநதி நீளம் 
  மீண்டும் அதுபோல் ஒன்றுசேரும் காலநதி நீளும்

 6. Avatar

  பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள் சத்யமனி அவர்களே.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க