Category: நறுக்..துணுக்…

  • பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு

    பவள சங்கரி

    பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு. முந்தைய கட்டணத்தைவிட சுமாராக 20% அதிகரித்துள்ளது. அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு 50,000 லிருந்து 55,000 ரூபாய் வரையிலும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கட்டணங்கள் ரூ 80,000 லிருந்து 85,000 வரையிலும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    மாணவர்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்த அரசு AICTE அறிவித்த உள்கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் நியமனம் போன்றவைகளை நிறைவேற்றியிருந்தால் மட்டுமே இந்தக் கட்டண உயர்வு பொருந்தும் என்று அறிவிக்காதது ஆச்சரியமாக உள்ளது.
    Share
  • புதுப்பித்தல் அவசியம்!

    பவள சங்கரி

    மருத்துவர்கள் போல, கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள் போல, வருங்காலச் சமுதாயத்தையே நிர்ணயிக்கும் ஆசிரியர்களும் புதுமையான சிந்தனைகளையும், சமுதாயத்தின் நவீனக் கட்டமைப்புகளையும் அறியும் வகையில் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டியதும் அவசியம் அல்லவா? அதற்கான பயிற்சித் திட்டங்களும் அமைக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமை அல்லவா? தற்போது 3 முதல் 5 ஆண்டுகளுக்குஒரு முறை மட்டுமே ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை ஆண்டிற்கு ஒரு முறையாகவாவது மாற்றியமைக்க வேண்டியது அவசியம்!

    Share
  • ஏர் இந்தியா

    பவள சங்கரி

    ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாகவோ அல்லது அதனுடைய 50% பங்குகளையோ தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் மூலம் அறியமுடிகிறது. விமானங்களுக்குரிய எரிபொருள் மற்றும் சில சலுகைகள் அளிக்கப்பெற்றும் ஏர் இந்தியா நிறுவனம் இத்தொழிலில் வெற்றி பெற முடியவில்லை என்பது வேதனைக்குரியது. பல ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கி ஒரு தனியார் நிறுவனத்தினரால் வெற்றி பெற முடியுமென்றால் அரசு நிறுவனமாகிய ஏர் இந்தியா தன்னுடைய நிர்வாகச் சீர்கேட்டை சீர்செய்து நட்டம் ஏற்படாமல் விமான சேவையை நடத்த முடியாதா என்ற ஐயமே எழுகிறது. அரசு சரியான நடவடிக்கை எடுத்து இந்த நிறுவனத்தைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி எடுக்கவேண்டும். நவரத்னா நிறுவனங்களும், மினி நவரத்னா நிறுவனங்களும் அரசு நிர்வாகத்தில் சிறப்பான செயல்பாட்டில் இருக்கும்போது ஏர் இந்தியா நிறுவனமும் நவரத்னா நிறுவனங்களைப்போல சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதே நம் நம்பிக்கை.

    Share
  • அரசு ஒதுக்கீடு – புதிய கொள்கை!

    பவள சங்கரி

    கல்வி நிலையங்களில் அனுமதிப்பதற்கான ஒதுக்கீடுகளில் முற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கான அளவில் 50.5 சதவிகிதமாகவும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடுகள் 49.5 சதவிகிதமாகவும் இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உயர் மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்களுடைய வாய்ப்பு பிற்படுத்தப்பட்டவர்களின் ஒதுக்கீடான 49.5 சதவிகிதத்திலிருந்துதான் கிடைக்கப்பெறும். அதாவது உயர் வகுப்பு பிரிவினர்க்கான 50.5 சதவிகிதத்திலிருந்து அனுமதி அளிக்கப்படமாட்டாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது உயர் வகுப்பு பிரிவினருக்கான ஒதுக்கீடு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்பதே செய்தி.

    Share
  • புதிய 1 ரூபாய் தாள்?

    பவள சங்கரி

    ரிசர்வ் வங்கி புதிய 1 ரூபாய் தாள்களை உடனடியாக புழக்கத்திற்கு விடப்போவதாக மத்திய அரசு அறிவிப்பு. 1 ரூபாய்க்கு நம் நாட்டில் இன்று என்ன மதிப்பு இருக்கிறது? சிறு வியாபாரிகள் முதற்கொண்டு, சாலையில் யாசகம் வாங்குபவர்கள்கூட ஒரு ரூபாயை வாங்க மறுப்பது அன்றாட நிகழ்வு. இப்படியிருக்க 1 ரூபாய் தாள் வெளியிட 50 காசுகள் செலவழிப்பது தேவையா? ஒரு டாலர், ஒரு பவுண்ட் என்றால் அதற்கு பல பொருட்கள் வாங்கலாம். நம் நாட்டில் 1 ரூபாய்க்கு சின்ன இனிப்பு மிட்டாய் தவிர வேறு எதுவும் வாங்க முடியாது. இந்திய அரசு பொருளாதாரத்தை மேம்படுத்தி ரூபாயின் மதிப்பைக்கூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய காலமிது!

    Share
  • 4வது பணக்கார நாடு!

    பவள சங்கரி

    இன்னும் 5 ஆண்டுகளில் நம் இந்தியா உலகின் 4வது பணக்கார நாடாக முன்னேறப்போகிறது என்று IMF (International Monitory Fund) நிறுவனர் தெரிவித்துள்ளார். தற்போது 4வது இடத்திலுள்ள ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளிவிட்டு நம் இந்தியா அந்த நான்காம் இடத்தைப் பிடிக்கும். ஜிடிபி வளர்ச்சி 8 சதவிகிதத்தை தாண்டிவிடும். ஜிஎஸ்டி இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜெர்மனிக்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள வேறுபாடு 1 டிரில்லியனுக்கும் குறைவாகவே உள்ளது.

    Source : IMF World Economics Outlook Database – Apr. 2017 Edition

    Share
  • வனத்திலும் தண்ணீர் பஞ்சம்!

    பவள சங்கரி

    நீலகிரி மாவட்டத்தின் வனவிலங்கு சரணாலயங்களில் நீரின்றி இந்த ஆண்டில் இதுவரை 36 யானைகள் இறந்துள்ளன. அரசு இதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். முன்பெல்லாம் கோடைகாலத்தில் அங்குள்ள தொட்டிகள், நீர்நிலைகளில் தண்ணீர் எடுத்துச்சென்று நிரப்புவார்கள். தற்போது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. தண்ணீர் தேடியே விலங்குகள் மக்கள் வாழும் பகுதிகளுக்கு நுழைகின்றன… இதைக்கருத்தில் கொண்டு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ஆந்திர மாநிலம் கடப்பாவில் கோடையின் கொடுமையால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு முதியோர்களையும், குழந்தைகளையும் தவிர்த்து மற்றையோர் ஊரையே காலிசெய்யும் கொடுமை ஏற்பட்டுள்ளது! போர்க்கால நடவடிக்கை உடனடி தேவை.

    வறட்சி அதிகமாகி, தண்ணீர் தேவை அதிகமாகியுள்ள இந்தக்காலகட்டத்தில் கட்டுமானப்பணிகளை சிறிது காலம் நிறுத்தி வைக்கலாமே? கட்டுமானப் பணியாளர்களுக்குரிய மாற்று பணிகளும் ஏற்பாடு செய்யவேண்டும். அல்லது கட்டுமானப் பணிகளில் தண்ணீர் இன்றி செய்யக்கூடிய பணிகளை மட்டும் தற்போது செய்துகொண்டிருக்கலாம். இது கட்டுமானப்பணி மட்டுமன்றி அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும்.

    Share
  • உயிர் காக்கும் மருந்துகள்..

    பவள சங்கரி

    நடுவண் அரசு உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் குறைந்த விலையில் மக்களை சென்றடையவேண்டும் என்ற நன்முயற்சியை ஏற்படுத்தியுள்ளது. இதயப் பிரச்சனைக்குரிய நிவாரணியான stent ஸ்டெண்ட், 29,600 ரூயாய் விலையில் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. அபோட் மருந்து கம்பெனி தன்னுடைய இரண்டு உயர் மதிப்புடைய ஸ்டெண்ட் வகைகளை இதிலிருந்து விலக்கு அளிக்க கோரியுள்ளது. இதே நிறுவனம், தங்களுடைய காலாவதியான மருந்துகளைத் திரும்பப்பெற மறுத்துவருகின்றன. இந்த பன்னாட்டு நிறுவனம் நமது நாட்டில் விற்பனை செய்துகொண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுக்கொண்டு அரசின் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. 2 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த ஸ்டெண்ட் நமது பிரதமரின் முயற்சியால் ஏழைகளும் பயன்படும் வகையில் ரூ 29,600 க்கு விலை நிர்ணயித்துள்ளனர். இந்த விலையே இவர்களின் லாபத்தையும் கணக்கில்கொண்டே நிர்ணயித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • மருத்துவர்களின் தேவையும் – சேவையும்

    பவள சங்கரி

    பிரெக்ஸிட் (BREXIT) அதாவது பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நடவடிக்கைகள் ஆரம்பித்த பிறகு இங்கிலாந்தில் மருத்துவர்களின் தேவை அதிகரித்தவண்ணம் உள்ளது. குறிப்பாக இந்திய மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளதால் அந்த அரசு இந்திய மருத்துவர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. இங்கு 2000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மக்களின் நலனில் அக்கறை கொண்டு அந்நாட்டு அரசு செயல்படுகிறது. இந்தியாவில் 10,000 பேருக்கு ஒரு மருத்துவர்தான் என்று இருக்கும் நிலையில் ஒரு மருத்துவரை உருவாக்குவதற்கு அரசிற்கு பல இலட்சங்கள் செலவாகிறது. இங்கே படித்துவிட்டு இந்த மருத்துவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு சென்றுவிடுகின்றனர். ஒவ்வொரு நாளும் அரசு மருத்துவமனையில் சென்று பார்ப்பவர்களுக்கு இதன் ஆதங்கமும், வேதனையும் புரியும். ஆகவே நமது இந்தியாவில் படித்து பட்டம் பெறுகின்ற அனைத்து மருத்துவர்களும், வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமாவது அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவம் செய்வது கட்டாயமாக்கப்படவேண்டும். இது இருதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள், உயர் மருத்துவம் புரியும் மருத்துவர்களுக்கும் பொருந்துதல் வேண்டும். இம்மருத்துவர்கள் தங்களது சொந்த மருத்துவமனையிலாவது வாரத்திற்கு ஒரு நாளாவது இலவச சிகிச்சை அளிக்க முன்வருவது கட்டாயமாக்கப்படவேண்டும். தில்லியில் நடைமுறையில் உள்ளது போன்று அனைத்து நகரங்கள், பெரு நகரங்களிலும் இதைச் செயல்படுத்த வேண்டியது அவசியம்.

    Share
  • பெட்ரோலியப் பொருட்களுக்கு அன்றாட விலை நிர்ணயம்

    பவள சங்கரி

    மே 1 முதல் பாண்டிச்சேரி, விசாகப்பட்டினம், உதயபூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகார் ஆகிய ஐந்து நகரங்களில், அனைத்து பெட்ரோலியப் பொருட்களுக்கும் பரிட்சார்த்த முறையில் தினசரி விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. பின் படிப்படியாக அனைத்து நகரங்களிலும் இந்த முறை தொடரும். 2012 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மிகுந்த இலாபத்தை ஈட்டி வரும் இந்த நிறுவனங்கள் விலைவிதிப்பிலும் தனிக்கொள்கைகளை கடைபிடித்து போட்டிச் சந்தையை ஏன் உருவாக்குவதில்லை?

    Share
  • தெய்வப் புலவர்!

    பவள சங்கரி

    1330 குறட்பாக்களை ஈரடியில் எழுதிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒரே ஒரு நாலு வரி பாடல் எழுதியுள்ளார்.

    images

    அடியிற்கினியாளே அன்புடையாளே
    படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
    பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
    இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு

    அன்பு மனைவி இறந்தபின் அவர்தம் பிரிவைத் தாங்காமல் கலங்கி நின்றவர் , நேற்றிருந்தவர் இன்றில்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்று பாடியவர், அதன்படி தம் மனைவியாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டியவர், அப்பிரிவைத் தாளாமல் இப்படி எழுதியுள்ளார்!

    திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்
    1. ஞானவெட்டியான் – 1500 பாக்கள்
    2. திருக்குறள் – 1330 பாக்கள்
    3. ரத்தினசிந்தாமணி – 800 பாக்கள்
    4. பஞ்சரத்தனம் – 500 பாக்கள்
    5. கற்பம் – 300 பாக்கள்
    6. நாதாந்த சாரம் – 100 பாக்கள்
    7. நாதாந்த திறவுகோல – 100 பாக்கள்
    8. வைத்திய சூஸ்திரம் – 100 பாக்கள்
    9. கற்ப குருநூல் – 50 பாக்கள்
    10. முப்பு சூஸ்திரம் – 30 பாக்கள்
    11. வாத சூஸ்திரம் – 16 பாக்கள்
    12. முப்புக்குரு – 11 பாக்கள்
    13. கவுன மணி – 100 பாக்கள்
    14. ஏணி ஏற்றம் – 100 பாக்கள்
    15. குருநூல் – 51 பாக்கள்

     

    Share
  • தீம்புளி

    பவள சங்கரி

    தீம்புளி சாப்பிட்டதுண்டா? சங்கப்பாடல் சொல்லும் சுவையான பண்டம்!

    புளியையும் கருப்பங்கட்டியையும் சேர்த்துப்பிசைந்து அதைப் பொரிப்பார்கள். இப் பண்டத்துக்குத்தான் தீம்புளி என்று பெயர்.

    பரதர் தந்த பல்வேறு கூலம்
    இருங்கழிச் செறுவிற் றீம்புளி வெள்ளுப்புப்
    பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
    கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல் . . (மதுரை காஞ்சி 318)

    பண்டமாற்று முறை வாணிபத்தில், நம் நாட்டிற்கு குதிரைகளை மரக்கலங்களில் ஏற்றிக் கொண்டுவந்த யவனர்கள் அதே மரக்கலங்களில் பொன் அணிகலன்களையும், தீம்புளி, உப்பு, உணக்கிய மீன் ஆகியவற்றையும் தத்தம் நாடுகட்கு ஏற்றிச் செல்லுவார்களாம்.

    Share
  • புற்று நோய் சிகிச்சை

    பவள சங்கரி

    புற்று நோய் மருத்துவத்திற்காக கடந்த 5 ஆண்டுகளில் 50 வகையான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து மேலை நாடுகளிலும் பயன்பாட்டிற்கு வந்தபோதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 7 வகையான மருந்துகள் மட்டுமே பயன்பாட்டிற்கு வந்துள்ளன. புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் நம் நாட்டிலும் உடனடியாகக் கிடைக்கும்படி தமிழ்நாட்டிலுள்ள அடையார் புற்றுநோய் மருத்துவமனையும், மும்பை டாடா நினைவு புற்றுநோய் மருத்துவமனையும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த புதிய சிகிச்சை முறைகள் (தெரபி) உலகின் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க வேண்டியதும் அவசியம்.

    Share
  • ’அம்ருத்’ வளர்ச்சித் திட்டம்!

    பவள சங்கரி

    ’அம்ருத்’ வளர்ச்சித் திட்டத்திற்கான நிதியாக தமிழகத்துக்கு ₹11,237 கோடி நடுவண் அரசு வழங்குகிறது. இதில் தமிழகத்தின் பெரும்பாலும் அனைத்து பெருநகரங்களும் (500) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்னாளுகை, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, நிதிச்சீர்திருத்தம் போன்றவற்றோடு, அடிப்படை வசதிகளான, கழிவு மேலாண்மை, சாலை வசதி, கால்வாய் வசதி போன்றவையும் அடங்கும்… அவரவர் பகுதிகளுக்கு என்னென்னத் தேவை உள்ளது என்பதை நாமும் பட்டியலிட்டு முன்வைக்கத் தொடங்கினால், நம்ம ஆட்சியாளர்களுக்கும் உதவியாக (?) இருக்கும் இல்லையா?

    Share
  • பெற்றோருக்கு…. !

    பவள சங்கரி

    இளைஞர்களின் தற்கொலை முயற்சிக்கு மன அழுத்தமே காரணம். 14 வயது முதல் 24 வயதுவரை உள்ள இளைஞர்களிடம் இந்தப்பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ளது. 2013 – 14 இல் 15,000 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலைமாறி 2015 – 16 இல் கர்நாடகாவில் மட்டும் 54,000 என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது என்பது அதிர்ச்சியான செய்தி . ஆண்டிற்கு ஆண்டு இது அதிகரித்து வருகிறது. இளையோரின் மன அழுத்தத்தின் முக்கிய காரணியாக பெற்றோர்களின் அதீத எதிர்பார்ப்பும், வேலையின்மையும் இறுதியாக காதல் விவகாரமும் தான் என்கிறது இந்த ஆய்வறிக்கை. கர்நாடகாவில் ஆரோக்கியவாகினி என்ற அமைப்பு அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் தங்கள் மன அழுத்தம் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்க்ளைவிட நகர்ப்புற இளைஞர்களுக்கே இந்தப் பிரச்சனை அதிகமாக உள்ளதாம். தமிழ்நாட்டிலும் இதுபோன்றதொரு அமைப்பு உடனடியாக ஏற்படுத்துவது அவசியம்.  பெற்றோர்கள் குழந்தைகளை அக்கறையுடன் அணுகி அவர்களின் மன நிலையை அறிந்து அதற்கேற்ற வகையில் அவர்களை வழிநடத்த வேண்டியது அவசியம். முக்கியமாக அதீத எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொண்டு, தேவையற்ற திணிப்பை தவிர்க்க வேண்டியது அவசியம்.

    Share