மருத்துவர்களின் தேவையும் – சேவையும்
பவள சங்கரி
பிரெக்ஸிட் (BREXIT) அதாவது பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நடவடிக்கைகள் ஆரம்பித்த பிறகு இங்கிலாந்தில் மருத்துவர்களின் தேவை அதிகரித்தவண்ணம் உள்ளது. குறிப்பாக இந்திய மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளதால் அந்த அரசு இந்திய மருத்துவர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. இங்கு 2000 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மக்களின் நலனில் அக்கறை கொண்டு அந்நாட்டு அரசு செயல்படுகிறது. இந்தியாவில் 10,000 பேருக்கு ஒரு மருத்துவர்தான் என்று இருக்கும் நிலையில் ஒரு மருத்துவரை உருவாக்குவதற்கு அரசிற்கு பல இலட்சங்கள் செலவாகிறது. இங்கே படித்துவிட்டு இந்த மருத்துவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு சென்றுவிடுகின்றனர். ஒவ்வொரு நாளும் அரசு மருத்துவமனையில் சென்று பார்ப்பவர்களுக்கு இதன் ஆதங்கமும், வேதனையும் புரியும். ஆகவே நமது இந்தியாவில் படித்து பட்டம் பெறுகின்ற அனைத்து மருத்துவர்களும், வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமாவது அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவம் செய்வது கட்டாயமாக்கப்படவேண்டும். இது இருதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள், உயர் மருத்துவம் புரியும் மருத்துவர்களுக்கும் பொருந்துதல் வேண்டும். இம்மருத்துவர்கள் தங்களது சொந்த மருத்துவமனையிலாவது வாரத்திற்கு ஒரு நாளாவது இலவச சிகிச்சை அளிக்க முன்வருவது கட்டாயமாக்கப்படவேண்டும். தில்லியில் நடைமுறையில் உள்ளது போன்று அனைத்து நகரங்கள், பெரு நகரங்களிலும் இதைச் செயல்படுத்த வேண்டியது அவசியம்.