தேமொழி
அடிவானத் தேயங்குப் பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினொடு சுழலக் காண்பாய்
இடிவானத் தொளிமின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
முடிவான வட்டத்தைக் காளி யாங்கே
மொய்குழலாய், சுழற்றுவதன் மொய்ம்பு காணாய்.
வடிவான தொன்றாகத் தகடி ரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய். (150)
– பாஞ்சாலி சபதம், பாரதியார்
பாடல் சொல்வது:
சூரியனாகிய கோளம், அடிவானத்தில் மிக விரைவாகச் சுழல்வதைப் பார். வானத்தில் இடிகளோடு கூடிய பத்துக் கோடி மின்னல்களை எடுத்து, அவற்றை உருக்கி, வார்த்து, ஒரு தகட்டை உருவாக்கிக் காளி அம்மை என்ன விரைவாகச் சுற்றுகிறாள் என்பதைக் காண்பாய். என்ன வலிமை, என்ன மாட்சி இங்கே வெளிப்படுகிறது, பார்! ஒரு தகடு என்றா சொன்னேன்! இரண்டு தகடுகள் அல்லவா இருக்கின்றன! இரண்டு தகடுகள் ஒன்றன் மேலொன்றாகப் பொருந்தி, இங்கே வட்டமாகச் சுழல்கின்றன.
பதவுரை – ஹரிகி (ஹரி கிருஷ்ணன்)
அவர்களின் பாஞ்சாலி சபதம் – என்னுரை தொகுப்பிலிருந்து
<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 6>>


Leave a Reply