Advertisements
Featuredஇலக்கியம்பத்திகள்

தேவன் நூறு – தேவன் ஒரு சகாப்தம் – 6

திவாகர்

தேவன் ஒரு சகாப்தம் – 5

கும்பகோணம் போலீஸ் ஸ்டேஷனில் சி.ஐ.டி. சந்துருவும் ஸர்க்கிள் இன்ஸ்பெக்டர் கோபாலனும் நாற்காலிக்கு ஒரு எமனாக இரண்டு எமன்கள் உட்கார்ந்திருப்பதாக சுந்தரத்துக்குப் படுவதாகவும், ஒரு எமனிடமிருந்து தப்பினால் இன்னொரு எமனிடம் மாட்டியே ஆகவேண்டும் என்றும் தேவன் எழுத, அந்த எழுத்துக்கள் மூலமாக ஒரு சுவாரஸியமான உரையாடல் தொகுப்பை நாம் இங்கே பார்க்கலாம். சுந்தரம் கால்கள் நிலையற்று தவிக்க தட்டுத் தடுமாறிச்சென்றுதான் அந்த பிரசித்தி பெற்ற நாற்காலியில் அமர்கிறான். சந்துரு ஆரம்பிக்கிறார்.
.
“உம்.. சுந்தரம் ஸார்! இதற்கு பதில் சொல்லுங்கள்!”

“ஆஹா.. இதோ சொல்லிவிடுகிறேன்.. எதற்கு?”

”இனிமேல் நான் கேட்கப்போகிற கேள்விக்கு!”

“ஓ! அதற்கென்ன? ஓ! கேளுங்கோ, கேளுங்கோ.. ரைட்!”

“நரஸிம்மனும் மாயவரத்துக்கு வந்தார்! நீங்களும் மாயவரம் போனீர்களே.. அது எப்படி?

“ஓ! அதுவா.. நரஸிம்மன்.. என்னை அங்கே வரும்படி சொன்னான்.”

“சரி, எதற்காக சொன்னார்?”

உம், அதை அவனையே நீங்கள் கேட்டுவிடலாமே?”

“கேட்பதற்கு பதில் சொல்லும்.. என்ன காரணத்தைச் சொல்லி உம்மை அவர் வரச் சொன்னார்?”

“காரணம் ஒண்ணுமில்லே.. நான் தான் என்னை வரச்சொல்லும்படி அவனைச் சொல்லச் சொன்னேன்!”

“உம்மை அவர் வரச் சொன்னார் என்றீரே.. சித்தே முந்தி?”

“ஆமாம்! அவனை விட்டு என்னைச் சொல்லச் சொன்னேன்.. அவன் சொன்னான்.. ஹிஹிஹி..”

“அட, அவரை ஏன் ஐயா நீர் அப்படிச் சொல்லச் சொன்னீர்?”

“அதைச் சொல்றேளா? தெரிஞ்சுண்டேன்! தெரிஞ்சுண்டேன்..அதுவா கேக்கறேள்? ஓஹோ!”

“ஓய்! நான் கேட்டதற்குப் பதறாமல் பதில் சொல்லும்!”

”என்ன கேள்வி அது?”

“நீர் ஏன் ஐயா அவர் கூட மாயவரம் போனீர்?”

“நான் போகவே இல்லையே.. அவன் தானே கூப்பிட்டான்?”.

“உஷ்! அதற்கு நீர்தானே அவரைக் கூப்பிடச் சொன்னதாகச் சொன்னீர்?”

“அதுவும் சரி! நான் சொன்னேன், “அடே நரஸிம்மா! நானும் வரேண்டா மாயவரத்துக்கு, என்னைக் கொஞ்சம் நீ கூப்பிடுடா” அப்படின்னேன். அவன் உடனே என்னைக் கூப்பிட்டுட்டான்.. நான் உடனே புறப்புட்டுட்டேன்.. ஹி ஹி ஹி..”

“இதென்னயா உளறல்.. நாங்கள் என்ன பயித்தியக்காரங்களா?”

“நோ நோ! யார் சொன்னது? நான் அப்படி எங்கே சொன்னேன்? கேட்டுப் பாருங்கோ!” சுந்தரம் திருதிருவென்று நாலுபுறமும் விழித்தான்.

ஸர்க்கிள் மேஜை மீது கையைத் தட்டினார்; “சுந்தரம், பல விஷயங்களை நீர் மறைக்கிறதாக உம்ம பேரில் எங்களுக்கு ஒரு சந்தேகம் இருந்து வருகிறது.. ஆகையால்..”

“எனக்கு அதைக் கேட்க ரொம்ப வருத்தமாக்யிருக்கிறது சார்!”

“உம்ம வருத்தம் இருக்கட்டும்! உமக்கு இது விஷயமாக தெரிந்ததை எங்களிடம் ஒளிக்காமல் சொல்லப்போகிறீரா.. இல்லையா?”

“கட்டாயமா சொல்றேன்.. நிமிஷத்திலே சொல்றேன்.. ஒரே வார்த்தையிலே கூடச் சொல்லிடறேன்.. உங்கள்கிட்ட சொல்லாம யார்கிட்டேச் சொல்லப்போறேன்? ஹிஹிஹி”

சந்துரு நெற்றிப்பொட்டுகளை அமுக்கி விட்டுக்கொண்டே, “ஏன் ஸார் சுந்தரம்! உம்மை நாங்கள் அழைத்துக் கொண்டு வந்த போது உங்களிடம் பரபரப்பே தென்படவில்லையே! இப்படி நடக்கப்போகிறது என்று நீர் எதிர்பார்த்தீரோ?”

“உம்.. ஆமா, ஆமா, ஓ யெஸ்!”

“எப்படி எதிர்பார்த்தீர்?”

“ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நீங்கள் கூப்பிடவேண்டியவர்தானே?”

“எதற்காகவோ?”

“எனக்குத் தெரியாது.. ஆனால் நான் மட்டும் எதிர்பார்த்தேன்”

“அதுதான் ஏன் என்கிறேன்?”

நரஸிம்மன் விறைத்துப் பார்த்தான்.. முட்டாள் சுந்தரம் மாட்டிக்கொண்டுவிட்டானே.. கடைசியில் சந்துரு எப்படியோ மடக்கிவிட்டானே.. சுந்தரமும் இயந்திரம் போல் பதில் சொல்லி வந்தவன் ஒருமுறை திடுக்கிட்டான். உள்ளங்கையை எடுத்து மேஜைமேல் வைத்தான். “மிஸ்டர் சந்துரு! இதைக் கவனித்துப் பாருங்கள்! என்ன தெரிகிறது? ஒரு மெல்லிய கோடு, இதோ இங்கே ஆயுள் ரேகையை வந்து வெட்டுகிறது, இல்லையா?” என்றான்.

”சரி?”

”இந்த இடம் இருபத்தி நாலு முதல் இருபத்தாறு வயது வரைக் குறிக்கிறது..’சீரியோ’ ஹஸ்தரேகை சாஸ்த்திரத்துலே போட்டுட்டான். இப்படி இருந்தால் கோர்ட்டு வழக்குகளில் சம்பந்தம் உண்டு என்று! அதுதான் நான் எதிர்பார்த்தேன்..”

சந்துரு சோர்வுடன் பெருமூச்சு விட்டு நாற்காலியில் சாய்ந்து விட்டார். அட பழி!

“கேளுங்கள் மேலே! இன்னும் என்ன? என்றான் சுந்தரம்.

“மாயவரத்துக்கு ஏன் சார் சுத்து வழியாய் போனீர்கள்?

“ஓ! நாங்கள் போனது சுத்து வழியோ? ஓஹ்ஹோ?”

“உமக்குத் தெரியாதாக்கும்?

“தெரியாது! நீங்கள் இப்போ சொன்னது நல்லதாப் போச்சு.”

“ஏன்?”

”நேர்வழியிலே போயிருந்தா, போகும்போதே பிடிச்சுருப்பேளே”

”அது சரி, பின்னால் நரஸிம்மன் வந்தாரே.. எங்கே அவரை முதலில் பார்த்தீர்கள்?”

“நான் பார்க்கவே இல்லை!”

“ஏன் பார்க்கவில்லை?”

”நாங்கள்தான் பார்த்ததும் வேகமாய்ப் போனோமே?”

“அப்படி வரும்படி சொல்லிவிட்டு அப்படி வேகமாய் போவானேன்?”

“நான் சாஸ்திரிகளை முன்னாலே போய்ப் பார்க்கத்தான்!”

“சாஸ்திரிகளை முன்னால் என்ன பார்வை? சொல்லலாமா?”

“சும்மாத்தான். எனக்கு ஸந்தியாவந்தனத்துலே ஒரு சந்தேகம்! போறதுதான் போறமே, நரஸிம்மன் வரதுக்கு முந்தியே அதைக் கேட்டுடலாம்னு போனேன்!”

“அதைக் கேட்டீரா?”

”கேட்கல்லே, அதுக்குள்ளே நரஸிம்மனே வந்துட்டான். அவனையே கேட்டுத் தெரிஞ்சுக்கலாமுன்னு விட்டுட்டேன்..”

“ஓஹோ! ஸந்தியாவந்தனத்துல சந்தேகம் கேழ்க்கிறதுக்கு மாயவரம் போனேள். இல்லையா?”

“இன்னொரு சின்னக் காரியம். ரொம்ப அல்பக் காரியம்.. அதையும்கூட பார்த்துக்கலாம்னு”

“கம்பளி சமாசாரமா அது?”

“ஓ! அதுதான், உங்களுக்கே தெரிந்திருக்கே! பேஷ்.. பேஷ்!”

“அதிலே என்ன இருந்தது?”

”கம்பளிதான் இருந்தது.. ஆஸ்திரேலியா ஆட்டுக் கம்பளி!”

“வேற ஒண்ணும் இல்லே? அப்படித்தான் நினைச்சேன்.. கொடுத்த போது!”

“அப்படிச் சொல்லுங்கள்!.. அதில் வேறே விஷயம் இருந்தது என்பது எப்போது தெரிந்தது?”

பாருங்கள்.. இதுவரை ஒரு அசடு போலவே இருந்து அச்சுபிச்சு போல பேசிக் குழப்பியவன் போகிற போக்கிலும் பேச்சு சுவாரஸியத்திலும் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே சர்வ சாதாரணமாக வாய் விட்டு உளறி தாங்கள் மாயவரம் சென்றது வைரம் ரத்தினம் வைத்த கம்பளிக்காக என்று சொல்லி  மாட்டிக்கொண்டு விழிப்பதையும், ஒருவாறு மூச்சு முட்டி, விரல்கள் தாளமிடுவது போல நடுநடுங்கி பிறகு ஒருவழியாய் சமாளித்து அது எலி கிடைத்ததால் கம்பளியில் விழுந்த ரத்தின ஓட்டைகள் என்று சொல்லி மழுப்பி விடுவான். ‘கிறுக்குப் பிடித்தவன் மாதிரி பதில் சொல்கிறீரே’.. என்ற எரிச்சலான திட்டலும் வாங்கினாலும் அவன் அசட்டுத் தனமே அன்று எப்படியோ அவனைக் காப்பாற்றியதையும் தேவன் மிக அருமையான உரையாடல்கள் மூலம் நகைச்சுவை உணர்ச்சியோடு இங்கே அள்ளித் தெளித்திருப்பார்.

தேவன் காலத்திலேயே தேவனின் கதைகள் நாடகமாக்கப்பட்டன. நாடக வசனங்களை தேவனே எழுதினார். அந்த நாடகங்களில் கல்யாணியும் ஒன்று.இந்த அழகான கல்யாணியை எழுதுவதற்க்கு முன்னர் ‘கோமதியின் காதலன்’ என்றொரு நகைச்சுவைத் தொடர் விகடனில் எழுதினார். கோமதியின் காதலன் 1945 இல் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களால் நாடகமாக மேடையேற்றப்பட்டது.  பின்னர் 1955 இல் ப. நீலகண்டன் இயக்கத்தில் திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது. இதில் கோமதியாக சாவித்திரியும் காதலனாக நகைச்சுவை நடிகர் டி.ஆர். ராமச்சந்திரனும் நடித்தனர். டி. ஆர். ராமச்சந்திரன் அந்த நாட்களில் பெரிய நகைச்சுவை நடிகராக இருந்திருக்கவேண்டும். அவர்தாம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கூட. இளமையான சாவித்திரிக்கு சற்று வயதான தோற்றத்தில் காணப்படும் ஜமீந்தார் மகனாக நடித்ததால்தான் என்னவோ, டி ஆர் ஆரின் படம் அவ்வளவாக எடுபடவில்லை. கிழக்குப்பதிப்பகம் சமீபத்தில் இந்தக் கதையை மறுபதிப்பு (படத்தில் உள்ளது) செய்த போது, ’இதற்கு ஈடாக இன்னொரு காதல் கதையைமுன்வைப்பது கடினம். எழுதப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை சிரஞ்சீவியாக கோலோச்சிக்கொண்டிருக்கிறது இந்நாவல்.நாயகனும் நாயகியும் அல்ல. காதலும் நகைச்சுவையும்தான் இந்நாவலின் மெய்யான ஜோடி’ என்று முன்னுரை கொடுத்து விளம்பரம் செய்தது.

கோமதியின் காதலன் சினிமாவுக்கு ஏற்ற கதைதான். இரு ஜமீன்களிடையே கோர்ட் வரை சென்றுள்ள பகை. இதில் ஒரு ஜமீந்தார் மகள் கோமதி, அவள் சென்னையில் தங்கிக்கொண்டு படித்து வருகிறாள். எதேச்சையாக அவள் ஊரில் வந்த போது அவளைக் கண்டதும் காதல் கொள்கிறான் பகையாளியின் மகனான  ராஜா. ஆனால் அவனுக்கும் முதலில் பகைவீட்டார் மகள் என்பது தெரியாமல் போகிறது. ஊரில் சகோதரனுடன் சண்டை போட்டுக் கொண்டு சென்னை வந்த கதாநாயகன் பட்டணத்துத் திருடர்களிடம் இருக்கும் பெட்டியையும் இழந்து, கடைசியில் கதாநாயகி தங்கிப் படிக்கும் வீட்டுக்காரரிட்மே வாகன் ஓட்டுனராகச் சேருகிறான் (இதற்கு மேல் கதை வேண்டுமோ.. இதைப் போல சினிமாக் கதைகள் பின்னர் நிறைய வந்துவிட்டன அல்லவா..).. ஆனால் தேவன் சாதாரணமாக ஒரு கதையை இஷ்டம் போல எழுதுவதில்லை. இந்தக் கதையில் மணி என்றொரு வில்லங்கப் பாத்திரம். (திரைப்படத்தில் இந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமாக நடித்தது நடிகர் தங்கவேலு). அவன் கதாநாயகன் பெட்டியைத் திருடும்போது, அதிலுள்ள டைரியைப் படித்துவிட்டு அவனைப் பற்றிய சகல விஷயங்களையும் அறிந்துகொண்டு, தானே உண்மையான ஜமீன் வாரிசு என்று இதுவரை பார்த்தறியாத கதாநாயகியைக் கவர வருவது ஒரு விசேஷம்தான். ஆனால் கதையில் உள்ள சுவாரசியம் திரைப்படத்தில் கிடைக்கவில்லை. ஆனால் இந்தக் கதையில் உள்ள காதலையும் நகைச்சுவையையுமே அப்படியே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சபாஷ் மீனா, காதலிக்க நேரமில்லை போன்ற திரைப் படங்கள் மிகப் பெரிய வெற்றியை ஈட்டுத் தந்தன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

கோமதியின் காதலன் கதை எழுதும்போது உலகப் போர் நடந்து கொண்டிருந்தபடியால். ஜப்பான்காரன் குண்டு போடுவதும், அடிக்கடி அபாயச்சங்கு அலறுவதையும் சுவையாக விவரிப்பார் தேவன். நகைச்சுவை தேவனது கோட்டைதான். இருந்தாலும் அவரது அடுத்த நாவல்களான மிஸ்டர் வேதாந்தம், லக்ஷ்மி கடாட்சம், ஸ்ரீமான் சுதர்ஸனம் போன்றவை நவரசங்களையும் பிரதானமாக கொண்டதாகத்தான் எழுதினார். மிஸ்டர் வேதாந்தம் ஒரு அருமையான பாத்திரம். கதாநாயகனான வேதாந்தமும் சரி, நாயகியான செல்லமும் சரி, வாழ்க்கையின் கஷ்டங்களை அனுபவிக்கவென்றே பிறந்தனர் போலும் என்று வாசகர்களுக்குத் தோன்றும். அதே சமயத்தில் சமுதாயத்தின் அத்தனை குறைகளையும் நிறைகளையும் ஒருங்கே கொண்டு வந்து விடுவார் தேவன். இந்தக் கதையைப் பற்றி ஒரு சில கருத்துகள் உண்டு.

(தொடர்ந்து வரும்)

 

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (1)

  1. Avatar

    தேவனின் உரையாடல்கள் மிகவும் நகைச்சுவையாகவும், படிக்கப் படிக்கத் தெவிட்டாதவையாகவும் இருக்கின்றன. இத்தலைமுறையினருக்கு அற்புத எழுத்தாளர் திரு. தேவன் அவர்களை அறிமுகம் செய்யும் வகையில் இக்கட்டுரைத் தொடரை எழுதிவரும் திரு. திவாகர் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

    -மேகலா

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க