தொல்லை காட்சி: ரபி பெர்னாட் பேட்டி – தோனி -சூப்பர் சிங்கர் – மொக்க பார்ட்டி

0

மோகன் குமார்

பிளாஷ்பேக்: ரபி பெர்னாட் நேர்காணல்கள்

ரபி பெர்னாட் சன் டிவியில் நேர்காணல் துவங்கிய போது பெரும் வரவேற்பை பெற்றது. பரந்த அரசியல் அறிவும், பிரபலங்களை அழைத்து வந்து சர்ச்சைக்குரிய கேள்வியை அவர் பொறுமையாய் கேட்கும் விதமும் அற்புதமாக இருக்கும். பல அரசியல் வாதிகளுக்கு கோபம் வருமளவு விவாதம் வலுத்ததும் உண்டு அதே ரபி பெர்னாட் – அதே நேர்காணலை இன்றும் ஜெயா டிவியில் செய்கிறார் ஆனால் பெரும்பாலானோர் பார்க்கிற மாதிரி தெரியவில்லை. காரணம் இப்போது நடுநிலைமை என்பது சிறிதும் இன்றி முழுக்க முழுக்க அ. தி.மு. க சார்பாக சென்று விட்டதுதான். ரபி பெர்னாடுக்கு ராஜ்ய சபா உறுப்பினராக அரசியல் வாழ்வில் ஏறுமுகம் என்றாலும், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அவரின் இந்த இன்னிங்க்ஸ் அவ்வளவு பிரகாசிக்க வில்லை.

மொக்க பார்ட்டி

சன் மியூசிக்கில் வரும் நிகழ்ச்சி மொக்க பார்ட்டி. போனில் அழைக்கும் நபரை மொக்கை போடா சொல்லி , Compere -ம் சேர்ந்து மொக்கை போடுகிறார். சினிமா நிகழ்ச்சியில் இருந்து ஒரு டயலாக் எடுத்து போட்டும் போனில் பேசுபவரை களாய்க்கிறார்கள் . எல்லாம் சரிதான். சில நேரம் கிண்டல் எல்லையை மீறி விடுகிறது. சமீபத்தில் ஒருவரை களாய்க்கும் போது ” டேய் லூசுக்கு பிறந்த லூசு பயலே ” என்ற சினிமா டயலாக்கின் ஆடியோ வடிவம் போட்டு கிண்டலடித்தனர். போனில் பேசுபவரை கிண்டலடிப்பது வரை சரி. அவர் அப்பாவையும் சேர்த்து ” லூசுக்கு பிறந்த லூசு பயலே ” என்று கிண்டலடிப்பது சரியா? என்னமோ போங்க !

சூப்பர் சிங்கர்

அதென்னவோ தெரியலை.. டிவியில் தொடர்ந்து அல்லது அதிகம் பார்க்கும் நிகழ்ச்சி இதுவாகவே இருக்கிறது. வார நாட்களில் வீட்டுக்கு வருகிற நேரத்துக்கு இதை தான் பார்க்க முடிகிறது என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

பாடுவோர் செலெக்ட் ஆவார்களா இல்லையா என நாமும் ஒரு ஜட்ஜ் மாதிரி அவர்களின் முதல் 2 வரி கேட்டு விட்டு சொல்லுவது ஒரு விளையாட்டு மாதிரி இருக்கிறது. பெரும்பாலும் நாம் சரியாகக் கணித்தாலும், சில நேரம் நம் கணிப்பு பொய்யாகும் போது நம் கோபம் ஜட்ஜ் மீது திரும்புகிறது

நிற்க. சில மிக வித்தியாசமான பாடகர்களை இதில் அவ்வப்போது காண முடிகிறது. முழுக்க பெண் குரலில் மட்டுமே பாடும் நபர், வாத்திய கருவிகளை வாயாலே முழுமையாய் வாசிப்பவர் என மனிதர்களுக்கும் தான் எத்தனை திறமைகள் !

அம்மாவும் ஐயாவும்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் ( Gazette) வெளியிட்டது தனது முக்கிய சாதனை என அம்மா எழுதி வைத்து கொண்டு ஜெயா டிவியில் படிக்க, மறுபுறம் ஐயாவோ கலைஞர் டிவியில் “இதற்கு காரணம் நாங்க தான்” என்றார். தஞ்சாவூரிலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆறுகள் அனைத்தும் வறண்டு கிடக்கு. அதைக் கண்டுகொள்ளாமல், இதை தனது சாதனை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது! கர்நாடகாக்காரர்கள் உச்சநீதிமன்றம் சொல்வதையும் சரி, மத்திய அரசு பேசுவதையும் பெரிதாய் எடுத்து கொள்வதும் இல்லை. தண்ணீர் திறந்து விடுவதுமில்லை. இந்த விஷயத்தில் அங்குள்ள அரசியல்வாதிகள் காட்டும் ஒற்றுமையை நம் தமிழக அரசியல்வாதிகள் காட்டினாலாவது பிரச்சனை நிஜமாய் தீர சற்று வாய்ப்புண்டு

சுஜாதாட்ஸ் 10 – காணொளி

நமது தல சுஜாதா இளைஞர்கள் செய்ய வேண்டிய 10 விஷயம் என்று எழுத்தில் எழுதியதை நிச்சயம் ஏற்கனவே படித்திருப்பீர்கள். அதனை அப்படியே ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசியுள்ளார் இயக்குனர் கரு. பழனியப்பன். யூ டியூபில் தேடி கேட்டு பாருங்கள். தலைவர் சொன்னது இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது !

கிரிக்கெட் கார்னர்

மீண்டும் சென்னையில் ஒரு கிரிகெட் மேட்ச். அஸ்வின் தனது Career best பந்து வீச்சை சொந்த மண்ணான சென்னையில் வீசியது ஒரு பக்க மகிழ்ச்சி என்றால், சச்சின் மீண்டும் பார்முக்கு வந்தது இன்னொரு மகிழ்ச்சி. சென்னையில் கிரிக்கெட் நடக்கும் போது ரேடியோவில் தமிழ் காமண்டரி சொல்வது வழக்கம். அப்போதெல்லாம் டிவி யில் கிரிகெட் மேட்ச் ஆன் செய்து விட்டு, சவுண்டை மியூட் செய்து, ரேடியோவில் தமிழ் காமண்டரி ஆன் செய்து வைத்து விடுவோம். தமிழில் காமண்டரி கேட்டவாறு, டிவி யில் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் ஆனந்தம் இருக்கே.. அடடா ! சொர்க்கம் !

தோனியின் அதிரடி ஆட்டம் – தனி பதிவு எழுதி பாராட்ட வேண்டும்.. இந்த 1 பதிவு போதாது 🙂

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *