நான் அறிந்த சிலம்பு – 60 (25.02.13)
புகார்க் காண்டம் – 07. கானல் வரி
(23)
காமம் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை
எய்தியோன் சொல்லுதல்
இளமையான அன்னமே!
நீ இவளுடன் நடந்திடாதே! நடந்திடாதே!
அலைகள் சூழும் கடல்பகுதியில் வாழ்பவரை
தமது அழகால் கொன்று திரிகிறாளே!
இவள் நடைக்கு நின் நடை ஒப்பாகாது!
அதனால் அவளோடு நடந்திடாதே!
(24)
கட்டுரை
மாதவி, கலவியால் மகிழ்ந்தாள்போல் கோவலனிடம்
இருந்த யாழை வாங்கி, புலவியால் கானல் வரி பாடத் தொடங்குதல்
அவ்விடத்தில்
கோவலன் யாழதனில் வாசித்த
கானல்வரிப் பாடல்களை
மான் போன்ற நெடிய கண்களையுடைய
மாதவி கேட்டனள் .
அவன் பாடிய பாடல்களில்
பிறிதொரு பெண்ணைப் பற்றிய
எண்ணங்கள் உள்ளடக்கிய
குறிப்புகள் இருந்தன என்றும்,
இவன் அன்றைய தன் நிலையிலிருந்து
தன்னோடு கூடியிருந்த நிலையிலிருந்து
இன்று பெரிதளவும் மாறியிருக்கிறான் என்றும்
எண்ணினள் மாதவி.
மனதில் ஊடல் கொண்டாலும்
அவனுடன் கூடியிருந்த அக்கணத்தில்
இன்புற்றவள் போலவே
தோன்றினள் மாதவி.
யாழினை அவனிடமிருந்த வாங்கி,
வேறு குறிப்புகளை மனதில் கொண்டவள் போலவே
தன் இனிய குரலில்
பாடத் தொடங்கினள் மாதவி.
அந்நிலத்துக்குரிய தெய்வமாகிய வருணனும்
அப்பகுதிவாழ் மக்களும் கேட்டு
இன்புறும்படி வியந்திருக்கும்படி
யாழதனுடன் இரண்டறக் கலந்து
தன் இனிய குரலில்
பாடத் தொடங்கினள் மாதவி.
அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram20.html
படத்துக்கு நன்றி:
http://www.nagapattinam.tn.nic.in/thestory.html