“ ஆட்ரா ராசா”
தமிழ்த்தேனீ
“இது அரசியல் தொடர்பான கதை அல்ல, இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல”
—————————————————————————————————————————–
“கீழே இருக்கும் சாதாரண மக்களைப் பற்றிக் கவலையே இல்லாமல் பூமியைவிட்டு சற்று உயரத்தில் இருக்கும் மரங்கள், மலைகள் போன்றவற்றிலேயே உலாவி வாழ்க்கையின் சுகங்களை அனுபவித்து தனக்கு வேண்டிய போது மட்டும் கீழே இறங்கி வந்து மக்களிடம் இருக்கும் கனியை தட்டிப் பறித்து மேலே சென்றுவிடும் குரங்குகள்.”
தமிழ்த்தேனீ
ஏங்க தோட்டத்துப் பக்கம் போயி பாருங்க, காக்காய் கூட்டம் கும்பலா பறக்குது, கா கா ன்னு ஒரே கத்தல் வேற என்றாள் அலமேலு,
இதோ பாக்கறேன் என்றபடி எழுந்து சென்ற அவரை ஒரு சொக்காய் போட்டுண்டு போங்க, வெறும் உடம்போட போகாதீங்கோ, பூச்சி பொட்டு இருக்கப் போறது என்றாள் அலமேலு,
சரி என்று ஒரு சொக்காயை எடுத்து மாட்டிக்கொண்டு தோட்டத்துப் பக்கம் கதவைத் திறந்தார் வெங்கடேசன் , ஒரு பெரிய குச்சியை கையில் கொடுத்து இதை எடுத்துண்டு போங்கோ, , போனவாரம் ஒரு பாம்பு வந்துதே அதிலேருந்து எனக்கு பயமா இருக்கு என்றாள்/;.
ஒண்ணும் பயப்படாதே அலமேலு இந்த மாதிரி பாம்பு , பல்லி, எறும்பு, கொசு குரங்கு இதெல்லாத்தோடயும் வாழக் கத்துக்கணும், இல்லேன்னா இந்தக் காலத்திலே வாழ முடியாது. நான் பாத்துக்கறேன் நீ இங்கேயே இரு என்று கூறிவிட்டு தோட்டத்துக்கு போனார் வெங்கடேசன். ஜன்னல் வழியா அவரையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அலமேலு.
காக்காய்கள் ஒரு இடத்தைக் குறிவைத்து பறந்து பறந்து கத்திக் கொண்டிருந்தன. அங்கே உற்றுப் பார்த்தார் வெங்கடேசன், அந்த மரக் கிளையில் ஒரு குரங்கு இந்தக் காக்காய்களின் கூக்குரல்களினால் சற்றும் பாதிக்கப்படாமல் அலக்ஷியமாக உட்கார்ந்து ஒரு பப்பாளிப் பழத்தை தின்பதிலே கவனமாக இருந்தது.
காக்காய்களுக்கு அந்தக் குரங்கு மரத்திலே இருக்கும் தங்களின் கூட்டைக் கலைத்துவிடுமோ என்று பயம். ஆனால் அவைகளின் பயமும் பல நேரங்களில் உண்மையாகி இருக்கின்றதே,
குரங்குகள் தங்களுக்குள்ளே ஏற்படும் விரோதங்களினால் பல பிரிவாகப் பிரிந்து சுய லாபத்துக்காக அடித்துக்கொள்ளும்போது எதிர்ப்படும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுயலாபத்தை மட்டுமே கணக்கில் வைத்துக்கொண்டு பல குருவிக் கூடுகளையும், பல பறவைகளின் கூடுகளையும் பிய்த்துப் போட்டுவிட்டு சென்று விடுவது பலகாலமாகவே நடந்து கொண்டிருக்கிறது
அதனால் ஏற்பட்ட உயிர்ப் பயத்தாலும் ,தங்கள் குழந்தைகளைப் பற்றிய பயத்தாலும் காக்காய்கள் கும்பலாக ஒன்று கூடி குரங்கைத் துரத்துவதிலே கவனமாய் இருந்தன ஐந்தறிவு மட்டுமே இருக்கும் இந்த பறவைகளின் உணர்வுகள் ஆறரிவு கொண்ட மனிதருக்கு ஏன் வரவில்லை, மிருகங்கள் பறவைகள் இவைகளைப் பார்த்தாவது மனிதர்கள் திருந்த வேண்டும்.
மனிதருக்கு இந்த ஒற்றுமை எப்போது வருமோ என்று தோன்றியது அவருக்கு, காக்காய்கள் உணவுண்ணும் போதும் உறவினர்களை அழைத்து பங்கிட்டு உண்கின்றன, துன்பம் வரும் வேளையிலும் ஒன்றாகக் கூடி எதிர்கொள்கின்றன. பாராட்ட வேண்டியதுதான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் வெங்கடேசன்,
பப்பாளிப் பழத்தை ரசித்து உண்டுவிட்டு அதன் தோலை விசிறி எறிந்து விட்டு மரத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தது குரங்கு.
ஏங்க அந்தக் குரங்கு எறங்கி வருது உள்ளே வந்துடுங்க என்று கூவினாள் அலமேலு, மதில் சுவற்றின் மேல் வந்து உட்கார்ந்து இவரை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு இவரைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் நடந்து சென்று பக்கத்திலே இருந்த பீ எஸ் என் எல் கோபுரத்துக்கு தாவி அதன் மேல் அனாயாசமாக கிடு கிடுவென்று ஏறி மேலே சென்று உட்கார்ந்து கொண்டது.
அப்போதுதான் கவனித்தார் வெங்கடேசன் அங்கே ஏற்கெனவே இந்தக் குரங்கின் துணைவி உட்கார்ந்து கொண்டிருப்பதை. மேலே சென்ற குரங்கு கையில் வைத்திருந்த இன்னொரு பப்பாளிப் பழத்தை அன்போடு துணைவிக்கு கொடுத்துவிட்டு தன் துணைவி அந்தப் பப்பாளிப் பழத்தை உண்ணும் அழகை ரசித்த படியே சாவகாசமாக உட்கார்ந்து துணைவியாரின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கியது.
மீண்டும் வாசலில் காக்காய்களின் கூக்குரல் கேட்டது , அட என்னடா இது தொந்தரவு என்று யோசித்துக் கொண்டே வெங்கடேசன் வாசலுக்கு வந்து பார்த்தார், யாரோ ஒரு வடநாட்டு மனிதன் ஒரு குரங்கின் கழுத்தில் கயிற்றில் கட்டி தன் தோளிலே உட்காரவைத்துக்கொண்டு வந்து ஒரு மேளத்தை அடிக்கத் தொடங்கினான்,
குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் கூட்டமாய்க் கூடி வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.
அந்தக் குரங்கு அந்த வடநாட்டான் கொடுத்த ஒரு வேர்க்கடலையை தின்றுவிட்டு அவன் சொல்வதையெல்லாம் செய்யத் தொடங்கிற்று.
அவன் வைத்திருந்த கொம்பில் தலை கீழாக தொங்கியும், அந்தக் கொம்பை தன் தோளிலே வைத்துக்கொண்டு குட்டிக் கரணமடித்தும் வேடிக்கை காட்டியது. எப்படியும் இந்த மனிதன் தன் பசிக்கு வேண்டியதை கொடுப்பான் என்னும் நம்பிக்கையுடன் ஆடுடா ராசா ஆடுடா ராசா என்று அவன் கொடுக்கும் குரலுக்குத் தகுந்தவாறு அவன் சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருந்தது.
வேடிக்கை பார்க்கும் மக்களையும், ஆடும் அந்தக் குரங்கையும் , பீ எஸ் என் எல் கோபுரத்தின் உச்சியிலிருந்து அந்த இரு குரங்குகளும் வேடிக்கை பார்க்கத் தொடங்கின.
ஒரு வேர்க்கடலைக்காக வேடிக்கை செய்து உயிர் வளர்க்கும் இந்தக் குரங்கு எப்போது கோபுரத்தை நிமிர்ந்து பார்க்கும்? எப்போது தான் அடிமைப் பட்டிருப்பதை உணரும் என்று எண்ணமிட்டபடியே உள்ளே வந்தார் வெங்கடேசன்.
தொலைக் காட்சியில் ஒருவர் பாம்பு போல் வேடமிட்டு ஆடிக்கொண்டிருந்தார், மற்றொருவர் சிங்கம்போலவும், புலி போன்றும் உடலில் வண்ணங்களைப் பூசிக்கொண்டு புலிஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார்.
மீண்டும் வாசலில் ஒரு குரல் ஒரு மனிதன் முட்ட முட்ட சாராயத்தைக் குடித்துவிட்டு டேய் யாரும் நம்மளை ஒண்ணும் செய்ய முடியாது ,
எவனாவது கிட்டே வந்தீங்க குடலை உருவிடுவேன், நான் குடிச்சிருக்கேனு பாக்கிறியா? எவ்ளோ குடிச்சாலும் நான் ஸ்டடியா இருப்பேன், பாரு எப்பிடி நேரா நடக்கறேன் பாரு , கொஞ்சம் கூடத் தள்ளாட மாட்டேன் என்றாவாறு தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்தான்.
எல்லா மிருகங்களின் வேடமும் , பாம்பு போன்றவைகளின் வேடமும் மனிதருக்கு பொருந்துகிறதே. எந்த ஒரு மிருகமோ மற்ற எந்த ஜீவராசிகளுமோ ஏன் மனித வேடம் போடுவதில்லை என்று யோசித்தார் வெங்கடேசன்.
சிறு வயதில் கிராமத்திலே வளரும்போது, விலங்கினங்கள் சூது, வாது அறியாதது!..என்று சொல்லக்கேள்விப் பட்டிருக்கிறேன். மனிதன் அறிய முடியாத சில அபூர்வ சக்திகளைக்கூட விலங்கினங்கள் பெற்றிருப்பது கடவுளின் படைப்பின் ரகசியங்களுள் ஒன்று. கதையாசிரியரின் கடைசி வரிகளைப் படிக்கும்போது, மனிதன் மட்டுமே பொறாமை, சூது, வாது போன்ற குணங்களை உடையவன் என்பதாலோ? என்னவோ? எந்த ஒரு மிருகமும் மனித வேடம் போடுவதற்கு முன்வரவில்லைபோலும்.
தமிழ்த்தேனீக்கு என் வாழ்த்துக்கள். இது ஒரு தற்குறிப்பேற்றிய அணி.
பெருவை: மனிதனுக்கு மட்டும் தான் இந்த குணாதிசயம்:
‘படிப்பது ராமாயணம்;
இடிப்பது பெருமாள் கோயில்!