-மீ.விசுவநாதன்
அங்கே பருந்தொன்று பறக்கிறது – அது
அகண்ட வானத்தை அளக்கிறது!
சங்கத் தமிழ்போலச் சிறகடித்து – அது 
சத்தம் போடாமல் விரைகிறது !
சிறகை மடல்போல விரித்தபடி- அந்திச்
சிவப்பை அணைக்கத்தான் முயல்கிறது!
பறவை இனத்திற்குப் பெருமைதர -விஷ்ணு
பாத மிரண்டைத்தோள் சுமக்கிறது!
சொந்த இரையெடுக்க நினைத்தாலோ – ஒரு
சுற்றில் சடாரென்று இறங்கிவரும்!
பந்தைக் குழந்தைகள் எடுப்பதுபோல் – நன்கு
பற்றி மேலேறிப் பறந்துவிடும்!
அந்தி நேரத்தில் நதிக்கரையில் – அதை
அறவோர் கும்பிட்டு மகிழ்ந்திடுவர்!
எந்த உயரத்தில் இருந்தாலும் – தன்
இறைவன் பெருமாளை நினைத்திருக்கும்!

Leave a Reply