Month: May 2014

  • உனக்குள் ஒருவன்.. அவனே நீ!

    மாதவன் இளங்கோ  

    கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தையநாள் இரவு விருந்திற்கு பெல்கிய நண்பன் ஒருவனை வீட்டிற்கு அழைத்திருந்தேன்.

    அன்று வழக்கத்துக்கு மாறாக குளிர் சற்று குறைவாகவே (குறைவு என்றால் ‘6 டிகிரி செல்சியஸ்’!!!) இருந்தது. அதனால் உணவருந்திவிட்டு மேலுறைகளையும் கையுறைகளையும் அணிந்துகொண்டு, வாயிலும் மூக்கிலும் புகைவிட்டபடி பேசிக்கொண்டே கால்நடையாக லூவன் நகர வீதிகளில் நடந்து சென்றோம்.

    அவன் ஒரு கடைந்தெடுத்த ‘Introvert’. (ஆனால், அவ்வாறு இருப்பதில் தவறொன்றும் இல்லை.) அவனோடு தனியாக பேசும்போதெல்லாம் என்னுடனேயே நான் பேசிக்கொண்டிருப்பது போலவே உணர்வேன். என் மற்ற நண்பர்களும் இதையேதான் சொன்னார்கள். அந்த அளவிற்கு ஒரு அமைதியான மனிதன்; நல்ல நண்பனும்கூட. வெளிநாட்டவர்களில் (உண்மையில் நான்தானே இங்கு வெளிநாட்டவன்?) இதுபோன்ற மனிதர்களை காண்பது அரிது. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர்கள் அவர்கள். இல்லையென்றால், ஆறு மாதங்களுக்கு முன்பாகவே விருந்தை திட்டமிட்டு அவர்களை அழைக்க வேண்டும். இப்படி இருக்க, நான் அழைத்தேன் என்ற காரணத்திற்காக கிறிஸ்துமஸிற்கு முந்தைய நாள் இன்னொருவர் வீட்டிற்கு வேறு யாராவது வருவார்களா? (அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் அழைப்புவிடுத்தேன் – அதுவும் முகநூலில்) 

    அப்படிப்பட்ட ஒரு மனிதனிடம்தான் அன்று பேசிக்கொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தேன். அந்தத்தெருவே காதை செவிடாக்கும் அமைதியில் மூழ்கியிருந்தது. என்னுடைய குரல் மற்றும் எங்கள் இருவரின் காலணிகள் எழுப்பிய ஓசைகளைத் தவிர வேறு எதுவுமே கேட்காத அளவிற்கு ஒரு நிசப்தம். இதில் இருட்டு வேறு சேர்ந்துகொண்டால் எப்படி இருக்கும்? நாங்கள் நடந்து சென்றுகொண்டிருந்த தெருவில் விளக்குகளும் அப்படியொன்றும் பிரகாசமாக இல்லை. மேலும், குளிர்காலத்தில் இங்கெல்லாம் மாலை நான்கு மணிக்கே இருட்டத் தொடங்கிவிடும் என்றால், இரவு ஒன்பது மணிக்கு எப்படியிருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அப்படியொரு சூழலில் என்னுடைய குரலே எனக்கு சிறிது அச்சமூட்டியது. இதற்காகவாவது இவன் கொஞ்சம் பேசலாம் என்று நினைத்த அடுத்த வினாடி, “உங்களுக்கு எதற்கும் பயமே கிடையாதா? நீங்கள் அலுவலகத்திலும், வாழ்க்கையிலும் எப்படி எல்லாவற்றையும்  ஒரு அசட்டுத் துணிச்சலோடு எதிர்கொள்கிறீர்கள்?” என்று நான் பேசிக்கொண்டிருப்பதற்குத் தொடர்பே இல்லாத இந்தக் கேள்வியை வேகவேகமாகக் கேட்டான்.

    அவன் தரத்திற்கு அது வேகம் மட்டுமல்ல; சற்று நீண்ட கேள்வியும்கூட. அப்போதுதான் அவன் மனநிலை எனக்குப் புரிய ஆரம்பித்தது. அவனுக்குக் கண்டிப்பாக உதவவேண்டும் என்றும் தோன்றியது. அவன் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் எனக்குள்ளே நான் சில கேள்விகளைக் கேட்டு கொண்டிருந்தேன். ஓரிரு மணித்துளிகள் நான் அவனாகவே மாறிவிட்டுப் பின்னர் அவனிடம் மெதுவாக, “ ஏனென்றால், முன்பெல்லாம் நான் ஒரு மகா கோழையாக இருந்தேன்!” என்று கூறினேன். 

    “வாட்???” என்று கண்களை விரித்துக் கேட்டான்.

     ஆமாம். ஆனால், அந்தக் கோழைத்தனத்தில் இருந்து பிறந்ததுதான் இப்போது இருக்கும் இந்த தைரியம்.” என்றேன்.

    “எனக்குப் புரியவில்லை!” என்றான்.

    அப்போது அந்தத் தெருமுனையில் ஒரு வீடு விளக்கு வெள்ளத்தில் நிரம்பிக்கிடப்பதைக் கண்டேன். எனக்கு ஒரே அதிசயம், ஏனென்றால் அந்த வீடு கிட்டத்தட்ட நம்ம ஊர் கல்யாண வீடு போலக் காட்சியளித்தது.  இரண்டே வித்தியாசங்கள் – ‘வாழைமரங்கள் இல்லை’, ‘மணமக்களுக்குப்  பதிலாக சாண்டா கிளாசுக்கு ஒரு சிறிய கட்-அவுட் வைத்திருந்தார்கள்’ அவ்வளவுதான்.  

    குறிப்பு: அப்போது நான் எடுத்த புகைப்படத்தைக்கூட இங்கே பதிவேற்றியுள்ளேன். நீங்களே பாருங்களேன்.

     Christmas leuven city

    இஸரன்மோலென் தெரு, லூவன் நகரம், பெல்கியம்

    ஜொலித்துக்கொண்டிருந்த அந்த வீட்டைக் கண்டபோது, என் மனதில் பளீரென உதித்த ஒரு கேள்வியை என் நண்பனிடம் கேட்டேன் – “இங்கே இந்த மின்விளக்குகள் சிந்திக்கொண்டிருக்கும் ஒளியை இவ்வளவு அழகாய்க் காட்டுவது எது?”  

    “அந்த அலங்கார விளக்குகள் தாம்!” என்றான்.

    “இல்லை, ‘இருட்டு’!” என்றேன்.

    “எப்படி?” என்றான்.

    “வேண்டுமானால் அலங்கார விளக்குகளை பகலில் போட்டுப்பாரேன். இன்னும் சொல்லப்போனால், அதோ அந்த நிலவு அழகாய்த் தெரிவது கூட அந்த அகண்ட ‘இருண்ட’ வானத்தினால்தான்.” என்று கூறிவிட்டு இன்னொரு கேள்வியொன்றை கேட்டேன்.

    “”நம் ஷூக்களின் சத்தத்தை உனக்குக் கேட்க வைத்துக்கொண்டிருப்பது எது?”

    “காது” என்றான்.

    “இல்லை. இந்த நிசப்தம்!” என்றேன். 

    அவன் புருவங்கள் சற்றுச் சுருங்கி குழப்பரேகைகள் படர்வதைக் கண்டுவிட்டு தொடர்ந்தேன்.

    “சரி, இதைக்கூறு. இந்தக் குளிரை எதனால் உணர்கிறாய்?” என்றேன்.

    என் மனைவி மட்டும் அக்கணம் அங்கே இருந்திருந்தால், “ஆரம்பிச்சிட்டீங்களா? அடிக்கற குளிருல அவசியம் இந்த cross examination தேவையா?” என்று கேட்டிருப்பாள்.

    ஆனால், பாவம் அவன் சிறிதுநேரம் தீவிரமாகச் சிந்தித்துவிட்டு,”நீங்களே சொல்லுங்கள்!” என்றான்.

    அப்போது நான் அவனுக்கு அளித்த ஒரு short but soporific lecture session ஐத்தான் இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். 

    ஒளியின் அழகை இருட்டால்தான் காண்பிக்க முடியும். வெப்பத்தின் அருமையை குளிரால்தான் உணர்த்த முடியும். இசையின் இனிமையையும், நுட்பத்தையும் அமைதியால் மட்டுமே அடையாளம் காட்ட முடியும்.

    விளக்குகள் வீசும் ஒளியின் அழகை பகல் காட்டாதது போல, வெப்பத்தின் அருமையை  வெயில் உணர்த்தாதது போல, இசையின் இனிமையை இரைச்சல் நிறைந்த சூழல் உணர்த்தாதது போல –  

    நான் துணிவானவன் என்பதுபோல் காட்டிக்கொண்டிருந்த நாட்களில் அந்தத் துணிவு, எனது துணிவை உணர்த்தவேயில்லை. நான் எப்போது எனக்குள் இருந்த கோழைத்தனத்தை முழுவதுமாக உணர்ந்தேனோ, அந்தக்கணம்தான் எனக்குள் இருந்த தீரனைப் பிரசவித்தேன்.          

    ஒன்றடுத்தொன்றாய் பல முட்கள் என் கால்களைப் பதம் பார்த்து வலியில் துடித்த காலங்கள் உண்டு. எத்தனையோ முட்கள் குத்திக் கிழித்து வலியை உண்டு பண்ணியிருந்தாலும், என் பாதத்தின் வலிமையை உணர்த்திய அந்தக் கடைசி வலிக்குத்தான் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

    அந்தக் கடைசி வலியை உணர்ந்த நாளன்று –

    இருட்டின் நடுவே ஒளியைக் கண்டதுபோல், என் வலிகளினூடே வலிமையைக் கண்டேன்!

    அமைதியிலிருந்து எழும்பிய இசையை உணர்ந்தது போல, என் கோழைத்தனத்தில் புதைந்து கிடந்த துணிவைக் கண்டெடுத்தேன்!     

    அதைக் கண்ட நாள் முதலாய், அச்சமில்லை! அசட்டு துணிச்சல்! அசாத்திய தைரியம்! எல்லாவற்றிகும் மேலாக நாம் பிறந்த மண்! ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்ற திருநாவுக்கரசரும், ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று முழங்கிய மீசைக்காரரும் பிறந்த மண்ணல்லவா?

    எவற்றையெல்லாம் நம்முடைய பலவீனமாக நாம் நினைக்கிறோமோ, அவையெல்லாம்தான் நம் பலத்தை நமக்கு அடையாளம் காட்டும் சாதனங்கள். இருட்டு ஒளியை காட்டுவது போல. நிசப்தம் சப்தத்தைக் காட்டுவது போல.

    எனவே, உன் பலவீனங்களாக நீ நினைப்பதை வரிசைப்படுத்து. அவற்றை உணரு. அவற்றை முழுமையாக உணர்ந்ததால் உன்னில் ஏற்படும் மாற்றங்களும், அந்த பலவீனங்களுமே உன் பலத்தை உனக்கு அடையாளம் காட்டும்! அதற்குப் பிறகு நீ வேண்டினாலும் அது உன்னைவிட்டுப் போகாது! கைவிடுவது கடினம்.

    அந்த அளவிற்கு, உனக்கு நேரெதிரான ஆளாக உன்னையே அது மாற்றிக்காட்டும். அது தான் ‘உண்மையான நீயும்கூட’!     

    இப்படி ஒரு விரிவுரையை வழங்கியவுடனே சிறிதும் யோசிக்காமல் சட்டெனச் சொன்னான் நண்பன், “எனக்கு பலவீனமே பயம்தான்!”

    அவன் கண்களைப் பார்த்தேன். தெளிவு தெரிந்தது. துணிவும் பிறந்திருப்பதாக உணர்ந்தேன். குறைந்தபட்சம் அவன் சிந்தையில் தெளிவாவது நிச்சயம் பிறந்திருக்கும்.

    எனக்கு எதிரே நின்ற அவன் மாறியிருந்தான், அவனுக்கு நேரெதிரான மனிதனாய் – அவனாய்!

    அவனுக்கு இனி அச்சமில்லை!

    இந்த வரிகள் உங்களுக்குள் இன்று ஒரு சிறு கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தால், நீங்கள் இன்று முதல் உங்களுக்குள் இருக்கும் வேறோர் மனிதனையும் அவன்  உலகத்தையும் காணப்போகிறீர்கள் என்று அர்த்தம்.

    வல்லமை மின்னிதழ் வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.  வல்லமை அணியினருக்கும், வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் இந்த மாற்றத்தோடு ஐந்தாம் ஆண்டு  இனிதே தொடங்கட்டும்.

    வல்லமைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

     

    Share
  • சித்திரைத் திருவிழா

    — ஜெயஸ்ரீ ஷங்கர்

     

    சித்திரைத் திருவிழா

    Tamil-Daily-News-Paper_46213495732

    சித்திரை வந்ததும் நமது சிந்தையில் தோன்றுவது, மதுரையில் நிகழும் திருவிழாக் கோலம்தான். வாழ்வில் ஒரே ஒரு முறை அங்கு சென்று அந்தச் சித்திரை மாதத்து திருவிழாக்களில் கலந்து கொண்டு, அந்த வரலாற்றுச் சிறப்பினை உணர்ந்து அனுபவிப்பது ஒருவர் பெற்ற பேறு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வழக்கு உண்டு, மதுரையில் பிறந்தாலே முக்தி என்று. சிதம்பரத்தில் வாழ்ந்தால் முக்தி என்றும் ஒரு வழக்கு உண்டு. அது எத்தனை நிஜம் என்று தெரியாத போதிலும், மதுரையோ, திருவண்ணாமலையோ , சிதம்பரமோ, அந்தக் கோவிலின் சாநித்தியம் சொல்லி விடும். அந்தத் திருவிழாக்களில் பக்தர்களின் அலைமோதும் ஆர்ப்பரிக்கும் கூட்டம்.

    மதுரைச் சித்திரைத்திருவிழாவில், பெரிய பெரிய தேர்கள் நான்மாடக் கூடலின் நான்கு வீதிகளிலும் ஆடியாடி உலா வரும் காட்சியும், கிருஷ்ண பொம்மைகள் பூச்சொரியும் காட்சியும், திருவிளையாடல் காட்சிகள் ஒவ்வொரு நாளாக நடைபெற்று, தினம் தினம் திருவிழாவாக பிரம்மாண்டமாக இன்று வரை நடைபெற்று வருவதைக் காணும் போது , நான் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்று வரை ஒவ்வொரு வருடமும் அந்தப் புண்ணிய பூமியின் திருவிழாக் கோலத்தைக் கண்டே வளர்ந்தவள் என்ற ஒரு ஏகாந்தம் மனதில் நிறைய உண்டு. திருக்கல்யாணமாகட்டும் , நவராத்திரி உற்ச்சவமாகட்டும் மதுரையில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    வழி நெடுக தண்ணீர் பந்தல் என்ற பெயரில் பெரிய பெரிய அளவில் நீர் மோர், பானகம், என்று அந்த அடிக்கும் வெய்யிலுக்கு தாக சாந்திக்காக அங்குள்ளவர்கள் வாரி வாரி வழுங்கும் நிகழ்ச்சி மனதைக் குளிரச் செய்யும். பனையோலை விசிறிகளைப் பரிசாகத் தருவர் பலர். மதுரை மீனாக்ஷி திருக்கல்யாணத்தில் மஞ்சள் தாலிச் சரடும், விரளி மஞ்சளும், தாழம்பூ, குங்குமமும், வந்தவர்களுக்கெல்லாம் கருணையோடு அள்ளித் தந்து ஆசீர்வாதம் செய்வாள் அன்னை மீனாக்ஷி. அன்னையின் திருக் கல்யாணம் முடிந்த கையோடு கள்ளழகர் புறப்பாடு. இந்த வெகு விமரிசையான புறப்பாட்டில், அத்தனை மண்டபப் படிகளும் கடந்து ராமராயர் மண்டபம் சேர்ந்து அழகர் பச்சைப் பட்டுடுத்திக் கொண்டு, தங்கக் குதிரையில் குலுங்கிக் குலுங்கி ஆடி வந்து, வைகையாற்றில் இறங்கும் அற்புதக் காட்சியைக் காண கண் இரண்டு போதாது.

    வருடத்திற்கு வருடம் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதை கண்கூடாகக் காணலாம். பக்தர்கள் வெள்ளம், அலையலையாக கிட்டத் தட்ட 18 கிலோமீட்டர் தூரம் நடந்தே அழகர் கோவிலிலிருந்து மதுரை வைகை ஆற்றங்கரை வரையில் வந்து அழகரின் ‘ஆற்றில் இறங்கும் “வைபவத்தைப் பார்த்து விட்டுத் திரும்பும் பக்தர்கள். விடிய விடிய மக்கள் திரள் திரளாக நடந்து வரும் அழகு, வழியெங்கிலும் அன்னதானம் நடைபெறும். எந்த ஒரு பக்தரும் பசியோ தாகமோ அறியாத வண்ணம், வித விதமான சித்ரான்னங்களும், நீர்மோர், பானகம் என்று சிறிது கூட முகம் சுளிக்காமல் வாரி வழங்கும் மதுரை மக்கள். எங்கிருந்து, எப்படி இத்தனை மனித அலைகள் வந்து கொண்டே இருக்கிறது என்று எண்ணும் போது ஆச்சரியம் மேலிடும். சித்திரா பௌர்ணமி அன்று அன்னதானம் அளித்தாலும், கள்ளழகர் தரிசனம் கண்டாலும் பல கோடி புண்ணியம், அந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமையும் என்ற மதுரை வாழ் மக்களின் நம்பிக்கை கண்கூடாக காட்சி தரும் நன்னாள் அது, விஞ்ஞானம் எத்தனை வளர்ச்சி அடைந்தாலும் என்ன..? இந்த மெய்ஞானத்தின் முன்னே விஞ்ஞானம் பொய்த்துப் போவது போல ஒரு அபார ஆன்மீக நம்பிக்கை உருவாவதை காண முடிகிறது.

    காலின் சதங்கை, தலையில் கிரீடம், சிவப்பில் ஆடைகள், தண்ணீர் பையை முதுகில் கட்டிக் கொண்டு, காண்பவர் முகத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தபடி வருவோரை அழகராகவே எண்ணி வழிபடுவது வழக்கம். எத்தனை நம்பிக்கைகள் காலத்தால் சிறிதும் சிதையாமல் காக்கப் பட்டு வந்துள்ளது என்பதற்கு, நான் கூட சாட்சி தான். எனது குழந்தைப் பருவத்திலிருந்து (அதற்கும் பல காலங்கள் முன்பிருந்து வருவதை எனது பாட்டி கதை கதையாகச் சொல்லுவார் ) தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த வரலாற்றுத் திருவிழாக்கள் இந்த பூலோகம் உள்ள காலம் வரையில் ஆன்மீக பக்தர்களுக்கு மதுரை போன்ற திருத்தலங்கள் ஒரு வரப்பிரசாதம் தான்.

     

     

     

     

    Share
  • பெண்கள் நிலை , தேர்வு முடிவுகளில் முதலிடம் – சமூகத்தில் எந்த இடம் ?

    — எஸ் வி வேணுகோபாலன்

    toppersகடந்த ஆண்டு சென்னை பள்ளியொன்றில் மகாகவி பாரதி குறித்த சிறு உரையாடலுக்குப் போயிருந்த அனுபவம் மறக்க இயலாதது. எட்டாம் வகுப்பு பிள்ளைகள் – ஆண், பெண் இரு பாலருமாக 27 பேர் கொண்ட வகுப்பு அது. இருபது நிமிட உரையை அடுத்து கேள்வி பதில்கள் என்பதாக அமைத்துக் கொண்டோம் பாரதி குறித்த எங்களது தேடலை. பாரதி அறிமுகம், அவரது பன்முகத் தன்மை குறித்தெல்லாம் நேரடி செய்திகளாக அல்லாமல் வெவ்வேறு நிகழ்வுகளோடு கலந்து சுவாரசிய கதியில் போய்க் கொண்டிருந்தது விவாதம். எத்தனை எத்தனை அறிவார்ந்த கேள்விகள். தனது வகுப்பு குழந்தைகளுக்குத் தமிழிலும், பாரதியிடத்தும், பொது அறிவிலும், வரலாற்றுச் செய்திகளிலும் இவ்வளவு ஈடுபாடா என்று தமிழ் ஆசிரியை பெருமிதத்தோடு வியந்து நின்றார். முத்தாய்ப்பான கேள்வி இன்னும் காத்திருந்தது. ஒரு சிறுமி அழகாகக் கேட்டார், “சார், முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி என்றுதானே சொன்னீங்க. அப்ப பாரம்பரிய வைத்தியத்துக்கு என்ன பேரு?” என்றார். “பாட்டி வைத்தியம்” என்றேன் நான். “அப்ப அவுங்கள எல்லாம் சமூகம் டாக்டரா அங்கீகரிக்காதோ ?” என்றார். அசந்து நின்றேன்.

    துணிவு, அறிவு, நுட்பம், பார்வை என பலவகையிலும் தங்களைப் பெண்கள் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்தபோது தொடர்ந்து இவ்வாண்டும் பெண்களே முதலிடம், அதிக சதவீதம் என ஊடகங்கள் அறிவித்தன. இப்படி கரையை நோக்கி ஓங்கரித்தும், ஆர்ப்பரித்தும் பெருத்த ஓசையோடு வரும் மிக உயரமான கடல் அலைகள் பல நேரம் மிக சாதாரணமாகத் தேய்ந்து அதிக கவனம் பெறாது கரையை பெயருக்குத் தொட்டுவிட்டுக் கடலுக்குள் திரும்புவதைப் பார்க்கிறோம். அதிக சதவீதத் தேர்ச்சி பெற்ற மாணவியர், முதலிடம் பெற்ற பெண் குழந்தைகள் பின்னர் சமூகத்தில் எங்கே காணாமலே போய்விடுகின்றனர்? அல்லது எப்படி காணாமல் ஆக்கப் படுகின்றனர்?

    அடிப்படையில் பாலின வேறுபாட்டில் ஊன்றப் பட்டிருக்கும் சமூகத்தில் குழந்தை வளர்ப்பிலிருந்து, சமூகப் பார்வையின் நிழல் படிப்பிலும், திருமண நேரத்திலும், பிந்தைய வாழ்க்கைப் பாதையிலும் படரத் தான் செய்கிறது. தங்களது சொந்தத் தேடல்களை, விருப்பங்களை, கேள்விகளை மனித இனத்தில் சரிபாதி அடுத்த பாதியிடம் ஒப்புக் கொடுக்க நேருவது எத்தனை பெரிய வன்முறை என்பது ஒரு கணம் சிந்தித்தால்தான் புரியும்.

    உயர் படிப்புக்குப் போகும் பெண்களில் கூட (இந்த வாக்கியத்திலே செய்வினை செயப்பாட்டுவினை மயக்கம் ஒன்று இருக்கிறது – உயர் படிப்புக்கு அனுமதிக்கப் படும் என்று இருக்க வேண்டும்) கணிசமான பகுதியினர் வேலைக்கான உத்தரவுகளை வாங்கி இந்தப் பக்கம் வைத்துவிட்டு நண்பர்களிடம் தங்களது திருமண அழைப்பிதழை வழங்குபவர்களாக மாற வேண்டியிருக்கிறது.

    ‘நீ என் குழந்தைகளின் தாய், அதை நான் மறுத்துவிடுவேனாகில் நீ வெளியேற வேண்டி இருக்கும்’ என்கிறது வங்காளி மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்று. எந்த விதத்திலும் நிராகரிக்கப் படக் கூடாதவளாக ஒரு பெண் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்போதிலிருந்து என்று கேட்கக் கூடாது. எல் கே ஜியிலிருந்தே இந்த உணர்வு ஊட்டப்படுகிறது. சொல்லப் போனால் அதற்கும் முன்பிருந்தே!

    மாலனின் தப்புக் கணக்கு என்கிற அருமையான சிறுகதையை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் கதை நேரம் தொடரில் குறும்படமாகப் பார்த்திருப்பீர்கள். பள்ளியில் ஒரு கணக்கைத் தனது சொந்தப் புரிதலில் வித்தியாசமாக அணுகிப் போட்டிருப்பாள் அந்தச் சிறுமி. மதிப்பெண்கள் மறுக்கப் பட்டிருக்கும். நியாயம் கேட்கப் புறப்படும் தாத்தாவுடைய பயணத்தின் கடைசி மோதல் தனது மகனோடு நடக்கும். ‘அவ ஒரு பெண் குழந்தை. சுயமா எதையும் யோசிக்க அனுமதி கிடையாது. நாளைக்கு வளர்ந்த பிறகு ஏராளமான பிரச்சனை ஏற்படும். என்ன சொல்லிக் கொடுக்கிறாங்களோ அதைத் தான் அவ கேட்டுச் செய்யணும்’ என்று குழந்தையின் தந்தை பேசும் வசனம் அந்தக் குறும்படத்தின் மிக நுட்பமான இடம். விவாதக் களம்.

    கால காலமான இந்தப் பண்பாக்கம் இயல்பான செய்தியாக மரபணுக்கள் வழி கடத்தப் படுகிறது. மத உணர்வுகளால் நிறுவப் படுகிறது. ஆதிக்கப் போக்கினால் அமலாக்கத்தில் இருக்கிறது. ஆனாலும் நவீன சமூகத்தின் வளர்ச்சியில் மேம்போக்கான மாற்றங்கள் நிகழ்வதன் வேகம் இந்த அடிப்படை நீரோட்டத்தை உணர இயலாதபடி அத்தனை நேர்த்தியாக சமூகத்தின் தோற்றத்தைத் திருத்திக் காட்டுகிறது.

    அண்ணன் தம்பிகள் எப்போது வீடு திரும்பினாலும் கேள்வி கேட்காத குடும்பம், ஒரு பெண் அப்படி நினைத்தபடி நடந்து கொள்ள இயலாது என்பதைப் பேசும் பாலபாரதி கவிதை ஒன்று, அப்படியெல்லாம் வாதம் செய்யும் பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்றும், ‘இவளை’ யார் தலையிலாவது கட்டித் தள்ளிவிட வேண்டும் என்றும் குடும்ப அங்கத்தினர்கள் பேசுவதை எடுத்துச் சொல்கிறது.

    தான் எழுதிய கதைகளைத் தனது வாழ்நாளில் அச்சில் பார்க்காது மறைந்துபோன ரங்கநாயகி என்ற எழுத்தாளர் பற்றிய பேரா. கே பாரதி அவர்களது சிறப்பான கட்டுரை (தி இந்து: பெண் இன்று: மே 11), தலை சிறந்த எழுத்தாளர் வரிசையில் இடம் பெற்றிருக்க வேண்டிய பெண்மணி என்று அவரைப் போற்றுகிறது. ஆனால் சமூகம் அந்த வாய்ப்பை இழந்துவிட்டது. இரா.நடராசன் அவர்களது புகழ் பெற்ற ஆயிஷா கதையின் கடைசியில், அந்தத் தேடல் மிக்க சிறுமி எழுப்பிய கேள்விகளின் வரிசையில் ஏன் பெண் விஞ்ஞானிகள் அதிகம் உருவாகவில்லை என்பது முக்கியமான ஒன்று. குடும்பம், சமூகம் என்கிற நிறுவனங்கள் பெண்கள் சுதந்திர சிந்தனையாளர்களாக உருவாவதை அனுமதிப்பதில்லை. இவற்றின் தேவை, நோக்கம், அடிப்படை கட்டுமானம் அப்படி.

    அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற காலத்திலேயே சமூகம் நிற்கிறதா என்று கேட்கலாம். இல்லை, நிச்சயமாக இல்லை! எண்பதுகளில் வந்த மிர்ச் மசாலா என்ற அருமையான இந்தி திரைப்படத்தில், தனது பெண் குழந்தை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப் பட்டதைப் பார்த்து மிகவும் கோபம் கொள்ளும் கிராமத் தலைவன் தன்னுடைய மனைவியிடம், உனக்கு எத்தனை துணிச்சல், நெஞ்சுரம் இருந்தால் இந்த வேலையைச் செய்திருப்பாய் என்று மிரட்டும் இடம் ஒன்று வரும். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்று அறியப்படும் சாவித்திரி பாய் ஃபுலே வீதியில் பெண் குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்கையில் அவர் மீது மனிதக் கழிவுகள் வீசப்பட்டது என்று படித்திருக்கிறோம். நாகரிக சமூகம் அந்த இடத்தைப் பெருமளவு (பெருமளவு என்றுதான் சொல்ல முடியும்!) கடந்து வந்திருக்கிறது. என்றாலும், எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மிடியத்தாலும், அதற்கு அடுத்தடுத்த கட்டங்களை எட்டிப் பிடிக்கும் தன்மைக்குப் பெண்களை சமூக வெளி அனுமதிக்கிறதா என்பதுதான் கேள்வி.

    ஊடக விவாதங்கள், நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளில் பெண் சுதந்திரம், பாலின சமத்துவம் குறித்த புரிதல்களில் உள்ள சிக்கல், மாற மறுக்கும் சமூக போக்கு இவற்றைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். கவுரவக் கொலைகளின் பின்னணியில் தெறிக்கும் வன்மம் சாதிய விஷயத்திற்கும், பெண் அடிமைத்தனத்திற்கும் ஒருசேர இடம் அளித்திருப்பதைப் பார்க்க முடியும்.

    celebration of topperமாநகரங்களின் கடை வீதிகளில், தொழில் நுட்பத் துறையில், அலுவலகங்களில் பெண்கள் நிறைந்திருப்பது என்பது ஒன்று. அதிகாரப் பகிர்வில், தம்மைக் குறித்த முடிவுகளை எடுப்பதில், ஜனநாயக அமைப்பின் பொறுப்புகளை எடுத்துக் கொள்வதில் பெண் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி வேறு! எதிர்பாராத விருந்து, தவிர்க்க முடியாத குடும்ப நிகழ்வு, சமாளிக்க இயலாத மருத்துவச் செலவு, செய்தே தீர வேண்டிய அன்றாட வேலைப் பளு இவற்றை கால காலமாக வழி வழி வம்சாவழியாக நிர்வகிக்கத் தெரிந்திருக்கும் பெண்களுக்கு அரசியல், சமூக, பொருளாதார பெருவெளியில் செயலாற்றத் தெரியாதா?

    மரபார்ந்த பார்வையை வெவ்வேறு உத்திகளில் தொடர வைக்கும் ஊடகங்கள், மாற்றங்களுக்கான தூண்டுதல் தவிர்க்கப்படும் பாட திட்டங்கள், இளமைப் பருவத்திலிருந்தே சமத்துவமற்ற வளர்ப்பு முறை, வீட்டினுள்ளும், வெளியேயும் நடமாடும் பண்பாட்டுக் காவலர்களாக பழைய கண்ணோட்டத்தைக் கட்டிக் காப்பாற்றும் மனிதத் திரள் போன்ற அம்சங்கள் நவீன உலகின் புதிய அம்சங்களை வாரிச் சுருட்டி விழுங்கிக் கொண்டே அடிப்படை விதிகளை மாறாது பார்த்துக் கொள்கின்றன.

    பெண்களுக்கிடையே ஒட்டுமொத்த விடுதலைக்கான முழக்கம் எழுப்புகையில் சாதிய, மத வேறுபாடுகளின் மடியில் கோலோச்சும் சக்திகள் அப்படியான கலகக் குரல்களை ஒன்று சேரவிடாது பார்த்துக் கொள்வதில் கடுமையாக செயல்படுகின்றன. பெண்கள் சுதந்திரமாக வலம் வருவதை இன்று பாதுகாப்பற்றதாக உருமாறி நிற்கும் பொதுவெளி சாத்தியமற்றதாக அறிவிக்கிறது. பெண்களின் உடல் மீதும், உளவியல் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலுக்கான பழி அனைத்தும் பெண்கள் மீதே சுமத்தப்படும் விஷமத்தனம், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே என்று சொல்லாமல் சொல்கிறது.

    பள்ளித் தேர்வு முடிவுகள் வருகையில் முதல் பக்கத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும் சிரிப்பும், கொண்டாட்டமுமாகக் காட்சி அளிக்கும் பெண் குழந்தைகள் காட்சி முடிந்து திரை விழுந்தபிறகு காணாமல் போய்விடும் தன்மை மாற்றப் படவேண்டும். சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்று ஆண்களோடு பெண்களும் முன்னெழுந்து வரும் நிலைக்கான போராட்டம் வெகு தொலைவு செல்லவேண்டியிருக்கிறது. அதற்கான குரல் குடும்ப ஜனநாயகத்திலிருந்து புறப்பட வேண்டி இருக்கிறது. முற்போக்காளர்களது தீர்மானமான செயல்பாட்டைக் கோருகிறது.

     
    நன்றி: தீக்கதிர்: மே 15, 2014

    Share
  • ஏதாயினும் சொல்

     கே. ரவி

     

    ஏதாயினும் சொல் ஏனிந்த மெளனம்goddess-saraswati-hindu-goddess-learning
    எங்கெங்கும் பொழியட்டும் பூமழையே
    காதோரம் வந்து சி றகடிக்கும் காற்றில்
    ஒலிக்கட்டும் ஒருமுறை உன்குரலே
    (ஏதாயினும்)

    நீதானே எந்தன் கவிதையின் ஊற்று
    தினமொரு தீபமென் சிந்தையில் ஏற்று
    (ஏதாயினும்)

    ஆதாரம் நீயே அனுபவச் சுவையே
    ஆவியில் அமுதம் நிறைப்பவளே
    ஆகாயமெல்லாம் எதிரொலிக்கும் – நீ
    ஆணையிட்டால் உடன் அதுபலிக்கும்
    (ஏதாயினும்)

    பாதாதி கேசம் பாட வல்லேன் அல்லேன்
    பாவனை சுகத்தில் மூழ்குகிறேன்
    பாராமுகம் எதற்குத் திரைவிலக்கு – இன்னும்
    பாராமுகம் எதற்குத் திரைவிலக்கு – இசைப்
    பாடலொன்றே நம் சுடர்விளக்கு
    (ஏதாயினும்)

    படத்திற்கு நன்றி:

    http://www.hindudevotionalblog.com/2011/09/goddess-saraswati-hindu-goddess-of.html

     

    Share
  • என்ன தான் இருக்கிறது வேதத்தில்? – 6

     

    – சு.கோதண்டராமன்

    வேதத்தில் என்ன இல்லை?

     

     

     

    vedas

    வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது; விக்ரஹாராதனை கிடையாது; ஸந்யாஸம் கிடையாது. அத்வைத த்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா; பக்தி மாத்திரந்தானுண்டு. கோவிலும் மடமும் பெளத்தமதப் பழக்கத்தால் வெளி நாடுகளிலிருந்து நமக்குக் கிடைத்த பேறுகளென்று சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். ஆனால் இப்போது ஹிந்துமதப் பயிற்சிகளுள்ளே கோவிலும் சிலையும் நெடுந்தூரம் ஆழ்ந்து போய்விட்டன. ஆதலால், இப்போது ஹிந்து மதத்திலிருந்து கோவிலைப் பிரிக்க முடியாது. – பாரதி

    வேதத்தில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு முன் அதில் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பல அதில் இல்லை என்பதை அறிந்து கொள்வோம். ஆம், இன்றைய இந்து சமயத்தின் அடையாளங்களாகக் கருதப்படும் வழக்கங்களில் பெரும்பாலானவை ரிக் வேதத்தில் காணப்படவில்லை.

    அவை வேத விரோதமானது என்று நிரூபிப்பது நம் நோக்கம் அல்ல. வைதிக சமயம் பல தாக்கங்களுக்கு உட்பட்டு வெளித் தோற்றத்தில் மாறி வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டால்தான் இத்தனை மாற்றங்களையும் ஏற்றுக் கொண்ட அந்த அடிப்படை என்ன என்பதை ஆராய முடியும்.

    விநாயகர்

    முதலில் பிள்ளையாரிலிருந்து ஆரம்பிப்போம். ரிக் வேதத்திலும் மற்ற வேதங்களிலும் விநாயகரைப் பற்றிய குறிப்பு இல்லை.

    அது எப்படி இல்லாமல் போகும்?

    கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
    கவிம் கவீனாம் உபமஸ்ரவஸ்தமம்
    ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத
    ஆநஸ் ஸ்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம்

    என்ற விநாயகர் துதி வேத மந்திரம் தானே [ரிக் 2.23.1] என்று வைதிகர்கள் பாயக் கூடும்.

    இந்த மந்திரம் ரிக் வேதத்தில் பிரம்மணஸ்பதி மற்றும் பிருஹஸ்பதி என்ற தலைப்பில் வரும் 19 பாடல்களில், முதலாவது பாடல். இந்தப் பாடலில் எங்கும் கணபதியின் பிற பெயர்களோ, அவரது தோற்றம் பற்றிய குறிப்புகளோ காணப்படவில்லை. அந்தப் பாடலின் மீதி வரிகளிலோ, அந்த சூக்தத்தின் மற்றைய பாடல்களிலோ கணபதி என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பிரம்மணஸ்பதி என்ற சொல் பல முறை குறிக்கப்படுகிறது. பிரம்மணஸ்பதி தான் விநாயகர் என்று கூறுவதற்கான எந்தத் தடயமும் இல்லை. சாயணர் காலத்தில் விநாயகர் வழிபாடு பரவி இருந்தும், இது விநாயகரைக் குறிப்பதாக சாயணர் கூறவில்லை.

    கணேச சூக்தம் என்ற பெயரில் ஒரு தோத்திரம் உள்ளது. இது 15 மந்திரங்கள் கொண்ட ஒரு தொகுப்பு. இதில் எதுவும் விநாயகருக்கு உரியது இல்லை. இதன் முதல் 9 மந்திரங்கள் ரிக் வேதத்தின் 8வது மண்டலம் 81வது சூக்தத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இவை இந்திரனைக் குறித்தவை. அடுத்த 2 மந்திரங்கள் முன் சொன்ன 2வது மண்டலம் 23வது சூக்தத்தில் உள்ளவை. பிரம்மணஸ்பதியைப் போற்றுபவை. மற்ற 4 மந்திரங்கள் ரிக் வேதம் 10.112 இல் 9வது, 10வது பாடல்களாக உள்ளன. இவையும் இந்திரனைத் துதிப்பவையே.

    ஒரு புதிய தெய்வம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது பற்றிக் கவலைப்படாமல், அந்தத் தெய்வத்திற்கு ஏதேனும் ஒரு வேதப் பாடலைப் பயன்படுத்துவது வழக்கம் என்பதற்கு இது ஒரு உதாரணம். இன்று நாம் சடங்குகளில் பயன்படுத்தும் மந்திரங்கள் அந்தச் சடங்கோடு தொடர்புடைய பொருள் கொண்டவை அல்ல. (இது பற்றிப் பின்னர் வரும் ஒரு தலைப்பில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.)

    சிவன்

    வேதத்தில் சிவ வழிபாடு இல்லை. சிவ என்ற சொல் இருக்கிறது. மங்களகரமான என்ற பொருளில் இது பல தேவர்களுக்கு அடைமொழியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ருத்ரன் இருக்கிறார். ஆனால் ருத்ரனும் சிவனும் பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டார்களே அன்றி வேதம் கூறும் ருத்ரனுக்கு இன்றைய சிவனுக்குரிய அம்சங்கள் இல்லை.

    ரிக் வேதத்தில் ருத்திரனைப் பற்றிய குறிப்புகளைப் பார்த்தால், பல இடங்களில் மருத் என்னும் தெய்வத்தின் தந்தை ருத்திரன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. [உ-ம் ரிக் 1.85.1] சில இடங்களில் மருத்துகளே ருத்திரர்கள் என்று கூறப்பட்டுள்ளது. [உ-ம் ரிக் 1.39.4,] இன்னும் சில இடங்களில் ருத்திரன் அக்னியின் மறுபெயராகக் கருதப்படுகிறார். [உ-ம் ரிக் 1.72.4,] சில இடங்களில் ருத்திரன் அஸ்வினி தேவர்களோடு ஒன்றாகக் கருதப்படுகிறார். [உ-ம் ரிக் 1.158.1] அவ்வகையில், காற்றாகவும், தீயாகவும், அஸ்வினி தேவர்களாகவும் இன்னும் பிறவாகவும் விளங்கும் பரம் பொருளைச் சில இடங்களில் ருத்திரன் என்று வேதம் அழைக்கிறது என்று தான் சொல்ல முடியும்.

    ஒரே ஒற்றுமை சொல்ல வேண்டும் என்றால், ரிக் வேதத்தில் பல இடங்களில் நலம் தரும் மருந்துகளுடன் வந்து நோய் நீக்குபவராக ருத்திரன் கூறப்படுகிறார் [உ-ம் ரிக் 1.43.4, 2.33.4]. இது சிவனை வைத்தியநாதன் என்று இன்று நாம் வழங்குவதுடன் ஒக்கிறது.

    யஜுர் வேதத்தின் ருத்ரம் (4வது காண்டம் 5வது பிரபாடகம்) இன்று சிவ வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் மந்திரம். அதில் கூறப்படும் ருத்திரனின் பண்புகளில் சில சிவனுடைய பண்புகளுடன் ஒத்திருந்தாலும், ஒவ்வாதவையும் பல உள்ளன.

    கோபமே வடிவானவர் என்பது ருத்திரனுக்கும் சிவனுக்கும் பொதுவான அம்சம். சிவன் யானைத் தோலையும் புலித் தோலையும் அணிந்தவர் என்று இன்று நாம் வழங்குவதற்கு இயைய யஜுர் 4.5.10.10 மிருகத் தோலை அணிந்தவர் ருத்திரன் என்று கூறுகிறது. யஜுர் 1.8.6.9 ருத்திரனை த்ரயம்பகன் (முக்கண்ணன்) என்கிறது.

    இனி, முரண்பாடுகளைப் பார்ப்போம். பப்லுசாய என்பதற்கு எருதின் மேல் இருப்பவர் என்றும் ஸோம என்பதற்கு உமையோடு கூடியவர் என்றும் தற்போது பொருள் கூறப்படுகிறது. ஆனால் சாயணர் பப்லுசாய என்பதைப் ‘பழுப்பு நிறத்தவர்’ என்று எழுதுகிறார். ஸோம என்ற சொல்லுக்கு ஸோமக் கொடி என்னும் தாவரம் என்று பொருள் தருகிறார். தற்போது வழங்கும் இவ்விரண்டு பொருள்களும் சாயணருக்குப் பிந்திய காலத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். மாதொரு பாகன் என்ற கருத்தை வேதத்தில் காண முடியவில்லை. அம்பிகா ருத்திரனின் சகோதரியாகக் கூறப்படுகிறார் [யஜுர் 1.8.6.6].

    தற்போதைய வழக்கு, சிவனை நீலகண்டன், சடையன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் ருத்திரன் கழுத்து கறுத்தவர், கழுத்து வெளுத்தவர் என்று இருவகையாகவும் கூறப்பட்டுள்ளார் (நீலகண்டர், சிதிகண்டர் – யஜுர் 4.5.5.1). அதே போல, சடையர் என்றும் மொட்டைத் தலையர் என்றும் கூறப்பட்டுள்ளார் (கபர்தினர், வ்யுப்தகேசர் – யஜுர் 4.5.5.1).

    மேலும், வேதத்தில் ருத்திரன் என்ற பெயர் ஒருமையிலும் வருகிறது, ருத்திரர்கள் என்று பன்மையிலும் பேசப்படுகிறது. தேவர்கள் நிலத்தில் 11, நீரில் 11, ஆகாயத்தில் 11 பேர் உள்ளனர் என்று ரிக் 1.139.11 கூறுவதை யஜுர் 1.4.10.1 மற்றும் யஜுர் 1.4.11.1 ருத்திரர்களாக எடுத்துக் கொள்கிறது. ஆயிரக் கணக்கில் உள்ளவர்கள் என்று யஜுர் 4.5.11.1 கூறுகிறது. வசுக்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள் என்று மூன்று தெய்வக் கூட்டங்கள் பல இடங்களில் சேர்த்தே சொல்லப் படுகின்றன (உதாரணம் – யஜுர் 1.1.11.16).

    இந்த மந்திரங்களிலிருந்து ருத்திரனின் தன்மை இத்தகையது என்று நிர்ணயிக்க முடியாத நிலையில், வேத தெய்வமான ருத்திரனின் மாற்றுருவமே சிவன் என்று சொல்வதை விட, சிவன் என்னும் கருத்து உருவாகிய பின், அவருடைய வழிபாட்டுக்கு, ருத்ரனைக் குறித்த வேத மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்று கூறுவதே பொருந்தும்.

    திருமால்

    வேதத்தில் திருமால் இருக்கிறாரா? விஷ்ணு என்ற சொல் இருக்கிறது. அது எங்கும் வியாபித்த சூரியனைக் குறிப்பதாகத் தான் உள்ளதே அன்றி இன்று நாம் வணங்கும் திருமாலைக் குறிக்கவில்லை. விஷ்ணு மூன்று அடி வைத்தது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. அது சூரியனின் (காலை, பகல், மாலை ஆகிய) மூன்று நிலைகளைக் குறிப்பதாகத் தான் சாயணர் கூறுகிறார். நாராயணன் என்ற பெயர் ரிக் வேதத்தில் இல்லை.

    தைத்திரிய ஆரண்யகத்தில் வரும் நாராயண சூக்தத்தில் விஷ்ணுவும் நாராயணனும் ஒன்று என்பதற்கான குறிப்பு இல்லை.

    இன்று திருமால் வழிபாட்டில் பெருமளவு பயன்படுத்தப்படும் புருஷ சூக்தத்தில் விஷ்ணு என்ற பெயரும் நாராயணன் என்ற பெயரும் இல்லை. இவை பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டவை.

    பிற தெய்வங்கள்

    இன்று பெரும்பாலான மக்கள் முருகன், லட்சுமி முதலான தெய்வங்களையும், மாரியம்மன், ஐயனார் முதலான கிராமத் தெய்வங்களையும் வணங்குகிறார்கள். இவர்களுக்கு வேத மந்திரம் சொல்லி பூஜை செய்யப்படுவதையும் காண்கிறோம். இந்த தெய்வங்கள் எதுவும் வேத இலக்கியத்தின் அடிப்படை நூலான ரிக் வேதத்தில் இல்லை.

    கோயில்கள் இல்லை, விக்கிரக ஆராதனை இல்லை. இன்று எந்த அர்ச்சனை செய்தாலும் ஒவ்வொரு பெயருக்கு முன்னாலும் ஓம் என்று சேர்த்துச் சொல்கிறோமே, அந்த ஓங்காரம் ரிக் வேதத்தில் இல்லவே இல்லை. அதைப் பற்றி பின்னர் வந்த உபநிடதங்கள் தாம் வானளாவப் புகழ்கின்றன.

    அபிஷேகங்கள், அலங்காரங்கள், உற்சவங்கள் இல்லை. பஞ்ச பூதக் கோட்பாடு இல்லை. அஹிம்ஸைக் கொள்கை, கர்மாக் கொள்கை, மறு பிறப்பு, மோட்சம், சொர்க்கம், நரகம், பித்ரு லோகம், வைதரணி நதி எதுவும் இல்லை.

    பிரம்மசர்யம் முதலான ஆசிரமங்கள் இல்லை. பிராமண க்ஷத்ரிய முதலான வர்ணப் பிரிவுகள் பற்றிய குறிப்பு இல்லை. ரிக் வேதத்தில் வரும் பிரம்ம என்ற சொல் நான் முகக் கடவுளைக் குறிப்பது அல்ல. உபநிஷத்துகள் கூறும் உருவமற்ற குணமற்ற பரம்பொருளையும் குறிப்பது அல்ல. பிரம்ம என்ற சொல் பிரார்த்தனை மந்திரம் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரார்த்தனை சொல்பவர் ப்ரஹ்மணர் என்றும் ப்ராஹ்மணர் என்றும் கூறப்பட்டுள்ளார். இது வர்ணத்தையோ ஜாதியையோ குறிப்பதல்ல.

    இவை எல்லாம் காலப் போக்கில் இந்து சமயத்தில் ஏற்பட்டு அதனை வளர்த்தவை.

    இந்து சமயத்தின் வேர் வேதங்கள். அந்த வேதங்களுக்குள்ளே ஆணி வேரான ரிக் வேதமே பழமையானது; மற்ற வேதங்களுக்கும், பிராமணம், ஆரண்யகம், உபநிடதங்களுக்கு எல்லாம் ரிக் ஸம்ஹிதையே அடிப்படை என்கிறோமே, அது எந்த அடிப்படையில்? பிற்காலத்தில் பல மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வழி வகுத்த அதன் தனித்தன்மை என்ன? மாற்றங்கள் ஏற்பட்ட பின்னும் வேதமே அடிப்படை என்கிறோமே அப்படிக் கூறுமளவுக்கு வேதத்தின் எந்தக் கருத்து இன்று வரை மாறாமல் இருந்து மாற்றங்களை எல்லாம் வரவேற்று சமயத்தை வளர்த்து வருகிறது?
    பாமரன் புதுக் கோணத்தில் பார்க்க முயன்றான். வேதத்தின் மையக் கருத்து என்ன என்று தெரிந்து கொண்டால் அதற்கு மாறானவற்றை இடைச் செருகலாகக் கருதி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மற்ற பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம், மையக் கருத்தைத் தெரிந்து கொண்டு விட்டால் அதோடு தொடர்பு படுத்தி இது வரை புரியாத பல மந்திரங்களை அறிந்து கொள்ள முடியும் என நம்பினான்.

    மையக் கருத்தை எப்படிக் கண்டு பிடிப்பது? எந்தக் கருத்து திரும்பத் திரும்பப் பேசப்படுகிறதோ, வலியுறுத்தப்படுகிறதோ அதுவே மையக் கருத்தாகக் கொள்ளலாம். அடிக்கடி வரும் சொற்களை மட்டும் தனியாகப் பிரித்து சிறப்பான கவனம் செலுத்திப் பார்க்க முயன்றான். அப்படி அடிக்கடி வரும் சொற்கள் யாவை? தேவ, யக்ஞ, ருதம் என்ற மூன்று சொற்களே ரிக் வேதத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள். இவற்றின் விளக்கத்தை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காணலாம்.

    படம் உதவி:
    http://www.allabouthinduism.info/tag/rig-veda/
    http://www.allabouthinduism.info/wp-content/uploads/2013/07/veda.jpg

     

     

    Share
  • தயாரிப்பாளர்

    -பிச்சினிக்காடு இளங்கோ

    அவர் ஒரு
    தயாரிப்பாளர்!

    இவர் ஒரு                                                                                                 Bookseller
    தயாரிப்பாளர்!

    நீங்கள் ஒரு
    தயாரிப்பாளர்!

    அவரவர் திறமைக்கேற்பத்
    தயாரிப்பு நடக்கிறது!

    அவரவர் விருப்பப்படியும்
    தயாரிக்கப்படுகிறது!

    தயாரிப்பு
    யாருக்காக?
    என்ற கேள்வியும்
    எழுகிறது!

    ’யாருக்காகவும்’
    என்ற பதிலும்
    இருக்கிறது!

    சந்தைக்கும்
    வந்துவிடுகிறது!

    வாங்குவோரும்
    உண்டு!

    வாங்கிப் பார்ப்பவரும்
    உண்டு!

    பரவலாக
    விற்பனையை
    விரும்பும் நீங்கள்
    அந்தக் கடைக்காரருக்கும்
    அது தெரிந்திருப்பது
    அவசியம்!

    மக்கள் மனதில்
    நிற்க விழையும் நீங்கள்
    அந்தக் கடைக்காரருக்கும்
    தெரிந்தவராகுங்கள்!

    அவர் கடையின்
    சரக்குப் பட்டியலில்
    உங்கள் சரக்கும்
    இருப்பது நல்லது!

    பட்டியலில் இருந்தால்
    வரலாற்றில் இருப்பதாய் பொருள்!

     பார்த்துவையுங்கள்
    அந்தப்
    பட்டியல்காரர்களை!

    வாசிப்போர் மனத்தில்
    இருந்தாலும்
    வரலாற்றிலும் இருப்பது
    அவசியம்!!

     

    Share
  • வாழ்க்கை நலம் – அணிந்துரை

    சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ. சிவஞானம்

    அணிந்துரை

    தவத்திரு குன்றக்குடி அடிகளார், தாம் கொண்ட கோலத்திற்கேற்ப தலைசிறந்த ஆன்ம ஞானி. தெய்வ பக்தியோடு, தேச பக்தியும் கொண்டவராதலால் ஆன்மிகத்தோடு அறிவியலையும் கலந்து சிந்திக்க அவரால் முடிகிறது. பற்றுக்கள் பலவற்றை விட்டு துறவியான அடிகள், தமிழ்ப்பற்றை மட்டும் துறக்காதவராகி, தமிழர் வாழ்வில் எங்கும் எதிலும் தமிழே தலைமை தாங்க வேண்டுமென்ற கொள்கையுடையவராகி, அதற்காகப் பாடுபட்டும் வருகிறார்.

    அடிகளார் பல்வேறு காலங்களில் பல்வேறு அரங்குகளில் வெளியிட்ட கருத்துக்கள் இந்நூல் வடிவம் பெற்று தமிழர் கைக்கு வருகிறது. அடிகளார் ‘மெய்யறிவு’ நிலையில் மட்டுமல்லாமல், விஞ்ஞான அறிவிலும் தமிழ் தலைசிறந்து விளங்க வேண்டுமென விரும்புகிறார். அதனை பல்வேறு கோணங்களில் நின்று வெளியிட்டு தமிழர்களுக்கு வழிகாட்டுகிறார்.

    அறிவியற் கலைகளைப் பயிற்றுவிக்கும் கோயில்களான பல்கலைக் கழகங்களிலே இன்னமும் தமிழுக்கு இடமில்லை. அதாவது, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிலே அனைத்துப் பாடங்களிலும் தமிழில் போதிக்குங்கால், தமிழில் அறிவியல் நூல்கள் பெருகும். இந்தக் கொள்கையிலே நாங்கள் ஒன்றுபட்டவர்கள். இதனைச் சாதிக்க அரசின் துணை தேவைப்படுகிறது.

    அடிகளாரும், நானும் அத்துறையில் ஒன்றபட இறையருள் கூட்டுவிக்குமாக!

    நூலை விரிவாகப் படிக்கப் படிக்க எனது அறிவு விரிவடைகிறது. ஒவ்வொரு தமிழரும் எனது நிலையை அடைய இந்நூல் பயன்படுமாக!

    கலைவாணி புத்தகாலயத்தின் உரிமையாளர் திரு. சீனி. திருநாவுக்கரசு அவர்கள் நன்றாகப் பதிப்பித்துள்ளார்.

    அடிகளாருக்கு என் மனமுவந்த நன்றி. பதிப்பகத்தாருக்கு என் பாராட்டு.

    ம. பொ. சிவஞானம்
    சென்னை – 18

    28-12-1992

     

    “வாழ்க்கை நலம்”
    தவத்திரு குன்றக்குடி அடிகளார்
    கலைவாணி புத்தகாலயம்
    சென்னை -17, முதற்பதிப்பு 1992

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    Project Madurai:  http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0467.html

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 60

    குன்றக்குடி அடிகள்

    60. நலமுற வாழ்வோம்!

    உடல் ஒரு அற்புதமான கருவி. உடம்பில் உயிர் இயங்குகிறது. உடற்கருவி வாய்க்காது போனால் உயிர் இயக்கம் இல்லை. நுகர்வு இல்லை. அறிவு இல்லை. உயிர் வாய்பாக அமையாது போனால் உடல் பயனற்றது. உடல் உயிருடன் இணைந்திருக்கும் பொழுதுதான் பெயர். உடலைவிட்டு உயிர் பிரிந்துவிட்டால் பெயர் போய்விடுகிறது. பிணம் என்ற புதுப்பெயர் வருகிறது.

    வாழ்வதற்கு இந்த வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும். முழுமையாக வாழ்தல் வேண்டும். உடல் – உயிர் சார்ந்த வாழ்க்கைக்குப் புலன்கள் முதன்மையானவை.

    புலன்கள் மூளையின் சார்புடையன. மூளையின் இருப்பு தலை. “எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்” என்பர். உடலுக்கு வாய்த்துள்ள கருவிகள் இரு வகையின. ஒன்று அறிவுகருவிகள். இவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியன. பிறிதொன்று செய்கருவிகள். இவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன.

    மனம் ஆற்றல் வாய்ந்த கருவி. காற்றைவிட வேகமாகச் செல்லும் தன்மையது. ஆனால், எங்கு, ஏன் போகிறோம் என்று அதற்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசைப்படுவதில்லை. இந்தப் பணியை புத்திதான் செய்கிறது. மனம் பற்றும் செய்திகளை ஆய்வு செய்து எடுத்துக் கொள்வதுதான் புத்தியின் வேலை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் புத்தி அளவுக்கு வளர்வதில்லை. மனத்தளவிலேயே நின்று விடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்படுவார்கள்; வாழத் தெரியாதவர்கள். சித்தம் சிந்திப்பது.

    சிந்தனை மனிதரின் சிறந்த அகநிலைத் தொழிற்பாடு! சித்தம் மிக மிக நுண்மையான பகுதியைக்கூட ஆய்வு செய்து, உண்மைகளைக் கண்டுபிடிக்கும்; ஆழமான உண்மைகளைக் கண்டுபிடிக்கும். அகங்காரம் என்பது முடிவு செய்யும் உறுப்பு. எடுக்கப்பெறும் முடிவுகள் மெய், வாய், கண், மூக்கு, செவிகள் வாயிலாகச் செயற்பாடுறும். இது உடலியக்கம்.

    உடலியக்கத்திற்கு உடலோடு கூடி வாழ்தலுக்கு இயற்கை, கால எல்லை நியதி செய்திருக்கிறது. மிகப்பெரிய சாதனைகள் செய்யக்கூடிய ஆற்றல் உடையது இந்த வாழ்க்கை. இந்த வாழ்கையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மானுட வாழ்க்கையின் காலம், ஆற்றல் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

    புத்தி, ஆழமான உண்மைகளைக் காணுதல் வேண்டும். கண்கள் அறிவார்ந்த நெடிய தொலைநோக்குப் பார்வை பெற வேண்டும். கைகள் உழைக்கும் கரங்களாக விளங்க வேண்டும். இந்த உடல் நோய்களால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப் பெற வேண்டும். கதிரொளியில் தோய்தலும், காற்றில் உலாவுதலும் உடலுக்கு நல்லது.

    உடல், ஒரு உழைப்புச் சாதனம் – கருவி. இந்த உடலுக்குப் போதிய உழைப்புத் தராது போனாலும் நோய் வரும். உடல், உழைப்பில் ஈடுபடுத்தப் பெறுதல் வேண்டும். உடலுக்கு இசைந்த உழைக்கும் ஆற்றலைத் தரக்கூடிய நல்ல உணவு தேவை. இவையெல்லாவற்றுக்கும் மேலாக நல்ல எண்ணங்கள் வேண்டும். நல்ல எண்ணங்கள் நல்ல நினைவுகள் இல்லாத வாழ்க்கை நச்சுத்தன்மை அடைந்துவிடும்.

    மேலும் சிறப்பாக உயிருக்கு உயிராக விளங்கும் கடவுளிடம் பேசி மகிழ வேண்டும். இவையெல்லாம் அமைந்து நலமுற வாழ்தல் அறிவியல் சார்ந்த வாழ்க்கை. வாழ்வாங்கு வாழ்வோம்! வையத்திற்கு அணியாக வாழ்வோம்!

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • ஆண்டவன் உலகத்தின் முதலாளி!

    -கவிஞர் காவிரிமைந்தன்

    திரைப்பாடல்களில் உள்ள வரிகளைச் சிலர் மனனம் செய்துவிடுகிறார்கள்.  ஏன் தெரியுமா?  உண்மையை உயிரோட்டமான வரிகளாய்க் கவிஞர்கள் புனைந்திடுவதால்!  அவை காந்த சக்தியைப் போல் இதயம் கவர்ந்துவிடுகின்றன!  அதுவும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயகன் திரையில் அப்பாத்திரத்தை ஏற்று உச்சரித்து நடிக்கும்போது, உயிர்க்காவியமாய் அப்பாடல் நிலைபெற்று விடுகிறது. அட.. அப்படிப்பட்ட பாடல் எது என்று கேட்கிறீர்களா?

    கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களது கற்பனையில் பிறந்த வரிகளைத் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் ஏழிசை வேந்தர் டி.எம்.செளந்தரராஜன் பாடியிருக்கிறார்.  இந்தப் பாடலின் விசேஷம் என்னவென்றால், முதன் முறையாக எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு பாடல்காட்சியில் அமைதியாக ஒரே இடத்தில் அமர்ந்தபடி, ஓர் ஆர்மோனியப் பெட்டியுடன் பாடுகின்ற அபூர்வமான பாடலாகும்!!

    தொழிலாளி என்னும் திரைப்படத்தில், தொழிலாளி என்னும் உயரிய பதத்திற்குப் பல்வேறு பெருமைகளை சேர்த்த பாடல் வரிகளிவை!

    ஒவ்வொரு திரைப்படத்திலும் உழைக்கும் வர்க்கத்தினரின் பிரதிநிதியாகத் தோன்றி நடித்த கதாநாயகனுக்கு இப்பாடல் அந்த ஏற்றத்தை ஏட்டளவில் எழுதிவிட முடியாது.  கவிஞர் ஆலங்குடி சோமு தந்த அட்சய பாத்திர வரிகளிவை.  அகிலம் உள்ள நாள் வரைக்கும் உலகில் உழைப்பாளர்கள் உள்ள வரை ஓங்கி ஒலிக்கும் வரிகளிவை!

    பாடல் :ஆலங்குடிசோமு
    பாடியவர் :
    டி.எம்.சௌந்தராஜன்
    இசை :
    கே.வி.மகாதேவன்

    ஆண்டவன் உலகத்தின் முதலாளி                                                      m.g.r. - ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒருதொழிலாளி
    அன்னை உலகின் மடியின்மேலே
    அனைவரும் எனது கூட்டாளி
    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒருதொழிலாளி
    அன்னை உலகின் மடியின்மேலே
    அனைவரும் எனது கூட்டாளி

    இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
    இலக்கணம் படித்தவன் தொழிலாளி
    இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
    இலக்கணம் படித்தவன் தொழிலாளி
    உருக்கு போன்ற தன்கரத்தை நம்பி
    ஓங்கி நிற்பவன் தொழிலாளி

    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான்ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின்மேலே
    அனைவரும் எனது கூட்டாளி

    கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி
    கவனம் ஒருநாள் திரும்பும்
    கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி
    கவனம் ஒருநாள் திரும்பும்
    அதில் நல்லவர் வாழும் புதிய சமுதாயம்
    நிச்சயம் ஒருநாள் மலரும்

    வாழ்க்கை என்றொரு பயணத்திலே
    பலர் வருவார் போவார் பூமியிலே
    வாழ்க்கை என்றொரு பயணத்திலே
    பலர் வருவார் போவார் பூமியிலே
    வானத்து நிலவாய் சிலர் இருப்பார்
    அந்தவரிசையில் முதல்வன் தொழிலாளி
    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான்ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின்மேலே
    அனைவரும் எனது கூட்டாளி

    http://www.youtube.com/watch?v=AuWMezsKKxU&feature=player_detailpage

     

     

    Share
  • சிறுகை அளாவிய கூழ் (22)

    -இவள் பாரதி

    தாய் தேடுமென
    எல்லாக் குஞ்சுப் பறவைகளும்
    கூடடைய விரைகின்றன!                                         nivi-192x300

    என் குழந்தை
    நீ தேடுவாயென
    கூடடைய விரைகிறேன்
    போக்குவரத்து நெரிசலுக்குப்
    பெயர்போன
    இப்பெருநகர சாலைகளில்!

    ————–

    நீ முதன்முதலாய்
    எ(ன்)னையழைத்தபோது
    மீட்டெடுத்துக் கொண்டேன்
    கடந்த சில வருடங்களாய்
    நான் புழங்காமல் விட்டிருந்த
    ’அம்மா’ எனும் சொல்லை!

    —————

    உன் பால்பற்களுக்கும்
    மென் உதடுகளுக்கும்
    நாவசைப்பதற்கும் இடையில்
    இடறி விழுகின்ற
    தப்பி வருகின்ற
    துளிர்த்துத் தெறிக்கின்ற
    ஒவ்வொரு வார்த்தையும்
    உயிர்மெய் எழுத்துகளில்
    ஏதேனும் ஒன்றாகத்தானிருக்கின்றன!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (108)

     

    — சக்தி சக்திதாசன்

     

     
    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன். இம்மடலை வரையும் போது சாரளத்தின் வழியாக வெளியே தெரியும் காட்சியைப் பார்க்கிறேன்.

    ஆதவன் தன் ஒளிக்கதிர்களால் பகலுக்கு பளிச்சென்ற வெளிச்சத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறான்.

    பச்சைப் பசேலென்ற இலைகள் வசந்தகாலத் தென்றலினால் தாலாட்டப்படுகின்றன.

    ஆனால் இதே போலத்தான் இயற்கை எப்போதும் அமைதியாக அழகாகக் கதிரவன் கதிர்களை அள்ளிப்பருகிக் கொண்டிருக்கப் போகிறதா ?

    இல்லை வானம் கறுக்கத்தான் போகின்றது கதிரவனைக் கருமேகங்கள் மறைக்கத்தான் போகின்றன இதே சாரளத்தினூடாக கறுத்துப் போன பகலையும் பார்க்க வேண்டித்தான் இருக்கப் போகிறது.

    ஆனால் நாம் நாமாகத்தான் இருக்கப் போகிறோம் எமது விழிகளின் பார்வைகள் அதே கோணத்தினூடாக காணத்தான் போகின்றன.

    எதற்காக இந்தத் தத்துவப் பீடிகை என்று எண்ணாதீர்கள். சீட்டாட்டத்தில் எம் கைகளில் தவழப் போகும் சீட்டு எது என்று முன்கூட்டியே தெரிந்திருக்காவிட்டாலும் தரப்படும் சீட்டுக்களை வைத்து அச்சீட்டாட்டத்தில் நாம் ஜெயிக்க எத்தனையோ வழிகளில் முயல்கிறோம்.

    அதே போல வாழ்க்கையில் எத்தகைய நிலைமைகள் எம்மீது எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் திணிக்கப்படுகிறதோ நாமறியோம் ஆனால் நாமனைவரும் தரப்பட்ட நிலைமைகளில் எமது வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்குவதற்கு முடிந்தளவு முயற்சிக்கிறோமா ?

    மிகவும் சிக்கலானதொரு கேள்வி இல்லையா?

    இங்கேதான் நான் உங்களுக்கு ஒரு இளைஞனைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவனுடைய வாழ்க்கை நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக் காட்டாக ஏன் சிலசமயங்களில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது.

    அவ்விளைஞன் யார் என்று அறிய ஆவலாயிருப்பீர்கள் இல்லையா? இன்றைய ஊடகத்துறையின் கணிசமான வளர்ச்சியினால் இவ்விளைஞனைப் பற்றி நீங்கள் கூட அறிந்திருக்க வாய்ப்புண்டு.

    ss1இங்கிலாந்தின் வடபகுதியில் இருக்கும் ஸ்ரட்வேட்ஷ்யர் (Stratfordshire) எனும் இடத்திலுள்ள பேர்ன்ட்வூட் (Burntwood) எனும் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சட்டன் ( Stephen Sutton ) எனும் வாலிபனைப் பற்றியே குறிப்பிடுகிறேன்.

    அப்படி அவனின் பெருமைதான் என்ன ?

    19 வயதே நிரம்பிய இவ்விளஞன் தனது 15வது வயதில் தான் ஒரு வகை புற்றுநோயால் பீடிக்கப்ப்ட்டிருப்பதை அறிந்தான்.

    அதைத்தொடர்ந்து பல விதமான வைத்தியங்களைக் கைக்கொள்டாலும் தன் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

    கடந்த வருடம் முற்பகுதியில் அவனுடைய புற்றுநோய் குணமாக்கப்படமுடியாத ஒன்று இன்னும் அதிக காலத்திற்கு அவன் உயிர்வாழ்ப் போவதில்லை எனும் உண்மையை அவன் அறிந்தான்.ss2

    அவன் உலகம் இடிந்து போகவில்லை , அவன் வாழ்க்கை ஒடிந்து போகவில்லை. மாறாகத் தனது இந்த நிலையைத் தனக்கு நேர்மறையான சாதகமாக்கிக் கொண்டான்.

    புது வைராக்கியத்தோடு வாழ்க்கையை எதிர்கொண்டான் சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகநூலில் “ஸ்டீபனின் கதை (Stephen`s storey) எனும் பக்கத்தை உருவாக்கினான்.

    தான் மரணிக்கும் முன்பாக சாதிக்க விரும்பும் 46 விடயங்களை தனக்குத்தேவையான படி வரிசைப்படுத்தி அதனை முகநூலின் மூலம் பகிர்ந்து கொண்டான்.

    அவற்றில் விமானத்திலிருந்து பாரசூட் வழியாக குதிப்பது, மற்றும் வெம்பிளி உதைபந்தாட்ட மைதானத்தில் 90000 ரசிகர்களுக்கு முன்பாக ட்ரம் வாசிப்பது போன்றவற்றோடு தனக்கு உறுதுணையாக இருந்த ” டீனேஜ் கான்சர் ட்ரஸ்ட்” எனும் தொண்டு ஸ்தாபனத்திற்கு 10000 ஸ்ரெலிங் பவுண்ஸ் வரை சேகரித்துக் கொடுப்பது என்பன அடங்கின.

    சாதாரணமாக இப்படியான நோயினால் மரணிக்க இருப்போரின் மனநிலை பொதுவாக சமுதாயத்தின் மீதும் உலகின் மீதும் ஆத்திரம் கொள்வதாக இருக்கும் ஆனால் இந்த 19 வயது இளைஞனோ சமுதாயத்தையும் உலகையும் நேசித்தான். தன்னைப் போல வேறு பலர் மரணிக்கக் கூடாது என்று புற்றுநோய்க்கு மருந்து தேடும் தொண்டு ஸ்தாபனத்திற்கு நிதி சேகரிக்க முயற்சித்தான்.

    எத்தனை உயர்குணம் ! எத்தகையதோர் அர்ப்பணிப்பு !

    அவனுடைய இந்த உயர்குணத்தின் தாக்கம் சமூகவலைத்தளங்கள் எல்லாம் குபீரெனப் பற்றிக் கொண்டது. பல முன்னனி தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அவனுக்கு உதவி செய்ய முன்வந்து பல நிதிசேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

    விளைவு !

    10000 பவுண்ஸ் மட்டுமே சேர்க்க எண்ணிய அவனது நிதிக்கு இதுவரை சுமார் 3 மில்லியன் 30000 வரையிலான ஸ்ரேலிங் பவுண்ஸ் சேர்ந்துள்ளன.

    இங்கிலாந்தின் பிரதமர் தொடங்கி இங்கிலாந்தின் கடைசிக் குடிமகன் வரை அனைவரும் இவ்விளஞனின் தன்னலமில்லா சேவையையும், மனதின் உறுதியயும் கண்டு பிரமித்துப் போயிருக்கிறார்கள்.

    இத்தகையதோர் நல்ல இதயம் கொண்ட இளஞனை காலனும் அதிகமாக நேசித்தான் போலிருக்கிறது இன்று காலை (14/05/2014) சுமார் 11 மணியளவில் ஸ்டீபன் சட்டன் என்னும் உன்னதமான இளைஞனை மனிதாபிமானம் மிக்க ஒரு வீரனைக் காலன் கவர்ந்து சென்று விட்டான்.

    அவ்வீரப்புதல்வனை ஈன்ற அன்னையின் வசனங்கள் மனதைத் தொட்டு நிற்கின்றன …

    “என் மைந்தனின் செய்கையினால் இதயம் பூரிக்கிறது
    என் மைந்தனின் பிரிவின் வலியினால் இதயம் துடிக்கிறது”

    காற்றோடு காற்றாக அவனது மூச்சு மறைந்தாலும் நேற்றோடு நேற்றாக அவன் நினைவுகள் மறையாது.

     
    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

    Share
  • முக்கோணக் கிளிகள்

     

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 4
    image

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    jay5

    jay 6

    jay7

    jay8

    Share
  • திருமால் திருப்புகழ் (84)

     

    கிரேசி மோகன்

    Tamasoma jyotirgamaya: new forever series. #krishnafortoday Keshav
    Tamasoma jyotirgamaya: new forever series. #krishnafortoday
    Keshav

    கண்ணன் திருப்புகழ்….
    ——————————————
    ’’கண்ணன் அந்தாதி’’(வெண்பா)….
    ———————————————————-

    Dialogues with Arjuna series. #krishnafortoday Keshav
    Dialogues with Arjuna series. #krishnafortoday
    Keshav

    நிருத்தம் பயில நினக்கொரு வாய்ப்பு,
    கருத்த நவநீதக் கண்ணா, -பருத்த
    அகந்தையாம் ஆற்றில், புகுந்ததே ஆசை,
    முகுந்தாயிக், காளியனுன் மன்று….(26)

    மன்றாடி ஈசன், மனம்குளிர மோகினியாய்,
    அன்றாடிப் பாடிய அச்சுதா, -மன்றாடிக்
    கேட்கிறேன், வைகுந்தா காட்சிதா கைலாசன்,
    வேட்கை, அளவென் விருப்பு….(27)

    விருப்புடன் மாலோலன், விரைகழல் பற்றிச்,
    சிறப்புடன் வாழ்வோம் செகத்தில், -மறுப்பிதில்,
    உண்டென்றால் கேளீர், உறங்கையில் உண்டாநீர்
    உண்டில்லை சொல்வீர், உடன்….(28)

    உடனிருக்கும், ஓட வடமிடும், வாடக்
    கடன்பட்டார் நெஞ்சாய்க் கலங்கும் -புடமிட்ட
    பொன்னாக்கும் மண்ணை, பொலிவாக்கும் வாழ்க்கையை
    கண்ணனைக் கூடிக் கிட….(29)

    கிடந்தால் உறக்கம், கிளர்ந்தெழ உண்பாய்
    இடர்களையும் சாக்கில் இகத்தை -தொடர்ந்திடும்
    இக்கூத்தைக் காண இறைவா எமெக்கெதற்கு
    வக்கத்த வேடிக்கை வாய்ப்பு….(30)
    ————————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/

    Share
  • இனி ஆவன செய்வோம்

     

    — இன்னம்பூரான்

     

    இனி ஆவன செய்வோம்

     

    tamizhan endru solada

    தேசீய தேர்தல் 2014 இந்தியாவுக்கு ஒரு திருப்புமுனை என்பதை விட திருகிய முனை என்று சொல்வது சாலத்தகும். 81.4 கோடி வாக்காளர்களில் 55.1 கோடி வாக்காளர்கள். 66.38 விழுக்காடு வாக்களித்தனர்.. கடந்த தேர்தலை விட 13.4 விழுக்காடு அதிகமான வாக்காளர்களில், இளைய சமுதாயம் கணிசமாக உளர். தேர்தல் கமிஷன் திறம்பட நிர்வகித்தது பற்றி உலகம் பாராட்டுகிறது. செம்மையான நிர்வாகத்தலைமை இருந்தால், அரசு ஊழியர்கள் உருப்படும் வகையில் இயங்குவர் என்பதை, அரசியலர் கட்டுப்பாட்டில் இருந்தபோது நெறியில் தவறியவர்கள் என கருதப்படும் அதே ஊழியர்கள் நிரூபித்துவிட்டனர் என்பது ஒரு பாடம்.

    எல்லா கட்சியினரும் விதிமுறைகளை மீறுவதில், துட்டு கொடுப்பதில், வசை பாடுவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர் என்றால் மிகையாகாது. பிரதிநிதித்துவ ஜனநாயகம் இன்றும் கானல் நீர் தான். கதவோரம் ஒளிந்திருந்த கருத்துக் கணிப்பாளர்கள், ஒருமுகமாக, திருகிய முனை பாட்டுப்பாடுகிறார்கள். தற்காலம், வருங்கால பிரதமராக பெரிதும் பேசப்படும் திரு. நரேந்திர மோடி,

    ‘நான் அரசு இயந்திரத்தை நல்லதொரு நிர்வாகியாக இயக்குவேன்; நாடு சுயநம்பிக்கையை தொலைத்து விட்டது; தேக்கத்தில் அமுங்கி விட்டது; உந்துதல் சக்தியுடன் அதை உசுப்பி விட்டால், நடக்கவேண்டியவை தானே நடக்கும்.’

    … என்கிறார். இத்தருணம், போனமாதம் அமெரிக்க நாடாளுமன்றம், ‘திரு. நரேந்திர மோடி பிரதமரானல், அவருக்கு A-1 (diplomatic) visa தனக்குத்தானே வந்து சேரும்’ என்று வருமுன் காப்போனாக உரைத்ததையும், அமெரிக்க அதிபரின் சம்பிரதாயம் கலந்த வரவேற்பையும் நாம் உன்னித்து கவனிக்க வேண்டும். மற்ற நாடுகள் அதே வழியில் தான் பயணிப்பார்கள். நான் எதிர்பார்த்தபடியே, ‘ஊடலும் கூடலுமாக’ இயங்கும் பங்குச்சந்தை அண்ணாந்து பார்க்கிறது. வருங்காலத்தில் அதற்கு மராமத்து தேவை. அது கபளீகரர் உலகம். முற்றுகை போதும். இனி ஆவன செய்வோம்.

    அதற்கு ஏதுவாக, தலைமை தேர்தல் கமிஷனர் திரு.வி.எஸ்.சம்பத்
    அளித்த ஒரு பேட்டியின் சாராம்சம்.

    “வன்முறையை ஓரளவு கட்டுப்படுத்தினாலும், செல்வத்திமிர் (மணி பவர்), நிழல் செல்வம், பணப்புழக்கம், எல்லாமே களத்தில் இறங்கி விடுகின்றன. அதை தடுக்க, கமிஷன் மட்டும் போதாது. தவிர, சட்டப்படி, விதி மீறி கெலித்த பிரதிநிதிகளை வீட்டுக்கனுப்ப எம்மிடம் ஆளுமை கொடுக்கப்படவில்லை. (பேட்டி கண்டவர் 2009 தேர்தலில் விதி மீறி ஆறு வருடங்கள் பதவியிலிருந்த் திரு.அஷோக் சாவன் பற்றி வினவினார். அது ஒரு டெஸ்ட் கேஸ் என்பதால் வருங்காலத்தில் நல்லது நடக்கலாம் என்றார், திரு.சம்பத்.)

    ஆக மொத்தம் இன்றைய நிலை:
    முறைகேடுகளும் தேர்தல் உத்திகளாக தொடரக்கூடுபவை. சாளரத்தை திறந்தோம். இனி ஆவன செய்வோம்.

    1. மக்கள் சக்தி மங்கக்கூடாது. அது வெளிச்சத்தில் இயங்கவேண்டும், வன்முறையை அறவே தவிர்த்து.
    2. பேட்டை தோறும், மக்கள் நலத்தை வெளிப்படையாக நாடும் தன்னார்வ குழுக்கள் அமைத்து, பிரதிநிதிகளை கண்காணித்து, பொறுப்புடன் தட்டிக்கேட்கும் பண்பை உருவாக்குங்கள். தரம் கெட்டவர்கள் உட்புகுந்து ஆதாயம் தேடுவார்கள். விழிப்புடன் அவர்களை வெளியேற்றுங்கள். இன்னல்கள் உண்டு. அண்ணல் காந்தி சமாளிக்காததா?
    3. கைகளை கூப்பி, காலை பிடித்து, சமயத்தில் காசை வீசி, கெலித்த பிரதிநிதிகள், உமது ஊழியர்கள். அவர்களை சிம்மாசனத்தில் தூக்கி வைத்து அவர்களின் மண்டை கனத்தை ஏற்றாதீர்கள்.
    4. இனபேதங்கள், ஏற்ற தாழ்வுகள், ஆணவம், பெண்ணிய எதிர்ப்பு போன்றவற்றை பேணாதீர்கள்.
    5. மக்கள் நலம் தெளிவு: தேச பாதுகாப்பு, யோக்கியமான நிதி நிர்வாகம், சட்டம் தவறாமை வகையறா: மத்திய அரசு நிலைப்பாடு
    6. இணக்கமான மாநில நிர்வாகம், அணுக்கத்தொண்டு, அடுத்த நிலைப்பாடு.
    7. தொகுதி நலம் முக்கியம். அவரவர் தொகுதியை, பிரதிநிதியும், மக்கள் குழுவும், கவனித்துக்கொள்ள வேண்டும். – சுற்றுச்சூழல், மின்சாரம், தண்ணீர் வகையறா.
    8. மக்கள் குழுக்கள் ஒன்று சேர்ந்து, கல்வி, மருத்துவம், முன்னேற்றம் ஆகியவை பற்றி, அரசுக்கு ஆலோசனை அளிக்க வேண்டும்.
    9. மேலாண்மை, கள்ளைக்குடிப்பது போல, அதிகார மயக்கம் தரும், யாராயிருந்தாலும். எனவே, மேலாண்மை கண்காணிப்பு இல்லையென்றால், செத்தோம்.
    10. மேற்படி இயங்க, நாம் வாய்மையை கடைபிடித்து, லஞ்சம் கொடுக்காமல், தன்னலம் மாடும் நாடாமால், கறாராக இருக்க வேண்டும்.

    இதெல்லாம் வேலைக்காவாது என்பர் பலர். அப்படியே இருந்து விட்டோமானால், மோடி ஆண்டாலும், ராகுல் ஆண்டாலும், அரவிந்த் ஆண்டாலும், ‘மேலாண்மை, கள்ளைக்குடிப்பது போல, அதிகார மயக்கம் தரும், யாராயிருந்தாலும். எனவே, மேலாண்மை கண்காணிப்பு இல்லையென்றால், செத்தோம்.’ என்பது நடை முறையில் வந்து விடும்.

     

    இன்னம்பூரான்
    13 05 2014

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    சித்திரத்துக்கு நன்றி:
    http://3.bp.blogspot.com/-dVSaHvVmvhc/U0vGkt31XLI/AAAAAAAABRY/tKDOt8EG5w8/s1600/mb.jpg

    Share
  • கம்பனே…!

    -பிச்சினிக்காடு இளங்கோ

    கம்பனே…
    நான் இதுவரை
    நான்தான்!

    நீ                                                                                                                           Kambar2 for picchinikadu
    என் தூரத்து நண்பனாகவே
    இருந்தாய்!

    குருகுலக் கல்வி
    உன்னிடமிருந்து
    எனக்கில்லை!

    இருந்திருந்தால்
    என் சுயத்தின் சாயம்
    தெளிவற்றிருக்கும்!

    எனக்கென ஒரு
    சுயம்
    இல்லாதுமிருந்திருக்கும்!

    பள்ளிப் பாடத்தில்
    உன்னைப் படித்தேன்!
    கம்பன் கழகத்தில்
    உன்னைக் கேட்டேன்!

    ஒருமுறை
    கம்பன்கழகக் கவியரங்கில்
    உன்னைப் பாட நேர்ந்தது!

    அது
    கேள்வியை வைத்துக்கொண்டே
    நடத்திய வேள்வியானது!

    சலித்துப் புடைத்தால்
    எச்சம்
    வேள்வியின் மிச்சம்
    நான்கு வரிகளானது 

    அவ்வளவுதான்
    அறிமுகம்!

    அவ்வளவுதான்
    என் இருப்புக் கணக்கில்
    உன் இருப்பு!

    ஒரு நெருக்கம்
    இல்லாதிருந்ததால்
    நான் இதுவரை
    நானென்று சொல்லமுடிகிறது!

    எனக்கும்
    எனக்குமான
    அடையாளத்தில்
    நிம்மதியிருக்கிறது!
    பெருமையுமிருக்கிறது!

    எந்தச் சாயலுமில்லாமல்
    என்வழியில் வந்தநான்
    வழியில்
    உன்னைச் சந்தித்தேன்!

    இனிவரும் பயணத்தில்
    நீ
    உதவக் கூடும்!

    எல்லோரையும்போல
    நானும்
    கடன்காரனாகக் கூடும்!

    உதவியேதும் இதுவரை
    இல்லையென்பதே
    இன்றைய பெருமை!

    அப்படியேதும்
    நீ உதவினால்
    நன்றிசொல்வேன்
    அது
    என் கடமை!!

    Share