சிறுகை அளாவிய கூழ் (22)
-இவள் பாரதி
தாய் தேடுமென
எல்லாக் குஞ்சுப் பறவைகளும்
கூடடைய விரைகின்றன!
என் குழந்தை
நீ தேடுவாயென
கூடடைய விரைகிறேன்
போக்குவரத்து நெரிசலுக்குப்
பெயர்போன
இப்பெருநகர சாலைகளில்!
————–
நீ முதன்முதலாய்
எ(ன்)னையழைத்தபோது
மீட்டெடுத்துக் கொண்டேன்
கடந்த சில வருடங்களாய்
நான் புழங்காமல் விட்டிருந்த
’அம்மா’ எனும் சொல்லை!
—————
உன் பால்பற்களுக்கும்
மென் உதடுகளுக்கும்
நாவசைப்பதற்கும் இடையில்
இடறி விழுகின்ற
தப்பி வருகின்ற
துளிர்த்துத் தெறிக்கின்ற
ஒவ்வொரு வார்த்தையும்
உயிர்மெய் எழுத்துகளில்
ஏதேனும் ஒன்றாகத்தானிருக்கின்றன!