இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (108)

 

— சக்தி சக்திதாசன்

 

 
அன்பினியவர்களே !

இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன். இம்மடலை வரையும் போது சாரளத்தின் வழியாக வெளியே தெரியும் காட்சியைப் பார்க்கிறேன்.

ஆதவன் தன் ஒளிக்கதிர்களால் பகலுக்கு பளிச்சென்ற வெளிச்சத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறான்.

பச்சைப் பசேலென்ற இலைகள் வசந்தகாலத் தென்றலினால் தாலாட்டப்படுகின்றன.

ஆனால் இதே போலத்தான் இயற்கை எப்போதும் அமைதியாக அழகாகக் கதிரவன் கதிர்களை அள்ளிப்பருகிக் கொண்டிருக்கப் போகிறதா ?

இல்லை வானம் கறுக்கத்தான் போகின்றது கதிரவனைக் கருமேகங்கள் மறைக்கத்தான் போகின்றன இதே சாரளத்தினூடாக கறுத்துப் போன பகலையும் பார்க்க வேண்டித்தான் இருக்கப் போகிறது.

ஆனால் நாம் நாமாகத்தான் இருக்கப் போகிறோம் எமது விழிகளின் பார்வைகள் அதே கோணத்தினூடாக காணத்தான் போகின்றன.

எதற்காக இந்தத் தத்துவப் பீடிகை என்று எண்ணாதீர்கள். சீட்டாட்டத்தில் எம் கைகளில் தவழப் போகும் சீட்டு எது என்று முன்கூட்டியே தெரிந்திருக்காவிட்டாலும் தரப்படும் சீட்டுக்களை வைத்து அச்சீட்டாட்டத்தில் நாம் ஜெயிக்க எத்தனையோ வழிகளில் முயல்கிறோம்.

அதே போல வாழ்க்கையில் எத்தகைய நிலைமைகள் எம்மீது எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் திணிக்கப்படுகிறதோ நாமறியோம் ஆனால் நாமனைவரும் தரப்பட்ட நிலைமைகளில் எமது வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்குவதற்கு முடிந்தளவு முயற்சிக்கிறோமா ?

மிகவும் சிக்கலானதொரு கேள்வி இல்லையா?

இங்கேதான் நான் உங்களுக்கு ஒரு இளைஞனைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவனுடைய வாழ்க்கை நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக் காட்டாக ஏன் சிலசமயங்களில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது.

அவ்விளைஞன் யார் என்று அறிய ஆவலாயிருப்பீர்கள் இல்லையா? இன்றைய ஊடகத்துறையின் கணிசமான வளர்ச்சியினால் இவ்விளைஞனைப் பற்றி நீங்கள் கூட அறிந்திருக்க வாய்ப்புண்டு.

ss1இங்கிலாந்தின் வடபகுதியில் இருக்கும் ஸ்ரட்வேட்ஷ்யர் (Stratfordshire) எனும் இடத்திலுள்ள பேர்ன்ட்வூட் (Burntwood) எனும் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சட்டன் ( Stephen Sutton ) எனும் வாலிபனைப் பற்றியே குறிப்பிடுகிறேன்.

அப்படி அவனின் பெருமைதான் என்ன ?

19 வயதே நிரம்பிய இவ்விளஞன் தனது 15வது வயதில் தான் ஒரு வகை புற்றுநோயால் பீடிக்கப்ப்ட்டிருப்பதை அறிந்தான்.

அதைத்தொடர்ந்து பல விதமான வைத்தியங்களைக் கைக்கொள்டாலும் தன் நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை.

கடந்த வருடம் முற்பகுதியில் அவனுடைய புற்றுநோய் குணமாக்கப்படமுடியாத ஒன்று இன்னும் அதிக காலத்திற்கு அவன் உயிர்வாழ்ப் போவதில்லை எனும் உண்மையை அவன் அறிந்தான்.ss2

அவன் உலகம் இடிந்து போகவில்லை , அவன் வாழ்க்கை ஒடிந்து போகவில்லை. மாறாகத் தனது இந்த நிலையைத் தனக்கு நேர்மறையான சாதகமாக்கிக் கொண்டான்.

புது வைராக்கியத்தோடு வாழ்க்கையை எதிர்கொண்டான் சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகநூலில் “ஸ்டீபனின் கதை (Stephen`s storey) எனும் பக்கத்தை உருவாக்கினான்.

தான் மரணிக்கும் முன்பாக சாதிக்க விரும்பும் 46 விடயங்களை தனக்குத்தேவையான படி வரிசைப்படுத்தி அதனை முகநூலின் மூலம் பகிர்ந்து கொண்டான்.

அவற்றில் விமானத்திலிருந்து பாரசூட் வழியாக குதிப்பது, மற்றும் வெம்பிளி உதைபந்தாட்ட மைதானத்தில் 90000 ரசிகர்களுக்கு முன்பாக ட்ரம் வாசிப்பது போன்றவற்றோடு தனக்கு உறுதுணையாக இருந்த ” டீனேஜ் கான்சர் ட்ரஸ்ட்” எனும் தொண்டு ஸ்தாபனத்திற்கு 10000 ஸ்ரெலிங் பவுண்ஸ் வரை சேகரித்துக் கொடுப்பது என்பன அடங்கின.

சாதாரணமாக இப்படியான நோயினால் மரணிக்க இருப்போரின் மனநிலை பொதுவாக சமுதாயத்தின் மீதும் உலகின் மீதும் ஆத்திரம் கொள்வதாக இருக்கும் ஆனால் இந்த 19 வயது இளைஞனோ சமுதாயத்தையும் உலகையும் நேசித்தான். தன்னைப் போல வேறு பலர் மரணிக்கக் கூடாது என்று புற்றுநோய்க்கு மருந்து தேடும் தொண்டு ஸ்தாபனத்திற்கு நிதி சேகரிக்க முயற்சித்தான்.

எத்தனை உயர்குணம் ! எத்தகையதோர் அர்ப்பணிப்பு !

அவனுடைய இந்த உயர்குணத்தின் தாக்கம் சமூகவலைத்தளங்கள் எல்லாம் குபீரெனப் பற்றிக் கொண்டது. பல முன்னனி தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அவனுக்கு உதவி செய்ய முன்வந்து பல நிதிசேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

விளைவு !

10000 பவுண்ஸ் மட்டுமே சேர்க்க எண்ணிய அவனது நிதிக்கு இதுவரை சுமார் 3 மில்லியன் 30000 வரையிலான ஸ்ரேலிங் பவுண்ஸ் சேர்ந்துள்ளன.

இங்கிலாந்தின் பிரதமர் தொடங்கி இங்கிலாந்தின் கடைசிக் குடிமகன் வரை அனைவரும் இவ்விளஞனின் தன்னலமில்லா சேவையையும், மனதின் உறுதியயும் கண்டு பிரமித்துப் போயிருக்கிறார்கள்.

இத்தகையதோர் நல்ல இதயம் கொண்ட இளஞனை காலனும் அதிகமாக நேசித்தான் போலிருக்கிறது இன்று காலை (14/05/2014) சுமார் 11 மணியளவில் ஸ்டீபன் சட்டன் என்னும் உன்னதமான இளைஞனை மனிதாபிமானம் மிக்க ஒரு வீரனைக் காலன் கவர்ந்து சென்று விட்டான்.

அவ்வீரப்புதல்வனை ஈன்ற அன்னையின் வசனங்கள் மனதைத் தொட்டு நிற்கின்றன …

“என் மைந்தனின் செய்கையினால் இதயம் பூரிக்கிறது
என் மைந்தனின் பிரிவின் வலியினால் இதயம் துடிக்கிறது”

காற்றோடு காற்றாக அவனது மூச்சு மறைந்தாலும் நேற்றோடு நேற்றாக அவன் நினைவுகள் மறையாது.

 
மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *