– சு.கோதண்டராமன்

வேதத்தில் என்ன இல்லை?

 

 

 

vedas

வேத ரிஷிகள் காலத்தில் கோவில் கிடையாது; விக்ரஹாராதனை கிடையாது; ஸந்யாஸம் கிடையாது. அத்வைத த்வைத விசிஷ்டாத்வைதப் பிரிவுகள் கிடையா; பக்தி மாத்திரந்தானுண்டு. கோவிலும் மடமும் பெளத்தமதப் பழக்கத்தால் வெளி நாடுகளிலிருந்து நமக்குக் கிடைத்த பேறுகளென்று சரித்திரக்காரர் சொல்லுகிறார்கள். ஆனால் இப்போது ஹிந்துமதப் பயிற்சிகளுள்ளே கோவிலும் சிலையும் நெடுந்தூரம் ஆழ்ந்து போய்விட்டன. ஆதலால், இப்போது ஹிந்து மதத்திலிருந்து கோவிலைப் பிரிக்க முடியாது. – பாரதி

வேதத்தில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கு முன் அதில் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பல அதில் இல்லை என்பதை அறிந்து கொள்வோம். ஆம், இன்றைய இந்து சமயத்தின் அடையாளங்களாகக் கருதப்படும் வழக்கங்களில் பெரும்பாலானவை ரிக் வேதத்தில் காணப்படவில்லை.

அவை வேத விரோதமானது என்று நிரூபிப்பது நம் நோக்கம் அல்ல. வைதிக சமயம் பல தாக்கங்களுக்கு உட்பட்டு வெளித் தோற்றத்தில் மாறி வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டால்தான் இத்தனை மாற்றங்களையும் ஏற்றுக் கொண்ட அந்த அடிப்படை என்ன என்பதை ஆராய முடியும்.

விநாயகர்

முதலில் பிள்ளையாரிலிருந்து ஆரம்பிப்போம். ரிக் வேதத்திலும் மற்ற வேதங்களிலும் விநாயகரைப் பற்றிய குறிப்பு இல்லை.

அது எப்படி இல்லாமல் போகும்?

கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஆநஸ் ஸ்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம்

என்ற விநாயகர் துதி வேத மந்திரம் தானே [ரிக் 2.23.1] என்று வைதிகர்கள் பாயக் கூடும்.

இந்த மந்திரம் ரிக் வேதத்தில் பிரம்மணஸ்பதி மற்றும் பிருஹஸ்பதி என்ற தலைப்பில் வரும் 19 பாடல்களில், முதலாவது பாடல். இந்தப் பாடலில் எங்கும் கணபதியின் பிற பெயர்களோ, அவரது தோற்றம் பற்றிய குறிப்புகளோ காணப்படவில்லை. அந்தப் பாடலின் மீதி வரிகளிலோ, அந்த சூக்தத்தின் மற்றைய பாடல்களிலோ கணபதி என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பிரம்மணஸ்பதி என்ற சொல் பல முறை குறிக்கப்படுகிறது. பிரம்மணஸ்பதி தான் விநாயகர் என்று கூறுவதற்கான எந்தத் தடயமும் இல்லை. சாயணர் காலத்தில் விநாயகர் வழிபாடு பரவி இருந்தும், இது விநாயகரைக் குறிப்பதாக சாயணர் கூறவில்லை.

கணேச சூக்தம் என்ற பெயரில் ஒரு தோத்திரம் உள்ளது. இது 15 மந்திரங்கள் கொண்ட ஒரு தொகுப்பு. இதில் எதுவும் விநாயகருக்கு உரியது இல்லை. இதன் முதல் 9 மந்திரங்கள் ரிக் வேதத்தின் 8வது மண்டலம் 81வது சூக்தத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இவை இந்திரனைக் குறித்தவை. அடுத்த 2 மந்திரங்கள் முன் சொன்ன 2வது மண்டலம் 23வது சூக்தத்தில் உள்ளவை. பிரம்மணஸ்பதியைப் போற்றுபவை. மற்ற 4 மந்திரங்கள் ரிக் வேதம் 10.112 இல் 9வது, 10வது பாடல்களாக உள்ளன. இவையும் இந்திரனைத் துதிப்பவையே.

ஒரு புதிய தெய்வம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது பற்றிக் கவலைப்படாமல், அந்தத் தெய்வத்திற்கு ஏதேனும் ஒரு வேதப் பாடலைப் பயன்படுத்துவது வழக்கம் என்பதற்கு இது ஒரு உதாரணம். இன்று நாம் சடங்குகளில் பயன்படுத்தும் மந்திரங்கள் அந்தச் சடங்கோடு தொடர்புடைய பொருள் கொண்டவை அல்ல. (இது பற்றிப் பின்னர் வரும் ஒரு தலைப்பில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.)

சிவன்

வேதத்தில் சிவ வழிபாடு இல்லை. சிவ என்ற சொல் இருக்கிறது. மங்களகரமான என்ற பொருளில் இது பல தேவர்களுக்கு அடைமொழியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ருத்ரன் இருக்கிறார். ஆனால் ருத்ரனும் சிவனும் பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டார்களே அன்றி வேதம் கூறும் ருத்ரனுக்கு இன்றைய சிவனுக்குரிய அம்சங்கள் இல்லை.

ரிக் வேதத்தில் ருத்திரனைப் பற்றிய குறிப்புகளைப் பார்த்தால், பல இடங்களில் மருத் என்னும் தெய்வத்தின் தந்தை ருத்திரன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. [உ-ம் ரிக் 1.85.1] சில இடங்களில் மருத்துகளே ருத்திரர்கள் என்று கூறப்பட்டுள்ளது. [உ-ம் ரிக் 1.39.4,] இன்னும் சில இடங்களில் ருத்திரன் அக்னியின் மறுபெயராகக் கருதப்படுகிறார். [உ-ம் ரிக் 1.72.4,] சில இடங்களில் ருத்திரன் அஸ்வினி தேவர்களோடு ஒன்றாகக் கருதப்படுகிறார். [உ-ம் ரிக் 1.158.1] அவ்வகையில், காற்றாகவும், தீயாகவும், அஸ்வினி தேவர்களாகவும் இன்னும் பிறவாகவும் விளங்கும் பரம் பொருளைச் சில இடங்களில் ருத்திரன் என்று வேதம் அழைக்கிறது என்று தான் சொல்ல முடியும்.

ஒரே ஒற்றுமை சொல்ல வேண்டும் என்றால், ரிக் வேதத்தில் பல இடங்களில் நலம் தரும் மருந்துகளுடன் வந்து நோய் நீக்குபவராக ருத்திரன் கூறப்படுகிறார் [உ-ம் ரிக் 1.43.4, 2.33.4]. இது சிவனை வைத்தியநாதன் என்று இன்று நாம் வழங்குவதுடன் ஒக்கிறது.

யஜுர் வேதத்தின் ருத்ரம் (4வது காண்டம் 5வது பிரபாடகம்) இன்று சிவ வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் மந்திரம். அதில் கூறப்படும் ருத்திரனின் பண்புகளில் சில சிவனுடைய பண்புகளுடன் ஒத்திருந்தாலும், ஒவ்வாதவையும் பல உள்ளன.

கோபமே வடிவானவர் என்பது ருத்திரனுக்கும் சிவனுக்கும் பொதுவான அம்சம். சிவன் யானைத் தோலையும் புலித் தோலையும் அணிந்தவர் என்று இன்று நாம் வழங்குவதற்கு இயைய யஜுர் 4.5.10.10 மிருகத் தோலை அணிந்தவர் ருத்திரன் என்று கூறுகிறது. யஜுர் 1.8.6.9 ருத்திரனை த்ரயம்பகன் (முக்கண்ணன்) என்கிறது.

இனி, முரண்பாடுகளைப் பார்ப்போம். பப்லுசாய என்பதற்கு எருதின் மேல் இருப்பவர் என்றும் ஸோம என்பதற்கு உமையோடு கூடியவர் என்றும் தற்போது பொருள் கூறப்படுகிறது. ஆனால் சாயணர் பப்லுசாய என்பதைப் ‘பழுப்பு நிறத்தவர்’ என்று எழுதுகிறார். ஸோம என்ற சொல்லுக்கு ஸோமக் கொடி என்னும் தாவரம் என்று பொருள் தருகிறார். தற்போது வழங்கும் இவ்விரண்டு பொருள்களும் சாயணருக்குப் பிந்திய காலத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம். மாதொரு பாகன் என்ற கருத்தை வேதத்தில் காண முடியவில்லை. அம்பிகா ருத்திரனின் சகோதரியாகக் கூறப்படுகிறார் [யஜுர் 1.8.6.6].

தற்போதைய வழக்கு, சிவனை நீலகண்டன், சடையன் என்று குறிப்பிடுகிறது. ஆனால் ருத்திரன் கழுத்து கறுத்தவர், கழுத்து வெளுத்தவர் என்று இருவகையாகவும் கூறப்பட்டுள்ளார் (நீலகண்டர், சிதிகண்டர் – யஜுர் 4.5.5.1). அதே போல, சடையர் என்றும் மொட்டைத் தலையர் என்றும் கூறப்பட்டுள்ளார் (கபர்தினர், வ்யுப்தகேசர் – யஜுர் 4.5.5.1).

மேலும், வேதத்தில் ருத்திரன் என்ற பெயர் ஒருமையிலும் வருகிறது, ருத்திரர்கள் என்று பன்மையிலும் பேசப்படுகிறது. தேவர்கள் நிலத்தில் 11, நீரில் 11, ஆகாயத்தில் 11 பேர் உள்ளனர் என்று ரிக் 1.139.11 கூறுவதை யஜுர் 1.4.10.1 மற்றும் யஜுர் 1.4.11.1 ருத்திரர்களாக எடுத்துக் கொள்கிறது. ஆயிரக் கணக்கில் உள்ளவர்கள் என்று யஜுர் 4.5.11.1 கூறுகிறது. வசுக்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள் என்று மூன்று தெய்வக் கூட்டங்கள் பல இடங்களில் சேர்த்தே சொல்லப் படுகின்றன (உதாரணம் – யஜுர் 1.1.11.16).

இந்த மந்திரங்களிலிருந்து ருத்திரனின் தன்மை இத்தகையது என்று நிர்ணயிக்க முடியாத நிலையில், வேத தெய்வமான ருத்திரனின் மாற்றுருவமே சிவன் என்று சொல்வதை விட, சிவன் என்னும் கருத்து உருவாகிய பின், அவருடைய வழிபாட்டுக்கு, ருத்ரனைக் குறித்த வேத மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்று கூறுவதே பொருந்தும்.

திருமால்

வேதத்தில் திருமால் இருக்கிறாரா? விஷ்ணு என்ற சொல் இருக்கிறது. அது எங்கும் வியாபித்த சூரியனைக் குறிப்பதாகத் தான் உள்ளதே அன்றி இன்று நாம் வணங்கும் திருமாலைக் குறிக்கவில்லை. விஷ்ணு மூன்று அடி வைத்தது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. அது சூரியனின் (காலை, பகல், மாலை ஆகிய) மூன்று நிலைகளைக் குறிப்பதாகத் தான் சாயணர் கூறுகிறார். நாராயணன் என்ற பெயர் ரிக் வேதத்தில் இல்லை.

தைத்திரிய ஆரண்யகத்தில் வரும் நாராயண சூக்தத்தில் விஷ்ணுவும் நாராயணனும் ஒன்று என்பதற்கான குறிப்பு இல்லை.

இன்று திருமால் வழிபாட்டில் பெருமளவு பயன்படுத்தப்படும் புருஷ சூக்தத்தில் விஷ்ணு என்ற பெயரும் நாராயணன் என்ற பெயரும் இல்லை. இவை பிற்காலத்தில் ஒன்றாக்கப்பட்டவை.

பிற தெய்வங்கள்

இன்று பெரும்பாலான மக்கள் முருகன், லட்சுமி முதலான தெய்வங்களையும், மாரியம்மன், ஐயனார் முதலான கிராமத் தெய்வங்களையும் வணங்குகிறார்கள். இவர்களுக்கு வேத மந்திரம் சொல்லி பூஜை செய்யப்படுவதையும் காண்கிறோம். இந்த தெய்வங்கள் எதுவும் வேத இலக்கியத்தின் அடிப்படை நூலான ரிக் வேதத்தில் இல்லை.

கோயில்கள் இல்லை, விக்கிரக ஆராதனை இல்லை. இன்று எந்த அர்ச்சனை செய்தாலும் ஒவ்வொரு பெயருக்கு முன்னாலும் ஓம் என்று சேர்த்துச் சொல்கிறோமே, அந்த ஓங்காரம் ரிக் வேதத்தில் இல்லவே இல்லை. அதைப் பற்றி பின்னர் வந்த உபநிடதங்கள் தாம் வானளாவப் புகழ்கின்றன.

அபிஷேகங்கள், அலங்காரங்கள், உற்சவங்கள் இல்லை. பஞ்ச பூதக் கோட்பாடு இல்லை. அஹிம்ஸைக் கொள்கை, கர்மாக் கொள்கை, மறு பிறப்பு, மோட்சம், சொர்க்கம், நரகம், பித்ரு லோகம், வைதரணி நதி எதுவும் இல்லை.

பிரம்மசர்யம் முதலான ஆசிரமங்கள் இல்லை. பிராமண க்ஷத்ரிய முதலான வர்ணப் பிரிவுகள் பற்றிய குறிப்பு இல்லை. ரிக் வேதத்தில் வரும் பிரம்ம என்ற சொல் நான் முகக் கடவுளைக் குறிப்பது அல்ல. உபநிஷத்துகள் கூறும் உருவமற்ற குணமற்ற பரம்பொருளையும் குறிப்பது அல்ல. பிரம்ம என்ற சொல் பிரார்த்தனை மந்திரம் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரார்த்தனை சொல்பவர் ப்ரஹ்மணர் என்றும் ப்ராஹ்மணர் என்றும் கூறப்பட்டுள்ளார். இது வர்ணத்தையோ ஜாதியையோ குறிப்பதல்ல.

இவை எல்லாம் காலப் போக்கில் இந்து சமயத்தில் ஏற்பட்டு அதனை வளர்த்தவை.

இந்து சமயத்தின் வேர் வேதங்கள். அந்த வேதங்களுக்குள்ளே ஆணி வேரான ரிக் வேதமே பழமையானது; மற்ற வேதங்களுக்கும், பிராமணம், ஆரண்யகம், உபநிடதங்களுக்கு எல்லாம் ரிக் ஸம்ஹிதையே அடிப்படை என்கிறோமே, அது எந்த அடிப்படையில்? பிற்காலத்தில் பல மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வழி வகுத்த அதன் தனித்தன்மை என்ன? மாற்றங்கள் ஏற்பட்ட பின்னும் வேதமே அடிப்படை என்கிறோமே அப்படிக் கூறுமளவுக்கு வேதத்தின் எந்தக் கருத்து இன்று வரை மாறாமல் இருந்து மாற்றங்களை எல்லாம் வரவேற்று சமயத்தை வளர்த்து வருகிறது?
பாமரன் புதுக் கோணத்தில் பார்க்க முயன்றான். வேதத்தின் மையக் கருத்து என்ன என்று தெரிந்து கொண்டால் அதற்கு மாறானவற்றை இடைச் செருகலாகக் கருதி அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மற்ற பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம், மையக் கருத்தைத் தெரிந்து கொண்டு விட்டால் அதோடு தொடர்பு படுத்தி இது வரை புரியாத பல மந்திரங்களை அறிந்து கொள்ள முடியும் என நம்பினான்.

மையக் கருத்தை எப்படிக் கண்டு பிடிப்பது? எந்தக் கருத்து திரும்பத் திரும்பப் பேசப்படுகிறதோ, வலியுறுத்தப்படுகிறதோ அதுவே மையக் கருத்தாகக் கொள்ளலாம். அடிக்கடி வரும் சொற்களை மட்டும் தனியாகப் பிரித்து சிறப்பான கவனம் செலுத்திப் பார்க்க முயன்றான். அப்படி அடிக்கடி வரும் சொற்கள் யாவை? தேவ, யக்ஞ, ருதம் என்ற மூன்று சொற்களே ரிக் வேதத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள். இவற்றின் விளக்கத்தை அடுத்தடுத்த அத்தியாயங்களில் காணலாம்.

படம் உதவி:
http://www.allabouthinduism.info/tag/rig-veda/
http://www.allabouthinduism.info/wp-content/uploads/2013/07/veda.jpg

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *