Featuredஇலக்கியம்பத்திகள்

பெண்கள் நிலை , தேர்வு முடிவுகளில் முதலிடம் – சமூகத்தில் எந்த இடம் ?

— எஸ் வி வேணுகோபாலன்

toppersகடந்த ஆண்டு சென்னை பள்ளியொன்றில் மகாகவி பாரதி குறித்த சிறு உரையாடலுக்குப் போயிருந்த அனுபவம் மறக்க இயலாதது. எட்டாம் வகுப்பு பிள்ளைகள் – ஆண், பெண் இரு பாலருமாக 27 பேர் கொண்ட வகுப்பு அது. இருபது நிமிட உரையை அடுத்து கேள்வி பதில்கள் என்பதாக அமைத்துக் கொண்டோம் பாரதி குறித்த எங்களது தேடலை. பாரதி அறிமுகம், அவரது பன்முகத் தன்மை குறித்தெல்லாம் நேரடி செய்திகளாக அல்லாமல் வெவ்வேறு நிகழ்வுகளோடு கலந்து சுவாரசிய கதியில் போய்க் கொண்டிருந்தது விவாதம். எத்தனை எத்தனை அறிவார்ந்த கேள்விகள். தனது வகுப்பு குழந்தைகளுக்குத் தமிழிலும், பாரதியிடத்தும், பொது அறிவிலும், வரலாற்றுச் செய்திகளிலும் இவ்வளவு ஈடுபாடா என்று தமிழ் ஆசிரியை பெருமிதத்தோடு வியந்து நின்றார். முத்தாய்ப்பான கேள்வி இன்னும் காத்திருந்தது. ஒரு சிறுமி அழகாகக் கேட்டார், “சார், முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி என்றுதானே சொன்னீங்க. அப்ப பாரம்பரிய வைத்தியத்துக்கு என்ன பேரு?” என்றார். “பாட்டி வைத்தியம்” என்றேன் நான். “அப்ப அவுங்கள எல்லாம் சமூகம் டாக்டரா அங்கீகரிக்காதோ ?” என்றார். அசந்து நின்றேன்.

துணிவு, அறிவு, நுட்பம், பார்வை என பலவகையிலும் தங்களைப் பெண்கள் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்தபோது தொடர்ந்து இவ்வாண்டும் பெண்களே முதலிடம், அதிக சதவீதம் என ஊடகங்கள் அறிவித்தன. இப்படி கரையை நோக்கி ஓங்கரித்தும், ஆர்ப்பரித்தும் பெருத்த ஓசையோடு வரும் மிக உயரமான கடல் அலைகள் பல நேரம் மிக சாதாரணமாகத் தேய்ந்து அதிக கவனம் பெறாது கரையை பெயருக்குத் தொட்டுவிட்டுக் கடலுக்குள் திரும்புவதைப் பார்க்கிறோம். அதிக சதவீதத் தேர்ச்சி பெற்ற மாணவியர், முதலிடம் பெற்ற பெண் குழந்தைகள் பின்னர் சமூகத்தில் எங்கே காணாமலே போய்விடுகின்றனர்? அல்லது எப்படி காணாமல் ஆக்கப் படுகின்றனர்?

அடிப்படையில் பாலின வேறுபாட்டில் ஊன்றப் பட்டிருக்கும் சமூகத்தில் குழந்தை வளர்ப்பிலிருந்து, சமூகப் பார்வையின் நிழல் படிப்பிலும், திருமண நேரத்திலும், பிந்தைய வாழ்க்கைப் பாதையிலும் படரத் தான் செய்கிறது. தங்களது சொந்தத் தேடல்களை, விருப்பங்களை, கேள்விகளை மனித இனத்தில் சரிபாதி அடுத்த பாதியிடம் ஒப்புக் கொடுக்க நேருவது எத்தனை பெரிய வன்முறை என்பது ஒரு கணம் சிந்தித்தால்தான் புரியும்.

உயர் படிப்புக்குப் போகும் பெண்களில் கூட (இந்த வாக்கியத்திலே செய்வினை செயப்பாட்டுவினை மயக்கம் ஒன்று இருக்கிறது – உயர் படிப்புக்கு அனுமதிக்கப் படும் என்று இருக்க வேண்டும்) கணிசமான பகுதியினர் வேலைக்கான உத்தரவுகளை வாங்கி இந்தப் பக்கம் வைத்துவிட்டு நண்பர்களிடம் தங்களது திருமண அழைப்பிதழை வழங்குபவர்களாக மாற வேண்டியிருக்கிறது.

‘நீ என் குழந்தைகளின் தாய், அதை நான் மறுத்துவிடுவேனாகில் நீ வெளியேற வேண்டி இருக்கும்’ என்கிறது வங்காளி மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்று. எந்த விதத்திலும் நிராகரிக்கப் படக் கூடாதவளாக ஒரு பெண் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்போதிலிருந்து என்று கேட்கக் கூடாது. எல் கே ஜியிலிருந்தே இந்த உணர்வு ஊட்டப்படுகிறது. சொல்லப் போனால் அதற்கும் முன்பிருந்தே!

மாலனின் தப்புக் கணக்கு என்கிற அருமையான சிறுகதையை மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் கதை நேரம் தொடரில் குறும்படமாகப் பார்த்திருப்பீர்கள். பள்ளியில் ஒரு கணக்கைத் தனது சொந்தப் புரிதலில் வித்தியாசமாக அணுகிப் போட்டிருப்பாள் அந்தச் சிறுமி. மதிப்பெண்கள் மறுக்கப் பட்டிருக்கும். நியாயம் கேட்கப் புறப்படும் தாத்தாவுடைய பயணத்தின் கடைசி மோதல் தனது மகனோடு நடக்கும். ‘அவ ஒரு பெண் குழந்தை. சுயமா எதையும் யோசிக்க அனுமதி கிடையாது. நாளைக்கு வளர்ந்த பிறகு ஏராளமான பிரச்சனை ஏற்படும். என்ன சொல்லிக் கொடுக்கிறாங்களோ அதைத் தான் அவ கேட்டுச் செய்யணும்’ என்று குழந்தையின் தந்தை பேசும் வசனம் அந்தக் குறும்படத்தின் மிக நுட்பமான இடம். விவாதக் களம்.

கால காலமான இந்தப் பண்பாக்கம் இயல்பான செய்தியாக மரபணுக்கள் வழி கடத்தப் படுகிறது. மத உணர்வுகளால் நிறுவப் படுகிறது. ஆதிக்கப் போக்கினால் அமலாக்கத்தில் இருக்கிறது. ஆனாலும் நவீன சமூகத்தின் வளர்ச்சியில் மேம்போக்கான மாற்றங்கள் நிகழ்வதன் வேகம் இந்த அடிப்படை நீரோட்டத்தை உணர இயலாதபடி அத்தனை நேர்த்தியாக சமூகத்தின் தோற்றத்தைத் திருத்திக் காட்டுகிறது.

அண்ணன் தம்பிகள் எப்போது வீடு திரும்பினாலும் கேள்வி கேட்காத குடும்பம், ஒரு பெண் அப்படி நினைத்தபடி நடந்து கொள்ள இயலாது என்பதைப் பேசும் பாலபாரதி கவிதை ஒன்று, அப்படியெல்லாம் வாதம் செய்யும் பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்றும், ‘இவளை’ யார் தலையிலாவது கட்டித் தள்ளிவிட வேண்டும் என்றும் குடும்ப அங்கத்தினர்கள் பேசுவதை எடுத்துச் சொல்கிறது.

தான் எழுதிய கதைகளைத் தனது வாழ்நாளில் அச்சில் பார்க்காது மறைந்துபோன ரங்கநாயகி என்ற எழுத்தாளர் பற்றிய பேரா. கே பாரதி அவர்களது சிறப்பான கட்டுரை (தி இந்து: பெண் இன்று: மே 11), தலை சிறந்த எழுத்தாளர் வரிசையில் இடம் பெற்றிருக்க வேண்டிய பெண்மணி என்று அவரைப் போற்றுகிறது. ஆனால் சமூகம் அந்த வாய்ப்பை இழந்துவிட்டது. இரா.நடராசன் அவர்களது புகழ் பெற்ற ஆயிஷா கதையின் கடைசியில், அந்தத் தேடல் மிக்க சிறுமி எழுப்பிய கேள்விகளின் வரிசையில் ஏன் பெண் விஞ்ஞானிகள் அதிகம் உருவாகவில்லை என்பது முக்கியமான ஒன்று. குடும்பம், சமூகம் என்கிற நிறுவனங்கள் பெண்கள் சுதந்திர சிந்தனையாளர்களாக உருவாவதை அனுமதிப்பதில்லை. இவற்றின் தேவை, நோக்கம், அடிப்படை கட்டுமானம் அப்படி.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற காலத்திலேயே சமூகம் நிற்கிறதா என்று கேட்கலாம். இல்லை, நிச்சயமாக இல்லை! எண்பதுகளில் வந்த மிர்ச் மசாலா என்ற அருமையான இந்தி திரைப்படத்தில், தனது பெண் குழந்தை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப் பட்டதைப் பார்த்து மிகவும் கோபம் கொள்ளும் கிராமத் தலைவன் தன்னுடைய மனைவியிடம், உனக்கு எத்தனை துணிச்சல், நெஞ்சுரம் இருந்தால் இந்த வேலையைச் செய்திருப்பாய் என்று மிரட்டும் இடம் ஒன்று வரும். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்று அறியப்படும் சாவித்திரி பாய் ஃபுலே வீதியில் பெண் குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்கையில் அவர் மீது மனிதக் கழிவுகள் வீசப்பட்டது என்று படித்திருக்கிறோம். நாகரிக சமூகம் அந்த இடத்தைப் பெருமளவு (பெருமளவு என்றுதான் சொல்ல முடியும்!) கடந்து வந்திருக்கிறது. என்றாலும், எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மிடியத்தாலும், அதற்கு அடுத்தடுத்த கட்டங்களை எட்டிப் பிடிக்கும் தன்மைக்குப் பெண்களை சமூக வெளி அனுமதிக்கிறதா என்பதுதான் கேள்வி.

ஊடக விவாதங்கள், நீயா நானா போன்ற நிகழ்ச்சிகளில் பெண் சுதந்திரம், பாலின சமத்துவம் குறித்த புரிதல்களில் உள்ள சிக்கல், மாற மறுக்கும் சமூக போக்கு இவற்றைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். கவுரவக் கொலைகளின் பின்னணியில் தெறிக்கும் வன்மம் சாதிய விஷயத்திற்கும், பெண் அடிமைத்தனத்திற்கும் ஒருசேர இடம் அளித்திருப்பதைப் பார்க்க முடியும்.

celebration of topperமாநகரங்களின் கடை வீதிகளில், தொழில் நுட்பத் துறையில், அலுவலகங்களில் பெண்கள் நிறைந்திருப்பது என்பது ஒன்று. அதிகாரப் பகிர்வில், தம்மைக் குறித்த முடிவுகளை எடுப்பதில், ஜனநாயக அமைப்பின் பொறுப்புகளை எடுத்துக் கொள்வதில் பெண் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி வேறு! எதிர்பாராத விருந்து, தவிர்க்க முடியாத குடும்ப நிகழ்வு, சமாளிக்க இயலாத மருத்துவச் செலவு, செய்தே தீர வேண்டிய அன்றாட வேலைப் பளு இவற்றை கால காலமாக வழி வழி வம்சாவழியாக நிர்வகிக்கத் தெரிந்திருக்கும் பெண்களுக்கு அரசியல், சமூக, பொருளாதார பெருவெளியில் செயலாற்றத் தெரியாதா?

மரபார்ந்த பார்வையை வெவ்வேறு உத்திகளில் தொடர வைக்கும் ஊடகங்கள், மாற்றங்களுக்கான தூண்டுதல் தவிர்க்கப்படும் பாட திட்டங்கள், இளமைப் பருவத்திலிருந்தே சமத்துவமற்ற வளர்ப்பு முறை, வீட்டினுள்ளும், வெளியேயும் நடமாடும் பண்பாட்டுக் காவலர்களாக பழைய கண்ணோட்டத்தைக் கட்டிக் காப்பாற்றும் மனிதத் திரள் போன்ற அம்சங்கள் நவீன உலகின் புதிய அம்சங்களை வாரிச் சுருட்டி விழுங்கிக் கொண்டே அடிப்படை விதிகளை மாறாது பார்த்துக் கொள்கின்றன.

பெண்களுக்கிடையே ஒட்டுமொத்த விடுதலைக்கான முழக்கம் எழுப்புகையில் சாதிய, மத வேறுபாடுகளின் மடியில் கோலோச்சும் சக்திகள் அப்படியான கலகக் குரல்களை ஒன்று சேரவிடாது பார்த்துக் கொள்வதில் கடுமையாக செயல்படுகின்றன. பெண்கள் சுதந்திரமாக வலம் வருவதை இன்று பாதுகாப்பற்றதாக உருமாறி நிற்கும் பொதுவெளி சாத்தியமற்றதாக அறிவிக்கிறது. பெண்களின் உடல் மீதும், உளவியல் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலுக்கான பழி அனைத்தும் பெண்கள் மீதே சுமத்தப்படும் விஷமத்தனம், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே என்று சொல்லாமல் சொல்கிறது.

பள்ளித் தேர்வு முடிவுகள் வருகையில் முதல் பக்கத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும் சிரிப்பும், கொண்டாட்டமுமாகக் காட்சி அளிக்கும் பெண் குழந்தைகள் காட்சி முடிந்து திரை விழுந்தபிறகு காணாமல் போய்விடும் தன்மை மாற்றப் படவேண்டும். சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்று ஆண்களோடு பெண்களும் முன்னெழுந்து வரும் நிலைக்கான போராட்டம் வெகு தொலைவு செல்லவேண்டியிருக்கிறது. அதற்கான குரல் குடும்ப ஜனநாயகத்திலிருந்து புறப்பட வேண்டி இருக்கிறது. முற்போக்காளர்களது தீர்மானமான செயல்பாட்டைக் கோருகிறது.

 
நன்றி: தீக்கதிர்: மே 15, 2014

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க