Month: September 2014

  • நீயும் நானுமா கண்ணா, நீயும் நானுமா?

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

    கௌரவம்

    தமிழகத்தின் பெயர்விளங்கும் சாதனைகள் படைத்தவர்கள் வரிசையில் திரு.கஸ்தூரி ரங்கன் அவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. ஆம்.. தி ஹிந்து என்னும் ஆங்கிலநாளிதழ் மூலம் பத்திரிக்கைத்துறையில் பன்னெடுங்காலம் வியாபித்து பெரும்புகழுடன் விளங்கிவருவதுடன்.. அவர் ஸ்தாபித்த நிறுவனத்தின் மூலம் ஆங்கிலம் அறிந்தவர்களின் எண்ணிக்கை.. ஆங்கில மொழியை மேம்படுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது. அவர்தம் வழித்தோன்றலாய்.. தி ஹிந்து குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் திரு. ரங்கராஜன் அவர்களை மெல்லிசை மன்னரோடு இணைந்து நானும் சந்திக்கச் சென்ற நாள் 01.12.1994 இனியதொரு திருநாள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

    hindu rangarajanமுன்கூட்டியே சந்திப்பிற்கான அனுமதி பெற்றிருந்தோம் என்பதால், திரு.ரங்கராஜன் அவர்களும் எங்களை வரவேற்கக் காத்திருந்தார்.  மெல்லிசை மன்னரோடு எத்தனை சினேகம் என்பதை அவர்களின் வழக்குமொழிச் சொற்கள் அடையாளம் காட்டின! அதை சினேகம் என்பதைவிட அந்நியோன்யம் என்று கூறலாம்! கட்டித்தழுவி தங்கள் அன்பை பரிமாறியபின் இருக்கைகளில் அமர்ந்தனர். இதையெல்லாம் கண்கொள்ளாக் காட்சியாகக் காண எனக்கு கண்ணதாசன் கருணை புரிந்திருந்தார். உபசரிப்புகள் பலமாக ஒருபக்கம் நடந்திருக்க.. சென்ற விஷயத்தை மெல்லிசை மன்னர் அவரிடம் எடுத்துரைத்தார். கேட்டமாத்திரத்தில்.. பொல்லாத கோபம் கொண்டார்..திரு.ரங்கராஜன் அவர்கள்! ஏண்டா.. நீ மட்டும்தான் கண்ணதாசனுக்கு என்று நினைத்துக் கொண்டாயா? ஏன் நாங்கள் எல்லாம் இல்லையா? ஏன் இத்தனை நாள் வரவில்லை.. இதையெல்லாம் ஒப்புக் கொள்ளவே முடியாது என்று பொங்கியெழுந்தபின் சரி..சரியென்று மெல்லிசை மன்னர் கேட்டுக்கொள்ள.. இப்போது என்ன வேண்டும் கேள்.. இதோ வெற்றுக் காசோலை.. வேண்டியதை எழுதிக் கொள் என்றார். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.. உருவாக்கியிருக்கும் சிலையை தமிழக அரசு ஏற்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைக்கிறார்கள்.  அதையடுத்து முழுநாள் விழாவாக கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கும் கண்ணதாசன் விழா பற்றிய விளம்பரத்தை ஹிந்து நாளிதழில் வெளியிட வேண்டும் என்றார்.  அது சரி.. முழுப்பக்கத்திற்கும் விளம்பரம் கொடுத்துவிடுவோம்.. என்றார் திரு.ரங்கராஜன்.  அதற்கான கட்டணம் என்ன என்று மெல்லிசைமன்னர் கேட்டார். அது எவ்வளவாக இருந்தால்  என்ன?  மேட்டரைக் கொடு.. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் ரங்கராஜன். முழுபக்கம் எல்லாம் வேண்டாம்.. சும்மா ஒரு கால் பக்கம் அளவில் கொடுத்தால் போதும் என்றார். அதெல்லாம் கிடையாது என்று சமர்புரிந்த ரங்கராஜன் இறுதியாக அரைப்பக்க அளவில் போட்டே தீருவேன் என்று முடிவு செய்தார்.  அன்றைய நாளில் அந்த விளம்பரம் கட்டணம் செலுத்தியிருந்தால் ரூ.2 லட்சம் என்பது நான் திடுக்கிட்ட செய்தி.. அதையே வண்ணத்தில் கொடுத்தால் இன்னும் இருமடங்கு என்றார்கள்.  கறுப்பு வெள்ளையில் வெளியான அந்த அரைப்பக்க விளம்பரத்திற்கு அவர் ஒரு காசு கூட வாங்கவில்லை என்பதுடன்.. தி ஹிந்து அன்பளிப்பு என்று கூட போட்டுக்கொள்ளவில்லை.. இது நாங்கள் சென்ற விஷயம்.. நம்ம விஷயத்திற்கு வருவோம்.  ஆம்.. அவரிடம் என்ன செய்தி கிடைத்தது.. அறிய ஆவல்தானே?

    கவியரசு கண்ணதாசனும், மெல்லிசை மன்னரும் ஹிந்து ரங்கராஜன் ஆகியோரும் அடிக்கடி சந்தித்து மகிழும் நண்பர்கள்.. அவர்களிடையே அந்தரங்க விஷயம் முதல் அன்றாட அரசியல் வரை எல்லாமே இருந்தன. அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது.. கவிஞரிடம் வழக்கமான கேள்வி .. கடைசியாக என்ன பாட்டு எழுதினாய்.. சொல் என்று சொல்ல.. அங்கே சொல்லருவி கொட்ட.. தமிழ் மணக்கும் அந்த இடத்தில் மனம் திளைக்க இன்பம் பருகியவர் ரங்கராஜன்.  அப்போது.. தற்செயலாக ரங்கராஜன் அவர்கள் கவிஞரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார்.. ஏன்.. கவிஞரே யாருக்கெல்லாம் பாட்டு எழுதித்தரீங்களே.. எனக்கு ஒரு பாட்டு எழுதக் கூடாதா என்று!  நான் என்ன எழுத மாட்டேன்னா சொல்றேன்.. படம் எடு.. நான் பாடல் எழுதுகிறேன்.. என்று இயல்பாக கவிஞர் சொல்ல.. உடனடியாக மெல்லிசை மன்னரை அழைத்து.. ஒருநல்ல கதை கிடைக்குமா.. உடனே நான்ஒரு படம் எடுக்க வேண்டும்.. கவிஞரைப் பாட்டெழுதச் செய்ய வேண்டும் என்கிறார்.

    அந்த நாளில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த படம் வியட்நாம் வீடு.. அதன் கதைவசனகர்த்தா.. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள். அவரிடம் கேட்டுப் பார்ப்போம் என்று கூறி உருவான கதைதான் கெளரவம்.. திரு.ரங்கராஜன் அவர்கள் தயாரிப்பில்.. உருவான திரைக்காவியம்.. கண்ணதாசன் பாட்டெழுத வருகிறார்.  தனது நெடுநாள் ஆசை நிறைவேறும் தருணத்திற்காகக் காத்திருக்கிறார் ரங்கராஜன்.. மறக்க முடியாத திருநாளாக அது மாறுகிறது.

    kannadasan2vietnamveedu sundaramTamil Film Playback Legend T.M.Soundararajan
    நடிகர் திலகத்தின் திரையுலகச் சரித்திரத்தில் பொன்னாய் மின்னும் பல படங்களில் முன்னணியில் சில உண்டு. தங்கப்பதக்கம், கெளரவம் என்பவையும் அதில அடங்கும். வியட்நாம் வீடு என்கிற தரமான படத்தை உருவாக்கிய சிருஷ்டி..இயக்குனர் பி.மாதவன் ஆவார். அப்படத்தின் கதைவசனகர்த்தா வியட்நாம் வீடு சுந்தரம். நீ முந்திண்டா நேக்கு.. நான் முந்திண்டா நோக்கு என்கிற வசனம் அவரைப்பற்றிப் பேச வைத்தது. அவரே இயக்கிய படம் கெளவரம்.

    தன்னிலை தாழாமையும் – தாழ்வுறின்
    தாழும்கால் உயிர்வாழாமையும் மானம் எனப்படும்..
    என்கிற கருத்தைச் சுமந்த கதையோட்டம்.. உயிரோட்டம் தந்தவர் நடிகர் திலகம்..இரு வேறு வேடங்களில் தந்தை – மகன் பாத்திரமேற்க.. தோளிலே போட்டு வளர்த்த மகனும் சட்டம் பயில வைத்த பின்பு தன்னுடனே மோதுகிறான் கச்சேரியல் (கச்சேரி என்பதற்கு நீதிமன்றம் என்கிற பொருளும் உண்டு). பாலூட்டி வளர்த்த கிளி..பழம் கொடுத்து பார்த்த கிளி என்கிற உணர்வுப் போராட்டப் பாடலும் இதே திரைப்படத்தில்!

    தந்தையும் மகனும் மோதுகின்ற நீதிமன்றக் காட்சிகள் திரைப்படத்தின் உச்சம்.. வீட்டிலே அப்பாவுடன் மகன் ஒப்பனையில் நடிக்கும் காட்சிகளும்.. கச்சிதம்.  தன்னோடு மோதுகின்ற மகனை.. எப்போதும் வெற்றியையே சந்திக்கும் தந்தை.. கச்சேரியில் மோதவிருக்கும் சூழ்நிலையில்.. சுவரில் மாட்டிவைத்த புகைப்படத்தில் மகன் குழந்தையாக இருந்தபோது மார்பிலே உதைப்பது போன்ற காட்சி.. பாசத்திற்கு சாட்சி சொல்ல.. பரிதவிப்பிற்கு.. கண்ணதாசன் பாடல் வருகிறது..

    கவிஞர் அங்கே வந்தார். காட்சி விளக்கம் வியட்நாம் வீடு சுந்தரம் தந்தார். கதையின் அமைப்பு கேட்டார். மளமளவென பல்லவிகள்.. சரம் சரமாய்.. சரணங்கள்.. எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அந்த ஜீவகவிஞனைப் பற்றி எவ்வளவோ பேசலாம்.

    மூன்றடி மண்கேட்டான்.. வாமனன் உலகிலே..
    மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே..
    வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே..
    மாறும்அவதாரமே.. இதுதான் உலகிலே..
     
    மன்னனின் கெளரவம் சதுரங்கம் நடுவிலே
    மறிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே
    ஆகட்டும் பார்க்கலாம்.. ஆட்டத்தின் முடிவிலே
    அறுபதை இருபது வெல்லுமா.. உலகிலே..

    உணர்ச்சிக் கொந்தளிப்பை முகத்தில் காட்டி உயர்ந்த நடிகனாய் முத்திரை பதித்த நடிகர்திலகம் .. கண்ணதாசன்..விஸ்வநாதன்..ரங்கராஜன் கூட்டணியில் கெளரவம் திரைப்படம் மறக்க முடியாதது.  புராணத்தின் மறுபதிவு நடக்கிறது என்கிற கற்பனை யுக்தி.. கண்ணதாசனுக்கே கைவரும் போல்!!


    காணொளி:  http://www.youtube.com/watch?v=Io_-zCzX81E

    படம்: கௌரவம்
    பாடல்: கண்ணதாசன்
    இசை: எம் எஸ் விஸ்வநாதன்
    குரல்: டி எம் சவுந்தரராஜன்
    கண்ணா……
    நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
    நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
    காலம் மாறினால் கௌரவம் மாறுமா
    காலம் மாறினால் கௌரவம் மாறுமா… NEVER
    நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

    அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
    அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
    அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம்
    நடந்தது அந்த நாள்
    முடிந்ததா பாரதம்
    நாளைய பாரதம் யாரதன் காரணம்
    ஹே… நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

    மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
    மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
    மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே
    வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
    வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
    மாறும் அவதாரமே இதுதான் உலகிலே
    ஹ ஹா… நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

    மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே
    மறிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே
    ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே
    அருபதை இருபது வெல்லுமா உலகிலே
    ஹே நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா

    காலம் மாறினால் கௌரவம் மாறுமா
    காலம் மாரினால் கௌரவம் மாறுமா… NEVER

    Share
  • All are Invitied for the special Homam on the day of 23rd sep 2014

    ksushmaanda homam on 23rd.september 2014. at danvantri peedam
    Sushmaanda homam for Purattaasi Ammavasai

     

     

    image
    A special Sushmaanda homam (Poosanikaai homam) will be held at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on September 23, 2014, on account of Purattaasi Ammavasai, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced.
    The homam will be performed at 10 a.m., on September 23.
    The performance of homam has not been directly specified in the Vedas, except in the case of Sushmaanda homam. The Yajur vedam specifies Sushmaanda homam. The conduct of homam and the message regarding the other homams had merely been passed on to the devotees by saints from time to time. Sushmaanda homam alone has a specific reference.
    The conduct of Sushmaanda homam will rid one of various doshas including big sins, says Sri Muralidhara Swamigal. Sengalipuram

    Anantharaman Diskshitar had pointed out that performing Sushmaanda homam a day before upanayam or marriage and other such functions would confer benefits. Also, the homam could be done any time a person feels he or she has committed a big sin.
    This homam can be done in a simple way without spending much money. For instance, one or two priests would suffice. The wealthy can spend more money on dhiravyams and other necessities.
    Performance of this homam would rid one of evil effects, enable blessings of parents, prevent indulgence in sinful acts again, and bring about mental peace. In the case of other homams, priests can carry out the functions on behalf of the devotee. In this homam, one has to carry out the homam directly as per the directive of the priest.
    Sri Muralidhara Swamigal has urged devotees to take part in the homam in large numbers on September 23 and derive benefits

     

    Share
  • உனக்கே உனக்கே உனக்காக!

    இசைக்கவி ரமணன்

    உனக்கே உனக்காக   (46)

    உனக்கே உனக்கே உனக்காக!
    (பாடல்)

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AE%95%E0%AE%95/[/mixcloud]

    10451142_525203130945923_8197705392472800775_n

     

    உனக்கே உனக்கே உனக்காக! இந்த
    உடலும் அந்த உயிரும், அந்த
    உயிரில் மலரும் ஒவ்வொரு உணர்வும்
    உனக்கே உனக்காக!
    உனக்கே உனக்கே உனக்காக!

    வெண்ணிலவோ பொன்னிலவோ, அது
    வாழ்வதும் மறைவதும் வானத்திலே
    வீணைதரும் ராகமெல்லாம், வந்து
    மேவும் மெல்லிய விரல்களிலே
    கண்முழுதும் கனவுகளாய், உன்
    கால்படும் படாத பாதையிலே, நான்
    நின்றிருப்பேன் நீ சென்றிருப்பாய், என்
    கண்ணீர்த் துளிகளின் சாலையிலே! (உனக்கே)

    நள்ளிரவில் ரகசியமாய் என்மனதில் ஒரு மலர்விரியும்
    என்னுயிரே தேன் துளியாய் நீவருவாயென இனித்திருக்கும்
    நீவரலாம் பருகிடலாம் நிழலும் படாமல் விலகிடலாம்
    தேன் துளியே கண்ணீர்த்துளியாய் தெருவினிலெங்கோ உதிர்ந்திடலாம்
    மறுபடியும் இரவுவரும் மலர்விரியும் அதில் தேன் துளிர்க்கும் (உனக்கே)

    உறவும் பிரிவும் இல்லாமல் உரிமை ஒன்றும் கோராமல்
    இரவும்பகலும் நில்லாமல் இடைவிடாமல் நலம்பாடி
    இன்பம் துன்பம் இல்லாமல் இடையில் எங்கோ ஆடுகிறேன்
    உன்னில் என்னைத் தேடுகிறேன் ஒருகணம் கண்டால் வாழ்ந்திடுவேன்
    எனக்குள் இருக்கும் வனத்தில் சிரிக்கும்
    உனக்கே உனக்காய் வாழுகிறேன்! என்
    உயிரால் உன்னை வாழ்த்துகிறேன்! (உனக்கே)

     

    படத்திற்கு நன்றி

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    unnamed
    ’’பச்சைமா மேனியர்க்கு, இச்சை நவநீதம்,
    உச்சி மயிற்பீலி, உத்யோகம், -இச்சக
    பாரம் குறைப்பது, பாரதம் செய்வது:
    நேரம் திருவோண நாள்’’….கிரேசி மோகன்….

    Share
  • உலக எழுத்தறிவு தினம்

    -ரா.பார்த்தசாரதி

    International-Literacy-Day1எண்ணும்  எழுத்தும்  கண்னெனத் தகும்
    எழுத்தறிவித்தவன்  இறைவன் ஆகும்
    கல்வி மூலமே தீர்ப்பது சிறந்த வழியாகும்
    கற்றோருக்குச்  சென்ற இடமெல்லாம் சிறப்பாகும்!

    மனிதனாய்ப்  பிறந்த யாவரும் எழுத்தறிவு பெற்றிட வேண்டும்
    நாட்டில்  எழுத்தறிவுபெற அரசாங்கமும் பொறுப்பு ஏற்கவேண்டும்
    பட்டி தொட்டிகளிலும், கிராமங்களிலும் கல்வியை மேம்படுத்த வேண்டும்
    இதனைக் கல்வி மூலமே நிலைபெறச் செய்ய வேண்டும்!

    பின்தங்கிய  இனத்தவரும், பாட்டாளிகளும்  எழுத்தறிவு பெறவேண்டும்
    நாட்டில் உள்ளோர் எழுத்தறிவு பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும்
    அதற்கான ஊடகங்களைக் கிராமங்கள்தோறும் ஏற்பட்டுத்த வேண்டும்
    தாய்மொழியில் பயின்று கையொப்பம் இட அறியவேண்டும்!

    எழுத்தறிவினைப் புகட்டி அறியாமை, மூட நம்பிக்கைகளை ஒழிப்போம்
    இரவு நேரப் பள்ளிகள் மூலம் முதியோர்க்கும் எழுத்தறிவிப்போம்
    எழுத்தறிவின்மையை  ஒழிக்க என்றும் நாம் பாடுபடுவோம் என
    நாட்டில் உள்ளோர் சபதம் எடுப்போம் உலக எழுத்தறிவு தினத்தில்!   

    (செப்டம்பர்  8-ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்படுகிறது.)
     

     

    Share
  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 20

    –சி. ஜெயபாரதன்.

     

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 20

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​______________

    Mukkonakkilikal - 77Mukkonakkilikal - 78Mukkonakkilikal - 79Mukkonakkilikal - 80

     

    தொடரும்…

    ***********************************************************************************************************************

    வசன கர்த்தா திரு. வையவன்:

    mukonakkiligal 1வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு  அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று சென்னையில் புகழ்பெற்ற யுராலாஜி  மருத்துவரான டாக்டர் எம்.ஜீவகன் என்ற தம் மகனுடன் அடையாரில் வசித்து வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10 நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.
    http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html ,  http://innaiyaveli.blogspot.in/

    ஓவியக் கலைஞர் தமிழ்:

    tamizhselvanஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

    ***********************************************************************************************************************

     

     

     

    Share
  • நீயே தவம்!

     

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக (45)

    நீயே தவம்!

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE/[/mixcloud]

    10616225_590718837705442_5172244511758978034_n
    நீயே தவம் நீயே வரம்
    நீயே நெஞ்சில் நிரந்தரம்
    நினைவில் கனவின் மலர்கள் விரியும் தினம் தினம், உன்
    நிழலினொளியில் தானே எந்தன் சுதந்திரம்!

    மது மயங்கும் மதுவே கண்ணாய்த் திறந்தது
    மனது பாவம் விண்ணைத் தாண்டிப் பறந்தது
    இதயம் முழுதும் அன்பின் வெள்ளம் நுழைந்தது
    எனது உனது என்னும் எண்ணம் மறந்தது

    தலைகோதும் தென்றல் காற்றே! அலைதூண்டும் நிலவே!
    நிலைமாறும் நெஞ்சுக்குள்ளே நின்றாடும் உறவே!
    இடைவிடாமல் அன்பால் என்னைக்
    கொல்லும் முல்லைப் பூவே! புயலே!

    உனதுமுகம் கனவினில் வரும்நிலவா?
    கனவிலொரு மறைவினில் எழும்மலரா?
    உனதுமனம் காதலின் திருவனமா?
    வனம்முழுதும் கணந்தொறும் வளர்ந்திடும் கடவுளும் தொழும் சுகமா?

    கவிதையுருவாகும் பேரழகே
    காலம்தடு மாறும் கண்ணழகே
    தவித்தமனம் தத்தித்தத்தி அடைந்திடும் மெத்தைமடி தனிலெனைத்
    தாலாட்டிடும் குரலே! நெஞ்சில்நிதம்
    தாளமிடும் விரலே!

    (நீயே தவம்)
    சொல்லில் சொல்ல முடியாதம்மா உன் நேசம்
    விலக விலக வளரும் விந்தை உன் பாசம்
    எல்லை தாண்டி உந்தன் அன்பின் எழில் வீசும்
    எண்ணமெங்கும் கன்னம் குழையும் ஒரு வாசம்

    உயிரெல்லாம் உனதே என்னும் உணர்வொன்றே எனது
    பயிர்போல மழையே உனையே பார்த்து ஏங்கும் மனது
    எல்லைகள் தீரும் வேளை
    எதிரே வந்தாய் இதுவே உறவு

    கண்களென்ன மின்னல்களின் கனவா?
    கனியிதழ்கள் அமிழ்தம் தரும் சுனையா?
    வானவில் பட்டுப்பட்டுக் கன்னங்களில் தொட்டுவிளையாடுவது
    நாணமெனும் சுவையா?

    நீயெனது உயிர்வருடும் விரலா?
    உயிருள்ளில் ஊடுருவும் விழியா?
    விழியாலே கொஞ்சிக்கொஞ்சி நெஞ்சிலெங்கும் பஞ்சுப்பஞ்சுப் பறப்பதைப்
    பார்த்துச் சிரிக்கும் ரதியா?

    (நீயே தவம்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்
    crazy
    “பாரதக் குட்டு பரந்தாமன் சக்கிரத்,
    தேரதின் சுற்றலைத் திட்டமிட , -வாரணக்,
    COPYISTடும், வேதக் கதைவசன கர்த்தாவும்,
    HAPPYயாய்WAI TINGFOR ஹரி”….கிரேசி மோகன்….

    பாரதக் குட்டு -Writers Block ….

    Exactly!  Writers and thinkers block. It is the space gained by vyasa to write his next verse. 
    (Vinayaka has a condition that Vyasa should not stop dictating his verses, and Vyasa poses a counter condition that vinayaka should understand the work before writing it. So, vyasa composed complicated verses to gain time ) 
    This is one such occasion.  🙂
    Mind blowing verses in a short time. Spring of imagination flows. 

    Thanks and regards, 

    Keshav

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    செப்டெம்பர் 8, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திரு. பாலமுருகன்அவர்கள்

     

    sa.balamurugan

    நம்நாடு தொன்மை நிறைந்த நாடு, தொன்மையான மரபுச் செல்வங்கள் குவிந்து கிடக்கும் நாடு.  பெரும்பாலோருக்கு அவற்றின் அருமையும் பெருமையும் தெரிவதில்லை. அவற்றைப்  பாதுகாக்கவும் முன் வருவதில்லை.  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியகத்தின் துணை வட்டாட்சியரான  திரு. பாலமுருகன் அவர்கள்  “நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும்” பற்றிய முறைகளைப் பற்றிய திட்டம் ஒன்றை வகுத்துக் கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டதுடன், அதனை அத்துறை ஆய்வறிஞர்கள் கருத்தரங்கிலும்  வழங்கியுள்ளார்.  தமிழக மரபுச் செல்வங்களைக்  காக்க முன்னெடுத்த இவரது  முயற்சிக்காக இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.

    தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று பாரதி பெருமிதம் கொண்டு பாடியதை இக்கால மக்கள் அறிவோம்.
    ஆனால் …..
    தென்குமரி வட பெருங்கல்
    குணகுட கடலா எல்லைத்
    தொன்று மொழிந்து தொழில் கேட்ப…”
    — மதுரைக்காஞ்சி   (70-72)

    என்ற மதுரைக்காஞ்சி பாடலிலேயே நம் நாட்டின் தொன்மை குறிப்பிடப்படுகிறது. இங்கே ‘தொன்று மொழிந்து’ என்பது பாண்டிய மன்னன்  தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் குறித்து, ‘மிகவும் பழங்காலந்தொட்டுத் தொடர்புடையராயுள்ளமையைப் பாராட்டிச்  சொல்கிறது’ இந்தப் பாடலின் வரிகள்.  இதனால் தமிழத்தின் தொன்மை நன்கு புலப்படுகிறது.  உண்மை நிலை இவ்வாறிருந்தும் நம் மரபுச் செல்வங்களைப் பாதுகாப்பது பற்றி வெகு சிலரே அக்கறை காட்டுகிறார்கள்.  அவர்களிலும் பலர் வாய்ச்சொல்லோடு நிறுத்தியும் விடுகிறார்கள்.  பாதுகாக்கும் செயலில் இறங்குபவர்கள் அதனினும் குறைவு.  அவ்வாறு ஆர்வமுள்ளவர்கள் தொழில் முறையில் தொல்லியல் துறையில் பணியாற்றுபவர்களாக இல்லாததும் வியப்புக்குரியதாக இருக்கிறது.  இத்தகைய செயல் மரபுச் செல்வங்கள் மீது இவர்கள் கொண்ட ஆர்வத்தைக் காட்டுகிறது.  இந்த ஒரு சில ஆர்வலர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவகத்தில் துணை வட்டாட்சியராகப் பணிபுரியும் திரு. பாலமுருகன் அவர்கள்.

    துணை வட்டாட்சியரான இவரது பணியில் இவரது பொறுப்பு மின் ஆளுமைத்திட்ட ஒருங்கிணைப்பாளராக செயலாற்றுவது. படித்தது  எம்.சி.ஏ மற்றும் எம்.எஸ்.சி. புவியியல். எந்த வகையிலும் தொல்லியியல் துறைக்கும் இவருக்கும் தொடர்பு இல்லை என்றாலும்  தமிழ்நாடு, சமூகம், பண்பாடு, வரலாறு போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். ஓய்வு பெற்ற தமிழ், தலைமை ஆசிரியரின் மகனான பாலமுருகனின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற ஊர்.  அவரது  ஊரில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயமும் மலைக்கோயிலும் இவரை வரலாறு, கல்வெட்டு, நடுகற்கள் போன்றவற்றின் மீது கவனம் கொள்ள வைத்தன என்கிறார் இவர்.

    இப்பொழுது அவரது ஊரில் உள்ள கோயில் வரலாற்றை கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து எழுதி வருகிறார். தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிற வரலாற்றுத் தடங்களையும் ஆய்வு செய்து கட்டுரையாக வெளியிடவும் இவர் திட்டமிட்டுள்ளார்.  தமிழ், தமிழக வரலாறு, தொல்லியல், சூழலியல் தொடர்பான துறைகளில் ஆர்வமுள்ள பாலமுருகன், குறிப்பாக வரலாறு மற்றும் தொல்லியல்  முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பற்றிய விழிப்புணர்வும் அதைப்பாதுகாப்பதற்கும் முயற்சிகளை முன்னெடுக்க ஆர்வமாக உள்ளார்.

    மேலும், தேவிகாபுரம் பற்றிய வரலாறு, புகைப்படங்கள் பற்றி விக்கிபீடியாவிலும் பங்களித்து வருகிறார். அண்மையில் நடந்த தமிழ்விக்கிபீடியா ஊடகப்போட்டியில் இவரது தேவிகாபுரத்தில் கைத்தறி பட்டுசேலை நெசவு குறிக்கும் புகைப்படம் தமிழர் தொழிற்கலைப்பிரிவில் பரிசு பெற்றுள்ளது.

    days-of-the-hero

    கடந்த ஜூன் மாதம் “நடுகற்கள்” என்ற தலைப்பில் தொல்லியல் துறை நடத்திய, தென்னிந்தியவின் சமூக வரலாற்றை அறிய உதவும் நடுகற்கள் பற்றிய இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் (The Days of Heroes) ஒன்றில் அத்துறையின் ஆய்வறிஞர்கள் பலர் பங்கு பெற்றனர். இக்கருத்தரங்கத்தில் “நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும்” என்ற தலைப்பில் பாலமுருகன் தனது கருத்துக்களையும் ஒரு கட்டுரையாக முன்வைத்துள்ளார்.

    தமிழ் மரபில் இறந்து போன வீரர்களுக்கு ஈமக்கடன் ஈந்து கல் நட்டு வழிபடுவது தொன்மையான வழக்கம்.  இவ்வாறு நடப்பட்ட நடுகற்கள் வீரர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக இறந்தவர் நினைவாகவும் நடப்படுவதுண்டு. நீத்தோர் நினைவாக நடுகற்கள் நடும் மரபு சங்க காலம் முதற்கொண்டு தமிழகத்தில் இருந்து வந்துள்ளதை  “காட்சி கால் கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று இரு மூன்று மரபிற் கல்லொடு புணர” எனத் தொல்காப்பியம் வழி அறிய முடிகிறது.  பெரும்பாலும் நடுகற்கள் ஊர்களின் புறத்தே காணப்படுகின்றன. ஒரே போரில் இறந்த பல போர்வீரர்களுக்கும் நடுகற்கள் ஒரே இடத்தில் காணப்படுவதும் உண்டு. தமிழக  தொல்லியல் துறையினரால் புலிமான்கோம்பையில் (தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம்) கி. மு. 3ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டன. இந்நடுகற்களே இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டவற்றில் மிகப்பழமையானவை என்ற பெருமை வாய்ந்தவை.

    sa.balamurugan2தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரவிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான வரலாற்று நினைவுச்சின்னங்களில் ஒரு சில மட்டுமே அரசாலும் ஆர்வலர்களாலும் பாதுகாக்கப்படுகின்றன. வரலாற்று ஆர்வலர்கள் தற்போது நடுகற்கள் பற்றிய தரவுகளைத் திரட்டவும், ஆய்வு செய்யவும் முயன்று வருகின்றனர். இந்நிலையில் ஊர்தோறும் உள்ள நடுகற்களின் அமைவிடம், அவற்றின் தற்போதைய நிலை அவற்றைப் பாதுகாக்கவும் பேணவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உருவாகியுள்ள தேவையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்ற  வழிமுறைத் திட்டங்களை  தனது கட்டுரையின் வாயிலாக பாலமுருகன் கருத்தரங்கில்  பகிர்ந்து கொண்டார்.

    நடுகற்கள் முதலான மரபுச்சின்னங்களைப் பாதுகாப்பதும் அவற்றை முறையே பேணுவதும் அரசாங்கத்தின் கடமை என்றாலும் அரசாங்கமே அனைத்தையும் பேண முடியாது என்பதே உண்மை. எனவே, வரலாற்று ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்க முடியும். அதனால் வரலாற்று ஆர்வலர்கள் செய்யவேண்டியன:

    1. மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் ஏற்படுத்துதல்

    2. மாவட்டத்தில் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்கள் (நடுகற்கள், கோட்டைகள், சிலைகள், பழைய மண்டபங்கள், இராச பாட்டை மற்றும் பல) பற்றிய கணக்கெடுத்தல்

    3. நடுகற்கள்/மரபுச்சின்னங்கள் தொடர்பான பயிற்சி அளித்தல்

    4. நடுகற்கள் பற்றிய முழுமையான தொகுப்புப்புத்தகம் உருவாக்கி  விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

    5. நடுகற்கள் தொடர்பான அனைத்து விவரங்கள் அடங்கிய தனி வலைத்தளம் அமைத்தல்

    6. நடுகற்கள்/மரபுச்சின்னங்களை வரலாற்று நினைவுச்சின்னங்களாக அறிவித்தல் தொடர்பாக அரசை வலியுறுத்துதல், அதன் தொடர்பாக அரசு உதவியுடன் மாவட்ட மரபுச்சின்னங்கள் வரைபடம் (District Heritage Map) உருவாக்குதல்

    என்ற வழிமுறைகளை விளக்கியுள்ளார் பாலமுருகன்.  மேலும் மரபுச்சின்னங்கள் வரைபடம்  தயாரித்தலைப் பற்றிய விரிவான திட்டத்தையும் குறிபிட்டுள்ளார் பாலமுருகன். அத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிட வேண்டும். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுகற்களையும் கணக்கெடுப்பு பணி செய்து முடித்த பின்பு மாவட்ட வாரியாகப் பிரித்து மாவட்ட வரைபடத்தில் அந்நடுகற்கள் எந்த ஊரில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளச் செய்யவேண்டும். இதற்கு மாவட்ட மரபுச்சின்ன வரைபடம் (District Heritage Map) எனப் பெயரிடலாம். இதற்குத் தற்போது புவியிடங்காட்டு முறைமை [Global positioning system (GPS)] / புவியியல் தகவல் முறைமை [geographic information systems (GISs)] என்ற தொழில் நுட்பம் பெரிய அளவில் உதவும். இத்தொழில் நுட்பத்தின் மூலம் ஒரு நடுகல்லின் அதன் அமைவிடம் நிலநேர்க்கோடு, நிலக் கிடைக்கோடு (Latitude and Longitude) என்ற அளவில் வரைபடத்தில் குறிக்கலாம். இதன் மூலம் இந்நடுகற்கள் பிற்காலத்தில் இடம்பெயர்வு ஏற்பட்டாலும், அவை காணாமல் போனாலும் கண்டுபிடிக்க உதவும்.

    எடுத்துக்காட்டாக அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் உள்ள 15 நடுகற்களையும் தொழில்நுட்ப உதவி கொண்டு வரைந்த வரைபடத்தின் மாதிரிகளையும் கருத்தரங்கில் காட்சிப்படுத்தியுள்ளார். அத்துடன் 1. மரபுச் சின்னங்களின் தொகுப்புப் பட்டியல் மற்றும் 2. மரபுச் சின்னங்கள் கணக்கெடுப்புப்  படிவம் ஆகியவற்றையும் வடிவமைத்துக் காட்டியுள்ளார்.

    sa.balamurugan3sa.balamurugan4

    மரபுச் செல்வங்களை பாதுகாப்பது என்று பேசிக் கொண்டே இருக்கும் பெரும்பாலோர்  போல அல்லாமல், செயல்முறை நடவடிக்கையில் இந்த இந்த வழிமுறையில் முன்னெடுத்துச் செல்லலாம் என்று வழி வகுத்துக்  காட்டிய பாலமுருகன் அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    வல்லமையாளரைப்  பாராட்ட விரும்புவோருக்காக அவரது தொடர்புத் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
    ச.பாலமுருகன் (S.Balamurugan)
    துணை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியகம், திருவண்ணாமலை
    Phone: 90475 78421
    Email: balu_606902@yahoo.com
    இணைய முகவரிகள்
    1. www.devikapuram.in
    2. www.devigai.blogspot.in
    3. www.facebook.com/devikapuram (The birth place of King krishnadeveraya)

    குறிப்பு: தகவல் வழங்கிய அகர முதல இதழுக்கு நன்றி.  திரு. பாலமுருகனின் கருத்தரங்கக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் அகர முதல இதழில் இந்த சுட்டியைச் சொடுக்கிப் படிக்கலாம்

    நடுகற்கள் பற்றிய தகவல்:
    http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/natukal.htm

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     
    Share
  • என்னத்தைச் சொல்ல! – 3

    இன்னம்பூரான்.

     

    பகை படையெடுக்கலாம். உள்ளிருந்தும் புகையலாம். ஏன்? பாலிலும் வரலாம்.

    சூடான செய்தி: ஆவின் பாலில் இலவச குளிர்பானமாக வந்து அமைச்சர் தலையை காவு வாங்கலாம் ! வாங்கிடிச்சுண்ணு சில மணி நேரம் முன்னால் தினமலர் கூறியது.

    இன்னம்பூரான்செய்தித்துகள் கூட்டம்:
    ‘மேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பெறப்படும் ஆவின் பால், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் பதப் படுத்தப்பட்டு, தினமும், 2 லட்சம் லிட்டர் வீதம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம், 20ம் தேதி, திண்டிவனம் அருகே, கோவிந்தாபுரத்தில், சென்னை ஆவினுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த லாரியை, போலீசார் சோதனை செய்ததில், பாலில் தண்ணீர் கலப்படம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, வேலூர், ஆவினில் வேலை செய்த எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி., ஜ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், போலீசார், சத்துவாச்சாரியில் உள்ள ஆவினுக்கு சென்று, ஐந்து நாட்களாக விசாரணை செய்தனர்.சென்னைக்கு அனுப்பிய ஆவின் பாலில், தினமும், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கலந்து கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுக்கு அறிக்கை சி.பி.சி.ஐ.,டி., போலீஸ் அறிக்கை அனுப்பியிருந்தனர்… சென்னைக்கு, ஆவின் பால் கொண்டு சென்ற டேங்கர் லாரியில், தினமும், 4,000 லிட்டர் பால் திருடியதாக, எட்டு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஆவின் பால் நிறுவனம், திருவண்ணாமலை பகுதியில் இருந்து, தினமும், 12 ஆயிரம் லிட்டர் பால், டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்புகிறது. பால் நிரப்பி அனுப்பும் டேங்கரை, மறைவான இடத்தில் நிறுத்தி, குறிப்பிட்ட அளவு பாலை திருடி, அதே அளவில், தண்ணீரை டேங்கரில் நிரப்புவது தினமும் நடந்து வந்துள்ளது…கோவிந்தாபுரம் அருகே வயல்வெளியில், ஆவின் டேங்கர் லாரியில் (டி.என்.19: எக்ஸ் 3618) இருந்து, 40 லிட்டர் கொள்ளளவுள்ள, 40 கேன்களில், திருடிய பாலை நிரப்பி, டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, எடுத்து செல்ல தயாராக வைத்திருந்தனர். திருடிய பாலுக்கு மாற்றாக, அதே அளவில், டேங்கரில் தண்ணீர் ஊற்றி நிரப்பியிருந்தனர்.இதில், ஆவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்தது… தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும் இவரது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் குவாரி சட்ட விரோத செயல்பாட்டுக்கு துணைபோவது, மற்றும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன… பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு முக்கியமாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கலப்படம் கொடிகட்டி பறந்துள்ளது. இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை வளப்படுத்தி கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

    எல்லாம் மார்க் ட்வைய்ன் சங்கேத மொழிகள் தான். நல்லவேளை, ‘பாலில் தண்ணீர் கலப்பதாகச் சொல்லப்படுகிறதாம். தண்ணீரில் பால் கலப்பதாகவும் கேள்விப்படுகிறோம். ஆவினம் ஆவின் மீது வழக்குத் தொடரப்போகிறதாம். தருமமிகு சென்னையின் மஹாலிங்க நகரில் வாந்தி பேதியாம். அதற்கு காரணம் பாலில் கலந்த சாக்கடை நீர் என்று சில ஊடகங்கள் கூறுவதை வன்மையாகக் கண்டித்த ஆவின் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் காரணம் கூற அடக்கத்துடன் மறுத்து விட்டனவாம். வாம்! வாம்!’ என்று எந்த நாளிதழும் எழுதவில்லை.’ கற்பனை போதும்.

    இந்த நாசகார வேலையில் எத்தனை பேர் எத்தனை வருடங்களாக ஈடுபட்டிருந்தனர்? அந்த காலத்தில் அரசியில் கல்லும் கிராமஃபோன் ஊசியும் கலப்பது உண்டு. தேயிலையில் குதிரைச்சாணி கலப்பதற்கே என்று இருந்த களவு தொழிற்சாலைகள் என்ன ஆயின? ஆகமொத்தம் மக்களுக்குத் தெரியாமலா இந்த கலவை நடந்திருக்கும்?

    இது எல்லாம் உள்ளிருந்து புகைச்சலா? என்னத்தைச் சொல்ல?

    இன்னம்பூரான்
    06 09  2014

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:http://photos.thenews.com.pk/tasveer_images/2012-11-17/large/2_201211170304100202.jpg

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

    Share
  • தாமரைக் கண்ணாள்…

    இசைக்கவி ரமணன்

    தாமரைக் கண்ணாள்…

    (நேற்று மதியம். வேலை. அயர்வு. கொஞ்சம் காற்று தேவைப்பட்டது. இலக்கின்றிச் சற்றே ஊர்சுற்றப் போனேன். ஒரு முண்டகக் கண்ணி ஆலயம் அழைத்தது. முகமே மொத்த உருவமாக, அகன்ற கமலக் கண்களே முகமாக அமர்ந்திருக்கும் அவள் எதிரே சற்று அமர்ந்தேன், உயிரில் ஓர் ஆசுவாசம் நேர்ந்தது)

    470

     

    தாமரைக் கண்ணியின் முன்னிலையில்1545644a-6cc1-4b2c-8b67-9ce52cb2b54a_S_secvpf

    தவழும் குழந்தை போலுள்ளேன்

    நான்மறை போற்றும் நாயகியை

    நாவில் அமர்ந்து மொழிபவளை

    ஒமெனச் சொல்லி உயிர்முனையில்

    உணர்வை நிறுத்திச் சுடர்பவளை

    நாமம் உருவம் அருவமெலாம்

    நடத்தும் விழிகளில் நான் கரைந்தேன்!

     

    ஒளியின் ஊற்றே இவள்விழியோ?amman

    உயிருக் குயிர்தரும் சாமரமோ?

    களியின் வசந்தக் கதவுகளோ?

    கருணைக் கடலின் கரையலையோ?

    தெளிவே அருளத் திறந்தவிழி

    தேவையைத் தீபமாய் ஏற்றும்விழி

    அளித்து மகிழவே அகன்ற விழி

    அமிழ்தின் வழியதைப் பணிகின்றேன்!

     
    காணக் காண வினைகளெலாம்eb608269-8b12-4845-8268-b62b2a8b2cd6_S_secvpf

    காடு காடாய் எரியுதடா!

    பேணப் பேணச் சிறியமனம்

    பெருவெள் ளத்தில் புரளுதடா!

    பூண இயலாப் பூரணத்தில்

    பொருந்திக் கரைந்து போவென்றே

    ஆணை யிட்டே ஈர்க்கின்ற

    அழகு விழிகளைப் பணிகின்றேன்!

     

    விரிந்த விழிகளின் பொன்னொளியில்amma

    வீழ்ந்து மறைவதே வெற்றியடா!

    தெரிந் தழைக்கும் தெய்வத்தின்

    திசையில் கிடத்தல் முக்தியடா!

    பரிந்து நமையே பார்ப்பவளைப்

    பார்த்து வாழ்வதே பக்தியடா!

    சரிந்த கணத்தினில் சந்தித்த

    சக்தியின் விழிகளைப் பணிகின்றேன்!

     

    எங்கோ எதற்கோ திரிந்தவன் முன்durga_face

    எதேச்சையாக எதிர்ப்பட்டாள்

    தங்க இடமின்றித் தவித்தவனைத்

    தழுவி முகந்து மடிவைத்தாள்

    சிங்க முதுகில் நின்றபடி

    சிரித்துப் பிடரி சிலுப்புமென்

    தங்க மனதுத் தாயவளின்

    தாமரைக் கண்களைப் பணிகின்றேன்!

     

     

     

    07.09.2014 / ஞாயிறு

    Share
  • குறளின் கதிர்களாய்…(39)

    -செண்பக ஜெகதீசன்

    சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
    சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (திருக்குறள் – 267: தவம்)

    jag

    புதுக் கவிதையில்…

    சுடவைத்துச் சுடவைத்துப்
    பொன்னை உருக்கி நகைசெய்தால்,
    பொலிவாகும் மேலும்…

    இது போல
    இடுக்கண் பலவந்து மேலும்
    இன்னல் கொடுத்தாலும்,
    இன்னும் மேம்படும் துறவு…!

    குறும்பாவில்…

    சுடச்சுட மெருகேறும் பொன்போல,
    துன்பம் பலவந்து
    தூயதாக்கும் துறவை…!

    மரபுக் கவிதையில்…

    திரும்பத் திரும்பச் சுடவைத்துத்
    தீயினில் காட்டி உருகவைத்து,
    விருப்பம் போல நகைசெய்தால்
    வியக்கும் வகையில் பொலிவுறுமே,
    சிரமம் மிக்க துன்பங்களும்
    சேர்ந்தே வந்து தொடர்வதனால்,
    தரமது உயரும் துறவினுக்கே
    தானே சிறக்கும் தவவாழ்வே…!

    லிமரைக்கூ…

    பொன்மிளிரும் தொடர்ந்து தீயினில் சுட்டால்,
    தவவாழ்வு சிறந்திடுமே
    தாக்கும் துன்பத்தைத் தொடர்ந்திட விட்டால்…!

    கிராமிய பாணியில்…

    பவுனுயிது பவுனுயிது
    பத்தரமாத்துப் பவுனுயிது,
    பதுக்கி அதயே வைக்காம
    புதுசா சொலிக்கும் நகசெய்ய
    ஒலைல வச்சு சூடாக்கி
    உருக்கணுமே
    திரும்பத் திரும்ப தீயிலதான்…

    இதுபோல
    தும்பம் தொடந்துவந்தாலும்
    அதத்
    தாங்கும் மனசு வருவதாலே
    தொறவு பெரும தெரிஞ்சிருமே,
    சனங்க மதிக்கும் சாமியார…!

    Share
  • அப்பாவை அணைத்திடுவோம்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    தேரிலே சாமி வந்தால்
    தோளிலே தூக்கி வைத்துப்
    பாரடா என்று காட்டும்
    பாங்கினை மறக்க மாட்டேன்!                         father and son

    ஊரிலே உள்ளார் எல்லாம்
    உன்மகன் உதவானென்று
    நேரிலே வந்து சொன்னால்
    நிமிர்ந்தொரு பார்வை பார்ப்பார்!

    கவலைகள் படவும் மாட்டார்
    கண்டதை உண்ண மாட்டார்
    தெருவிலே சண்டை வந்தால்
    திரும்பியே பார்க்க மாட்டார்!

    அடிதடி வெறுத்து நிற்பார்
    ஆரையும் தூற்ற மாட்டார்
    உரிமையாய் உதவி நிற்பார்
    ஊரிலே எங்கள் அப்பா!

    பொய் அவர்க்குப் பிடிக்காது
    புளுகுவதை வெறுத்திடுவார்
    மெய்பேசி நின்று விட்டால்
    விரும்பியவர் அணைத்து நிற்பார்!

    உண்மையே பேசு என்பார்
    உழைப்பையே நம்பு என்பார்
    எண்ணமெலாம் இனிதாக
    இருக்கவே வேண்டும் என்பார்!

    அன்பாக இரு என்பார்
    அனைவர்க்கும் உதவென்பார்
    அசடனாய் வாழாதே
    அறிஞனாய் உயரென்பார்!

    பலகதைகள் ஊடாக
    பண்புகளை வளர்த்திட்டார்
    பாரில் நான் வாழ
    பாதையே அப்பாதான்!

    அப்பாவை அருகில்வைத்தால்
    அனைவருக்கும் அதிர்ஷ்டம்தான்
    அப்பாவை அலைய விட்டால்
    அனைவர்க்கும் அசிங்கம்தான்!

    அப்பாவை அணைத்திடுவோம்
    அவரருகில் நாமிருப்போம்
    எப்போதும் அப்பாவை
    ஏற்றியே போற்றிடுவோம்!!

    Share
  • லஞ்சம், ஊழல் ஒழியுமா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    180px-Logo_Court_Hammer_Logo‘இந்து’ ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் அந்தப் பத்திரிக்கையில் வந்த சில செய்திகளை அதே தேதியில் மீண்டும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. லஞ்சத்தையும் ஊழலையும் கிரிமினல் குற்றங்களையும் அரசு ஊழியர்களிடமிருந்து ஒழிக்க 1964 செப்டம்பரில் மத்திய அரசு புதுச் சட்டங்களை இயற்றத் தீர்மானித்ததாக செப்டம்பர் 5, 1964-ஆம் தேதியிட்ட ஐம்பது வருஷங்களுக்கு முந்தைய ‘இந்து’வில் வந்த செய்தியை செப்டம்பர் 5, 2014 தேதியிட்ட இந்து வெளியிட்டிருக்கிறது. அவை என்னென்ன சட்டங்கள் தெரியுமா? பிரிட்டிஷ் அரசு காலத்திலேயே 1944-இல் இயற்றிய இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code), ஊழல் தடுப்புச் சட்டம் (The Code of Criminal Procedure), 1952-இல் இந்திய அரசு இயற்றிய குற்றத் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act and Criminal Law Amendment Act) என்று இன்னும் சில சட்டங்களில் இந்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. சுதந்திரம் அடைந்து பதினேழு வருஷங்களுக்குப் பின், இந்தச் சட்டங்கள் வலுவற்று இருந்ததால் அவற்றைத் திருத்தி எழுதி வலுவுள்ளதாக மாற்ற அப்போதிருந்த அரசு முயன்றிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களையும் அரசு ஊழியர்களோடு சேர்த்து இந்தச் சட்டங்களின் கீழ் கொண்டுவந்தது முக்கியமான திருத்தம்.

    பிரிட்டிஷாரை வெளியேற்றி நாட்டுக்குச் சுதந்திரம் பெற எத்தனையோ பேர் சுதந்திரப் போரில் குதித்தார்கள். சுயநலம் எதுவுமில்லாமல் மிகத் தீவிரமாகப் போரில் கலந்துகொண்டார்கள். அப்படிக் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலர் சுதந்திர இந்திய அரசில் பங்கேற்றபோது ஊழல் செய்ய முற்பட்டார்கள். சுதந்திரப் போரில் தீவிரமாகப் பங்கேற்காதவர்களும் அரசில் நிறைய ஊழல்செய்ய ஆரம்பித்தர்கள். சுதந்திரத்திற்குப் பிறகு இயற்றப்பட்ட சட்டங்கள் ஊழல்களையும் லஞ்சத்தையும் ஒழிக்கப் போதவில்லை என்பதால் மறுபடி அவற்றைத் திருத்தி அமைக்க அரசு முற்பட்டது.

    அறுபதுகளில் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துகொண்டிருந்தது. அப்போது அங்கொருவர், இங்கொருவர் என்று ஒரு சிலர் ஊழல் புரிந்தார்கள்; லஞ்சம் வாங்கினார்கள்; குற்றங்களில் ஈடுபட்டார்கள். அதன் பிறகு நிறைய மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளும் ஆட்சியைப் பிடித்தன. அது ஒன்றே காரணம் இல்லையென்றாலும் அதுவும் ஊழல் அதிகரிக்க வழிகோலியது.

    அப்போது இத்தனை தனியார் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இவற்றை ஆரம்பிக்க, நடத்த, மாணவ, மாண்விகளைச் சேர்க்க என்று இப்போது லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சாதாரணமாக நடைபெறுகிறது. ஆசிரியர்கள் பணம் பெற்றுக்கொண்டு தேர்வுகளில் மதிப்பெண்கள் கொடுப்பது போன்ற செயல்கள் அப்போது நடந்திருக்கலாம். ஆனாலும் இப்போது போல் அவை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் புகுமுக வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அட்மிஷன் கொடுப்பது அன்று சரியாகப் பின்பற்றப்படவில்லை. என்னோடு படித்த ஒரு பெண், ‘தேவையான அளவு மதிப்பெண்கள் (minimum) வாங்கிவிடு. அதன் பிறகு மருத்துவக் கல்லூரியில் உனக்கு அட்மிஷன் வாங்குவது என் பொறுப்பு’ என்று தன் தந்தை கூறியதாகப் பெருமையாகக் கூறிக்கொள்வாள். ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் ‘என் மகளுக்கே அட்மிஷன் கொடுக்கவில்லை. நான் சம்பந்தப்பட்டவர்களைக் கூப்பிட்டுக் கூறிய பிறகுதான் கொடுத்தார்கள்’ என்றார். இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தாலும் அவை அரிதாகத்தான் நடந்தன. அன்று நிறையப் பணப் புழக்கம் இல்லை.

    மத்திய, மாநில அமைச்சர்களும் நண்பர்களுக்கு, வேண்டியவர்களுக்குச் சில சலுகைகள் கொடுத்தார்களே தவிர இப்போதுபோல் பணம் பெற்றுக்கொள்ளவில்லை. உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு சலுகைகள் செய்து கொடுப்பது (Nepotism) எந்த நாட்டிலும் இல்லாமல் இருக்காது. புதிதாகச் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இது இருந்தது பெரிய ஆச்சரியமில்லை. ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பல சட்டங்கள் இயற்றி ஐம்பது ஆண்டுகள் ஆன பிறகும் ஊழலும் லஞ்சமும் பல மடங்கு பெருகிப் பேயாட்டம் போடுவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை. ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள் இவற்றை ஒழிக்காதது மட்டுமல்ல, இவை பல மடங்கு பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏன்?

    இடையில் எழுபதுகளில் ஜனதா கட்சியும், தொண்ணூறுகளில் பா.ஜ.க.வும் மற்ற கட்சிகளோடு சில ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அமைத்ததைத் தவிர சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ்தான் மத்தியில் ஆட்சிபுரிந்து வந்திருக்கிறது. ஊழலும் லஞ்சமும் ஒழிக்கப்படாமல் போனதற்கு காங்கிரஸ் மட்டும்தான் காரணமா? இடையில் மாற்று ஆட்சி அமைத்த மற்றக் கட்சிகளும் ஒன்றும் செய்யவில்லையே.

    rti-new

    தொண்ணூறுகளில் என் தந்தை இறந்த பிறகு அவருடைய பிறப்புச் சான்றிதழ் பெற தாலுக்கா அலுவலகத்திற்கு நான் பல முறை சென்றேன்; அங்கு வேலைபார்க்கும் பலரின் கேலிக்கு உள்ளானேன். இப்போது பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை கணினி மூலமே பெற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். ஊழல் ஒழிய இது ஒரு படி. நிர்வாகம் கணினி மூலம் வெளிப்படையானால் (transparent) அலுவலர்களின் பை நிறைவதைக் குறைக்கலாம். தகவல் பெறும் உரிமை என்னும் சட்டம் நிர்வாகத்தை வெளிப்படையாக்க உதவும். இவற்றாலெல்லாம் லஞ்சம், ஊழல் ஒழியலாம் என்னும் நம்பிக்கையை மக்கள் மனதில் வளர்க்கலாமா என்று தெரியவில்லை.

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 39

    கே.ரவி

    போன பகுதியில் சொன்னேனே, ஷோபனாவின் தம்பி தன் வாழ்வைத் தானே முடித்துக் கொண்டான் என்று, அந்தச் சம்பவம் நடப்பதற்கு முதல்நாள், 1981-ஆம் ஆண்டு ஜூன் மாதம், என் மனத்தில் ஒரு கவிதை உதித்தது. அந்தக் கவிதைக்கும் அந்தத் துயர நிகழ்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், உதித்த போதே, ஏனோ, அந்தக் கவிதை எனக்கு ஒரு நடுக்கம் தந்தது. அதைத் தாளில் எழுதவில்லை. மறுநாள், மாலை அதை ஒரு தாளில் எழுதத் தொடங்கினேன். எழுதி முடிக்கும் போதே வாசலில் ஓர் அழுகுரல் கேட்டு ஓடினேன். ஷோபனாவின் சித்தி மகள் ப்ரீத்தி அழுது கொண்டே தன்னுடைய அண்ணன் தன்வாழ்வைத் தானே முடித்துக் கொண்டுவிட்டான் என்ற துயரச் செய்தியைச் சொல்லி என் தோள் மேல் சாய்ந்து கொண்டு கதறினாள். இதை இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு. அன்று நான் எழுதி வைத்த கவிதையைப் பிறகு வெகு நாட்கள் பிரித்துப் படித்துப் பார்க்கத் துணிவின்றி வைத்து விட்டேன். போன பகுதியில் சொன்னதுபோல், 1983-ஆம் ஆண்டு சாயி பாபா கோயில்; சபரிமலைக்கு வர ஒப்புதல்; டாக்டர் நித்யானந்தம் காட்டிய ஆன்மிகப் பாதை; இப்படி ஒரே சமயத்தில் என் மனத்தில் ஒரு மாற்றம் உருவான பிறகே, ஒருநாள் அந்தக் கவிதையை எடுத்துத் துணிந்து படித்துப் பார்த்தேன். வியப்பாக இருந்தது. ஆன்மிக நாட்டம் என்னுடைய மனத்தின் மேல்தளத்தில முளைவிடும் முன்பே, ஏதோ ஓர் இனம் தெரியாத, உடல் கடந்த உன்மத்தம், ஓர் உள்ளுளைச்சல், ஓர் ஆழ்மன வேதனை என்னை உலுக்கி இருக்கிறது என்பதை அந்தப் பாடல் எனக்கு உணர்த்தியது. தெய்வ நம்பிக்கை இல்லை என்று நான் கற்பித்துக் கொண்டது கூடச் சரியில்லையோ?

    சரி, அந்தக் கவிதையை இப்போது சொல்கிறேனே, நீங்கள் படிக்கவும்,

    கேட்கவும் (சொடுக்கினால் கேட்கலாம்):

    உள்ளே

    இருந்து கொண்டே சிரிப்ப தென்றால்

    இலக்கியம் என்பார் – என்னைப்

    பிளந்து கொண்டு வெளியே வந்தால்

    பிச்சி என்பாரோ

    சொற்களுக்குள் அடைபடாதே சூலமேந்திப் புறப்படு

     

    அந்தி வானச் செந்தழல்போல் விழிசிவந்திடு

    அர்த்த ஜாமக் காரிருள்போல் குழல்விரித்திடு

    நீலம்பாய்ந்த அலைகடல்போல் வடிவெடுத்திடு

    பிச்சியென்றும் பேதையென்றும் பேரெடுத்திடு

    சொற்களுக்குள் அடைபடாதே சூலமேந்திப் புறப்படு

     

    நிச்சயத்தை நிர்ணயத்தை நீயுடைத்திடு

    அச்சமென்ற திரைவிலக்கி ஆர்ப்பரித்திடு

    உச்சிவெய்யில் துச்சமென்று புன்னகைத்திடு

    பிச்சியென்றும் பேதையென்றும் பேரெடுத்திடு

    சொற்களுக்குள் அடைபடாதே சூலமேந்திப் புறப்படு

     

    மெளனமென்ற கானகத்தில் மூண்டுவிட்ட தீ

    மூங்கிலோடு மோதவந்த காற்றுமோகி னீ

    மொழிச்சதங்கை சிதறிப்போக நடனமாடு நீ

    விழியெதற்கு மொழியெதற்குன் உலகமே தனி

    உன்னைப்

    ப்ரதிபலிக்கக் காத்திருக்கும் சிறிய பனித்துளி

    நானுன்னைப்

    ப்ரதிபலிக்கக் காத்திருக்கும் சிறிய பனித்துளி

    இப்பொழுதும் ஏனோ இந்தக் கவிதையைச் சொல்லும் போதும், எண்ணும் போதும் உள்ளுக்குள் ஒரு நடுக்கம் வருகிறது. எல்லாவற்றுக்கும் நமக்குக் காரண, காரியம் தெரிந்து விடுகிறதா என்ன?

    as2அப்படியானால், ஆன்மிகத் தாகம் என் நெஞ்சின் ஆழத்தில் எப்பொழுதுமே பொதிந்திருந்ததோ? அந்தக் கவிதை வருவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே வந்த இன்னொரு கவிதை நினைவில் நிழலாடுகிறது. ஆம், ஆன்மிக நாட்டமே எப்பொழுதும் என் ஆழ்மனத்தின் அடிநாதமாக இருந்திருக்கிறது என்பதை அந்தப் பழைய கவிதை உறுதி செய்கிறது.

    அந்தக் கவிதை உதித்தது 1978-ஆம் ஆண்டு மார்ச் மாதம். தொலைக்காட்சியில், நந்தனாராகத் தண்டபாணி தேசிகர் தோன்றி, “ஐய்யே மெத்தக் கடினம்” என்று பாடியதைப் பார்த்துக் கேட்டு ரசித்த அன்று இரவே அக்கவிதை உதித்தது. அதை இப்பொழுது நீங்கள் படிக்கத் தருகிறேன்.

    (சொடுக்கினால் கேட்கலாம்):

    நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்

    நந்தி விலகவில்லை

    அனுபவத்தின் முன்னே – எந்தன்

    அறிவு பெருந்தொல்லை

     

    உலக வீதியில் ஓடியாடியே

    ஓய்ந்து போனதென் மனம் – இன்று

    உண்மை வீதியில் உனது வாசலில்

    உருகி நிற்பதென் தவம்

    தெய்வம் என்றுநான் தேடவில்லை – வெறும்

    தீபம் ஒன்றுதான் தேடி நிற்கிறேன்

    நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்

    நந்தி விலகவில்லை

     

    கண்கள் கூப்பிக் காத்து நிற்கிறேன்

    கவிதையாகவே அழுகிறேன்

    எண்ணம் என்பதே ஏக்கமாக – நான்

    இருப்ப தென்பதே மறந்து போக

    நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்

    நந்தி விலகவில்லை

     

    உன்

    நகலை மட்டும் ஏந்திக் கொண்டு

    மனிதர் கூட்டம் போவதுண்டு

    நிழலும் தெரியவில்லை – என்

    நினைவு தெளியவில்லை

    தேகம் என்பதே தேய்ந்து போக – ஒரு

    தாகம் என்பதே வடிவம் ஆக

    நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்

    நந்தி விலகவில்லை

     

    கண்கள் பார்ப்பதாம் – செவிப்

    பறையர் கேட்பதாம்

    ஜாதி பேதங்கள் செய்கிறார் – இவை

    யாவும் ஒன்றிடும் ஞான மன்றில் நீ

    ஒளிந்திருப்பதை அறிந்துதான்

    ஐந்து வாசல் தாண்டி – நானும்

    ஆர்வத்தோடு வந்தேன் -உன்

    ஞான வாசல் முன்னே – த்வஜ

    ஸ்தம்ப மாகிவிட்டேன்

    இந்தப் பாடல்கள் சொல்லும் கதையென்ன? அந்தக் காலக் கட்டத்தில் எனக்குள் ஒரு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த கதையைத்தான் இவை சொல்கின்றன. என்ன போராட்டம்? யாருக்கும் யாருக்கும் போராட்டம்?

    கடவுள், தெய்வம், உயிர்நிலையாகிய ஆன்மா! இவற்றைப் பற்றிய போராட்டம். அறிவுக்கும் ஆழ்மனத்துக்கும் இடையில் போராட்டம்! நம்ம புத்தி சிகாமணிக்கும், மனோன்மணிக்கும் நடுவில் நடந்த கணவன்-மனைவி பூசல்தான் அது என்று புரிந்து கொண்டேன். இந்தப் பூசலைத்தான் டாக்டர் நித்யானந்தம் மூலமாக ஷிர்டி சாயிபாபா தீர்த்து வைத்தாரோ? இந்தக் கதையைத்தான் இப்படித் திக்கித் திணறிச் சொல்ல முற்பட்டேனோ? சொல்லி விட்டேனா? புரிந்து விட்டதா?

    ஆன்மிக நாட்டம் ஏற்பட்டதற்குச் சில மாதங்களுக்கு முன், 1982, ஆகஸ்ட் மாதம், ஒருவழியாக, ‘ஸ்பரிசம்’ திரைப்படம் வெளியானது. அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அது நல்ல முறையில், நல்ல திரையரங்கங்களில் வெளியிடப்படாததும், மலையாள டப்பிங் படமோ என்று எண்ண வைத்த தலைப்புமே அதன் தோல்விக்குப் பெரிதும் காரணமாயின. ஆனாலும் அதன் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. எனக்கு ஒரு குறை, அதில் இடம் பெற்ற ஓர் அருமையான பாடல் அதிகம் கவனிக்கப் படாமல் போனதே. ஆம், பெற்றோர்களின் கண்டிப்பால் கதாநாயகனைக் கதாநாயகி சந்திக்க முடியாமல் தனிமையில், வீட்டுச் சிறையில் வாடிய துயரத்தை, எனக்குத் தெரிந்த வரை இவ்வளவு அழகாகவும், சுருக்கமாகவும் வேறு எந்தப் பாட்டின் பல்லவியும் சொல்லி யிருக்க முடியாது.

    உறக்கமிலா இரவுகள் இரக்கமிலா உறவுகள்

    (சொடுக்கினால் கேட்கலாம்)

     

    நச்சென்று, பொட்டில் தெறித்தாற் போல் இருக்கிறதா? இது பொன்னெழுத்தில் பொறிக்கப் பட வேண்டிய பல்லவி என்பதைக் காவிரி மைந்தன் போன்ற திரைப்படப்பாடல் ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். நான் கேட்டவுடன் அந்த அருமையான பாடலை எழுதித் தந்தவர் நண்பர் வ.வே.சு.தான்.

    படம் வெற்றி பெறாத ஏமாற்றத்திலிருந்தும், அதனால் ஏற்பட்ட பண நெருக்கடியிலிருந்தும் நான் சில மாதங்களிலேயே சற்று விடுபட்டேன். அப்படி விடுபட்டு, மீண்டும் அமைதி திரும்பிய நிலையில்தான் ஆன்ம விடுதலை நோக்கி என் மனம் திரும்பியது என்று கூடச் சொல்லலாம்.

    நான் ஆன்மிகப் பாதைக்கு ஆற்றுப் படுத்தப் பட்டதற்கு இன்னொரு திசையிலிருந்து நான் பெற்ற தெளிவும் உதவியது. மேற்கத்திய நாடுகளில் தோன்றிய தத்துவ மேதைகளில், ரெனே டேகார்ட், இம்மானுவெல் கன்ட் ஆகியோருக்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த தத்துவ மேதைகளில், சோரென் கீர்க்ககார்ட் என்ற டேனிஷ் சிந்தனையாளரும், ஹென்ரி பெர்க்ஸன் என்ற ஃப்ரெஞ்ச் தத்துவ மேதையும், விட்ஜன்ஸ்டைன் என்ற ஆஸ்ட்ரிய சிந்தனையாளரும் குறிப்பிடத் தக்கவர்கள். அதே போல் இந்தியச் சிந்தனையாளர்களில், ‘மாண்டூக்ய காரிகா’ என்ற பெயரில், மிகச்சிறிய, ஆனால் மிக ஆழமான, நூலின் ஆசிரியர் கெளடபாதர் என்னை மிகவும் பாதித்தார். அவர், ஆதிசங்கரரின் குருநாதர் என்று சுட்டப்படும் கோவிந்த பாதரின் குருநாதர் என்று சொல்லப்படுகிறது. இவர்களுடைய சிந்தனைகளை 1975-78 ஆண்டுகளில், விவேகானந்தா கல்லூரியில், தத்துவத் துறையில், முதுகலை, எம்.ஃபில். வகுப்புகளில் பயின்ற போது படித்து ஓரளவு புரிந்து கொண்டேன். இதனால் ஏற்பட்ட தெளிவும் என் மனமாற்றத்துக்குப் பெரிதும் உதவியது. அவர்களுடைய வாதங்களையும், சிந்தனைகளையும் எடுத்துச் சொல்ல இது இடமில்லை. ஆனால் அவர்கள் மூலம் நான் பெற்ற தெளிவுகளையும், டாக்டர் நித்யானந்தம் அவர்களால் ஊக்குவிக்கப் பட்ட மெய்யனுபவங்களையும், கொஞ்சமேனும் இங்குக் கோடிட்டுக் காட்டாவிட்டால், உங்களுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால், என் கவிதை வரலாறு முழுமையடையாது. ஆனால் அவற்றையெல்லாம் ஒரே மூச்சில் சொல்லிவிட முடியாது. அடுத்துவரும் பகுதிகளில், அந்தத் தெளிவுகளும் அனுபவங்களும் எப்படி என் கவிதை வாழ்க்கையுடன் சம்பந்தப் பட்டு, அதை நெறிப்படுத்தின என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்கிறேனே.

    (தொடரும்)

    Share