காற்று வாங்கப் போனேன் – 39
கே.ரவி
போன பகுதியில் சொன்னேனே, ஷோபனாவின் தம்பி தன் வாழ்வைத் தானே முடித்துக் கொண்டான் என்று, அந்தச் சம்பவம் நடப்பதற்கு முதல்நாள், 1981-ஆம் ஆண்டு ஜூன் மாதம், என் மனத்தில் ஒரு கவிதை உதித்தது. அந்தக் கவிதைக்கும் அந்தத் துயர நிகழ்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், உதித்த போதே, ஏனோ, அந்தக் கவிதை எனக்கு ஒரு நடுக்கம் தந்தது. அதைத் தாளில் எழுதவில்லை. மறுநாள், மாலை அதை ஒரு தாளில் எழுதத் தொடங்கினேன். எழுதி முடிக்கும் போதே வாசலில் ஓர் அழுகுரல் கேட்டு ஓடினேன். ஷோபனாவின் சித்தி மகள் ப்ரீத்தி அழுது கொண்டே தன்னுடைய அண்ணன் தன்வாழ்வைத் தானே முடித்துக் கொண்டுவிட்டான் என்ற துயரச் செய்தியைச் சொல்லி என் தோள் மேல் சாய்ந்து கொண்டு கதறினாள். இதை இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு. அன்று நான் எழுதி வைத்த கவிதையைப் பிறகு வெகு நாட்கள் பிரித்துப் படித்துப் பார்க்கத் துணிவின்றி வைத்து விட்டேன். போன பகுதியில் சொன்னதுபோல், 1983-ஆம் ஆண்டு சாயி பாபா கோயில்; சபரிமலைக்கு வர ஒப்புதல்; டாக்டர் நித்யானந்தம் காட்டிய ஆன்மிகப் பாதை; இப்படி ஒரே சமயத்தில் என் மனத்தில் ஒரு மாற்றம் உருவான பிறகே, ஒருநாள் அந்தக் கவிதையை எடுத்துத் துணிந்து படித்துப் பார்த்தேன். வியப்பாக இருந்தது. ஆன்மிக நாட்டம் என்னுடைய மனத்தின் மேல்தளத்தில முளைவிடும் முன்பே, ஏதோ ஓர் இனம் தெரியாத, உடல் கடந்த உன்மத்தம், ஓர் உள்ளுளைச்சல், ஓர் ஆழ்மன வேதனை என்னை உலுக்கி இருக்கிறது என்பதை அந்தப் பாடல் எனக்கு உணர்த்தியது. தெய்வ நம்பிக்கை இல்லை என்று நான் கற்பித்துக் கொண்டது கூடச் சரியில்லையோ?
சரி, அந்தக் கவிதையை இப்போது சொல்கிறேனே, நீங்கள் படிக்கவும்,
கேட்கவும் (சொடுக்கினால் கேட்கலாம்):
உள்ளே
இருந்து கொண்டே சிரிப்ப தென்றால்
இலக்கியம் என்பார் – என்னைப்
பிளந்து கொண்டு வெளியே வந்தால்
பிச்சி என்பாரோ
சொற்களுக்குள் அடைபடாதே சூலமேந்திப் புறப்படு
அந்தி வானச் செந்தழல்போல் விழிசிவந்திடு
அர்த்த ஜாமக் காரிருள்போல் குழல்விரித்திடு
நீலம்பாய்ந்த அலைகடல்போல் வடிவெடுத்திடு
பிச்சியென்றும் பேதையென்றும் பேரெடுத்திடு
சொற்களுக்குள் அடைபடாதே சூலமேந்திப் புறப்படு
நிச்சயத்தை நிர்ணயத்தை நீயுடைத்திடு
அச்சமென்ற திரைவிலக்கி ஆர்ப்பரித்திடு
உச்சிவெய்யில் துச்சமென்று புன்னகைத்திடு
பிச்சியென்றும் பேதையென்றும் பேரெடுத்திடு
சொற்களுக்குள் அடைபடாதே சூலமேந்திப் புறப்படு
மெளனமென்ற கானகத்தில் மூண்டுவிட்ட தீ
மூங்கிலோடு மோதவந்த காற்றுமோகி னீ
மொழிச்சதங்கை சிதறிப்போக நடனமாடு நீ
விழியெதற்கு மொழியெதற்குன் உலகமே தனி
உன்னைப்
ப்ரதிபலிக்கக் காத்திருக்கும் சிறிய பனித்துளி
நானுன்னைப்
ப்ரதிபலிக்கக் காத்திருக்கும் சிறிய பனித்துளி
இப்பொழுதும் ஏனோ இந்தக் கவிதையைச் சொல்லும் போதும், எண்ணும் போதும் உள்ளுக்குள் ஒரு நடுக்கம் வருகிறது. எல்லாவற்றுக்கும் நமக்குக் காரண, காரியம் தெரிந்து விடுகிறதா என்ன?
அப்படியானால், ஆன்மிகத் தாகம் என் நெஞ்சின் ஆழத்தில் எப்பொழுதுமே பொதிந்திருந்ததோ? அந்தக் கவிதை வருவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே வந்த இன்னொரு கவிதை நினைவில் நிழலாடுகிறது. ஆம், ஆன்மிக நாட்டமே எப்பொழுதும் என் ஆழ்மனத்தின் அடிநாதமாக இருந்திருக்கிறது என்பதை அந்தப் பழைய கவிதை உறுதி செய்கிறது.
அந்தக் கவிதை உதித்தது 1978-ஆம் ஆண்டு மார்ச் மாதம். தொலைக்காட்சியில், நந்தனாராகத் தண்டபாணி தேசிகர் தோன்றி, “ஐய்யே மெத்தக் கடினம்” என்று பாடியதைப் பார்த்துக் கேட்டு ரசித்த அன்று இரவே அக்கவிதை உதித்தது. அதை இப்பொழுது நீங்கள் படிக்கத் தருகிறேன்.
(சொடுக்கினால் கேட்கலாம்):
நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்
நந்தி விலகவில்லை
அனுபவத்தின் முன்னே – எந்தன்
அறிவு பெருந்தொல்லை
உலக வீதியில் ஓடியாடியே
ஓய்ந்து போனதென் மனம் – இன்று
உண்மை வீதியில் உனது வாசலில்
உருகி நிற்பதென் தவம்
தெய்வம் என்றுநான் தேடவில்லை – வெறும்
தீபம் ஒன்றுதான் தேடி நிற்கிறேன்
நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்
நந்தி விலகவில்லை
கண்கள் கூப்பிக் காத்து நிற்கிறேன்
கவிதையாகவே அழுகிறேன்
எண்ணம் என்பதே ஏக்கமாக – நான்
இருப்ப தென்பதே மறந்து போக
நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்
நந்தி விலகவில்லை
உன்
நகலை மட்டும் ஏந்திக் கொண்டு
மனிதர் கூட்டம் போவதுண்டு
நிழலும் தெரியவில்லை – என்
நினைவு தெளியவில்லை
தேகம் என்பதே தேய்ந்து போக – ஒரு
தாகம் என்பதே வடிவம் ஆக
நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்
நந்தி விலகவில்லை
கண்கள் பார்ப்பதாம் – செவிப்
பறையர் கேட்பதாம்
ஜாதி பேதங்கள் செய்கிறார் – இவை
யாவும் ஒன்றிடும் ஞான மன்றில் நீ
ஒளிந்திருப்பதை அறிந்துதான்
ஐந்து வாசல் தாண்டி – நானும்
ஆர்வத்தோடு வந்தேன் -உன்
ஞான வாசல் முன்னே – த்வஜ
ஸ்தம்ப மாகிவிட்டேன்
இந்தப் பாடல்கள் சொல்லும் கதையென்ன? அந்தக் காலக் கட்டத்தில் எனக்குள் ஒரு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த கதையைத்தான் இவை சொல்கின்றன. என்ன போராட்டம்? யாருக்கும் யாருக்கும் போராட்டம்?
கடவுள், தெய்வம், உயிர்நிலையாகிய ஆன்மா! இவற்றைப் பற்றிய போராட்டம். அறிவுக்கும் ஆழ்மனத்துக்கும் இடையில் போராட்டம்! நம்ம புத்தி சிகாமணிக்கும், மனோன்மணிக்கும் நடுவில் நடந்த கணவன்-மனைவி பூசல்தான் அது என்று புரிந்து கொண்டேன். இந்தப் பூசலைத்தான் டாக்டர் நித்யானந்தம் மூலமாக ஷிர்டி சாயிபாபா தீர்த்து வைத்தாரோ? இந்தக் கதையைத்தான் இப்படித் திக்கித் திணறிச் சொல்ல முற்பட்டேனோ? சொல்லி விட்டேனா? புரிந்து விட்டதா?
ஆன்மிக நாட்டம் ஏற்பட்டதற்குச் சில மாதங்களுக்கு முன், 1982, ஆகஸ்ட் மாதம், ஒருவழியாக, ‘ஸ்பரிசம்’ திரைப்படம் வெளியானது. அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அது நல்ல முறையில், நல்ல திரையரங்கங்களில் வெளியிடப்படாததும், மலையாள டப்பிங் படமோ என்று எண்ண வைத்த தலைப்புமே அதன் தோல்விக்குப் பெரிதும் காரணமாயின. ஆனாலும் அதன் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. எனக்கு ஒரு குறை, அதில் இடம் பெற்ற ஓர் அருமையான பாடல் அதிகம் கவனிக்கப் படாமல் போனதே. ஆம், பெற்றோர்களின் கண்டிப்பால் கதாநாயகனைக் கதாநாயகி சந்திக்க முடியாமல் தனிமையில், வீட்டுச் சிறையில் வாடிய துயரத்தை, எனக்குத் தெரிந்த வரை இவ்வளவு அழகாகவும், சுருக்கமாகவும் வேறு எந்தப் பாட்டின் பல்லவியும் சொல்லி யிருக்க முடியாது.
உறக்கமிலா இரவுகள் இரக்கமிலா உறவுகள்
(சொடுக்கினால் கேட்கலாம்)
நச்சென்று, பொட்டில் தெறித்தாற் போல் இருக்கிறதா? இது பொன்னெழுத்தில் பொறிக்கப் பட வேண்டிய பல்லவி என்பதைக் காவிரி மைந்தன் போன்ற திரைப்படப்பாடல் ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். நான் கேட்டவுடன் அந்த அருமையான பாடலை எழுதித் தந்தவர் நண்பர் வ.வே.சு.தான்.
படம் வெற்றி பெறாத ஏமாற்றத்திலிருந்தும், அதனால் ஏற்பட்ட பண நெருக்கடியிலிருந்தும் நான் சில மாதங்களிலேயே சற்று விடுபட்டேன். அப்படி விடுபட்டு, மீண்டும் அமைதி திரும்பிய நிலையில்தான் ஆன்ம விடுதலை நோக்கி என் மனம் திரும்பியது என்று கூடச் சொல்லலாம்.
நான் ஆன்மிகப் பாதைக்கு ஆற்றுப் படுத்தப் பட்டதற்கு இன்னொரு திசையிலிருந்து நான் பெற்ற தெளிவும் உதவியது. மேற்கத்திய நாடுகளில் தோன்றிய தத்துவ மேதைகளில், ரெனே டேகார்ட், இம்மானுவெல் கன்ட் ஆகியோருக்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த தத்துவ மேதைகளில், சோரென் கீர்க்ககார்ட் என்ற டேனிஷ் சிந்தனையாளரும், ஹென்ரி பெர்க்ஸன் என்ற ஃப்ரெஞ்ச் தத்துவ மேதையும், விட்ஜன்ஸ்டைன் என்ற ஆஸ்ட்ரிய சிந்தனையாளரும் குறிப்பிடத் தக்கவர்கள். அதே போல் இந்தியச் சிந்தனையாளர்களில், ‘மாண்டூக்ய காரிகா’ என்ற பெயரில், மிகச்சிறிய, ஆனால் மிக ஆழமான, நூலின் ஆசிரியர் கெளடபாதர் என்னை மிகவும் பாதித்தார். அவர், ஆதிசங்கரரின் குருநாதர் என்று சுட்டப்படும் கோவிந்த பாதரின் குருநாதர் என்று சொல்லப்படுகிறது. இவர்களுடைய சிந்தனைகளை 1975-78 ஆண்டுகளில், விவேகானந்தா கல்லூரியில், தத்துவத் துறையில், முதுகலை, எம்.ஃபில். வகுப்புகளில் பயின்ற போது படித்து ஓரளவு புரிந்து கொண்டேன். இதனால் ஏற்பட்ட தெளிவும் என் மனமாற்றத்துக்குப் பெரிதும் உதவியது. அவர்களுடைய வாதங்களையும், சிந்தனைகளையும் எடுத்துச் சொல்ல இது இடமில்லை. ஆனால் அவர்கள் மூலம் நான் பெற்ற தெளிவுகளையும், டாக்டர் நித்யானந்தம் அவர்களால் ஊக்குவிக்கப் பட்ட மெய்யனுபவங்களையும், கொஞ்சமேனும் இங்குக் கோடிட்டுக் காட்டாவிட்டால், உங்களுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால், என் கவிதை வரலாறு முழுமையடையாது. ஆனால் அவற்றையெல்லாம் ஒரே மூச்சில் சொல்லிவிட முடியாது. அடுத்துவரும் பகுதிகளில், அந்தத் தெளிவுகளும் அனுபவங்களும் எப்படி என் கவிதை வாழ்க்கையுடன் சம்பந்தப் பட்டு, அதை நெறிப்படுத்தின என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்கிறேனே.
(தொடரும்)