நான் அறிந்த சிலம்பு – 135
–மலர் சபா
மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி
பலிக் கொடை
சங்கரி! அந்தரி! நிலி!
சடைமுடியிலே சிவந்த கண்களையுடையவளே!
பாம்பினை இளம் பிறையுடன் சூடியிருப்பவளே!
பாலைவழியில் செல்வோரின் எண்ணிக்கை பெருகி
அவரிடம் சூறையாடும் எம்தொழில் சிறக்க வேண்டுகிறோம்.
நேர்த்திக் கடனாய் வலிமையான வில்லினையுடைய
எயினர் யாம் வழங்கும்
பலியை ஏற்றுக் கொள்வாயாக!
விண்ணில் வாழும் தேவர் அமுதுண்ட போதும்
தத்தம் காலம் முடியும்போது மரணம் எய்துவர்.
ஆனால் நீயோ எவருமே உண்ணாத நஞ்சினை
உண்ட பின்பும் உயிரோடிருந்து
பிறர்க்கு அருள்செய்வாய்!
‘துண்’ என்று ஒலியெழுப்புகின்ற துடி முழக்கத்தோடு
பகைவர் அனைவரும் உறங்கும் இரவில்
அவர் ஊருக்குள் புகுந்து
அங்கிருப்பவரைக் கொன்று
கொள்ளையிடும் கண்ணோட்டமற்ற
எயினர் யாம் வழங்கும்
பலியை ஏற்றுக் கொள்வாயாக!
உன் மாமனாகிய கம்சனின் வஞ்சகத்தால் தோன்றிய
இரு மருத மரங்களின் இடையே
இடையில் கட்டப்பட்ட உரலுடன் நடந்து சென்று
அவற்றைச் சாய்த்தும்
உருண்டு உன் மீது ஏற வந்த சக்கரத்தை
உதைத்து நொறுக்கியும்
உயிர்களுக்கு அருள் செய்பவளே!
வழியில் போவோர் பொருளைப் பறித்துக்கொண்டு
அவர்களுக்குத் துன்பம் செய்வதைத் தவிர
எவரிடத்தும் கருணை காட்டாத
எயினர் யாம் வழங்கும்
பலியை ஏற்றுக் கொள்வாயாக!
பாண்டிய மன்னனை வாழ்த்துதல்
வேதங்களை அருளிய முதல்வனாம்
சிவனின் தம்பி அகத்தியன்
எழுந்தருளியதால் சிறப்புப் பெற்றது
பொறைகளையுடைய உயர்ந்த பொதிகை மலை.
அம்மலையை உடையவனும்
வெற்றியை விரும்புபவனும் ஆகிய பாண்டியன்
பகைவருடைய போர்முனை,
ஆநிரைகளை மீட்க வரும் அவர்கள் தொழில்
இவை பாழ்படும் வண்ணம்
வெட்சி மாலை சூடுவானாக!
வேட்டுவ வரி முற்றியது.
அடுத்து வருவது புறஞ்சேரி இறுத்த காதை.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் பாடல்கள் இங்கே: 20 – 23
http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html*
படத்துக்கு நன்றி:
http://alimoongoddess.com/2011/08/09/