-செண்பக ஜெகதீசன்

சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (திருக்குறள் – 267: தவம்)

jag

புதுக் கவிதையில்…

சுடவைத்துச் சுடவைத்துப்
பொன்னை உருக்கி நகைசெய்தால்,
பொலிவாகும் மேலும்…

இது போல
இடுக்கண் பலவந்து மேலும்
இன்னல் கொடுத்தாலும்,
இன்னும் மேம்படும் துறவு…!

குறும்பாவில்…

சுடச்சுட மெருகேறும் பொன்போல,
துன்பம் பலவந்து
தூயதாக்கும் துறவை…!

மரபுக் கவிதையில்…

திரும்பத் திரும்பச் சுடவைத்துத்
தீயினில் காட்டி உருகவைத்து,
விருப்பம் போல நகைசெய்தால்
வியக்கும் வகையில் பொலிவுறுமே,
சிரமம் மிக்க துன்பங்களும்
சேர்ந்தே வந்து தொடர்வதனால்,
தரமது உயரும் துறவினுக்கே
தானே சிறக்கும் தவவாழ்வே…!

லிமரைக்கூ…

பொன்மிளிரும் தொடர்ந்து தீயினில் சுட்டால்,
தவவாழ்வு சிறந்திடுமே
தாக்கும் துன்பத்தைத் தொடர்ந்திட விட்டால்…!

கிராமிய பாணியில்…

பவுனுயிது பவுனுயிது
பத்தரமாத்துப் பவுனுயிது,
பதுக்கி அதயே வைக்காம
புதுசா சொலிக்கும் நகசெய்ய
ஒலைல வச்சு சூடாக்கி
உருக்கணுமே
திரும்பத் திரும்ப தீயிலதான்…

இதுபோல
தும்பம் தொடந்துவந்தாலும்
அதத்
தாங்கும் மனசு வருவதாலே
தொறவு பெரும தெரிஞ்சிருமே,
சனங்க மதிக்கும் சாமியார…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *